“திலகர் பெருமானின் வழிகாட்டுதலில் நிச்சயமாக நாம் சுயராஜ்யம் பெற்றுவிடுவோம்” என்று உற்சாக மாகத் தன் நண்பர்களிடம் கூறிக்கொண்டு இருந்த இளைஞனாகிய வாசுதேவஹரி, திலகரிடம் பணி யாற்றும் சேடக் வருத்தம் தோய்ந்த முகத்துடன் சென்று கொண்டிருப்பதைக் கண்டு, அவரை அழைத்து விசாரித்தார். தன் குடும்பச் செலவை ஈடுகட்ட, தனக் குத் தரப்படும் சம்பளம் போதவில்லை என்பதால் சம்பள உயர்வு கேட்டதாகவும், அதற்கு, நான் அளிக்கும் சம்பளம் அல்லாது, ஆங்கிலேயர்கள் தரும் சன்மானமும் கிடைத்துக் கொண்டிருக்க, சம்பள உயர்வுக்கு என்ன காரணம் என்று திலகர் பெருமான் கேட்டுவிட்டதாகவும், அதைத் தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் சேடக் கூறினார்.

“திலகர் பெருமான் எதையும் தவறாகக் கூற மாட்டார். நீ அந்த மிலேச்சர்களிடம் இருந்து பணத் தைப் பெற்றுக் கொள்கிறாயா? ஏன் பெற்றுக் கொள் கிறாய்?” என்று வாசுதேவ ஹரி கேட்டார்.

“ஐயா, நான் யாரிடமிருந்தும் பணம் பெறவில்லை. என் மகன் படிப்பிற்காக, ஜேம்ஸ் பாதிரியார் உதவி செய்கிறார். அவர் கல்விக் கட்டணம் கட்டுகிறார்; புத்த கங்கள் மற்றும் படிப்பு சம்பந்தமான பிற பொருட்களை வாங்கிக் கொடுக்கிறார், அவ்வளவுதான்” என்று சேடக் கூறினார்.

“நீ ஏன் வெள்ளைப் பாதிரியாரிடம் உதவிக்குப் போகிறாய்? அது உனக்கு அவமானமாகப்படவில்லையா?”

“என் மகன் நன்றாகப் படிப்பதைப் பார்த்த அந்தப் பாதிரியார், தானாகவே முன்வந்து இந்த உதவி களைச் செய்கிறார்.”

“நீ ஏன் உன் மகனைப் பள்ளிக்கு அனுப்பு கிறாய்? விறகு வெட்ட அனுப்ப வேண்டியது தானே? வயதாகிவிட்டதால் விறகு வெட்ட முடியவில்லை என்று பரிதாபப்பட்ட திலகர் பெருமான் உனக்கு வேலை போட்டுக் கொடுத்திருக்கிறார். உன் மகனை விறகு வெட்ட அனுப்பி, சம்பாதிப்பதற்குப் பதிலாக, சம்பள உயர்வு கேட்டிருக்கிறாய் என்றால்... நீ ஏன் இப்படி எல்லாம் செய்கிறாய்?” என்று வாசுதேவஹரி சீறி விழுந்தார்.

“இல்லை ஐயா, என் மகன் படிப்பில் கெட்டிக்கார னாக இருக்கிறான்; அவன் நிறையப் படிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறான். ஜேம்ஸ் பாதிரியாரும் அவனை நன்றாகப் படிக்க வைக்கச் சொல்கிறார். மேற்படிப்பிற்கு இலண்டனுக்கும் அனுப்பிப் படிக்க வைப்பதாகச் சொல்லி இருக்கிறார். ஆகவே தான்...” என்று கூறிக் கொண்டிருந்த சேடக்கை வாசுதேவஹரி இடைமறித்து, “நான் சொல்வது எல்லாம் உனக்கு முக்கியமாகப்படவில்லை; அந்த வெள்ளைப் பாதிரி யார் சொல்வது முக்கியமாகப் போயிற்றா? பிராமணர் களாகிய நாங்களே ஆங்கிலேயர்கள் பள்ளிக்குப் போகாத போது சூத்திரனாகிய நீ உன் பையனைப் படிக்க அனுப்புவது தப்பு என்று தோன்றவே இல் லையா?” என்று உரத்த குரலில் கேட்டார்.

“மன்னிக்க வேண்டும் ஐயா, திலகர் பெருமான் கூட ஆங்கிலக் கல்வியைப் பெற்றவர்தான்” என்று சொன்னவுடன் வாசுதேவஹரிக்குக் கண்மண் தெரி யாமல் கோபம் வந்துவிட்டது. ஒரு சூத்திரன் திலக ருடன் ஒப்பிட்டுப் பேசியதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சேடக்கை வேலையில் இருந்து விரட்டிவிடுவதாகக் கறுவிவிட்டு அவ்விடத் தைவிட்டு அகன்றான். ஏற்கெனவே சோகத்தில் இருந்த சேடக், இந்த பிராமண இளைஞனால் மேலும் என்ன துன்பம் நேரப் போகிறதோ என்ற கவலையும் சேர்ந்து தள்ளாடி நடந்து கொண்டு வீட்டை அடைந்தார்.

“ஆரிட்! என்ன செய்து கொண்டிருக்கிறாய் மகனே!” -வீட்டை அடைந்த சேடக் தன் அன்பு மகனை விசாரித்தார். சும்மா தான் இருக்கிறேன் அப்பா. திலகர் பெருமான் சம்பள உயர்வு கொடுக்க ஒப்புக்கொண் டாரா? என்று கனிவுடன் தந்தையிடம் கேட்டான் ஆரிட். சேடக் பெருமூச்சு விட்டுக் கொண்டே “இல்லை மகனே! ஜேம்ஸ் பாதிரியார் உன் படிப்புச் செலவை ஏற்றுக்கொள்வதைச் சுட்டிக்காட்டி வெள்ளைக்காரர் களிடம் இருந்து பணம் பெற்றுக் கொள்ளும்போது சம்பள உயர்வு ஏன் எனக் கேட்டுவிட்டார். வழியில் வாசுதேவ ஹரியைப் பார்த்தேன். அவரோ நீ விறகு வெட்டப் போனால் வருமானம் வருமே என்று கூறி, உன் படிப்பை நிறுத்தச் சொல்கிறார்” என்று கூறவும், “நம் தலைவிதி! முழு வயிற்றுக்குச் சாப்பிடக் கூடாது என்று இருக்கிறது. என்ன ஆனாலும் சரி, நான் படிப்பதை மட்டும் விடப்போவதில்லை” என்று ஆரிட் ஆவேசத்துடன் கூறினான்.

சேடக்குடன் கோபமாகப் பேசிவிட்டுப் போன வாசுதேவஹரி வீட்டிற்குப் போய்த் தன் தமையனார் களான தாமோதர ஹரியுடனும், பாலகிருஷ்ண ஹரியுடனும் கோபமாகச் சண்டை போட்டான். “நான் பல நாட்களாகக் கவனித்து வருகிறேன். இந்த சேடக் கின் போக்கு சரியில்லை. ஆனால் திலகர் பெருமான் அவனை வேலையை விட்டு விரட்ட மறுக்கிறார். இன்று அவன் என்னடாவென்றால் திலகர் ஆங்கிலக் கல்வி பெற்று இருக்கும்போது, தன் மகன் பெறக் கூடாதா என்று திமிராகக் கேட்கிறான். தாமோதர அண்ணா, நீ எப்படியாகிலும் அவனை வேலையை விட்டு அனுப்பச் செய்ய வேண்டும்” என்று கோபத்துடன் கூறிய தன் தம்பியைப் பார்த்து “திலகர் பெருமானுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது என்று நினைக்கிறாயா?” என்று அமைதி யாகக் கேட்டார். இவ்வாறு கேட்டவுடன் பாலகிருஷ்ண ஹரி “நாம் ஏதாவது சொன்னால் நம் வாயை அடக்குவது போல் ஏதாவது பேசுவது உனக்கு வழக்க மாகிவிட்டது. அவனை வேலையை விட்டுத்தூக்குவது தான் சரி என்று நானும் நினைக்கிறேன். தம்பி கூறும் காரணத்திற்காக இல்லாவிட்டாலும், திலகர் பெருமான் வீட்டில் நடக்கும் விஷயங்களை வெள்ளைப் பரதேசி களிடம் சொல்லிவிடுவானோ என்ற பயத்திலும் அப்படிச் சொல்கிறேன்” என்று பொரிந்து தள்ளினார்.

கோபத்தின் உச்சியில் இருந்த இரு தம்பிகளை யும் பார்த்து “நீங்களே நேரில் போய்த் திலகர் பெருமானிடம் இது பற்றிப் பேசுங்களேன்” என்று மூத்தவன் சொன்னவுடன், “திலகர் பெருமானுடன் நேருக்கு நேர் பேசுவதா?” என்று காற்று வெளி யேறிய பந்து போலச் சுருங்கிப் போனார்கள். “தம்பி களா! திலகர் பெருமானுக்கு விஷயங்கள் எல்லாம் தெரியும். உண்மையில் சேடக்கிடம் இருந்து தான் ஆங்கிலப் பரதேசிகள் பற்றிய பல விஷயங்களை அவனுக்கே தெரியாமல் கறந்து கொண்டு இருக் கிறார்கள். அவனை வெளியே அனுப்பினால் வளர்ந்து விடுவான்” என்பதால்தான் அவனை இப்படியே விட்டு வைத்திருப்பதாகத் திலகர் பெருமானின் நெருங்கிய நண்பர்களிடம் இருந்து தெரிந்து கொண்டிருக்கிறேன், என்று கூறி தாமோதர ஹரி இப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

வாசுதேவஹரி வேலையைவிட்டுத் தூக்கி விடுவ தாகக் கூறிச் சில வாரங்கள் சென்ற பின்னும், வேலையை விட்டுத் தூக்கப்படாததை நினைத்து சேடக் சிறிது நிம்மதி அடைந்தார்.

இப்படி இருக்கையில் 1896ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் சேடக்கின் ஐந்து மகள்களில் இளையவளான கனிமாவிற்கு பிளேக் நோய் தாக்கியது. சிறிது நாட்களில் அவள் மாண்டுவிட்டாள். சேடக்கும் அவருடைய மனைவியும் பிளேக் நோய் மற்ற குழந் தைகளையும் தாக்கிவிடுமோ என்று அஞ்சினார்கள். மகள்களைவிட ஒரே மகனான ஆரிட் மேல் அதிகமான அக்கறை கொண்டிருந்த பெற்றோர்கள், ஜேம்ஸ் பாதிரியாரிடம் தன் மகனை மாதா கோயிலிலேயே வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்கள். இதனால் பிளேக் நோய் பூனா நகரிலும் மற்ற இடங் களிலும் தாக்கி இருப்பதை அறிந்துகொண்ட ஜேம்ஸ் பாதிரியார் கலெக்டரிடம் விவரத்தைக் கூறி மேல் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். பிளேக் நோய் அபாயகரமான அளவில் இல்லை என்பதால் சாதாரண நடவடிக்கைகளை எடுத்து அதைத் தடுக்க முற்பட்டது மாவட்ட நிர்வாகம்.

ஆனால் 1897ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பூனாவிலும் பம்பாய் உட்பட பம்பாய் ராஜதானியின் பிற இடங்களிலும் பிளேக் அபாயகரமான அளவில் பரவிவிட்டது. இதைக் கட்டுப்படுத்துவதற்குக் கடுமை யான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று பூனாவின் உதவிக் கலெக்டராக இருந்த வால்டர் சி. ராண்ட், (று.ஊ. சுயனே) உரத்தக்குரலில் கலெக்டரிடம் கூறினார். தன்கீழ்ப் பணியாற்றும் அதிகாரி இப்படிக் கடுமையாகப் பேசியதைக் கேட்ட கலெக்டர் அதிர்ந்து விட்டார். தம்முடைய நடவடிக்கைகளில் எந்தக் குறை யும் இல்லாத போது இப்படிச் சீறிவிழுவது அழகல்ல என்றும், அதுவும் ஒரு மேல் அதிகாரியிடம் சீறி விழுவது சரியல்ல என்றும் கோபமாகவே பதில் கூறி னார். உடனே குரலைத் தணித்துக் கொண்ட ராண்ட் பிளேக் நோய் பரவும் வேகத்தைப் பார்த்தால் பூனா நகரத்தினர் மொத்தமாக மாண்டுவிட நேரிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், மக்களோ அறியாமை காரணமாக பிளேக் பாதிக்கப்பட்டவர்களை மறைத்து வைத்து, நோயை வேகமாகப் பரப்புகின் றனர் என்றும், அதிரடி நடவடிக்கை எடுக்காமல் இதற்குத் தீர்வு காண முடியாது என்றும் கூற, கலெக் டரும் தன்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துவிட்டதாகவும், ராண்ட் கூறுவது போன்ற அதிரடி நடவடிக்கைகளுக்குக் கவர் னரின் உத்தரவு தேவை என்றும், தான் கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதுவதாகவும், அதை நேரில் எடுத்துச் சென்று கவர்னரின் உத்தரவைப் பெற்று வருமாறும் கூறினார்.

உதவிக் கலெக்டர் ராண்ட், கலெக்டரின் கடிதத்து டன் பம்பாய்க்குச் சென்று கவர்னர் சாண்ட்ஹர்ஸ்ட் பிரபுவைச் (Charles E.Ayerst) சந்தித்தார். கவர்னரும் பிளேக் நோய் பரவுவதைப் பற்றியும் அதைக் கட்டுப் படுத்த வேண்டும் என்றும் அக்கறை கொண்டிருந்தார்.

ஆனால் இந்த உதவிக் கலெக்டர் ஏன் இவ்வளவு பதற்றம் அடையவேண்டும் என்று ஆச்சரியப்பட்டு அதைப் பற்றிக் கேட்டும் விட்டார்.

“சார், இந்த மக்கள் அறியாமையிலும், மூடநம்பிக் கைகளிலும் என்ன செய்வது என்று தெரியாமல் செய்யும் செயல்களால் பிளேக் நோய் வெகுவேகமாகப் பரவுகிறது” என்று ராண்ட் கூறினார்.

“சரி! மிஸ்டர் ராண்ட் அதற்கு என்ன செய்ய வேண்டும்?”

“ஒவ்வொரு வீட்டிலும் நாம் வலுக்கட்டாயமாக நுழைந்து பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் அவர்களை வலுக்கட்டாயமாக மருத்துவ மனையில் சேர்த்துச் சிகிச்சை அளிக்க வேண்டும்”.

“ஒருவருடைய வீட்டில் வலுக்கட்டாயமாக நுழை வது சரியில்லை அல்லவா?”

“ஆபத்திற்குப் பாவமில்லை. இந்த மக்கள் நோய் பாதிக்கப்பட்டவர்களை மறைத்து வைக்கிறார்கள். இது நோய் வேகமாகப் பரவுவதற்கு ஏதுவாகிறது”.

“சரி! வீடுகளில் வலுக்கட்டாயமாகப் புகுவதற்கு அனுமதி கொடுத்தால் திருடர்கள் அரசு ஊழியர்கள் என்று வீடு புகுந்து திருடிக்கொண்டு போய்விட்டால் என்ன செய்வது?”

“சார், நான் இதைப் பற்றி மட்டும் இல்லை; இத னால் விளையும் வேறு சிக்கலைப் பற்றியும் யோசித்து வைத்திருக்கிறேன். நம் ஆள்கள் வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் நுழைந்தால் பெண்கள் மேல் பாலியல் தாக்குதல் நடத்தியதாகப் புகார்களும் வரும்...”

“மிஸ்டர் ராண்ட், நீங்கள் பெரிய குண்டைப் போடுகிறீர்களே?”

“இல்லை; இதற்கெல்லாம் தீர்வுகளைச் சொல் கிறேன். என்னுடைய படையில் பாதிக்குமேல் பெண் களை அமர்த்தப் போகிறேன். நம்முடைய மருத்துவர் களும் செவிலியர்களும் அப்பெண்களைச் சாட்சியாக வைத்துத்தான் பரிசோதிப்பார்கள்.

“நல்ல யோசனை மிஸ்டர் ராண்ட்”.

“சார், நான் இன்னும் முடிக்கவில்லை; எனக்குத் துணையாக இராணுவ அதிகாரி லெஃப்டினன்ட் சார்லஸ் இ. அயெர்ஸ்ட்டும் (ஊhயசடநள நு. ஹலநசளவ) அவருக்குக் கீழ்ப் படைவீரர்களும் வேண்டும்”.

“என்ன பைத்தியக்காரத்தனம் இது? பிளேக் நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் இராணுவ வீரர் களுக்கும் என்ன சம்பந்தம்? அதுவும் வெஃப்டினன்ட் சார்லஸ் இ. அயெர்ஸ்ட் தான் வேண்டும் என்ற தனிப்பட்ட கோரிக்கை?” கவர்னர் சிரித்துக் கொண்டே கேட்டார்.

“சார்! வீட்டிற்குள் புகும்போது கலகம் செய்யலாம் என்று நினைப்பவர்கள் இராணுவ வீரர்களைக் கண்டால் அஞ்சி ஒதுங்கிவிடுவார்கள். நம்முடைய வேலை எளிதாக முடியும். மேலும் அயெர்ஸ்ட் வேண் டும் என்று கேட்பதற்கு முக்கிய காரணம், அவர் திறமைசாலி என்பதால் மட்டுமல்ல; மனிதாபிமானமும் உள்ளவர். நிலைமைகளை இராணுவக் கண்ணோட் டத்தில் மட்டுமல்லாமல் மனிதாபிமானக் கண்ணோட் டத்திலும் பார்க்கத் தெரிந்தவர் என்பதால் தான்”.

“ஆனால் மிஸ்டர் ராண்ட்! நீங்கள் இராணுவத்தை விட காவல்துறையினரை உபயோகித்துக் கொள்ளலாமே?”

“சார்! காவல் துறையினரைவிட இராணுவம் தான் தேவை என்று நான் நினைக்கிறேன். இந்த பிளேக் நோயைக் கட்டுப்படுத்தி பிரிட்டிஷ் அரசின் நல்லெண்ணத்தை வெற்றிகரமாக நிறுவுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது”.

“சரி! மிஸ்டர் ராண்ட்! உங்கள் கோரிக்கையைப் பரிசீலித்து விரைவில் ஆணையை வெளியிடுகிறேன் நீங்கள் போகலாம்”.

கவர்னர் இவ்வாறு கூறியபின்பும் தயங்கி நின்ற உதவிக் கலெக்டரைப் பார்த்து “இன்னும் என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

“என்னுடைய இந்தப் பணியில் எலிகளை எல்லாம் கொல்ல வேண்டி இருக்கும்; தங்களுடைய உத்தரவில் அதற்கும் அனுமதி அளிக்க வேண்டும்” என்று ராண்ட் கூறியவுடன் கவர்னரால் சிரிப்பை அடக்க முடிய வில்லை.

“மிஸ்டர் ராண்ட்! இதுவரைக்கும் நீங்கள் மிக அற்புதமான புத்திசாலியாகப் பேசிக்கொண்டிருந்தீர்கள். கடைசியில் எலிகளைக் கொல்ல என்னிடம் உத்தரவு கேட்பது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறதே?” என்று கவர்னர் கூற, “அது... நான் இந்த மக்களைப் புரிந்து கொண்ட விதம்...” என்று சரியாகப் பேச முடியாமல் ராண்ட் திணறினார். கவர்னரும் ஒன்றும் பேசாமல் விடை கூறி அனுப்பினார்.

சில வாரங்களில் 12.3.1897 அன்று உதவி கலெக்டர் ராண்ட் கேட்டுக்கொண்ட-எலிகளைக் கொல்வது தொடர்பானது தவிர, அத்தனை கோரிக்கைகளையும் ஏற்று, கவர்னர் உத்தரவு பிறப்பித்தார்.

உத்தரவு வந்த மறுநாளே ராண்ட்டும் அயெர்ஸ்ட்டும் தங்கள் பணியைத் தொடங்கி, பம்பரமாகச் சுழன்று வேலை பார்த்தனர். எல்லா வீடுகளிலும் புகுந்து நோயாளிகள் இருக்கின்றனரா என்று பரிசோதித்தனர்.

ஜேம்ஸ் பாதிரியாரின் வேண்டுகோளின்படியும், தன் தங்கை மாண்டது போல் மற்றவர்கள் மாளக் கூடாது என்ற நல்லெண்ணத்திலும் ராண்ட், அயெர்ஸ்ட் குழுவில் ஆரிட் இணைந்து பணியாற்றினான். தன் சகோதரிகள் மட்டுமல்லாது, தன் உறவினர்கள், நண் பர்கள் பலரையும் இக்குழுவில் இணைத்துப் பணி யாற்றச் செய்தான்.

ராண்ட், அயெர்ஸ்ட் குழு தங்கள் பணியைத் தொடங்கி, அவர்கள் எலிகளைப் பிடித்துக் கொல்வதை அறிந்த பால கங்காதர திலகர் ‘எலி விநாயகரின் வாகனம்’ என்றும், அதைப் பிடித்துக் கொல்வதன் மூலம் பிரிட்டிஷ் அரசு இந்துக்களின் மனதைப் புண் படுத்துகிறது என்றும் அறிக்கை வெளியிட்டார். இவ் வறிக்கையைப் படித்த கவர்னர், ராண்ட் எலிகளைப் பற்றி உத்தரவு கேட்டபோது, அது சிறுபிள்ளைத்தனம் என்று கூறியதைப் பற்றி நினைத்துப் பார்த்தார். ஆனால் நம் அதிகாரிகள் இந்தியர்களைப் பற்றிச் சரியாகவே புரிந்து கொண்டுள்ளனர் என்று பெரு மிதமும் அடைந்தார். இருந்தாலும் எலிகளைக் கொல்ல அனுமதி அளிப்பதாகத் தனது உத்தரவில் இடம் பெறாதது தான் சரி என்றும், அப்படி இடம் பெற்றிருந் தால் உலக அளவில் நகைப்புக்கு இடமான உத்தர வாக அது இருந்திருக்கும் என்றும், மேற்கொண்டு என்ன நடக்கிறது என்று பார்த்துத், தேவைப்பட்டால் தலையிடலாம் என்றும் நினைத்துக் கொண்டார்.

பாலகங்காதர திலகர் எலிகளைக் கொல்வது இந்து தர்மத்திற்கு எதிரான செயல் என்று அறிக்கைவிட்டதால், பிராமண இளைஞர்களும் அவர்களின் கட்டுப்பாட்டிற் குள் இருந்த மற்ற இந்து மக்களும் எலிகளைக் கொல்லக் கூடாது என்று பெரும் போராட்டத்தைத் தொடங்க ஆயத்தம் செய்தனர். ஆனால் எலிகளைக் கொல்லக் கூடாது என்பது வாய் வார்த்தைகளாக மட்டும் இருக்கட்டும் என்றும் பிளேக் நோய் கட்டுப் படுத்தப்பட்ட பிறகு போராட்டம் செய்யலாம் என்றும் திலகரின் அலுவலகத்தில் இருந்து கமுக்கமான உத்தர வுகள் வந்தன; மேலும் பிளேக் நோய் கட்டுப்படுத்தப் படுவதற்கு யாரும் தடையாக இருக்க வேண்டாம் என்றும், அதேநேரத்தில் பிரிட்டிஷ்காரர்கள் பிளேக் நோயைக் கட்டுப்படுத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டு மக்களைக் கொடுமைப்படுத்துவதாகவும், பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்வதாகவும் பிரச்சாரத்தை முடுக்கி விடும்படியும் பிராமண இளை ஞர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தனர்.

ஆனால் ராண்டின் அதிரடி நடவடிக்கைகளில் மனிதாபிமானமும் பொங்கி வழிந்து கொண்டு இருந்தது. ஆரிட்டும், அவனது சகோதரிகளும் ராண்டின் அதிரடி நடவடிக்கைகளில் உள்ள நியாயத்தை மராத்திய மொழி யில் மக்களுக்கு விளக்கினர். இந்த அதிரடி நடவடிக் கைகள் வெகுவிரைவிலேயே பலனைத் தந்தன.

13.3.1897 அன்று வேலை தொடங்கியவர்கள் 19.5.1897 அன்று பிளேக் நோயை முற்றிலுமாகக் கட்டுப்படுத்திவிட்டனர். தனது பணி முடிந்ததும் அதைப் பற்றிய அறிக்கையை ராண்ட் கவர்னருக்கு அனுப்பி வைத்தார். அதில் மக்கள் அச்சமடையாத வகையில் தங்கள் குழு செயல்பட்டதையும், முக்கியமாகப் பெண் கள் மீதான பாலியல் தாக்குதல் புகார் ஒன்றுகூட எழாமல் இருந்தது சிறப்பான பணி என்றும், இதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் உலக அரங்கில் தலைநிமிர்ந்து, பெருமிதம் அடையலாம் என்றும் அதில் குறிப்பிட்டி ருந்தார்.

பிளேக் நோய் கட்டப்படுத்தப்பட்டவுடன் மராட்டிய மக்களிடம் ராண்டும் அயெர்ஸ்ட்டும் நல்ல பெயரைப் பெற்றுவிட்டனர். ராண்டின் கடமை உணர்ச்சி மக்களை ஒருபுறம் மலைக்க வைக்க, இராணுவ அதிகாரியான அயெர்ஸ்ட்டின் மனிதாபிமான அணுகுமுறை அவர் களைத் திக்குமுக்காட வைத்துக் கொண்டிருந்தது. இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி ஜேம்ஸ் பாதிரியார் மக்களிடம் கல்வி பெறுவதின் அவசியத்தைப் பற்றி எடுத்துக்கூறி அனைத்து மக்களும் கல்வி கற்க வேண்டும் என்று அறிவுறுத்திக் கொண்டிருந்தார்.

பிளேக் நோயைக் கட்டுப்படுத்தியதன் மூலம் மக்களிடம் ஆங்கிலேய அதிகாரிகள் நல்ல பெயர் எடுத்ததைப் பற்றி மனம் புழுங்கிக் கொண்டிருந்த பிராமண இளைஞர்கள், இச்சூழலைப் பயன்படுத்தி ஜேம்ஸ் பாதிரியார் அனைத்து மக்களுக்கும் கல்வி அளிக்க முயன்று கொண்டு இருப்பதைப் பார்த்து மனம் கொதித்துப் போனார்கள். பிளேக் நோயைக் கட்டுப்படுத்தியது சரி; அனைவருக்கும் கல்வி அளிக் கும் முயற்சியை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? பிராமண இளைஞர்கள் திலகரின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இனியும் வாளாவிருப்பது சரியல்ல என்று முறையிட்டனர். தகுந்த நேரத்தில் திலகர் பெருமான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுவார் என்றும், அதுவரை பொறுமையாக இருக்கும்படியும் திலகருக்கு நெருக்கமானவர்கள் சமாதானம் கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

அவ்வாண்டு (1897) விக்டோரியா மகாராணி பதவியேற்ற 75ஆம் ஆண்டாக இருந்ததால், பதவி யேற்ற நாளான சூன் 22ஆம் நாள் வைரவிழா கொண்டாடப்பட இருந்தது. அவ்விழாவில் பிளேக் நோயை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய வால்டர் சி. ராண்டும், சார்லஸ் இ. அயெர்ஸ்ட்டும் கௌரவிக்கப்பட இருந்தனர். இச்சூழலில் பாலகங்காதர திலகரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த ‘கேசரி’ பத்திரிகையின் 15.6.1897 நாள் இதழில், திலகர் எழுதிய கட்டுரை ஒன்று வெளியானது. அதில் வீரசிவாஜி அப்சல்கானைக் கொன்றது சரிதான் என்றும், ஏனெனில் சிவாஜி தன் சொந்த நலனுக்காக அல்லாமல் இந்து தர்மத்தைக் காப்பதற்காகச் செய்த தால் அது பாராட்டப்பட வேண்டிய செயல் என்றும் எழுதி இருந்தார். மேலும் இந்து தர்மத்திற்கு எதிராகச் செயல்படுபவர்களைச் சிவாஜியின் வழியில் நின்று கொன்றால் அது தேசபக்தியாகும் என்றும் திலகர் அக்கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார்.

பிராமண இளைஞர்கள் திலகர் என்ன சொல்ல வருகிறார் என்று சூசகமாக உணர்ந்து கொண்டனர். மக்களிடம் நல்ல பெயரைப் பெற்றுள்ள ராண்டையும், அயெர்ஸ்ட்டையும் விக்டோரியா மகாராணி பதவி யேற்ற வைரவிழா நாளான 22.6.1897 அன்று, விழா முடிந்த பின், தாமோதர ஹரியும், பாலகிருஷ்ண ஹரியும் அவர்களைக் கொலை செய்வது என்று முடிவெடுத்தனர். வாசுதேவ ஹரி அதுமட்டும் போதாது என்றும், சூத்திரர்களுக்குக் கல்வி அளிக்கும் ஜேம்ஸ் பாதிரியாரையும் கொல்ல வேண்டும் என்றும், அதைத் தான் செய்வதாகவும் சூளுரைத்தார். ஆனால் அக் குடும்பத்தில் உள்ள மூவரில் ஒருவராவது பாது காப்பாக இருக்க வேண்டும் என்று கூறி, ஜேம்ஸ் பாதிரியாரைக் கொலை செய்வது பற்றிப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்றும், முதலில் மக்களிடம் பிரபலமாகி நல்ல பெயருடன் இருக்கும் ராண்டையும், அயெர்ஸ்ட்டையும் கொலை செய்ய வேண்டும் என்றும் முடிவெடுத்தனர்.

22.6.1897 அன்று விழா முடிந்து மாலையில் அரசு மாளிகைக்கு அனைவரும் சென்று கொண்டு இருக்கையில் தாமோதர ஹரியும், பாலகிருஷ்ண ஹரியும் புகுந்து ராண்டையும் அயெர்ஸ்ட்டையும் சர மாரியாகச் சுட்டனர். சுட்டுவிட்டுத் தப்பிச் சென்று விட்டனர். அயெர்ஸ்ட் சம்பவ இடத்திலேயே மரண மடைந்துவிட்டார். ராண்டோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் 3.7.1897 அன்று மரணமடைந்தார்.

தன்னையும் கொல்லக் குறிவைத்து இருக்கிறார் கள் என்பதை அறியாத ஜேம்ஸ் பாதிரியார், இந்த இரட்டைக் கொலையைப் பற்றி மிகவும் வருந்தினார். கொலைகாரர்கள் தப்பிச் சென்று காவல் துறையி னரிடம் சிக்காமல் இருப்பது பற்றியும், அவர்களைப் பிடிக்க உதவி செய்பவர்களுக்கு ரூ.20,000 பரி சளிப்பதாக அரசாங்கம் அறிவித்து இருப்பதைப் பற்றியும் அறிந்தார்.

இப்படி இருக்கையில், ஒரு நாள் ஆரிட் அவரிடம் வந்து, தாமோதர ஹரியும், பாலகிருஷ்ண ஹரியும் ஒளிந்து இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என்றும், அதைக் காவல்துறையிடம் கூறி, அவர்கள் அறிவித்து இருக்கும் பரிசுப் பணம் ரூ.20,000 கிடைத்தால், அது தனது மேற்படிப்பிற்கு உதவும் அல்லவா என்றும் கேட்டான். இதைக் கேட்ட ஜேம்ஸ்பாதிரியார் பதறிப் போனார். பணத்திற்கு ஆசைப்பட்டு அவ்வாறு செய்தால் அதன்பின் அவனையும் கொன்றுவிடுவார்கள் என்று எச்சரித்தார். அவனுடைய மேல்படிப்பிற்கு வேண்டிய உதவிகளைத் தான் செய்வதாகவும், ஆகவே இது போன்ற அபாயகரமான யோசனைகளை விட்டு விடும்படியும் கூறினார்.

ஆனால் ஜேம்ஸ் பாதிரியாரால் அமைதியாக இருக்க முடியவில்லை. கொலைகாரர்களைப் பிடிக்க வழி இருக்கும் போது, அதைத் தடுப்பது சரியல்ல என்றும் நினைத்தார். அதேநேரத்தில் விடலைப் பரு வத்தில் உள்ள, எதிர்காலத்தில் மிகச்சிறந்த அறிஞ னாக வரவேண்டிய ஒருவனை அபாயத்தில் சிக்க வைக்கவும் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. இச் சூழலில் தான், அவருக்கும் கணேஷ் சங்கர் திராவிட், ராமச் சந்திர திராவிட் எனும் சகோதரர்கள் அறிமுகமா னார்கள். அவர்கள் காவல்துறைக்கு இரகசியத் தகவல் களை அளிக்கும் வேலையைச் செய்வதில் திறமை சாலிகள் என்று தெரிந்து கொண்டார். அவர்களுக்கு ஆரிட்டை அறிமுகம் செய்து கொலைகாரர்களின் மறை விடத் தகவலைப் பெறச் செய்தார்.

திராவிட் சகோதரர்களும் காவல்துறைக்கு, அத் தகவல்களை அளிக்க, காவல் துறையினர் கொலை காரர்களைப் பிடிக்கச் சென்றனர். இதில் தாமோதர ஹரி மட்டுமே சிக்கினார். பாலகிருஷ்ண ஹரி தப்பி விட்டார். தாமோதர ஹரி குற்றத்தை ஒப்புக்கொண் டார். 18.4.1898 அன்று அவர் தூக்கிலிடப்பட்டார்.

காவல்துறையின் தேடுதல் வேட்டையில், ஹைத ராபாத் சமஸ்தானப் பகுதிக்குத் தப்பிச் சென்றிருந்த பாலகிருஷ்ண ஹரி, 1899 ஜனவரி மாதத்தில் சிக்கினார். அவர் மீது விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போதே, அவருடைய தம்பி வாசுதேவ ஹரிக்கு கணேஷ் சங்கர் திராவிட் தான் காவல் துறையினரிடம் காட்டிக் கொடுத்தது என்பதும், திராவிட் ஜேம்ஸ் பாதிரியார் மூலமும், ஆரிட் மூலமும் தகவல் பெற்றான் என்றும் அறிந்து மூவரையும் கொல்லத் திட்டமிட்டார். ஆனால் 9.2.1899 அன்று திராவிடைக் கொன்ற உடனே பிடிபட்டு, விசாரணை செய்யப்பட்டு, 8.5.1899 அன்று அவனுடைய தமையனார் பால கிருஷ்ண ஹரி தூக்கி லிடப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு தூக்கிலிடப்பட்டார்.

ஜேம்ஸ் பாதிரியாரையும், ஆரிட்டையும் கொல்ல, பிராமண இளைஞர்கள் சூளுரைத்திருப்பது காவல் துறைக்குத் தெரியவந்தது. காவல் துறையினர் ஜேம்ஸ் பாதிரியாரிடம் பம்பாய் ராஜதானியைவிட்டு வேறு இடத்திற்குப் போகுமாறு அறிவுறுத்தினர். தான் தப்பித்து வேறு இடத்திற்குச் சென்றுவிடலாம் என்றும் ஆனால் ஆரிட்டை எப்படிக் காப்பாற்றுவது என்றும் யோசனையில் ஆழ்ந்தார். ஆனால் அவர் ஒரு முடிவிற்கு வருவதற்கு முன்பேயே, சில பிராமண இளைஞர்கள் ஒன்றுகூடி வந்து பாதிரியாரையும் ஆரிட் டையும் தீ வைத்துக் கொளுத்திக் கொன்றுவிட்டனர். ஆரிட்டின் மேற்படிப்புக் கனவு மட்டுமல்லாமல் அவனே பிராமண இளைஞர்களின் ஆதிக்கவெறிக்கு இரையானான்.

Pin It