தமிழ் கூறும் நல்லுலகைத் துயரக் கடல் சூழ்ந்துள்ள காலம் இது. துயரம்தானே தவிர, சோர்வு வந்து சாய்த்து விடவில்லை என்பது நல்ல செய்தி. ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பு பலரிடமும் காணப்படுகிறது. ஏதாவது வேண்டாம், எதை எப்படிச் செய்வது என்று திட்டமிட்டு ஒவ்வொன்றையும் செய்தாக வேண்டும்.

தமிழீழ மக்களே உடனே முள்வேலிச் சிறை முகாம்களிலிருந்து மீட்க வேண்டும். சிங்களப் பேரினவாதச் சிறையுடைத்து தேசிய விடுதலை பெறுவதற்கான போராட்டத்திற்கும் நாம் தோள் கொடுத்துத் துணை நிற்க வேண்டும். தாய்த் தமிழகத்தில் செய்ய வேண்டியவை ஏராளம் - இந்தி - ஆங்கில அயல் மொழி ஆதிக்கத்திலிருந்து தமிழை மீட்க வேண்டும். கல்விக் கூடம், கடவுள் வழிபாட்டுக் கூடம், ஆட்சி மன்றம், ஆணையிடும் நீதிமன்றம், வெள்ளித் திரை, விதம் விதமான ஊடகத் துறை ஒவ்வொன்றிலும் தமிழே ஆளச் செய்ய வேண்டும். இது தமிழ் மீட்புப் பணி.

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு - தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய இந்த ஆறுகளில் இப்போது சிக்கல்களே புதர்மண்டிக் கிடக்கின்றன. நம் ஆற்றுநீர் உரிமையை நாமே மீட்க வேண்டும்.     தமிழ்நாட்டில் விளேயும் எதற்கும் விளேவிப்பவரே விலை குறிக்கும் உரிமையை மீட்க வேண்டும். நம் சந்தையை நமக்காக மீட்க வேண்டும். வடவர் உள்ளிட்ட அயலினத்தாரிடமிருந்து நம் நிலத்தையும் இயற்கை வளத்தையும் தொழிலையும் வேலை வாய்ப்பையும் மீட்க வேண்டும். சுற்றுச் சூழலை மீட்க வேண்டும்.இன ஒற்றுமையைச் சிதைத்து உள்ளிருந்து கொல்லும் சாதியக் கொடுநோயிலிருந்து தமிழ் மக்களே மீட்க வேண்டும்.

தமிழ் மீட்பும் தமிழர் மீட்பும் நம் இரு கண்கள். விழி இரண்டு எனினும் பார்வை ஒன்றே அல்லவா? தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நோக்கில் நம் செய்திகளே மக்களிடம் கொண்டு சேர்க்கவும், உணர்வூட்டி அறிவூட்டி அவர்களே அணி திரட்டவும் நாம் செய்து வரும் பணிகளேக் காப்பாற்றி நிலைநிறுத்தவும், விரிவாக்கி வலுப்படுத்தவும் உழைப்பு தேவை, பொருளும் தேவை. பெரும் பொருள் தேவை.    தமிழர்களுக்கான ஆக்கப் பணி என்ற முறையில் 16 ஆண்டுகளுக்கு முன் நிறுவிய தாய்த் தமிழ்ப்பள்ளி நின்று நிலைத்துள்ளதே தவிர படர்ந்து வளரவில்லை. தமிழ் மக்களின் ஆதரவுக்குக் குறைவில்லை. ஆனால் அந்த ஆதரவுக்கு ஈடாகப் பள்ளியை விரிவாக்க நிலம் இல்லை, நிலம் வாங்கப் பணம் இல்லை.

சமூகநீதித் தமிழ்த் தேசம் ஏடு ஒவ்வொரு திங்கள் வெளிவருவதும் ஒரு பிள்ளேப் பேறுதான். இங்கேயும் வலிக்குப் பிறகுதான் மகிழ்ச்சி. நம் ஊடக வழிகள் அச்சிதழோடு நிற்கக் கூடாது. கால வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க இன்னும் நிறையச் செய்ய வேண்டும். தமிழர் விடுதலைப் போர் முழக்கம், சமூக நீதித் தமிழ்த் தேசம் என்பது நம் குறிக்கோள் முழக்கம். கலைப் போரின் கருவிகளேக் கைக் கொள்ளாமல் போர்க் கலையில் முன்னேறுதல் முயற்கொம்பே.நம் ஆக்கப் பணிகள், அறிவுப் பணிகள், கிளர்ச்சிப் பணிகள், அமைப்புப் பணிகள்... இவற்றைத் தொடரச் செய்யுவும் படரச் செய்யவும் நமக்குப் பெரு நிதி தேவை. பத்து கோடித் தமிழர்கள் வாழும் இந்தப் புவிக்கோளில் ஒரு கோடி வேண்டும் என்று நினைப்பது பேராசையா?

எவ்வளவு என்பது இருக்கட்டும். முதலில் களமிறங்குவோம், தமிழ் மீட்பு தமிழர் மீட்பின் தேவையை ஊர் ஊராகப் போய்ச் சொல்வோம். நம் உறுதிப்பாட்டின் அடையாளமாக நடந்து போய்ச் சொல்வோம்.

 ஆம், தோழர்களே “தமிழ் மீட்பு”, “தமிழர் மீட்பு” நடைப் பயணம் செல்ல உங்களே உரிமையோடு அழைக்கிறேன். வருகிற 2041 தை முதல் நாளில் (15.01.2009) புறப்படுவோம். முதற் கட்டமாக ஆயிரம் கிலோ மீட்டர் வரை நடக்கத் திட்டம். புறப்படுமிடம், பயண வழி குறித்தெல்லாம் கலந்து பேசி முடிவு செய்வோம்.

ஆர்வமுள்ள ஒவ்வொரு தமிழச்சியும் தமிழனும் இந்தப் பயணத்தில் முழுமையாகவோ முடிந்த வரைப் பகுதியாகவோ பங்கேற்க உரிமை உண்டு. பேசுங்கள், எழுதுங்கள், திட்டமிடுவோம். 

அன்புடன்,

தியாகு

Pin It