ஒரு பெண்ணின் அடிவயிற்றின் வலியை இன்னொரு பெண்ணால்தான் உணர முடியும். பிறவிப் பாட்டாளி யான நான், பொறுக்க முடியாத வலியுடன் பாட்டாளிக் கென்றே கட்சி நடத்துவோரிடம் சில கேள்விகள் கேட்கிறேன். பொறுப் புடன் பதில் சொல்வீர் என நம்புகிறேன்.

மரக்காணத்தில் நடந்தது சரியா? நடந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்ததா? திட்டமிட்டு நடத்தப்பட்டா? எதிர்பாராமல் நடந்தது என்றால் கொடூரமான கொலைக் கருவிகளும், கையெறி குண்டுகளும் மாநாட்டுக்கு எடுத்துக்கொண்டு போனது ஏன்? குறிப்பாய் மரக்காணத்தில் அச்சம்பவம் நடந்தேற அவசியம் என்ன? ஒரு மிருகம் இன்னொரு மிருகத்தைத் திட்டமிட்டுக் கொல்லுவதில்லை. ஒரு பாட்டாளி இன்னொரு பாட்டாளியைக் கொல்ல நினைக்கலாமா?

25-04-2013 நண்பகல் 1.00 மணியளவில், நானும் ஒரு தோழரும் கடலூரிலிருந்து புதுச்சேரி நோக்கி இரு சக்கர வாகனத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் வந்து கொண்டிருந்தோம். அங்கு நான் நேரில் கண்டதை அந்த நாள் முழுவதும் போதையிலிருந்தவர்கள் மறந்துகூடப் போயிருக்கலாம். அதை மீண்டும் நினைவிற்குக் கொண்டு வருகிறேன்.

பா.ம.க.வின் அடித்தள அமைப்பான வன்னியர் சங்கம் நடத்தும் சித்திரைத் திருவிழா மாநாட்டில் கலந்துகொள்ளப் பல வகையான வாகனங்கள் பா.ம.க. கொடிகளும், வன் னியர் சங்கப் பதாகைகளும் கட்டிக்கொண்டு 15 வயதிலிருந்து 40 வயதுக்குள்ளானவர்கள் மஞ்சள் நிற பனியன்கள் அணிந்து வாகனங்களில் பயணமானார்கள்.

கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள புதுச்சேரி - கடலூர் எல்லையான கன்னியக்கோயில் என்ற ஊரிலிருந்து, இன் னொரு எல்லையான கனகசெட்டிக்குளம் என்ற ஊர் வரை சுமார் 30 கி.மீ. இருக்கும். இந்த இடைவெளியில் சாலை யின் இருபுறங்களிலும் சுமார் பல மதுக்கடைகள் உண்டு.

மாநாட்டிற்குச் சென்ற எல்லா வாகனங்களும் ஏதாவ தொரு மதுக்கடையில் நிறுத்தி, கடையின் வெளியிலேயே மதுவை வாங்கி சாலையோரத்திலேயே கும்பலாக நின்று குடித்தார்கள்.

போதை உச்சிக்கேறி சில பேர் விழுந்து கிடக்கிறார்கள். சிலர் போகும் வழியிலும் குடிப்பதற்கு முன்கூட்டியே வாகனத்தில் வாங்கி வைக்கிறார்கள். கடைகளில் குடித்தது போதாதென்று பயணத்தின் போதே வாகனத்தின் கூரை களில் அமர்ந்துகொண்டு மது விருந்து நடத்திக்கொண்டும் போகிறார்கள். சாலையோரம் போவோர் வருவோரிடம் கையிலுள்ள மது பாட்டிலைத் தூக்கிக் காட்டிச் கூச்சலெழுப்பிப் பரவசமடைகின்றனர்.

அதே கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஏறக்குறைய மாலை 4.00 மணியளவில் மாநாட்டிற்குச் சென்ற சில வாகனங்கள் திரும்பிக் கொண்டிருந்தன. அவர்களிடம் விசாரித்ததில், எங்களுக்கு முன்னால் சென்ற வாகனங்கள் மரக்காணம் பகுதியில் சில இளைஞர்களின் மீது மோதிவிட்டார் களாம். அதனால் அங்கே கலவரமாக இருக்கிறது. அதற்கு மேல் எங்களால் போக முடியவில்லை. மாற்றுப் பாதையில் போகச் சொன்னார்கள். நேரம் நிறையக் கடந்து போனதால், நாங்கள் போவதற்குள் மாநாடு முடிந்துவிடும். எனவே, நாங்கள் ஊர் திரும்புகிறோம் என்றார்கள்.

இந்த விவரமெல்லாம் புதுச்சேரிக்குத் தெற்கிலிருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியே மாநாட்டிற்குச் சென்ற தோழர்களுக்கெல்லாம் தெரிந்ததுதான். ஆனால் இப்போது எதுவும் நினைவில் இருக்காது. காரணம், யாரும் தன்னி லையில் இல்லை. தன்னிலையில் இல்லாதவர்கள் மரக் காணம் பகுதியில் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். பொறுமை யுடன் கேளுங்கள்.

நண்பகல் 12.00 மணியளவில், நான்கு தலித் இளைஞர் களை மாநாட்டுக்குச் சென்றவர்கள் தாக்குகின்றனர். அதில் ஓர் இளைஞர் சுய நினைவை இழந்தார். கேள்விப்பட்ட தலித் மக்கள் சாலை மறியலில் ஈடுபடுகின்றனர். இதனால் சாலையில் போக்குவரத்துத் தடைபடுகின்றது. காவல்துறை வருகின்றது; சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேசிப் பார்த்து, முடியாததினால் விரட்டியடிக்கின்றது. மாநாட்டுக்குச் செல்வோரைக் கலைந்துபோகும்படிக் காவல்துறை எச்சரிக் கிறது. இந்நிலையில், போதையில் இருந்த தொண்டர்களால் வாகனங்கள் கொளுத்தப்படுகின்றன. போலீசார் வானத்தை நோக்கிச் சுடுகின்றனர். பின் கூட்டத்தை நோக்கி இரப்பர் குண்டுகளால் சுடுகின்றனர். இதில் பா.ம.க.வினர் 4 பேர் காயமடைகின்றனர். சாலையில் நீண்டதூரம் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

இந்தப் பதற்றமான சூழ்நிலையில் மாநாட்டிற்குச் சென்ற கும்பல் ஏற்கெனவே தாங்கள் எடுத்துக்கொண்டு வந்த கழி, கம்பு, அரிவாள், பெட்ரோல் பாம் எல்லாம் எடுத்துக்கொண்டு பக்கத்திலிருக்கும் தைல மரத் தோப்புக்குள் புகுந்து ஓடி, தலித் குடியிருப்புகளான குடிசை வீடுகளை பாம் போட்டு எரித் திருக்கின்றனர். கண்ணில் பட்டவர்களையெல்லாம் கடுமை யாகத் தாக்கியிருக்கின்றனர். தைல மரம், முந்திரி மரம், ஆடு, மாடு எல்லாவற்றையும் தீக்கிரையாக்கியிருக்கின்றனர். கட்சிக் கொடிக்கம்பங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே ஊர் மக்கள் பெரும்பாலானோர் சாலை மறியலுக்குச் சென்றுவிட்டதால் பெரிய உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. கண்ணில் மாட்டிய 4 பேரை கிரிக்கெட் மட்டையால் அடித்து மண்டையை உடைத்துள்ளனர். பெண் களிடம் மிக ஆபாசமாக நடந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், மூன்று அரசுப் பேருந்துகள், பயணிகளை இறக்கிவிடப்பட்டுக் கொளுத்தப்பட்டன. சில பேருந்துகள் அடித்து நொறுக்கப் பட்டுள்ளன. டோல் கேட்டும் அடித்து நொறுக்கப்பட்டது.

பக்கத்து ஊரான கூனிமேடு இசுலாமியர் அதிகம் வாழும் பகுதி. அங்கிருக்கும் கடைகளை அடித்து உடைத்திருக்கிறார்கள். ஒரு கறிக்கடையைத் தீ வைத்துக் கொளுத்திவிட்டனர். அங்கிருந்த இசுலாமியப் பெண்களிடம் மிகவும் அநாகரிகமாக நடந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில் பின்னர் வந்த வாகனங்கள் தங்களது பயணத்தைத் தொடர முடியாமல் திரும்பியுள்ளனர்.

தென் மாவட்டங்களில் தலித்துகளை அழிக்க வன் கொடுமை நடத்திக் கொண்டிருக்கும் தேவர் சாதிக்குத் தலைமை தாங்கும் பி.டி. அரசு, தஞ்சை மாவட்டத்துச்சாதி வெறியர் செங்குட்டுவன் வாண்டையார், மேற்கு மாவட்டத்துப் பெரும்பான்மைச் சாதியான கொங்கு வேளாளர் சங்கத் தலைவர் நாகராஜ், நாடார் பேரவை, செட்டியார், ரெட்டியார், முதலியார், நாயுடு, பிராமணர் சங்கங்களின் தலைவர்களெல் லாம் கலந்துகொண்டு, வீரமுழக்கமிட்டுத் திரும்பியுள்ளனர். அம்மாநாட்டில் சாதித் தலைவர்கள் உதிர்த்த முத்துக்கள் சொல்லுந்தரமற்றவை.

மருத்துவர் ச. இராமதாசு கடைசியாகப் பேசவந்தார்.

“நம்ம வீட்டுப் பெண் பிள்ளைகளை 14 வயது பெண் குழந் தைகளைக் காதல் நாடகமாடிக் கடத்திச் சென்று கர்ப்பமாக்கிக் கைவிட்டு விடுகிறார்கள். தருமபுரியில் நடந்தது அதுதான். தருமபுரி கலவரத்தில் ஒரு உயிருக்குச் சேதம் ஏற்பட்டதா? ஒரு பன்றிக் குட்டியைக்கூடக் கொல்லவில்லை. காதல், கலப்புத் திருமணம் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பிராம ணர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. முசுலீம்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. எங்கள் சாதிப் பெண்களிடம் அதை வைத்துக் கொள்ளக் கூடாது.

“வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட பலர் என்னிடம் புகார் கொடுக்கிறார்கள். எனவே அந்தச் சட்டத்தை நீக்க வேண்டும்” என்று ஆதிக்க சாதிவெறிக்கு ஆதரவாக முழங்கியதோடு மட்டுமல்லாமல், தலித் விரோத நஞ்சையும் கக்கினார்.

இவர்களின் ஒரே நோக்கம் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும். பின் தலித்துகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே.

சாதியாக இணைந்து நாம் சாதித்தது என்ன? அரை வயிற்றுக் கஞ்சிக்கு வழியில்லாத ஏழை தலித்தை எதிரியாகக் கொள்ளலாமா? அவன் கடன் வாங்கிக் கட்டிய குடிசைகளைக் கொளுத்துவதற்குக் கும்பல் சேரலாமா?

நூறு அடிப் பள்ளத்திலிருக்கும் நீங்கள், ஆயிரம் அடிப் பள்ளத்திலிருக்கும் அவர்களை அழிக்க நினைக்கலாமா? மூவாயிரம் ஆண்டுகளாகக் கல்வி, உடமை மறுக்கப்பட்டவன் இப்போதுதான் கல்லூரிக்குப் போகிறான்; கல் வீடு கட்டு கிறான். பொறுத்துக்கொள்ள முடியவில்லையா உங்களுக்கு?

சிந்தித்துப் பாருங்கள்! ஒரு பாட்டாளியான நான் இன் னொரு பாட்டாளியாகிய உன்னிடம் கேட்கிறேன். ஒரு கை இன்னொரு கையை வெட்டலாமா? ஒரு கால் இன்னொரு காலை உதைக்கலாமா? ஒரு பாட்டாளி இன்னொரு பாட்டாளியை அழிக்க நினைக்கலாமா?

உங்களுக்கும் தலித்துகளுக்கும் எப்போதும் இரண்டு எதிரிகள் உண்டு. யார் அவர்கள்? பார்ப்பனியமும், முத லாளித்துவமும். அதை வெல்ல... எப்போதும் மூன்று தத்து வங்கள் வேண்டும். அதுதான் பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம். நாம் ஒருவருக்கொருவர் எதிரி அல்ல, என் தோழரே! நாம் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். நாம் பிரிந்திருக்கக் கூடாது.

வாருங்கள் ஒன்றிணைவோம்!

நமது எதிரியை நோக்கிப் படையெடுப்போம்!!

Pin It