ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இலண்டன் மாநகரில் 2012இல் சூலை 27ஆம் நாள் தொடங்கி ஆகசுட்டு 12இல் முடிவுற்றன. உலக நாடுகளில் ஏறக்குறைய 200 கோடி மக்களுக்கு மேல் இந்த விளையாட்டுப் போட்டிகளை நேரிலும், தொலைக் காட்சியிலும் கண்டுகளித்துள்ளனர். 204 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி குன்றிவரும் நிலையிலும், குறிப்பாக, இங் கிலாந்து நாடு உட்பட பெரும்பாலான அய்ரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் பெரும் சரிவுகளைச் சந்தித்து வருகிற நிலையிலும் இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. உலகின் பல நாடுகளைப் பல நூறு ஆண்டுகள் அடிமைப்படுத்திப் பெற்ற நிர்வாகப் பட்டறிவுத் திறன் இன்றும் இங்கிலாந்தில் பட்டுப்போக வில்லை என்பதையே அமைதியாக முடிந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பறைசாற்றுகின்றன். ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்குச் செலவிடப்பட்ட பணத்தொகை இந்திய மதிப்பில் ரூ.82,000 கோடி யாகும். பார்வையாளர்கள் போட்டிகளைக் காண்பதற் கான நுழைவுச்சீட்டின் விலை ரூ.1600, ரூ.17,000 என்று உறுதி செய்யப்பட்டது. இராணுவத்தில் பணிபுரிந்தவர்களுக்கும், 2005ஆம் ஆண்டு நடந்த சுரங்கப்பாதைக் குண்டுவெடிப்பு நிகழ்வில் பலியான குடும்பத்தினருக்கும் இலவசமாக நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

இலண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் குறிப்பிடத்தக்க சில சிறப்புகளும் இடம்பெற்றன. சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. உலகம் வெப்பமய மாகிறது. எனவே, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கூடிய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற உயரிய நெறியை இந்த விளையாட்டுப் போட்டிகளில் இங்கிலாந்து அரசு பின்பற்றியிருக்கிறது. தேநீர்க் குவளை தொடங்கி உணவு உண்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட தட்டுகள் உட்பட அனைத்துப் பொருள்களும், மறுசுழற்சிக்கு உட்படுத்தக் கூடிய உற்பத்தி உள்ளீடுகளால் செய்யப்பட்டன. காட்டு வளங்களைப் பாதுகாக்கவும், இங்கிலாந்து அரசு முனைப்போடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டி ருக்கிறது என்பதை இந்நிகழ்வுகள் அடையாளப் படுத்தியிருந்தன. சூரியச் சக்தியின் வழியாக மின்சார உற்பத்தி செய்யப்பட்டு பல கட்டடங்களில் பயன்படுத் தப்பட்டது. காற்றாலை மின்சாரம், தேம்ஸ் நதியி லிருந்து எடுக்கப்பட்ட நீர்வழி மின்சாரம், திடக்கழிவு வழியாக எடுக்கப்பட்ட எரிசக்தி ஆகியன பயன்படுத் தப்பட்டன.

இத்தகைய பின்னணியோடுதான் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும், நான்கு வெண்கலப் பதக்கங்களையும் பெற்று 204 உலக நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 55ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. வெள்ளை ஏகாதிபத்தியம் இந்தியாவில் ஆட்சி செய்த காலம் தொட்டு இன்றுவரை நூறாண்டு களாக ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து பங்குபெற்று வரும் இந்தியா, 2012 இலண்டன் போட்டிகளில் ஒரு தங்கப் பதக்கத்தைக் கூட பெறவில்லை என்பது பெரும் தலைக்குனிவாகும். குறிப்பாக, வெறும் 1,10,000 மக்கள் தொகையைக் கொண்ட கிரனடா நாடு கூட ஒரு தங்கத்தைப் பெற்றுள்ளது. சீனாவும் இந்தியாவும்தான் பொருளாதாரத்தில் அதிக வளர்ச் சியை ஈட்டி வருகின்றன. வருங்காலத்தில் பொருளா தார வல்லரசுகளாக மாறப் போகின்றன என்று மத்திய அரசின் அமைச்சர்கள் கூறாத நாளில்லை. ஆனால் சென்ற முறை சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் சீனா தரவரிசைப் பட்டியலில் முதலிடத் தைப் பெற்றிருந்தது. தற்போது இரண்டாம் இடத் திற்குத் தள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பொருளா தாரம் சரிவை நோக்கிச் சென்றாலும் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்று தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இந்து நாளிதழில் (13.8.12), நிர்மல் சேகர் என்ற விளையாட்டு விமர்சகர், ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பெற்றுவரும் பின்னடைவுகளுக்குப் பல காரணங்களை வரிசைப்படுத்தி, “இந்தியா ஒரே விளையாட்டை ஊக்குவிக்கும் நாடு. அதை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். அதுதான் மட்டைப்பந்து விளையாட்டு” என்று முத்தாய்ப்பாகக் குறிப்பிட்டுள் ளார். அறிஞர் பெர்னாட்ஷா ஒருமுறை இந்த மட்டைப் பந்து விளையாட்டைப் பற்றி, “11 முட்டாள்கள் விளையாடுவதை 11 ஆயிரம் அறிவிலிகள் வேடிக்கை பார்க்கிறார்கள்” என்று குறிப்பிட்டார். இந்தியாவில் அறிவிலிகளின் எண்ணிக்கைப் பல கோடி அளவில் தற்போது உயர்ந்துள்ளது.

மட்டைப்பந்து மாயையை ஊடகங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு வளர்த்து வருகின்றன. புகழ்மிக்க வீரர்கள் பயன்படுத்திய மட்டை, பந்து, கவசம், கையுறை போன்ற பொருள்கள் ஏலத்தில் விடப்பட்டுப் பல இலட்சக்கணக்கான ரூபாய் ஈட்டப்பட்டது. எங்கு உழைக்காமலே இலாபம் கொட்டுகிறதோ அங்கே இந்திய முதலாளிகள் முதலில் நுழைவார்கள். நிலக் கரியை வெட்டியெடுப்பதானாலும், காய்கறி, பழங் களை விற்பனை செய்வதானாலும், கழிவறைகள் கட்டும் பணிகளாக இருந்தாலும் முதலில் உள்ளே நுழைந்து கொள்ளை இலாபம் பார்ப்பார்கள். இந்த மட்டைப்பந்து விளையாட்டு பெரிய முதலீடு இல்லாமலேயே இலாபம் கொழிக்கும் தொழிலாகவே முதலாளிகள் மாற்றிவிட்டார்கள். ஆனால் இன்றோ இவ்விளையாட்டு பெரும் சூதாட்டத்தளமாகவே மாறி விட்டது. ‘கவர்ச்சிக்கன்னிகள் - நடிகைகள்’ புடைசூழ ஐந்து நட்சத்திர விடுதிகளில் இந்த மட்டைப் பந்து வீரர்களைத் தேர்வு செய்யும் சந்தை கூட்டப்படுகிறது. ஊர்ப்புறங்களில் கூடும் ஆடு, மாடுகள் சந்தைகளில் கூடச் சில அடிப்படை வணிக நெறிகள் பின்பற்றப் படுகின்றன. ஆனால் மட்டைப்பந்துச் சந்தையிலோ போதை, கவர்ச்சி, ஆபாச நடனங்கள் ஆகியன இரண்டறக் கலந்துவிட்டன. மட்டைப்பந்து ஆட்டக் காரர்கள் மாட்டைவிடத் தரக்குறைவான முறையில் கூவி ஏலம் விடப்பட்டு, விலை உறுதி செய்யப்பட்டுத் ‘தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்’. இந்திய முதலாளித்துவம் விளையாட்டு விபச்சாரத்தை அரசியல் துணையோடு அரங்கேற்றி வருகிறது.

ஒலிம்பிக் போட்டிகளில் 6 பதக்கங்களை வென்றவர்களில் திருமதி. மேரிகோம், இரட்டை ஆண் மகன்களை ஈன்றத்தாய். ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர். ஒரு சமையல் எரிவாயு உருளை பெறுவதற்காகத் திருமதி. கோம் அலைக்கழிக்கப்பட்டது ஒன்றுதான் நமது அரசுகள் ஒரு சிறந்த விளையாட்டு வீராங்கனைக்குக் கொடுத்த ‘மரியாதையாகும்’. ஊடகங்களில் வரும் இத்தகைய செய்திகளைப் பார்த்து ஊரே சிரிக்கிறது. 2012 ஒலிம்பிக்கில் பரிசு பெற்ற அனைவரும் தங்கள் சொந்த முயற்சியால் சில நல்ல உள்ளம் படைத்தவர்களால் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். பல இடையூறுகளுக்கு இடையிலும் நாள்தோறும் கடும் உழைப்பு, ஓயாத பயிற்சி, விடாமுயற்சியால் வெற்றி பெற்றவர்களுக்குப் பல இலட்சம் ரூபாயை அரசு தற்போது கொடுத்தாலும் இது வரவேற்புக்குரியதாக இருந்தாலும் இது தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் செயலுக்கு ஒப்பானதாகும்.

இந்தியா, மக்கள் தொகையில் சீனாவிற்கு அடுத் தப்படியாக 121 கோடி மக்கள் தொகை பெற்ற நாடாக உள்ளது. குறைந்தது ஆயிரம் பேரையாவது கடும் பயிற்சி அளித்து, நிதியுதவிகளைச் செய்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற ஊக்கமளித்திருக்க வேண்டு மல்லவா? வளர்ச்சி விகிதத்தில் முன்னணியில் இருக்கின்ற நாடுகளின் பட்டியல் வெளியிடப்படுகிறது. முதல் பத்து வரிசையில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா, ஜெர்மனி, பிரான்சு, இங்கிலாந்து, இத்தாலி, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதல் நாடாகவும், சீனா இரண்டு, இங்கிலாந்து மூன்று, ரஷ்யா நான்கு, ஜெர்மனி ஆறு, பிரான்சு ஏழு, இத்தாலி எட்டு, ஜப்பான் பதினொன்று, பிரேசில் இருபத்திரெண்டு என இடம்பெற்றுள்ளன. சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த கசகஸ்தான் 7 தங்கப் பதக்கங்களைப் பெற்று 13ஆம் இடத்திலும், உக்ரைன் 6 தங்கப் பதக்கங்களைப் பெற்று 15ஆம் இடத்திலும் உள்ளன. குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட சிறிய நாடுகளான கியூபா, ஜமைக்கா, செக் குடியரசு, நியூசிலாந்து, லிதுவேனியா, ஏழ்மையில் வாடும் ஆப்பிரிக்க நாடுகளான எத்தியோப்பியா, கென்யா, துனிசியா ஆகிய நாடுகள் தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளன. பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் - தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இடம்பெற்றுள்ள இந்தியா ஏன் ஒரு தங்கப் பதக்கத் தைக் கூடப் பெறவில்லை. பொருளாதார வளர்ச்சி மனித ஆற்றலை வளப்படுத்தவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஐக்கிய நாடுகள் மன்றத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் மனித மேம்பாட்டு அறிக்கைகள், மானுட மேம்பாட்டுக் குறியீடுகளின்படி 188 நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 135ஆம் இடத்தைப் பெற்றிருப்பதையே இக்கூற்று உறுதி செய்கிறது.

மேலும் மதமும், பக்தியும், மூடநம்பிக்கையும், ஊழலும் இன்று கைக்கோத்து ஆட்டம் போடுகின்றன. கேரளாவில் உள்ள ஒரு கோயிலில் பல்லாயிரம் கோடி மதிப்பிலான தங்கமும் வைரமும், வைடூரியங்களும் குவிந்திருக்கும் போது, ஆண்டுதோறும் திருப்பதி கோயிலில் தங்கமாக, பக்தர்கள் காணிக்கை அளிக்கும் போது, இந்திய மருத்துவக் கல்விக் குழுவின் தலை வராகப் பணியாற்றிய கேதன் தேசாய் வீட்டில் உலகமே கண்டு அதிரும் வகையில் இலஞ்சமாக ஒன்றரை டன் தங்கத்தை ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய் பணத்துடன் இந்தியப் புலனாய்வுத் துறை கண்டுபிடித்த போது பெற்ற பெருமையைவிடவா ஒலிம்பிக் போட்டிகளில் நாம் தங்கம் பெற்றுவிட முடியும் என்று இந்திய அரசியல் தலைவர்கள் நினைத் திருக்கக் கூடும். இதற்கு மேல் பெரும் பணக்காரர்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள தங்கத்தைக் கணக் கிட்டால், சுவிசு வங்கியில் முறைகேடான முறையில் உறங்கிக் கொண்டிருக்கும் பல இலட்சம் கோடி ரூபாயைத் தங்கமாகப் பன்னாட்டுச் சந்தையில் பெற்று அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பரிசு பெறும் வீரர்களுக்கு எந்த உலோகமும் கலக்காமல் சொக்கத் தங்கமாக இந்தியா பதக்கங்களை அளிக்கக் கூடிய ஒரு பொருளாதார வல்லரசாக இந்தியா இருக்கிறது என்று நமது தலைவர்கள் கூறினாலும் கூறுவார்கள்.

2016ஆம் ஆண்டில் பிரேசிலில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சில தங்கப்பதக்கங்களையாவது பெறவேண்டுமென்றால், மட்டைப் பந்துப் போட்டியைச் சூதாட்டமாக அறிவித்து, அரசு சலுகைகள் அனைத்தையும் விலக்கிக் கொள்ள வேண்டும். அமைச்சர்களோ, அரசு உயர் அலுவலர் களோ நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ இந்த மட்டைப் பந்து குழுக்களில் பங்கேற்கக் கூடாது. கேளிக் கை வரியை உச்ச அளவில் உயர்த்தி நுழைவுச் சீட்டு ஒன்றுக்கு ரூ.100 வரி என்ற அளவில் தொடங்கிப் படிப்படியாக நுழைவுச்சீட்டின் பண மதிப்பிற்கு ஏற்ப ரூ.500, ரூ.1000 என்று வரிகளை விதிக்க வேண்டும். ஒலிம்பிக் விளையாட்டில் வெற்றி பெற்றிட ஊர்ப்புறங்களில் உள்ள திறன்மிக்க விளையாட்டு வீரர்களை இனங்கண்டு அரசே அனைத்துச் செலவுகளையும் ஏற்று அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். முதலாளிகளையோ, அரசியல் தரகர் களையோ விளையாட்டுக் குழுக்களிலோ, தேர்வுக் குழுக்களிலோ இடம்பெற எவ்விதத்திலும் அனுமதிக்கக் கூடாது. ஊழலை விளையாட்டிலாவது அறவே ஒழிக்க முயற்சி செய்ய வேண்டும். காங்கிரசுக் கல்மாடி போன்றவர்களை எந்த விளையாட்டுக் குழுக்களிலும் சேர்த்தல் கூடாது. மத்திய அரசு அந்தந்த மாநிலங் களில் விளையாட்டு வீரர்களிடையே காணப்படும் வெவ்வேறு வகையான திறன்களை ஊக்குவிப்பதற்கு உதவித் தொகையை அளிக்க வேண்டும்.

இலண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் விளையாட்டு அரங்கம் அமைப்பதிலோ, விளையாட்டு வீரர்கள் தங்கும் விடுதிகள் அமைப்பதிலோ, பாலங்கள் மற்ற விளையாட்டுக் கட்டமைப்புகள் உருவாக்கு வதிலோ எவ்வித ஊழலும் நடைபெறாமல், எவ்வித விபத்துகளும் ஏற்படாமல், ஒலிம்பிக் போட்டிகளைச் சிறப்பாக நடத்தியதை இந்தியா ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், இந்திய அரசிற்கு விளையாட்டுத் துறை வளர்ச்சியைப் பற்றி எள் முனை அளவு கூட அக்கறை இல்லை என்பதை மத்திய அரசின் திட்டக்குழுவின் ஐந்தாண்டுத் திட்ட அறிக்கை களே சான்று பகர்கின்றன. இந்தியாவில் வளர்ந்து வரும் மக்கள் தொகையில் 25 வயதிற்குக் கீழ் உள்ள இளம் வயதினர் 50 விழுக்காடு உள்ளனர் என்று 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 50 விழுக்காட்டு மக்கள் தொகையில் ஒரு விழுக்காடு மக்கள் தொகை யை - அதாவது 60 இலட்சம் இளம் வயதினரைத் தேர்ந்தெடுத்துப் பள்ளிப் பருவம் தொடங்கி பயிற்சி அளித்தால் இந்தியா வரும் பத்தாண்டுகளில் விளையாட்டு வீரர்களின் உலகின் சிறந்த தளமாக அமையும் வாய்ப்புள்ளது. இந்த இளம் வயதினரின் தொகுப்பில் ஒரு விழுக்காடு அளவான 6 இலட்சம் பேரைப் பல்வகை விளையாட்டுகளில் திறன்மிக்க தகுதி வாய்ந்த வீரர்களாக உருவாக்கலாம். பத்தாவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் (2002-07) மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடான 4481 கோடி ரூபாயைத் தான் விளை யாட்டுத் துறை மேம்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்தன. ஆனால் இத்தொகை முழு அளவில் செலவிடப்பட் டுள்ளதா என்பதற்கான புள்ளிவிவரங்கள் இல்லை. இதைக் கருத்தில் கொண்டுதான் விளையாட்டுத் துறைக்கான நாடாளுமன்றக் குழு முதன்மையான பரிந்துரைகளை வழங்கியது.

விளையாட்டுத் துறை சாதனைகளைப் படைப் பதற்கு, பொறுப்புமிக்க இயங்கக் கூடிய துறையாக வளர்வதற்கு, சிறந்த மேலாண்மைத் திறனை வளர்க் கக் கூடிய பல சீர்த்திருத்தங்களை வழிமொழிந்தது. குறிப்பாக, “மக்களிடம் விளையாட்டு ஆர்வத்தை வளர்த்தெடுத்தல், கல்வியுடன் விளையாட்டுப் பயிற் சியை அளிப்பதற்கு முன்னுரிமை அளித்தல், மத்திய-மாநில அரசுகள், தனியார், பொதுத்துறை விளை யாட்டு கூட்டமைப்புகள் ஆகியவற்றுடன் ஒரு ஒருங்கி ணைந்த அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். பெருநகரங்கள், நகரங்களுக்கு இணையாக ஊர்ப் புறங்களில் விளையாட்டுக் கட்டமைப்புகளை ஏற்படுத் துதல், பயன்படுத்தப்படாத உள்கட்டமைப்புகளைச் சீர்செய்தல், தரமான விளையாட்டுக் கருவிகள் அளித் தல், விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஊக்க மூட்டும் வகையில் போதிய சலுகைகளை அளித்தல், விளையாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் சரியான அணுகுமுறையைக் கடைப்பிடித்தல், விளையாட்டு அணிகளை இறுதிநேரத்தில் தேர்வு செய்வதைத் தவிர்த்தல், தேர்ந்த பயிற்றுநர்கள், வல்லுநர்களைக் கொண்டு பயிற்சிகளை அளித்தல், விளையாட்டுத் துறைக்கென்று தனி கொள்கைத் திட்டங்கள் இல்லாத மாநிலங்களில் உடனடியாகத் திட்டங்களுக்கான கொள் கைத் திட்டங்களை உருவாக்குதல் ஆகியன இக் குழுவின் பரிந்துரைகள் ஆகும். இப்பரிந்துரைகளு க்குப் பிறகுதான் காமன்வெல்த் நாடுகளின் விளை யாட்டுப் போட்டிகள் 2010ஆம் ஆண்டு இந்திய அரசு புதுதில்லியில் நடத்தியது. இந்த விளையாட்டில்தான் கல்மாடி ஊழல் திருவிளையாடல்களை நடத்தினார். இவ்விளையாட்டு விழாவிற்குத்தான் சிறப்பு அழைப் பாளராக மத்திய அரசால், இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சே அழைக்கப்பட்டார்.

தற்போது 12ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தின் (2012-17) அணுகுமுறை அறிக்கையை மத்திய அரசின் திட்டக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே நாடாளு மன்றக் குழு அளித்த பரிந்துரைகளுக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடோ, புதியத் திட்டங்களோ குறிப்பிடப்பட வில்லை. விளையாட்டுத் துறையை மேம்படுத்து வோம் என்ற இரண்டு வரிகளே இவ்வறிக்கையில் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசிற்கு இப்போது இருக்கிற கவலை எல்லாம் சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்து எவ்வாறு சில்லறைகளை அள்ளலாம் என்பதுதான். நாங்களே தீராத விளையாட்டு திருட்டுப் பிள்ளைகள்! உங் களுக்கு ஏன் விளையாட்டைப் பற்றி கவலை என்கிற தற்போதைய அணுகுமுறையில் மாற்றம் வேண்டும். மாற்றம் ஏற்படுமா? வலிமை, விரைவு, உயர்வு ஆகிய நெறிகள்தான் ஒலிம்பிக் போட்டிகளின் இலக்கு களாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த மூன்று நெறிகளை இந்தியா முழக்கங்களாக முன் நிறுத்துமா? 2016இல் சில தங்கங்களையாவது பெறுவோமா?

Pin It