வைத்தியநாத அய்யரும் அவரது மனைவி சாவித்திரியும் தங்களது ஒரே பிள்ளையான கங்கா தரனைப் பற்றி மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருந் தனர். கங்காதரன் உடல்நலத்துடனும், மனநலத்து டனும் நன்றாகத்தான் இருந்தான். ஆனால் படிப்பில் படுமோசமாக இருந்தான். முக்கி முனகி ஏழாவது வரை வந்துவிட்டான். கீழ்வகுப்புகளில் தவறி விழுந்து இருந்தாலும், இரண்டாவது அல்லது மூன்றாவது ஆண்டுகளில் தேர்வில் வெற்றி பெற்றான். ஆனால் ஏழாவது வகுப்பில் மூன்று ஆண்டுகள் தவறிய பிறகு பள்ளிக்கூடம் போவதையே நிறுத்திவிட்டான். அவனது பெற்றோர்கள் அவனுக்குத் தனிப்பயிற்சி கொடுப்பது முதல் ஊக்கப்படுத்துவதற்காகப் பரிசுகள் அளிப்பது, அச்சத்தினாலாவது படிப்பானா என்ற எண்ணத்தில் அடிப்பது போன்ற பல வழிகளிலும் முயன்று பார்த்து விட்டனர். ஆனால் கங்காதரனுக்குப் படிப்பு ஏறவே இல்லை. சரி! படிப்புத்தான் வரவில்லை; விளை யாட்டில் சிறந்து விளங்கினால் அத்துறையில் ஈடு படுத்திவிடலாம் என்றும் வைத்தியநாத அய்யரும், சாவித்திரியும் ஆசைப்பட்டனர். ஆனால் பொது அரங் கில் போற்றப்படும் கால்பந்து (குடிடிவ க்ஷயடட), மட்டைப் பந்து (ஊசiஉமநவ), கூடைப்பந்து (க்ஷயளமநவ க்ஷயடட), சடுகுடு போன்ற எந்த விளையாட்டிலும் அவனுடைய கவனம் செல்லவில்லை.

ஒருநாள் சாவித்திரியின் சிநேகிதி கூறிய தகவல் வைத்தியநாத அய்யரையும் சாவித்திரியையும் துணுக் குறச் செய்தது. கங்காதரன் கழைக்கூத்தாடிகளுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டு இருந்ததைப் பார்த் தாகக் கேட்டபோது சாவித்திரி மிகவும் கவலையடைந் தாள். “பிராம்மண குலத்திலே பிறந்திட்டு இப்படிக் கேவலமான வேலையைச் செய்றானே” என்று கூற, “ஒரு வேளை ஆஸ்பத்திரியிலே குழந்தையை மாத் திட்டாங்களா?” என்று வைத்தியநாத அய்யர் சந்தே கப்பட்டார். “சும்மா இருங்கோன்னா! அவன் தான் உங்களை அப்படியே உரிச்சு வச்சாப்போல இருக்கானே!” என்று கூறி, தன் கணவனின் கற்பனைக்கு முற்றுப் புள்ளி வைத்தாள் சாவித்திரி. அன்று கங்காதரன் வீட்டிற்கு வந்தபோது வைத்தியநாத அய்யர் தன் கோபம் தீரும் வரைக்கும் அவனை அடித்தார். அனைத்து அடிகளையும் வாங்கிக் கொண்டபின், ஒன்றுமே நடக்காதது போல் சாப்பிட்டு விட்டுப் படுத்துவிட்டான்.

இன்னொரு முறை கங்காதரன் ரிக்ஷா இழுப்பதைப் பார்த்ததாகவும், தெருக் குழந்தைகளுடன் சேர்ந்து தார்ச்சாலைத் தொழிலாளர்களுடைய வேலையில் பங்கு கொள்வதைப் பார்த்தாகவும் அவனுடைய பெற்றோர்களுக்குத் தெரிவித்தனர். திட்டுவதாலும், அடிப்பதாலும் தங்கள் மகனின் போக்கை மாற்ற முடியவில்லை என்று தெரிந்து கொண்டு, மேற் கொண்டு என்ன செய்வது என்று வருத்தப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் தான் சாவித்திரியின் ஒன்றுவிட்ட தம்பி சபேசன் வந்தான். கங்காதரனைப் பற்றிய பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த சபேசன், “படிப்பு வரலேன்னா அவனுக்கு எதிலே இன்ட்ரெஸ்ட் இருக்கோ அந்த ஃபீல்டிலே கொண்டு போங்க அத்திம் பேர்” என்று கூற, “ஆமா அவனுக்கு கழைக்கூத்து லேயும், கூலி வேலையிலேயும், ரிக்ஷா ஓட்றதிலேயும் இன்ட்ரெஸ்ட் இருக்கு. அதுக்காக அந்த ஃபீல்டிலே அனுப்ப முடியுமா?” என்று பாதி கோபமாகவும், பாதி வருத்தமாகவும் வைத்தியநாத அய்யர் கூறினார்.

ரிக்ஷா எல்லாம் ஓட்ட முடியாது. கூலி வேலையை யும் செய்ய முடியாது. ஆனா.... கழைக்கூத்து.... அதை நல்லவிதமா டெவலப் பண்ண டைம் பத்தாது.... என்று இழுத்துக் கொண்டே கூறிய சபேசனைப் பார்த்து “டேய்! உனக்குப் பைத்தியம் பிடிச்சிருச்சா?” என்று சாவித்திரி இடைமறித்தாள். “ஏங்கா?” என்று சபேசன் வினவ, “கழைக்கூத்தை டெவலப் பண்றதுன்னு என்னமோ உளறிக் கொட்றியே?” என்று சாவித்திரி கேட்டாள்.

“இல்லேக்கா! இப்ப நம்மவா பரத நாட்டியத்திலே கொடிகட்டி பறக்கிறா. ஆனா மூணு, நாலு ஜென ரேஷன் முன்னாடி அந்தப் பக்கமே போக மாட்டா. அது தேவதாசிகளுடைய தொழிலா இருந்துச்சு. இந்த ஜஸ்டிஸ் பார்டிக்காரங்க தேவதாசி சிஸ்டத்தை ஒழிச் சதுக்கப்பறம், நம்மவா பரதநாட்டியத்திலே புகுந்து அதை ‘டிவைன் ஆர்ட்’ன்னு ஆக்கலையா? அதே மாதிரி தேவைப்பட்டா கழைக்கூத்தையும் டிவைன் ஆர்ட்டா ஆக்க முடியும்” என்று சபேசன் கூறவும், “சபேசா, கழைக்கூத்துங்கிறது பரதநாட்டியம் மாதிரி ஈஸி இல்லேடா. உண்மையான ஸ்கில் இருந்தாத் தான் முடியும்” என்று வைத்தியநாத அய்யர் இடை மறித்துக் கூறினார். ஆனால் சபேசனோ, “அதெல்லாம் ஒண்ணுமில்லே அத்திம்பேர்! மொதல்லெ உண்மை யான கழைக்கூத்தை ஒழிச்சுக் கட்டணும். அப்பறம் கழைக்கூத்துலே நம்மவாளாலே எது முடியுமோ அதை மட்டும் பண்ணிண்டு இதுதான் கழைக்கூத்துன்னு சொன்னா, யாரு எதிர்த்துச் சொல்லப் போறா? அப்படிச் செய்றதுக்கு ரொம்ப டைம் வேணும். அவ்வளவுதான். ஆனா நம்ம பிரச்சினை அது இல்லே. நம்ம கங்காதரனோட எதிர்காலத்தைப் பற்றித்தான் யோசனை பண்ண வேண்டி இருக்கும்” என்று கூறிவிட்டு சற்று இடைவெளி விட்டு, “ஏன் அத்திம்பேர்! அவனை பிரை வேட்லே எழுதி எப்படியாவது (!?) பத்தாவது பாஸ் பண்ண வையுங்களேன். எனக்குத் தெரிஞ்ச ஒரு பிரைவேட், கம்பெனியிலே ஒரு வேலை போட்டுத்தர ஏற்பாடு பண்றேன்” என்று கூறி நிறுத்தினான்.

நாட்டில் இலட்சக்கணக்கில் பத்தாவது படித்தவர் களும், பத்தாயிரக்கணக்கில் பட்டப்படிப்பு, பட்ட மேற் படிப்புப் படித்துவிட்டு ஏதாவது ஒரு வேலை கிடைக் காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் சமூகத்தில், படிப்பே வராத ஒருவன் எந்த வகையிலாவது (!?) பத்தாவது வகுப்பில் தேறிவிட்டால், அவன் பார்ப்பன னாக இருக்கும் ஒரே காரணத்தால் அவனுக்கு வேலையை உறுதியாக வாங்கித்தர முடியும் என்ற தைரியத்தில் சபேசன் கூறியது வைத்தியநாத அய்யருக்கும், சாவித்திரிக்கும் அவநம்பிக்கை தரும் சொற்களாகப்படவே இல்லை. மாறாகத் தங்களாலும் அது முடியும் என்றும், ஆனால் கங்காதரன் பத்தாவது தேறுவது தான் இயலாத காரியமாக உள்ளது என்றும் கூறிவிட்டார்கள்.

சிறிது நேர மௌனத்திற்குப்பின், சபேசன் மீண்டும் பேச்சை ஆரம்பித்தான். “ஏன் அத்திம்பேர்! அவனை ஏதாச்சும் ‘ஒரு கோயில்லே அர்ச்சகரா ஆக்கிட்டா’ என்ன?”

“அதுக்கு மந்திரம் தெரியணுமோ இல்லியோ? படிப்பு வாசனையே வராத நம்ம அசடு மந்திரத்தை எங்கே கத்துக்கப் போறான்?” என்று சாவித்திரி கூறியதை, வைத்தியநாத அய்யர் இடைமறித்து “நாம சொல்றது தாண்டி மந்திரம், இப்ப இருக்கிற அர்ச்ச கர்கள் எல்லாருமே மந்திரம் தெரிஞ்சவங்களா? தெரிஞ்சவா பாதி; தெரியாதவா மீதி. எதையாச்சிலும் முனகிட்டு மந்திரம்னு சொன்னா யாருக்குடி தெரியப் போகுது? ஆனா நம்ம பையன் அதுக்கு ஒத்துக்கமாட் டேங்கிறானே? நான் நெறைய தடவை சொல்லிப் பார்த்துட்டேன். அவன் டிப் டாப்பாத்தான் ட்ரஸ் பண்ணிக்குவானாம். காவி ஏறிய வேட்டி எல்லாம் கட்ட மாட்டானாம்” என்று அங்கலாய்த்தார்.

கங்காதரனைப் பற்றிய பேச்சு அன்று அத்துடன் முடிவுக்கு வந்தது. சில நாட்கள் கழித்து, சாவித்திரி தன் கணவரிடம் “ஏன்னா! வெஸ்ட் மாம்பலத்தில் இருக்கிற சங்கரமடத்திலே ஒரு சாமியார் வந்திருக் கிறாராம். அவர் ஜாதகத்தை நல்லா பார்க்குறாராம். நம்ம கங்காதரனோட ஜாதகத்தை அவர் கிட்டே காட்டலாம்னா” என்று கூற, வைத்தியநாத அய்யரும் ஒப்புக்கொண்டு, அந்தச் சாமியாரைப் போய் பார்த் தார்கள். அந்தச் சாமியாரும் கங்காதரனின் ஜாதகத் தைப் பார்த்துவிட்டு “பையன் ரொம்ப புத்திசாலியா இருப்பானே?” என்று கேட்கவும், அவர்களுக்கு அழுவதா சிரிப்பதா என்று தோன்றாமல் திகைத்து நின்றார்கள். அவர்கள் திகைத்து நின்றதைப் பார்த்த சாமியார் பிரச்சினை என்னவென்று கேட்டார். அவர்கள் கங்கா தரனைப் பற்றி விலாவாரியாக எடுத்துக் கூறியதைக் கேட்டு, சற்றுநேரம் அமைதியாக இருந்தார். பின், “நீங்க பையனை அழைச்சிண்டு அறுபடை வீட்டுக் குப் போயிட்டு வாங்க” என்று கூறிவிட்டு, ஜாதகக் கட்டைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். ஜாதக ரீதியாக ஏதோ பெரிய ஆலோசனை கிடைக்கும் என்று நம்பிச் சென்ற அவர்களுக்கு, சாமியாரின் அறுபடை வீட்டு யாத்திரைக்கான அறிவுரை சப்பென்று இருந்தது. ஆனால் வழக்கமான வேலையிலிருந்து விடுபட்டு ஏதாவது சுற்றுப்பயணம் செய்தால் மனதிற்கு மகிழ்வு தரும் என்று எண்ணிய அவர்கள் அறுபடை வீடு யாத்திரைக்குச் செல்ல ஆயத்தமானார்கள். முதலில் திருச்செந்தூருக்குச் செல்வது என்றும், அதன்பின் திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, பழனி, சுவாமி மலை, திருத்தணி செல்வது என்றும், கூடவே ஆங் காங்கே மற்ற தேவாரப் பதிகக் கோயில்களுக்கும், வைஷ்ணவ திவ்ய தேசக் கோயில்களுக்கும் செல்வது என்றும் திட்டமிட்டார்கள்.

அவர்கள் திட்டமிட்டபடி திருச்செந்தூரை முடித்துக் கொண்டு மதுரை வந்து திருப்பரங்குன்றம் சென்ற போது, ஒரு திருப்பம் நிகழ்ந்தது. திருப்பரங்குன்றம் கோயிலில் முருகனை வணங்கவிட்டு வெளியில் வந்தபோது, அவர்கள் பார்த்த ஒரு அறிவிப்புப் பலகை அவர்களுடைய கவனத்தை ஈர்த்தது. அந்த அறிவிப்புப் பலகையில், ‘வைசாக்த மடத்திற்குச் செல்லும் வழி’ என்று இருந்தது.

‘வைசாக்த மடமா?’ பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தார்கள். அவர்களுக்கு முறையான முழுமை யான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விதமாகக் கூறினார்கள். அவர்கள் கூறியவற்றில் அந்த மடம் பேருந்து நிலையத்திலி ருந்து நிலையூர் செல்லும் வழியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது என்பது மட்டும் பொதுவான விபரமாக இருந்தது. அவர்களுக்கு அந்த மடத்தைப் போய் பார்த்துவிடலாம் என்று தோன்றியது. “ஒரு ஆட்டோ ரிக்ஷாவைப் பிடித்துப் போகலாம்” என சாவித்திரி கூற, “நடந்து போகலாம்” என்று கங்காதரன் கூறினான். மகனின் சொற்களுக்குச் செவிமடுத்து மூவரும் அம்மடத்திற்கு நடந்தே போனார்கள்.

வைசாக்த மடம் கதிர்வேலன் என்ற இளைஞர் ஒருவரால் நிறுவப்பட்டு இருந்தது. அவர் பாரதியாரின் மேல் பற்றுகொண்டவர். பாரதியாரின் படைப்புக்களை ஆர்வத்துடன் பயின்றவர். அதில் வரும் வைசாக்தன் என்ற பண்டாரத்தின் கதையில் ‘வைணவம் + சைவம் சாக்தம் என்பதன் சுருக்கம் தான் வைசாக்தம்’ என்றும்; ‘விஷ்ணு, சிவன், சக்தி அனைத்தும் ஒன்றே’ என்றும், ‘தெய்வத்தை நம்ப வேண்டும்; செல்வத்தைச் சேர்க்க வேண்டும்’ என்பதுதான் வைசாக்தத்தின் கொள்கை என்றும் படித்த பொழுது, அதில் தன் மனதை பறிகொடுத்தவர் தான் கதிர்வேலன். ‘தெய்வத்தை நம்ப வேண்டும்; செல்வத்தைச் சேர்க்க வேண்டும். ஆஹா! என்ன அருமையான கொள்கை’ என்று கதிர்வேலன் தன் மனதில் அடிக்கடி புகழ்ந்து கொள்வது உண்டு.

மற்ற எல்லாத் தொழில்களைவிட சாமியார் மடங் களை நடத்துவது தான் செல்வத்தைச் சேர்ப்பதற்கான சிறந்த வழியாக இருப்பதைப் பல மடாதிபதிகள் சிறந்த (!?) முறையில் வழிகாட்டி இருக்கிறார்கள். கதிர்வேல னும் அவ்வழியைப் பின்பற்றினார். ஒரு சின்னஞ்சிறு குடிசையில் அவர் நிறுவிய வைசாக்த மடம் அய்ந்து ஆண்டுகளில் பத்து ஏக்கர் பரப்பளவில், தன்னை நாடி வரும் பக்தர்களின் தேவைகளை நிறைவு செய்யும் அனைத்து வசதிகளுடனும் மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்துவிட்டது. சமூகத்தில் பலதரப்பட்ட மக்கள் அங்கு வருகை புரிந்துகொண்டு இருந்தனர். கதிர்வேலன் இந்து மதத்தின் அர்த்தங்களைப் பற்றி விளக்கிப் பேச ஆரம்பித்தால் அனைவரும் மதிமயங்கிக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

வைசாக்த மடத்தின் வளர்ச்சியையும், அதன் மூல மாக இளம் வயது மடாதிபதி கதிர்வேலனின் வளர்ச்சி யையும் கண்ட பார்ப்பன ஆதிக்கவாதிகள், அதை எப்படிக் கையாள்வது என்று முடிவெடுக்க முடியாமல் திணறிக் கொண்டு இருந்தனர். கதிர்வேலன் ஒரு சூத்திரன் என்பதால், எவ்வளவு பெரிய ஞானியாக இருந்தாலும் அவரை மதப் பெரியாராக ஏற்றுக்கொள்ள முடியாது; ஆனால் இந்துமத நூல்களிலும், சமஸ்கிருத மொழியிலும் அவருக்கு ஆழ்ந்த புலமை இருந்தது. ஆகவே ஏடாகூடாமாக ஏதாவது செய்து பிரச்சினையில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்த அவர்கள், இப்போதைக்கு பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக ஒன்றும் நடக்கவில்லை என்பதால் அமைதியாகக் காத்திருக் கலாம் என்றும் இருந்தனர். இருந்தாலும் ஒரு சூத்திரன் இந்து மதத்தின் பெயரால் புகழ் பெறுவதையும், செல்வம் சேர்ப்பதையும் கண்டு பார்ப்பன வயிற்றெரிச்சல் புகைத்துக் கொண்டுதான் இருந்தது. மடத்திற்குள் ஊடுருவுவதற்குத் தகுந்த சமயத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில்தான், வைத்தியநாத அய்யரும், சாவித்திரியும், கங்காதரனும் அம்மடத்தைச் சென்று பார்த்தார்கள். மற்ற மடாதிபதிகள் போல கதிர்வேலன் காவி உடைகளை அணிந்திருக்கவில்லை. அந்த மடத்தில் அமைந்துள்ள கடவுள் சிலைகளுக்கு யார் வேண்டுமானாலும் பூசை செய்யலாம். மேலும் அங்குள்ளவர்களின் வாழ்க்கை, திருமண வாழ்க்கை உட்பட, மற்ற சாதாரண மக்களின் வாழ்க்கையைப் போலவே இருந்தது. இதைப்பற்றி வைத்தியநாத அய்யர் விசாரித்த போது, கட்டுப்பாடு என்ற பெயரில் போலியாகவும் திரைமறைவில் தவறாகவும் நடப்பதை விட தங்கள் மடத்தின் எளிமையான விதிமுறைகள் சிறந்தவை என்று மடத்தில் உள்ளவர்கள் கூறினர். மேலும் ‘தெய்வத்தை நம்ப வேண்டும்; செல்வத்தைச் சேர்க்க வேண்டும்’ என்று பாரதியார் கூறியபடியே, தாங்கள் நடப்பதாகவும், மற்ற கட்டுப்பாடுகளை விதிப் பதில்லை என்றும் அவர்கள் கூறினர். வைத்தியநாத அய்யருக்கும், சாவித்திரிக்கும் மடத்தைப் பற்றி அறிந்துகொண்டதில் எந்தவிதமான கருத்தும் இல்லாமல் இருந்தனர். ஆனால் கங்காதரனுக்குக் கட்டுப்பாடு எதுவும் இல்லாத இந்த மடத்து வாழ்க்கை ஓரளவு ஈர்க்கச் செய்தது. ஆனால் ஒன்றும் சொல்லாமல் இருந் தான். பின் அவர்களுடைய திட்டப்படி எல்லாக் கோயில் களுக்கும் சென்றுவிட்டு இறுதியில் சென்னைக்குத் திரும்பினர்.

ஒருநாள் சபேசன் வீட்டிற்கு வந்திருந்த பொழுது, கங்காதரன் வைசாக்த மடத்தைப் பற்றி விவரித்தான். அந்த மடத்தில் சேர்ந்தால் எதிர்காலத்தில் நன்றாக இருக்க முடியும் என்று நினைப்பதாகத் தெரிவித்தான். இதைக்கேட்ட சபேசன் தான் அந்த மடத்தைப் பார்த்து விட்டு வருவதாகக் கூறி, மதுரைக்குச் சென்று பார்த்து விட்டு வந்தான். வந்தவன் கங்காதரனின் எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு நல்ல இடத்தைப் பார்த்து விட்டும் அதைப் பற்றியே உணர்வே இல்லாமல் இருக்கும் தன் அக்காவையும், அத்திம்பேரையும் கடிந்து கொண்டான்.

வைத்தியநாதனும் சாவித்திரியும் வியப்படைந் தார்கள். எதற்கும் உதவாத தங்கள் மகன் அந்த மடத்தில் எப்படி நன்றாக இருக்க முடியும்? அதுவும் சூத்திரர்களுக்குக் கீழ் வேலை செய்து கொண்டு அவனால் மரியாதையாக (!?) எப்படி வாழ முடியும் என்று திகைத்தார்கள்.

ஆனால் சபேசனோ, “அத்திம்பேர்! கங்காதரன் மட்டுமல்ல; நானும் அந்த வைசாக்த மடத்திலே சேர்ந்து டலாம்னு பிளான் வச்சிருக்கேன்” என்று கூறவும், ‘அத்திம்பேர்’ மேலும் திகைத்துப் போனார்.

சபேசன் விளக்கினான். “கவர்மெண்ட்லே பெரிய லெவல்லே ஆகவேண்டிய காரியங்களை நம்மவா மடங்கள்லே செஞ்சு குடுக்கிற மாதிரி, அந்த வைசாக்த மடத்திலே சின்ன லெவல்லெ பண்ணிக் குடுத்துட்டு இருக்காங்க. நாம உள்ளே நுழைஞ்சா லெவலை மேலே ஏத்தலாம். லெவல் மேலே ஏர்ற போது கொஞ்சம் கொஞ்சமா அதிகாரம் நம்மவா கையிலே வந்திடும். அங்கே காவி டிரஸ் பழக்கம் இல்லே. அது நம்ம கங்காதரனோட டேஸ்டுக்கு ஒத்துவரும். அவன் அங்கே இருந்தா காலம் பூராவும் சொகுசா லைஃபெ ஓட்டிண்டு இருக்கலாம். நான் போனா நம்மவாளே உள்ளே இழுத்துப் போட்டு சூத்திராளை எல்லாம்...” என்று சபேசன் முடிக்கும் முன்பே, “வெளியே அனுப் பிச்சுடப் போறியா?” என்று வைத்தியநாத அய்யர் கேட்டார். “சூத்திராளை வெளியே அனுப்பிச்சுட்டா, அப்புறம் வேலை பார்க்கிறது யாரு?” என்று கூறிய சபேசன், “சூத்திராளும் அந்த மடத்திலே இருப்பா; நம்மவா அதிகாரத்திலே இருப்பா. சூத்திராள் வேலை செய்வா; அதுதான் சரியாக வொர்க்அவுட் ஆகும்” என்று முடித்தான்.

சபேசனின் திட்டப்படி அனைத்தும் நிறைவேறின. ஒரு அய்ந்தாண்டில் வைசாக்த மடத்தின் அதிகாரம் பார்ப்பனர்களிடம் சென்றுவிட்டது. கதிர்வேலனிடம் பாரதியாரின் பெருமைகளைப் பற்றி பேசியே, வேறு வகையில் சிந்திக்காதபடி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்படியே வேறு வகையில் சிந்தித்தாலும் மடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற சூழ்நிலைதான் இருந்ததே ஒழிய, முன்னர் போன்று அதிகாரம் கைக்கு வரும் நிலை இல்லை.

கங்காதரன் திருமணம் செய்து கொண்டு அம்மடத் திலே சுகமாக வாழ்ந்து கொண்டு இருந்தான்.

Pin It