உழைப்பாளிச் சாதியினர் ஓரங்கட்டப்பட்டுவிட்டனர்

கல்விதான் மனிதனுக்கு அறிவையும் உரிமை உணர்வையும் ஊட்டுவது. இந்துமத சாத்திரங்களே, எல்லா ஆட்சிக் காலங்களிலும், ஆட்சியாளர்கள் பின்ப ற்றும் அரசமைப்புச் சட்டங்களாக விளங்கின.

“சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே” என்பது மனுநீதியின் கட்டளை.

அக்கட்டளையைத்தான் தென்னாட்டு, வடநாட்டு ஆட்சியாளர்கள் 1830 வரை பின்பற்றினர். அதனால், எல்லோரும் படிப்பதற்கான பொதுப் பள்ளிகளை அவர் கள் நிறுவவில்லை. ஆனால் பார்ப்பனப் பிள்ளைகள் மட்டும் படிப்பதற்கு வேதபாடசாலைகளை அவ்அரசர்கள் நிறுவினார்கள்.

எல்லோரும் படிப்பதற்கான பொதுப்பள்ளிகளை வெள்ளையர்கள் 1835இல் ஆங்காங்கே அமைத்தார் கள். அவற்றிலும், தீண்டப்படாத சாதிப்பிள்ளைகளைச் சேர்க்க மறுத்தனர். அவர்களைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தாலும், கட்டடத்துக்குள்ளே உட்காரவிடவில்லை. இந்தக் கொடுமையைச் சென்னை மாகாணத்தில் 1923இல் ஒழித்தவர்கள் நீதிக்கட்சி என்கிற பார்ப்பனர் அல்லாதார் கட்சி ஆட்சியினர்தான். அதே ஆண்டில், பம்பாய் மாகாணத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தீண்டப்படாதாருக்கு அவ்வுரிமையைப் பெற்றுத் தந்தார்.

வெள்ளையர் வெளியேறிய பிறகு, 1950இல் நடப்புக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் - பொதுக் கல்வி என்பது மாகாண (அ) மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் இடம்பெற்றது. ஆனால் இந்திய அளவிலான உயர்கல்வி, உயர் தொழில்நுட்பக் கல்வி என்பவை மய்ய அரசின் அதி காரப் பட்டியலில் வைக்கப்பட்டுவிட்டன.

இந்தக் கேடு கெட்டநிலையில், மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் இருந்த பொதுக்கல்வி, 1977இல் - பொது அதிகாரப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுவிட்டது.

இவ்வளவு கேடுகளையும் எதிரே கண்ட நிலை யில்தான், “இந்திய அரசின் உயர்கல்வியிலும் உயர் தொழில்நுட்பக் கல்வியிலும்; இந்திய அரசுத் துறை களிலுள்ள உயர் பதவிகள் - வேலைகள் எல்லாவற் றிலும் இந்தியாவிலுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பி னர்க்கு விகிதாசார இடப்பங்கீடு கொடுங்கள்” என்கிற கோரிக்கையை, முதன்முதலாக, இந்திய அரசிடம் - இந்தியக் குடிஅரசுத் தலைவரிடம், தில்லியில், நேரில், 8-5-1978இல், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி முன் வைத்தது.

அன்று முதல், 1979இல் மண்டல் குழு அமையும் வரையில் - மண்டல்குழு அறிக்கை நாடாளுமன்றத் தில் 1982 மே மாதம் வெளியிடப்படுகிற வரையில், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியும், அதன் இன்னொரு கிளை அமைப்பான அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையும், பீகாரில் இராம் அவதேஷ்சிங் தலைமையில் இயங்கும் பிற்படுத்தப் பட்டோர் பேரவையும் மட்டுமே பீகாரிலும், தமிழகத்திலும், புதுதில்லியிலும் பரப்புரைகளையும் போராட்டங்களையும் நடத்தின.

1982க்குப்பிறகு, தமிழகத்திலும் இந்தியாவிலும் உள்ள மற்ற பல கட்சிகளும், சாதி அமைப்புகளும் மண்டல் குழு பரிந்துரைகள் நடப்புக்கு வர எல்லாம் செய்தன. நாம் எப்போதும் போல் தொடர்ந்து செயல் பட்டோம்.

இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு விசுவநாத் பிரதாப் சிங் பிரதமராக இருந்த காலத்தில் தான், முதன்முதலாக இந்திய அரசுத்துறை வேலைகள் எல்லாவற்றிலும் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் வேலையில் மட்டும், 27% இடங்கள், 6-8-1990இல், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. அது 1994இல் நடப்புக்கு வந்தது.

அதன்பிறகு, 12 ஆண்டுக்காலம் கழித்து 2006 இல் தான் இந்திய உயர்கல்வி, உயர் தொழில் நுட்பக் கல்வி என்கிற - அய்.அய்.டி., அய்.அய்.எசி., அய்.அய்.எம்., முதலான படிப்புகளில் 27% இடஒதுக்கீடு தர இந்திய அரசு முன்வந்தது.

ஆயினும், அப்படிப்புத் துறைகளிலும், இந்திய மருத்துவ உயர் கல்வியிலும் அவை தொடங்கப்பட்ட காலத்திலிருந்து - 70% முதல் 80% இடங்களைப் பார்ப்பனரும் மற்ற மேல்சாதிக்காரர்களும் மட்டுமே பெற்றனர். 1970 முதல் பெயரளவுக்குப் பட்டியல் வகுப்பினருக்கும், பழங்குடியினருக்கும் - வேண்டா வெறுப்புடன் சில இடங்களை ஒதுக்கித் தந்தனர்.

ஏன்?

இந்திய அரசு உயர்கல்வி, உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் இந்திய அரசின் தனிக் கவனத் துக்கு உரிய - செல்லப்பிள்ளைகளுக்கு உரிய கூடா ரங்களாகவே பாதுகாக்கப்படுவதற்கு - இந்திய அரசுக் கல்வித்துறை, மேற்படிக் கல்வி நிறுவனங்களின் இயக்கு நர்கள் குழு, இந்திய மருத்துவக் குழுமம் எல்லாம் பாடுபட்டன; அதில் அவர்கள் அடாவடித்தனமாகவும், தானடித்த மூப்பாகவும் இன்றுவரை செயல்படுகின் றனர்.

ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளையும் பட்டியல் வகுப்புகளையும், பழங்குடி வகுப்புகளையும் சார்ந்த கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கள், உயர்மட்ட அரசு அலுவலர்கள், வழக்குரைஞர் கள், பொதுமக்கள் என்பவர்கள் தங்கள் தங்களுக்குக் கிடைத்துவிட்ட வேலைவாய்ப்புகள், உயர்கல்விக்கான இடங்கள் இவற்றோடு மனநிறைவு அடைந்துவிடுகின் றனர் - வருங்கால இளைய தலைமுறையின் ஈன நிலைமை பற்றிக் கவலைப்படாதவர்களாகவே உள்ளனர்.

எப்படி?

பிற்படுத்தப்பட்டோருக்கு உயர்கல்வியில் தரப்பட வேண்டிய 27% இடங்களை ஒரே தடவையில், ஒவ்வோராண்டிலும் தர முடியாது என்று - அக்கல்வி நிறுவனங்களின் இயக்குநர்களும், அரசின் ஆய்வுக் குழுவினரும் சொன்னதை எதிர்த்து இந்திய மட்டத்தில் இவர்கள் போராடவில்லை.

அத்துடன் மட்டுமா?

27% ஒதுக்கீடு என்பதை 9%, 9%, 9% என்று மூன்று ஆண்டுகளில் கொஞ்சங்கொஞ்சமாகப் பிற்படுத் தப்பட்டோருக்குத் தருவோம் என்று கூறிவிட்டதை எதிர்த்தும் இவர்கள் போராடவில்லை.

இன்றைய நிலைமை என்ன?

பிற்படுத்தப்பட்டோருக்கு 27% தருவதற்கு ஏற்றபடி - கட்டட வசதிகள், ஆய்வுக்கூட வசதிகள், நூலகங்கள், போதிய பேராசிரியர்கள் எல்லாம் அமைக்கப்படவும், அமர்த்தப்படவும் மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகும்; அதுவரையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தருவதை நிறுத்தி வைப்போம் என்று கூறிவிட்டனர்.

இந்திய அரசுக் கல்வித் துறையோ, சமூக நீதி அமைச்சகமோ, இந்தியத் தலைமை அமைச்சரோ, பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவர்களோ இது பற்றிக் கவலைப்படாத வாய் மூடிகளாகவே உள்ளனர்.

சென்னை மாநகரில் உள்ள அய்.அய்.டி. நிறு வனத்தில் 5,500 மாணவர்கள் சேர்க்கப்படுவதற்கு இருந்த வசதி விரிவுபடுத்தப்பட்டு, இப்போது 8,000 மாணவர்கள் சேர்க்கப்படுவதற்கான திட்டத்தை வகுத் துள்ளனர்.

“5,500 என்கிற எண்ணிக்கையை 8,000 ஆக உயர்த்திட முடிவெடுத்துள்ளோம். போதிய கட்டடங்கள் கட்டுவதற்கான ஏற்பாடுகளை டெண்டர் மூலம் செய்துள்ளோம். இன்னும் 18 மாதங்களில் கட்டடங்கள் உருவாக்கப்பட்டுவிடும். 8000 மாணவர்களைச் சேர்த்துப் படிக்க வைப்பதில் எந்த இடர்ப்பாடும் இருக்காது. இந்த நிறுவனத்தின் நிர்வாகம் மூலம் இதன் தனித் தன்மையை - பாதுகாக்கப்பட்ட காடுகளைக் கண் ணுங் கருத்துமாக அரசு காப்பது போல் காத் திடுவோம்” என, சென்னை அய்.அய்.டி. நிறுவ னத்தின் இயக்குநராக அண்மையில் பொறுப்பேற்ற பேராசிரியர் பாஸ்கர் இராமமூர்த்தி, அவ்வளாகத்தில் 28.9.2011 புதனன்று நடைபெற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆண்டு விழா அன்று, செய்தியாளர் களிடையே மிகப் பூரிப்போடு கூறியுள்ளார்.

அவர் அப்படிக் கூறியுள்ளதன் பொருள் என்ன? “உயர்சாதிக்காரர்களுக்கான தனி நிறுவனமாகவே இதை நிர்வகிப்போம் - கீழ்ச்சாதிக்காரர்களை இதில் நுழைய விடமாட்டோம்” என்பதுதான். மானம் உள்ள கீழ்ச்சாதியினர் இதைப் புரிந்துகொள்ளுங்கள்.

மேலும் இப்போது உள்ள வளாகத்திலேயே, மேற்கொண்டும் விரிவாக்கப் பணிகளை இன்னும் 5 ஆண்டுகளுக்குச் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (“டெக்கான் கிரானிகள்”, 29-9-2011, சென்னைப் பதிப்பு).

இவற்றில் இடம்பெற்றுப் படிக்க - பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு எத்தனை விழுக்காடு இடங்கள்? தகுதிவாய்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள், பொதுநுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால், அப்படிப்பட்டவர்கள் 27% இடஒதுக்கீடு பகுதியில் தள்ளப்பட்டுவிடாமல், பொதுத் தகுதிப் பகுதியிலேயே சேர்க்கப்பட வேண்டும். நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற அவர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதைக் கணக்கிட்டு, பொதுத் தகுதிப் பகுதியில் சேர்க்கப்பட்டவர்கள் போக, மீதி இருப்பவர்களை 27% இடஒதுக்கீடு பகுதியில் சேர்க்க வேண்டும்.

இந்த சென்னை IIT, IIM நிறுவனங்களில் மட்டுமே எல்லா வசதிகளும் உள்ளன. வசதியான கட்டடங்கள், சிறப்பான ஆய்வுக்கூடங்கள், தகுதிமிக்க ஆசிரியர்கள், பெரிய நூலகம், உயரிய ஆசிரியர்கள் குடியிருப்பு, நல்ல சுற்றுப்புறச்சூழல் எல்லாம் இங்கே உள்ளன. இப்படி இந்தியா முழுவதிலும் உள்ள உயர் தொழில் நுட்ப நிறுவனங்களில் படித்த மாணவர்கள் - அவர்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே, இறுதி ஆண்டில், பல்கலைக்கழக வளாகத்திலேயே அயல்நாட்டினரால் வேலைக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த 2010-2011 கல்வி ஆண்டில் சென்னையிலுள்ள இந்நிறுவனங்களிலிருந்து, சென்ற ஆண்டு வேலைக்கு எடுக்கப்பட்ட மாணவர்களைப் போல் இரண்டு மடங்கு எண்ணிக்கை மாணவர்கள் அயல்நாட்டு வணிக நிறுவனங்களால் இப்போதே வேலைக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டுவிட்டனர்.

இவர்கள் ஒவ்வொருவரும் குறைந்த அளவு ஆண்டு ஊதியம் 14 இலட்சம் உருபா முதல் 25 இலட்சம் உருபா வரையிலும்-அதற்கு மேலும் தரப்பட ஒப்பந்தம் போட்டு முடிந்துவிட்டது. (“தி இந்து”, 10-10-2011, சென்னைப் பதிப்பு).

இவையெல்லாம் இந்திய அரசினால் நடத்தப்படும் அரசு உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி நிறுவனங் கள். இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இடஒதுக்கீடு இல்லை.

இப்படிப்பட்ட நிறுவனங்களில், அண்மைக்கால மாக, தகுதியற்ற மாணவர்கள் சேர்க்கப்படுவதால், அவர்கள் அயல்நாடுகளில் - ஹார்வார்டு பல்கலைக் கழகங்கள் போன்றவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு ஈடாகப் போட்டி போட முடியவில்லையென்றும், எனவே உயர் தகுதி பெற்றவர்களையே இவற்றில் சேர்க்க வேண்டும் என்றும் அறிவுரை கூறி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் என்.ஆர். நாராயணமூர்த்தி, புதுதில்லியில், அண்மையில் நடைபெற்ற, “உலகளா விய அய்.அய்.டி. மாணவர்கள் மாநாட்டில்” ஒப்பாரி வைத்துள்ளார். அவருடைய அந்த உரையைக் கேட்டு அங்கிருந்த மாணவர்கள் பூரிப்போடு கையொலி எழுப்பி ஆர்ப்பரித்தனர். அது உயர்சாதியினரின் வெற்றிக் களிப்பு.

இந்திய அரசு நடத்தும் இந்திய உயர்கல்வி நிறுவனம் தரும் படிப்பு முழுவதும் உயர்சாதியினருக்கே உரிமை ஆக்கப்பட்டுவிட்டதைக் கண்டு, மானமும் அறிவும் பொறுப்பும் உள்ள பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட - பழங்குடி வகுப்பு மாணவர்களும், இளை ஞர்களும், அரசு அலுவலர்களும், பெற்றோர்களும் கொதித்தெழுந்து, ஒன்றுபட்டுத் தெருவுக்கு வந்து போராட வேண்டாமா?

இவையன்றி, இந்தியாவில் உள்ள ஏறக்குறைய 7000 பொறியியல் கல்லூரிகளிலிருந்து ஆண்டொன்றுக்கு 8 இலட்சம் மாணவர்கள் பொறியாளர் பட்டம் பெறுகிறார்கள். இவர்களுள் ஆண்டுக்கு ஏறத்தாழ பத்தில் ஒரு பங்கினர் மட்டுமே படிக்கும், கல்லூரி களிலேயே நடத்தப்படும் ஆள்கள் தேர்வில் வெற்றி பெற்று வேலை பெறுகிறார்கள்.

இந்நிலையில் - தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர் கள், சேர்க்கப்பட்ட பிறகு, அவர்களை ஆசிரியர்களும், உடன் பயிலும் மாணவர்களும் இழித்தும் பழித்தும், அவர்களின் சாதியைச் சொல்லியும் பேசுவதாலும், இழிவாக நடத்துவதாலும் அவர்கள் மனம் உடைந்து தூக்கில் தொங்கிச் சாகும் கொடுமை தமிழகத்திலேயும் மற்ற மாநிலங்களிலும் நடப்பதாக, பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு  அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இவையெல்லாம் ஒடுக்கப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த - மக்கள் தொகையில் 82 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்ட - பட்டியல்குல - பழங்குடி மக்களின் கவலைக்கு உரிய இழி நிலைமைகளாகும். இவற்றை இன்றே இப்போதே மாற்றிட நாம் எல்லோரும் ஒன்றுபட்டு முயல வேண்டும்.

முயலுவோம் - வாருங்கள்!

Pin It