2017-18ஆம் கல்வி ஆண்டில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்குப் பொது நுழைவுத் தேர்வு இருக்குமா? என்கிற கேள்வி தமிழக மாண வர்களின் தலைமேல் கத்திபோல் தொங்கிக் கொண்டி ருக்கிறது.

28.4.2016 அன்று உச்சநீதிமன்றம் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (National Eligibilitycum-Entrance Test - NEET) மூலமே மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநி லங்கள், திடீரென அறிவிக்கப்பட்ட நுழைவுத் தேர்வைத் தங்கள் மாநில மாணவர்களால் எழுத இயலாது என்று கூறி எதிர்த்தன. அதனால் நடுவண் அரசு ஓர் அவசரச் சட்டம் மூலம் மாநில மருத்துவக் கல்லூரிகளுக்குப் பொது நுழைவுத் தேர்வு எழுதுவதிலிருந்து 2016-2017ஆம் கல்வி ஆண்டிற்கு மட்டும் விலக்கு வழங்கப் பட்டது.

எனவே, தமிழ்நாட்டில் 2007ஆம் ஆண்டு முதல், பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண் தரவரிசையின் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் மாணவர்களைச் சேர்க்கும் நடைமுறையின் படி, கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டது. ஆயினும் தமிழ்நாட்டு அரசு, தேசிய நுழைவுத் தேர்வு எழுதுவதிலிருந்து நிலையான விலக்குப் பெறும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று பலதரப்பினரும் வலியுறுத்தி னர். எல்லா எதிர்க்கட்சிகளும் இதையே கூறின.

முன்னாள் முதலமைச்சர் செயலலிதாவின் மறைவுக் குப் பின் ஆளும் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட குழப்பங்களுக்குப்பின் கூட்டப்பட்ட சட்டப்பேரவைக் கூட்டத்தில், 1.2.2017 அன்று இதற்கான சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது இரண்டு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. முதலாவது சட்டம் தமிழ்நாட்டில் பொது மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பற்றியதாகும். இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கும், தனியார் மருத்து வக் கல்லூரிகள் அரசுக்கு ஒப்படைக்கும் இடங்களுக் கும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வின் மதிப் பெண் தரவரிசைப்படி மாணவர் சேர்க்கை நடை பெறும். சிறுபான்மை அல்லாத தனியார் மருத்துவக் கல்லூரிகள் 65 விழுக்காடு இடங்களையும், சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகள் 50 விழுக்காடு இடங்களையும் அரசுக்கு ஒப்படைக்க வேண்டும். மருத்துவப் படிப்புக் கான எல்லா இடங்களும் அரசால் ஒற்றைச் சாளர முறையில் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகள்

எண்ணிக்கை         அவற்றில் உள்ள இடங்கள்

1. அரசுக் கல்லூரிகள்              21           2750

2. தனியார் கல்லூரிகள்       15           2100

3.அண்ணாமலைப்பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிர்கநிலைப் பல்கலைக்கழகங்கள்        10           1650

  மொத்தம்      46           6500

நிகர்நிலைப் பல்கலைக்கழகங் கள் தமிழக அரசுக்கு இடங்களை அளிப்பதில்லை. ஏனெனில் அவற்றுக் கான விதிகள் அத்தன்மையில் இருக்கின்றன.

இரண்டாவது சட்டம் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை பற்றியதாகும். முதுநிலைப் படிப்புகளில் அரசுக் கல்லூரிகளில் 1331 இடங்களும் தனியார் கல்லூரி களில் 973 இடங்களும் உள்ளன. மொத்தம் உள்ள 2304 இடங் களுக்கும் 2015 வரை தமிழ்நாடு அரசு நடத்தும் நுழைவுத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படை யில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனார். இதில் 50 விழுக் காடு இடங்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்நிலை யில் 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிற மாநிலத் தவரும் பொதுத் தேர்வு மூலம் முதுநிலைப் படிப்பில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறியது. எனவே இப்போது இயற்றப்பட்டுள்ள சட்டத்தில் முதுநிலை மருத்து வப் படிப்பில் சேர்க்கை முறை 2015இல் இருந்தது போன்றே நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்பில் சேர்க்கை குறித்த இவ்விரு சட்டங்களும் தமிழக ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு நடுவண் அரசுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளன. நடுவண் அரசின் மக்கள் நல்வாழ்வு அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சட்ட அமைச்சகம் ஆகியவை ஒப்புதல் அளித்தபின் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் பழனிச்சாமி தில்லி யில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியைச் சந்தித்த போது, தமிழ்நாட்டு அரசு இயற்றிய சட்டங்களுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்தார். 8.2.2017 அன்று தமிழ்நாட்டு அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விசய பாஸ்கர் தில்லியில் நடுவண் அரசின் மக்கள் நல்வாழ் வுத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவையும் அதிகாரிகளை யும் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினார். 15.3.2017 அன்று தமிழ்நாட்டு அரசின் தலைமைச் செயலாளரும், மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயலாளரும் தில்லி சென்று உரிய உயர் அதிகாரிகளிடம் குடியரசுத் தலை வரின் ஒப்புதலைப் பெற்றுத்தர ஆவன செய்யுமாறு வேண்டினர். அப்போது குறைந்தது இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கேனும் தமிழ்நாட்டுக்குப் பொது நுழை வுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்குமாறும், அதற்குள் மாநிலப் பாடத் திட்டத்தை சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத் திற்கு இணையாகத் தரம் உயர்த்தி, பொது நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை அணியப்படுத்திவிட முடியும் என்றும் கெஞ்சிக் கூத்தாடியதாகச் செய்திகள் வெளி வந்துள்ளன. 24.3.2017 அன்று தமிழ்நாட்டின் மக்கள் நல்வாழ்வு அமைச்சரும், உயர்கல்வித் துறைக்கான அமைச்சரும், அதிகாரிகளும் தில்லி சென்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்தனர். அவர் ஒப்புதல் தர மறுத்துவிட்டதாகச் செய்தி வெளிவந்துள்ளது.

ஏழரைக் கோடித் தமிழர்களின் பேராளராக உள்ள சட்டப்பேரவை ஒருமனதாக இயற்றிய பொது நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து நடுவண் அரசு ஆணவ மவுனம் சாதிப்பது தமிழ் இனத்தையே இழிவுபடுத்துவது ஆகும்.

7.5.2017 அன்று தேசிய தகுதிகாண் பொது நுழை வுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான இறுதிநாள் 1.3.2017 அன்றுடன் முடிந்துவிட்டது. 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் 31.3.2017 அன்று முடிவடைகின்றன. பொது நுழைவுத் தேர்வு உண்டா? இல்லையா? என்ற மனஉளைச் சலில் மாணவர்களும் பெற்றோரும் தவித்துக் கொண்டி ருக்கின்றனர். நடுவண் அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தராது என்றும், அப்படியே ஒருகால், பெற்றுத் தந்தாலும் உச்சநீதிமன்றம் அதில் தலையிட்டுத் தடுத்திட வாய்ப்புள்ளது என்றும் வல்லுநர்கள் கூறு கின்றனர்.

மாநிலப் பாடத் திட்டத்தின்கீழ் பொது நுழைவுத் தேர்வு எழுதுவதற்குரிய பாடப்பிரிவை படித்து இப்போது 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதுபவர்கள் எண் ணிக்கை 3,90,000; சி.பி.எஸ்.சி.யில் இதே பிரிவில் தமிழ்நாட்டில் பொதுத் தேர்வு எழுதுவோர் 3,700 பேர் என்று 22.3.2017 அன்று சட்டமன்றத்தில் அமைச்சர் விசயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு புதுச்சேரி உட்பட இவ்வாண்டு 8,98,763 பேர் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர்.

மருத்துவப் படிப்பு, பெருங்கொள்ளை வணிகமாகி விட்டதைத் தடுக்கவும், தனியார் மருத்துவக் கல்லூரி களில் வெளிப்படைத் தன்மையற்ற - முறைகேடான மாணவர்  சேர்க்கையை ஒழிக்கவும், தகுதி - திறமையை நிலைநாட்டவும், மாணவர்கள் பல நிறுவனங்களில் தேர்வு எழுதும் அவல நிலையைத் தவிர்க்கவும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக நடுவண் அரசு கூறுகிறது. ஆனால் நடுவண் அரசின்கீழ் உள்ள ஜிப்மர், எய்ம்ஸ் உள்ளிட்ட நான்கு மருத்துவக் கல்லூரிகளுக்குத் தேசிய பொது நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளித்தது எப்படி நியாயமாகும்?

இந்தியாவில் மொத்தம் 412 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 190 அரசுக் கல்லூரிகளில் 25,880 இடங்கள்; 222 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 26835 இடங்கள் என மொத்தம் 52715 இடங்கள் இருக்கின்றன.

2016ஆம் ஆண்டு இந்திய அளவில் 7,31,223 பேர் நுழைவுத் தேர்வு எழுதினர். அவர்களில் 4,09,477 பேர் தேர்ச்சி பெற்று, மருத்துவக் கல்லூரிகளில் சேரு வதற்கான தகுதியைத் பெற்றிருப்பதாக அறிவிக்கப் பட்டது. நுழைவுத் தேர்வில் மொத்தம் 180 வினாக் களுக்கான மதிப்பெண் 720 ஆகும். தேர்ச்சி பெறுவதற் கான குறைந்தபட்ச மதிப்பெண் 150 ஆகும். அதனால் தான் நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெறமுடிந்தது. ஆனால் மருத்துவப் படிப்பில் உள்ள மொத்த இடங்களோ 52,715 மட்டுமே! இந்த நிலை, தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களின் கொள்ளைக்கு வழிவகுத்தது. மேலும் 2016ஆம் ஆண்டு நடுவண் அரசு, தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான திட்டவட்டமான நெறிமுறைகளை அறிவிக்கவில்லை. அதனால் நுழைவுத் தேர்வின் தரவரிசையில் கீழ்நிலையில் இருந்த பணக்கார வீட்டு மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் பெருந்தொகையைக் கொடுத்துச் சேர்ந்துவிட்டனர். இதுகுறித்து நடுவண் அரசின் மீது கண்டனக் கணைகள் பாய்ந்தன.

எனவே 10.2.2017 அன்று நடுவண் அரசின் மக்கள் நல்வாழ்வு அமைச்சகம் மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் 2017-18ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை ஒற்றைச் சாளர முறையில் பொதுக் கலந் தாய்வின் மூலம் மாநில அரசுகளே நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டியது மட்டுமல்லாமல் கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதுமாகும்.

ஆனால் நம்முன் உள்ள தலையாய சிக்கல், தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக் கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு வாயிலாக நிரப்பப்படக் கூடாது என்பதே ஆகும். 2007ஆம் ஆண்டுமுதல் நடப்பில் இருப்பதுபோல் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வின் மதிப்பெண் தரவரிசைப்படி தமிழக அரசால் ஒற்றைச் சாளர முறையில் மருத்துவப் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் முறையே நீடிக்க வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங் களுக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் இடங் களுக்கும் மாணவர் சேர்க்கை தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு மூலம் நடைபெறுவதில் நமக்குத் தடையில்லை. ஆனால் நடுவண் அரசின் சுற்றறிக் கையில் அறிவுறுத்தியுள்ளவாறு அந்த இடங்களுக் கான மாணவர் சேர்க்கை தமிழக அரசின் கட்டுப் பாட்டின்கீழ் நடக்க வேண்டும்.

இந்நிலையில் மாநில அரசுகளின் கல்வி உரிமை யைப் பறிக்கும் வகையில் நடுவண் அரசு மற்றொரு அறிவிப்பைக் கடந்த பிப்பிரவரி மாதம் வெளியிட்டுள்ளது. 2018-19ஆம் கல்வி ஆண்டில் இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க் கைக்கும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை நடத்த நடுவண் அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் 3,288 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் 554 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 520 தனியார் பொறியியல் கல்லூரிகளாகும். மொத்தம் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. 2016ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் இடங்களில் மாண வர்கள் சேராததால் காலியாக இருந்தன. நிலைமை இவ்வாறிருக்க நடுவண் அரசு பொறியியல் படிப்புக்கும் இந்திய அளவில் நுழைவுத் தேர்வு எழுத முடிவு செய் திருப்பதன் நோக்கம் மாநில அரசுகளின் கல்வி உரிமை யைப் பறிப்பதே ஆகும். எல்லா அதிகாரங்களும் நடுவண் அரசிலேயே குவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற ஏகாதிபத்திய எண்ணமே காரணமாகும். மாநில அரசு களைக் கால்தூசாகக் கூட மதிக்காத ஆணவப்போக்கு மோடி ஆட்சியில் வேகமாக வளர்ந்து வருகிறது.

நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கிடைக்காவிட்டால், எண்ணிப் பார்க்கவே நெஞ்சம் வெடிக் கும்படியான கேடுகள் உண்டாகும்.

நுழைவுத் தேர்வில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) பாடத் திட்டத்திலிருந்து வினாக்கள் கேட்கப்படுகின்றன. மாநிலப் பாடத் திட்டத்தில் பயின்ற தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அவை கடினமாக இருக்கும். மேலும் கொள்குறி முறையில் (Objective Type) வினாக்கள் உள்ளன. மனப்பாட முறையில் வினாக்களுக்கு விடை எழுதிப் பழகிய மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள் உரிய நேரத்தில் விடையளிக்க முடியாமல் திணறுவார்கள். மேலும் தவறாக அளிக்கப்படும் விடைக்கு மதிப்பெண் கழிக்கப்படுகிறது. அதனால் மாநிலப் பாடத் திட்ட மாண வர்களால் நல்ல மதிப்பெண் பெறமுடியாது.

2016இல் நுழைவுத்  தேர்வு இந்தி, ஆங்கிலம் இருமொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டது. பிறமொழி பேசும் மாநிலங்கள் இதை எதிர்த்ததால் இந்த ஆண்டு தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது. தமிழில் வினாக்கள் இருப்பதால் தேர்ச்சி பெற வாய்ப்பிருந்தாலும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம்பெறும் அளவுக்கு மதிப்பெண் பெற முடியாது. ஆகவே சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் நகரங் களில் படித்த மேல்சாதி-மேல்தட்டு-பணக்கார மாணவர் களே நுழைவுத் தேர்வில் முன்னிலை பெறுவர்.

அதனால் பிற மாநில-பிறமொழி பேசும் மாணவர் களே நுழைவுத் தேர்வின் தரவரிசைப் பட்டியலில் முதலிடப் பகுதியில் பெருமளவில் இடம்பெற்றிருப்பார்கள். இவர்கள் தமிழ்நாட்டின் அரசு மருத்துவக் கல்லூரி களில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றுவதற் கான வாய்ப்பு இருக்கிறது. இதைத் தமிழ்நாட்டு அரசால் தடுக்க முடியாது.

அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஒரு மாணவனின் படிப்புக்காகத் தமிழ்நாட்டு மக்கள் வரிப் பணத்திலிருந்து 5 முதல் 7 இலட்சம் தொகையை அரசு செலவிடுகிறது. நம்முடைய வரிப் பணத்தில் படிக்க பிற மாநில மாணவர்களைத் தமிழ்நாட்டு அரசுக் கல்லூரியில் அனுமதிப்பதா? அந்த அளவுக்கு நமக்கு இந்தியத் தேசிய வெறி தலைக்கேறி விட்டிருக்கிறதா?

பிற மாநில-பிற மொழி பேசும் மாணவர்கள் தமிழ் நாட்டின் அரசுக் கல்லூரிகளில் படித்துவிட்டு அவர்களின் சொந்த மாநிலங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு மருத்துவம் செய்வார்கள். இந்தக் கொடுமையை நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதா?

பிற மாநில மாணவர்கள் தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் சேரும் நிலையில் தமிழ்நாட்டு மாணவர்கள் தற்போது பெற்றுவரும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டின் நிலை என்னவாகும்? 1920 முதல் தமிழ்நாட்டின் அரசியலும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றமும் இடஒதுக்கீட்டோடுப் பின்னிப்பிணைந்துள்ளது. தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் மருத்துவப் படிப்பு உரிமை பறிக்கப்படுவதை அனுமதிக்கலாமா? நுழைவுத் தேர்வின் தரவரிசைப் பட்டியலில் முதலிடப் பகுதியில் இடம்பெற்றுள்ள பிற மாநில மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவையோ, தாழ்த்தப்பட்ட பிரிவையோ சேர்ந்தவர்களாக இருப்பின், 69 விழுக்காட்டின்படி அவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் தரவேண்டிய அவல நிலை ஏற்படுமா?

இந்தியா முழுமைக்கும் ஒரே பொது நுழைவுத் தேர்வு என்பதன் நோக்கம், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கல்வியைத் தமது முற்றுரிமை யாக்கிக் கொண்டிருந்த பார்ப்பன மேல்சாதி ஆதிக்க வர்க்கம், நடுவண் அரசின் உயர்கல்வி நிறுவனங் களைக் கைப்பற்றியிருப்பதுடன், மாநிலங்களில் உள்ள உயர்கல்வி வாய்ப்புகளையும் தமதாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற சூழ்ச்சியே ஆகும்.

தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்களைச் சேர்க்கும் உரிமை தமிழ்நாட்டு அரசுக்கு மறுக்கப்படுமானால், தமிழ்நாடு ஏன் இந்தியாவில் இருக்க வேண்டும்? இந்தியத் தேசியத்தின் பெயரால் தமிழர்களை வஞ்சிக்கும் தில்லி ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து, மானமிழந்து வாழலாமா?

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகாரம் தமிழ்நாட்டு அரசுக்கே இருக்க வேண்டும் என்று 2017 சனவரியில் சல்லிக் கட்டு உரிமைக்காக மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகளுடன் குடும்பங்குடும்பமாக ஒட்டுமொத்த தமிழர்களும் போராடியது போன்ற போராட்டத்தை நடத்த வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டின் உரிமையை வென்றெடுக்க முடியும்.