இந்திய அரசமைப்புச் சட்டம் புனிதமானது. அதை மாற்றக் கூடாது என்று கூறிக்கொண்டே நடுவண் அரசில் மாறி மாறி ஆட்சி செய்கின்ற காங்கிரசு, பா.ச.க. கட்சிகள் அரசமைப்புச் சட்ட விதிகள்படி இயங்குகிற அமைப்புகளையும் அதன் உயர் அலுவலர்களையும் மிரட்டி ஆட்சி புரிகின்றன. பிரதமர் சாஸ்திரி மறை விற்குப் பிறகு இவ்வித தேசியத் திருவிளையாடல் மெல்ல மெல்ல வளர்ந்து மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் உச்சத்திற்குச் சென்றுள்ளது. நாட்டின் வளங் களைச் சுரண்டிக் கொள்ளை அடித்த பணத்தில் இந்திய முதலாளிகள் இந்தத் தேசியக் கட்சிகளுக்கு வெள்ளை யாக வெளிப்படையாக வழங்கிய நன்கொடைகள் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் என்று நாடாளுமன்றத்தில் அளித்த புள்ளிவிவரங்கள் பறைசாற்றுகின்றன. நிலக் கரி ஒதுக்கீட்டில் ‘முதலாளிகளுக்கு’ விதிகளுக்குப் புறம்பாகச் சலுகை வழங்கியதால் ஏற்பட்ட இழப்பு ஒரு இலட்சத்து 86 ஆயிரம் கோடியாக இருக்கலாம் என்று குறிப்பிட்டு, சலுகை பெற்ற நிறுவனங்களின் பெயர் களையும் அட்டவணையில் குறிப்பிட்டுத் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலர் தனது அறிக்கையை அளித்துள்ளார். தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலர் இவ்வாறு குறிப்பிடலாமா? இவருக்கு அதி காரங்கள் உள்ளதா? என்று பல கேள்விகள் ஆளும் கட்சியினரால் எழுப்பப்படுகின்றன.

இங்கிலாந்து நாடு பின்பற்றிய நாடாளுமன்ற முறை யையும், நிர்வாக அமைப்புகளையும் விடுதலைக்குப் பின் இந்தியா முழுக்க முழுக்க ஏற்றுக்கொண்டது. வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சியில், இந்தியத் துணைக் கண்டத்தில் இயங்கிய நடுவண் அரசு சல்லிக்காசைக் கூட வீணாக்காமல் அரசு அமைப்புகளை மேலாண்மை செய்தது என்பதை வரலாறு நமக்குச் சுட்டுகிறது. இதற்கு முதன்மையான காரணங்களும் உள்ளன. பல கிழக்கிந்தியக் குழுமங்கள் 18ஆம் நூற்றாண்டில் இந்திய மண்ணில் வணிகத்தைத் தொடங்கிய போதே ஊழல்களும் பிறந்தன; பெருகின. சான்றாக, சாதாரண எழுத்தர்களாக இங்கிலாந்து கிழக்கிந்தியக் குழுமத்தில் பணிபுரிந்த இராபர்ட் கிளைவும், வாரன்ஹேஸ்டிங்சும் இந்தியாவில் அடித்த கொள்ளைப் பணத்தில் இங்கிலாந்தில் சொத்துக்களை வாங்கிக் குவித்ததையும், அதற்காக அவர்கள் மீது இங்கிலாந்து அரசு குற்ற விசாரணை யை மேற்கொண்டதையும் மறந்து விடலாகாது.

தொடக்கக் காலத்திலிருந்தே நாடாளுமன்ற முறை எப்போதுமே உறுப்பினர்களின் தன்நலத்திற்காகச் செயல்பட்டுள்ளது என்பதை வாரன்ஹேஸ்டிங்சு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி 1789, மே 5ஆம் நாள் எட்மண்ட் பர்க் ஆற்றிய உரையைத் தனது ‘நீதியின் தோற்றம்’ என்ற நூலில் அறிஞர் அமர்த்தியா சென் குறித்துள்ளார். “வாரன் ஹேஸ்டிங்சு செய்த பெருந் தவறுகளுக்காகவும், பெரும் குற்றங்களுக்காகவும் பதவி யிலிருந்து அவரை நீக்க வேண்டும்; இங்கிலாந்து நாட்டு மக்களையும், நாடாளுமன்றத்தையும் கேவலப்படுத்தி இருக்கிறார்; இந்திய மக்களின் சட்டங்கள், உரிமைகள், சுதந்திரம் ஆகியவற்றை வளைத்துத் திரித்து மக்களின் சொத்துக்களைச் சூறையாடியிருக்கிறார்; மக்களைத் தனிமைப்படுத்தி, அனாதைகளாக்கிய ஹேஸ்டிங்சைப் பணியிலிருந்து தூக்கி எறிய வேண்டும்; சமூகத்தில் உள்ள இயற்கை நீதியின் விதிகளை மீறியதற்காகவும் மானுடத்தன்மையை அடக்கி, ஒடுக்கி, காயப்படுத்தி, வயது, தகுதி, வாழ்நிலை, ஆண்-பெண் என்ற வேறு பாடின்றி அனைவரையும் கொடுமைப்படுத்தியதற் காகவும் வாரன் ஹேஸ்டிங்சு மீது பதவி நீக்கம் தீர் மானத்தை முன்மொழிகிறேன்” என்று வீரமுழக்க மிட்டார் எட்மண்ட் பர்க். ஆனால், ஹேஸ்டிங்சைவிட மோசமாகக் கொள்ளையை இந்தியாவில் மேற்கொண்ட இராபர்ட் கிளைவைப் பர்க் பாதுகாத்தார். வளைந்து கொடுக்கிற, தன்நலம் சார்ந்த அணுகுமுறையை எட்மண்ட் பர்க் கையாண்டார் என்று அமர்த்தியா சென் குறிப்பிட்டுள்ளார்.

சல்லிக்காசை யாரும் திருடாமல் இங்கிலாந்து நாட்டிற்கு இந்தியாவின் செல்வங்களைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதற்காக இங்கிலாந்து அரசு தனது நேரடி நிர்வாகத்தின் கீழ் இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதிகளைக் கொண்டு வந்தது. இங்கிலாந்து நாட்டின் நன்மைக்காகப் பல புதிய நிர் வாகச் சட்டங்களை வெள்ளை அரசு நிறைவேற்றியது. இந்த நிர்வாக மரபுரிமைக் கூறுகளைத்தான் விடு தலைக்குப்பிறகு இந்தியா ஏற்றுக்கொண்டது. எதிர்க் கட்சிகளை மதிப்பதில், நேரு, சாஸ்திரி காலம் வரை நல்ல மரபுகள் பின்பற்றப்பட்டன. மக்களாட்சி முறையில் நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை ஆகிய மூன்று அமைப்புகள் சிறப்பாகச் செயல்படுவதற்கு நேரு தனி அக்கறை செலுத்தினார்.

வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் 1919, 1935ஆம் ஆண்டுகளில் பின்பற்றிய அரசமைப்புச் சட்டவிதிகள், மரபுகள் முதலானவற்றை 1950ஆம் ஆண்டு நடை முறைக்கு வந்த அரசமைப்புச் சட்டப் பிரிவுகளில் அப் படியே இணைத்தனர். இந்திய அரசமைப்புச் சட்டத் தின் பகுதி 5இல் உள்ள 148, 149, 150, 151 பிரிவுகள் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலரின் அமைப்பு முறை பற்றியும், அதிகார எல்லை பற்றியும் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. அரசமைப்புச் சட்ட அட்டவணை மூன்றாம் பிரிவில் அமைச்சர்கள், உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி கள் உள்ளிட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையர், அரசுத் தலைமை வழக்கறிஞர், தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலர் ஆகியோர் பதவி ஏற்பு உறுதி மொழியை ஏற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட் டுள்ளது. இதன் முதன்மையான நோக்கமே இந்த அலுவல் அமைப்புகள் தன்னுரிமைகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு மக்களாட்சிக் கூறுகளை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகதான் என்பதைப் பல அரசமைப்புச் சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

1950-60ஆம் ஆண்டுகளில் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலரின் அறிக்கைகளைப் பற்றிப் பெரும் அளவில் கருத்து வேறுபாடுகள் உருவாக வில்லை. உச்சநீதிமன்றம் போன்றே சுயாட்சி பெற்ற அமைப்பாகக் கணக்குத் தணிக்கைக் குழு செயல்பட்டு வந்தது. அரசமைப்புச் சட்ட அவையில் அண்ணல் அம்பேத்கர், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி முதன் மையான அலுவலராகச் செயல்படக்கூடியவர் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலர் என்று குறிப்பிட்டார். அவருடைய கடமைகள், பணிகள் நீதிமன்றப் பணி களைவிட மிகவும் முதன்மையானவையாகும் என்றும் குறிப்பிட்டார்.

1949 அக்டோபர் 10ஆம் நாளில் அரசமைப்புச் சட்ட அவையில் அமைச்சர்களுக்கு அடிபணியாமல் நேர்மையாகச் செயல்படுகின்ற உயர் அலுவலர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்தியாவின் துணைத் தiலைமை அமைச்சராகவும், உள்துறை அமைச்ச ராகவும் பணியாற்றிய பட்டேல் பதிவு செய்துள்ளார். “நீங்கள் பணிபுரியும் அரசின் நிர்வாகக் இயந்திரங் களுடன் சண்டை போடாதீர்கள் என்பதைப் பட்டறிவைப் பெற்ற மனிதன் என்ற முறையில் குறிப்பிடுகிறேன். அரசு அலுவலர்களிடம் வேலையை வாங்குங்கள். ஒவ்வொரு மனிதனும் ஒருவிதமான பாராட்டுதலைப் பெற விரும்புவான். தினமும் அவர்கள் விமர்சனம் செய்யப்படும் போதும், அவர்களைப் பற்றி மக்கள் மத்தியில் குறைகளைச் சுட்டும் போதும் அவர்கள் தங்கள் பணியைச் செவ்வனே செய்யமாட்டார்கள்” என்று கோபத்துடன் குறிப்பிட்டார் பட்டேல். “இவ்வகை அணுகுமுறையைப் பின்பற்றாமல் இருந்தால், நீங்கள் இந்த அரசமைப்புச் சட்டத்தைக் கடைப்பிடிக்காதீர்கள். இதற்குப் பதிலாக வேறு ஒரு சட்டத்தை ஏற்றுக் கொள்ளலாம். காங்கிரசுச் சட்டத்தை அல்லது ஏதாவது ஒரு சட்டத்தை, அல்லது ஆர்.எஸ்.எஸ். சட்டத்தைக் கொண்டு வாருங்கள். நீங்கள் விரும்புவது போன்று இந்த அரசமைப்புச் சட்டத்தின் கீழ் செயல்பட முடியாது. நாட்டை நல்ல நிலையில் நடத்திச் செல்ல ஒரு பணி வளையத்திற்குள் இணைந்து செயல்படுவதுதான் அரசமைப்புச் சட்ட நெறியாகும்” என்று பட்டேல் விளக்கினார். ஆனால், இன்றோ பட்டேல் கருத்திற்கு எதிராகக் காங்கிரசு செயல்படுகிறது. காரணம் இந்தியா விடுதலை பெற்ற வுடன், தன்னலமற்ற தலைவர்கள் நடுவண் அரசின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்கள். நேர்மையான அதிகாரிகள் மதிக்கப்பட்டார்கள். இன்றோ தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலர், தலைமை அமைச் சரின் அலுவலகத்தில் பணிபுரிவோர்களாலும், அவர் களின் எடுபிடிகளாலும், அமைச்சர்களாலும் மிரட்டப் படுகிறார்கள்.

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத், அரசின் நிதியைப் பொறுத்த வரை எந்த உயர் பதவியில் இருப்பவரையும் ஆய்வு செய்வதற்கு அதிகாரம் பெற்றவர் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலர் என்று குறிப்பிட்டார். இத்தகைய அரசமைப்புச் சட்ட அதிகாரம் பெற்ற, சுயாட்சியுடன் இயங்கக்கூடிய தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலர் நடுவண், மற்றும் மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடுகள், செலவுகளைப் பற்றியும் ஆய்வு செய் கிறார். விதி மீறல்கள் இருப்பின் அறிக்கையில் குறிப் பிடுகிறார். குறிப்பிட்ட இனத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி, உரிய முறையில் செலவு செய்யப்பட்டுள்ளதா? நிதித் துறையின் விதிகளின்படி, சரியாக உள்ளதா? மேற் கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் முறையாக மற்ற துறை களுக்குச் சென்றுள்ளதா? என்பன போன்ற அனைத்து நிதி ஒதுக்கீடு, செலவு இனங்களைப் பற்றிய முழு ஆய்வு அறிக்கைதான் தலைமைக் கணக்குத் தணிக் கை அலுவலரால் ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது. இவ்வறிக்கைகள், நாடாளுமன்ற, சட்டமன்றப் பொதுக் கணக்குக் குழுக்களில் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்தக் குழுவிற்கு எதிர்க்கட்சித் தலைவரே தலைமை தாங்குகிறார். அவ்வறிக்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் பார்வைக் கும், ஆய்விற்கும், விவாதத்திற்கும் விடப்படுகின்றன.

அண்மைக்காலமாக உலக அளவில் பல வளர்ந்த நாடுகளில் இந்தக் கணக்குத் தணிக்கை அறிக்கைகளை நல்ல முறையில் ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொண்டு அந்தந்த அரசுகள் தவறுகள், ஊழல்கள் நடைபெறாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 1990க்கு பிறகுதான் இந்தியாவில் இந்தக் கணக்குத் தணிக்கை அறிக்கைகளில் சுட்டப்பட்டுள்ள குறைகளை, தவறுகளை எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் சுட்டிக் காட்டினால் ஆளும்கட்சிகளுக்குக் கோபம் கொப்பளிக் கிறது. போபர்சு பீரங்கி வாங்கிய போது தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலர், செலவினங்களில் காணப்பட்ட முரண்பாடுகளையும், முறைகேடுகளை யும் போபர்சு நிறுவனத்திற்கு விதிகளை மீறிக் காட்டிய சலுகைகளையும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி னார். தலைமை அமைச்சராக இருந்த ராஜீவ் காந்தி யும், அவரது அரசியல் தரகர்களும் எவ்வித முறை கேடுகளும் நடைபெறவில்லை என்று வாதிட்டனர். பிறகு எதிர்க்கட்சிகள் எழுப்பிய கண்டனங்களுக்குப் பிறகு நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை அமைக் கப்பட்டது. அந்த விசாரணையும் ஒருவிதக் கண் துடைப்பாக அமைந்துவிட்டது.

திருமதி. சித்ரா சுப்ரமணியன் என்ற ஊடகச் செய்தியாளர் இந்து நாளேட்டில் போபர்சு ஊழலை ஆதாரங்களுடன் வெளியிட்டார். போபர்சு ஊழல் விவா கரத்தை ஒட்டி ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் நான் 350க்கும் மேற்பட்ட ஆதாரங் களைக் கைப்பற்றி இருக்கிறேன் என்றார் சித்ரா சுப்ரமணியம். ‘ராஜிவ் கூசாமல் பொய் சொன்னார்’ என்ற தலைப்பில் பொக்கிஷம் பகுதியில் சித்ரா சுப்ரமணி யத்தின் பேட்டியை ஆனந்தவிகடன் 12.9.2012 நாளிட்ட இதழில் மீண்டும் வெளியிட்டுள்ளது. சோனியா காந்தியின் குடும்ப நண்பரான குவத்ரோச்சி இந்த ஊழல் பணத்தைச் சுவிசு வங்கியில் வைத்துள்ளார் என்று நடுவண் அரசின் சி.பி.ஐ. புலன்விசாரணை யைத் தொடங்கியது. காங்கிரசு இயக்கத்தின் பெரும் ‘தியாகத்தால்’ இந்த குவத்ரோச்சியைக் கைது செய்ய முடியவில்லை. புலனாய்வு அமைப்பும் வழக்கை முடித்துவிட்டது.

ராஜீவ்காந்தி தலைமை அமைச்சராக இருந்த காலத்தில் நீர்மூழ்கிக் கப்பல் வாங்கியதில் நடந்த முறைகேடுகள், வாஜ்பாய் தலைமை அமைச்சராக இருந்தபோது கார்கில் போரில் உயிரிழந்தவர்களுக் குரிய சவப்பெட்டிகள் வாங்கிய போது நடந்த ஊழல்கள் எல்லாம் தலைமைக் கணக்குத் தணிக்கை அலு வலரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அலைக்கற்றை முறைகேடுகள், நிலக்கரி உரிமை கள் வழங்குவதில் ஏற்பட்ட முறைகேடுகள், புதுதில்லி விமான நிலையத்தில் அரசின் நிலத்தைக் குத்தகை விட்டதில் ஏற்பட்ட முறைகேடுகள் எல்லாம் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலரின் அறிக்கையில் சுட்டப்பட்டுள்ளன. இந்த அறிக்கைகளில் காணப்படுகிற கருத்துகளைத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கும், அவரின் எடுபிடி அமைச்சர்களும் ஆக்கப்பூர்வ மாக எடுத்துகொள்ளாமல், அரசிற்கு இழப்பு ஏதும் இல்லை என்று பொது மக்களிடம் பொய்களை அள்ளி வீசுகின்றனர். சுழி நட்டம் கூட இல்லை என்று கூறித் தங்களின் சுழி மூளையை வெளிப்படுத்தினர். ஆனால் நடுவண் அரசின் அமைச்சர்களுக்கானக் குழு இது வரை 6 பெரிய நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரண்டு வதற்காகக் கொடுக்கப்பட்ட உரிமங்களை நீக்கியுள்ளது. மேலும், நடுவண் அரசின் புலனாய்வுத் துறை (CBI) நிலக்கரி ஒதுக்கீடு பெற்ற தனியார் நிறுவனங்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்து கண்துடைப்பு நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடுகளில், தோண்டத் தோண்ட புதுப்புது ஊழல் பரிமாணங்கள் வெடித்துக் கிளம்புகின்றன. நாட்டில் மின்பற்றாக்குறை பெருகி வருகிறது. பல அனல் மின் உற்பத்தி நிலை யங்கள் நிலக்கரிப் பற்றாக்குறையால் மின் உற்பத்தி யைப் பெருக்க முடியவில்லை. அனல் மின் உற்பத் திக்கு 65 கோடி டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 56 கோடி டன் நிலக்கரியைத் தோண்டி எடுக்கும் நிலையில் தான் இந்தியா உள்ளது. இதன் காரணமாக 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.

இந்தச் சூழலில் நிலக்கரி உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்கள் ஊக வணிகத்தில் ஈடுபட்டது கொடுமை யிலும் கொடுமையாகும். நிலக்கரிப் பற்றாக்குறை ஏற்படட்டும்; விலை ஏறட்டும் என்று பெற்ற உரிமங் களைத் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தவில்லை என்பது நாட்டிற்குச் செய்யும் பெரும் துரோகமாகும். மற்றொரு கோணத்தில் இந்த நிலக்கரி முறைகேடு களை ஆய்வு செய்து-பார்கஜ் சேக்சாரியா, செப்டம்பர் 18, இந்து நாளிதழில் கட்டுரை தீட்டியுள்ளார். பசுமை அமைப்புகளின் ஆய்வின்படி, அடர்த்தியான காடுகளில் இந்த நிலக்கரி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதால் 10 லட்சம் ஹெக்டேர் காட்டுப் பகுதி பாழடிக்கப்பட்டு வரு கிறது என்று குறிப்பிட்டுள்ளார். 13 நிலக்கரிச் சுரங் கங்களின் எல்லைப் பகுதியில் இவை அடங்கும். மேலும் 40 நிலக்கரிச் சுரங்கங்களின் பரப்பளவை ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது என்ற அதிர்ச்சியான கருத்தை இந்தக் கட்டுரையில் குறிப் பிட்டுள்ளார்.

காட்டு வளங்கள், இயற்கை வளங்களை உயிரியல் தாவர வள ஆதாரங்களைக் கண்மூடித்தனமாகக் கொள்ளை அடிக்கும் போக்குத்தான் தாராளமயக் கொள்கையா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. எனவே தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலர் நேர்மையுடன், நெஞ்சுரத்துடன் அளித்த அறிக்கை. அரசு இயற்கை வளங்களை எவ்வித நெறியும் இன்றிக் கொள்ளை அடிப்பதற்குத் தனியார் துறைக்குத் துணை போகிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

இச்சூழலில் போபர்சு ஊழலை மக்கள் மறந்தது போன்று நிலக்கரி ஊழலையும் மறந்துவிடுவார்கள் என்று இன்றைய உள்துறை அமைச்சர் ஷிண்டே குறிப்பிட்டுள்ளார். 1960ஆம் ஆண்டுகளில் அறிஞர் அண்ணா அடிக்கடிக் குறிப்பிட்டதைப் போல, பக்கா காங்கிரசுக்காரர்களுக்கும், சொக்கா காங்கிரசுக்காரர் களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. பக்கா காங்கிரசுக்காரர்கள் மனசாட்சியோடு நேர்மையாகச் செயல்படுவார்கள். சொக்கா காங்கிரசுக்காரர்கள் இருப் பதை எடுத்துக் கொள்வார்கள்.

நேரு, பட்டேல் போன்ற தலைவர்கள் கடைபிடித்த நேர்மை நெறிகளைக் குழிதோண்டிப் புதைக்கிறது தற்காலச் சொக்கா காங்கிரசுத் தலைமை. ‘சொக்கத் தங்கம்’ சோனியாவும், சொக்கா காங்கிரசு மன்மோகன் சிங்கும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு இந்தியாவையே குத்தகைக்கு விட்டாலும் விட்டுவிடு வார்கள் என்பதை மேற்குவங்க முதல்வர் மம்தா நன்றாகவே உணர்ந்துள்ளார். நடுவண் அரசின் தவ றான பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக நடுவண் அரசிற்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளார். விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சரிவு ஆகிய வற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் காங்கிரசுக் கட்சிக் குத் தகுந்த பாடத்தைக் கற்பிப்பார்கள் என்பது உறுதி.