இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில், ஜோதிபா பூலே, கோபாலகிருஷ்ண கோகலே, பகத்சிங், அம்பேத்கர், மகாத்மா காந்தி, தந்தை பெரியார் ஆகியோர் வலியுறுத்திக் கோரியது அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டணமில்லாக் கட்டாயக் கல்வி ஆகும்.

அரசு தன் முழுப்பொறுப்பிலும் செலவிலும் கட்டாய, கட்டணமில்லாக் கல்வியை 10 ஆண்டுகளுக்குள் 14 வயதிற்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தரவேண்டும் என இந்திய அரசமைப்புச் சட்டம் பகுதி IV பிரிவு 45 அறிவுறுத்தி இருந்தது.

இந்திய உச்சநீதிமன்றம், 1993இல் பிரிவு 45 கல்வி பெறுவதைக் குழந்தைகளின் அடிப்படை உரிமையாகக் கொள்ள வேண்டும் என மிகத் தெளிவாகக் கூறியது.

2002ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டம் 86ஆவது முறையாகத் திருத்தப்பட்டு, பிரிவு 21A உருவாக் கப்பட்டது.

இப்பிரிவு, அரசு தான் இயற்றும் சட்டம் மூலம் எவ்வ கையில் தர விரும்புகிறதோ அவ்வகையில், 6 முதல் 14 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்குக் கட்டாய இலவசக் கல்வியைத் தர வேண்டும் எனக் கூறியது.

மேலும் பிரிவு 51Aஇல், (k) சேர்க்கப்பட்டது. இதன் மூலம் குழந்தைகளுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டிய கடமை பெற்றோர்க்கு உண்டு எனக் கூறப்பட்டது. அரசுகளுக்கு மட்டுமே இருந்த, இருக்க வேண்டிய பொறுப்பு, பெற்றோருக்கு மாற்றப்பட்டதன் மூலம் அரசு தன் பொறுப்பைக் கைகழுவும் வாய்ப்பு உள்ளது.

இதைத்தொடர்ந்து இயற்றப்பட்டதே குழந்தைகளின் கல்வி உரிமைச் சட்டம், 2009.

இச்சட்டம் அரசு எவ்வகையில் குழந்தைகளுக்குக் கல்வி உரிமையைத் தர விரும்புகிறது என்பதைத் தெளிவுபடுத்தி யுள்ளது.

*             பலவகைப் பள்ளி முறை தொடரும்.

*             தனியார் - அரசு கூட்டு.

*             தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது எந்தச் சமூகக் கட்டுப்பாடும் கிடையாது.

*             தனியார் பள்ளியில் அரசு செலவில் மாணவர் சேர்க்கை.

*             இதன்மூலம் படிப்படியாக அரசுப் பள்ளி மாணவர் எண்ணிக்கையைக் குறைத்து அரசுப் பள்ளிகளை மூடும் மறைமுகத்திட்டம்.

*             சென்னையில் மட்டும் கடந்த 15 ஆண்டுகளில் 30 மாநகராட்சிப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதேபோன்று மூடப்படும் அச்சுறுத்தலில் பல அரசுப் பள்ளிகள் உள்ளன.

*             கர்நாடக மாநிலத்தில் கல்வி உரிமைச் சட்டம் இயற்றப் பட்டு ஓர் ஆண்டு கழித்து, கடந்த கல்வியாண்டில் 3000 அரசுப் பள்ளிகளை மூட ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.

*             அருகமைப்பள்ளி, பொதுப்பள்ளி, தாய்மொழி வழிக் கல்வி இவை எவற்றுக்கும் இச்சட்டத்தில் இடமில்லை.

இத்தகைய கூறுகளைக் கொண்ட கல்வி உரிமைச் சட்டம் கல்வி உரிமையை வழங்கவில்லை. மாறாக, குழந் தைகளுக்கு முழுமையான கல்வியை மறுக்கவே செய்கிறது.

இது அரசுப் பள்ளிகளைப் புறக்கணித்துத் தனியார் பள்ளிகளை ஊக்குவித்து, கல்வி வழங்கும் தன் பொறுப்பிலிருந்து அரசு படிப்படியாக விலகிக் கொள்ளும் நயவஞ்சகச் செயலாகும்.

அண்ணா பல்கலைக்கழகத்தையும், மருத்துவக் கல்லூரிகளையும் உருவாக்கி, உலகத் தரத்தில் நடத்திவரும் அரசால், தொடக்கக் கல்வியைத் தரமாகத் தர இயலாது என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள இயலாது.

*             விடுதலைப் போராட்டத் தியாகிகளின் கனவு மெய்ப்பட.

*             சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கம் நிறைவேற.

*             பள்ளிக் கல்வியை வழங்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் நடைமுறைக்கு வர,

கோத்தாரிக் கல்விக்குழு உள்ளிட்ட பல்வேறு கல்விக் குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட அருகமைப் பள்ளி அமைப்பில் பொதுப்பள்ளி முறைமத்தை உருவாக்கி வழங்கப்படும் உரிமையே மெய்யான கல்வி உரிமையாகும்.

- பொதுப் பள்ளிக்கான மாநில மேடை, சென்னை

தொலைபேசி : 044-28341456

Pin It