தமிழ்க் கல்வி வரலாற்றில் அச்சு நூல்களின் உருவாக்கம் அறிவுத்தேடலில் ஒரு புதிய பரி மாணத்தைத் தந்தது. ஏறத்தாழ கி.பி. 1800 வரைக்கும் ஏடுகளைச் சார்ந்தே தமிழ்க்கல்வி அமைந்திருந்தது. பழந்தமிழறிஞர்கள் ஏடுகளின் வாயிலாகவே தம்புலமையை வளர்த்துக் கொண்டு அடுத்த தலைமுறைக்கு அதனைப் பதிவு செய்தனர்.

படியெடுக்கும் ஆர்வம்

ஒரு நூலினை ஏட்டில் படியெடுப்போர் தம் பெயரைக் குறிப்பது மரபு. சங்க இலக்கியத்தை ஏட்டில் எழுதிப் படியெடுத்த ஒருவர் தன்னைப் பற்றிக் கூறும் போது இவ்வாறு எழுதுவார். ‘சங்கத் தமிழை அனுசரிக்கும் மகாவித்துவான்களுக்குத் தொண்டு செய்யும் நெல்லைநாயகம் எழுத்து’, தமிழ்நாட்டின் தென்பகுதியில் கிடைத்த ஏடு ஒன்றின் இறுதியேட்டில் காணப்படுவது. இது படி யெடுப்பதில் இருந்த ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் காட்டும். கல்கத்தா தேசிய நூலகத்தில் இவ்வேடு உள்ளது.

ஏடுகளில் இருந்த அரிய தமிழ்ச் செல்வங் களை அறிஞர்கள் அச்சுவடிவில் நூலுருவாக்கம் செய்யாமல் இருந்திருந்தால் எல்லோருக்கும் கல்வி பரவலாகச் சென்று சேர்ந்திருக்காது.

சுவடிகளினின்றும் அவற்றைப் பதிப்பிப்பதற்குப் புலமையும் பொறுமையும் கடின உழைப்பும் இன்றி யமையாதன. முன்னையோர் இப் பண்புநலம் வாய்க்கப்பெற்றவர்களாய் அமைந்து அரிய நூல் களை அடுத்த தலைமுறைக்கு வழங்கி அரிய தொண்டாற்றினர்.

அச்சுச்சூழல்

அச்சுருவாக்கச் சூழலை உருவாக்கித் தந்த பெருமக்களாய் அயல்நாட்டுப் பாதிரிமார்களும் அறிஞர்களும் விளங்குகின்றனர், முதன் முதலில் இந்திய நாட்டில் போர்த்துக்கீசியப் பாதிரிமார்கள் அச்சியந்திரங்களை நிறுவி நூல்களை வெளி யிட்டனர். 1556ஆம் ஆண்டில் கோவாவில் அச்சியந்திரம் நிறுவப் பெற்றது. 1712இல் சீகன் பால்கு அச்சகம் தொடங்கினார். அக்காலத்தில் காகிதம் கிடைப்பது அரிதாக இருந்தமையால் காகித ஆலையை நிறுவினார். காகிதச் சிக்கனத்தை முன்னிட்டுத் தாமே சிறிய அச்சு எழுத்துக்களையும் உருவாக்கினார்.

சீகன்பால்கு

சீகன்பால்கு அவர்களால்தான் முதன்முதலில் தமிழில் அச்சுநூல்கள் தமிழ் மக்களிடையே புழக்கத் திற்கு வந்தன. சீகன்பால்கு பைபிள் நூலைப் போர்த்துக்கீசிய மொழியிலும் தமிழிலும் மொழி பெயர்த்தார். சிறுசிறுநூல்கள் வடிவில் இவை மக்களுக்கு வழங்கப்பெற்றன. சீசன்பால்கு தமிழ் இலக்கணம் ஒன்றினையும் இயற்றியுள்ளமை குறிப் பிடத்தக்கது. இவர் 1716ஆம் ஆண்டில் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியையும் ஏற்படுத்தினார். சென்னையில் ஐரோப்பியருக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் இரு பள்ளிகளைத் தொடங்கி நடத்தினார். இத்தகைய பணிகளுக்கு அச்சு நூல்கள் மிகவும் தேவையாய் இருந்தன.

வீரமாமுனிவர்

1700ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு வந்த சோசப்பெஸ்கி தமிழ் நூல்கள் பல இயற்றித் தமிழுக்கு வளம் சேர்த்தார். தன்னுடைய பெயரையும் வீரமாமுனிவர் என அழைத்துக் கொண்டார். தமிழ் மொழிக்கு முதன்முதலில் அகராதி ஒன்றையும் தொகுத்தவர் இவர் தாம். தொன்னூல் விளக்கம் இலக்கண நூலையும், தேம்பாவணி என்னும் காப்பியத்தையும் இயற்றினார். இவருடைய கல்வித் தொண்டினைப் பாராட்டி வேலூர் நவாப்பாக விளங்கிய சந்தாசாகிப் நான்கு கிராமங்களையும் இலக்கிய வளர்ச்சிக்கென இவருக்குக் கொடையாக அளித்தமை குறிப்பிடத்தக்கது.

கிறித்துவ அறிவு வளர்ச்சிக் கழகம்

தமிழ்க்கல்வி பரப்பும் பணியில் ‘கிறித்துவ அறிவு வளர்ச்சிக்கழகமும் (Society for promoting Christian knowledge) பெருந்தொண்டாற்றியது. இது 1698இல் தொடங்கப்பெற்றது. சீசன்பால்கு 1719இல் மறைந்தார். அவருக்குப் பின்னர் ச்யூல்ட்ஸ் பாதிரியார் பள்ளிகளை நிறுவிக் கல்வித் தொண் டாற்றினார்.

பேப்ரிசியஸ்

பேப்ரிசியஸ் பாதிரியார் தமிழ் ஜெர்மன் அகராதி தயாரிப்பதற்குப் பெரும் தொண்டு புரிந் தார். இந்த அகராதியைத் தயாரிப்பதற்கு அவருக்குப் பெரும் தொகை செலவாகியது. இவருக்குப் பணம் கொடுத்துதவிய லேவாதேவிக்காரன் வழக்குத் தொடுத்து இவரைச் சிறைக்கு அனுப்பினான். கடன்பட்டும் தமிழ்த்தொண்டாற்றிய பெருந்தகை பேப்ரிஷியஸ் பாதிரியார்.

சீவார்ட்ஸ்

சீவார்ட்ஸ் பாதிரியார் 1750ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு வந்தார். திருச்சியிலும் தஞ்சையிலும் பள்ளிகள் தொடங்கிக் கல்விப் பணியாற்றினார். 1744ஆம் ஆண்டில் ஜார்ஜ் கோட்டையின் கவர் னரின் சார்பில் ஹைதர் அலியிடம் சீவார்ட்ஸ் பாதிரியார் தூது சென்று வெற்றிகண்டார். ஹைதர் அலி பாதிரியாருக்குப் பெரும் பொன்முடிப்பைப் பரிசாகத் தந்தார். இம்முடிப்பை சீவார்ட்ஸ் பாதிரியார் கவர்னரிடம் தந்தபோது கவர்னர் அத்தொகையை அவருக்கே திருப்பித் தந்தார். சீவார்ட்ஸ் இத்தொகையைக் கொண்டு பள்ளி தொடங்க விரும்பினார். கவர்னர் தஞ்சையில் பள்ளி தொடங்க இடத்தையும் அளித்தார். சீவார்ட்ஸ் தொடங்கிய அப்பள்ளி ‘தஞ்சை ஆங்கில தர்ம பள்ளிக்கூடம்’ (The Tanjore English Charity School) என வழங்கப் பெற்றது. ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் (1749-1798) தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு சீவார்ட்ஸ் பாதிரியார் தொண்டாற்றினார்.

சீவார்ட்ஸ் பாதிரியாரும் தஞ்சை அரசரின் அரண்மனையில் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் பிரதிநிதியாக இருந்த ஜான் சல்லிவனும் இணைந்து ஆங்கிலக் கல்வியை விரிவாக்கினர். அவர்கள் தோற்றுவித்த பள்ளிகளில் கணிதம், ஆங்கிலம், கிறித்துவமத போதனைகள் என விரிவான பாடத் திட்டங்கள் இருந்தன. இவற்றுடன் தமிழும், அரபி மொழியும் கற்றுத்தரப்பெற்றன.

டாக்டர் ஆண்ட்ரூ பெல் அவர்களின் கல்வி பயிற்றுமுறை அக்காலத்தில் பெரும்புகழ் பெற்று விளங்கியது. தமிழ்க்கல்வி முறை குருவும் சட்டாம் பிள்ளையும் இணைந்து போதிப்பதாக அமைந்தது. இம்முறை பெரிதும் பாராட்டிப் போற்றப்பட்டது. இதனை ஆங்கிலேயர்கள் பெல்முறை (Bell system) என்றும் சென்னை முறை (Madras System) என்றும் சட்டாம் பிள்ளை முறை (Monitorial System) என்றும் புகழ்ந்தனர். இந்தக் கல்விமுறையை ஆண்ட்ரூபெல் இங்கிலாந்திலும் அறிமுகப்படுத்தி வெற்றி பெறச் செய்தார்.

கோட்டைக் கல்லூரி

அயல்நாட்டறிஞரின் வருகைக்குப் பிறகு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்தின் (1700-1800) கல்வி வளர்ச்சிக்குப் பிறகு தமிழ்க்கல்வி வளர்ச்சி ‘கோட்டைக் கல்லூரி’யின் வாயிலாகத் தொடங்கு கிறது எனலாம். பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் அவர் களால் தொடங்கப்பெற்ற கோட்டைக் கல்லூரி மொழிகளைக் கற்பித்தலை முதன்மையாகக் கொண்டு விளங்கியது.

1812ஆம் ஆண்டு எல்லிசு தலைமையில் தொடங்கப்பெற்ற இக்கல்லூரியில் அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய தமிழறிஞர்கள் பணி யாற்றினர். சிதம்பர பண்டாரம், தாண்டவராய முதலியார், முத்துசாமிபிள்ளை, புதுவை நயனப்ப முதலியார், திருவாசகத்தை முதன் முதலில் பதிப் பித்த கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் முதலானோர் தமிழ்க்கல்விப் பணிகளில் ஈடுபட்டு உழைத்தனர்.

கல்விச்சங்கம்

தமிழ்ச்சுவடிகளைத் தொகுக்கும்பணி, கல்விப் பணி, தமிழ் நூல் வெளியீட்டுப்பணி ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டு அறிஞர்கள் உழைத்தனர். சென்னைக் கல்விச் சங்கம் வழியாக இலக்கணச் சுருக்கம் (1813) திருச்சிற்றம்பல தேசிகராலும், இலக்கண வினாவிடை (1828) இலக்கணப்பஞ்சகம் (1834) ஆகியன தாண்டவராயமுதலியாராலும் வெளியிடப் பெற்றன. இவை உரைநடை நூல் களாகத் தொடக்கநிலையில் கற்போருக்குத் துணை யாகும் நிலையில் அச்சிடப் பெற்றன. பெரும் பாலும் தமிழ் இலக்கணக் கல்வி வரலாற்றில் உரை நடை நூல்களே தொடக்கத்தில் அச்சுருப் பெற்றன. ஐரோப்பிய ஆங்கில அலுவலர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் பயன்படும் வண்ணம் இந் நூல்கள் அமைந்தன.

எல்லிஸ், திருக்குறளில் ஒரு பகுதியை ஆங் கிலத்தில் 1811ஆம் ஆண்டில் மொழிபெயர்த்தார். தமிழில் முதன்முதலில் அச்சான இலக்கிய நூல்கள் திருக்குறளும் நாலடியாரும் ஆகும். இருநூறு ஆண்டுகளுக்குமுன் அச்சான இருசெவ்வியல் நூல்கள் திருக்குறளும் நாலடியாரும் ஆகும். இருநூல்களும் இணைந்தே அச்சு நூலாகியது.

திருக்குறள் நாலடியார் முதல் பதிப்புகள்

திருக்குறளின் மூலப்பதிப்புகளுள் தமிழில் மிகத்தொன்மையான பதிப்பாக இன்று நமக்குக் கிடைப்பது கி.பி.1812இல் வெளியான ‘திருக்குறள் மூலபாடம்’ என்னும் தலைப்பில் அமைந்த நூலாகும். ‘இலக்கணவிலக்கியவாராய்ச்சியுடையவர்களாலி கிதப் பிழையற வாராய்ந்து சுத்த பாடமாக்கப் பட்டது’ என்னும் குறிப்புடனும் ‘தொண்டை மண்டலம் சென்னைப் பட்டினத்தில் தஞ்சை நகரம், மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப் பிரகாசனால் அச்சிற்பதிக்கப்பட்டது. மாசத் தினசரிதை அச்சுக்கூடம் இ.ஆண்டு அளயஉ’ (1812) எனத் தமிழ் எண்ணில் தரப்பட்டுள்ளது) என்னும் குறிப்புடனும் தலைப்புப் பக்கம் திகழ்கின்றது. இந்நூலுடன் நாலடியார் மூலபாடமும், திரு வள்ளுவ மாலை மூலபாடமும் சேர்ந்து வெளி யிடப்பட்டுள்ளது.

மரவெழுத்தால் அச்சடிக்கப்பட்டுள்ள இப் பதிப்பே திருக்குறள் பதிப்பு வரலாற்றில் முதல் நூலாகத் திகழ்கின்றது. தமிழகத்தில் முதன் முதலாக கி.பி.1712இல் தரங்கம்பாடியில் முதல் அச்சுக்கூடம் ஏற்பட்டது. எனவே சரியாக ஒரு நூற்றாண்டிற்குப் பின்னர் இப்பதிப்பு நமக்குக் கிடைத்துள்ளது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய இப்பதிப்பில் காணப்படும் சில அரிய குறிப்புகள் மூலபாட ஆய்வியல் பற்றிய சிறந்த கருத்துகள் எனலாம்.

மூலபாட ஆய்வியல்

நெடிய கால இடைவெளிக்குப் பின்னர் ஒரு நூலினைப் பதிப்பிக்கும்போது ஆசிரியரின் உண்மைப் பாடத்தைத் தெளிந்து பதிப்பிப்பது என்பது சிக்கலான செயலாகும். கிடைக்கின்ற பல்வேறு சுவடிகளையும் திரட்டி நுணுகி ஆராய்ந்து மூல பாடத்தைத் துணிதல் வேண்டும். நூலுக்குள்ளேயே கிடைக்கின்ற ஆதாரங்கள் நூலின் நடை, நூலில் கையாளப்படும் சொற்களின் தன்மை, வரலாற்றுக் குறிப்புகள் முதலாயின கொண்டு மூல பாடத்தைத் துணியலாம் என்பர். இரண்டாவதாக நூலுக்கு வெளியில் கிடைக்கின்ற ஆதாரங்கள் நூலாசிரியருடைய பிற படைப்புகள், அவர் காலத்திய பிற படைப்புகளில் காணப்படும் அந்நூலைப் பற்றிய குறிப்புகள், மேற்கோள்கள் முதலாயினவும் மூலத்தைத் துணிதற்குப் பயன் படும்.

அச்சுப் பெறவேண்டிய இன்றியமையாமை

1812இல் தோன்றிய ‘திருக்குறள் மூலபாடம்’ என்னும் இம்முதல் பதிப்பின் பதிப்புரையில் மேற் கண்ட மூலபாட ஆய்வியல் இலக்கணக் கூறு களுள் சில விதந்து கூறப்படுவது பெரிதும் எண்ணத் தக்கதாகும். ‘வரலாறு’ என்னும் தலைப்பில் அந் நூல் தரும் செய்தி வருமாறு:

“கற்றுணர்ந்த தமிழாசிரியர்களருமையினி யற்றிய இலக்கண விலக்கியங்களாகிய அரிய நூல்களெல்லாம் - இந்நாட்டில் அச்சிற் பதிக்கும் பயிற்சியின்றிக் கையினா லெழுதிக் கொண்டு வருவதில்-எழுத்துக்கள் குறைந்தும் - மிகுந்தும் - மாறியும் சொற்கடிரிந்தும் - பொருள் வேறுபட்டும் பாடத்துக்குப் பாடம் ஒவ்வாது பிழைகள் மிகுதியுமுண்டாகின்ற வால் - அவ்வாறு பிழைகளின்றிச் சுத்த பாடமாக நிலைக்கும்படி- அச்சிற் பதித்தலை வழங்குவிப்பதற்குத்தேசித்து - நூலாசிரியர் களுள் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாய னாரருளிச் செய்த - அறம் பொருளின்ப மென்னும் முப்பாலையும் நுட்பமாக விளங்க வுணர்த்துந் திருக்குறள் மூலபாடமும் முனிவர் களருளிச் செய்த நீதி நூலாகிய நாலடி மூல பாடமும் இப்போதச் சிற்பதிக்கப்பட்டன.”

இக்குறிப்பினால் ஏறத்தாழ 200 ஆண்டுகட்கு முன் தமிழிலக்கியங்கள் அச்சுப் பெறாதிருந்த நிலை யினால் ஏற்படும் குறைகளையும் மூலபாடங்கள் வேறுபடுவதற்கான காரணங்களையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

பதிப்பு நெறிகள்

இந்நூலினை அச்சிற்பதிப்பதற்கு முன் அவர்கள் மேற்கொண்ட அடுத்த பகுதி எடுத்துரைக்கும். “இவை அச்சிற்பதிக்கு முன் தென்னாட்டில் பரம் பரை ஆதீனங்களிலும் வித்துவசெனங்களிடத்திலு முள்ள சுத்த பாடங்கள் பலவற்றிற்கு மிணங்கப் பிழையற இலக்கணவிலக்கியவாராய்ச்சியுடையவர் களாலாராய்ந்து சுத்த பாடமாக்கப்பட்டன.” என்னும் குறிப்பு, திருக்குறளின் அனைத்துச் சுவடிகளையும் தொகுத்துப் பார்த்த செய்தியை அறிவிக்கும். சுத்த பாடங்களைத் தீர்மானிப்பதற்குத் தனி ஒருவரின் முயற்சி பெரிதும் பயன் தராது; எனவே அறிஞர் குழு கூடி முடிவெடுத்தமையையும், அவ்வாறு எடுத்த முடிவையும் பல்வேறு அறிஞர்களுக்கு அனுப்பிக் கருத்துரை பெற்றதையும் முதல் பதிப்பின் வரலாறு நமக்குக் காட்டுகின்றது.

“இஃதுண்மை பெற- திருப்பாசூர் பிள்ளை திருநெல்வேலிச் சீமை - அதிகாரி ம. ராம சாமி நாயக்கர், முன்னிலையிலந்தாட்டிலிருந் தழைப்பித்த சுத்த பாடங்களுடனெழுதி வந்த வரலாறு. இந்தப் பொத்தகத்திலெழுதிய தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனா ரருளிச் செய்த திருக்குறள் மூலபாடமும் நாலடியார் மூலபாடமும் திருவள்ளுவ மாலையும் - ஆக - மூன்று சுவடியும் வெகு மூல பாடங்கள் உரை பாடங்களாதற்குக் கருவியாக வேண்டும் - இலக்கணவிலக்கியங் களெல்லாம் வைத்துப் பரிசோதித்துப் பாடந் தீர்மானஞ் செய்து ஓரெழுத்து - ஓர்சொல் - நூதனமாகக் கூட்டாமற் குறையாமலனேக மூலபாடங்க ளுரைபாடங்களுக்கிணங்க னினிதாகத் தீர்மானம் பண்ணிய சுத்த பாடம் பார்த்தெழுதிச் சரவை பார்த்த பாடமாகை யாலும் அந்தப் படி தீர்மானம் பண்ணி யெழுதின பாடமென்பது - இவ்விடங்களி லிருக்குந் தமிழாராய்ச்சியுடைய மகாவித்துவ செனங்களாற் பார்க்கும்போது மவர்கள் கருத்திற்றோன்றப்படும் ஆகையாலும் பாடங் களிலென்ன வேனுஞ் சந்தேகப்பட வேண்டு வதின்று- இப்படிக்கு திருநெல்வேலி அம்பல வாண கவிராயர்.”

இவ்வரிய பதிப்புரையினால் மூலபாடத்தை நிர்ணயிப்பதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் நெறிமுறைகளும் புலனாகின்றன. மூல பாடத்தை அறிதற்கு இலக்கியங்களையும் பிற இலக்கணங்களையும் ஆராய்ந்து முடிவெடுத்தனர்; எழுத்தோ சொல்லோ கூட்டாமலும் குறையாமலும் சுத்த பாடத்தைக் கணித்தனர். ‘சரவை பார்த்த பாடம்’ என்றும், மகாவித்துவான்கள் எந்த அளவிலும் சந்தேகப்பட வேண்டுவதின்று என்று உறுதி மொழியும் தந்தனர். இதற்குப் பின்னரும் பதிப்புரையில் பின்வரும் குறிப்புக் காணப்படு கின்றது; ‘இந்தப் பாடங்களை இவ்விடம் வந்திருந்த திருவாவடுதுறை ஆதீன வித்துவான் அம்பலவாணத் தம்பிரான், சீர்காழி வடுகநாத பண்டாரம் இவர்களாலும் மறுபடி கண்ணோட்டத் துடனாராயப்பட்டன. எனவே பல்வேறு அறிஞர் குழாம் கூடி மூலபாடம் தெளிந்த முயற்சி இவற்றால் புலனாகும்.

இங்ஙனம் பல்வேறு அறிஞர்களிடம் அனுப்பியும், ஆய்ந்தும் முடிவுகண்ட இப்பதிப்பின் மூல பாடங்களிலும் பிழைதிருத்தம் கண்ட வரலாறு பெரிதும் குறிப்பிடத் தகுந்ததாகும். இந்நூல் அச்சானதிற்குப் பின்னரும் இந்நூலினைப் பார்த்து ஓலையில் படியெடுத்து எழுதி வைத்துள்ளனர். இங்ஙனம் படியெடுத்தவர்கள் பாட பேதங்களைக் கூர்ந்தாராய்ந்து பிழை திருத்தியுள்ளனர்.

பாடபேத ஆராய்ச்சி ஏடு

கல்கத்தா தேசிய நூலகத்தில் கிடைக்கும் திருக்குறள் ஓலைச் சுவடிமூலம் இவ்வரலாறு தெரிய வருகின்றது. அந்த ஓலைச் சுவடியில் தரும் குறிப்பு வருமாறு:

“இது பொத்தகம் கலியுகாப்தம் 4900க்கு ஆங்கிரச வருடம் தொண்டை மண்டலம் சென்னைப் பட்டினத்தில் தஞ்சை நகரம் மலையப்பிள்ளை குமாரன் ஞானப் பிரகா சனால் அச்சிற்பதிக்கப்பட்டது. மாசம தினச்சரிதையின் அச்சுக்கூடம். ஆண்டு 1812.

திருநெல்வேலி அம்பலவாணகவிராயர் பிழை தீர்த்துச் சென்னைப் பட்டினத்துக்கு அனுப்பி விச்சு அவ்விடத்திலிருந்து திருவாவடுதுறை ஆதீன வித்துவான் அம்பலவாணத் தம்பிரான், சீர்காழி வடுகநாத பண்டாரம் அவர்கள் மறுபடிக் கண்ணோட்டத்துடன் ஆராயப் பட்டு அச்சிற்பதித்த காயிதப் பொத்தகத்தை ஆழ்வார் திருநகரியில், தேவர்பிரான் கவி ராயர், ஆதிநாத பிள்ளை தலத்தேடுகள் வைத்துச் சோதித்து வேறேடு எழுதியிருப்பது. மறுபடி திருநெல்வேலியில் அம்பலவாண கவிராயரிடத்தில் தீர்மானமானது. ஆழ்வார் திருநகரியில் சோதித்தது. 999 தை மீ... நம் முடைய ஏடு சுத்தமாய்த் திருத்தியிருக்கிறது.

என்னும் குறிப்பினால் அச்சேறிய திருக்குறளின் முதல் பதிப்பிலும் மூல பாடங்களைத் திருத்தி மீண்டும் பதிப்பாசிரியருக்கே அனுப்பித் தீர்மானம் செய்த பதிப்பு வரலாறு தெரிய வருகின்றது. பிழையான பாடங்கள் நூலில் புகுந்துவிடக் கூடாது என்னும் உயரிய நோக்கம் இதனால் தெளிவாகும். இவ்வோலைச் சுவடியில் பிழை திருத்தங்கள்பற்றி விரிவான குறிப்புகள் இருப்பது மல்லாமல் அட்டவணைப்படுத்தியும் எழுதியுள்ளனர். இந்த அட்டவணை.

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

அதிகாரம்      குறள் ஆழ்வார் திருநகரி ஏடு       அச்சடி பிழை

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

என்னும் நான்கு தலைப்புகளின்கீழ் அமைக்கப் பட்டுள்ளது. எனவே இச்சுவடி ‘திருக்குறள் பாட பேத ஆராய்ச்சி ஏடு’ எனலாம். அச்சு நூலிலும் வரும் பிழைகளைக் களைகின்ற ‘பாடபேத ஆராய்ச்சி ஏடு’ என இதனைக் குறிக்கலாம்.

முடிவுரை

திருக்குறளுக்குக் கிடைத்த முதல் அச்சுப் பதிப்பு நூலிலேயே பதிப்புநெறிகள் குறித்த பல அரிய விவரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. முன்னையோர் ஒரு நூலினைப் பதிப்பிக்குமுன் மேற்கொண்ட குழு முயற்சிகள் புலனாகின்றன.

தமிழிலக்கிய அச்சுநூல்கள் வரலாற்றில் திருக்குறளும் நாலடியாரும் முதன்முதலில் அச்சான செவ்வியல் நூல்களாக விளங்குகின்றன.

Pin It

வாழ்நாள் முழுவதும் இயற்கையோடு இணைந்த ஒரு விவசாயியாக, விவசாயிகளோடு விவசாயத்துக்காகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். பாரம்பரிய விவசாயத்தை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகளைத் திசை திருப்பியதில் தொடங்கி, தமிழர் உணவிலிருந்து மறைந்தே போன சிறுதானியங்கள் இன்று பேரங்காடி களில் கிடைக்கும் நிலையை உருவாக்கியது வரை தமிழகத்தில் மகத்தான மாற்றங்களை உருவாக்கிய நம்மாழ்வாருடன் சில காலத்துக்கு முன் நடத்திய ஒரு நீண்ட உரையாடலின் தொகுப்பு இது. - சமஸ்

இயற்கை வேளாண்மையை நோக்கி எப்போது திரும்பினீர்கள்? நவீன வேளாண் அறிவியலைப் பயின்ற உங்களை எது அந்த முறையையே வெறுக்கச் செய்தது?

அடிப்படையில விவசாயக் குடும்பத்துல பொறந்தவன் நான். அப்பா எங்க எல்லாரையும் படிக்கவெச்சார்னு சொன்னாலும், வயக்காட்டுக்கும் நாங்க போகணும். அதனால, சின்ன வயசுலேயே ஏர் புடிச்சுட்டோம். முழுக்கக் கிராமத்துச் சூழல்லயேதான் வளர்ந்தோம் கிறதால ஒரு வேளாண் குடும்பத்தோட பிரச்சினை, கிராமங்களோட பலம், பலவீனம் எல்லாம் புரியும். வேளாண் விஞ்ஞானம் படிக்கிற காலத்துல நாம ஏதோ பெரிய வேலை பண்ணப்போறோம்கிற நெனைப்பு இருந்துச்சு. வேலைக்குனு போய் கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையத்துல, அந்த ‘நவீன விஞ்ஞானக் கூட’த்துல ஒருத்தனா - துணை விஞ்ஞானியா - சேர்ந்ததுக்கு அப்புறம்தான் ஆராய்ச்சிங்குற பேர்ல நடக்குற அயோக்கியத்தனங்கள் தெரியவர ஆரம்பிச்சுச்சு. அதற்கான வேரைத் தேடினப்போ அது டெல்லி வழியா பரவி அமெரிக்காவில போய் முடிஞ்சுச்சு.

பாரம்பரிய அறிவை மக்கள்கிட்டே இருந்து சிதைக் கிறதும் ஏகாதிபத்தியம் சொல்றதை அப்படியே அறிவா ஏத்துக்க வெச்சு வேளாண்மையை உழவர்கள்கிட்டே இருந்து முதலாளிகள் கைக்குக் கொண்டுபோறதும்தான் நவீன வேளாண்மையோட அடிப்படைங்கிறது படிப் படியா புரிஞ்சப்போ நான் படிச்ச படிப்பையும் நவீன வேளாண்மையையும் வெறுக்க ஆரம்பிச்சேன். பின்னால, ‘பச்சைப் புரட்சி’யோட கொடூரமான பாதிப்புகள், வேலையை விட்டதுக்கு அப்புறம் நேரடியா உழவர்கள்கிட்டே இருந்து கிடைச்ச அனுபவங்கள், நான் படிச்ச சில முக்கியமான புஸ்தகங்கள், சந்திச்ச சில நண்பர்கள் எல்லாமுமா சேர்ந்து இயற்கை வேளாண்மையை நோக்கி என்னைத் திருப்புனுச்சு.

பசுமைப் புரட்சியை நிராகரிக்கிறீர்கள். ஆனால், அன்றைய உணவுப் பற்றாக்குறை அதற்கான தேவையை உருவாக்கியிருந்தது அல்லவா? பாரம்பரிய வேளாண் முறையால் அந்தத் தேவையை நிறைவேற்றியிருக்க முடியும் என்று நம்புகிறீர்களா?

தேவையை நான் மறுக்கலை. ஆனா, பல்லாயிர வருஷப் பாரம்பரியம் கொண்ட இந்திய வேளாண்மை முறையால அதைப் பூர்த்திசெஞ்சிருக்க முடியும்னு உறுதியா நம்புறேன். மாறா, நவீன வேளாண் முறையைத் தேர்ந்தெடுத்ததால என்னாச்சு? சாகுபடி நிலங்கள்ல கணிசமான பகுதி அதீதமான பூச்சிக்கொல்லி, ரசாயன உரங்கள் பயன்பாட்டால உவர் நிலமாயிடுச்சு; உணவு நஞ்சாயிடுச்சு; ஒட்டுநெல் ரகச் சாகுபடிக்கு மாறினதால, பல்லாயிரக் கணக்கான பாரம்பரிய நெல் ரகங்கள் அழிஞ்சுபோச்சு; நிலத்தடிநீர் ஆதாரம் அருகிப்போச்சு; உழவன்னா அவன் கடனாளின்னு ஆகிப்போச்சு. நாட்டுல 30 கோடிப் பேர் ஒவ்வொரு நாளும் ஒரு வேளை பட்டினியோட படுக்கப்போறாங்க; நாலுல மூணு புள்ளை ஊட்டச்சத்து இல்லாம ரத்தசோகையால பாதிக்கப்பட்டிருக்கு; அரை மணி நேரத்துக்கு ஒரு உழவன் கடன் தொல்லை தாங்காமத் தற்கொலை செஞ்சுக்குறான். ஆனாலும், நாம உணவுல தன்னிறைவு அடைஞ்சிருக்கோம்னு சொல்லிப் பீத்திக்கிறோம். வெட்கக்கேடு இல்லையா இது?

இந்தியா 1750-க்கும் 1950-க்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும், பல்வேறு பஞ்சங்களில் கோடிக்கும் மேற்பட்டவர்களை இழந்திருக்கிறது; அன்றெல்லாம் இயற்கை வேளாண்மையைத்தானே நம் விவசாயிகள் செய்தார்கள்; அதன் போதாமைதானே இந்தப் பஞ்சச் சாவுகள் என்று கேட்கிறார்கள் நவீன விவசாய ஆதரவாளர்கள்...

சரித்திரத்தை முழுசாப் படிச்சா, பதில் கிடைக்கும். வெறும் வறட்சி மட்டும் அன்னைக்கு நம்ம உழவர் களுக்கு எதிரா நிற்கலை. அரசாங்கமும் நின்னுச்சு. வெள்ளைக்காரங்களோட கடுமையான வரி விதிப்பு அவங்களை வாட்டி வதைச்சுது. வங்கத்துப் பஞ்சத் தையே எடுத்துக்குவோம். 1770-கள்ல கவர்னர் ஜெனரலா இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸோட சட்டம் என்ன சொன்னுச்சு தெரியுமா? விளைச்சலை மூணு பங்கா பிரிச்சு, ஒரு பங்கைக் கிழக்கிந்திய கம்பெனிக்கும் ரெண்டாவது பங்கை ஜமீன்தாருக்கும் கொடுத்துட்டு, எஞ்சின மூணாவது பங்கைத்தான் உழவனுக்குக் கொடுக்கச் சொன்னுச்சு. அவ்வளவு கடுமையான வரிவிதிப்பு. வங்கத்துல பஞ்சம் உச்சத்துல இருக்கும் போதுதான் ஆயிரக்கணக்கான டன் உணவுத் தானியங் களை பிரிட்டனுக்கு அள்ளிக்கிட்டுப்போச்சு ஆங்கிலேய நிர்வாகம். ‘இந்தியாவுல மக்கள் பசியால சாகக் காரணம் பிற்போக்கான இந்திய வேளாண்மைதான்’னு இங்குள்ள பிரபுக்கள் ராணிக்கு எழுதியபோது, ராணி, ஜான் அகஸ்டின் வால்கர்னு ஒரு விஞ்ஞானியை அனுப்பி வெச்சாங்க. ஒரு வருஷம் நாடு முழுக்கச் சுத்திப் பார்த்த வால்கர், ராணிக்கு என்ன அறிக்கை அனுப்பினார் தெரியுமா? ‘இந்திய உழவர்களுக்கு கத்துக்கொடுக்க எதுவுமில்லை; நான்தான் அவங்ககிட்டேயிருந்து கத்துக்கிட்டேன்’னு எழுதினார். பின்னாடி இங்கே வந்த ஆல்பர்ட் ஓவார்டு - இந்திய உழவாண்மை ஆராய்ச்சி மையத்தை உருவாக்கினவர் - இன்னும் ஒருபடி மேலே போய் ‘இந்திய உழவர்கள் எனக்குப் பேராசிரியர்களாக இருந்தார்கள்’னு சொன்னார்.

ஆக, மக்களைக் கொன்னது பஞ்சமோ, பாரம்பரிய இயற்கை வேளாண்மையோ இல்லை; அரசாங்கத்தோட தவறான கொள்கைகள். இன்னைக்கும் எங்கெல்லாம் பசி - பஞ்சச் சாவுகள் நடக்குதோ அதுக்குக் காரணமா அதுதான் இருக்கு.

இன்றைக்கு இருக்கும் சூழலில் - கிராமங்களிலுள்ள ஆள் பற்றாக்குறை, சாகுபடிப் பரப்பு சரிவு போன்ற சிக்கல்களிடையே - ஒட்டுமொத்த விவசாயிகளும் இயற்கை வேளாண்மைக்குத் திரும்புவது சாத்தியம் தானா?

நீங்க சிக்கலா சொல்ற சூழலையே எடுத்துக்குவோம். யார் காரணம்? வயல்ல உழவர்கள் இருந்தா, மளிகைக் கடையில ஆரம்பிச்சு ஆசாரிங்க, கொத்தனாருங்க வரைக்கும் எல்லோருக்கும் வேலை இருக்கும்; கிராமத்துல பணம் புரளும். உழவனே வழியில்லாம நெலத்தை வித்துட்டு, கூலி வேலைக்காக நகரத்தை நோக்கி நடந்தா? நகரத்துல இருக்குற எந்த சம்சாரியையாவது கேட்டுப்பாருங்க, ஊரை விட்டுட்டுச் சந்தோஷமாத்தான் இங்கே இருக்கானான்னு? அரசாங்கத்தோட தப்பான கொள்கைகளும், அது வழிகாட்டுற நவீன வேளாண் முறையும்தானே இதுக்கெல்லாம் காரணம்? அதை சரிசெஞ்சா, பழைய சூழல் திரும்பும்தானே?

நகரங்களில் குடியேறிய மக்களை விவசாயத்தை நோக்கித் திருப்புவது, இயந்திரங்களை ஒதுக்கி விட்டுக் கால்நடைகள் வளர்ப்பது, மேய்ச்சல் நிலங் களை உருவாக்குவது... காலத்தைப் பின்னோக்கி இழுக்க முடியும் என்று நம்புகிறீர்களா?

ஐயா... அழிவைத்தான் பின்னோக்கி இழுக்கச் சொல்றேன். நம்ம மனசுவெச்சா எல்லாமே சாத்தியம்தான். காட்டுல இருக்குற பல்லாயிரம் மரங்களையும் பல லட்சம் உயிரினங்களையும் இயற்கைதானே வளர்க்குது?

எனில், அரசு என்ன மாதிரியான தொழில் கொள்கையை வகுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

காந்தி அன்னைக்குச் சொன்னதுதான். ‘நமக்குத் தேவை, அதிக அளவிலான பொருட்களை உற்பத்தி செய்யிற முறை (மாஸ் ப்ரொடக்ஷன்) இல்லை; அதிகம் பேர் பங்கேற்கிற வகையிலான பொருள் உற்பத்திதான் (ப்ரொடக்ஷன் பை மாஸஸ்)’. அது இயற்கையோடு ஒட்டினதா இருக்கணும். அதுக்கு முதலாளிகளுக்காகவும் ஏகாதிபத்திய நாடுகளோட நிர்ப்பந்தத்துக்காகவும் யோசிக்காம, இந்த நாட்டோட விவசாயிகளை மனசுல வெச்சு திட்டங்களை யோசிக்கணும்.

உலகமயமாக்கலையும் முதலாளித்துவத்தையும் இவ்வளவு தீவிரமாக எதிர்க்கும் நீங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவது ஆச்சரியம் அளிக்கிறது...

கேள்வியோட நோக்கத்தை என்னால முழுமையா விளங்கிக்க முடியலை.

மக்களிடம் எதிர்ப்புணர்வைத் தணித்து, அவர்களுடைய அரசியலை மடைமாற்றும் வேலையில் தொண்டு நிறுவனங்கள்தானே இன்று முன்னணியில் நிற்கின்றன?

நான் அப்படிப் பார்க்கலை. சாதாரண மக்களை அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒண்ணுசேர்க்குற களமாத்தான் நான் தொண்டு நிறுவனங்களைப் பார்க்குறேன்.

ஏன் அரசியலுக்கு அப்பாற்பட்டு சாதாரண மக்களை ஒருங்கிணைக்க நினைக்கிறீர்கள்? அதிகாரம் முழுக்க அரசியலில் இருக்கும்போது அரசியலுக்கு வெளியே எப்படி மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று நினைக்கிறீர்கள்?

நான் அரசியலுக்கு எதிரானவன் இல்லை. ஆனா, ஒரு அரசியல் இயக்கம்கிறது ஒத்தையடிப் பாதை இல்லை. பலதரப்பட்ட ஆட்களுக்கும் நோக்கங்களுக்கும் இடம்கொடுக்குற இடமாத்தான் ஓர் அரசியல் இயக்கம் இருக்க முடியும். அப்படிப் பல நோக்கங்களோடு இயங்குற இயக்கத்துல, இன்னைக்கு நான் எடுத்துக் கிட்டு இருக்குற நோக்கம் சிதைஞ்சுடும். அதை நான் விரும்பலை. அதனாலதான் அமைப்புகளை விவசாய இயக்கங்களாகவே கட்டுறோம். அப்புறம், இது வெறுமனே கூட்டம் போட்டுட்டுக் கலையுற வேலை இல்லை; நீங்க என்கூடக் கைகோத்துக்கிட்டீங்கன்னா, உங்க வாழ்க்கைப் பாதையையே மாத்திக்கணும். இயற்கை வேளாண்மைங்கிறது வெறும் தொழில்முறை இல்லை; அது ஒரு வாழ்க்கை முறை இல்லையா? நீங்க இயற்கையோட இணைஞ்ச ஒரு வாழ்க்கைக்குத் தயாராகிட்டீங்கன்னா, சின்ன செடிக்கும்கூட நல்லதையே நினைக்கிறவர் ஆயிடுறீங்க இல்லையா; அதுலேயே எல்லா சமூக மாற்றங்களும் ஆரம்பமா யிடும்.

தனிப்பட்ட வாழ்வுக்கு வருவோம். இந்த நீண்ட போராட்டத்தில், நீங்கள் எதிர்கொண்ட பெரிய சவால் எது?

இயற்கை வேளாண்மைன்னா ரசாயன உரங்களுக்குப் பதிலா வெறும் சாணத்தைப் போடுறதுன்னு மக்கள் கிட்டே இருக்குற மலிவான நினைப்பு; பாரம்பரிய வேளாண்மை மேல இருக்குற தாழ்வுமனப்பான்மை; அவநம்பிக்கை.

உங்களுடைய கொஞ்ச நேரப் பேச்சில்கூட, நிறைய மேற்கோள்கள் வெளிப்படுகின்றன. வாசிப்புக்கு எவ்வளவு நேரம் ஒதுக்குவீர்கள்?

நான் படிப்பு மூலமாக் கத்துக்கிட்டது குறைச்சல். வாசிப்புதான் எனக்கு எல்லாத்தையும் கத்துக் கொடுத்துச்சு. வேலை இல்லாத நேரம்னா என்னைப் புத்தகம் இல்லாம பார்க்க முடியாது.

ஒரேயரு புத்தகத்தை மட்டும் உங்களோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், எதை வைத்துக்கொள்வீர்கள்?

என் வாழ்க்கையை மாத்தின புஸ்தகம்னா மசானபு ஃபுகோகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி ’. ஆனா, ஒரேயரு புஸ்தகம்தான் வைச்சுக்கணும்னு சொன்னீங்கன்னா, மகாத்மா காந்தியோட ‘சத்திய சோதனை’யைத்தான் வெச்சுக்குவேன். ஏன்னா, எல்லாக் காலத்துக்குமான புஸ்தகம் அது.

வெகுவாகப் பாதித்த மூன்று ஆளுமைகள்?

சின்ன வயசுல பெரியார், அப்புறம் நான் நானாகக் காரணமான என்னோட குரு பெர்னார்ட், எப்பவும் மகாத்மா காந்தி.

வாழ்க்கையைத் தொடங்கின சில மாதங்களிலேயே வேலையை விடத் தீர்மானித்ததில் தொடங்கி, வாழ்க்கையின் பெரும் பகுதியைப் பொதுப் பணிகளுக்கும் போராட்டத்துக்குமே அர்ப்பணித்திருக்கிறீர்கள். வீட்டில் இதற்கெல்லாம் ஆதரவு எப்படி?

சித்தார்த்தன் நிறைவான கணவனா வாழ்ந்திருந்தா, புத்தன் கிடைச்சிருக்க மாட்டான்னு சொல்வாங்க. நான் எந்த அளவுக்கு நிறைவா நடந்துகிட்டேன்னு எனக்குத் தெரியலை; ஆனா, என் மனைவி சாவித்ரி என்னை முழுமையாப் புரிஞ்சு நிறைவா நடந்துகிட்டவங்க. வாழ்க்கையைத் தொடங்குன கொஞ்ச நாள்லேயே என் போக்கு அவங்களுக்குப் புலப்பட்டுருச்சு. என்னோட வேலைகளும் பாதிக்காம,

வீடும் பாதிக்காம இருக்க ரெண்டு பேரும் சேர்ந்து முடிவு எடுத்தோம். வீட்டு நிர்வாகத்தை - அதாவது நெலபுல நிர்வாகத்தையும் சேர்த்துச் சொல்றேன் - அவங்க கையில ஒப்படைச்சுட்டேன். தனிப்பட்ட முறையில எனக்கு இருந்த ஒரே சுமை அதுதான். அதையும் அவங்க சுமந்ததாலதான் என்னால ஓட முடியுது.

ஆனால், வயோதிகத்தையோ உடல்நலனையோ பொருட்படுத்தாமல் ஓடிக்கொண்டேயிருக்கிறீர்கள்...

நமக்குன்னு சில காரியங்களை இயற்கை ஒதுக்கியிருக்கு. சிலர் அதைப் புரிஞ்சுக்குறோம். அதை முடிக்கத்தான் ஓடுறோம். என்னோட கவலை எல்லாம், இவ்வளோ ஓடியும் எனக்கான காரியங்களை இன்னும் முடிக்க முடியலையேன்னுதான். நாம காரியத்தைப் பத்திதான் கவலைப்படணும்; ஓட்டத்தைப் பத்தி இல்லை!

- சமஸ்

நன்றி: தி இந்து

Pin It

‘போலியைச் சுட்டெரிக்கும் புதுமைகளை, வாழ்க்கையை அலசிஅலசிப் பரிசீலிக்கும் ரசாயனங்களை, சமுதாயத்தின் புற்று நோய்களுக்கு ‘மின்சார சிகிச்சையளிக்கும்’ புத்தம் புது முறைகளை குரூர வசீகரங்களைப் படம்பிடித்துக் காட்டி, மனித உள்ளத்திலே எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது, தங்கிக் கிடக்கும் மனிதாபிமானத்தைத் தட்டியெழுப்பும் உணர்ச்சி மிக்க உயிரோவியங்களை, அந்த அபிமானத்துக்கு விரோதமாயிருந்த, இருந்து வருகிற, ‘மனித மிருகங்களின் மேல் வெறுப்பைக் கக்கி, உங்கள் நல்வாழ்வுக்கு வழிதேட முயலும் நவயுகக் கதைகளை இன்றுபோல் நீங்கள் என்றும் வரவேற்று வாழ்த்தித் தமிழை வளப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும். இதுவே என் எண்ணம். இதுவே என் இருபது வருட கால எழுத்து’ (விந்தன்:15,5,1956: விந்தன் கதைகள்:முன்னுரை)

இன்று மனித வாழ்வில் முக்கியமாக இடம் பெற்றிருப்பவை மூன்று. முதலாவது கடவுள்; இரண்டாவது மதம்; மூன்றாவது கலை. எல்லா வற்றுக்கும் காரணம் நான்தான்! என்று சொல்லாமல் சொல்லிக் கடவுள் மனிதனின் தன்னம்பிக்கையைக் கொன்றுகொண்டிருக்கிறார். இந்த உலகத்தில் அநுபவிக்கும் துன்பத்தைப் பற்றிக் கவலைப்படாதே; மறு உலகத்தில் இன்பம் உனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது’ என்று சொல்லி மனிதனை மதம், சாவை நோக்கி அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறது. கடைசி யாக உள்ள கலையாவது மனிதனை வாழ வைக்கிறதா என்றால் அதுவும் இல்லை! கடவுளையும் மதத்தையும் சிருஷ்டி செய்து, மனிதனின் ஆயுளைக் காலத்திற்கு முன்னால் கொள்ளையடிக்கும் பிக்பாக்கெட் முதலாளிகளின் கத்தரிக்கோலாகவும் அது மாறிவிட்டது!... ஆம் மாறத்தான் வேண்டும்; மனிதன் மனிதனாக வாழத்தான் வேண்டும். இதற்கு வேண்டிய தெல்லாம் என்ன?

‘ஒரே வார்த்தையில் சொல்லப் போனால் நம் உழைப்புக்கு ஏற்ற மதிப்பு’

அந்த மதிப்பைப் பெறுவதற்காகத்தான் இன்று கடவுளுடன் நாம் போராடுகிறோம்; மதத்துடன் நாம் போராடுகிறோம். இந்தக் கடுமையான போராட்டத்தில் நாம் வீழ்ந்தாலும் சரி, நம் சந்ததிகளாவது வாழ வேண்டும். மேற்படி குறிக் கோளுடன் எழுதப்படுபவை எதுவாயிருந்தாலும் அதுவே ‘மக்கள் இலக்கியம்’ (விந்தன்:சமுதாய விரோதி - சிறுகதைத் தொகுப்பு: முன்னுரை: ஜூலை1956)

கோவிந்தன் என்னும் விந்தன் (1916-1975) எவ் வகையான கருத்துநிலையோடு வாழ்ந்தார் என்பதை மேலே கண்ட அவரது இரு மேற்கோள்கள் நமக்குச் சொல்லும். இந்த மனிதரைப் புரிந்துகொள்ள இரண்டு அடிப்படைகளில் அணுகலாம். நமது வசதி கருதி உருவாக்கிக் கொண்டவை இவை. அவை,

-              சுமார் நூற்றிருபது சிறுகதைகள், ஏழு நாவல்கள் (ஒரு நாவல் முற்றுப் பெறவில்லை), விந்தன் குட்டிக் கதைகள், மகிழம்பூ என்னும் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளதும் ‘கல்கி’ இதழ்களில் இன்னும் தொகுக்கப்படாமலும் உள்ள சுமார் நூறு குட்டிக் கதைகள் ஆகியவற்றை உருவாக்கிய புனைகதை யாளன் என்னும் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வது.

-              தாம் எழுத்துலகில் நுழைந்த 1936 ஆம் ஆண்டு தொடக்கம், மறையும் வரை, தமது சமூகப் பிரக்ஞையைப் புனைகதைகளாக உருவாக்கிய தோடு, சமூக நிகழ்வுகள் குறித்த தெளிவு மற்றும் அக்கறையோடு பத்திரிகையாளனாகவும் செயல் பட்ட பாங்கு. அவ்வகையில் உருவாக்கப்பட்ட ஆக்கங்கள்.

மேலே குறித்த அடிப்படைகளில் புனைகதை யாளராக விந்தனைத் தமிழ்ச் சமூகம் ஓரளவு புரிந்து கொண்டு அங்கீகரித்திருப்பதாகக் கருத முடியும். ஆனால் அவரது உயிர்ப்பு நிலையாக அமைந்து சமூக அக்கறையைக் காட்டும் பிற ஆக்கங்களைத் தமிழ்ச் சமூகம் எவ்வகையில் புரிந்து கொண்டிருக்கிறது? என்ற உரையாடல் தேவைப்படுகிறது. அந்த வகையில் அமையும் விந்தனின் ஆக்கங்களை நமது புரிதலுக்காகக் கீழ்க்காணும் வகையில் தொகுத்துக் கொள்வோம். இவை பற்றியே இக்கட்டுரையில் உரையாடல் நிகழ்த்தலாம். (அவரது புனைகதைகள் குறித்த உரையாடலை வேறொரு சந்தர்ப்பத்தில் நிகழ்த்தலாம்)

-              ‘வேலைநிறுத்தம் ஏன்?’ என்னும் குறுநூல் 1946இல் எழுதி 1947இல் வெளிவந்தது. அக்குறுநூல் வழி வெளிப்படும் விந்தன் என்னும் மனிதனின் ஆளுமை.

-              1954இல் அவர் நடத்திய ‘மனிதன்’ பத்து இதழ்கள் வழி அறியப்படும் விந்தன்.

-              இராஜாஜி எழுதிய ‘பஜகோவிந்தம்’ என்னும் நூலுக்கு மறுப்பாக 1956இல் எழுதிய ‘பசி கோவிந்தம்’ என்னும் புடைநூல்

-              தினமணிக்கதிர் ஆசிரியக்குழுவில் (1967-1974) பணியாற்றிய காலங்களில் எழுதிய ‘மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்’ (1969), ‘ஓ மனிதா!’ (உருவகக் கதைகள்). இந்நூல் 1977இல் நூல் வடிவம் பெற்றது. எம்.கே.டி.பாகவதர் கதை (1970), நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள் (1972), (இக்காலத்தில் உரைநடையும் செய்யுளுமாக இணைந்த வடிவத்தில் ‘பாட்டிலே பாரதம்’ என்ற ஆக்கத்தையும் உருவாக்கினார்)

-              1973இல் விந்தன் உருவாக்கிய பெரியார் அறிவுச் சுவடி.

விந்தனின் எழுத்துலக வாழ்க்கையை, ‘கல்கியில் பணியாற்றிய காலம்’ (1942-1951), சுதந்திர எழுத்தாளராக இருந்து பத்திரிகை நடத்துதல் மற்றும் திரைப்படத் துறையில் செயல்பட்ட காலம் (1952-1966), தினமணிக் கதிர் இதழில் பணியாற்றிய காலம் (1967-1974) என்று பாகுபடுத்திக் கொள்ளமுடியும். இதில் முதல் கால கட்டத்தில்தான் அதிகமான சிறுகதைகளை எழுதினார். திரைப்படத் துறையில் செயல்பட்ட காலங்களில் நான்கு நாவல்களை எழுதினார். முதல் கட்டத்தில் இரண்டு நாவல்கள் எழுதினார். இறுதிக் காலச்சூழலில்தான், புனைகதை அல்லாத வேறுவடிவங்களில் பெரிதும் செயல்பட்டார். இந்தக் காலச்சூழலில் செயல்பட்ட விந்தனின் ஆளுமை முன் செயல்பட்ட பரிமாணங்களி லிருந்து வேறு தளத்தில் இருப்பதைக் காணமுடிகிறது. தமிழ்ச் சமூக இயங்குநிலைகளுக்கும் விந்தனின் ஆக்கங்களுக்கும் கால ஒழுங்கில் தொடர்ச்சியான உறவு இருப்பதைக் காணமுடிகிறது. கால நிகழ்வுகளோடு தன்னைக் கரைத்துக்கொண்ட நேர்மையான மனிதனாக விந்தனின் செயல்பாடுகள் உள்ளன. வாழ்க்கை முழுவதும் சமரசம் செய்துகொள்ளாத வாழ்க்கைப் போராட்டம் அவருக்கு வாய்த்திருக்கிறது. வெகுசன வெளியில் செயல்படுபவர்களில் இவ்விதம் இருந்த வர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்தப் பின் புலத்தில் விந்தனின் ஆளுமை என்பது தனித்துப் பேசவேண்டிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்று கருதமுடியும்.

‘என்னை எழுத்தாளன் என்று சொல்லிக் கொள் வதைவிடத் தொழிலாளி என்று சொல்லிக் கொள்வதில் நான் எப்பொழுதுமே பெருமை யடைபவன்... ஆனால் எந்தக் கட்சியையும் நான் சேர்ந்தவனல்லன் என்பதை இங்குத் தெளிவு படுத்த விரும்புகிறேன்; என்றாலும் எந்தக் கட்சி தொழிலாளிகளுடைய நலனுக்காகத் தன்னுடைய நேரத்தை அதிகமாகச் செலவிடுகிறதோ, எந்தத் தலைவர்கள், தொழிலாளர்களுடைய நலனுக்காகத் தங்கள் வாழ்நாட்களை அர்ப்பணம் செய்கிறார் களோ, அந்தக் கட்சியிடம் அந்தத் தலைவர் களிடம் என்றுமே எனக்கு அனுதாபம் உண்டு. சமீபத்தில் தமிழ்நாட்டில் (1945-46) எழுந்த வேலை நிறுத்தப் போராட்டங்களின் போது என் உள்ளத்தில் எழுந்த எண்ணங்களைத்தான் இந்தப் புத்தகத்தில் வெளியிட்டியிருக்கிறேன்’ (விந்தன் வேலைநிறுத்தம் ஏன்?: 1947)

காலனிய ஆட்சி, இரண்டாம் உலகப்போர் உருவா வதற்கான நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது. 1930களில் மிகப்பெரும் பின்னடைவு (great depression) பொருளாதாரத் தளத்தில் உருவானது. இந்தக் காலங்களில் 1920களில் உருவான இந்திய இடதுசாரி இயக்கத்தின் செல்வாக்கு, தென்னிந்தியப் பகுதிகளில் உருவானது. சென்னை நகரத்தை அடிப்படையாகக் கொண்ட இடதுசாரி இயக்கங்கள் உருவாயின. 1933 - 1937 காலங்களில் காங்கிரஸ் சோசலிஸ்டுக் கட்சி என்னும் பெயரில் இடதுசாரிகள் செயல்பட்டனர். 1937-இல் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கத்திற்கு வழியேற்பட்டது. 1939-இல் கம்யூனிஸ்டுகளைப் பிரித்தானிய அரசு நேரடியாகத் தாக்கியது. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. 1942-இல் இந்திய அளவில் உருவான விவசாயிகள் இயக்கம், தமிழகத்தில் கீழ்த்தஞ்சை மற்றும் அம்பாசமுத்திரம் பகுதிகளில் வலிமையாகக் கால் கொண்டது. பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகள், மில் வேலை செய்தவர்கள், போக்கு வரத்து நிறுவனங்களான டிராம்வே, ரயில்வே, கப்பல் ஆகியவற்றில் பணியாற்றியவர்கள், அரசு ஊழியர்கள் என்று பல தரப்பிலும் உள்ளவர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர்; பிரித்தானிய அரசு இரண்டாம் உலகப் போரினால் சீரழிந்த பொருளாதாரநிலை காலனிய இந்தியாவில் கறுப்புப்பணம், விலைவாசி ஏற்றம், கள்ளச் சந்தை, ஊழல் ஆகியவற்றுக்குக் காரணமாக அமைந்தது. கொடுமையான வறுமை ஏற்பட்டது. முப்பத்தைந்து இலட்சம் வங்காள மக்கள் இறந்த வங்கப் பஞ்சம் உருவானது. மேற்குறித்த நிகழ்வுகள் அனைத்தும் 1935-1946 காலங்களில்தான் நிகழ்ந்தேறின.

சமூகத்தின் இந்த நிகழ்வுகளை, அச்சுத் தொழிலாளி யாக வாழ்க்கையைத் தொடங்கிய விந்தன் எவ்வகையில் உள்வாங்கினார் என்பதன் பதிவாக மேலே கண்ட செய்திகள் அமைகின்றன. அன்றைய காலச்சூழலில் ‘ஜனசக்தி’ போன்ற பத்திரிகைகளில் மட்டும்தான் மேற்குறித்த சூழல் விரிவாக விவாதிக்கப்பட்டது. வேறு எவரும் பிரித்தானியரின் கொடுமையைப் பொருளா தாரக் கண்ணோட்டத்தில் பதிவு செய்யவில்லை. இந்திய விடுதலைப் போராட்டம் என்பது குட்டி முதலாளிகள் மற்றும் பெரும் முதலாளிகளால் முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் சாதாரண மக்களின் வாழ்க்கை குறித்து அக்கறைப்படவில்லை. கம்யூனிஸ்டுக் கட்சியைச் சாராத விந்தன், கம்யூனிஸ்டுகளைப் போல, சமூக நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார். கல்கியில் பணியாற்றும் ஒரு தொழிலாளி (பின்னர் உதவி ஆசிரியர்), மேற்குறித்த வகையில் பதிவு செய்திருப்பது, விந்தன் என்ற தனி மனிதனின் ஆளுமையாகப் புரிந்துகொள்ள வேண்டி யுள்ளது. குட்டி முதலாளித்துவக் கருத்துநிலை சார்ந்த சூழலில் தாம் இருந்தாலும் அதிலிருந்து வேறுபட்டு, தான் ஓரு தொழிலாளி என்ற உணர்வுடன் வாழ்ந்த வாழ்க்கையைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

‘அனுதாபத்துக்குரிய எத்தனையோ விஷயங்களில் இன்று கலையும் ஒன்றாகியிருக்கிறது; உண்மையைப் பிரதிபலிப்பதற்குப் பதிலாக அது பொய்மையைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பொய்ம்மைக்கு - அந்தப் பொய்ம்மையின் உருவமான கலாதேவிக்கு இந்த மலரைக் காணிக்கையாகச் செலுத்த நாங்கள் விரும்பவில்லை; அப்படி ஒரு தேவி இருந்தால் அந்தத் தேவியும் அதை நிச்சயமாக விரும்பமாட்டாள். ஒருவரை அடைய வேண்டிய கௌரவம், இன்னொருவரை அடைவது மனித இயல்பாக இருக்கலாம்; தேவ இயல்பாக இருக்க முடியாது. பின், வேறு யாருக்கு இந்தக் காணிக்கை?

எவன் வானத்தையும் பூமியையும் பயன்படுத்தி தான் வாழ்வதோடு பிறரையும் வாழ வைக் கிறானோ, அவனுக்கு... எவனுக்கு அந்த உலக இன்பத்தைக் காட்டிவிட்டு, இந்த உலக இன்பத்தை நாம் அனுபவித்துக் கொண்டிருக் கிறாமோ, அவனுக்கு... எவன் உழைப்பையே மூலதனமாகக் கருதி ஊரை ஏய்த்துப் பிழைப்பதை அடியோடு வெறுக்கிறானோ அவனுக்கு.... எவன் பாடுபடுவதையே தன் வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு, பாவத்தைப் பற்றி நினைக்கக் கூட நேரம் இல்லாமலிருக்கிறானோ அவனுக்கு... (மனிதன் இதழ்: காணிக்கை: பொங்கல் மலர்: 1955 சனவரி)

பிரித்தானியர் அதிகாரத்திலிருந்து, காங்கிரஸ் கட்சி அதிகாரத்துக்குக் காலனிய இந்தியா மாறிய சூழலில் பல்வேறு புதிய புத்தெழுச்சிகள் உருப்பெற்றன. சோவியத்நாடு, மக்கள் சீனம் ஆகியவற்றிலிருந்து நூல்கள் வரவழைக்கப்பட்டு, தமிழில் மொழியாக்கம் செய்யப் பட்டது. 1950இல் தொ.மு.சி.ரகுநாதன் மார்க்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலை மொழியாக்கம் செய்தார். இதற்குமுன் இந்நாவல் ‘அன்னை’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது. ‘ஜனசக்தி’, ‘முன்னணி’, ‘ஜனநாயகம்’ ஆகிய இதழ்களைக் கம்யூனிஸ்ட் கட்சி இக்காலத்தில் நடத்தியது. கே.சி.எஸ். அருணாசலம் ‘விடிவெள்ளி’ என்ற இதழையும் தொ.மு.சி.ரகுநாதன் ‘சாந்தி’ என்ற இதழையும் இக்காலங்களில் (1945-1955) நடத்தினர். இஸ்மத் பாஷா அவர்களின் ‘சமரன்’ (1954) இதழும் வெளிவந்தது. திராவிட இயக்கச் சார்பில் மிகுதியான இதழ்கள் வெளிவந்த காலம் இது. இந்தச் சூழலில்தான் விந்தன் ‘மனிதன்’(1954) இதழைத் தொடங்கினார். கார்க்கி முன்னெடுத்த ‘மனிதன்’ என்ற கருத்து நிலையை அடிப்படையாகக் கொண்டுதான் இதழுக்கு மனிதன் என்ற பெயரைச் சூட்டுவதாகக் குறிப்பிடுகிறார். (மனிதன்:15.8.1954:முதல் இதழ்) கார்க்கி மீது விந்தன் கொண்டிருக்கும் ஈடுபாடு வியப்பளிப்பதாக உள்ளது. எந்த இடதுசாரி அமைப்புகளோடும் தொடர்பு இல்லாதவர்; கல்கி என்ற குட்டி முதலாளித்துவ இதழில் பணியாற்றியவர்; இருந்தாலும் கார்க்கி மீது அவர்தம் ஈடுபாட்டைப் பகிரங்கமாகப் பதிவு செய்கிறார். 15.1.1955 மனிதன் இதழின் அட்டைப்படத்தில், அரசாங்க அடிநிலை ஊழியர், நெய்தல் தொழிலாளி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர், உழவன் ஆகியோரது படங்களைப் போட்டு, அவர்களை ‘இந்நாட்டு மன்னர்கள்’ என்ற தலைப்பில் குறித்துள்ளார். ‘இதோ ஒரு சுயமரியாதைக்காரர்’ என்னும் தொடர் மனிதனில் வந்தது. சமூகத்தின் அடிமட்டத்தில் வாழும் மனிதர்களையே இத்தொடரில் அறிமுகப்படுத்தினார்.

‘தெருவிளக்கு’ என்ற தொடர்கதை மனிதன் இதழில் இடம்பெற்றது. திரைப்பட உலகின் கொடுமை களைக் கடுமையாக விமர்சனம் செய்வதாக அப்பகுதி அமைந்தது. தமிழொளி, ஜெயகாந்தன், சுந்தரராமசாமி ஆகிய பிற படைப்பாளர்கள் இவ்விதழில் எழுதினர். தனக்குச் சமூக அங்கீகாரம் கொடுத்து, வாழ்க்கைக்கு உதவிய கல்கியைப் பெரிதும் பாராட்டும் செய்திகளும் இவ்விதழ்களில் இடம்பெற்றன. அன்றைய தமிழ்ச் சூழலில் இடதுசாரி அமைப்புகளைச் சேராமல், இடது சாரி மனநிலையுடன் வாழ்ந்தவர்கள் பலர் இருந்தனர். அவர்களில் விந்தன் இடம் தனித்தது. இதனை அவரது 1946இல் எழுதிய வேலைநிறுத்தம் ஏன்? என்ற குறு நூலும் மனிதன் இதழும் உறுதிப்படுத்துவதைக் காண முடிகிறது. இவ்வகையான ஆளுமைகளைத் தமிழ்ச் சமூக வரலாறு உரிய வகையில் புரிந்து அங்கீகாரம் அளிக்க வில்லை என்றே கருதத் தோன்றுகிறது. அமைப்புச் சார்பில்லா இடதுசாரி மனநிலையினரை, இடதுசாரி அமைப்புகளில் இருந்தவர்கள், தம்முள் ஒருவராய் அங்கீகரித்துக் கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும். அது தமிழ்ச்சூழலில் நிகழவில்லை. கட்சிக்காக உழைத்து, கட்சியைவிட்டு வெளியே வந்த தமிழொளியைக் கூட இடதுசாரி அமைப்புகள் அந்தச் சூழலில் அங்கீகரிக்கவில்லை. அப்படியானால் விந்தன் போன்றவர்களை எப்படி அங்கீகரிப்பார்கள்? விந்தன் போன்ற ஆளுமைகளை இடதுசாரிகள் கொண்டாடுவது அவசியம். அப்படிச் செய்யாவிட்டால் இழப்பு இடதுசாரிகளுக்குத் தான்.

திரைப்பட உலகத்தில் செயல்படச் சென்ற விந்தன் அதற்காகவே கல்கியிலிருந்து விலகினார். அந்த உலகம் அவருக்கு உவப்பாக இல்லை. அந்த உலகத்திலும் தன்னுடைய அடையாளத்தைக் காட்ட முயன்றார். அவரது திரைப்பாடல் ஒன்று பின்வரும் வகையில் அமைகிறது.

‘ஒண்ணும் புரியவில்லை தம்பி - எனக்கு/ ஒண்ணும் புரியவில்லை தம்பி/ கண்ணு ரெண்டும் சுத்துது/ காதை அடைக்குது/ கஞ்சி கஞ்சி என்று வயிறு/ கெஞ்சிக் கெஞ்சிக் கேட்குது./

கடவுளை நம்பினேன் கற்பூரம் செலவு/ கல்வியை நம்பினேன் காசெல்லாம் செலவு/ மனிதனுக்கு மனிதன் மனமிரங்கவில்லை/ மானத்தோடு வாழ மார்க்கம் ஏனோ இல்லை/ சாலையிலே தொழிலாளி சம்சாரம் நடக்குது/ ஆலையிலே அவனாவி புகையாகப் போகுது (1953:’அன்பு’ திரைப்படம்)

திரைப்படத்துறையில் அவருக்கு ஏற்பட்ட நிறைவின்மையைப் பத்திரிகை நடத்துவதின் மூலம் போக்கிவிடலாம் என்று நம்பினார். இவ்வகையில், 1950களில் தமிழ்ச்சமூக நடைமுறையின் நேரடி விளைவாக விந்தன் போன்றோரின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடிகிறது. பத்திரிகைத் துறையில் தொடர்ந்து செயல்பட்டிருக்க வாய்ப்பு இல்லாமல் போனது தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்ட இழப்பாகவே கருதவேண்டும். தாம் பத்திரிகைத்துறையில் தொடர முடியாமைக்குக் காரணம், பத்திரிகைகளை விற்பனை செய்யும் முகவர்களின் பித்தலாட்டம் மற்றும் ஏமாற்றுதல் ஆகியவைகளே காரணமாக விந்தன் பதிவு செய்கிறார்.

1950களில் தமிழ்ச்சமூகத்தில் பல்வேறு புதிய விளைவுகள் உருவாயின. இடதுசாரிகள், குறிப்பாக, கம்யூனிஸ்டுகள் மக்களின் செல்வாக்குப் பெற்றவர்களாக உருவாயினர். தென்னிந்தியப் பகுதிகளில் பெரு வாரியான இடங்களில் தேர்தலில் இடதுசாரிகள் வெற்றியும் பெற்றனர். தமிழகம்/ ஆந்திரம்/ கேரளப் பகுதிகளில் கம்யூனிஸ்டுகள் ஆட்சி அமைக்கும் சூழல் உருவானது. விவசாயிகள் இயக்கம், தொழிலாளர் இயக்கம் ஆகியவை வலுவான அமைப்புகளாக உருப்பெற்றன. சோவியத்நாடு, மக்கள் சீனம் ஆகிய கம்யூனிச நாடுகளிலிருந்து தொடர்புகள் கிடைத்தன. இந்தச் சூழலில் பெரியார், தமது சுயமரியாதை இயக்கம் சார்ந்த கருத்துப்பரவலைச் செய்துகொண்டிருந்தார். ‘இராமன் சிலையை செருப்பால் அடிக்கும் வெகுசன மத எதிர்ப்புப் போராட்டத்தை இக்காலத்தில் நிகழ்த்திக் கொண்டிருந்தார்’. தமிழ்ச்சமூகத்தின் இவ்வகையான வளர்ச்சிப் போக்கு இராசகோபாலாச்சாரி என்னும் இராஜாஜிக்கு உவப்பாக இல்லை. அவரது செல் வாக்கைப் பயன்படுத்தி ‘குலக்கல்வித் திட்டம்’ என்னும் சாதியத்தை நியாயப்படுத்தும் வேலையைச் செய்யத் தொடங்கினார். சனாதன, வைதீக மரபுகள் அழிக்கப் படுவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; காம ராஜரையும் இராமசாமி படையாச்சியையும் பயன்படுத்தி மேற்குறித்த வகையில் உருவாகும் தமிழ்ச்சூழலுக்கு மாற்றான ஒன்றைத் திரைமறைவில் செய்து வெற்றி பெற்றார். இடதுசாரிகள் படிப்படியாகச் செல்வாக்கு இழந்தனர். இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையில் உருவான கேரள கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியும் நேருவால் பின்னர் கலைக்கப்பட்டது. தமிழ்ச்சூழல் திராவிட கருத்துநிலை சார்ந்த வளர்ச்சியில் உருப்பெறத் தொடங்கியது.

மேற்குறித்த சூழலில்தான் இராஜாஜி ‘பஜகோவிந்தம்’ (1956) என்ற நூலை எழுதினார். இந்நூல் ‘மோக முத்கரம்’ என்ற பெயரில் சங்கராச்சாரி எழுதிய நூலின் வழிநூல். அந்நூலின் கருத்துகளை உள்வாங்கி 31 பாடல்களாக இராஜாஜி எழுதினார். இராஜாஜியின் இந்நூலுக்குப் புடைநூலாக ‘பசிகோவிந்தம்’ (1956) என்ற நூலை விந்தன் எழுதினார்.

‘பஜகோவிந்தம் பஜகோவிந்தம் பாடு’ என்று வரும் இராஜாஜி வரிகளுக்கு மாற்றாக ‘பசிகோவிந்தம் பசிகோவிந்தம் பாடு’ என்று விந்தன் எழுதினார். இவரும் 31 பாடல்களை எழுதி அதற்கு விளக்கவுரையும் எழுதினார். இவ்விரு நூல்களையும், பெண்ணாடம் புதுமைப்பிரசுரம் திரு இராமசாமி என்பவர் வெளி யிட்டார். இராஜாஜி நூலில் அட்டையில் கிருஷ்ணன் குழல் ஊதி நின்றுகொண்டிருப்பான்; விந்தன் நூலின் அட்டையில், பிச்சையோட்டை ஏந்தியவாறு ஒட்டிய வயிறோடு ஒரு மனிதர் நின்றுகொண்டிருப்பார். இரண்டு அட்டைகளும் ஒரே மாதிரியான வடிவமைப்பில் வெளி யிடப்பட்டன. இவ்வகையில் இராஜாஜியின் சனாதன, வைதீகத்திற்கு எதிராக விந்தனின் நூல் அமைந்தது. புதுமைப் பிரசுரன் வெளியிட்ட இந்நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிட ஸ்டார் பிரசுரத்திற்கு விந்தன் கொடுத்திருந்தார். அதில் முன்னுரையாகப் பின்வரும் பகுதியை விந்தன் கையால் எழுதியுள்ளார்.

‘இப்புத்தகத்தில் ஆசான் உரைத்தவை பாடல்கள்; அடியானுடையது வியாக்கியானங்கள். உண்மை யான ஒரு சங்கராச்சாரி (ஆதிசங்கரர்) இதைத்தான் பாடியிருக்க வேண்டும். உண்மையான அடியான் (இராஜாஜி) இதைத்தான் வியாக்கியானம் பண்ணியிருப்பான். மற்றதெல்லாம் ஹம்பக் - பித்தலாட்டம் - ஏமாளிகளை ஏய்த்தல் - தூங்குகிறவன் தொடையில் கயிறு திரித்தல் - இவ்வளவும் தானும் தன்னைச் சார்ந்த கூட்டமும் சுகமாய் வாழ - உழைக்காது உண்டு கொழுக்க’ (வீ.அரசு: விந்தன் சிறுகதைகள் - ஒரு திறனாய்வு: எம்.பில். ஆய்வேடு: பின்னிணைப்பு:39:1979)

மேற்குறித்த இரண்டாம் பதிப்பு ஸ்டார் பிரசுரத்தின் மூலமாக வெளியாகவில்லை. விந்தனின் வைதீக எதிர்ப்பு மரபை இதன்மூலம் அறிய முடிகிறது. பிற்காலங்களில் பெரியார் மீது ஈடுபாடு கொண்டதையும் விளங்கிக் கொள்ளமுடிகிறது. இராஜாஜியை கருத்து மோதலில் நேரடியாக எதிர்கொண்ட விந்தனின் ஆளுமை விதந்து பேசக்கூடிய ஒன்று. சமூகத்தில் செல்வாக்குள்ள மனிதர்களுக்கு எதிராகக் கருத்துப்போர் நடத்துவது ஓர் எழுத்தாளரால் நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பதைக் காண்கிறோம். இதனை அன்றைய சமூகம் இயல்பாக எடுத்துக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. இன்றைய சூழலில் இப்படியான செயல்பாடுகளைக் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியுமா? என்று சந்தேகம்.

‘தினமணிக்கதிரில்’ (1967-1974) விந்தன் பணியாற்றிய காலங்களில் செய்த ஆக்கங்களைப் புரிதலுக்காகப் பின்வரும் வகையில் தொகுத்துக் கொள்ளலாம்.

-              சமூக அவலங்களை எள்ளல் மற்றும் உருவகக் கதை வடிவில் விமர்சனத்துக்கு உள்ளாக்கும் மரபு. பத்திரிகைத் துறையில் இவ்வகை மரபுகள், சிறந்த பத்திரிகையாளர்களால் நிகழ்த்தப்படுவது இயல்பு. உண்மை நிகழ்வுகளுக்குக் கொடுக்கப் படும் பத்திரிகைத் துறைசார்ந்த வடிவமாக இதனைக் கருதலாம். இவ்வகையில் செயல்பட்ட விந்தனின் செயல்பாடுகள்.

-              சமூகத்தில் பிரபலமாக இருக்கும் மனிதர்களை உரையாடல் வடிவத்தில் அறிமுகப்படுத்தும் தொடர்கள், முன்பு பத்திரிகைகளில் மிகுதியாக இடம் பெற்றிருப்பதைக் காண்கிறோம். பத்தொன் பதாம் நூற்றாண்டு பத்திரிகை உலகில், கட்டுரைகள் எழுதுவதையே ‘கடிதங்கள்’ என்று குறிப்பிட்டு வெளியிட்டு இருப்பதைக் காண்கிறோம். ‘தத்துவ விவேசினி’ (1882-1888) இதழில் இம்முறை பின்பற்றப்பட்டுள்ளது. உரையாடல் வடிவத்தில் விந்தன் தினமணிக் கதிரில் எழுதிய இரு தொடர்கள் குறித்த பதிவை இங்குச் செய்ய வேண்டியது அவசியம்.

தினமணிக்கதிரில் ‘மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்’ என்ற பெயரில் வெளிவந்தது விந்தனின் தொடர். இது 1969இல் நூல்வடிவம் பெற்றது. விக்கிர மாதித்தன் கதையின் அமைப்பை அப்படியே தழுவி, நடைமுறை வாழ்க்கையை எள்ளி நகையாடும் எள்ளல் பாணி இலக்கிய வெளிப்பாடாக இது அமைந்துள்ளது. திரைப்பட நடிகர்கள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் என முப்பத்திரண்டு பேர் குறித்த முப்பத்திரண்டு கதைகள் அவை. இதைப் போலவே ‘ஓ மனிதா!’ என்ற தொடரைத் தினமணிக்கதிரில் எழுதினார். அவை 1977இல் நூலாக வெளிவந்தபோது, வெளியீட்டாளர் எழுதியுள்ள குறிப்பு பின்வருமாறு அமைகிறது.

‘விலங்குகளையும் பறவைகளையும் வைத்துக் கதையில் நீதி புகுத்துவது பஞ்சதந்திரக் கதை களிலும், கீதோபதேசக் கதைகளிலும், ஈசாப் கதைகளிலும் உண்டு. ஆனால், அந்த நீதிக்கதை களில் காணாத குத்தல், கிண்டல் ஆகியவை நீறுபூத்த நெருப்பாக இல்லாமல் வீறு கொண் டெழுந்த அக்கினிப் பிழம்பாக விளங்குவதே ‘ஓ மனிதா!’ கட்டுரைக்கதைகள். இல்லை இவை கதைக்கட்டுரைகள். (பூம்புகார் பிரசுரம், 1977. முன்னுரை)

மேற்குறித்த இரு ஆக்கங்களிலும் விந்தன் மிக விரிவான சமூக விமர்சனங்களைச் செய்துள்ளார். இவ்வகையான ஆக்கங்களைச் செய்தவர்கள் தமிழில் மிக மிகக் குறைவு என்று கூறலாம். புனைகதைப் படைப் பாளி பத்திரிகைத் துறையில் செயல்படும்போது இவ் வகையான ஆக்கங்கள் உருப்பெறுவது இயல்பு. இவ் வகையில் தமிழ்ப்பத்திரிகைத்துறை மரபை வலுப் படுத்தியவராக விந்தனைக் கருத இயலும். ‘ஓ மனிதா!’ கதைக்கட்டுரைகளில் பறவைகள் ஒன்பதும் விலங்குகள் எட்டும் நம்மைப் பார்த்துப் பேசுவதாக அமைத்துள்ளார் விந்தன். அதில் ஒருபகுதி பின்வருமாறு:

‘மனம் ஒரு குரங்கு’ என்று சொல்லிக் கொள்வ தோடு மனிதர்களான நீங்கள் நிற்பதில்லை; ஆதியில் என்னிலிருந்து வந்ததாகவே நீங்கள் சொல்லிக் கொள்கிறீர்கள். அதையும் சாதாரண மாகச் சொல்லிக் கொள்ளவில்லை; ஆராய்ச்சி பூர்வமாகச் சொல்லிக் கொள்கிறீர்கள். அதற் கென்றே ‘டார்வின் சித்தாந்தம்’ என்று ஒரு தனிச் சித்தாந்தத்தையே உருவாக்கி வைத்துக் கொண் டிருக்கிறீர்கள். இன்னும் சொல்லப்போனால் அதை ஒரு பெருமையாகக் கூட நீங்கள் கருதிக் கொண்டிருக்கிறீர்கள்! நாங்கள் அந்த அளவுக்கு எங்களுடைய பெருமையைக் குறைத்துக் கொள்ளவில்லை. காரணம், உங்களுக்கு மட்டுமே இருப்பதாக நீங்கள் சொல்லிக் கொள்ளும் ‘பகுத்தறிவு’ எங்களுக்கு இல்லாமல் இருப்பது தானோ என்னவோ? ராம - ராவண யுத்தத்தில் ஈடுபட்டதன் காரணமாக உங்களில் சிலருக்கு நாங்கள் வணக்கத்துக்குரிய ஜீவன்களாக இருந்து வருகிறோம். ஆயினும் என்ன, கடவுளரைக் குறிக்கும் விக்கிரகங்களை வேண்டுமானால் நீங்கள் நைவேத்யம் என்ற பேரால் பழம் - பட்சணம் வைத்து வணங்குவீர்கள் - அவற்றை எடுத்து அவை தின்று தின்றுவிடாது என்ற தைரியத்தில்! எங்களை வணங்கும் போதோ? - ராம ராமா! என்று கன்னத்தை வலிக்காமல் தொட்டுக் கொள்வதோடு சரி! இதனால் என்ன நடக்கிறது? - எங்களுக்கு வேண்டியதை நாங்கள் உங்களிட மிருந்து தட்டிப்பறித்தே தின்ன வேண்டியிருக் கிறது. நாங்கள் மட்டும் என்ன, நீங்களும் ஒருவரை ஒருவர் நாசூக்காக, நாகரிகமாகத் தட்டிப் பறித்தே தின்றுகொண்டிருக்கிறீர்கள்! இது உங்கள் பிறவிக் குணம். நீங்களாக யாருக்கும் எதுவும் கொடுக்கமாட்டீர்கள். அப்படியே கொடுத் தாலும் ஏதாவது ஒரு லாப நோக்கோடுதான் கொடுப்பீர்கள். நல்ல வேலையாகக் கடவுள் உங்கள் கண்ணில் படுவதில்லை. பட்டால் அவருக்கு எதிர்த்தாற் போலவே யாராவது ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு காசை எடுத்துத் தாராளமாகத் தருமம் செய்துவிட்டு, ‘நான்தான் தருமம் செய்து விட்டேனே, எங்கே எனக்கு மோட்ச சாம்ராஜ்யம்? கொண்டா!’ என்று கூசாமல் கேட்டாலும் கேட்பீர்கள்! (ஓ மனிதா: பூம்புகார் பிரசுரம்: 27,28: 1977)

மேற்குறித்த ஆக்கங்களில் விந்தன் செய்துள்ள ஆக்க இலக்கிய வடிவங்களை, மதிநலப்பேச்சு (wit) இடித்துக் கூறல் (satire),  இகழ்ச்சிக் குறிப்பு (sarcasm) வினையப்பேச்சு (lampooning) என்று ஆங்கில இலக்கிய மரபில் கூறுவர். விந்தன் செய்துள்ள இவ்வகையான சமூக விமர்சனங்களை எள்ளல் மற்றும் அங்கதம் என்று நாம் புரிந்து கொள்ளலாம். இவ்வகையான மரபை அவர் எழுதியுள்ள குழந்தைகளுக்கான குட்டிக்கதைகளிலும் காணமுடியும். விந்தனின் காக்கா - வடை கதையில், நரி, காக்கையைப் பாடக் கேட்கும் போது, காக்கை, வடையை வாயிலிருந்து பத்திரமாகத் தம் காலில் இடுக்கிக்கொண்டு பாடும். காக்கை நரியை ஏமாற்றும். நரி காக்கையை ஏமாற்றுவதை விந்தன் புரட்டிச் செய்திருப்பார். இவ்வகை அரிய ஆக்கங்களைத் தமிழில் உருவாக்கியவர் விந்தன் என்னும் புரிதல் தமிழ்ச் சமூகத்தில் உருப்பெற்றிருப்பதாகக் கூறமுடியாது.

1944களில் ஆயிரம் நாட்கள் ஓடிய திரைப்படம் ‘ஹரிதாஸ்’. இதில் நடித்தவர் எம்.கே.தியாகராய பாகவதர். இவ்வளவு நாட்கள் எந்தத் திரைப்படமும் ஓடியிருக்க முடியாது. அந்த வகையில் 1940களில் தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். எம்.கே.டி. பாகவதர். அவரது வாழ்க்கை வரலாற்றை உரையாடல் பாங்கில் விந்தன் பதிவு செய்திருக்கிறார். வாழ்க்கை வரலாற்றை, கதைபோல உரியவர்கள் பேசுவதாக அமையும் இவ்வடிவம் விந்தனின் சிறந்த ஆக்கங்களில் ஒன்றாக அமைகிறது. திரு.சி.என். அண்ணாதுரை அவர்களும் பாகவதர் அவர்களும் காலப்போக்கில் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். பாகவதரை வைத்து, படம் ஒன்று உருவாக்க சி.என்.ஏ. முடிவு செய்தார். அவருக்காக ஒரு கதையை எழுதினார். பாகவதரிடம் அவர் நடிக்கக் கேட்டபோது அவரது பதிலாகக் கீழ்வரும் பகுதி அமைகிறது.

‘தெரிந்தோ தெரியாமலோ, நடிக்கும் படங்களில் மட்டுமல்ல; வாழ்க்கையிலும்நான் தெய்வபக்தி உள்ளவனாக இருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் கதாநாயகனுக்கோ அந்தப் பக்தி இல்லை. அவனை மையமாக வைத்து எழுதப் பட்டிருக்கும் கதையில் நான் எப்படி நடிப்பேன்? நடிப்புக்காகத் தெய்வ நிந்தனை செய்யக்கூட என்மனம் துணியவில்லையே! உங்கள் கொள்கை அதுவானால், அதில் நீங்கள் உறுதியோடு இருப்பது உண்மையானால், அதற்கு நான் தலை வணங்குகிறேன்! என்றார் அண்ணாதுரை, தமக்கே உரிய பெருந்தன்மையுடன். கொள்கை எதுவாயிருந்தாலும் பிறருடைய விருப்பத்துக்கு விரோதமாக அவற்றைத் திணிக்க விரும்பாத உங்கள் பெருங்குணம் என்னை வெகுவாகக் கவரு கிறது என்று அவரை மனமுவந்து பாராட்டினார் பாகவதர். நீங்கள் மட்டும் அதற்குச் சளைத்தவரா, என்ன? பக்திப்பாடல்கள் என்னுடைய கொள் கைக்கு உடன்பாடு இல்லை என்பதற்காக நீங்கள் வேதாந்தப் பாடல்கள் பாடி என்னை மகிழ்விக்க வில்லையா?’ என்றார் அண்ணாதுரை. அதற்காகப் பக்திக்கதை எழுதி, அதில் நீங்கள் என்னை நடிக்கச் சொல்லமாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன்! என்றார் பாகவதர் சிரித்துக்கொண்டே. அது நடக்காத காரியம்; நானும் கொள்கைப் பிடிப்பில் உங்களுக்குப் பின் வாங்கியவனல்ல’ என்று அண்ணாதுரை சிரித்துக்கொண்டே எழுந்து நடந்தார். அது என்ன கதை? என்று தெரிந்து கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களல்லவா? அதுவே சொர்க்க வாசல். பாகவதருக்குப் பதிலாக அதில் நடித்தவர் யார்? அவரே திரு.கே.ஆர்.ராமசாமி (விந்தன்: எம்.கே.டி.பாகவதர் கதை: 215,216: 1983)

இவ்வகையில் பிரபலமானவர்களை அவர்களுடைய பன்முகப் பரிமாணநோக்கில் விந்தன் வெளிப்படுத்தி யிருப்பதைக் காண்கிறோம். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, மிகச் சிறந்த கர்நாடக இசைப்பாடகராக இருந் தவர் எம்.கே.டி.பாகவதர். தமிழகக் கலை வரலாற்றில் கர்நாடக இசை வித்தகர்களாக இசை வேளாளர்கள் என்னும் கால மரபைச் சேர்ந்தவர்கள் தொடக்க காலத்தில் இருந்தனர். அந்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி ஆதிக்க சாதியினர்கள் அதனைக் கையில் எடுத்துக் கொண்டனர். அந்த மரபில் ஆதிக்கசாதியினருக்குச் சமமாக அதற்கும் மேலான தகுதியுடையவர் எம்.கே.டி. பாகவதர் என்னும் கர்நாடக இசைக்கலைஞர் என்பதைச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் அரசியலை விந்தன் சிறப்பாகச் செய்துள்ளார். யாரை? எதற்காக? எப்படி அறிமுகப்படுத்த வேண்டும் என்னும் புரிதல் விந்தனுக்கு இருந்தது. இவ்வகையான புரிதல் ஊடகத்துறையில் மிகவும் அவசியம்.

தமிழ் அரங்கவரலாற்றில், எம்.ஆர்.இராதா அளவிற்குக் கலகக்காரர் என்று இன்னொருவரைக் கூறமுடியாது. தமிழ் நாடகத்திலும் தமிழ்த் திரைப் படத்திலும் அவரது இடம் தனித்தது. பெரியார் கருத்துக்களின் பிரச்சாரகராக அவர் இருந்தார். பெரியார் செய்துவந்த பரப்புரைக்கு இணையாகக் கூட எம்.ஆர். இராதா அவர்களின் செயல்பாட்டைக் கூறலாம். பகுத்தறிவாளர் இராதாவை, தமிழ்ச்சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் பணியை விந்தன் சிறப்பாக நடைமுறைப்படுத்தினார். எம்.ஜி.ஆர். துப்பாக்கிச் சூடு நடந்து சிறையில் இருந்து எம்.ஆர்.இராதா வெளி வந்தவுடன் அவரோடு உரையாடல் நடத்தி பத்திரி கையில் வெளியிட்டார். அந்நூல், இராதா என்ற மனிதரின் பல்பரிமாணங்களை வெளிப்படுத்துவதாக உள்ளது. இராதா அவர்களின் கருத்து வெளிப்பாட்டைப் புரிந்துகொள்ள கீழ்க்காணும் பகுதிகள் உதவும்.

‘ ‘சங்கரதாஸ் சுவாமிகள்...?’ வருவார்; இருப்பார். குடித்துவிட்டு ஆடினால், இது நமக்குப் பிடிக்காது; நீ போய்விட்டு வா! என்று அய்யர் அவரை வெளியே அனுப்பிவிடுவார். ‘அவரை இன்று சிலர் நாடக உலகத் தந்தை என்று சொல்கிறார்களே?’ அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அவர் நல்ல நாடகாசிரியர்; பாடலாசிரியர். எழுத ஆரம்பித்தால் தங்குதடை யில்லாமல் எழுதுவார்... அதெல்லாம் சரி. ஆனா, இப்போதே இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிட்ட புராண இதிகாச நாடகங்களுக்கு வேண்டுமானால் அவர் தந்தையாயிருக்கலாமே தவிர, நாடக உலகத்துக்கு ஒரு நாளும் தந்தையா யிருக்க முடியாது. அப்படி யாராவது இருந்தால் அவர் ஜகந்நாதய்யராகத்தான் இருக்கமுடியும். ஏன்னா இன்னிக்கு இருக்கிற அத்தனை கலைஞர் களும் அவருடைய வழிவழியா வந்த கலைஞர் களே. இதை யாராலும் மறுக்க முடியாது.’ (நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்:22:1995)

சங்கரதாஸ் சுவாமிகள் குறித்த எம்.ஆர்.இராதா அவர்களின் இந்தப் பதிவு சிந்திக்க வைக்கிறது. அதைப் போல, பிரகாசம் என்ற தமிழ்நாட்டு முதலமைச்சர், கம்யூனிஸ்டுகள் மீது நடத்திய அடக்குமுறையை எம்.ஆர்.இராதா பின்வரும் வகையில் பதிவு செய் துள்ளார்.

பார்த்தசாரதியும் என்.வி.என்.னும் இன்னும் சிலரும் திருச்சிக்கு வந்து என்னைப் பார்த்தாங்க; நாடகம் நடத்தக் கூப்பிட்டாங்க. எனக்கும் அப்போ சென்னையிலே நாடகம் போட்டா தேவலைன்னு தோணுச்சி; வந்தேன். சவுந்தரிய மகாலிலே நாடகம். இழந்த காதல், விமலா அல்லது விதவையின் கண்ணீர், லட்சுமிகாந்தன் இந்த மாதிரி நாடகங்களைப் போட்டுக் கிட்டிருந்த வரையிலே எந்த வம்பும் இல்லே; போர்வாள்ன்னு போட்டதுதான் தாமதம். சர்க்கார் அந்த நாடகத்தை நடத்தக் கூடாதுன்னு தடை போட்டுட்டாங்க... ‘எந்த சர்க்கார், பிரிட்டிஷ் சர்க்காரா?’ அவங்க போட்டிருந்தாலும் அதிலே ஓர் அர்த்தம் இருந்திருக்கும். ஒரு பக்கம் ஜன நாயகத்தைக் கட்டி வளர்த்தாலும், இன்னொரு பக்கம் முடியாட்சியை இன்னிய வரையிலே கைவிடாம இருக்கிறவங்க அவங்க. அந்தச் சர்க்கார் போர்வாள் நாடகத்தைத் தடை செய்யல்லே; அதுக்குப் பதிலா அப்போ சென்னையிலே நடந்துக்கிட்டிருந்த பிரகாசம் சர்க்கார் தடைவிதிச்சது... ‘பிறகு...........?’ அப்போதைக்கு அந்தத் தடையை மீற வேணாம்னு வேறே நாடகங்களை நடத்த ஆரம்பிச்சோம். ஏன்னா, அப்போ நாட்டு நிலவரம் நல்லாயில்லே. எங்கே பார்த்தாலும் ஒரே கம்யூனிஸ்ட் கலாட்டா, குழப்பம், பொன்மலையிலே கம்யூனிஸ்டுகளைச் சுட்டுத் தள்றாங்கன்னு ஒரே புரளி; பீதி. பிரகாசம் வேறே ஒரு கம்யூனிஸ்ட்டைக் கூட வெளியே விடாம பிடிச்சி உள்ளே தள்ளிக்கிட்டே இருந்தார். இந்தச் சமயத்திலே என்கிட்டேகூட ஒருத்தர் வந்து, ‘நீங்க டிராமா தொடங்கறதுக்கு முந்தி ஒரு திரைவிடறீங்களே, அந்தத் திரையைக் கூட கழற்றிச் சுருட்டிக் கொஞ்சநாள் உள்ளே வைச்சுடுங்க; இல்லேன்னா உங்களையும் கம்யூனிஸ்டுன்னு பிரகாசம் உள்ளே போட்டுட் டாலும் போட்டுடுவார்’னார்.... ‘அப்படி என்ன இருந்தது அந்தத் திரையிலே....?’ திராவிட நாடு திராவிடருக்கேன்னு இருந்திருக்கும்னு நினைக் கிறீங்களா? அதுதான் இல்லே; உலகப் பாட்டாளி மக்களே ஒன்றுபடுங்கள்னு இருந்தது... கம்யூனிஸ்ட் கட்சியிலும் உங்களுக்கு ஈடுபாடு உண்டா, என்ன? இல்லாதவன் யாராயிருந்தாலும் அவனுக்கு நிச்சயம் அதிலே ஓர் ஈடுபாடு இருக்கத்தானே இருக்கும்? (மேலது:136-138)

இவ்வகையில் தமிழ்ச்சமூகத்தில் வாழ்ந்த இரு கலைஞர்கள் குறித்த வேறுபட்ட பதிவை விந்தன் செய்துள்ளார். இப்பதிவுகளின் பின்னுள்ள ஊடக அரசியல் மிக முக்கியமானது. அவ்வகை அரசியலில் விந்தன் தெளிவாகச் செயல்பட்டதாகக் கூறலாம். அச்சுஊடக வரலாற்றில் விந்தன் செயல்பாடுகளைத் தமிழ்ச்சமூகம் விரிவாகப் புரிந்து கொள்ளும் தேவை இருப்பதாகக் கருதலாம்.

விந்தனின் முதல் குறுநூல் 1946இல் எழுதிய வேலைநிறுத்தம் ஏன்? ஆகும். அவரது இறுதியான கையெழுத்துப்படி, 1973இல் எழுதிய பெரியார் அறிவுச் சுவடி ஆகும். இக்குறுநூல் 2004இல் அச்சுவடிவம் பெற்றது. பெரியார் மறைந்த ஆண்டில் இதனை எழுதிவிட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரும் மறைந்தார்.

தமிழில் எழுதப்பட்ட ஆத்திசூடி, உலகநீதி, கொன்றைவேந்தன் ஆகிய சமயச்சார்பு நீதிநூல்களின் வடிவத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 1979இல் கையெழுத்துப் பிரதியாகப் படிக்கும் வாய்ப்பு எனக்குக்கிடைத்தது. விந்தன் மீது ஆழ்ந்த மரியாதையை இந்நூல் என்னுள் உருவாக்கியது.

‘ஆலயம் தொழுவது சாலவும் தீது/ கிளர்ச்சிகள் இன்றி வளர்ச்சிகள் இல்லை/ கீதை உன்னைக் கீழ்மகன் ஆக்கும்/ கைம்பெண்ணாயினும் கட்டு தாலியை/ கோயில் இல்லா ஊரில் நீ குடிஇரு/ சாதி ஒழியாமல் சமதர்மம் இல்லை/ தொட்டால் தீட்டெனில் தொடாமல் விடாதே/ மோட்சத்தைப் போலொரு மோசடி இல்லை/ ராவண காவியம் ரசித்துப்படி/ மனிதனைக் கெடுத்தது மதமெனும் மாயை’

என்னும் பெரியார் அறிவுச்சுவடி, ஆத்திசூடி வடிவில் அமைக்கப்பட்டது. இதைப்போல உலகநீதியைச் ‘சமூகநீதி’ என்று விந்தன் எழுதியுள்ளார்.

‘மதமென்னும் வெறிபிடித்து அலைய வேண்டாம்/ மல்லுக்கு அதற்காக நிற்க வேண்டாம்/சிந்திக்கும் முன் எதையும் செய்ய வேண்டாம்/செய்தபின் சிந்தித்து வருந்த வேண்டாம்/பதினெட்டுப் புராணத்தைப் படிக்க வேண்டாம்/ படித்து விட்டுப் பகுத்தறிவை இழக்க வேண்டாம்/ எம்மதமும் சம்மதமே என்ற மேலோன்/ ஏறொத்த பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே (பெரியார் அறிவுச் சுவடி: 2004:14)’

இவ்வகையில் விந்தன் என்ற ஆளுமை தமிழ்ச் சமூகத்தில் செயல்பட்ட பல்பரிமாணங்களைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமுண்டு. 2016இல் விந்தன் நூற்றாண்டு வருகிறது. அந்தக் கட்டத்தில் தமிழ்ச் சமூகத்திற்கு விந்தனை விரிவாக அறிமுகப்படுத்தும் ஆய்வுகளும் பரப்புரைகளும் நிகழ வேண்டும். மேற்குறித்த உரையாடல் சார்ந்து தோழர் விந்தன் அவர்களின் ஆளுமைகளைப் பின்வரும் வகையில் தொகுக்க இயலும்.

-              தனித்த மொழிநடையில் புனைவுகளை உரு வாக்கிய சிறுகதை மற்றும் நாவல் படைப்பாளி என்ற அளவில் மட்டும் விந்தன் செயல்படவில்லை; மாறாக, நடைமுறைச் சமூக நிகழ்வுகளைத் தனக்கான அரசியல் புரிதலோடு பதிவு செய்த வராகவும் குறிப்பாக 1940களில் தொழிலாளர்கள் எதிர்கொண்ட சிக்கலோடு தம்மை இணைத்துக் கொண்டவராகவும் அறியமுடிகிறது.

-              சமூகத்தின் அவலங்களை எதிர்த்துப் போராடு வதில் பத்திரிகையாளராகச் செயல்படுபவர் களுக்குத் தனித்த இடமுண்டு. விந்தன் ‘மனிதன்’ இதழ் மூலம், சமூகக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் பத்திரிகையாளராகவும் தமது ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார்.

-              வைதீகம் என்பது சமூகத்தில் உருப்பெற்றுள்ள புற்றுநோய். இதனை எதிர்த்துப் போராடிய விந்தன் செயல்பாடே, அவரது ‘பசிகோவிந்தம்’ என்னும் ஆக்கம். விந்தனுக்கேயுரிய தனி ஆளுமையாக இதனைக் கருத முடியும்.

-              தினமணிக்கதிர் என்னும் வெகுசனப் பத்திரி கையில், எள்ளல் மற்றும் பகடி சார்ந்த மொழியில் சமூகக் கொடுமைகளை அம்பலப்படுத்தியுள்ளார். உருவகக் கதைகள்; கதைக்கட்டுரைகள் என்னும் வடிவங்களில் விந்தனின் செயல்பாடுகள் தனித்துப் பேசத்தக்கவை.

-              எம்.கே.டி.பாகவதர், எம்.ஆர்.இராதா ஆகி யோருடன் உரையாடி, அவர்களது பரிமாணங் களை வெகுசனத்தளத்தில் அறியச் செய்த விந்தன் பணி அரிய பணியாகும். சமூகத்தின் ஒடுக்கப் பட்ட மக்களுக்காக ஏதோ ஒரு வகையில் பேசியவர் எம்.ஆர்.இராதா அவருக்கு சமூக அங்கீகாரத்தை விந்தன் தனது உரையாடல் மூலம் ஏற்படுத்தியுள்ளார். அச்சு ஊடகத்தின் அரசியலைப் புரிந்து செயல்பட்டவராகக் கருத முடிகிறது.

-              தமது இறுதி நூலை ‘பெரியார் அறிவுச்சுவடி’ என்னும் பெயரில் விந்தன் எழுதினார். தமிழ்ச் சமூகத்தின் புறக்கணிக்க இயலாத சமூகப் போராளி பெரியாரை, விந்தன் வெளிப்படுத்தியுள்ள பாங்கு தனித்தது.

எழுத்தாளரும் சமூகப் போராளியும் இணைந்த மனிதராக விந்தன் வாழ்ந்து மறைந்தார். அவரது நூற்றாண்டைத் தமிழ்ச்சமூகம் கொண்டாட வேண்டும். அதற்கான பரப்புரையை மேற்கொள்வது சமூக அக்கறையுள்ளவர்களின் கடமை.

Pin It

நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்க மண்ணின் வெள்ளை நிறவெறிக்கு எதிராக அமைதிவழியிலும், ஆயுதப்போராட்டத்தின் வழியும் போராடிய கறுப்பினப் பழங்குடி மக்களின் போராளி. தென்னாப்பிரிக்காவில் எண்பது சதவிகிதம் கறுப்பின மக்களை ஒன்பது சதவிகிதம் மட்டுமே இருந்த சிறுபான்மை வெள்ளை இனத்தவர் ஒடுக்கி வைத்திருந்தனர். ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு கறுப்பின மக்களுக்கு எதிரான வன்முறையை நிகழ்த்தினர். கறுப்பின மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. சொந்த நாட்டிற்குள்ளேயே பயணம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுக் கடவுச் சீட்டு முறை பின்பற்றப்பட்டது. நிலம் வைத்திருப்பதற்கு அனுமதி இல்லை.

இன ஒதுக்கலுக்கு எதிரான போர்

1948-இல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் இணைந்து மண்டேலா இன ஒதுக்கலுக்கு ஆளான இம் மக்களுக்காகப் போராட்டங்களை நடத்தினார். அப் போதைய தென்னாப்பிரிக்க அரசு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தைத் தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது. கறுப்பு ஆப்பிரிக்கர் களுக்கு உள்நாட்டிலேயே பயணம் செய்வதற்குக் கடவுச் சீட்டு முறை அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஷார்பெவிலி என்னும் இடத்தில் ஊர்வலமும் போராட்டமும் நடைபெற்றபோது போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 69 பேர் கொல்லப்பட்டனர். 1956-இல் அரசுக்கு எதிராகப்புரட்சி செய்ததாக நெல்சன் மண்டேலாவை அரசு கைது செய்தது. தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. மண்டேலாவுடன் 150க்கும் மேற்பட்ட தோழர்களும் கைது செய்யப்பட்டனர். அப்போது மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராக முதன்மைப் பொறுப்பிலிருந்தார்.

நான்காண்டு விசாரணை, நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்குப் பிறகும் விடுதலையான மண்டேலா இன்னும் தீவிரமாகப் போராட்ட வடிவங்களை முறைப்படுத்தினார். அறவழிப் போராட்டத்திலிருந்து ஆயுதவழிப் போராட்ட வழிமுறையை நோக்கி நகர்ந்தார். 1961-இல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப் படைத் தலைவராக மண்டேலா மாறினார். அரசு மற்றும் இராணுவ நிலையங்கள் மீது ஆயுதப் பாணியிலான கொரில்லா தாக்குதல் முறைகள் துவங்கின. அரசின் அடக்குமுறை அதிகமானதால் மண்டேலா தலைமறைவானார். ஆப்பிரிக்காவின் வெள்ளை இனவெறி அடக்குமுறையாளர்கள் மண்டேலாவை கம்யூனிஸ்ட் என்றும், கம்யூனிச நாடுகளின் துணையோடு கலகம் செய்வதாகவும் குற்றம் சாட்டினர். விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இந்தப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டது ஆப்பிரிக்க இனவெறி அரசு. மண்டேலா மீது மனித உரிமைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டியது. மட்டுமல்ல அவர்மீது பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டது. மண்டேலாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள ஒபாமா அமெரிக்காவின் சார்பில் வந்து கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியது உண்மைதான். ஆனால் இதே அமெரிக்க அரசுதான் மண்டேலாவைப் பயங்கரவாதி என முத்திரை குத்தி ஜுலை 2008 வரை மண்டேலா அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடைவிதித்திருந்தது.

இருபத்திஏழு ஆண்டுகள் சிறைவாசம்

தென்னாப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மண்டேலாவுக்கு 1964 ஆம் ஆண்டு ஜூன் இல் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. உலகில் அதிக ஆண்டுகள் சிறை வாழ்க்கை அனுபவித்த மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் சாட்சியமாகும். ராபன் தீவுப் பகுதியில் அமைந்த திறந்தவெளிச் சிறிய சிறை அறையில் தனது வாழ்நாளைக் கழித்த மண்டேலா, சிறைக் காலத்தில் அனுபவித்த கொடுமைகள் சொல்லில் அடங்காதவை. சிறையில் இருந்த காலத்தில் மனைவியைச் சந்திப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டது. சிறையில் நான்கு, நான்கு கைதிகளாக இரும்புச் சங்கிலியில் பிணைத்து கடினமான சுண்ணாம்புப் பாறைகளை உடைக்கச் செய்வது வழக்கம். அதன்படி, மண்டேலாவையும் சக கைதிகளோடு சங்கிலியில் பிணைத்து நாள்தோறும் சுண்ணாம்புப் பாறைகளை உடைக்கச் செய்தனர். நாள்தோறும் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மண்டேலா பாறைகளை உடைத்தார். இதனை மாண்டேலாவின் சிறை அதிகாரி கிறிஸ்டோ பிராண்ட் தெரிவித்துள்ளார். எனினும், அவரது போராட்ட உணர்வு மட்டும் சோர்ந்து போகவில்லை.

இறுதிநாட்கள்...

1988 ஆம் ஆண்டு காச நோய் பீடித்து மரணத்தின் எல்லைக்கே அவர் சென்றார். மண்டேலாவின் விடுதலைக்கு உலக அளவில் ஆதரவுக் குரல் கிளம்பியது. இதனைத் தொடர்ந்து 1990 இல் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டார். 1990 இல் அவரது விடுதலைக்குப் பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. நுரையீரல் தொற்று காரணமாக நோயுற்றுச் சிகிச்சை பெற்று ஆப்பிரிக்க நிலப் பரப்பிலேயே 6 டிசம்பர்-2013 தனது 95 வது வயதில் மரணமடைந்தார்.

மண்டேலா மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ள சீனா, மண்டேலா சீன மக்களின் பழம்பெரும் தோழராக விளங்கியதாகத் தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ கூறுகையில், சீனா-தென் ஆப்பிரிக்கர் இடையேயான நட்பு வலுப் பெற மண்டேலா வரலாற்றுச் சிறப்புமிக்க பணிகளை ஆற்றியுள்ளார் என்றார்.

அவரது மகள் மகஸிவே மண்டேலா, நெல்சன் மண்டேலா அவரது மரணப்படுக்கையில் மிகவும் தைரியமான ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக் கிறார் என்று கூறியிருந்தார்.

டிசம்பர் 6-ஆந்தேதி காலமான தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்கில் இந்தியா உள்பட 53 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நாட்டுத் தலைவர்கள் ஜோகன்னஸ்பெர்க் சென்று கலந்து கொண்டனர். டிசம்பர் 15-ஆம் தேதி மாண்டேலாவின் சொந்த கிராமமான குனுவில் குடும்பத்துப் பண்ணையில் பழங்குடிமரபுப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.இந்தச் சடங்கியல் நிகழ்வில் மாண்டேலாவின் பழங்குடி மரபுப் படி ஒரு எருது பலியிடப்பட்டது. நெல்சல் மண்டேலா கறுப்பின, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலையின் ஒப்பற்ற ஒரு அடையாளம்.

அங்கோலாவும் தென்னாப்பிரிக்காவும்

இந்நிலையில் அங்கோலா உட்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் கலாச்சார சமய மோதல்கள் நம்மைக் கவலைப்பட வைக்கின்றன. இது கிறிஸ்தவம் - இஸ்லாம் முரண்சார்ந்த மோதலாகவும் வெளிப்பட்டுள்ளன. எண்பது சதவிகிதம் கிறிஸ்தவர்கள் வாழும் இங்கு 1.5 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அங்கோலாவில் இஸ்லாத்திற்கு எதிரான யுத்தம் நடக்கிறது. மசூதிகள் இடிக்கப்படுகின்றன. இஸ்லாத்திற்கு அனுமதியில்லை என்பதான குற்றச்சாட்டிற்கு கிறிஸ்தவ சார்பு அரசும் பதில் சொல்கிறது. எந்த ஒரு மதத்திற்கு எதிராகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவும் இல்லை... அங்கோலாவில் இஸ்லாம் தடை செய்யப்பட்டுள்ளதாக உலகளாவிய வகையில் ஊடகங்கள்தான் ஊதிப் பெருக்கி பகிரங்கப் படுத்தி உள்ளன. முஸ்லிம்களின் வழிபாட்டு இடங்கள் எதுவும் மூடப்படவில்லை என்பதாக அங்கோலாவின் தேசிய சமய கலாச்சார நிறுவன இயக்குநர் மானுவேல் பெர்னாண்டோ கூறுகிறார். 

வாஷிங்டனில் உள்ள அங்கோலா தூதரக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மத விவகாரங்களில் தலையிடாத நாடு அங்கோலா. எங்கள் நாட்டில் ஏராளமான மதங்கள் பின்பற்றப்படுகின்றன. மக்கள் தங்களுக்குப் பிடித்த மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம் உள்ளது. எங்கள் நாட்டில் கத்தோலிக்கர்கள், புரொட்டஸ்டன்டுகள், பாப்டிஸ்ட்கள், இஸ்லாமியர்கள் உள்ளனர். எங்கள் நாட்டில் இஸ்லாத்துக்குத் தடை விதிக்கப்படவில்லை, மசூதிகள் இடிக்கப்படவில்லை என்கிறார்.என்றாலும் கூட இஸ்லாமிக் கம்யூனிட்டி ஆப் அங்கோலா (Islamic Community of Angola) அமைப்பின் தலைவர் டேவிட் ஜாவின் கருத்துப்படி அங்கோலாவில் 78 பள்ளிவாசல்கள் உள்ளன. தலைநகர் லுவண்டாவில் உள்ள இரு பள்ளிவாசல்களைத் தவிர பிற அனைத்துப் பள்ளிவாசல்களும் மூடப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் தங்கள் வழிபாடான தொழுகைக்காகவும், வெள்ளிக் கிழமை அன்று எல்லோரும் ஒன்று கூடிச் செய்யும் ஜும்மா தொழுகைக்காகவும்தான் மசூதிகள் கட்டப் பட்டன. இவைகள் இன்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளன என விளக்குகிறார்.

இச்சம்பவங்கள் பெரும்பான்மை மதத்தினர் வாழும் ஒரு தேசத்தில் சிறுபான்மையின மதத்தைப் பின்பற்றுதலுக் கான உரிமைகள் குறித்து நாம் உரையாடுவதற்கான அவசியத்தை உணர்த்துகிறது. இது அங்கோலாவில் மட்டுமல்ல, இந்தியா, சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பொருந்தும் எனத் தோன்றுகிறது.இந்த பதற்றமான சூழலில் நெல்சன் மண்டேலா நமக்கு ஒரு முன் உதாரணமாகத் திகழ்கிறார்

மண்டேலாவும் முஸ்லிம்களும்

தென்னாப்பிரிக்க முஸ்லிம் கம்யூனிட்டி இன ஒதுக்கல், தீண்டாமை நிறவெறிக் கொள்கைக்கு எதிராக மண்டலேயுடன் இணைந்து போராடியுள்ளது. இந் நிறுவனத் தலைவர் பைசல்சுலைமான் முஸ்லிம் சமூக மக்கள் மறைந்த தலைவருக்கு நன்றிக் கடன் மிக்கவர்களாக இருப்பதாகக் கூறுகிறார். இனஒதுக்கல் கொள்கைக்குப் பிறகு தென்னாப்பிரிக்க குடியரசு மலர்ந்த போது அரசியல் சாசனத்தில் சிறுபான்மை மதத்தவர்களுக்கான மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தினார் மண்டேலா.

இந்த விடுதலைப்போராட்டம் முஸ்லிம்களுக்கும்

பல வழிகளில் விடுதலையை உருவாக்கி உள்ளது. மண்டேலாவின் இரக்கம்,பெருந்தன்மை. பணிவு போன்ற நற்பண்புகள் நபிமுகமது அவர்களிடம் காணப்பட்ட பண்புகளாகவே இருந்தன. மண்டேலா தலைவராக இருந்தபோது அவர் உருவாக்கிய தேசிய சமய கவுன்சில் மூலமாக மசூதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களோடு உரையாடல்களை நிகழ்த்தினார். ஜனநாயகத்தின் வெளிப்பாடாக முஸ்லிம்களும் அரசின் மந்திரிசபையில் முக்கிய பங்காற்றி இருந்ததும் தென்னாப்பிரிக்க சமூகத்தின் இயல்பான வாழ்விற்கு உறுதுணையாக இருந்தது என்றே கூற வேண்டும் என்பதாக பைசல் சுலைமான் மண்டேலா பற்றிய தன் மதிப்பீட்டை முன்வைக்கிறார்.

கேப்டவுன் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கல்விப்புலப் பிரிவுத் தலைவர் பேராசிரியர் அப்துல் காதர் தையூப் உலகிற்கிற்கும், தேசத்திற்குமான தலை வராக இருந்தாலும் மண்டேலா தன் நாட்டு மக்களின், பல்தரப்பு சமூகங்கங்களின் இதயங்களைத் தொட்ட வராக இருந்திருக்கிறார். அவர்களின் ஆழ்ந்த நம்பிக்கை களையும், பயங்களையும்,கனவுகளையும் கவனத்தில் கொண்டவராகவே இருந்திருக்கிறார்.முஸ்லிம்கள் தேசத்திற்கு ஆற்றிய பங்களிப்பை உணர்ந்தவராகவும், உலகளாவிய வகையில் முஸ்லிம்களின் மீது பதிக்கப் பட்ட தீவிரவாத முத்திரையை பயம்சார்ந்து முஸ்லிம்கள் எதிர்கொள்வதையும் புரிந்திருக்கிறார். பிற தலைவர் களிடம் காணமுடியாத ஆழ்ந்த மனமுவந்த உயர் பண்பு நலன்கள் கொண்டவராக, ஒரு ஒப்பற்ற உதாரணத் தலை வராக விளங்கினார் என்பதாகக் கூறுகிறார்.

முன்னாள் முஸ்லிம் ஜுடிசியல் கவுன்சில் தலைவர் ஷேக் இபுராகிம் கப்ரியேல் கூறுகிறார், 1994ஆம் ஆண்டுக்கு முன்பே எங்களது குழந்தைகள் பள்ளிக் கூடங்களில் பைபிளை படிக்க கட்டாயப்படுத்தப் பட்டார்கள். மண்டேலா ஆட்சிக்கு வந்த பிறகே தென்னாப்பிரிக்கா பல சமயங்களையும் மதிக்கும் ஒரு சுதந்திரக் குடியரசு என பிரகடனம் செய்தார். இவ் வேளையில் பாலஸ்தீனம் விடுதலையாகும் வரை தென்னாப்பிரிக்காவின் விடுதலையை உண்மையிலேயே நாம் அனுபவிக்க முடியாது என உலகநாடுகளை நோக்கி மண்டேலா சொன்ன வாசகம் மிக முக்கியமானது என்பதாக கப்ரியேல் விளக்குகிறார்.

Pin It

'இயற்கை விவசாயம்' என்கிற ஜெயபேரிகையைக் கையில் எடுத்து, கடந்த நாற்பதாண்டுகளாகத் தமிழ் மண்ணில் முழங்கிக் கொண்டிருந்த 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார், டிசம்பர் 30 அன்று இயற்கையோடு இயற்கையாகக் கலந்துவிட்டார்! தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுக்க இருக்கும் அவருடைய அபிமானிகள் மற்றும் ஆதரவாளர்களை, இது கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது!

''ரசாயனத்தில் விளைவிக்கப்படும் உணவுகள் அனைத்திலுமே நஞ்சு கலந்திருக்கிறது. இந்த உணவு களை உட்கொள்வதால்தான் மக்கள் நோயாளிகளாகி, சீக்கிரமே வாழ்வை இழக்கிறார்கள். இயற்கை விவசாயம் தான் ஆரோக்கியமான வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கும்'' என்று நாடு கடந்தும் குரல் கொடுத்து வந்தவர், நம்மாழ்வார்.

விவசாயத்தை, விவசாயிகளே வேண்டா வெறுப் பாகப் பார்த்த நிலையில்... சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றும் இளைஞர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள்... எனப் பல தரப்பினரையும் விவசாயத்தை நோக்கி ஓடி வரச் செய்தவர், நம்மாழ்வார்.

தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் பயணித் திருக்கும் நம்மாழ்வார், பல்வேறு பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகள், போராட்டங்கள் என்று பலவற்றையும் முன்னெடுத்திருக்கிறார். குறிப்பாக, மரபணு மாற்றப் பட்ட விதைகள், பூச்சிகொல்லி நச்சுகளைத் தயாரித்து சந்தைப்படுத்தும், அசுர பலமிக்க பன்னாட்டு நிறுவனங் களுக்கு எதிராக விவசாயிகளைத் திரட்டிப் போராடி யிருக்கிறார்.

இறப்பதற்கு முன்பாகக்கூட, களத்தில்தான் நின்றிருந்தார் இந்தப் பசுமைப் போராளி! ஆம், காவிரிப் பாசனப் பகுதியில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. 'இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், இங்குள்ள விளைநிலங்கள் அனைத்தும் பாலைவனமாக மாறிவிடும்’ எனப் பதைபதைத்து, கொட்டும் பனியிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும், கனமழையிலும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தபோதுதான், பட்டுக்கோட்டை அருகே உள்ள பிச்சினிக்காடு கிராமத்தில், டிசம்பர் 30-ம் தேதி இயற்கையோடு கலந்தார் நம்மாழ்வார்.

இறுதி நிமிடங்கள்...!

டிசம்பர் 30 அன்று இரவு, 'நம்மாழ்வார் இயற்கை எய்தி விட்டார்’ என்று பசுமை விகடனுக்கு வந்த செய்தி, ஆசிரியர் குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'இது உண்மையாக இருக்கக்கூடாது’ என்றே மனம் பதைபதைத்தது. மீண்டும் மீண்டும் சிலரைத் தொடர்பு கொண்ட போது, அது உண்மை என்பது உறுதியானது. தொடர்ந்து பல்வேறு அமைப்புகள், விவசாயிகள் நம்மைத் தொடர்பு கொண்டு அழுகையும், ஆற்றாமையுமாக விசாரிக்கத் தொடங்கி விட்டனர்.

அன்று இரவே, அவருடைய உடலை... கரூர் மாவட்டம், கடவூர் அருகேயுள்ள சுருமான்பட்டியில் அவர் உருவாக்கியிருக்கும் 'வானகம்' உயிர்ச்சூழல் பண்ணைக்குக் கொண்டு செல்ல குடும்பத்தாரும், உடன் இருந்தவர்களும் முடிவு செய்தனர். ஆனால், 'பசுமை விகடன்’ ஆசிரியர் குழு ஆலோசனை செய்து, 'உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க வேண்டும்... அவருடைய உடலைப் புத்தாண்டு தினத்தில் விதைக்க வேண்டும்’ என்று குடும்பத்தாரிடம் பேசினோம். அவர்களும் ஒப்புக்கொண்டனர்.

தமிழகத்தின் மையப்பகுதி திருச்சி என்பதால், அங்கே நம்மாழ்வாரின் உடலை வைத்தால் விவசாயி களும் பொதுமக்களும் வருவதற்கு வசதியாக இருக்கும் என்கிற எண்ணத்தில், திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரனை செல்போனில் தொடர்பு கொண்டோம். நள்ளிரவு 12.30 மணி என்ற போதும், போனை எடுத்துப் பேசியவர், தகவல்கேட்டு மிகுந்த அதிர்ச்சியானதோடு... 'எந்த இடத்துல வைக்கணும்னு சொல்லுங்க... ஏற்பாடு செய்றேன்’ என்று பரிவோடு சொன்னார். ஆனால், 'தஞ்சாவூரிலேயே வைக்கலாமே’ என நம்மாழ்வாரின் குடும்பத்தார் விரும்ப... பிறகு, தஞ்சாவூர், பாரத் கல்லூரித் தாளாளர் புனிதா கணேசனின் அனுமதி பெற்று, கல்லூரி வளாகத்தில் நம்மாழ்வாரின் உடல் வைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதிலும் இருந்து விவசாயிகள், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் இயக்கங்களைச் சார்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு சார்பாக அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்பையன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். ஆங்கிலப் புத்தாண்டு அன்று அதிகாலை 4 மணிக்கு தஞ்சாவூரில் இருந்து 'வானகம்' பண்ணைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நம்மாழ்வாரின் உடல், அங்கே ஏற்கெனவே அவர் தேர்வு செய்து சொல்லியிருந்த இடத்தில் விதைக்கப் பட்டது! அந்த இடத்தில் வேப்ப மரக்கன்று ஒன்றும் அவருடைய குடும்பத்தாரால் நடப்பட்டது!

முன்னதாக, வானகம் பண்ணைக்கு சாரை சாரையாகத் திரண்டு வந்த பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அனைவருமே கலங்கிப் போய்த்தான் நின்றனர். கூட்டம்கூட்டமாக, ஆங்காங்கே நின்று கொண்டு விவசாயிகள் பேசிக் கொண்டிருந்தனர். தர்மபுரியைச் சேர்ந்த கேழ்வரகு விவசாயி அருண் உள்ளிட்டோர் ஓரிடத்தில் நின்றிருக்க... அங்கே 'பசுமை விகடன்' ஆசிரியர் குழுவினரும் மற்றும் சிலரும் இருந்தனர்.

அப்போது பேசிய அருண், ''இனி, நம்மாழ்வார் இடத்துக்கு யார் வருவாங்க... நம்மளையெல்லாம் யார் வழி நடத்துவாங்க...'' என்றொரு கேள்வியை முன் வைத்தார். அப்போது 'பசுமை விகடன்' ஆசிரியர் சொன்ன பதில்-

''இதென்ன கேள்வி... இனி நாம் ஒவ்வொருவருமே தான் நம்மாழ்வார். கடைசி வரை, நம் ஒவ்வொருவர் பின்னாலும் நம்மாழ்வார் வந்து கொண்டே இருப்பார் என்று எத்தனை காலத்துக்கு எதிர்பார்க்க முடியும்?

அவர் அடிக்கடி சொல்வது என்ன? 'நீங்கள் ஒவ்வொரு வருமே ஒரு இயற்கை வேளாண் விஞ்ஞானியாக வடிவெடுக்க வேண்டும். நான் சொல்கிறேன் என்பதற்காக எதையும் செய்யத் தேவையில்லை. 'அரியானூர்' ஜெயச்சந்திரன், நெல்லு விதைச்சுருக்கார்... போய் பாருங்கனு சொல்றேன். 'முருகமங்கலம்' சம்பந்தம் பிள்ளை, சீமை காட்டாமணியைத் தன் உரமாக்கியிருக்கார்... போய் பாருங்கனு சொல்றேன். அங்க போய் பார்த்து, அவங்க பயன்படுத்தியிருக்கற தொழில்நுட்பங்கள் எல்லாம் உங்களுக்கு ஏற்புடையதா இருந்தா... பின்பற்றுங்க. இல்லைனா... உங்க பாணியிலயே விவசாயத்தைச் செய்யுங்க. அவரு சொன்னாரு... இவரு சொன்னாருனு எதையும் செய்யாதீங்க. நீங்களா சிந்திச்சி, தற்சார்போட விவசாயம் செய்யுங்க' என்பதைத்தானே முக்கியமாக முன்வைப்பார் நம்மாழ்வார். அப்படியிருக்க... தொடர்ந்து நீங்கள், இன்னொரு நம்மாழ்வாரைத் தேடிக் கொண்டிருந்தால் எப்படி?'' என்றார் ஆசிரியர்.

அருகிலிருந்த 'திண்டுக்கல்' வெள்ளைச்சாமி, ''ஆமாம்... எத்தனை காலத்துக்கு இப்படியே

இருப்பீங்க. இப்படியே இருந்தா, அது நம்மாழ்வார் ஐயாவுக்குச் செய்யுற மரியாதையும் இல்லை. அவர் இத்தனை நாளா பாடுபட்டதுக்கும் அர்த்தமும் இல்லை. இனிமே இயற்கை விவசாய ஜோதி நம்ம ஒவ்வொருத்தர் கையிலயும்தான். நாமெல்லாருமே நம்மாழ்வாரா மாறி... அவர் சார்புல அதைத் தூக்கிப் பிடிக்க வேண்டியதுதான்'' என்று சொல்ல... சுற்றியிருந்த அனைவருமே ஆமோதித்தனர்.

ஆம், இயற்கை விவசாய ஜோதி, இனி நம் ஒவ்வொருவரின் கைகளிலும்தானே!

நன்றி: பசுமை விகடன்

Pin It

உட்பிரிவுகள்