டெல்லியின் அதிகாரக் குவியலில் நாள்தோறும் மூழ்கித் திளைக்கும் செறுக்கு நிறைந்த உயர் அலுவலர்கள், மக்களையும், மாநில அரசுகளையும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. மக்களாட்சியின் மாண்பினைப் போற்றும் வகையில் அரசமைப்புச் சட்ட விதிகள் செம்மையான முறையில் செயல்பட்டால்தான், ஆட்சியியல் சிறப்புறும் என்று பல அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். நேரு காலத்தில் மெல்ல, மெல்ல தலைகாட்டத் தொடங்கிய அதிகாரக் குவியலால் ஏற்பட்ட செறுக்கு என்ற நோய் இன்றைக்கு அறுவைச் சிகிச்சை செய்யும் அளவிற்கு முற்றிப்போய்விட்டது. குறைகள் நிறைந்த அரசமைப்புச் சட்டத்தைக்கூட, தேர்ந்த அரசியல் தலைவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி நல்ல மக்களாட்சியினைப் பல நாடுகளில் வழங்கி வருகின்றனர்.

அரைக்கூட்டாட்சி அமைப்பில்கூட முழுமையான கூட்டாட்சிக் கூறுகளை அரசியல் தலைமையால் வளர்த்தெடுக்க முடியும் என்று ‘கூட்டாட்சி அரசு’ என்ற நூலில் அரசியல் அறிஞர் கே.சி.வியர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் உணர்வுகளை மதித்து ஆட்சியியலைச் சிறப்பாக நடத்தி நாடு பிளவுபடாமல் இருப்பதற்குக் கனடா எடுத்துக்காட்டாக உள்ளது. கனடா நாட்டின் அரசமைப்புச் சட்டம் ஒற்றையாட்சித் தன்மைகளைக் கொண்ட ஒரு அரைக்கூட்டாட்சி அமைப்பாகத்தான் செயல்படத் தொடங்கியது. ஆனால், இந்த அரசமைப்புச் சட்டத்தில் ‘மாநிலங்கள் பிரிவினை கோரலாம்’ என்ற கூட்டாட்சியியல் - மக்களாட்சி உரிமைகள் வழங்கப்பட்டுப் போற்றப்படுகின்றன. இந்தியாவில் 1950இல் நடைமுறைக்கு வந்த அரைக்கூட்டாட்சி அரசமைப்புச் சட்டத்திலும் பிரிவினை கோருகிற உரிமையை அரசமைப்பை உருவாக்கியவர்கள் வழங்கியிருந்தார்கள்.

1962-63ஆம் ஆண்டுகளில் பிரிவினை கோரும் உரிமையையும், பிரிவினைக்கான பேச்சுரிமையையும் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் வழியாகத் தடை செய்துவிட்டார்கள். இச்செயல் கூட்டாட்சியியலையும், மக்களாட்சிக் கூறுகளையும் புதைக்குழிக்கு அனுப்பியது. இருப்பினும், காஷ்மீர், நாகாலாந்து, மணிப்பூர் உட்படப் பல மாநிலங்களில் பிரிவினை இயக்கங்கள் ஆயுதம் தாங்கிப் போரிடத் தொடங்கின. இவ்வியக்கங்களின் செல்வாக்கினை மக்களிடம் குறைக்க முடியவில்லை. தாமதமாக இந்தப் பெரும் தவறினை உணர்ந்த மத்திய அரசு உல்ஃபா, நாகாலாந்து பிரிவினை இயக்கங்களின் தலைவர்களுடன் முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று உறுதிமொழிகள் வழங்கப்படுகின்றன. காஷ்மீரில் 6 இலட்சம் இராணுவத்தினரை நிறுத்தித்தான் அம்மாநிலத்தைப் பாதுகாக்க வேண்டிய நிலையும் உருவாயிற்று.

தற்போது பிரதமர் மன்மோகன்சிங் அறிஞர்கள் குழு ஒன்றினை அமைத்து காஷ்மீர் பிரச்சினை தொடர்பாகப் பிரிவினை கோருகிற இயக்கத் தலைவர்களையும் இணைத்து அவர்களின் கருத்துகளை அறிய முற்பட்டுள்ளார். புலி வாலைப் பிடித்த நாயர் கதை போல் மத்திய அரசு இந்த இயக்கங்களைச் சுற்றிச் சுற்றி வந்து தடுமாறிக் கொண்டிருக்கிறது. கனடா நாட்டில் பிரிவினை கோருகிற உரிமையைத் தடுத்திருந்தால் அங்கும் வன்முறையை நம்புகிற இயக்கங்கள் வலிமை பெற்றிருக்கும். ஆனால், கனடா நாட்டில் “கியூபெகாசு” என்கிற மாநிலக் கட்சி கியூபெக் தனிநாடாகப் பிரிய வேண்டும் என்ற கோரிக்கைக்காக மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று 1995ஆம் ஆண்டு வலியுறுத்தியது. வாக்குச்சீட்டில் பிரிவினை ‘இல்லை / ஆம்’ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தியபோது, 40,000 வாக்குகள் வேறுபாட்டில் கனடா நாட்டில் பிரிவினை தவிர்க்கப்பட்டது.

இருப்பினும், சுவிட்சர்லாந்து நாட்டைப் போன்று முழுக் கூட்டாட்சி அரசமைப்புச் சட்டம் கனடா நாட்டில் இயங்கவில்லை என்று பல அரசமைப்புச் சட்ட வல்லுநர்கள் வாதிடுகிறார்கள். நடைமுறையில் கனடா நாட்டில் ஒரு கூட்டாட்சி அரசு முறை இயங்கி வருவதையும் இவ்வல்லுநர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனால், டெல்லியில் அமர்ந்திருக்கும் செறுக்கு படைத்த உயர் அலுவலர்கள், கூட்டாட்சிக் கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைப்பதன் வழியாக மக்களுக்கு எதிரான ஒற்றையாட்சி முறையைப் பின்பற்றி வருகிறார்கள். மாநில முதல்வர்களுடன் முதன்மையான பிரச்சினைகளில் கூடக் கருத்துப் பரிமாற்றம் செய்யாமலேயே புதிய, புதிய சட்டங்களையும், புதிய ஒப்பந்தங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய ஆணவ, ஆதிக்கப் போக்கினை மேற்கு வங்க அரசியல் தலைவர்கள் தட்டிக் கேட்கத் தயங்கியதில்லை. இந்திய விடுதலைக்காகக் காங்கிரசு கட்சி களம் அமைத்த காலத்திலேயே வங்க மக்களின் உரிமைகளை அம்மாநில காங்கிரசுத் தலைவர்கள் விட்டுக்கொடுக்காமல் ஒரு புதிய அரசியல் மரபினைப் போற்றி வந்தனர். சான்றாக, 1905இல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மத அடிப்படையில் - மேற்குவங்கம், கிழக்கு வங்கம் என்று பிரித்து மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டபோது, மக்கள் கொதித்தெழுந்தனர். அணிதிரண்டு போராடினர். உலகையே ஆட்டிப்படைத்த பிரிட்டிஷ் பேரரசு வங்க மக்களின் போராட்டத்தைக் கண்டு அஞ்சியது. மக்களின் கோரிக்கையை ஏற்று, பிரிக்கப்பட்ட வங்கத்தின் இரு பகுதிகளை 1912இல் பிரிட்டிஷ் அரசு மீண்டும் ஒன்றாக இணைத்தது.

வங்க மக்களின் சுயாட்சிக்காகக் காங்கிரசு இயக்கத்தின் அகில இந்தியத் தலைமையை மாநிலத் தலைவர்கள் பல காலக்கட்டங்களில் எதிர்த்துப் போராடியுள்ளனர். 1920ஆம் ஆண்டு வங்கத்தின் சிங்கம் என்று போற்றப்பட்ட சித்தரஞ்சன் தாசு, மேற்குவங்கப் புரட்சியாளர்களைக் காந்தியுடன் சந்திக்க வைத்து ஒரு உடன்பாடு காண விழைந்தார். இந்த முதன்மையான அரசியல் சந்திப்பில் வன்முறையை எதிர்த்த காந்தியும், ஆயுதம் தாங்கிப் புரட்சி நடத்திய புரட்சியாளர்களும் ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டார்கள். பெருந்தலைவர் காந்தி, ‘ஒத்துழையாமை இயக்கத்தை உறுதியாகக் கைவிடாமல் கடைபிடிப்பேன். ஆயுதம் தாங்கிய போராட்டத்தைத் தற்காலிகமாகத் தள்ளி வையுங்கள்’ என்று புரட்சியாளர்களுக்கு வேண்டுகோள் வைத்தார். 1922இல் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்டபோது வங்கப் புரட்சியாளர்கள் காந்தியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தைத் தூக்கி எறிந்தனர். உடனடியாக பிரிட்டிஷ் அரசு வன்முறையைக் காங்கிரசு மீதும், புரட்சியாளர்கள் மீதும் கட்டவிழ்த்துவிட்டது. மிகமிகக் கொடுமையான அடக்குமுறையை ஏவிவிட்டது.

சார்லசு டெகார்ட் என்ற கல்கத்தா மாநகரின் காவல் துறை ஆணையர் காங்கிரசு இயக்கத்தினரையும், புரட்சியாளர்களையும் கொடுமையான முறையில் தண்டிக்கத் தொடங்கினார். இந்த வன்கொடுமைச் செயலை எதிர்த்துப் புரட்சியாளர்கள் செயல்பட்டனர். காவல்துறை ஆணையரைச் சுட்டு வீழ்த்த முற்பட்டனர். தவறுதலாகக் காவல் ஆணையருக்குப் பதிலாக டே என்ற மற்றொரு வெள்ளையரைச் சுட்டுக் கொன்று விட்டனர். உடனடியாகப் புரட்சி வீரன் கோபிநாத் சாகா தனது தவறை ஒப்புக்கொண்டார். எவ்விதத் தண்டனையையும் ஏற்க முன்வந்தார். பிரிட்டிஷ் அரசு விரைவாக விசாரணையை முடித்து சாகாவைத் தூக்கிலிட்டது. இச்செயலைக் கண்டு வங்க மக்கள் பெரும் துயரமுற்றனர். பிரிட்டிஷ் அரசின் செயலுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

வழக்கம் போல காந்தியத்தைப் பின்பற்றுகிறோம் என்று அகில இந்தியக் காங்கிரசு எவ்விதக் கண்டனத்தையும் பிரிட்டிஷ் அரசிற்குத் தெரிவிக்கவில்லை. ஆனால் வங்க மாநிலக் காங்கிரசு 1924ஆம் ஆண்டு சித்தரஞ்சன் தாசு தலைமையில் கூடி ஒரு கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்தீர்மானத்தில் காங்கிரசுக் கட்சிக்கு வன்முறைக் கொள்கையில் நம்பிக்கை இல்லை என்றாலும், சாகாவினுடைய தியாகம் தவறானது என்றாலும், நாட்டினுடைய நலனைக் கருதி இக்கொலை செய்யப்பட்டதால் அவருடைய ஈடு இணையற்ற தியாகத்திற்கு மரியாதை செலுத்துகிறோம் என்று அழுத்தந்திருத்தமாகக் கருத்து வெளியிடப்பட்டது. அதே ஆண்டில் அகமதாபாத் நகரில் நடந்த அகில இந்தியக் காங்கிரசுக் கூட்டத்தில் காந்தியின் ஆதரவாளர்களால் இத்தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. இருப்பினும், வங்க மக்களின் தனித்தன்மையை இழக்க வங்கக் காங்கிரசுத் தலைமை மறுத்துவிட்டது; ‘போலி சுதேசி’களின் அடையாளத்தைத் தோலுரித்துக் காட்டியது. அன்று தொடங்கிய வங்க உரிமைக்கான போர் இன்று வரை தொடர்கிறது என்பதற்கு வங்க அரசியல் வரலாற்றில் பல்வேறு சான்றுகள் உள்ளன.

இந்திய விடுதலைக்குப் பிறகு 1947ஆம் ஆண்டிலிருந்து 1962ஆம் ஆண்டு வரை மேற்கு வங்கத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த பி.சி.ராய், மாநில உரிமைகளின் களத் தளபதியாகத் திகழ்ந்தார். அவர் காங்கிரசு இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பல ஆண்டுகள் சிறை ஏகியவர்; மணம் முடிக்கவில்லை. ஆனால் மருத்துவத்தை மணம் முடித்த பெரும் நெறியாளர், காலை முதல் மதியம் வரை அரசுத் தலைமையகத்தில் முதல்வர் பணியாற்றி, மாலையில் தனது மருத்துவமனையில் நோயுற்றவர்களுக்குச் சிகிச்சை அளித்தவர். தனது இறுதி நாள் வரை இந்த இரண்டு பணிகளையும் மக்கள் நலனிற்காகச் சிறப்பாக ஆற்றித் தொண்டின் இலக்கணமாகத் திகழ்ந்தவர். பாகிஸ்தான் பிரிந்த பிறகு இந்தியாவினுடைய முதல் தலைமை அமைச்சர் நேரு, மேற்குவங்க மாநில முதல்வரான பி.சி.ராயின் கருத்தைக் கேட்டறியாமல், பெருவாரி ஊரகப் பகுதிகளைப் பாகிஸ்தானிற்கு அளிப்பதற்கு ஒப்புக் கொண்டார். முதல்வர் பி.சி.ராய் காங்கிரசு முதல்வராக இருப்பினும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசிற்கு எதிராக இப்பிரச்சினையில் வழக்குத் தொடர்ந்தார். நேருவே வருந்துகிற அளவிற்கு இப்பிரச்சினைக்காகப் போராடினார்.

பின்னாளில் மேற்குவங்க மக்களின் நலனிற்காக, பிரான்சு நாட்டிலிருந்து நோய்க்கான மருந்துகளை இறக்குமதி செய்யும் 30 பக்கங்கள் அடங்கிய ஒரு ஒப்பந்தத்தில் பி.சி.ராய் கையொப்பமிட்டார். டெல்லியின் அதிகார வர்க்கம் இதற்குக் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தது. இந்த ஒப்பந்தத்தை ஏற்கக் கூடாது என்று பிரதமர் நேருவிடம் டெல்லி உயர் அலுவலகர்கள் எடுத்துக் கூறினர். அயல்நாட்டுத் தொடர்புடைய பிரச்சினைகளில் மாநில அரசுகளோ, மாநில முதல்வர்களோ எவ்வகை ஒப்பந்தத்தையும் நேரடியாக மேற்கொள்ளக் கூடாது என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள விதிகளை எடுத்துக்காட்டினர். ‘மக்கள் நலன்தான் முதன்மையானது. இந்த முடிவிலிருந்து நான் பின்வாங்க மாட்டேன்’ என்று கூறி பி.சி.ராய் அப்பிரச்சினையில் வெற்றி கண்டார். டெல்லியின் அளவிறந்த கொட்டத்தை அடக்கினார். இருமுறை மாநில உரிமைகளுக்காக டெல்லியின் அதிகாரக் குவியலை நொறுக்கினார்.

1971இல் வங்கப் போர் முற்றியது. பாகிஸ்தான் அன்றைய கிழக்குப் பாகிஸ்தானான இன்றைய வங்க நாட்டின் மீது இராணுவத்தை அனுப்பி மக்களைக் கொன்று குவித்தது. இச்சமயத்தில் மேற்கு வங்கத்தினுடைய காங்கிரசு முதல்வராகப் பணியாற்றியவர் வங்க சிங்கம் சித்தரஞ்சன் தாசின் பேரனான சித்தார்த்த சங்கர் ரே. இந்திய அரசு வங்க நாட்டு விடுதலைக்கு இராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், அக்காலக்கட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய ஜோதிபாசும், காங்கிரசு முதல்வரான சித்தார்த்த சங்கர் ரேவும் நடு இரவில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியைச் சந்திக்கச் சென்றனர். யாரும் அறியக்கூடாது என்பதற்காக முதல்வரான ரேவே நடு இரவில் மகிழுந்தை ஓட்டிச் சென்றார். வங்க நாட்டு விடுதலைக்காக உடனடியாக இராணுவத்தை அனுப்ப வேண்டும். வங்க மக்களைக் காக்க வேண்டும் என்று ஒருமித்த குரலில் இருவரும் பிரதமர் இந்திராவிடம் வேண்டுகோள் விடுத்தனர். கமுக்கமாக பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துவிட்டு வரும்போது, புதுதில்லியில் வழி தெரியாமல் மகிழுந்தில் சுற்றிச் சுற்றி வந்தனர். இறுதியாகத் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளாமலேயே காவல் துறையின் உதவி பெற்று இல்லம் திரும்பினர். இந்நிகழ்வை ஜோதிபாசு மறைந்தபோது சித்தார்த்த சங்கர் ரே நெகிழ்வுடன் நினைவுகூர்ந்தார்.

வங்க நாடு விடுதலைக்கு ஒரு கொள்கையையும் ஈழ விடுதலைக்கு வேறுபட்ட அணுகுமுறையையும் காங்கிரசு கடைபிடிக்கிறது. இந்திய மார்க்சிஸ்ட் கட்சியும் ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று மீண்டும், மீண்டும் கூறி வருகிறது. இது என்ன? இயங்கியல் முரண்பாடா? புதுவகை மார்க்சியமா? என்று ஆய்வாளர்கள் புன்னகைக்கின்றனர்.

மற்றொரு அரசியல் நிகழ்வு மேற்குவங்கத்தின் தனித்தன்மையைச் சுட்டுகிறது. 1996ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணியின் ஆட்சியின் போது, இந்தியாவும், வங்க நாடும் கங்கை ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான ஜோதிபாசு, மத்திய அரசின் அனுமதி இன்றியே கையொப்பமிட்டார். மற்ற நாடுகளுடன் ஆற்றுநீர் பகிர்வுப் பிரச்சினையில் ஒரு மாநில முதல்வருக்குக் கையொப்பமிடும் அதிகாரம் இல்லை என்று தெரிந்தும், மேற்குவங்க மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவ்வொப்பந்தத்தில் கையொப்பமிட்டு டெல்லியை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். வேறு வழியின்றி அந்த ஒப்பந்தத்தையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

தற்போது, இதே வழியில்தான் இன்றைய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங்குடன் வங்க நாட்டிற்குப் பயணம் செய்வதைத் திட்டமிட்டுத் தவிர்த்தார். தீஸ்டா ஆற்றின் நீரைப் பகிர்ந்து கொள்வதில் மேற்குவங்க அரசினுடைய நிலையைப் புரிந்து கொள்ளாமல் தன்னிச்சையாக டெல்லிப் பேராதிக்கம் வழக்கம் போல முடிவைத் திணித்தது. மத்திய அரசின் கூட்டணி ஆட்சியில் திரிணாமுல் காங்கிரசு இடம் பெற்றிருந்தாலும், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, முதல்வர்கள் பி.சி.ராய், ஜோதிபாசு வழியிலேயே டெல்லி மேலாதிக்கத்திற்குச் சரியான பாடத்தைக் கற்பித்துள்ளார். பல ஊடகங்கள் இந்நிகழ்வைக் கண்டித்து, வங்க வரலாற்றை மறந்து, தங்களின் அறியாமையைப் பறைசாற்றிக் கொண்டன.

அரசமைப்புச் சட்ட அறிஞர் ஏ.ஜி. நூராணி தனது நூலான, ‘அரசமைப்புச் சட்டம் தொடர்பான கேள்விகளும்-குடிமக்களின் உரிமைகளும்’ என்ற நூலில், மத்திய-மாநில அரசுகளின் உறவுகளில் இது போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கோடு ஒரு அரிய கருத்தினைப் பதித்துள்ளார். “நாட்டின் நலன்களுக்காக மாநிலங்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதை 1996ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா நாடு சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும், கூட்டாட்சித் தத்துவத்தை இதுபோன்ற செயல் ஒரு துளிகூட மீறவில்லை. இதற்கு மாறாக, இதுபோன்ற செயல் கூட்டாட்சியியலை முழுமை பெறச் செய்யும். ஆஸ்திரேலியா இதற்குச் சான்றாக உள்ளது (It will not violate the federal principle one bit. On the contrary, it will fulfill it. Witness Australia - “Constitutional Questions and Citizens’ Rights” by A.G.Noorani, 2006, pp.348 and 353). 

மேற்கு வங்க அரசியல் தலைவர்கள் வங்க இன உணர்வை மறக்கவில்லை. உரிமைக்காக அரசமைப்புச் சட்ட விதிகளை மீறியும் செயல்பட்டு வெற்றி கண்டுள்ளனர். ஆனால் தமிழ் நாட்டில் என்ன நடந்தது? கச்சத்தீவைத் தாரைவார்த்தபோது, தமிழகத் தலைவர்கள் டெல்லிக்குக் கண்டனத்தைத் தெரிவித்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டனர். ஈழத் தமிழர்களை 2009ஆம் ஆண்டு கொடுங்கோலன் ராஜபக்சே கொன்று குவித்தபோது, இந்திய அரசு இராணுவ உதவிகளையும், இராடார் கருவிகளையும் இலங்கைக்கு அளித்தது. தமிழர்கள் முள்வேலிகளுக்குள் நிற்பதைக் கண்டு உலகமே கலங்கியபோது, ராஜபக்சேவை இந்தியா இரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்றது. பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து, தமிழக மீனவர்களைக் கடலிலேயே சுட்டுவீழ்த்துகிற கொடுங்கோலன் ராஜபக்சேவிற்குத் திருப்பதி கோயிலில் வரவேற்பு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இரத்தினக் கம்பள விரிப்பு, சிறப்பு விருந்தினர் மரியாதை ஆகியவை தொடர்கின்றன. தொடர்ந்து தமிழர்கள் இழிவுப்படுத்தப்படுகிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளில் டெல்லி ஏகாதிபத்திய அரசிற்குத் தக்க பாடங்களைத் தகுந்த முறையில் புகட்டி வருகிறது மேற்குவங்கம். இதை எப்போது பின்பற்றும் தமிழ்நாடு?

Pin It