காங்கிரசில் பெரியார் ஈ.வெ.இராமசாமி

பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஈரோட்டில் வள மான குடும்பத்தில் பிறந்தவர். வணிகத்தில் கொடி கட்டிப் பறந்தவர். 1917 முதல் 1919 வரை ஈரோடு நகர மன்றத் தலைவராக விளங்கினார். 1914 முதல் காங்கிரசு மாநாடுகளுக்குச் சென்று வந்தார். 1914இல் சென்னையில் நடைபெற்ற மாநாட் டிற்குச் சென்றிருந்த அனுபவத்தை அவரே கோட்டாறு சுயமரியாதைச் சங்க ஆண்டு விழாவில் கூறியுள்ளார்.

சென்னை காங்கிரசு இராஜ விசுவாசத் தீர்மானம் :

“அப்பொழுதெல்லாம் காங்கிரசின் முதல் தீர்மானம் இராஜவிசுவாசத் தீர்மானமேயாகும். உதாரணமாக, 1914ஆம் வருடம் சென்னையில் கூடிய காங்கிரசுக்கு நான் சென்றிருந்தபோது, கல்கத்தா திருவாளர் பூலேந்திநாத் போஸ் தலைமை வகித்திருந்தார். காங்கிரசு நடவடிக்கை நடந்து கொண்டிருக்கையில் சென்னை கவர்னர் லார்ட் பெண்ட்லண்ட் துரைய வர்கள் காங்கிரசுக்கு விஜயம் ஆனார். அவர் விஜய மானதும் மற்ற நடவடிக்கைகளை நிறுத்திவிட்டுத் திருவாளர் சுரேந்திரநாத் பானர்ஜி அவர்கள் உடனே எழுந்து ஒரு இராஜ்ய விசுவாசத் தீர்மானத்தைப் பிரேரேபித்து, வெகு அழகாக - அதாவது, இந்தியா வுக்குப் பிரிட்டிஷ் அரசாங்கம் கடவுளால் அனுப்பப் பட்டது என்றும், இந்திய மக்கள் தலைமுறை தலை முறையாய் இராஜ விசுவாசிகளாய் இருக்க வேண்டும் என்றும் பேசி முடித்தார். பலர் ஆமோதித்துப் பேசிய பின் 5 நிமிட கரகோசத்துடன் அதை (இராஜ விசுவாசத் தீர்மானம்) நிறைவேற்றினர். சென்னை அமிதவாத தேசியவாதிகளான அய்யங்கார் கூட்டத்தினர்கள் சமீப காலம் வரை, எட்வர்டு மன்னரும், ஜார்ஜ் மன்னரும் விஷ்ணு அம்சமென்றே பேசி, வேதங்களிலிருந்தும் சாஸ்திரங்களிலிருந்தும் ஆதாரங்களை எடுத்துக்காட்டி வந்தார்கள். அதாவது அவர்கள் விஷ்ணு அம்சமென்று வேதம் கூறுவதாக உரைத்துக் கொண்டு வந்தார்கள்”. (ஈ.வெ.ரா. சிந்தனைகள்-தொகுதி 3, 2ஆம் பதிப்பு, பக்கம் 580-81, குடிஅரசு 4.7.31).

இந்தியத் தேசியக் காங்கிரசின் கோவை மாவட்ட இரண்டாவது மாவட்ட மாநாடு ஈரோட்டில் டாக்டர் டி.எம். நாயர் தலைமையில் 24, 25.7.1915 ஆகிய நாள்களில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு ஈ.வெ.ரா. வரவேற்புக் குழுத்தலைவராக இருந்து மாநாட்டைச் சிறப்பாக நடத்தி வைத்தார். பெரியார் ஈ.வெ.ராவும் டாக்டர் டி.எம். நாயரும் சந்தித் தது இதுவே முதல் முறையாகும்.

இம்மாநாட்டில் “தர்ம ஸ்தா பனங்கள் மதம் சம்பந்தமான தேவாலயங்கள் சரிவரப் பரிபா லனம் செய்யப்படாததால் கிரம மமாய் நடக்கும் வண்ணம் இப் போதிருக்கிற சட்டத்தைக் கொஞ்ச மேனும் தாமதிக்காமல் சீர்திருத் தம் செய்து மாற்றிட வேண்டு மென்று கவர்ன்மெண்டாரை இக்கூட்டம் வற்புறுத்து கிறது” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பனகல் அரசர் இந்து அறநிலையச் சட்டம் கொண்டு வந்த போது பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்த்தபோது பெரியார் இப்படி ஒரு சட்டம் தேவையென்று 1915 காங்கிரசு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார் (குடிஅரசு 22.11.1925).

வகுப்புரிமைத் தீர்மானம்

1919இல் திரு. சோமசுந்தர பாரதியார் தலைமையில் திருச்சியில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் வகுப்புரி மைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1920இல் திருநெல்வேலியில் நடைபெற்ற இந்தியத் தேசியக் காங்கிரசின் 26ஆம் மாகாண மாநாட்டின் போது சாப்பாட்டு விடுதியில் ஈ.வெ.ரா. தலைமையில் பார்ப்பனரல்லாதார் கூட்டம் நடைபெற்றது. சட்ட சபைகள் முதலிய தேர்தல் ஸ்தானங்களுக்கு வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் ஏற்படுத்துவதோடு, அரசாங்க உத்தியோகத்திலும் விகிதாச்சாரப்படி வகுப்புரிமைப் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று வலி யுறுத்த முடிவு செய்தனர். சோமசுந்தரம்பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை, வைகுண்டம் முதலிய வழக்குரைஞர்கள் ஒன்றுசேர்ந்து விஷயாலோசனைக் கமிட்டிக்கு அனுப்பிய அத்தீர்மானத்தை ஈ.வெ.ரா. முன்மொழிய, வ.உ. சிதம்பரம்பிள்ளை, தண்டபாணி பிள்ளை ஆகியோர் வழிமொழிந்து பேசினர். கஸ்தூரி ரங்க அய்யர் எழுந்து விகிதாச்சாரம் (Percentage) என்கிற வார்த்தைக்குப் பதிலாகப் ‘போதுமான’ என்னும் அர்த்தத்தைக் கொடுக்கும் அடிக்குவேட்லி (Adequately) என்கிற வார்த்தையைப் போட்டுக் கொள்ளும்படி ஒரு திருத்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். இந்தக் ‘அடிக்குவேட்லி’ என்ற பதத்திற்கு என்ன பொருள் என்று ஈ.வெ.ரா. அவர்கள் மாநாட்டின் தலைவர் சீனிவாச அய்யங்காரைக் கேட்க, அவர் இரண்டும் ஒரே அர்த்தம்தான். ஆனால் ‘பெர்சன்டேஜ்’ என்பதை விட ‘அடிக்குவேட்லி’ என்பது நல்ல வார்த்தையென்று சொல்லிவிட்டார். மாநாட்டின் இறுதியில் பொது நன்மைக்கு விரோதமென்றுக் கூறி இத்தீர்மானத்தை நிறைவேற்றாமல் விட்டுவிட்டார்.

“அரசாங்கக் கல்வித்துறையில் சமஸ்கிருதக் கல்விக்கு இருக்கும் பயிற்சியும் யோக்கியதையும் செய்முறையும், தமிழ்க் கல்விக்கும் இருக்க வேண்டுமென்ற மற்றொரு தீர்மானத்தை ஈ.வெ.ரா. முன் மொழிய வ.உ.சிதம்பரம்பிள்ளையால் வழிமொழியப்பட்டு அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது (குடிஅரசு 6.12.1925).

1921இல் தஞ்சையில் நடைபெற்ற மாகாண மாநாட்டிலும், 1922இல் திருப்பூரில் கூடிய மாநாட் டிலும், 1923 சேலத்தில் கூடிய மாநாட்டிலும், 1924இல் திருவண்ணாமலையில் பெரியாரின் தலைமையில் கூடிய மாநாட்டிலும் கடைசியாக 1925இல் காஞ்சிபுரம் மாநாட்டிலும், வகுப்புரிமைத் தீர்மானங்கள் நிறை வேற்றப்படாமல் போகவே கொதித்தெழுந்த பெரியார் இனி காங்கிரசை ஒழிப்பதே என் வேலை என்று கூறி மாநாட்டுப் பந்தலிலிருந்து தன் தோழர்களுடன் வெளியேறினார்.

நீதிகட்சிக்குப் போட்டியாகச் சென்னை மாகாணச் சங்கம் என்ற அமைப்பைக் காங்கிரசுக் கட்சியில் பார்ப்பனர்கள் தோற்றுவித்தார்கள். பி. கேசவபிள்ளை அதன் தலைவராக இருந்தார். துணைத் தலைவர் ஈ.வெ.ரா. செயலாளராக வரதராசலு நாயுடு முதலி யோர் இருந்தனர். இதன் நோக்கம் பார்ப்பனரல்லா தாருக்கு வகுப்புரிமை பெற்றுத்தருவது ஆகும். இந்த இயக்கத்திற்காகத் திரு.வி.க.வை ஆசிரியராகக் கொண்டு ‘தேசபக்தன்’ என்ற ஏடும், ஆங்கிலத்தில் கருணாகர மேனனை ஆசிரியராகக் கொண்டு ‘இண்டியன் பேட்ரி யாட்’ என்ற இதழும் தொடங்கி நடத்தப்பட்டன. இது ஒரு வரையறுக்கப்பட்ட குழுமமாகும். ஈ.வெ.இராமசாமி 1000 செலுத்தி அந்த குழுமத்தின் ஒர் இயக்குனராக இருந்தார். காங்கிரசு மாநாடுகள் கூடும்போது இந்தச் சென்னை மாகாணச் சங்கமும் தனியேக் கூடி வகுப்புரி மைக் கோரிக்கைக்காகப் பாடுபட்டு வந்தது. ஆனால் பார்ப்பனர்கள் நீதிகட்சியை வீழ்த்துவதற்கு இதைக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டனரே தவிர, வகுப்புரிமைத் தீர்மானம் வெற்றி பெற வழிவிடவே இல்லை.

நம்பிக்கைத் துரோகம் என்ற தலைப்பில் 20.12.1925 நாளிட்ட குடிஅரசு ஏட்டில் ஈ.வெ.ரா. அவர்கள் தன் மனக்குமுறலை வெளிப்படுத்தினார். “ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாக ஏற்படுத்தப்பட்ட சென்னை மாகாணச் சங்கத்திற்கு முக்கிய கொள்கைகள் மூன்று. அவை, ராஜீய விஷயங்களில் காங்கிரசைப் பின்பற்றுவது; தென்னிந்தியாவில் பிராமணரல்லாதார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அடைவது; பிராமணரல்லாதாருடைய முற்போக்குக்கான காரியங்களைச் செய்வது ஆகிய வையே ஆகும்.

 இக்கொள்கைகளைத் தென்னாட்டுத் தேசியப் பிராமணர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டு தாங்களும் பக்கத்திலிருந்து நிறைவேற்றி வைத்ததோடல்லாமல், தாங்களும் அதற்கு அனுகூலமாய் இருப்பதாகச் சொல்லி நமது கூடவே இருந்து ஜஸ்டிஸ் கட்சியின் செல்வாக்குக் குறைந்ததாக மதித்துக் கொண்டு இப்பொழுது “நீக்குப் பெப்பப்பே, நீவு தாதாவுக்குப் பெப்பப்பே” என்பது போல் அடியோடு பழைய சங்கதிகளை மறந்து வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் தேசத்திற்குக் கெடுதியென்று ஞானோபதேசம் செய்ய வந்துவிட்டதோடு இதற்குச் சிலப் பிராமணரல்லாத விபூஷணாழ்வார்களைச் சுவாதினமாக்கிக் கொண்டு அவர்களைக் கொண்டே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தேசியத்திற்குக் கேடு என்று சொல்வதோடல்லாமல், சத்தியத்தையும், மனச் சாட்சியையும் கூட மறக்கும்படி செய்து அவைகளைப் பலி கொடுத்துவிட்டார்கள் என்று பெரியார் எழுதினார்.

ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டிய அவசியத் திற்காகச் சென்னை மாகாணச் சங்கத்தின் மூலம் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே நீதிக்கட்சியைத் திட்டமிட்டு அழித்து வருவதை ஈ.வெ.ரா. உணர்ந்தார்.

துறவறத்திற்குக் காவி வேஷ்டி உடுத்திக் கொள்வது ஜனங்களை ஏமாற்ற எப்படி ஒரு சாதனமாயிருக்கிறதோ அதுபோல் ராஜீயத்திலும் உரிமை, சுயராஜ்யம் என்கிற வார்த்தைகள் ஏழை மக்களை வஞ்சிக்கவும் மற்றும் பாமரர்களை ஏமாற்றவும் பல காரியங்களுக்கு உப யோகப்படுத்தக் கூடிய சாதனமாய்ப் போய்விட்டது என்று பெரியார் கூறினார்.

ஈ.வெ.ரா.வின் துணைவி நாகம்மாளும், தங்கை கண்ணம்மாளும் 1921 முதலே காங்கிரசில் தீவிரமாகச் செயல்பட்டனர். 1922இல் ஈரோட்டில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியலில் முன்னின்று போராடினர். ஈ.வெ.ரா. தன் வீட்டுத் தென்னை மரங்களில் கள் இறக்க வேண்டாம். குத்தகைத் தொகையைத் திருப்பித் தருகிறேன் என்று கேட்டுக் கொண்டார். குத்தகைக்கு எடுத்தவர்கள் மறுத்த காரணத்தால் கோபமுற்ற ஈ.வெ.ரா. சேலம் தாதம்பட்டியில் தம் தோட்டத்தில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.

1922இல் மும்பையில் நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டில் காந்தியாருக்கு என்ன வேண்டும் என்பதைக் கேட்டுச் சொல்லும்படி மாநாட்டின் தலைவர் சர்.சி. சங்கரன் நாயர் அவர்களிடம் லார்ட் ஆர்டிஞ் பிரபு கேட்டிருந்தார். சங்கரன் நாயரும் காந்தியைப் பார்த்து “உமக்கு என்ன வேண்டும்” என்றார். காந்தி எனக்கு என்ன வேண்டும் என்பதை ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களைக் கேட்டு சொல்கிறேன் என்றார். அவர்கள் இருவரும் ஈ.வெ.ரா.வின் மனைவி நாகம் மாளும், தங்கை கண்ணம்மாளும் ஆவர். இச்செய்தி 19.1.1922 இந்து நாளேட்டிலும் வந்துள்ளது (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், இரண்டாம் பதிப்பு, தொகுதி 12, பக்கம் 1188).

கதர் விற்பனையில் ஈ.வெ.ரா. தீவிரம் காட்டினார். தன் வீட்டுப் பெண்களைக் கதர் உடுத்த வைத்தார். இவ்வாறு காந்திய நிர்மாணத் திட்டத்தில் பெரியார் தீவிரமாகப் பாடுபட்டு வந்தார்.

சேரன்மாதேவிக் குருகுலப் போராட்டம் :

சேரன்மகாதேவியில் வ.வே.சு. அய்யர் காங்கிரசின் நிதியுதவியுடன் தேசியப் பள்ளி ஒன்றை நடத்தினார். அப்பள்ளியில் பார்ப்பன மாணவர்களுக்கு உயர்ந்த உணவும், “அதாவது ஸ்ரீமான் மகாதேவ அய்யர் என்று சொல்லப்படுகிறவரும் அவர் குழந்தைகளும் கூனி முறை என்பதாகப் பெயர் வைத்துக் கொண்டு தாங்கள் பழங்களும் தேங்காயும் வெல்லமும் கரும்பும் மாம் பழமும் முந்திரிப் பருப்பும் பேரீச்சம் பழமும், சாரப் பருப்பும் சாப்பிட்டுக் கொண்டு மற்ற பார்ப்பனரல்லாத மாணவர்களுக்குக் கஞ்சிச் சாதமும், அரிசிக் களியும், உப்புக் காரமில்லாத அரிசி உப்புமாவும் புளியில்லாத குழம்பும் ஜெயிலைவிட மோசமான நிலையில் இருந் ததைப் பெரியாரும் அவர் நண்பர்களும் நேரிலேயே பார்த்துள்ளதை அய்யாவே எழுதி உள்ளார் (குடிஅரசு, 10.01.1926).

இந்தச் சேரன்மாதேவிப் பார்ப்பனக் கொடுமையை முதன்முதலில் வன்மையாகக் கண்டித்து எழுதியவர் டாக்டர் வரதராசுலு நாயுடு ஆவார். தம் ‘தமிழ்நாடு’ இதழில் 12.10.1924 அன்று கீழ்க்காணுமாறு எழுதினார்.

“சாப்பாட்டில் பிராமணர் ஒரு பக்கமாகவும், சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணரல்லாதார் ஒரு பக்கமாகவும் இருந்து சாப்பிட வேண்டும். இதை நான் நேரில் அறிவேன். குருகுலத்தில் இம்மாதிரி வித்தியாசம் கூடாது என்று நான் சொன்னேன். ஆனால் இந்த வேற்று மையை ஒழிக்க முடியாதென்று அவர் (வ.வே.சு. அய்யர்) சொன்னார்.

இதைக் கேட்டதும் நானும் ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி போன்ற பிராமணரல்லாதாரும் திடுக்கிட்டுப் போனோம். இதைத் தெரிந்ததும் காங்கிரசிலிருந்து மறுபடியும் ரூ.5000 கொடுக்கவிருந்ததை நிறுத்திவிட்டோம். இது சென்ற வருடம் நடந்த சங்கதி. ஆனால் இதைப்பற்றி இதுவரை ‘தமிழ்நாட்டில்’ நான் குறிப்பிடவில்லை. வித்தியாசம் ஒழிந்துபோகும் என்று எண்ணியிருந்தேன்.

சமீபத்தில் மலாய் நாட்டிலிருந்து ஸ்ரீமான் அமரபுரி என்ற நண்பர் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் ஸ்ரீ மகாதேவய்யர் அங்கே குருகுலத்திற்காக ரூ.20 ஆயிரம் வரை வசூல் செய்திருப்பதாகவும் மேலும் 22 ஆயிரம் ரூபாய் வரை கொடுப்பதாக ஜனங்கள் வாக்குக் கொடுத்திருப்பதாகவும் அதில் பெரும்பான்மையோர் பிராமணரல்லாதார் என்றும் குருகுலத்தில் எந்தச் சாதி வித்தியாசமும் இல்லை என்று மகாதேவய்யர் சொன்னதாகவும் அது உண் மையா என்று கேட்டு எழுதியிருந்தார். எனவே குருகுலத்தைப் பற்றி இவ்வாரம் எழுத நேரிட்டது. சமபந்தி போஜனம், சமமான கல்வி முதலியவை கொடுத்துச் சமதிருஷ்டியுடன் நடத்தத் தயாராகவிருப் பதாக ஸ்ரீமான் அய்யர் அவர்கள் அறிவித்தாலன்றி இந்தக் குருகுலத்திற்குப் பொருள் உதவி செய்யக் கூடாதென்று பிராமணரல்லாதாரைக் கேட்டுக் கொள்கி றேன்” என்று எழுதியிருந்தார்.

டாக்டர் வரதராசலு குருகுலம் பற்றி மேலும் விரிவான ஒரு கண்டன அறிக்கையையும் எழுதியிருந் ததை சூ.ஆ. முத்துநாடார் அவர்கள் தம் நாடார் குலமித்திரன் இதழில் 1924 நவம்பர் 17, 24 இதழ் களில் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.

இந்தக் குருகுலப் போராட்டம் தீவிரமாக நடை பெற்ற போதுதான் வ.வே.சு. அய்யர், தமிழர், தெலுங்கர், கன்னடியர் என்ற பிரச்சினையைக் காங்கிரசுக் கட்சி யில் உருவாக்கினார் என்பதைப் பகுத்தறிவு ஏடு படம்பிடித்துக் காட்டியது.

“தமிழ்நாட்டு விசயத்தைப் பற்றி ஆந்திரத் தேசத் தாரான ஒரு நாயுடுவும் (டாக்டர் வரதராசலு நாயுடு) கன்னடத் தேசத்தாரான ஒரு நாயக்கரும் (ஈ.வெ.ரா.) கிளர்ச்சி செய்வது நமக்கு வெட்கமாக இல்லையா? ஆதலால் அவர்களது கிளர்ச்சியை ஆதரிக்கக் கூடாது” என்று காலஞ்சென்ற வி.வி.எஸ். அய்யர் அவர்களே கிளப்பிவிட்டார்கள்” (பகுத்தறிவு, கட்டுரை 16.12.1934; ஈ.வெ.ரா. சிந்தனைகள், இரண்டாம் பதிப்பு, தொகுதி 12, பக்கம் 1111).

பொப்பிலி அரசருக்கும், முத்தையா செட்டியாருக்கும் இடையே கருத்து வேறுபாடு வந்தது. 1934 டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆர்.கே. சண்முகம் செட்டியார் தோல்விக்கு முத்தையா செட்டியார்தான் காரணம் என்று நீதிகட்சியினர் குற்றம் சுமத்திய போது பொப்பிலி ஆந்திரர் என்று முத்தையா செட்டியார் கிளப்பிவிட்டார். அப்போதுதான் இக்கட்டுரை எழுதப்பட்டது. வ.வே.சு. அய்யர் 1925இல் இறந்துவிட்டார். மகாதேவ அய்யர் எவ்வளவோ முயன்றும் பார்ப்பனரல்லாதார் ஒத்து ழைப்பு அளிக்காததால் குருகுலம் மூடப்பட்டது.

குருகுலப் போராட்டம் குறித்து காந்தி 13.7.1927, 27.7.1927 நாள்களில் எஸ். இராமநாதனுக்கு இரண்டு கடிதங்கள் எழுதினார். “மகாதேவ அய்யர் இங்கே என்னுடன் தங்கியுள்ளார். நீங்கள் என்ன முடிவு செய் துள்ளீர்கள் அய்யர் தன் நிலையை மாற்றிக் கொள்ளா தவரை ஆதரிக்கமுடியாது” என்று எழுதிவிட்டார். இறுதியில் குருகுலம் இழுத்து மூடப்பட்டது. (M.K.Gandhi

Collected Works, Vol.39, P.215, 304).

வைக்கம் சத்தியாகிரகம்

வைக்கம் சத்தியாகிரகத்தில் பெரியார் கலந்து கொண்டதுடன் தனது மனைவி நாகம்மையாரையும் தங்கை கண்ணம்மாளையும் அழைத்துச் சென்றார். பெரியார் கைது செய்யப்பட்ட போதிலும் நாகம்மாள் மக்கள் திரளைக் கூட்டிப் போராட்டம் நடத்தினார். 1924 முதல் ஓராண்டுக்கும் மேலாக நடந்த இப்போராட் டத்தில் ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் வைக்கம் தெருவில் நடக்கும் உரிமையைப் பெற்றனர்.

பெரியாருக்குப் பெயர் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகப் பார்ப்பன இராசாசி காந்தியாரை வர வழைத்து மகாராணியுடன் ஒப்பந்தம் செய்ய வைத்தார். உண்மையிலேயே காந்தி வைக்கம் போராட் டத்தை ஆதரிக்கவில்லை என்பது அவருடைய எழுத்துகள் மூலமே அறியலாம். ஜார்ஜ் ஜோசப் கிறித்தவர். ஆகவே அவர் இப்போ ராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று அவருக்கு மடல் எழுதினார்.

சீக்கியர்கள் வந்து உணவு சமைத்துக் கொடுத்து வந்தனர். நீங்கள் வேறு சமயம் இதில் நீங்கள் உதவிச் செய்யக்கூடாது என்று கூறி அவர்களையும் திரும்பப் போகச் சொல்லிவிட்டார்.

“இந்த இயக்கத்தை (வைக்கம் சத்தியாகிரகத்தை) ஆதரித்துக் காங்கிரசில் ஒரு தீர்மானம் நிறைவேற்றக் கூடாதா என்று கேரளப் பிரதிநிதிகள் கேட்டார்கள். அந்த யோசனை எனக்குப் பிடிக்கவில்லை என்று நான் அவர்களிடம் கூறினேன்” (யங் இந்தியா, 3.7.1924). “வைக்கம் சத்தியாகிரகிகள் என்னை நம்புவார்களே யானால் காய்ந்து ஒடிந்த நாணல் புல்லின் மீது சாய்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் உணர வேண்டும்”.

“வைக்கத்தைப் பற்றியும் நெருங்காமையை எதிர்த்தும் அங்கே நடந்து வரும் போராட்டத்தைப் பற்றியும் ‘யங் இந்தியா’வில் நீண்டகாலமாக நான் வேண்டுமென்றே எதுவும் எழுதவில்லை. இப்போதும் கூட அதையொட்டி நேரடியாக நான் எதுவும் கூற விரும்பவில்லை” என்று காந்தி தன் ‘யங் இந்தியா’ 19.2.1925இல் எழுதினார். இந்தக் காந்தி தான் வைக்கம் சத்தியாகிரகத்தை நடத்தியதாக காங்கிரசுக் காரர்கள் குறிப்பாக ஜெயமோகன் போன்றவர்கள் எழுதிவருவது வரலாற்று அறியாமையே ஆகும்.

- தொடரும்