சமூகத்தில் உள்ள எல்லா வகுப்பினருக்கும் விகிதாசார இடப் பங்கிடு கோரி, இந்தியத் தலைமை அமைச்சருக்கு வேண்டுகோள் மடல்

அனுப்புநர் 

வே. ஆனைமுத்து    

பொதுச் செயலாளர்   

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி,           

19, முருகப்பா தெரு, சேப்பாக்கம், சென்னை - 5.  

 

பெறுநர்

டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள்

மாண்புமிகு தலைமை அமைச்சர்

இந்திய அரசு,

புதுதில்லி - 110 001.

 

மதிப்புக்குரிய அய்யா,

பொருள் :  அரசு வேலை மற்றும் கல்வியில் இடப்பங்கீடு - பொதுப்பிரிவு என்பதை நீக்கிவிட்டு, 100 விழுக்காடு இடங்களையும் எல்லா வகுப்பினருக்கும் விகிதாசாரம் பிரித்தளித்தல் தொடர்பான வேண்டுகோள்.

நான் பொதுச் செயலாளராக உள்ள மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பிலும் மற்றும் நான் புரவலர் - தலைவராக உள்ள அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் குலத்தினர், பழங்குடியினர் பேரவையின் சார்பிலும் கீழ்க்காணும் வேண்டுகோளைத் தங்களின் கனிவான கவனத்திற்காகவும், இசைவான ஆணைக்காகவும் மிகுந்த மரியாதையுடன் விடுத்துள்ளேன்.

1.            பிரிட்டிஷ் இந்தியாவிலேயே சென்னை மாகாணத் தில் மட்டும்தான் 1927 முதல் அரசு வேலையிலும், கல்வியிலும் எல்லா வகுப்பினருக்கும் இடப்பங்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதன்படி, மொத்தம் உள்ள 100 விழுக்காடு இடங்களையும் 1. பார்ப்பனர், 2. பார்ப்பனர் அல்லாத இந்துக்கள், 3. முசுலீம்கள், 4. ஆங்கிலோ-இந்தியர் மற்றும் இந்தியக் கிறித்தவர் கள், 5. பட்டியல் குலத்தினர் ஆகிய அய்ந்து வகுப்பினருக்கும் பிரித்து இடப்பங்கீடு அளிக்கப்பட்டது. ஆனால் இடஒதுக்கீட்டின் அளவு, பார்ப்பனர் அல்லாத இந்துக்களுக்கும், பட்டியல் குலத்தினருக்கும் அவர வர் மக்கள் தொகை விகிதாசாரத்திற்கு உரிய அளவினதாக இல்லாமல் இருந்தது.

2.            4.7.1934 நாளிட்ட, இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் செயல் ஆணை எண்.எப்14/17பி/33இன்படி, 1934 முதல், இந்தியா முழுவதிலும் நடுவண் அரசு வேலைகளில் மட்டும் முசுலீம் களுக்கு 25 விழுக்காடு, ஆங்கிலோ-இந்தியர் மற்றும் இந்தியக் கிறித்துவர், பார்சிகள், சீக்கியர் ஆகிய மூன்று சிறுபான்மை வகுப்பினருக்கும் சேர்த்து 8.33 விழுக்காடு என்று அவரவர்களின் விகிதாசாரப்படி இடப்பங்கீடு அளிக்கப்பட்டது.

3.            மேலும், சென்னை மாகாண அரசும், பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்களும், அளித்த அழுத்தத் தின் விளைவாக சென்னை மாகாண எல்லைக்குள் அமைந்திருந்த நடுவண் அரசுத் துறைகளில் வேலைகளிலும், தனியாரிடமிருந்த இரயில்வே நிறுவனங்களிலும், 1935 முதல், அ) பார்ப்பனர், ஆ) பார்ப்பனர் அல்லாத இந்துக்கள், இ) பட்டியல் வகுப்பினர் ஆகியோர்க்குக் கிட்டத்தட்ட அவரவர் மக்கள் தொகை விகிதாசாரப்படி இடப்பங்கீடு, உள்துறை அமைச்சகத்தின் - சிறப்பு ஆணை எண். எப்.1461934, நாள் 15.3.1935இன்படி அளிக்கப்பட்டது.

4.            டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பெருமுயற் சியால், நடுவண் அரசு வேலைகளில் மட்டும் பட்டியல் வகுப்பினருக்கு 8.33 விழுக்காடு இடப்பங்கீடு வழங்கிட 11.8.1943 அன்று உள்துறை அமைச்சகம் ஆணையிட்டது.

1934 முதல் இந்தியா முழுவதிலும் நடுவண் அரசு வேலைகளில் முசுலீம்கள் அனுபவித்து வந்த இடஒதுக் கீடும்; சென்னை மாகாண எல்லைக்குள் இருந்த நடுவண் அரசு வேலைகளில் எல்லா வகுப்பினரும் அனுபவித்துவந்த இடப்பங்கீடும், வெள்ளையர் வெளியேறிய உடனேயே இந்திய அரசின் 13.9.1947 நாளிட்ட ஆணை மூலம் ஒழித்துக்கட்டப்பட்டது.

5.            1950இல் இந்திய அரசமைப்புச் சட்டம் நடை முறைக்கு வந்த பிறகும், அரசமைப்புச் சட்டத்தில் உள்ள விதி 16(4)இன்படி அரசு வேலையிலும், விதி 15(4)இன்படி கல்வியிலும், சென்னை மாகா ணத்தில் 1951 வரை, 100 விழுக்காடு இடங்களும் 6 வகுப்பாருக்குப் பிரித்தளிக்கப்பட்டன.

1963இல் பாலாஜி (எதிர்) மைசூர் அரசு எனும் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், பிற்படுத் தப்பட்ட வகுப்பினர், பட்டியல் குலத்தினர், பட்டியல் பழங்குடியினர் ஆகிய மூன்று பிரிவினருக்கான மொத்த இடப்பங்கீடு 50 விழுக்காட்டுக்குக் குறைவாகவே இருக்க வேண்டும் என்று கூறியது. மண்டல் குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் 16.11.1992இல் அளித்த தீர்ப்பில் மீண்டும் அதே வரம்பை உறுதி செய்தது.

இவ்வாறு உச்சநீதிமன்றம் வரம்பு விதித்ததால், இடப்பங்கீட்டுக்கான மொத்த அளவு 50 விழுக்காட் டுக்கும் குறைவாக இருக்கிறது. எஞ்சியுள்ள இடங்கள் பொதுப் போட்டியின் கீழ் எல்லா வகுப்பினருக்கும் என விடப்படுகின்றன.

மேலே குறிப்பிட்டுள்ள தீர்ப்புகளின் காரணமாக, சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியுள்ள இதர பிற்பட்ட வகுப்பினருக்கான இடப்பங்கீடு கட்டாய மாக 27 விழுக்காடாக அளவுபடுத்தப்பட்டுவிட்டது, இது மாபெரும் அநீதியாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் விதி 16(4) மற்றும் விதி 15(4) ஆகியவற்றின் கீழ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள இடப்பங்கீடு உரிமைக்கு, இது எதிரானதாகும்.

மண்டல் குழுவின் ஆய்வறிக்கையின்படி, சமூகத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டுள்ள வகுப்பினர் இந்துக்களில் 52 விழுக்காடும், மதச்சிறுபான் மையினருள் 52 விழுக்காடும் உள்ளனர். இந்த இரண்டு பிரிவினரை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று மண்டல்குழு அறிவித்தது. 1980இல் மண்டல் குழு அறிக்கையில், பட்டியலிடப்பட்டுள்ள பிற்படுத்தப் பட்ட சாதிகளின் மொத்த எண்ணிக்கை 3743 ஆகும். அதன்பின், தேசிய சனநாயகக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில், மேலும் 1000 உள்சாதிகளும் வகுப்புகளும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டன. அதன்பிறகும், தற்போது 58 விழுக்காடாக உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக் கான இடப்பங்கீடு 27 விழுக்காடாக மட்டுமே இருக்கிறது. இது மிகவும் அநீதியானது; அரசியல் சட்டத்துக்கு எதிரானது.

அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இடப் பங்கீட்டு உரிமையை அனுபவிக்க முடியாதவாறு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மட்டுமே தனியாகக் குறி வைத்துத் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறோம். 1950இல் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது முதலாக, கடந்த அறுபது ஆண்டுகளாகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடப்பங்கீட்டு உரிமை பறிக்கப்பட்டு வருகிறது.

மேலே விளக்கிக் கூறப்பட்டுள்ளதன் அடிப்படையில், மாண்புமிகு தலைமை அமைச்சர் அவர்கள், நடுவண் அரசின் வேலையிலும், கல்வியிலும் 100 விழுக்காடு இடங்களையும் கீழே குறிப்பிட்டுள்ளவாறு நான்கு வகுப்பினருக்கும் விகிதாசாரப்படி பிரித்தளித் திடப் பரிவுடனும், பெரிய மனதுடனும் முன்வர வேண் டும் என்று நாங்கள் வேண்டுகின்றோம்.

1.            இந்து உயர் சாதியினர் மற்றும் உயர் அடுக்கில் உள்ள மதச் சிறுபான்மையினர்   17.5 %

2.            பட்டியல் குலத்தினர்   17.0 %

3.            பட்டியல் பழங்குடியினர்     7.5 %

4.            சமூக நிலையிலும் கல்வியிலும் இந்துக்களிலும், மதச்சிறுபான்மையினரிலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர்   58.0 %

                                ---------                 மொத்தம்  100.0 %

                                ---------

நடுவண் அரசின் மற்றும் மாநில அரசின் நிறுவனங்களிலும் மற்றும் அரசின் நிதி உதவி பெறும் எல்லா நிறுவனங்களிலும், வேலையிலும், கல்வியிலும் மேலே குறிப்பிட்டுள்ளவாறு 100% இடங்களையும் நேரடியாக நிர்வாக ஆணைகள் மூலம் பிரித்தளிக்க முடியும் என்பது எமது திண்ணமான கருத்தாகும்.

அரசமைப்புச் சட்டத்தின் விதி 16(4) மற்றும் 15(4) ஆகியவற்றின் அடிப்படையில் துறைவாரி யாக நிர்வாக ஆணைகளைப் பிறப்பிக்க முன்வர வேண்டும் என்று நடுவண் அரசை நாங்கள் உளமார வேண்டுகிறோம். இதன்படி, மேலே குறிப்பிட்டுள்ளவாறு வேலையிலும் கல்வியிலும் 100% இடங்களும் எல்லா வகுப்பினருக்கும் மக்கள் தொகையில் அவரவரின் விகிதாசாரத்திற்கு ஏற்பப் பிரித்தளிக்கப்பட வேண்டும்.

இத்தன்மையில், மாண்புமிகு தலைமை அமைச்சர் அறிவார்ந்த, திட்டவட்டமான, விரைவான நடவடிக்கைகளை 2011 திசம்பர் 31க்குள் எடுக்க வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகிறோம். 2011 திசம்பர் 31க்குள் அரசு இதுபற்றி நடவடிக்கை ஏதும் எடுக்காவிட்டால், மார்க்சியப் பெரியாரியக் கட்சியினரும் மற்றும் அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் குல, பழங்குடி மற்றும் மதச்சிறுபான்மைப் பேரவையினரும் 2012 சனவரி 26 அன்று தத்தம் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி, குடியரசு நாளைத் துக்க நாளாகக் கடைப்பிடிப்பார்கள் என்பதை அறிவித்துக் கொள்கிறோம்.

சமூகத்தின் அச்சாணியான இக்கோரிக்கை குறித்து எங்கள் கருத்துகளைத் தங்களிடம் நேரில் சந்தித்து விளக்குவதற்கு ஏதுவாக, 2011 திசம்பர் 20 முதல் 30க்குள்ளாகத் தங்கள் வாய்ப்புக்கும் வசதிக்கும் ஏற்ப, நேரம் ஒதுக்கித் தருமாறு மாண்புமிகு தலைமை அமைச்சர் அவர்களைப் பணிவன்புடன் வேண்டுகின்றேன். அவ்வாறு நேரம் ஒதுக்கப்படும் நாளையும் நேரத்தையும் இயன்ற அளவில் முன்னதாக எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

தங்கள் உண்மையுள்ள

வே.ஆனைமுத்து,

பொதுச் செயலாளர்

(தலைமை அமைச்சருக்கு ஆங்கிலத்தில் அனுப்பப்பட்ட வேண்டுகோள் மடலின் தமிழாக்கம் - க. முகிலன்)

Pin It