மக்களைச் சுரண்டும் தனியார் மருத்துவக் கொள்ளையர்கள்

1991ஆம் ஆண்டு முதல் நடுவண் அரசும், மாநில அரசுகளும் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் எனப்படும் புதிய பொருளாதாரக் கொள்கையை நடை முறைப்படுத்தி வருகின்றன. இதனால் முதன்மை யான மூன்று பெருங்கேடுகள் - பொதுமக்களைப் பெரிதும் பாதிக்கும் வகையில் விளைந்துள்ளன.

முதலாவதாக 60 விழுக்காடு மக்களின் வாழ்வா தாரமாக விளங்கும் வேளாண்மை சீரழிந்துவிட்டது. நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் (GDP) 30 விழுக்காடாக இந்த வேளாண்மையின் பங்கு இப்போது 13% ஆகச் சரிந்துள்ளது. அரசின் புள்ளி விவரப்படி, 1995 முதல் 2011 முடிய கடன் சுமையைத் தாங்க முடியாமல் 2,70,940 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் (தி இந்து 3.7.2012).

அடுத்ததாகக் கல்வி வேகமாகத் தனியார் மயமாகி வருகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் முற்றிலும் வணிகமயமாகிவிட்டன. இவை ஏழை, நடுத்தரக் குடும் பங்களைச் சுரண்டிக் கொள்ளையடித்துக் கொண்டிருக் கின்றன. 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர் களுள் 70 விழுக்காட்டினர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்றனர் என்பது உண்மை தான். இவர்களில் 90%க்கு மேல் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்புகளின் மாணவர்களேயாவர்.

ஆனால் உயர்கல்வியில் கிட்டத்தட்ட 90% மாண வர்கள் தனியார் தன்நிதிக் கல்லூரிகளில்தான் படிக்கின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 540 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 510க்கு மேற்பட்டவை பணம் பறிக்கும் தன்நிதிப் பொறியியல் கல்லூரிகளேயாகும். இதேபோன்று தனியார் தன்நிதிக் கலை அறிவியல் கல்லூரிகள், தொழில் பட்டயப் படிப்புக் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் ஆகி யவை ஆயிரக்கணக்கில் கொள்ளைக் கூடாரங்களாக உள்ளன. இவற்றின் கல்விக் கொள்ளையைக் கட்டுப் படுத்த முயல்வது போல அரசுகள் நாடகமாடிக் கொண் டிருக்கின்றன.

மூன்றாவதாகச் சிறிய நகரங்கள், பெரிய நகரங்கள், மாநகரங்கள் ஆகிய பகுதிகளில் தனியொரு மருத்துவர் நடத்தும் சிறிய மருத்துவமனை முதல் பெரும் பரப்பில் பல அடுக்குமாடிகள் கொண்ட - நட்சத்திரத் தகுதி பெற்ற - கார்ப்பரேட் மருத்துவமனைகள் வரை, தனியார் மருத்துவம் மக்களின் உயிரை விலைபேசி, மக்களின் பணத்தை மட்டுமின்றி அவர்களின் உடைமைகளை யும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன. கல்வி கடைச்சரக்காகிவிட்டது போல் மருத்துவச் சேவை என்பதும் முழுக்க முழுக்க விலை உயர்ந்த வணிகச் சரக்காகிவிட்டது. பணம் படைத்தவர் மட்டுமே இதை வாங்க முடியும் என்ற கொடிய நிலை ஏற்பட்டுவிட்டது.

 

மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (GDP) மருத்துவச் செலவின் விழுக்காடு (%)

10,000 மக்கள் தொகைக்கு உள்ள

 

நாடு

அரசு

தனியார்

மருத்துவமனைப்

படுக்கைகள்

செவிலியர்

மருத்துவர்

செருமனி

7.8

2.7

82

108

35

இங்கிலாந்து

7.2

1.5

34

103

21

அமெரிக்கா

7.3

7.9

31

98

27

சப்பான்

6.7

1.6

138

41

21

இரஷ்யா

3.1

1.7

97

85

43

பிரேசில்

3.7

4.7

24

65

17

தென்ஆப்பிரிக்கா

3.3

4.9

28

41

8

தாய்லாந்து

3.0

1.1

22

15

3

சீனா

2.0

2.3

41

14

14

வியத்நாம்

2.8

4.4

29

10

12

இந்தியா

1.4

2.8

9

13

6

உலக சராசரி

5.0

3.3

24

28

12

இந்தியா விரைவில் உலக வல்லரசு நாடாக உருவாகிவிடும் என்று இந்திய ஆளும் வர்க்கத்தினர் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் 5000 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள எதிரியின் இலக்கையும் குறிதவறாமல் தாக்க வல்ல அக்னி 5 ஏவுகணை வெற்றியுடன் வெள்ளோட்டம் விடப்பட்டது. ஆனால் வெகுமக்களுக்கு மருத்துவ வசதிகளை அளிப்பதில் எந்த அளவுக்கு இந்தியா பின்தங்கியுள்ளது என்பதைக் கீழே உள்ள பட்டியல் படம் பிடித்துக் காட்டுகிறது.

உலக அளவில் சராசரியாக ஒரு நாட்டரசு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (GDP) மக்கள் நல வாழ்வுக்காக 5% தொகையைச் செலவிடுகிறது. இந்தியா விலோ 1.4% தான் அரசு செலவிடுகிறது. உலக சராசரியான 10,000 பேர்க்கு 24 படுக்கைகள் என்ற நிலையை இந்தியா அடைய வேண்டுமானால் அடுத்த 5 ஆண்டுகளில் 6 இலட்சம் கோடி உருபா முதலீடு செய்ய வேண்டும்.

உலக மக்கள் நல வாழ்வு அமைப்பின் (World Health Organization - WHO) அறிக்கையின்படி, ஒரு நாட்டில் 10,000 பேருக்கு 25 மருத்துவப் பணியாளர் கள் இருக்க வேண்டும். மருத்துவப் பணியாளர்கள் என்பவர்களில் மருத்துவர்கள், செவிலியர், துணை செவிலியர் அடங்குவர். இந்தியாவில் 10000 மக்களும் 19 மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் நகரங்களிலேயே உள்ளனர்.

இந்தியாவில் ஏழு இலட்சம் மருத்துவர்கள் இருக் கின்றனர். இவர்களில் 75% பேர் நகரங்களில் உள்ள னர். புறநோயாளிகளில் 80% பேர் தனியார் மருத்து வர்களிடம் செல்கின்றனர். உள்நோயாளிகளில் (மருத்துவ மனையில் தங்குவோர்) ஊரகப் பகுதியினரில் 60% பேரும், நகரப் பகுதியினரில் 70% பேரும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கையில் சேர்ந்து மருத்துவம் பெறுகின்றனர்.

நாட்டின் மொத்த மருத்துவச் செலவில் 83% தொகையை மக்கள் தம் சொந்தப் பணத்திலிருந்து செலவிடுகின்றனர். அரசு 17% மட்டுமே செலவிடுகிறது.

கடந்த மே மாத இறுதியில் இந்தி நடிகர் அமீர்கான் நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில், இந்தியாவில் மருத்துவர்கள் மனிதநேயத்தைவிட மக்களைச் சுரண்டுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்ற கருத்து வலிமையான சான்றுகளுடன் விவாதிக் கப்பட்டது. இதற்கு இந்திய மருத்துவர்கள் சங்கம், “எல்லாத் துறைகளிலும் இருப்பது போல மருத்துவர் களிலும் ‘சில கறுப்பு ஆடுகள்’ இருக்கின்றன. இதைப் பொது விதியாகக் காட்டுவது கண்டிக்கத் தக்கது. நடிகர் அமீர்கான் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று அறிக்கைவிட்டது. மன்னிப்புக் கேட்க அமீர்கான் மறுத்து விட்டார். எனவே கடந்த இரண்டு மாதங்களாக “மருத்துவ நெறிகளும் - பிறழ்வுகளும்” குறித்து ஊடகங்களில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

நடுவண் அரசின் மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் 59ஆம் அறிக்கை, கடந்த மே மாதம் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. 18 மாதங்கள் ஆய்வு செய்ததன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த அறிக்கைதான் ‘மருத்துவ நெறிகள்’ குறித்த விவாதங்களுக்கு மூலமாகத் திகழ்கிறது. நடுவண் மக்கள் நலவாழ்வு அமைச்சகத்தின் கீழ் உள்ள நடுவண் மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் (Central Drugs Standard Control Organisation - CDSCO) செயல்பாடுகளை நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை கடுமையாகக் கண்டித்துள்ளது.

இந்த மருந்துத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் அலுவலகம் 2001 சனவரி முதல் 2010 நவம்பர் வரையிலான காலத்தில் 2167 மருந்துகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இம்மருந்துகளின் பட்டியலில் அங் கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிவு செய்த 42 மருந்துகளின் கோப்புகளை ஆய்வு செய்வதற்காக நிலைக்குழு கேட்டது. இவற்றுள் மூன்று மருந்துகளுக்கான (Pefloxacim, Lomefloxacim, Sparfloxacim) ஒப்புதல் அளிக்கப்பட்ட கோப்புகளை அலுவலகத்தில் கண்டெடுக்க முடியவில்லையாம். இந்த மூன்று மருந்து கள் வளர்ந்த நாடுகளில் விற்கப்படுவதில்லை. ஆனால் இந்தியாவில் விற்கப்படுகின்றன.

மீதி 39 மருந்துகளில் 11 மருந்துகளுக்கு மூன்றாம் நிலை ஆய்வு செய்யப்படாமலேயே ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. இந்த 39 மருந்துகளில் 13 மருந்துகளை அமெரிக்கா, கனடா, பிரிட்டன், அய்ரோப்பிய ஒன்றியத் தின் 17 நாடுகள், ஆஸ்திரேலியா முதலான நாடுகளில் விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 39 மருந்துகளில் 25 மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப் படுவதற்குமுன் மருத்துவ வல்லுநர்களின் கருத்துரை கேட்கப்படவில்லை.

2008 சனவரி முதல் 2010 அக்டோபர் வரையி லான காலத்தில் 33 வெளிநாட்டு மருந்துகளுக்கு, இந்தியாவில் உள்ள நோயாளிகளிடம் அம்மருந்து களுக்கான எந்தவொரு ஆய்வையும் செய்யாமலேயே, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 1945ஆம் ஆண்டின், மருந்துகள் மற்றும் ஒப்பனைப் பொருள் சட்டத்தில் அட்டவணை ‘ஒய்’ (ல)இல் உள்ள விதிகளின் அடிப் படையில் இந்த 33 மருந்துகளுக்கு ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது. மிகவும் வேகமாகப் பரவக் கூடிய - உயிரி ழப்பை ஏற்படுத்துகின்ற கொடிய தொற்றுநோய்கள் போன்றவை வெகுமக்களைப் பாதிக்காமல் தடுப் பதற்காக - நெருக்கடியான சூழல்களில் மட்டுமே - பொதுநலன் கருதி ஆய்வுகளை மேற்கொள்ளாமலே மருந்துகளுக்கு ஒப்புதல் வழங்குவதற்காக இந்த விதி வகுக்கப்பட்டது. ஆனால் இந்த 33 மருந்துகளில் ஒன்று கூட ‘நெருக்கடியான சூழல்’ அல்லது ‘பொதுநலன்’ என்கிற வரையறையின்கீழ் வரவில்லை. மருந்து நிறுவனங்களிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு இம் மருந்துகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ வல்லுநர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துரைகளும் ஆராய்ச்சி அடிப்படையில் இல்லை. ஒரே மருந்து குறித்த வல்லுநர்களின் கருத்துரைகள் ஒருவரே எழுதிக்கொடுத்தது போல் உள்ளன. வல்லு நர்களின் மடல்தாள்களும் கையொப்பமும் மட்டும் வேறாக உள்ளன.

எனவே மருந்து தயாரிப்பு நிறுவனங்களும், நடுவண் மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரி களும் மருத்துவ வல்லுநர்களும் கள்ளக் கூட்டு வைத்துக் கொண்டுள்ளனர் என்பதற்கு வலிமையான சான்றாதாரங்கள் உள்ளன என்று நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையில் திட்டவட்டமாகக் கூறப் பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் பல்வகையான தில்லுமுல்லுகளைச் செய் வதில் கைதேர்ந்தவைகளாகும். அதனால்தான் மற்ற தொழில்களைவிட மருந்து நிறுவனங்கள் ஆண்டு தோறும் அதிக இலாப விகிதம் ஈட்டுகின்றன. மருத்துவ நிறுவனங்கள் எழுதித்தரும் ஆய்வறிக்கையில் மருத்துவ வல்லுநர்கள் கையொப்பம் இடக் குறைந்தது அய்ந்து இலட்சம் டாலர் தரப்படுகிறது. ஊடகங்களுக்குப் பணம் கொடுத்து மருந்துகள் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் பரப்பப்படுகின்றன. அமெரிக்காவில் தனி யார் துறை கோலோச்சிய போதிலும், ஆராய்ச்சிகளில் பெரும் பகுதி அரசின் செலவிலேயே நடக்கின்றன. எனவே மருந்து நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள், வணிக நோக்கமில்லாத அறக்கட்டளைகள் நடத்தும் ஆராய்ச்சிகளிலும் ஊடுருவி, பணம் கொடுத்துத் தமக்கு ஏற்றவாறு ஆராய்ச்சிகளின் முடிவுகளை மாற்றிவிடு கின்றன.

2008ஆம் ஆண்டு உலக அளவில் 60,000 கோடி டாலருக்கு மருந்துகள் விற்பனையாயின. இதில் 3இல் 2 பங்கு 20 பெரிய பன்னாட்டு மருந்து நிறுவ னங்களின் விற்பனையாகும். இந்நிறுவனங்கள் அமெரிக் காவையும் மேற்கு அய்ரோப்பிய நாடுகளையும் தாயகமாகக் கொண்டவை. அமெரிக்காவில் பன்னாட்டு நிறுவனங்கள்தாம் அரசின் பொருளியல் கொள்கை களை வகுக்கின்றன. அரசியலில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன.

பேயர் (Bayer) எனும் பன்னாட்டு மருந்து நிறுவனம் கல்லீரல் மற்றும் சிறுநீரகப் புற்றுநோய்க்கான மருந் தாக நெக்சவார் (Nexavar) எனும் மாத்திரைக்குக் காப்புரிமை பெற்று இந்தியாவில் விற்பனை செய்கிறது. நோயாளிகளுக்கு ஒரு மாதத்திற்கான 120 மாத்திரைகளின் விலை ரூ.2.84 இலட்சம். அய்தராபாத்தில் உள்ள நேட்கோ மருந்து நிறுவனம் இதே மருந்தை ரூ.8,800க்குத் தயாரித்தளிக்க முன்வந்தது. இதற்கு நடுவண் அரசு கடந்த மார்ச்சு மாதம் அனுமதி அளித்தது. ஆனால் அமெரிக்க அரசின் ஒபாமா நிருவாகம் இந்திய அரசின் இச்செயலைக் கண்டிக்கிறது. இனி, பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், குறைந்த செலவில் மருந்துகளைத் தயாரிக்க உரிமம் வழங்கக் கூடாது என்று எச்சரித்துள்ளது (தி இந்து 13.7.2012). மேலும் 16.7.2012 அன்று பாரக் ஒபாமா இந்தியச் செய்தியாளர் கூட்டமைப்புக்கு (Press Trust of India) அளித்த செவ்வியில், “இந்தியா அயல்நாட்டு மூலதன வரவுக்கு ஏற்ற சூழ்நிலையை மேலும் விரைந்து விரிவுபடுத்த வேண்டும். சில்லறை வணிகத்தில் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் நுழையவிடாமல் தடுக்கப்படுவது முறை யல்ல” என்று கூறியுள்ளார். அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள் அந்நாட்டின் பொருளியலை மட்டுமின்றி அரசியலையும் தீர்மானிக்கின்றன என்பதற்கு இது ஒரு சான்று.

மருத்துவக் கல்வி :

மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி அளித்தல், அவற்றைக் கண்காணித்தல் ஆகிய அதி காரங்கள் மாநில அரசுகளிடம் இருந்தன. ஆனால் 1993ஆம் ஆண்டு, நடுவண் அரசு, 1956ஆம் ஆண்டின் இந்திய மருத்துவக் குழுச் (Indian Medical Council) சட்டத்தில் பிரிவு 10-ஏ என்ற திருத்தத்தை இணைத்தது.

இதன்படி மருத்துவக் கல்வி மீது மாநில அரசுக்கு இருந்த அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, நடுவண் அரசிடம் குவிக்கப்பட்டன. மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, செவிலியர் பயிற்சிக் கல்லூரி ஆகியவற் றைத் தொடங்குவதற்கு முறையே இந்திய மருத்துவக் கல்விக் குழு (Medical council of India - MCI), இந்தியச் செவிலியர் குழு (INC), இந்தியப் பல் மருத்துவக் குழு (DCI) ஆகியவற்றின் ஏற்பிசைவு பெற வேண்டும் என்பது இச்சட்டத்திருத்தத்தின் மூலம் கட்டாயமாக்கப் பட்டது. (இதுபோலவே பொறியியல் கல்லூரிகள் தொடங்க நடுவண் அரசின் இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்திடம் (AICTE) ஏற்பிசைவு பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது).

உயர்நிலைக் கல்வி நிறுவனங்கள் வணிகக் கொள்ளைக் கூடாரங்களாகப் புற்றீசல் போல் உருவா னதற்கு நடுவண் அரசு கொண்டுவந்த கல்வியில் தனியார்மயக் கொள்கையே காரணமாகும். மருத்து வக் கல்லூரி தொடங்குவதற்கு, சிறந்த கட்டமைப்பு ஏந்துகள் இருக்க வேண்டும் என்பதைவிட, இந்திய மருத்துவக் கல்விக் குழுவின் தலைவருக்கு எத்தனை கோடி உருபா கையூட்டாக அளிப்பதற்கு அணியமாக உள்ளார் என்ற தகுதியே முதன்மையாகும். பல ஆயிரம் கோடி உருபா இவ்வாறு கையூட்டாகக் கொடுக்கப்பட்டது. மக்கள் நலவாழ்வு அமைச்சர் முதல் உயர் அதிகாரிகள் வரை இதில் பங்குபெற்றனர். அதனால் இந்திய மருத்துவக் கல்விக் குழுமத்தின் தலைவராக, கேதன்தேசாய் என்பவர் கிட்டத்தட்டப் பத்து ஆண்டுகள் இருந்தார். இவரின் ஊழல்கள் ஊடகங்களில் ஆதாரங்களுடன் வெளிப்பட்டதால் 2010 மே மாதம் கேதன் தேசாய் கைது செய்யப்பட்டார். (2ஜி அலைக்கற்றை ஊழல் தொகை ரூ.1,76,000 கோடி யையும் அமைச்சர் ஆ. இராசாவா எடுத்துக் கொண்டார்?).

இந்தியாவில் 193 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 70% தனியார் மருத்துவக் கல்லூரிகள். தமிழ்நாட்டில் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளும் 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. இந்த 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நான்கைந்து தவிர மற்ற கல்லூரிகளில் மிகக் குறைந்த அளவி லான கட்டமைப்பு ஏந்துகளோ, தகுதி வாய்ந்த பேரா சிரியர்களோ கூட இல்லை. ஆனால் இந்தியா முழு வதிலும், தனியார் மருத்துவக் கல்லூரியில் சேருவ தற்கு ரூ.30 முதல் 45 இலட்சம் நன்கொடையாகத் தரவேண்டும். இதுதவிர கல்விக் கட்டணம் உள்ளிட்ட பிற செலவுகள் உள்ளன.

மருத்துவ மேற்படிப்புக்கு (M.D.; M.S.) துறையைப் பொருத்து இரண்டு கோடி முதல் ஆறு கோடி வரை நன்கொடை வாங்குகிறார்கள். தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பின் அந்த மாணவர்கள் படித் தாலும் படிக்காவிட்டாலும் பட்டம் கொடுக்கப்பட்டு விடு கிறது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பி னருக்கு அரசமைப்புச் சட்டப்படி அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டால் தகுதி, திறமை பாழாகிறது என்று கூச்சல் போடும் மேல்சாதி அறிவாளி ஆதிக்கக் கூட்டம், பெரும் பணக்காரக் குடும்பத்து மடையனும் மருத்துவப் பட்டதாரியாவது பற்றி வாய்திறப்ப தில்லையே ஏன்? பல இலட்சம் - சில கோடிகள் பணம் செலவிட்டு மருத்துவர்களாகும் இம்மேட்டுக் குடி யினருக்குப் பொதுமக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி வரும்? தப்பித்தவறிக் கூட மக்கள் நேய மருத்துவ சிந்தனை வந்துவிடக்கூடாது என்பதற்காக மருத்துவ நெறிகள் குறித்து இருந்த பாடப் பிரிவையும் நீக்கிவிட்டார்கள் (தி இந்து 14.7.12). மருத்துவப் படிப்பிற்காகச் செலவிட்ட முதலீட்டைப் போல பல மடங்கு நோயாளிகளிடம் சுரண்ட வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் குடிகொண்டிருக்காதா?

ஊரக மக்கள் நல வாழ்வு மருத்துவக் கல்வி (BRHC) :

ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்ட ஊர்களில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகள் பணி செய்ய வேண்டும் என்று அரசு அவ்வப்போது மேற் கொண்ட முயற்சிகளை மருத்துவ மாணவர்களும், மருத்துவர் சங்கமும் இணைந்து எதிர்த்து முறியடித் தன. எனவே ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களுக்குத் தரமான மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற் காக, தேசிய ஊரக நலவாழ்வு இயக்கத்தின் (NRHM) செயல்திட்டக்குழு, 2007ஆம் ஆண்டு பன்னிரெண் டாம் வகுப்பில் உயிரியல் பாடம் எடுத்துத் தேறிய மாணவர்களுக்கு 3.5 ஆண்டுகள் மருத்துவக் கல்வி அளிப்பதற்கான திட்டத்தைத் (Bachelor in Rural Health Care - BRHC) தொடங்க வேண்டும் என்று பரிந் துரைத்தது. நடுவண் மக்கள் நலவாழ்வு அமைச்ச கமும் இதற்கு ஒப்புதல் அளித்தது.

ஆரம்பச் சுகாதார நிலையங்களின் கீழ், துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. இந்தத் துணைச் சுகாதார நிலையங்களில் 3.5 ஆண்டு மருத்துவச் சேவைக் கல்வி பெற்றவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். இவர்கள் ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்கு மாற்றப்படமாட்டார்கள். மேலும் 3.5 ஆண்டுக் கல்வி பெற்றவர்கள் அவர் களின் சொந்த ஊர்களிலேயே பணியமர்த்தப்படு வார்கள். ஆனால் 3.5 ஆண்டு மருத்துவ சேவைக் கல்வியால் மருத்துவத் தொழிலின் தரம் சீரழியும் என்று கூறி இந்திய மருத்துவர் சங்கம் இதைக் கடு மையாக எதிர்த்து வருகிறது. தில்லி உயர்நீதிமன்றம் 2012 பிப்பிரவரி 27 அன்று 3.5 ஆண்டு படிப்புக்கான பாடத் திட்டத்தை இந்திய மருத்துவக் கல்விக் குழு இரண்டு மாதங்களுக்குள் வகுத்துத்தர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. வைக்கோல் போரில் உள்ள நாய் தானும் தின்னாது; மாட்டையும் தின்ன விடாது என்பது போல், மருத்துவர்கள் நடந்து கொள் கிறார்கள். தற்போது ஆரம்பச் சுகாதார நிலையங்கள், வட்ட மற்றும் வட்டார அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிக் கொண்டே, காலையும் மாலையும் தனி யாக மருத்துவம் செய்து சம்பளத்தைப் போல பல மடங்கு பெறுகின்ற வருவாய் குறைந்து போகுமே என்பதுதான் மருத்துவர்கள் எதிர்ப்பதற்கு முதன்மை யான காரணமாகும்.

மருத்துவராகத் தொழில் செய்வதற்கு - மக்களுக்கு மருத்துவம் செய்வதற்கு மட்டும் குறைந்தது எம்.பி.பி.எஸ். பட்டம் பெறவேண்டும். அதைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆனால் சிறிய மருத்துவ மனை முதல் கார்ப்பரேட் மருத்துவமனை வரை எந்தவொரு மருத்துவமனையை ஏற்படுத்தி நடத்து வதற்கோ, சிறியதும் பெரியதுமான மருத்துவ ஆய்வ கங்களை (னுயைபnடிளவiஉ ஊநவேசநள) அமைப்பதற்கோ அரசிடம் தனியாக உரிமம் பெற வேண்டியதில்லை. இவர்க ளாக விரும்பினால் பதிவு செய்து கொள்ளலாம். இவற்றை நெறிப்படுத்தவும் கண்காணிக்கவும் சட்டம் இல்லை.

மருத்துவமனைகள் - ஆய்வகங்கள் நிறுவுதல் பதிவு செய்தல் மற்றும் முறைப்படுத்தல் சட்டம் (The Clinical Establishments Registration and Regulation Act) 2010ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. 2012 பிப்பிரவரி 28 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. இச்சட்டம் தனியொரு மருத்துவர் நடத்தும் சிறிய மருத் துவமனை, படுக்கை வசதிகளுடன் கூடிய பல்வேறு அளவுகளிலான மருத்துவமனைகள், நோய்கள் தொடர்பான நுண்ணுயிரிகள், வேதிப் பொருள்களை ஆய்வு செய்யும் ஆய்வகங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்வதற்கும் முறைப்படுத்துவதற்குமான அதிகாரங் களை இச்சட்டம் கொண்டுள்ளது. மேலும் இம்மருத்து வமனைகள் ஆய்வுக் கூடங்கள் ஆகியவற்றில் உள்ள கருவிகள், பணியாற்றுவோரின் தகுதிகள் இச்சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளவாறு தரமும் தகுதியும் பெற்றிருக்க வேண்டும். இந்திய மருத்துவர் சங்கம் இச்சட்டத் திற்குத் தடையாணை பெற்றிருப்பதால், இச்சட்டம் இன்னும் நடப்புக்கு வரவில்லை.

கார்ப்பரேட் மருத்துவமனைகள் அரசிடமிருந்து குறைந்த விலைக்கோ அல்லது நீண்டகாலக் குத்த கைக்கோ நிலத்தைப் பெற்றுள்ளன. வெளிநாடுகளி லிருந்து இறக்குமதி செய்யப்படும் மருத்துவக் கருவி களுக்கு இறக்குமதி வரி முற்றிலுமாக விலக்கு அளிக் கப்படுகிறது. இதற்காக இம்மருத்துவமனைகள் 25% படுக்கைகளை ஏழைகளுக்கு ஒதுக்கி மருத்துவம் செய்ய வேண்டும். விரல்விட்டு எண்ணக்கூடிய சில மருத்துவமனைகள் தவிர மற்றவை இந்த நிபந்தனை யை நிறைவேற்றுவதில்லை. இவற்றில் பணிபுரியும் செவிலியர்களுக்குக் குறைந்த ஊதியம் தரப்படுவது டன் அடிமைகள் போல் நடத்தப்படுகின்றனர். நோயா ளிகளைத் தேவையில்லாத ஆய்வுகளைச் செய்யுமாறு மருத்துவர்களும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

2011-12ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனை யான மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருள்களின் மதிப்பு ரூ.2.6 இலட்சம் கோடி. இது 2015-16இல் 4.7 இலட்சம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்தியாவில் 10,500 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன. ஆறு இலட்சம் சில்லறை மருந்துக் கடைகள் உள்ளன. வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு இணையான தரத்தில் தில்லி, மும்பை, சென்னை போன்ற நகரங்களில் மருத்துவ வசதிகள் கிடைக்கின்றன. ஆனால் 80 விழுக்காடு மக்கள் இவற் றில் மருத்துவம் செய்து கொள்வது பற்றி அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும்.

மக்கள் நலவாழ்வு வசதிகளை அனைவருக்கும் அளித்தல் என்பது, நோய் கண்டபின் நல்ல மருத்துவ வசதி கிடைக்குமாறு செய்தல் என்பது மட்டுமன்று. நோய்கள் அண்டா வகையிலான ஓரளவுக்கு வள மான வாழ்நிலையும் தூய்மையான சூழலும் கிடைக் கச் செய்வது முதன்மையாகும். ஊட்டமான உணவு, நல்ல குடிநீர், ஒளியும் காற்றும் உள்ள வீடு, கழிவுநீர் கால்வாய், தூய்மையான சுற்றுச்சூழல், கல்வியறிவு, மின்சாரம் முதலானவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இக்கூறுகளில் பெரும்பான்மை மக்களின் வாழ்நிலை மிகவும் பின்தங்கியுள்ளது. எனவேதான் பிறக்கின்ற குழந்தைகளில் 42% குழந்தைகள் எடை குறைவாக உள்ளன. குழந்தை இறப்பு விகிதமும் (IMR), பேறு காலத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதமும் (MMR) இந்தியாவில் மிக அதிகமாக உள்ளன. இந்தி யாவில் 60% பேர் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை நீடிக்கிறது. அதனால் மழைக்காலம் தொடங்கிய தும் தண்ணீர் மூலம் தொற்றும் எண்ணற்ற நோய்கள் மக்களை வாட்டுகின்றன.

இங்கிலாந்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பே பொது சுகாதாரச் சட்டம் (Public Health Act) என்பது இயற்றப்பட்டது. இந்தியாவில் சுதந்தரம் பெற்று 64 ஆண்டுகளுக்குப் பிறகும் இத்தகைய ஒரு சட்டம் உண்டாக்கப்படவில்லை. மக்கள் நலவாழ்வுக்கான கூறுகள் அனைத்தையும் உள்ளடக்கிய தன்மையில் தேசிய நலவாழ்வுச் சட்ட வரைவு (National Health Bill) பல ஆண்டுகளாக வரைவு நிலையிலேயே உள்ளது. எந்தவொரு அரசியல் கட்சியும் இதைப்பற்றிக் கவலைப் படவில்லை.

மக்கள் நலவாழ்வு ஏந்துகள் அனைவருக்கும் கிடைப்பதற்குத் தடையாக உள்ள உயர் அதிகார வர்க்கம், மருந்து நிறுவனங்கள், தனியார் மருத்துவர்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகள் ஆகியோர்க்கு எதிராகப் போராடுவதற்கு மக்களிடையே எழுச்சியூட்ட வேண் டும். இந்தியாவில் உள்ள 640 மாவட்டத் தலை நகரங்களிலும் அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருத்துவம் அளிக்கக் கூடிய அரசு மருத்துவமனை களை ஏற்படுத்துமாறு நடுவண் அரசையும் மாநில அரசுகளையும் வலியுறுத்த வேண்டும். அதேசமயம், கியூபா நாட்டில் செய்தது போல், போக்குவரத்துச் சாலையே இல்லாத ஒரு சிறு குடிலில் வாழ்வோ ருக்கும் அடிப்படையான மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும். அதுதான் உண்மையான மக்கள் நாயகமாகும்.

Pin It