அண்மைப் படைப்புகள்

கீற்றில் தேட

sinthanayalan SEP WRAPPER 17

பொருளாதார ஆய்வறிக்கை ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு ஒன்றிய அரசால் வெளியிடப்படுகிறது. மோடி அரசு அமைந்த பிறகு 2வது பொருளாதார ஆய்வறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  ஒன்றிய அரசால் வெளியிடப்படும் பொருளாதார அறிக்கைகளில் உண்மைகளைத்  தேடிக் கண்டுபிடிப்பதற்குத் தனித்திறமை தேவை. காரணம் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் சாதாரண மக்களால் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு வடிவமைக்கப்படு கின்றன. இதன் காரணமாக  பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதைப் படிப்பதே இல்லை. புதுதில்லியில் உள்ள புத்தகச்சாலைகளில் அறிக்கை வந்த இரண்டாம் நாளிலேயே  முன் பக்க அட்டையை நீக்கிவிட்டு  விற்பனை யாளர்கள் இந்த அறிக்கையை விற்கிறார்கள். எனவே இப்பொருளாதார அறிக்கையைப் பற்றிய விவாதங்கள் நாடாளுமன்றத்தில் அதிகம் நடைபெறுவதில்லை.

பொருளாதார ஆய்வாளர்களும் ஏட்டாளர்களும்தான் இந்த அறிக்கையைப் படித்துவிட்டு ஆய்வு நோக்கோடு கட்டுரையை வெளியிடுகின்றனர். இதைப் படித்தாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் பொருளாதாரத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டுவதில்லை. இந்த ஆண்டோ யாரும் முன்பே படிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் நாடாளுமன்றம் முடியும் கடைசி நாளில் இவ்வறிக்கை கொடுக்கப்பட்டது. எனவே காங்கிரசுக் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் ராஜிவ் கௌடாவும் ஆய்வாளர் சாலமன் சோசும் இவ்வறிக்கையைப் பற்றி இந்து ஆங்கில நாளேட்டில்  கட்டுரை எழுதியுள்ளனர்.  இக்கட்டுரையில் இந்தியப் பொருளாதாரம் பெரும் சரிவினைச் சந்தித்து வருகின்றது என்பதற்கான தரவுகளையும் அளித்துள்ளனர். பொருளாதாரத்தில் பெரும் ஓட்டை (Big Hole) விழுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆண்டு வளர்ச்சி  7.5, 6.5 விழுக்காட்டு அளவிற்கு இந்தியப் பொருளாதாரம் வளரும் என்று மோடி அளித்த நம்பிக்கைகள் சிதைந்து வருகின்றன. இந்தப் பொருளா தார ஆய்வறிக்கை இதற்கு ஒப்புதல் வாக்குமூலமாகவே அமைந்துள்ளது. குறிப்பாகத் தொழில் துறையில் முதலீடுகளும் குறைந்துள்ளன. தொழில் துறையின்  உற்பத்தித் திறனும் வீழ்ந்து வருகிறது. இந்த வீழ்ச்சி 2016-17இல் முதல் நான்கு மாதங்களில் தொடங்கி ஆண்டின் மூன்றாம் காலாண்டிலும் தொடர்ந்து கொண்டி ருக்கிறது. ரூ.500 ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு பொருளாதாரத்தைப் பின்னோக்கித் தள்ளி விட்டது. குறிப்பாக தனியார் வணிக நடவடிக்கைகள் 2016 மார்ச்சில் 11 விழுக்காடாக இருந்தது. 2017 மார்ச்சில் அது 4 விழுக்காடாகப் பெருமளவில் வீழ்ந்துள்ளது.

இந்நிலையில் நாட்டு மக்களுக்கு முதன்மையான தகவல்களை அளிப்பதில் பிரதமருக்கும் நிதியமைச்சருக் கும் உயர் அலுவலர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. முரண்பாடுகளின் மொத்த உருவமாக ஒன்றிய அரசு மாறி வருகிறது.  ஆகஸ்ட் 15ஆம் நாள் பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடியேற்றியபோது இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 34 இலட்சம் புதிய வரிகட்டுவோர் இணைந்துள்ளனர் என்று குறிப்பிட்டார். பொருளாதார அறிக்கையின் 2ஆம் பாகம் வெளியிடும் போது ஒன்றிய அரசின் பொருளாதாரத் தலைமை ஆலோசகரான  அரவிந்த் சுப்ரமணியம்- 5.4 இலட்சம் புதிய வருமான வரி செலுத்துவோர் இந்தப் பணமதிப் பிழப்பு நிகழ்விற்குப் பிறகு இணைந்துள்ளனர் என்று கூறுகிறார். நிதியமைச்சர் அருண் ஜெட்லியோ 91இலட்சம் புதிய வருமானவரி கட்டுவோர் இணைந்துள்ளனர் என்று அறிவித்திருக்கிறார். ஒன்றிய அரசின் நிதித்துறை இணை யமைச்சர் சந்தோஷ் கெங்வார் ஆகஸ்ட் 2ஆம் நாளன்று 33இலட்சம் புதிதாக வருமானவரி கட்டுவோர் இணைந் துள்ளனர் என்று குறிப்பிடுகிறார்.

பிரதமர் மோடி தனது விடுதலை நாள் பேச்சில்  பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 3 இலட்சம் கோடிகள் வங்கிகளில் வைப்புத் தொகையாக வந்துள்ளது என்று குறிப்பிட்டார். வங்கிகளில் வந்து சேர்ந்துள்ள தொகையில் 1.75 இலட்சம் கோடி கறுப்புப் பணமா என்பதை மத்திய அரசு ஆய்ந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார். ஆனால் நிதியமைச்சகத்தின் சார்பில் நான்கு முறை கறுப்புப் பணத்தின் விவரத்தை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

1)2017ஆகஸ்ட்1ஆம் நாள் நாடாளுமன்றத்தில் துணை நிதியமைச்சர் சந்தோஷ்குமார் கெங்வார் கறுப்புப் பணத்தின் அளவைப் பற்றி எந்தவித அதிகாரப்பூர்வ மான மதிப்பீடும் கிடைக்கவில்லை என்று கூறியுள் ளார். இதற்கு முன்பு,

2) 2017ஜூன் 21ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நிதிய மைச்சர் அருண் ஜெட்லி வெளிநாடுகளிலும் வெளி நாட்டு வங்கிகளிலும் பதுக்கியுள்ள கறுப்புப் பணத்தின் அளவைப் பற்றியும் அதிகாரபூர்வமான தகவல் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

3) 2017ஏப்ரல் 7 அன்று சந்தோ`ஷ்குமார் கெங்வார் ரூ.500 ரூ.100 தாள்கள் செல்லாது என்று அறிவித்த பிறகு வங்கிகளில் செய்யப்பட்ட வைப்புத்தொகையின் அளவு பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

4)  2017 மார்ச் 17இல் துணை நிதியமைச்சர் இந்தியாவில் கறுப்புப் பணம் எவ்வளவு உள்ளது என்பது பற்றிய அதிகாரபூர்வமான தகவல் இல்லை என்று கூறினார்.

2017ஆகஸ்ட் 20  அன்று மும்பையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நக்சல்பாரி இயக்கத்தினருக்கும் காஷ்மீர் தீவிரவாதி களுக்கும் நிதி கிடைப்பதில்லை என்ற ஒரு புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களின்படி, பா.ஜ.க. தான் பல ஆயிரம் கோடி ரூபாய்களை அரசியல் நன் கொடையாகப் பெற்று இந்திய அரசியல் கட்சிகளில் நன்கொடை பெறுவதில் முதலிடத்தில் உள்ளது.

தேசியப் பொது நிதியியல் மையம் ( National Instiute of Public Finance) ஒன்றிய அரசின் நிதியுதவியோடு செயல்படுகிற தன்னாட்சி நிறுவனமாகும். இந்த ஆய்வு மையம் 2013இல் அன்றைய நிதியமைச்சர் சிதம்பரம் அவர்களிடம் இந்தியாவில் ஆண்டுதோறும் 23 இலட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் புழக்கத்தில் உள்ளது என்ற அறிக்கையை அளித்தது. இந்தத் தகவலை மும்பையில் இருந்து வெளி வரும் பொருளாதார அரசியல் வார ஏடு வெளியிட்டது. இப்படிப்பட்டத் தகவல்களையும் புள்ளி விவரங்களையும் வைத்துக் கொண்டு கறுப்புப் பணக்காரர்கள் யார் என்பதைக் கண்டும் காணாமல் மக்களை ஏமாற்ற நாள்தோறும் ஒரு பொய்யான அறிக்கையை ஒன்றிய அரசின் அமைச்சர்கள் மாறி மாறி வெளியிடுகின்றனர்.

நாட்டின் பொருளாதாரத்தை வலிமைப்படுத்துவதில் பெருந்தொழில்களும் சிறுதொழில்களும்  முதன்மையான பங்கினை வகிக்கின்றன. 2017 மார்ச் புள்ளிவிவரப் படி வங்கிக்கடன் வளர்ச்சி கடந்த 60 ஆண்டுகளில் ஏற்படாத சரிவைச் சந்தித்து அதன் வளர்ச்சி 5.1 விழுக் காடாக வீழ்ந்துள்ளது. தனியார் துறையும் கடனைப் பெறவில்லை. தொழில் துறையின் உற்பத்தி அளவும்  பெருமளவில் வீழ்ந்துள்ளது. இந்தியத் தொழில் உற்பத்திக் குறியீடு  சுருங்கிக் கொண்டே வருகிறது. மேலும் வங்கிக ளில் கடன் பெற்றுத் திரும்ப அளிக்காதவர்களின் கடன் தொகை அளவு 2014இல் ஒரு இலட்சத்து 73ஆயிரத்து 800 கோடிகளாகும். 2017இல் அதன் அளவு 7இலட்சத்து 79ஆயிரத்து 153கோடியாக உயர்ந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகப் போற்றப்படுகிற வங்கிகளில் கடன் பெற்றுப் புதிய முதலீடுகள் வழியாகத் தொழில்களைத் தொடங்க யாரும் முன்வரவில்லை.

கடன் பெற்ற பெரு முதலாளிகள் கடனைத் திருப்பி யளிக்கும் திறன் இருந்தும் திருப்பியளிக்கவில்லை. குறிப்பாக பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் ஸ்டேட் வங்கி ஆகிய இரு பொதுத் துறை வங்கிகளில் இருந்து கடன் பெற்றுள்ள முதலாளிகள் திருப்பாமல் இருக்கும் தொகையின் அளவு 2015-16 நிதியாண்டில் 76 ஆயிரத்து 685 கோடியாகவும், 2016-17 நிதியாண்டில் 92 ஆயிரத்து 376 கோடியாகவும் உயர்ந்துள்ளது. ஒரே ஆண்டில்  வராக்கடன் அளவு 20.4விழுக்காடாக உயர்ந் துள்ளது மோடி அரசின் சாதனைதானே? இச்சூழலில் வெளிநாட்டிலிருந்து வரும் முதலீடுகளைப் பெருக்குவதற் காக இந்திய மைய வங்கி வட்டி வீதத்தைக் குறைத் துள்ளது. தற்போது உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தியில் வெளிநாட்டு முதலீடுகளின் அளவு 2.3 விழுக்காடாகும். எவ்வாறு வெளிநாட்டு முதலீடுகளைப் பெருக்கிப் பொரு ளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாகும்.

மாநிலங்களின் நிதியாதாரங்களும் குறைந்து கொண்டே வருகின்றன. தனியார் துறையும் சாய்ந்து வருகிறது. இதன் காரணமாக தேவையார்வம் மக்களிடம்  குறைந்து வருகிறது. இவ்வாறு ஒன்றையொன்று பின்னி, பொரு ளாதார வளர்ச்சி சுருங்கினால் இதைப் பொருளாதார அறிஞர்கள் பணவாட்டம் (Deflation) என்று  குறிப்பிடு வார்கள்.

இந்தப் பணவாட்டம் இந்தியப் பொருளாதாரத்தை இறுக்கமாகக் கவ்விக்கொண்டுள்ளது. இதன் விளைவால் ஏழை எளிய நடுத்தர வருமானப் பிரிவினர் பெருமளவில் பாதிக்கப்படுவர். வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரிக்கும். இதை உறுதி செய்யும் வகையில் இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் ( Centre for Monitoring of Indian Economy) வெளியிட்டுள்ள  அறிக்கையில் 2017 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 15 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். ஆண்டிற்கு 2 கோடி பேர்களுக்கு  வேலையளிப்பேன் என நாடாளு மன்றத் தேர்தல் நேரத்தில் இந்திய பிரதமர் அறிவித்தது பொய்யாகிவிட்டது என்பதையே மேற்கூறிய புள்ளி விவரம் சுட்டுகிறது.

2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப் பின்படி நாட்டின் மக்கள்தொகை 121 கோடியாகும். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 48கோடி மக்கள் 15 முதல் 39 வயதிற்குட்பட்டவர்கள். இவர்கள்தான் வேலை வாய்ப்பை நம்பி வாழ்பவர்கள். இவர்களுக்குப் போதிய அளவிற்குச் சுகாதார வசதிகள் இல்லை என்பதையும் நோய்வாய்ப்பட்டால் தங்கள் சொந்தச் செலவில் மருத்துவம் பார்த்துக் கொள்பவர்கள் எண்ணிக்கை 69 விழுக்காட்டினர். மாநில அரசு பொதுச் சுகாதாரத்திற்காக 11 விழுக்காடுதான் செலவிடுகிறது. ஒன்றிய அரசு 6.6 விழுக்காடுதான் செலவிடுகிறது. இச்சூழலில் கடன் வாங்கித்தான் மருந்துகளை மக்கள் வாங்கிப் பயன்படுத் தும் நிலையில் உள்ளனர். மருந்துகளின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது விதிக்கப்பட்ட சரக்கு சேவை வரியால் மக்கள் நுகரும் பொருட்களும் மருந்து விலைகளும் பன்மடங்காக உயர்ந்து வருகின்றன.

தொடக்கப் பள்ளிக் கல்வியிலிருந்து பல்கலைக்கழகக் கல்வி வரை மாநிலங்களுக்கு மாநிலம் ஏற்றத்தாழ்வுகள் பெருமளவில் உள்ளன. இந்தியாவில் அமைப்பு சாராத் தொழிலாளர்கள் 93விழுக்காடு உள்ளனர். இவர்களது வீட்டுப் பிள்ளைகள் பள்ளிப் படிப்பைத் தொடர்வதில் பல பொருளாதார நிதித் தடைகள் உள்ளன. எனவேதான் வட இந்திய மாநிலங்களில் குறிப்பாக உத்திரப் பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினருக்கும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டோர்க்கும் தொடக்கக் கல்வியை அந்தந்த மாநில அரசுகள் முழுமையாக அளிப்பதற்குப் பெரும் நிதி தேவைப்படுகிறது. உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 2011-12இல் கல்விக்கான செலவு 3.2 விழுக்காடாக இருந்தது. 2016-17இலும் 3.2 விழுக்காடாகவே தேங்கிய நிலையில் உள்ளது. கடந்த ஆறாண்டுகளில் நிதிநிலை அறிக்கைகளில் கல்விக்கான பொதுச் செலவு உயர்த்தப்படவில்லை என்பதையே ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கையின் புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன.

சான்றாக ஒன்றிய அரசின் 2009 ஆம் ஆண்டு கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு மாணவர்களைச் சேர்க்க வேண்டும்; அதற்குரிய கல்விக் கட்டணத்தை ஒன்றிய அரசு மாநில அரசிடம் அளிக்கும். தமிழ்நாட்டில் இச்சட்டத்தின்படி 1,6,11 ஆகிய வகுப்புகளில் 69000 மாணவர்கள் சேர்க்கப் பட்டார்கள். இதற்கான கட்டணத்தைத் தமிழக அரசு வழங்கிவிட்டது. ஒன்றிய அரசோ இதுவரை மாநில அரசிற்கு அந்தக் கட்டணத்தைச் செலுத்தவில்லை என்பது உண்மையிலும் உண்மை. 

பொதுச்சுகாதாரத்திற்கு உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தியில் 2011-12இல் 1.3 விழுக்காடு செலவிடப் பட்டது. 2016-17இல் 1.5 விழுக்காடுதான் உள்ளது. மனிதவள ஆற்றலை வளர்க்கின்ற துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு குறைந்துள்ளது என்பதை மேற் கூறிய புள்ளிவிவரங்கள் அறிவிக்கின்றன. 1965 இல் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட கோத்தாரி கல்வி வல்லுநர் குழு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 6 விழுக்காட்டைக் கல்விக்காகச் செலவிட வேண்டும் எனப் பரிந்துரைத்தது. இன்றைய சூழ்நிலையில் அது 10 விழுக்காடாக உயர்ந்திருந்தால் தான் கல்வி வளர்ச்சியில் மாநிலங்களிடையே இன்று காணப்படும் வேறுபாடும் தேக்க நிலையும் ஏற்றத்தாழ்வுகளும் ஓரளவாவது குறைந்திருக்கும். மனித வள ஆற்றலைப் பெருக்காமல், தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை உயர்த்த முடியாது. விதிவிலக்காக தமிழ்நாடு தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை மாணவர் சேர்க்கையில் இந்திய மாநிலங்களிலேயே முதல் மூன்று இடங்களில் உள்ளது. அதே போன்று குழந்தைகளைத் தொற்றும் பல நோய்கள் தமிழ்நாட்டில் அறவே ஒழிக்கப்பட்டுள்ளன. சான்றாக கக்குவான், காலரா, பிளேக், அம்மை போன்ற நோய்கள் குழந்தைகளைத் தாக்குவதில்லை. அதற்குக் காரணம் தடுப்பூசிகளும் மற்றும் குழந்தை வளர்ச்சிக்கான சொட்டு மருந்துகளும் பெருநகரான சென்னை முதல் ஊர்ப்புற மருத்துவமனை வரை இலவசமாக அளிக்கப்படுகின்றன. இந்தியா விலேயே மக்கள்தொகைக்கு ஏற்ப நிறுவப்பட்டுள்ள பொது மருத்துவமனைகளையும் தொடக்க சுகாதார நிலை யங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ்நாடு முதன் மையாக உள்ளது. இதற்கு முதன்மைக் காரணம் தமிழ்நாட்டில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளும் 22 தனியார் கல்லுரிகளும் உள்ளன. 20 கோடி மக்கள் தொகையுள்ள உத்திரபிரதேசத்தில் அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்த்து 21 மருத்துவக் கல்லூரிகள்தான் உள்ளன.

அண்மையில் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் இதுவரை 103 குழந்தைகள் உயிர்வளிமப் (ஆக்சிஜன்)  பற்றாக்குறையால் இறந்துள்ளனர். இன்றைய முதல மைச்சர் யோகி கடந்த இருபதாண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற இத்தொகுதியில்தான் கோரக்பூர் மருத்துவமனை அமைந்துள்ளது. மருந்துகள், தடுப்பூசிகள் வளிமங்கள் ஆகியவற்றை வாங்குவதில் தொடர்ந்து பெரும் ஊழல்கள் இருப்பதாக அண்மைச் செய்திகள் உறுதி செய்கின்றன. ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கைகளில் நாட்டிற்குத் தேவையான பல புள்ளிவிவரங்கள் வெளியிடப்படு வதில்லை.  திட்டமிட்டே மறைக்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது.

தமிழ்நாட்டினுடைய அரசு மருத்துவக் கல்லூரி இடங்களை நீட் தேர்வின் வழியாக வடநாட்டுக்காரர்களுக்கும் உயர் சாதியினருக்கும் தாரை வார்க்கும் திட்டமும் இதில் ஒன்றாகும். இதற்குச் செண்பகம் துரைராசன் வழக்கில் (1951) தமிழக உயர் நீதிமன்றத்தில் தலைமை பார்ப்பன நீதிபதியும் உச்ச நீதிமன்றப்  பார்ப்பன நீதிபதியும் இணைந்து சமூக நீதியை 1951இல் அழித்தார்கள். இன்றும் அதே நிகழ்வுதான் ஒன்றிய அரசிலும் உச்ச நீதிமன்றத்திலும் உள்ளவர்களால் மீண்டும் நடத்திக் காட்டப்படுகிறது. இச்சூழலில் யாருடைய பணம் யாருக்காகச் செலவிடப்படுகிறது என்பதை ஆய்வது அவசியமாகிறது. குறிப்பாக இந்தியா வில் தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்கள்தான் ஒன்றிய அரசிற்கு 80 விழுக்காட்டிற்கு மேல் வரிவருவாயை ஈட்டித் தருகின்றன. சமூக-பொருளாதார முன்னேற்றத் திட்டங்களை கடந்த 70 ஆண்டுகளாக முன்னிறுத்திச் செயல்படுத்தாத வட மாநிலங்களுக்குத்தான் இந்த 6 மாநிலங்களின் வரிவருவாய்ப் பிரித்துக் கொடுக்கப் படுகிறது. இச்செயல் வளர்கின்ற மாநிலங்களின் வளர்ச்சியைத் தடை போடும் செயலாகும். இன்னும் எத்தனை ஆண்டுகள்  வடமாநிலங்களுக்கு இந்த ஆறு மாநிலங்கள் கப்பம் கட்டப் போகின்றன! இது போன்ற புள்ளிவிவரங்களை ஏன் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடுவதில்லை என்ற கேள்வியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்புவதே இல்லை. எனவே நாடாளு மன்றம் என்கிற ஒரு போர்வையில் முதலாளித்துவச் சக்திகளும் அதற்குத் துணைப் போகின்ற உயர் சாதி ஆதிக்கச் சக்திகளும் நம்மை ஆட்டிப்படைத்து அடிமைகளாக நடத்துகின்றன.

கடலில் மூழ்குகிற கப்பலின் ஒரு சிறு முனை தெரிவதுபோல,  இப்பொருளாதார ஆய்வறிக்கையில் ஒரு நுண்ணிய புள்ளியளவுதான் உண்மையாக வெளி வந்துள்ளது. இது போன்ற உண்மையான காரணிகளை மறைத்து ஓர் ஒற்றையாட்சி முறையை நிறுவ முற்படும் பாஜக அரசு பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கிறது.

‘பாடப் பாட ராகம் மூட மூட ரோகம்’

என்ற  தமிழ் முதுமொழிக்கு ஏற்ப மக்கள் பஞ்சப் பாட்டைப் பாடுகிறார்கள். ஒன்றிய அரசோ கடும் நோயாளியைப் போல உண்மைகளை மூடி மறைக்கிறது.

Pin It

rohit 350அய்தராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா 2016 சனவரி 17 அன்று பல்கலைக்கழக மாணவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். ரோகித் வெமுலாவின் தற் கொலைக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அப்பாராவும் நடுவண் அரசின் தொழிலாளர் துறை யின் இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவும் காரணம் என்று கூறி இந்தியா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அந்நிலையில் ரோகித் வெமுலாவின் தற்கொலை குறித்து ஆராய அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ரூபன் வால் தனிநபர் விசாரணைக் குழுவின் தலைவராக அமர்த்தப்பட்டார்.

நீதிபதி ரூபன்வால் அளித்த ஆய்வறிக்கை மீது நடுவண் அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்த அறிக்கை (Action taken report) நாடாளு மன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதிநாளில் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. அந்த அறிக்கை யின் விவரம் 16.8.2017 அன்று நடுவண் அரசால் வெளியிடப்பட்டது. நீதிபதி ஏ.கே. ரூபன்வாலின் ஆய் வறிக்கையில், ரோகித் வெமுலாவின் தற்கொலைக்கு எவரும் காரணம் அல்ல என்று திட்டவட்டமாகக் கூறப் பட்டிருப்பதால், இதுகுறித்து எத்தகைய மேல் நடவடிக் கையும் தேவைப்படவில்லை என்று நடுவண் அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எழுதப்படாத விதி என்பது போல், அரசுகள் அமைக் கின்ற விசாரணைக் குழுக்கள் அரசுக்கு எதிராக அறிக்கை அளிப்பதில்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமை யிலான அ.தி.மு.க. அரசு முன்னாள் முதல்வர் செயலலிதாவின் இறப்பு குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதி மன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப் போவதாக அறிவித்திருப்பது, ஆட்சிக்கு எதிராக எதுவும் எழுதப்படாது என்கிற உறுதியான நம்பிக்கையின் பேரில் தான். ஓய்வுபெற்ற நீதிபதிகள் மட்டுமல்ல - பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற - உச்சநீதிமன்ற நீதிபதிகளும் ஆட்சிக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர்.

நீதிபதி ரூபன்வால் தன்னுடைய அறிக்கையில், “ரோகித் வெமுலாவின் தற்கொலைக்கும் பல்கலைக் கழக நிருவாகம் அல்லது அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று அப்பட்டமான பொய்யைக் கூறியிருக்கிறார். ஆனால் ரோகித் வெமுலாவின் தற்கொலைக்கு யாரெல்லாம் கார ணம் என்று அப் போது ஊடகங்களில் விரிவாக விளக்கப்பட்டன.

ஆர்.எஸ்.எஸ்.-இன் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித் யார்தி பரிசத் (ஏ.பி.வி.பி.) மாணவர்களுக்கும் அய்தரா பாத் பல்கலைக்கழகத்தில் கருத்து மோதல் இருந்து வந்தது. 2015 ஆகத்து மாதம் இது சிறு கைகலப்பாக முற்றியது. பல்கலைக்கழக நிருவாகம் இருதரப்பினரை யும் அழைத்துப்பேசி எச்சரித்து அனுப்பியது.

அதன்பின் ஏ.பி.வி.பி. மாணவர் தலைவர் சுசில் குமார், பா.ச.க. மேலவை உறுப்பினர் ((MLC) இராமச் சந்திர ராவை அழைத்துக் கொண்டு நடுவண் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் முறையிட்டார். அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் சாதிவெறியர்களாக, தேசவிரோதிகளாக, தீவிரவாதிகளாக இருக்கும் தலித் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நடுவண் அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானிக்கு பண்டாரு தத்தாத்ரேயா மடல் எழுதினார். அதை அடிப்படையாகக் கொண்டு, ஸ்மிருதி இரானி அய்தராபாத் பல்கலைக்கழகத்துக்கு நடவடிக்கை எடுக்குமாறு மடல் எழுதினார். நான்கு நினைவூட்டு மடல்கள் எழுதி அழுத்தம் கொடுத்தார்.

இந்துத்துவ சிந்தனை கொண்டவரான அப்பாராவ் 2016 செப்டம்பரில் துணைவேந்தராகப் பதவியேற்றார். மேலிடத்தின் ஆணையை வாய்ப்பாகப் பயன்படுத்தி, மாணவர்களை அழைத்து எந்த விசாரணையும் நடத்தாமல், ரோகித் வெமுலா, பிரசாந்த், விசயகுமார், சேஷய்யா, சங்கண்ணா ஆகிய அய்ந்து தலித் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களை மாணவர் விடுதியிலிருந்து வெளியேற்றினார். சூலை முதல் அவர்களின் மாதக் கல்வித் தொகையான ரூ.25,000/-ம் நிறுத்தப்பட்டது. வகுப்பறை தவிர பல்கலைக்கழகத்தில் வேறு எந்த இடத்திலும் நுழையக்கூடாது என்று அவர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக அந்த அய்ந்து மாணவர்களும் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளியில் கூடாரம் அமைத்துப் போராடினர்.

சனவரி மாத இரவின் கடுங்குளிரிலும் திறந்த வெளியில் தங்கியிருந்து போராடிய தலித் மாணவர் களைப் பல்கலைக்கழக நிருவாகம் நாயினும் கீழாகப் பார்த்தது. நீதிபதி ரூபன்வால், “பல்கலைக்கழகம் தன் மீது எடுத்த நடவடிக்கை குறித்து ரோகித் வெமுலாவுக் குச் சினம் இருந்திருக்குமாயின் அதைப்பற்றி அவருடைய மடலில் குறிப்பிட்டிருக்கலாமே! ஆனால் அவ்வாறு எதுவும் எழுதவில்லை, எனவே பல்கலைக்கழகத்தில் நிலவிய சூழல் அவருடைய தற்கொலைக்குக் காரணம் அல்ல” என்று அவருடைய அறிக்கையில் கூறியிருக் கிறார். ரோகித் வெமுலாவும் மற்ற நான்கு தலித் மாண வர்களும் 15 நாள்கள் பல்கலைக்கழக வளாகத்தின் திறந்த வெளியில் நடத்திய போராட்டம் எதற்காக என்பது நீதிபதி ரூபன்வால் மரமண்டைக்கு ஏன் உறைக்கவில்லை?

நீதிபதி ரூபன்வால் இன்னும் இழிந்த நிலைக்குப் போய், “அய்ந்து தலித் மாணவர்கள் விடுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்று பல்கலைக்கழகச் செயற் குழு எடுத்த முடிவு அப்போது நிலவிய சூழலுக்குச் சரியானதே ஆகும். மாணவர்கள் தங்கள் கல்வியில் நாட்டம் கொண்டிருக்க வேண்டும்; வேறு எதிலும் ஈடுபடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தின் அடிப்படை யிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று கூறி அதிகாரவர்க்கத்துக்கு வெண்சாமரம் வீசுகிறார். மேலவை உறுப்பினர் இராமச்சந்திர ராவ், அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிருதி இரானி ஆகியோர் அவர்களுடைய கடமையைச் செய்தனர் என்று ரூபன் வால் நற்சான்று வழங்கியிருக்கிறார். ரூபன்வால் போன்றவர்களையே ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுத்து, விசாரணைக் குழுவின் தலைவர்களாக ஏன் அமர்த்து கிறார்கள் என்பதை ரூபன்வால் அறிக்கை உணர்த்துகிறது.

ரோகித் வெமுலாவின் தற்கொலையை அடுத்து போராட்டங்கள் வெடித்த போது, ஸ்மிருதி இரானி, “ரோகித் வெமுலாவின் தற்கொலை மடலில் தன் சாவுக்கு யாரும் காரணம் அல்ல என்று தெளிவாக எழுதியிருக்கிறார். எனவே இந்தச் சாவுக்குச் சாதி காரணமல்ல” என்று சொன்னார். அதையே நீதிபதி ரூபன்வால் தன்னுடைய விசாரணை அறிக்கையில் வழிமொழிந்திருக்கிறார்.

ரோகித் வெமுலாவின் தற்கொலை ஒரு மனிதனின் இறப்பு மட்டுமல்ல; மத்திய அரசின் உயர்கல்வி நிறு வனங்களில் பார்ப்பன-மேல்சாதி ஆதிக்க மாணவர்கள் தலித்துகள் மீது தொடர்ந்து ஏவப்பட்டுவரும் ஒடுக்கு முறையின் விளைவு இது. இதனால்தான் மத்திய பல்கலைக்கழகங்களில் கடந்த பத்து ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட 26 மாணவர்களில் 24 பேர் தலித்துகளாக இருக்கின்றனர். தில்லியில் சவகர் லால் நேரு பல்கலைக்கழகத்தில் 13.3.2017 அன்று சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆய்வு பட்ட தலித் மாணவர் முத்துகிருட்டிணன் தற்கொலை செய்துகொண்டார்.

இந்துத்துவத்துக்கு எதிராக எவரேனும் செயல்பட முனைந்தால் ரோகித் வெமுலாவுக்கு ஏற்பட்ட நிலைதான் என்று எச்சரிப்பதாகவே நீதிபதி ரூபன்வாலின் அறிக்கை அமைந்திருக்கிறது. மாணவர்கள் கடமை படிப்பதுதான் என்பது ஏ.பி.வி.பி.-க்கு மட்டும் கிடையாது. ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பு மட்டுமே செயல்பட வேண்டும்; இதற்கு எதிரான கருத்து கொண்ட மாணவர் அமைப்பு களை ஒடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழகங் களும் கல்லூரிகளும் அரசுகளும் செயல்படுகின்ற சனநாயகமற்ற போக்கு மோடி ஆட்சியில் விரைவாக வளர்ந்து வருகிறது. இந்த அடிப்படையில்தான் பீகார் மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழைக் குடும்பத் தில் பிறந்து சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவராக உயர்ந்த கன்னையா குமார் இந்துத்துவத்துக்கு எதிராகப் போராடிய காரணத்தால் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப் பட்டார்.

2015 திசம்பர் 18 அன்று ரோகித் வெமுலா தன் முகநூலில், “மக்கள் தங்கள் உரிமைகளை நிலை நாட்ட முயலும் போதெல்லாம் வஞ்சகமான வழிமுறை கள் மூலமே ஒடுக்கப்படுகின்றனர்” என்று பதிவு செய்தார். ரோகித் வெமுலாவின் தற்கொலை குறித்த விசாரணையும் இதே வஞ்சகமான வழிமுறையையே பின்பற்றி உள்ளது.

Pin It

divyabharathi 350துப்புரவுத் தொழிலாளர்களை அரசாங்கமும், நீதித்துறையும் படுத்தும் கொடுமைகளையும், அவர்கள் இந்த நச்சுக் சூழலில் சிக்கி வெளியே வர முடியாமல் இருக்கும் சமூகச் சூழலையும் விளக்கி, தோழர் திவ்யா பாரதி "கக்கூஸ்" என்ற ஆவணப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இப்படம் துப்புரவுத் தொழிலாளர்களின் அவலங்களை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. அது மட்டும் அல்ல; அரசாங்கத்தின், நீதித் துறையின் மனிதாபிமானம் அற்ற போக்கையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

துப்புரவுத் தொழிலாளர்கள் இத்தொழில் வேண்டாம் என்று வேறு தொழில்களுக்குப் போய் விடலாம் என்று கடுமையாக முயன்றாலும், அவர்களால் வெளியே வரமுடியாதபடி, இச்சமூகம் அவர்களை வலுக்கட்டாயமாக அழுத்தி வைத்து இருப்பதும் இதில் காட்டப்பட்டு உள்ளது.     

"இப்பொழுதெல்லாம் யார் சாதியைப் பார்க்கிறார்கள்? அப்படியே இருந்தாலும் கிராமப்புறங்களில் ஓரளவு இருக்கலாமே ஒழிய நகர்ப்புறங்களில் இல்லவே இல்லை" என்று அதிமேதாவித்தனமாகப் பேசும் அறிவு ஜீவிகளை இப்படம் நார் நாராகக் கிழித்துத் தொங்கப் போட்டு இருக்கிறது.

நகர்ப்புறங்களில் சாதிக் கொடுமையில் இருந்து எழ முடியாமல், மலக் குழியிலேயே வெந்து சாகும் துப்புரவுத் தொழிலாளர்களையும், தங்கள் குழந்தைகளை இத்தொழிலில் இருந்து தப்ப வைத்து விட வேண்டும் என்று கடுமையாக முயன்று, பல தியாகங்களைச் செய்து, படிக்க வைத்த பிறகு, அப்படிப் படித்தவர்களும் துப்புரவுத் தொழிலையே செய்ய வற்புறுத்தும் இச்சமூகத்தின் கொடூரத் தன்மையை ஆணித் தரத்துடன் இப்படம் எடுத்துக் காட்டுகிறது. இக்கொடுமைகளை நீக்க வேண்டும் என்று "வீராவேசமாகச்" சட்டங்களை இயற்றினாலும், எந்த அடிப்படை மாற்றமும் ஏற்பட்டு விடக் கூடாது என்று முன்னெச்சரிக்கையாக வேண்டிய எதிர்மறைக் கூறுகளையும் அச்சட்டங்களில் திணித்து இருப்பதை இப்படம் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது. ஒழுங்கான முறையில் சட்டங்களை இயற்றினாலேயே, அவை நடைமுறைப்படுத்த முடியாதபடியான வழிமுறைகளைக் கண்டு பிடிக்கும் நமது அதிகார வர்க்கம், சட்டம் ஏற்படுத்திக் கொடுத்து இருக்கும் வழிகளைப் பயன்படுத்தத் தவறுமா?     

"இப்பிரச்சினையில் அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், நீதித்துறை ஆகியவை மட்டுமா மனிதத் தன்மை இல்லாமல் நடந்து கொள்கின்றன?" என்று கேட்கும் இப்பட இயக்குநர் தோழர் திவ்யா பாரதி, முற்போக்கு பற்றிப் பேசும் இடதுசாரி அரசியல் கட்சிகளும் இதைப் பற்றி மவுனம் சாதித்தது / சாதிப்பது குறித்து வியப்பு தெரிவிக்கிறார். அது மட்டும் அல்ல; இம்மக்களின் அவலங்களைக்களைய வேண்டிய பொறுப்பு உள்ள, தாழ்த்தப்பட்ட வகுப்புத் தலைவர்களும் இவர்களைச் சுரண்டுவதை மிகவும் வேதனையுடன் சுட்டிக் காட்டுகிறார்.

துப்புரவுத் தொழிலாளர்களை மலக் குழியிலேயே வீழ்த்தி வைத்து இருக்கும் சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் குற்ற உணர்வு கொள்ள வைப்பதே தன் முதல் நோக்கம் என்று தோழர் திவ்யா கூறி இருக்கிறார். மேலும் அதன் அடிப்படையில் மக்களைத் திரட்டி இந்த இழிவான முறைக்கு எதிராகப் போராடி ஒழிக்க வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.     

தோழர் திவ்யா கூறுவது மிகவும் சரி! துப்புரவுத் தொழிலாளர்களை இந்நிலையில் வைத்து இருக்கும் நம் ஒவ்வொருவரையும் கொலைக் குற்றத்தை விட மிக மோசமான குற்ற உணர்வு உறுத்தத்தான் வேண்டும். ஆனால் இப்படத்தைக் காணவே மறுக்கும் பலர் இருக்கவே செய்கின்றனர். இந்நிலையில் அமெரிக்கா வில் சான் பிரான்சிஸ்கே நகரில் அம்பேத்கர் வாசகர்கள் வட்டம் (Ambedkar King Stdy Centre) எனும் அமைப்பும் பிற அமைப்புகளும் சேர்ந்து 13.8.2017 அன்று இப்படத்தைத் திரையிட்டு இருப்பதும், மேலும் பல ஊர்களில் திரையிடத் திட்டமிட்டு இருப்பதும் ஒரு உற்சாகத்தைத் தருகிறது பார்த்தவர்களில் பலரைக் குற்ற உணர்வு உறுத்தவே செய்கிறது. ஆனால் இவ்வளவு தெளிவான ஆவணப் படத்தைப் பார்த்த பிறகும், குற்ற உணர்வு உறுத்தாமல் இருப்பவர்களும் இருக்கவே செய்கின்றனர். இது முற்போக்கு உள்ளம் கொண்டவர் களின் பணிச் சுமையைக் கடுமையாக அதிகரிக்கிறது.

சரி! இப்பிரச்சினைக்குத் தீர்வு என்ன? அத்தீர்வைச் செயல்படுத்த முனைந்தால் அதை எதிர்க்கும் சக்திகள் யாவை? அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்து உள்ள இக்காலத் தில் இதற்குத் தீர்வு காண்பது மிக மிக .... மிக எளிது. தொழில் நுட்பம் இன்றைய நிலையை விடப் பாதியளவு கூட வளராத காலத்திலேயே, பணக்கார நாடுகள் மட்டும் அல்லாமல் ஏழை நாடுகளே கூட (சொல்லப் போனால் இந்தியாவை விட ஏழை நாடுகளே கூட) மனிதக் கழிவுகளை மனிதர்களே கையால் அள்ளும் பிரச்சினை இல்லாதபடி திட்டமிட முடிந்து இருக்கிறது. ஆகவே இதற்குத் தொழில் நுட்பத் தீர்வு காண்பது மிக மிக.... மிக எளிது. அப்படி என்றால் தடையாக இருப்பது எது?

இன்று நம் நகரங்களில் கழிவுநீர் எடுத்துச் செல்லும் குழாய்களின் கொள்திறனை விட அதிக அளவில் கழிவுநீர் உற்பத்தி ஆகிறது. ஆங்கிலேயர்கள் போட்ட கால்வாய்க் குழாய்களின் அளவை மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப அதிகரிக்கவில்லை என்பது மட்டும் அல்ல; புதிதாக அமைக்கும் குழாய்களின் அளவே கூட ஒரு ஆண்டிற்குள்ளேயே போதாமல் போகும்படியாகத் தான் வடிவமைக்கப்படுகிறது. ஏன் இப்படி நடக்கிறது? ஏனெனில் துப்புரவுத் தொழிலாளர்களின் துயரமும் வலியும் என்னவென்றே புரிந்து கொள்ள முடியாதவர்கள் தான் திட்டமிடும் வேலையில் அமர்ந்து இருக்கிறார்கள். சரி! இந்நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும்?     

இன்றைய கழிவுநீர் வடிகால் குழாயின் அளவு போதுமானதாக இல்லை. இந்த வடிகுழாய்களை மற்ற நாடுகளின் தரத்திற்கு ஈடாக வடிவமைக்க வேண்டும். அதாவது கழிவுநீர் எந்த ஒரு சூழ்நிலையிலும் தடை இல்லாமல் இறுதி வரை பயணம் செய்யத் தேவைப் படும் அதிகபட்ச அளவைவிட குறைந்தபட்சம் மூன்று மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட கழிவுநீர்ப் பாதையை அமைக்க மிகப் பெரும் நிதியை ஒதுக்க வேண்டி இருக்கும். இதை விவாதிக்கும் போது பெரும்பாலான மக்களுக்குப் பிரச்சினை இருப்பதாகத் தோன்றாது. ஆனால் நடைமுறைப்படுத்த முனைந்தால் மிகப் பெரும் அரசியல் பிரச்சினை எழும். இவ்வளவு பெரிய நிதியை இத்திட்டத்திற்குத் திருப்பிவிட வேண்டும் என்றால், இப்பொழுது செயல்பட்டுக் கொண்டு இருக்கும் எந்தத் திட்டங்களுக்கு வெட்டு விழ வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டி இருக்கும்.

ஆதிக்க சக்திகளாக இருப்பவர்கள் தங்கள் நலன் களுக்கான திட்டங்களின் நிதியில் ஏதே சிறிதளவு விட்டுக் கொடுத்துவிட்டு, உழைக்கும் மக்களின் நலன்களுக் கான திட்டங்களைப் பெரும் அளவில் வெட்டிவிடத் தான் முயல்வார்கள். அம்மாதிரி முயற்சிகள் ஒடுக்கப்பட்ட மக்களிடையே உள்ள முரண்பாடுகளை மேலும் கூர்மையாக்குவதில் தான் முடியும். அது மட்டும் அல்ல; ஒடுக்கபட்ட வகுப்பு மக்களின் நலன்களுக்கான நிதியில் 100ஐத் திருப்பி விட்டாலும் இத்திட்டத்திற்குப் போது மானதாக இருக்காது. ஆகவே ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களிடையே கலவரத்தை மூட்டி விட்டு இறுதியில் பழைய நிலையே தொடரும் நிலை ஏற்படும். ஆதிக்க சக்திகளின் அயோக்கியத்தனமான நலன்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக வெட்டுவது தான் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஒரே வழியாகும்.

இந்நிலையில் முற்போற்குச் சக்திகள் என்ன செய்ய வேண்டும்? இந்திய அரசு ஆதிக்க சாதியினரின், பெருமுதலாளிகளின் (கூடாத) நலன்களுக்காக நெஞ்சு பொறுக்காத அளவை விட மிகக் கொடூரமான அளவு நிதியை ஒதுக்கி வீணடிக்கிறது.

எடுத்துக்காட்டாக, வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பிள்ளைகளில், அந்நாட்டில் உயர் கல்விக்குத் தகுதி பெற முடியாதவர்களுக்கு, இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிலையங்களில் இடம் அளிப்பது மட்டும் அல்லாமல், அவர்களுடைய கல்விச் செலவு முழுவதையும் இந்திய அரசே ஏற்றுக் கெள்கிறது. இத்திட்டத்தில் 90 க்கும் மேல் பயன் பெறுவது பார்ப்பனர்களே. இது முழுமையாகத் தவிர்க்கப்பட்டே தீர வேண்டிய செலவினம். இது ஒரு புறம் இருக்கட்டும்.

காஷ்மீர்ப் பார்ப்பனர்களை அகதிகள் என்று பெயரிட்டு, மனம் பதைபதைக்கும் அளவை விட மிக அதிகமான அளவு சலுகைகளை அள்ளித் தருகிறது இந்திய அரசு. உண்மை என்னவென்றால் அவர்கள் அகதிகளே அல்லர். அவர்கள் காஷ்மீருக்குச் சென்று வாழ்வதற்கு இம்மி அளவும் தடை இல்லை. ஆனால் அவாள் தங்கள் மேலாண்மைக்கு மற்றவர்கள் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்ற வர்ணாசிரம அதர்ம நினைப்பும், காஷ்மீர் மக்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் தான் இந்திய அரசுக்குப் பிரச்சினையாக இருக்கிறது. வர்ணாசிரம அதர்ம எண்ணத்தைக் கைவிட்டுவிட்டால் பண்டிட்டுகளுக்காக ஒதுக்கப்படும் மிகப் பெரும் நிதி முழுவதையும் இத்திட்டத்திற்குத் திருப்பிவிட முடியும்.

இது போல் தகுதி இல்லாத சுகத்தைப் பார்ப்பனர்கள் மட்டுமே அனுபவிப்பதற்காக எண்ணற்ற திட்டங்களை நம் கண்களுக்குப் புலப்படாமலேயே அரசு வைத்துக் கொண்டு உள்ளது. அவற்றை எல்லாம் முழுமையாக வெட்டி விட்டால் இத்திட்டத்திற்குத் தேவையான நிதியைத் திரட்டி விடலாம்.

அது மட்டும் அல்லாமல் பெருமுதலாளியக் குழுமங் களுக்காக வீணாக்கும் நிதியை முழுமையாக வெட்டி விட்டால் இத்திட்டத்தைச் செயலாக்கம் செய்வதற்கு மட்டும் அல்ல; மேற்படி துப்புரவுத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான நிதியும் எளிதில் கிடைத்துவிடும்.

நாம் பேராட்டத்தை எங்கிருந்து தெடங்கப் போகிறோம்?

Pin It

உலகம் அளாவிய சிக்கல்களுக்கு நல்லறிஞர்கள் தீர்வுகாண வேண்டும்!

காற்று இயற்கையிலுள்ளது; நீர் இயற்கையில் கிடைப்பது; உணவு இயற்கையாகவும் செயற்கையாகவும் உருப்பெறுவது.

இப்போது எங்கும் நல்ல காற்று இல்லை. மலை, ஆறு, கடல், தரை இங்கெல்லாம் கிடைத்த காற்று அழுக்காகி விட்டது; ஆற்று நீர் அழுக்காகிவிட்டது. தரையில் உள்ள குளம் குட்டை நீர், ஏரி நீர் அழுக்காகிவிட்டது. இப்படி இவற்றை அழுக்குப்படுத்தியவர்கள் மாந்தர்கள்; விலங்குகளோ, பறவைகளோ, மற்றவகை உயிரினங்களோ அல்ல.

மனிதன் எவ்வளவு முயற்சித்தாலும் 100, 125 ஆண்டுகளே வாழமுடியும்.

அந்த மனிதன், மற்றவற்றை வென்று தனக்கு மட்டும் உரிமையாக்கி நல்வாழ்வு வாழ்வதாகக் கருதி காடுகளை அழித்தான்; மழை குறைந்தது. மலைகளையும் குன்று களையும் தனதாக்கி, காற்றைக் கெடுத்தான்; கனிமங்களைக் கொள்ளையடித்தான்.

இன்றைய உலகில் 720 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இந்தியாவில் 130 கோடி மக்கள் வாழ்கிறார்கள்.

இவர்கள் குடிக்க - குளிக்க - வேளாண்மை செய்ய - தொழில்சாலைகளை இயக்க - பண்டங்களை உருவாக்க - உணவு சமைக்க - அலுவலகங்களை நடத்த - நீர் ஒரு கட்டாயத் தேவை.

உலகில் உள்ள 100 பங்கு நீரில் 97 பங்கு உப்பு நீர்; கடல்களிலும், மாபெருங் கடல்களிலும் இது உள்ளது.

மீதியுள்ள 100இல் 3 பங்கு நீர் நல்ல நீர். இதில் வட துருவம், தென்துருவம் என்கிற இரண்டு முனைகளிலும் 3இல் 2 பங்கு நீர் உள்ளது. அது பனிப்பாறையாக உள்ளது. 3இல் 1 பங்கு நீர் நல்ல நீர் மட்டுமே மனிதப் பயன்பாட்டுக்கு உள்ளது.

இரண்டு துருவங்களிலும் உள்ள பனிக்கட்டி உடைந்து உருகிவிடும் என அறிவியல் அறிஞர்கள் சொன்னார்கள்.

இப்போது தென்துருவத்திலுள்ள பனிக்கட்டி உடைந்து விட்டதாக 12-11-2011 புதன் அன்று அமெரிக்க செட்டலைட் (Sattelite) கண்டுபிடித்துள்ளது. அப்படி உடைந்த பகுதி 6,000 சதுர கிலோ மீட்டர் பரப்பு உள்ளது. அது நகருகிறது.

அதே தென்துருவத்தில் 1956இல் 32,000 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள பனிக்கட்டி உடைந்ததாகவும், 1986இல் 9000 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள பனிக்கட்டி உடைந்த தாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இவ்வளவு பெரும்பரப்பில் கட்டியாக உள்ள நல்ல தண்ணீர் உருகும். ஆனால் மனிதப் பயன்பாட்டுக்கு அது எப்போது கிடைக்கும்? எப்படிக் கிடைக்கும் என்பது கேள்விக்குறி. (“The Hindu”, 13.7.2017).

இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதி பரப்பு 33 விழுக்காடு நிலப்பரப்பு காடுகளாகக் காக்கப்பட வேண்டும்.

இன்று 17 விழுக்காடு பரப்புகூடக் காடுகளாக இல்லை.

காடுகள் அழிக்கப்பட்டால் நாடு அழியும்; மக்கள் துன்புறு வார்கள்; வனம் வாழ் உயிர்கள் அழியும்; காற்று மண்டலம் தூய்மை கெட்டு, கரிக்காற்று அதிகமாகும். மாந்தன் மூச்சு விடவே திணர வேண்டும். இன்றே நல்ல காற்றைத் தேடி அலைகிறோம்.

காற்று மண்டலம் கெட்டுவிட்டது என்றால் என்ன?

ஒவ்வொரு 10 இலட்சம் காற்றுத் துகள்களிலும் (Gas Molecules) 350 காற்றுத்துகள் கரிக் காற்று வீதம் (Carbon Dioxide) கலந்திருந்தால், அந்தக் காற்று முழுவதும் கெட்டு விட்டது என்று பொருள். அதை 1950 முதல் ஆய்வு செய்து, 1990 உறுதி செய்தார்கள். (“The Hindu”, 27.6.2017).

இப்படிப்பட்ட கேடு ஆசியாவில் மிக அதிகம்; பசுபிக் பகுதியிலும் அதிகம்.

அதாவது வெப்பத்தின் அளவு இங்கு 6 டிகிரி செல்சியஸ் முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை ஏறிவிட்டது.

இதனால் பின்கண்ட கேடுகள் வரும் :

1. மழை பொழிவு 20 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை குறையும்;

2.  தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும்;

3. ஆசியப் பகுதியில் 25 கடற்கரை நகரங்களில், கடல்களின் நீர்மட்டம் ஒரு மீட்டர் உயரம் உயரும் (“தினமலர்”, 17.7.2017, சென்னை). நிற்க.

பணம் மட்டுமே மாந்த வாழ்க்கையின் முதன்மைத் தேவை என்பதாக ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறான். பணம் தன்னைத்தானே பெருக்கிக் கொள்ளாது. அதைப் பெருக்க உழைப்புத் தேவை; நிறையப் பணம் தேட நிறைய உழைப்புத் தேவை; உழைப்பாளர்கள் தேவை. கருவிகளை இயக்கவும் உழைப்பாளர்கள் தேவை. உழைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட பணம் - அவரவர் உழைப்புக்கு ஏற்பப் பங்கு போடப்பட வேண்டும். அது நடக்கவில்லை.

அப்படிப்பட்ட நடப்பு நேற்றைய சோவியத் இரஷ்யாவில் 70 ஆண்டுகள் நீடித்தது.

அமெரிக்கா திட்டமிட்டு அங்கு ஊடுருவி, 1980இல் அதை உருக்குலைத்தது.

அமெரிக்கா தம் நாட்டு இயற்கை வளங்களை அப்படியே காப்பாற்றிக் கொண்டு, மத்திய தரைக்கடல் - அரபு எண்ணெய் வளநாடுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா முதலான வளரும் நாடுகளின் வளங்களைச் சுரண்டுகிறது.

சப்பான், இங்கிலாந்து முதலான நாடுகள் - இந்தியாவில் மகிழுந்து, சிற்றுந்து, சுமைஉந்து முதலான வாகனங்கள் உற்பத்தித் தொழிற்சாலைகளைத் தொடங்கி - நிலம், நீர், மின்சாரம் இவற்றைக் கொள்ளை கொள்ளுகின்றன; சுற்றுச் சூழல் கேடு வளர இவை உந்துசக்தியாக இருக்கின்றன. ஆனால் தமிழகம் இங்கிலாந்தின் “டெட்ராய்ட்” (னுநனசடிவை) என்று பெருமையாகப் பீற்றிக் கொள்கிறோம். இவற்றால், நல்ல நீரும், மின்சாரமும் எவ்வளவு - எப்படிப் பாழாகின்றன என்ப தைத் தமிழக மக்களும் அரசும் கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழகத்திலுள்ள நீர்ப்பற்றாக்குறை பற்றி, 2017 முதல் “சிந்தனையாளன்” ஏட்டில் தொடர்ந்து எழுதுகிறோம்.

2017இலேயே குடிநீருக்குத் தமிழக மக்கள் திண்டாடு கிறார்கள்.

காவிரி நீர் உரிமை, முல்லைப் பெரியாறு நீர் உரிமை, பாலாறு நீர் உரிமை ஆகியவை முறையே கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களைப் பொறுத்து நாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஆகும். இவை தொடர்பான வழக்குகளை நடத்தும் வழக்கறிஞர்களுக்கு இன்றுவரை ரூபா 40 கோடி தமிழக அரசு செலவு செய்துள்ளது. வழக்குகள் எப்போது முடியும் என்றே தெரியாது.

ஆனால் தமிழக ஏரிகள், குளங்கள், குட்டைகள் இவற்றை ஆழப்படுத்துவதும், இவற்றுக்கு நீர்வரத்து - நீர்ப்போக்கு இவற்றுக்கான வாய்க்கால்களைத் தூர்வாருதலும் நாம் - நம் தமிழக அரசு செய்ய வேண்டியவை.

இருப்பதைப் பாதுகாப்போம்; வரவேண்டிய உரிமை களுக்குப் போராடுவோம்!

பெரும்பாலான தமிழக மாவட்டங்களில் நிலத்தடி நீர் 2 மீட்டர் முதல் 6 மீட்டர் வரை கீழே சென்று விட்டது.

காவிரிப் பாசனப் பகுதி பசுமை காணாத பகுதியாகிவிட்டது. சென்னைப் பெருநகர மக்களும், மற்ற மாவட்டங்களிலுள்ள சிற்றூர் மக்களும் குடிநீர் கிடைக்காமல் அல்லல்படுகிறார்கள்.

உலக அளவில் பருவ மழை பொய்த்துவிட்டதால், உலகில் 50 நாடுகளில் 2025ஆம் ஆண்டில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் (“தினத்தந்தி”, 25.7.2017, சென்னை).

தமிழகம் நீர்ப்பற்றாக்குறைக்கும், சுற்றுச்சூழல் கேட்டுக் கும் உள்ளாகித் தத்தளிக்கப் போவதைத் தடுத்து நிறுத்திட வாரீர்!

Pin It

1938இல் நடைபெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக, தமிழக அரசியல் தளத்தில் மாபெரும் திருப்புமுனை ஏற்பட்டது. இனி இந்தியாவுடன் தொடர்ந்து இருக்கக்கூடாது என்பதே அது. அதை வலியுறுத்தி “தமிழ்நாடு தமிழருக்கே” என்று விடுதலை ஏட்டில் அய்ந்து தொடர் கட்டுரைகள் எழுதப்பட்டன.

தமிழ்நாடு தமிழருக்கே! - III

நேற்றும் முன்தினமும் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற தலைப்பின்கீழ் அதன் கருத்தையும், அவசியத்தையும், முறையையும் விளக்கி எழுதியிருந்ததுடன், மறுபடியும் அதைப்பற்றித் தொடர்ந்து திராவிடருக்கும் அந்நியருக்கும் உள்ள வாழ்க்கை முறைப் பேதம்பற்றி எழுதப்படும் என்று குறிப்பிட்டிருந்தோம். அதன்படி இன்று எழுதப் போகும் இந்த 3ஆவது தலையங்கத்தில் முதலாவதாக திராவிடர்கள்-ஆரியர்கள் என்பவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களிருவருக்கும் எப்படி சம்பந்தமேற்பட்டது, அவர் களுடைய வாழ்க்கைமுறை பேதம் எப்படிப்பட்டது என்பவைகளை எடுத்துக்காட்ட இதை எழுதுகிறோம்.

திராவிடநாட்டுக்கு ஆரியர்கள் குடியேறி திராவிடர்களை அடக்கி கீழ்மைப்படுத்தியவர்கள் என்பதைப்பற்றி நாம் விளக்க வேண்டியதில்லை. ஆரியர் திராவிட நாட்டுக்கு வருவதற்கு முன் திராவிடநாடு கலைகளிலும், நாகரிகத்திலும் தலைசிறந்து விளங்கி வந்தது என்பது பற்றியும் நாம் விளக்க வேண்டியதில்லை என்றாலும் இவ்விரண்டுக்கும் ஆதாரமாக இரண்டொரு சரித்திரா சிரியர்கள் அபிப்பிராயங்களை எடுத்துக்காட்டுவது பொருந்துமென நினைக்கிறோம்.

“மேற்கு திபேத்தையும் ஆப்கானிஸ்தானத்தையும் தாண்டி ஆரியர்கள் இந்தியாவுக்குக் குடியேறியவர் களாவார்கள். அவர்களது பாஷை சமற்கிருதம் போன்றது. இந்தியாவுக்கு வந்ததும் தங்கள் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கைகள் முதலியவற்றைத் தங்கள் இஷ்டப்படி தங்கள் பாஷையிலேயே எழுதி வைத்துக் கொண்டார்கள்” என்று சர் என்றி ஜான்ஸ் பட்டளர் என்கின்ற பிரசித்தி பெற்று ஆராய்ச்சியாளர் “இந்தியாவில் அந்நியர்கள்” என்ற புத்தகத்தில் 19ஆவது பக்கத்தில் ஆதாரங்களோடு எடுத்துக்காட்டி இருக்கிறார்.

“ஆரியர்கள் மதுவருந்துவதும் சூதாடுவதுமான ஒழுக்க ஈனமான காரியங்களில் பற்றுடையவர்கள் ”.

இது ராகேஸ் என்னும் பேராசிரியர் “வேதகால இந்தியா” என்பதில் எடுத்துக்காட்டி இருக்கிறார்.

“வட இந்தியாவில் இருந்து திராவிடக் கலை நாகரிகம் முதலி யவை யாவும் ஆரியர்களால் அடியோடு ஒழிக்கப்பட்டு விட்டன - ஆனால், தென்னிந்தியாவில் அவ் விதம் செய்யமுடியவில்லை”

இது “பண்டையத் தமிழரின் வரலாறு” என்கின்ற ஆராய்ச்சிப் புத்தகத்தில் 4ஆம் பக்கத்தில் இருக்கிறது. இந்த ஆராய்ச் சிக் குறியானது நாம் முன் தலையங்கத்தில் குறிப்பிட்ட, அதாவது திராவிடம் இன்னமும் ஆரியமயமாகவில்லை என்பதற்கு ஆதரவளிப்பதாகும்.

“ஆரியரல்லாத இந்நாட்டுத் திராவிடப் பழங்குடி மக்கள் ஆரியர்களால் துன்புறுத்தப்பட்டு காடுகளுக்குத் துரத்தப்பட்டார்கள். இதுவும் போதாதென்று அவர்களை இராட்சதர்கள், அசுரர்கள் என்றும் நூல்கள் எழுதிக் கொண்டார்கள். இதுவும் போதாதென்று கருதி, திராவிடர்களுக்கு ‘தஸ்யூ’ என்றும் -ஆரிய எதிரி என்றும், பெயரிட்டு அவற்றையே நாளாவட்டத்தில் பேய் என்றும், பூதம் என்றும், இராட்சசர் என்றும் பெயர்களாக மாறச் செய்துவிட்டார்கள்”.

இது சர்.வில்யம் வில்ஸன் ஹெணர், டாக்டர் கே.சி.எஸ்.ஐ., சி.ஐ.ஈ. எல்-லய-டி எழுதின “இந்திய மக்களின் சரித்திரம்” 41ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே ஆக்கிக் கொண்டு அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தித் தங்கள் இஷ்டம் போல் தங்களுக்கு அனுகூலமாக சகல விஷயங்களையும் உட்படுத்திக்கொண்டு அதற்கு ஏற்றபடி கதைகளை உற்பத்தி செய்து எழுதி வைத்துக்கொண் டார்கள். இந்தக் கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் திராவிடரை அழுத்தி, அடிமைப்படுத்தித் தங்களை உயர்த்திக் கொள்ளுவதற்கு ஆகவே, எழுதிக்கொள்ளப்பட்டவைகளாகும்.”

இது பிரபல சரித்திராசியரான என்றி பெரிட்ஜ் என்ப வரால் 1865ஆம் வருஷத்திலேயே எழுதப்பட்ட விரிவான இந்திய சரித்திரம் முதல் பாகம் 15ஆம் பக்கத்தில் இருக்கிறது.

“பாரத இராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டுமிராண்டிகள், அசுரர்கள், ராட்சதர்கள், தஸ்யூக்கள் வசிக்கும் நெருக்கமான நாடு என்பதெல்லாம் தென்னிந்தியாவை (திராவிடத்தை)ப் பற்றியேயாகும்.”

இது ராவின்சன் சி.ஐ.ஈ.யால் எழுதின `இந்தியா’ என்னும் புத்தகத்தில் 155வது பக்கத்தில் இருக்கிறது.

“நம்மைச் சுற்றி 4 பக்கங்களிலும் தஸ்யூக்கள் (திராவிடர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் யாகங்கள் செய்வதில்லை. ஒன்றையுமே நம்புவதில்லை. அவர்கள் பழக்க வழக் கங்களே வேறாய் இருக்கின்றன. ஓ! இந்திரனே! அவர் களைக் கொல்லு” என்பது ஆரியர்களின் பிரார்த்த னையாகும். இது ரிக் வேதம் 10ஆம் அதிகாரம் சுலோகம் 22-8ல் இருக்கிறது.

“இந்தியாவில் இருந்த ஆரியர்களிடம் மனிதர்களைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது என்று நிச்சயமாய்ச் சொல்லலாம்.,”

இம்பீரியல் இந்தியன் கெஜட்டில் 1909 வருஷ வால்யம் ஐ, பக்கம் 405 ல் இருக்கிறது.

“தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதார் களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் இராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.”

இது ரோமேஷ் சந்திர டட் சி.அய்.ஈ.அய்.சி.எஸ். எழுதிய “புராதன இந்தியா” என்னும் புத்தகத்தில் 52-வது பக்கத்தில் இருக்கிறது.

“திராவிடர்கள் தங்கள்மீது படை எடுத்துவந்த ஆரியர்களோடு கடும்போர் புரியவேண்டி இருந்தது. இந்த விஷயம் ரிக்வேதத்திலேயே அநேக சுலோகங்களாக இருக்கின்றன.”

இது டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார் எம்.ஏ.யின். “பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும்” என்னும் புத்தகத்தின் 22ஆவது பக்கத்தில் இருக்கிறது.”

“இராமாயணக்கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படை எடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரித்துக் காட்டுவதாகும்.”

இது பி. சிதம்பரம் பிள்ளை எழுதிய `திராவிடரும் ஆரியரும்’ என்னும் புத்தகத்தின் 24ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“இராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக் கும், யுத்த வீரர்களுக்கும் நடந்தபோரைக் குறிப்பதாகும். இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை -ஆரியரல்லாதவர்களைக் குறிப்பதாகும்.”

இது ரோமேஷ் சந்திர டட் எழுதிய “பண்டைய இந்தியாவின் நாகரிகம்” என்ற புத்தகத்தின் 139 - 141ஆவது பக்கங்களில் இருக்கிறது.

“தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும் அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்”

இது “சுவாமி விவேகானந்தா அவர்களது சொற்பொழிவு களும், கட்டுரைகளும்” என்ற புத்தகத்தில் “இராமாயணம்” என்னும் தலைப்பில் 587 - 589 பக்கங்களில் இருக்கிறது.

“ஆரியன் என்கிற பதம் இந்தியாவின் புராதன குடிமக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக்காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக்கொண்ட பதம்” தஸ்யூக்கள் என்பது இந்தியப் புராதன குடிமக்களுக்கு அவர்கள் (ஆரியர்கள்) கொடுத்த பெயராகும்.

இது 1922ஆம் வருஷம் பிரசுரிக்கப்பட்ட கேம்ப்ரிட்ஜ் “பழைய இந்தியாவின் சரித்திரம்” என்னும் புத்தகத்தில் இருக்கிறது.

பகைமைக்குக் காரணம்

“ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும், தஸ்யூக்கள்-அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதாருக் கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமை யைப்பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும், அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைமைக்கு காரணமாகும்”

இது டாக்டர் ராதா குமுத் முக்கர்ஜீ எம்.ஏ., பிஎச்.டி., எழுதிய ‘இந்து நாகரிகம்’ என்னும் புத்தகத்தில் 69ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“இராமாயணக் கதையின் உள் பொருள் என்னவென்றால் ஆரிய நாகரிகத்துக்கும், திராவிட நாகரிகத் துக்கும் (அவற்றின் தலைவர்களான இராமன் - இராவணன் ஆகியவர்களால்) நடத்தப்பட்ட போராகும்.”

இது ராதா குமுத் முக்கர்ஜீ எழுதிய “இந்து நாகரிகம்” என்னும் புத்தகத்தின் 141ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென் கிழக்கிலும், இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசப்படும் பாஷை.

இது சர் ஜேம்ஸ் மர்ரே எழுதிய புதிய இங்கிலீஷ் அகராதியின் பக்கம் 67 டி -யில் இருக்கிறது.

“ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லா தாருக்குள் புகுத்த முயற்சித்து முடியாமல் போனதால் ஆரியரல்லாதாருடய பாஷைகளைக் கற்றுக்கொண்டு அவர்களது நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டி வந்தன.”

இது பண்டர்காரின் கட்டுரைகள் வால்யூம் 3, பக்கம் 10-ல் இருக்கிறது.

“தமிழர்கள் ஆரியர்களை வடவர், வடநாட்டார் என்று அழைத்தார்கள். ஏனெனில், ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தவர்களானதால்”

இது கிருஷ்ணசாமி அய்யங்கார் எம்.ஏ., பிஎச்.டி.,  அவர்கள் எழுதிய “தென் இந்தியாவும் இந்தியக் கலையும்” என்ற புத்தகத்தின் 3ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“இராமாயணத்தில் தென் இந்தியா (திராவிடதேசம்) தஸ்யூக்கள் என்ற இராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது.

“இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகமடைந்த வர்களாய் இருந்தார்கள்”. இது பி.டி.சீனிவாசய்யங்கார் எழுதிய ‘இந்திய சரித்திரம்’ முதல் பாகம் என்னும் புத்தகத்தில் 10ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், இராட்சதர்கள் என்றும் எழுதிவைத்தார்கள். ஆனால் இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்த பிராமணர்கள் கற்றுக்கொண்டார்கள்”. இது ஷோஷி சந்தர் டட் எழுதிய “இந்தியா அன்றும் இன்றும்” என்னும் புத்தகத்தில் 105ஆவது பக்கத்தில் இருக்கிறது.

ஆரியக் கடவுள்களைப் பூசித்தவர்களும், அவர்களைப் பின்பற்றியவர்களும், தேவர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்த வர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப்பகை இருந்துகொண்டே வந்தது”

இது எ.ஸி. தாஸ், எம்.ஏ., பி.எல்., எழுதிய “ரிக் வேத காலத்து இந்தியா” என்னும் புத்தகத்தில் 151ஆம் பக்கத் தில் இருக்கிறது.

ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில், திராவிடர்களை தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், இராட்சசர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

“ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில் ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறு வதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.”

இது சி.எஸ். சீனிவாசாச்சாரி எம்.ஏ., அண்டு எம்.எல். இராமசாமி அய்யங்கார் எம்.ஏ., ஆகிய சரித்திர போதகர்கள் எழுதிய “இந்திய சரித்திரம் முதல்பாகம்” என்னும் புத்தகத்தில் “இந்து இந்தியா” என்னும் தலைப்பில் 16, 17ஆவது பக்கங்களில் இருக்கிறது.

“ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவில் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிட மிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக்கொண்டார்கள்”

இது எச்.ஜி. வெல்ஸ் எழுதிய  “உலகத்தின் சிறு சரித்திரம்” என்னும் புத்தகத்தின் 105ஆம் பக்கத்தில் இருக்கிறது.

“ஜாதிப் பிரிவுகள் நான்கில் அதாவது பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள். கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதனக் குடிகள்.”

இது “New Age Encyclopedia.(நியூ ஏஜ் என்சைக்ளோ பீடியா ஏடிட, ஐஐ, 1925) பக்கம் 237-இல் இருக்கிறது.

“இராமாயணம் தென்னிந்தியாவில் ஆரியர் பரவிய தையும் அதைக் கைப்பற்றியதையும் உணர்த்தும் நூல்”

இது இப்போது கல்வி மந்திரியாய் இருந்த சி.ஜே. வர்க்கி, எம்.ஏ., எழுதிய “இந்திய சரித்திரப் பாகுபாடு” என்னும் புத்தகத்தின் 15ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“விஷ்ணு என்கின்ற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக்கொடுக்கவும் யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது”

இது இ.பி. ஹாவெல் 1918இல் எழுதிய “இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம்” என்னும் புத்தகத்தின் 32ஆவது பக்கத்தில் இருக்கிறது. “பாரதத்தில் இடும்பி என்று ஒரு ஆரியரல்லாத பெண்மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி தனக்குள்ள, ஜாதி துவேஷத்தால் ராட்சசி என்று எழுதி இருக்கிறான். இராட்சதர் என்கின்ற பயங்கரப் புரளி வார்த்தை வைதிகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்”

இது நாகேந்தரநாத் கோஷ் பி.ஏ.,பி.எல் எழுதிய “இந்திய ஆரியரின் இலக்கியமும், கலையும்” என்ற புத்த கத்தின் 194ஆவது பக்கம். “இராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாகக் கூறவும், திராவிடர்களை இழிவுபடுத்திக் காட்டவும் எழுதப்பட்ட நூலாகும்.”

இது பண்டிதர் டி.பொன்னம்பலம் பிள்ளையால் எழுதப்பட்ட “மலபார் குவார்ட்டர்லி ரிவ்யூ”என்னும் புத்தகத்தில் இருக்கிறது. “இந்திய ஐரோப்பியர்களால் (அதாவது ஆரியர்களால்) தோற்கடிக்கப்பட்ட கறுப்பு மனிதர்களை (திராவிடர்களை) தஸ்யூக்கள் என்றும், கொள்ளைக்காரர்கள் என்றும், அடிக்கடி பிசாசுகளாக மாறக்கூடியவர்கள் என்றும் வேத இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கின்றது”

இது பால்மாசின் அவர் செல் எழுதிய “புராதன இந்தியாவும், இந்தியாவின் நாகரிகமும்” என்ற புத்தகத் தில் 19ஆவது பக்கத்தில் இருக்கிறது. இவையும், இவை போன்றனவுமாகிய பல விஷயங்கள் பெயர் பெற்ற ஆராய்ச்சியினர்களுடைய ஆராய்ச்சியிலும், பல ஆரியப் பார்ப்பனர்களுடைய ஆராய்ச்சிலும், ஆரிய வேத புராண இதிகாசங்களிலும் இருந்தே கண்டு பிடிக்கப் பட்டிருப்பவைகளாகும்.

ஆனால், ஆரியர் வருவதற்குமுன் திராவிட நாடு எப்படி இருந்தது என்பதற்கு இராமாயணத்திலேயே ஆதாரங்கள் இருக்கின்றன.

அதாவது, இராமாயணம் கிட்கிந்தா காண்டத்தில் சீதையைத் தேடுவதற்குத் தென்பாகத்திற்கு அனுப்பப் பட்ட அனுமானுக்கு சுக்ரீவனால் சொல்லி அனுப்பப்பட்ட வழிக்குறிப்புகளில், “காவேரி நதியைத் தாண்டிப் பொருநை நதியைக் கடந்து சென்றால் பாண்டியனுடைய பொற் கதவமிட்ட மதிலரணைக் காண்பாய்” என்று சொன்ன தாக, வால்மீகியார் இராமாயணத்தில் கூறுகிறார். மற்றும் அவர் கூறுவது விந்தியமலைக்கு அப்பாலுள்ள திராவிட நாட்டில் தண்டகாருண்யம் கடந்தால் பிறகு,

“ஆந்திரம், சோழம், கேரளத்தோடு கூடிய பாண்டிய நாடுகளைக் காண்பீர்கள்” “அதில் தேவரம்பையர் வந்து நீராடும்படியான தெளிந்த நீரையுடைய திவ்வியமான காவேரி நதியைக் காண்பீர்கள்.” “பிறகு முதலைகள் நிரம்பிய தாம்பிரபரணியைக் காண்பீர்கள் “பிறகு பொன் னிறத்ததாயும், முத்து மயமனதாயும், பாண்டியர்க்கு யோக்கியமானதாயுமுள்ள கபாடபுரத்தைக் காண்பீர்கள்.” “அப்புறம் சமுத்திரத்தைக் காண்பீர்கள். அங்கு சென்று உங்கள் காரிய நிச்சயத்தைச் செய்யுங்கள்” என்று கூறியிருப்பதாக, வடமொழி இராமாயணத்தில் காண் கிறோம். ஆகையால், திராவிட நாடு ஆரியர் இந்நாட்டிற்கு வருவதற்கு முன் மேன்மையாயும், நாகரிகத்துடனும், செல்வத்துடனும் தனிப்பட்ட அரசாட்சி உடையதாயும் இருந்து வந்திருக்கிறது என்பது விளங்குவதோடு, இப்படிப்பட்ட திராவிடமும், திராவிட மக்களும் ஆரியர் ஆதிக்கமும் கொடுமையும் ஏற்பட்ட பிறகே திராவிடர்கள் குரங்குகளாகவும், இராட்சதர் களாகவும் கற்பிக்கப்பட்ட தோடு - சூத்திரன் அடிமை, மிலேச்சன், சண்டாளன், என்பது போன்ற இழிமொழிகளுக்காளாகி சூத்திரர்களுக்கு (திராவிடர்களுக்கு) ஒரு நீதியும், ஆரியர்களுக்கு ஒரு நீதியும் கற்பிக்கப்பட்ட மனுதர்ம நீதி வழங்கப்பட்டிருக்கிறது.

அம்மனு நீதியில் சூத்திரர்களுக்கு (திராவிடர்களுக்கு) விதித்திருக்கும் தர்மங்களையும் பற்றி ஒரு சிறிது மாத்திரம் எடுத்துக்காட்ட ஆசைப்படுகிறோம்.

அதாவது, பிரமாணனுக்குத் தலையை முண்டிதம் செய்வது கொலைத் தண்டமாகும். மற்ற வருணத் தாருக்குக் கொலைத் தண்டமுண்டு. மனுஅத். ஐஐ. 379

அந்தணன் - பூனை, அணில், காடை, தவளை, நாய், உடும்பு, கோட்டான், காகம் இவைகளைக் கொன்றால் ஒரு சூத்திரனைக் கொன்றதற்குச் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் செய்யவேண்டும். மனு.அத்.9. 132

வைதிக கருமமாயிருந்தாலும், லௌகிக கருமமாயிருந் தாலும் அக்கினி எப்படி மேலான தெய்வமாயிருக்கிறதோ, அப்படியே பிராமணன் ஞானியாயிருந்தாலும், மூடனா யிருந்தாலும் அவனே மேலான தெய்வமாவான். மனு.அத்.6. 317

பிராமணன் துர்ச்செய்கையுள்ளவனாயிருந்த போதிலும் சகலமான சுபா-சுபங்களிலும் பூசிக்கத்தக்கவன், அவன் மேலான தெய்வமாதலால். மனு.அத்.7.318 - 319

கருமானுஷ்டமில்லா பிராமணனேனும் அவன் அரசன் செய்ய வேண்டிய தீர்ப்புகளைச் செய்யலாம். சூத்திரன் ஒருபோதும் செய்யக்கூடாது, மனு.அத்.8.20

சூத்திரன் விலை கொடுத்து அடிமையாக வாங்கப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவனைப் பிராமணன் நிர்ப்பந்தப்படுத்தி வேலை வாங்கலாம். ஏனென்றால், கடவுள் சூத்திரனைப் பிராமணனுக்கு வேலை செய்யும் ஒரே நிமித்தமாகவே படைத்திருக்கிறார். மனு.அத்.8,413

பிராமணன் சூத்திரனுடைய பொருளை முழுமனச் சமாதானத்துடன் (சற்றாயினும் பாவமென்றெண் ணாமல்) கைப்பற்றிக் கொள்ளலாம். ஏனெனில் அவனுக் குச் சொந்தமான தொன்றுமில்லையாதலாலும் அவன் சொத்தை அவன் எஜமான் எடுத்துக்கொள்ளலாமாத லாலும். மனு.அத்.8.417

ஒரு பிறப்பாளன் (சூத்திரன்) இரு பிறப்பாளரை (பிராமணரை)த் திட்டினால் அவன் நாவை அறுத்தெறிய வேண்டும். மனு. அத். 8. 271.

அவன் அவர்கள் பேரையாவது, சாதியையாவது தூஷித்தால் பத்துவிரல் நீளமுள்ள பழுக்கக் காய்ச்சிய இரும்பை அவன் வாய்க்குள் செலுத்தவேண்டும். மனு.அத்.8.271

அவன் அகந்தையால் குருமாருக்கு அவர்களுடைய கடமைகளைப் பற்றிப் போதிப்பானானால் அவன் வாய்க்குள்ளும், காதுக்குள்ளும் கொதிக்கிற எண்ணெயை ஊற்றும்படி செய்வது அரசன் கடமை. மனு.அத்.7.272

அவன் உயர் குலத்தானை அடிப்பதற்குக் கையையாவது தடியையாவது உயர்த்தினால் அவன் கையை வெட்டியெறிந்துவிட வேண்டும். அவன் கோபத்தினால் அவனை உதைத்தால் அவன் காலை வெட்டியெறிந்து விட வேண்டும். மனு.அத்.8.280

தாழ் குலத்தான், உயர் குலத்தானோடு சமமாக உட்கார வெத்தனித்தால் அவனை இடுப்பிற் சூட்டுக் கோல்கொண்டு சுட்டுத் தேசத்தைவிட்டுத் துரத்திவிட வேண்டும். அவன் பின்பக்கத்தை வெட்டியெறிந்து விடலாம்.  மனு.அத்.7.281

அவன் அகந்தையால் அவன் மேல் உமிழ்ந்தால் அவன் உதடுகளிரண்டையும் அரசன் வெட்டியெறியும் படி செய்ய வேண்டும். மனு.அத். 8.282

இதுவரை எழுதி வந்தவை ஆரியர் - திராவிடர் யார் என்பதும், அவரவர்கள் வாழ்க்கைமுறை, தன்மை என்ன என்பதும், ஆரியரால் திராவிடம் இன்றைய இழிநிலை அடைந்ததற்குக் காரணம் விளங்கும் படி விளக்கப்பட்டவைகளாகும். இனி திராவிட சமய சம்பந்தமான விஷயங்கள் முதலியவை பற்றி அடுத்த தலையங்கத்தில் விளக்குவோம்.

(விடுதலை : 23-11-1939)

தொடரும்

Pin It