சீக்கியரான மன்மோகன்சிங் தான் இன்றையப் பிரதமர். பொதுத் துறைக்கு முதல் உரிமை அளித்த நேரு பின்பற்றிய பொருளாதாரக் கொள்கையைத் தனியார் மயமாக்கி, சந்தைப் பொருளாதாரமாக மாற்றி வரும் மத்திய திட்டக்குழுவின் துணைத்தலைவர் சக்திமிக்க மான்டேகு சிங் அலுவாலியா மற்றொரு சீக்கியர். பிரதமர் அலுவலகத்தில் இந்திய ஆட்சி அதிகாரத்தையே ஆட்டிப் படைக்கும் நிர்வாகத் தளத்தில் இருக்கும் உயர் அலுவலர்கள் பெரும்பான் மையோர் சீக்கியர்கள். அடுத்த நிலையில் இருப்ப வர்கள் மலையாளிகள். இதனால்தான் பிரதமர் அலுவலகத்தை பஞ்சாபி-மலையாளி அலுவலகம் (Prime Minister Office (PMO) - Punjabi, Malayali Office)) என்று தில்லி அரசியல்-ஊடக வட்டாரத்தில் குறிப்பிடுகிறார்கள். எண்ணிப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. நடப்பதெல்லாம் கனவா அல்லது நாட்டு நடப்பா? என்று அய்யுறத் தோன்றுகிறது.

1984ஆம் ஆண்டு தில்லியில் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைத் தாக்குதல்களையும், படுகொலைகளையும் சற்று எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது.

1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் நாள் புதுதில்லியில் பிரதமர் இல்லத்தில் மெய்க்காப்பாளர் களாகப் பணியாற்றிய பியந்த் சிங், சத்வந்த் சிங் இருவரும் பிரதமர் இந்திரா காந்தி மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தினர். இறந்து போகிறார் இந்திரா காந்தி. உடலை மருத்துவச் சோதனை செய்த போது, துப்பாக்கி ரவைகள் இந்திரா காந்தியின் உடலைத் துளைப்பதற்கு முன்பே அதிர்ச்சியால் இறந்து போனார் என்று இறப்பு ஆய்வறிக்கை கூறுகிறது.

தில்லியிலும் தில்லியைச் சுற்றிலும் காங்கிரசாரால் தூண்டப்பட்டு அப்பாவி சீக்கியப் பெண்கள், முதியோர், குழந்தைகள், ஆண்கள் எனப் பாகுபாடின்றித் தாக் கப்பட்டனர்; ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பின்னாளில் மத்திய அரசால் நடத்தப்பட்ட நீதி விசாரணையில் ‘தூண்டப்பட்டுத்தான் சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன’ என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தில்லியைச் சார்ந்த பல காங்கிரசுத் தலைவர்கள் இந்த ஆணையத்தால் குற்றவாளிகள் என அறிவிக்கப்படுகின்றனர். இன்றும் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தாயை இழந்த துயரத்தில் இருந்த நேருவின் பேரப்பிள்ளை இராஜிவ் காந்தி - “ஒரு பெரு உருவம் சாயும் போது, புவி அதிரத்தான் செய்யும்” (When a

giant falls the earth tremors) என்று அவ்வன்முறை நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிட்டார். பல ஊடகச் செய்தி யாளர்களும், மக்களாட்சி முறையை நேசிப்பவர்களும் இச்செய்தியைக் கேட்டு அதிர்ந்தனர். தாயை இழந்த தனையன் இந்தியாவின் பிரதமராக ஒரே நாளில் உயர்த்தப்பட்டார். அவருக்கு இருந்த ஒரே தகுதி “விமான ஓட்டி” (Pilot) என்பதே ஆகும்.

இந்நிகழ்வுகளுக்குப் பின்பு சீக்கியர்கள் மேலும் கொதித்தெழுந்தார்கள். நீதிக்கான நெடிய பயணத்தைத் தொடங்கினார்கள். இளைஞர்கள் தீவிரவாதிகளாக உருவெடுத்து ஆயுதம் தாங்கிச் சண்டையிடத் தொடங்கினர். அமைதியான மக்களாட்சி முறையில் ஏன் இந்த அவலங்கள்? ஏன் இப்படிப்பட்ட கொடிய செயல்கள் என்பவை பற்றிப் பல வினாக்கள், ஆய்வு கள், கட்டுரைகள், கருத்துகள் வெளிப்படத் தொடங்கின. பெரும்பான்மையான அரசியல் நோக்கர்களும், ஆய்வாளர்களும் சீக்கியர்கள் பிரச்சினையில் காங்கிர சுத் தலைமையும், அரசும் அவசரக் கோலத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டன. குறுகிய அரசியல் பாதைக்காக சீக்கியர்களை ஒட்டுமொத்தமாகப் பகைத் துக் கொண்டன என்றும் குற்றம் சாட்டினர்.

இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் சீக்கியர் களுக்குத் தனித்த இடம் உண்டு. நாம் வெள்ளை யர்களை எதிர்த்துப் போராடிய போது, இந்திய மாநிலங் களிலேயே, அதிக அளவில் பஞ்சாபியர்கள்தான் தூக்கி லிடப்பட்டனர். மொத்தத் தூக்கிலிடப்பட்டோரில் 80 விழுக்காட்டினர் சீக்கிய இளைஞர்கள் என்று புள்ளி விவரங்கள் சுட்டுகின்றன.

எனவேதான் காங்கிரசுக் கட்சியைப் பற்றி ஆய்வு செய்வோர் காந்தியார் நுழைவிற்கு முன்பும், பின்பும் சீக்கியர்கள் நாட்டிற்காக அளித்த அர்ப்பணிப்பு, தியாகம் அளவிட முடியாதவை என்று குறிப்பிடுகிறார்கள். ஜெனரல் டயரைக் கண்டு நாடே நடுங்கிய போது, அவரின் எச்சரிக்கையை மீறி, ரௌலட் சட்டத்திற்கு எதிராக சீக்கியர்கள் அணி திரண்டார்கள். பல கூட்டங்களை நடத்தினர். இந்த நிகழ்வுகளைக் கண்டு கோபம் கொண்ட வெள்ளை இனவெறியன் டயர், ஜாலியன் வாலாபாக் படுகொலையை 1919ஆம் ஆண்டில் ஏப்ரல் 13ஆம் நாள் அரங்கேற்றினான். இதன் பின்புதான் காங்கிரசுக் கட்சி மக்கள் இயக்கமாக மாறத் தொடங்கியது.

பொதுவாக, வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் பஞ்சாப் மாநிலத்தின் மீது குறிப்பாக, சீக்கியர்கள் மீது அச்சம் கொண்டுதான் வெள்ளை யர்கள் ஆட்சி செய்தார்கள். விடுதலைப் போரின் ஆரம்பக் கட்டத்தில் பல சீக்கியப் போராளிகள் வெள் ளையர்களைத் தாக்கிவிட்டுப் பொற்கோயிலுக்குள் பதுங்கிக் கொண்டார்கள். வெள்ளையரின் காவல் துறையோ, பொற்கோயிலுக்குள் சென்று சீக்கிய இளைஞர் களைக் கைது செய்து சீக்கிய இன மக்களின் உணர்வுகளில் காயம் ஏற்படுத்திவிடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் செயல்பட்டது. கொட்டும் பனியில், நடுங்கும் குளிரில் இரகசியக் காவல் துறையினர் பொற்கோயிலில் இருந்த போராளிகள் வெளியேவரும் போதுதான் அவர்களைக் கைது செய்யும் நடவடிக் கைகளை மேற்கொண்டனர். பிறகு நீதிமன்றத்தின் வழியாக மரண தண்டனை, நாடு கடத்தல் போன்ற தண்டனைகளை வழங்கினர். இப்படிப்பட்ட அறிவும், தந்திரமும் இணைந்த அரசியல் அணுகுமுறையைத் தான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ((British Diplomacy) கடைப்பிடித்தது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடு கின்றனர்.

ஆனால், விடுதலை பெற்ற இந்தியாவில் உரிமைக் காகப் போராடிய, போராடுகிற பல இன, மொழி சார்ந்த மக்களைச் செருக்கோடு அடக்கி ஆள அதிகார வர்க்கம் முற்பட்டது. தில்லியின் அதிகார போதையில் ஆட்டம் போடும் உயர் அலுவலர்கள் மக்கள் உரிமைகளை அடக்குவதுதான் தங்களின் கொள்கைத் திட்டம் என்று மாற்றினர். பிரதமர் நேரு காலத்திலேயே இதற்குக் கால்கோள் இடப்பட்டது. இதனால்தான் நேதாஜியின் பேரன் சுகதா போஸ் அண்மையில் எழுதிய “மேதகு மன்னரின் எதிரி - சுபாஷ் சந்திர போசும், பிரிட்டிஷ் பேரரசிற்கு எதிரான இந்தியாவின் போராட்டமும்” (His Majesty’s Opponent - Subhash Chandra Bose and India’s Struggle Against British Empire) என்ற நூலில், “காந்தியாரின் துணைத் தளபதிகளாக இருந்த ஜவகர்லால் நேருவும், வல்லபாய் பட்டேலும் காந்தியினுடைய நல்லெண்ணத்தை இனிமேல் ஏற்க முடியாது என்ற அளவில் இருந்தனர். காங்கிரசுக் கட்சியினுடைய இயந்திர கதி அரசியல்வாதிகள், பிரி வினை ஏற்பட்டாலும் பிரிட்டிஷ் அரசின் ஒற்றையாட்சி முறையின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில்தான் குறியாக இருந்தார்கள். இதைப்பற்றி, தன்னுடைய ஆமாம் சாமிகள் எல்லாம் இல்லை சாமி என்று கூறும் மனிதர்களாக மாறிவிட்டார்கள்” (But the Mahatma’s erstwhile political lieutenants, Jawharlal Nehru and Valla Bhai Patel, were no longer prepared to listen to his good council. The machine politicians of Congress party where now keen to grasp with the helm of unitary centre of the Britishraj, even if the price to be paid was partition. Gandhi is said to have lamented in 1947 that all his “Yes-men” had turned into “No-men”) என்று கவலையோடு காந்தியார் குறிப்பிட்டதாக சுகதா போஸ் பதிவு செய்துள்ளார். 

விடுதலை பெற்ற இந்தியாவில் ஒற்றையாட்சி முறையின் அதிகாரக் குவிப்பு அரசமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டதால்தான் பிரதமர் இந்திரா காந்தி 1975ஆம் ஆண்டு உள்நாட்டில் அவசரகாலச் சட்டத்தை (MISA) அறிவித்து, விடுதலைக்குப் போராடிய - போராடிச் சிறை சென்ற பெருந்தலைவர்களான, ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய் போன் றோரைச் சிறையில் அடைத்தார். இதன் காரணமாக மத்திய அரசில் இடம் பெறுவோர்க்குத் தொலை நோக்குப் பார்வை என்பது முற்றிலுமாகத் தொலைந்து போனது. மாநிலக் கட்சிகளின் செல்வாக்கை இழக்கச் செய்வதற்கு மத்திய அரசு தனது அதிகார மய்யங் களைத் தவறாகப் பயன்படுத்தி மாநிலக் கட்சிகளைப் பிளப்பது, மாநிலக் கட்சிகளுக்கு எதிராக வன்முறை யாளர்களைத் தூண்டுவது என்ற போக்கும் வளரத் தொடங்கியது.

குறிப்பாக, இந்தியாவின் முதல் மாநிலக் கட்சியான அகாலி தளக் கட்சிக்கு எதிராக, சீக்கிய மதகுரு என்று தன்னைப் போற்றிக் கொண்ட பிந்தரன் வாலேவை காங்கிரசுக் கட்சி தூண்டியது. இந்திரா காந்தியின் மற்றொரு பிள்ளை சஞ்சய் காந்தியும், பஞ்சாப் மாநிலத் தின் அன்றைய காங்கிரசு முன்னணித் தலைவரான கியானி ஜெயில் சிங்கும் இணைந்து பிந்தரன் வாலேவை அகாலி தளத்திற்கு எதிராகத் தூண்டினர்; வளர்த்தனர். ‘புலிவாலைப் பிடித்த நாயர்’ கதை போன்ற நிலைக்கு, காங்கிரசு தள்ளப்பட்டது. சீக்கியர் மத்தியில் அதிதீவிரவாதக் கருத்துகளைப் பரப்பிய சில ஆண்டுகளிலேயே பிந்தரன் வாலே காங்கிரசிற்கு எதிராகக் களம் அமைக்கத் தொடங்கினர். “காலிஸ் தான்” தனிநாடு கோரிக்கையை முன்வைத்தார். பொற்கோயிலுக்குள் தன் ஆதரவாளர்களுடன் குடி புகுந்தார்.

பிந்தரன் வாலேவின் செல்வாக்கைக் கண்டு காங்கிரசு அஞ்சத் தொடங்கியது. செருக்கு நிறைந்த தில்லியின் அதிகாரவர்க்கம் உடனடியாகப் பொற் கோயிலுக்குள் இராணுவத்தை அனுப்ப முடிவு செய்தது. ஏறக்குறைய 150 ஆண்டுகள் வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சியில் பொற்கோயிலுக்குள் காவல் துறையை அனுப்ப அஞ்சினர். ஆனால் காங்கிரசு ஆட்சி 1984 சூன் 3ஆம் நாள் பொற்கோயிலுக்குள் இராணுவத்தை அனுப்பியது. பதுங்கியிருந்த பிந்தரன் வாலே மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே 3 நாட்கள் நடந்த சண்டையில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பொற்கோயிலின் வளாகத்தில் இரத்தக் கறை படிந்த அத்தியாயத்தைக் காங்கிரசு தொடங்கியது. இந்த இராணுவ நடவடிக்கைக்கு மத்திய அரசு ‘நீல நட்சத்திர நடவடிக்கை’ (Operation Blue Star) என்றே மாறியது. இதன் காரணமாக சீக்கியர்கள் உலக அளவில் கொதித்தெழுந் தனர். பஞ்சாப் தீப்பற்றி எரிந்தது. முதன் முறையாக இராணுவத்தில் கட்டுப்பாட்டுடன் பணியாற்றிய சீக்கிய வீரர்கள் இராணுவத்தை விட்டு வெளியேறினர். பல ஆய்வாளர்கள், நடுநிலையாளர்கள், ஊடகச் செய்தியா ளர்கள் மத்திய அரசின் தவறான போக்கினால்தான் இந்நிகழ்வு நடந்தது எனக் குற்றம் சாட்டினர். “இந்தியா டுடே” இதழ், “பத்து அரசியல் அவமானங்கள்” (Top Ten Disgraces) என்ற தலைப்பில் பொற்கோயில் நடவடிக்கையை விமர்சனம் செய்தது. இதன் விளைவுதான் இந்திரா காந்தியின் படுகொலையாகும். 

இராஜிவ் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்ற பின்பும் பஞ்சாபில் கலவரங்கள் அடங்கவில்லை. இராஜிவின் மறைவிற்குப் பிறகு 1991ஆம் ஆண்டில் சிறுபான்மை காங்கிரசு அரசை அமைத்து பிரதமரான நரசிம்மராவ், மீண்டும் பஞ்சாபில் காங்கிரசு ஆட்சி உருவாவதற்கு மாக்கியவல்லியின் அரசியல் கொள்கையைப் பின் பற்றினார். நரியின் தந்திரத்தையும், சிங்கத்தின் வன்மத்தையும் பெற்றதனால், இவரை “நரி-சிம்மராவ்” என்று இவரின் எதிரிகள் கூறினர். 

1992ஆம் ஆண்டு பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரசு தனது தேர்தல் பரப்புரை யின்போது, நேரு, இந்திராகாந்தி, இராஜிவ் படங் களைச் சுவரொட்டிகளிலோ, துண்டறிக்கைகளிலோ வெளியிடவே இல்லை. நேரு மரபுவழிக் குடும்ப அரசியலை காங்கிரசு பின்பற்றாது என்று பஞ்சாபில் ஓர் அரசியல் நாடகம் நிறைவேற்றப்பட்டது. பஞ்சாபில் காங்கிரசு வெற்றி பெற்று, பிந்த் சிங் முதல்வராகப் பொறுப்பேற்றர். உடனடியாகத் தீவிரவாதிகளை அடக்குவேன் என்று அவர் கூறினார். இதன் பின்பு சீக்கிய இளைஞர்கள் பலர் காணாமல் போயினர். மீண்டும் தீவிரவாதம் தலை தூக்கியது. 1995ஆம் ஆண்டில் தலைமைச் செயலக வளாகத்திலேயே தற்கொலைப் படைத் தாக்குதலில், முதல்வர் பிந்த் சிங் கொல்லப்பட்டார். பாதுகாப்புப் பணியாளர்கள் 17 பேர் உயிரிழந்தனர். இத்திட்டத்தை நிறைவேற்றிய சீக்கிய இளைஞர்களும் இறந்துவிட்டனர். முதல்வர் பிந்த் சிங் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இறுதியாகத் தற்கொலைப் படைத் தாக்குதலில் நேரடியாகப் பங்கு பெற்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த பல்வந்த் சிங் ரஜோனாவிற்கு 2012ஆம் ஆண்டு சண்டிகர் நீதி மன்றம் தூக்குத் தண்டனை அளித்தது. இவ்வழக்கில் ரஜோனா குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அரசு அளித்த சாட்சியங்களை மறுத்தோ, எதிர்த்தோ வாதாட அவர் விரும்பவில்லை. அவர் சார்பில் எந்த வழக்கறிஞரையும் வாதாடவும் நியமிக்கவில்லை. நீதிமன்றம் இவருக்காக வாதாட அளித்த வழக்கறி ஞரையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ரஜோனா நீதிமன் றத்தில் அளித்த வாக்குமூலத்தில் “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட (தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி உயிர்நீத்தவர்கள்) திலவாரும் மற்ற சிலரும் இந்நிகழ்விற்காக உயிர்த் தியாகம் செய்த போது நான் மட்டும் குற்றம் செய்யவில்லை என்று சொல்வதற்கு என் மனச்சாட்சி இடம் அளிக்கவில்லை” (He said his consciences would not permit him to deny his role in the killing when Dilawar and others sacrificed their lives for it) என்று குறிப்பிட்டுள்ளார். 

பல்வந்த் சிங் ரஜோனாவை காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்த போது, இவர் கைப்பட பஞ்சாபிய மொழியில் எழுதிய கவிதையைக் கைப்பற்றினர். அக்கவிதை வரிகளில் : “என்னுடைய தோழர்களின் வலியை ஒரு கவிதையாக நான் வடிப்பேன் என்ற நம்பிக்கையில் இறந்திருக்கிறார்கள். நான் அமைதி யாக இருந்துவிட்டால் அவர்களுடைய ஆவி அமைதி யடையாது ((My comrades died in the hope that I rendered their pain into a song; if I keep quite their souls will not be at peace). 

பொற்கோயிலுக்குள் இராணுவத்தை அனுப்பிய தன் வழியாக சீக்கியர்களின் உணர்வுகளை மத்திய அரசு காயப்படுத்திவிட்டது. இந்திராவின் மரணத் திற்குப் பிறகு, சீக்கியர்களை எரித்தது, முடமாக்கியது; சீக்கியர்களின் உடல்களை நடுத்தெருவில் வீசியது, இறுதிச்சடங்கில் பின்பற்ற வேண்டிய நடைமுறை களைக்கூடத் தடை செய்ததுடன் பெண்கள் அவமானப் படுத்தப்பட்டார்கள். இளைஞர்களின் ஆண்மை அகற்றப்பட்டது. சீக்கியர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. எனவே நான் தலைமை நீதிபதியைப் பார்த்துக் கேட்கி றேன். “யார் பயங்கரவாதிகள்? இந்தச் செயலில் ஈடுபட்டவர்களா? அல்லது அவற்றைத் தடுத்தவர் களா? மனித வெடிகுண்டுகளாக மாறி, தியாகங் களைத் தங்களுக்குள் செய்து கொண்டு ஒடுக்கு முறையையும், அநீதியையும் எதிர்த்துப் போராட வேண்டும். தன் நாட்டுக் குடிமக்களையே அரசு கொன்று குவித்துள்ளது. பஞ்சாபின் முதல்வர் பிந்த் சிங் போலி துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு அனுமதி அளித்தார்; ஆட்களைக் கடத்துவதற்கு உதவி செய்தார். கமுக்கமாக எரியூட்டினார். இந்தக் குற்றங்களுக்கு இதுவரை அவருக்குத் தண்டனை வழங்கப்படவில்லை” என, பல்வந்த் சிங் ரஜோனா தனது தரப்பு வாதமாக முன்வைத்தார். இந்த நிகழ்வுகளைத் தொகுத்து “இந்து நாளிதழ்”, 2012 மார்ச் 29 அன்று ஒரு கட்டுரையாக வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டுரையை எழுதியவர், யுக் மொகித் சவுத்ரி என்ற மும்பையைச் சேர்ந்த புகழ் பெற்ற வழக்கறிஞர் ஆவார். இறுதியாக “இதுவரை, சிந்திய இரத்தம் போதும், பழிவாங்குதலுக்காக மேலும் இரத்தம் சிந்த வேண்டும் என்பதற்காக மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது, என்றும் இவ்வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்றுதான், பொற்கோயிலுக்குள் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட உயர் அதிகாரிகளுள் ஒருவரான வைத்யா 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி சீக்கிய தீவிரவாத அமைப்பான காலிஸ்தான் போர்ப்படையினரால் சுடப்பட்டு இறந்தார். சுகதேவ் சிங் சுக்கா, ஹரிஜிந்தர் சிங் ஜின்டா ஆகிய இரு சீக்கிய இளைஞர்கள் 1992இல் நீதிமன்றத் தீர்ப்பிற்கு இணங்கத் தூக்கிலிடப்பட்டனர். இந்த இருவரும் தாங்கள் வைத்யாவைக் கொலை செய்ததை ஒத்துக்கொண் டாலும், அதைக் குற்றமாக ஏற்றுக்கொள்ள மறுத்தனர். மேலும் இராணுவ அதிகாரி வைத்யாதான் பெரும் குற்றத்தை இழைத்தார். மரணம் ஒன்றுதான் அவர் கொடுங்குற்றத்திற்குச் சரியான தண்டனை என்று நியாயப்படுத்தி நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

இத்தகைய பின்னணியில், அண்மையில், ரஜோனாவிற்குத் தூக்குத் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்த போது, பஞ்சாப் மீண்டும் போர்க்கள மானது. பஞ்சாபினுடைய அகாலிதள முதல்வர் பாதல் உடனடியாகக் குடியரசுத் தலைவரைச் சந்தித்துத் தூக்கு தண்டனையை நிறுத்தச் சொன்னார். காங்கிர சின் முன்னாள் முதல்வர் அம்ரிந்தர் சிங் தூக்குத் தண்டனையை ரஜோனாவிற்கு வழங்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசியலுக்கு அப்பால் பஞ்சாபே ஒன்றிணைந்து தூக்குத் தண்டனையை இரத்து செய்யக் கோரியது.

சீக்கியர்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகையா? உச்சநீதிமன்ற-உயர்நீதிமன்றங்களின் எதிர்ப்புகளுக்கு இடையேயும் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலைச் சந்தித்து தூக்குத் தண்டனையைத் தடுத்து நிறுத்தக் கோர லாமா? குடியரசுத் தலைவரும் அதை ஏற்கலாமா? உடனடியாகத் தடுத்து நிறுத்தலாமா? என்ற பல கேள்விகள் தற்போது அரசியல் அரங்கில் எழுப்பப் படுகின்றன. ஆனால், சீக்கியர்கள் அரசியலைக் கடந்து, பொறுப்பேற்றிருக்கிற பதவிகளுக்கு அப்பால் ஒன்றி ணைந்து செயல்படுகிறார்கள் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.

1984ஆம் ஆண்டு பொற்கோயிலுக்குள் சென்று இராணுவ நடவடிக்கையை மத்திய அரசு மேற் கொண்டதற்காகக் குடியரசுத் தலைவராக இருந்த கியானி ஜெயில் சிங் மன்னிப்புக் கோரினார். அகாலிதக் என்ற அமைப்பினர் அளித்த மதத் தண்ட னையையும் ஏற்றார். இந்திரா காந்தி மறைவிற்குப் பின் சீக்கியர்கள் மீது ஏவப்பட்ட கலவரங்களை ஆய்வு செய்த ஆணையத்தின் நீதி விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் அளித்தபோது, 2005இல் பிரதம ராக இருந்த மன்மோகன் சிங், நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கோரினார். “சீக்கிய சமுதாயத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிடமும் எவ்விதத் தயக்கமுமின்றி மன்னிப்புக் கோருகிறேன். இந்திய அரசியல் சட்ட நெறிகளையும், இந்தியா ஒரு நாடு என்று அழைக்கப்படுகிற கருத்திற்கும் எதிராக அமைந் ததுதான் 1984இல் நடைபெற்ற நிகழ்வாகும்” (I have no hesitation in apologising not only to the Sikh community but the whole Indian nation because what took place in 1984 is the negation of concept of nationhood and what is enshrined in our Constitution) என்றும் குறிப்பிட்டார். இதற்குப் பிறகுங் கூட சீக்கியர்கள் அமைதியைக் கடைபிடிக்கிறார்களா என்றால், இல்லை. 

2009ஆம் ஆண்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற ப. சிதம்பரம், தில்லி காங்கிரசு அலுவலகத்தில் ஊடகங்களுக்குப் பேட்டியளித் தார். அப்போது ஜெர்னயில் சிங் என்ற செய்தியாளர், சீக்கியர்களைக் கொன்று குவித்த வழக்கில் மத்தியப் புலனாய்வுத் துறையே (CBI) விரைந்து நடவடிக்கை களை மேற்கொள்ளவில்லையே, ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு உள்துறை அமைச்சர் உரிய பதிலை அளிக்கவில்லை என்பதற்காக, சிதம்பரத்தின் மீது அவர் செருப்பை வீசினார். தொலைக்காட்சியில் இந்நிகழ்வினைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சி யுற்றனர். ஆனால் பதவிச் சுகத்திற்காக மான உணர் வை விட்டுக் கொடுக்கும் மாண்புமிகு ப. சிதம்பரம் இந்த நிகழ்வு ஏதும் நடைபெறாதது போலவே நடந்து கொண்டார். அச்செய்தியாளர் மீது காவல்துறையின் எவ்வித நடவடிக்கையும் வேண்டாம் என்றும் கூறிவிட்டார்.

சீக்கியர் என்றால் பயம். தமிழன் என்றால் வதை. சீக்கியனுக்கு நீதி. தமிழனுக்கு அநீதி. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதன்மையான கட்சிகள், ஒரே குரலில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோ ரைத் தூக்கிலிட வேண்டாம் என்று வேண்டுகோள் மேல் வேண்டுகோள் வைக்கின்றன.

இராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட இந்த மூவரும் தற்கொலைப் படைத் தாக்குதலோடு தொடர்பில்லாதவர்கள். இவர்கள் இந்தக் கொலை யைப் பற்றித் தங்களுக்குத் தெரியாது என்று திரும்ப திரும்பக் கூறி வருகிறார்கள். மேலும், இவர்கள் தூக்குத் தண்டனையை நிறுத்துமாறு கருணை மனுக் களைக் கையொப்பமிட்டுக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளனர்.

ஆனால், பல்வந்த் சிங் ரஜோனா எந்தக் கருணை மனுவையும் அனுப்பாமலேயே-குடியரசுத் தலைவர் அவருடைய தண்டனையை உடனடியாக நிறுத்துகிறார்.

இங்கு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் மூவரின் தூக்குத் தண்டனை தள்ளிப் போடப்பட்டுள்ளது. பெரும்பான்மையான தமிழர் களைப் பொறுத்தவரை யாருக்கும் தூக்குத் தண்ட னை வழங்கக் கூடாது என்பதுதான் நிலைப்பாடாகும்.

மத்திய அரசோ சீக்கியர்களை அணைக்கிறது; தமிழர்களை அழிக்கத் துடிக்கிறது. இதை என்று உணர்வார்களோ தமிழர்கள்!

Pin It