பாகவதர் நூற்றாண்டு 

நினைப்புக்கு எட்டாக் காலந்தொட்டே இசை, மக்கள் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து கொண்டு வருகிறது. நுண்கலைகளாக எண்ணப்படும் ஆடல், நாடகம் போன்றவற்றில் பெரும் பங்காற்றிய இசை பின்னாளில் திரைப்படங்களில் தனக்கெனத் தனியிடத்தை நிலைநிறுத்திக் கொண்டது. தென்னிந்தியக் கலை, பண்பாடுகளின் மரபு வளப்பமிக்கது. “சோழநாடு சோறுடைத்து” என்று சொல்லிப் புகழப் பெற்ற தஞ்சை வளநாடு நெல் விளைச்சலில் மட்டும் அல்லாது ஆடல், பாடல் கலை களிலும் தலைசிறந்தது, மயிலாடுதுறையும் (மாயூரம்) தஞ்சாவூரும் தலைசிறந்த இசைப் பேரறிஞர்களை உருவாக்கியதுடன் அமையாது, இசைப்பாடல்களை உருவாக்கிய இசை அறிவாளர் குழாத்தின் பிறப்பிடங் களாகவும் அமைந்தன.

thyagaraja_bhagavathar_300முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, சீர்காழி அருணாசலக்கவிராயர் ஆகியோர் தமிழிசை மூவர் - மூலவர் எனப் போற்றப்பெற்றனர், பிறமொழி இசைப்பாடல் ஆசிரியர்கள் தியாகையர், முத்துச்சாமி தீக்கிதர், சாமாசாத்திரி இன்னும் பலரும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தோர் ஆவர். சுருங்கச் சொன் னால் தஞ்சைமாவட்டம் “கலைகளின் தாயகம்” ஆகும். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பாபநாசம் சிவன் தமிழுக்கு ஆற்றிய பெரும்பங்களிப்பைக் கண்டவர்கள் தமிழ்த் தியாகையர் எனப் புகழ்ந்து போற்றினர். இவருடைய இசைத் தொண்டை நினைவு கூரும் வண்ணம் சென்னை மயிலைச் சேந்தோம் பகுதியில் உள்ள ஒரு தெருவிற்குப் “பாபநாசம் சிவன் தெரு” எனப் பெயர் சூட்டி உள்ளது நினைவு கொள்ளத்தக்கது.

இன்றைய மயிலாடுதுறையில் (அன்றைய மயூரம் மாயவரம்) 1910 மார்ச்சுத் திங்கள் முதல் நாளில் பிறந்தார் தியாகராசர் (பாகவதர்). தந்தையார் கிருட்டினமூர்த்தி பொற்கொல்லர் தொழில் செய்தாலும் வளமாக வாழவில்லை. வந்த வருமானம் கைக்கும் வாய்க்குமே வகை செய்தது, தாயார் மாணிக்கத்தம்மாள் தஞ்சையைச் சேர்ந்தவர். தந்தையார் தம் குடும்பத்தைத் திருச்சிக்கு மாற்றி அங்கேயே இறுதிவரை வாழ்ந்தார். ம.கி. தியாகராசனுக்குப் படிப்பில் நாட்டமில்லை. மாறாக பாடல்கள் கேட்பதிலும் பாடுவதிலுமே கவனத்தைச் செலுத்தினான். குழந்தைப் பருவத்தில் தேவார, திருவாசகப் பாடல்களும் புகழ்பெற்ற எஸ்.ஜி. கிட்டப்பா பாடிய நாடகப் பாடல்களும் கவர்ந்து இழுத்தன. இசையின் ஈடுபாட்டால் வீட்டில் உள்ளவர் எவரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினான்.

தந்தை கிருட்டினமூர்த்தி தியாகராசனை அங்குமிங்கும் அலைந்து தேடிக் கொண்டிருந்த போது அவருடைய நண்பர் வழியாகத் தியாகராசன் கடப்பாவில் இருப்பதாகவும், அவன் எங்கே, எப்போது கடவுள் பாடல்களைப் பாடினாலும் மக்கள் கூட்டம் அலைமோதியதைக் கண்டு வியந்து மகிழ்ந்ததாகவும் கேட்டறிந்தார், திருச்சிக்குத் தியாகராசனைத் தந்தையார் அழைத்து வந்தார். கோவில்கள், அவைகள் (சபா) ஏற்பாடு செய்த அனைத்து வழிபாட்டு பாடல்களிலும் (பஜன்ஸ்) பங்கேற்றுப் பாடினார்.

இவருடைய இசைத் திறனைச் செவிநுகர் கனியெனச் சுவைத்து வியந் தோர் விளைத்த புகழ் நாடெங்கும் விரைந்து பரவியது. தொடர்வண்டித்துறை (ரெயில்வே) தொழி லாளர் திருவாளர் எஃப்.ஜி. நடேசஐயர் இரசிக ரஞ்சனி சபா எனப் பெயர் கொண்ட நாடகக் குழுவை நிகழ்த்தி வந்தார், அவர் அரிச்சந்திரா நாடகத்தில் லோகிதாசனாக நடிப்பதற்கு ஒரு சிறுவனைத் தேடிக் கொண்டிருந்தார். சிறுவன் தியாகராசனது இசைத் திறனை அறிந்த திரு. நடேசர் தம் நாடகக் குழுவில் தியாராசனைச் சேர்த்துக் கொண்டார். தியாகராசனுக்கு அரிச்சந்திரா முதல் நாடகம். (அந்தக் கால நாடகங்கள் என்றாலே பாடல்களே முதன்மையாகப் பாடப்பட்டன. உரையாடல்களே பாடல் களாக அமைந்திருக்கும். பாடல்கள் எண்ணிக்கை மிகுதியே நாடகத்தைச் சிறப்புக்குரிய தாக்கும். அக் கால நடிகர்கள் அனைவரும் பாடுந் திறன் பெற்றவர்.)

முதல் நாடகமே தியாகராசனுக்குப் பெரு வெற்றியாய் அமைந்ததுடன் ஓர் இரவிலேயே விண்மீனாகப் (நட்சத்திரமாக) புகழ்பெற்று ஒளிர்ந்தார். புகழ்பெற்ற நரப்பிசைக் (வயலின்) கலைஞர் மதுரைப்பொன்னு ஐயங்கார் தானே முன்வந்து மரபுவழித் தமிழ் கருநாடக இசையைக் கற்றுக் கொடுத்தார். கிருட்டினமூர்த்தியது ஏழைமை நிலையைக் கருத்திற் கொண்டு அவர் ஊதியம் எதையும் பெறவில்லை, தியாகராசன் இசையை மிக நேர்மையுணர்வுடன் கற்றுக் கொண்டான். இசையைக் கற்கும் நேரம் தவிர மற்றைய நேரத்தில் நடராச ஆசிரியர் (வாத்தியார்) இடத்தில் நாடகப் பயிற்சி பெற்றான். இசைப்பேரறிஞர் கிட்டப்பாவினால் பாடப் பெற்றுப் புகழடைந்த பாடலான “காயாத கானகத்தே” என்ற பாடலை இயற்றியவர்தாம் இந்த நடராச ஆசிரியர், ஆறு ஆண்டுகள் கடுமையான பயிற்சிக்குப் பின்னர்ப் பெரிய காளியம்மான் கோவிலில் தியாக ராசனது முதல் செவ்விய இசையரங்கு நிகழ்ச்சி ஏற்படுத்த விரும்பினார்.

தட்சிணாமூர்த்தி பிள்ளை தோற்கருவி (கஞ்சிரா) மதுரைப் பொன்னுஐயங்கார் நரப்பிசை (வயலின்) தட்சிணாமூர்த்தி ஆச்சாரி மதங்கம் (மிருதங்கம்) இசைத்தனர். இசைநிகழ்வு மூன்று மணிநேரம் தொடர்ந்தது, மக்கள் அசைவற்றுத் தன்னிலை மறந்து, இசையில் மூழ்கி இருந்தனர், இசைநிகழ்ச்சி முடிந்ததும், “என்வாழ்நாளில் இத்தகு இனிய குரல்வளத்தையும் பண்களை (இராகம்) எடுத்தாண்ட மிகுதிறமையும் தியாகராசனது அகவை ஒத்த மற்ற பிள்ளைகளிடம் கண்டதில்லை” என “அபிநவ நந்திகேசுவரர்” எனப் புகழ்பெற்ற தட்சிணாமூர்த்திப் பிள்ளை உளந்திறந்து பாராட்டினார்”. “முருகக் கடவுளே தமிழிசை உலகுக்கு ஈந்த மிகப்பெரிய கொடை தியாகராசன், “பாகவதர்” எனும் சிறப்புப் பட்டத்தை அளிக்கிறேன்” என்று தியாராசனைச் சிறப்பித்தார் திருவாளர் தட்சிணாமூர்த்திப் பிள்ளை. அன்றுமுதல் திருச்சித் தியாகராசன், “தியாகராச பாகவதர்” என்றழைக்கப் பெற்றார்.

தியாகராச பாகவதர் 1926இல் “பவளக் கொடி” நாடகத்தில் கதைத்தலைவனாக முதன்முதலில் நடித்தார். இவருக்கு இணையாக எஸ்.டி. சுப்புலட்சுமி நடித்தார். இந்த இணை மிக விரைவிலேயே நாடக உலகில் ஒரு வரலாற்றை உருவாக்கியது. இவர் தம் நாடக உரையாடலில் சொற்களை மின்சாரப் பரிமாற்றம் போல் பேசியது இருவரையும் மிக்க புகழ் அடையச் செய்தது, இவ்விருவரையும் எஸ்.ஜி. கிட்டப்பா சுந்தராம்பாள் இணைக்கு நிகராக எண்ணினர், தியாகராச பாகவதர், அவர் காலத்து இசைஞர்களைவிடக் கூடுதலாக ஊதியம் பெற்றார். அவருடைய இனிய இசை தமிழ்நாட்டு மக்கள் நெஞ்சங்களில் அரசோச்சியது என்பதுடன் இலங்கை, மியன்மார் (பருமா) மலேயா, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டுத் தமிழர் நெஞ்சங்களிலும் அரசாண்டது.

பாகவதரது தனித்திறமையை அறிந்த இசைப் பேரறிஞர் எஸ்.ஜி. கிட்டப்பா. செங்கோட்டையில் நிகழ்ந்த வள்ளிதிருமணம் நாடகத்தைப் பார்த்தார். மேடைக்கு வந்த, திரு.கிட்டப்பா பவழம் பதித்த தங்கத் தொடரியைப் (சங்கிலி) பரிசாகத் தந்து கூடியிருந்த மக்களிடையே இந்தப் பெரிய பாடக ருக்குப் பாகவதர் என்று அளிக்கப்பெற்ற பட்டம் குறையிலாப் பொருத்தமுடையதாகும் என்று பாராட்டினார். “திரு. கிட்டப்பாவினது பாராட்டும் பரிசும்அளப்பரிய செல்வாக்கைத் தந்தன” என்று பின்னாளில் பாகதவர் சொன்னார். புகழ்தரு வாழ்வியப் பணியான நாடகமேடை வளமுடையதாக்கியது. சென்னை மாகாணத்துள்ள எல்லா நகரங்களிலிருந்தும் நாடகங்கள் நிகழ்த்துமாறு அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

திரையுலக நுழைவு

பாகவதர், திரையுலகில் தன் இனிய குரலாலும் தோற்றப்பொலிவினாலும், செவ்விய தமிழிசையை இயன்றளவு தெளிவாகவும் எளிமையாகவும் பாடிய தாலும் மக்களிடையே தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றதாலும், திரையுலகில் நிலைத்து நிற்கமுடிந்தது.

1934இல் “பவளக்கொடி நாடகம்” திரைப் படமாக உருவாக்கப்பெற்றது. தொடர்ந்து பத்தாண்டு கள், பேரிலும் புகழிலும் அவருக்கு நிகராகத் திரையுலகில் வேறு ஒருவர் இல்லையென்னும் அளவில் திரைவானில் விண்மீனாகத் திகழ்ந்தார். ஒன்பது படங்களில் நடித்த அளவிலேயே மிகப்பெரும் புகழ்பெற்றவர், தமிழிலோ, பிற இந்திய மொழிகளிலோ அனைத்து நாட்டு மொழிப் படங்களிலோ தியாகராச பாகவதரைப்போல் வேறொருவரைக் காண இயலாது. பாகவதர் அவர் காலத்து நடிகர்களைப்போல் மிகச்சிறந்த நடிப்புத் திறனைப் பெற்றிருக்கவில்லை, மாறாக இசைக்கலையில் மேலோங்கி இருந்தார். அக்கால நடிகர்கள் முதலில் பாடகர்கள். பிறகுதான் நடிகர்கள். எப்படியாயினும் தியாகராச பாகவதர் ஆர்வமிக்க கடவுள் அடியாராகச் சிறப்பாக நடித்தார்.

பாகவதரின் இறவாநிலை இன்னிசைப் பாடல்கள்

பாகவதர் , நவீன சாரங்கதாரா திரைப் படத்தில் நடித்துப் பாடிய “சிவபெருமான் கிருபை வேண்டும்” என்னும் பாடலே இசைத்தட்டில் பதிந்து வெளிவந்த முதல் பாடலாகும், தமிழ் (கருநாடக) இசையில் மிக அரிய பண்ணாக மதிக்கப்பெற்ற சாருகேசிப் பண்ணைப் (இராகத்தைப்) பொதுமக்களிடையே பரப்பிய தகுதிக்கு உரியவர் தியாகராசபாகவதர். இச்செய லுக்குக் கருநாடக இசையுலகு பாகவதர்க்கு கடமைப் பட்டிருக்கிறது. சாருமேசிப் பண்ணில் அமைந்த மன்மதலீலை என்னும் பாடலைப் பாகவதர் பாடிய பிறகுதான் அந்தப் பண் பலருக்குத்தெரிந்தது.

தெலுங்கு இசைப்பாடல் ஆசிரியர் தியாகையர் ஒரே ஒரு பாடலைத்தான் சாருகேசிப் பண்ணில் இயற்றி யுள்ளார் என்பது பலருக்குத் தெரியாத செய்தியாகும். பாகவதர் சாருகேசிப் பண்ணைப் பாடிய பின்னரே திரைப்பாடல்கள் சாருகேசிப் பண்ணில் எழுதப் பெற்றன. அப்பண்ணில் எழுதப்பெற்றுப் புகழுற்ற பாடல்களில், டி.எம். சௌந்தரராசன் பாடிய “வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே” என்ற பாடலும் எம்.எல். வசந்தகுமாரி பாடிய “ஆடல் காaரோ” என்ற பாடலும் குறிப்பிடத்தக்கன. பாகவதர் தம் இசைத்தேர்ச்சியைப் பாடல் வழியாக மிக நன்றாக மெய்ப்பித்தார்.

ஒரே பண்ணை (இராகம்) பல்வேறு உணர்வு களில் வெளிப்படுத்திப் பாடியவர் பாகவதர். சான்றாகச் சிந்துபைரவியை “வதனமே சந்திர பிம்பமோ” என்னும் பாடலில் துறுதுறுப்பையும் மகிழ்வையும் வெளிப்படுத்தினார். அதே பண்ணில் அமைந்த “வன்பசிப்பிணி” என்னும் பாடலையும் “பூமியில் மானிட சென்மம் அடைந்துமோர்,” என்னும் பாடலையும் மிக மெல்லிய தாழ்ந்த குரலிலும் பாடித் தம் இசைத்திறனை வெளிப்படுத்தினார்,

செஞ்சுருட்டியில் அமைந்த தெய்வத்தன்மை சேர் பாடலான “வள்ளலைப் பாடும் வாயால்” என்பதை நெஞ்சுருகப் பாடிய பாகவதர், அதே பண்ணில் எழுதப்பெற்ற “ராதே உனக்குக் கோபம் ஆகாதடி” என்ற பாடலைக் காதல் சுவை மிகவே தோன்றப்பாடி மகிழ்வித்தார். சிந்துபைரவியும் செஞ்சுருட்டியும் பாகவதர்க்கு நெஞ்சங் கவர்ந்த பண்களாகும், “ஒருநாள் ஒரு பொழுதாகிலும்”, “மானிடம் சென்மம்” என்னும் இவ்விரு பாடல்களிலும் இரு வேறு வகைப்பட்ட நடைப்போக்குகளைக் கமாசு பண்ணில் கையாண்டார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

பாகவதரது காளைப் பருவத்தில் வாழ்வின் வளப்பமான காலத்தில் தமிழர் நெஞ்சங்களில் நீங்காத இடத்தைப் பெற்றிருந்தார். அவரை நேரிற் கண்டவர்கள் தேவதையைக் கண்டதைப்போல் களித்தனர். மெருகேற்றிய பொன்போன்ற அவரது உடல் வண்ணம் அவர் அணியும் பட்டுடைக்குப் பொருத்தமாக இருக்கும். தோளைத் தொட்டுத் தொங்கும் அலைநெளிவான முடித்திருத்தமும் பெரிய வயிரக்கல் கடுக்மீμம், மோதிரமும் அணிந்த பாகவதரது தோற்றப் பொலிவே மாந்தர்களைக் கவர்ந்தன. அதனால் அனைத்து மாந்தரும் பாகவதர் போலவே தலைமுடியைத் திருத்திக்கொண்டனர். பாகவதர் முடிஅழகு (பாகவதர் கிராப்) என்றே பேசப்பட்டது. பாகவதரைப்போல் அழகிய கவரும் பார்வை போலவும் அவருடைய குரலிசை போலவும் கண்டதும் கேட்டதும் இல்லை என்றே பலர் சொல்லினர்.

ம.கி. தியாகராச பாகவதர் பெற்றிருந்த சீர்த்தியின் அருகில் கூட எவராலும் வரமுடிய வில்லை. “புரட்சிப்பாவலர் பாவேந்தர்” என்றாலே பாரதிதாசன் அவர்களையே குறிப்பதுபோல், பாவாணர் என்று பலர் இருந்தாலும் பாவாணர் என்றால் மொழிஞாயிறு பாவணாரைக் குறிப்பது போல்) அவர் காலத்தில் பாகவதர் எனும் பட்டப் பெயரைப் பலர் பெற்றிருந்தாலும் பாகவதர் என்றால் தியாகராச பாகவதரையே எப்போதும் குறிப்பதாயிற்று,

பாகவதர் குடும்பம்

திரையுலக நுழைவுக்கு முன்னரே இல்லற வாழ்வில் நுழைந்துவிட்டார். ஆம். மணமுடித்துக் கொண்டார். நாடகங்களில் பாகவதருடன் இணை யாக நடித்த எஸ்.டி. சுப்புலட்சுமி பாகவதர் தம் திருமண வரவேற்பில் அரிகதை இசைச் சொற் பொழிவு (அரிகதா காலட்சேபம்) நிகழ்த்தினார். அந்நிகழ்வில் இரு கிண்ணரப் பெட்டிகளை (இரண்டு ஆர்மோனியம்) இயக்கியவர் இசைவல்லார் ஜி. இராமநாதன் ஆவார்.

இலக்குமிகாந்தன் கொலை வழக்கு

தியாகராச பாகவதர் நாடகம், திரைப்படம். இசையரங்கங்கள் இவற்றின் வழிப் புகழ்வானில் உயரே பறந்து கொண்டிருந்த வேளையில் இலக்குமிகாந்தன் கொலை என்னும் சூறாவளி உயரே பறந்த பாகவதரைக் கீழே தள்ளியது, 1944 நவம்பர் 8ஆம் நாள் சென்னைப் புரசைப் பாக்கத்தில் சிலர் சேர்ந்து தூவல் (பேனா) கத்தியால் இலக்குமிகாந்தனைத் தாக்கினர். புறநோயராகச் சென்னைப் பொது மருத்துவமனையில் மருத்துவம் பெற்றார், புண் அவ்வளவு கடுமையானதாக இல்லை.

இலக்குமிகாந்தன் காவலரிடம் அளித்த வாய்மொழி முறையீட்டில் சிலர் தாக்கியதாகக் குறிப்பிட்டாரே தவிர, குறிப்பிட்டு எவர் பெயரையும் கூறவில்லை. சென்னைக்கும் தனுக்கோடிக்கும் இடையே ஓடிய போட்மெயில் எனப் பெயர்கொண்ட விரைவுத் தொடர்வண்டியில் நிகழ்ந்த கொலையில் ஈடுபட்ட கொலையாளிகள் எவர் எவர் என்பதை வெளிப்படுத்தவே மருத்துவமனையில் இருந்த இலக்குமி காந்தன் விரும்பினார், என்று தெரிவித்தனர்.

கொலையாளிகள் வழக்குமன்றத்தில் வழக்கு உசாவலுக்கு (விசாரணைக்கு) வரவிடாமல் பார்த்துக் கொண்டனர். எனவே உண்மைக் கொலையாளிகள் பற்றிய மெய்ம்மை பெரும்போர்வையால், மூடி மறைக்கப்பெற்றது. இலக்குமிகாந்தன் தாக்கப்பெற்ற மறுநாள் 9.11.1944இல் திடீரென இறந்தார். காவல்துறை எந்தவித அடிப்படைச் சான்றுகளும் இல்லாமல் கொலைக்குற்றம் சாற்றி எட்டுப் பேரைச் சிறைப் பிடித்தது. அந்த எண்மரில், தியாகராச பாகவதரும் என்.எஸ். கிருட்டிணனும் உட்படுவர். இச்செய்தி அவ் விருவர் தம் ஆர்வலர்க்கும் திரைத்துறையினர்க்கும் பேரதிர்ச்சிச் செய்தியாக வந்து சேர்ந்தது.

மாகாண நடுவர் முன்னர்ச் சிறையிலடைக்கத் தக்க ஒறுத்தலுக்கான (தண்டனைக்கான) நடவடிக்கைகள் முடிந்த பின்னர் உயர்வழக்கு மன்ற நடுவர் மொக்கெத்து என்பவர் முன் வழக்கு வந்தது. திருவாளர்கள் வி.ட்டி. அரங்கசாமி ஐயங்கார், இராசகோபாலச்சாரியார். பிராடெல். பிட்டி சுந்தரராசன், கோவிந்த சுவாமிநாதன், சீனிவாச கோபால், கே. எம். முன்ழ்சி. உள்ளிட்ட மிதத் திறனுடைய வழக்குரைஞன்மார் குற்றஞ்சாற்றப் பெற்றோர் சார்பாக வழக்காடினர். பன்னெடுநாள் நீண்ட வழக்காடலின் முடிவில் பலருடைய எதிர்பார்ப்புக்கு மாறாகப் பலரும் கலங்குமாறு நடுவர், ம.கி. தியாகராச பாகவதர். என்.எஸ். கிருட்டினன் இவருடன் இன்னும் நால்வரையும் சேர்த்துக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார்.

thyagaraja_bhagavatharதில்லியில் உள்ள மீயுயர் வழக்குமன்றம் (சுப்ரீம் கோர்ட்) போல் ஆங்கிலர் காலத்தில் இலண்டனில் உள்ள மீயுயர் வழக்கு மன்றில் (பிரிவி கவுன்சில்) பாகவதரும் கலைவாணரும் மேல்முறையீடு இட்டனர், உலகப் புகழ்பெற்ற வழக்குரைஞர் டி.என். பிரிட்டு என்பவர் அவர்கட்காக மன்றாடினார். இலண்டன் மீயுயர் வழக்குமன்றம் இருவர்மீதும் தொடுக்கப் பெற்றுள்ள வழக்கை மறுஆய்வுக்காக இந்தியாவுக்கு அனுப்பியது, நடுவர் இருவர் கொண்ட ஆயத்தின் முன்னர் மேல்முறையீட்டு வழக்கு வந்தது. குற்றவியல் வழக்குரைஞர் எனப் புகழ்பெற்ற திரு. வி.எல். எத்திராசு (சென்னை எதிராசு கல்லூரி இவர் பெயரால்தான் இயங்கப்படுகிறது) பாகவதர், கலைவாணர் இவ்விருவர்க்கும் வழக்காடினார்.

உயர்நடுவர்கள் சான்றாயர் (ஜூரி) களைச் சரியாக நெறிப்படுத்தவில்லை. ஐயத்திற்கிடமான சான்றுரைஞர் (சாட்சிகள்) களையும், சான்றுகளையும் நேரிய முறையில் உசாவவும், மதிப்பிடவும் இல்லை. பாகவதருக்கும் கலைவாணருக்கும் எதிராகக் கொண்டுவரப் பெற்ற சான்றுரைஞர் அனைவரும் சொல்லிப் பயிற்சியளிக்கப் பெற்றவர். அவர்கட்கு எதிராக அளிக்கப்பெற்ற சான்றுகளும் அறிக்கை களும் நிரம்ப முரண்பாடுகள் உள்ளவையாக இருக் கின்றன. வழக்கில் பல்வேறு சந்து பொந்து களுக்கும் உள்ளன என்று வழக்குரைஞர் எத்திராசு தன் எடுத்துரை (வாதம்)யால் உயர்வழக்குமன்ற இருவர் ஆய நடுவர்கள்தம் உள்ளம் நிறைவடையுமாறு செய்தார்

. வழக்குரைஞர் எத்திராசு எடுத்துரைகளை ஏற்று நடுவர்கள் பாகவதரையும் கலைவாணரையும் குற்றமற்றவர் என விடுவித்தனர், மேல்முறையீட்டின் போது வழக்குரைகளைக் கேட்டறிந்த நடுவர்களில் ஒருவர். சான்றாக அளிக்கப்பெற்ற தூவல் (பேனா) கத்தி ஓர் எலியைக் கூடக் கொல்லாது என்றார். ஆங்கில அரசிடம் இருந்து நாடு விடுதலை பெறச் சில மாதங்கள் இருந்தபோதுதான் தீர்ப்பளித்தனர்,

பாகவதர் சிறையிலிருந்தபோது அவர் நடித்த அரிதாசு படம் மூன்று தீபாவளிகள் வரை பிராட்வே திரையரங்கில் ஓடித்திரையுலகில் வரலாற்றைப் படைத்தது. “மன்மத லீலையை வென்றார் உண்டோ” என்ற பாடலும் பிற பாடல்களும் எங்கெங்கும் காற்றலை களில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. புகழ்பெற்ற பாடகரும் நடிகரும் மக்கள் உரிமைப் போராளரு மான ஹேரிபெலாஃபோன்த்து “பாடகரைக் கூண்டில் அடைக்கமுடியும் ஆனால், பாடலை அடைக்க முடியுமா?” என்று கேட்டார். நடுவர்கள் தீர்ப்பு வழங்கலில் ஏற்பட்ட மிகப் பெரிய சீர்குலைவு என்று இந்தியச் சட்டஞ்சார் வரலாற்றில் இவ்வழக்கு ஆவணப்படுத்தப்படும். இந்தத் தீர்ப்பு இசைக்கலையில் வியத்தகு திறன் பெற்றிருந்த இசைஞரின் வாழ்வையும் முன்னேற் றத்தையும் பாழாக்கிவிட்டது. பாகவதர் இழந்த புகழை மீண்டும் பெறவில்லை,

பாகவதர் விடுதலையான போது இந்திய அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்ததுடன் தமிழ்நாட்டுத் திரைப்பட உலகமும் வரலாறு, ஆன்மீகப் படங்கள் உருவாக்குவதி லிருந்து குமுகத் திரைப்படங்கள் உருவாக்கு வதற்கு விரைந்து மாறிக் கொண்டிருந்தது. சிறைக் கோட்டத்தில் இருண்ட முப்பது திங்களைக் கழித்து வெளிவந்த பின்னர் முற்றிலும் மாறுபட்ட மாந்தராக மாறி இருந்தார் பாகவதர். அவர்தம் சிறைவாழ்க்கை, மகிழ்வையும், தன்னம்பிக்கையையும் களவாடி விட்டது. முன்னைவிட இன்னும் கூடுதலாக ஆன்மீகப் பக்கம் சார்ந்தார்.

விடுதலைக்குப் பின்னர் எத்தனை இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியுமோ அத்தனை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க விரும்பினார். தமிழிசைச் சங்கம் மட்டுந்தான் அவர்க்கு ஊக்கத் தந்து இசைநிகழ்ச்சிகட்கு ஏற்பாடு செய்தது, பிற அவைகள் (சபாக்கள்) மேலாதிக்கச் சாதியினால் இயக்கப் பெற்றன என்பது மட்டும் அல்லாமல் பாகவதர் அடைந் துள்ள கற்பனைக்கு எட்டாத புகழும் செல்வாக்கும் அவர்களைப் பொறாமை கொள்ள வைத்தன, பாகவதர் கொண்ட எண்ணத்திற்கு மாறாகப் பாகவதர் திரைப்படம் உருவாக்கக் கட்டாயப் படுத்தப் பெற்றார். இராசமுத்தி, புதுவாழ்வு போன்ற படங்களைத் தாமே உருவாக்கினார் அமரன் போன்ற படங்களில் அமரவதி, சியாமளா போன்ற படங்களில் (சிவகாமியில் சில காட்சிகள்) நடித்தார். இப் படங்களில் பாடல்கள் மக்களைக் கவர்ந்திழுத்தாலும் திரையரங்குகளில் படங்கள் ஓடி வெற்றிபெறவில்லை. அதனால் பொருள் இழப்பு மிகுந்தது. இவற்றிற்குரிய கரணியம் தமிழ்த்திரையுலகத்துப் போக்கு மிகப் பெரிதாக மாறிவிட்டதே ஆகும்.

கொள்கையில் கோடாதவர்

இலக்குமிகாந்தன் கொலைவழக்காலும், திரைப்படங்களின் தோல்வியாலும் பெருஞ் செல்வத்தை இழந்தபோதும், இறைமறுப்புக் (நாத்திகம்) கதைக்கருக் கொண்ட சொர்க்கவாசல் என்னும் படத்தில் நடிக்க ஓர் இலக்கம் (அக்காலத்தில் பெருந்தொகை) உருபாய் தந்தபோதும் நடிக்க மறுத்துவிட்டார். நாடறிந்த அரசியல்வாணர்களான இராசாசி, காமராசர், அண்ணாத்துரை, சின்ன அண்ணாமலை போன்றோ ருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும் தன் தனிப்பட்ட ஆக்கத்துக்குப் பயன்படுத்திக் கொண்ட தில்லை. பெருந்தலைவர் காமராசரே தேர்தலில் பேராயக் (காங்கிரசு) கட்சிச் சார்பில் போட்டியிடுமாறு கேட்ட காலையும் ஏற்றுப் போட்டியிட உறுதியாக மறுத்தார்.

1957இல் சிவாசிகணேசன் அம்பிகாபதியாக நடித்த படத்தில் கம்பராக நடிக்கப் பாகவதருக்குச் சிவாஜி கணேசனுக்குக் கொடுக்கப்பட்ட ஊதியத்தை விடப் பத்தாயிரம் (10000) கூடுதலாக தருவதாகச் சொன்ன தொகையை நயத்தகு பண்புடன் மறுத்து விட்டார். அம்பிகாபதியாக நடித்துத் தன் நயவர் (இரசிகர்) உள்ளங்களில் ஒருதனி இடம்பிடித்தவர் அதே கதையில் மாறுபட்ட ஒரு கதைமாந்தராக நடிக்க அவர் விரும்பவில்லை, சிவாஜிகணேசன் நடித்த அம்பிகாபதி படம் தோல்வி கண்டதற்கு நேர் மாறாகப் பாகவதர் படம்பெரு வெற்றி பெற்றது. பாகவதர் சுரதாவுக்கு அமரகவியில் பாட்டு எழுதும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது பாவலர் தன் பெயரை நிலைநிறுத்திக் கொள்ள வழிஅமைத்தது.

இராயப்பேட்டையில் சுகுமார்பவனம் என்னும் தன் வீட்டில் ட்டி.ஆர். மகாலிங்கம் தன்மகன் சுகுமாருக்காக “வாழ்நாள் வேள்வி” நிகழ்ச்சி கொண்டாடினார், பாகவதர் இசைநிகழ்ச்சி முடிந்ததும் வெள்ளித்தட்டும் ஆயிரம் உருபாயும் ட்டி.ஆர். மகாலிங்கம் தந்தார். பாகவதர் உடனே மகாலிங்கன் மகன் சுகுமாரை அழைத்து, ஆயிரத்தோர் உருபாயும் வெள்ளித் தட்டும் சேர்த்துப் பாகவதர் வாழ்த்தியளிப்பதாகக் கொடுத்தார். வந்திருந்தார் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். மயிலாப்பூரில் சுகுமார் மகன் ஒளிப் படக் கடை வைத்துள்ளார்.

பாகவதர் “தன் அப்பாவுக்கு (சுகுமாருக்கு) அளித்த பரிசை அடிக்கடி நினைவு கூர்வதுடன் தங்கத்தூவல் (பேனா) தந்து நன்றாகப் படிக்குமாறு வாழ்த்தியதையும் கூறுவார்”, என்று சொல்கிறார். மயிலைப் புதுத்தெருவில் வாழ்ந்த சம்பந்த முதலியார்க்கு உரிமையான கபாலி திரையரங்கை 1939இல் திறந்தார். அப்போது நினைவுப் பரிசாக வெள்ளிச் சுத்தியல் ஒன்றை அரங்க உரிமையாளர் அளித்தார்.

சொக்கலால் பீடி உரிமையாளர் அரிராம் சேட்டு பாகவதர்பால் அளவுகடந்த ஆர்வமிக்கவர். பாகவதர் தம் இறுதிக்காலம் வரை எந்தக் குறைவுமின்றி வாழ்வதற்கான வழி வகைகளைச் செய்தார்.

ஏழிசை மன்னரின் இறுதிக்காலம்

“என்னைப்போல் வாழ்ந்தவரும் இல்லை, தாழ்ந்த வரும் இல்லை” என்று பாகவதரே சொன்னார். அவர் சொன்ன சொற்கள் எந்த அளவுக்குச் சொந்த வாழ்வில் நொந்து வெந்து போயிருப்பார் என்பதை அறிந்துகொள்ளலாம். 1955இல் இருந்தே நெருங்கிய நண்பர் ஒருவருடன் கோவில்களுக்குச் சென்றுவரும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். சமயபுரம் கோவிலுக்கு அடிக்கடி செல்வதும் அங்கேயே ஒரு திங்களோ அல்லது திங்களுக்கு மேற்பட்டோ தங்கும் பழக்கத்தை மேற்கொண்டார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்த எஸ்.எஸ். இராசேந்திரன் சமயபுரத்துக்கு வந்து, சென்னையில் மருத்துவம் பார்த்துக்கொள்ளத் தன்னுடன் வருமாறு கேட்டுக் கொண்டார். இந்த நல்ல அறிகுறியை ஏற்றுக்கொண்டு செல்லாமல், “சமயபுர மாரியம்மை தம் உடல் நலத்தைக் காப்பாள்” என்று கூறி எஸ்.எஸ். இராசேந்திரன் வேண்டுகோளை மறுத்துவிட்டார்.

உடல் நலமும் வளமும் புகழும் குறைந்தபோதும் கடவுள்மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையையும் பிறரிடமிருந்து எந்தவகை உதவியையும் பெற்றுக்கொள்ள உறுதியாக மறுத்துவிட்ட பண்பையும் பாராட்டிச் சென்றுவிட்டார். கடவுள்பால் அவர் வைத்திருந்த ஆழமான நம்பிக்கை யால் உடல்நலம் பேணலில் தனிக்கவனம் செலுத்த வில்லை. மருத்துவரையும் தவறாமல் காண்பதில்லை, கணையச் சுரப்புநீர் (இன்சுலின்) ஊசியைத் தாமே உடலில் செலுத்திக் கொண்டார். குருதி உயர்அழுத்தத்தாலும் கடுமைமிகு நீரிழிவாலும் இறுதிநாள்களில் துன்பப்பட்டார். இறப்பதற்குப் பத்துநாள் முன்னதாகப் பொள்ளாச்சி யில் இசையரங்கில் பாடினார். அன்றைக்கு அவர் இசையைக் கேட்டவர்கள் இன்றைக்கும் அவ்விசையைப் போல் கேட்டதில்லை என்கிறார்கள்.

சென்னைப் பொது மருத்துவமனையில் 1959 அக்குதோபர் 22 ஆம் நாள் சேர்க்கப்பெற்றார். பத்து நாள் படுக்கையில் கிடந்தார். நவம்பர் ஒன்றாம்நாள் மாலை 6,30 மணிக்கு இசையுலகிற்கு ஈடு செய்ய இயலா இழப்பை ஏற்படுத்திவிட்டு இயற்கை எய்தினார். திருச்சி நகர்ப்புறத்தே உள்ள சங்கிலி யாண்டார் புரம் என்னும் சிற்றூரில் புதைக்கப்பட்டார். பெருந்திரளாக மக்கள் கூட்டம் சேர்ந்துவிட்டதால் பாடிவீட்டுப் பகுதி (கண்ட்டோன்மெண்ட்) யில் இருந்த பாகவதர் வீட்டிலிருந்து 4.30 மணிக்குப் புறப்பட்ட இறுதி ஊர்வலம் இடுகாட்டைச் சென்றடைய 4.00 மணி நேரத்துக்கு மேல் ஆகியது.

பாகவதர் இறப்பையொட்டிச் சீர்காழி கோவிந்தராசன் இரண்டு பாடல்களைப் பாடினார். ஒன்று தியாகராச பாகவதர் மீதும் பாகவதர் சிறப்புக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இறந்த கலைவாணர் மீது மற்றொன்றும் பாடினார். “ஏழிசை மன்னா எங்கு நீ சென்றாயோ” என்ற பாடல் கண்கலங்க வைக்கும். பாகவதர் ஆளுமை யையும் நுண்கலைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை யும் அப்பாடலில் அமைந்த சொற்கள் மிகப்பொருத்த மாக விவரித்தன. “கண்ணிழந்தால் என்ன கண்ணிய மதை உன் காலம் உள்ளவரை கடைப்பிடித்தாய்” எனும் சொற்கள் பாகவதர் தம் மாற்றுக்குறையா மதிப் பார்ந்த பண்புகளின் மதிப்பு மிக்க போற்றுதலுரை யாகும்.

நிறைவு

பன்முக ஆளுமையுடைய ம.கி. தியாகராச பாகவதர் இசை விரும்பியர்க்குக் கிட்டற்கு அரிய பரிசிலாவார். நாடகத்தில் எஸ்.ஜி. கிட்டப்பாவுக்கு நிகராக விளங்கினார். திரையுலகில் மூத்த இசையறிஞர்களைக் காட்டினும் மேம்பட்டு விளங்கினார். அவர் செய்த தாக்கத்தைப் போன்று மூத்தோர்கள் செய்யவில்லை. இசையரங்குகளில், கட்டுறுதித்திறன் மிக்க அவரை முற்றாக ஒதுக்கினர். வருந்துமாறு மறந்தனர். தமிழிசைச் சங்கத்திற்காகத் தேவராப் பண்ணிசை ஆராய்ச்சியில் பெரும்பங்காற்றினார் என்பதும் கருநாடக இசையில் பேரார்ந்த அறிவுடையர் என்பதும் அறிந்துகொள்ளாமல் கருநாடகப் பாடகருள் ஒருவர் என்றும் திரைப்பட நடிகர் என்றுமே அறியப்பட்டார் என்பது தமிழகத்தின் வாய்ப்புக் கேடாகும்.

மேல்கண்டதற்கு நிகரான வாய்ப்புக் கேடு ஒன்றும் உண்டு. அது, செவ்வியல் கருநாடகப் பாடல் களை இசைத்தட்டு வடிவத்தில் பதிவுசெய்யும் கருத்தினராக எப்போதும் இல்லாததுதான். இசைத்தட்டு வடிவத்தில் அவருடைய கருநாடகப் பாடல்கள் பதியப்பட்டிருக்குமானால் சாத்திரிய இசையுலகில் தனக்கென நிலையான இடத்தை அவர் பெற்றிருப்பார். அழகிய அமைதி, பண்பார்ந்த ஆளுமை வாய்ந்த வண்ணனைக்கு அப்பாற்பட்ட தேனின் கசிவந்த இனிய குரலிசை, பாகவதரின் நயவர் (இரசிகர்) உள்ளங்களில் வட்டமிட்டுச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும். தொன்மக் கதைபோல் பாகவதர் தோன்றினும் அவர் இறப்பின்போது ஓசையெழுப்பாமல் அமைதியாக உள்ளுக்குள் வருந்திய பலர் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். பாகவதர் தம் கலையுலகத் தொண்டும் இசையுலகத் தொண்டும் என்றென்றும் நினைவில் நின்று நிலைத்திருக்கும்.

(சிந்தனையாளன் ஆகஸ்ட் 2010 இதழில் வெளியானது)