இன்று தந்தைப் பெரியாரை எல்லோரும் போற்றுகிறார்கள். இன்றைக்கு சுமார் 65, 70 ஆண்டுகளுக்கு முன் அவர் பெயர் சொல்லவே பயப்பட்டார்கள். பாபம் என்று கருதினார்கள். அவர் பெயரை சொன்னாலே இடையூறு வந்துவிடுமோ என்று அஞ்சினார்கள்.

ஆனால், அதே 65, 70 ஆண்டுகளுக்கு முன் “என் தலைவர் பெரியார்” என்று துணிந்து சொன்ன ஒரே நடிகர் நடிகவேள் எம்.ஆர்.இராதா தான். மற்ற நடிகர்கள் சிலர் பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்களே என்று கேட்டால் - அவர்கள் பெயரளவுக்கு இலைமறை காயாகப் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் பெரியாரைச் சொல்கிறார்களா அல்லது வேறு யாரையாவது சொல்கிறார்களா என்று புரியாமல் இருக்கும்படி நடந்து கொண்டார்களே தவிர எம்.ஆர்.இராதாவைப் போல், அவர் மறையும் வரையில், “பெரியாரே என் தலைவர்” என்று வேறு யாரும் வெளிப்படையாக உறுதியாகச் சொன்னதில்லை.

இதற்கோர் எடுத்துக்காட்டைக் கூற வேண்டுமேயானால் நவம்பர் 2007 “கருஞ்சட்டைத் தமிழர்” என்ற இதழில் வந்த கட்டுரையைப் படித்தால் புரியும். அந்தக் கட்டுரையில் உள்ள செய்தியில் முதன்மையானது.

“பெரியாரின் வாளாகத் தன் காலம் முழுதும் சுழன்று கொண்டே இருந்தார் நடிகவேள். அதிகமாக எடுத்துக்கொண்டதில் கொஞ்சமாகத் திருப்பித் தந்து தங்களைத் தருமப் பிரபுக்களாகக் காட்டிக் கொண்டவர்கள் ஏராளம். கருத்துகளை மட்டுமல்ல பணத்தையும் வாரி வழங்கியிருக்கிறார்கள் கலைவாணரும், நடிகவேளும். கலைவாணர் என்.எஸ்.கே. தன் சம்பாத்தியத்தின் பெரும்பகுதியைத் திராவிட இயக்கத்துக்குத் தந்திருக்கிறார். நடிகவேள் எம்.ஆர். இராதாவோ தான் சம்பாத்தியத்தைக் கழகத்திற்குத் தான் தந்திருக்கிறார்.

கலைவாணருக்குப் பெரியாரிடம் பிடித்துக் கருத்துகள் ஏராளம் உண்டு. நடிகவேளுக்கோ பெரியாரிடம் பிடிக்காத கருத்துகளே கிடையாது. கலைவாணர் பெரியார் கருத்துகளின் தீவிர ஆதரவாளராக இருந்தார். நடிகவேளோ பெரியாரின் தொண்டராகவே இருந்தார். ஆம். கலைவாணர் தந்தை பெரியாரின் கழுத்தை அலங்கரித்த பூமாலையாக இருந்தார். நடிகவேள் அநீதிகளுக்கு எதிராகத் தந்தை பெரியார் உயர்த்திய கரத்தின் போர்வாளாக ஒளிர்ந்தார்.

இப்படிப்பட்ட இராதா சாதித்த சாதனைகள் ஏராளம். அத்தனை சாதனைகளும் எத்தனையோ கடுமையான எதிர்ப்புகளையும் சந்தித்து அவற்றைத் தூள் தூளாகக்கித் தான் வெற்றி கண்டாரே தவிர, மிகமிக எளிதாகக் கொள்கைக்கு மாறாகவோ, கொள்கையை நழுவவிட்டோ வெற்றி காணவில்லை. தந்தை பெரியாருக்கு எவ்வளவு எதிர்ப்பு இருந்ததோ அவ்வளவு எதிர்ப்பு இராதாவுக்கும் இருந்தது. அவற்றைக் கண்டு அவர் கொஞ்சமும் அச்சப்படவில்லை, அயரவில்லை, ஆயாசப்படவில்லை. ஆனால், அது மக்கள் எதிர்ப்பானாலும், ஆட்சியாளர் எதிர்ப்பானாலும் எதற்கும் அஞ்சி நடுங்கி அடங்கி ஒடுங்கிடவில்லை. அடிக்கடி அரசு அவரது நாடகங்களுக்கு 144 தடை விதித்தது. அதற்காக அவர் கலங்கவில்லை. அவருக்காகவே சட்டப் பேரவையில் பல நாள் விவாதித்து நாடகத் தடை சட்டம் என்றொரு சட்டம் கொண்டு வந்தனர். அதற்கும் கவலைப்படாமல் இந்தத் தடைச்சட்டங்களை உடைத்தெறிவேன் என்று கூறி அதில் வெற்றி கண்டார்.

அப்படி உறுதியாக இருந்ததனாலே தந்தை பெரியார் நடிகவேள் இராதா மன்றம் அமைத்தார். அதற்காகவே கருமவீரர் காமராசர் இராதாவுக்கு புனித ஆடை போர்த்தும் விழா எடுத்தார். மறைந்த குன்றக்குடி அடிகளார் ‘கலைத் தென்றல்’ என்ற விருது வழங்கினார்.

இப்படியெல்லாம் பாராட்டப்பட்டதற்கு அரசியல் மட்டும் காரணமா என்றால் இல்லை. அவரது ஒப்பற்ற நடிப்பாற்றலும், யாராலும் பின்பற்றமுடியாத நடிப்பாற்றலும்தான் காரணமாகும். தொடக்கக் காலங்களில் வசனத்துக்கு முக்கியத்துவம் தராமல் தன் நடிப்புக்கு முதன்மை கொடுத்தே நடித்து வந்தார். யாரும் செய்யாத புதுமையாகப் ‘பதிபக்தி’ என்ற நாடகத்தில் முன்பாதி கதாநாயகன் இராச சேகராகவும், பின்பாதி வில்லன் கங்காதரனாகவும் நடித்துத் தன்னால் கதாநாயகனாகவும் நடிக்க முடியும். வில்லனாகவும் நடிக்க முடியும் என்று மெய்ப்பித்தார். ‘இழந்த காதல்’ என்ற நாடகம் நடிகவேளின் நடிப்புக்காகவே அந்தக் காலத்திலேயே 100 நாட்கள் நல்ல வசூலோடு நடைபெற்றிருக்கிறது. ‘இழந்த காதல்’ நாடகத்தைக் கண்ணுற்ற கலைஞர் இராதாவின் நடிப்பைப் பார்த்து வியந்து முடியும் நடிக்கும் இம் முடிமன்னனிடம் என்று புகழ்ந்துரைத்தார். ‘இரத்தக் கண்ணீர்’ நாடகத்தில் இடி மின்னலில் கண்போகும் காட்சி இருக்கிறதே. அப்பப்பா! அவரது அவயவங்கள் ஒவ்வொன்றும் நடிக்கும். இந்தக் காட்சியை வியந்து பாராட்டாதவர்களே கிடையாது. இந்தக் காட்சியைக் காண்பதற்கென்றே சென்னையில் இரவு 12 மணிக்கு (அதாவது நாடகம் பாதி முடிந்தபின்) எந்தச் சீட்டு இருந்தாலும் கொடுங்கள். கண்போகும் காட்சியைக் காண வேண்டும் என்று கூறிச் சீட்டுப் பெற்று நாடகம் காணச் சென்ற வரிகள் ஏராளம்! ஏராளம்!.

இப்படிப்பட்ட இவரது நடிப்பைப் பற்றிக் கூறும்போது அண்ணா அவர்கள் பால்முனியை ஒப்பிட்டுப் பேசுவார். தொடக்கக் காலத்தில் நடிக்கையில் இவரது நாடகத்தைக் கண்ட போர்ப்படையினர் ‘தி லயன் ஆப் தி ஸ்டேஜ்,’ ‘ தி இண்டியன் டக்ளஸ்’ எனக் கூறி வியந்தார்கள்.

நாடகத்தில் மட்டுமன்று, அவரது சிறு வயதில் நடித்த ஒரு திரைப்படம் மாடர்ன் தியேட்டர். சார் தயாரித்த ‘சத்தியவாணி’ அந்தப் படத்தைப்பற்றி இயக்குநர் பி.ஏ.குமார் என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். அவர் (இராதா) நினைத்த மாத்திரத்தில் எத்தனையோ விதமான சலனங்களை மனத்தில் உண்டாக்கிச் சலனங்களின் விளைவுகளை முகத்திலும் ஏனைய பாவங்களிலும் காட்டிவிடுவார். உள்ளத்தின் சலனங்கள் தாம் முகத்தின் பாவங்கள். உள்ளத்தின் வெகு ஆழத்தில் புதைந்து கிடக்கும் உணர்ச்சிகளை முகத்தில் வெளிப்படுத்தி அந்தப் பாத்திரமாகவே மாறிவிடும் உண்மையான நடிப்பு அந்த ஒருவரிடம் ஏராளம்! ஏராளம்! என்பதை நான் உணர்ந்தது இன்று நேற்றல்ல.

அவரது நடிப்பிற்கு மற்றுமோர் நிகழ்ச்சி மிகவும் நகைச்சுவையானது ‘ஜீவபூமி’ என்ற படத்தில் இருபது பெண்களுக்கு மத்தியில் ‘ஜெய்மல்’ என்ற வேடத்தில், தளபதியைப் பார்த்து, “தளபதி ஆடல் பாடல்களுக்கு ஏற்பாடு செய்து விட்டாயா?” என்று அதட்டும் குரலில் கேட்கவே தளபதியாக நடித்தவர் தான் பேச வேண்டிய வசனத்தை மறந்து விட்டு நடுங்கவும் ஆரம்பித்து விட்டார். உடனே இயக்குநர் ‘கட்’ என்றார். தளபதியாக நடித்தவர் யார் தெரியுமா? பிரபல ஸ்டண்ட மாஸ்டர் ஸ்டண்ட் சோமு. அவர், “இராதாண்ணே முகத்தைப் பார்த்தும் வசனம் மறந்து விட்டது, என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்று சொன்னதும், டைரக்டர் ஏ.பி.நாகராஜன், தயாரிப்பாளர் ஸ்ரீராம், மற்றும் அனைவரும் கொல்லென்று சிரித்து விட்டனர். எத்தனையோ கதாநாயகர்களுக்கு சண்டை சொல்லித் தந்து வில்லன்களைத் தோற்கடிக்கச் செய்யும் ஸ்டண்ட் சோமுவே இராதா நடிப்பைக் கண்டு பயந்து விட்டாரே என்று கூறி விடாமல் சிரித்தனர். இத்தனைக்கும் இராதாவின் வீட்டின் அடுத்த வீட்டில் குடியிருப்பவர், தினம் நடிகவேளை சந்திப்பவர் இந்த ஸ்டண்ட் சோமு.

இப்படியெல்லாம் ஒப்பனையாலும், நடிப்பாலும் கொள்கைப்பற்றாலும் திகழ்ந்த இராதாவை டில்லி அரசு அவரது ‘பாகப்பிரிவினை’ வெற்றி விழாவுக்கு அழைக்கவில்லை இதுபற்றி விளக்கம் கூற வேண்டும் என்று கே.டி.கே.தங்கமணி கேள்வி எழுப்பினார்.

இராதாவின் நாடகங்களுக்கு மட்டும் அரசு தடை விதித்தது என்றில்லாமல் அவர் நாடகத்தில் வரும் படுதா (சீன்) பாடல், உரையாடல் முதலியவற்றிக்குக் கூட தடைவிதித்தது.

தீண்டாமை ஒழிப்புக்காக தீண்டத்தகாதவன் என்று கூறினால் சிறைவாசமும் ரூ 1000 அபராதமும் என்று அரசாணை பிறப்பித்தது. இதை ஒரு பார்ப்பனர் ஒருவனை தொடாதே என்று இப்படிப்பட்டத் தடைகளையெல்லாம் சர்வ சாதாரணமாக உடைத்தெறிந்துத், தான் கொண்ட கொள்கையில் கொஞ்சமும் வழுவாது உறுதியுடன் தன் இறுதிக்காலம் வரை வெற்றியுடன் திகழ்ந்தார்.

தந்தை பெரியாருடன் தொடர்பு ஏற்படாத அந்தக் காலத்திலேயே அதாவது இன்றைக்கு 70 ஆண்டுகட்கு முன்பே கடவுளை மறந்து மனிதனை நினைத்துத் தனது நாடக அரங்கில் முன் திரையில் உலகப்படத்தை வரைந்து, உலகப்பாட்டாளி மக்களே, ஒன்று சேருங்கள் என்ற முழக்கத்தையும் வரைந்து தொங்கவிட்டவர் (அந்தக்கால நாடகக்குழுக்கள் அனைத்தும் கடவுள் படங்களை வரைந்த முன் திரையில் தொங்கவிட்டிருப்பார்கள்)

இப்படி நாளெல்லாம் அந்தக் காலத்திலிருந்து புரட்சி மனப்பான்மையுடன் செயல் பட்டுவந்த நடிகவேள் எம்.ஆர். இராதாவைச் சிலர் - முரடர் - அச்சமூட்டுபவர்-அடங்காதவர்-ஆர்ப்பாட்டக்காரர் என்றெல்லாம் எண்ணுகின்றனர். ஆனால் அவர் ஒரு சிறந்த தந்தை பெரியாரைத் தலைவராகக் கொண்டவரல்லரோ! அவர் முரடரல்லர்! மென்மையான உள்ளம் கொண்டவர். பலாப்பழம்போல என்பதை அவரை நன்கு புரிந்தவர்கள் உணர்வார்கள்.

பலாப்பழம் என்று இராதாவை ஒப்பிட்டுக் கூறியவர் தஞ்சையில் புகழ்பெற்ற வைர வணிகராகத் திகழ்ந்தவர் இராசமாணிக்கம் (செட்டியார்). அவர் இறுதிக் காலத்தில் நொடித்துப் போய்விட்டார். அவர் இராதாவிடம் செல்வார். அப்போதெல்லாம் அவர் கேட்காமலே இராதா பண உதவி செய்வார். எந்த இராசமாணிக்கம் (செட்டியார்) வளமாக இருந்தபோது இராதாவை ‘மொட்ட பசங்க’ என்று திட்டினாரோ அந்த இராசமாணிக்கம் (செட்டியார்) தான் அவரைப் பலாப்பழம் என்றார். பலாப்பழம் முட்கள் நிறைந்திருப்பது போலத் தோன்றினாலும் பலாச்சுளை மிகுந்த சுவையுடையது. அதுபோல இராதா பார்க்க முரடராயிருப்பினும் அவரது உள்ளம் அப்படிப்பட்டது என்று கூறுவார்.

ஒருநாள் விழுப்புரத்திற்கு நவாப் இராசமாணிக்கம் (பின்ளை) நாடகத்துக்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார். அப்போது அங்கே ‘சாந்தி நாடக சபா’ குழுவினர் மிகவும் வறுமையில் உணவுக்குக்கூட வழியின்றி வாழ்கிறோம் என்று சொன்னவுடன் சுமார் 60 பேருக்கு மேல் உள்ள அந்தக்குழுவை அழைத்து வந்து தனது குழுவுடன் இணைத்துக்கொண்டார் என்ற செய்தி அவரது பெரிய மனத்தை வெளிப்படுத்துகிறது அல்லவா!

ஒருவர் தன்னிடம் உதவி கேட்க வருகிறார் என்று உணர்ந்தவுடன் உடனே குறிப்பறிந்து உதவுவதில் தயங்காதவர்.

Pin It