2011 அக்டோபர் 30 ஞாயிறு அன்று பண்ணு ருட்டியை அடுத்த வேகாக் கொல்லை என்ற சிற்றூரில் கணவன், மனைவி, 5 வயது ஆண் குழந்தை, 3 வயது பெண் குழந்தை ஆக நான்கு பேர் ஒரே முந்திரி மரத்தின் 3 கிளைகளில் பிணமாகத் தொங்கிவிட்டனர். இந்தச் செய்தி 31.10.2011 திங்கள் கிழமை காலை 6.30 மணிக்குப்பிறகு தான் ஊராருக்குத் தெரிய வந்தது.

வேகாக் கொல்லை பண்ணுருட்டியிலிருந்து காடாம் புலியூருக்குச் சென்று, பிறகு நெடுஞ்சாலையிலிருந்து குள்ளஞ்சாவடிக்குப் போகும் கிளைச் சாலையில் சாலைக்குத் தென்புறம், ஒரு கிலோ மீட்டர் தொலை வில் உள்பகுதியில் அமைந்திருக்கிறது.

02.11.2011 புதன் காலை 11 மணிக்கு பண்ணு ருட்டி நகராட்சி முன்னாள் தலைவர் ஆர். பஞ்சவர்ணம் இல்லத்திலிருந்து, வே. ஆனைமுத்து, வடக்கு மாங்குடி பா. மோகன், திருச்சி இரா. கலியபெருமாள் மூவரும்; படப்பிடிப்பாளர் ஒருவருடன் புறப்பட்டு, 11.45க்கு அங்கு போய்ச் சேர்ந்தோம்.

 

அந்நேரம் அங்கிருந்த நா. தட்சணாமூர்த்தி, பா. கதிர்வேல் ஆகியோரிடம் சில மணித்துளிகள் பேசி னோம். அவர்களின் ஆலோசனைப்படி, முதலில் தற் கொலை செய்து கொண்டவரின் தாயாரைப் பார்த்து விவரம் கேட்க விரும்பி, பா. கதிர்வேல் துணையுடன் அங்குச் சென்றோம்.

பழைய தென்னை மட்டை வீடு; பழுதடைந்த கூரை; குனிந்து நுழையப் போதிய நுழைவாயில்; இரண்டு சிறிய மண்திண்ணைகள் - 10, 15 தாய் மார்கள் துயரத்தோடு வாயிற்படியில் அமர்ந்திருந்தார்கள். தற்கொலை செய்துகொண்ட தெய்வலிங்கத்தின் தாயார் ரெத்தினாம்பாள் (62) இடப்புறத் திண்ணையில் அழுது புலம்பிக் கொண்டு படுத்திருந்தார். அவருடைய வயதை ஒத்த இன்னொரு மூதாட்டி அவருடைய வாயில் கஞ்சி யை ஊற்றிக் கொண்டு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார். எங்களைக் கண்டவுடன் எல்லாத் தாய்மார்களும் ஒதுங்கிக் கொண்டு, ரெத்தினம்பாளிடம் பேச இடம் விட்டனர்.

ரெத்தினம்பாள் புலம்பிக் கொண்டே நடந்ததைக் கூறினார்.

என் மகன் தெய்வலிங்கம் சனிக்கிழமை (29.10.2011) அவனுடைய ஸ்கூட்டர் வண்டியின் ஆர்.சி. புத்தகத் தை என்னிடம் கொடுத்து, என் சின்ன மகள் விசுவலட்சுமி வீட்டுக்குப் போய் 5000 ரூபாய் கடன் வாங்கி வைக் கும்படிச் சொல்லி, பஸ்சில் ஏற்றிவிட்டான்; மறுநாள் அங்கு வருவதாகச் சொன்னான். நான் ஞாயிறு காலை 11 மணிவரையில் அங்கு வருவான் என்று எதிர் பார்த்தேன்; வரவில்லை. நான் உடனே புறப்பட்டு பகல் 2 மணிக்கு என் வீட்டுக்கு வந்தேன். யாருமே வீட்டில் இல்லை; அக்கம் பக்கம் விசாரித்தேன்; ஒன்றும் தெரியவில்லை. மறுநாள் காலையில்தான், இப்படி நாலுபேரும் தூக்கில் தொங்கியது தெரிந்தது எனச் சொல்லிவிட்டுக் கோவெனக் கதறினார்.

அவரைச் சற்று நேரம் அமைதிப்படுத்திவிட்டு, மேற் கொண்டு குடும்ப வரலாற்றைக் கேட்டோம். அவருடைய மூத்த மகன் இளங்கோவன் தாள முடியாத நோயால் 1989 வாக்கில் தற்கொலை செய்து கொண்டார். அவரு டைய கணவர் கி. செயராமன் 1990 வாக்கில் நஞ்சு உண்டு இறந்துவிட்டார் எனக் கூறிவிட்டு, இவனும் இப்படிப் பண்ணிவிட்டானே என்று கூறிப் புலம்பினார்.

ஞானப்பிரகாசம் என்பவர், 2 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்குக் கொடுத்து, அதைப் பயிரிட்டு, அதில் கிடைக்கிற வருமானத்தைக் கொண்டு, தன்னிடம் ஏற்கெனவே என் மகன் வாங்கியிருந்த கடனை அடைக்கச் சொன்னார். அவருடைய நிலத்தில் பயிரிடப்பட்ட கரும்பு இன்னும் வெட்டப்படவில்லை. எனவே அவருடைய கடன் அடைபடவில்லை. ஆனால் பணம் தரும்படி அவர் நெருக்கடி தரவில்லை என்று ரெத்தினம்பாள் கூறினார்.

எங்களுடன் வந்த தனவேல், பா. கதிர்வேல் மற்றும் சிலர் வேறு விவரங்களைச் சொன்னார்கள். கரும்பு பயிரிடும் நிலத்தை அன்னியில், வேறு ஒருவரிடம், இரண்டு இடங்களில் 2010இல், 1 ஏக்கர் 30 செண்டு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து 30 செண்டில் பூந் தோட்டம், 30 செண்டில் மிளகாய் ஓரு பாகத்திலும், அடுத்ததாக இருந்த பாகத்தில் வாழையும் வைத்து 80,000 ரூபாய் கடன்பட்டுப் பயிர் செய்திருந்தார். ஆனால் 2010 கார்த்திகை மாதம் பெய்த பெரு மழை யில் 3 அடி உயரம் வெள்ளம் அந்நிலத்தின் வழியே வந்து, அப்பயிர்களை நாசப்படுத்திவிட்டது. குத்தகைப் பணம் வேறு ஏற்கெனவே கொடுக்கப்பட்டுவிட்டது. பயிர் செய்யக் கடன் வாங்கியதைத் திருப்பித் தரமுடியவில்லை. இந்த ஆடி, ஆவணி மாதத்தில் இவரிடமிருந்த குத்த கை நிலத்தை, நில உடைமையாளர் இன்னொரு வருக்கு மாற்றிக்கொடுத்துவிட்டார் எனக் கூறினர்.

நாங்கள் அந்நிலங்களைப் பார்வையிட்ட போது, புதிய குத்தகைக்காரரின் குடும்பத்தினர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். இந்த நிலங்களுக்கு ஆடி, ஆவ ணிக்கு தெய்வலிங்கம் தரவேண்டிய குத்தகை பாக்கி வேறு உள்ளது.

இந்த நிலைமைகளுக்கு முன்னால், தெய்வலிங்கம் சிறிய அளவில் முந்திரிக் கொட்டை வணிகம் செய்வ தற்காக ஞானப்பிரகாசத்திடம் பெரிய கடன் பெற்றார். அதை அடைப்பதற்குத்தான், கடன் கொடுத்தவரே முன் வந்து 2 ஏக்கரை இவருக்குக் குத்தகைக்குக் கொடுத் திருந்தார். இக்கடன் அடைபடாத நிலையில், அண்மை யில் நடைபெற்ற ஊராட்சித் தேர்தலில், ஞானப்பிர காசத்தால் நிறுத்தப்பட்ட ஒருவருக்கு எதிராகத் தெய்வ லிங்கம் தேர்தல் வேலை செய்ததால், ஒருவேளை அவரிடம் அச்சங்கொண்டு, உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்திருக்கலாமோ என்றும் சிலர் கருதுகிறார்கள்.

அத்துடன், 2010இல் தெய்வலிங்கம், அரிசி மூட் டையுடன் ஸ்கூட்டரிலிருந்து கீழேவிழுந்து காயப்பட்டு, மருத்துவம் செய்து கொண்டபோது, அவருக்கு ஏதோ கடுமையான ஒரு நோய் இருப்பதாகவும், நிறைய அளவுக்கு மருந்து சாப்பிட வேண்டும் என்றும் மருத்துவர் அறிவுறுத்தியதாகவும், அதற்காகவும் மாதம் ரூ.2000ம்போல் கடன்பட்டார் என்றும் உடன் வந்த வர்கள் எங்களுக்குச் சொன்னார்கள்.

30.10.2011 ஞாயிறு பிற்பகல் 3 மணிக்கு, உள்ளூர் செட்டியாரின் மளிகைக்கடையில் தெய்வலிங்கம் 3 ரூபா விலை உள்ள பிஸ்கட் ஒரு பொட்டலம் வாங்கி யிருக்கிறார். அப்போது, அங்கிருந்த தனவேல், ‘ஏன் இன்றைக்கு மூன்று ரூபா பொட்டலம் வாங்குகிறாய்?’ என்று கேட்டபோது, “கையில்வேறு காசு இல்லை” என்று அவரிடம் சொல்லியிருக்கிறார்.

அதற்குப் பிறகு, ஞாயிறு மாலை 5 மணி வாக்கில் தெய்வலிங்கம் மனைவி, மக்களுடன் ஸ்கூட்டரில் முந்திரிக் காட்டுக்குப் போனதைச் சிலர் பார்த்திருக் கிறார்கள். ஸ்கூட்டரை முக்கிய கிளைச் சாலையில் நிறுத்திவிட்டுத்தான், அங்கிருந்து 100 தப்படி தொலை வில் முந்திரிக்காட்டின் உள்பகுதிக்குச் சென்றிருக்கிறார்.

அவர் சம்பளத்துக்கு டிராக்டர் ஓட்டுவதும் உண்டு. அதனால் சாலையில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, உள் பகுதியில் டிராக்டர் ஓட்டப் போயிருப்பார் என்று, ஞாயி றன்று மாலை ஸ்கூட்டரைப் பார்த்தவர்கள் நினைத்து விட்டார்கள்.

நால்வரும் ஒரு சிறிய பச்சைப் பிளாஸ்டிக் கூடையில், சமைத்த உணவு, தண்ணீர் போத்தல் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அவற்றில் ஒரு பகுதி 2.11.11 வரை அங்கே கிடந்தது.

கிளைச் சாலையிலிருந்து 30 அடி தொலைவில், தாழ்வாகப் படர்ந்துள்ள முந்திரி மரத்தின் ஒரு கிளை யில், மிகக் குறைவான உயரத்தில் கலைமுருகன் (5), காவ்யா (3) என்னும் இரு குழந்தைகளையும் தகப்பனே கொன்றுதான் தொங்கப் போட்டிருக்க வேண்டும். அதற்கு முன்னர் மனைவி கலைச்செல்வி யைத் (25) தூக்கில் மாட்டி அவரே கொன்றிருக்க வேண்டும். இறுதியாகவே தெய்வலிங்கம் (30) எதிர்ப் பக்கக் கிளையில் தூக்கில் தொங்கியிருக்க வேண்டும்.

ஒரே குடும்பத்தில் நால்வர் தற்கொலை செய்து கொண்டதால்-காட்டு வேகாக்கொல்லை, வேகாக் கொல்லை, அரசடிக்குப்பம், சத்திரம், சின்னத்தொண்டமாதேவி, பாவைகுளம், ஆயிப்பேட்டை முதலான ஊர்மக்கள் 31.10.11 திங்களன்று ஆயிரக்கணக்கில் கூடி, ஆதங்கப் பட்டார்கள்; அழுதார்கள்.

தெய்வலிங்கம் குடும்பத்துக்குச் சொந்தமாக 4.5 செண்ட் வீட்டுமனை மட்டுமே உள்ளது. வேளாண் நிலம் சொந்தமாக இல்லை. இந்நிலையில், குத்தகைக்கு வேளாண்மை, சிறுவணிகம் இவற்றால் ஏற்பட்ட கடன்களும்; எதிர்பாராத வகையில் ஏற்பட்ட நோய்-அதற்கு வைத்தியச் செலவும், அத்துடன் மதுக்குடி, இவற் றுடன் கூட, நிரந்தரக் கடன் தொல்லையும் வறுமை யும் இவரை நிலைகுலையச் செய்தன.

கி. செயராமன் என்பவரின் ஒரே குடும்பத்தில் மட்டும்-22 ஆண்டுகளில் 6 உயிர்கள் தற்கொலைக்கு ஆளாவானேன் என்பது, வேகாக் கொல்லை மக்க ளாலும், தமிழகச் சமூக இயல் ஆய்வாளர்களாலும், அரசினராலும் சிந்திக்கப்பட வேண்டிய ஒரு செய்தி யாகும்.

வேகாக் கொல்லை ஒரு வளமான ஊர். அங்கு வன்னியர், ஆதித்திராவிடர் அதிகம் பேர் உள்ளனர். வண்ணார், மருத்துவர், கோமுட்டி எனத் தொழில் பிரிவினர் சிலர் உள்ளனர். அவ்வூரில் கல்வி வளர்ச்சி பெரிய அளவில் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்தியாவில், கடந்த 15 ஆண்டுகளில் 2.57 இலட்சம் பேர் வேளாண் கடன் தொல்லையால் மாண்டிருக் கிறார்கள்.

வேகாக் கொல்லை தற்கொலை - சொந்த வேளாண் நிலம் இன்மையாலும்; கடன் தொல்லையாலும் அந்தக் குடும்பத்தாரின் இயல்பான அச்ச உணர்வாலும் ஏற்பட்டதே ஆகும்.

Pin It