அரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தில் மானே சரில் 200 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள மாருதி சுசுகி மகிழுந்துச் தொழிற்சாலையில் கடந்த சூலை 21ஆம் நாள் கதவடைப்புச் செய்யப்பட்டது. அது ஒரு மாதம் கழித்து - ஆகசுட்டு 21 அன்று மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.

3000 தொழிலாளர்கள் வேலை செய்த - ஒரு நாளைக்கு 1500 மகிழுந்துகள் இரண்டு ஷிப்டுகளில் உற்பத்தி செய்த மாருதி சுசுகி தொழிற்சாலையில் 21.8.2012 அன்று 300 தொழிலாளர்களைக் கொண்டு ஒரு ஷிப்டு மட்டும் இயக்கி 150 மகிழுந்துகள் மட்டும் உற்பத்தி செய்யத் தொடங்கி இருக்கிறது.

மாருதி சுசுகி தொழிற்சாலையில் மொத்தம் 3300 தொழிலாளர்கள் வேலை செய்தனர். இவர்களில் 1600 பேர் நிலையான தொழிலாளர்கள். மற்றவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள். இவர்கள் தவிர்த்து மேற்பார்வையாளர்கள், மேலாளர்கள் என 700 பேர் வேலை செய்கின்றனர். இப்போது மாருதி நிருவாகம் நிலையான தொழிலாளர்கள் 500 பேரை வேலை யிலிருந்து நீக்கிவிட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீது கொடிய குற்றவியல் பிரிவுகளின் கீழ் வழக்குகள் போட்டுள்ளது. மாருதி நிறுவனம் போர்க்கோலம் பூண்டு தொழிலாளர்களை இவ்வளவு கடுமையாக ஒடுக்குவதும், தண்டிப்பதும் ஏன்?

18.7.2012 அன்று காலை 8.30 மணிக்கு மாருதி தொழிற்சாலையில் ஜியாலால் என்ற தலித் தொழி லாளியைச் சங்ராம்குமார் என்ற மேற்பார்வையாளர் அவருடைய சாதியின் பெயரைச் சொல்லித் திட்டினார். இதையடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாய்ச் சண்டையும் கைகலப்பும் நடந்தது. அந்த மேற்பார்வையாளர் மாருதி நிர்வாகத் திடம் ஜியாலால் குறித்துப் புகார் தெரிவித்தார். ஜியாலாலும் தொழிற்சங்கத்தில் தன் சாதியைச் சொல்லிச் சங்ராம் குமார் இழிவுபடுத்தியதாகத் தெரிவித்தார்.

மாருதி நிருவாகம் ஜியாலாலை அழைத்து என்ன நடந்தது என்று விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அல்லது தொழிற்சங்கப் பொறுப்பாளர்களுடன் இது குறித்துப் பேசியிருக்க வேண்டும். ஆனால் இவ்வாறு செய்யாமல் ஜியாலாலைப் பணியிலிருந்து இடை நீக்கம் செய்வதாக அதிரடியாக அறிவித்தது. இந்த அநீதியை அறிந்து தொழிலாளர்கள் கொதிப்படைந் தனர். எனவே தொழிற்சங்கத்தின் பொறுப்பாளர்கள் மாருதி நிருவாக அதிகாரிகளைச் சந்தித்தனர். நடவடிக் கை எடுப்பதானால் மேற்பார்வையாளர், தொழிலாளி இருவர் மீதும் எடுக்க வேண்டும். இல்லாவிடில் ஜியாலாலின் பணி இடைநீக்க ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அதிகாரிகள் பணிஇடைநீக்கத்தை விலக்கிக் கொள்ள இசைந்தனர். ஆனால், தம் மேலதிகாரிகளுடன் தொலைப்பேசியில் பேசிய பிறகு தம் முடிவிலிருந்து பின்வாங்கினர். இச் செய்தியை அறிந்த தொழிலாளர்கள் பொறுமையிழந் தனர். அந்நிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டி ருந்த தொழிற்சங்கத் தலைவர்களை மாருதி நிறு வனத்தின் அடியாட்கள் கடுமையாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதனால் தொழிலாளர்கள் தங்கள் கையில் கிடைத்த பொருள்களை எடுத்து தொழிற் சாலையின் இயந்திரங்களைத் தாக்கினர். மேலதிகாரி களையும் அடித்தனர். இந்தக் கலவரத்தில் மூண்ட தீயில் மாருதி சுசுகி ஆலையின் மனிதவளத்துறைப் பொது மேலாளர் அவனிஷ் குமார் காலில்பட்ட காயம் காரணமாகத் தப்பிக்க முடியாமல் தீயில் சிக்கி மாண்டார். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 35 பேர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மேலாளர்கள் என்று மாருதி நிருவாகம் கூறியது.

தொழிலாளர்கள் திட்டமிட்டே மேலாளர் அவனிஷ் குமாரைக் கொலை செய்தனர்; மேலதிகாரிகளையும், தொழிற்சாலையின் இயந்திரங்களையும் தாக்கினர் என்று மாருதி நிருவாகம் அளித்த அறிக்கையை ஊடகங்கள் அப்படியே வெளியிட்டன. தொழிலாளர் களின் கொலைவெறிச் செயலால் அயல்நாடுகளி லிருந்து மூலதனம் வருவது தடைப்படும் என்று பெருமுதலாளிகளின் - வணிகர்களின் அமைப்பான அசோசேம் ஒப்பாரி வைத்தது. ஆயினும் அடுத்த சில நாள்களில் - குறிப்பாக ஆங்கிலச் செய்தி ஏடுகளில் மாருதி நிருவாகத்தின் புறக்கணிப்பாலும், அடக்கு முறைகளாலும் தொழிலாளர்களிடம் கனன்று கொண்டி ருந்த மனக்குமுறல், சூலை 18 அன்று வெடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது எப்படி என்பது குறித்து விரிவான செய்திகள் வெளிவந்தன.

சுசுகி சப்பான் நாட்டின் பன்னாட்டு நிறுவனம். அதன் மொத்த மகிழுந்து உற்பத்தியில் 48 விழுக்காடு இந்தியாவின் மாருதி சுசுகி ஆலையில் நடைபெறு கிறது. சொகுசு வகை மகிழுந்துகளான சுவிப்ட், டிசைனர், ஏ-ஸ்டார், செடான் ஆகியவை மானேசர் ஆலையில் தயாரிக்கப்படுகின்றன. அரியானாவில் உள்ள குர்கான் - மானேசர் - பவால் பகுதிகளில்தான் இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியில் 60 விழுக்காடு நடைபெறுகிறது. இந்திய அளவில் ஆண்டிற்கு 30 இலட்சம் மகிழுந்துகள் தயாரிக்கப்படு கின்றன.

இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி. இதில் 3இல் 1 பகுதியினராக உள்ள 40 கோடி மக்கள் உயர் வருவாய்ப் பிரிவினராக உள்ளனர். இவர்களுக்கான நவீன நுகர்வுப் பொருள்களைத் தயாரிப்பதைக் குறிவைத்தே அயல்நாட்டு மூலதனங்கள் இந்தியாவுக் குள் குவிகின்றன. இதுவே நாட்டின் வளர்ச்சிக்கு ஊற்றுக்கண் என்று நடுவண் அரசும் மாநில அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பலவகையான சலுகைகளையும் நிலங்களையும் அளித்து வருகின்றன. எனவே மகிழுந்து உள்ளிட்ட பல்வேறு ஊர்திகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் பெருகியுள்ளன. 2004-05இல் 85 இலட்சமாக இருந்த வாகன உற்பத்தி, 2011-12இல் 204 இலட்சமாக உயர்ந்திருக்கிறது.

ஆனால் இதுபோன்ற பன்னாட்டு நிறுவனங்களில் - இந்தியப் பெருமுதலாளிகளின் தொழில் நிறுவனங் களில் - ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர் களின் வருவாயும் வாழ்நிலையும் சீரழிந்து வரு கின்றன. தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படு கின்றன. அரசுகளும் காவல்துறையும், முதலாளிய நிறுவனங்களும் கூட்டாகத் தொழிலாளர்கள் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன.

1973-74ஆம் ஆண்டில் மூன்று இலட்சம் வேலை நிறுத்தங்கள் நடந்தன. 2010ஆம் ஆண்டில் 429 வேலை நிறுத்தங்கள் மட்டுமே நடந்தன. பெருமுதலாளிகளின் கருணையால் தொழிலாளர் களின் குறைகள் அனைத்தும் நீங்கி, அவர்கள் இன்பவாழ்வில் தோய்ந்திருப்பதன் அறிகுறியா இது? தாராளமயம், தனியார்மயம், உலக மயம் என்ற பெயரில் அரசுகளும் பெருமுதலாளிகளும் தொழி லாளர் வர்க்கத்தை எந்த அளவுக்கு அடக்கி அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கின்றனர் என்பதன் அடையாளம் அல்லவா இது!

1981-1995க்கு இடைப்பட்ட 15 ஆண்டுகள் காலத்தில் தொழிலாளர்களின் ஊதியம் பணவீக் கத்தின் உயர்வுக்குச் சரி செய்யப்பட்ட (Inflation -

adjusted wages) பின்னரும் 40 விழுக்காடு உயர்ந்திருந்தது. ஆனால் அடுத்த 15 ஆண்டு களில் (1995-2010) இந்த அளவுகோலின்படி இதற்கு நேர் எதிரான போக்கில் தொழி லாளர்களின் ஊதியம் தலைகீழாக 15 விழுக்காடு குறைந்துள்ளது (பொருளாதார வல்லுநர் சி.பி. சந்திரசேகர்).

இதை வேறுவகையில் கூறுவதாயின், 1981-95 களில் உற்பத்தி செய்யப்பட்ட பொருளின் மதிப்பில் தொழிலாளர்களின் ஊதியம் 30.3 விழுக்காடாக இருந்தது. கடந்த 15 ஆண்டுகளில் இது 11.6 விழுக்காடாகக் குறைந் துள்ளது. அதேசமயம், நிறுவனங்களின் இலாபம் 56.2 விழுக்காட்டிலிருந்து 140 விழுக்காடாக அதிகரித்துள்ளது (ஃபிரண்ட்லைன், 24.8.2012).

இந்நிறுவனங்களின் நிகர இலாபம் எப்படி திடீரென இவ்வளவு உயர்ந்தது? தொழிலாளர்களுக்கு முறைப் படித் தரவேண்டிய ஊதியத்தைக் களவாடியதுதான் முதல் காரணம். இதைத்தான் மார்க்சு மிகை மதிப்பின் குவிப்பே திருட்டே? மூலதனம் என்றார். நிலையான தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை யை உயர்த்தியது மற்றொரு வகையான கள்ளத் தனம். 2000ஆம் ஆண்டில் 38 விழுக்காடாக இருந்த தற்காலிக - ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிலை யான தொழிலாளர்களுக்கு அளிக்கும் சம்பளத்தில் பாதி கூடத் தரப்படுவதில்லை. மருத்துவ உதவி, தொழிலாளர் நலச் சேமிப்புப் போன்ற செலவுகளைச் செய்ய வேண்டியதில்லை.

கடந்த அய்ந்து ஆண்டுகளில் மாருதித் தொழி லாளர்களின் ஊதியம் 5 விழுக்காடு மட்டுமே உயர்ந்துள்ளது. இதே காலத்தில் நுகர்வோர் குறியீட்டு எண் 50 விழுக்காடாக உயர்ந்துள்ளது. (EPW. 11.8.12) தொழிலாளர்களின் உண்மை ஊதியமும் வாழ்க் கைத் தரமும் எந்த அளவுக்கு வீழ்ச்சியடைந் திருக்கிறது என்பதை இதன் மூலம் நன்கு உணர லாம். அதேசமயம் கடந்த பத்து ஆண்டுகளில் மாருதியின் ஓராண்டின் மொத்த வருவாய் ரூ.900 கோடியிலிருந்து ரூ.36000 கோடியாக அதிகரித்துள்ளது. மாருதி நிறுவனமே அறிவித் துள்ள கணக்கின்படி, இதேகாலத்தில் வரி விதிப் புக்குப் பிந்தைய நிகர இலாபம் ரூ.105 கோடியி லிருந்து ரூ.2289 கோடியாக (2200 விழுக் காடு) உயர்ந்துள்ளது. 2007ஆம் ஆண்டில் மாருதி சுசுகியின் மேலாண்மை இயக்குநர் பெற்ற ஆண்டு வருவாய் ரூ.47.3 இலட்சம். 2010-11இல் இவரது ஊதியம் 2.45 கோடி. அதாவது 419 விழுக்காடு உயர்வு.

மாருதி சுசுகி ஆலையில் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தின் வேகத்திற்கு ஏற்பத் தொழிலாளர்களின் உழைப்பு கசக்கிப் பிழியப்பட்டதே கடந்த பத்து ஆண்டுகளில் இதன் இலாபம் 22 மடங்கு உயர்ந் ததற்கு முதன்மையான காரணமாகும். 50 நொடிக் குள் ஒரு மகிழுந்து தயாராவிட வேண்டும். எனவே ஒவ்வொரு தொழிலாளரும் அப்படி இப்படிக்கூடப் பார்க்க முடியாத அளவுக்குக் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். வார விடுமுறை நாள் தவிர ஓராண்டிற்கு ஒன்பது நாள்கள் மட்டுமே தொழிலா ளர்கள் விடுமுறை எடுக்க முடியும். இதற்குமேல் ஒரு நாள் விடுப்பு எடுத்தால், ரூ.1500 சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். இதைப்போலவே வேலைக்கு ஒரு நிமிடம் காலம் கடந்து வந்தால் அரை நாள் சம்பளம் வெட்டு. சம்பளம் இல்லை என்பதால் அந்த அரைநாள் சும்மா இருக்க முடியாது. முழு நாளும் வேலை செய்தாக வேண்டும். உணவு இடைவேளை 30 நிமிடம். கழிப்பறைக்குச் செல்ல 7.5 நிமிடம். கழிப்பறையும் கேண்டீனும் அரை கி.மீ. தொலைவில் உள்ளன. எல்லா இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள். இவ்வாறாக மார்க்சு குறிப்பிட்டுள்ளது போல், தொழிலாளர்கள் உணர்ச்சியற்ற சடப்பொரு ளாக - நடமாடும் பிண்டங்களாக - இயந்திரத்தின் துணை உறுப்பாக ஆக்கப்பட்டுவிட்டார்கள்.

மாருதி நிறுவனத்தின் கட்டுப்பாடு சுசுகியின் முழுக் கட்டுப்பாட்டுக்கு வந்தபின், ‘மாருதி உத்யோக் கம்கார் யூனியன்’-மாருதி நிறுவனத் தொழிலாளர் சங்கம் என்ற கைக்கூலிச் சங்கத்தைச் சுசுகி நிருவாகம் 2001-இல் உருவாக்கியது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இச்சங்கத்தில் தேர்தலே நடத்தப்படவில்லை.

18.7.2012 அன்று மாருதி சுசுகி மகிழுந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில், பொது மேலாளர் அவனிஷ் குமார் தீயில் சிக்கி மாண்டதைத் தொழிலாளர்களின் திட்டமிட்ட கொலையேயாகும் என்று மாருதி நிறுவனம் கூறியது. தினமணி நாளேடு போன்ற சிலவும் ‘எரித்துக் கொலை செய்யப்பட்டார்’ என்றே எழுதின. மேலாளரின் இறப்பு, தொழிலாளர் களையும் அதிர்ச்சியடையச் செய்தது என்பதே உண்மை என்று நேரில் சென்று ஆய்வு செய்த ஊடகவியலாளர்கள் பலரும் கூறுகின்றனர். மேலதி காரியைக் கொன்றால் அதன் விளைவு எவ்வளவு கொடியதாக இருக்கும் என்பதைத் தொழிலாளர்களும் அறிவார்கள். இப்போது காவல்துறை நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கைது செய்துள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் நிலையான தொழிலாளர்கள் 500 பேரையும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 500 பேரையும் பணிநீக்கம் செய்துள்ளது.

தொழிலாளர்கள் அறவழியில் அமைதியான முறையில் போராட வேண்டும் என்று சில ஏடுகள் அறிவுரை கூறியுள்ளன. ஆனால் இந்த ஏடுகள் பெருமுதலாளிய நிறுவனங்களும், காவல்துறையும், தொழிலாளர் நலத் துறையும், அரசும் கூட்டாகச் சேர்ந்து தொழிலாளர்களின் உரிமைகளை ஒடுக்குவது பற்றியோ, வாழ்வாதாரங்களை நசுக்குவது பற்றியோ வாய்திறப்பதில்லை.

பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இந்தியாவில் 5 கோடி தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்தியாவில் 18 முதல் 60 அகவை வரையிலான உழைக்கும் ஆற்றல் உடைய மக்களில் (Work force) இவர்கள் 11 விழுக்காடு மட்டுமே ஆவர். ஆனால் தனியார்மயம் தாராளமயத்தின் பேரால் இவர்கள் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டு வருவது பற்றி ‘அகிம்சையை உபதேசிப்போர்’ வாய்மூடி இருப்பது ஏன்?

வாகன உற்பத்தியில் 60 விழுக்காடு நடைபெறும் குர்கான், மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரசின் ‘ஆசீர்வாதத்துடன்’ காவல்துறையும், முத லாளிய நிறுவனங்களின் அடியாள்களும், வெளியார் குண்டர் படையும் உரிமைக்குப் போராட முன்வரும் தொழிலாளர்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி வருகின்றனர். 2005ஆம் ஆண்டு குர்கானில் ஹோண்டா மோட்டர் தொழிற்சாலையில் தொழிற்சங்க உரிமைக்காகப் போராடிய தொழிலாளர்களை - தொழிற்சாலையில் குருதி வெள்ளம் பாய்ந்தோடும் அளவுக்குத் தாக்கினர். ஆனால் இன்றும் 63 தொழி லாளர்கள் மீது கொலைக் குற்ற வழக்கு உள்ளது. தாக்கிய காவல்துறையினர் மீதோ, நிருவாகத்தினர் மீதோ ஒரு வழக்கும் போடப்படவில்லை. நீதித் துறையும் இக்கொடுமைகளுக்குத் துணைபோகிறது.

கைக்கூலித் தொழிற்சங்கத்திற்கு மாற்றாகத் தங்கள் உரிமைகளைப் பாதுகாத்திடத் தனியாகத் தொழிற்சங்கம் அமைப்பதற்காக 2011ஆம் ஆண்டு கோடையில் மாருதித் தொழிலாளர்கள் நான்கு மாதங்கள் பல்வேறு வகையான போராட்டங்களை அமைதியான முறையில் நடத்தினார்கள். மாருதி நிருவாகம் 33 நாள்கள் ஆலையைக் கதவடைப்புச் செய்தது. தொழிலாளர்களின் உறுதியான போராட் டத்தின் விளைவாகப் புதிய சங்கம் அமைக்கப்பட்டது. முறைப்படி தேர்தல் நடந்தது. ஆனால் தொழிற்சங்கப் பொறுப்பாளர்களை மாருதி நிருவாகம் துரும்பாகக் கூட மதிக்கவில்லை. மேலும் நிலையான தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காகவும் - ‘ஒரே பணிக்கு ஓரே ஊதியம்’ என்ற கோட்பாட்டின் படிப் போராடினர். இவ்வாறாகக் கடந்த ஓராண்டாக மாருதி தொழிலாளர்களிடையே நிருவாகத்தின் போக்கால் ஏற்பட்ட மனக்குமுறல் சூலை 18 அன்று வெடித்தது.

முதலாளிகளின் நலன்களைப் பேணுவதற்காக என்று மட்டுமே இந்த அரசும், ஆட்சி நிருவாகமும், காவல்துறையும் செயல்படுகின்ற இப்போதைய போக்கு இப்படியே நீடித்தால், சூலை 18 அன்று மானேசரில் தொழிலாளர்கள் நடத்திய தாக்குதல்களும் நீடிக்கும். ஆளும் வர்க்கம் இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்வது அதற்கும் மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது.