Nabdesesh swathi 350இந்திய அரசமைப்புச் சட்டம் இறுதி செய்யப்பட்ட 25-11-1949 அன்று டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், “1950 சனவரி முதல் குடியரசாகப் போகும் இந்தியா வில் அரசியல் சனநாயகம் மட்டும் இருக்கும்; சமூக சனநாயகம் இருக்காது; சமூக சனநாயகத்தை உரு வாக்க வேண்டியது நம் கடமை” என்று எச்சரித்தார். 68 ஆண்டுகளுக்குப் பின்னும் சமூக சனநாயகம் ஏற்படவில்லை. 

படிநிலை ஏற்றத்தாழ்வைப் பிறவி அடிப்படையில் கொண்ட சாதியமைப்பை ஒழிக்காத வரையில் இந்திய சமூகத்தில் சனநாயகம் மலராது என்று வாழ்நாள் முழுவதும் அம்பேத்கர் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார். சாதி அடிப்படையிலான ஒடுக்கு முறைகளும், இழிவுபடுத்தல்களும், உழைப்புச் சுரண்டலும் நீடிக்கின்றன. சாதியமைப்பின் கொடிய வடிவங்களில் ஒன்றாகச் சாதி ஆணவக் கொலைகள் இந்தியா முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன.  தந்தை பெரியாரின் பேருழைப்பால் தமிழகத்தில் சமூகநீதி வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது; இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் பெயர்களுக்குப் பின் சாதிப் பெயர் இல்லை என்றெல்லாம் பெருமையுடன் சொல்லிக் கொண்டாலும் தமிழகத்திலும் சாதி ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

2012இல் தருமபுரி தலித் இளைஞர் இளவரசன் - வன்னியர் சாதியினரான திவ்யா ஆகியோரின் காதல், தலித் குடியிருப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல், இளவரசன் இறப்பு ஆகியன தமிழகத்தில் பெரும் பேசு பொருளாக இருந்தது. சாதி இந்துப் பெண்ணைக் காதலித்ததற்காக கோகுல்ராஜ் கொல்லப்பட்டார். உடுமலைப்பேட்டை தலித் சங்கர் - சாதி இந்துவான கவுசல்யா ஆகியோர் வெட்டப்பட்டதில் சங்கர் இறந்துவிட்டார். கவுசல்யா, தன் காதல் கணவனைக் கொன்ற பெற்றோர்க்குத் தண்டனைப் பெற்றுத் தந்தார். சாதி ஒழிப்புக்கு எதிராகக் களமாடி வருகிறார்.

2018 நவம்பரில் ஓசூருக்கு அருகில் உள்ள சூடகொண்ட பள்ளியைச் சேர்ந்த 25 அகவையினரான சந்தீஷ், 21 அகவையினரான சுவாதி ஆகிய இருவரும் கொடிய முறையில் சாதிவெறியர்களால் கொல்லப்பட்டனர்.

சூடகொண்டபள்ளி ஒரு சிற்றூர். 30 வன்னியர் குடும்பங்கள், 13 தலித் குடும்பங்கள் மற்றும் பிற சாதியினர் சில குடும்பங்கள் கொண்ட ஊர். நந்தீஷ் ஒரு தலித். சுவாதி வன்னியர் சாதியைச் சேர்ந்தவர். சுவாதியின் தந்தை சீனிவாசன் வால்மீகி நாயுடு சாதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவர்.

நந்தீசும் சுவாதியும் கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் காதலிப்பது வெளியில் தெரிந்ததால் ஓராண்டுக்குமுன் நந்தீஷ் ஓசூருக்குச் சென்று மரக்கடையில் வேலைக்குச் சேர்ந்து அங்கேயே தங்கியிருந்தார். சுவாதி 2018 ஆகத்து மாதம் வீட்டை விட்டு வெளியேறினார். ஆகத்து 15 அன்று இருவரும் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். 2-9-18 அன்று பதிவுத் திருமணம் செய்துகொண்டு, ஓசூரில் குடும்பம் நடத்தினர்.

10-11-18 அன்று ஓசூரில் நடிகர் கமலஹாசன் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியைக் காண நந்தீசும் சுவாதியும் வந்தனர். அப்போது இவர்களைக் கண்ட சுவாதியின் உறவினர்கள் இவர்களைச் சந்தித்து, சுவாதியின் பெற்றோர் அவர்களின் திருமணத்தை ஏற்றுக்கொண்டனர் என்றும் சாதி வழக்கப்படி திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறி, இருவரையும் மகிழுந்தில் அழைத்துச் சென்றனர்.

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், சிவசமுத்திரம் பகுதிக்கு அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கி, இருவரின் முகத்தையும் அடையாளம் கண்டறிய முடியாதவாறு சிதைத்து, கை, கால்களைக் கட்டி ஆற்றில் வீசிவிட்டனர். மூன்று நாள்கள் கழித்து இருவரின் உடல்களும் கரை ஒதுங்கின. சாதிக்கு இழுக்கு தேடி விட்டாள் என்று கருதி சுவாதியின் தலையை மொட்டையடித்திருந்தனர்.

நந்தீஷ் மேதை அம்பேத்கர் பற்றாளர். நவம்பர் 10 அன்று அவர் அணிந்திருந்த சட்டையில் அம்பேத்கர் படமும் ‘ஜெய் பீம்’ என்ற முழக்கமும் பொறிக்கப்பட்டிருந்தது. அம்பேத்கர் படத்துக்குக் கீழே சூடகொண்டப் பள்ளி என்றும் பொறிக்கப்பட்டிருந்ததால் கர்நாடகக் காவல் துறையினர் அவர்களின் ஊரைக் கண்டறிந்து ஓசூர் காவல் துறையிடம் அவர்களின் உடல்களை ஒப்படைத்தனர்.

நந்தீசின் தம்பி நவம்பர் 11 அன்று ஓசூர் காவல் நிலையத்தில் நந்தீஷ், சுவாதி இருவரும் காணவில்லை என்று புகார் கொடுத்தார். காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இருவரையும் காப்பாற்றியிருக்கலாம். இப்படுகொலையைச் சுவாதியின் தந்தையும் உறவினர்களும் திட்டமிட்டு நடத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுவாதியின் தந்தை சீனிவாசன், பெரியப்பா வெங்கடேஷ், உறவினர் கிருஷ்ணன் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருமண அகவை எய்திய ஒரு ஆணும் பெண்ணும் தம் வாழ்க்கைத் துணையைத் தீர்மானிக்கும் உரிமை மறுக்கப்படுவதும், அவர்கள் கொல்லப்படுவதும் நம் சமூகம் நிலவுடைமைக் காலத்தின் சாதியச் சேற்றிலேயே இன்றளவும் ஆழ்ந்து கிடக்கிறது என்பதையே காட்டுகிறது.

இந்திய அளவில் ஆண்டுதோறும் ஏறக்குறைய ஆயிரம் ஆணவக் கொலைகள் நடக்கின்றன. மற்ற மாநிலங்களைவிட இது தமிழகத்தில் குறைவாக நடக்கிறது என்பது பெருமைக்குரியதல்ல. ஆணவக் கொலைக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். சொந்த சாதி உணர்ச்சி, சாதிப் பெருமிதம் ஆகிய வற்றுக்கு எதிராக அரசுகளும், வாக்கு வங்கி அரசியல் கட்சிகளும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

பொதுவாக, ஆணவக் கொலைகள் தலித் இளைஞர், தலித் அல்லாத சாதிப் பெண்ணைக் காதலிக்கும் போதும், திருமணம் செய்து கொள்ளும் போதும்தான் நடக்கின்றன. தலித் மக்களை எல்லாச் சாதியினரும் தீண்டத்தகாதவர்களாகவே இன்றளவும் பார்க்கின்றனர் என்பதையே இது உறுதிப்படுத்துகிறது. இதைப்பற்றி அம்பேத்கர் 1945ஆம் ஆண்டில், “தீண்டாத மக்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்ட வேண்டும் என்ற அளவில் இந்துக்களிடம் ஒரு மனப்போக்காக இருக்கின்ற தீண்டா மையானது கற்பனைக்கெட்டக்கூடிய காலத்திற்குள் நகரங்களிலோ, கிராமங்களிலோ மறைந்து போகாது என்று நான் உறுதியாகக் கருதுகிறேன்” என்று எழுதியிருக்கிறார்.

இந்த நவம்பர் மாதத்திலேயே மற்றொரு சாதி ஆணவக் கொலை திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்திருக்கிறது. எசக்கி சங்கர் (அகவை 33) என்பவர் வெள்ளான்குழி என்ற ஊரைச் சேர்ந்தவர். களக்காடு மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை செய்து வந்தார். இவர் மற்றொரு சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்தார். இரண்டு குடும்பத்தினரும் திருமணத்துக்கு ஒப்புதல் அளித்தனர். ஆனால் பத்தாம் வகுப்பு படிக்கும் அப்பெண்ணின் தம்பி இத்திருமணம் நடப்பதை விரும்பவில்லை. அவர் தன்னுடன் படித்த மூன்று பேருடன் சேர்ந்து, எசக்கி சங்கர் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற போது கொன்றுவிட்டார். 21-11-18 அன்று அப்பெண் தற்கொலை செய்து கொண்டார். 22-11-18 அன்று அப்பெண்ணின் தம்பியும் அவருடன் படிக்கும் மாணவனும் கைது செய்யப்பட்டனர்.

நம்முடைய கல்வி முறை சாதியமைப்புக்கு எதிராக எள்முனையளவுகூட எதையும் செய்யவில்லை என்ப தையே இது காட்டுகிறது. பள்ளிகளில் தான் எந்தச் சாதி என்பதன் அடையாளமாக ஒரு குறிப்பிட்ட வண்ணத் தில் கையில் கயிறு கட்டும் அளவுக்கு வகுப்பறைகளில் சாதி உணர்ச்சியும் பகையும் தமிழ்நாட்டில் மேலோங் கியிருப்பது மாபெரும் வெட்கக்கேடாகும்.

சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராகக் கடுமை யான சட்டங்கள் இயற்ற வேண்டும். பள்ளிப் பாடத்தில் அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் சாதி ஒழிப்புக் கருத்துகளைச் சேர்க்க வேண்டும். சாதி என்பது சமத்து வத்துக்கு, சமஉரிமைக்கு, சனநாயகத்துக்கு, நாகரிக சமூகத்துக்கு எதிரானது என்கிற கருத்தை இன்னும் வலுவாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.