சமுதாயத்தில் பெரும்பகுதி மக்களைவாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்ற நோய் ஆஸ்துமா என்றால் அது மிகையன்று. சளி, தும்மல், இருமல், மார்ச்சளி, மூக்கடைப்பு, மூச்சுத்திணறல், இரைப்பு, இரைப்பிருமல், சுபஇருமல், ஈளை, சுவாசகாசம், காசநோய் என இந்நோய் பல நிலைகளைக் கொண்டு ஆலமரத்தின் வளர்ச்சிபோல் ஒருவரின் உடலிலே வளர்ச்சியுடன் குடிகொண்டு தொல்லை கொடுப்பதில் முந்திக்கொண்டு நிற்கும். இதற்கு அடிப்படைக் காரணம் உடலிலே கழிவின் தேக்கம், ஒவ்வாமை, உடல்வெப்பம் அடைதல் முதலானவைகளேயாகும்.

இந்நோய்க்கு வேறு மருத்துவமுறைகளில் முற்றிலும் குணமாகும் நிலை இல்லை. இயற்கை மருத்துவத்தில், இயற்கை வாழ்வியல் முறையை நம்பிக்கையுடனும், முயற்சியுடனும் கடைப்பிடிப்பதன் மூலம் இந்நோயி னின்று முற்றிலும் விடுபடலாம். இது திண்ணம்.

தொடக்கநிலையிலே சளி தோன்றும். பின் தும்மல், இருமல் என முன்கூறிய ஒவ்வொரு நிலையும் ஏற் பட்டுத் தொல்லை கொடுக்கும். குறிப்பாக மழை, பனிக் காலங்களில் இந்நோய் வீறுகொண்டு நிம்மதியைக் கெடுக்கும். இரவில், பொதுவாக நடுஇரவு (நடுநிசி) அல்லது விடியற்காலையில் படுக்க முடியாமல் மூச்சு விட முடியாமல் அவதிப்படவைக்கும். இந்நோய் கண்ட வர்களுக்கு, மேற்கண்ட காலங்களில் வாழ்வின் இறுதி எல்லைக்கே சென்றுவிட்ட எண்ணம் ஏற்பட்டு மன வெறுப்பும், சோர்வும் கவலையும் தம் உள்ளத்தே குடிகொண்டு நிம்மதி என்றால் என்ன? என்ற வினா அவர் தம் கண்முன்னே நிற்கும்.

நோய் தீரும் என்று ஆங்கில மருத்துவரிடம் சென்று, சிகிச்சை பெற்று மருந்து உட்கொண்டால் தொடக்க நிலையில் மருந்துக்குக் கட்டுப்பட்டது போன்று தோன்றிப் பின் நோயின் கடுமைத் தொடரும். மீண்டும் மருத்துவரிடம் சென்றால் வீரீயம் கூட்டப்பட்ட மருந்து மாத்திரையைக் கொடுப்பார். அம்மருந்து மாத்திரைக்கும் முன்கண்ட நிலைதான். இந்நிலை தொடரும் போது மருந்துகளின் வீரீயத்தால் பக்க விளைவுகள் ஏற்படத் தொடங்கும். அப்பப்பா! இந் நோயிலிருந்து விடுபட வழியே இல்லையா? வழி உண்டு. இயற்கை வாழ்வியல் முறைதான் இதற்கு நிலைத்த தீர்வு. மருந்து மாத்திரையில்லை; பக்க விளைவு இல்லை; பணச்செலவு இல்லை; மருத்துவரிடம் சென்று  மணிக்கணக்காகக் காத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

“உணவே மருந்து; மருந்தே உணவு” என்ற வாழ்வியல் முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். நோய் கண்டவர்க்கு இவ்வாழ்வியல் முறையில் நம் பிக்கை வேண்டும். அடுத்து, முயற்சியும், பயிற்சியும் இருந்தால் ஒரு மாதத்திலேயே இந்நோயிலிருந்து விடுபட வழியுண்டு. வியப்பாக இருக்கிறதா? உண்மை. நூற்றுக்கு நூறு உண்மை. நோய் கண்டவர் கள் இயற்கை வாழ்வியல் முறையைக் கடைப்பிடித்துக் குணம் கண்டுள்ளார்கள்.

சிகிச்சை முறை

1. உணவில் நெறிமுறை, 2. எளிய ஆசனப் பயிற்சி, 3. மூச்சுப் பயிற்சி, 4. மனநலம்.

1. உணவில் நெறிமுறை

நோயின் தாக்கத்தில் உள்ளவர்கள் காலையில் படுக்கையை விட்டெழுந்தவுடன் வெதுவெதுப்பான (அதிக சூடு இல்லாத) தண்ணீர் 4 (அ) 5 குவளை வேகமாக அருந்த வேண்டும். அவ்வளவு நீர் குடிக்க முடியாதவர்கள் மெல்ல மெல்ல 2, 3, 4, 5 எனக் குவளைகளின் எண்ணிக்கையை ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் பழக்கப்படுத்தி அருந்துதல் வேண்டும். நோயின் தாக்கம் குறைந்தபின் வெந்நீரைத் தவிர்த்து தண்ணீர் அருந்தலாம்.

இந்நோய்க்கு ஆட்பட்டவர்கள் பால், தயிர், மோர் முதலானவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். அடுத்து இட்லி, தோசை, இனிப்பு வகைகள், எண் ணெய்ப் பலகாரங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். பால், பால் பொருள்கள், இட்லி தோசை களில் உள்ள உளுத்தம்பருப்பு ஆகியவைகள் சளியை உருவாக்கும். இனிப்பு, எண்ணெய்ப் பலகாரங்கள் மலச்சிக்கலை ஏற்படுத்தும். ஆகவே இவைகளைத் தவிர்த் தால் கண்டிப்பாகக் குணம் ஏற்படும்.

காலைச் சிற்றுண்டியில் இட்லி தோசை இவை இல்லாமல் என்ன உண்பது என்கின்ற எண்ணம் தோன்றும். நீங்கள் சிந்தித்தால், மனம் வைத்தால் முடியாதது இல்லை. உளுத்தம்பருப்புச் சேர்க்காத மாவால் தயாரிக்கப்பட்ட இடி அப்பம், கோதுமை மாவு தோசை, சுக்கா ரொட்டி, கேழ்வரகு மாவு அடை, சத்துமாவுக் கஞ்சி இப்படி ஏதாவது ஒன்று உண்ண லாம். அல்லது முழு இயற்கை உணவாகப் பழங்கள், காய்கறிகள், மூலிகைச் சாறுகளில் ஒன்று என உண்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கி நோயின் தன்மை குறைந்து குணம் கிட்டும்.

சமைக்காத உணவு வகைகளை உண்டு வந்தால் நோய் விரைவில் குணமடையும். இயற்கை மருத்துவ முகாம்களில் பங்கு பெற்று இயற்கை உணவு வகை களைச் செய்யும் முறையையும் வழியையும் செய் முறையையும் வளர்த்துக் கொள்வது நலம். அடுத்த தாக, இரவு உணவை மாலை 7 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும். உணவு உண்ணும் போது இடை யிடையே தண்ணீர் அருந்தக் கூடாது. நன்றாக மென்று உண்டால் இடை யிடையே தண்ணீர் அருந்துவதைத் தவிர்க் கலாம்.

உணவில் நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களைப் பயன்படுத்துதல் வேண்டும். அதாவது பழங்கள், கீரைகள், காய்கறிகள், புஞ்சைத் தானியங்கள் முதலானவைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள் வாங்கும்போது கொடிகாய்களாகிய புடலை, சுரைக்காய், பீர்க்கங்காய், அவரை, பாகல், கோவைக்காய் முதலான காய்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். இக்காய்களில் நார்ச்சத்து மிகுந் துள்ளது. இதனால் மலச்சிக்கல் ஏற்படாது. மலச்சிக்கல் இல்லை என்றால் உடலில் கழிவுகள் தங்கா. உடலில் கழிவுகள் தங்கவில்லை யெனில் நோய் அணுகாது.

2. எளிய ஆசனப் பயிற்சி

ஒரு ஆசன ஆசிரியரிடம் சிறிது நாள்கள் பயிற்சி பெற்றுப் பின் தொடர்ந்து வீட்டில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். காலைக் கடன்களை முடித்துக் காலி வயிற்றுடன் ஆசனங்களைச் செய்ய வேண்டும். வயிறு சுருங்கி நுரையீரல் விரிவடையும் தன்மையில் ஆசனங்கள் பழகுதல் வேண்டும்.

நின்ற நிலை ஆசனம்       உட்கார்ந்த நிலை ஆசனம்

1. பிரை ஆசனம்           1. பத்மாசனம்

2. பாத அஸ்தாசனம்        2. வஜ்ராசனம்

3. யோகமுத்ரா, 4. மகாமுத்ரா

                          5. பச்சிமோத்தாசனம்

கவிழ்ந்து படுத்தநிலை     மேல்நோக்கிப்

ஆசனம்                   படுத்த நிலை ஆசனம்

1. புஜங்காசனம்            1. நாவாயாசனம்

2. தனுராசனம்             2. மச்சாசனம்

3. சலபாசனம்              3. சாந்தியாசனம்

3. மூச்சுப்பயிற்சி

நுரையீரல் நன்கு விரிவடையும் வகையில் நம் மூச்சு அமைதல் அவசியம். பொதுவாகக் காற்றை மூக்கு வழியாகவே சுவாசிக்க வேண்டும். ஒரு சில பயிற்சியின் போது மட்டும் வாய் வழியாக வெளியிட வேண்டும். நெஞ்சு சுத்தப் பயிற்சியை நோய் கண்டோர் ஒவ்வொருவரும் பழகுதல் அவசியம். நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் வழியாக நெஞ்சு நிரம்பும் அளவிற்குக் காற்றை உள்ளே இழுத்துப் பிறகு வாய் உதடுகளை விளக்கை அவிக்க ஊதுவது போல் குவித்து வாய் வழியாக உள்ளே உள்ள காற்றை முழுமையாக வெளியேற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால் நுரையீர லின் கீழ்ப்பாகம், நடுப்பாகம், மேல்பாகம் ஆகிய அனைத்துப் பாகங்களிலும் உயிர்க் காற்று (பிராணவாயு) நிரம்பி அங்குள்ள கழிவுக்காற்று வெளியேறுகிறது. இது போன்று ஐந்து அல்லது ஆறு முறை செய்ய லாம். இது நெஞ்சு சுத்தி எனப்படும். இதன்பின் நாடிசுத்தி செய்ய வேண்டும். வல மூக்கை வல பெருவிரலால் மூடிக்கொண்டு இட மூக்கால் காற்றை வாங்கியபின் இட மூக்கை மோதிர விரலால் மூடி, வல மூக்கைத் திறந்து அதன் வழியே காற்றை வெளிவிட வேண்டும். பின் வல மூக்கில் காற்றை வாங்கி இட மூக்கால் வெளிவிட வேண்டும். இப்படியே பலமுறை செய்ய வேண்டும். மூச்சு வாங்கிவிடும்போது முகத்திலும் மூக்கிலும் நெளிவு, சுழிவுகள் ஏற்படாமல் இருக்க வேண்டும். முழுக் கவனமும் மூச்சுக் காற்றின் மீது இருக்க வேண்டும். பத்மாசனம் அல்லது வஜ்ரா சனம் ஆகிய இருக்கைகளில் அமர்ந்து நேராக உட்கார்ந்து செய்ய வேண்டும். காலை, மாலை என இரண்டு வேளையும் காலி வயிற்றுடன் செய்ய வேண்டும். வயிறு, விலா, மார்பு விரிந்து சுருங்குவதன் மூலம் காற்று உள்ளும் வெளியும் சென்றுவரும். மூச்சை வாங்க வேண்டும். இழுக்கக்கூடாது. மூச்சை உள் வாங்குவது எட்டு எண்ணிக்கை என்றால் வெளிவிடுவது பதினாறு எண்ணிக்கை என 1:2 என்ற விகிதத்தில் நடைபெற வேண்டும். நுரையீரலில் சிறுசிறு காற்று அறைகள் உள்ளன. அவை சுமார் எழுபத்தைந்து கோடிகள் என அறிவியல் ஆய்வறிஞர்கள் ஆய்ந்தறிந்துள்ளனர். சாதா ரணமாக நாம் சுவாசிக்கும் காற்று மேற் கண்ட அனைத்துச் சிற்றறைகளையும் சென் றடைவதில்லை. நாடி சுத்தி பயிற்சியின் மூலம் இது நிறைவடைகிறது. தொடர்ந்து செய்துவந்தால் நுரையீரலிலும் இரத்தத் திலும் உள்ள கரிக்காற்று வெளி யேறி உயிர்க்காற்று நிரம்புகிறது. இதனால் நாளுக்குநாள் தொந்தரவு குறைந்து நலம் கிட்டுகிறது.

4. மனநலம்

உணவு, சுற்றுப்புறச் சூழ்நிலை, நல்ல பழக்கவழக் கங்கள் அமைந்தாலும் நல்ல மனநிலை அமையா விட்டால் ஆரோக்கியம் முழுமைபெறாது. மனமும் உடலும், தமிழும் இனிமையும் போன்றும். நகமும் சதையும் போன்றும் பிரிக்க முடியாதவை. மனத் துக்கும் சுவாசத்திற்கும் தொடர்பு உண்டு. மனத்துக்கும் இதயத்திற்கும், மனத்திற்கும் சுரப்புகளுக்கும், மனத் துக்கும் நரம்பு களுக்கும், மனத்திற்கும் குருதி ஓட்டத் திற்கும், மனத்திற்கும் கழிவுறுப்புகளுக்கும் இன்னபிற உறுப்புகளுக்கும் தொடர்பு உண்டு. மனம் பாதிக்கப் பட்டால் இவையனைத்தும் பாதிக் கப்பட்டு உடல் ஆரோக்கியமிழக்கும்.

மனத்தை விழிப்போடு வைத்துக் கொள்ள வேண்டும். மன உணர்வுகள் மீது நாம் ஆதிக்கம் செலுத்த வேண் டும். தேவை யில்லாமல் மனத்தை அலையவிடக் கூடாது. அலட்டிக் கொள்ளக் கூடாது. அவசியமற்ற உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்க வேண் டும். தன்னம்பிக்கை கொண்டு, தாழ்வு மனப்பான் மையை நீக்க வேண்டும். எதிர்பார்ப்புகளை விலக்கி, எதையும் இயல் பாக நோக்கப் பழக வேண்டும். ஆக்குவதும் அழிப்பதும் மனமே என்பதை உணர்ந்து மனத்தை நெறிப்படுத்தி வாழ்ந்தால் நோயிலிருந்து விடுபடுவது எளிது.

நன்கு சிந்திப்போம், முடிந்தவரை வாழ் நாளில் மேற்கண்ட நெறிப்படிச் செயல்படுவோம். நோயி லிருந்து விடுபட்டு நலம் காண்போம்.

வாழ்க இயற்கை மருத்துவம்! வளர்க மாந்தர் நலம்!!

Pin It