சிவப்புக் கம்பளம் விரிக்கும் மன்மோகன் அரசு

2014 மே மாதம் நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இடையில் உள்ள ஒன்றரை ஆண்டுக்காலத்திற்குள் இந்தியாவைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்தியப் பெருமுதலாளிகளுக்கும் முற்றிலுமாக விற்றுவிடுவது என்று தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் ’அன்னை சோனியாவின் ஆசியுடன்’ முடிவு செய்து விட்டுள்ளார் போலும்.

அதனால்தான் 13.9.12 அன்று டீசல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியும், ஒரு குடும்பத்துக்கு ஓராண்டில் ஆறு எரிவளி உருளைகள் (கேஸ் சிலிண்டர்) மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என வரம்பு விதித்தும் மன்மோகன் சிங் தலைமையிலான நடுவண் அரசு ஆணை பிறப்பித்தது. அடுத்த நாள், 14.9.12 அன்று பல வணிக முத்திரைச் சில்லறை வணிகத்தில் (Multi-Brand in Retail Trade) அந்நிய நேரடி முதலீட்டை 51 விழுக்காட்டுக்கு அனுமதிக்கும் முடிவை அறிவித்தது. மேலும் அந்நிய நேரடி முதலீடு விமானத் துறையில் 49 விழுக்காடு, ஒளிபரப்பு நிறு வனங்களில் 79 விழுக்காடு அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்தது. நான்கு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.15,000 கோடி நிதி திரட்ட முடிவு செய்திருப்பதாகவும் அறிவித்தது. காப்பீட்டுத் துறை, வங்கித் துறை, ஓய்வூதியம் ஆகியவற்றிலும் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கான அறிவிப்பை வெளியிட நடுவண் அரசு திட்டமிட்டிருந்தது. இறுதி யில், சிறிது காலம் கழித்து அறிவிக்கலாம் என்று இந்த அறிவிப்பைத் தள்ளி வைத்துவிட்டது.

இந்த அறிவிப்பையடுத்த சில நாள்களில் இந்திய அரசியலில் பரபரப்பான நாடகக் காட்சிகள் அரங்கேறின. சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டு அறி விப்பைத் திரும்பப் பெறாவிட்டால், 19 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட திரிணாமல் கட்சி நடுவண் அரசின் கூட்டணியிலிருந்து விலகும்; ஆதரவைத் திரும்பப் பெறும் அன்று அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்தார். 2011 நவம்பர் மாதம் சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை நடுவண் அரசு அறிவித்த போது, மம்தா பானர்ஜியின் ‘ஆதரவைத் திரும்பப் பெறுவோம்’ என்ற மிரட்டலால் அது நிறுத்தி வைக்கப்பட்டது என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

1885ஆம் ஆண்டு நிறுவப்பட்ட காலம் முதல் எதிரிகளை எவ்வாறு மடக்கி, தம் வழிக்குக் கொண்டு வருவது அல்லது வீழ்த்துவது என்கிற அரசியல் சாணக்கியக் கலையில் பழந்தின்று கொட்டை போட்ட மாபெரும் அனுபவம், காங்கிரசுக் கட்சிக்கு எப்போதும் அரசியல் கைமுதலாக இருந்து வருகிறது. மேற்கு வங்காளத்தில் முதலமைச்சரான பிறகு மம்தாவின் மிரட்டல் போக்குகள் அதிகமாயின. இதற்கு முற்றுப் புள்ளி வைப்பதென, காங்கிரசுக் கட்சி இந்த அறிவிப்பு களை நடுவண் அரசு வெளியிடுவதற்கு முன்பே முடிவு செய்துவிட்டது. அடிமைமுறி எழுதிக் கொடுத்துவிட்ட தி.மு.க.வின் ஆதரவு பற்றிக் காங்கிரசுக் கட்சி எள் முனையளவு கூட எப்போதுமே கவலைப்பட்டதில்லை (அதனால் தான் 2009 மே மாதம் ஈழத்தில் இறுதிப் போரில் இராசபக்சே அய்ம்பதாயிரம் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்திட இந்திய அரசே முன்னணிப் படை யாகச் செயல்பட்டது).

கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்தும், அவர்கள் பேரிலுள்ள வழக்குகளைக் காட்டி மிரட்டியும் முலாயம் சிங்கையும், மாயாவதியையும் தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கிறது காங்கிரசுக் கட்சி. அதனால் 20.9.12 அன்று எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய அளவில் நடத்திய வேலை நிறுத்தத்தில், தில்லியில் இடதுசாரித் தலை வர்களுடன் தோளோடு தோள் நின்று, கைக்கோத்து எதிர்ப்பு முழக்கங்களை முழங்கிய முலாயம் சிங், அடுத்த நாளே நடுவண் அரசுக்கு வெளியிலிருந்து அளித்து வரும் ஆதரவு தொடரும் என்று அறிவித்தார். தி.மு.க. வும் தன் எதிர்ப்பைத் தெரிவித்து, வேலைநிறுத்தத் துக்கு ஆதரவளித்தது ஒரு வியப்பே. செப்டம்பர் 19 அன்று தில்லியில் நடந்த காவிரி ஆற்று நீர் ஆணையக் கூட்டத்தில் நடுவண் அரசைக் கண்டித்த முதல்வர் செயலலிதா, இந்த வேலை நிறுத்தத்தை ஆதரரிக்க வில்லை. இதேபோன்று மாயாவதியும் வாய் திறக்க வில்லை.

பாரதியச் சனதாக் கட்சியின் தலைவர்கள் டீசல் விலை உயர்வு, சில்லறை வணிகத்திலும் மற்ற துறைகளிலும் அந்நிய நேரடி முதலீட்டு அறிவிப்பு ஆகிய வற்றை எதிர்ப்பதாகக் கண்டனக் குரல் எழுப்பினர். ஆனால் ஆறு ஆண்டுகள் வாஜ்பாய் தலைமையி லான பா.ச.க. ஆட்சியில், நரசிம்மராவ் தலைமை அமைச்சராக இருந்த காலத்தில் நடைமுறைப்படுத்திய தனியார் மயம், தாராள மயம், உலக மயம் என்கிற கொள்கை மேலும் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டது. காங்கிரசை விடத் தன் கட்சியே நல்ல அடிமையாக இருக்கும் என்பதை அமெரிக்காவுக்குப் புரியவைப்ப தற்காக, இசுரேலுடன் கூடிக் குலாவியது போன்ற பல இழிசெயல்களைப் பா.ச.க. செய்தது. எனவே புதிய பொருளாதாரக் கொள்கையிலும் அமெரிக்காவின் அடிவருடியாக இருப்பதிலும் மற்ற கொள்கைகளிலும் காங்கிரசுக்கும் பா.ச.க.வுக்கும் வேறுபாடு எதுவும் இல்லை. பொறுக்கித் தின்பதே அரசியலில் குறிக்கோள் என்றாகிவிட்டது. அதனால் ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அய்ந்து ஆண்டுகளும் அப்பதவியில் இருந்துகொண்டு கொள் ளையடிக்க வேண்டும் என்று கருதுவதால், நடுவண் அரசில் உள்ள ஆட்சியைக் கவிழ்த்திட எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும், எந்தவொரு அரசியல் கட்சியும் விரும்புவதில்லை. பெருமுதலாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லாவகையான ஊடகங்களும் உலகமயக் கொள்கைக்கு ஊதுகுழலாக உள்ளன. எனவே மன்மோகன் - சோனியா அரசு மக்கள் நலன் - மக்கள் எதிர்ப்பு என்று எதைப் பற்றியும் கவலைப் படாமல் நாட்டை மறுகாலனியாக்கும் நடவடிக்கை களை வேகமாக எடுத்து வருகிறது.

சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு :

அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா 2012 நவம்பரில் நடைபெறும் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார். ஒபாமாவை மகிழ்விக்கத் தான் மன்மோகன் சிங் இந்த அதிரடி அறிவிப்புகளைச் செய்தார். இது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக் கும் முடிச்சுப் போடுவது போல் தோன்றக் கூடும். ஆனால் இதுதான் உண்மை. பொருளாதாரம் மட்டும் உலகமயமாக்கப்படவில்லை. அரசியலும் உலகமய மாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக நாடுகளின் பொருளாதாரத்தை மட்டுமின்றி அரசிய லையும் தீர்மானிப்பதில் முதன்மையான பங்காற்று கிறது. சோவியத் நாட்டின் வீழ்ச்சியும், சீனா முத லாளியப் பாதைக்குத் திரும்பியிருப்பதும் அமெரிக் காவின் திட்டமிட்ட சூழ்ச்சியேயாகும்.

அமெரிக்காவின் அயலுறவு அமைச்சர் இலாரி கிளிண்டன் மன்மோகன் சிங்கைச் சந்திக்கும் போதெல் லாம் உலகில் சில்லறை வணிகத்தில் முதல் நிலையில் உள்ள அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனமான வால்மார்ட் இந்தியாவில் முதலீடு செய்வதை உடனே செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கூறி வந்தார். அண்மையில் ஒபாமா அமெரிக்காவில் உரையாற்றிய போது, வால்மார்ட் நிறுவனத்தை இந்தியா அனுமதிக்க மறுப்பது வருத்தமளிக்கிறது என்று கூறினார்.

மேலும் தாராளமய - தனியார்மய - உலகமயக் கொள்கைகளைத் தீவிரமாக மன்மோகன் சிங் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் பெரு முதலாளிய ஊடகங்கள் நெருக்கடிகளைத் தந்தன. ‘டைம்’ (Time) இதழ் முகப்பு அட்டையில் மன்மோகன் சிங் படத்தைப் போட்டு, செயல்படாத தலைமை அமைச்சர் என்று கட்டுரை எழுதியது. ‘வாஷிங்டன் போஸ்ட்’ எனும் அமெரிக்க நாளேடு, கடினமான, திட்டவட்டமான முடிவுகளை எடுக்க முடியாத ஒரு ‘தொடை நடுங்கி’ மன்மோகன் என்று உசுப்பேற் றியது. கடன்பெறும் தகுதி குறித்துத் தர நிர்ணயம் செய்யும் ‘ஸ்டாண்டர்டு அண்டு பூர் (Standard and Poor)’ எனும் அமெரிக்க நிறுவனம், இந்தியாவின் கடன் பெறும் தகுதியும் நம்பிக்கையும் குறைந்துவருவதாக செய்தி வெளியிட்டது. அதாவது அந்நிய முதலீடுகளை இந்தி யாவில் இடாதீர்கள் என்பது இதன் பொருள். இதே போன்று ஃபிட்ச் அண்டு மோடிஸ் (Fitch nd Moody’s) எனும் நிறுவனமும் இந்தியா முதலீடு செய்வதற்கான தகுதியை இழந்து வருவதாக எழுதியது.

இந்தப் பின்னணிகளில் தான் மன்மோகன் சிங், மம்தா பானர்ஜி தன் ஆதரவை விலக்கிக் கொண்டாலும் பரவாயில்லை என்ற, அந்நிய மூலதனங்களுக்கு இந்தியாவில் வாயில் கதவுகளை அகலமாகத் திறந்து விட்டுள்ளார். இம்முடிவுகள் உழவர்களின், நுகர் வோரின் நலன்களுக்காகவும், வேலை வாய்ப்பைப் பெருக்குவதற்காகவும், நாட்டின் பொருளாதார வளர்ச் சிக்காகவும் எடுக்கப்பட்டன என்று மக்களை ஏமாற்று வதற்காக 21.9.12 அன்று இந்தியாவில் எல்லா மொழிகளிலும் வெளிவரும் நாளேடுகளில் ஒரு பக்க விளம்பரம் நடுவண் அரசின் தொழில் மற்றும் வணிக அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு என்பது இதற்கு முன்பே அனுமதிக்கப்பட்டுவிட்டது. 1997ஆம் ஆண்டு ஒரு வணிக முத்திரை (Single-Brand) கொண்ட பொருள்களின் மொத்த வணிகத்தில் () 100 விழுக்காடு அந்நிய முதலீட்டுக்கு அனுமதியளிக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு முதல் செருமனி நாட்டின் பன்னாட்டு நிறுவனமான மெட்ரோ (Metro) மொத்த விற்பனைச் சிறப்பு அங்காடிகளை நடத்தி வருகிறது. 2006ஆம் ஆண்டு, ஒற்றை வணிக முத்திரை கொண்ட சில்லறை வணிகத்தில் 51 விழுக்காடு அளவுக்கு அந்நிய நேரடி மூலதனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இப்போது இது 100 விழுக்காடாக உயர்த்தப்பட்டுவிட்டது. மேலும் பல வகை வணிக முத்திரை (Multi-brand Retail Trade) கொண்ட சில்லறை வணிகத்தில் 51 விழுக்காடு அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கும் நடுவண் அரசின் அறிவிக்கை 21.9.12 அன்று வெளியிடப்பட்டது.

2006ஆம் ஆண்டிற்குப்பின்னர், வால்மார்ட்டும் இந்தியாவின் பெருஞ்செல்வரான சுனில்மிட்டலின் பார்த்தி குழுமமும் சில்லறை வணிகத்தில் இணைந் தன. இதேபோன்று உலகில் இரண்டாம் நிலையில் உள்ள பிரான்சின் கேர்ஃபோர் (Carrefour) நிறுவனமும் ரிலையன்சும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. டாடா நிறுவனம் ஆஸ்திரேலியாவின் ‘உல்வொர்த்’ நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. பிரிட்டனின் பன்னாட்டு நிறுவனமான ‘டெஸ்கோ’ (Tesco)வும் இந்தியாவில் சில்லறை வணிகம் செய்து வருகிறது. ஆதித்திய பிர்லாவின் ‘மோர்’ (More) இந்தியா முழு வதும் சில்லறை வணிகப் பேரங்காடிகளை நடத்து கிறது. இந்தியப் பெரு முதலாளிகளும் பன்னாட்டுப் பெரு முதலலாளியக் குழுமங்களும் தனியாகவும், கூட்டாகவும் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுத் தற் போது சில்லறை வணிகத்தைச் சார்ந்து வாழும் 20 கோடி மக்களின் வாழ்வைச் சூறையாடப் போகின்றன.

உலக அளவில் சில்லறை வணிகத்தில் முதல் 10 இடங்களில் உள்ள நிறுவனங்கள்

வ. எண்.

நிறுவனம்

நாடு

2010இல் விற்று முதல் (பில்லியன் டாலர்)

1.

வால்மார்ட்

அமெரிக்கா

418.95

2.

கேர்ஃபோர்

பிரான்சு

119.64

3.

டெஸ்கோ

பிரிட்டன்

92.17

4.

மெட்ரோ

செருமனி

88.93

5.

குரோகர்

அமெரிக்கா

82.19

6.

ஷ்வார்ஸ்

செருமனி

79.11

7.

காஸ்ட்கோ

அமெரிக்கா

76.25

8.

தி ஹோம்டெபோ

அமெரிக்கா

67.99

9.

வால்கீரின்கோ

அமெரிக்கா

67.42

10.

ஆல்டி

செருமனி

67.11

ஆதாரம் : டெலாயிட்ஸ் அறிக்கை : உலகச் சில்லறை வணிகம், 2012.

நடுவண் அரசு 21.9.12 அளித்துள்ள விளம்பரத்தில் சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டால், விவசாயிகளின் விளை பொருள்களுக்கு அதிக விலை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் ஆதர வாளர்களும் கிளிப்பிள்ளை போல் இதையே நீண்ட காலமாகக் கூறி வருகின்றனர்.

அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளின் வேளாண்மைக்கும் இந்திய வேளாண்மைக்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடுகள் உள்ளன.

ஒரு விவசாயி பெற்றுள்ள சராசரி நிலம் கனடா வில் 1,798 ஏக்கர், அமெரிக்காவில் 1089 ஏக்கர், ஆஸ்திரேலியாவில் 17,975 ஏக்கர், பிரான்சில் 274 ஏக்கர், பிரிட்டனில் 432 ஏக்கர் (தினமணி 26.11.11). ஆனால் இந்தியாவிலோ இது 2.5 ஏக்கருக்கும் குறை வாக உள்ளது. ஏனெனில் இந்தியாவில் சிறு, குறு உழவர்கள் 85 விழுக்காடாக உள்ளனர். வேளாண் மையைச் சார்ந்து அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 2 விழுக்காட்டு பேரும் அய்ரோப்பிய நாடுகளில் 5 விழுக்காட்டுப் பேரும் மட்டும் உள்ளனர். ஆனால் இந்தியாவில் 65 விழுக்காட்டு மக்கள் வேளாண் மையைச் சார்ந்து வாழ்கின்றனர்.

சில்லறை வணிகத்தில் உலகில் முதல் நிலையில் உள்ள 10 நிறுவனங்களில் 5 அமெரிக்காவில் உள்ளன. விற்று முதலில் 80 விழுக்காடு இவற்றிடம் உள்ளன. இதனால் அமெரிக்காவின் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதா? இல்லை. அமெரிக்க அரசு ஆண்டுதோறும் வேளாண்மைக்குப் பெருந்தொகையை மானியமாக அளித்து வருவதால் தான் வேளாண் தொழிலே நடக்கிறது. 2008ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்க அரசு 16,00,000 கோடி ரூபாய் அளவில் டாலர் (30,700 கோடி டாலர்) வேளாண்மைக்கு மானியம் அளித்தது. இதேபோன்று அய்ரோப்பிய நாடு களும் பெருந்தொகையை மானியமாக அளிக்கின்றன. அப்படியிருந்தும் அய்ரோப்பாவில் ஒவ்வொரு நிமிடத் திற்கும் ஒரு விவசாயி வேளாண் தொழிலிலிருந்து வெளியேறுகிறார் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவிலும் விவசாயிகளின் வருவாய் குறைந்து வருகிறது (தி இந்து 15.9.12).

இடைத்தரகர்கள் இல்லாமல் ஒழிந்துவிடுவதால், நுகர்வோருக்குக் குறைந்த விலையில் தரமான பொருள்கள் கிடைக்கும் என்று அந்நிய முதலீட்டின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இலத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளில் ஆய்வு செய்ததில் சூப்பர் மார்க்கெட் (ளுhடியீயீiபே ஆயடடள) எனப்படும் பேரங்காடிகளின் பொருள் களின் விற்பனை விலை, வெளியில் திறந்த சந்தையில் விற்பதைவிட 20 முதல் 30 விழுக்காடு அதிகமாக உள்ளது. இந்தியாவிலும் ரிலையன்ஸ் பிரஷ் போன்ற பேரங்காடிகளில் இதேநிலைதான் உள்ளது.

நேரடி அந்நிய முதலீட்டில் 50 விழுக்காட்டுத் தொகை ஊர்ப்புறங்களில் சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதனக் கூடங்கள், அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்புகளைத் தடுப்பதற்கான பிற அடிப்படைக் கட்டு மானங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தப் பயன்படுத்தப் படும் என்று நடுவண் அரசு கூறுகிறது. மேலும் கொள்முதல் செய்வதில் 30 விழுக்காட்டு அளவுக்குச் சிறுதொழில் செய்வோரிடம் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த அய்ந்தாறு ஆண்டுகளாக ஒரு வணிக முத்திரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு செயல்பாட்டில் உள்ளது. ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள எதுவும் நடைபெறவில்லை. இந்த நிபந்தனைகள் என்பன எதிர்ப்பாளர்களின் வாயை அடைக்கவும், மக்களை ஏமாற்றவும் ஏற்படுத்தப்பட்ட வைகளாகும். உலகில் எந்தவொரு நாட்டிலும் பொது நலன் கருதித் தானிய சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட வில்லை.

10 இலட்சம் மக்கள் வாழும் பெரிய நகரங்களில் மட்டுமே அந்நிய நிறுவனங்களின் பேரங்காடிகள் அமைக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வால்மார்ட் தனது கூட்டாளியான சுனில்மிட்டலின் பார்தி நிறுவனத்தின் பெயரில் சிறிய நகரங்களில் ‘ஷாப்பிங் மால்கள்’ தொடங்கி நடத்தும். இதேபோன்று அந்நிய நிறுவனங்கள் தங்களது கூட்டாளிகளான இந்திய முதலாளிய நிறுவனங்கள் பெயரில் பேரங்காடிகளை நடத்தும்.

அடுத்ததாக, ஒரு கோடிப் பேருக்கு வேலை கிடைக்கும் என்பது மாபெரும் மோசடியாகும். அரசின் கணக்குப்படி இந்தியாவில் உரிமம் பெற்றுக் கடை நடத்துவோரின் எண்ணிக்கை 1 கோடியே 20 இலட்சம் பேர். சிறிய நகரங்களிலும் சிற்றூர்களிலும் சிறிய கடைகள் வைத்திருப்போர் மற்றும் நகரங்களில் தள்ளுவண்டியில், வீதிகளில் தரையில் கடைவிரித்து, தலைச்சுமையாகவும் இரு சக்கர ஊர்திகளிலும் விற்ப வர்கள் இக்கணக்கில் அடங்கமாட்டார்கள். ஒரு கோடியே 20 இலட்சம் கடைகளில் மொத்தம் 4.4 கோடிப் பேர் வேலை செய்கின்றனர். இக்கடைகளின் ஓராண்டு விற்று முதல் தொகை 400 பில்லியன் டாலர். வால்மார்டின் ஓராண்டு விற்று முதல் 420 பில்லியன் டாலர். ஆனால் வால்மார்ட் நிறுவனத்தில் மொத்தம் வேலை செய்பவர்கள் 21 இலட்சம் பேர் மட்டுமே. கிட்டத்தட்ட ஒரே அளவான விற்றுமுதல் - ஆனால் வால்மார்டின் 6 மடங்கு குறைவாக ஆட்கள் வேலை செய்கின்றனர். எனவே ஒரு கோடிப் பேருக்கு வேலை கிடைக்கும் என்பது ஒரு பித்தலாட்டம். இதை இப் படியும் சொல்லலாம் - 6 பேரின் வேலையைப் பறித்து விட்டு ஒருவருக்கு வேலை தரப்படும்.

உலகப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 250 பெரிய சில்லறை வணிக நிறுவனங்கள் ஓராண்டில் மொத்த மாக 3.94 டிரில்லியன் டாலர் அளவுக்கு விற்கின்றன (ஒரு டிரில்லியன் என்பது ஒரு இலட்சம் கோடி). இவற்றுள் 81 நிறுவனங்கள் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவை. முதல் நிலையில் உள்ள வால்மார்ட் நிறு வனம் 15 நாடுகளில் 8500 பேரங்காடிகளைக் கொண் டுள்ளது. 2012ஆம் ஆண்டில் இதன் மொத்த விற்று முதல் 447 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி). அமெரிக்காவில் மட்டும் வால்மார்ட்டுக்கு 4000 கிளைகள் உள்ளன. வால்மார்டின் ஒரு பேரங்காடி என்பது 1,50,000 முதல் 1,95,000 சதுர அடி பரப்பில் - நம்மால் கற்பனையும் செய்து பார்க்க முடியாத அளவில் மாபெரும் கட்டடமாக இருக்கிறது. இந்தியாவில் உரிமம் பெற்றுள்ள 1.2 கோடி சில்லறை வணிகக் கடைகளில் 95 விழுக்காடு கடைகள் 500 சதுர அடிக்கும் குறைவான பரப்பில் உள்ளவை என்பதை வால்மார்ட் பேரங்காடியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் எவ ருக்கும் தலைசுற்றும்.

இவ்வளவு வலிமை வாய்ந்த வால்மார்ட்டு நியூ யார்க் நகரில் இதுவரை அனுமதிக்கப்படவில்iலை. அதேபோன்று அமெரிக்காவின் தலைநகரான வாஷிங் டன் நகர எல்லைக்கு உட்பட்ட பகுதியிலும் அனுமதிக் கப்படவில்லை. பொதுவாகப் பெரிய நகரங்களிலிருந்து முப்பது நாற்பது கிலோ மீட்டர் தள்ளியே வால்மார்ட் கிளைகள் அமைந்துள்ளன. 20,000 சதுர அடிப்பரப் பில் நியூயார்க் நகரில் வால்மார்ட்ட தன் கிளையை அமைக்க மேற்கொண்ட முயற்சியைத் தொழிலாளர் களும், நகரக் குடிமக்கள் குழுவும் கடந்த கிழமை முறியடித்துவிட்டன (தி இந்து 23.9.12). இதை முன் மாதிரியாகக் கொண்டு தான் இந்திய அரசு அந்நியச் சில்லறை வணிக நிறுவனங்களை அனுமதிப்பது மாநி லங்களின் விருப்பம் என்று அறிவித்துள்ளது. ஊழல் பெருச்சாளிகளான நமது அரசியல்வாதிகளும், உயர் அதிகார வர்க்கத்தினரும் வேறு பெயர்களில் இந்நிறு வனங்களின் கிளைகளை அமைக்க வழியமைப்பர் என்பது உறுதி.

உழவர்களிடம் நேரடியாகக் கொள்முதல் செய்யப் படும் என்பது உண்மையைத் திரித்துக் கூறுவதாகும். மலேசியாவில், பிரான்சு நாட்டின் கேர்ஃபோர் நிறுவனம் காய்கறிகள், பழங்களில் 41 விழுக்காட்டை மொத்த வணிகர்களிடமும், 18 விழுக்காட்டை உழவர்களிடமும் கொள்முதல் செய்கிறது. மீதி 41 விழுக்காட்டை இடை நிலையில் இருப்பவர்களிடம் (Semi-Direct Suppliers) வாங்குகிறது. 85 விழுக்காட்டுப் பேர் சிறு, குறு உழவர் களாக உள்ள இந்தியாவில், விவசாயிகளிடம் நேரடி யாகக் கொள்முதல் செய்யப்படும் என்பது ஏட்டளவில் மட்டுமே இருக்கும். எனவே உழவர்கள், நுகர்வோர் ஆகிய இரு பிரிவினருக்கும் பட்டை நாமம் தீட்டவே படையெடுத்து வருகின்றன பன்னாட்டுச் சில்லறை வணிக நிறுவனங்கள்.

பாதை ஓரத்தில் அமர்ந்தும், தலையில் சுமந்து கூவியவாறு நடந்தும், தள்ளுவண்டியிலும், மிதிவண்டி யிலும், பிற இரு சக்கர ஊர்தியிலும், பெட்டிக் கடை களிலும், சிறிய - நடுத்தர - பெரிய கடைகள் மூலமும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள், பழங்கள், பால், தயிர், மளிகை சாமான்கள், விளையாட்டுப் பொருள்கள், சவுளிப் பொருள்கள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள், பூக்கள் முதலானவற்றைச் சில்லறையில் விற்பவர்கள் இந்தியாவில் 20 கோடிப் பேர் இருக்கின் றனர் (தி இந்து 23.9.12).

சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள இருபது கோடி மக்களின் வாழ்வைச் ‘சீர்திருத்தம்’ என்ற பலிபீடத்தில் காவு கொடுக்க முடிவு செய்துள்ள மன்மோகன் சிங் அரசையும், இதன் பின்னணியில் உள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், பன்னாட்டு நிறுவனங்களையும் எதிர்த்து நாம் தொடர்ந்து போராட வேண்டும்.