“ஆண் பெரிதா? பெண் பெரிதா?” என்று கேட்கிறார் கொங்கண சித்தர். துளை உள்ள ஊசிக்குப் பலம் அதிகமா? நூலு பலன் அதிகமா?

“பாலைப் பார்க்காதே, பால் இருக்கும் பானையைப் பார்” என்று சொல்லி இருக்கிறார்கள். பால் கெட்டுப் போவதற்குக் காரணம் பாத்திரம்தான் என்று கூறுகிறார் திருவள்ளுவர். (கலந்தீமையில் பால் திரிந்தற்று)

இலக்கியத்தில் பகல் குறி, இரவுக்குறி என்று இருக்கிறது. காதல் பகிரங்கமாகச் செய்வதில்லை. அது நாய்க்குணம். காதலில் ரெண்டு நபர் மட்டுமே உலகம். அப்படி ஒரு இடத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த இடத்தில்தான் சந்திப்பார்கள், அந்தக்காலத்தில்.

கிராமத்தில் ஒரு காதலன் கேட்கிறான், ‘எப்போது சந்திக்கலாம்’ என்று, அதற்கு காதலி சொல்கிறாள்.

“இந்த ராசா போய்
அந்த ராசா வந்த பிறகு...”

“பட்ட மரமும்
பட்ட மரமும் சேர்ந்த பிறகு”

மல்லிகை பூத்த பிறகு அவள் கூறியது மற்றவர்களுக்குப் புரியவில்லை. ஆனால் காதலன் புரிந்துகொள்கிறான்.

“சூரியன் மறைந்து
சந்திரன் எழுந்த பிறகு...”

கதவும், நிலையும் சேர்ந்து
(கதவை அடைத்து) ஊர் மக்கள்
உறங்கிய பிறகு...
நட்சத்திரங்கள் வானத்தில்
எழுந்த பிற்பாடு...

என்ன அற்புதமான கற்பினை நமது பாமர ஜனங்களுக்கு...? படித்த ஒரு புலவனால் கூட இப்படிச் சொல்ல முடியுமா?

ஒரு அரேபிய ராஜா வேட்டைக்குப் போய்விட்டுத் திடீரென்று அரண்மனைக்குத் திரும்பிவந்தான். அவனது பட்டத்து மகாராணி ஒரு வேலைக்காரனுடன் சரச சல்லாபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து விடுகிறான். அவனுக்குப் பெண்குலத்தின் மீது அடங்காத வெறுப்பு ஏற்படுகிறது. முதலில் அவர்கள் இருவரையும் கொன்று விடுகிறான். பிறகு தினமும் ஒரு பெண்ணை மணக்கிறான். விடியும் பொழுது அவளைக் கொன்று விடுகிறான்.
கடைசியாக மந்திரியின் மகளையே மணக்க நேரிடுகிறது. அவள் மிகவும் புத்திசாலி. இரவில் கதை சொல்ல ஆரம்பிக்கிறாள். விடியும்போது ஒரு சஸ்பென்ஸோடு கதையை நிறுத்திவிடுகிறாள். “நாளைக்கு கதையின் முடிவைக் கேட்டுவிட்டு, இவளைக் கொல்வோம்” என்று நினைத்து அரசன் அவளைக் கொல்வதை ஒத்திப் போடுகிறான். ஆனால் அவள் அதே உத்தியைப் பயன்படுத்தித் தினமும் கதையை முடிக்காமல் இழுத்துக்கொண்டே ஆயிரத்தோரு இரவுகளைக் கடத்திவிடுகிறாள். அவள் கூறிய கதைகள் மூலமாக அரசன் உலகியல் அறிவைப் பெறுகிறான். ‘எல்லாப் பெண்களும் ஒழுக்கம் கெட்டவர்கள் அல்ல’ என்பதை உணர்ந்து மன்னன் மந்திரி மகளுடன் சந்தோசமாக வாழ்கிறான் என்று முடிகிறது அந்தக் கதை. இதுதான் ஆயிரத்தோரு இரவுகளில் சொல்லிய அரபுக்கதைகள் தோன்றிய வரலாறு.

கல்கி “பாழடைந்த பங்களா” என்று ஒரு கதை எழுதி இருக்கிறார். அந்தப் பங்களாவுக்கு எதிரில் சாலையில் பெட்டிக்கடை வைத்திருந்த ஒருவன் தனது கடைக்கு வருகிறவர்களிடம் சோடா குடிக்கக் கொடுத்து வெவ்வேறு மாதிரி கதைகளைச் சொல்கிறார்.

ஒரு இங்லிஷ் கதை ஆசிரியர் இதே உத்தியைக் கையாண்டு கதை எழுதி இருக்கிறார். ஒருவனுக்கு நெற்றியில் ஒரு தழும்பு இருக்கிறது. தான் பழகும் ஒவ்வொரு பெண்ணிடமும் “அந்தத் தழும்பு எப்படி ஏற்பட்டது” என்று வெவ்வேறு கதைகள் சொல்கிறான்.

“நிலா ஏன் வளர்கிறது? தேய்கிறது?” அதற்கு ஒரு கதை “சூரியனையும் சந்திரனையும் ஏன் கிரகணம் பிடிக்கிறது”. அதற்கு ஒரு கதை. இத்தனை கதைகளுக்கு மத்தியில் நம் நாட்டில் விஞ்ஞானம் வளர்ந்து கொண்டிருக்கிறதே அதுவும் ஒரு சுவாரஸ்யமான கதைதான்.

ஆண் சிங்கம் குறிப்பிட்ட பெண் சிங்கத்தைத் தேர்ந்தெடுத்துத்தான் உறவு வைத்துக் கொள்ளுமாம். சிங்கக் குட்டிகள் உறவுக்கு இடைஞ்சலாக இருந்தால் அவற்றை ஆண் சிங்கம் கொன்று விடுமாம்.

கோவை மாவட்டத்தில் விராட பர்வம் கதை நடந்ததாக ஒரு கதை உண்டு. கடத்தூர் என்று ஒரு கிராமம் உண்டு. இங்கேதான் விராட மகாராஜாவின் ஆனிரைகளைத் துரியோதனன் கடத்தினானாம். கொழுமம் என்ற ஊருக்கு அருகில் ஒரு குன்று இருக்கிறது. அதற்கு ஐவர் மலை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதற்கு உண்மையான பெயர் அய்யர் மலை. குமண வள்ளல் உடுமலைப் பேட்டைக்கு அருகில் வாழ்ந்தார். இப்படிப்பட்ட சமண அடையாளங்களை ராமாயண, பாரத அடையாளங்களாக மாற்றும் வேலையை குழந்தைகக்குப் பால் குடியை மறக்கடிக்கச் செய்வது போல வேதப் பார்ப்பனர்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறார்கள். மிருகங்களுக்கும், மனிதர்களுக்கும் இடையே ஒரு இணக்கம் இருப்பது உண்மையே. திப்பு சுல்த்தான் புலியைக் கூட நாய்க்குட்டி போல வளர்த்தார்.

ராணா பிரதாப் சிம்மனிடம் ஒரு கறுப்புக் குதிரை இருந்தது. அவரைத் தவிர வேறு யாரையும் ஏறவிடாது. அவர் பல சாகசங்களைச் செய்ய அந்தக் குதிரையே காரணம். ஒருமுறை அவரை மொகலாயப் படைகள் பிடிக்கப் பார்த்தது. அக்குதிரை நாலுகால் பாய்ச்சலில் ஒடியது. இடையில் குறுக்கிட்ட நாற்பதடி பள்ளத்தை ஒரே தாவாகத் தாவி அவரை அக்கரைக்கு கொண்டு சென்றது. மொகலாயப் படை வீரர்களின் குதிரைகளால் அந்தப் பள்ளத்தாக்கைத் தாண்ட முடியவில்லை.

இங்கே, கோவையில் ஒரு ஈஸ்ட் இந்தியக் கம்பெனியில் வேலை பார்த்த ஒரு லெப்டினன்டையும் அவர் குதிரையையும ஒன்றாகப் புதைத்திருக்கிறார்கள். அதற்குப் பின்னால் நீளமான கதை இருக்கிறது.

டெக்கமரான் கதைகளில் பெண்களில் சாமர்த்திய சாகஸங்களை நிறையப் பார்க்கலாம்.

அனுசுயா தேவியிடம், மும்மூர்த்திகளும் பிச்சைக்கு வருகிறார்கள். அவளும் இலையில் அமுது படைத்து உண்ணச் சொல்கிறாள். “நீ நிர்வாணமாக பரிமாற வேண்டும்” என்று அவர்கள் கேட்க, அவர்களைக் குழந்தையாக்கி அனுசுயா தேவி நிர்வாணமாகச் சோறு ஊட்டினாளாம்.

“நான் புருசனை பக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டே விபச்சாரம் செய்வேன்” என்று சொன்ன பெண்ணை விக்கிரமாதித்யனும் பட்டியும் பரிசோதித்துப் பார்த்த கதை ஒன்றுண்டு.

“தானே மழை பொழி தையலுமாய் நிற்கும்” என்று மாரி அம்மனைத் திருமூலர் சொல்கிறார். எவ்வளதான் யந்திர மயமானாலும், விஞ்ஞான மயமானாலும் உலகம் மழை இல்லாமல் இயங்க முடியாது. தண்ணீர் இல்லாமல் விளையைக் கூடிய பயிர் ஏதாவது இருக்கிறதா...? கடல் நீரைப் பாய்ச்சி விவசாயம் செய்ய முடியுமா? இவை நமது எதிர்காலக் கனவுகள்.

சில ஊர் மக்களுடைய சொந்த முயற்சியால் கருவேலமரங்கள் வேலியாக இருப்பதுண்டு. சில ஊர்களுக்கு ரயில் கற்றழை வேலியாக இருக்கும். திருநெல்வேலியில் நெல் பயிரை வேலியாக அமைந்திருக்கலாம் அல்லவா?

எந்த ஊரிலும் பனைமரம் நடு ஊரில் இருக்காது. பனை மரம் நூற்றாண்டுகள் கூட வாழும். பனை மரத்தின் எல்லாப் பகுதியும் மக்களுக்குப் பயன்படும். மற்ற மரங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். பனை மரம் அப்படி அல்ல. அதற்கு பராமரிப்பே கிடையாது.

மரத்தில் இருந்து மாம்பழம் விழ, அதை மறுபடி ஒட்ட வைக்க பஞ்ச பாண்டவர்கள் ஒவ்வொருவரும் தன் அந்தரங்கத்தைச் சொல்ல, ஒட்டாத மாம்பழம், கடைசியா திரௌபதிதான் கர்ணணை விரும்புவதாகச் சொல்ல உடனே மாம்பழம் மரத்தில் ஒட்டிக்கொண்டதாம்.சாமி, மனுசப் பெண்ணை பெண்டாலி நினைக்கிறது பெரிய விசயம் இல்லை. மாணிக்க வாசகர் சிவபெருமானையே... புணர்ந்து, “புணர்ந்து பத்து” பாடி இருக்கிறார்.

மலையாளத்து மகாராசாக்களுக்கு அவர்கள் பிறந்த நட்சத்திரங்களையே பெயராக வைப்பது மரபு. சித்திரைத் திருநாள், சுவாதித்திருநாள் என்பன சில மலையாளத்து மகாராசாக்களின் பெயர்கள்.

நரிக்குறவர்களிடம், ஒரு பழக்கம் உண்டு. ஒரு குழந்தை எந்த ஊரில் பிறக்கிறதோ அந்த ஊரின் பெயரையே அந்தக் குழந்தைக்கு வைத்துவிடுவார்கள். உதாரணமாக கழுநீர்குளத்தில் குழந்தை பிறந்தால், “கழுநீர்குளத்தான்” என்று பெயர் வைத்துவிடுவார்கள், அந்தக் குழந்தைக்கு.

பைபிளில் வரும் ஆப்பிரகாம் கதையும், குர்ஆனில் உள்ள இப்ராகிம் மகனைப் பலிகொடுக்க முன் வந்த கதையும் சிறுத்தொண்டநாயனாரின் பிள்ளைக்கறி படைத்த கதையும் ஒரே கருத்துக்களிலிருந்து தோன்றியவையாகத் தோன்றவில்லையா?

தாஜ்மகாலைப் போல இன்னொரு கட்டிடத்தைக் கட்டிவிடக்கூடாது என்பதற்காக ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டிய சிற்பியைக் கொன்றுவிட்டதாகவும் ஒரு கதை உண்டு.

செக்கோஸ்லோவேக்கியாவில் ஒரு நிபுணன் உலகிலேயே இல்லாத ஒரு புதுமையான கடிகாரத்தைச் செய்து ஊர் நடுவில் வைத்தானாம். அது போல உலகில் வேறு எங்கும் கடிகாரம் இருக்கக்கூடாது என்பதற்காக. அந்நாட்டின் அரசர் அந்த நிபுணனின் வலது கையை வெட்டிவிட்டான் என்றும் ஒரு கதை உண்டு.

Pin It