மேல்சாதி ஆதிக்கவாதிகளின் நயவஞ்சகத்தை முறியடித்த-பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டு உரிமையைக் காத்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு

18-08-2011 அன்று உச்சநீதிமன்றம், நடுவண் அரசின் உயர்கல்வி நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு உரிய இடங் களை, ஆதிக்க மேல்சாதி சக்திகள் நயவஞ்சகமாகப் பறித்துக் கொண்டு வருவதைத் தடுக்கும் வகையிலும், அந்த இடங்கள் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கே கிடைக்கும் தன்மையிலும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

1990இல் வி.பி.சிங் ஆட்சியில் நடுவண் அரசு வேலைகளில் மட்டும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27ரூ இடஒதுக்கீடு அளிப்பதற்கான ஆணை பிறப்பிக்கப் பட்டது. ஆனால் அது 1994 ஆம் ஆண்டில்தான் நடை முறைக்கு வந்தது. நடுவண் அரசில் கல்வி நிறுவனங் களிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 1990 ஆம் ஆண்டே வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால் 2008 ஆம் ஆண்டு முதல்தான் கல்வி யில் இடஒதுக்கீடு பிற்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப் படுகிறது. 27% இடங்கள் ஆண்டிற்கு 9% மேனிக்கு மூன்று ஆண்டுகளில் அளிக்கப்படும் என்று அரசா ணையில் கூறப்பட்டது. எனவே முதலில் 9% இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் 9% + 9% என்று இடங்கள் ஒதுக்கப்படவில்லை. இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT) இந்திய மேலாண்மைக் கல்விக் கழகம் (IIM) போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், போதிய கட்ட மைப்பு வசதிகளை உருவாக்கிய பிறகே, பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தித்தரமுடியும்; உயர்கல்வி நிறுவனத்தின் உலகத்தரத்தைப் பேணிட வேறு வழியில்லை என்று கபில்சிபல் உள்ளிட்ட ஆதிக்கவாதிகள் விளக்கமளிக்கின்றனர். இந்தியாவில் 58 விழுக்காட்டினராக உள்ள இந்து மற்றும் சிறு பான்மை மதங்களைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப் பினர் இதைத்தட்டிக் கேட்காமல்-எதிர்க்காமல் சூடு சொரணையற்றுக் கிடக்கின்றனர். ஆயினும் நடுவண் அரசின் பிற கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் அந்த இடங்கள் பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்குக் கிடைக்காதவாறு ஒரு புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது. உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் பொதுப் பிரிவனருக்கு எவ்வளவு, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு எவ்வளவு என்பது சேர்க்கைக்கான விண்ணப்பம் அளிப்பதற்கு முன்பே, அறிவிக்கப்படுவதுதான் வழக்கம். ஆனால் சவகர்லால் நேரு பல்கலைக்கழகத் திலும், தில்லி பல்கலைக் கழகத்திலும் வழக்கமான இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குரிய இடங்களைப் பறித்து, மேல்சாதி மாணவர்களுக்கு வழங்குவதற்காக இந்தப் புதிய நடைமுறையைப் புகுத்தினர்.

இதன்படி, பொதுப் பிரினருக்கு உரிய 51.5% இடங்கள் முதலில் நிரப்பப்படும். பொதுப்பிரிவின் பட்டியலில் உள்ள கடைசி மாணவன் பெற்ற மதிப்பெண், ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணாகக் கொள்ளப்படுகிறது. இந்த மதிப்பெண்ணிலிருந்து 10% மதிப்பெண் கழித்தால் வரும் மதிப்பெண்ணை, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாண வருக்கான தகுதி மதிப்பெண்ணாக அறிவிக்கப்படு கிறது. பொதுவாகப் பொதுப்பிரிவு மாணவர்கள் 85% க்குமேல் மதிப்பெண் பெறுகிறார்கள். அதனால் பொதுப்பிரிவில் கடைசி மாணவனின் மதிப்பெண்ணில் 10% யைக் குறைத்தால் வரும் மதிப்பெண்ணை, விண் ணப்பித்த பிற்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு சிறு பகுதியினரே பெற்றிருக்கும் நிலை ஏற்படுகிறது. அதனால் 27% அளவுக்குப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடம் கிடைக்காமல் போகிறது. எனவே, பிற்படுத்தப்பட்ட பிரிவில் நிரப்பப்படாத இடங்கள் பொதுப் பிரிவுக்கு மாற்றப்படுகின்றன.

2008-09, 2009-10 ஆகிய கல்வி ஆண்டுகளில் சவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் இந்தப் புதிய ஏமாற்று நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. இடஒதுக் கீட்டுக்கு முதன்மையான எதிரிகளுள் ஒருவரான-சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் (IIT) முன்னாள் இயக்குநராக இருந்த-பார்ப்பனரான-பி.வி.இந்திரேசன், இதே நடைமுறை, நடுவண் அரசின் எல்லாக் கல்வி நிறுவனங்களிலும் ஒரே சீராகப் பின்பற்றப்படுமாறு ஆணை பிறப்பிக்கவேண்டும். அப்போதுதான் உயர்கல்வியின் தரத்தை ஒரே சீராகப் பேணிட முடியும் என்று வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சார்பில் வாதாடிய வழக்குரைஞர், “தில்லி பல்கலைக்கழகத்தில் மொத்தம் உள்ள 80 கல்வி நிறுவனங்களில், 31 கல்வி நிறுவனங்களில் எடுக்கப்பட்ட விவரத்தின்படி, இக்கல்வி நிறுவனங்களில், இடஒதுக் கீட்டின் கீழ் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 7420 இடங்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் 3,396 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டுள்ளது. மீதி 4024 இடங்கள் பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அப்பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுப்பிரிவின் கடைசி மாணவனின் மதிப்பெண்ணை, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவனின் தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிப்பதற் கான அளவுகோலாகப் பின்பற்றப்பட்டதே காரண மாகும். எனவே இந்த நடைமுறையை நீக்கி, பிற்பட்ட வகுப்பு மாணவர்களுக்குரிய இடஒதுக்கீட்டு உரிமை யைக் காக்க வேண்டும்”என்று கூறினார்.

இந்த வழக்கின் மீதுதான் 18-8-2011 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.வி.இரவீந்திரன், ஏ.கே. பட்நாயக் ஆகியோரைக் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதற்கு முன்பே தில்லி உயர்நீதிமன்றம் ஆதிக்கவாதிகளின் ‘புதிய நடைமுறையை’த் தள்ளுபடி செய்திருந்தது. மேல்முறையீட்டின் மீது உச்சநீதிமன்றம் தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியே என்று கூறி விரிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முதன்மையான பகுதிகள்: “இந்தப் புதிய நடைமுறை கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் எங்குமே இல்லாத ஒன்றாகும். இந்த நடைமுறை, பாகுபாடு காட்டுகின்ற, மனம்போல் செயல் படுகிற ஒன்றாக இருக்கிறது. ஒரு படிப்பில் சேருவதற் கான குறைந்தபட்ச மதிப்பெண் எவ்வளவு என்பது, அந்தக் கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பே அறி விக்கப்படுவதுதான் வழக்கம். ஒரு மாணவன் விண் ணப்பிப்பதற்கு முன்பே, அப்படிப்பில் சேருவதற்கான குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண் தனக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்வதற்கான உரிமை இருக்க வேண்டும்.”

“எடுத்துக்காட்டாக ஒரு படிப்பில் மொத்தம் 154 இடங்கள் இருப்பதாகக் கொண்டால், அதில் 42 இடங்கள் (27%) பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்க வேண்டும். குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண் பெற்றுள்ள பிற்படுத் தப்பட்ட மாணவர்களின் பட்டியலிலிருந்து தரவரிசை யின்படி, 42 இடங்களும் நிரப்பப்பட வேண்டும். தகுதி வாய்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவன் இருக்கும்போது, அந்த இடத்தைப் பொதுப் பிரிவுக்கு மாற்றக்கூடாது. சவகர்லால் நேரு பல்கலைக்கழகம் பின்பற்றுகின்ற கட்-ஆப் நடைமுறை தவறானதாகும்.”

எனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நடுவண் அரசு வேலைகளிலும், உயர் கல்வியிலும் 27% விழுக்காடு முழுமையாகக் கிடைக்கும் வகையில் விழிப் புடன் கண்காணித்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் செயல்படவேண்டும். மேலும் பொதுப் பிரிவில் இடம் பெறுவதற்குரிய தகுதி பெற்றுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குப் பொதுப் பிரிவிலேயே இடம் அளிக்கப் படவேண்டும். இதேபோல் பட்டியல் குலத்தினர், பழங்குடியினருக்கும் இடந்தர வேண்டும். மொத்தத்தில் பிற் படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு 27%, பட்டியல் குலத்தினர்க்கு 15%, பழங்குடியினர்க்கு 7.5% இடங்கள் மட்டு மே அளிக்கப்படும் அவலமான நடைமுறையே நடுவண் அரசில் பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறை நீக்கப் பட வேண்டும்.

அதேபோல், மருத்துவப் படிப்பில் சேருவதற்கு இந்திய அளவில் 2012-13 ஆம் கல்வி ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று நடுவண் அரசு அறிவித்துள்ளது. அடுத்து பொறியியல் படிப்புக்கும் இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட வுள்ளது. இது தேசிய இனங்களின்-மாநிலங்களின் உரிமையை மேலும் பறிப்பதற்கான சூழ்ச்சியாகும். வழக் கறிஞர் தொழில் இந்தியா முழுவதும் பார்ப்பனரின் ஏகபோகமாக நெடுங்காலமாக இருந்து வந்தது. இப் போது இது வேகமாகச் சரிந்து வருகிறது. குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட-பட்டியல்குல-பழங்குடி வகுப்பினர் வழக்குரைஞர்களாகத் தொழில் செய்வதைத் தடுக்கும் நோக்கத்துடன்தான், சட்டக் கல்வியில் பட்டம் பெற்ற பிறகு, வழக்குரைஞராகத் தொழில் செய்வதற்கு இந்திய அளவில் நுழைவுத் தேர்வு எழுதவேண்டும் என்கிற அடாவடியான நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டப்படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில் 50% பேர் பட்டியல் வகுப்பு மாணவர்கள் என்பது நினைவு கூறத்தக்கதாகும். தகுதி-திறமை என்கிற மோசடிப் பெயரில், இந்திய அளவில் எந்தவொரு நுழைவுத் தேர்வு முறையையும் உழைக்கும் மக்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

மொத்த இடங்களையும், மக்கள் தொகையில் பிற் படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர் குலத்தினர், பழங் குடியினர் எந்தெந்த விகிதாசாரத்தில் உள்ளனரோ, அந் தந்த விகிதாசாரத்தில் இடஒதுக்கீடு செய்வதே சரியான தீர்வாகும்.

Pin It