சீன நாட்டில் நடைபெற்ற பொதுவுடைமைக் கட்சியின் 18வது மாநாடு, ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரசு அமர்வு, இரண்டாவது முறையாக அமெரிக்காவில் ஒபாமா குடியரசுத் தலைவராகப் பொறுப் பேற்றது ஆகியவை இன்றைய முதன்மையான அரசியல் நிகழ்வுகளாக ஊடகங்களில் தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றன. சீன நாட்டின் மக்கள் தொகை 130 கோடியைத் தாண்டிவிட்டது. இந்தியா 121 கோடியை எட்டியுள்ளது. அமெரிக்காவின் மக்கள் தொகை 31 கோடியைத் தொட்டுள்ளது. உலக அளவில் அமெரிக் கப் பொருளாதாரம் மிகப் பெரிய பொருளாதாரமாகக் கருதப்படுகிறது. மக்கள் தொகை அதிகம் என்றாலும், சீனா கடந்த பத்தாண்டுகளாக எட்டு விழுக்காட்டிற்கு மேல் ஆண்டு வளர்ச்சியைப் பெற்று, ஜப்பான் நாட்டைப் புறந்தள்ளி இரண்டாவது பெரிய பொருளா தாரமாக வளர்ந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் சீனா, அமெரிக்காவை விஞ்சி உலக அளவில் பொருளாதாரத்தில் முதலிடம் பெறும் என்று பல வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சனநாயக நாடுகள் என்று அமெரிக்காவும் இந்தியாவும் தங்களைப் பறைசாற்றிக் கொண்டாலும், வெவ்வேறு அரசியல் முறைகளைப் பின்பற்றினாலும் கூட்டாட்சி நாடுகள் (Federal Countries) என்றே வகைப்படுத்தப் படுகின்றன. அமெரிக்காவில் சனநாயக முறை அரசமைப்புச் சட்டத்தின் வழியாக ஒழுங்கமைக்கப் படுகிறது. இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்தின் வழி ஆட்சி நடைபெறுவதாகக் குறிப்பிட்டாலும், கட்சி அமைப்புகள் மன்னராட்சி முறையைவிட மோசமான, மக்களாட்சி நெறிகளுக்குப் புறம்பான முறையில் சில குடும்பங்களில் அல்லது சில தனிநபர்களின் கைகளில் சிக்கி நாடு சீரழிந்து வருகிறது. இந்தச் சனநாயக விரோத நோய் எல்லா மாநிலங்களிலும் தொற்று நோயைப் போலப் பரவி வருகிறது.

அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற ஜார்ஜ் வாஷிங்டன் வாழ்நாள் முடியும் வரை ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்ற வாய்ப்புகள் பெற்றிருந்தும், மக்கள் அவரைப் பெருமளவில் நேசித்து விரும்பியும், இருமுறைக்கு மேல் தான் குடியரசுத் தலைவராகத் தொடர்வது சரியல்ல என்று கூறித் தார்மீக நெறி அடிப்படையில் விலகிக் கொண் டார். பதவியில் தொடர அரசமைப்புச் சட்டம் இடம் கொடுத்தாலும், அவர் மனசாட்சி இடம் கொடுக்க வில்லை. அமெரிக்கச் சனநாயக வரலாற்றில் 1933 லிருந்து 1945 வரை நான்கு முறை குடியரசுத் தலைவராக இருந்த பெருமை பிராங்க்ளின் ரூஸ்வெல் டையே சாரும். 1931இல் அமெரிக்கா பொருளாதாரச் சரிவில் சிக்கித்தவித்த போது இவரது தலைமையை தான் மக்கள் விரும்பினார்கள். இவர் காலத்தில் தான் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரைச் சந்தித்து வெற்றியும் பெற்றது. நான்கு முறை குடியரசுத் தலை வராக இருந்ததை மக்கள் விரும்பினாலும், அரசியல் அறிஞர்கள் இதுபோன்று அமெரிக்கச் சனநாயகத்தில் மீண்டும் நடைபெறக் கூடாது என்ற கருத்தைத் தெரிவித்தனர். திறமைமிக்க எந்தத் தலைவரும் நாட்டைவிட உயர்ந்தவர்கள் அல்லர் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

1787க்குப் பிறகு 1947 வரையிலும் குடியரசுத் தலைவர் பதவியை வகிப்பதற்குக் காலவரையறை என்பது இல்லை. 1947ஆம் ஆண்டுதான் அரசமைப்புச் சட்டத்தின் 22ஆம் திருத்தத்தின் வழியாக எவரும் இருமுறைக்கு மேல் குடியரசுத் தலைவர் உட்பட முக்கியப் பதவிகளில் தொடர முடியாது என்ற காலவ ரையறை சட்டத்தின் வழியாகக் கட்டாயமாக்கப்பட்டது. முதல் குடியரசுத் தலைவர் வாஷிங்டன் போற்றிய மக்களாட்சி நெறி, அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றது. அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டத்தை மக்கள் பிரதிநிதி அவை, செனட் ஆகிய அவைகளின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஒப்புத லோடும், 52 மாநிலங்களில் 5இல் 4 பங்கு மாநிலங்கள் ஒப்புதல் அளித்தால்தான் அரசமைப்புச் சட்டத்திருத் தத்தை மேற்கொள்ள முடியும். மக்களாட்சி முறையில், கூட்டாட்சி நெறிமுறைகளை அமெரிக்கா பின்பற்றி வருவதற்கு இது ஒரு அடையாளம்.

குறிப்பாக, 1962இல் நிறவெறியைத் தேர்தல் முறையில் இருந்து அகற்றும் அரசமைப்புச் சட்டத்தின் 24ஆம் திருத்தத்தை அமெரிக்கா நிறைவேற்றியது. சம உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் தலை மையில் கறுப்பு இன மக்களின் சம உரிமைக்கான போராட்டம் வெடித்தது. தேர்தல் காலத்தில் கறுப்பின மக்கள் தேர்தல் வரி (Poll Tax) கட்ட வேண்டும் என்ற ஒரு நடைமுறையை அமெரிக்கா பின்பற்றியது. இந்த வரி சமத்துவத்திற்கும், சனநாயகத்திற்கும் சாவு மணி அடிப்பதாக மக்கள் பொங்கியெழுந்தனர். மக்கள் பிரதிநிதி அவையாலும், செனட்டாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் 38 மாநிலங்கள்தான் முதன்முதலாக இச்சட்டத்திருத் தத்திற்கு ஒப்புதல் அளித்தன. பின்பு வெர்ஜினியா, வடக்கு கரோலினா, அலபாமா போன்ற மாநிலங்கள் பல ஆண்டுகள் கழித்தே ஒப்புதல் அளித்தன. இன்றும்கூட நிறவெறியை மனதில் கொண்ட மக்கள் வாழும் அமெரிக்காவின் கடைகோடி 6 தென் மாநிலங்கள் இந்தச் சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. எனினும் 1964ஆம் ஆண்டிலிருந்து வாக்களிப்பதில் அனைவரும் சமம் என்ற கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அரசமைப்புச் சட்டத்தில் சனநாயக, கூட்டாட்சி நெறிகள் கடைபிடிக்கப்பட்டாலும் முதலாளித் துவத்தின் பிடியில் குறிப்பாகச் சில முதலாளிகளின் ஏகபோகத்தில் அமெரிக்கா சிக்கியிருப்பதால்தான் அமெரிக்கச் சனநாயகத்திற்கே பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்று முதலாளித்துவ முறையை ஆதரிக்கும் நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஷ்டிக்லிசு போன்றோர் கவலை தெரிவித்து வருகின்றனர். ஒபாமா இரண்டாவது முறையாகக் குடியரசுத் தலை வராகப் பொறுப்பேற்றாலும், சில அமெரிக்க முதலாளி களின் பிடியில் ஒபாமா நிர்வாகம் சிக்கியுள்ளது. மேலும், அமெரிக்காவின் நிர்வாக இயந்திரத்தில் இடம்பெற்றுள்ள ஏகாதிபத்தியச் சக்திகள்தான் அவரை ஆட்டிப் படைக்கின்றன. குறிப்பாக, தற்போதுள்ள பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சக் ஹெஜல் (Mr. Chuck Hagel), குடியரசுக் கட்சியைச் சார்ந்த செனட் உறுப்பினர். இவர் இராணுவத் தள வாடங்கள் விற்பனையாளர்களின் பிடியில் இருப்பவர் என்றும், ஈராக் போரை ஆதரித்தவர் என்றும் இசு ரேலுக்கு முழு அளவிற்கு ஆதரவு அளிப்பவர் என்றும்; மற்றொரு செனட் உறுப்பினரான ஜான் கெரி, ஈராக் போரை விரும்பியவர் என்றும், சிஐஏ உளவு அமைப்பின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஜான் பிரின்னன் மனித உரிமைகளை மீறியவர், கௌதமலாவில் நடந்த சித்ரவதைகளைக் கண்டும் காணாமல் இருந்தவர் என்றும் குற்றச்சாட்டுகள் அடுக்கப்படுகின்றன. எனவே கறுப்பர் இனம் என்ற ஒரு தனி அடையாளத்தைக் காட்டி இந்தப் பெரும் தவறுகளை மூடி மறைக்க முடியாது. சுயநலச் சக்திகளின் பிடியில் சிக்கியிருப்பதில் ஜார்ஜ் புஷ்ஷிற்கு இணையானவர் ஒபாமா என்று இந்தர்ஜித் பார்மர் (Inderjit Parmar) என்ற ஆய்வாளர் இந்து நாளிதழில் (21.1.2013) ஒரு கட்டுரையைத் தீட்டியுள்ளார்.

உலகமயமாதல் கொள்கைக்குப் பிறகு ஆயுதம், போதைப்பொருள் வியாபாரிகளும், சமூக விரோதி களும் அஞ்சத்தக்க வகையில் வளர்ந்து வருகின்றனர் என்பதை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித மேம் பாட்டு அறிக்கை (Human Development Report-1999,UNDP) சுட்டிக்காட்டுகிறது. இதன் காரணமாகச் சிலர், பல கோடி மக்களின் மீது மேலாதிக்கம் செலுத்தும் நிலை அமெரிக்காவில் வளர்ந்து வருகிறது. இதை அமெரிக்கச் சனநாயகம் எப்படி ஏற்றுக்கொள்கிறது என்று பலர் வினா எழுப்புகின்றனர். 

இந்தியாவில் அரசமைப்புச் சட்டம், குறிப்பாக, இந்திரா காந்தி பிரதமராக இருந்த நேரத்தில் அடிப்படை உரிமை உட்பட அனைத்து உரிமைகளும் முடக்கப் பட்டு, மிசா என்கிற சட்டத்தின் வழியாக அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, சிறைக் கொடுமை களுக்கு உள்ளாயினர். சனநாயகம் முடக்கப்பட்டது என்பது நமக்கு வரலாறு சுட்டும் உண்மைகளாகும். மேலும், இந்தியத் துணைக்கண்டத்தில் சீனா, அமெரிக்கா போன்று அரசியல், சமூக அமைப்பு முறை இல்லை என்பது வெள்ளிடை மலை. பல்வேறு இனங்கள், மொழிகள், பண்பாடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ள இந்தத் துணைக்கண்டத்தில் ஒரு கட்சி ஆட்சியோ, ஒரு குடும்ப ஆட்சியோ சனநாயகத்தின் ஆணிவேரை வெட்டி வீழ்த்தி வருகிறது என்பதற்குக் காங்கிரசு கட்சியே சிறந்த அடையாளமாகும். அமெரிக்க நாட்டில் கட்சிகள், சட்டவிதிகளுக்கு உட்பட்டுத்தான் செயல்படுகின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பு நடைபெறும் உட்கட்சி வேட்பாளர் தேர்வு முறை ((Primary Election) கூட அரசமைப்புச் சட்ட விதிகளின்படியே நடைபெறுகிறது. ஒரு குடும்பத்தின் ஏகபோகம் என்பதற்கு எள்ளளவும் வழியில்லை.

சீன நாட்டில் பொதுவுடைமைக் கட்சி ஒன்றுதான் ஆட்சியியலில் தொடர முடியும் என்ற நிலையிருப் பினும், கட்சியமைப்பில் சனநாயக முறை பின்பற்றப் படுகிறது. 1922இல் 195 உறுப்பினர்களே பொதுவுடை மைக் கட்சியில் இருந்தனர். பல்வேறு கடும் அடக்கு முறைகளைச் சந்தித்த காலக்கட்டத்தில்கூட, பொதுவு டைமைக் கட்சி மெல்ல, மெல்ல வளர்ந்து 2010இன் புள்ளிவிவரப்படி 8 கோடி உறுப்பினர்களைக் கொண் டுள்ளது. சீனப் பொதுவுடைமைக் கட்சியின் தேர்தல் முறை ஊர்ப்புறங்களில் இருந்துதான் தொடங்குகிறது. பொதுவுடைமைக் கட்சியில் பல ஆண்டுகள் சிறப்பான மக்கள் தொண்டைச் செய்தவர்கள்தான் மாவட்ட, மாநில, நாட்டளவில் உயர் பதவிகளை அடைய முடியும் என்கிற கடுமையான கட்டுப்பாடு இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது.

குறிப்பாக, கடந்த 20 ஆண்டுகளாகச் சீனப் பொதுவுடைமைக் கட்சியில் உயர் பட்டப் படிப்பை முடித்தவர்களும், தொழில்நுட்பப் பட்டங்களைப் பெற்ற வர்களும்தான் கட்சியின் பல பொறுப்புகளில் தொடர முடிகிறது. தற்போது நடைபெற்ற 18ஆம் பொதுவுடை மைக் கட்சியின் மாநாட்டில் சீ சின்பிங் ((Xi Jingping) கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளார். 59 வயது நிரம்பிய சீசின்பிங், சமூகவியல் துறையில் பட்டப்படிப்பையும், சட்டத் துறையில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றவர். 25 வயதில் ஹான்சி மாநிலத்தின் ஒரு ஊர்ப்புறத்தில் இளைஞர் அணி செயலாளராகத் தனது அரசியல் பணியைத் தொடங்கினார். கடந்த 34 ஆண்டுகளாக 20க்கு மேற்பட்ட பொறுப்புகளைப் படிப்படியாக உழைப்பால், தகுதியால் பெற்று நேர்மையாகப் பணியாற்றி, இந்த உயர் பதவிக்கு வந்துள்ளார். இதேபோன்றுதான் கட்சியின் மத்தியக் குழுவில் இடம்பெற்றுள்ள 18 தலைவர்களும் தொழில்நுட்பப் பட்டங்களையும் சமூக வியல் பட்டங்களையும் பெற்று 25 ஆண்டுகளாகத் தூய்மையான கட்சிப் பணிகளை நிறைவேற்றியுள்ள னர். கட்சியின் தலைமை அலுவலகத்தில் மேலாண் மைப் பணியை மேற்கொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவரும் 25 ஆண்டுகளுக்கு மேல் கட்சிப் பணியாற்றி உயர்ந்து வந்துள்ளனர். இவர்கள்தான் தேசிய மக்கள் காங்கிரசு நிர்வாகத்திலும் இடம்பெறுவர்.

தேசிய மக்கள் காங்கிரசுதான் உலகிலேயே பெரிய நாடாளுமன்றம் என்று கூறப்படுகிறது. இந்த நாடாளுமன்றத்தில் பல சிறு கட்சிகள், சிறுபான்மை இனத்தவர் இடம் பெற்றிருந்தாலும், பொதுவுடைமைக் கட்சிதான் செல் வாக்குப் பெற்று, பொருளாதாரம், சமூகம், அரசியல், வெளிநாட்டுக் கொள்கை போன்ற அனைத்துத் தளங்களிலும் நிர்வாகத்தை மேற்கொண்டு வருகிறது. கல்வி, உழைப்பு, நேர்மை, அர்ப்பணிப்பு ஆகியன சீனப் பொதுவுடைமைக் கட்சியினால் தகுதிகளாகப் போற்றப்படுகின்றன. இந்தத் தகுதிகளைப் பெறாத வர்கள் யாரும் மாவட்ட அளவில்கூட பதவியைப் பெற முடியாது. கட்சியினுடைய முதல் நெறியே கட்டுப் பாடாகும். ஊழல் செய்யாது நேர்மையாகப் பணிபுரிவது தான் கட்டுப்பாட்டின் முதல் கூறு என்று பொதுவு டைமைக் கட்சி அறிவித்திருக்கின்றது. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பத்தாண்டுகளுக்கு மேல் பதவியில் இருக்க முடியாது. இன்னும் சில மாதங் களில் நடைபெற இருக்கின்ற தேசிய மக்கள் காங்கி ரசுக் கூட்டத்தில் பென்ஜின் பவோவிற்கு பதிலாக சீசின்பிங் பிரதமராகப் பதவியேற்பார்.

மேலும், அண்மைக்காலங்களில் முதலாளித்துவப் போக்கு சீனப் பொருளாதாரத்தில் நுழைந்ததால் ஊழலும், கட்சி அமைப்பில் தென்படத் தொடங்கியது. கட்சியின் உயர்பதவியில் இருந்த சிலர் மீது தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஆயுள் தண்டனை உட்பட பல ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டு வருகின்றது. எனவேதான் ஒரு கட்சி ஆட்சி என்றாலும் சீனாவின் பொருளாதார வளர்ச் சியில் மக்கள் பங்கு பெறுகின்றனர். உலகில் பொரு ளாதார வளர்ச்சியில் முதல் நாடாக எட்டிப் பிடிப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன.

தனியார் முதலீடுகள், அந்நிய முதலீடுகள் சீனப் பொருளாதாரத்தில் பெருகி வந்தாலும் 70 விழுக்காட்டிற்கு மேல் பொதுத் துறை நிறுவனங் களே பங்களிப்பைச் செய்து வருகின்றன. அண்மையில் வந்த புள்ளிவிவரங்களின்படி 20 ஆயிரம் சீனப் பெரும் கோடீசுவரர்கள் 75 இலட்சங் கோடி ரூபாயைச் சீனாவில் முதலீடு செய்துள்ளனர். இருப்பினும், சீனாவின் வர்த்தக, வரிச் சட்டங்களை உரிய முறையில் கடைபிடிக் காவிட்டால் இவர்கள் வெளியேற்றப்படுவார்கள். எனவேதான் சீனப் பொதுவுடைமைக் கட்சியில் தற்போது பல கருத்துகள் விவாதிக்கப்படு கின்றன. கட்சி உறுப்பினர்களில் பலர் தீவிர இடதுசாரிச் சிந்தனை உடையவர்களாகவும் உள் ளனர். நகர்ப்புற, ஊர்ப்புற ஏற்றத்தாழ்வினைக் குறைக்க வேண்டும் என்றும், சமத்துவக் கொள் கைகளைத் தீவிரமாகக் கடைபிடிக்க வேண்டும் என்றும் அண்மையில் நடைபெற்ற சீனப் பொது வுடைமைக் கட்சி மாநாட்டில் முதன்மைத் தீர் மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

எந்த நாட்டிலும் உட்கட்சிச் சனநாயகம் இல் லாமல், கட்சிகள் உண்மையான சனநாயக அமைப் பாகச் செயல்பட முடியாது. இந்தியாவைப் பொறுத்த வரை எந்தக் கட்சியும் உட்கட்சிச் சனநாயகத்தைச் சட்டவிதிகளின்படியோ, தார்மீக நெறிகளின் படியோ நடைமுறைப்படுத்துவதில்லை. நடுவண் அரசில் இடம்பெற்றுள்ள காங்கிரசு தொடர்ந்து மன் னராட்சியை விட மோசமான ஒரு குடும்ப ஆட்சி முறையை, மக்களாட்சி முறைக்கு எதிராக நிறை வேற்றி வருகிறது. காங்கிரசுக் கட்சி கடைப்பிடித்த வாரிசு அரசியல்தான் மற்ற கட்சிகளால் கடைபிடிக்கப் படுவதற்கு ஊக்க மருந்தாக அமைந்துள்ளது. இதன் எதிரொலியாகத்தான் மோதிலால் நேருவின் எள்ளுப் பேரன், நேருவின் கொள்ளுப்பேரன், இந்திரா காந்தி யின் பேரன், இராஜிவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி திடீரென்று கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப் படுகிறார். உத்திரப்பிரதேசம், பீகார், மத்தியபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களுக்கெல்லாம் சென்று சாலையோரங்களில் நின்று ராகுல் தேர்தல் களத்தில் ஈடுபட்டபின்பு கட்சிக்குத் தொடர் தோல்விகளையே கொடையாக அளித்து வருகிறார். இதுதான் ராகுல் பெற்ற தகுதியாகும்.

சீனா சனநாயக நாடே அல்ல என்று குற்றம் சுமத்து கிற வேளையில் அங்கு, பொதுவுடைமைக் கட்சியில் கடைபிடிக்கப்படுகிற சனநாயக நெறிகளில் சிலவற்றைக் கூட, சனநாயக நாடு என்று நாள்தோறும் விளம்பரம் செய்துகொள்கிற இந்தியாவில் பின்பற்றப்படுவதில்லை.

20ஆம் நூற்றாண்டின் ஈடுஇணையற்ற புரட்சி யாளர் மாசேதுங்கின் வாரிசுகள் யாரும் இன் றளவும் கட்சியின் எந்தப் பொறுப்பிலும் இல்லை. மாவோவிற்குப் பின்பு வந்த பொதுவுடைமைக் கட்சித் தலைவர் டெங்கின் உறவினர்கள் யாரும் கட்சியிலோ, ஆட்சியிலோ இடம்பெறவே இல்லை.

கடந்த 66 ஆண்டுகளாக இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டு அர்ப்பணிப்பையும், பெரும் தியாகத் தையும் செய்த மகாத்மா காந்தியின் குடும்பத்தினரோ, நேதாஜியின் குடும்பத்தினரோ, மாநிலங்களில் வாழ்ந்த மற்ற பல தலைவர்களில் குடும்பத்தினரோ, கட்சியின் உயர் பதவிகளிலோ, ஆட்சி அதிகாரங்களிலோ முன்னுரிமை பெறவில்லை. முன்னுரிமை பெறாமல் பார்த்துக் கொள்வதில் இந்திரா தொடங்கி சோனியா வரை கண்ணும் கருத்துமாக இருந்து வந்துள்ளனர். இன்றோ காங்கிரசின் புதிய இளவரசர், “தில்லியில் அதிகாரக் குவிப்பு உள்ளது. இந்தியாவை வழிநடத்த 50 தலைவர்கள் தேவை, மாநிலங்களில் உள்ள திறமைசாலித் தலைவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்” என்று காலங்கடந்து, பல்லாயிரங்கோடி ஊழல்களை எல்லாம் மறைத்துவிட்டு, கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்வது போல் வெற்று முழக்கத்தை எழுப்பியுள்ளார். இதுதான் சனநாயகமா?

Pin It