தில்லை என்பது கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சைவத் திருத்தலம். இதே மாவட்டத்தில் உள்ள திருமுதுகுன்றம் விருத்தாசலம் ஆனதுபோல் சிற்றம்பலமாம் தில்லையும் சிதம்பரமாகி விட்டது. பார்ப்பனர்கள் முருகனைச் சுப்பிரமணியன் ஆக்கியது போல் இங்குள்ள பொன்னம்பல வாணனாம் ஆடலரசனை அவர்கள் கனக சபாபதியாகவும் நடராசனாகவும் மாற்றி விட்டார்கள். தேவாரம் பாடிய நாயன்மார் மூவரும், தில்லைக் கூத்தரசனை நாவாரப் புகழ்ந்து பாடியுள்ளனர். அன்று நாவுக்கரசரால் நற்றமிழில் பாட முடிந்தது. இன்று எண்பது வயதைத் தாண்டிய சிவனடியார் ஆறுமுகசாமிக்கு, ஆண்டவனை அருந்தமிழில் பாட ஆயிரத்து எட்டு தடைகள்.

‘மடிகட்டிக் கோயிலிலே மேலுடையை

     இடுப்பினிலே வரிந்துகட்டிப்

பொடிகட்டி இல்லாது பூசியிரு

     கைகட்டிப் பார்ப்பா னுக்குப்

படிகட்டித் தமிழரெனப் படிக்கட்டின்

     கீழ்நின்று தமிழ்மானத்தை

வடிகட்டி அவன்வடசொல் மண்ணாங்கட்டிக்கு

     வைப்பீர்! மந்தரம் என்றே’

எனத் தமிழரின் மானமற்ற வடமொழி ஆதரவு மனப்

போக்கைக் கடிந்து பாடினார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். ‘தெற்கோதும் தேவாரம், திருவாய் நன்மொழியாம் தேன் இருக்க செக்காடும் இரைச்சல் என வேதாபாராயணம் ஏன்? திருக்கோயில்பால்? எனச் சினந்து கேட்டவரும் அவர்தான்.

சிதம்பரத்தில் உள்ள தீட்சிதப் பார்ப்பனர்கள் தீவட்டித் திருடர்கள். மற்ற மடப்பார்ப்பானர்களைக் காட்டிலும் பத்துப் பங்கு கொழுப்பேறியவர்கள் அதனால்தான் சிதம்பரம் கோயிலில் கேள்விமுறையில்லாமல் அவர்கள் நடத்திவரும் கேடுகளுக்கு இன்றுவரை முற்றும் புள்ளிவைக்க முடியவில்லை.

பார்ப்பனர்களின் ஆதிக்கப் பண்ணையமாய் விளங்கிய கோயில்களையும், அந்தக் கோயில்களில் கிடைக்கும் வருவாய் வழிகளையும் நீதிக்கட்சிக் காலத்தில் ஆண்ட தலைவர்கள்தான் முறைப்படுத்தினார்கள். ஆனால் இக்கோயிலை இன்றுவரை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர முடியவில்லை.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எப்போதும் மதவாதிகளுக்குத் துணை செய்வதாகவே அமைந்துள்ளது. பார்ப்பானின் பழங்கதைகள், புராணப் புளுகு மூட்டைகள் இந்துச்சட்டத்தில் வலிமையான சான்றுகளாக நிலை நிறுத்தப்பட்டுள்ளன. சிதம்பரம் தீட்சிதர்கள் சொல்லும் கதையையே எடுத்துக் கொள்வோம்:

‘முப்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வானுலகத்தில் இருந்து மூவாயிரம் தேவர்கள் இம்மண்ணுலகிற்கு இறங்கி வந்தார்களாம். அப்படி இறங்கி வந்தவர்களைச் சிதம்பரத்தில் எண்ணிப் பார்த்தபோது ஒருவர் குறைந்தாராம். அந்த ஒருவரை எல்லோரும் தேடும்போது ‘இதோ, இங்கே இருக்கிறேன்’ என்று கோயிலில் இருந்து குரல் வந்ததாம். அந்த ஒருவர்தான் ஆண்டவர் நடராசர்’ என்கிற அண்டப்புளுகுக் கதையை இன்றும் நம்புவதால்தானே நாடு நாசமாகிறது.

1888ஆம் ஆண்டு வெள்ளைக்காரன் காலத்திலேயே சிதம்பரம் கோயில் யாருக்குச் சொந்தம் என்று வழக்கு நடந்தது. தீர்ப்பு வழங்கிய செப்பர்டு (ஆங்கிலேயர்), முத்துசாமி அய்யர் என்கிற இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ‘இக்கோயில் தீட்சதர்களின் தனிப்பட்ட சொத்து என்பதற்கான எந்தச் சான்றும் இல்லை. எனவே சிதம்பரம் கோயிலைப் பொதுச்சொத்து என அறிவிக்கிறோம்’ என்று மண்டையில் அடித்ததுபோல் சொல்லிவிட்டார்கள்.

ஆனால், தீட்சதத் திருடர்கள் விடுவதாய் இல்லை. மீண்டும் உயர்நீதிமன்ற அமர்வின்முன் வழக்கை எடுத்துப் போனார்கள். 23.01.1940 இல் தீர்ப்புரைத்த அமர்வு நீதிமன்றமும் கோயில் பொதுச் சொத்தே என்று அறுதியிட்டு உரைத்தது.

தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலும் எந்த ஆண்டு, யாரால் கட்டப்பட்டது என்பதற்கான சான்றுகள் கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்ற பலவற்றுள் ஏதாவது ஒன்றால் மெய்ப்பிக்கப்படுகிறது. ஆனால் தில்லைக் கோயிலானது தீட்சதர்களின் சொத்துதான் என்பதற்கு ஒரு துண்டுச் சீட்டு கூட ஆதாரமாக இல்லை. என்றாலும் பக்தி, இந்துமத மயக்கம், இந்துத்துவம் ஆக்கப்பட்ட சட்டம், நீதித்துறை, காவல்துறை ஆகியவற்றின் பக்கத் துணை கொண்டு, இன்று வெறும் 360 பேராக உள்ள தீட்சதப் பார்ப்பனர்கள் சிதம்பரம் நகரத்தை மட்டுமல்ல, நாட்டையே உலுக்கி எடுக்கிறார்கள்.

பெரியார், அண்ணா பெயர்களைச் சொல்லிக் கொண்டு மாறிமாறி ஆளும் திராவிடக் கட்சிகளால் இவர்களை எதுவுமே செய்ய முடியவில்லை. அருந்தமிழால் ஆசையோடு ஆண்டவனைப் பாடப் போன என்பது அகவை கடந்த சிவனடியார் ஆறுமுகசாமியை 2000ஆம் ஆண்டில் கை காலை ஒடித்து அடித்து வெளியே போட்டார்கள். அப்போது தி.மு.க.தான் ஆட்சியில் இருந்தது. ஆட்சி மாறிய போதும் இதே கொடுமைதான் தொடர்ந்தது.

அப்பரும், சுந்தரரும், ஞானசம்பந்தரும், மணிவாசகப் பெருமானும் உருகிஉருகிப் பாடிய சிவனைத்தான் சிவனடியார் ஆறுமுகசாமியும் பாட விரும்புகிறார். ஆனால், அவர் பாடச் செல்லும் ஒவ்வொரு முறையும் கோயிலில் அடி உதைதான் பரிசாகக் கிடைத்தன.

கோயில் கருவறைக்குள்ளேயோ அல்லது அதன் அருகிலேயோ நின்று ஆண்டவனைத் தமிழில் பாடவேண்டும் என்பதுதான் ஆறுமுகசாமியின் ஆசை கருவறைக்கு வெளியே அர்த்தமண்டபம் என்று ஓர் இடம் உள்ளது. சிற்றம்பலம் மேடை என்று அதற்குப் பெயர். அங்கிருந்து பாடத்தான் ஆறுமுகசாமி விரும்புகிறார். அதற்குத்தான் அனுமதி இல்லை.

திருச்சிற்றம்பல மேடையில் இன்று ஆறுமுகசாமி தேவாரம் பாடக்கூடாது என்று தீட்சதர்கள் ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? அந்த மேடையில்தான் பதஞ்சலி முனிவர் தவஞ்செய்து கொண்டிருக்கிறாராம். ஆறுமுகசாமி தேவாரம் பாடினால் முனிவரின் அருந்தவம் கலைந்து போகுமாம்! எப்படிக் கதை பார்த்தீர்களா?

எவ்வளவோ போராட்டங்களுக்குப் பிறகு தீட்சதர்களின் பூசை காலத்திற்குப்பிறகு மற்றவர்கள் சிற்றம்பல மேடையில் ஏறித்தேவாரம் பாடிக் கொள்ளலாம். திமிர் பிடித்த பார்ப்பனர்கள் ஒத்துவரவில்லை. என்னசெய்வது? அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், காவல்துறையினர், நீதிபதிகள் என எல்லோரும் தீட்சதர்களின் காலித்தனத்திற்கு அடங்கிப் போகிறார்கள்.

1997இல் ஒருமுறை அரசு கோயிலைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி மேற்கொண்டது. அப்போது கோயிலில், அலுவலகத்தை திறக்கவந்த செயல் அலுவலரைத் தீட்சதர்கள் எல்லாம் சேர்ந்து தாக்கினார்கள். இதற்காக அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது கடலூர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்று தில்லி சென்றுள்ள காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த அழகிரி என்பவர்தான் அன்று சட்டமன்ற உறுப்பினர். அந்தச் சூத்திரர் தீட்சதர்கள் செயலை ஆதரித்துத் தமிழக சட்டமன்றத்திலேயே பேசினார்.

சிதம்பரம் கோயிலில் ஏராளமான நகைகள் களவு போனதாய்ச் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குத் தொடரப்பட்டது. காலித்தனம் செய்யும் தீட்சதர்களை ஏன் கைதுசெய்து உள்ளே தள்ளவில்லை என்று நீதிமன்றமே கேள்வி எழுப்பியும், கையால் ஆகாத அரசுகள் வாய் பொத்தி நின்றன. ஆயிரக்கணக்கான ஏக்கர் கோயில் நிலங்களைத் தீட்சதத் திருடர்கள் விற்று ஏப்பம் விட்டு வருகின்றனர்.

சங்கராச்சாரியை முன்னிறுத்திக் காஞ்சிபுரம் வரதராசர் கோயிலில் சங்கரராமன் என்கிற ஒரு பார்ப்பனர் கொலை செய்யப்பட்ட கதை நாடறிந்த ஒன்றுதான். இது போன்ற கொலைகள் சிதம்பரம் கோயிலில் மிகச் சாதாரணம்-திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட இவ்வளவு திமிர்வாதம் செய்யும் தீட்சதர்கள் காசு வாங்கிக் கொண்டு பக்தர்களைக் கருவறைக்குள் நுழைய விடுவதாகவும், சாமி சந்நிதியிலேயே ‘சரக்கடிப்பதாயும் வரும் செய்திகள் நகர மக்கள் எல்லோருக்கும் தெரிந்த சிதம்பர இரகசியம்.

இந்தக் கீழ்மைச் செயல்கள் எதையுமே கண்டு கொள்ளாத காவல்துறையும் நீதிமன்றமும் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தவந்தால் மல்லுக்கு நிற்கின்றன. கோயிலின் புனிதத் தன்மை கெட்டுவிடும். சட்டம் ஒழுங்குமுறையும், கோயிலின் விலையுயர்ந்த நகைகளுக்கு ஆபத்து வந்துவிடும் என்று இல்லாத சட்டப் பிரிவுகளையெல்லாம் காட்டி எத்து வேலை செய்கின்றன.

ஆறுமுகசாமிக்கு ஆதரவாய் நகரின் அனைத்துப் பகுதிமக்களும், அரசியல் கட்சியினரும் இன்றைக்கு ஓரணியில் நிற்கிறார்கள். ஆனால் இதனை இவ்வளவு பெரிய இயக்கமாக எடுத்துச் சென்றத்தில் மக்கள் கலை இலக்கியக்கழகம் என்கிற அமைப்புக்குத்தான் முழுப்பங்கு உண்டு. ஆறுமுகசாமியையும் இணைத்துக் கொண்டு சிதம்பரம் கோயிலில் மிகப்பெரிய மக்கள் போராட்டம் ஒன்று நடந்தபோது, காவலுக்கு நின்ற காவல்துறையினரையே தீட்சிதர்கள் தாக்கினார்கள் என்றால் அவர்களின் ஆணவத்தை என்னென்பது?

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் எடுத்த இடைவிடாத முயற்சிகளுக்கும் போராட்டங்களுக்கும் பின்னால் கடந்த ஆண்டு 29-2-2008 அன்று சென்னை உயர்நீதிமன்றம் சிதம்பரம் கோயிலை இந்து அறநிலைத்துறையின் கீழ் ஒப்படைத்துப் புதிய செயல் அலுவலரையும் அமர்த்தி ஆணையிட்டுள்ளது. இதனை எதிர்த்துத் தீட்சதப் பார்ப்பனர்கள் தில்லி உச்சநீதிமன்றத்திற்குப் படையெடுத்துள்ளனர்.

தில்லி செல்லும் முன் அவர் உதவி நாடி ஓடிய இடம் சென்னை போயசுத் தோட்டம். அடுத்து அடைக்கலம் நாடியது சொரணைகெட்டப் பார்ப்பான் சுப்பிரமணிய சாமியிடம். இரண்டு பேருமே இவர்களுக்குப் பொருத்தமான ஆட்கள்தான். இராமன் பாலம் செய்தியில் இந்துத்துவப் பாசிசக் கும்பலுக்குப் பக்கமேளம் கொட்டிய நச்சுப்பல் பாம்புகள் இவை.

தில்லைக் கோயில் செய்தியில் மனித உரிமைப் பாதுகாப்பு மையமும், மக்கள் கலை இலக்கியக் கழகமும் முன்கை எடுக்க, கட்சி வேறுபாடுகள், அமைப்பு வேறுபாடுகள் எல்லாம் கடந்து தமிழ்மக்கள் அனைவரும் போராட்டக் களத்தில் நிற்கின்றனர். இந்நிலையில் இந்தியப் பொதுவுடைமைக்கட்சி, இந்தியப் பொதுவுடமைக்கட்சி (மார்க்சிஸ்டு) ஆகியவையும் தனித்தனியே இதற்காகப் போராடி வருவது பாராட்டத்தக்க தாகும்.

போராட்டத்தின் வீச்சு அடுத்த கட்டத்திற்கும் நகர்த்தப்பட்டுள்ளது. நந்தனார், இறையனார் நடராசனுடன் சோதியில் கலந்துவிட்டார் என்பது பார்ப்பனர்கள் கட்டிவிட்ட பச்சைக் புளுகு. தீண்டாமையின் கொடிய நிகழ்வாகத் தாழ்த்தப்பட்டவனான, நந்தனை எரித்துக்கொன்ற நயவஞ்சகப் பார்ப்பனர்கள், நந்தன் உள்ளே நுழைந்ததாகச் சொல்லப்படும் கோயிலின் தெற்குவாயிலையும் சுவர் எழுப்பி மூடி விட்டார்கள்.

தில்லைக்கோயிலுக்குள் நந்தனார்க்குச் சிலை இருந்ததாக உ.வே.சாமிநாதய்யர், பேராசிரியர் கொண்டல் சு.மகாதேவன் போன்ற தமிழறிஞர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள். ஆண்டாண்டுக்காலமாக உழைக்கும் மக்களை அடிமை செய்து அவர்களின் உழைப்பை உறிஞ்சிச் சுவைத்த ஆரியச் சனாதனக் கோட்டைகளை அழித்துத் தரைமட்டமாக்க வேண்டும். சிதம்பரம் தெற்குவாசல், உத்தபுரம் சாதிச்சுவர், பாறைக்குன்றென அடைத்து நிற்கும் பார்ப்பனத்திமிர் ஆகிய சிந்தனையையும் உடைத்து நொறுக்கி உழைப்புச்சாதித் தமிழர்களின் ஒற்றுமையை வலுப்படுத்துவோமாக!

Pin It