குடி என்பது சாராயக்குடி, கள்குடி என்பவைகளே யாம். இக்குடியால் இராஜாங்கத்தோருக்கு அதிக வருமானமுண்டு. அதனால் அதை விருத்தி செய்கின்றார்கள் என்று பேசுகிறார்கள். அம்மொழி வீண் மொழி யேயாம். பிரிட்டிஷ் ஆளுகைக்கு முன்பே கள்ளும் சாராயமும் இத்தேசத்தில் வழங்கிவந்ததாக விளங்குகின்றது. அது மேலும் மேலும் பெருகி மக்கள் கெடு வதையுணர்ந்த இராஜாங்கத்தார் அவைகளுக்கு வரி களையுயர்த்திக் குறைக்கும் வழிவகைகளைத் தேடினார்கள்.

ayodhisagar 450 அக்கடைக்காரர்களோ உருசிகண்ட பூனை உரியைத் தாவுதல் போல் ஒருவருக்கொருவர் போட்டி யினால் தொகைகளை அதிகப்படுத்தி நூறுகுடிகள் கெடவும் ஒரு குடி பிழைக்கவுமான வியாபாரத்திலிருக்கின்றார்கள். இராஜாங்கத்தார் மேலும் மேலும் வரிகளை அதிகரிக்கச் செய்து கள்ளுக்கடை சாராயக்கடைகளை ஒடுக்கமுயலினும் அக்கடைவிற்போர் முயற்சிகள் குன்றுவதைக் காணோம்.

இராஜாங்கத்தோர் கள் சாராயத்தை விருத்திச் செய்ய முயன்றவர்கள் அல்ல என்பது எலியட் துரை யவர்களின் நீதியே போதுஞ்சான்றாம். அஃதுயாதெனில் ஒரு மனிதன் கள்ளையேனும் சாராயத்தை யேனுங்குடித்து வெளித்து வீதிகளில் சண்டையிட்ட போதினும், விழுந்துகிடந்த போதினும் அவனைத் தலையாரிகள் கொண்டுபோய் விட்டவுடன் அதிகாரிகள் விசாரித்து பனிரெண்டாறென்னும் ஒன்றரை டசன் அடியடித்து விடுவது வழக்கமாயிருந்தது என்பதை நாளது வரையில் வழங்கியும் வருகின்றார்கள்.

அத்தகைய எலியட் துரையவர்களின் காலத்தில் ஒரு மனிதன் நன்றாய்க் குடித்து வெறித்தும் சட்டத்திற்குப் பயந்து வீட்டிற்போய் சேருமளவும் எலியட் துரை பெயரையும் பனிரண்டாறடி பயத்தையும் மனதிலுன்னி அவற்றைச் சொல்லிக்கொண்டே சென்றதும் மறுநாள் அவனையழைத்துவரச் செய்து பனிரண்டாறு வேஷ்டி வாங்கி கொடுத்தனுப்பியதுமாய் சரித்திரத்தால் நன்கு விளங்குகின்றது. அதனால் கள்ளுக்கடை, சாராயக்கடை விற்குங் கடைக்காரர்களாலும் அவற்றைக் குடிக்குங் கூட்டத்தோர் பெருகுவதினாலுமே அவை பெருகி மக்கள் பாழடைகின்றார்கள்.

அவற்றுள் சாராயக்கடைக்காரர்களோ அவைகளை விற்பனை செய்யத்தக்க வழிவகைகளை சொல்லத் தரமன்று. கள்ளுக்கடைக்காரர்கள் செயல்களோ அதனினும் விசேடமெயாம். இவற்றுள் வருஷக்குடியர், மாதக்குடியர், வாரக்குடியர், தினக்குடியர் பெருகி அவர்கள் மற்றோரால் இகழப்பெற்றுச் சீரழிவதுடன் இல்லாள்களாகிய பெண்களையும் குடிக்கக் கற்பித்தது போதாமல் தங்கள் பிள்ளைகளுக்கு சுரங்கண்டால் கொஞ்சம் பிராந்தி வாங்கிக் கொடு, குழந்தைகளுக்கு சளிபிடித்தால் பத்தாய் வாங்கிக் கொடுவென்னும் பெருவழக்கத்தால் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரையில் குடியர்களாகிச் சீரழிந்து சிந்தை நைந்து குலமரபின் பேரழிந்து பாழாகிப் போகின்றார்கள்.

கல்வியற்றவர்களும் இழிதொழில் செய்வோரு மானோர் தங்கள் தொழிலுக்குத்தக்க புத்தியென்பது போல தங்கள் பிள்ளைகளைக் கள்ளுக்கடை, சாராயக் கடைகளுக்குக் கொண்டுபோய் குடிக்கப் பழக்குகின்றார்கள். படித்தவர்களும் உத்தியோகஸ்தர்களும் பிள்ளைகளுக்கு வியாதி வந்தால் குடிக்கப் பழக்குகின்றார்கள். இஃது ‘தொட்டிலாட்டம் சுடுகாடு செல்லுமளவு முண்டு’ என்னும் பழமொழி போல், சிறுவயதில் பழக்குஞ்செயல் பெரியோர்களாகியும் விடாது தொடர்ந்து குடிகேடராகின்றார்கள்.

மற்றுஞ் சிலர் தங்களை மிக்கப் பரமயோக்கியர் களெனக் காட்டிக்கொண்டு தங்கள் சுபாசுபகாலங்களில் காலன்காலனாகச் சாராயங்களை வாங்கிவைத்துக் கொண்டு, வருவோர்களுக்கெல்லாம் வார்த்துக் குடிக்க வைத்துக் கெடுப்பதுடன் இந்தப் பரமயோக்கியர் செயல்களை மற்றோரும் அநுசரித்துப் பாழ்படும் கெடுவழிகளையும் திறக்கின்றார்கள்.

இத்தகைய குடியை விருத்தி செய்வோரும் குடித்துப் பாழடைந்தவருமான எத்தனையோ குடும்பங்கள் உடுக்கவுடைக்கும் உண்ணச் சோற்றுக்குமில்லாமல் வீடுவீடாய் அலைவதையும் வீதிவீதியாய்த் திரிவதையுங்கண்டுமுள்ள உத்தியோ கஸ்தரும் வாசித்தவர்களும் அக்கொடிய துற்பழக்கத் தையே மேலும் மேலுங் கொண்டு உழல்வார்களாயின் கல்வியற்ற இழிதொழிலாளர் விடுவரோ. அறிவாளிகள் என்றுங், கல்வி கற்றவர்கள் என்றும் உத்தியோகஸ்தர்கள் என்றும் முன்னுக்கு வந்துள்ளவர்கள், தங்கள் தங்கள் விவேகத்தைக் கையாடாது தாங்கள் குடித்து மதிகெடுவதுடன் தங்கள் பெண்களையுங் குடித்துக் கெடுக்க வைத்துக் கொள்வதால் அத்தகையாயக் குடியனுங் குடிகாரியுஞ் சேர்ந்து வாழும் வாழ்க்கையும் ஓர் வாழ்க்கை யாமோ. அவர்கள் பெற்றுள்ள பிள்ளைகளும் சீர்பெறுமோ. சிறுவயதிலியே அப்பிள்ளை கள் கூசாமற்குடித்துக் குடிகெடுவார்களேயன்றி மனித னென்னும் சிறப்பை அடையமாட்டார்கள்.

இத்தகைய செயல்களை ஒவ்வோர் குடியர்கள் வீடுகளில் அநுபவமுங் காட்சியுமாகக் காணலாம். ஈதன்றிச் சகல சாதியோர்களுங் குடிக்கின்றார்களன்றி ஒரு சாதியான் குடிப்பதில்லையென்று கூறுதற்காதார மில்லை. ஆனால் தங்கள் தங்கள் சாதி வேஷத்தைக் காத்துக் கொள்ளும் அந்தரங்கக் குடியர்கள் அனந்தம் பேரிருக்கின்றார்கள்.

ஆயினும் சகல சாதியோராலும் பறையர்களென்று தாழ்த்தப்பட்டுள்ள கூட்டத்தோர்களே பெரும்பாலுங் குடிக்கின்றார்களென (ரிப்போர்ட்) என்னும் சில அறிக்கைகளால்காணப்படுகின்றதை யோசிக்கில் சாதிவேஷத் தலைவர்கள் பொறாமெயு மிருக்கலாம். கரையாரென்னும் வகுப்பாருள் மீன்விற்கும் பெண்டுகளையும் புருஷர்களையும் மந்தைமந் தையாகக் கள்ளுக்கடைகளில் வாயிலில் அந்திய வேளையில் சந்ததங்குடித்து உலாவுவது ரிப்போர்ட்டிற்குச் செல்லுவதில்லை போலும்.

மற்றும் சாதி வைத்துள்ள கூலித் தொழில் செய்வோர்களில் நூற்றுக்குத் தொண்ணூறுபெயர் குடியர்களைக் காணலாம். அவர் களும் ரிப்போர்ட்டிற்கு வருவதில்லைபோலும். சாதி வேஷத்தில் அந்தஸ்தும் உத்தியோகமும் செல்வமும் உள்ளவர்களில் நூற்றிற்கு ஐன்பதுபெயரேனும் இருக்கலாம்.

ஆட்களகப்படாவிட்டாலும் புட்டிகள் மட்டும் அகப்படும். இத்தியாதிபலரிலுங் குடியர்களிருந்தும் பறையர்கள் மட்டிலும் பெருந்தொகையான குடியர்க ளென்று தோன்றியது. அவர்களைத் தாழ்ந்த சாதியோ ரென்றுத் தாழ்த்தி சகலவற்றிலும் முன்னேறவிடாமற் செய்யும் படுபாவிகளின் செயல்களே அதற்குப் பீட மாகும். காரணமோவென்னில் பத்துப் பெயர்க்கூடி ஒரு மனிதனை இவன் தாழ்ந்த சாதியன், கொடியன், மிலேச்சனெனச் சொல்லிக்கொண்டே வருவதுடன் அவனை நெருக்கவிடாதுந் தீண்டவிடாதும் இழிவுபடுத்தி வருவார்களாயின் அவன் மனங்குன்றி நாணடைந்து நாளுக்குநாள் சீர் கெடுவானேயொழிய சீர்பெறமாட்டான்.

அவற்றுள் சில விவேகிகள் மட்டிலும், அடடா இவனென்ன நம்மெ ஒத்தமனிதன் கேவலப்புசிப் புடையவன், கேவல உடையுடையவன். கலைநூல் கல்லாதவன், பொய், வஞ்சினம் திருடு, விபச்சாரங் கொலைப் பாதகம் கள்ளருந்தல் முதலிய பஞ்சபாதகங் கள் நிறைந்தவன், நம்மெய்க்கண்டு தாழ்ந்த சாதி யோன் என நடிப்பதும் இழிவு கூறுவதுமாயச்செயல் பொறாமெயாலும் மிலேச்ச குணத்தாலும் தூற்றியலக் கழிக்கின்றான் என்று எண்ணி அவனை சட்டை செய்யாது விலகிப் போய்விடுகின்றார்கள்.

மற்றுமுள்ள அவிவேகிகளோ அவர்கள் தாழ்த்திக் கூறுவது மெய்யென்று கொண்டும் தங்களைத் தாழ்ந்த வர்களென்று எண்ணிக்கொண்டு குடிவிஷயத்தில் அஞ் சாதுகுடித்து அக்குத்தூக்கில்லாத ஆணவம் வெழ்க்கஞ் சிக்கில்லா வீராப்பு கொண்டு வெளியுலாவுவதால் பெருங் குடியர்களென்னும் பிரபலப் பெயருண்டாகிவிட்டது. கருணைதங்கிய மிஷனெரி துரைமக்கள் கிருபையால் கல்விகற்று கிஞ்சித்து விவேகமுற்ற பாலியர்களோ சாமிபெயரைச் சொல்லிச் சொல்லி மனிதனைச் சுட்டுத் தின்று சுராபானமருந்துவோரும், மாடுகளைச் சுட்டுத் தின்று சுராபானமருந்துவோரும் குதிரைகளைச் சுட்டுத் தின்று சுபராபானமருந்துவோருமானவர்களின் மதங்களிற் சேர்ந்துகொண்டு சத்திபூசையென்று சாராயம் வைத்துத் திருட்டுக்குடி குடிப்போர்களும், பிருந்தாவன பூசையெனக் கோழியைக் கொன்று பிரட்டித்தின்று சாராயங்குடித்து பயிரங்கக்கூத்தாடுவோரும், சாமி பிறந்தாரெனக் கோழி, வாத்துகளைக் கொன்று பிரட்டி சாராயங்குடித்து சந்தோஷங் கொண்டாடுவோருமா னோர் பொய்யாகிய சாதிவேஷத்தோரைக் கண்டு குடி யைக்கற்று குடும்பங்கேடுற்றோர் நீங்க, சாமிவேஷத் தை நம்பிக் குடித்துக் கெடுவோரும் அனந்தமாயதாக விளங்குகின்றது. இக்குடியாலுண்டாங் கேடுகளையும் இழிவையும் சற்றுவுற்றுணர்வானாயின் அன்றே நன் மார்க்கத்தில் நடந்து நற்செயல்புரிந்து நல்ல சுகத்தை யடைவான்.

குடியால் அடையுங் கேடுகள் அனந்தமானபோதினும் கூத்துக்கூத்து என்று சொல்லுவதில் பாலியர்கள் கூத்தி, கூத்தியென்னும் விபச்சாரக் கிருத்தியத்திற்கு ஆளாகும் வழிவகையேயாகும். இவற்றை விரிக்கின் வீணேவிரியுமென்று எண்ணி இம்மட்டே விடுகின்றோம்.

(“தமிழன்”, ஆகஸ்டு 13, 1913)

- அயோத்திதாசர் சிந்தனைகள், அரசியல்