இந்தியாவில், காஷ்மீர் சிக்கல் 63 ஆண்டுகளாக இழுபறியாக இருக்கிறது. காஷ்மீர் மாநிலத்தில் நீண்டகாலமாக ஆட்சி செய்தது தேசிய மாநாட்டுக் கட்சி  அடுத்து ஆண்டது காங்கிரசு - மக்கள் சனநாயக கட்சி கூட்டணி. தில்லியில் காங்கிரசுக் கூட்டணி ஆண்ட போதும், பாரதிய சனதாக் கூட்டணி ஆண்ட போதும் இவர்களே மாறி மாறி காஷ்மீரில் ஆட்சி செலுத்தினார்கள்.

காஷ்மீர் சிக்கலின் உண்மையான வடிவம் என்ன? சரியான தீர்வு என்ன? என்பது பற்றி இந்திய அரசு, எந்தக் கூட்டணி ஆட்சியின்போதும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதாவது ‘ஜம்மு - காஷ்மீர்’ மாநிலத்தை மட்டும் இந்தியாவுடன் இணைத்துக் கொண்டார்களா அல்லது ஆசாத் காஷ்மீர் என்பதையும் சேர்த்து இணைத்துக் கொள்ள விரும்புகிறார்களா என்பதை வெளிப்படையாக இந்திய ஆளும் கூட்டணியினர் அறிவிக்கவில்லை. அப்படி அறிவிக்க பாகிஸ்தான் இடந்தரவில்லை.

அதைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் முதன் முதலாக 1989இல் “ஆஸாதி” (விடுதலை) கோரிக்கை எழுந்தது. ஜம்மு -காஷ்மீர் தனிச் சுதந்தர நாடாக வேண்டும் என்று கோருவோர், பாகிஸ்தானோடு சேரவேண்டும் என்போர், இந்தியாவுடன் இணைந்தே இருக்க வேண்டும் என்போர் என்கிற பல கோரிக்கைகளைக் கொண்டவர்களாகவே ஜம்மு - காஷ்மீரில் இயங்கும் போராட்டக் குழுவினர் உள்ளனர். இவர்களிடையே ஒத்தக்கருத்து இல்லை. இந்த இரண்டு நிலைமைகளும் 63 ஆண்டுகளாக நீடிக்கின்றன.

இது இப்படியே நீடிப்பதற்கு முகாந்திரமாக, “எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின் ஊடுருவல்” என்பது தொடர்ந்து ஒரு சிக்கலாக இருக்கிறது. “எல்லை” என்பது ஜம்மு - காஷ்மீருக்கும் ஆசாத் காஷ்மீருக்கும், இடையே உள்ள எல்லையாகவே கருதப்படுகிறது. கட்டுப்பாட்டு எல்லைக்கோடு என்று இதற்குப் பெயர். இந்த எல்லைக் கோடு துல்லியமாக வரையறுக்கப்பட வில்லை. எல்லைக்கோடு நெடுகிலும் தடுப்புச் சுவரோ, முள்கம்பி வேலியோ போடப்பட வில்லை. 19.8.2010 அன்றுகூட இந்த எல்லையில் இருநாட்டுக்காரரும் சுட்டுக்கொண்டனர்.

இந்த எல்லைக் கோடு இழுபறியாக இருக்கும்படியாகவே பிரிட்டிஷார் விட்டுச் சென்றனர் என்று ஒரு பிரிட்டிஷ் அதிகாரி பத்து ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வெளிப்படையாக அறிவித்தார். எல்லைதாண்டும் பயங்கரவாதிகள் ஆசாத் காஷ்மிரிலும், பாகிஸ்தானிலும் பயிற்சி பெறுகிறார்கள். அப்படிப் பயிற்சி பெறுகிறவர்களில் ஜம்மு - காஷ்மீர் இளைஞர்களும், இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களும் இருக்கிறார்கள். இந்த ஒன்றைக் காரணமாக வைத்தே, “எல்லைதாண்டிய பயங்கார வாதத்தை பாக்கிஸ்தான் நிறுத்தாத வரையில் இந்திய அரசு பாக்கிஸ்தானோடு சமாதானப்பேச்சு வார்த்தை நடத்தாது” என்று 30 ஆண்டுகளாகத் திரும்பத் திரும்ப இந்திய அரசு கூறி வருகிறது.

காஷ்மீர் பிரச்சினை பற்றித் தங்களுடன் பேசாமல் - முத்தரப்புப் பேச்சாக இல்லாமல் இந்தியா எந்த முடிவையும் செய்யக் கூடாது; செய்ய முடியாது என்று. பாக்கிஸ்தான் தொடர்ந்து கூறுகிறது. 14.8.2010 கூட பாக்கிஸ்தான் பிரதமர் இப்படிக் கூறியுள்ளார். இதை மூடி மறைத்துப் பயன் இல்லை. அதே போல் ‘ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டம்’ என்று ஒன்று 1957இல், ஜம்மு - காஷ்மீர் மக்களால் நிறைவேற்றப்பட்டு, இந்திய அரசால் ஏற்கப்பட்டிருக்கிறது என்கிற உண்மையையும் எல்லோரும் மறைக்கிறார்கள். அதன் படி

1.            “ஜம்மு - காஷ்மீர் குடிமக்கள் என்கிற தனித்தகுதி அம் மாநில மக்களுக்கு உண்டு.”

2.            அதற்கென்று தனித்தேசியக் கொடி உண்டு.

3.            அந்நாட்டின் ஆட்சித் தலைவர் “குடி அரசுத் தலைவர்” ஆவார்

4.            அந்த அரசின் தலைவர் “பிரதமர்” ஆவார்.

5.            ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டது. “ஜம்மு காஷ்மீர் அரசமைப்புச் சட்ட” முகவுரையில் என்ன வாசகம் உள்ளது?

“ஜம்மு-காஷ்மீர் மாநிலக் குடிமக்களாகிய நாங்கள் ... என்றே உள்ளது.  அதாவது, முதலில் அவர்கள், “ஜம்மு-காஷ்மீர் குடிமக்கள்”. பிறகுதான், “இந்தியாவின் குடிமக்கள்” இது தன்னுரிமையின் ஒரு கூறு.  இந்த ஏற்பாடு ஜம்மு - காஷ்மீருக்குத் தன்னாட்சி உரிமை வழங்குவதே ஆகும். ஆனால், இவ்வளவு தனி உரிமைகளையும் 1963க்குள் பறித்துக் கொண்டது நேருவின் தலைமையில் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சிதான்.

இவ்வளவு உரிமைப் பறிப்புகளும் நடைபெற்ற நெடிய காலத்தில் - காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த அரி சிங்கின் மகன் கரன் சிங் 20 ஆண்டுகள் ‘ஆளுநர்’ என்ற பதவியிலிருந்தார். தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஷேக் அப்துல்லாவும், 1975 பிறகு பரூக் அப்துல்லாவும் முதலமைச்சர்களாகப் பதவி வகித்தார்கள்.  இந்த 60 ஆண்டுகள் இடைவெளியில் இந்தியப் படையும், எல்லைக் காவல் படையும், உள்ளூர் காவலர் படையும் ஜம்மு - காஷ்மீர் மக்களை அடக்கி ஆளுவதிலேயே அக்கறை காட்டினர். இந்திய அரசு பாதுகாப்புக்காக ஒதுக்கும் நிதியில் பெரும் பகுதியை ஜம்மு - காஷ்மீர் மக்களை அடக்கி வைக்கவும், பாக்கிஸ்தானோடு நடைபெற்ற போர்களில் செலவு செய்யவுமே பயன்படுத்தியது. இது தவிர்க்க முடியாத செலவினமாக ஆகிவிட்டது. இந்திய மக்களுக்கு இது ஒரு சுமை.

இதற்கிடையில் பாரதிய சனதா ஆட்சிக் காலத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி உருவாக்கி அளித்த தன்னாட்சி பற்றிய ஆவணத்தை இந்திய ஆட்சி ஏற்க மறுத்துவிட்டது. அதன் பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் முறையே அமைச்சராகவும், முதலமைச்சராகவும் மாறி மாறி இருப்பதிலேயே தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவர்களான பரூக் அப்துல்லாவும், மகன் உமர் அப்துல்லாவும் குறியாக உள்ளனர். இந்தியாவுடன் இணைந்து இருப்பது போதும் என்று மக்கள் சன நாயக கட்சித் தலைவர் மெகபூப் முப்தியும் அவருடைய மகளும் நினைக்கிறார்கள். இதன் பொருள் என்ன? ஜம்மு - காஷ்மீரில் உள்ள தேர்தல் கட்சிகளின் தலைவர்கள் நல்ல ஏமாற்றுக்காரர்கள் என்பது தான்.

இவ்வளவு நெடிய காலத்தில் ஜம்மு - காஷ்மீர் இளைஞர்கள் அங்கேயே உயர்கல்வி பெறவோ, அங்கேயோ, இந்திய அரசிலோ அரசுப் பதவிகள் பெறவோ, வழிவகைகள் செய்யப்படவில்லை. இஸ்லாமியர்களைப் பெரிய எண்ணிக்கையில் கொண்ட ஜம்மு - காஷ்மீர் முறையான வளர்ச்சி பெறாத மாநிலமாகவே வைக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் படையினரும் காவலரும் போராட்டக்காரர்களை அடக்குவது என்கிற பேரால் இளைஞர்களையும் பொது மக்களையும் சுடுவதும் கொல்லுவதும் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறுகின்றன. இன்று அனைத்துத் தரப்பு மக்களும் ஏமாற்றப்பட்டு - நசுக்கப்பட்டு மேலும் மேலும் உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்துத் தெருவுக்கு வந்து, உயிரைப் பணையம் வைத்துப் போராடுகிறார்கள்.

டாக்டர் மன்மோகன் சிங் முதல் தடவை 2004இல் பிரதமராக வந்த பிறகு 2006, 2007 இல் ஜம்மு - காஷ்மீர் பற்றி மூன்று வட்ட மேசை மாநாடுகளை நடத்தினார். சிக்கலில் அக்கரையுள்ள பல தரப்பினரும் இவற்றில் பங்கேற்றனர். இவற்றின் விளைவாக அய்ந்து ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இவற்றுள் ஒன்று, மய்ய - மாநில அரசுகளுக்கிடையே ஆன உறவு பற்றிய ஆய்வைச் செய்வது. அந்த ஆய்வுக் குழு அளித்த அறிக்கையை இன்னமும் இந்திய அரசு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வில்லை. அதில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதை ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கும், இந்திய மக்கள் அவைக்கும் அரசு தெரிவிக்கவில்லை. ஆனால் படையை எதிர்த்துப் போராடுவோரை நோக்கிச் சுடுவது, கொல்லுவது என்பது மட்டும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதன் உடனடி விளைவாக, 2008 கோடை காலத்தில் சிறீநகர் மக்கள் தெருவுக்கு வந்து படை வீரர்களையும் காவலர்களையும் கல்லால் அடித்து விரட்டும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 2010 ஏப்பிரலில் மூன்று இளைஞர்கள் மச்சில் என்ற இடத்தில், “பயங்கர வாதிகள் மீது தாக்குதல்” என்கிற போர்வையில் போலியான தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

11-6-2010 இல் பள்ளி மாணவர் டுபைல் மட்டூ என்பவர் கண்ணீர்ப் புகைக் குண்டுக்கு இரையானார். இவற்றை எதிர்க்கும் தன்மையில், இன்று எல்லாப் பகுதிகளிலும் இளைஞர்களும் குமரிகளும் தெருவுக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்; கண்டன ஊர்வலம் செல்கிறார்கள்; படையினர் மற்றும் காவல் துறையினர் பேரில் கல்லை எறிகிறார்கள்.

இவற்றைக் கட்டுப்படுத்த 7-7-10க்குப் பிறகு காஷ்மீரின் பலபகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமலாக்கப்பட்டது. ஆனால் எதற்குமே தீர்வு காணப்பட வில்லை. 27.7.10இல் காஷ்மீர் அமைச்சரவை கூடியது. 11-6-10க்குப் பிறகு காவல்படையால் கொல்லப்பட்ட 17 பேர்கள் தொடர்பான வழக்கை ஆய்வு செய்ய ஒரு குழு அமைப்பது என அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

27-7-10 இல் ஊரடங்குச் சட்டத்துக்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவர் மெக பூப் முப்தி காஷ்மீர் தலைமைச் செயலக வாயிலுக்குப் பூட்டுப் போட்டு விட்டு தன் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் மறியல் செய்தார். அத்துடன் சரி. ஆயினும் 30-7-10 அன்று எல்லா ஊர்களிலும் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. வடக்குப் பகுதியில் சிறீநகர், சான்போர், பட்டான், சோப் போர், கரேரி முதலான இடங்களில் பெருங் கூட்டமாகக் கூடி ஊரடங்குச் சட்டத்தை மக்கள் மீறினர். படையினர் சுட்டதில் 4 பேர் செத்தனர்; 80 பேர் காயம் அடைந்தனர்.

தெற்குப் பகுதியில் ட்ரால், பிஜ் பெஹரா, சோபியான முதலான இடங்களில் மக்கள் பெருங் கூட்டமாகக் கூடி காவல் நிலையங்களையும், காவல் நிலைய வாகனங்களையும் தாக்கினார்.

31.7.10 அன்று சோப்போர் இரயில்வே நிலையக் கட்டடத்தை மக்கள் எரித்தனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள 9 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டது. அதையும் மீறி மக்கள் தெருவுக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். படை மீது கல்வீசினர். ஈத்கா பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது.

கமார் வாரி, சேக்புரா, ராம்பா, பாலம், பார்த்தனா, நாடிகால், திரெகம் முதலான பல ஊர்களில் துப்பாக்கிச் சூடு நடந்தது. காஷ்மீர் பற்றி எரிகிறது.

சோறு, ரொட்டி, வேலை இவற்றுக்கு உத்தரவாதம் தர வேண்டிய அரசு, ஜம்மு - காஷ்மீர் மக்களைப் “பிரிவினைவாதிகள்” என்று பெயரிட்டுக் கூறிவிட்டுக் கொல்லுவதற்கு அளவு கடந்த பணத்தைச் செலவிடுகிறது. 30-07-2010 முதல் 3-08-2010 முடிய 5 நாள்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 27 பேர் கொல்லப்பட்டு விட்டனர்.

13-8-2010இல் சோபோரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேரும், தெரகம் என்ற ஊரில் நடை பெற்ற - ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்தின் தலைவர் மக்பூல் பாத் நினைவு ஊர்வலத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவரும் கொல்லப்பட்டனர். இந்தக் கேடுகளுக்கு இடையே, முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் வேண்டுகோளை ஏற்று, 2000 துணை இராணுவப் படையினரை இந்திய அரசு அனுப்பியுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாகப் படை வீரர்கள், எல்லைக்காவல் படையினர், உள்ளூர்க் காவலர்கள் முகங்களையே நாள்தோறும் பார்ப்பதும். அவர்களால் சுடப்பட்டுச் சாவதும் மட்டுமே காஷ்மீர் மக்களின் அன்றாட வாழ்க்கை நடப்பு ஆகிவிட்டது.

10-8-2010 அன்று, உமர் அப்துல்லா தலைமையிலான அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவினர் புதுதில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். காஷ்மீர் மக்களின் உணர்வுகளைத் தாம் புரிந்து கொண்டதாகவும், அமைதியான முறையில் தீர்வு காணவேண்டும் என்றுதான் பெரும்பாலான மக்கள் விரும்புவதாகவும் கூறிய பிரதமர், முதன் முதலாக, சுயாட்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

“அரசியல் ரீதியாகக் கருத்து ஒற்றுமை ஏற்பட்டால், காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி வழங்குவது பற்றி, அரசியல் சாசன வரைமுறைகளுக்கு உட்பட்டு மத்திய அரசு பரிசீலிக்கும்” என்று பிரதமர் அப்போது குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசியல் சட்ட வரைமுறையின்படி, அரசமைப்பு விதி 370இல் காஷ்மீருக்கு என்று அளிக்கப்பட்டுள்ள சில விதி விலக்குகள் மட்டுமே உள்ளன. காஷ்மீருக்குத் தன்னாட்சி உரிமை வழங்குவது பற்றிய கூறு எதுவும் இந்திய அரசமைப்பில் இல்லை.

பிரதமரின் இந்த அறிவிப்பை எதிர்த்து பாரதிய சனதாக்கட்சி தன் கருத்தை வெளியிட்டுள்ளது. சிவசேனா அமைப்பின் நிறுவனர் பால் தாக்கரே தம் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் 13-8-10 வெள்ளி அன்று சிறீநகரில் ஹுரியத் மாநாட்டு அமைப்பின் ஒரு பிரிவுத் தலைவர் மீர்வாஸ் உமர் பரூக் தலைமையில் ஜமியா மஸ்ஜிதில் நடை பெற்ற கூட்டத்தில் எண்ணற்ற மக்கள் பங்கேற்றனர். அதே நேரத்தில் எல்லைப்புறத்தில் குப்வாரா மாவட்டத்தில் தெரகம் என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 வயது முடாசிர் என்கிற இளைஞர் கொல்லப்பட்டார்.

சிறீநகர் மக்கள் மாபெரும் கண்டன ஊர்வலத்தை அன்று நடத்தினர். 11-6-2010க்கும் 13-8-2010க்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடுகளில் 56 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் 14-8-2010 அன்று முதலமைச்சர் உமர் அப்துல்லா பின்வரும் அறிவிப்புகளைச் செய்துள்ளார்.

1.            50,000 இளைஞர்களுக்குப் பொது வேலைகள் அளிக்கப்பட காஷ்மீர் மாநில அரசு எல்லாம் செய்யும் என்றும்,

2.            பிரிவினை கோரும் தலைவர்கள் அரசுடன் பேச்சு வார்த்தைக்கு முன் வந்து காஷ்மீர் சிக்கலைத் தீர்க்க வழிகாண வேண்டும் என்றும்,

3.            இந்திய அரசு தன்னாட்சி உரிமையை வழங்கிட விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இனியும் காவல்துறை, படைத்துறைத் தாக்குதல் தொடரவே வாய்ப்பு உள்ளது.

அப்படியானால் ஜம்மு - காஷ்மீர் சிக்கல் தீர்வுக்கு என்ன வழி?

1. இந்தியாவில் உள்ள எல்லா அனைத்திந்தியக் கட்சிகளும், மாநிலக்கட்சிகளும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு முழுத் தன்னாட்சி (குரடட யரவடிnடிஅல) வழங்க வேண்டும் என்கிற கொள்கையை முதலில் ஏற்க வேண்டும்.

இக்கொள்கையை இந்திய அரசும், நாடாளுமன்றமும் ஏற்க வேண்டும் என்று எல்லாக்கட்சிகளும் இந்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்.

2. எல்லா அனைத்திந்தியக்கட்சிகளும், இந்திய அரசும் “ஜம்மு - காஷ்மீர் பகுதி மட்டுமே இந்தியக் கூட்டாட்சியின் பகுதிக்கு உட்பட்டது” என்பதாகத் துலாம்பரமாக அறிவிக்க வேண்டும்.

பாரதிய சனதா முதலான கட்சிகள் ஆசாத் காஷ்மீருக்கும் உரிமை கொண்டாடுவதை அடியோடு கைவிடவேண்டும்.

3. தமிழகம் தொடங்கி, தன்னுரிமைகோரும் எல்லா மொழிவழி மாநில அமைப்புகளும் இனியேனும், இந்திய அரசின் காஷ்மீர் உரிமைப் பறிப்பைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அம் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த வேண்டும். இவ்வகையில் இப்போது, “இந்தியாவில் உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்பு அணி” செயல்படுவது வரவேற்கத்தக்கது.

“சட்டப்படி வழங்கப்பட்ட தன்னுரிமை பறிக்கப்பட்ட மாநிலம் காஷ்மீர்தான்” என்பதை, இவ்வளவு நாள்கள் மற்ற மாநில மக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது தவறாகும். இனியேனும் எல்லோரும் இதை உணர வேண்டும். இதற்கு எதிரான உணர்வை “இந்துத்துவா” கொள்கையினர் பரப்புவதை இவர்கள் அம்பலப்படுத்த வேண்டும்.

அல்கொய்தா தாக்குதலுக்குப் பிறகு, 2001இல் ஆப்கானிஸ்தான் பேரில் படையெடுத்த அமெரிக்கா, கடந்த 9 ஆண்டுகளாக அந்நாட்டைத் தாக்கிப் பாழாக்கி வருகிறது. ஆப்கானிஸ்தானத்துக்குப் படைகளை அனுப்பிட, பாக்கிஸ்தானின் உதவி அமெரிக்காவுக்கு வேண்டப்படுகிறது. இந்த அமெரிக்கா-பாக்கிஸ்தான் உறவு இந்திய அரசுக்கு ஆபத்தானது.

இந்திய அரசு, அமெரிக்காவுடன் ஆன உறவுகளை மேலும் மேலும் வலுப்படுத்திக் கொள்ளுவது, காலப்போக்கில், இந்தியா ஓர் ஏகாதிபத்திய வல்லரசாக உருவாகவும், இந்திய மாநிலங்களுக்கு இப்போது இருக்கிற உரிமைகளைப் பறிக்கவுமே வழிவகுக்கும்.

எனவே, இந்தியவிலுள்ள எல்லா மாநில மக்களும் இந்தியா ஓர் ஏகாதிபத்திய நாடாக உருவாவதை எதிர்த்துப் போராட வேண்டும். இதற்கு ஒரு நல்ல தொடக்கமாக ஜம்மு - காஷ்மீர் மக்களின் தன்னாட்சி உரிமைப் போராட்டத்துக்கு எல்லா ஆதரவையும் இவர்கள் அளிக்க முன்வரவேண்டும்.

உரிமை பறிக்கப்பட்ட எல்லா மாநிலங்களிலும் இந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வைப் பரப்பிட எழுச்சியுடன் செயல்பட எல்லோரும் முன்வாருங்கள்.

இவையெல்லாம் நடைபெறாமல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குத் தானாகவே தன்னாட்சி உரிமை வந்துவிடாது.

Pin It