சென்னையில் 1933ஆம் ஆண்டு கே.வி. கிருஷ்ண சாமி அய்யர் என்பவர் தமிழன்பர் மாநாடு ஒன்றை நடத்த முயன்றபோது சுயமரியாதை இயக்கம் தலை யிட்டு அம்மாநாட்டை உண்மையான தமிழ் வளர்ச்சிக் குரிய மாநாடாக அமைவதற்கான முன் முயற்சிகளை எடுத்தது. மாநாட்டில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று மாநாட்டிற்கு 15 நாட் களுக்கு முன்பே சுயமரியாதை இயக்கத்தின் தீர்மா னங்களை அச்சிட்டு, மாநாட்டின் தலைவர் கே.வி. கிருஷ்ணசாமி அய்யருக்கு அனுப்பி வைத்தது. அதன் விவரம் வருமாறு :

அன்புள்ள ஐயா!

இம்மாதம் 23, 24ம் தேதிகளில் நடக்கும் தமிழன்பர் மகாநாட்டில் நிறைவேற்றப்படுவதற்காக அனுப்பப் பட்டிருக்கும் கீழ்க்கண்ட தீர்மானங்களை மகாநாட்டில் வைக்கவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

தீர்மானங்கள் :

1.            பொதுப் பள்ளிக்கூடங்களின் பாடப் புத்தகங்கள் அனைத்தும் அரசாங்கத்தாராலேயே பிரசுரிக்கப் பட வேண்டுமேயொழிய அவைகள் தனிப்பட்ட நபர்களுக்கோ, சங்கங்களுக்கோ; சிறிதும் சம்பந் தம் இருக்கக் கூடாதென்று இம்மகாநாடு தீர்மானிக் கிறது.

2. தமிழ்மொழியிலுள்ள இலக்கியங்கள் பொது ஜனங் களிடையே பரவ வேண்டுமானால் அவ்விலக் கியங்கள் ஜாதி மதப் பாகுபாடுகளைக் குறிக்கும் விஷயங்கள்; ஒரு சிறிதும் சம்மந்தப்படாதவை களாக இருக்க வேண்டுமாகையால் அவ்விதப் பாகுபாடுகளையும் ஜாதிமத சம்பந்தமான விஷயங் களையும் கொண்ட புத்தகங்களைப் பொதுப் பள்ளிக்கூடங்களில் பாடப் புத்தகங்களாக வைக்கக் கூடாதென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது.

3. பொதுப் பள்ளிக்கூடங்களில் தமிழ்மொழியும் இலக்கியங்களும் வளம்பெறுவதற்குக் கல்வியறி விற்கு வேண்டிய எல்லா விஷயங்களையும் தமிழ்மொழியிலேயே கற்றுக்கொடுக்க வேண்டு மென்றும், சமஸ்கிருதம், ஹிந்தி முதலிய பிற மொழிகளைப் பொதுப் பள்ளிக்கூடங்களில் கற்பிப் பதினால் மாணவர்களுடைய கவனங்கள் சித றுண்டு போய்விடுமாதலால், அவைகளைப் பொதுப் பள்ளிக்கூடங்களில் கற்பிக் கக் கூடாதென்றும் இம்மகா நாடு தீர்மானிக்கிறது.

4.            அறிவைப் பரப்புவதற்கும் இலக்கியங்களைக் கற்பிப்ப தற்கும் ஏற்படுத்தப்படுகிற கல்வி சம்பந்தமான புத்த கங்களில் பகுத்தறிவுக்கும் தன் நம்பிக்கைக்கும் முர ணான கடவுள் வாழ்த்து, கடவுள் வணக்கம் முதலிய விஷயங்கள் அடி யோடு குறிப்பிடாமல் இருக்க வேண்டுமென்று இம்மகாநாடு தீர்மானக்கிறது.

5.            தமிழ் நெடுங்கணக்கில் 216 எழுத்துக்கள் இருப்ப தால் புதிதாகத் தமிழ் படிப்பவர்களுக்கும், அச்சு வேலை, டைப்ரைட்டிங் வேலை முதலியவை களுக்கும் சௌகரியம் ஏற்படும்படி, அவசியமற்ற பல எழுத்துகளையும், குறிகளையும் நீக்க வேண்டு மென்றும், புதிய சப்தங்களுக்காக சில புதிய எழுத் துக்களைச் சேர்க்க வேண்டுமென்றும் இம்மகா நாடு தீர்மானிக்கிறது.

6.            அரசாங்கப் பொதுக் கல்லூரிகளில், தென்னிந்திய பாஷையல்லாததும், பேச்சு வழக்குக்குப் பயன் படாததுமான சமஸ்கிருத பாஷைக்குத் தனிப்பிரதா னத்துவம் கொடுத்திருப்பதோடு, பொது மக்களாகிய தமிழ் மக்களின் வரிப்பணத்திலிருந்து சமஸ்கிருத பாஷை புரொபசருக்கென்று தமிழ் பாஷைப் பண்டிதர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தைவிட 4, 5 மடங்கு அதிகமான சம்பளம் கொடுப்பதையும், பதினாயிரக்கணக்கான ரூபாய்களை சமஸ்கிருத பாஷைக்கென்று உதவித் தொகையாகக் கொடுப் பதையும் நிறுத்தி, அவற்றை முறையே தமிழ் மொழிக்கும், தமிழ் மொழி மூலம் அறிவு வளர்ச்சி உண்டாக்குவதற்கும் பயன்படுத்த வேண்டுமென்று இம்மகாநாடு சர்க்காரைக் கேட்டுக் கொள்ளுகிறது.

7.            தமிழ் அல்லாத பிறமொழிப் பயிற்சியுடையவர்கள் அரசாங்கத்திற்குத் தேவையிருக்குமானால் அதற் காகத் தெரிந்தெடுக்கப்படும். மக்களை அளவு படுத்த வேண்டுமென்றும் அந்த அளவை வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவ முறைப்படி தெரிந்தெடுக்க வேண்டுமென்றும் இம்மகாநாடு தீர்மானிக்கிறது.

தங்கள் அன்புள்ள,

கே.எம். பாலசுப்பிரமணியம், பி.ஏ., பி.எல்.,

ஆர். நடேசன், எஸ். குருசாமி

அ. பொன்னம்பலனார், அ. இராகவன்

- (புரட்சி ஏடு, 1933, டிசம்பர் 10)

18.3.1939இல் காஞ்சிபுரத்தில் பனகல் வாசக சாலையைத் திறந்து வைத்துப் பேசிய பெரியார் “நமக்கு இன்று இருக்கும் சிறிது வீரத்துக்கும் தன்மான உணர்ச் சிக்கும் தமிழ் எவ்வளவோ உதவி புரிந்திருக்கிறது. அது இல்லாதவரை இவ்வளவு தமிழ் மக்களும் நிசமாய் குரங்குகளாகவே (அனுமார்களாகவே) இருந் திருப்போம். ஆனாலும் தமிழைப் போற்ற வேண்டுமா னால், பரப்ப வேண்டுமானால், மதத்திலிருந்து பிரிக்க வேண்டும். விஞ்ஞானம், பொது அறிவு தமிழில் ததும்ப வேண்டும். பத்திரிகைகளும் வெறும் அரசியலும் மதமுமாகத்தான் இருக்கிறதே தவிர, பொது அறிவுக்கு பத்திரிகை இல்லை (குடிஅரசு 6-3-1933).

பெரியாருடைய கருத்து என்னவென்பதை சுயமரியாதை இயக்கம் தொடங்கிய காலம் முதல் அவ்வப்போது சுட்டிக்காட் டியே வந்துள்ளார். தமிழை அறிவியல் மொழியாக்க வேண்டும்; தமிழர்களை அறிவாளிகளாக்க வேண்டும் என்பதே அவருடைய ஆசையாகும்.

தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்களையும் தமிழ்ப் பேராசிரியர் கா. நவச்சிவாய முதலியார் அவர்களை யும் மேடையில் வைத்துக் கொண்டு, பச்சையப்பன் கல்லூரியில் 13.1.1936 அன்று தமிழ்த் திருநாள் கூட்டத்தில் பெரியார் பேசிய பேச்சிலிருந்து அவர் கொள்கைகளை அறிந்து கொள்ள முடியும்.

தமிழுக்கு வாழ்த்துக்கூற தலைவரும், எனது நண்பருமான தோழர் திரு.வி. கல்யாண சுந்தர முதலியார் அவர்களும், தமிழ்ச்சங்க அமைச்சர் தோழர் கா. நமச்சிவாய முதலியாரும் மற்றும் அவர்கள் போன்ற பெரியார்களே உண்மையில் தகுதி உள்ள வர்கள்.

தலைவர் கல்யாணசுந்தர முதலியார் அவர்களின் தமிழ்த் தொண்டை நானே நன்றாய் அறிந்தவன். அவரது தமிழ்த்தொண்டுக்கு எடுத்துக்காட்டு வேண்டு மானால் நானேயாவேன். நான் தமிழ் பேசுவதும் எழுதுவதும் தமிழைக்கொலை புரியும் மாதிரியானா லும் நான் பல பத்திரிகைகள் நடத்துவதும், சுமார் 50, 60 புத்தகங்கள் வெளியிட்டதும் தலைவர் கல்யாண சுந்தர முதலியார் அவர்கள் தமிழ் பாஷையில் தேச பக்தன், நவசக்தி முதலிய பத்திரிகைக்குப் பிறகே தமிழ் அரசியல் மேடைகளைக் கைப்பற்றிற்று என்று சொல்லுவேன். அரசியல் தலைவர்களையும் தமிழ் அடிமை கொண்டதற்குக் காரணமும் அவர்களது பத்திரிக்கைகளேயாகும்.

அப்பத்திரிகைகள் என்னைவிட மோசமானவர் களையும், தமிழ் பாஷையில் அரசியலை உணரவும், தமிழ்பேசவும் செய்துவிட்டதால், தமிழ் பாஷையைக் காதில் கேட்டால் தோஷம் எனக்கருதும் ஜாதியாரும் தமிழில் கலந்து கொள்ளவும், தமிழை வேஷத்துக் காவது மதிக்கவும் செய்துவிட்டது.

பெரியார் நமச்சிவாய முதலியார் அவர்களது உழைப்பும் தமிழுக்கு மிகப்பெரியதொன்றும், தமிழர் மறக்க முடியாததுமான தொண்டாகும். பெரியார் நமச்சிவாய முதலியார் அவர்களின் துணிந்த முயற்சி இல்லாதிருக்குமானால் இன்று தமிழ்ப்பாடப் புத்தகங் கள் பெரிதும் ஆரியமத உபாக்கியானங்களாகவும், ஆரியமும் தமிழும் விபசாரித்தனம் செய்து பெற்ற பிள்ளைகள் போலவும் காணப்படும். ஆதலால் தான் தமிழுக்கு வாழ்த்துக்கூற, அப் பெரியார்களும் அவர் கள் போன்றார்களுமே தக்கார் என்று உரைத்தேன்.

தோழர்களே! எனக்கிட்ட கட்டளையில் ஏதேனும் ஒரு சிறு பாகமாவது நிறைவேற்றப்பட வேண்டுமா னால் தமிழைப்பற்றிய எனது உள்ளக் கிடக்கையை உண்மையாய் எடுத்துரைத்தாக வேண்டும். ஆதலால் ஏதோ நான் சொல்வது பற்றி நீங்கள் தவறாகக் கரு தாமல் என் கபடமற்ற தன்மையை அங்கீகரித்து உங்களுக்குச் சரி என்று பட்டதை மாத்திரம் ஏற்று மற்ற தைத் தள்ளி விடுங்கள். அதற்கு ஆக என் மீது கோப முறாதீர்கள்.

தமிழும் மதமும்

முதலாவதாக தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால், தமிழையும், மதத்தையும் பிரித்து விட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்மந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளிவைக்க வேண்டும்.

மதசம்மந்தமற்ற ஒருவனுக்குத் தமிழில் இலக் கியம் காண்பது மிகமிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக்கணம்கூட மதத்தோடு பொருத்தப்பட்டே இருக்கிறது.

மதமும் இலக்கணமும்

உதாரணமாக ``மக்கள் தேவர் நரகர் உயர்திணை'' என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சி தானே இது?

இப் பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளுக்குத் தமிழ் இலக்கியத்துக்குப் புத்தகங்கள் எவை? கம்பராமா யணம், பாரதம், பாகவதம், பெரிய புராணம், தேவாரம், திருவாய் மொழி போன்ற மதத் தத்துவங்களையும், ஆரிய மதத் தத்துவம் என்னும் ஒரு தனிப்பட்ட வகுப்பின் உயர்வைப் போதித்து மக்களை மான மற்றவர்களாக்கும் ஆபாசக் களஞ்சியங்களும் அல்லா மல் வேறு இலக்கியங்கள் மிகுந்து காணப்படுகின் றனவா? இன்றைய பண்டிதர்களுக்கு உலக ஞானத் தைவிடப் புராண ஞானங்கள் தானே அதிகமாயிருக் கின்றன?

மலத்தில் அரிசி பொறுக்கலாமா?

கம்ப ராமாயணம் அரிய இலக்கியமாய் இருக்கிற தாகச் சொல்லுகிறார்கள். இருந்து என்ன பயன்? ஒருவன் எவ்வளவுதான் பட்டினி கிடந்தாலும் மலத்தில் இருந்து அரிசி பொறுக்குவானா? அதுபோல் தானே கம்பராமாயண இலக்கியம் இருக்கிறது. அது தமிழ் மக்களை எவ்வளவு இழிவாகக் குறிப்பிடப்பட்டிருக் கிறது! சுயமரியாதை விரும்புகிறவன் எப்படிக் கம்ப ராமாயண இலக்கியத்தைப் படிப்பான். இன்று கம்ப ராமாயணத்தால் தமிழ் மக்களுக்கு இலக்கியம் பர விற்றா, இழிவு பரவிற்றா என்று நடு நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.

கடவுளால் பாஷை உயராது

தமிழ் பாஷையின் பெருமை பரமசிவனுடைய டமாரத்தில் இருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதி யிடம் பேசிய பாஷை என்றோ சொல்லி விடுவதாலும், தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததாலும், முதலை உண்ட பாலனை அழைத்ததாலும், எலும்பைப் பெண் ணாக்கினதாலும், மறைக் கதவைத் திறந்ததாலும் தமிழ் மேன்மையுற்றதாகி விடாது. இந்த ஆபாசக் கதைகள் தமிழ் வளர்ச்சியையும் மேன்மையையும் குறைக்கத்தான் பயன்படும்.

பரமசிவனுக்குகந்த பாஷை தமிழ் என்றால் வைணவனும் துருக்கனும் தமிழைப் படிப்பதே பாவமல்லவா? அன்றியும் அந்தப்படியிருந்தால் பார்ப் பான் தமிழ் மொழியைச் சூத்திர பாஷை என்றும், அதைக் காதில் கேட்பதே பாவம் என்றும் சொல்லு வானா? என்று யோசித்துப் பாருங்கள்.

இந்திப் புரட்டு

இன்று, தமிழ்நாட்டில் வந்து தமிழ் கற்று வயிறு வளர்ப்பவர்களாகிய பார்ப்பனார்களே இந்தி பாஷை இந்திய பாஷை ஆக வேண்டுமென்று முயற்சித்து வெற்றி பெற்று வருகிறார்கள். கோர்ட் பாஷை, அர சாங்க பாஷை ஆகியவை எல்லாம் இந்தி மயமாக வேண்டும் என்கிறார்கள். காரணம் கேட்டால் இந்தி பாஷையில் துளசிதாஸ் ராமாயணம் நன்றாய் விளங்கு மென்கிறார்கள்.

தமிழ்ப் பண்டிதர்களுக்கு இதைப்பற்றிச் சிறிதும் கவலை இருந்தது என்று சொல்ல முடியவில்லை; தமிழப்பண்டிதர்கள் இந்த அரசியல்வாதிகளின் கூச்ச லுக்கும் பார்ப்பனர்கள் ஆதிக்கத்துக்கும் பயந்து கொண்டு வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.

செத்த பாம்பு

பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ்கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்? பொதுப்பணம் சமஸ்கிருதத்தின பேரால் எவ்வளவு செலவாகின்றது? பொது ஜனங்களின் வரிப் பணம் சமஸ்கிருதத்துக்கு ஆக ஏன் ஒரு பைசாவாவது செலவாக வேண்டும்? தமிழ் மக்கள் யாரும் இதைப் பற்றிக் கவனிப்பதில்லை. தமிழ், தமிழ் என்று எங்கோ ஒரு மூலையில் இரண்டு பண்டிதர்கள் தான் சத்தம் போடுகிறார்கள். ஆனால் சமஸ்கிருதத்துக்கும் இந்திக் கும் கேபினெட் மெம்பர்கள் ஐகோர்ட் ஜட்ஜிகள் முதல் எல்லாப் பார்ப்பன அதிகாரிகளும் பாடுபடுகிறார்கள். நம்ம பெரிய அதிகாரிகளுக்கோ, பெரிய செல்வாக்கும் செல்வமும் உள்ளவர்களுக்கோ தமிழைப் பற்றிக் கவலையும் இல்லை; தமிழைப் பற்றி அதிகம் பேருக்கு ஒன்றும் தெரியவும் தெரியாது.

தமிழபிமானம் தேசத்துரோகம்

தமிழினிடத்தில் ஒருவன் அபிமானியாக இருந் தாலே அவன் தேசத் துரோகி, வகுப்புவாதி, பிராமணத் துவேஷி என்றெல்லாம் ஆகிவிடுகிறான். ஆதலால் மீட்டிங்கிக்கு வரக்கூட நமது மந்திரிகள் பயப்படுகிறார்கள்.

எங்கும் திருநாள்

எப்படி ஆனாலும் தமிழ்ப் பாஷை உணர்ச்சி தமிழ் மக்களுக்கு இன்றியமையாதது. அதன் மூலம் தமிழ் மக்கள் ஒன்று சேர வசதி உண்டு. தலைவர் திரு.வி.க. அவர்களும், அமைச்சர் கா. நமச்சிவாய முதலியார் அவர்களும், இத்திருநாளை இம்மாதிரி ஒழிந்த நேரத் திருநாளாக இல்லாமல் தமிழ் மக்களுக்கு ஒரு புது எழுச்சியையும், ஊக்கத்தையும் உண்டாக்கும் திரு நாளாகச் செய்ய வேண்டும். வருஷம் ஒவ்வொரு ஊரில் தலைமைத் திருநாள் நடைபெறச் செய்ய வேண் டும். தீபாவளி போன்ற மூடநம்பிக்கையும், சுயமரி யாதை அற்றதும், ஆபாசமானதுமான பண்டிகைகள் கொண்டாடுவதைவிட இப்படித் தமிழ்த் திருநாள் என்று தமிழ் மக்கள் கூட்டுறவுக்கும், மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்துக்கும் அனுகூலமாகத் திருநாள்களைப் பரப்பவேண்டும். நமது பெண்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதையும் இருந்தாலும், ஒரு திருநாள் வேண்டி இருக்கிறதால் தீபாவளியையும், மாரி பண்டிகையை யும் கொண்டாட ஆசைப்படுகிறார்கள். ஆதலால் தக்கது செய்ய வேண்டுகிறேன்.

கடைசியாகத் தோழர்களே தமிழ் முன்னேறும் என்பது பற்றி எனக்கு அறிகுறிகள் தென்பட்டுவிட்டன அதென்ன வென்றால் என்னை இங்கு உள்ளே விட உங்களுக்குத் தைரியம் ஏற்பட்டுவிட்டது ஒன்றே போது மான ஆதாரமாகும்.

அன்றியும் இந்தப்பெருமை என்னையும் ஒருபடி உயர்த்திவிட்டது. என்னவென்றால் தமிழ்ப் பண்டிதர் கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படியான பெருமை ஏற்பட்டுவிட்டதல்லவா? நான் எவ்வளவு தமிழ் அறியாத வனாய் இருந்தாலும், தமிழில் எனக்கு உள்ள ஆசை உங்கள் யாரையும்விடக் குறைந்ததல்ல என்பதை தெரிவித்துக் கொண்டு, அந்த ஆசையின் மயக்கத்தால் நான் பேசியவற்றுள் ஏதும் குற்றம் குறைகள் இருப் பின் அவற்றை மன்னித்துக் களைந்துவிட்டு, சரி என்று பட்டவையை மாத்திரம் ஏற்று அதற்காவன செய்ய வேண்டிக்கொண்டு விடைபெற்றுக் கொள்ளுகிறேன். (குடிஅரசு - சொற்பொழிவு - 26.01.1936)

பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் தமிழை வெறுக்கவில்லை. தமிழ் மொழியில் உள்ள ஆரியச் சார்பான இலக்கியங்களையே வெறுத்தனர். தமிழர் சமூக வளர்ச்சிக்கு அவை பெரிய தடைகற்களாய் இருப்பதை உணர்ந்து அவற்றை எதிர்த்தனர். மற்ற படி தமிழ்மொழியின் மீது வெறுப்பு எதுவும் சுயமரி யாதை இயக்கத்தினருக்கு இல்லை என்பது இவற்றால் புலனாகும்.

(தொடரும்)

Pin It