மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு களைக் குறைக்க வேண்டும்; உணவுப் பொருள்கள், உரங்கள், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, டீசல், மின்சாரம் முதலானவற்றுக்கு அரசு அளிக்கும் மானியங்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று ஓயாது கூறி வருபவர் நடுவண் அரசின் திட்டக் குழுவின் துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா. ஆனால் தில்லியில் உள்ள அவருடைய அலுவலகத் தில் கழிப்பறைகளை நவீனப்படுத்துவதற்காக மட்டும் ரூ.35 இலட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.

பொருளாதாரச் செயல்பாடுகளுக்கான நடுவண் அமைச்சரவைக் குழு, ஊர்ப்புறங்களில் கழிப்பறை கட்டுவதற்காக ஒரு வீட்டிற்கு அளிக்கும் மானியத் தொகையை ரூ.4600 என்பதிலிருந்து ரூ.10000ஆக அண்மையில் தான் உயர்த்தியது. மழைநீர் நிலத் தடியில் மெல்லமெல்ல இறங்குவதுபோல, நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சி மேல்தட்டிலிருந்து படிப்படியாகக் கீழ்த்தட்டில் உள்ள மக்களுக்கு கிடைக் கும் என்பதே, 1991 முதல் இந்தியாவில் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் புதிய பொருளாதாரக் கொள்கை யின் அடிப்படைக் கோட்பாடாகும். அதனால்தான் அலுவாலியா அலுவலகத்தில் கழிப்பறையை நவீனப் படுத்த ரூ.35 இலட்சம் செலவு! ஆனால், ஊரகப் பகுதியில் ஒரு வீட்டிற்கு ரூ.10,000 மட்டுமே! என்னே முரண்பாடு!

கடந்த மார்ச்சு மாதம் இந்தியா அக்னி-5 ஏவு கணையை வெற்றியாக விண்ணில் செலுத்தி ஆய்வு செய்தது. இது கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து தாக்கும் ஆற்றல் வாய்ந்தது.

2006ஆம் ஆண்டிலேயே 3500 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடிய அக்னி-3 ஏவு கணையை ஏவியது. அக்னி-5 அய்ரோப்பா கண்டத் தின் எந்தவொரு நாட்டையும் தாக்கும் வல்லமை வாய்ந்ததாகும். இந்த ஏவுகணைகளுக்காகப் பல ஆயிரம் கோடி ரூபாயை நடுவண் அரசு செலவு செய்து வருகிறது. கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை உலகில் ஆறு நாடுகள் தான் வைத் துள்ளன. இந்தியா உலக வல்லரசாக வேண்டும் என்பதுதானே ஒவ்வொரு இந்தியனின் உயிர் மூச்சு?

அப்படிக் கனவு காணும் ஓர் இந்தியன் இன்று என்ன காண்கிறான்? உலகிலேயே திறந்த வெளியில் மலம் கழிக்கும் மக்கள் இந்தியாவில் அதிகமாக இருக்கின்றனர். ஏவுகணை விண்ணில் பாய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டே ‘வெளிக்கு’ இருக் கிறார்களோ? உலகில் 2010 கணக்குப்படி, 94.9 கோடிப் பேர் திறந்தவெளியில் மலம் கழிக்கின்றனர். இவர்களுள் இந்தியரின் எண்ணிக்கை 62.6 கோடி. அதாவது இந்தியாவில் 100க்கு 60 பேர் திறந்த வெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் 2 இலட்சத்து 40 ஆயிரம் ஊராட்சிகள் உள்ளன. இவற்றுள் 24,000 ஊராட்சிகளில் மட்டுமே திறந்தவெளியில் மலம் கழிப்பதில்லை. நகரங்களிலும் இதேநிலைதான். மும்பை மாநகரில் 54 விழுக்காடு மக்கள் குடிசைப் பகுதிகளில் வாழ்கின்றனர். மலபார் ஹில் பகுதியில் 6000 பேருக்கு 52 கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. அதனால் மாநகரங்களின் குடிசைப் பகுதிகளில் கால் வைக்க முடியாதவாறு மலக்குவியல் கள் காணப்படுகின்றன.

நடுவண் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அடுத்த பத்து ஆண்டுகளில் திறந்த வெளியில் மலம் கழித்தல் என்பதை அடியோடு ஒழித்துவிடப் போவதாகக் கூறியுள்ளார். ‘குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு’ என்பார்கள். நம் அரசியல் வாதிகளின் வாக்குறுதிகளோ வாயிலிருந்து வெளிப்பட்டதும் காற்றில் கரைந்துவிடுகின்றன. பல்வேறு தொற்றுநோய்களுக்கு மூலகாரணமாக உள்ளது திறந்தவெளியில் மலம் கழித்தல் என்ற நிலை என்று ஒழியுமோ?

Pin It