விசேஷங்களுக்குப் போகிற பொழுதெல்லாம் துணிமணிகளை எடுத்து வைக்கிற போதுதான் குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. எதை எடுக்க, எதை வைக்க என்று மனிதன் எல்லாத்திசைகளிலும் வாதப் பிரதிவாதங்கள் எழும். மனம் ஒன்றைத் தேர்வு செய்தால் மூளை அதை மறுதலிக்கும்.

ஆடைகளின் வண்ணங்கள் குழப்பங்களைப் பார்வையில் ஏற்படுத்தும். எந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு எந்த மாதிரியான ஆடை பொருத்தம் என்ற கேள்வி எழும்.

இப்பொழுதெல்லாம் எந்த விசேஷங்களுக்குப் போனாலும் குறைந்தது ஒரு வாரமாவது தங்க நேரிட்டு விடுகிறது. அதிலும் மனைவி வழி உறவு விசேஷங்களென்றால் பத்து நாட்களாவது இருக்க வேண்டிய நிலை. நான்கு ஜோடி ஆடைகள், உள்ளாடைகள், பனியன்கள், ஷு அணிவதென்றால் அதற்கும் இரண்டு ஜோடி காலுறைகள், ஷேவிங் செட், பவுடர், சோப்பு சீப்பு, கண்ணாடி என்று ஒரு கல்யாண வீட்டுச் சாமான்கள் சூட்கேஸில் அடைக்க வேண்டும்.

அடைக்கப்படுகிற சூட்கேஸ்களும் பரிணாம வளர்ச்சி பெற்றுவிட்டன. தாத்தா காசிக்குப் போகும் போது மூட்டை கட்டிப் போனார். மூட்டை கைப்பையாகி கைப்பை டிரங்குப் பெட்டியாகி, டிரங்குப் பெட்டி சூட்கேஸ் ஆகி தோள்களில் சுமந்து செல்ல வேண்டிய நிலை. இப்போது அதுவும் மாறி விட்டது. தூக்கித் தூக்கித் தோள் பட்டையை இழுக்கும் சூட்கேஸ்கள், இப்போது சக்கரப் பெட்டிகள் ஆகிவிட்டன. சொடக்குப் போட்டால் கூடவே வரும் நாய்க்குட்டிகள் போல சூட்கேஸ்களை சக்கரம் கட்டி இழுக்கின்றனர். இருந்தாலும் போர்ட்டர்கள் என்னவோ தலையில் தான் சுமக்கின்றனர். பழைய கால டிரங்குப் பெட்டிகள் இப்போது பரண்களில் பழைய பாத்திரங்களைப் பாதுகாக்கின்றன.

ஆடைகளை எடுத்து வைக்கும்போது தான் திகட்டல் என்றால் வண்ணங்கள் கண்ணாமூச்சி காட்டும். இதற்கு இதுதான் எனப் பொருத்தம் பார்ப்பது ஆடைகளுக்கும் பொருந்தும். பொருத் தங்கள் சரியாக இல்லாத போது கோலங்கள் மாறி வாழ்க்கையும் காட்சிப் பிழைகளாகி விடும்.

கறுப்பு பேண்ட்டுக்கு மஞ்சள் சட்டை, அதிலும் புள்ளி, பூக்கள், கோடுகள் என்று வகை; வெள்ளைச் சட்டைக்கு பிரௌன் மேட்ச் பார்த்து அணிவதே அழகு என்பது ஆடைத்தத்துவமாகி விட்டது. பார்க்கிறவர்களும் முகங்களுக்கு முகமன் கூறுவது கிடையாது.

அணிந்து வருகிற துணியின் நேர்த்தியையும், அழகையும் வைத்துத்தான் வரவேற்பும் வார்த்தை களும், பட்டு வேட்டியும், பட்டுச் சட்டையும், சபாரி டிரஸ்சும் ஆண்களுக்கு என்றால், பட்டுச் சேலையும் பவுன் நகைகளும் சுமக்கும் பெண்களுக்கும் நிகழ்ச்சியில் முதல் வரிசையும் பந்திகளில் முதல் அழைப்பும் என்பது மரபு விதி. ஆள்பாதி ஆடை பாதி என்ற மெய்ப்பொருள் உண்மையாகும்.

பெண்களும் ஆடை அணிதலும் என்பதை வைத்து ஒரு முனைவர் பட்டமே வாங்கி விடலாம். எதற்கு எது என்பது அவர்களால் பார்வையிலேயே தீர்மானிக்க முடியும். எல்லாமே பொருத்தம் பார்த்து அணியும் சில பெண்கள் வாழ்க்கையில் இதைப் பாராது கோட்டை விடுவது புரியாத ஒன்று.

புதிதாக ஆடைகளை அணிந்தபின் வெளியே போகும் போது நமது நடையே நமக்கு அன்னியப் பட்டு விடுகிறது. ஆனால் இதைப் “பந்தா” என்று சிலர் கூறுவது தான் ஏனென்று தெரியவில்லை.

ஆடைகளை அணிவதில் தான் இந்தப் பாடு என்றால் ஜவுளிக்கடைகளில் அதைத் தேர்வு செய் வதற்குள் போதும் போதும் என்று மூச்சுத் திணறி விடுகிறது.

ஜவுளிக் கடைகளெல்லாம் இப்போது ஜவுளிக் கடல்களாகிவிட்டன. விரித்த பாயும் ரேக்குகளில் வரிசைப்படுத்தி வருபவர்களை உட்காரச் சொல்லி எடுத்துக் கொட்டும் ஜவுளிக்கடை. அதன் வாசலி லேயே கழுத்தில் அளவு டேப்புடனும் காதில் பென்சிலுடனும் தையல் மிஷினோடு அமர்ந் திருக்கும் டெய்லர். கிராமங்களில் மட்டுமின்றி நகர்களிலும் தென்பட்ட பழைய துணிக்கடைகள் இப்போது பஸ் நுழையாத பாமரத்தனமான ஊர்களில் கூடக் காண முடியாது. சினிமா நடிகர் விளம்பரங்கள் விற்பனையைச் சூடுபடுத்தும். வெளிநாட்டு மில் தயாரிப்புகள் புன்னகைக்கும்.

நகர்களிலும் பாதிப் பகுதிகள் இப்போது ஆயத்த ஆடை அணியகம், அங்காடி, ஸ்டோர்ஸ், டெக்ஸ்டைல்கள் என்று பெரும் பெரும் ஜவுளி மால்களாகி விட்டன. உயரமான கட்டடங்கள், உள்ளே செல்லத் தானாகத் திறக்கும் கதவுகள், நகரும் மின் படிக்கட்டுகள் வண்ணங்களைத் தூவும் மின் விளக்குகள், சீருடை அணிந்த பணிப் பெண்கள், ஆண்கள், ஒளி வெள்ளத்தில் தொங்கும் துணிகள், தைத்தவை, தைக்காதவை என்று தனித் தனியே காட்டப்படும் ஆடை உலகங்கள், ரேமண்ட், பாம்பே டையிங், விமல் என்று கவர்ச்சியான மில் விளம்பரங்கள் திரையில் ஓடும்.

மதுரையிலும் ஒரு காலத்தில் நூற்பாலை களும், கைத்தறி நெசவுப் பட்டறைகளும் நிறைந் திருந்தன. ஹார்வி மில் என்று அறியப்படும் கோட்ஸ் ஆலை மதுரையின் முக்கிய அடையாள மாக இன்றும் விளங்குகிறது.

இலண்டனில் உள்ள மான்செஸ்டருக்கு நிகராகவும் லங்காஷையர் மில்லுக்கு இணை யாகவும் துணிகள் நெய்யப்பட்டு நாடெங்கும் விற்பனைக்குச் சென்றன. நேரந் தவறாமைக்குச் சான்றாகத் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றனர். ஹார்விமில் சங்கு ஒலிப்பதை வைத்துத் தங்கள் கடிகாரங்களை மதுரை சரி செய்தது. ஒரு காலத்தில் நீராவியால் ஓடிய மில் பின்னர் மின்சாரமய மானது. நீராவித் தண்ணீர் சுடுதண்ணீர் வாய்க் கால்களாக ஓடி வைகையைத் தழுவியது.

இதன் அருகே ஸ்காட்ரோடையும் மில்லின் வாயிலையும் இணைக்கும் மதுரையின் முதல் சுரங்கப்பாதை புகை வண்டித் தண்டவாளங் களுக்கு அடியே பூமிக்குள் போக்குவரத்தை நடத்தியது. தொழிலாளர்களுக்காகத் தனி ரயிலே விடப்பட்டது. 1990 வரை இது நடந்தது.

ஹார்மிவில் தொழிற்சங்க வரலாறு மிகப் பெரியது. எப்போதும் இதன் அருகே தொழிலாளர் கூட்டங்கள் நடக்கும். மே தினப் போராட்டம், உலகத் தொழிலாளர் எழுச்சிகள், வர்க்க உணர்வு வரலாறுகள் என்றெல்லாம் தொழிற்சங்கத் தலை வர்கள் பேசுவார்கள், வெளிமாநிலத் தலைவர் களும் அடிக்கடி உரையாற்றுவார்கள்.

‘உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்’ என்ற வாசகங்கள் அடிக்கடி ஒலிக்கும். சங்க நிர்வாகிகள் சந்தா, நன்கொடை என்று பார்ப் பவரிடமெல்லாம் இரசீதுப் புத்தகங்களை விரிப் பார்கள். பண்டிகை காலங்களில் போனஸ் கேட்டுப் போராட்டம் நடக்கும்.

ஹார்விமில் தொழிலாளர்களில் பெரும் பாலோர் தெலுங்கு பேசும் நாயுடு சமூகத்தவ ராகவே இருந்தனர். இதற்கு மில் அமைந்திருந்த ஆரப்பாளையம் பகுதியில் இச்சமூகத்தினர் அதிக மாக வாழ்ந்ததுவும், செயல்பட்ட தொழிற்சங்கங் களில் இச்சமூக ஆதிக்கம் நிலவியதும் கூட ஒரு முக்கியமான காரணம் என்று சமூகவியலாளர் கூறுகின்றனர். இதற்கு அடுத்த நிலையில் பிள்ளை மார் சமூகத்தவர் இருந்தனர் என்கின்றனர்.

மதுரையின் தென்பகுதியான பழங்கானத்தத் திற்கும் கிறித்தவர்கள் மதுரைக்கு வந்து முதன் முதலாக கால்பதித்த இடமான பசுமலைப் பகுதிக்கும் இடைப்பட்ட பைகாராவில் மதுரையின் புகழ்பெற்ற பெரிய ஆலைகளில் ஒன்றான மகா லெட்சுமி மில் இயங்கி வந்தது. பல்லாயிரம் பேர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பளித்த இம்மில்லுக்கு வந்து போக பசுமலை ரயில் நிலையமும் மதுரையின் பழைய மையப் பேருந்து நிலையத்திலிருந்து விடப்பட்ட நகரப் பேருந்துகளும் பயன்பாட்டில் இருந்தன.

1934-இல் இம்மில் நிர்வாகம் கடைப்பிடித்த தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் தொழிலாளர் களுக்கும் பொதுமக்களுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தின. இதனால் ஆலைக்கதவுகள் அடைக்கப் பட்டன.

பலகட்டங்களாகத் தொழிலாளர் தலைவர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அன்று ஆட்சியிலிருந்தவர்களும் மாவட்ட நிர்வாகமும் ஆலை உரிமையாளருக்கு ஆதரவான நிலையைக் கொண்டிருந்தனர்.

போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதற் கான இரும்புச் சட்டிதொப்பி (மலபார்) போலி சாரும் உள்ளூர்க் காவலர்களும் குவிக்கப்பட்டு பைக்காரா பகுதியைக் குருதி வெள்ளத்தில் குளிப் பாட்டினர். அப்பகுதியில் நடந்து செல்ல வியலாத படி போலீஸ் சட்டம் 30-இன்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தண்ணீர் பிடிப்பதற்குக் கூடப் பெண்கள் வெளியே வரமுடியாதபடி அடக்கு முறை நிலவியது.

ரத்த சாட்சிகளாகத் தொழிலாளர்கள் நடத்தி வந்த இப்போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் தோழர் ப. ஜீவானந்தம் தலை மையில் அப்போது நடுத்தர வயதுடையவர்களான தோழர்கள் கே.டி.கே. தங்கமணி, என்.சங்கரைய்யா, ஏ.பாலசுப்பிரமணியன் அப்போது தான் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியில் வந்த மாணவரும் பின்னால் பெரிய தலைவராக உருவெடுத்தவருமான 25 வயது தோழர் பி.ராமமூர்த்தியும் ஐ.மாயாண்டி பாரதி போன்றவர்களும் தொழிலாளருக்கு ஆதரவாகக் களத்தில் குதித்தனர்.

மதுரை திருநகரில் வசித்து வந்த அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவரும் அருப்புக் கோட்டைத் தொகுதி, சட்டமன்ற உறுப்பினரும் தேசியமும் தெய்வீகமும் இரு கண்களென வாழ்ந்த வருமான பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் தலைமையில் வி.எஸ். கந்தசாமி து.லா.சசிவர்ணத் தேவர், ஏ.ஆர். பெருமாள், சௌடி சுந்தரபாரதி, கண்ணகி நாளிதழ் ஆசிரியர் ஆர். சக்திமோகன் போன்றவர்களும் கலந்து கொண்டனர். இரண்டு கட்சித் தோழர்களும் அண்டை மாவட்டங்களில் எல்லாம் இருந்து தினமும் வந்தனர். மறியல்கள், கைதுகள் என மதுரையில் பரபரப்பாக இருந்தது.

1934 முதல் 1936 வரை தொடர்ந்து கதவடைப் புக்கு எதிராகவும் உரிமைக்காக விட்டுக் கொடுக் காமலும் நடந்த இப்போராட்டம் கடுமையாக நடந்தது. காவல்துறை பலவித பிரித்தாளும் தந்திரங் களைக் கடைப்பிடித்து ஆலை நிர்வாகத்தின் அடி வருடிப் பணியைச் செய்தாலும் தொழிலாளர் மனங்கள் இதைத் தூசிகளாகக் கருதிப் போராடியது. தொழிலாளர்கள் மீது திருப்பரங்குன்றம், மதுரைக் காவல்துறை தினமும் எப்.ஐ.ஆர். பதிந்தனர்.

இப்போராட்டத்தில் “தேவரைத் தூக்கி உள்ளே போட்டால் எல்லாம் முடிந்துவிடும்” என்று அர்த்தமில்லாமல் நினைத்து ஆட்சியாளர்கள் 1935-இல் பசும்பொன் தேவரைச் சிறையில் அடைத் தனர். பொது அமைதியைக் குலைத்ததாக வழக்கு போடப்பட்டது.

தோழர் ஜீவாவும் கே.டி.கே. போன்றவர்களும் அடியாட்களால் தாக்கப்பட்டாலும் அஞ்சாது போராடினர். அடிக்க வந்த காவலரின் பிரம்பைக் கைகளால் பிடித்து தோழர் பி.ராமமூர்த்தி இழுத்தார் என்று வரலாறு தெரிந்தவர்கள் கூறுகின்றனர். மேடைகளில் தோழர் ஜீவாவின் பேச்சு அனலைக் கிளப்பியது.

1936இல் நிர்வாகம் சமரசம் காண முற்பட்ட போது கோரிக்கைகளை முழுவதும் நிறைவேற்றினால் தான் கையொப்பமிடுவேன் என்று தேவர் மறுத்து விட்டார். தோழர் ஜீவாவிடம் “மில் திறக்கட்டும் வெளியே வருவேன்” என்று கூறினார்.

கடைசியில் பசும்பொன் தேவர் சிறையில் இருந்த நிலையில் நிர்வாகத்திடம் ஜீவாவும், கே.டி.கே.யும் பேச்சு நடத்தி சமரச ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். போராட்டம், வழக்குகள் முடிவுக்கு வந்து தொழிலாளர்கள் பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் பெற்றனர். புல்லரிக்கும் புரட்சிகர வரலாறுகள் மதுரையில் தான் நடந்தன என்பது இன்றுவரை மதுரைக்குப் பெருமை.

தேர்தல் நேரங்களில் மதுரையின் தொழிலாளர்கள் முன்னணியில் நிற்பார்கள். தொழிலாளர்களிடையே பிரச்சினை வரும்போது லேபர் கோர்ட், காவல்துறை சுறுசுறுப்பாக இருக்கும். ஹார்வி மில் செய்திகள் என்று நாளிதழ்களில் தனிப்பகுதியே இடம்பெறும். மதுரையின் அரசியல், ஆலைப் பகுதிகளைச் சுற்றியே சுழன்றது.

இன்று உலகமயமாக்கல், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், உற்பத்திப் பிரச்சினைகளால் பிரம் மாண்டமான ஹார்வி மில் இன்று கோட்ஸ் வயல்லாவாகச் சுருங்கிச் சிறிய பஞ்சாலையாகி விட்டது.

ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ, தேசிய பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம், ஹிந்து மஸ்தூர் சபா, எஸ்.ஆர். வரதாஜுலு நாயுடுவின் மில் தொழி லாளர் சங்கம் என்று கலகலப்பான மதுரை தொழிற்சங்க வரலாற்றில் தி.மு.க.வின் தொ.மு. சங்கம் மிகவும் தாமதமாகவே இணைந்தது. தொழிற் சங்க அரசியலில் தி.மு.க.விற்குத் தொலைநோக்கு கிடையாது. இம்மில் சார்பாக மதுரை லேபர் ஹைஸ்கூல் இயங்கி வருகிறது. இதுவும் இப்போது தள்ளாடுகிறது.

மதுரையின் முக்கிய அடையாளமான மற்றொரு ஆலை மீனாட்சி மில், ஹார்வி மில்லுக்கு நிகராக இயங்கி லாபம் பார்த்தது. இன்று மீனாட்சி மில் அக்ரினி, வசுதாரா அபார்ட்மெண்ட்டுகளாகி விட்டது.

மதுரை கப்பலூர் தியாகராசர் நூற்பாலையும் மதுரை புது ராமநாதபுரம் சாலை சென்டினரி மில்லும் மட்டுமே இன்று இயங்கி வருகின்றன.

மணிநகரம் ராஜா மில், பரவை மீனாட்சி மில், பைகாரா மகாலெட்சுமி மில், தேனூர் மில், திருநகர் செஷையர் மில், விளாங்குடி, வாடிப் பட்டிகளில் இயங்கிய விசாலாட்சி மில்கள், சௌராஷ்டிரா இனத்தவரின் திருநகர் சீதா லெட்சுமி மில், இவைகளெல்லாம் பல்லாயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளித்து, பிற்படுத்தப்பட்ட வாழ்க்கையை ஸ்திரப்படுத்தி வந்த காமதேனுப் பசுக்களாகும்.

இன்று இவைகளெல்லாம் மடி வற்றிய பசுக்களாகி இதையே நம்பிய மக்களின் வாழ்க்கை களின் நம்பிக்கைகளைச் சிதிலமாக்கிவிட்டன. ஓடியாடி உழைத்த தொழிலாளர்களெல்லாம் பெட்டிக்கடைகள், தேநீர்க்கடைகளை வைப்ப தோடு சம்பளம் தேடி வேறு வேலைகளுக்குச் சென்று விட்டன என்பது சமூக அவலங்களில் முக்கியமானது.

ஆலைத் தொழில்களின் சரிவிற்கு அரசின் கொள்கைகளும் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலான மின்வெட்டும், மாநில மத்திய அரசின் ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கைகளில் ரிலையன்ஸ் போன்ற “கார்ப்பரேட்”டுகள் நுழைந்ததும் கூட முக்கிய காரணம். புகழ்பெற்ற சென்னை பின்னிமில் இன்று சினிமா ஸ்டண்டு காட்சிகளில் மட்டுமே காணப்படுகிறது.

தமிழகத்தின் பாரம்பரியமான சுங்கடி சேலை, கூறைநாட்டு நெசவுப்புடைவைகள், காஞ்சிபுரம், ஆரணி என்று பட்டு நெசவுகளில் தடம் பதித்த சேலைகள், ஈரோடு, பவானி, வடசேரி வேட்டிகளும் ஜமுக்காளம் துண்டுகளும் மட்டுமல்ல,

மதுரை, சின்னாளப்பட்டி கைத்தறி நெசவுச் சேலைகளெல்லாம் மூலப்பொருள் விலை உயர்வு, தொழிலாளர்களின் ஊதியம், மக்களிடையே வரவேற்பின்மை, மின்சாரத் தட்டுப்பாடு அரசின் கெடுபிடியான சட்டங்களால் “கோ-ஆப்டெக்ஸ்”கள் வாங்கினாலே போதும் என்று தள்ளாடுகின்றன. கைத்தறி நெசவு என்பது தமிழரின் பாரம்பரியச் சின்னமாகும்.

செல்லூர், பாலரெங்காபுரம், முனிச்சாலை, கிருஷ்ணாபுரம், மகால் பந்தடித் தெருக்கள், தவிட்டுச் சந்தைப் பகுதிகளிலெல்லாம் ஒரு கட்டத்தில் ஓடம் ஓடும் நெசவுச் சத்தங்களே கேட்டு வந்தன. தெருக்களிலெல்லாம் அறுக்கப்பட்ட வண்ண மயமான நூல்கள் கிடக்கும். நெசவுத் தொடர் பான பொருட்கள் விற்பனை ஸ்டோர்கள் சுற்றி இருந்தன.

சாயம் ஏற்றுதல், ராட்டைகள் மூலம் சுற்றி டப்பாக்களில் நூல்களை அடைத்தல், தெருக் களில் எதிரெதிராகக் கம்பிகளை நட்டு அதில் நூல் கற்றைகளைப் பிரித்து சிக்கல்கள் எடுத்தல், இந்த நெசவுக் கூடங்களைச் சுற்றி அமைந்த காபிக் கடைகள், உணவு விடுதிகள், வடைக் கடைகள், இத்தொழிலாளிகளைச் சுற்றி மையம் கொண்ட அரசியல் இன்று எல்லாம் சீட்டுக் கட்டு கோபுரம் போலச் சரிந்து விட்டன.

நூலும் பாவுமாக வாழ்க்கையில் நெசவு தவிர வேறெதுவும் தெரியாத கடுமையான உழைப்பாளி களான சௌராஷ்டிர மக்கள் செல்லூர் பகுதி முஸ்லீம்கள், தலித் வாழ்க்கைகளெல்லாம் இன்று வேறு தொழில்களின் கூலி வேலைக்கு மாறி விட்டது காலத்தின் கொடுமை.

ஊருக்கெல்லாம் மானம் காத்தவன் இன்று தமது வாழ்வைக் காக்க தாங்கள் நெய்த துண்டு களையும் வேட்டிகளையும் விற்பதற்குச் சாலை முக்குகளில் தோள்களில் சுமப்பது விளக்குத்தூண் பகுதி அவலங்கள் - பெண்கள் தையல் தொழில், சேலை விற்பனை என்று மாறிக் குடும்பம் காக் கின்றனர். தவணை முறைகளில் சீட்டுக் கட்டி எளிய மக்களும் வாங்குகின்றனர்.

உலகு புகழ் வள்ளுவர் கூட நெசவாளர் தான் என்று கைத்தறி விழாக்களில் மட்டுமே உரை யாற்றுகிற தலைவர்கள் தங்கள், இடுப்புகளில் பாம்பே மில்களைக் கட்டுகின்றனர். சின்னச் சின்ன இழை பின்னி வரும் என்ற பட்டுக்கோட்டை பாடல்கள் விழாக்களில் மட்டுமே ஒலிக்கின்றன.

கைத்தறி நெசவையும் மதுரை மில்களின் தயாரிப்புகளையும் இன்று சூரத், அகமதாபாத், மும்பை மில்களின் துணிகளும் வெளிநாட்டு இறக்குமதிகளும் பிடித்துக் கொண்டு விட்டன. ஓட்டோ, பீட்டர் இங்லாண்ட், அரிஸ்டோ என்ற ஆடம்பரப் பெயர்களின் மோகம் மதுரை இளைஞர் களை மோகினிப் பேய்களைப் போலப் பிடித்துக் கொண்டுள்ளன.

தலை துவட்டுகிற துண்டுகளுக்கும், ஜட்டி பனியன், டி.சர்ட்டுகளுக்கும் மட்டுமே இன்று மக்கள் திருப்பூரை நாடுகின்றனர்.

இன்று ஜவுளி உலகம் தலைகீழாக மாறி விட்டது. குவிந்து தேங்கியுள்ள கோடவுன் சரக்கு களை ஆடித்தள்ளுபடிகளில் மக்கள் அள்ளிக் கொண்டு போகிறார்கள். விற்றவைபோக மீத முள்ளவைகளைப் புதிய இறக்குமதி என்று பண்டிகை காலங்களில் அணிகிறார்கள்.

நகர்மயமாதலின் விளைவு இன்று பெரும் மோகமாகி விட்டது. உள்ளூரிலேயே கிடைத்தாலும் கூட அதையே பெரிய நகரங்களில் வாங்கினால் தான் மக்களுக்குத் திருப்தி.

உள்ளூரின் மஞ்சள் பைகளில் கிடைக்காத கௌரவம் நகரக் கடைகள் கொடுக்கும் கட்டைப் பைகளிலும் சூட்கேஸ், தோல்பைகளிலும் கிடைப் பதான ஒரு நினைப்பு உள்ளூர ஓடுகிறது.

கட்டைப் பைக்கும் அன்பளிப்புப் பொருளுக்கும் வாங்கும் பொருட்களின் விலைகளிலேயே ஒரு மறைமுகப் பிடித்தம் இருக்கிறது என்பதைப் படித்திருந்தும் பாமரர்களாக இருப்பவருக்கே புரியவில்லை.

கண்ணை மயக்கிக் கருத்தைக் குழப்பி எப்படி யாவது வாங்கவேண்டும் என்று தூண்டும் தோற்றங் களுடன் காட்சிக்கு வருகின்றன. ஏழு வண்ணங் களுக்கும் மேலான வண்ணங்கள் உள்ளன. வண்ணங் களிலும் லேசான, அடர்த்தியான, என்ற பிரிவுகள், வாங்கும் தொகைகளுக்கேற்ப அடுக்கி வைக்கப் பட்டுள்ள சேலைகள், ரெடிமேட் ஆடைகள், (ரெடிமேட் சட்டைகளில் உள்பாக்கெட் கிடையாது) குறைந்த சம்பளத்திற்குக் கால் கடுக்க நிற்பது புரிந்தும் கால் வலியை மறந்து புன்னகைத்து வாடிக்கையாளரை வரவேற்கும் அங்காடித்தெரு ஷோரும் பணியாளர்கள். சிறுவர்கள் தொல்லை தராமல் இருக்கக் காட்டப்படும் ஸ்பைடர்மேன், சோட்டாபீம் சுட்டி டிவிக்கள். வருடத்தில் ஒரு நாள் உடுத்துவதற்காக ஐம்பதாயிரத்தில் ஒரு சேலை எடுக்கும் மேட்டுக்குடி மக்கள், முந் நூறுக்குள் என்று கூறைப்புடைவை, சுங்கடி சேலை தேடும் எளிய பாமர மக்கள், ஒரு மீட்டர் ஐந்நூறு ரூபாயா என்று வாய் பிளக்கும் விளிம்பு நிலைச் சிறார்கள், ரம்ஜானுக்கு சேலை எடுக்கும் இஸ்லாமியர், கிறிஸ்துமஸிற்கு ஸ்கர்ட் தேடும் மாணவியர் என்று ஜாதிமத பேதமில்லாத மக்களின் சங்கமம் திகழும் சமரச பூமி ஜவுளிக்கடைகள்.

எப்படியோ ஒன்றை எடுத்து வரும் போது உப தொழில்களாக உள்ளேயே பவுடர், பெல்ட்டுகள், கண்ணாடிகள், சாக்லேட் விற்பனை நடக்கும். கடலைத் தாண்டி விடுபட்டு வெளியே வரும் போது பணப்பை மெலிந்து கைப்பை கனக்கும். எல்லா ஊர்களிலும் ஆடை சார்ந்த தொழில்கள் ஒரே இடத்தில் அமைந்து வருகின்றன. சுற்றிலும் தேநீர் உணவு விடுதி, சிறுவர்களுக்கு பலூன், விளையாட்டுப் பொருட்கள், ஹேர்பின் போன்ற பேன்சிப் பொருட்கள் என்று வணிகங்களால் சாலை பரபரப்பாகும்.

ஒவ்வொரு முறை ஆடைகளைத் தேர்வு செய்யும் போதும் மனதிற்குள் பதுங்கியிருந்த வண்ண ருசி தேடும் மனிதம் ஒவ்வொரு முறையும் வெளிப்பட்டு விடுகிறது. துணிகளில் மட்டுமல்ல மானிட மனம் எல்லா விஷயங்களிலும் வண்ண ருசி தேடுகிறது. ஆண்கள் வாய்விட்டுச் சொல் வதைப் பெண்மை சொல்ல (சிலரால்) முடியாது.

துணிகளில் கறுப்பு என்பது ஒதுக்கப்பட்ட வண்ணமாகக் கருதப்படுகிறது. துக்கங்களும் சோகங்களும் இதன் குறியீடாக உணர்த்தப் படுகிறது. இருந்தாலும் கன்னிச் சாமிகளும் கழக அனுதாபிகளும் இதையே பிடித்த நிறமாக எண்ணுவது ஏனென்று புரியவில்லை. மஞ்சளாடை எப்போதும் மங்கலம் தான். ஆனால் மனிதன் நஷ்டப்பட்டுப் போனால் அவனை மஞ்சள் கடுதாசி கொடுத்தவன் என்று அமங்கலமாகக் குறிப்பிடுவது சரியா என்ற கேள்வி எழுகிறது. ஒரே வண்ணத்திற்கு இரு வேறு பொருள் என்றால் அது மஞ்சள் தானோ?

ஆடைகளைத் தேர்வு செய்த பின் அதை எந்த டெய்லரிடம் தருவது என்ற யோசனை வரும். சிலருக்கு ஆஸ்தான டெய்லர்களே இருப்பார்கள். மதுரை புது மண்டபத்தில் ஒரே இடத்தில் நூறு டெய்லர்கள் இருக்கிறார்கள். குறைந்த கூலிக்குச் சேவை செய்கிறார்கள்.

ஒவ்வொரு டெய்லர் முகத்திலும் சொர்க்கத்தை தீர்மானிப்பவர்கள் நாங்களே என்ற கம்பீரம் தோன்றி நிற்கும். மனிதனின் மறு பாதியைத் தீர் மானிப்பவர்களே நாங்கள் தான் என்ற அசத்த லான பார்வை நம்மீது விழும்.

கடைகளில் எடுத்து வந்து தரப்படும் துணி களின் விலையைக் காட்டிலும் தையற்கூலி இரண்டு மடங்காக இருக்கும். கேட்டால் “உழைக்கணு மில்லே” என்ற பதில் வரும்.

என் வீட்டிற்கு அருகில் தையற்கடை வைத்திருந்தவன் கே.முத்துப்பாண்டி, உள்ளூர் தையல் ஓசித்தையல் என்று வருபவர்களெல்லாம் “என்னப்பா” ஒரு அடி தானே?

இதுக்குப் போய் ரெண்டு ரூபாய் கேக்குறியே? என்று இலவசம் கேட்டதால் மும்பைக்குப் போய் கட்டிங் பழகி இன்று கே.எம்.பி. என்று நகரின் நடுவே பிளக்ஸ் போர்டு வைத்து கடை நடத்தி வருகிறான். மும்பையின் அனுபவம் இவனுக்குத் தையல் அடிப்படை, ஆடைகள் வடிவமைப்பு ஆர்வமோடு விஷயங்கள் என்று அத்துப்படியாகி இருந்தன. ஒரு நாள் மாலை கூறினான்.

“மேல்நாட்டில் ஆரம்ப காலங்களில் இரும்பு வளையம் வைத்த கிரினோலைன், ஸ்கர்ட்டு களுக்கு மேல் நெருக்கமான ரவிக்கை, பின்கோட், சூட், புல்ஷர்ட், கழுத்துப் பாம்பாக நெளியும் டை” என்று தையல் தொழில் வளர்ந்தது. மேலை நாடுகள் முழுவதும் பனிபடர்ந்தவைகள் என்பதால் அவர்கள் ஆடையே கனமான கோட், சூட் தான். அது மட்டுமல்ல இன்று நாம் “சிலாக்” என்று போடு கிறோமே? அது வெள்ளைக்காரன் வாரம் முழு வதும் கோட் சூட் போட்ட அலுப்பை மறைக்க விடுமுறை நாளில் அணிந்த அரைக்கை சட்டை. அவன் ஆங்கிலத்தில் ரிலாக்ஸ்சர்ட்” என்றான். நாம் அதைத் தமிழில் சிலாக் (அரைக்கை) சட்டை என்று வருடம் முழுவதும் அணிகிறோம். ஆடை களைத் தைத்து வாங்குவதில் மட்டுமல்ல, அணி வதிலும் ஒரு கம்பீரம் தெரிய வேண்டும். நமது ஆடைகளில் பழமை மறைந்து வருகிறது. முண்டாசு கட்டிய உழவன் தலையை வெள்ளைக்காரன் தொப்பி பிடித்துவிட்டது.

எனக்கு அவன் சொல்வது வியப்பாக இருந்தது. அரைக்கை சட்டை அணிகிறபொழுதெல்லாம் அது வெள்ளைக்காரனின் விடுமுறைக்கால ஆடை என்ற நினைப்பே எழுகிறது. என் அனுபவத்தில் விருதுநகர் வேலாமடைரோடு சுப்பையா என்ற ரேடியோ டெய்லர் தைத்துக் கொடுக்கும் டவுசர் சட்டைகள் தான் எனக்கு ஆடைகளாக விதிக்கப் பட்டிருந்தன. யூனிபார்ம் டவுசர் தொளதொள வென்று இருக்கும். அரைஞாண் கயிற்றால் இறுக்கி இருப்பேன். ஆறாவதில் போட ஆரம்பித்த அந்த டவுசர் சட்டைகள் மேலும் ஐந்து வருடங்கள் உபயோகத்தில் இருந்தன.

டவுசரில் இடுப்பு உட்புறம் கள்ளப்பாக்கெட் தைத்துக் கொடுப்பார். வீட்டில் எடுக்கும் காசுகள் அதில் குடி புகுந்து கனக்கும். சட்டை டவுசர்கள், பின்னி மில் துணியால் ஆனதால் உறுதியாக இருக்கும். சட்டைகளும் லாங்கிளாத், பாப்ளின், டெரிலின், டெரிகாட்டன், முழு சதவீத காட்டன் என்று பரிணாம வளர்ச்சி பெற்று விட்டன.

பாவாடை, தாவணி அணிந்தவர்கள் சுடிதார், கம்மீஸ் அணிவதும் வயதான பெண்கள் “நைட்டி” அணிந்து வருவதும் இன்று காலத்தின் கோலமாகி விட்டது. உள்ளாடைகள் அணியாமல் சில பேரிளம் பெண்கள் லேசான நைட்டிகள் அணிந்து வரும் போது “நைட்டியைத் தடை செய்யத் தீர்மானம் போட அரசு முன் வருமா? என்ற கேள்வி எழும். சிறு பிள்ளைகள் பாவாடை, சட்டையில் தான் அழகாக இருக்கின்றனர்.

டெய்லர்கள் பெண்களை அவர்களின் ஆடை அணிவதை வைத்தே தீர்மானிக்கலாம் என்கின்றனர். ஒரு தடவை கொல்காத்தாவிலும், மும்பையிலும், கூவாகம் திருவிழாவிற்கும் வந்த திருநங்கைகளின் ஆடை நேர்த்தியை இப்போதும் மறக்க முடிய வில்லை. ஆடை அணிவதை ஒரு தவமாகவும், கலையாகவும் கடைப்பிடிப்பதாகக் கூறிய அவர்கள் தங்களின் பெண்மையை வெளிப்படுத்துவதே தங்கள் ஆடைகளும் அவற்றைத் தேர்வு செய்யும் விதமும் தான் என்று கூறினர்.

ஆடையைப் பற்றியும் அழகு குறித்தும் கவிஞர் கண்ணதாசன் கூறியது நினைவுக்கு வருகிறது. வடநாட்டுப் பெண்கள் போல் முற்றிலும் மூடியும் மலையாளப் பெண்கள் போல முழுக்கத் திறந்தும் இருக்காமல் தமிழ்ப்பெண்கள் போல மூடியும் மூடாமலும் அணிந்து அழகு காட்டுவதே ஆடை என்பார்.

துணிகளைச் சோப்புப் போட்டு ஊறவைத்து கல்லில் துவைக்கும் போதும் துவைத்தவைகளைப் பிழிந்து உதறிக் காயப்போடுவதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடற்பயிற்சியாக இருந்தது. இப் போது வீரியம் மிகுந்த ரசாயனக் கலவைப் பொருட் களாலும் வாஷிங்மெஷின் உபயோகத்தாலும் “துணி துவைக்கச் சோம்பல்” பெருகிவிட்டது. துணிகளும் விறைப்புத்தன்மை இழந்து கிழிசல்கள் பெருகிவிட்டன. எங்கள் தெரு சலவைக்காரச் சகோதரர் ஒரு துணியைப் பார்த்த மாத்திரத்தி லேயே வாழ்நாளைக் கூறிவிடுவார்.

பேருந்துப் பயணத்திற்கு வேட்டி தான் சிறந்தது என்பதால் எப்போதும் பேருந்தில் ஏறியவுடன் முழுக் கால் சட்டையைக் கழற்றிவிட்டு வேட்டியைக் கட்டிவிடுவேன். நெருடல் இல்லாத, காற்றோட்டமான ஆடைகளைக் கண்டுபிடித்தவன் தமிழன் தான்.

வெட்டிய ஆடையை வேட்டி (வட்டுடை) என்றும், துண்டிக்கப்பட்ட துணியைத் துண்டு என்றும், சேயிழை ஆடை (பெண்கள்)யைச் சேலை என்றும், மேல்சட்டையைக் குப்பாயம் என்றும் கண்டுபிடித்த தமிழன் ஆடைகள் பற்றியும் விசாலப் பார்வை கொண்டிருந்தான். தமிழனின் ஆடை ஞானம் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது.

கந்தையானாலும் கசக்கிக் கட்டி வெள்ளுடை மனிதனாக வாழ்ந்தவன் தமிழன். ஆனால், இன்று வெள்ளைப் பேப்பரிலேயே எல்லாமும் முடித்துக் கொள்ளும் வெள்ளைக்காரனின் ஜீன்ஸ் தார்ப்பாய் துணிகளிலான பர்முடாஸ். ஜீன்ஸ் என்று அணிகிறோம். தண்ணீரில் நனைத்தாலும் நனையாத துணி என்ற விளம்பரங்கள் வேறு.

இன்று ஜீன்ஸ் துணிகளால் மலட்டுத்தன்மை, இறுக்கமான மார்பக ஆடைகளால் புற்றுநோய் என்று மானங்காக்கிற ஆடைகளால் நோய்கள் பெருகுகின்றன என்று கண்டுபிடிப்புகள் கூறுகின்றன. பெரும்பெரும் அறிஞர் பெருமக்களும் மாணவர்கள்போல இன்று ஜீன்ஸ் அணிவதாகக் கூறுகின்றனர்.

என்னதான் ஆயிரக்கணக்கில் செலவுசெய்து ஆடைகள் தைக்கத் துணி எடுத்து நூற்றுக்கணக்கில் செலவு செய்து தைத்து அணிந்தாலும்கூட அது புகைப்படத்திற்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம்.

ஆனால் நினைத்தபோது சப்பணம் கொட்டி உட்காரவும், காற்றோட்டமாக முழங்காலுக்கு மேல் ‘டப்பா’ கட்டு ஆக மடித்துக்கட்டி நடக்கவும் சுகமாக இருக்கிற ‘நான்குமுழம்’ வேட்டிக்கு இணையாக ஒரு ஆடைச்சுகம் வேறு எதிலும் இல்லை.

Pin It

ஒக்ரோபர் 2013

வீதியெங்கும் நின்றிருந்த வாகனங்களின் கீழ் காயமடைந்தவர்கள் இரத்தம் வழிய வழியக் கிடந்தனர்.

ஓரளவு நகர முடிந்தவர்கள் கைகளாலும் கால்களாலும் அரக்கி அரக்கி நகர்ந்தனர்.

மற்றவர்கள் கைகளை நீட்டிக் கதறினார்கள்.

எந்தக் குரலுக்கும் செவிசாய்க்க முடியவில்லை.

பார்வதியின் மனம் கதறி அழுதுகொண்டிருந்தது.

எறிகணையில் சிதறிப்போன உடல்கள் அப்படி அப்படியே கிடந்தன. அவற்றில் இலையான்கள் மொய்த்திருந்தன. உடல்களைக் கடக்கும் போதெல்லாம் இலையான்கள் குய்யென ஒலியெழுப்பி அடங்கின.

அபிராமி மூக்கைப் பொத்திக்கொண்டாள். அவற்றைப் பார்க்கவிடாமல் தலையைத் திரும்ப முடியவில்லை. திரும்புகிற பக்கமெல்லாம் ஏதோ ஒன்று கிடந்தது.

தினேஸின் தந்தையும் சகோதரிகளும் இருந்த இடத்திற்குப் போனார்கள்.

ஒரு பெண்ணுக்குத் தொடையில் றவுண்ஸ் கொழுவி அங்குத் தூக்கி வந்திருந்தார்கள்.

“முல்லைத்தீவுக்குப் போகப் போனாங்கள், நாசமாப் போவாங்கள் சுட்டுப் போட்டாங்கள்.”

“இப்பவும் ஏன் சனத்த மறிக்கிறாங்கள்” பார்வதி பொருமி னாள்.

“இரவுக்கு ஒரு திட்டமிருக்காம். அது முடியத்தான் சனத்தை விடச் சொல்லியிருக்கிறாங்களாம்.”

மக்களும் போராளிகளும் கலந்திருந்தார்கள்.

அரிசி, மா எல்லாம் தாராளமாகக் கிடைக்கத் தொடங்கியது. ஆயிரம் ரூபாவுக்கும் பெற முடியாத அரிசி விற்க முடியாமல் கிடந்தது. சீனி, பற்றறிகள், சாரங்கள், பாதணிகள், பால் மா, மீன் ரின் எல்லாம் தெருக்களில் வீசப்படுமளவுக்கு மலிந்தன.

வீதிகளில் நின்ற லொரிகளை உடைத்து பொருட்களை வெளியே எறிந்தனர்.

தண்ணீர் பெரும் தட்டுப்பாடானது. கிணறு வெட்டி வைத்திருந்தவர்கள் மற்றவர்களைத் தண்ணீர் அள்ள விடாது தடுத்தார்கள். நான்கு குடும்பம் இறைத்தால் வற்றிவிடுகிற அளவில் தான் தண்ணீரும் கிணறுகளில் இருந்தன.

நெடுந்தூரம் போய்த் தண்ணீர் கொண்டு வரவேண்டியிருந்தது. வழியில் நாறிக் கிடக்கும் பிணங்களைக் கடந்தே போக வேண்டும்.

பார்வதி இரண்டு வாளிகளில் தண்ணீர் கொண்டுவந்தாள். ஒரு வாளித் தண்ணீரில் இரு பிள்ளைகளையும் குளிப்பாட்டினாள். ராணிக்குக் கைகால்களையும் முகத்தையும் மட்டுமே அலம்பத் தண்ணீர் கிடைத்தது.

பார்வதி மாவைக் குழைத்து தட்டுப் பலகாரம் சுட்டாள். மா, சீனி, எண்ணெய் முதலானவை தாராளமாகக் கிடைத்ததால் நிறையவே செய்தாள். சீனியில் பாகு செய்து, அதில் போட்டுப் பிரட்டியதும் தனித் தனி பொலித்தீன் பைகளில் போட்டாள்.

“துர்க்கா, இந்தா இதை உன்ர பையில வை.”

ராணியிடமும் கலாவிடமும் ஒவ்வொன்றையும் தூக்கிக் கொடுத்தாள்.

இதற்குள் தினேஸ் அந்தக் கடார் நிலத்தில் ஒரு பதுங்கு குழியை வெட்டிமுடித்தான். ஆழமும் இல்லை. நீளமும் இல்லை. ஆனால் உட்கார்ந்தால் மறையுளமளவு வெட்டி மண்ணை மூட்டையில் கட்டி கரையில் அடுக்கினார்கள்.

“அதென்ன தனித்தனிப் பையும் பலகாரமும்” என்று தினேஸ் கேட்டான்.

“எட எப்பிடியாவது பிரிஞ்சிட்டாலும், அவரவர் பையில இருக்கிறதுதான் நல்லது” என்றாள் பார்வதி.

ஆங்காங்கே சனங்கள் அடுப்பு மூட்டிச் சமைத்தனர். ரொட்டியோ புட்டோ. “மாவை எல்லோருக்கும் குடுங்கோ” என்ற பார்வதி சீனியையும் அவ்வாறே பொது உடைமையாக்கினாள். மீன் ரின்கள் இரண்டைக் கறியாக்கினர். கூடி உண்டனர்.

மாலையில் தண்ணீர் தேடிப் போனாள். நேற்று தண்ணீர் அள்ள விடவே மாட்டோம் என்றவர்களைக் காணவில்லை. போய் விட்டனர். கூடாரங்கள் வெறிச்சோடியிருந்தன.

கிணற்றில் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அதிலிருந்து நூறு மீற்றர் இருக்கலாம். வெடிப்பொருட்கள் கொண்ட வாகன மொன்று வெடிக்கத் தொடங்கியது. கரும்புகை குபுகுபுவெனத் திரளாக மேலெழும்பியது. திடீர் திடீரெனச் சன்னங்கள் பறந்தன.

பார்வதி எதையும் பொருட்படுத்தாமல் குளித்துமுடித்தாள். கூடவே வந்த ஜனனியையும் அம்பிகாவையும் குளிக்கச் செய்தாள். கொண்டுபோன பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு திரும்பி வந்தார்கள்.

அந்தச் சூழலெங்கும் வெடிமருந்துக் குதங்களும், வாகனங்களும் எரிந்துகொண்டிருந்ததால் எறிகணைகள் வீழ்வதும் வெடிப்பதும் தெரியவில்லை.

வாண வேடிக்கைபோல சன்னங்கள் உயரப் பாய்ந்தன.

பேத்தி தமிழொளியும் இன்னொரு போராளியும் மீண்டும் வந்திருந்தார்கள். பார்வதி பொரித்த பலகாரத்தையும் கொடுத்து தேநீரும் ஊற்றிக் கொடுத்தாள். “ஏன் பிள்ளை, எல்லாருந்தான் விட்டிட்டுப் போயிற்றினம் எண்டுறாய். நீயும் நில்லன் பிள்ளை எங்களோட.”

தமிழொளி பேசாமல் இருந்தாள்.

நாலைந்து சிறுமிகள் அவர்களிடம் ஓடி வந்தனர். “எங்கள இயக்கம் வீட்ட போகச் சொல்லி அனுப்பீற்றுது. நாங்கள் அம்மா ஆக்களத் தேடித்திரியிறம்” என்று அழுதபடி சொன்னார்கள்.

“அங்க பிரதான தெருவுக்குப் போங்க, கன பெற்றார் பிள்ளையள் வருவினமெண்டு பாத்துக் கொண்டு நிக்கினம்” என்றாள் பார்வதி. அவர்கள் திரும்பி ஓடினர். பிடித்துச் செல்லப்பட்ட பிள்ளைகளைத் தேடிப் பெற்றோர் தெருவெங்கும் அலைந்தபடியிருந்தனர்.

“நீயும் நில்லு பிள்ளை” பார்வதி தமிழொளியிடம் மீண்டும் சொன்னாள்.

“வர ஏலாதம்மா... இண்டைக்கு இரவு ஒரு ஒழுங்கிருக்கு, அது பிசகினா வருவன். இல்லாட்டி பிறகு சந்திப்பம்.”

அவளுடன் வந்தவன் துர்க்காவின் பதுங்குகுழி மேலிருந்து அவசரப்படுத்தினான். “நேரமாச்சு நேரமாச்சு, இன்னும் அரை மணி நேரந்தான் இருக்கு....”

தமிழொளி எல்லோரையும் ஏக்கத்தோடு பார்த்தாள். “அவசர அவசிய வேலை. இப்ப நான் மாட்டனெண்டு சொல்ல ஏலாது” என மெதுவாகச் சொன்னவள் “நான் போறன்” என்றவாறு எழுந்தாள். அவளுடைய தேசிய அடையாள அட்டையையும், கொஞ்சம் பணத்தையும் ராணி அவளது கையில் திணித்து வைத்தாள்.

கூட வந்தவன் எழுந்தான். எல்லோரையும் கும்பிட்டு விடை பெற்றவன், “நாளைக்கு சனத்த விடுவாங்கள். இரவோட எங்கட வேலை முடியும்” என்றான். இருவரும் பக்கத்துக் கூடாரத்தின் ஊடாக நடந்து மறைந்து போனார்கள்.

(தமிழ்க்கவி எழுதிய ‘ஊழிக்காலம்’ நாவலின் சில பகுதிகள் - தமிழினி வெளியீடு.)

Pin It

ஐம்பதுகளில், தமிழ்நாட்டில் சின்ன ஊர்களில் இருந்து பெரிய நகரங்கள் வரை... அங்கிருந்த உணவகங் களுக்கு சாதிப் பெயர் வைக்கப்பட்டிருந்தன. சாதிப் பெயர் என்றால்... செட்டியார் ஓட்டல், முதலியார் கபே, நாடார் மெஸ், என்று பெயர்கள் சூட்டப்பட வில்லை. அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் தமிழகத்தில் “பிராமணாள் ஓட்டல்” என்கிற சாதிப் பெயரில் உணவு விடுதிகள் இயங்கின. ‘பிராமணாள் ஓட்டல்’ என்கிற பெயர்ப் பலகை வைத்திருப்பதைப் பெரியார் எதிர்த்தார். தெருக்களில் ‘பார்ப்பன ஜாதியம்’ தலைவிரித்தாடுகிறது. நம்மவர்களுக்கு இது கண்டு ஆத்திரம் வரவில்லையே... என்று பெரியார் வருத்தப்பட்டார். பெயர்தானே... இதில் என்ன இருக்கிறது... இப்படி விட்டுவிடத் தயாரில்லை பெரியார்.

அரசாங்கத்திற்கும் ஆளுநருக்கும் பெரியார் கடிதம் எழுதினார். ஓட்டல் நடத்த அரசு அனுமதி வழங்குகிற போது “சாதிப் பெயர் ஓட்டல் பெயர்ப் பலகையில் எழுதக்கூடாது” என்று நிபந்தனை விதிக்க வேண்டினார். அரசாங்கம் செவி சாய்க்க வில்லை. பெரியாரும் சும்மா இருக்கவில்லை. உணவகங்களில் பெயர்ப் பலகையில் உள்ள ‘பிராமணாள்’ எழுத்தழிப்புப் போராட்டத்திற்கு நாள் குறித்தார். போராட்டத்தில் கலந்துகொள்ள திராவிட கழகத் தோழர்களுக்கு அழைப்பு விடுத்தார். போராட்டத்தை ஒட்டிப் பெரியார் விடுதலை இதழில் எழுதிய அறிக்கையில்...

“அழிப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் அருள்கூர்ந்து எந்தவிதமான கலவரத்திற்கும் இடமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பது எனது பணிவான வேண்டு கோள். அது போலவே ஓட்டல் உரிமையாளர்களோடு வாக்குவாதத்திற்கும் கைகலப்பிற்கும் கண்டிப்பாக

இடம் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதை வணக்கத் துடன் தெரிவித்துக் கொள்கிறேன். போலீசு அதிகாரிகள் கைது செய்ய வந்தால் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் கைதாக இணங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்” என்று கேட்டுக் கொண்டார்.

பெரியாரின் இந்த நியாயமான போராட்டத்தை மறுக்க இயலாத வைதீகர்கள் வித்யாசமான விளக்கம் சொன்னார்கள். “பிராமணாள்” என்கிற வார்த்தை சாதியைக் குறிக்க எழுதவில்லை எனவும்... மரக்கறி உணவு அதாவது சைவ உணவு மட்டுமே இங்கே உண்டு என்பதைத் தெரிவிக்கப் போடப்பட்டது... என்றார்கள்.

பெரியார் இதனைக் கண்டித்து மறுப்பு அறிக்கை விடுத்தார்.

“அவர்கள் சொல்வது உண்மையாய் இருக்கும் பட்சத்தில் மரக்கறி பதார்த்தங்கள் ஓட்டல்” என்று போட்டுக் கொள்ளட்டும்” என்றார்.

இந்த விசயத்தில் ஒரு விசித்திரமான சங்கதி என்னவென்றால்... “பிராமணாள்” அழிப்பு வேண்டு கோளை ராஜாஜி எதிர்த்திருக்கின்றார். அதாவது அவரது எதிர்ப்புக்குரலும் மரக்கறி உணவு பற்றிய மையக் கருத்தாக இருந்திருக்கிறது. இதனை மீண்டும் எடுத்துக் காட்டிய பெரியார், “பிராமணாள் என்றால் மரக்கறி உணவை நன்றாகச் சமைக்கிறவன், நல்ல ருசியாக தயாரிப்பவன் என்று அர்த்தம் என்பதாக நொண்டிச் சமாதானம் சொல்கிறார் நமது ஆச்சாரியார். சரி நன்றாகச் சமைக்கிறான் சைவ உணவு இங்குக் கிடைக்கும் என்று போட்டுக் கொள். சாதிப் பெயரை சாக்குப் போக்குச் சொல்லிப் போடாதே. அது தவறு.” என்று பெரியார் விடுதலையில் எழுதினார்.

இந்திய நாட்டின் கவர்னர் ஜெனரல் பதவி வகித்தவர்... சென்னை மாநில பிரதமராக இருந்தவர்... சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்... காந்திஜியின் சம்பந்தி... இவ்வளவு சிறப்பிற்குரியவரின் மனோநிலை இந்த விசயத்தில் பிற்போக்குத்தனமாகவே இருந்திருக் கிறது.

தமிழ்நாடு முழுவதும் இந்தப் போராட்ட விளக்கக் கூட்டம் நடத்த முடிவானது. பெரியார் சேலத்தில் பேசு வதற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அதனைப் பெரியார் விடுதலையில் இப்படி எழுதினார்...

“இரண்டு நாட்களுக்கு முன்பு நான் ஏற்காட்டு மலையில் இருந்தபோது சேலத்து ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினர் கடிதம் ஒன்றைத் தந்தார்கள். அதைப் படித்துப் பார்த்தேன். என்னுடைய வேண்டுகோளைப் பத்திரிகைகளில் பார்த்தவுடன் உடனடியாக அவசரக் கூட்டம்போட்டு சேலத்தில் இருக்கிற எல்லா ஓட்டல் காரர்களும் ‘பிராமணாள்’ வார்த்தையை அழிப்பதற்கு முனைந்து விட்டார்கள். எனவே சேலத்தில் ஓட்டலில் அழிப்புபற்றிப் பேச வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது.”

பெரியாரின் முயற்சிக்குக் கைமேல் பலன் கிடைத்தது. ஆனால் சென்னை ஓட்டல்காரர்கள் அழிக்க முன்வராமல் முரண்டு பிடித்தார்கள். பெரியார் மீண்டும் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தார். இந்த விசயத்தை அவர் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வில்லை. இந்தப் போராட்டத்திற்காகத் தஞ்சையில் இருந்து “சாதி ஒழிப்புப் பிரச்சாரப் படை” என்று உருவாகி சென்னை நோக்கி வந்தது. பெரியார் இந்தப் படையைத் திண்டிவனத்தில் வரவேற்றுப் பேசினார்.

சென்னையில் ‘பிராமணாள்’ பெயர்ப் பலகைகள் உள்ள ஓட்டல்களில் மறியல் நடைபெற்றது. எல்லா ஓட்டல் உரிமையாளர்களும் ‘பிராமணாளை’ அழித் தார்கள். திருவல்லிக்கேணி முரளி பிராமணாள் கபே உரிமையாளர் மட்டும் வீம்போடு மறுத்தார். பெரி யாரின் தொண்டர்கள் இந்தக் கடையை இடைவிடாது மறியல் நடத்திக் கைதானார்கள். ஒரு கட்டத்தில் ஓட்டல் உரிமையாளர் ஓட்டல் பெயரை ஓசையின்றி மாற்றிவிட்டார். முரளி பிராமணாள் கபே என்பது முரளீஸ் அய்டியல் காபி சாப்பாடு ஓட்டல் என்றானது.

இன்று தமிழகத்தில் எங்கும் ஓட்டல் பெயர்ப் பலகைகளில் பிராமணாள் பெயர் இல்லை. ஆனால் ஊர் ஊருக்கு “அய்யங்கார் பேக்கரி” என்கிற பெயரில் பேக்கரி கடை சத்தமில்லாமல் நுழைந்திருப்பதைக் காணலாம்.

அதுமட்டுமல்ல... சாதிப் பெயரை ஒட்ட வைத்துக் கொள்ளாதவர்கள் பெண்கள் என்கிற பெருமை இருந்தது. இன்றைய தினம் தமிழ்த் திரையுலகில் சாதிப் பெயரைச் சேர்த்துக் கொள்ளும் பெண்களைப் பரவலாகப் பார்க்க முடிகிறது. நவ்யா நாயர், மேகா நாயர், லட்சுமி மேனன், பார்வதி ஓமன குட்டன், ஜனனி அய்யர், அபர்ணா பிள்ளை, மேக்னா நாயுடு, ஸ்வேதா மேனன், ஸ்வாதிசர்மா, இப்படிப் பட்டியல் நீள்கிறது.

நல்ல வேளை... இவர்களில் யாரும் தமிழ் நாட்டவர் இல்லை என்று திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்...!

Pin It

1917-ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சிக்குப் பிறகு புதிய மனிதனை உருவாக்குவதே சோவியத் ரஷ்ய இலக்கியத்தின் நோக்கம் என்று அறிவிக்கப் பட்டது. உலகத்தை மாற்றியமைக்கும் பேராற்றல் கொண்டவன் மனிதன் என்று புகழப்பட்டது. ‘மனிதன் மகத்தானவன்’ என்ற கருத்து எங்கும் எதிரொலித்தது. சமத்துவம், உழைப்பைப் போற்றும் குணம், சகிப்புத்தன்மை, பகிர்ந்துகொள்ளுதல், குழு மனப்பான்மை, ஒற்றுமை, போராடுதல் ஆகிய பண்புகள் விதந்தோதப்பட்டன. இப்புதிய பண் பாட்டிற்கு ஏற்ப சோவியத் குழந்தை இலக்கியமும் உருவாக வேண்டும் என்ற முயற்சி மேற்கொள்ளப் பட்டது. புகழ்பெற்ற எழுத்தாளரான மாக்சிம் கார்க்கி இம்முயற்சிக்குக் தலைமை தாங்கினார்.

ஏராளமான குழந்தை இலக்கிய நூல்களை வெளியிட ‘ராதுகா பதிப்பகம்’ தொடங்கப்பட்டது. ராதுகா’ என்றால் ‘வானவில்’ என்று அர்த்தம். வானவில்லின் ஏழு நிறங்களைப் போல ஏழு துறை களுக்கு ஏழு எழுத்தாளர் குழுக்கள் ஏற்படுத்தப் பட்டன. குழந்தைகளின் வாழ்க்கை, கல்விக் குழு விற்கு, ஆன்டன் மெக்கரன்கோ, அறிவியலுக்கு எம்.இலியீன், இயற்கைக்கு விட்டலி பியாங்கி, வீர தீரக் கதைகளுக்கு அலெக்சாண்டர் கிரீன், தேவதைக் கதைகளுக்கு யூரி ஒலிஸ்கா, விஞ்ஞானக் கதைகளுக்கு அலெக்சாண்டர் பிலெய்யாவ், புராண நாடோடிக் கதைகளுக்கு எல்.பேன்டெலியெவ் தலைமை தாங்கினர். 

புராண- நாடோடிக் கதைகளையும் தேவதைக் கதைகளையும் வெளியிட எதிர்ப்பு எழுந்தது. இக் கதைகள் எதார்த்தத்திற்கு எதிரானவை என்ற வாதம் வைக்கப்பட்டது. இக்கதைகளின் முக்கியத்துவத்தை விளக்கி மாக்சீம் கார்க்கி ஆதரவாக இருந்தார். ‘இதயம் தருவோம் குழந்தைகளுக்கு’ என்ற நூலை எழுதிய வசீலி சுகம்லீன்ஸ்கி, ‘குழந்தைகளின் அறிவாற்றல் பயிற்சியிலும் அழகியல் பயிற்சி யிலும் பண்டைய புராண- நாடோடிக் கதைகள் மிகப் பெரும் பங்கு வகிக்கின்றன. புராணங்கள் மனித இனக் கலாசாரத்தின் வியத்தகு பக்கங் களைக் குழந்தைகள் முன்னே விரித்துக் காட்டுவது மட்டுமின்றி, கற்பனையைத் தூண்டிவிடுகிறது, அறிவை வளர்க்கிறது, தொலைதூரப் பழங்காலத்தில் ஓர் அக்கறையை ஏற்படுத்துகிறது என்று புராண, இதிகாச, நாடோடிக் கதைகளுக்கு ஆதரவாகத் தனது கருத்தை ஆணித்தரமாக வைத்தார்.

‘குழந்தைகளை வளர விடுங்கள்’ என்பது சோவியத் ரஷ்யாவின் தந்தை லெனினின் கருத்தாக இருந்தது. எதையும் படிக்கக்கூடாது என்பது சரியல்ல. எல்லாவற்றையும் படித்துத் தாமே சிந்தித்து முடிவுக்கு வரக் குழந்தைகளுக்கு வாய்ப்பு தரப்பட வேண்டுமென்பதை அவர் ஏற்றுக் கொண்டார்.

குழந்தைகளின் மீது அவர் நம்பிக்கை கொண் டிருந்தார். அதற்குக் காரணம் ஒரு சம்பவம். ஒரு சமயம் லெனின் ஒரு பள்ளிக்குச் சென்றிருந்த போது மாணவர்கள் ஓவியங்கள் வரைந்து கொண் டிருந்தனர். அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பொருள்: ‘ஜன்னல் வழியாக ஆகாயம்’. நீலவானம், செந்நிற வானம், வெண் பஞ்சு மேகங்கள் மிதக்கும் வானம் என்று பலரும் பல வண்ணங்களில் ஓவியங்கள் தீட்டியிருந்தனர். ஒரு மாணவன் மட்டும் வானத்தைக் கருப்பு நிறமாகத் தீட்டியிருந்தான். அவன் தாளில் கருப்பு வண்ணத்தைத் தவிர வேறெதுவுமில்லை.

‘வானம் இப்படி இருக்குமா?’ என்று கேட்டார் லெனின்.

‘எனக்குத் தெரிந்த வானம் இதுதான்’ என்று பதிலளித்தான் மாணவன்.

லெனின் நம்பவில்லை என்பதை அறிந்த அந்த மாணவன் அவரைத் தன் வீட்டிற்கு அழைத்தான்.

லெனின் மாணவனின் வீட்டிற்குச் செல்லத் தயங்கவில்லை. தன் வீட்டின் ஜன்னலை திறந்து காட்டினான் மாணவன், அது வழியாக லெனின் பார்த்தார். ஜன்னலின் வழியாகத் தெரிந்த வானம் கருமையாக இருந்தது. அருகிலிருந்த மில்லின் புகைப் போக்கிகள் கக்கிய கரிய புகை சூழ்ந்து வானம் அவ்வாறு தெரிந்தது. மாணவனின் ஓவியத்தில் வெளிப்பட்ட எதார்த்த உண்மையை லெனின் பாராட்டினார். அந்த ஓவியமே பரிசு பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

லெனின் வழிகாட்டுதலோடு கார்க்கியின் தலைமையில் ஈடுபாடுமிக்க எழுத்தாளர் குழுக்கள் குழந்தை இலக்கியத்தைப் படைத்தன. இதனால் சோவியத் குழந்தை இலக்கியம் சிகரத்தைத் தொட்டது. தங்களுக்கு எத்தகைய கதைகள் பிடிக்கும் என்று குழந்தைகள் தனக்குத் தெரிவிக்கு மாறு கார்க்கி அறிவித்தார். குழந்தைகளின் விருப்பங் களின் அடிப்படையில் நூல்கள் வெளியிடுமாறு செய்தார்.

“உலகின் சிறந்த கதைகளை எல்லாம் திரட்டி ‘ராதுகா’ வெளியிட்டது. நம் இந்தியக் கதைகள் மகாபாரதம், இராமாயணம், பஞ்சதந்திரக் கதைகள் அழகிய வண்ணப் படங்களுடன் வெளிவந்தன.

இவ்வாறு கடவுள்கள், தேவதைகள், அரக்கிகள் வருவதை சோவியத் குழந்தை இலக்கியம் ஏற்றுக் கொள்கிறது. குழந்தை இலக்கியம் கற்பனையானது தான். குழந்தைகளின் அறிவு எல்லைக்கு உட்பட்டது அல்ல. குழந்தைகளும் வரையறுக்கப்பட்ட அறிவுக்கு உட்பட்டவர்கள் அல்லர். அதனால் அவர்கள் கற்பனை உலகத்தில் வாழ்கிறார்கள். சோவியத் குழந்தை இலக்கியம் குழந்தைகளின் கற்பனை உலகத்தைச் சார்ந்திருந்தது. அதனால் ராதுகா பதிப்பகம் சோவியத் மக்களது நாட்டுப்புறக் கதை களை எல்லாம் தொகுத்து ‘நவரத்தின மாலை’ என்ற அருமையான தொகுப்பை வெளியிட்டது.

குழந்தைகள் தாய்நாட்டை நேசிக்க, நாட்டை உருவாக்க, உழைத்த தனிச்சிறப்புமிக்க மனிதர் களின் வரலாற்றைத் தெரிந்துகொள்வது முக்கிய மானது. ஸெ. அலெக்ஸேயெவ் எழுதிய ‘ருஷ்ய வரலாற்றுக் கதைகள்’ என்ற நூலில் மக்களுக்காக உயிர் நீத்த ஸ்டெப்பான் ராஸின் என்ற கலகக் காரனின் கதை இடம்பெற்றிருப்பது சோவியத் குழந்தை இலக்கியத்தின் மக்கள் சார்ந்த வரலாற்றுப் பார்வையை வெளிப்படுத்தியது.

மனிதனின் மகத்தான சாதனைகளுக்கு அடிப் படை அறிவியலே. அதனால் குழந்தைகளுக்கு அறிவியல் அறிவைப் புகட்டவும் அறிவியல் மனப் பான்மையை ஏற்படுத்தவுமான ஏராளமான நூல் களை சோவியத் குழந்தை இலக்கியம் தன்னகத்தே கொண்டிருந்தது. அறிவியல் குழுவிற்குப் பொறுப் பான எம். இலியீன், யா.ஸெகால் ஆகியோர் எழுதிய ‘மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன்’ என்ற நூல் அற்புதமான ஒன்று.

குழந்தைகளின் வாழ்க்கை இயல்புகளைச் சித்திரிக்கும் நடப்பியல் கதைகளையும் சோவியத் பதிப்பகங்களான முன்னேற்றப் பதிப்பகம், மீர் பதிப்பகம் வெளியிட்டன. நிக்கலாய் நோசவ் எழுதிய ‘விளையாட்டுப் பிள்ளைகள்’, ஓ. பெரோவ்ஸ்கயா எழுதிய ‘குழந்தைகளும் குட்டி களும்’ ஆகியன குறிப்பிடத்தக்கவை. அலெக் சாந்தர் ரஸ்கின் எழுதிய ‘அப்பா சிறுவனாக இருந்தபோது’ என்ற நூல் குழந்தை இலக்கியத்தில் புதிய சாளரத்தைத் திறந்து வைத்தது. சோவியத் குழந்தை இலக்கியத்தில் போற்றத்தக்க அம்சம் என்னவென்றால் புகழ்பெற்ற பெரிய எழுத்தாளர் களான டால்ஸ்டாய், கார்க்கி, புஷ்கின், துர்க்னேவ், செகாவ், குழந்தை இலக்கியம் படைத்ததுதான். நம் தமிழ், குழந்தை இலக்கியத்தில் இப்போக்கு குறைந்து காணப்படுகிறது. ஜெயகாந்தன் ‘பாரதி பால பாடம்’ எழுதினார். இராஜாஜி, அகிலன் ஆகியோர் ஓரிரு படைப்புகளைத் தந்தனர். அவ்வளவுதான்.

புதிய யுகத்தின் குறியீடாக சோவியத் குழந்தை இலக்கியம் திகழ்ந்தது. சோவியத்தில் ‘கிருதயுகம்’ பிறந்து விட்டதை ‘வையகத்தீர், புதுமை காணீர்’ என்று முதன்முதலில் பாடி வரவேற்றவர் நம் மகாகவி பாரதி. அவர் குழந்தைகளுக்காகப் பாப்பா பாட்டை மட்டுந்தான் எழுதியிருப்பதாக எண்ண வேண்டாம். கவிதையை எளிமையாக்கி யவர் பாரதி. அவர் எழுதிய பாரத சமுதாயம், முரசு, புதிய ஆத்திசூடி ஆகியன குழந்தை இலக்கியந் தான். ‘முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழு மைக்கும் பொது உடைமை’ என்றும், ‘பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்- பிறர் பங்கைத் திருடுதல் வேண்டாம்’ என்றும், ‘புதியன விரும்பு, கொடு மையை எதிர்த்து நில், வேதம் புதுமை செய்’ என்றும் பாரதி பாடியிருப்பது சோவியத்தின் தாக்கத்தினாலாகும்.

பாரதிக்கு தாசனான புரட்சிக்கவிஞர் பாரதி தாசனும் இளைஞர் இலக்கியத்தில் ‘தமிழ்நாட்டில் உருசிய நாட்டையும் உண்டாக்கித் தீர்த்திடலாம்’ என்றும், ‘புத்துலகப் பொதுஉடைமை புதுக்கும் நாள் எந்நாள்? புரட்டு முதலாளியத்தைப் போக்கிடும் நாள் எந்நாளோ?’ என்றும் பாடியிருப்பது சோவி யத்தின் தாக்கத்திலேயாகும்.

உலகத்தில் பொதுமை ஆட்சி செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தவே பாரதிதாசன் ஆத்தி சூடி எழுதினார். அதில் ‘ஆட்சியைப் பொதுமை செய், உடைமை பொதுவே, கொடுத்தோன் பறித் தோன், கோனாட்சி வீழ்த்து, நைந்தார்க்கு உதவி செய்,’ என்று கூறினார்.

பொதுவுடைமை இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் திரைப்படப் பாடல்கள் எழுதியவர். திரைப் படப் பாடல்களான ‘தூங்காதே தம்பி தூங்காதே, சின்னப் பயலே, சின்னப்பயலே சேதி கேளடா, திருடாதே, பாப்பா திருடாதே ஆகியவற்றில் சமுதாயச் சிந்தனைகள் எதிரொலித்தன.

குழந்தையின் உள்ளம் மாசற்றது. பழைய மதிப்பீடுகள் குழந்தையின் உள்ளத்தை அழுக் காக்கி விடும். புதிய மதிப்பீடுகளை முன்வைத்த சோவியத் குழந்தை இலக்கியத்தின் தாக்கம் பெற்ற தாகவே கவிஞர் தமிழ் ஒளியின் இக்குழந்தைப் பாடலை நான் கருதுகிறேன். ‘பாடு பாப்பா’ என்ற நூலில் இடம் பெற்றது.

‘நகை வேண்டாம் பாப்பா’

“பச்சைக் கிளிக்கு நகையில்லை!

பாடுங்குயிலுக்குக் கணியில்லை!

இச்சை மைனாப் பறவைக்கும்

ஏதும் கழுத்தில் நகையில்லை!

கச்சை சதங்கை யில்லாமல்

காட்டில் ஆடும் மயிலுக்கும்

உச்சிக் கொண்டை நகையில்லை!

உனக்கேன் பாப்பா நகையெல்லாம்!”

மனிதனை முன் நிறுத்திய சோவியத் குழந்தை இலக்கியத்தின் தாக்கத்தால் கவிஞர் நாரா. நாச்சி யப்பன் நிறைய சிறுவர் பாடல்களை எழுதினார்.

‘உலகினிலுள்ள உயிர்களிலெல்லாம்

உயர்ந்தவன் மனிதன் இது உண்மை

வலுவினிலேனும் அறிவினிலேனும்

மனிதனுக்கெதுவும் நிகரில்லை’

என்று மனிதனைப் போற்றியும்,

‘உயர்வு தாழ்வாம் ஏற்பாட்டை

                ஒழித்து மக்கள் ஒரு நிகராய்ப்

பயின்று பழகி வாழ்ந்திடவே

                பாதை வகுத்தான் லெனின்தானே!’

என்று லெனினைப் பாராட்டியும் அவர் எழுதினார்.

சமுதாய இயலையும் அறிவியலாக்கினார் கார்ல் மார்க்ஸ் என்று அவரை விஞ்ஞானிகள் வரிசையில் வைத்து, தமிழ்க் குழந்தைகளுக்குப் புதிய கோணத்தில் அறிமுகப்படுத்திப் பாடினார் கவிஞர் செம்பை சேவியர்.

சுற்றுச்சூழலோடும் இயற்கையோடும் இயைந்து வாழ்வதே குழந்தைகளின் உள்ளத்தில் மானுட அன்பை நிரப்பித் ததும்ப வைக்கும் என்ற உணர்வை வலியுறுத்தும் பாடல்களை பாவலர் ம.இலெ. தங்கப்பா ‘மழலை விருந்து’ என்னும் நூலில் வழங் கினார். சோவியத் குழந்தை இலக்கியம் வெளிப் படுத்தும் உணர்வுகளுக்கு நெருக்கமான பாடல்கள் இவை. ம.இலெ. தங்கப்பா ‘சோளக் கொல்லைப் பொம்மை’ என்ற நூலுக்குக் குழந்தை இலக்கியத் திற்கான சாகித்ய அகடமி பரிசைப் பெற்றவர்.

மழையில் நனைந்தால் உடம்பு கெட்டுவிடும் என்று குழந்தைகளைத் தடுக்கும் இந்நாளில் இயற் கையை அனுபவிக்கச் சொல்லுகிறது தங்கப் பாவின் ‘வாராய் தம்பீ வாராய்’ என்ற பாடல்,

‘மழையில் நனைவோம் வாராய்,

செயற்கை வாழ்வின் தீமை காட்டும்

சிறுமை உடைகள் களைந்தெறி; வாராய்,

இயற்கை அன்னை அழைப்பொலி கேளாய்;

இனிதாய் அணைக்கும் கைகளில் தோய்வாய்’.

இயற்கையின் மீதும் அழகின் மீதும் குழந்தை களின் கவனத்தைத் திருப்பும் பாடல்கள் மழலை விருந்தில் நிறைய உள்ளன.

‘நீர் யார்? என்கின்றீரா? ‘நான் யாராயிருந் தால் என்ன? என் முகவரியை என் கவிதைகளில் தேடுங்கள்’ என்று தன்னம்பிக்கையோடு பேசிய தண்டரை முகில் வண்ணன் தமிழ்க் குழந்தை இலக்கியத்தில் ‘புது மழை’யாக வந்தவர்.

‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்’ என்று முன்பு தமிழ் குழந்தை இலக்கியம் இறை வனை முன் நிறுத்தியது. சோவியத் குழந்தை இலக் கியத்தின் தாக்கத்தினால் தமிழ்க் குழந்தை இலக் கியத்திலும் மனிதனை முன் நிறுத்தும் போக்கு எழுந்தது. முகில் வண்ணன் ரஷ்ய சிறுவர் கதையைத் தழுவி இப்பாடலைப் ‘புது மழை’ நூலில் எழுதியுள்ளார்.

அந்நூலில் ‘யார் அதிக பலசாலி?’ என்ற கதைப்பாடல் அண்ணன், தம்பிகளுக்கு இடையே நடைபெறும் உரையாடலாக எழுதப்பட்டுள்ளது.

தம்பி  :               அண்ணா, எனக்கொரு சந்தேகம்... அகிலத்தில் யார் மிக பலசாலி?

அண்ணன்     :               என் விடை முடிவில் சொல்லுகிறேன். உன் பதில் என்ன? நீ சொல்லு!

தம்பி  :               எனக்குத் தெரிந்த உயிரினத்தில் யானை தான் பலசாலி!

அண்ணன்     :               ஒன்பது யானை பலங்கொண்ட ஓருயிர் இனமது- திமிங்கிலமாம்!

தம்பி  :               அதிசயம்! அந்த திமிங்கிலந்தான் அனைத்திலும் வலியதா? சொல் அண்ணா!

அண்ணன்     :               துள்ளும் திமிங்கிலம் நான்கைந்தைத் தூக்கிட வல்லது ‘கிரேன்’ ஒன்றே!

தம்பி  :               ஆகா! ‘கிரேன்’ தான் உலகத்தில் அதிக வலிமை உள்ளதுவா?

அண்ணன்     :               ஆறு ‘கிரேன்’களை இழுக்கின்ற ஆற்றல் பெற்றது ‘இரயில் எஞ்சின்’

தம்பி  :               அற்புதம்! அற்புதம்! ‘இரயில் எஞ்சின்’ அனைத்திலும் பெரிய பலசாலி.

அண்ணன்     :               முப்பது எஞ்சினைச் சேர்ந்தொன் றாய் கப்பல் நீரில் கடந்திடுமே!

தம்பி  :               அப்படியானால் கப்பல்தான் அதிக வலிமை உடையதுவோ?

அண்ணன்     :               கப்பலை விடவும் பலசாலி கண்டது மில்லையா நீ எங்கும்?

தம்பி  :               உரிய விடையைச் சொல் அண்ணா! உலகில் யாரோ பலசாலி?

அண்ணன்     :               யானையை அடக்கிப் பழக்குவதார்? திமிங்கில வேட்டை நடத்துவதார்?                 ‘கிரேனை’ச் செய்தே இயக்குவதார்? ‘இரயிலை’ இணைத்தே ஓட்டுவதார்?                 கப்பலைக் கட்டிச் செலுத்துவதார்? கண்டு கொள் அவரே பலசாலி...!

தம்பி  :               அறிந்தேன்! அறிந்தேன்! ‘மனிதன்’ தான் அனைத்திலும் மிகமிகப் பல சாலி!

சோவியத் குழந்தை இலக்கியம் பெரு மழை யாகப் பெய்தது. மழையின் சிறுதுளி களையாவது மொழிபெயர்ப்பின் வழியாகப் பருகும் வாய்ப்பைத் தமிழ்க் குழந்தைகள் பெற்றது பெரும் பேறே! சோவியத் குழந்தை இலக்கிய நூல்களின் விற்பனை யாளராகவும் விநியோகஸ்தராகவும் இருந்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அப்பெரும் பேற்றை வாய்க்கச் செய்தவர்கள். அதுமட்டுமல்ல, சோவியத் குழந்தை இலக்கியம் தந்த உந்துதலை மேலும் விரிவடையச் செய்யும் பணியையும் என்.சி.பி.எச். நிறுவனம் செய்தது. தமிழ்க் குழந்தைகளுக்கு அறிவியல் பார்வையை ஏற்படுத்த உதவும் சிறுவர் நூல்களை வெளியிட்டது. பாவலர் தமிழியக்கன் எழுதிய தாவரவியல் பற்றிய சிறுவர் பாடல்கள் கொண்ட ‘நிலைத் திணைப்பாட்டு’ ‘உயிரியல் பாட்டு’, குழந்தைவேலன் எழுதிய ‘காற்றின் கதை’, பேரா சிரியர்கள் நா.வானமாமலை, எஸ்.தோத்தாத்ரி எழுதிய ‘ரப்பரின் கதை’ ‘இரும்பின் கதை’, பிறை யணிவோன் எழுதிய ‘இரயிலின் கதை’ ச.சதாசிவம் எழுதிய ‘அறிவியலைப் பாடுவோம், ஜெயராமன் எழுதிய ‘ஆர்வமூட்டும் சிறுவர் அறிவியல்’ ‘கல்வி’ கோபால கிருஷ்ணன் எழுதிய ‘மாயாவிகள்’, ‘பறக்கும் பாப்பா’ என்று நிறைய நூல்களை வெளி யிட்டு விஞ்ஞான அறிவைச் சிறுவர்களிடையே பரப்புவதைக் கடமையாகக் கொண்டு என்.சி.பி.எச். நிறுவனம் செயல்பட்டது. இதைப் பாராட்டி, குழந்தை எழுத்தாளர் சங்கம் என்.சி.பி.எச். நிறுவனத் திற்கு விருது தந்தது.

நெல்லை சு.முத்து, லூர்து எஸ்.ராஜ் ஆகியோர் வானவியல், தாவரவியல், உயிரியல் சார்ந்த உண்மை களைக் கதை நூல்களாக்கி உள்ளனர். குழந்தை எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் ஆதிவாசிச் சிறுவன் நீலனைச் சிறந்த மனிதப் பண்புகளைக் கொண்ட பாத்திரமாகப் படைத்து, தமிழ்க் குழந்தை களுக்கு ஒரு முன் மாதிரியை உருவாக்கியுள்ளார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சோவியத் குழந்தை நூல்கள் பாணியில் நிறைய அறிவியல் நூல்களை வெளியிட்டது. கே.கே. கிருஷ்ணகுமார் எழுதிய இயற்கை, விஞ்ஞானம், மனிதன், வாழ்வே அறிவியல், மனிதன் மகத்தானவன் ஆகிய நூல்கள் வரலாற்றை இயக்கவியல் அடிப்படையில் விளக்கும் எளிய நூல்களாகும். ஈழத்தமிழ் எழுத்தாளர் களான செ.கணேசலிங்கன், செ.யோகநாதன் ஆகியோரும் மகளுக்கு, மகனுக்குக் கடிதம் என்ற தலைப்புகளில் மார்க்சிய சமுதாய சிந்தனைகளைத் தமிழ்க் குழந்தைகளுக்குத் தந்துள்ளனர்.

சோவியத் இலக்கிய நூல்கள் பெரிய அளவில் கெட்டி அட்டையோடு பல வண்ணப் படங்களோடு இருந்தன. உருவத்தில் மட்டுமல்ல, உள்ளடக்கத்திலும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியையும் அறிவையும் மனிதப் பண்புகளையும் கொடுத்த அவை என்றும் மறக்க முடியாதவை. தமிழ், குழந்தை இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் அவை ஏற்படுத்தி யுள்ளன.

Pin It

சிறந்த கல்வியாளரும் அறிவியல் அறிஞரு மான டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் அண்மையில் தம் வாழ்க்கை வரலாற்றை ‘ஆடு மாடு மேய்ப்பதில் தொடங்கி அண்ணா பல்கலை தாண்டி’ என்னும் பெயரில் நூலாக வெளியிட்டு உள்ளார். நூலின் பெயருக்கேற்ப, தமிழகத்தின் சிற்றூரிலிருந்து உலக நாடுகள் வரை நூல் விரி கிறது. ஆடு மாடு மேய்த்த ஒருவர், தம் உறுதியான குறிக்கோளோடும், தளராமுயற்சியாலும், உலையா உழைப்பாலும் உலகம் தெரிந்த விஞ்ஞானியாக வளர்ந்ததை விரிக்கும் நூல்தான் இந்நூல். ஆம், அண்ணா பல்கலையைத் தாண்டி அகிலத்தைக் காட்டும் நூல்தான் இது; இதில் எத்தனை எத்தனை யோ அரிய மனிதர்களையும், அரிய செய்திகளையும், சீரிய நிகழ்வுகளையும் ஆங்காங்கே காண்கிறோம்.

தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள், கல்வியாளர்கள் பேராசிரியர்கள், தலைவர்கள் ஆகியோரின் அரிய பணிகளையும் சில வேறுபட்ட தோற்றங்களையும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளவை சிந்தனைக்கு விருந்தாக உள்ளன; குறிப்பாகத் தமிழகத்தின் தொழில்நுட்பக் கல்வி வளர்ச்சி, பல்கலைக் கழக வளர்ச்சி, ஆகியவற்றோடு, அரசின் நிருவாகத் துறைக்கும் கல்வித்துறைக்குமிடையே நடந்த முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டும் நூலாகவும் இந்நூல் உள்ளது; நூலாசிரியர் சில உண்மை களையும், நாம் அறிந்திராத செய்திகளையும் இரகசியங்களையும் வெளிப்படையாகக் கூறிச் செல்வது நூலுக்குச் சுவையூட்டுகிறது; வாசகர் களை மேலும் படிக்கத் தூண்டுகிறது. சிந்திக்க வைக்கிறது; இவற்றின் மூலம் அறிவியல் அறிஞரின், கல்வியாளரின் திறமையையும், செயல்திறனையும் காட்டுவதோடு, கொள்கை உரம் கொண்ட ஒரு நேர்மையான அரிய மனிதரையும் அடையாளம் காட்டுகிறது.

நூலாசிரியர் தொழில்நுட்பக் கல்வி இயக்கு நராகவும், அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் இருந்தபோது மற்றவர்கள் போன போக்கில் செல்லாமல், எடுத்துக்காட்டாகப் புதுப் பாதையை அமைப்பவராக இருந்துள்ளார். இது தான் அவரது தனித்திறன். அந்தத் தனித்திறன் களில் சிலவற்றை நோக்கினாலேயே அவரைச் சரியாக உணரலாம். தமிழகத்தில் பெண்கள், குறிப்பாக மருத்துவக் கல்வியில் மட்டுமே ஆர்வம் காட்டுபவர்களாக இருந்துள்ளனர்; நாளும் வளரும் அறிவியல் உலகில் இது வேண்டாதது; முன்னேற்றம் இல்லாதது; இதனைத் தொலை நோக்கோடு உணர்ந்த நூலாசிரியர், பெண்கள் மனம் உவந்து கற்க நல்ல சூழலை ஏற்படுத்த, தூய்மையான உணவகங்கள், நல்ல விடுதிகள், நூல்நிலையம் ஆகியவற்றை ஏற்படுத்தி, கணிப் பொறி, மின்னியல் போன்ற பல புதுப் பட்டப் படிப்புகளை ஏற்படுத்திப் பெண்கள் கூடுதலாகக் கற்க வழியமைத்துள்ளார். இவற்றைப் போன்றே மாணவ-மாணவியர் புதியதாகக் கற்கப் பல துறைகளை உருவாக்கியுள்ளார். அவற்றிற்காகப் பல ஆய்வு மையங்களையும் அமைத்துள்ளார்.

படிக வளர்ச்சி மையம், உயிரியல் தொழில்நுட்ப மையம், கடல் வள மேலாண்மை மையம் போன்ற “புதியமையங்களை ஏற்படுத்தி அறிவியல் துறை களை விரிவாக்கித் தமிழகத்தை அறிவியல் மாநில மாக மாற்ற மூலவராக இருந்துள்ளார். புதிய துறைகளை மாணவ-மாணவியர்க்கு நன்கு கற்பிக்க, வெளிமாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளி லிருந்தும் சிறந்த வல்லுநர்களை அழைத்துக் கற்பிக்க வைத்துள்ளார். இந்தியாவிலேயே அச்சுத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பையும், இரப்பர் தொழில்நுட்பக் கல்வியையும் முதன்முதலாக உருவாக்கியுள்ளார். இவற்றிலும் அவர் முன்னோடி யாக இருந்துள்ளார். மதுரைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தபோதும் பல புதிய பாடத் திட்டங்களை ஏற்படுத்தியுள்ளார். பேராசிரியர் களுக்கும், பணியாளர்களுக்கும், இருப்பிடம், சாலை, குடிநீர் வசதி ஆகியவற்றை நன்றாக அமைத் துள்ளார்.

இந்நூலில் புதிய செய்திகளும், புதிய திட்டங் களும் நூலாசிரியரின் சிறந்த செயல்திறனும், தனியாற்றலும் ஆங்காங்கே வெளிப்பட்டாலும், நம்மைத் திகைக்க வைப்பதும், மலைக்க வைப்பதும் அவரது நேர்மையும், கொள்கையுறுதியும்தான். “வைரமுடைய நெஞ்சு வேணும் / அது வாழும் முறைமையடி பாப்பா” என்றார் பாரதியார். அந்த வைர நெஞ்சை இந்நூலில் காண்கிறோம். இந்நூல் சொல்லும் பல செய்திகளில் இரு செய்திகள் மிக முக்கியமானவை. அவை, அவரது நேர்மையும், உறுதியும்தான்; தலைவர்களானாலும், கல்வியாளர் களானாலும், அதிகாரிகளானாலும் இவையிரண்டும் இரு கண்கள் போன்றவை. இவையில்லாவிடில் சமுதாயம் பின்னடைந்துவிடும்; இருண்டுவிடும். இப்படிச் சமுதாயம் பின்னடையாது, இருண்டு விடாது வழிகாட்டுபவர்தான் அவர். அவரது நேர்மைக்கு இரு நிகழ்வுகளை நோக்கினாலேயே உண்மை விளங்கும்.

ஒரு நிகழ்வு, அவருடைய மனைவி பற்றியது; இன்னொன்று அவருடைய மகனைப் பற்றியது. தில்லியிலுள்ள இந்திராகாந்தி பல்கலைக்கழகத்தில் அவர் துணைவேந்தராக வருவதற்கு முன்பாகவே மனைவியார் ஆங்கிலமொழி விரிவுரையாளராக இருந்துள்ளார். அவர் அத்துறையில் துணைப் பேராசிரியருக்காக விண்ணப்பித்துள்ளார். அப் போது துணைவேந்தராக இருந்த குழந்தைசாமி அவரது விண்ணப்பத்தை ரத்து செய்துள்ளார். தேர்வுக்குழு அவரைத் தேர்ந்தெடுத்தாலும் (தகுதியின் பொருட்டு) துணைவேந்தரின் பரிந்துரையால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என்று பிறர் தவறாக எண்ணக்கூடும் என்பதால் அப்படிச் செய்துள்ளார். அவரது பதவிக்காலம் முடிந்தபின் தான் அவருடைய மனைவி பதவியுயர்வு பெற்று உள்ளார். அவருடைய மகன் அண்ணா பல்கலையில் B.E. படித்து தேர்வுக்குப் போவதற்கு முன்பு மஞ்சள் காமாலை நோய் வந்துவிட்டதால் வருகைப்பதிவு ((ATTENDANCE) குறைந்திருந்ததால் தேர்வு எழுது வதற்குத் தடை இருந்துள்ளது. இதனைத் தனி வகுப்பு மூலம் சரிசெய்து தேர்வுக்கு அனுமதி வழங்கும் விதி இருந்தும் துணைவேந்தர் அதற்கு இசையாது தன் மகனை அடுத்த ஆண்டு தேர்வு எழுதப் பணித்துள்ளார்.

தனி வகுப்பு மூலம் தேர்வுக்கு அனுமதிப்பது விதிப்படி சரியானதேயாகும். தவறானது அன்று. பலர்க்கு இந்த வாய்ப்பைப் பல்கலைக்கழகம் அளித்திருந்தும் அந்த இரண்டாம் பட்ச உதவியைக் கூடத்தாம் பதவியிலிருக்கும் போது செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார். இப்படியொரு நெறியை வழுவாது உறுதியாகப் பின்பற்றுபவர்தான்அவர். அவர் துணைவேந்தராக இருந்தபோது அதே பல்கலைக் கழகத்தில் அவருடைய மகனும் மகளும் படித்திருந்தாலும் அவர்களை ஒரு போதுகூடத் துணைவேந்தரின் காரில் ஏற்றிச் சென்ற தில்லை யாம். அவர்கள் பேருந்தில்தான் சென்று வந்து உள்ளார்கள். அவர் துணைவேந்தராக இருந்த போது காய்ச்சல், தலைவலி என்று ஒருநாள் கூடக் கால தாமதமாகவும் சென்றதில்லை; விடுப்பு எடுத்ததும் கிடையாதாம். பேராசிரியராக 25 ஆண்டுகள் இருந்தபோதும் ஒருநாள்கூட வகுப்புக்குக் கால தாமதமாகச் சென்றதில்லையாம்; இவ்வாறு எந்தத் துணைவேந்தர் இருப்பார்; துணைவேந்தர்கள் இக்காலத்தில் எப்படி எப்படியோ உள்ளார்கள்; ஆனால் இவரோ நேர்மையின் உச்சியில் சிகரமாகக் காட்சி அளிக்கிறார்;

அவரது கொள்கை உறுதியும் இது போன்றதே யாகும். அண்ணா பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர்களுக்கு வருகைப்பதிவு குறைவாக இருந்த தால் அவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை நிறுத்தி வைத்துள்ளார் துணைவேந்தர். மாணவர்கள் ஆளுநரிடம் முறையிட்டுள்ளார்கள்; ஆளுநரும் தம் செயலாளர் மூலம் தலித் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குமாறு துணைவேந்தரிடம் கூறியுள்ளனர். துணைவேந்தர் அதனைக் கேட்டு அசராது, அப்பிரச்சினையை என்னிடம் விட்டு விடுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். பின்னர் மாணவர்களை அழைத்துத் தக்க அறிவுரை கூறி, அவர்களின் தவற்றை அவர்கள் உணருமாறு செய்து அவர்கள் வகுப்புக்குச் சரியாக வந்த பின்னரே உதவித் தொகை வழங்கியுள்ளார். ஆளுநர் பரிந்துரைத்தார் என்பதற்காகச் சிறிதும் விட்டுக் கொடுக்காமல், உறுதியாக நின்று, மாண வர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து உறுதியளித்து வகுப்புக்கு வந்த பின்னர் வருகைப் பதிவு சரியாக இருந்த பின்புதான் உதவித்தொகை வழங்கியுள்ளார். இந்தத் துணிவும் உறுதியும் யாருக்கு வரும்?

இந்திரா தேசிய திறந்த நிலைப் பல்கலைக் கழகத் தற்காலிக விரிவுரையாளர்கள் ஒருமுறை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார்கள்; தீர்ப்பு வழங்குவதற்கு முன்பே நீதிபதியும், பின்னர் நடுவண் அரசின் கல்வியமைச்சரும் அவ்விரிவுரை யாளர்களை நிரந்தரப் பணியில் அமர்த்துமாறு பரிந்துரைக்கிறார்கள்; அதனை ஏற்காது விதி முறைப்படி செயல்பட்டுள்ளார். துணைவேந்தர், சட்டப்படி தம் வழக்குரைஞர் மூலம் உண்மையைக் கூறியதும் நீதிபதிகள் பின்வாங்கியுள்ளனர். இப்படிக் கொள்கையில் உறுதியாக நிற்பவர்தான் அவர்; ஒருமுறை, தமிழகத் தலைமைச் செயலாளர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு மாற்றுதல் செய்யப் பரிந்துரைக்கிறார். உயர்நிலைப் பள்ளிக்கும், கல்லூரிக்கும் எவ்வித வேறுபாடு உள்ளதோ, அந்த வேறுபாடு தொழில்நுட்பக் கல்லூரிக்கும், தொழில்நுட்பப் பல்கலைக்கும் இருப்பதால் கணித ஆசிரியரை மாற்றுதல் செய்வது சரியாகாது என்று மறுத்து விடுகிறார். இந்த உறுதிப்பாட்டின் உருவம் தான் அவர். இவைபோன்ற பல நிகழ்வுகள் இந் நூலில் உள்ளன; அவற்றை நூலில் காண வேண்டு கிறேன்.

நேர்மையும் கொள்கையுறுதியும் அவரிடம் எப்படி இருந்தனவோ அப்படி அவரிடம் அஞ்சா மையும் இருந்துள்ளது. நிருவாகத் தலைமையில் இருப்பவர்களுக்கு இது மிகமிக வேண்டும். அஞ்சாமை இல்லையென்றால் குழப்பம்தான் ஏற்படும். பாதையும் தவறிவிடும். பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்னும் பெயர் வெளிமாநிலத்தைச் சேர்ந்த வருக்கும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்க்கும் உச்சரிப்பதற்குக் கடினமாக இருந்துள்ளது. ஆங்கிலச் செய்தித்தாள்களும் முழுப் பெயரைக் குறிப்பிடாமல் PAUT என்று சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தன. நாளடைவில் ஊடகங்கள் AUT என்றும் குறிப் பிடலாமென அவர் அஞ்சியுள்ளார். அப்போது முதலமைச்சராக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், பேரறிஞர் எனக்குறிப்பிடாமல் அண்ணாவென அழைத்தால் அதனைப் பொறுக்கமாட்டார். அதனை மன்னிக்க முடியாத குற்றமாகக் கருதுவார். எம்.ஜி.ஆர் அவர்களும், ஏனைய அமைச்சர்களும் அதனை வெறுப்பார்கள் என நன்கு தெரிந்திருந்தும், பல்கலைக் கழகப் பெயர் சுருக்கமாக இருப்பதே ஏற்றது, சிறந்தது என்பதைத் தக்க காரணங்களோடு விளக்கிப் பல்கலைக்கழகப் பெயரைச் சுருக்கமாக அண்ணா பல்கலைக்கழகம் என்று முதலமைச்சர் இசை வோடு மாற்றியுள்ளார். முதலமைச்சர் என்ன கருதுவார் எனத் தயங்காமல், மயங்காமல் சரியான பெயரை அஞ்சாமையோடு நிலைநாட்டியுள்ளார்.

அவரது அஞ்சாமைக்கு இன்னொரு நிகழ் வையும் நோக்கலாம். தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக அவர் இருந்தபோது கவர்னரின் செயலாளர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தாங்கள் மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர். என்றார். அவரும் அதற்கு நன்றியென்று கூறி யுள்ளார். பின்னர் செயலாளர் அவரிடம் “நான் ஏற்கனவே திருச்சியிலுள்ள ஒருவரை (ஆளுநரின் பரிந்துரைப்படி) கோவைக்கு மாற்றுதல் குறித்துச் சொன்னேன். அது என்னாயிற்று”. எனக் கேட்டு உள்ளார். காரணமும் தேவையும் இல்லாமலும், காலியிடம் (Vacancy) இல்லாமலும் ஒருவரை மாற்றுதல் கூடாது என்பதில் உறுதியான கொள் கையுடைய இவர், ஆளுநர் பரிந்துரை என்று அறிந்திருந்தும் மிகத் துணிவாகக் “கோவையில் இடமில்லை; மாற்றுதல் செய்யாநிலையில் உள்ளேன். இதனை இனி விட்டுவிடுங்கள்” எனக் கூறியுள்ளார். செயலாளரும் அடுத்து இதனைப் பற்றி அவரிடம் பேசவில்லை; வேறொருவராக இருந்தால் புதிய பதவி கிடைக்கும்போது இதை ஏன் செய்யக் கூடா தென எண்ணி வேகமாக மாற்றுதல் (TRANSFER) செய்வர். ஆனால், இவரோ எந்த அதிகார பீடத் திற்கும் அஞ்சாதவராக இருந்துள்ளார். இது போன்ற நிகழ்வுகள் இந்நூலில் பல இடங்களில் உள்ளன.

மேலும் நூலாசிரியரைப் பற்றிப் பல அரிய செய்திகள் இந்நூலில் உள்ளன; இந்நூல் வெளி வராவிடில் இவற்றையெல்லாம் நம்மால் அறிய முடியாமலேயே போயிருக்கும். இந்தியப் பல்கலைக் கழகங்களின் மானிய குழுத் தலைவர் பதவி, வெளி நாட்டுத் தூதர் பதவி, கல்வியைமைச்சர் பதவி, அறிவியல் ஆலோசகர், கரக்பூர் ஐ.ஐ.டி.யின் இயக்குநர் பொறுப்பு போன்றவை எல்லாம் இவருக்கு வந்து உள்ளன. தனிப்பட்ட சில காரணங்களால் அவற்றை அவர் தவிர்த்துள்ளார். அறிவியல் அறிஞராகிய இவர், அறிவியல் கல்வியையும், அறிவியல் கண் ணோட்டத்தையும் வளர்ப்பதில் மிகுந்த ஈடுபாடு உடையவர். அதனால், சென்னையில் அறிவியல் நகரை உருவாக்கப் பெரிதும் முயன்றுள்ளார். ஆனால் ஆட்சி மாற்றத்தால் அது நிறைவேறாமல் போயுள்ளது. எனினும், பிர்லா கோளரங்கம், மாக்ஸ்முல்லர் பவன், அறிவியல் கண்காட்சி போன்றவை அமையக் காரணமாக இருந்துள்ளார்.

தொழில்நுட்பப் பல்கலையில் புதிய பாடத்திட்டங் களையும், புதிய துறைகளையும் உருவாக்கிய தோடு, அவர் பதவி வகிக்கும் இடங்களிலெல்லாம் மாணவர்களை ஆய்வுகளில் ஈடுபடுத்தியுள்ளார். இது குறிப்பிட்டுக் கூறத்தக்கதாகும். ஒருமுறை அவர் யுனெஸ்கோ உறுப்பினராக இருந்தபோது ஈரானில் நீர்வளத்துறையைக் குறித்துக் கருத் தரங்கு நடைபெற்றுள்ளது. அக்கருத்தரங்கில் பலர் ஆய்வுரை நிகழ்த்தியுள்ளனர். ஆனால், இவரது ஆய்வுரையைக் கேட்டவர்கள் அத்துறை இயக்கு நரிடத்தில் இதுபோன்ற பொழிவை இதுவரை கேட்டதில்லை என்றும், தம் பேச்சால் எங்கள் இதயங்களில் முழுமையாக இடம்பெற்றுள்ளார்” என்றும் பெருமையாகக் கூறியுள்ளனர். இது போன்று தமிழர்கள் பெருமிதம் கொள்ளத்தக்க பல அரிய குறிப்புகள் அவரைப் பற்றி உள்ளன. அவற்றை நூலில் பல இடங்களில் காணலாம்.

மொத்தத்தில் சுய வரலாற்று நூல்களில் இந் நூலுக்கு முக்கிய இடமுண்டு. நூலைப்பற்றி வேறுபட்ட ஓரிரு கருத்துகளைக் கூறித்தான் ஆகவேண்டும். டாக்டர் குழந்தைசாமி எழுதிக் கொடுத்த பக்கங்கள் நிறைந்த பெரிய நூலை வெட்டியும் குறைத்தும் திரு. ராணி மைந்தன் சரி (எடிட்) செய்துள்ளார். மீண்டும் நூலாசிரியர் திருத்தம் செய்துள்ளார். இப்படி இருமுறை அவர் ஈடுபட்டிருப்பதைக் காட்டிலும், அவரே அப் பணியைச் செய்து முடித்திருக்கலாம். ராணி மைந்தனின் பணி சிறப்பாக அமைந்துள்ளது. நூலும், குழந்தைசாமி அவர்களின் உரைநடை கொண்டதாகவே விரிந்துள்ளது. எனினும், சுய வரலாற்று நூலாக இருப்பதால், சுமை இருப்பினும் வேறொருவர் பங்கில்லாமல் அவரே எழுதியிருக்க வேண்டும். அதுவே ஏற்றது. மற்றும் நூலின் இறுதிப் பக்கங்களில் புகைப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில், சிலவற்றில், நாள் மாதம் ஆண்டுகள் மட்டுமே உள்ளன. இவற்றிலும் நாளையும், மாதத் தையும் சேர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மற்றும் புகைப்படங்களைக் கால வரிசைப்படுத்தி யிருக்க வேண்டும்; முக்கியத்துவம் குறித்துச் சில படங்களை முன்வரிசையில் அமைத்திருக்கலாம். இதில் முக்கியத்துவம் பார்ப்பது சரியன்று. அதாவது முக்கிய படங்களைக் காணாமல் போய்விடுவர் என்னும் அச்சத்தால் இது ஏற்பட்டிருக்கக் கூடும். அப்படிக் கருதக்கூடாது. 614 பக்கங்களைக் கொண்ட ஒரு பெரு நூலைப்படிப்பவர் புகைப் படங்களைக் காணாமல் போய்விடுவரா? ஆதலின் காலவரிசை அமைந்திருந்தால் வருங்கால ஆய்வுக்கு அது சரியாகப் பயன்படும்; அதுவே ஏற்றது; சிறந்தது. நூலில் எழுத்துப் பிழைகள் சிலவே உள்ளன. அவையும் இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எந்தத் தன் வரலாற்று நூலிலும் அமைந்திராத சொல்லடைவு இந்நூலில் அமைந்துள்ளது. இது பாராட்டத்தக்கது.

இந்நூல் தனிமனிதரின் வரலாறாக மட்டுமின்றி அறிவியல் கல்வி வரலாறாக, சமுதாய வரலாறாக, எதிர்காலத் தமிழகத்திற்கு வழி காட்டும் வரலாறாக உள்ளது. கல்வியாளர், அறிவியல் அறிஞர், சிறந்த ஆய்வாளர், நல்ல கவிஞர் என்று மட்டுமே அறிந்திருந்த நமக்கு, இந்நூல்தான் அவரை மிகச் சிறந்த திட்டவரையு நராகவும், பன்மொழி அறிஞராகவும் காட்டுகிறது. மொத்தத்தில் இந்நூல் ஒரு நன்னூல்; பாதை காட்டும் திசைகாட்டியும் ஆகும். மாதுளம் கனியைப் பிளந்தால் எண்ணற்ற இன்சுவை மணிகள் இருப்பதைப் போன்று, இந்நூலில் பற்பல அரிய செய்திகள் உள்ளன; அவை புதையலாக உள்ளது. அந்தப் புதையலை நீங்களும் காண வேண்டாமா? காணவேண்டும்.

Pin It

உட்பிரிவுகள்