கடந்த 2011 ஆகஸ்டு 9ஆம் நாள் தமிழக மக்களுக்கு மறக்க முடியாத நாள். தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான பெற்றோர்களும், ஆசிரியர்களும் பள்ளிப் பிள்ளைகளும் நிம்மதிப் பெருமூச்சுவிட்ட நாள். ஆம்! அன்றுதான் இந்த நாட்டின் உயர்ந்த நீதி அமைப்பான உச்சநீதிமன்றம், ‘தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற செயலலிதா அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திருத்தச் சட்டத்தை செல்லாது’ என அறிவித்த நாள். இந்தத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லும் என்று தமிழக அரசின் முகத்தில் அறைந்தாற் போல் அறிவித்த நாள். தமிழகமெங்கும் பெற்றோர்களும் பொதுமக்களும் மாணவர்களும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் இந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.

சமச்சீர் கல்வி வழக்கில் 9.8.2011 அன்று தீர்ப்பு வழங்கிய ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். சவுகான் ஆகிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தமிழக அரசின் சமச்சீர் கல்விச் சட்டத் திருத்தத்தை இரத்துச் செய்து வழங்கிய தீர்ப்பில் அதற்கு அடிப்படையாக 25 காரணங்களைச் சொல்லி இருந்தது. அவற்றில் மிகவும் முகாமையான காரணங்கள் கீழ்வருமாறு :

1.            ஒரு சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்புரைத்த பிறகு அதனைத் திருத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. அப்படித் திருத்தம் கொண்டுவந்தால் அது செல்லாதது ஆகிவிடும்.

2.            புதிய அரசு கடந்த மே 16ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டது. இதைத் தொடர்ந்து மே 17 மற்றும் 18ஆம் தேதிகளில் நடைமுறையில் உள்ள சமச் சீர் கல்வித் திட்டத்தை இரத்துச் செய்ய வேண்டு மெனத் தனியார் பள்ளிகள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தன. இக்கோரிக்கையை வைத்த இதே அமைப்புகள்தான் ஏற்கெனவே சமச்சீர் கல்வியை எதிர்த்து உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுத்தன. இக் கோரிக்கையைத் தமிழக அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டிருக்கவே கூடாது.

3.            தமிழக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படுவதற்கு முன்பே, மே மாதம் 21ஆம் தேதியே, பழைய பாடத் திட்டத்தின் கீழ்ப் புத்தகங் களை அச்சடிக்க தமிழக அரசு ஒப்பந்த ஆணை வழங்கிவிட்டது. இதன்மூலம் சமச்சீர் கல்வியைப் புறந்தள்ள வேண்டும் என்ற தமிழக அரசின் உள்நோக்கம் தெளிவாகத் தெரிகிறது.

4.            தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலை மையிலான 9 பேர் அடங்கிய வல்லுநர் குழு சமச்சீர் கல்விப் பாடத் திட்டத்தை ஆய்வு செய்ய வில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

5.            கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி தரமானது என்று கூறிவிட்டு, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட தும் சமச்சீர் கல்வி தரமற்றது என்று அதே கல்வித் துறைச் செயலாளர் கூறியிருப்பது வியப்பைத் தருகிறது. கடந்த 2010இல் சமச்சீர் கல்விச் சட்டத் தை இரத்துச் செய்யக்கூடாது என்று கல்வித் துறைச் செயலாளர் உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதி மன்றத்திலும் மனுத்தாக்கல் செய்தார். அவரே இந்த ஆண்டு ஆட்சி மாற்றத்திற்குப்பின் சமச்சீர் கல்வி சரியில்லை என்றும் தரமற்றது என்றும் அதனால் சட்டத் திருத்தம் அவசியம் என்றும் உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்கிறார். இது தவறானது. இப்படிப்பட்ட வரைத் தமிழக அரசு வல்லுநர் குழுவில் சேர்த் தது முறையற்றது; அதிர்ச்சி தரத்தக்கது.

6.            முந்தைய அரசு சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங் களை அச்சடிக்க அரசுக்கு ஒப்பந்தம் கொடுத்தது. புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டுவிட்டன. இது தெரிந் திருந்தும் புதிய அரசு பழைய புத்தகங்களையே அச்சடிக்கக் கொடுத்தது மிகமிகத் தவறானது.

7.            சென்னை உயர்நீதிமன்றம் அளித்த எந்த ஆணை யையும் புதிய அரசு பின்பற்றவில்லை.

8.            சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களில் அரசியல் சாயம் உள்ளதாகப் புதிய அரசு கருதினால் அதனைப் புதிய அரசு நீக்கலாம் என்று உயர்நீதிமன்றம் அரசுக்கு ஆலோசனை வழங்கியது. இதனைப் புதிய அரசு ஏற்றிருக்க வேண்டும். ஆனால் ஏற்கத் தவறியது. அதற்கு மாறாகச் சமச்சீர் கல்வியைக் காலவரையறையற்றுத் தள்ளி வைத்தது.

9.            பாடத் திட்டத்தில் தரம் இருக்க வேண்டும் என்று சட்டத்திருத்தம் 2011ஆம் ஆண்டு கொண்டு வந்திருப்பினும் அதன் உள்நோக்கம் சரியாக இல்லை. இந்தச் சட்டத்திருத்தம் சமச்சீர் கல்வி யைத் திரும்பப் பெறுவதுபோல் உள்ளது. எனவே இதனை இரத்துச் செய்கிறோம்.

10.          சமச்சீர் கல்வித் திட்டத்தை அனைத்து வகுப்பு களுக்கும் 10 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு உடனடியாகப் பாட நூல்கள் வழங்கப்பட வேண்டும். தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்விச் சட்டத்திருத்தம் செல்லாது. இதுதொடர்பாய் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு செல்லும்.

ஒவ்வொரு கட்சியும் அரசு மாறும் போது மாண வர்கள் நலனுக்குக் கேடான நடவடிக்கைகள் மேற் கொள்ளக்கூடாது. தமிழக அரசின் நடவடிக்கை மாண வர்களின் அடிப்படைக் கல்வி உரிமையைப் பறிப்ப தாகும். ஆட்சி மாற்றக் காரணங்களால் மாணவர் களின் படிப்பு பாழாகக் கூடாது. குழந்தைகள் எதிர் காலம் பாதிக்காத வகையில் அரசு செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசு உள்நோக்கத்துடன் செயல் பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. உயர்நீதிமன்ற ஆணையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவையும் தனி யார்ப் பள்ளிகளின் மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம்” என்கிற மகத்தான மக்கள் நேயத் தீர்ப்பை உச்சநீதிமன்ற அமர்வு வழங்கியுள்ளது.

உழைக்கும் மக்களின் வாழ்வுரிமைக்கு உலை வைக்கும் தீர்ப்புகளையும், இந்திய நாட்டின் உயர் நீதிமன்றங்களும், தில்லியின் உச்சநீதிமன்றமும் ஏற்கெனவே பலமுறை வழங்கியுள்ளன. குறிப்பாக கல்வியைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் வகை யில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் உழைக்கும் மக்களுக்குக் கேடு செய்துள்ளன. ஆனால் தமிழகத்தின் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக வழங்கப் பட்ட தீர்ப்பு அனைவராலும் போற்றி வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

காசு பண்ணுவதையே குறியாய்க் கொண்ட கல்வி முதலாளிகள் இந்தத் தீர்ப்பால் அடிபட்ட பாம்புகளாக அடங்கிக் கிடக்கிறார்கள். எப்படியும் கோடிகளைக் கொட்டியேனும் தமக்குச் சாதகமான தீர்ப்பை உச்சநீதி மன்றத்தில் பெற்றுவிட வேண்டும் என்று பெரிய பெரிய வழக்கறிஞர்களையெல்லாம் பார்த்து, கடந்த ஒரு மாதமாக பணப்பெட்டிகளுடன் அவர்கள் தில்லியி லேயே முகாமிட்டிருந்தாலும் இறுதியில் மண்கவ்வித் திரும்பியுள்ளனர். இப்போதும் சும்மா இருக்கமாட் டார்கள். எல்லா வகையிலும் சமச்சீர் கல்விக்குக் கேடு செய்யவே எத்தனிப்பார்கள்.

இந்தத் தீர்ப்பு வரும் முன்பே அவர்கள் தமக் கென்று தனியாகப் பாடப் புத்தகங்கள் வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந் தனர். உயர்நீதிமன்றமும் 30.4.2010இல் தனியாரிட மிருந்து பாடநூல்களை வாங்க அவர்களுக்கு அனுமதி அளித்துவிட்டது. தனியார் பதிப்பகங்கள் 62 தலைப்பு களில் பாடநூல்களை அச்சிட்டுள்ளன. அவற்றைத் தனியார்ப் பள்ளிகள் வாங்கிப் பயன்படுத்திக் கொள்ள லாம். ஆனால் அவ்வாறு பயன்படுத்தும் புத்தகங்கள் சமச்சீர் கல்விப் பாடத்திட்ட அடிப்படையில் அமைந் திருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த விதிகளையெல்லாம் மதிக்கும் பண்பு இந்த வேட்டை நாய்களுக்கு உண்டா?

தற்போதைய தமிழக அரசும் வெளிப்படை யாகவே தனது ஆதரவைத்தனியார் பள்ளி முதலாளி களுக்கு அளித்து வருகிறது. இல்லையானால் இப் போதுள்ள அரசு, நீதிமன்றங்களில் வழக்கு நிலுவை யில் உள்ள போதே 218 கோடி ரூபாய்ச் செலவில் ஏற்கெனவே அச்சிடப்பட்ட 6 கோடிப் புத்தகங்கள் அப்பாவி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் அரசுக் கிடங்குகளில் தூங்க, 110 கோடி ரூபாய்ச் செலவில் பார்ப்பனியத் திமிரோடு பழைய பாடத் திட்டத்தின்கீழ் பாடநூல்களை அச்சடித்து முடிக்குமா?

எனவே பொது மக்களும், பெற்றோர்களும், மாணவர்களும் இனியும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது மிகமிக முதன்மையானதாகும். இப் போது கிடைத்துள்ள வெற்றி பொதுப்பாட முறைக்கான வெற்றியே தவிர பொதுக்கல்விக்கான வெற்றியல்ல. கல்வியாளர்கள் பலரும் இதே கருத்தை வெளிப்படுத் தியுள்ளனர்.

முனைவர் ச. முத்துக்குமரன் : சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது தொடர்பாக எனது தலைமையிலான குழு அரசுக்கு அறிக்கை அளித்தது. அந்த அறிக் கையில் மொத்தம் 109 பரிந்துரைகள் இருந்தன. இதில் எல்லாப் பரிந்துரைகள் மீதும் கடந்த கால அரசு முடிவெடுத்ததாகத் தெரியவில்லை. இதற்கென ஒரு திட்டம் வகுத்து அந்தப் பரிந்துரைகள் தொடர்பாக அரசு முடிவெடுக்க வேண்டும்.

சமச்சீர் கல்வி தொடர்பான இந்தப் பிரச்சனைக்குக் காரணமே, பள்ளிக் கல்வித்துறை இயக்குநரே பொதுக் கல்வி வாரியத்தின் தலைவராகவும் இருப்பதுதான். அரசு அதிகாரிகள் இந்தக் குழுவில் இருந்தால் அரசின் எண்ணங்களும் பாடத்திட்டத்தில் பிரதிபலிக்கும். எனவே இந்தக் கல்வி வாரியத்தைத் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்ற வேண்டும்.

பேராசிரியர் வி. வசந்திதேவி : பொதுப் பாடத்திட்டம் மட்டுமே சமச்சீர் கல்வி அல்ல. பொதுப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் இதுவரை நான்கு வாரி யங்களும் கலைக்கப்படவில்லை. சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் ஒரு வரலாற்று வாய்ப்பு தற்போது இந்த அரசுக்குக் கிடைத்துள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் அனைவர்க்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற் கான விதிமுறைகள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் இந்த விதிமுறைகள் இன்னமும் அறிவிக் கப்படவில்லை. இந்தச் சட்டத்தில் உள்ள அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய முழுமையான விதிமுறை களை வகுத்து அவற்றை அமல்படுத்த இந்த அரசு முன்வர வேண்டும்.

கல்வியாளர் ச.சீ. இராசகோபாலன் : பத்தாம் வகுப்பு மாணவர் நிலை பற்றி அரசு உடனடியாகச் சிந்திக்க வேண்டும். நான்குவகைப் பாடத் திட்டங் களில் உள்ள மாணவர்களுக்குப் பொதுவான வினாத் தாள்களை ஒரு கிழமைக்குள் உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கப்பட்ட வினாத்தாள்களை அனைத் துப் பள்ளிகளுக்கும் உடனடியாக அனுப்ப வேண்டும். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை முழு மையாக நீக்க வேண்டும்.

மேற்காணும் கல்வியாளர்களின் கூற்றுகளை தமிழக அரசு கவலையோடு சிந்தித்து ஆவன செய்ய வேண்டும்.

தமிழகத்தில் இயங்கிவந்த நால்வகைப் பள்ளிகள்

அரசு-அரசு நிதி உதவிப் பள்ளிகள்           45,000

மெட்ரிகுலேசன் பள்ளிகள்           11,000

ஓரியண்டல் பள்ளிகள்     25

ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள்              50

தமிழ்நாட்டில் பொதுப் பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் கல்வி வணிகர்கள், தங்கள் கல்லாப் பெட்டிகளை நிரப்ப சி.பி.எஸ்.இ. பாடமுறைக் குத் தாவக்கூடும். அந்தக் கூக்குரல்களும் ஆங்காங்கே எழத் தொடங்கிவிட்டன. மக்கள் எச்சரிக்கையுடன் இருந்து தமிழக அரசுக்கு நெருக்குதல்கள் தரவேண்டும். பொதுக் கல்வி முறையைக் காப்பாற்றியாக வேண்டும். இதில் இங்குள்ள அரசியல் கட்சிகளை நம்பிப் பய னில்லை.

கோடிக்கணக்கான அடித்தட்டு மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கின்ற இக்கொடுஞ் செயலை எதிர்த்துத் தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த அரசியல் கட்சியும் உடனடியாகத் தெருவில் இறங்கி மக்களைத் திரட்டிப் போராடாதது பெரும் அவலமே ஆகும். தனது ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டம் கைவிடப்படுவதைக் கண்டு கலைஞர் கருணாநிதி கொதிப்படையவில்லை. மாறாக தனக்கு எதிராக வாக் களித்த மக்களுக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும் என்று சாபம் விட்டார். அ.தி.மு.க. அரசு நிலப்பறி வழக்குகள் போட்டுத் தன் கட்சி முன்னணித் தலைவர்கள் சிலரை உள்ளே தள்ளியதைப் பொறுத்துக் கொள்ளமாட்டாமல் தமிழகமெங்கும் கட்சிக்காரர் களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் செய்த கருணாநிதி, சமச்சீர் கல்வித் தடையை எதிர்த்துக் களமிறங்க வில்லை. ‘புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி’ போன்ற இடதுசாரி அமைப்பினரும் முற்போக்குக் கல்வியாளர்களும் வழக்கறிஞர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் பொதுமக்களும்தான் தமிழகம் முழு வதும் களத்தில் இறங்கிப் போராடினார்கள்.

புதிய அரசு, சமச்சீர் கல்வியை முடக்குவதை எதிர்த்து முதலில் கண்டன அறிக்கை வெளியிட்டதோடு பா.ம.க., விடுதலைச்சிறுத்தைகள் போன்ற எதிர்க்கட்சிகள் தம் கடமையை முடித்துக் கொண்டன. சென்னை உயர்நீதி மன்றம் செயலலிதா அரசின் சட்டத்திருத்தத்தை இரத்துச் செய்து தீர்ப்பளித்த பிறகுதான் இவை சுறுசுறுப்புப் பெற்றுக் களத்தில் இறங்கின.

கலைஞர் ஆட்சியில் சமச்சீர் கல்வியை ஆதரித்து அப்போது குரல் கொடுத்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சியும், மார்க்சிஸ்டு பொதுவுடைமைக் கட்சியும் இப்போது அம்மாவின் மடியில் உட்கார்ந்து கொண்டுள் ளன. செயலலிதா அரசு சமச்சீர் கல்வியை நிறுத்தி வைத்துத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் கெண்டு வந்த போது இந்தஇரண்டு கட்சிகளுமே அந்தத் தீர் மானத்தை ஆதரித்து வாக்களித்தது வெட்கக் கேடான தாகும்.

கடந்த 19.8.2011 அன்று தி.மு.க. மாணவர் மற்றும் இளைஞர் சார்பில் தமிழகமெங்கும் சமச்சீர் கல்வி வெற்றி விழாக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இன்றைக் கும் தி.மு.க.வின் மாணவர் மற்றும் இளைஞர் அணித் தலைவர்கள் என்போர் 50, 60 வயதைக் கடந்த ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் போன்றவர்கள்தான். அ.தி.மு.க. அரசு சமச்சீர் கல்வியை முடக்கியபோது இந்தக் கட்சியைச் சேர்ந்த மாணவர்களோ இளைஞர் களோ வீதிக்கு வந்து போராடவில்லை. சிறை நிரப்பும் போராட்டம் மேற்கொள்ளவில்லை. “மாணவர்களே பள்ளிக்குப் போகாதீர்கள்! பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாதீர்கள்” என்று சொல்லித் துண்டறிக்கைகள் வழங்கும் உப்புச் சப்பற்ற போராட்டம் ஒன்றை நடத்திவிட்டு இன்று சமச்சீர் கல்வி வெற்றி விழாப் பொதுக்கூட்டங்களை நடத்துகி றார்கள்.

1967க்குப் பிறகு ஆட்சிக்குவந்த திராவிடக் கட்சி கள்தான் கட்டணத் திருட்டுக்கு வழிகோலும் ஏராள மான மெட்ரிக் பள்ளிகளுக்கும் தன்நிதிக் கல்லூரி களுக்கும் அனுமதி வழங்கின. ‘கல்விச் சிறந்த தமிழ் நாட்டில்’தான் இன்று இந்தியாவிலேயே வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குத் தனியார் கல்விக் கொள்ளை அதிகமாக நடைபெறுகிறது.

‘மாண்புமிகு தலைமை அமைச்சர்’ மன்மோகன் சிங், மானம் வெட்கம் அறியாதவர். அந்நியச் சுரண்ட லுக்கு நாட்டை அடிமைப்படுத்தும் திருப்பணியை அவர் அதிக முனைப்புக்காட்டிச் செய்து வருகிறார். இந்தியக் கல்விச் சந்தையில் 2.5 இலட்சம் கோடி ரூபாய் தனியார் கல்வி முதலாளிகளிடம் கைமாறு கிறது. அதனால்தான் ‘அனைவர்க்கும் எட்டாம் வகுப்பு வரை இலவசக் கட்டாயக் கல்வி’ என்கிற நேரு காலத்து வெற்று முழக்கமும் இன்று ‘இலவச எழுத்தறிவு’ என்ற அளவோடு நீர்த்துப் போகச் செய்யப்ப்டுகிறது. மக்கள் ‘அ’னா, ‘ஆ’வன்னா என எழுத்துக்கூட்டிக் கற்றால் போதும் என அரசு எண்ணுகிது.

அடுத்த பத்தாண்டுகளில் அனைவர்க்கும் எட்டாம் வகுப்புவரை இலவசக் கட்டாயக் கல்வி தருவோம் என்று முழங்கிய காங்கிரசுக் கட்சிதான் பல பத் தாண்டுகளாக நாட்டை ஆண்டு வருகிறது. அப்போ தைய நிலையில் அடிப்படைப் பள்ளிக் கல்வி என்பது எட்டாம் வகுப்போடு நின்றது. இன்றைக்குப் பள்ளிக் கல்வி என்பது பன்னிரெண்டாம் வகுப்புவரை வளர்ந்து விட்டது. மானமுள்ள அரசாக இருந்தால் ஒவ்வொரு மாணவனுக்கும் மாணவிக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு வரை இலவசக் கட்டாயக் கல்வியை உறுதிப் படுத்தி இருக்க வேண்டும். ஆனால் எங்குநோக்கினும் கோடிக்கணக்கான முதலீட்டில் தனியார்க் கல்வி முதலாளிகள் பெருக அரசே வழிவகுத்துவிட்டது. இங் கிருக்கும் உள்ளூர் முதலாளிகள் சுரண்டுவது போதாது என்று வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும் இங்கே நுழைய அனுமதி வழங்கி அடித்தட்டு மக்களின் விலா எலும்புகளில் கொடுவேல் பாய்ச்சுகிறது நடுவண் அரசு.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் என்பது இங்கு 2009 ஆகஸ்டு 26 அன்றே இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாகிவிட்டது. ஆனால் பல நிலைகளில் கட்டணம் செலுத்தித் தனி யார் நிறுவனங்களில் கல்வி பெறும் வழிமுறைகளை அரசே ஊக்குவித்து வருகிறது. யாரும் எங்கு வேண்டு மானாலும் தனியார் கல்விக் கடைகளைத் திறந்து கொள்ளலாம். ஆனால் அந்தக் கல்விக் கடைகளில் 25 விழுக்காடு ஏழை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டும். அந்த ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்திவிடும் என்கிற அபத்தமான - அடாவடித்தனமான - ஆளில்லா ஊருக்குப் போகாத பாதை காட்டுகின்ற கல்வித் திட்டம் வேறெங் கும் உண்டா? ஆக, காசு உள்ளவன் மட்டுமே இங்குக் கல்வி பெற உரிமை உள்ளவன் என்கிற கேடான நிலையை அரசே ஊக்குவித்து வருகிறது. கல்வி, மருத்துவம், குடிநீர் போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு தானாகவே கழன்று கொள்கிறது.

மக்கள் நலனுக்கு முற்றிலும் கேடான சிந்தனை கொண்ட கபில் சிபல் என்பவர்தான் இன்று மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர். ‘அகில இந்திய அளவில் மருத்துவக் கல்விக்கும் பொறி யியற் கல்விக்கும் பொது நுழைவுத் தேர்வை நடத்து வேன்’ என்று கொக்கரிக்கிறார். அனைத்திந்திய அளவில் இனிமேல் எல்லார்க்கும் ஒரே கல்வி முறைதான் என்று சாமியாடுகிறார். இந்தியாவின் இந்த ஒற்றைத் தேசிய இந்துத்துவ, பார்ப்பன, பாசிச நச்சுப் பல்லைப் பிடுங்காத வரையில் இங்குள்ள தேசிய இனங்கள் எவற்றுக்குமே எதிர்காலம் இல்லை. உண்மையான விடுதலைப் போரை உடனே தொடங்கியாக வேண்டும். அனைத்துத் தேசிய இன விடுதலைப் போராளிகளே, அணிதிரள்வீர்!

Pin It