விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் சிங்கவரம் என்ற சிற்றூரைச் சேர்ந்த ஆதிமூல கவுண்டர் சந்திரா இணையருக்கு 1917ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தவர் குலசேகரன். எளிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவரின் தந்தையார் குலசேகரன் ஆறுமாதக் குழந்தையாக இருக்கும்போதே காலமாகிவிட்டார். அந்நாளில் இவரது தாயாரே வருந்தி முயன்று இவரை எட்டாம் வகுப்புவரை படிக்க வைத்தார். 1935 வாக்கில் இதுவே பெரிய படிப்பு. இருப்பினும் இவர் மேலும் முயன்று 1937-39ல் விழுப்புரத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்தார்.

இவரது பிறந்த ஊரான சிங்கவரத்திலேயே ஆசிரியர் பணி தொடங்கியுள்ளார். ஓராண்டுப் பணிக்குப் பின் மாவட்டக் கழகப் பள்ளியில் நான்கு ஆண்டுகள் பணி யாற்றியுள்ளார். இடைக்காலத்தில் இவர் இந்தியும் போதுமான அளவு படித்து வைத்திருந்ததனால் செஞ்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்தி ஆசிரியராகப் பணிவாய்ப்பு கிடைக்கவே அதையே செய்து வந்தார்.

1943ஆம் ஆண்டு பவுனம்மாள் என்பாரைத் தன் வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொண்டார். இவருக்கு மணி, பாண்டியன், ராஜசேகரன், ரவிசங்கர் என்கிற நான்கு ஆண் மக்களும் மைதிலி, உதயகுமாரி, அனுசூயா, மீரா, லலிதாம்பிகை, சாந்தி என்கிற ஆறு பெண் மக்களும் பிறந்துள்ளனர். பத்து பிள்ளை களையும் நன்கு படிக்கவைத்து கட்டிக் கொடுத்த ஒருநிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். வேளாண் உதவி இயக்குனர், கல்லூரிப் பேராசிரியர் எனப் பிள்ளைகள் அனைவருமே நல்ல நிலையில் உள்ளனர். தன் மக்களைப் போலவே தன் மாணவர் களின் வளர்ச்சிக்கும் மிகவும் உறுதுணையாக இருந் துள்ளார். தற்போது இவருக்குப் பெயரப் பிள்ளைகள் 42 பேர் உள்ளனர்.

செஞ்சி பகுதியைச் சேர்ந்த ஆர்.வரதராஜன் என்னும் ஆசிரியர் மூலமாக திராவிடநாடு ஏட்டைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வரதராஜன், சீனுவாசன் என்பவர்கள்தான் நான் முன்னேறக் காரணமானவர் கள் என்று நன்றியோடு தெரிவித்தார். தொடர்ந்து திராவிடநாடு படிக்கவே பெரியார் மீதும் அவர் கொள்கைகள் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக மாறிவிட்டார். நேரடியாகத் திராவிடர் கழகத்தில் சேர்ந்து பணியாற்றவில்லை என்றாலும் பெரியாரின் பேச்சையும் எழுத்தையும் இவர் பின் தொடர்ந்தே வந்துள்ளார். பலமுறை பெரியாரின் கூட்டங்களுக்குச் சென்று வந்து தன்னை உரமாக்கிக் கொண்டுள்ளார். அரசியலில் ராமசாமி படையாட்சியுடன் மிக நெருக்க மான தொடர்பு இருந்ததால் அவரது ‘உழவர் உழைப் பாளி கட்சி”யின் சார்பாக மூன்றுமுறை நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றுள்ளார். இந்த காரணத்தோடல்லாமல் பெரியாரின் இந்தி எதிர்ப்புக் கொள்கையில் இவருக்கும் மிகுந்த ஈடுபாடு உண்டு என்பதாலும் தான் செய்துவந்த இந்தி ஆசிரியர் பணியையே 1962ல் துறந்துவிட்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது செஞ்சி வட்டம் மேலச்சேரியைச் சேர்ந்த இராஜேந்திரன் என்ற மாண வரின் இறப்பை உணர்ச்சியோடு நினைவு கூர்கிறார்.

இந்தி ஆசிரியர் பணியைத் துறந்தபின் வரு மானத்திற்குச் செஞ்சியில் ராஜா அச்சகம் என்ற பெயரில் தொழில் தொடங்கி நடத்தி வந்தார். இப் போதும் அவரது மூத்தமகன் ஆ.கு.மணி அச்சகத் தொழிலைத்தான் நடத்தி வருகிறார். தந்தையின் வழியில் அவரும் பெரியார் பற்றாளராகவும், சிந்தனை யாளன் வாசகராகவும், தொடர்ந்து பொங்கல் மலருக்கு விளம்பரம் தந்து நல்ல ஆதரவாளராகவும் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. குலசேகரனாரின் மனைவி பவுனம்மாள் பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தன் கணவருக்குத் தடையில்லாத மனைவி யாக இருந்து வந்திருக்கிறார். புரிதலுக்குப் பின் இவரது குடும்பத்தில் விதவைத் திருமணம்.

கலப்புத் திருமணம், புரோகித மறுப்புத் திருமணம், பெயர்த்திக்கு மார்கழியில் திருமணம் எனத் தன் குடும்பத்தைப் பகுத் தறிவுப் பாதையில் நடத்திய வெற்றிக்களிப்பு இவரது புன்னகையில் தெரிகிறது. ‘சாவுக்குச் சிலநாள் கழித்து நடக்கும் குளத்தங்கரைக் காரியத்திற்குக் கூட மரி யாதை நிமித்தமாகச் செல்வேனே தவிர துணி கொடுப்பதோ வாங்குவதோ கிடையாது. பார்ப்பனர் களில் சிலர் எனக்கு உயிர் நண்பர்களாக இருக்கிறார் கள். அது வேறு, ஆனால் நமது வீட்டு நிகழ்வுகளில் வடமொழி, புரோகிதம், சனாதனம் போன்றவை இருக்கக்கூடாது. இதுவரை பெரியார் தொண்டனாக இருந்ததற்கும் இனி இருக்கப் போவதற்கும் பெருமைப் பட்டுக் கொள்கிறேன் என்று கூறும் இவர் உடல்தானம் செய்யவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

செஞ்சியில் மா.பொ.பெ.க.வுக்கும் சிந்தனையாளன் ஏட்டுக்கும் பேராதரவாளராக விளங்குபவர் தோழர் துரை. திருநாவுக்கரசு. இவர் சுமார் பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் குலசேகரன் அய்யாவிடம் (திரு நாவுக்கரசு குலசேகர அய்யாவின் பள்ளி மாணவர்) சிந்தனையாளன் இதழைப் படிக்கத் தந்துள்ளார். அதன்பிறகுதான் இவருக்கு ஆனைமுத்து அய்யாவின் பால் ஈடுபாடு வந்தது. தொடர்ந்து சிந்தனையாளளின் வாழ்நாள் உறுப்பினரானார்.

ஆனைமுத்து அய்யாவைப் போல் எவராலும் உழைக்கவோ சிந்திக்கவோ முடியாது. உண்மையில் அவர் பேரறிஞர். ஒவ்வொரு மாத இதழைப் படிக்கும் போதும் நான் மலைத்துப் போகிறேன் என்று வியக்கும் குலசேகரன் அய்யா இந்த தொண்ணூற்றாவது வயதிலும் படிக்கிறார். அஞ்லட்டை எழுதுகிறார். ஊன்றுகோலின் றித் தானே இயங்குகிறார்.

ஆனைமுத்துவின் அழைப்பின்பேரில் ராம் அவதேஷ் சிங் ஒருமுறை சென்னை வந்திருந்தபோது அவருக்கு மாமல்லபுரம் போன்ற பகுதிகளைச் சுற்றிக் காட்டச் சொல்லியும் அவர் திரும்பிப்போகும் வரை உடனிருக்க வேண்டுமென்றும் ஆனைமுத்து இவரைக் கேட்டுக் கொண்டார். இவர் இந்தி நன்கு தெரிந்தவர் என்பதனால் அப்பணியைச் செவ்வனே செய்து முடித்துள்ளார். ஆனைமுத்து அவர்களின் வடநாட்டுப் பயணங்களோடு தன்னை இணைத்துக் கொள்ள விரும்பியிருக்கிறார். அதுதான் எனக்கு வாய்க்காமல் போனதென ஆதங்கம் தெரிவிக்கிறார். இப்போதுள்ள வாக்கு வங்கித் தலைவர்களுள் வைகோதான் இவருக்கு மிகவும் பிடித்தவராம்.

“ஓமந்தூரார் இன்னும் கொஞ்சகாலம் முதல்வராக இருந்திருக்கவேண்டும். அவர் காமராசருக்கு நிகரா னவர். பெரியாரிக்குப் பிறகு திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஆனைமுத்து ஏற்றுக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். எனக்குத் தெரிந்து இவரைவிடத் தகுதியானர் எவரும் இல்லை விலைபோகாத பெரியாரியவாதி ஆனைமுத்துதான் காவரி நீர் உரிமையில் கர்நாடகம் செய்கிற அடாவடித் தனம் அநியாயமானது. கூடங்குளத்தில் கட்டாயம் அணுமின் உற்பத்தி தொடங்கக்கூடாது. அணுஉலை எதிர்ப்பாளர்களின் போராட்டம் உண்மையானதாகும். வரவேற்கத்தக்கதாகும். ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சே கொடூரமானவன். அன்று பாரா முகமாய் இருந்துவிட்டு இன்று இரட்டை வேடம் போடு கிறார் கருணாநிதி. இவ்விசயத்தில் மத்திய அரசின் அணுகுமுறையும் போக்கும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என்பன இவரது அரசியல் கருத்துகள்.

“கதர்தான் உடுத்துவேன். நாளேடுகளில் தினமணி தான் படிப்பேன். அதுதான் கொஞ்சம் தேவலாம். வேறு நாளேடுகளைப் படிப்பதில்லை. மாத இதழ்களில் சிந்தனையாளன் மிக அருமை. ஆனைமுத்து கட்டுரை, தமிழேந்தி, வையவன் கவிதைகளை விரும்பிப் படிப்பேன். இதுதவிர வள்ளலார் புத்தகங்களை ஈடு பாட்டோடு படிக்கிறேன். அண்மைக் காலமாக மாதந் தோறும் பூசத்திற்குப் பேருந்தில் வடலூருக்குச் சென்று வருகிறேன். என் பராமரிப்புச் செலவிற்காக என் மகன் எனக்குத் கொடுத்த ரூபாய் இருபதாயிரத்தை வடலூரில் உள்ள முதியோர் இல்லத்திற்கு முழுவதுமாகக் கொடுத்து விட்டேன். பசித்தோர்க்கு உணவளிக்க வேண்டுமென்ற கருத்தை வேறெந்த கொள்கைவாதிகளும் ஒரு முழக்க மாக வைத்ததில்லை. இந்த ஒன்றுதான் என்னை வள்ளலாரின்பால் ஈர்த்தது. நான் சிறு வயதினனாக இருக்கும்போதே என்னைவிட வறுமையில் இருந்த ஒருவனுக்கு நான்கு ஆண்டுகள் இலவசமாக உண வளித்துப் படிக்க வைத்தேன் என்று கூறும் இவரது கொள்கைப் பற்றும் அருட்சிந்தனையும் நம்மை மலைக்க வைக்கின்றன.

இருபத்தியிரண்டு ஆண்டுகள் அரசுப் பணியில் இருந்தும் ஓய்வூதியம் பெறும் வாய்ப்பு இவருக்கு இல்லை. இப்போது அரசு வழங்கிவரும் முதியோர் ஓய்வூதியத்தையும் பெற மறுத்துவிட்டார். “எனக்கு என் பிள்ளைகள் இருக்கும்போது நான் ஏன் அரசிடம் கையேந்த வேண்டும்? என்பது இவரது தன்மானக் கேள்வி.

காலையில் சாப்பிடுவதில்லை. ஒரு குவளை ஆர்லிக்ஸ், ஒன்றிரண்டு பேரீச்சம் பழம், பகலுக்கு வழக்க மான உணவு, இரவு ஒரு கேழ்வரகு அடை. குளியலுக்கு வழலை (சோப்பு) பயன்படுத்துவதில்லை. பற்பசையும் பயன்படுத்துவதில்லை. எல்லாவற்றிற்கும் மூலிகைத் தூள்கள் என்று தூள் கிளப்புகிறார்.

பலமுறை தமிழகத்தையும் இரண்டு முறை இந்தியாவையும் சுற்றியிருக்கிறார். பரந்த அனுபவம். தெளிந்த பாதை. சுயமரியாதையோடு பெரியாரின் வயதையும் தாண்டி இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் குலசேகர அய்யாவின் எளிமையும், நேர்மையும், கொள்கைப் பிடிப்பும் செஞ்சிக் கோட்டையையே விஞ்சி நிற்கிறது.

Pin It