I

சொல்லடிமைகள்

சொற்களுக்கு அடிமையாகும் பண்பு, சொற்காமுறுதல், நம் அனைவரிடமும் இருக்கிறது. நமது தமிழ்ச் சமுதாயத்தில் இந்தச் சொல்லடிமைத்தனம் மிகுதியாக இருக்கிறது. சொற்களுக்கு அகராதிப் பொருள் கள் இருந்தாலும் அவை சமுதாயத்தில் ஆற்றும் செயல், வகிக்கும் இடம், அவற் றைச் சார்ந்திருக்கும் மக்களின் எண் ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட அந்தச் சொற்களுக்குச் சமு தாயப் பொருள்கள் அல்லது அடையா ளங்கள் உண்டாகிவிடுகின்றன. இந்தப் பொருள்களும் அடையாளங்களும் அவை உருவான சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கைச் சுட்டுவனவாய் அமைகின்றன.

குறிப்பிட்ட ஒரு சமுதாய வளர்ச்சியில், வளர்ச்சி யின் அரசியலில் இப்படிப்பட்ட சொற்கள் குறியீடுக ளாகக் கையாளப்படும் தன்மைகள் அந்தச் சமுதா யத்தின் அறிவு நேர்மையைத் தராதரத்தை விளக்கு கின்றன. மேலும், அந்தச் சமுதாய வளர்ச்சியின் உள்ளீடுகளை அல்லது உள்ளீடற்ற நிலைகளைப் படம்பிடிக்கின்றன. இந்தக் கருத்துப் பின்னணியில், இன்றைய தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலையில், சில சொற்களைச் சொல் இணைகளை எண்ணிப் பார்ப்போம்.

மகாத்மா, பெரியவாள், போராளி, பெரியார், அண்ணா, தமிழினத் தந்தை, தமிழினத் தலைவர்!

ஆரியன் - திராவிடன், வடக்கு - தெற்கு, புரட்சித் தலைவர் - புரட்சித் தலைவி, டாக்டர் கலைஞர்,

தமிழனுக்குச் சூடும் சொரணையும் முற்றாகத் தொலைந்து போய்விட்டது என்ற அவமானத்தை அரசியல் அவலத்தைக் குறிக்கும் ஓர் அந்நிய / அழுகிய சொல் - மாவீரன்! ‘நெருக்கடிக் காலத்தில் சாயம் வெளுத்த சொல். இன்றைய இந்துவெறிப் பாசிச ஆட்சியில், இந்திய ஒற்றையுறுப்பு ஆட்சியில் கனவுச் சொல்’ - “தமிழர் வீரம்”.

அரிசன்

‘அரிசன்’ என்ற சொல்லை வாத்தியார் எந்த நோக்கத்தில் உருவாக்கியிருந்தாலும் அது அந்த மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை! ஆனால், அதே சமயத்தில் மாட்டுக்குச் சூடு போட்டது போல நிரந்தரமான அடிமைச் சின்னமாகவும் ஆகிவிட்டது. இந்தச் சொல் ஒரு குறியீடாக உருவாகிக் குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தை வரையறுப்பதாகவும் அமைந்துள்ளது. இங்கே சின்னம், குறி யீடு என்ற சொற்கள் இயல்பாக வந்து சேர்ந்துவிட்டன.

திராவிடன்

வரலாற்றில்  ஒரு சொல், சமுதாய மற்றும் அரசியல் வடிவத்தையும் பொரு ளையும் ஏற்பதுண்டு. அப்படியென்றால் என்ன?

பெரியார் பார்ப்பன வல்லாண்மையை எதிர்த்து அயராது பாடுபட்டவர். தமிழர் தம் இன மேன்மைக் காக, விடுதலைக்காகத் தன் ஐம்பதாண்டு காலப் பொது வாழ்வில் களம் பலக் கண்டவர்; தத்துவ மேதை. அப்படிப்பட்ட தலைவர் தமிழனை அடையாளப்படுத்த ‘தமிழன்’ என்ற சொல்லுக்குப் பதிலாகத் ‘திராவிடன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார். தமிழன் என்று கூறும்போது பார்ப்பனர்கள், ‘நாங்களும் தமிழர்களே’ என்று வந்து புகுந்துவிடுகின்றனர். எனவே ஆரியத் திற்கு (வடக்கு, சமற்கிருதம்) எதிரான நாம் ‘தெற்கு’ என்ற அடிப்படையில் ‘திராவிடர்’ ஆவோம் என விளக்கமளித்தார். தெற்கு, கறுப்பு நிறம் என்ற அடிப்படை களைத் தெளிவாகக் கருத்தில் கொண்ட பெரியார், ‘தமிழ்-மொழி’ என்ற வலிவான இருப்பை - நடப்பை அடிப்படையை ஏனோ கருத்தில் கொள்ளவில்லை. எல்லைகள் கடந்த மனிதநேயச் சிந்தனையாளரான பெரியார் உருவாக்கிய மேற்கொண்ட ‘திராவிடன்’ என்ற குறியீடு அதன் அரசியல் சமுதாய வடிவத்தில் பொருளில் ‘ஆரிய மாயை’க்கு இணையான ‘திராவிட மாயை’யே உருவாக்கியது.

“இந்தியா ஒரு தேசமா?” என்று முழக்கமிட்டவர் பெரியார். இந்திய தேசியத்தை, சுயராஜ்ய மாய்மாலத்தை என்றும் ஒப்புக்கொள்ளாததோடு அதைக் கடுமையாகக் கடைசி வரை எதிர்த்தவர். தமிழனை ஒர் இனமாகத் தலைநிமிரச் செய்தவர். அப்படிப்பட்ட பெரியார், ‘திராவிடன்’ என்பதை ஏன் ஏற்றார்?

ஆரியத்திற்கு எதிரான ஒரு குறியீட்டை உருவாக்கு வதில் “அல்லாதார்” என்ற ஒரு சொல்லை உருவாக்கிப் பார்த்தார்.

“நம் மக்களில் சிலர், ‘அல்லாதார்’ என்ற பெயர் ஏன் என்பார்கள். அதற்கும் சமாதானம் சொல்ல வேண்டி யிருக்கிறது. ‘ஆன்டி-காலரா’ (Anti-Cholera) மருந் தென்றால் அம்மருந்து எப்படிக் காலரா வந்தவுடன் நினைவுக்கு வருமோ... அதுபோல், சமத்துவமில் லாமல் கொடுமையில் பட்டு அழிவை அனுபவித்து வரும் மக்களுக்கு அது ஒழிய வேண்டுமானால், அதற்கு ஆதாரமானவர்கள் பெயரும் அவர்களைக் கண்ட அளவில் நினைவிருக்க வேண்டும். கொடுமை செய்த விதமும் ஞாபகத்திற்கு உடனே வரவேண்டு மெனக் கருதியே ‘பார்ப்பனரல்லாதார் இயக்கம்’ எனப் பெயர் கொடுக்கப்பட்டதேயன்றி வேறல்ல, (1:417 - வே. ஆனைமுத்து பதிப்பித்த ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’, 1 என்பது தொகுதி; 417ஆம் பக்கம். இனி எண்கள் மட்டுமே தரப்படும்). என விளக்கிய பெரியார் ‘அல்லாதார்’ என்ற குறியீடும் பார்ப்பனர் அல்லாத தமிழர்களைச் சரியாகச் சுட்டவில்லை என்ற முடிவுக்கு வருகிறார்.”

1927இல் ‘அல்லாதார்’ குறியீட்டை நியாயப்படுத்திய பெரியார் 1944இல் ‘திராவிடர்’ என்பதை ஏற்கிறார். இந்து, இந்தியர், இந்தியா என்பதை ஆரியம், ஆரியர், ஆரிய நாடு எனக் கூறிய பெரியார் அதற்கு மாற்றாகத் திராவிடம், திராவிடர் என்பதைப் பதிவீடு செய்கிறார்.

“பார்ப்பனரல்லாதார் என்று நம்மை நாமே ஏன் கூறிக்கொள்ள வேண்டும்?” நாம் திராவிடர்; நம் எதிரிகள் வேண்டுமானால் ‘திராவிடரல்லாதார்’ என்று சொல்லிக் கொள்ளட்டுமே! 500 அல்லது 600 ஆண்டு களுக்கு முற்பட்ட சரித்திரங்களிலெல்லாம் நம்மைக் குறித்துத் திராவிடர் என்றே எழுதப்பட்டிருக்கிறது. திராவிடர், ஆரியர் என்ற இனங்களே ஆதியில் இந்தியாவில் இருந்தன என்பதாகச் சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன. தென்பாகத்தில் திராவிடர்களே பெருங்குடி மக்களாக வாழ்ந்து வருகின்றனர் (1:543) என விளக்குகிறார்.

தென்னிந்தியாவைத் ‘திராவிட நாடாக’ப் பார்த்த பெரியார், தென்னிந்திய பார்ப்பனரல்லாத மக்களுக்குத் ‘திராவிடர்’ எனப் பெயர் கொடுத்தார். ஆனால், வரலாற் றில் இந்தக் குறியீடு தோற்றுப் போனதோடு, தமிழர்கள் மட்டுமே தங்களைத் திரவிடர் எனக் கருதிக் கொண்டு, தமிழ்த் தேசிய அடையாளத்தின் வலிமையை இழந்தனர்.

“திராவிட சமுதாயம் என்று நம்மைக் கூறிக் கொள்ளவே கஷ்டமாயிருக்கும் போது தமிழர் என்று எல்லாரையும் ஒற்றுமையாக்க முயற்சி எடுத்தால் கஷ்டங்கள் அதிகமாகும், இங்கேயே பாருங்கள்! கண்ணப்பர் தெலுங்கர். நான் கன்னடியன். தோழர் அண்ணாதுரை தமிழர். இன்று எங்களுக்குள் ஆயிரம் சாதிப் பிரிவுகள். என்னைப் பொறுத்தவரையில் நான் தமிழனென சொல்லிக் கொள்வதை ஒப்புக்கொள் கிறேன். ஆனால் எல்லாக் கன்னடியர்களும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். தெலுங்கரும் அப்படியே. எனவே, ‘திராவிட சமுதாயத்தின் அங்கத்தினர்கள் நாம், நம் நாடு திராவிட நாடு’ என்று வரையறுத்துக் கொள்வதில் அவர்களுக்கு ஆட்சேபணை இருக்காது. அது நன்மை பயக்கும்.” (1:550)

(குறிப்பு : ‘திராவிடர் - தமிழர்’ என்ற கருத்தோட்டங்கள் பற்றிய பார்வையை விளக்கத் தனிக் கட்டுரை எழுத வேண்டும். இந்தக் கட்டுரையின் மையப் பொருள் ‘நாத்திகக் குறியீடு’ கருதி இதைப் பற்றி அதிகம் எழுத இங்கே இடம் இல்லை).

பெரியாரை ஊன்றிப் படிக்கும்போது அவருடைய பயணப் பாதையின் கட்டங்களைப் பிரித்தறிய வேண் டும். 1. அல்லாதார், 2. தமிழன், 3. திராவிடன், 4. தமிழன்.

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னால், பெரியார் தான் உருவாக்கிய திராவிட மாயையில் இருந்து விடுபட்டு, தன் இறுதி மூச்சு வரை “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற அரசியல் முழக்கத்தில் ஊன்றி நின்றார். ஆனால் அவர் உருவாக்கிய ‘திராவிடர்’ குறி யீட்டால் தமிழர் தன் தேசிய இன அடையாளங்களை இழந்ததோடு ‘தமிழ் மாகாணத்தில்’ இருந்து பிரிந்த மற்ற இனத்தவர் தங்களைத் தங்கள் மொழிவழிப்பட்ட தேசிய இனத்தாராக உணர - உயர்த்திக் கொள்ள, தமிழன் மட்டும் தன்னைத் திராவிடன் எனத் தாழ்த்திக் கொண்டதோடு, தமிழ்நாடு எல்லா இனத்தவரின் வேட் டைக்காடாக இரணகளப்பட்டுப் போனது (பார்க்க : ம.பொ.சி. யின், ‘தமிழ்நாட்டில் பிற மொழியினர் ஆதிக்கம்’).

இங்கே ‘குறியீடு’ என்ற அளவில் ‘திராவிடன்’ என்ற சொல் மேற்கொண்ட சமுதாய அரசியல் வடிவமும் பொருளும், தமிழனைக் கொச்சைப்படுத்தின என்ற அளவில் இதை நிறுத்துகிறேன். பெரியாரியல் கண் ணோட்டத்தில் ‘நாத்திகம்’ என்ற சொல்லின் குறியீட் டையும் அரசியலையும் விளக்க வந்த நான் ‘திராவிடன்’ என்ற சொல்லை ஏன் விளக்க வேண்டி வந்தது!

வரலாற்றில் சமுதாய மற்றும் அரசியல் வடிவத்தையும் பொருளையும் கொள்ளும் ஒரு சொல், ஒரு செயலை (action), நிகழ்வுப் போக்கை (trends and events), மாற்றத்தை - வளர்ச்சியை (change and development) அடையாளப்படுத்துவதாக இருக்கிறது. அந்த நிலையில் அக்குறியீட்டின் அரசியல் ‘எதிர்காலத் தில்’ வேர் கொள்ள வேண்டும். அப்படியல்லாமல் ஒரு தேக்கத்தை, இயலாமையைக் குழப்பத்தை / அகவய ஆசைகளைச் சுட்டி  மட்டும் இருக்கும் போது, அதாவது இறந்த காலத்தில் வேர் கொள்ளும் போது அச்சொல், சமுதாயத்தைப் பின்னுக்கு இழுப்பதாக அமைந்து விடும்.

‘திராவிடர்’ என்ற குறியீட்டின் வேர் இறந்த காலத்தைக் கொண்டது. எனவே அதன் அரசியல், தமிழ் இனத்தைத் தேங்க வைத்துவிட்டது. சமுதாயப் பொருள் கொள்ளும் ஒரு சொல், குறியீடாகி, அரசியல் தளத்திற்கு வரும்போது தன் செயலில் இருந்து விலகும் போதோ, நீர்த்துப் போகும் போதோ, தான் ஆற்ற வேண்டிய கடமைகளைச் சரியாகச் சுட்டாத போதோ, அச்சொல்லின் அரசியல் பிற்போக்காளர்க்கு மட்டுமே பயன்பட்டுவிடும். இந்த விபத்துதான் திராவிடச் சொல்லாடலால் தமிழ்த் தேசியத்தில் நடந்து முடிந்தது.

II

பெரியாரின் ‘நாத்திகம்’

பெரியார் ‘நாத்திகம்’ என்ற சொல்லைப் பகுத்தறிவு, அறிவியல், உண்மை தேடும் நெறிமுறை, இயற்கை சமுதாயச் சிந்தனை ஆகியவற்றின் அறிவு கொள்திறம் என்ற விரிந்த பொருளில் பயன்படுத்தினார்.

நாத்திகம், நாத்திகவாதம் முதலியன புத்தர், சார்வாக நெறியினர், காலந்தொட்டே இருந்து வருவதுதான் என்றாலும், தமிழர் வரலாற்றில் பெரியார் காலத்தில் தான் சோதனை முறைகளில் கருவியாகப் (Instrument for Investigation) பயன்படுத்தப்பட்டது.

அ) இயற்கைக்கும் மனிதனுக்கும், ஆ) இயற் கைக்கும் சமுதாயத்திற்கும், இ) மனிதனுக்கும் சமுதா யத்திற்கும் உள்ள உறவுகளின் ஆராய்ச்சி என்பது ஒரு நிலை. இந்த முக்கூடலின் பரிணாம வளர்ச்சியான - விளைவான சிந்தனைக்கும் அந்த முக்கூடல் நிலைக் கும் இடையே உள்ள உறவுகளின் ஆராய்ச்சி என்பது மற்றொரு நிலை. இந்த இரண்டு நிலைகளிலும் உள்ள உறவுகளின் இயல்பை பெரியார் தன் நாத்திக முறை யில் விளக்க முற்பட்டார். பெரியாரைப் பொறுத்தவரை ‘நாத்திகம்’ என்பது ஒரு கோட்பாடல்ல; ஒரு ஆராய்ச்சி நெறிமுறை.

அறிவியல், தன் அறிதல் நெறியின் அடிப்படை யிலேயே நாத்திகத் தன்மை வாய்ந்தது. ஆனால் விஞ்ஞானிகள், அறிவாளிகள், படித்த மேதைகள் என் போர், எந்தச் சலனமும் இன்றி, சமுதாயத்தைச் சாதி யாகவும் மதமாகவும் வர்க்கமாகவும் பிளந்து இன்று வரை காத்துவரும் ஆத்திகக் கருத்துகளின் அடிமை களாக விளங்குகின்றனர். இதைக் காணச் சகிக்காத பெரியார், நாத்திகம் என்ற அறிவுகொள்திறத்தைக் கடவுளின் மண்டையைப் பிளக்கும் ஒரு வெடிகுண்டுச் சொல்லாகப் பயன்படுத்தினார். ஆனால் “கடவுள் இல்லை” என்ற பொருள்களுக்கும் அல்லது பொருள் வரையறை காலப்போக்கில், இல்லாத கடவுளைக் கிண்டல் செய்யும் புராணங்களைக் கேலிபேசும், வெற்று ஆரவார, நுகர்வுப் பண்டமாக நீர்த்துப் போனது.

தமிழக அறிவுப் பாரம்பரியத்தின் இருபதாம் நூற்றாண்டுக் குறியீடாக நாத்திகம் என்ற சொல்லை - குறியீட்டைப் பயன்படுத்தத் தொடங்கினார் பெரியார். வெகுமக்களின் மௌடீக பிரம்மைகளை உடைத்தெறி யும் ஓர் அதிர்வு முழக்கமாக ‘கடவுள் இல்லை’ என்ற முழக்கத்தைத் தந்தார். ஆனால் அதன் உட்பொருளை உணராத, உணர மறுத்த, உணர முடியாத அல்லது உணர்ந்தது போல் நடிக்கும் ‘மௌடீகப் பகுத்தறிவு வாதிகள்’, “முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா” என்று வெறிக்கூச்சலிடுவோரைப் போல, “கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை” என்ற புதிய அல்லேலுயர்களாக மாறினர், அதாவது நாத்திகம் என்ற குறியீடு அதன் அரசியலை இழந்தபோது, அது வெறும் கடவுள் மறுப்புப் பஜனையாக இருந்தது!

கடவுள் பஜனைக்காரனின் குறியும், கடவுள் மறுப்புப் பஜனைக்காரனின் குறியும் காசு தேடுவதிலும், ‘சாதி வெறியிலும், உடமை வெறியிலும் புதைந்திருப்பது தான் ஒற்றுமை. அரசியல் இழக்கச் செய்யப்பட்ட நாத்தி கக் குறியீடு. சில அரசியல் தலைவர்கள், பெருவணிகக் குடும்பங்களாகத் (Corporate house family)’ தங்களை உருமாற்றிக் கொள்ளவே பயன்பட்டது. இதுவே இன்றைய திராவிட அரசியல்.

நாத்திகத்தின் அரசியல்

பெரியாரியல் பொருளில் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசதிகாரமாகும்! அந்த அரசதிகாரத்தை வெல்வதற்கான தத்துவப் போராட்டத்தின் அகர ஆகாரம் ஆகும்! இந்த அகர ஆகாரப் படிப்பில் இருந்து அரசதிகார வெற்றி வரையிலான இடைப்பட்ட காலத்தின் சுய பிரம்மை உடைப்புக்கும் (conceptual illusions), தாம் சுயநலமற்றுச் செயல்படுகிறோமா என்ற சோதனைக்கும் உரிய கருவியே நாத்திகம் ஆகும்.

உலக வரலாற்றில் நாத்திகப் பாரம்பரியத்தை மூன்றாகப் பிரிக்கலாம், அ) முதலாளிய நாத்திகம் - அமெரிக்க, ஐரோப்பிய சமுதாயத்தின் பெரும்பாலான நாத்திகர்கள், விஞ்ஞானிகள் இந்த வகையினரே! சமுதாய அரசியல் பொருட் சார்பில் இருந்து விலக்கி, நாத்திகத்தை வெறும் கல்விக் கோட்பாடு போலக் காண்பவர்கள் இவர்கள். ஆ) பொதுவுடைமை நாத்திகம். அதாவது, இயக்கவியல் பொருள் முதல்வாத நாத்திகம் -உலகை விமர்சிக்கும் அறிவுக் கருவியாக நாத்தி கத்தை கொண்ட இவர்கள், அதன் அரசியல் சமூகவியல் பொருளில் இருந்து நாத்திகத்தைப் பிரித்துப் பார்க்க முடியாதவர்கள். உலக மானுட விடுதலையின் போராட் டத்தில் மக்களைக் கடவுள் மறுப்பினர்களாக மாற்றுவ தல்ல இவர்களின் தலைமை நோக்கம்! அந்த விடுதலைப் போராட்டத்திற்கான இயக்கம். அடிப்படையில் விஞ்ஞான நாத்திக இயக்கமாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். இ) முட்டாள் நாத்திகம் - இந்தியாவின் பெரும் பாலான நாத்திகர்கள் முதலாவது நாத்திகத்திற்கும் இடைப்பட்ட இந்த வகையைச் சேர்ந்தவரே! இதில் திராவிட கம்யூனிச, சோசலிச வகையினர் பலரும் அடங்குவர், இப்படிக் கூறும்போது குறிப்பாகத் தமிழ் நாட்டு நாத்திகர்கட்கும், அதிலும் திராவிடக் கட்சிக்காரர் களுக்கும் சினம் பொத்துக் கொண்டுவரும். பெரியாரைக் கொன்று தின்று ஏப்பம் விட்ட இவர்களின் சினம் மலச்சிக் கல்காரர்களின் வாயுத்தொல்லை போன்றதாகும். நிற்க.

பெரியார் கூறிய நாத்திகம் சமூக உறவுகளைப் பற்றிய விஞ்ஞான தர்க்கவியலாகும், இன்றைய சமுதா யத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏனிப்படி உள்ளன! வினைப் பயன்! வினைப்பயனின் ஆதாரம் - வழி. மதத்தின் ஆதாரம்-கடவுள், கடவுளுக்கு ஆதாரம்-பூதேவர்களாகிய பார்ப்பன மூளை! இந்த இடத்தில்தான் பெரியார் கல்வியறிவில் குறைந்திருந்த தமிழனை அமிலம் தெளித்துத் தட்டி எழுப்புவது போல, ‘ஏற்றத்தாழ்வின் இறுதி ஆதாரங்களை உடையுங்கள்’ என முழக்க மிட்டார்! ‘கடவுள் ஒழிக’ எனப் பெரியார் முழக்கமிட்டது, கடவுளுக்கும் பெரியாருக்குமான சம்பந்திச் சண்டை யினால் அல்ல! ஏற்றத்தாழ்வுகளின் இடுப்பொடிக்க கடவுளைக் கேள்விக்குறியாக்கினார் பெரியார்!

பெரியாரின் ‘நாத்திகத்தை’ முழுமையாக அறிந்து கொள்ள, 1) அறிவு கொள்திறம், 2) உண்மை தேடும் நெறிமுறை, 3) விஞ்ஞான தர்க்கவியல் மற்றும் 4) ஒடுக்கப்பட்டவர்களின் அரசதிகாரம் என்ற நான்கு படி களைக் கடந்து செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம்.

III

நாத்திகம் - அறிவுகொள்திறம்

அறிவை எவ்வாறு உள்வாங்கிக் கொள்வது எனப் பெரியார் ஆராய்ந்தார். இயற்கைக்கும், சமுதாயம் இதுகாறும் கொண்டுவந்து சேர்த்துள்ள தத்துவ விசா ரணைகளுக்கும் இடையே செயல்படும் ஐம்புலன் களும் தத்தம் புலனாய்வு நிலைகளில் தூண்டப்பெற்று வினையாற்றுகின்றன. இந்த வினையாற்றலின் போது மூளையில் பதியும் தர்க்கமே அறிவாகும். இந்த அறிவைக் கொள்ளும் நிலையில், மனித வாழ்க்கைக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் தடைக்கல்லாக நிற்பனவற்றை எதிர்ப் பதே நாத்திகமாகும். அதனாலேயே அது அறிவு கொள்திறமாகவும் விளங்குகிறது.

“நாத்திகம் என்பது அறிவு வளர்ச்சியினாலும் ஆராய்ச்சி திறத்தினாலும், சுதந்தர உணர்ச்சியாலும் ஏற்பட வேண்டிய விடியலேயொழிய, கடவுள் சொன் னார் என்று எழுதப்பட்ட புத்தகங்களில் என்ன சொல்லி இருக்கிறது என்றும், தங்களைக் கடவுள் அவதாரமாகவோ, தூதர்களாகவோ, குருமார்களாகவோ சொல்லிக் கொண்டவர்கள் என்ன சொன்னார்கள் என்றும், பெரியோர்கள், ரிஷிகள், நபிமார்கள், நாயன்மார்கள், தீர்க்கதரிசிகள், ஆழ்வார்கள், சித்தர்கள், ஞானிகள், மகாத்மாக்கள் என்று சொல்லப்பட்டவர்கள் என்ன சொன் னார்கள் என்றும், அவர்கள் சொன்னதாக ஏற்பாடு செய்த ஏடுகளிலும் புத்தகங்களிலும் என்ன எழுதியிருக்கிறது என்று கவனித்து அவைகளுக்கெல்லாம் அடிமையாகி யிருக்கும் அது விஷயத்தில் சுதந்தரமும் சுய அறிவும் இல்லாத மக்களுக்கு விளங்கக்கூடிய காரியமல்ல” (3:1706).

10.09.1933இல் குடியரசு ஏட்டில் தலையங்கமாக எழுதப்பட்ட-இந்தக் கருத்தை ஊன்றிப் படிக்க வேண்டும். மூன்று எதிரெதிர் இணைகளைப் பெரியார் உருவாக்கு கிறார்.

                நாத்திகம்                  x        ஆத்திகம்

1.            அறிவு வளர்ச்சி           x       சுய அறிவின்மை

2.            ஆராய்ச்சித்திறன்       x       நம்பிக்கை மனம்

3.            சுதந்தர உணர்ச்சி       x       அடிமை உணர்ச்சி

நாத்திகம் பற்றிய பெரியார் வாய்ப்பாடு இதுவே ஆகும். கடவுள் இல்லை என்ற முழக்கமெல்லாம் நம் பிக்கை மனத்தைக் கீறிப் பார்த்த மருத்துவம்! அறிவு வளர்ச்சியையும் சுதந்தர உணர்ச்சியையும் இணைக் கும் ஆராய்ச்சித் திறனே நாத்திகத்தின் உள்ளீடாகும்.

“ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதே ஆபாசமானது. அனாவசியமானது - துரோக மானது என்ற உணர்ச்சி மக்களுக்கு இருக்குமானால் அந்த விஷயம் பகுத்தறிவுக்கு முரணானது” (3:1556) என்று 1936இல் கூறிய பெரியார், அந்த விஷயத்தைப் புரிந்துகொள்ள மூன்று கேள்விகளைக் கேட்கச் சொன் னார் : “அது உனக்கு எப்படித் தெரியும்? அது உண்மை என்று நாங்கள் ஏன் நம்ப வேண்டும்? அது உண்மை என்று நம்ப ஆதாரம் என்ன?” (3:1555).

பெரியார் கடவுளை மன்னிக்கத் தயாராக இருந்தார். அது முட்டாளின் கற்பனை என்பதில் அசைக்க முடியாத அறிவு கொண்டிருந்தார். ஆனால் மதத்தை எந்தக் கட்டத்திலும் மன்னிக்க, அனுமதிக்க அவர் எண்ணியதே இல்லை! பெரியாரின் ‘நாத்திக நெறிமுறை’ அறிவா ராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. மனித சுதந் தரத்தை எல்லையாகக் கொண்டது! எனவே மதத்தைக் கடுமையாகச் சாடினார்!

மதம் இல்லாதிருந்த காலத்திலேயே கடவுள் இருந் தார் - கடவுள் கொள்கையாளர் கருத்துப்படி இதுவே உண்மை! கடவுள் மதத்திற்கு முந்தியவர். அவருக்கு மதம் என்ற முடவன் நாற்காலி தேவையில்லை! மதம் இல்லாமலும் கடவுள் வாழவேண்டும். ஆனால் மதமோ கடவுள் இல்லாமல் வாழவே முடியாது. மனிதனின் அச்ச நம்பிக்கையை நிறுவனப்படுத்திய மதவெறி யரைமதம் கொண்ட யானை போலத் துவைத்து மிதித்தார். அவருடைய நாத்திக நெறிமுறையில் மதம் ஐம்புலன்களையும் அழித்தொழிப்பதாகக் கண்டார்.

“மக்களின் வாழ்க்கைத்தரத்திற்கு ஒரு வழிசெய்து, அவர்களுக்குக் கவலையோ குறைபாடோ ஏற்படுவ தற்கு இல்லாமல் பொருளாதார சமத்துவம் சமுதாய சமத்துவம் ஏற்படும்படிச் செய்ய வேண்டும்” (3:1306) எனக் கூறும் பெரியார், அப்படிப்பட்ட நாட்டைத்தான் நாடு என்றும் சுதந்தர பூமி என்றும் கூறுகிறார், அப்படி யில்லையென்றால் அதுவெறும் சிறைக்கூடம் என்றும் அடிமைச் சமுதாயம் என்றும் பொருள்படும் என்றார்.

“சாதாரணமாக அரசர்களால் ஆளப்படும் நாடுகளும் சமுதாயமும் எப்படி வேண்டுமானாலும் இருக்க லாம். ஏனெனில் அரசனுக்கு ஆட்சி முறை - மதமும் சாத்திரங்களுமேதாம்! மக்களால் ஆண்டுகொள்ளப்படும் நாட்டுக்கு ஆட்சிமுறை - அறிவும் சுதந்தரமுமேதாம்” என்ற பெரியார் “கடவுளைக் கற்பித்தவனை மன்னித்து விடலாம். ஏனெனில் அவன் மடையன்... உலக உற் பத்திக்கு, நடத்தைக்கு ஒரு கர்த்தா இருக்க வேண்டும். அந்தக் கர்த்தாதான் கடவுள் என்ற உத்தேசத்தின்மீது உறுதிப்படுத்திக் கொள்கிறான். அதாவது சந்தேகத்தின் பயனை (பெனிஃபிட் ஆஃப் டவுட் - Benefit of Doubt) கடவுளுக்குக் கொடுக்கிறான். ஆனால் மதமும் சாத்திரமும் அப்படி இல்லை. முழுப் பொய்யையே கற்பனை செய்து, மக்களை ஏய்ப்பதற்கென்றே, பயப்படுத்துவதற்கென்றே பாகுபடுத்தி மதத்தையும் சாத்திரத்தையும் அமைக்கிறான்” (3:1307) என்று 1969இல் விளக்கி இருக்கிறார்.

பெரியாரின் அறிவுகொள்திறமாகிய நாத்திகம் என்பது சமத்துவத்தையும் சுதந்தரத்தையும், அதற்கான அறி வாராய்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டது. அது வெறும் ‘கடவுள் இல்லை’ என்ற கூச்சல் அல்ல. அறிவு அடிப்படையில், சமுதாயத்தோடு மனிதன் மேற்கொள் ளும் சோதனைகளின் விளைவாதலால் அது எல்லா நிலையிலும் அச்சமற்றது; விலங்குள் அற்றது! ஆனால் மதமோ அச்சம், வழிபாடு என்ற மனநோயின் மீது பூட்டப்படும் கைவிலங்கு! பெரியோரின் நாத்திகம் மதத் தையும் சாத்திரத்தையும் ஒழிக்க முயன்றதன் காரணம் என்ன?

“இதை நாம் ஏன் குறை கூறுகிறோமென்றால் - இவை அறிவை மாத்திரமல்லாமல் ஒழுக்கம், நேர்மை, அன்பு, அருள், ஒற்றுமை, சமநிலை முதலியவற்றைப் பாழ்செய்வதோடு, வளர்ச்சியையும் கெடுத்து, விஞ்ஞா னத்தை மறைத்து, அஞ்ஞானத்தை வளர்த்து வருகிறது” (3:1308). இதுதான் பெரியாரின் நாத்திகம். பெரியார் தான் மனிதனின் சுதந்தரத்திற்கு எந்த எல்லையையும் வைக்காதவர்; எந்தப் பொன்விலங்கையும் பூட்டாதவர்.

கடவுளையும் மதத்தையும் தனிமனித ‘அபிப்ராயம்’ (3:1381) என்னும் போது அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் எனக் கருதியவர். “... தனிமனித சமூக சுதந்தர சகவாழ்வுக்குப் பிறவியிலேயே எதிரிகளாக உள்ள புரோகிதக் கூட்டத்தார், மதத்தின் பேரால் - கடவுள் பேரால் தங்கள் வாழ்க்கையை நிச்சயித்துக் கொண்ட சோம்பேறி மக்கள் எங்கள் தொண்டிற்குக் கொள்கைகளுக்குச் சமாதானம் சொல்லி எதிர்த்து நிற்கச் சக்தியற்ற கோழைகள்; கடவுளையும் மதத்தையும் பற்றிக் குழப்பமாகப் பேசி, அவைகளைக் குறுக்கே கொண்டுவந்து போட்டு விடுகிறார்கள் எனக் கொதிக்கும் பெரியார், பிறவி உயர்வு தாழ்வு, சாதி பேதம், ஆண்டான் அடிமை ஆகிய தன்மைகள் மாறி ஆணும் பெண்ணும் சகல துறைகளிலும் சம  சுதந்தரத்துடன் வாழத் தடையாய் இருப்பனவற்றை “அவை எவையானாலும் மனித சமூக ஒற்றுமைக்கும், சமத்துவத்துக்கும், சுதந்தர வாழ்வுக்கும் கேடு செய்வதாக இருந்தால் அவற்றைக் கொளுத்தி ஒழிக்க வேண்டும்” (3:1327) என முழக்க மிடுகிறார். இதுவே அறிகொள்திறமாகிய நாத்திகத்தின் அரசியல் ஆகும்.”

பெரியார்வாதிகள் எனப் பிதற்றுவோர் இன்றுவரை இதைப் புரிந்து கொண்டவர்கள் இல்லை. காரணம் சமத்துவம், சுதந்தரம், அறிவாராய்ச்சி என்ற மூன்றுக்கும் எதிரான உயர்வு தாழ்வுகளில், வேற்றுமைகளில், ஒடுக்கு முறைகளில் சாதிப்பெருமை, உடைமைப் பெருமை, பதவிப் பெருமை, சுரண்டல் நலன் எனப் பலவும் அடங்கி யிருக்கின்றன. இந்தப் பெருமைகளைப் படை நோய்களை விட்டுவிட, ஒழிக்க விரும்பாத அதே சமயம் மறைக்க விரும்பிய பெரியார்வாதிகள் ‘கடவுள் ஒழிப்பில்’ மட்டும் காலூன்றி நிற்பதான அரசியல் இப்போதாவது புரிய வேண்டும்.

தமிழ்நாட்டு நாத்திகவாதிகள், முதலாளித்துவ நாத்திகவாதத்தின் (பெட்ரண்ட் ரசல் போன்றோர்...) அறிவுத் தேடலின், சனநாயகப் பண்பின் அக்கம் பக்கம் கூட செல்ல முடியாமல். வயது வந்தோர் பட்டிமன்றத் திலும், ஆபாசச் சொற்பொழிவுகளிலும், அலங்கார வடிவங்களிலும், சுரண்டும் அரசியலின் பாதுகாப்பிலும் நாக்கைப் புதைத்தனர். ‘சமுதாய அரசியல் பொருள் கொள்ளும் சொல் தன்செயலில் இருந்து விலகும் போதோ, நீர்த்துப் போகும்போதோ அது பிற்போக்கா ளர்க்கு மட்டுமே பயன்படும்’ என ஏற்கெனவே குறிப் பிட்டிருப்பதை இங்கே பொருத்திப் பார்க்க வேண்டும்.

சமத்துவத்திற்கும் சுதந்தரத்திற்கும் எதிராக உள்ள கடவுளையும் மதத்தையும் விமர்சித்து வரும் பெரியார், “இன்று சிறையிலுள்ளோரின் சமரசவாதிகளோ நாத்தி கர்களோ விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே இருப் பார்கள், மற்றையோர் யாவரும் கடவுள் உணர்ச்சியாலே ஒருவித சந்தேகமும் கொள்ளாத ஆத்திகர்களேயாவர், ஆகவே, அவர்கள் சொல்லும் கடவுள் உணர்ச்சியை மனிதனுடைய நடத்தையுடன் ஒப்பிட்டுப் பார்த்து வரவு-செலவு கணக்குப் போட்டு, நஷ்டம், இலாபம் பார்க்கும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்” (3:1329) எனப் பெரியார் கூறியதையே, இன்றைய பெரியார்வாதிகள் மனதில் இருத்த வேண்டும்.

IV

நாத்திகம் - உண்மை தேடும் நெறிமுறை

அறிவுகொள்திறம் என்பது அறிவை உள்வாங்கும் திறன். உண்மை தேடும் நெறி என்பது பெறப்பட்ட அறிவை, சமுதாயத்தில் பயன்படுத்துவதாகும். தனி மனிதனும் சமூகமும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை ஆராய் வதற்குக் கைக்கொள்ள வேண்டிய ஒரு கருவியாகும். நோக்கறிவால் ‘Observation’ பெறப்பட்ட மெய்மைகளை ‘கயஉவள’ அந்த மெய்மைகளுடைய தோற்றச் சார்புகளுடன் பொருத்திப் பார்க்கும் போது உண்மைகள் ‘relative truths’ உருவாகின்றன. நோக்கறிவு, மெய்மைகள், உண்மைகள் ஆகியவற்றின் பகுத்தறிவே நாத்திக மாகும், அதுவொரு தேடல் நெறி. முற்றிலும் புறவயத் தன்மை கொண்டது.

“எண்ணெய் இருந்தால்தான் விளக்கு எரியும். ‘கடவுள் சிந்தனைக்கு உரியதல்ல; ஏனென்றால், கடவுள், சிந்தனைக்கும் மனத்திற்கும் எட்டாதவர். மனம் வாக்கு காயத்திற்கும் எட்டாவதர்’ என்ற நிபந்தனையில் மனிதன் எப்படி அறிவு படைத்த ஜீவனாக இருக்கமுடியும். (3:1310). மனித அறிவு, மாற்றங்களுக்கு உட்பட்டது தான் என்பதை உணர்ந்த நிலையிலேயே காரண காரிய அறிவு தோன்றி விடுகிறது. நோக்கறிவால் பெறப்பட்ட மெய்மைகள் இந்தக் காரண காரிய அறிவு மூலம்தான் உண்மையாக வெளிப்படுகின்றன. உண் மைகளின் தொடர் போராட்டமே, வளர்ச்சியே அறிவிய லாகும். இந்த வளர்ச்சியைப் புரிந்து கொள்வதன் நெறியே நாத்திகமாகும். புரிந்துகொள்வது விளங்க வைத்தலின் முதல்படி!

பெரியார் அடிப்படைவாதியோ, கொண்டதுவிடா ‘Dogmatist’ நெறியினரோ அல்ல! கடவுள் என்ற கருத்திலியலில் ரொம்பவும் கருணையுள்ளவராகவே இருந்திருக்கின்றார். அந்தக் கருணை அவருடைய மனிதநேயத்தில் இணைந்து வருவதாகும்.

“ஒரு மனிதன் கடவுள் இல்லை என்று சொல்லு வானேயானால் அவன் உலகம் முழுவதும் - ‘அதற்கு அப்பாலும் இப்பாலும்’ என்பவைகளையெல்லாம் அறிந்து, நேரில் தேடித் தேடிப் பார்த்துக் காணாவிட்டால்தான் சொல்ல வேண்டும் என்பதும் முழுதும் தப்பல்ல” எனத் தன் தேடல் நெறியின் தன்மையை விளக்கும் பெரியார், ஒரு கருத்து, அதன் ‘கருத்து நிலை’யால் அல்ல. செயல்நிலையில்தான் நிறுவனமாகிறது என்பதைத் தொடர்ந்து விளக்குகிறார். “ஆனால், அதற்கும் மனி தனின் வாழ்க்கைக்கும் உள்ள சம்பநத்ம் எவ்வளவு? அதற்காக மனிதனின் அறிவையும் நேரத்தையும் பொருளையும் ஏன் செலவு செய்ய வேண்டும்? இது வரையில் அப்படி அநேகர் செய்துவந்ததன் மூலம் அடைந்த நன்மைகள் எவை? அப்படிச் செய்யாததன் மூலம் ஏற்பட்ட அல்லது ஏற்படப் போகும் கெடுதி என்ன? -என்பன போன்றவைகளே இந்நிலையில் முக்கியமாக ஆராயத் தகுந்த விஷயமாகும்” (3:1342). எனவே கிடைக்கும் தரவுகள்-இருக்கும் நிலைமைகளில் இருந்து எதிர்காலம் பற்றிய விளக்கங்களைக் கூற முயன்றதே பெரியாரின் நாத்திக நெறியாகும். எனவேதான் இதை உண்மை தேடும் நெறிமுறை எனக் குறிப்பிட்டேன்.

நாத்திகம் என்பதை வாழ்க்கை முறைகள் பற்றிய அறிவுத்தேடல் என விளக்க முற்பட்ட பெரியார், “...வாச கர்கள் தயவுசெய்து கடவுள் பற்றிய நம்பிக்கையும் கவலையும் இல்லாத புத்தர் நடந்து கொண்டதையும், கடவுளிடத்தில் நம்பிக்கை வைத்து அவரது அருள் பெற்றவர் என்பவரான சம்பந்தருடைய நடவடிக்கை யையும் ஒப்பிட்டுப் பார்த்தால், கடவுளை நம்பினால் தான் யோக்கியனாக இருக்க முடியுமா என்பதும், நம்பாதவன் எல்லாம் அயோக்கியனா என்பதும் விளங் காமல் போகாது” (3:1343) எனக் கூறியிருப்பதை உணர்ந்து தெளிதல் வேண்டும். அவரே தொடர்ந்து, இக்கருத்தை முடிக்கிறார் : இதை ஏன் வலியுறுத்த நேரிடு கிறது என்றால்... கஷ்டப்படுகிறவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கின்ற கருத்துக் கொண்டே ஒழிய வேறில்லை.

“உங்கள் ‘எதிரி’ மதத்தைப் பரிசோதிப்பது போல் எதிரி ஆதாரத்தை எந்தெந்த வழியில் பரிசோதித்து நியாயம், அநியாயம் சொல்லுவோமோ அந்த நோக் கத்துடன் - உங்கள் கொள்கைகளையும் நடவடிக்கை களையும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். கண்ட உண்மையை வீரத்துடன் வெளியிட்டு, குற்றமிருப் பின் திருத்த வேண்டும். மனிதன் முடிவுபெற்ற முற் போக்கானவன் என்று யாரும் கருதிவிடக்கூடாது. உலகம் முழு முற்போக்கை அடைந்துவிட்டதாகக் கருதி விடாதீர்கள். திருத்தம் அவசியமானால் திருத்தியாக வேண்டும். திருத்தம் சரி என்று பட்ட வழியில் மனம் திரும்பப் பயமோ, வெட்கமோ அடையக் கூடாது” (3:1380) - இதுவே பெரியார் கையாண்ட உண்மை தேடும் நெறியாகிய நாத்திகமாகும்.

V

நாத்திகம் - விஞ்ஞான தர்க்கவியல்

விஞ்ஞானம் / அறிவியல் என்பது தரவுகளைப் (Data) பரிசோதனைக்கு (Experiment) உட்படுத்தி விதிகளைக் கண்டறிதல் ஆகும். தரவுகள் மாறும் போது பரிசோனைகளின் தன்மை மாறும்போதும் விதிகளும் மாறுகின்றன. ஆனால் யார், யார் எத்தனை முறை குறிப்பிட்ட தரவுகளைக் குறிப்பிட்ட அதே பரிசோதனைக்கு உட்படுத்தினாலும் ஒரே விதிகளே கிடைக்கப் பெறும். தர்க்கம் என்பது ஒரு பொருளின் முழுமையை உணர அதன் உட்கூறுகளை எதிரும் புதிருமாக நிறுத்தி இரண்டுக்கும் இடையே உள்ள உறவுகளை ஆராய்வதாகும். ‘கடவுள்’ என்ற பொருளின் முழுமையை உணர ‘உண்டு’ - ‘இல்லை’ என்ற முரண்களைத் தனித்தனியே ஆராயாமல், ஒரு சேர நிறுத்தி எடையிடுவதாகும். ‘ஒரு சேர நிறுத்தி’ என்ற நிலையில் கிடைக்கும் தரவுகளை ஆராய, பரிசோ தனை முறைகளை மேற்கொள்ளும் நிலையில் அதை விஞ்ஞான தர்க்கவியல் என்கிறோம். பெரியாரின் சித்ரபுத்திரன் கட்டுரைகள், வினாவிடை கட்டுரைகள் பலவற்றிலும் அத்தகைய அறிவியல் தர்க்கம் நிறைந் திருப்பதைக் காணமுடியும்.

அவதாரங்களின் இரகசியங்களை (3:1336-1343) விரிவாக விவாதிக்கும் பெரியார், வேதத்தை முன்னிறுத்தி சில வினாக்களை எழுப்புகிறார். வேதம் வெறும் ஓசைதானே. ஒலிதானே எனக் கேட்கிறார். ‘ஒலி’ என்றால் அசுரன் அதை எப்படிக் களவாட முடியும் என்கிறார். தூங்கக்கூடாத பிரம்மன் தூங்கி விட்டான்; அசுரன் ஒலியைக் களவாடிவிட்டான்; போகட்டுமே. எல்லாவற்றையும் படைத்தவன் மீண்டும் ஒருமுறை அதை எழுதிக்கொள்ளக்கூடாதா? எனக் கேட்கிறார். பார்ப்பான் தவிர மற்றவன் யாரும் வேதத் தைக் கேட்டு அதன் கருத்தைத் தெரிந்துகொள்ளக் கூடாது என்ற நிலையை மீறி, அசுரன் - சூத்திரன் கேட்கத் தொடங்கினான். படிக்கத் தொடங்கினான் என்ற வுடனேயே, அவனை ‘அழித்தொழிக்க அவதாரம் என்ற பெயரால் அயோக்கியத்தனம் செய்து அவனை ஒழித்துவிட்டார்கள்’ (3:1337) என்ற பெரியாரின் விளக்கம் நாத்திகம் என எதிரியால் தூற்றப்படுகிறது. அதைத்தான் நாம் அறிவியல் தர்க்கம் என்கிறோம்.

வேதம்-ஒலி-களவாட முடியாது! பூமி-பாயா அது! - சுருட்ட முடியாது! இவை விதண்டாவாதமல்ல! படித்தவனின் ‘கட்டைவிரல்’ வெட்டப்பட்டதாலும் தவம் செய்த சூத்திரனைக் கொல் என்ற நீசத்தனத்தாலும் ஏற்பட்ட கோபமே நாத்திகக் கேள்விகளாக உருவெடுக் கின்றன. ‘எங்கெல்லாம் சுயமரியாதைக்கு இடமில் லையோ அங்கிருந்தெல்லாம் தான் நாத்திகம் முளைக் கிறது’ என்ற பெரியாரின் முழக்கம் அறிவியல் தர்க் கத்தின் நூற்பா போல அமைந்திருக்கின்றதல்லவா?

இஸ்லாம் மார்க்கத்தில் கால வளர்ச்சியின் அடிப் படையில் இணைக்கப்பட்டுள்ள சீர்திருத்தங்களைப் பெரிதும் வரவேற்ற பெரியார், ‘மதம்’ என்ற தன்மை யில் இஸ்லாத்தையும், கடுமையாக விமர்சித்துள்ளார். இஸ்லாம் மதச் சடங்குகளின் பகுத்தறிவற்ற தன்மை யைத் தோலுரித்துக் காட்டினார் (3:1372). இஸ்லாத்தில் ‘இனிச் சிறிதுகூட சீர்திருத்தம் வேண்டியதில்லை என்ப வர்களுடன் நான் முரண்பட்டவன்... எக்காலத்திற்கும் ஏற்ற மதமென்றால்-காலத்திற்கும் ஏற்றபடி தானாகவே மாறவோ, மாற்றிக் கொள்ளவோ சவுகரியமாயிருக்கும்’ என்பதில் பயமோ அவநம்பிக்கையோ கொள்ளாதீர்கள்! இருட்டானால் விளக்கைப் பற்ற வைத்துக் கொள்ளுங் கள். பகலானால் விளக்கை அணைத்து விடுங்கள் என்று தான் பகுத்தறிவு உள்ள மார்க்கம் சொல்லி யிருக்கும். ஆகவே, காலப்போக்குடன் கலந்துகொள்ளப் பயப்படாதீர்கள் என இஸ்லாமியருக்கு அறிவுறுத்தினார்.

தான் இஸ்லாத்தை முழுதும் ஒப்புக்கொண்டவனல்ல என்றும், அதிலும் பல விரோதமான கொள்கைகளைப் பார்ப்பதாகவும், இந்து மதம் போன்ற மூடநம்பிக்கைகள் உடையதுதான் இஸ்லாமும் என (3:1378) உரத்துப் பேசும் பெரியார், இஸ்லாத்தை விமர்சிக்கும் முறை அறிவியல் தர்க்கத்திற்கு மிகச் சரியான சான்றாக அமைந் திருப்பதையே நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

“இஸ்லாம் மார்க்கம் மக்களுக்கு உபதேசிப்பதிலும் வேத வாக்கியங்களிலும் மேன்மையானதாய் இருக் கின்றது-என்கின்ற திருப்தியானது மனித சமுதாயத்திற்கு எல்லாப் பயன்களையும் அளித்துவிடாது... செட்டி முருக்கு செல்லாது; சரக்கு முடுக்காய் இருந்தால்தான் இனிச் செலாவணி ஆகும்... ஆண்டவன் சொன்னான் என்பவையெல்லாம் அனுபவத்திற்கு நிற்காவிட்டால். காரியத்தில்நடந்து காட்டாவிட்டால் இனி மதிப்புப் பெற முடியாது. இஸ்லாம் கொள்கை என்பதும் முஸ்லீம் மக்களின் நடத்தையைக் கொண்டும் அவர்களது பிரத்யெட்ச பயனைக் கொண்டுந்தான் மதிக்கப்பட முடியும்” (3:1379) என்ற பெரியார், ‘தேர் இழுத்தல், காசி இராமேஸ்வரம் பயணம்’ என்பதன் மறுமுனை யாகக் ‘கூண்டுகட்டி சுமத்தல், மக்கா, நாகூர், முத்துப் பேட்டைப் பயணம்’ என்பதை எடுத்துக்காட்டி விளக்குகிறார்.

“தீர்க்கதரிசிகள் பகுத்தறிவுக்கு விரோதமாகச் சொல்லியிருக்கமாட்டார்கள்” என்று கருதி அவற்றைத் தன் இஷ்டப்படி அர்த்தம் செய்து கொண்டு பிடிவாத மாய் இருப்பது மூடநம்பிக்கையை விட சமரசமான தாகும். அம்மாதிரி மூடநம்பக்கைகளின் பயனாய்த் தீர்க்கதரிசிகள் என்பவர்கள் சொன்ன கருத்தையும் உண்மையையும் அறிந்து கொள்ள முடியாமலும் போகும் (3:1379) என்ற பெரியாரின் வாதம் நாத்திகம் என ஒதுக்கப்பட வேண்டுமா. அறிவியல் தர்க்கம் என ஏற்கப்பட வேண்டுமா?

பெரியாரைப் பற்றிப் பொதுவாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. பெரியார் இந்துக்களைத்தான் அதிகமாகத் தாக்கினார். மற்ற மதக்காரர்களைப் பற்றி ஒன்றும் கூறவில்லை; குறைச்சலாகவே தாக்கினார். உண்மை தான். இதற்கு விடை கூறி இப்பகுதியை முடிக்க விரும்பு கிறேன். பெட்ரண்ட் ரசல் கிருஸ்தவ மதத்தை மட்டுமே தாக்கினார். கமால் பாட்சா இஸ்லாத்தை மட்டுமே சீர்திருத்த விரும்பினார். பேராசிரியர் இர்ஃபான் அபீப் இஸ்லாத்தை மட்டுமே தாக்குகிறார்-இப்படியெல்லாம் குற்றச்சாட்டுகள் இருக்கவே செய்யும்.

VI

நாத்திகம் - ஒடுக்கப்பட்ட மக்களின் அரசதிகாரம்

பெரியாரை நுட்பமாகப் படிக்கும் போது, அவருடைய மானிட விடுதலைக் கொள்கையை, எந்த அளவிற்குப் பெரியாரியவாதிகள், மண்மூடி மறைத்து விடுகின்றனர் என்பதை உணர்ந்து ஆவேசம் கொண்டேன். அவர் பயன்படுத்திய ஒவ்வொரு சொல்லிலும் புதைந்திருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் அதிகாரம் பற்றிய வர்க்கக் கண்ணோட்டத்தை வெளிக்கொணர விரும்பி னேன். வே.ஆனைமுத்துவின் அளப்பரிய உழைப்பால் விளைந்த ‘பெரியார் சிந்தனைகள்’ திராவிடத்தாரா லேயே மறைக்கப்பட்ட வரலாற்றை அறிந்தேன். பெரியாரை அவருடைய மானுட விடுதலைக் கண் ணோட்டத்தில் இருந்து படிக்கும் போதெல்லாம், நாத்திகம், சமதர்மம், பொதுவுடைமை என்ற சொற்களை ஒருபொருள் பல சொற்களாகப் பயன்படுத்தியுள்ளமையை உணர்ந் தேன். கடவுளையும் மதத்தையும் எதிர்த்து முழங்கிய எல்லா இடங்களிலும் அவர் சமதர்மம் பற்றிப் பேசத் தயங்கியதே இல்லை. பொதுவுடைமை, சோசலிசம், இரஷ்யா பற்றி எழுதும் போதெல்லாம் நாத்திகம் பற்றித் தவறாமல் எழுதியிருக்கிறார்.

பெரியாரைப் பற்றி நமக்கு விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. ‘அறிவுக்கு முடிவில்லை’ என்றவர் பெரியார். அந்தக் கள வீரர் முறையாகத் தமிழ்நாட்டில் ‘அறிமுக மாக’ வேண்டும் என்ற எண்ணத்தில் “பெரியார் இன்றும் தேவைப்படுகிறார்” என்ற விரிவான கட்டு ரையை எழுதினேன். அதன் தொடர்ச்சியாகவே பெரி யாரின் ‘நாத்திகம்’ பற்றி விளக்குகிறேன். அதற்கோர் அடிப்படையான காரணம் உண்டு.

‘அரசியல் அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் கைப் பற்றுதல்’ என்ற அரசியலில் இருந்து துரோகத்தால் நீக்கப்பட்ட ‘நாத்திகக் குறியீடு’, பிற்போக்காளரின் ஆயுதமாகியது! திராவிடத்தார் எடுத்த பெரியார் காவடி, பெரியாரை விழாக்கால ‘உற்சவர்’ ஆக்கியது. சிலை உடைப்புப் பாரம்பரியத்தில் வந்த நாம் பெரியார் மீது சுமத்தப்பட்டுள்ள தூசுகளைத் துடைப்பதல்ல, தவறாக ஏற்படுத்தப்பட்டுவரும் பிம்பங்களை, பிரமைகளை உடைத்தெறிதல் வேண்டும்!

“அரிசனப் பட்டம் ஒழியாமல் சூத்திரப் பட்டம் ஒழியாது” என்று கன்னத்தில் அறைவது போலக் கூறினார் பெரியார். இதை உணர்ந்து செயல்பட்டிருந்தால் தாழ்த் தப்பட்ட மக்களை மலம் தின்னச் செய்த கொடுமை நடந்திருக்குமா? காவிக் கயமைகள் தமிழ்நாட்டில் விருது விட முடியுமா? பத்மினி நந்தகோபால் குதறப்பட முடியுமா? செயலலிதா ஆதிபராசக்தி ஆகமுடியுமா? சுயமரியாதைத் தலைகள் பாதம் நக்கின. இன்றைய தமிழகம், ‘சினிமா + சாராயம் + ஆர்.எஸ்.எஸ்.’ என்ற கலக்கலாக மாறி வருகின்றது.

பெரியாரைப் பெரியார் இயக்கவாதிகளிடம் இருந்து (all brands) விடுதலை செய்து, நாத்திக நெறியை, இயக்கவியல் பொருள்முதல்வாதத் தீயில் புடம்போட்டு எடுக்க வேண்டும். நாத்திகம், கோயிலுக்கு எதிராக, சமாதிகள் கட்டுவதன்று! கோயிலையும் அரியணை களையும் காப்பாற்றிவரும் வர்க்க சமுதாயத்தின் வயிற்றைக் கிழிக்கும் போர்வாள்! எப்படி?

1946இல் பெரியார் எழுதுகிறார் : “அரசியல் கட்சி யில் சமுதாயச் சீர்திருத்தக் கொள்கையைக் கலக்கலாமா என்ற சந்தேகத்தைப் பற்றியும் ஒரு வார்த்தை. அரசியல் என்பதே சமுதாயக் கோளாறுகளை ஒழிப்பதற்காகவே ஏற்பட்டுள்ள ஒரு சாதனம் என்பதுதான் நம் கொள்கை. சமுதாய வேலையைக் கலக்காத ஒரு அரசியல் மனித சமுதாயத்திற்கு எதற்காக வேண்டும்?

அரசியலையும் சமுதாயத் துறையையும் பிளந்து கூறுபோட்டு விற்கும் அரசியல் வியாபாரிகள் இந்நாட்டில் பெருகியிருப்பதற்குக் காரணம், ஒரே இனத்தவர் மற்ற இனத்தவரை அழுத்தி வைத்துச் சுரண்டிக் கொண்டு இருப்பதற்காக - மறைமுகமாக ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருக்கும் ஏற்பாடே ஆகும். இந்த உண்மை ஆரியர் விஷயத்தில் மட்டுமல்ல. ஆங்கிலேயர் விஷயத் திலும் பொருந்தும்” (3:1517-1518) பெரியாரின் சமுதாய வேலை - சீர்திருத்தம் - சாதிமத கடவுள் ஒழிப்புப் பிரச்சாரம் - நாத்திகம் - அடிப்படையில் ஓர் அரசியல் என்பதை இப்போதாவது உணர வேண்டும்.

இந்தியாவின் பொருளாதாரத் துறையில் சீர்படுத்த வருணாசிரமத்தில் தொடங்கி அரசன், ஜமீன்தார்கள் வரை ஒழிக்கப்பட வேண்டும் (3:1642-1643) என்ற பெரியார் வருணமுறையையும் வர்க்க முறையையும் பிரித்துப் பார்க்கவில்லை. ஒரு முழுமையின் இரண்டு படிநிலைகளாகக் கருதி, இரண்டையும் ஒருசேர ஒழிக்க வேண்டும் என்றார். முதலாளி - தொழிலாளி. மிராசு தாரர் - உழவன் என்ற வர்க்க வேறுபாடுகளின் பாது காவலனாகக் கடவுள் தூக்கி நிறுத்தப்படும் கொடுமை யைத் தீய்க்கும் பெரியார், “மனிதன் உண்மையான சமத்துவமடைய வேண்டுமானால் பிறவிப் படிகளையும் தொழில் படிகளையும் கடந்தவனாகத்தான் இருக்க வேண்டும். அவ்விரண்டு படிகளையும் ஒழித்த - அவ்விரண்டு படிகளும் ஒழிந்த நிலைதான் சமதர்ம நிலை என்று சொல்லப்படுவதாகும்” (3:1673) என விளக்குகிறார்.

பெரியார் 1931இல் ‘குடியரசில்’ சமதர்மம் குறித்துத் தலையங்கம் எழுதுகிறார். சமதர்மம் என்ற முறை, “உயர்ந்த சாதித் தத்துவத்தையும் பணக்காரத் தத்துவத்தையும் அழிப்பதற்கே கையாளப்பட்டதாக நன்றாய்த் தெரியவருகிறது. உலகத்தில் பொதுவாக யாருக்கும் ஒரு சமாதானமும் சாந்தி நிலையும் ஏற்பட வேண்டுமானால், இந்த முறைதான் கடைசி முறை யின் ஏதாவது ஒரு காலத்தில் கையாளப்பட்டே தீரும் என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகமே இல்லை” எனப் பிரகடனப்படுத்தும் பெரியார். இதற்குக் குறுக்கே தடையாக ‘தர்மஞானம்’ பேசுபவர்கள் யார் என்று அடையாளம் காட்டுகிறார் : பார்ப்பான், பணக்காரன், நிலச்சுவான்தார், இவர்கள் தயவால் ஆட்சி நடத்தும் அரசாங்கம், சாதி ஆணவம், முதலாளி, லேவாதேவிக் காரன் எனத் துல்லியமாகப் பருண்மையாகத் தூக்கிக் காட்டுகிறார் (3:1676). பார்ப்பானை மட்டும் திருடனாகக் காட்டிய... அனைத்துக் கொள்ளைக்காரர்களும் திராவிட அரசியலில் பெருமை பெற்றதுதான் அவலம்! இந்தத் திருட்டுக் கூட்டத்தார் நாத்திகத்தில் - கர்ம ஞானத்திற்கு எதிரான நாத்திகத்தில் இருந்த வர்க்க அரசியலை ஒழித்துக் கட்டியது இயற்கைதான்! பெரியார், ‘ஏழை, கூலி பெரும்பகுதியான ஜன சமூக மக்கள்’ என்பதை ஒருபுறமும், ‘வர்ணம், முதலாளி, புரோகிதம், வியாபாரி, ஜமீன், சமஸ்தானாதிபதி’ ஆகியவற்றை மறுபுறமும் வைத்து இந்த முரண் ஒழிக்கப்பட்ட ஆட்சியே சமதர்மம் (3:1380-81) என்கிறார்.

1933இல் ‘அல்லாதார் மாநாடு’ குறித்துப் பேசுகிறார். முதன்முதலாக ஜமீன்தார் அல்லாதார் மாநாடு கூட்டிய தன் நோக்கம் என்னவென்றால், பார்ப்பனர்கள் கையில் இருந்த ஆதிக்கம், ஜமீன்தார்கள் கையில் மாறிவிட்டது தான் என்றும் அதை ஒழிக்கவே அல்லாதார் மாநாடுகள் என்றும் கூறுகிறார். தனது இயக்கத்தின் பயனாய், பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்தது என்ற மகிழ்ச்சியை அடைவதற்குள், அதற்குப் பதிலாக. அதைப் போன்றதும் மோசமான ஜமீன்தார் ஆதிக்கம் தலைதூக்கப்பட்டது என்கிறார். லேவாதேவிக்காரர், முதலாளி, தொழிற்சாலை முதலாளி, வீட்டு உரிமையாளர், நிலச்சுவான்தார், மேல்சாதிக்காரர், பணக்காரர் இவர்கள் அனைவரும் அல்லாத - ஒழிந்த சமுதாய நிலை வரவேண்டும் என்கிறார் (3:1683).

“மேல்சாதி - கீழ்ச்சாதி முறை கூடாதென்றும், குருக்கள் முறை கூடாதென்றும் எப்படி நாம் பல துறை களில் வேலை செய்கிறோமோ அதுபோலவேதான் ஜமீன்தாரன் - குடிகள் என்ற தன்மையும் முறையும் கூடாதென்று வேலை செய்ய நாம் கட்டுப்பட்டவர் களாய் இருக்கின்றோம்” (3:1685).

“மதம் ஒழிந்த இடத்தில்தான் மனிதனின் பிறப்பு பேதம் புதைக்கப்படுகின்றது” என்ற பெரியார், மனித சமுதாய சமத்துவத்திற்கு மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்றார். பொருளாதார வேறுபாட்டிற்கும் அதன் பாது காப்பிற்கும் ஆதாரமாய் இருக்கின்ற கடவுள் ஒழிக்கப் பட வேண்டும் என்றார், “அது சமுதாய - பொருளாதார சமத்துவங்களுக்கு A, B, C, D படிப்பாகும்” (3:1691) என்றார்.

பெரியார் நாத்திகம் என்பதையும் சமதர்மம் என்பதையும் பிரித்துப் பார்த்ததே இல்லை. ‘நாத்திகம் என்பதே சமதர்மம் என்று பெயர்’. “எங்கு, எங்கு அறிவுக்கு வேலை இல்லையோ சமத்துவத்திற்கு இட மில்லையோ அங்கு எல்லாம் இருந்துதான் நாத்திகம் முளைக்கிறது” (3:1697) என்ற அறைகூவலை திராவிட நாத்திகர்கள் பார்ப்பன எதிர்ப்பாக மட்டும் சுருக்கியது அவர்கள் தங்கள் வர்க்க நலனைக் காப்பாற்றிக் கொள் ளவே ஆகும். ஏழைகளை வஞ்சிப்பதை நிறுத்த, ஏழ் மைக்குக் காரணம் கடவுள் செயல் அல்ல என்பதை உணர்த்த முற்பட்ட பெரியார், எதிரியின் ஆயுதமாகிய சுதந்தரத்திற்கு எதிராக வர்க்க ஆயுதமாக நாத்திகத் தைத் தூக்கிப் பிடித்தார். ஆனால் கறுஞ்சட்டைக் குண்டர்களோ அதைக் கடவுளைக் கிண்டலடிக்கும் வக்கிரப் பேச்சாக மாற்றினர். கறுஞ்சட்டைக்குள் ஒளிந்துகொண்ட கறுப்புப் பார்ப்பானுக்கு வறுமையை, ஏழ்மையை, சாதியை ஒழிப்பதில் என்ன இலாபம்? ஏழைகளின் இரத்தம் உறிஞ்சிகளாகிய இந்த அட்டை கள் நாத்திகத்தில் இருந்த வர்க்க அரசியலை நீக்கினர்.

சமூக சமதர்மம் ஏற்பட, சாதி ஒழிய போராட வேண்டியதன் அவசியத்தைக் கூறவரும் நிலையில், “பொருளாதார சமத்துவத்திற்காகவே பிறவி சாதி ஒழிய வேண்டியிருக்கிறது” என்கிறார். சாதியையும் மதத்தையும் விமர்சித்தாலே ‘நாத்திகம்’ என்று சொல் கிறார்கள் எனக் கூறுகிறார். “அதனால்தான் சமதர்மம் கோருகின்ற யாரும் கண்டிப்பாக நாத்திகர்கள் ஆகியே தீரவேண்டியிருக்கிறது” (3:1701).

கடவுளோடு சண்டைபோட பெரியார் விரும்ப வில்லை. “மனித வாழ்க்கைக்கும் பேதா பேதங்களுக்கும் கடவுள் சம்பந்தம் இல்லை என்று சொல்லும்பட்சம் அக்கடவுளைப் பற்றி நமக்கு என்ன கவலை?” (3:1703) என்ற பெரியார், மனித சமூக சமதர்ம வாழ்வுக்குத் தடையாய் இருக்கும் கடவுளை இருக்க விடக் கூடாது என்கிறார். எனவே பெரியாரின் நாத்திக அரசியல் என்பது கடவுளோடு சண்டை போடுவதன்று! வர்க்கச் சுரண்டல்காரர்களுடன் சண்டை போடுவதே ஆகும்.

பொதுவுடைமை யாருக்கு விரோதம்? யார் இதை மறுப்பர்? சக்ரவர்த்தி. அரசர், பாதிரி, குரு, முதலாளி, ஜமீன், மிராசு, மேல்சாதிக்காரன் ஆகிய இவர்களுக்கும், இவர்களுக்குக் கூலி வேலை செய்து அதன் மூலம் உயர்வான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் வர்க்க துரோகிகளுக்குமே பொதுவுடைமை விரோதம் என்கிறார். “குரு, முல்லா, பாதிரி, புரோகிதர்கள்” என்ற கூட்டத்தவர்கள், அரசர்கள், செல்வவான்கள், சோம்பேறிகள் ஆகியவர்களுடைய ‘லைசென்சு’ பெற்ற கூலிகளேயவார்கள் (3:1709). புரோகிதனை எதிர்த்த பெரியாரின் நாத்திகத்தில் வர்க்கப் போராட்டமே அரசியலாக இருக்கிறது.

VII

இந்தியாவின் அரசியலில் மதவெறியும் அந்நிய மூலதனமும் கைகோர்த்துக் கொண்டு, அந்நியப் படைகள் இல்லாத, ஒரு புதிய காலனியாக இந்தியாவை மாற்றிவிட்டன. இந்தி பேசாத எல்லா மாநிலங்களிலும் ஏதோவொரு வகையில் தேசிய இன விடுதலை அரசியல் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்தியா முழுக்க ஒடுக்கப்பட்ட மக்கள் எந்தவொரு அடையாளத் தோடும் இணைந்து நின்று போராட முடியாத படிக்கு எத்தனையோ வேறுபாடுகள் தலைதூக்கி நிற்கின்றன.

மனிதனை மதவாதியாக்கு; மதவாதியை மதவெறி யனாக்கு; மதவெறியனை மத இராணுவமாக்கு எனத் துடித்துக் கொண்டு அரசியல் களம் இறங்கியுள்ள இந்துத்துவக் காட்டுமிராண்டிகள் ஒருபுறம்; இதற்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்லர் என ஒளரங்கசீப்பின் பொற்காலத்தை, பின்-லாடன் தலைமையில் கொண்டு வரத் துடிக்கும், வழி விலக்கப்பட்டு வரும், தமிழக இஸ்லாமியர் ஒருபுறம்; ‘சர்வம் பண மயம்’ எனப் புதிய கடவுளர்களாகத் தங்களை மாற்றி கொண்ட திராவிட அரசியல் கட்சியினர் ஒருபுறம்; பத்து பேர் சேர்ந்து ஒரு வெடிகுண்டை வீசிவிட்டால் அதுவே புரட்சியின் முளை என்னும் மூளை வீங்கிகள் ஒரு புறம்; தமிழ்நாட்டைத் தனி நாடாக மாற்றிவிட்டால் எல்லா பேதங்களையும் ஒழித்துவிட முடியும் என்னும் தமிழ்த் தேசியர் ஒருபுறம்; சோசலிசம் வந்துவிட்டால் அதுவும் பாராளுமன்றப் படிக்கட்டுகள் வழி ஏறி வந்து விட்டால் எல்லா வேறுபாடுகளும் வேரற்று வீழும் என்போர் ஒருபுறம்;

இடப்பங்கீடே பெரியாரியம் என்போர் ஒருபுறம்; மூடநம்பிக்கை ஒழிப்பே பெரியாரியம் என்போர் ஒரு புறம்!

எல்லோர்க்கும் ‘அனைத்து நோய் நீக்கி’ ஒன்று தெரிந்திருக்கிறது. இவை அனைத்தையும் நாம் புரிந்து கொள்ள, புதிய வார்ப்பில் இட, செயல் களங்களை உருவாக்க மார்க்சிய ஆசான்களை உள்ளிட்டுப் பெரி யாரை மறுவாசிப்புக்கு உட்படுத்துவோம் என்பதைத் தவிர, வேறு எதுவும் எனக்குத் தெரியவில்லை. அதன் விளைவே இந்தக் கட்டுரை. நாம் அனைவரும் குறைந் தது, ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ (பதிப்பாசிரியர் வே. ஆனைமுத்து) என்னும் மூன்று தொகுதிகளில், மூன்றாவது தொகுதியில் உள்ள ‘பொருளாதாரம்’ என்ற தலைப்பிலான கட்டுரைகளைப் படிப்போம். நாத்திகத் தின் அனா ஆவன்னா இந்தக் கட்டுரைகள் மட்டுமே.

நன்றி :

என் பள்ளிக்கூட நாள்களில் பெரியாரின் சிறு, சிறு நூல்களை அறிமுகப்படுத்தியும், படிக்கத் தூண்டியும், அவற்றைப் பற்றி விவாதித்து அறிவு விளக்கம் ஏற்படுத் தியும் வழிப்படுத்தியும் எனக்குத் தூண்டுகோலாக விளங்கியவர் அண்ணன் அகத்தி, கிருட்டிணன் ஆவார். இன்று தோழர் க. முகிலன் என்ற பெயரில் மார்க்சிய அறிஞராகத் திகழும் அவரை நன்றியுடன் நினைப்ப தோடு, இக்கட்டுரையை அவருக்குக் காணிக்கை ஆக்குகிறேன்.

(18-3-2005)

(து. மூர்த்தி, அலிகர் பல்கலைக்கழகத்தில் பேரா சிரியராகப் பணியாற்றியவர். சிறந்த மார்க்சிய - பெரி யாரிய அறிஞர். 17.09.2016 அன்று அலிகர் பல்கலைக் கழகத்தில் மாணவர்களுடன் வகுப்பில் பெரியார் பிறந்த நாளைக் கொண்டாடிய து. மூர்த்தி 24.10.2016 அன்று அலிகரில் திடீரென மறைவுற்றார்).