அண்மைப் படைப்புகள்

கீற்றில் தேட

sinthanayalan SEP WRAPPER 17

divyabharathi 350துப்புரவுத் தொழிலாளர்களை அரசாங்கமும், நீதித்துறையும் படுத்தும் கொடுமைகளையும், அவர்கள் இந்த நச்சுக் சூழலில் சிக்கி வெளியே வர முடியாமல் இருக்கும் சமூகச் சூழலையும் விளக்கி, தோழர் திவ்யா பாரதி "கக்கூஸ்" என்ற ஆவணப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இப்படம் துப்புரவுத் தொழிலாளர்களின் அவலங்களை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. அது மட்டும் அல்ல; அரசாங்கத்தின், நீதித் துறையின் மனிதாபிமானம் அற்ற போக்கையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

துப்புரவுத் தொழிலாளர்கள் இத்தொழில் வேண்டாம் என்று வேறு தொழில்களுக்குப் போய் விடலாம் என்று கடுமையாக முயன்றாலும், அவர்களால் வெளியே வரமுடியாதபடி, இச்சமூகம் அவர்களை வலுக்கட்டாயமாக அழுத்தி வைத்து இருப்பதும் இதில் காட்டப்பட்டு உள்ளது.     

"இப்பொழுதெல்லாம் யார் சாதியைப் பார்க்கிறார்கள்? அப்படியே இருந்தாலும் கிராமப்புறங்களில் ஓரளவு இருக்கலாமே ஒழிய நகர்ப்புறங்களில் இல்லவே இல்லை" என்று அதிமேதாவித்தனமாகப் பேசும் அறிவு ஜீவிகளை இப்படம் நார் நாராகக் கிழித்துத் தொங்கப் போட்டு இருக்கிறது.

நகர்ப்புறங்களில் சாதிக் கொடுமையில் இருந்து எழ முடியாமல், மலக் குழியிலேயே வெந்து சாகும் துப்புரவுத் தொழிலாளர்களையும், தங்கள் குழந்தைகளை இத்தொழிலில் இருந்து தப்ப வைத்து விட வேண்டும் என்று கடுமையாக முயன்று, பல தியாகங்களைச் செய்து, படிக்க வைத்த பிறகு, அப்படிப் படித்தவர்களும் துப்புரவுத் தொழிலையே செய்ய வற்புறுத்தும் இச்சமூகத்தின் கொடூரத் தன்மையை ஆணித் தரத்துடன் இப்படம் எடுத்துக் காட்டுகிறது. இக்கொடுமைகளை நீக்க வேண்டும் என்று "வீராவேசமாகச்" சட்டங்களை இயற்றினாலும், எந்த அடிப்படை மாற்றமும் ஏற்பட்டு விடக் கூடாது என்று முன்னெச்சரிக்கையாக வேண்டிய எதிர்மறைக் கூறுகளையும் அச்சட்டங்களில் திணித்து இருப்பதை இப்படம் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது. ஒழுங்கான முறையில் சட்டங்களை இயற்றினாலேயே, அவை நடைமுறைப்படுத்த முடியாதபடியான வழிமுறைகளைக் கண்டு பிடிக்கும் நமது அதிகார வர்க்கம், சட்டம் ஏற்படுத்திக் கொடுத்து இருக்கும் வழிகளைப் பயன்படுத்தத் தவறுமா?     

"இப்பிரச்சினையில் அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், நீதித்துறை ஆகியவை மட்டுமா மனிதத் தன்மை இல்லாமல் நடந்து கொள்கின்றன?" என்று கேட்கும் இப்பட இயக்குநர் தோழர் திவ்யா பாரதி, முற்போக்கு பற்றிப் பேசும் இடதுசாரி அரசியல் கட்சிகளும் இதைப் பற்றி மவுனம் சாதித்தது / சாதிப்பது குறித்து வியப்பு தெரிவிக்கிறார். அது மட்டும் அல்ல; இம்மக்களின் அவலங்களைக்களைய வேண்டிய பொறுப்பு உள்ள, தாழ்த்தப்பட்ட வகுப்புத் தலைவர்களும் இவர்களைச் சுரண்டுவதை மிகவும் வேதனையுடன் சுட்டிக் காட்டுகிறார்.

துப்புரவுத் தொழிலாளர்களை மலக் குழியிலேயே வீழ்த்தி வைத்து இருக்கும் சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் குற்ற உணர்வு கொள்ள வைப்பதே தன் முதல் நோக்கம் என்று தோழர் திவ்யா கூறி இருக்கிறார். மேலும் அதன் அடிப்படையில் மக்களைத் திரட்டி இந்த இழிவான முறைக்கு எதிராகப் போராடி ஒழிக்க வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.     

தோழர் திவ்யா கூறுவது மிகவும் சரி! துப்புரவுத் தொழிலாளர்களை இந்நிலையில் வைத்து இருக்கும் நம் ஒவ்வொருவரையும் கொலைக் குற்றத்தை விட மிக மோசமான குற்ற உணர்வு உறுத்தத்தான் வேண்டும். ஆனால் இப்படத்தைக் காணவே மறுக்கும் பலர் இருக்கவே செய்கின்றனர். இந்நிலையில் அமெரிக்கா வில் சான் பிரான்சிஸ்கே நகரில் அம்பேத்கர் வாசகர்கள் வட்டம் (Ambedkar King Stdy Centre) எனும் அமைப்பும் பிற அமைப்புகளும் சேர்ந்து 13.8.2017 அன்று இப்படத்தைத் திரையிட்டு இருப்பதும், மேலும் பல ஊர்களில் திரையிடத் திட்டமிட்டு இருப்பதும் ஒரு உற்சாகத்தைத் தருகிறது பார்த்தவர்களில் பலரைக் குற்ற உணர்வு உறுத்தவே செய்கிறது. ஆனால் இவ்வளவு தெளிவான ஆவணப் படத்தைப் பார்த்த பிறகும், குற்ற உணர்வு உறுத்தாமல் இருப்பவர்களும் இருக்கவே செய்கின்றனர். இது முற்போக்கு உள்ளம் கொண்டவர் களின் பணிச் சுமையைக் கடுமையாக அதிகரிக்கிறது.

சரி! இப்பிரச்சினைக்குத் தீர்வு என்ன? அத்தீர்வைச் செயல்படுத்த முனைந்தால் அதை எதிர்க்கும் சக்திகள் யாவை? அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்து உள்ள இக்காலத் தில் இதற்குத் தீர்வு காண்பது மிக மிக .... மிக எளிது. தொழில் நுட்பம் இன்றைய நிலையை விடப் பாதியளவு கூட வளராத காலத்திலேயே, பணக்கார நாடுகள் மட்டும் அல்லாமல் ஏழை நாடுகளே கூட (சொல்லப் போனால் இந்தியாவை விட ஏழை நாடுகளே கூட) மனிதக் கழிவுகளை மனிதர்களே கையால் அள்ளும் பிரச்சினை இல்லாதபடி திட்டமிட முடிந்து இருக்கிறது. ஆகவே இதற்குத் தொழில் நுட்பத் தீர்வு காண்பது மிக மிக.... மிக எளிது. அப்படி என்றால் தடையாக இருப்பது எது?

இன்று நம் நகரங்களில் கழிவுநீர் எடுத்துச் செல்லும் குழாய்களின் கொள்திறனை விட அதிக அளவில் கழிவுநீர் உற்பத்தி ஆகிறது. ஆங்கிலேயர்கள் போட்ட கால்வாய்க் குழாய்களின் அளவை மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப அதிகரிக்கவில்லை என்பது மட்டும் அல்ல; புதிதாக அமைக்கும் குழாய்களின் அளவே கூட ஒரு ஆண்டிற்குள்ளேயே போதாமல் போகும்படியாகத் தான் வடிவமைக்கப்படுகிறது. ஏன் இப்படி நடக்கிறது? ஏனெனில் துப்புரவுத் தொழிலாளர்களின் துயரமும் வலியும் என்னவென்றே புரிந்து கொள்ள முடியாதவர்கள் தான் திட்டமிடும் வேலையில் அமர்ந்து இருக்கிறார்கள். சரி! இந்நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும்?     

இன்றைய கழிவுநீர் வடிகால் குழாயின் அளவு போதுமானதாக இல்லை. இந்த வடிகுழாய்களை மற்ற நாடுகளின் தரத்திற்கு ஈடாக வடிவமைக்க வேண்டும். அதாவது கழிவுநீர் எந்த ஒரு சூழ்நிலையிலும் தடை இல்லாமல் இறுதி வரை பயணம் செய்யத் தேவைப் படும் அதிகபட்ச அளவைவிட குறைந்தபட்சம் மூன்று மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட கழிவுநீர்ப் பாதையை அமைக்க மிகப் பெரும் நிதியை ஒதுக்க வேண்டி இருக்கும். இதை விவாதிக்கும் போது பெரும்பாலான மக்களுக்குப் பிரச்சினை இருப்பதாகத் தோன்றாது. ஆனால் நடைமுறைப்படுத்த முனைந்தால் மிகப் பெரும் அரசியல் பிரச்சினை எழும். இவ்வளவு பெரிய நிதியை இத்திட்டத்திற்குத் திருப்பிவிட வேண்டும் என்றால், இப்பொழுது செயல்பட்டுக் கொண்டு இருக்கும் எந்தத் திட்டங்களுக்கு வெட்டு விழ வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டி இருக்கும்.

ஆதிக்க சக்திகளாக இருப்பவர்கள் தங்கள் நலன் களுக்கான திட்டங்களின் நிதியில் ஏதே சிறிதளவு விட்டுக் கொடுத்துவிட்டு, உழைக்கும் மக்களின் நலன்களுக் கான திட்டங்களைப் பெரும் அளவில் வெட்டிவிடத் தான் முயல்வார்கள். அம்மாதிரி முயற்சிகள் ஒடுக்கப்பட்ட மக்களிடையே உள்ள முரண்பாடுகளை மேலும் கூர்மையாக்குவதில் தான் முடியும். அது மட்டும் அல்ல; ஒடுக்கபட்ட வகுப்பு மக்களின் நலன்களுக்கான நிதியில் 100ஐத் திருப்பி விட்டாலும் இத்திட்டத்திற்குப் போது மானதாக இருக்காது. ஆகவே ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களிடையே கலவரத்தை மூட்டி விட்டு இறுதியில் பழைய நிலையே தொடரும் நிலை ஏற்படும். ஆதிக்க சக்திகளின் அயோக்கியத்தனமான நலன்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக வெட்டுவது தான் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஒரே வழியாகும்.

இந்நிலையில் முற்போற்குச் சக்திகள் என்ன செய்ய வேண்டும்? இந்திய அரசு ஆதிக்க சாதியினரின், பெருமுதலாளிகளின் (கூடாத) நலன்களுக்காக நெஞ்சு பொறுக்காத அளவை விட மிகக் கொடூரமான அளவு நிதியை ஒதுக்கி வீணடிக்கிறது.

எடுத்துக்காட்டாக, வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பிள்ளைகளில், அந்நாட்டில் உயர் கல்விக்குத் தகுதி பெற முடியாதவர்களுக்கு, இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிலையங்களில் இடம் அளிப்பது மட்டும் அல்லாமல், அவர்களுடைய கல்விச் செலவு முழுவதையும் இந்திய அரசே ஏற்றுக் கெள்கிறது. இத்திட்டத்தில் 90 க்கும் மேல் பயன் பெறுவது பார்ப்பனர்களே. இது முழுமையாகத் தவிர்க்கப்பட்டே தீர வேண்டிய செலவினம். இது ஒரு புறம் இருக்கட்டும்.

காஷ்மீர்ப் பார்ப்பனர்களை அகதிகள் என்று பெயரிட்டு, மனம் பதைபதைக்கும் அளவை விட மிக அதிகமான அளவு சலுகைகளை அள்ளித் தருகிறது இந்திய அரசு. உண்மை என்னவென்றால் அவர்கள் அகதிகளே அல்லர். அவர்கள் காஷ்மீருக்குச் சென்று வாழ்வதற்கு இம்மி அளவும் தடை இல்லை. ஆனால் அவாள் தங்கள் மேலாண்மைக்கு மற்றவர்கள் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்ற வர்ணாசிரம அதர்ம நினைப்பும், காஷ்மீர் மக்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் தான் இந்திய அரசுக்குப் பிரச்சினையாக இருக்கிறது. வர்ணாசிரம அதர்ம எண்ணத்தைக் கைவிட்டுவிட்டால் பண்டிட்டுகளுக்காக ஒதுக்கப்படும் மிகப் பெரும் நிதி முழுவதையும் இத்திட்டத்திற்குத் திருப்பிவிட முடியும்.

இது போல் தகுதி இல்லாத சுகத்தைப் பார்ப்பனர்கள் மட்டுமே அனுபவிப்பதற்காக எண்ணற்ற திட்டங்களை நம் கண்களுக்குப் புலப்படாமலேயே அரசு வைத்துக் கொண்டு உள்ளது. அவற்றை எல்லாம் முழுமையாக வெட்டி விட்டால் இத்திட்டத்திற்குத் தேவையான நிதியைத் திரட்டி விடலாம்.

அது மட்டும் அல்லாமல் பெருமுதலாளியக் குழுமங் களுக்காக வீணாக்கும் நிதியை முழுமையாக வெட்டி விட்டால் இத்திட்டத்தைச் செயலாக்கம் செய்வதற்கு மட்டும் அல்ல; மேற்படி துப்புரவுத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான நிதியும் எளிதில் கிடைத்துவிடும்.

நாம் பேராட்டத்தை எங்கிருந்து தெடங்கப் போகிறோம்?

Pin It

1938இல் நடைபெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக, தமிழக அரசியல் தளத்தில் மாபெரும் திருப்புமுனை ஏற்பட்டது. இனி இந்தியாவுடன் தொடர்ந்து இருக்கக்கூடாது என்பதே அது. அதை வலியுறுத்தி “தமிழ்நாடு தமிழருக்கே” என்று விடுதலை ஏட்டில் அய்ந்து தொடர் கட்டுரைகள் எழுதப்பட்டன.

தமிழ்நாடு தமிழருக்கே! - III

நேற்றும் முன்தினமும் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற தலைப்பின்கீழ் அதன் கருத்தையும், அவசியத்தையும், முறையையும் விளக்கி எழுதியிருந்ததுடன், மறுபடியும் அதைப்பற்றித் தொடர்ந்து திராவிடருக்கும் அந்நியருக்கும் உள்ள வாழ்க்கை முறைப் பேதம்பற்றி எழுதப்படும் என்று குறிப்பிட்டிருந்தோம். அதன்படி இன்று எழுதப் போகும் இந்த 3ஆவது தலையங்கத்தில் முதலாவதாக திராவிடர்கள்-ஆரியர்கள் என்பவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களிருவருக்கும் எப்படி சம்பந்தமேற்பட்டது, அவர் களுடைய வாழ்க்கைமுறை பேதம் எப்படிப்பட்டது என்பவைகளை எடுத்துக்காட்ட இதை எழுதுகிறோம்.

திராவிடநாட்டுக்கு ஆரியர்கள் குடியேறி திராவிடர்களை அடக்கி கீழ்மைப்படுத்தியவர்கள் என்பதைப்பற்றி நாம் விளக்க வேண்டியதில்லை. ஆரியர் திராவிட நாட்டுக்கு வருவதற்கு முன் திராவிடநாடு கலைகளிலும், நாகரிகத்திலும் தலைசிறந்து விளங்கி வந்தது என்பது பற்றியும் நாம் விளக்க வேண்டியதில்லை என்றாலும் இவ்விரண்டுக்கும் ஆதாரமாக இரண்டொரு சரித்திரா சிரியர்கள் அபிப்பிராயங்களை எடுத்துக்காட்டுவது பொருந்துமென நினைக்கிறோம்.

“மேற்கு திபேத்தையும் ஆப்கானிஸ்தானத்தையும் தாண்டி ஆரியர்கள் இந்தியாவுக்குக் குடியேறியவர் களாவார்கள். அவர்களது பாஷை சமற்கிருதம் போன்றது. இந்தியாவுக்கு வந்ததும் தங்கள் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கைகள் முதலியவற்றைத் தங்கள் இஷ்டப்படி தங்கள் பாஷையிலேயே எழுதி வைத்துக் கொண்டார்கள்” என்று சர் என்றி ஜான்ஸ் பட்டளர் என்கின்ற பிரசித்தி பெற்று ஆராய்ச்சியாளர் “இந்தியாவில் அந்நியர்கள்” என்ற புத்தகத்தில் 19ஆவது பக்கத்தில் ஆதாரங்களோடு எடுத்துக்காட்டி இருக்கிறார்.

“ஆரியர்கள் மதுவருந்துவதும் சூதாடுவதுமான ஒழுக்க ஈனமான காரியங்களில் பற்றுடையவர்கள் ”.

இது ராகேஸ் என்னும் பேராசிரியர் “வேதகால இந்தியா” என்பதில் எடுத்துக்காட்டி இருக்கிறார்.

“வட இந்தியாவில் இருந்து திராவிடக் கலை நாகரிகம் முதலி யவை யாவும் ஆரியர்களால் அடியோடு ஒழிக்கப்பட்டு விட்டன - ஆனால், தென்னிந்தியாவில் அவ் விதம் செய்யமுடியவில்லை”

இது “பண்டையத் தமிழரின் வரலாறு” என்கின்ற ஆராய்ச்சிப் புத்தகத்தில் 4ஆம் பக்கத்தில் இருக்கிறது. இந்த ஆராய்ச் சிக் குறியானது நாம் முன் தலையங்கத்தில் குறிப்பிட்ட, அதாவது திராவிடம் இன்னமும் ஆரியமயமாகவில்லை என்பதற்கு ஆதரவளிப்பதாகும்.

“ஆரியரல்லாத இந்நாட்டுத் திராவிடப் பழங்குடி மக்கள் ஆரியர்களால் துன்புறுத்தப்பட்டு காடுகளுக்குத் துரத்தப்பட்டார்கள். இதுவும் போதாதென்று அவர்களை இராட்சதர்கள், அசுரர்கள் என்றும் நூல்கள் எழுதிக் கொண்டார்கள். இதுவும் போதாதென்று கருதி, திராவிடர்களுக்கு ‘தஸ்யூ’ என்றும் -ஆரிய எதிரி என்றும், பெயரிட்டு அவற்றையே நாளாவட்டத்தில் பேய் என்றும், பூதம் என்றும், இராட்சசர் என்றும் பெயர்களாக மாறச் செய்துவிட்டார்கள்”.

இது சர்.வில்யம் வில்ஸன் ஹெணர், டாக்டர் கே.சி.எஸ்.ஐ., சி.ஐ.ஈ. எல்-லய-டி எழுதின “இந்திய மக்களின் சரித்திரம்” 41ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே ஆக்கிக் கொண்டு அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தித் தங்கள் இஷ்டம் போல் தங்களுக்கு அனுகூலமாக சகல விஷயங்களையும் உட்படுத்திக்கொண்டு அதற்கு ஏற்றபடி கதைகளை உற்பத்தி செய்து எழுதி வைத்துக்கொண் டார்கள். இந்தக் கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் திராவிடரை அழுத்தி, அடிமைப்படுத்தித் தங்களை உயர்த்திக் கொள்ளுவதற்கு ஆகவே, எழுதிக்கொள்ளப்பட்டவைகளாகும்.”

இது பிரபல சரித்திராசியரான என்றி பெரிட்ஜ் என்ப வரால் 1865ஆம் வருஷத்திலேயே எழுதப்பட்ட விரிவான இந்திய சரித்திரம் முதல் பாகம் 15ஆம் பக்கத்தில் இருக்கிறது.

“பாரத இராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டுமிராண்டிகள், அசுரர்கள், ராட்சதர்கள், தஸ்யூக்கள் வசிக்கும் நெருக்கமான நாடு என்பதெல்லாம் தென்னிந்தியாவை (திராவிடத்தை)ப் பற்றியேயாகும்.”

இது ராவின்சன் சி.ஐ.ஈ.யால் எழுதின `இந்தியா’ என்னும் புத்தகத்தில் 155வது பக்கத்தில் இருக்கிறது.

“நம்மைச் சுற்றி 4 பக்கங்களிலும் தஸ்யூக்கள் (திராவிடர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் யாகங்கள் செய்வதில்லை. ஒன்றையுமே நம்புவதில்லை. அவர்கள் பழக்க வழக் கங்களே வேறாய் இருக்கின்றன. ஓ! இந்திரனே! அவர் களைக் கொல்லு” என்பது ஆரியர்களின் பிரார்த்த னையாகும். இது ரிக் வேதம் 10ஆம் அதிகாரம் சுலோகம் 22-8ல் இருக்கிறது.

“இந்தியாவில் இருந்த ஆரியர்களிடம் மனிதர்களைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது என்று நிச்சயமாய்ச் சொல்லலாம்.,”

இம்பீரியல் இந்தியன் கெஜட்டில் 1909 வருஷ வால்யம் ஐ, பக்கம் 405 ல் இருக்கிறது.

“தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதார் களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் இராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.”

இது ரோமேஷ் சந்திர டட் சி.அய்.ஈ.அய்.சி.எஸ். எழுதிய “புராதன இந்தியா” என்னும் புத்தகத்தில் 52-வது பக்கத்தில் இருக்கிறது.

“திராவிடர்கள் தங்கள்மீது படை எடுத்துவந்த ஆரியர்களோடு கடும்போர் புரியவேண்டி இருந்தது. இந்த விஷயம் ரிக்வேதத்திலேயே அநேக சுலோகங்களாக இருக்கின்றன.”

இது டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார் எம்.ஏ.யின். “பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும்” என்னும் புத்தகத்தின் 22ஆவது பக்கத்தில் இருக்கிறது.”

“இராமாயணக்கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படை எடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரித்துக் காட்டுவதாகும்.”

இது பி. சிதம்பரம் பிள்ளை எழுதிய `திராவிடரும் ஆரியரும்’ என்னும் புத்தகத்தின் 24ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“இராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக் கும், யுத்த வீரர்களுக்கும் நடந்தபோரைக் குறிப்பதாகும். இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை -ஆரியரல்லாதவர்களைக் குறிப்பதாகும்.”

இது ரோமேஷ் சந்திர டட் எழுதிய “பண்டைய இந்தியாவின் நாகரிகம்” என்ற புத்தகத்தின் 139 - 141ஆவது பக்கங்களில் இருக்கிறது.

“தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும் அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்”

இது “சுவாமி விவேகானந்தா அவர்களது சொற்பொழிவு களும், கட்டுரைகளும்” என்ற புத்தகத்தில் “இராமாயணம்” என்னும் தலைப்பில் 587 - 589 பக்கங்களில் இருக்கிறது.

“ஆரியன் என்கிற பதம் இந்தியாவின் புராதன குடிமக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக்காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக்கொண்ட பதம்” தஸ்யூக்கள் என்பது இந்தியப் புராதன குடிமக்களுக்கு அவர்கள் (ஆரியர்கள்) கொடுத்த பெயராகும்.

இது 1922ஆம் வருஷம் பிரசுரிக்கப்பட்ட கேம்ப்ரிட்ஜ் “பழைய இந்தியாவின் சரித்திரம்” என்னும் புத்தகத்தில் இருக்கிறது.

பகைமைக்குக் காரணம்

“ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும், தஸ்யூக்கள்-அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதாருக் கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமை யைப்பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும், அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைமைக்கு காரணமாகும்”

இது டாக்டர் ராதா குமுத் முக்கர்ஜீ எம்.ஏ., பிஎச்.டி., எழுதிய ‘இந்து நாகரிகம்’ என்னும் புத்தகத்தில் 69ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“இராமாயணக் கதையின் உள் பொருள் என்னவென்றால் ஆரிய நாகரிகத்துக்கும், திராவிட நாகரிகத் துக்கும் (அவற்றின் தலைவர்களான இராமன் - இராவணன் ஆகியவர்களால்) நடத்தப்பட்ட போராகும்.”

இது ராதா குமுத் முக்கர்ஜீ எழுதிய “இந்து நாகரிகம்” என்னும் புத்தகத்தின் 141ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென் கிழக்கிலும், இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசப்படும் பாஷை.

இது சர் ஜேம்ஸ் மர்ரே எழுதிய புதிய இங்கிலீஷ் அகராதியின் பக்கம் 67 டி -யில் இருக்கிறது.

“ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லா தாருக்குள் புகுத்த முயற்சித்து முடியாமல் போனதால் ஆரியரல்லாதாருடய பாஷைகளைக் கற்றுக்கொண்டு அவர்களது நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டி வந்தன.”

இது பண்டர்காரின் கட்டுரைகள் வால்யூம் 3, பக்கம் 10-ல் இருக்கிறது.

“தமிழர்கள் ஆரியர்களை வடவர், வடநாட்டார் என்று அழைத்தார்கள். ஏனெனில், ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தவர்களானதால்”

இது கிருஷ்ணசாமி அய்யங்கார் எம்.ஏ., பிஎச்.டி.,  அவர்கள் எழுதிய “தென் இந்தியாவும் இந்தியக் கலையும்” என்ற புத்தகத்தின் 3ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“இராமாயணத்தில் தென் இந்தியா (திராவிடதேசம்) தஸ்யூக்கள் என்ற இராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது.

“இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகமடைந்த வர்களாய் இருந்தார்கள்”. இது பி.டி.சீனிவாசய்யங்கார் எழுதிய ‘இந்திய சரித்திரம்’ முதல் பாகம் என்னும் புத்தகத்தில் 10ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், இராட்சதர்கள் என்றும் எழுதிவைத்தார்கள். ஆனால் இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்த பிராமணர்கள் கற்றுக்கொண்டார்கள்”. இது ஷோஷி சந்தர் டட் எழுதிய “இந்தியா அன்றும் இன்றும்” என்னும் புத்தகத்தில் 105ஆவது பக்கத்தில் இருக்கிறது.

ஆரியக் கடவுள்களைப் பூசித்தவர்களும், அவர்களைப் பின்பற்றியவர்களும், தேவர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்த வர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப்பகை இருந்துகொண்டே வந்தது”

இது எ.ஸி. தாஸ், எம்.ஏ., பி.எல்., எழுதிய “ரிக் வேத காலத்து இந்தியா” என்னும் புத்தகத்தில் 151ஆம் பக்கத் தில் இருக்கிறது.

ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில், திராவிடர்களை தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், இராட்சசர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

“ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில் ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறு வதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.”

இது சி.எஸ். சீனிவாசாச்சாரி எம்.ஏ., அண்டு எம்.எல். இராமசாமி அய்யங்கார் எம்.ஏ., ஆகிய சரித்திர போதகர்கள் எழுதிய “இந்திய சரித்திரம் முதல்பாகம்” என்னும் புத்தகத்தில் “இந்து இந்தியா” என்னும் தலைப்பில் 16, 17ஆவது பக்கங்களில் இருக்கிறது.

“ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவில் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிட மிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக்கொண்டார்கள்”

இது எச்.ஜி. வெல்ஸ் எழுதிய  “உலகத்தின் சிறு சரித்திரம்” என்னும் புத்தகத்தின் 105ஆம் பக்கத்தில் இருக்கிறது.

“ஜாதிப் பிரிவுகள் நான்கில் அதாவது பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள். கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதனக் குடிகள்.”

இது “New Age Encyclopedia.(நியூ ஏஜ் என்சைக்ளோ பீடியா ஏடிட, ஐஐ, 1925) பக்கம் 237-இல் இருக்கிறது.

“இராமாயணம் தென்னிந்தியாவில் ஆரியர் பரவிய தையும் அதைக் கைப்பற்றியதையும் உணர்த்தும் நூல்”

இது இப்போது கல்வி மந்திரியாய் இருந்த சி.ஜே. வர்க்கி, எம்.ஏ., எழுதிய “இந்திய சரித்திரப் பாகுபாடு” என்னும் புத்தகத்தின் 15ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“விஷ்ணு என்கின்ற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக்கொடுக்கவும் யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது”

இது இ.பி. ஹாவெல் 1918இல் எழுதிய “இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம்” என்னும் புத்தகத்தின் 32ஆவது பக்கத்தில் இருக்கிறது. “பாரதத்தில் இடும்பி என்று ஒரு ஆரியரல்லாத பெண்மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி தனக்குள்ள, ஜாதி துவேஷத்தால் ராட்சசி என்று எழுதி இருக்கிறான். இராட்சதர் என்கின்ற பயங்கரப் புரளி வார்த்தை வைதிகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்”

இது நாகேந்தரநாத் கோஷ் பி.ஏ.,பி.எல் எழுதிய “இந்திய ஆரியரின் இலக்கியமும், கலையும்” என்ற புத்த கத்தின் 194ஆவது பக்கம். “இராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாகக் கூறவும், திராவிடர்களை இழிவுபடுத்திக் காட்டவும் எழுதப்பட்ட நூலாகும்.”

இது பண்டிதர் டி.பொன்னம்பலம் பிள்ளையால் எழுதப்பட்ட “மலபார் குவார்ட்டர்லி ரிவ்யூ”என்னும் புத்தகத்தில் இருக்கிறது. “இந்திய ஐரோப்பியர்களால் (அதாவது ஆரியர்களால்) தோற்கடிக்கப்பட்ட கறுப்பு மனிதர்களை (திராவிடர்களை) தஸ்யூக்கள் என்றும், கொள்ளைக்காரர்கள் என்றும், அடிக்கடி பிசாசுகளாக மாறக்கூடியவர்கள் என்றும் வேத இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கின்றது”

இது பால்மாசின் அவர் செல் எழுதிய “புராதன இந்தியாவும், இந்தியாவின் நாகரிகமும்” என்ற புத்தகத் தில் 19ஆவது பக்கத்தில் இருக்கிறது. இவையும், இவை போன்றனவுமாகிய பல விஷயங்கள் பெயர் பெற்ற ஆராய்ச்சியினர்களுடைய ஆராய்ச்சியிலும், பல ஆரியப் பார்ப்பனர்களுடைய ஆராய்ச்சிலும், ஆரிய வேத புராண இதிகாசங்களிலும் இருந்தே கண்டு பிடிக்கப் பட்டிருப்பவைகளாகும்.

ஆனால், ஆரியர் வருவதற்குமுன் திராவிட நாடு எப்படி இருந்தது என்பதற்கு இராமாயணத்திலேயே ஆதாரங்கள் இருக்கின்றன.

அதாவது, இராமாயணம் கிட்கிந்தா காண்டத்தில் சீதையைத் தேடுவதற்குத் தென்பாகத்திற்கு அனுப்பப் பட்ட அனுமானுக்கு சுக்ரீவனால் சொல்லி அனுப்பப்பட்ட வழிக்குறிப்புகளில், “காவேரி நதியைத் தாண்டிப் பொருநை நதியைக் கடந்து சென்றால் பாண்டியனுடைய பொற் கதவமிட்ட மதிலரணைக் காண்பாய்” என்று சொன்ன தாக, வால்மீகியார் இராமாயணத்தில் கூறுகிறார். மற்றும் அவர் கூறுவது விந்தியமலைக்கு அப்பாலுள்ள திராவிட நாட்டில் தண்டகாருண்யம் கடந்தால் பிறகு,

“ஆந்திரம், சோழம், கேரளத்தோடு கூடிய பாண்டிய நாடுகளைக் காண்பீர்கள்” “அதில் தேவரம்பையர் வந்து நீராடும்படியான தெளிந்த நீரையுடைய திவ்வியமான காவேரி நதியைக் காண்பீர்கள்.” “பிறகு முதலைகள் நிரம்பிய தாம்பிரபரணியைக் காண்பீர்கள் “பிறகு பொன் னிறத்ததாயும், முத்து மயமனதாயும், பாண்டியர்க்கு யோக்கியமானதாயுமுள்ள கபாடபுரத்தைக் காண்பீர்கள்.” “அப்புறம் சமுத்திரத்தைக் காண்பீர்கள். அங்கு சென்று உங்கள் காரிய நிச்சயத்தைச் செய்யுங்கள்” என்று கூறியிருப்பதாக, வடமொழி இராமாயணத்தில் காண் கிறோம். ஆகையால், திராவிட நாடு ஆரியர் இந்நாட்டிற்கு வருவதற்கு முன் மேன்மையாயும், நாகரிகத்துடனும், செல்வத்துடனும் தனிப்பட்ட அரசாட்சி உடையதாயும் இருந்து வந்திருக்கிறது என்பது விளங்குவதோடு, இப்படிப்பட்ட திராவிடமும், திராவிட மக்களும் ஆரியர் ஆதிக்கமும் கொடுமையும் ஏற்பட்ட பிறகே திராவிடர்கள் குரங்குகளாகவும், இராட்சதர் களாகவும் கற்பிக்கப்பட்ட தோடு - சூத்திரன் அடிமை, மிலேச்சன், சண்டாளன், என்பது போன்ற இழிமொழிகளுக்காளாகி சூத்திரர்களுக்கு (திராவிடர்களுக்கு) ஒரு நீதியும், ஆரியர்களுக்கு ஒரு நீதியும் கற்பிக்கப்பட்ட மனுதர்ம நீதி வழங்கப்பட்டிருக்கிறது.

அம்மனு நீதியில் சூத்திரர்களுக்கு (திராவிடர்களுக்கு) விதித்திருக்கும் தர்மங்களையும் பற்றி ஒரு சிறிது மாத்திரம் எடுத்துக்காட்ட ஆசைப்படுகிறோம்.

அதாவது, பிரமாணனுக்குத் தலையை முண்டிதம் செய்வது கொலைத் தண்டமாகும். மற்ற வருணத் தாருக்குக் கொலைத் தண்டமுண்டு. மனுஅத். ஐஐ. 379

அந்தணன் - பூனை, அணில், காடை, தவளை, நாய், உடும்பு, கோட்டான், காகம் இவைகளைக் கொன்றால் ஒரு சூத்திரனைக் கொன்றதற்குச் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் செய்யவேண்டும். மனு.அத்.9. 132

வைதிக கருமமாயிருந்தாலும், லௌகிக கருமமாயிருந் தாலும் அக்கினி எப்படி மேலான தெய்வமாயிருக்கிறதோ, அப்படியே பிராமணன் ஞானியாயிருந்தாலும், மூடனா யிருந்தாலும் அவனே மேலான தெய்வமாவான். மனு.அத்.6. 317

பிராமணன் துர்ச்செய்கையுள்ளவனாயிருந்த போதிலும் சகலமான சுபா-சுபங்களிலும் பூசிக்கத்தக்கவன், அவன் மேலான தெய்வமாதலால். மனு.அத்.7.318 - 319

கருமானுஷ்டமில்லா பிராமணனேனும் அவன் அரசன் செய்ய வேண்டிய தீர்ப்புகளைச் செய்யலாம். சூத்திரன் ஒருபோதும் செய்யக்கூடாது, மனு.அத்.8.20

சூத்திரன் விலை கொடுத்து அடிமையாக வாங்கப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவனைப் பிராமணன் நிர்ப்பந்தப்படுத்தி வேலை வாங்கலாம். ஏனென்றால், கடவுள் சூத்திரனைப் பிராமணனுக்கு வேலை செய்யும் ஒரே நிமித்தமாகவே படைத்திருக்கிறார். மனு.அத்.8,413

பிராமணன் சூத்திரனுடைய பொருளை முழுமனச் சமாதானத்துடன் (சற்றாயினும் பாவமென்றெண் ணாமல்) கைப்பற்றிக் கொள்ளலாம். ஏனெனில் அவனுக் குச் சொந்தமான தொன்றுமில்லையாதலாலும் அவன் சொத்தை அவன் எஜமான் எடுத்துக்கொள்ளலாமாத லாலும். மனு.அத்.8.417

ஒரு பிறப்பாளன் (சூத்திரன்) இரு பிறப்பாளரை (பிராமணரை)த் திட்டினால் அவன் நாவை அறுத்தெறிய வேண்டும். மனு. அத். 8. 271.

அவன் அவர்கள் பேரையாவது, சாதியையாவது தூஷித்தால் பத்துவிரல் நீளமுள்ள பழுக்கக் காய்ச்சிய இரும்பை அவன் வாய்க்குள் செலுத்தவேண்டும். மனு.அத்.8.271

அவன் அகந்தையால் குருமாருக்கு அவர்களுடைய கடமைகளைப் பற்றிப் போதிப்பானானால் அவன் வாய்க்குள்ளும், காதுக்குள்ளும் கொதிக்கிற எண்ணெயை ஊற்றும்படி செய்வது அரசன் கடமை. மனு.அத்.7.272

அவன் உயர் குலத்தானை அடிப்பதற்குக் கையையாவது தடியையாவது உயர்த்தினால் அவன் கையை வெட்டியெறிந்துவிட வேண்டும். அவன் கோபத்தினால் அவனை உதைத்தால் அவன் காலை வெட்டியெறிந்து விட வேண்டும். மனு.அத்.8.280

தாழ் குலத்தான், உயர் குலத்தானோடு சமமாக உட்கார வெத்தனித்தால் அவனை இடுப்பிற் சூட்டுக் கோல்கொண்டு சுட்டுத் தேசத்தைவிட்டுத் துரத்திவிட வேண்டும். அவன் பின்பக்கத்தை வெட்டியெறிந்து விடலாம்.  மனு.அத்.7.281

அவன் அகந்தையால் அவன் மேல் உமிழ்ந்தால் அவன் உதடுகளிரண்டையும் அரசன் வெட்டியெறியும் படி செய்ய வேண்டும். மனு.அத். 8.282

இதுவரை எழுதி வந்தவை ஆரியர் - திராவிடர் யார் என்பதும், அவரவர்கள் வாழ்க்கைமுறை, தன்மை என்ன என்பதும், ஆரியரால் திராவிடம் இன்றைய இழிநிலை அடைந்ததற்குக் காரணம் விளங்கும் படி விளக்கப்பட்டவைகளாகும். இனி திராவிட சமய சம்பந்தமான விஷயங்கள் முதலியவை பற்றி அடுத்த தலையங்கத்தில் விளக்குவோம்.

(விடுதலை : 23-11-1939)

தொடரும்

Pin It

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் நினைத்தால் பல பிரச்சனைகள் தீர்த்து வைக்கலாம். ஆனால், தீர்க்க முன்வரவில்லை. காரணம், ஆட்சியாளர்கள் நினைப்பது ஆட்சி நீடிக்க தொடர்ந்து பிரச்சனைகளை வளர்த்தே ஆட்சியை செய்கின்றனர். தமிழ்நாட்டில் மத்திய அரசு, மொழிப் பிரச்சனையை, கல்விப் பிரச்சனையை நதிநீர்ப் பங்கீட்டு பிரச்சனையை, வரிவசூல் பிரச்சனையை, விலை நிர்ணயம் போன்ற முதன்மையான பிரச்சனைகளைத் தீர்க்க முன்வரவில்லை.

ஒரே சீரான கல்விக் கொள்கையை நடைமுறை செய்ய வேண்டும். ஆனால் கல்வி கற்பிப்பதில் மத்திய கல்வி முறை, மாநிலக் கல்வி முறை என்று பிரித்து, இந்தக் கல்வி முறையில் படித்தால்தான் மேற்படிப் புக்குச் சேரமுடியும். மற்ற கல்வி முறைகளுக்கு வாய்ப்பு இல்லை என்பது வருங்கால மக்கள் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கமாகும்.

அனைத்து மாநிலங்களிலும் நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும். நதிநீரை வீணாக்காமல் நதிகளை இணைத்து நதிநீர் இல்லா மாநிலங்களுக்கு தண்ணீர் பிரச்சனையை மத்திய அரசு முன்நின்று சமமாகக் கிடைக்க வழிவகுக்க வேண்டும்.

1. மழைப் பெய்தால் வறட்சியை மறந்துவிடுகின்றனர்.

2. கல்வியில் சேர்க்கை முடிந்தால் கல்விப் பிரச்சனையை அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போடுகின்றனர்.

3. மாநில மொழிகள் மீது மத்திய அரசு இந்தியை திணித்து மொழிப் பிரச்சனையை அவ்வப்பொழுது தூண்டிவிட்டு குளிர்காய்கிறது மத்திய அரசு.

4.  தொடர்ந்து அண்டை நாடுகளுடன் எல்லைப் பிரச் சனையை கிளப்பிக் கொண்டு பிரச்சனையை தீர்க் காமல் அண்டை நாடுகளுடன் விருந்துண்டு கொண்டு ஆட்சி செய்கின்றது.

5. மத்திய அரசு வங்கிகளில் 6000 கோடி கடனைக் கட்டாதவன் உலகம் சுற்றுகின்றான்; 30 ஆயிரம் கடன் வாங்கிய விவசாயியை உள்ளே தள்ளி அவன் சொத்தைப் பறிமுதல் செய்கின்றது.

மக்களை விழித்துக் கொள்ளாமல், சிந்திக்கவிடாமல், வறுமையிலிருந்து விடுபடாமல் பார்த்துக் கொள்கின்றது, பிரச்சனைகளைத் தீர்க்காத மத்திய, மாநில அரசு, மக்கள் விரோத அரசுகளேயாகும்.

Pin It

ஏகாதிபத்திய ஆட்சி :

kamarajar 350புதுதில்லியின் ஏகாதிபத்தியம் பற்றியும், அதற்கு எப்படி எப்படி எல்லாம் இந்திய அரசியலமைப்புச் சட்டமும், மற்றச் சட்டங்களும், நீதி அமைப்பும் துணை செய்கின்றன என்பது பற்றியும் இளங்கலை, முதுகலை, பொருளியல் படிப்பு மற்றும் இளநிலை சட்டப் படிப்புப் படிக்கும்போதே ஓரளவு படித்திருக்கிறேன்.

வகுப்பில் 50 நிமிடப் பாட நேரத்தில் 3, 4 முறை பேராசிரியர்களிடம் மேற்குறித்த நிலைமைகள் மாற வேண்டும், பொதுவுடமை அரசு மட்டுமே தீர்வு என்ற அடிப்படையில் வினா எழுப்பி விடை பெறுவது என் இயல்பு. அப்படிப்பட்ட நேரங்களில் தில்லியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி பற்றியும், அதே நேரத்தில், தமிழ் நாட்டின் முதல்வராக ஒன்பது ஆண்டு காலம் ஆட்சி செய்த மாண்புமிகு கு.காமராசர் பற்றியும் அதிகம் விமர்சனம் செய்துள்ளேன்.

குறிப்பாக மாநிலங்களுக்குப் போதிய அதிகாரங்கள் இல்லாதது பற்றியோ, இந்திய ஏகாதிபத்திய வல்லாட்சியில் ஒற்றை ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்பது பற்றியோ பேசாத, கவலைப்படாத காமராசரை தில்லிக் காங்கிரசோடு இணைத்துப் பலமுறை குறை கூறிப் பேசியுள்ளேன்.

மேன்மை மிகு காமராசர் ஆட்சிக் காலத்தில் அவர் செய்த சாதனைகளான இராசாசியின் குலக்கல்வி ஒழிப்பு மற்றும் கல்விப் புரட்சி, தொழிற்புரட்சி, நீர்த் தேக்க அணைகள் கட்டி செய்த வேளாண்மைப் புரட்சி என்பதெல்லாம் அப்போது தெரியவில்லை.

தான் ஒரு புரட்சியாளன் என்று தனக்குத்தானே காமராசர் கூறிக் கொண்டதுமில்லை. மற்றவர்கள் அப்படிக் கூற அனுமதிக்கவும் இல்லை. ஆனால், இன்றோ உண்மையான புரட்சிக்கு எதிர்ப்புரட்சியாளர்கள் ‡ புரட்சி என்ற சொல்லின் ஒரே ஒரு எழுத்துக்குக் கூடத் ‘தகுதியற்றதுகள்’ எல்லாம் புரட்சித் தலைவர் என்றும், புரட்சித்தலைவி என்றும், புரட்சிப் புயல் என்றும் கோயபெல்ஸ் வேலை செய்கின்றனர்.

நாடார்:

பொன்னை நாடார், பொருளை நாடார், பெண்ணை நாடார், காமராசர் நாடார் என்பதெல்லாம் காலம் போகப் போகப் பின்னாட்களில் அறிந்து, பக்குவப்படாத இளமைக்காலத்தில் காமராசர் பற்றிக் குறைவாகப் பேசியது பற்றி மிக, மிக வருந்தியதுண்டு. மக்களாட்சியின் மாண்புகள் அறியாத -வாக்குச் சீட்டின் தன்மை, வல்லமை அறியாத  - படிப்பும், அறிவும் குறைவான மக்களிடம்; எப்படி எப்படியோ தரம் தாழ்ந்த முறையில் வாக்குப் பெற்று, ஆட்சியில் அமர்வது என்பது, நாட்டு வளத்தை, மக்கள் செல்வத்தைக் கொள்ளையோ கொள்ளையயன அன்றாடம் கொள்ளை அடிக்க, வாக்குச் சீட்டுகள் மூலம் மக்கள் தங்களுக்கு அளித்த அனுமதி. அங்கீகாரம் என்றே கருதி, கொள்ளை அடிக்கும் இன்னாள் மாண்புகளுக்கும், ஊழல் என்றால் என்ன? சொத்து சேர்க்கும் “அறிவியல் ஊழல்” என்றால் என்ன, என்றே அறியாத மக்கள் முதல்வர் காமராசருக்கும் அனுவளவும் தொடர்பு இல்லை.

தந்தை பெரியார் :  காந்தியையும் காங்கிரசையும் முழு மூச்சாக எதிர்த்த தந்தை பெரியார் காமராசரை மட்டும் பச்சைத் தமிழன் என்று பெருமையுடன் கூறி, ஆட்சியில் அமர்த்தி  ஆதரித்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அந்தப் பச்சைத் தமிழன் பிறந்த நாளான சூலை 15 - ஆம் நாள் அவர் பிறந்த விருதுநகர் இல்லத்தில் தொடங்கி சூலை 21 முடிய 7 நாட்கள் காமராசர் பிறந்த நாள் விழா - மது ஒழிப்புப் பிரச்சாரம் என்ற இரு செய்திகள் பற்றித் தொடர் ஊர்திப் பயணம் செய்தோம்.இந்தப் பயணத்தை சென்னை கவிஞர் இராமலிங்க சோதி தொடங்கி வைத்தார். இந்தப் பயணத்தில் 2.10.2014ல் குமரியில் தொடங்கி 12.1.2015 இல் சென்னையில் நிறைவு செய்த மது ஒழிப்பு 103 நாட்கள் பிரச்சார நடை பயணத்திற்கு ஏற்பாடு செய்தத் தோழர் இனாமுல் அசன், தஞ்சை விசிரி சாமியார், மூங்கில் அமைப்பின் உறுப்பினரும், சென்னைப் பல்கலைக்கழக முதுகலை மாணவருமான நாகார்சுனன் அவர்களும் பிரச்சார பயணத்தில்  கலந்து கொண்டது சிறப்பாகும்.

குட்டம் சிவாஜி முத்துக்குமார் :

இவர் தான் காமராசர் - சிவாஜி பொது நல இயக்கத்தின் நிறுவனத் தலைவர். காங்கிரசால், காமராசரால் பதவியும், கோடி, கோடியாகப் பணமும் குவித்தவர்கள் செய்யத் தவறியதைத் ‡காமராசர் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யத் தவறியதை இந்த ஏழை சிவாஜி முத்துக்குமார் 7 நாட்கள் ஊர்திப் பிரச்சார பயணமாகச் சிறப்பாக செய்தார். நெல்லை மாவட்டம் இராதாபுரம் வட்டம், குட்டம் ஊரினரான 46 வயது நிரம்பிய துடிப்பு மிகும் இளைஞர் இவர். 2.10.2014 முதல் 12.01.2015 வரை நடந்த 103 நாட்கள் குமரி - சென்னை  - மது ஒழிப்பு நடைப் பயணத்தில் முழுமையாகப் பங்கேற்று உணர்ச்சி மிகு வீர உரையாற்றியவர்தான் இவர்.

ஏழையிலும் ஏழை முதல்வர்களில் முதல்வர் :

15.7.2017 காலை 10 மணியளவில் காமராசர் பிறந்த இல்லத்தில் நுழைந்தோம். 10 அடி அகலம் கூட இல்லாத சந்துத் தெருவில், சுமார் 300 சதுர அடி கூட இல்லாத வீட்டில்தான் 9 ஆண்டுகாலம் தமிழ் நாட்டின் ஒப்பற்ற முதல்வராகவும், இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும், லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி ஆகியப் பிரதமர்களை நிலை நிறுத்திய ஈடிணை இல்லாத் தலைவராகவும் இருந்த காமராசர் வாழ்ந்திருக்கிறார் என உணர்ச்சிப் பொங்க நான் பேசியபோது “அய்யா கொஞ்சம் பொறுங்கள்” என்றது ஒரு குரல்! என்னங்க என்று கேட்டேன். நீங்கள் கூறிய சிறிய வீடும் அவருடையதல்ல. அவருடைய தாய் மாமாவின் வாடகை வீடுதான் என்றார் ஒருவர்! அதிர்ந்தே விட்டேன்!

மெய்யும் பொய்யும் : 

வேறு எவ்வித அசையும் மற்றும் அசையா சொத்துகளும் இல்லாமல் வெறும் 136 ரூபாய் மட்டுமே தன் வங்கிக் கணக்கில் வைத்துவிட்டு மறைந்த மனிதருள் மாணிக்க முதல்வர் காமராசர் வரலாற்றில் எப்போதும் நிலைத்து நிற்பார். “ஏழை பங்காளன் காமராசர் என்று கூறுகிறார்கள். அது சுத்தப்பொய். காமராசர் வெளிநாட்டு வங்கிகளில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளார் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்!” என்று கரகரத்தக் குரலில் குரைத்தப் பிச்சைக்கார அரசியல்வாதிகள், பொது வாழ்வுக்கு வந்த பின் எத்தனை எத்தனை கோடிகளுக்குச் சொந்தக்காரர்கள் என்பது அவர்களுக்கேத் தெரியாது. அவர்கள் வாரீசுகளுக்கும் தெரியாது! ஏன் வருமானவரித் துறைக்கேத் தெரியாது.

திருவிழா :

எங்களின் ஊர்திப் பயணம் விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் பயணித் தது. அந்த ஏழு நாட்களில் ஒவ்வொரு நாளும் குறைந்தது பத்து ஊர்களில் பிரச்சாரம் செய்தோம். எல்லா ஊர் களிலும் சுமார் 50% மக்கள் நாடார் சமூகமே. காமராசர் சிலையோ காமராசர் பேரால் பேருந்து நிலையமோ, மருத்துவமனை போன்ற பொது அலுவலகங்களோ இல்லாத ஊர்கள் சில ஊர்கள்தான். காமராசர் பிறந்த நாள் விழா சூலை 15க்குப் பிறகும், தொடர்ந்து நடை பெறுகிறது. ஊரெங்கும் விழாக்கோலம்!

கலை நிகழ்ச்சிகள், ஆண், பெண் சிறார்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், பொது விருந்துகள், ஊரின் நடுவே பெரிய, பெரியப் பந்தல்கள். அவற்றில் மிகச் சிறந்த உணவு விருந்துகள். ஏற்றத் தாழ்வு பாராமல் ஊரார் அனைவரும் விருந்தில் பங்குபெரும் மாட்சி!

மறக்க முடியுமா?  நெல்லை மாவட்டம், வேலப்ப நாடார்  ஊர் என்ற ஊருக்கு இரவு 8 மணிக்குச் சென் றோம். நல்ல வரவேற்பு. விருந்து சாப்பிடுங்கள் - பயணச் செலவுக்குப் பணமும் தருகிறோம் - இன்று காமராசர் பிறந்த நாள் விழாப் பற்றி மட்டுமே பேசுங்கள் - மது ஒழிப்புப் பற்றிப் பேச வேண்டாம். ஏனெனில், இந்தக் காமராசர் பிறந்த நாள் விழாவில் கட்சிப் பாகுபாடின்றி அனைவரின் ஒத்துழைப்புடன் ஒன்றாக விழா நடத்து கிறோம். நீங்கள் மது ஒழிப்புப்பற்றிப் பேசினால், மதுவுக்கு ஆதரவான சிலர் மறுப்புக் கூறக் கூடும். இந்த விழா தடைபடலாம். அதனால், வேறு ஒரு நாளில் நீங்கள் வந்து மது ஒழிப்புப் பிரச்சாரம் செய்ய மேடை மற்றும் வசதிகளை நாங்கள் செய்து தருகிறோம் என்றுத் திட்டவட்டமாகக் கூறினர்.

“ஏழைப் பங்காளன்” காமராசர் பிறந்த நாள் விழாவில் மது ஒழிப்புப் பற்றிப் பேசத் தடையா? உங்கள் விருந்தும் வேண்டாம் ‡பணமும் வேண்டாம் என்று வீராவேசமாக சிவாஜி முத்துக்குமார் கூறி, அந்த வேலப்ப நாடார் ஊரை விட்டு வேறு ஊருக்குப் புறப்பட்டுச் சென்றோம்.

கல்விக் கூடங்களில் :

நெல்லை மாவட்டம், இராதாபுரம் வட்டம், குட்டம் ஊரில் உள்ள அரசு மேனிலைப் பள்ளி, நெல்லை நகரம் KTC நகர் அருகில் உள்ள சாரதாக் கல்லூரி மேனிலைப் பள்ளி மற்றும் நெல்லை, இராதாபுரம் கல்லிக்குளம் ஊரில் தட்சிண மாரா நாடார் சங்கக் கல்லூரி ஆகிய கல்வி நிலையங் களில் சிறப்பாகப் பேசினோம்.

இந்தப் பயணத்தில் காமாராசர் பற்றி ஒரு புறமும், மது ஒழிப்பு பற்றிப் மறுபுறமும், கொண்ட 17,000 துண்டறிக் கைகள், காமராசர் வரலாறு பற்றிய 2000 புத்தங்கள், சுவடிகள், எழுதுகோல்கள், மாணவர்களுக்கு வழங்கினோம்.

ஊர்வலம் :

ஆயிரக்கணக்கான மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட ஊர்வலத்தை திசயன் விளை நகரில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் அவர்கள் தொடங்கி வைத்து, ஊர்வல இறுதியில் ஊர்திப் பயணப் பிரச்சாரக் குழுவிற்கு சால்வை அணிவித்து நிறைவுரை ஆற்றினார்.

காமராசர் பிறந்தநாள் விழா - மது ஒழிப்பு ஊர்திப் பயணம் முக்கடல் சந்திக்கும் குமரி முனையில் உள்ள காமராசர் நினைவு மண்டபத்தில் ஏழாம் நாள் நிறைவு பெற்றது. குமரியில் உள்ள புகழ்பெற்ற சிவந்தி மருத்துவமனை உரிமையாளர் மரு.கார்த்தீசன் அவர்கள் மகிழ்வுரையும், நிறைவுரையும் நிகழ்த்தி நிறைவு செய்தார்கள்.

காமராசர் பிறந்த நாள் விழா மற்றும் மது ஒழிப்புப் பிரச்சாரம் எனும் பெயரால் குட்டம் சிவாஜி முத்துக்குமார் அவர்கள் மிகவும் கடினமாகப் பாடுபட்டு மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்த, அந்த இனிய மகிழ்ச்சியான ஊர்திப் பயணத்தை வாழ்வில் மறக்க முடியாது!

பச்சைத் தமிழர் காமராசருக்கு நடைபெறும் இந்த விழாவைப் போல குடும்ப விழாவாக, ஊர் விழாவாக வேறு எவருக்கும் இந்தியாவில் நடைபெறுகிறதா என்பது ஆய்வுக்குரியது - மகிழ்ச்சிக்குரியது.

ஒற்றுமைப் பேரவை  (EKTA PARISHAD)

மானிட ஒற்றுமை சமத்துவம் எனும் உயர்ந்த குறிக்கோளுடன் 1990 முதல் இந்த ஒற்றுமைப் பேரவையை P.V.இராசகோபால் என்பவர் இயக்கிக் கொண்டுள்ளார். நாடெங்கும் இருந்தக் கொத்தடிமை களை மீட்பதற்காக உச்ச நீதுமன்றம் இவரை ஆணையராக நியமித்து. நான்கு ஆண்டுகளில் 6000 தமிழ் நாட்டுக் கொத்தடிமைக் குடும்பங்களை வட இந்தியாவில் இருந்து மீட்டது இவரது சீரிய சாதனை!

இந்த ஒற்றுமைப் பேரவையின் தமிழ் நாட்டு அமைப்பாளராக மதுரைத் தோழர் தனராசு அவர்கள் துடிப்புடன் இயங்குகிறார்கள். நிலம், நீர், வனம் ஆகிய மக்கள் உரிமைகளைத் தனியார் மற்றும் அரசு ஆக்கிரமிப்பிலிருந்து காப்பது இந்த அமைப்பின் நோக்கம். இந்தியாவின் 12 மாநிலங்களில் இந்த அமைப்புக்குக் கிளைகள் உள்ளன.

நிலமற்ற ஏழை உழவுத் தொழிலாளிகளுக்கு நிலத்தைப் பங்கீடு செய்து அளிக்க இந்தப் பேரவை பாடுபடு கிறது. மலைகளிலும் காடுகளிலும் காலங்காலமாக நிரந்தரமாக வசித்துவரும் மலைவாழ் மக்கள் மற்றும் காட்டுவாசிகள் அவர்களின் மலை மற்றும் காடுகளில் தொடர்ந்து வாழ்வதைப் பறிக்கும் செயலை யார் செய்தாலும், அதைக் காந்திய வழியில் தடுத்து நிறுத்தி மலைவாழ் மக்கள் மற்றும் காட்டுவாசிகளைக் காப் பாற்றும் வேலையைத் தொடர்ந்து செய்கிறது இந்தப் பேரவை. இந்த நோக்கத்திற்காக 2007 இல் மத்தியப் பிரதேசம் குவாலியரில் தொடங்கி புதுதில்லி வரை 25000 போராளிகளை நீண்ட பயணமாகப் போராட்டப் பயண மாக நடத்தியது இந்த ஒற்றுமைப் பேரவை. இந்த அமைப்பின் கோரிக்கையை மத்திய அரசு 2012 இல் ஏற்று அடித்தட்டு மக்களுக்கு நிலமும், வீடும் அளிக்க உறுதி கூறியுள்ளது.

ஒற்றுமை அமைதி சமத்துவம் சமநீதிக்கான இளைஞர்களின் பயிற்சி முகாம்களை 500 மாவட்டங்களில் நடத்தத் திட்டமிட்டுத் தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிறது இந்தப் பேரவை.

தமிழ்நாட்டில் இந்த ஒற்றுமைப் பேரவையின் பயிற்சிமையமாக  CESCI (Center for Experiencing Soio Cultural Interaction) என்ற பெயரில் மதுரைக்கு அருகில் கடவூர் என்ற மலைப் பகுதியில் இயங்குகிறது.

இந்த ஒற்றுமைப் பேரவை பலத் தோழமை அமைப்பு களை அழைத்து 30.7.2017 இல் மதுரைக் கடவூர் CESCI மையத்தில் வெகுமக்களின் வாழ்வியல் சிக்கல் கள் என்ற கருத்தரங்கை நடத்தியது. இதில் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பாக நான் கலந்து கொண்டு மதுச்சிக்கல்தான் மக்கள் அனை வரின் உடனடிப் பிரச்சினை என்று கருத்துக்களைக் கூறினேன். இந்தக் கருத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து பல கருத்தரங்குகளையும், இளைஞர் களின் பயிற்சி வகுப்புகளையும் களப் போராட்டங் களையும் நடத்துகின்ற - நடத்த இருக்கின்ற இந்த ஒற்றமைப் பேரவை வாழ்க! வளர்க! என மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி வாழ்த்துகிறது!

- காமராசர் புகழ் நீடு வாழ்க 

Pin It

 

 

சிந்தனையாளன் செப்டம்பர் 2017 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.

 

 

Pin It