சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு

இந்திய அரசு 1997ஆம் ஆண்டு ஒரு வணிக முத்திரை (Single-brand) கொண்ட பொருள்களின் மொத்த வணிகத்தில் (Wholesale Cash and carry trade) 100% அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தது. ஒரே நிறுவனத்தின் பொருள்களை மொத்த வணிகர்களுக்கு மட்டும் விற்கலாம்; சில்லறையில் விற்கக் கூடாது என்பது இதன் பொருளாகும். இதன்படி, செருமன் நாட்டின் பன்னாட்டு நிறுவனமான ‘மெட்ரோ’ (Metro) 2003ஆம் ஆண்டு பெங்களூரில் தனது முதலாவது மொத்த விற்பனை சிறப்பு அங்காடியைத் தொடங்கியது.

2006ஆம் ஆண்டு, ஒற்றை வணிக முத்திரை கொண்ட சில்லறை வணிகத்தில் (Single-brand Retail Trade) 51 விழுக்காடு அளவுக்கு அந்நிய மூலதனத் துக்கு அனுமதி வழங்கப்பட்டது. 2007 முதல் உலகில் சில்லறை வணிகத்தில் முதல் நிலையில் உள்ள அமெரிக்காவின் வால்மார்ட், இரண்டாம் நிலையில் உள்ள பிரான்சின் காரேபோர் செருமனியின் மெட்ரோ, இங்கிலாந்தின் டெஸ்கோ ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் மொத்த வணிகத்திலும், சில்லறை வணிகத்திலும் பேரங்காடிகளைத் தொடங்கின.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, நடுவண் அரசின் அமைச் சரவை, 24.11.2011 அன்று, அந்நிய முதலீட்டின் அளவை, ஒற்றை வணிக முத்திரை கொண்ட சில்லறை வணி கத்தில் 100 விழுக்காடாகவும், பல வகை வணிக முத்திரை கொண்ட சில்லறை வணிகத்தில் (Multi-brand Retail Trade) 51 விழுக்காடாகவும் அனுமதிப்பது என்று முடிவு செய்தது. ஒரே இடத்தில் பல நிறுவனங்கள் தயாரித்த பொருள்களை விற்கலாம் என்பதே ஆகும். ‘பலவகை வணிக முத்திரை சில்லறை வணிகம்’.

அடுத்த நாள், எதிர்க்கட்சிகள் அரசின் இம்முடிவைக் கண்டித்து நாடாளுமன்றத்தைச் செயல்படவிடாமல் முடக்கின. அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரசின் தலைவி மம்தா பானர்ஜியும் இதைக் கடுமையாக எதிர்த்தார். தி.மு.க.வும் எதிர்ப்பதாக அறிக்கைவிட்டது.

30.11.11 அன்று தில்லியில் நடந்த இளைஞர் காங்கிரசு மாநாட்டில் சோனியாகாந்தி, இராகுல்காந்தி முன்னிலையில் உரையாற்றிய மன்மோகன் சிங், “சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்று அரசு எடுத்துள்ள முடிவைத் திரும்பப் பெற முடியாது; நாடாளுமன்றத்தில் இதன் மீதான வாக் கெடுப்பையும் சந்திக்கக் காங்கிரசு அணியமாக உள்ளது” என்று முழங்கினார்.

2008ஆம் ஆண்டு அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்திற்கு, அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்துவந்த இடதுசாரிக் கட்சிகள் எதிர்த்து வாக்களிப்போம் என்று அறிவித்த நிலையிலும், ‘பணப் பெட்டி பேரங்கள்’ மூலம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றது போல், இப்போதும் நடத்திவிடலாம் என்று மன்மோகன் உடும்புப் பிடியாக இருந்தார். ஏனெனில் பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க விசுவாசத் திற்கு (அடிமைத்தளத்துக்கு) இது ஒரு அளவுகோல் அல்லவா!

தொழிலகங்களிலும், வேளாண்மையிலும் தொடரும் உற்பத்தி சரிவு, அமெரிக்க டாலருக்கு நிகரான உரு வாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிவு, 2008ஆம் ஆண்டு முதல் உயர்ந்து கொண்டே இருக் கும் பணவீக்கம் முதலான சிக்கல்கள் நீடிக்கும் நிலையில், ‘சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனு மதித்தே தீருவேன்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் அடம்பிடிப்பது ஏன்?

2009 தேர்தலில் இரண்டாவது தடவையாக மன்மோகன் சிங் பிரதமரான பின், அமெரிக்காவின் அயலுறவு அமைச்சர் ஹிலாரி கிளண்டன், 2009 செப்டம்பர் மாதம் இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரிடம், “இந்திய அரசின் தற்போதைய அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை பற்றி வணிக அமைச்சர் ஆனந்த்சர்மா என்ன கருத்தைக் கொண்டுள்ளார்? மேலும் அவர், எந்தெந்தத் துறைகளை அந்நிய நேரடி முதலீட்டுக்குத் திறந்துவிடத் திட்டமிட்டுள்ளார்? பல் வகை-வணிக முத்திரை சில்லறை வணிகத்தை அந்நிய நேரடி முதலீட்டுக்குத் திறந்துவிட சர்மா ஏன் தயங்கு கிறார்?” எனும் வினாக்களைக் கேட்டுள்ளார். வால்மார்ட் மீது மட்டும் ஹிலாரிக்கு ஏன் இந்தத் தனி அக்கறை? ஏனெனில், வால்மார்ட் மேலாண்மைக் குழுவில் ஹிலாரி கிளிண்டன் இயக்குநராக இருந்தபோது, பல இலட்சம் டாலர் வருவாயாகக் கிடைத்தது. மேலும் 2007ஆம் ஆண்டு அமெரிக்காவின் குடியரசுத் தலை வருக்கான வேட்பாளரைக் கட்சி தேர்ந்தெடுக்கும் போட்டி யில் ஒபாமாவுக்கு எதிராக நின்றபோது, வால்மார்ட் ஹிலாரிக்காகப் பெருந்தொகையைச் செலவு செய்தது. எனவே எப்பொழுதும் ஹிலாரி வால்மார்ட்டுக்கு விசு வாசமாக இருக்கிறார் (தி இந்து, 12.12.11, பி. சாய்நாத் கட்டுரை).

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, செருமனி போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளின் அரசுகளும், அந்நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களும் சேர்ந்து, இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளை - திட்டங்களை வகுக் கின்றன. இவற்றுக்குத் தொண்டூழியம் செய்வதே தன் பிறவிக்கடன் என்று மன்மோகன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால்தான், 2009ஆம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக்குழு, பல்வகை வணிக முத்தி ரை சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு உள்ள தடை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று ஒருமன தாக முடிவெடுத்ததையும் புறக்கணித்துவிட்டு, மன்மோகன் சிங் அந்நிய முதலீட்டுக்கு அகலமாகக் கதவைத் திறந்து விட்டுள்ளார்.

இந்தியாவில், புதிய பொருளாதாரக் கொள்கையின் துணைத் தளபதி - திட்டக்குழுவின் துணைத் தலைவர், மான்டேக் சிங் அலுவாலியா, “சீனா 20 ஆண்டு களுக்கு முன்பே - பன்முக வணிக முத்திரை சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்து விட்டது. ஆனால், இந்தியா இதை அனுமதிக்கத் தயங் குவது நம்முடைய திறமை மீது நமக்கு நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுவதாகாதா? எல்லாவற் றையும் நவீனப்படுத்த வேண்டியது காலத்தின் கட் டாயம். மாட்டுவண்டிக் காலத்திலிருந்து நாம் வெகு தொலைவு கடந்து வந்துவிட்டோம். குளிர்பதனக் கிடங்குகள், சிறந்த நவீன போக்குவரத்து ஏந்துகள் போன்ற கட்டமைப்புகள் இல்லாததால், வேளாண் விளைபொருள்கள் வீணாகின்றன. இதனால் உழவர் கள் பெரும் இழப்புக்கு ஆளாகின்றனர். நுகர்வோரும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் சில்லறை வணிகம் நவீனப்படுத்தப்படும்போது உள்நாட்டில் சில்லறை வணிகமும் போட்டி காரணமாக நவீனமாகும். அதனால் வால்மார்ட் போல உள்நாட்டுப் பண்டங்களின் தரமும் உயரும்” என்று அந்நிய முதலீட்டு நுழைவுக்கு ஆதர வாகக் குரல் கொடுத்துள்ளார்.

ஒருகோடிப் பேருக்கு வேலை கிடைக்கும் என்கிறார் பிரதமர். பணவீக்கம் குறையும் என்கிறார் நிதி அமைச்சர். 30% பொருள்களைச் சிறு விவசாயிகளிடமும், சிறு உற்பத்தியாளர்களிடமும் இந்தியாவிலேயே வாங்க வேண்டும் என்கிற நிபந்தனை இருப்பதால், அந்நிய நேரடி முதலீட்டின் பயன்கள் இவர்களுக்கும் கிடைக்கும் என்று தொழில் மற்றும் வணிக அமைச்சர் ஆனந்த் சர்மா கதையளக்கிறார்.

ஆயினும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத் தை முடக்கியதாலும், மம்தாவின் அதிரடி எதிர்ப்பாலும், ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தாலும் மன் மோகன் அரசு இம்முடிவிலிருந்து பின்வாங்கியது. 07.12.11 அன்று, ‘ஒத்தகருத்து ஏற்படும் வரை’, சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு குறித்து அமைச் சரவை எடுத்துள்ள முடிவைச் செயல்படுத்தாமல் நிறுத்தி வைப்பதாகப் பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.

அமெரிக்காவிலும், வளர்ச்சியடைந்த அய்ரோப்பிய நாடுகளிலும் இருக்கின்ற சமூக, கல்வி, பொருளியல், பண்பாட்டு நிலைகள் வேறு; இந்தியாவில் உள்ள நிலைகள் வேறு என்பதை மன்மோகன் சிங் கும்பல் காணமறுக்கிறது; அல்லது தெரிந்தும் மக்களை வஞ்சிக்க முயல்கிறது.

அமெரிக்காவில் வேளாண்மை என்பது முற்றிலும் முதலாளித்துவத் தொழிலாக - வணிகமாக (Agribusiness) மாறிவிட்டது. அமெரிக்காவின் மக்கள் தொகை 34 கோடி. வெறும் 10 இலட்சம் பேர் மட்டுமே வேளாண்மைச் சார்ந்திருப்பதாக அறிவித்துள்ளனர். ஆனால் 1950இல் வேளாண் மையில் 250 இலட்சம் பேர் இருந்தனர். இதேபோல் அய்ரோப்பிய நாடுகளில் 2% முதல் 5% பேர் மட்டுமே வேளாண்மையில் ஈடு பட்டுள்ளனர்.

ஒரு விவசாயி பெற்றுள்ள சராசரி நிலம் கனடா வில் 1,798 ஏக்கர், அமெரிக்காவில் 1089 ஏக்கர், ஆஸ்திரேலியாவில் 17,975 ஏக்கர், பிரான்சில் 274 ஏக்கர், பிரிட்டனில் 432 ஏக்கர் (தினமணி 26.11.11). இந்தியாவிலோ ஒரு விவசாயின் சராசரி நிலம் 3 ஏக்கருக்கும் குறைவு. ஏனெனில் இந்தியாவில் சிறு-குறு விவசாயிகள் 85% ஆக உள்ளனர்.

அமெரிக்காவில் பண்ணை நிலங்கள் விளை பொருள்களை மதிப்புக் கூட்டும் பொருள்களாக்கும் தொழிற்சாலைகளாகவும் இருக்கின்றன. எனவே பெரிய பண்ணைகளில் வால்மார் நிறுவனம் கொள்முதல் செய்வதுபோல், இந்தியாவில், மொத்த விவசாயிகளில், 85% ஆக உள்ள சிறு-குறு விவசாயிகளிடம், ஏதாவ தொரு பெயரில் இடைத்தரகர் மூலமே கொள்முதல் செய்ய முடியும். இவர்களைத் தன்னுடைய ஏஜெண்டு களாக அமர்த்தி, தன் கட்டுப்பாட்டுக்குள் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் வைத்துக் கொள்ளும். தற் போது உள்ள 2 முதல் 5 அடுக்கு வரையில் உள்ள இடைத்தரகர்கள், தம் வயிற்றுப் பிழைப்புக்காகப் பெற்று வந்த வருவாயை, பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கொள்ளை இலாபத்தில் ஈர்த்துக் கொள்ளும். இதனால் விவசாயிகளின் விளைபொருளுக்குக் கூடுதல் விலை கிடைக்கும் என்பதும் பகற்கனவே! நுகர்வோருக்குது குறைந்த விலையில் பொருள் கிடைக்கும் என்பதும் பகற்கனவே!

“விவசாயிக்குத் தரப்பட்ட பணத்தைப் போல 5 மடங்கு கூடுதலான விலையை நுகர்வோர் கொடுத்து வாங்குகிறார்” என்று வணிக அமைச்சர் ஆனந்த் சர்மா அங்கலாய்த்துக் கொள்கிறார். இந்த 5 மடங்கு தொகையைப் பன்னாட்டு முதலைகள்தான் விழுங்கு கின்றன என்பதே உண்மை. பன்னாட்டு சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ள மெக்சிகோ, நிகராகுவா, அர் ஜன்ட்டைனா, கென்யா, தாய்லாந்து, வியத்நாம், சீனா, இந்தியா போன்ற எல்லா நாடுகளிலும், சூப்பர்மார்க் கெட் விலை என்பது வெளியில் உள்ள வழக்கமான சில்லறை வணிகக் கடைகளின் விலையை விட அதிகமாக இருக்கிறது என்பதை ஆய்வுகள் தெரிவிக் கின்றன (Economic and Political Week, December, 17, 2011).

அதிக இலாபம் கிடைக்கும் இடத்தைத் தேடிச் செல் வதே மூலதனத்தின் உயிர் மூச்சாகும். எனவேதான் பன்னாட்டு சில்லறை வணிக நிறுவனங்கள் இந்தியா வில் நுழையத் துடிக்கின்றன. பன்னாட்டு சில்லறை வணிக நிறுவனங்களின் மொத்த விற்பனையில், அயல்நாடுகளின் விற்பனை முக்கியப் பங்கு வகிக் கிறது. 2007ஆம் ஆண்டின் விவரப்படி, நெதர்லாந்தின் அகோல்டு (Ahold) நிறுவனம் 74ரூ, பிரான்சின் கரே போர் நிறுவனம் 52ரூ, செருமனியின் மெட்ரோ 53% இங்கிலாந்தின் டெஸ்கோ 22% அமெரிக்காவின் வால் மார்ட் 20% அளவுக்கு அயல்நாடுகளின் விற்பனை மூலம் வருவாய் பெற்றுள்ளன. அந்த ஆண்டில் வால்மார்ட்டின் மொத்த வருவாய் 379 பில்லியன் டாலர்; கரேபோர் வருவாய் 123 பில்லியன் டாலராகும்.

நடுவண் அரசின் தொழில்கள் மற்றும் வணிகத் துறை அமைச்சரகம் நாளேடுகளில், அந்நிய நேரடி முதலீட்டை, சில்லறை வணிகத்தில் அனுமதிப்பதன் பயன்கள் பற்றி ஒரு பக்கம் விளம்பரம் கொடுத்தது. அந்த விளம்பரத்தில்,”வேளாண்மைத் துறையில் ஒரு கோடிப்பேருக்கு வேலை கிடைக்கும். இராசிவ்காந்தி ஆட்சியிலும், மன்மோகன்சிங் ஆட்சியிலும் நடை முறைப்படுத்தப்பட்டுவரும் தாராளமயம், தனியார் மயம், உலகமயம் கொள்கைகளால், தகவல் தொழில் நுட்பத் துறையிலும், கணினித் துறையிலும் எவ்வாறு மாபெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டனவோ, அதைப் போல அந்நிய நேரடி முதலீட்டைச் சில்லறை வணிகத் தில் அனுமதிப்பதால் மற்றொரு மாபெரும் புரட்சி ஏற்படும்” என்று கூறப்பட்டிருந்தது. இது, மக்களை ஏமாற்ற முயலும் மாபெரும் மோசடி விளம்பரமாகும்.

இராசிவ் காந்தி காலம்முதல் இன்றுவரை நடை முறைப்படுத்தப்பட்டுவரும் புதிய பொருளாதாரக் கொள் கையால் முதலில் பெருமளவில் கடுமையான இன்னல் களுக்குள்ளாகி இருப்பவர்கள் விவசாயிகளும், நிலமற்ற வேளாண் கூலித் தொழிலாளர்களுமே ஆவர். 1987இல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் வேளாண்மையின் பங்கு 35% ஆக இருந்தது. 2010 இல் இது 15% ஆகக் குறைந்துவிட்டது. இந்திய அளவில் 60% மக்கள் வேளாண்மையை நம்பி வாழ்கின்றனர். தமிழ்நாட்டிலோ இதைவிட அவலமான நிலை! தமிழ் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 8% மட்டுமே வேளாண் மை மூலம் கிடைக்கிறது. 10 ஆண்டுகளுக்குமுன் தமிழ்நாட்டில் நிகர சாகுபடி பரப்பு 1.32 கோடி ஏக்கர். இப்போது இது 1.20 கோடி ஏக்கராகக் குறைந்துள்ளது (தினத்தந்தி 07.12.11). 10 ஆண்டுகளில் 12 இலட்சம் ஏக்கர் எங்கோ மாயமாய் மறைந்துவிட்டது. இதில் பாதி நிலத்தை வீட்டுமனை வணிகம் (ரியல் எஸ்டேட்) விழுங்கிவிட்டது. மீதிநிலம் வேளாண்மையில் போட்ட முதலைக்கூட எடுக்க முடியாத அவலநிலையரான உழவர்களால் தரிசாகப் போடப்பட்டுவிட்டது.

வேளாண்மையிலிருந்து உழைப்பாளர்கள், கிராமப் புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு விரட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் வேளாண்மையில் ஒரு கோடிப் பேருக்குப் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று வாய்க்கூசாமல் அரசு புளுகுகிறது.

உலக அளவில் வால்மார்ட் நிறுவனத்தின் ஓராண் டின் விற்பனை மதிப்பு 400 பில்லியன் டாலர். அதில் 21 இலட்சம் பேர் வேலை செய்கின்றனர். இந்தியாவில் ஓராண்டில் சில்லறை வணிகத்தின் விற்று முதல் 440 பில்லியன் டாலர். ஆனால் இதில் 440 இலட்சம் பேர் வேலை செய்கின்றனர். இதன்படிப் பார்த்தால், இந்தியாவில் சில்லறை வணிகத்தில் அந்நிய முத லீட்டை அனுமதிப்பது, சில கோடி மக்களின் வாழ் வாதாரத்தைப் பறிக்கும் என்பது திண்ணம். வால்மார்ட் போன்ற நிறுவனங்களில் புதியதாக ஒருவருக்கு வேலை அளிக்கும்போது, வழக்கமாக நடப்பில் உள்ள சில்லறை வணிகத்தில் 17 பேரின் வேலை பறிக்கப் படுகிறது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 16 ஆண்டுகளில் 2.59 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று அரசின் புள்ளிவிவரமே கூறுகிறது. அதாவது, ஒரு நாளைக்கு 47 உழவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதைத் தடுத்திட வக்கற்ற நடுவண் அரசு, சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு எனும் மந்திரக் கோலினால் உழவர்களுக்குப் புதுவாழ்வு அளிக்கப் போவதாகப் பிதற்றுகிறது. தாராளமயம், தனியார் மயம், உலகமயக் கொள்கையால் உலகம் முழுவதும் கடந்த 30 ஆண்டுகளாகப் பல கோடிப் பேரின் வேலைகள் பறிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் சீரழிக்கப்பட்டு வரும் வேளாண்மையில் ஒரு கோடி பேருக்கு ஓராண்டில் வேலை கிடைக்கும் என்று நடுவண் அரசு சொல்வது ‘மல வாயால் சிரிப்பது’ போன்ற தேயாகும்.

இந்தியாவில் 1.2 கோடி சில்லறை வணிகக் கடை கள் உள்ளன. உரிமம் பெற்றவைகளின் கணக்கு இது. மேலும் உரிமம் பெறாமல் உள்ள சிறுசிறு கடைகள், தலையில் சுமந்தும், தள்ளுவண்டியிலும், வீதியோரங் களிலும் விற்போர் பல இலட்சம் பேர் உள்ளனர். பதிவு பெற்ற சில்லறைக் கடைகளில 95% கடைகள் 500 சதுர அடிக்கும் குறைவான பரப்பில் உள்ளவைக ளாகும். இவை அமைப்பு சாரா நிலையில் உள்ள கடைகள். இவற்றில் பெரும்பாலான கடைகளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வேலை செய் கின்றனர். மொத்தத்தில் இந்தியாவில் 10 கோடிப் பேர் சில்லறை வணிகத்தையே வாழ்வாதாரமாகக் கொண் டுள்ளனர். எனவே அந்நிய நேரடி முதலீட்டைச் சில்லறை வணிகத்தில் தாராளமாக நுழைய விடுவது பல கோடி மக்களின் வ்hழ்வை அழிப்பதாகும்.

பன்னாட்டு நிறுவனங்கள் காலூன்றிய பிறகு, சில்லறை வணிகத்தில் இடைநிலையில் இருப்போரை அகற்றிவிடும். அந்நிலையில் விவசாயிகள், பன்னாட்டு நிறுவனங்களையே தம் விளைபொருள்களை விற் பதற்காகச் சார்ந்திருக்கும் நிலைக்கு ஆளாக்கப்படுவர். அப்போது இந்நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலைக்கே விற்கும் நிலைக்கு உழவர்கள் தள்ளப்படுவார்கள். இங்கிலாந்தின் டெஸ்கோ நிறுவனம் வெளிச்சந்தை யைவிட 4% குறைவான விலையில்தான் தன் பட்டிய லில் உள்ள விவசாயிகளிடம் கொள்முதல் செய்கிறது. அதேபோன்று சூப்பர்மாக்கெட்டுகளிலேயே வாங்கும் நிலை ஏற்படும்போது, பொருள்களின் விற்பனை விலையை இந்நிறுவனங்கள் அதிகமாக்கும். விவசாயி களுக்கும், நுகர்வோருக்கும் ஒரே நேரத்தில் பட்டை நாமம் போடப்படும்.

30% பொருள்கள் சிறு-குறு விவசாயிகளிடமும், சிறு தொழில் செய்வோரிடமும் வாங்கப்படும் என்று அமைச்சர் ஆனந்த் சர்மா சொல்கிறார். பன்னாட்டு நிறுவனங்கள் தமக்கு வேண்டிய பொருள்களை உலகில் எந்த இடத்தில் மலிவாக கிடைக்கின்றனவோ அங்கிருந்து அவற்றை வாங்கும் உரிமையைப் பெற் றுள்ளன. உலக வணிக அமைப்பின் - காட் ஒப்பந்தப் படி, வணிகம் தொடர்பான முதலீட்டு நடவடிக்கைகள் (TRIMs) என்கிற விதியின்படி, இந்நிறுவனங்கள் இந்த உரிமையைப் பெற்றுள்ளன. எனவே இந்திய அரசு உள்நாட்டில் தான் வாங்க வேண்டும் என்று இந்நிறு வனங்களைக் கட்டாயப்படுத்த முடியாது.

 குளிர்பதனக் கிடங்குகள், குளிர்பதன நவீன போக்கு வரத்து ஊர்திகள் முதலான ஏந்துகளைப் பெற்றிருப்பதால், இந்நிறுவனங்கள் பொருள்களைப் பதுக்கி வைத்து, பொருள்களின் விலையை உயர்த்தும் நிலை ஏற்படும்.

சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டைத் தாராளமாக அனுமதிப்பது, சில்லறை வணிகர்களை மட்டுமின்றி, உழவர்களை, வேளாண் தொழிலாளர்களை, சுமை தூக்குவோரை, சிறிய ஊர்திகள் வைத்திருப் போரை, நுகர்வோரை என எல்லாத் தரப்பினருக்கும் இழப்பையும், கேட்டையும் உண்டாக்கும் என்பது உறுதி.

எனவே சில்லறை வணிகத்தில் மட்டுமின்றி, மற்ற எல்லாத் துறைகளிலும் அந்நிய நேரடி முதலீட்டைத் தாராளமாக அனுமதிப்பது என்பது இந்தியா மீண்டும் மறுகாலனியாக்கப்படுவதை உறுதி செய்யும். எனவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், பன்னாட்டு நிறுவனங் களையும் எதிர்த்து நாம் தொடர்ந்து போராடுவோம்.

Pin It