வாழ்நாளெல்லாம் உழைப்பவன்
கீழ்ச்சாதியானான் - அதைச்
சுரண்டியே கொழுப்பவன்
மேல்சாதியானான்
ஏன் என்று கேட்டவன்
கலகக்காரனானான் - சூடு
சொரணையற்றுக் கிடந்தவன்
நல்ல ‘குடி’மகனானான்.
கத்தரி வெயில் காயும் போது
கூரைபற்றி எரியுது
கனமழை பெய்யும்போது
சுவர் இடிந்து விழுகிறது
வருவாய்க்கு வழியின்றி
விழி பிதுங்கி நிற்கும் போது
அரசாங்கம் இலவசமா
வண்ணத் தொலைக்காட்சி கொடுக்குது
வறுமை நம்மை வாட்டுது
சாதியம் கூர்மை தீட்டுது
மனிதத்தன்மை மறையும் போது
இரத்த ஆறுதான் ஓடுது
அடுக்கடுக்காய்த் திட்டங்களை
அரசாங்கம் போடுது
அதிகாரவர்க்கங்கள்
அத்தனையும் விழுங்குது
உழைக்கும் வர்க்கத்தினைச்
சேரிக்குள் வைத்திட்டோம்
தத்துவம் தந்த மேதைகளைச்
சாதிக்குள் அடைத்திட்டோம்
பூச்சாண்டி காட்டியவனைப்
பூசிக்கத் தொடங்கிட்டோம்
அரிதாரம் பூசியவனை
அரியணையில் ஏற்றிட்டோம்
தேர்தல் பாதையில்
நடந்து நடந்து
தேய்ந்து போனது
நாம் தானே
போலி சனநாயகத்தில்
மூழ்கி மூழ்கித்
தொலைந்து போவது
வீண் தானே
முடைநாற்றம் வீசும் மூடநம்பிக்கைகளை
முழுமையாகப் பொசுக்கிடுவோம்
சித்தாந்தம் இல்லாத சில்லரை அரசியலை
முற்றாகப் போக்கிடுவோம்
சமத்துவம் சொன்ன பெரியாரையும்
சனநாயகம் சொன்ன அம்பேத்கரையும்
சமதர்மம் சொன்ன மார்க்சையும்
அரசியல் ஆசான்களாய் ஏற்றிடுவோம்!

Pin It