உலகில் எத்தனையோ சமயங்கள் தோன்றி மறைந்தாலும் இன்றைக்கும் புதுக்கோட்டையில் சாகாவரம் பெற்ற சமயம் ஒன்று உள்ளதென்றால், அஃது ‘மெய்வழி’ ஒன்றேயாகும். இதில், இன்று பல்வகைச் சமயங்களைச் சார்ந்த மக்கள் வாழ் கின்றனர். இச்சமயத்திற்கு வேரான அடிப்படைச் சமயம் ஒன்று உண்டெனில் அது பௌத்த சமயமே யாகும். இஃது உலகோருக்கு அன்பைப் போதிக்கும் தம்ம நெறியைக் கொண்ட சமயமாகும்.

இன்றுள்ள எல்லாச் சமயங்களுக்கும் முந்தையதும் காலச் சக்கரத்தின் முதற்கடையாணி எனப் போற்றப்படுவதுமாகிய பௌத்தம் சிறிது நாளில் சமணமாகிய உட்பிரிவைக் கொண்டு திகழ்ந்தது. சமணமும் பௌத்தமும் தழைத்தோங்கிய இப் புதுக்கோட்டை பூமியில் அறநூல்கள் பல முகிழ்த்தன. மிதிலைப்பட்டியில் சிலப்பதிகாரம் முதல் சிறு காசாவயல் முனைவர் சு.மாதவனின் பௌத்தத் திறனாய்வு நூல்கள் வரை இந்த மண்ணிலேயே தமிழுக்குக் கிடைத்த அரிய பொக்கிஷங்கள் ஆகும். சுருக்கமாய்ச் சொன்னால் பௌத்தமும் சமணமும் இல்லையென்றால் தமிழில் அறநூல்களே இல்லை எனலாம். அறத்தைப் போதிக்காத எவையும் நூல் களாக இருக்கமுடியாது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த குடுமியான் மலை, சித்தன்ன வாசல், விராலிமலை, புத்தாம்பூர், அண்ணல்வாயில், இரும்பாழி; வெள்ளனூர், இன்னும் பிற இடங்களில் புத்த சமணத் துறவிகள் வாழ்ந்து மக்களுக்கு நற்றொண்டுகள் பல செய்துள்ளனர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதலாவதாக வைத்து எண்ணப்படும் ‘நாலடியார்’ என்னும் மெய் வழி நூல் சமணமுனிவர் பாடிய நூலாகும். வீர சோழியமும் ஈண்டு எழுந்ததே!

புதுக்கோட்டையில் அமைந்துள்ள இலுப்பூர் சங்ககாலத்தில் இருப்பையூர் (இருப்பை) என வழங்கப் பெற்று, இவ்வூரினை ‘விரான்’ என்னும் மன்னன் ஆண்டு வந்துள்ளான். விரான் ஆண்டதால் இப் பகுதியிலுள்ள மலைக்கு விரான்மலை எனப் பெயருண்டு. பிற்காலத்தில் இம்மலை விராலி மலை என்று மக்கள் சொல் வழக்காயிற்று.

விரான் மன்னனின் சிறப்பை ஐங்குறுநூறு என்னும் தமிழர் வாழ்வியல் நூல் கீழ்வருமாறு எடுத்துரைக்கும்.

விண்டு வன்ன வெண்ணெற் போர் விற்

கைவண் விராஅ னிருப்பை யன்ன

வில்லாண குற்றனை போறி

பிறர்க்கு மனையையால் வாழி நீயே.” (ஐங். 58).

என்பது அப்பாடல், மேலும், நற்றிணையில்,

முனையெழுத் தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன்

மலிபுனல் வாயில் இருப்பை”, (நற்-260)

என்றும்,

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப்

பழனப் பல்புள் இரியக் கழனி, வாங்கு சினை

மிருதத் தூங்கு துணர் உதிரும் தேர்வன்

வீரான் இருப்பை” (நற்-350)

என்றும் விரான் மன்னனின் இருப்பை வானளாவிய செந்நெற்போர் குவிந்து வளம் கொழித்ததென்று ஓரம்போகியாரும் பரணரும் வாழ்த்திப் பாடியுள்ளனர். இவ்வாறு சீரும் சிறப்பும் உடைய விரான் மன்னன் தன்னை நாடிவந்தவரின் மனக்குறை போக்கி ஆறுதல் கூறவில்லை. மாறாக இருமாந்திருந்தான். ஆதலால், அம்மன்னனைக் கீழான அற்பன் எனச் சாடி, ‘மன்னனாகிய நீ! மற்றவரின் மனதைத் தேற்ற வழியில்லாமல் வாழ்வதைக் காட்டிலும் மலை முகட்டில் ஏறி விழுந்து உயிர் விடலாம்’ என்று சமணமுனிவர் தமது நாலடியார் நூலில்,

இனியார் தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்

தணியாத உள்ளம் உடையன்; மணிவரன்றி

வீழும் அருவி விரான்மலை நன்னாட!

வாழின் வரைபாய்தல் நன்று.” (நாலடி-369)

என்று இடித்துரைக்கின்றார். மேலும், ஆராயாமல் சுடுமொழிகளைக் கூறி அடுத்தவரைத் துன்பத்தில் ஆழ்த்தும் உன்னைக் கீழோரும் எள்ளி நகைப்பர் என்கிறார். அப்பாடலாவது,

கடுக்கெனச் சொல்வற்றாம் கண்ணோட்டம் இன்றாம்

இடுக்கண் பிறர்மாட்டு உவக்கும் அடுத்தடுத்து

வேகம் உடைத்தாம் விரான்மலை நன்னாட!

ஏகுமாம் எள்ளுமாம் கீழ்” (நாலடி- 348)

என்னும் பாடலாகும்.

மெய்வழியாரை (பௌத்த சமணர்)ப் பொது வாக ஆதரித்த மன்னன் கொடும்பாளூரை ஆண்டு வந்த சாத்தன் இளங்கோவதிரையன், இவனது மகன் பூதி என்னும் பெருமுத்தரையன் ஆவான். இவன் கொடும்பாளூர் பூதிச்சரம் கோயிலைக் கட்டியவன் (தமிழரசன். பு.சி. புலவர், 2001, ப.85) என இக்கோயில் கல்வெட்டால் அறியலாம்.

பெருமுத்தரையன் விரான் மன்னனால் ஒடுக்கி ஆளப்பட்டவன். விரான் மன்னன் பெருமுத்தரை யனுக்குக் கொடுந்துன்பங்களைக் கொடுத்துள்ளான். பெருமுத்தரையனின் நற்குணத்தையும் கொடைத் தன்மையையும் புகழ்ந்து போற்றும் சமண முனிவர் நாலடியாரில்,

மல்லன் ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்

செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்

நல்கூர்ந்தார் கண்ணும் பெருமுத் தரையரே

செல்வரைச் சென்றிரவா தார்” (நாலடி- 296)

என்று பாடுகின்றார். மூங்கிலைப்போல ஆகாயத்தைத் தொடுமளவு நெற்பொழியுடைய விரான் மன்னனைக் காட்டிலும் வறுமையுற்ற காலத்தில் எவ்வகைச் செல்வர்களையும் சென்று இரவாத நற்பண்பு உடையவன் பெரு முத்தரையன் என்பதே இப் பாடலின் பொருளாம். ஆகவே, நாலடியார் என்னும் “மெய்வழி நூல்” புதுக்கோட்டைச் சமணர் எழுதிய நூலாகும் என்பது தெளிவாகும்.

மேலும், இஃதே போல் “விவேக சிந்தாமணி” என்னும் மெய்வழி நூல் வெள்ளனூரில் வாழ்ந்த ஒரு சமணத் துறவியார் எழுதிய நூலாகும். காரணம் என்ன எனில்,

‘பேரவா பெரு நட்டம்’ என்பது சமண பௌத்த நெறிகளில் ஓன்றாகும். வெள்ளனூர் என்று தற்போது வழங்கும் ஊரின் பழம்பெயர் வெள்ளை நல்லூர் என்பதாகும். இவ்வூரில் வட்டங் கச்சேரிக்கு அருகில் கிடைத்த பெரிய மகாவீரர் திரு வுருவம் புதுக்கோட்டை அருங்காட்சியகத்திற்குக் கொண்டுவரப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது.

இச்சிலையை ஆராய்ச்சி செய்த அருங்காட்சி யகக் காப்பாட்சியர் செ.கோவிந்தராஜ் அவர்கள் கீழ்க்காணுமாறு விளக்குகிறார்.

“இத்திருவுருவம் 3ஙூ அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட கருங்கல்லில் வடிக்கப்பட்டு உள்ளது. மரத்தினடியில் தாமரை மலரில் வீற்றுள்ளார் மகாவீரர். முக்குடைகளைப் பெற்றுள்ளார். இவரது அடியார்கள் இருமருங்கிலும் கவரி வீசி நிற்கின்றனர். திருவாசியும் சிங்கத் தோரணமும் உள்ளன. மரத்தில் இலை, பூ, காய், கொடி இருப்பதுடன் பூவின்மீது 3 அங்குல நீளம் உள்ள காகம் எதையோ கவ்விக் கொண்டிருக்கின்றது. கீழ்ப்பகுதியில் நரி ஒன்று காகத்தினைப் பார்த்துக்கொண்டிருக்கின்றது. இத் திருவுருவம் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.” என்கிறார்.

இச்சிலையில் இக்காட்சி இடம்பெறக் காரணம் யாதெனில், “பேரவா பெருநட்டம்” என்னும் கருத்தை விளக்க வந்ததேயாகும். இக்கருத்தை “விவேக சிந்தாமணி” என்னும் மெய்வழி நூலின் ஆசிரியர் தமது நூலில் வரும் பாடலொன்றில் கையாண்டுள்ளார். அப்பாடலாவது,

சம்புவே என்னபுத்தி சலந்தனில் மீனை நம்பி

வம்புறு வடத்தைப் போட்டு வானதைப்பார்ப்பதேனோ?

அம்புவி மாதே கேளாய்; அரசனை அகல விட்டுப்

புருஷனைக் கைக் கொண்டாற்போலாயிற்றே”

என்பதாகும். இதன் கருத்தாவது, சம்புவாகிய நரி கரையிலே கிடக்கும் கருவாட்டுத்துண்டை உண்ணாமல் நாளை உண்ணலாம் என நினைத்து, நீரிலே வாழும் மீனைப் பிடிக்கச் சென்றது. கரையில் கிடந்த கருவாட்டைக் காகம் தூக்கிக் கொண்டது. இரண்டும் கிட்டாமல் நரி ஏமாந்தது. இஃது பேரவாவில் விளைந்த பெருநட்டம்; இஃதொருத்தி அரசனை நம்பிப் புருஷனைக் கை நழுவ விட்ட கதை போலாம். இந்நூலில் இடம்பெற்ற இக்கதை சமண பௌத்த நெறிவிளக்கக் கதையாகும். இதை மகாவீரரின் சிலையில் வடித்துள்ளனர். பிற்காலத்தில் எழுந்த சமண பௌத்தக் கொள்கை மறுப்பாளர்கள் காக்கை, நரி; பாட்டி, வடை என்று கதையையும் கொள்கையையும் மாற்றியுள்ளனர்.

இருப்பை விராலிமலையில் (விரான்மலை) தோன்றிய நாலடியார் நூல்போலும், வெள்ளனூரில் முளைத்தெழுந்த விவேக சிந்தாமணி போலும் எண்ணற்ற பௌத்த சமண மெய்வழி நூல்கள் இம்மண்ணில் (புதுக்கோட்டையில்) மறைந்த வரலாறாய் உள்ளன. அவற்றைத் தேடிக் கொணர்வதே நம் அனைவரின் கடமையாகும்.

* மெய்வழிச்சாலையில் மெய்வழி மெய்ம்மறை நூல்களில் இன்றும் முதலில் வைத்துப் பாடப் பெறுவது புத்ததேவ அருக சரணமாகும். ஆதியே துணை என்பது இவர்களின் கடவுட்கொள்கை யாகும்.

Pin It

என்னதான் பிழைப்பதற்காக ஊர் ஊராகப் போய்த் திரிந்தாலும்கூட சொந்த ஊர் என்றால் சொந்த ஊர்தான்.

பெரும்பாலும் மனைவி, மகளுடன் சுமை களையும் எடுத்துச் செல்வதால், வழக்கமாகக் காலையில் மதுரை சந்திப்பு ரயிலடியில் இறங்கி யதுமே ஆட்டோவொன்றைப் பிடித்து வீட்டுக்குப் போய்விடுவேன்.

mangammal-madurai_450இந்த முறை தனியே. தீபாவளிக்கெல்லாம் ஊருக்குப் போவதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலையில், அதற்கு முன்னதாக ஒரு ஞாயிற்றுக் கிழமையையொட்டிக் கிடைத்த நாளில் எடுத்த டிக்கெட் இது, சென்னையில் இருப்பவர்களின் துரதிருஷ்டத்தின்படியே விரும்பிய ரயிலில் - பாண்டியன் எக்ஸ்பிரஸ்தான், வேறென்ன? - டிக்கெட் கிடைக்காததால் அனந்தபுரி எக்ஸ்பிரஸில் (பேசாமல் திரு அனந்தபுரம் எக்ஸ்பிரஸ் என்றே பெயர் வைத் திருக்கலாம்!) மதுரைக்குச் சென்றேன். அதிகாலை 4.15 மணிக்குச் சென்றடைய வேண்டும். எப்போது சென்றடையுமோ, மதுரையில் இறங்கத் தவறி விடுவோமோ என்ற அச்சத்திலேயே இரவுத் தூக்கம் முழுவதும் போய்விட்டது.

ஒருகாலத்தில் டாக்டர்களுக்கு மருத்துவத்தைத் தவிர வேறெதுவும் தெரிவதில்லை, ஏமாந்துவிடு வார்கள் என்பார்கள். ஆனால், இப்போதெல்லாம் மருத்துவத்தைத் தவிர எல்லாமும் தெரிகிறதோ என்று தோன்றுகிறது. அதேபோல, இந்த ஐ.டி. நபர் களுக்கும்கூட அடுத்தவர்களைப் பற்றி எதுவுமே தெரியாதுபோல; அல்லது தெரிந்தும் தெரியாதவர் களாக நடக்கிறார்கள் போல.

நான் சென்ற ரயிலில் எனக்கு நடுப் படுக்கை. எதிரேயுள்ள நடுப் படுக்கையும் வயதில் மூத்த - சுமார் 65 வயதிருக்கலாம் - ஒருவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ரயில்வேயில் ஐ.ஆர்.சி.டி.சி. எந்திரத்துக்குத் தான் சொந்த அறிவும் கிடையாது, புகட்டப்பட்ட அறிவும் கிடையாதே. ஆனால், எங்கள் பகுதியிலேயே மிக இளைஞர்களுக்குக் கீழ்ப் படுக்கைகள் வழங்கப் பட்டிருந்தன. அவர்கள் இருவருமே ஐ.டி.காரர்கள். வேறொரு பெட்டியிலிருந்து வந்த இன்னோர் இளைஞரும் சேர்ந்துகொண்டார்.

மூவருமாகத் தங்களுடைய செல்போன்களின் பெருமைகளை மாற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவர், தன்னுடைய TABLET-ஐ (செல்போனாகவும் இல்லாமல் லேப்டாப் ஆகவும் இல்லாமல் இரண்டுங் கெட்டானாக உருவெடுத்துள்ள இழிபிறவி?) எடுத்து வைத்துப் பெருமைகளை விளக்கியதுடன், சினிமா வெல்லாமும்கூட காட்டிக்கொண்டிருந்தார். கெரகம், அதில் யூ டியூப்பில் டவுன்லோட் செய்யப்பட்ட விவேக், சந்தானம் நகைச்சுவைகள் வேறு. தங்களுடைய புகழ்களையும் தங்கள் சாதனைகளையும் கூட அவர்கள் பட்டியலிட்டுக் கொண்டிருந்தனர்.

எனக்கு எதிரே இருந்த முதியவர், உட்கார்ந்த நிலையிலேயே தூங்கி விழுந்துகொண்டிருந்தார். இளைய சமுதாயமோ கவலையே படவில்லை. வேறு வழியுமில்லை. நானும் விதியே என அவர்களின் தற்புகழ்ப் புராணங்களைக் கேட்டுக்கொண்டு வந்தேன். எப்படியோ ஒருவரின் கடைக்கண் பார் வையில் முதியவர் பட்டுவிடவே, அவர் வேண்டு மானால் தூங்கட்டுமே எனக் கூறினார். ‘நீங்கள் பேசிக் கொண்டிருங்கள். நானும் - அவர்களில் ஒருவருடையதான - மேல் படுக்கைக்குப் போய் விடுகிறேன்’ என்று கூறித் தப்பிவிட்டேன். ஆனால், வந்த தூக்கம் போனது போனதுதான். இந்த லட்சணத்தில்தான் அதிகாலை 4 மணிக்கு இறங்க வேண்டிய அவதி.

அதிசயமாக அன்று சரியான நேரத்துக்கே மதுரைக்கு வந்துவிட்டது அனந்தபுரி எக்ஸ்பிரஸ். தூங்கியும் தூங்காமல் எழுந்து, மதுரைச் சந்திப்பி லிருந்து வெளியே வரும்போது, எப்போதும்போல அந்த அதிகாலையிலும் ஆட்டோ டிரைவர்கள் வரவேற்றனர் (இவர்கள் எல்லாம் எப்போது தூங்கி எப்போது விழிப்பார்கள்?). நான் தனி என்பதால் அவர்களைத் தவிர்த்துவிட்டு, நீண்ட காலத்துக்குப் பிறகு, பெரியார் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன்.

ரயில் நிலையச் சந்திப்பு முன்பு போல இல்லை. நன்றாக நினைவு இருக்கிறது. ‘70-களின் கடைசி ஆண்டுகளில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, நாட்டுத் தொண்டுத் திட்ட மாணவனாக ரயில் நிலையத்துக்கு வருவோம் (விடுமுறையில் ஊருக்குச் செல்வதற்காகவும்தான்). இலங்கைத் தலைமன்னாரில் இருந்து ஒரே டிக்கெட் எடுத்து மதுரைக்கு நிறைய பேர் வருவார்கள். ரயில் நிலையமே நமக்கு மிகவும் ஒட்டுறவுடன் இருப்பதாகத் தோன்றும்.

இப்போது நிலையத்துக்குள் நுழையும் சாலையை வாய்க்கால் மாதிரி வெட்டிவிட்டு ஆட்டோக்களை மட்டும் விடுகிறார்கள். முன்புறம் முழுவதும் ‘டைல்ஸ்’ பதித்துவிட்டார்கள். ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது. இப்போதும் இருக்கிறது என்று சொல்லிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறதாம். என்னால் ‘சட்’டெனப் பார்க்க முடியவில்லை. அதுவும்கூட மதுரை ரயில் நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்களின் ரட்சிப்புதான் காரணம் என நினைக்கிறேன். வெளியே திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரங்கள். சில ஏ.டி.எம்.கள். அழகுபடுத்து கிறேன் பேர்வழி என்ற பெயரில், சகிக்க முடியாமல் என்னென்னவோ செய்திருக்கிறார்கள். ஒருவேளை இதுதான் சிலருக்கு அழகோ என்னவோ?

ரயில் நிலையத்துக்கு எதிரே மங்கம்மாள் சத்திரம். பழைய கட்டடம். சாதாரண மக்கள் தங்கிக் கொள்வார்கள். முன்புறம் வெளியாக இருக்கும். சில பிச்சைக்காரர்கள் அமர்ந்திருப்பார்கள். வெயிலுக்கு ஒதுங்கி நிற்கலாம். இப்போது எல்லாம் உருமாறிப் போய்விட்டது. முன்புறம் இருக்கக்கூடிய அறைகள் எல்லாம் கடைகளாக மாற்றப்பட்டு விட்டிருக் கின்றன. சத்திரத்தில் கிடைக்காத வாடகை, இந்த வணிகக் கடைகளில் கிடைக்கும்தானே? ராணி மங்கம்மாளே வந்தால்கூட அடையாளம் காண முடியாத அளவுக்குக் கட்டடத்தைக் காணாமல் போகச் செய்யும் அளவுக்குக் கடைகளின் விளம்பரப் பலகைகள். நவீனம்.

முன்பெல்லாம், அதிகாலை நேரங்களில் வழக்க மாக ஜங்ஷனிலிருந்து பெரியார் பஸ் நிலையம் (அப்போது பஸ் ஸ்டாண்ட்) செல்லும் வழியில் ஆங்காங்கே இருக்கும் தேநீர்க் கடைகளில், ஏறத்தாழ ஒரே மாதிரியான பக்திப் பாடல்கள் ஒலிக்கும். ஆனால், இப்போது ஒன்றும் காணவில்லை. இருந்த கடைகள் எல்லாமும்கூட கொஞ்சம் ‘எலைட்’டாகக் காட்சி யளித்தன.

premavls_450அந்த அதிகாலையிலும் திருநெல்வேலி அல்வா புகழ் பிரேம விலாஸில் விற்பனையாளர்கள் சுறு சுறுப்பாக இருந்தார்கள். அல்வா சொன்ன பின், ‘மிளகு போட்ட இந்தக் காராச்சேவுதான் சார் இங்கே ஸ்பெஷல்’ என்று யோசனையும் சொன்னார்கள். 500 ரூபாய்த் தாளைக் கொடுத்தபோது, முகங்கோணாமல் சில்லறையும் தந்தார்கள்.

ஒரு காலத்தில் ஓஹோவென்றிருந்த ரீகல் தியேட்டர் தேடிப் பார்க்க வேண்டியதாக உள்ளடங்கிப் போய்க் கிடந்தது. பெரிய காரை வீடு போலத் தோன்றியது. இப்போது தங்க ரீகல் என்று பெயர். என்னென்னவோ படம் திரையிடுகிறார்கள். அப் போதெல்லாம் ஆங்கிலப் படங்கள் மட்டும்தான். வேர்ஈகிள்ஸ் டேர், கிரேட் எஸ்கேப், எஸ்கேப் டு விக்டரி, ஃபைவ்மென் ஆர்மி... எத்தனையோ படங்கள். எத்தனையோ நண்பர்களுடன். திரையரங்கிற்கு வரும் ரசிகர்களை அவ்வளவு எளிதாக மதிப்பிட்டு விட முடியாது. சாதாரணமாகத் தோன்றக்கூடிய ஒருவர், ஆங்கிலப் படங்களைப்பற்றிய பெரும் தகவல் களஞ்சியமாகவே திகழ்வார். திரையரங்கில் முறுக்கு விற்பவர்கூட விரிவாகப் பேசுவார் (அப் போது இணையமெல்லாம் கிடையாது, அவர் களுக்குப் படிப்பறிவுகூட இருக்காது). நண்பர்கள் மனோ என்ற பால் மனோகரன் (நவம்பர் 25 ஆம் தேதி அதிகாலையில் திருச்சி அருகே நேரிட்ட சாலை விபத்தொன்றில் பால் மனோகரன் மறைந்துவிட்டார்), முரளிதரன் போன்றோருக்குத் தெரிந்த சிலர் அப் போது ரீகல் தியேட்டரில் வேலை பார்த்தார்கள். எனவே, எப்போது போனாலும், எந்தப் படத்துக்கு வேண்டுமானாலும் எங்களால் டிக்கெட் வாங்கிவிட முடியும். டிக்கெட் வாங்குகிறோமோ இல்லையோ, நிச்சயமாகப் படம் பார்த்துவிட முடியும்.

ஒருமுறை திடீரென, எந்தத் திரையரங்காக இருந்தாலும் ஆண்டுக்கு மூன்று மாதங்கள் தமிழ்த் திரைப்படங்களைத் திரையிடுவது கட்டாயம் என்றாக்கப்பட்டது. ரீகலில் தமிழ்த் திரைப்படமா? என்ற வியப்புதான் ஏற்பட்டது. பல பேர் வெறுத்து, சோகச் சித்திரமாகிவிட்டார்கள். ஆனாலும் தமிழ்ப் படங்களையும் அங்கே பார்த்தார்கள். நானும் அங்கேதான் ‘அவள் அப்படித்தான்’ பார்த்தேன். ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீபிரியா நடித்த இயக்குநர் ருத்ரய்யாவின் முதல் படம். கறுப்பு வெள்ளையில் பிரமாதமான படம் (ருத்ரய்யா இயக்கிய இரண்டாவது படம், ‘கிராமத்து அத்தியாயம்’ பெரிதும் சொதப்பிவிட்டது, கல்பனாவில் ஒரு காலைக் காட்சியில் வேர்க்க விறுவிறுக்க அதைப் போய்ப் பார்த்தோம். ‘ஆத்து மேட்டுல, ஒரு பாட்டு கேட்குது’ என்றொரு பாட்டு. நன்றாக இருக்கும். படத்தில் குரல் ஒருபுறம், தலையசைப்பு, வாயசைப்பு ஒருபுறம் என ஒட்டாதிருக்கும். அந்தப் பாட்டுக்கு ஆடிய புதுமுகங்கள் இப்போது எப்படி இருப்பார்களோ தெரியவில்லை. பிறகு ருத்ரய்யாவும் கூட அவ்வளவாக சோபிக்கவில்லை). காலம்தான் எப்படியெல்லாம் மாற்றிக் கொண்டிருக்கிறது?

பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தபோது, சென்னையை எள்ளி நகையாடுவதைப் போல, ஒரு குடும்பம், பேருந்துநிலையப் பக்கமிருந்து ரயில் நிலையத்தை நோக்கி நடந்துவந்துகொண்டிருந்தது. ரொம்ப ‘ரிச்’சாகப் புடைவை கட்டிக் கொண்டிருந்த குடும்பத் தலைவி, மிக இயல்பாகப் பெரிய பை யொன்றைத் தூக்கித் தலையிலும் மற்றொரு பையை இடுப்பிலும் வைத்துச் சுமந்தபடி நடந்துவந்துகொண் டிருந்தார். கணவர், மகன், மகள் எல்லாருமே அவரவர் வலுவுக்கேற்ப ஆளுக்கொரு சுமையுடன் நடந்துகொண்டிருந்தனர். அந்தக் கணத்தில் எனக்கும் சின்ன வயதில், அப்பா, அம்மா, தம்பி, தங்கையுடன் ஊருக்குப் போன நினைவுகள் வந்துபோயின.

கண்ணில் பட்டது கட்டபொம்மன் சிலை, முன்பெல்லாம் அடிக்கடி கட்டபொம்மனின் கையிலிருக்கும் வாள் முறிந்து விழுந்துவிடும். இப்போது எப்படி எனத் தெரியவில்லை (பகல் நேரத்தில் தற்போது நண்பர் எடுத்து அனுப்பிய படத்தில் வாள் இருக்கிறது). பெரிய சதுக்கமாகத் தோன்றிய இடம், இப்போது திட்டு மாதிரி காட்சியளிக்கிறது.

பேருந்து நிலையம் மிகவும் சின்னதாகத் தோன்றியது, சின்னப் பிள்ளையில் பார்த்த எல்லாமே இப்போது அப்படித்தான் தோன்றுகின்றன. பெரியன வெல்லாம் சிறியனவாக, தொலைவுகள் எல்லாம் சுருக்கமாக. பேருந்து நிலையம் முழுவதும் தட்டுக்கல் பாவிவிட்டிருக்கிறார்கள். முன்னர், மழை பெய்தால் குளம் போலப் பேருந்து நிலையம் காட்சியளிக்கும். இப்போது, ஒருவேளை நீச்சல் தொட்டி போலக் காட்சியளிக்குமோ என்னவோ?

பேருந்து நிலைய நடைமேடைகளில் எல்லாம் எப்போதும்போலவே தலைக்குத் தங்கள் பொருள் களையே வைத்துக்கொண்டு, குளிருக்குப் போர்த்திக் கொண்டு நிறைய பேர் படுத்துத் தூங்கிக்கொண் டிருந்தார்கள். பெரும்பாலும் ஏதாவது வேலையாக நகருக்கு வந்துவிட்டு, முதல் பேருந்தில் ஊருக்குத் திரும்பக் கூடியவர்களாக இருக்கும். அல்லாமல் இரவு நேரம் மட்டுமே குடியிருப்பாகப் பாவித்துத் தங்கிக்கொள்ளும் கூலித் தொழிலாளர்களாகவும் பிளாட்பாரங்களில் தின்பண்டங்கள் விற்பவர் களாகவும் பிச்சைக்காரர்களாகவும் இருக்கலாம்.

பேருந்து நிலையம் முழுவதும் முந்தைய நாள் குப்பைகள். நடைமேடைகளும் குப்பை மேடுகளைப் போலத்தான் இருந்தன. இரவோடு இரவாகக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்யலாமே? என்று தோன்றியது. பிறகு மிகவும் யோசித்துப் பார்க்க, இரவோடிரவாக இந்தக் குப்பையைக் கூட்டுவதால் மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது. போய்த் தொலை யட்டும். படுத்துறங்குபவர்களாவது விடியும்வரை நிம்மதியாக உறங்கட்டும் எனப் பட்டது.

இதே பேருந்து நிலையத்தில் ‘80-களில், 90-களில் மதுரைத் தினமணியில் வேலை பார்த்த காலத்தில் எத்தனையோ நாள்கள் அதிகாலை நேரங்களைப் புத்தங்களைப் படித்துக்கொண்டே கழித்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. நாவல்கள், கட்டுரைகள் என எத்தனை யெத்தனை?

ஒரு காலகட்டத்தில் லூனா இருந்தது. 1800 ரூபாய்க்கு ஒரு நண்பரிடம் வாங்கியது. லிட்டர் பெட்ரோல், எட்டு ரூபாயோ என்னவோ, இரவுப் பணிக்கு மட்டுமே அலுவலகத்துக்கு எடுத்துச் செல்வேன். ஒரு நாள் தினமணியில் இரவுப் பணி. நள்ளிரவிலிருந்து பெட்ரோல் விலை உயரப் போவதாக அறிவிப்பு வந்தது. அப்போதெல்லாம் டி.வி.யும் கிடையாது, பிரேக்கிங் நியூஸ்களும் கிடையா. விலை உயர்வு பற்றி ஒன்று வானொலியில் சொல்லித் தெரிய வேண்டும் அல்லது நாளிதழ் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். தெரிந்தவுடனே நாங்கள் எல்லாம், டேங்கை நிரப்பிக் கொள்வதற்காக, அலுவலகத்துக்கு எதிரிலேயே இருந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வண்டிகளுடன் சென்றோம். என்னுடைய லூனா விலும் பெட்ரோல் போட்டார்கள். என்ன கொடுமை! பெட்ரோல் நிரம்பி, ஏராளமாகக் கீழே கொட்டி விட்டது! ஏதோ, சில ரூபாய்களை மிச்சம் செய்யப் போவதாக நினைத்துக்கொண்டு, அதைவிடக் கூடுதலாக வீணாகிவிட்டது.

பின்னால், லூனாவை வைத்துச் சமாளிக்க முடியாததால் - சரியான ஆவணங்களும் இல்லை - விற்றுவிட்டேன். அதன் பிறகு பேருந்துதான். இரவு - அல்ல - அதிகாலை 2 அல்லது 2.30 மணிக்கு வேலை முடிந்ததும், அலுவலக வாசலிலேயே பேருந்து நிறுத்தம், காத்திருந்து இரவு சேவை பேருந்தைப் பிடித்தால், தெற்குவாசல் சுற்றிப் பத்துப் பதினைந்து நிமிஷங்களிலேயே மத்திய பேருந்து நிலையம் வந்துவிடும். வீட்டுக்குச் செல்ல முதல் பேருந்து, 5 மணிக்கு மேலேதான். சில நாள்களில் 5. 15கூட ஆகிவிடும். இடம் கிடைத்தால் ஏதாவது பெஞ்சில் அமர்ந்துகொண்டு, இல்லாவிட்டால் நின்றுகொண்டே இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகப் படித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். அலுவலகத்திலும் படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்த அலுப்பால், சில நாள்களில் வெறுமனே சுற்றி வந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே நேரம் கழியும். அப்போதும் இதேபோன்ற காட்சிகள் தான், கொஞ்சம் பழைய, கறுப்பு-வெள்ளைப் படத்தைப் பார்த்தது போல, இருக்கும்.

இந்தப் பேருந்து நிலையக் காத்திருப்பில் வெயில் காலத்தில் எதுவும் தோன்றாது. குளிர்காலத்தில் தான் மிகவும் கடினமாக இருக்கும். இதற்காக, போர்வையா கொண்டு செல்ல முடியும்? மழைக் காலங்களை நினைத்தால் இப்போதும் நடுங்குகிறது.

முன்னர் பேருந்து நிலையத்துக்குள்ளே ஆட்டோக்களைக்கூடப் பார்க்க முடியாது. இப் போது அதிகாலை என்பதாலோ, முதல் பேருந்து வந்து புறப்பட நேரமாகும் என்பதாலோ ஷேர் ஆட்டோக்களே உள்ளே வந்து சென்றன. அரசரடி, காளவாசல் என்றெல்லாம் கூவிக்கூவி அழைத்தார்கள். முதல் பஸ் வரும் நேரம் நெருங்கிவிட்டதெனக் கருதியதாலோ என்னவோ யாரும் சீண்டவில்லை.

இன்னும் 5 மணியாகவில்லை. அந்தக் காலத்தில் கேட்காத சப்தங்களும் கேட்கத் தொடங்கின. எங்கிருந்தோ பள்ளிவாசல் தொழுகைச் சப்தம். பஸ் நிலையத்தின் தென்புறமாக இருக்க வேண்டும். திடீர் நகர். அப்போது பெரும்பாலும் குடிசைகள், சின்னச் சின்ன வீடுகள்தான். உழைக்கும் மக்கள் வாழ்ந்துவந்தனர். இப்போது மாடிக் குடியிருப்புகள் எல்லாம் தெரிந்தன. சிறிது நேரத்தில் மற்றோரிடத் திலிருந்து தொழுகைச் சப்தம். சிறு இடைவெளியில் பஸ் நிலைய வாசலையொட்டி, கட்டபொம்மன் சிலைக்கு நேர் பின்னேயுள்ள தேவாலயத்தில் 5 மணி அடித்து, ஒலிபெருக்கியில் விவிலியத்தின் சில வரிகள் ஒலிபரப்பாயின. இதுவும் புதிதாகத்தான் இருந்தது.

அப்போது பேருந்து நிலையத்துக்குள் வடக்குப் புறம் சுற்றுச்சுவரையொட்டிச் சில மரங்கள் இருந்தன. வெயிலுக்கு மக்கள் ஒதுங்கி நிற்பார்கள். ஆவின் கடையொன்று இருக்கும். எப்போது பார்த்தாலும் ஒரு கூட்டம் நின்றுகொண்டிருக்கும். வடகிழக்கு மூலை வழியேயும் பேருந்து நிலையத்துக்குள் நடந்து வர வழியிருந்தது. வழியிலேயே இரு புத்தகக் கடைகள் இருந்தன. இப்போது எதுவும் இல்லை - மட்டுமல்ல - நிழல் தரும் மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு, வேலிச் சுவரிட்டுக் கொஞ்சம் குத்துச் செடிகளை நட்டிருக்கிறார்கள். அழகாக்கிவிட்டதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள் போலும்.

வடபுறத்தில் விலையில்லா - அல்ல - இலவசக் கழிப்பிடமாக இருந்தது, இப்போது பளப்பளா கற்கள் பதிக்கப்பட்டு நவீன கழிப்பிடமாக மாறி யிருக்கிறது. தொலைவிலிருந்து பார்க்கும்போதே தெரிந்தது. உள்ளே செல்லும் துணிவு பிறக்கவில்லை. கட்டணம் வசூலிக்கிறார்களா என்றும் தெரியவில்லை.

மதுரை மத்திய பேருந்து நிலையத்தின் சொல்லப் படாத அடையாளமெனத் தெரிந்தது, மேற்கே இருந்த பாழடைந்த கல்லறைத் தோட்டமும் கல்லறை களும். கல்லறையின் சுற்றுச்சுவர்தான் ஆண்களுக் கான சிறுநீர்க் கழிப்பிடமாக விளங்கியது. இப் போது என்னவோ, கோட்டைச் சுவர் போல வரிசை யாகக் கடைகள் கட்டப்பட்டிருந்தன. கல்லறைகள் தெரியவில்லை, இருக்கின்றனவா, அல்லது தூர்த்து விட்டார்களா என்பதுவும் தெரியவில்லை. விசாரிக்க வேண்டும்.

சரியாக 5 மணிக்கு முதல் பேருந்து, 59 பி சேந்த மங்கலம் செல்லும் வண்டி உள்ளே வந்துவிட்டது. அங்கே இங்கே சிதறிக் கிடந்தவர்கள் எல்லாம் திரண்டு பேருந்தில் ஏறிவிட்டார்கள். பேருந்து புறப்படவில்லை. பின்னாலேயே, இதே 59 வரிசையில் முடுவார்பட்டிக்குச் செல்லும் டீலக்ஸ் பேருந்து ஒன்றும் வந்து நின்றது. ஒரே ஒருவர்கூட ஏறவில்லை - உண்மையிலேயே ஒருவர்கூட கண்டுகொள்ளவில்லை. இரு பேருந்துகளும் ஒரேநேரத்தில்தான் புறப்பட்டன. (அப்போது, நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியேறிய வாசல் வழிதான் இப்போது உள்ளே நுழைகின்றன. எந்தெந்தப் பக்கங்களிலோ வெளியேறுகின்றன).

பேருந்திலிருந்து இறங்க வசதியாக முன்புறத்தில் அமர்ந்துகொண்டுவிட்டேன். டிக்கெட் 6 ரூபாய். சென்னையில் 13 ரூபாய், 19 ரூபாய் என்று கொடுத்து விட்டு, அதையும் ‘பாஸ் பண்ணி’ அனுப்பிவிட்டு, டிக்கெட்டும் வராமல், சில்லறையும் வராமல் படும் அவதியுடன் ஒப்பிட்டுப் பார்க்க, டிக்கெட் விலை மிகவும் சல்லிசாகத் தெரிந்தது.

எனக்கு முன்னால் அமர்ந்திருந்த இளைஞர் களில் ஒருவர், 100 ரூபாய்த் தாளை நீட்டி, 3 டிக்கெட் கேட்டார். ஆஹா, ‘காலங்காத்தாலே’ 100 ரூபாய் கொடுத்து டிக்கெட்டா, கடித்துத் துப்பப் போகிறார் கண்டக்டர் என்று அதிர்ச்சியுடன் காத்திருந்தால், ‘சில்லறை இல்லையா?’ என்ற ஒரே கேள்வியுடன் அமைதியாகப் பெற்றுக்கொண்டு, டிக்கெட்டைக் கிழித்துக் கொடுத்தார் கண்டக்டர்; ‘மீதி?’ என்ற இளைஞரிடம் பிறகு தருவதாகக் கூறிவிட்டுச் சென்றார். மறுமுறை டிக்கெட் கிழிக்க முன்புறம் கண்டக்டர் வந்தபோது, ‘அண்ணே, மீதியக் கொடுங்க’ என்றார் இளைஞர் மறுபடியும். ‘அட, ஓடியா போய்விடுவேன், இறங்குமுன் வாங்கிக் கொள்’ என்பது கண்டக்டரின் பதில். ‘சீக்கிரம் கொடுத்தால் தூங்குவோம்ல’ என்று கூறிய இளைஞர், கண்டக்டர் அந்தப் புறம் நகர்ந்ததும், ‘காலங்காத்தால பெரிய ஏழரையாப் போச்சு’ என்றொரு காமென்ட் வேறு அடித்தார். எனக்கு நிஜமாகவே இவையெல்லாம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இதுவே சென்னையாக இருந்திருந்தால் 100 ரூபாய்த் தாளைப் பார்த்ததுமே பேருந்தைவிட்டு இறக்கிவிட்டிருப்பார் கண்டக்டர். ஒரு சொல் கேட்க முடியாது, அப்படியே கேட்டாலும் பேருந்தில் உடன் பயணம் செய்யக்கூடிய ஒரு நபர்கூட ஆதரவாகப் பேசியிருக்க மாட்டார்.

பேருந்து, காளவாசல் நிறுத்தத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது. இந்த இடைவெளியில் ஆளில்லாமல் சென்ற டீலக்ஸ் பஸ், எங்கள் பேருந்தை ஓவர்டேக் செய்து காளவாசல் நிறுத்தத்துக்குச் சென்றுவிட்டிருந்தது தெரிந்தது. நிறைய பேர் கும்பலாக டீலக்ஸ் பேருந்தில் ஏறச் சென்றவர்கள், இந்த சாதாரண பேருந்தைப் பார்த்ததும் ஓட்டு மொத்தமாக மேலேறாமல் புறக்கணித்து நின்று விட்டனர். ஒருகணம் தயங்கிய பின் டீலக்ஸ் பேருந்து மீண்டும் ஆளில்லாமலேயே புறப்பட்டுப் போய்விட்டது. அந்த டிரைவர் ஒருவேளை திரும்பிப் பார்த்திருக்கக் கூடும், அல்லது, இது வழக்கமாக நடைபெறக்கூடிய ஒன்றாகத் தெரிந் திருக்கவும் கூடும். என்ன காரணமோ, உண்மை யிலேயே, இந்தப் புறக்கணிப்பு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

வீடு இருக்கும் பகுதியின் நிறுத்தம் வந்ததும் இறங்கி நடந்தேன். பேருந்து நின்று நிதானமாக இறக்கிவிட்டுப் புறப்பட்டது. ஒரு காலத்தில் ஆளரவமே இல்லாமல் இருக்கும் இந்தப் பகுதியில் அந்நேரத்திலேயே சில டீக்கடைகள் திறந்திருந்தன. மத்திய பேருந்து நிலையப் பகுதியில் டீக்கடை களில் கேட்ட பக்திப் பாடல்கள், இப்போது இங்கே ஒலித்துக்கொண்டிருந்தன. வீடு செல்லும் சாலையில் நடந்தால் - முன்னர் எங்கள் வீட்டில்தான் மரங்கள் இருக்கும், இப்போது பரவாயில்லை - மேலும் பல வீடுகளில் மரங்கள்...

பார்த்தவற்றையெல்லாம் யோசித்துக்கொண்டே நடந்துசெல்லும்போது, பஸ் நிலையத்திலிருந்தே தெரிந்த, யு.சி. ஹை ஸ்கூல் (இப்போது என்னவாகப் பெயர் மாறியிருக்கிறதோ?) சுவரில் எழுதப்பட்டிருந்த விவிலிய வரி, சம்பந்தமில்லாமல், நினைவுக்கு வந்தது - ‘உன் நம்பிக்கைகள் வீண் போகாது’.

என்னதான் இப்போதைக்கு சொந்த ஊரானது அன்னியமாகிவிட்டிருந்தாலும் பிழைக்கப்போன ஊரெல்லாம் சொந்த ஊராகிவிடுமா, என்ன? 

Pin It

எளிதான ஆய்வுப்பொருள் என்ற தவறான கண்ணோட்டத்தில் நவீன இலக்கிய வகைமை களான நாவல், சிறுகதை, கவிதை, இதழியல் ஆகியனவும் நாட்டார் வழக்காறுகளும் இன்று தமிழியல் ஆய்வில் செல்வாக்கு பெற்று விட்டன.

இப்போக்கிலிருந்து விலகி நின்று, செவ்விலக்கியங்களை மையமாகக் கொண்டு, அவ்வப்போது தரமான ஆய்வுகளும் வெளிவருகின்றன. இவ் வரிசையில் பாண்டுரங்கனின் இந்நூல் இடம் பெறுகிறது.

paandurangan_450பல்வேறு ஆய்விதழ்களில் வெளியான எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பாக, இந்நூல் அமைந்துள்ளது. அவற்றுள் முதல் இரண்டு கட்டுரைகளைத் தவிர, ஏனைய கட்டுரைகள் எட்டுத்தொகை நூல்களை மையமாகக் கொண்ட ஆய்வாக அமைந்துள்ளன.

எட்டுத்தொகை என்ற பெயருக்கு ஏற்ப எட்டு நூல்களின் தொகுப்பாக, சங்க இலக்கியம் அமைந் துள்ளமை அனைவரும் அறிந்த செய்திதான். எட்டுத் தொகை நூல்களைக் கற்போரும், ஆய்வு செய்வோரும் அறிந்துகொள்ள வேண்டிய ஓர் அடிப்படையான செய்தியை இந்நூலாசிரியர் ஆங்காங்கே நினை வூட்டிச் செல்கிறார் (பக்: 36,49,70). அவற்றுள் பின்வரும் பகுதியை மேற்கோளாகக் காட்டுவது பயனுடையதாக இருக்கும்.

இன்று நமக்குக் கிடைத்துள்ள சங்கப் பாடல்கள் அனைத்தும் ஒரு காலத்தில் பாடப்பட்டவை அல்ல; அப்பாடல்கள் ஓர் ஊரினர் அல்லது ஒரு நாட்டினரால் பாடப் பட்டவை அல்ல. தமிழ்நாட்டின் பல இடங் களில் வாழ்ந்த புலவர்கள், பல்வேறு தொழில் களில் ஈடுபட்டிருந்த புலவர்கள் சங்கப் பாடல் களைப் பாடியுள்ளனர். இவர்களுள் சிலர் அரசர்களாக ஆட்சி செலுத்தியுள்ளனர். இப் பாடல்கள் எல்லாம் பாடப்பட்ட காலத்தி லேயே தொகுக்கப்படவில்லை; பாடப்பட்ட காலத்திற்கும் அவை தொகைநூல்களாகத் தொகுக்கப்பட்ட காலத்திற்கும் இடையில் பெரிய கால இடைவெளி இருந்திருத்தல் வேண்டும் (பக்:36).

தமிழில் தொகை நூல்கள் குறித்த நான்கு கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் இடம்பெற்றுள்ள செய்திகளை, ‘பாடப் பட்ட காலம்’, ‘தொகுக்கப்பட்ட காலம்’, ‘தொகுப்பு நெறி’ என்ற தலைப்புகளில் அறிமுகம் செய்து கொள்ளலாம்.

பாடப்பட்ட காலம்

கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முடிய உள்ள காலமே சங்ககாலம். சங்ககாலத்திற்கு முற்பட்டவரே தொல்காப்பியர். கி.மு.ஆறாம் நூற்றாண்டிலிருந்தே தமிழிலக்கியம் வளரத் தொடங்கியுள்ளது. பழங்குடிச் சமூக அமைப்பி லிருந்து விலகி வந்து அரசுகள் உருவாகிக் கொண் டிருந்த மாறுதல் நிகழும் காலமாக (Transitional Period) சங்ககாலம் இருந்தது.

சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, சில பாடல்கள் அரசுகள் உருவாகாத காலத்தில் பாடப்பட்டவை என்பது புலனாகிறது. பெருங் கற்படைப் பண்பாடு (Megalithic Culture), முதுமக்கள் தாழி, ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்வு, பிராமிக் கல்வெட்டுகள் ஆகிய தொல்லியல் சான்றுகள்

சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றுடன் ஒத்துப் போகின்றன. பதுக்கை, முதுமக்கள் தாழி குறித்த சங்கப் பாடல்கள் அரசுகள் உருவாகாத காலத்தில் பாடப்பட்டவை.

களவு வாழ்க்கை, தழை ஆடையைக் கையுறை யாகத் தலைவியிடம் தலைவன் கொடுத்தல், வெறி யாடல் என்பன சங்க இலக்கியச் செய்திகளை மானுட வியல் அணுகுமுறையில் ஆராய்ந்தால் இனக்குழு வாழ்க்கையின் எச்சங்களையே இப்பாடல்கள் பதிவு செய்துள்ளதை உணர முடியும்.

இனக்குழுக்களை வென்று குறுநில மன்னர்கள் ஆளத் தொடங்கினர். இவர்களையடுத்து, சேர, சோழ, பாண்டிய மரபினர் உருவாகினர். கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னரே மூவேந்தர்களின் ஆட்சி தமிழ்நாட்டில் நிலைபெற்று விட்டதை அசோகனின் பாறைக் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. இச் செய்திகளின் அடிப்படையில் பார்க்கும்போது, இனக் குழு வாழ்வின் எச்சங்களும், அரசு உருவாக்கமும் கொண்ட ஒரு சமூக அமைப்பில்தான் எட்டுத்தொகை நூல்கள் உருவாயின என்று கூற முடியும். சந்தை வேண்டி இனக்குழுக்கள் தமக்குள் போரிட்டதாக விவாதத்துக்குரிய ஒரு கருத்தையும் ஆசிரியர் எழுதி யுள்ளார் (பக். 182).

தொகுக்கப்பட்ட காலம் 

மூன்று தமிழ்ச்சங்கங்கள் இருந்தமை குறித்த செய்தி கி.பி.ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்ட ‘இறையனார் களவியல் உரை’யில் இடம்பெற்றுள்ளது. எட்டுத்தொகை நூல்களைக் கடைச் சங்க நூல்கள் என்று இந்நூல் குறிப்பிடுகிறது. ஆனால் பத்துப்பாட்டை சங்க நூல்களில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை. சங்க நூல் என்று எட்டுத்தொகை நூல்களைக் குறிப்பிடும் போக்கு ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் உருவாகிவிட்டதை இதனால் அறிய முடிகிறது.

எட்டுத்தொகை நூல்களைப் பட்டியலிடும் இறையனார் களவியல் உரை இந்நூல்கள் தொகுக்கப் பட்ட காலத்தைக் குறிப்பிடவில்லை. கே.என். சிவராசப் பிள்ளையின் கருத்துப்படி ஐந்து தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்துப் பாடிய பாரதம் பாடிய பெருந்தேவனாரே தொகுப்புப் பணியைச் செய்திருக்க வேண்டும்.

‘முதல் பாண்டியப் பேரரசை நிறுவிய கடுங் கோன் மரபினர் உருவாக்கிய மதுரைத் தமிழ்ச் சங்கமே தொகுப்புப் பணியில் ஈடுபட்டது’ (பக்: 117). இவர்களைத் தொடர்ந்து சேர மரபினர் இப் பணியில் ஈடுபட்டு, ‘பதிற்றுப் பத்து’, ‘ஐங்குறு நூறு’ என்ற இரு நூல்களைத் தொகுத்தனர்.

இறையனார் களவியல் உரை எட்டுத்தொகை நூல்களின் பெயர்கள் அனைத்தையும் குறிப்பிடு வதன் அடிப்படையில் பார்த்தால், கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிக்கு முன்பே தொகுக்கும் பணி முற்றுப் பெற்றிருக்க வேண்டும்.

தொகுப்பு நெறி

தனித்தனியாகச் சிதறிக் கிடந்த பாடல்களைத் தொகுக்கும்போது அகம், புறம் என்று திணையடிப் படையில் மட்டுமின்றி, எண்ணிக்கை அடிப்படை யிலும் தொகுத்துள்ளனர். இது குறித்து இறை யனார் களவியல் உரை,

அவர்களால் (449 புலவர்கள்) பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும், குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும், புறநானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், என்று இத் தொடக்கத்தன.

என்று குறிப்பிடுகிறது (பக்.50). நானூறு என்ற எண்ணிக்கையில் நெடுந்தொகை (அகநானூறு), குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு ஆகிய நான்கு நூல்களும், ஐந்நூறு எண்ணிக்கையில் ஐங்குறுநூறும், நூறு எண்ணிக்கையில் பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது எண்ணிக்கையில் கலித்தொகையும், எழுபது எண்ணிக் கையில் பரிபாடலும் தொகுக்கப்பட்டுள்ளன.

குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகியன அடியளவில் தொகுக்கப்பட்டுள்ளன. குறுந்தொகை நான்கு முதல் எட்டு அடிகளையும், நற்றிணை ஒன்பது முதல் பன்னிரண்டு அடிகளையும், அகநானூறு பதின்மூன்று முதல் முப்பத்தொன்று அடிகளையும் கொண்டுள்ளன. இம்மூன்று நூல்களும் உள்ளடக் கத்தில் தம்முள் வேறுபாடு கொண்டவையல்ல.

இவை ஒருவரால் அல்லது ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்ட ஒரு குழுவால் எழுதப்பட்டிருக்க வேண்டும் (பக். 50). இத்தொகுப்புகள் தொகுக்கப் பட்ட பின்னரே திணை, துறையைப் பற்றிய பதிவுகள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் (பக்:50, 52). அக நானூற்றுத் தொகுப்பில் திணைப் பகுப்பு தெளிவாக உள்ளது. இது குறித்து,

ஒற்றைப் படை எண்களாக வரும் பாடல்கள் பாலை; 2,8..... என முடியும் பாடல்கள் குறிஞ்சி; 4, 14..... என முடியும் பாடல்கள் முல்லை; 6, 16..... என முடியும் பாடல்கள் மருதம்; 10,20..... எனப் பூச்சியங்களில் முடியும் பாடல்கள் நெய்தல். இப்பகுப்புப் பற்றி மூலச்சுவடிகளில் மூன்று வெண்பாக்கள் உள்ளன. மேலும், இந்நூல் களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை என மூன்று பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. மூலச்சுவடிகளில் உள்ள இப்பகுப்புகளை உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பிய உரையில் ஆளுகின்றார். எனவே இம்முத்திறப் பகுப்பு நச்சினார்க் கினியருக்கும் முற்பட்டது என்பதில் ஐய மில்லை (பக்: 53).

என்று குறிப்பிட்டு விட்டு ‘மூலம்’ (பனுவல்), ‘திணைப் பகுப்பு’, ‘நூல் உட்பிரிவு’ என மூன்று படிநிலை வளர்ச்சிகளை அகநானூற்றுத் தொகுப்புக் காட்டு கிறது.

இதன் அடுத்த கட்டமாகத் திட்டமிட்ட வகையில் திணை வகுக்கப்பட்டு, தொகுக்கப்பட்ட நூல்களாக ஐங்குறுநூறும், கலித்தொகையும் அமைகின்றன.

ஐந்திணைகள் ஒவ்வொன்றுக்கும் குறைந்த அடி வரையறையுடன் கூடிய, நூறு, நூறு பாடல்கள் தனித்தனியாகத் தொகுக்கப்பட்ட நூலாக ஐங்குறுநூறு அமைந்துள்ளது. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை எனத் திணை வரிசை மாறியமைந்துள்ளது.

ஐங்குறுநூற்றைப் போன்றே திணையடிப் படையில் திட்டமிட்டுத் தொகுக்கப்பட்ட நூலாகக் கலித்தொகை அமைகிறது. ஆனால், ஐங்குறுநூறில் ஒவ்வொரு திணைக்கும் நூறு பாக்கள் இடம் பெற்றுள்ளது போன்று ஒரே சீரான எண்ணிக்கை அளவில் பாடல்கள் தொகுக்கப்படவில்லை. இது வரை நாம் பார்த்த தொகைநூல்கள் அகவற்பாவால் ஆனவை. ஆனால் கலித்தொகை கலிப்பாவால் ஆனது. வைதீகச் சமயத்தின் தாக்கம் தமிழகத்தில் செல்வாக்கு பெற்றுவிட்டதைக் கலித்தொகைப் பாடல்கள் சில உணர்த்துகின்றன.

பதிற்றுப்பத்து, திட்டமிட்ட தொகுப்பாக அமைகிறது. சேர மன்னர்களைப் பற்றிய நூறு பாடல்களின் தொகுப்பாக இது தொகுக்கப்பட்டு உள்ளது. இந்நூல் குறித்து,

ஒன்றோடொன்று தொடர்பில்லாத- பொருள் இயைபில்லாத - தனிநிலைச் செய்யுட்களைத் தொகுத்த நிலையிலிருந்து வளர்ச்சி பெற்று, ஒரே மரபைச் சேர்ந்த பத்து அரசர்களைப் பற்றிய பாடல்களின் தொகுப்பான பதிற்றுப் பத்து பழைய உரையுடன் கிடைத்துள்ளது. இன்றுள்ள நிலையில் அது முழுமையாகக் கிடைக் காமல், குறைநூலாக உள்ளது. அதன் முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்க வில்லை என்பர் இந்நூலை முதன்முதலில் பதிப்பித்த உ.வே. சாமிநாதையர் (பதிற்றுப் பத்து, 1957: ஏஐ). ஆனால், ஜான் மார் இந் நூலின் பத்துகளின் இறுதியில் இடம் பெற்றுள்ள பதிகங்களை ஆராய்ந்து, இவ்வாறு காணாமல் போன பத்துகள் முதல் பத்தும் இப்போது ஏழாம் பத்து எனக் குறிக்கப்பெறும் பத்திற்கு முந்திய பத்தும் ஆகும் என்பர். அதாவது, இன்று 9-ஆம் பத்தாகக் கொள்வதை நூலின் இறுதியான 10-ஆம் பத்தாகக் கொள்ள வேண்டும் என்பது அவர் கொள்கை. அவருடைய கொள்கையின்படி இன்றுள்ள பதிற்றுப் பத்து, 2,3,4,5,6,8,9,10, பத்துகளைக் கொண்டதாகும். அதாவது, முதல் பத்தும், ஏழாம் பத்தும் கிடைக்கவில்லை (The Eight Anthologies, 1985:273-274). காணாமல்போன முதல் பத்து உதியன் சேரலாதனுக்குரியது. பத்தாம் பத்து சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்குரியது என்பர் ச. வையாபுரி பிள்ளை (இலக்கியச் சிந்தனைகள், தொகுதி, ஐ -1989:190). ஆனால், ஜான்மார் அவர்களின் கருத்தின்படி, காணாமல்போன ஏழாம் பத்து அந்துவன் சேரல் பற்றியதாகும். பத்தாம் பத்து இளஞ் சேரல் இரும்பொறை பற்றியதாகும்.

என்கிறார் ஆசிரியர் (பக்: 58-59). புறத்திணையில் அமைந்த தனிநிலைப் பாடல்களின் தொகுப்பான புறநானூறு அடி வரையறையோ, திணை வரை யறையோ இன்றித் தொகுக்கப்பட்டுள்ளது. ஜான் மார் என்பவரது கருத்துப்படி, கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில்தான் புறநானூற்றின் தொகுப்புப் பணி நிறைவு பெற்றிருக்க வேண்டும். (ஆனால் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இறையனார் களவியல் உரையில் ‘புறநானூறு’ குறிப்பிடப்பட்டுள்ளது.)

ஓரளவுக்குத் திட்டவட்டமான தொகுப்புமுறை பின்பற்றப்பட்டுள்ளதாகக் கருதும் ஜான்மார் சேர, சோழ, பாண்டியர் என்று மூவேந்தர் வைப்புமுறை மாறி சேர, பாண்டிய, சோழர் என்று பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார்.

எட்டுத்தொகை நூல்களில் இசைத் தமிழ் நூலாகப் பரிபாடல் அமைந்துள்ளது. எழுபது பரிபாடல் என்று இறையனார் களவியல் உரை குறிப்பிட, இருபத்துநான்கு முழுப்பாடல்களும், ஒன்பது பாடல் உறுப்புகளுமே இன்று கிட்டி யுள்ளன. சேர மரபினர் அல்லது பல்லவ மன்னரின் ஆதரவோடு இத்தொகுப்பு தொகுக்கப்பட்டிருக்கலாம்.

சங்க இலக்கியப் புலவர்கள், அரசர்கள், வள்ளல்கள் பட்டியல்களில் சோழ நாட்டினர் மிகுதியாக இருந்தும், சோழர்கள் தொகுப்புப் பணியை மேற்கொள்ளாமை நம்மைச் சிந்திக்க வைக்கின்றது. அதற்குரிய காரணங்கள் இனிமேல் ஆராயப்படுதல் வேண்டும்.

என்று எதிர்கால ஆய்விற்கான ஒரு கருத்தை முன் வைக்கிறார் (பக்:66).

* * *

திணைக்கோட்பாடு என்ற தலைப்பில் திணைப் பகுப்பு தொடர்பான சில அடிப்படைச் செய்தி களைக் கூறும் ஆசிரியர் திணைமயக்கம் குறித்து,

“பாடல்கள் திணைமயக்கமாக அமையும் போது, உரையாசிரியர்கள் பெரும்பாலும் அப்பாடல்களுக்கு முதற்பொருள் அடிப் படைகளில்தான் திணை வகுத்துச் சென்றுள்ளனர்.” (பக்:80)

என்று கூறுகிறார். இதனையடுத்து முடிவுரையாக,

குறிஞ்சித்திணை எனப் பதிப்பிக்கப்பட்ட பாடல்களில் திணை மயக்கம் மிகுதியாக உள்ளது. 39 குறிஞ்சித்திணைப் பாக்களில் (குறுந்தொகை 17, நற்றிணை 17, அகநானூறு 5) நெய்தல் பின்புலத்தில் குறிஞ்சியின் உரிப் பொருள் மயங்கியுள்ளது; முல்லையும் குறிஞ்சியும் மயங்கிக் காணப்படுகின்றன. இவை அனைத்தும் திணைக்கோட்பாடு எவ்வளவு சிக்கலானது என்பதனை எமக்குத் தெளிவுபடுத்துகின்றன. குறிஞ்சித் திணைப் பாக்கள் முழுவதையும் ஒன்றாகத் தொகுத்து நுண்ணாய்வு செய்யும்போது, மேலும் பல விளக்கங்கள் கிடைக்கலாம்.

என்று குறிப்பிடுகிறார் (பக்: 81,82). இவ்வியலின் தொடர்ச்சி போன்று ‘நெய்தல் திணை’ என்ற கட்டுரை அமைந்துள்ளது.

தொல்காப்பிய அகத்திணை இயலின் எட்டாவது நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையின் அடிப்படையில், “தலைவியின் பிரிவுத்துன்பம் கட்டுக்குள் அடங்காமல் வெளிப்படுவது நெய்தல் திணையின் உரிப்பொருள் என்பது தெளிவு” (பக்:87) என்று கூறிவிட்டு, முல்லைத் திணையில் இடம்பெறும் பிரிவுக்கும் நெய்தல் திணை இடம் பெறும் பிரிவுக்கும் இடையிலான வேறுபாட்டை,

ஆற்றியிருக்கும் நிலைமாறித் தலைவியின் ஆற்றாமை வரம்புகளைக் கடந்து வெளிப் படுமாயின், அது நெய்தல்திணை ஆகி விடுகின்றது. கண்ணீரைத் தாங்கி நிறுத்துதல் முல்லைத்திணை என்றால், கண்ணீர் விடுதல் நெய்தல் திணை ஆகும். தலைவியின் இரு வேறு நிலைகளை அவ்வத்திணைகளின் பின்புலம் விளக்கி விடுகின்றது. முல்லைத் திணையின் பின்புலம் தலைவிக்கு நம்பிக் கையைத் தோற்றுவிக்கின்றது. ஆனால், நெய்தல்திணையின் பின்புலம் தலைவிக்கு நம்பிக்கையின்மையைத் தோற்றுவிக்கின்றது.

என்கிறார் (பக்:88). குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்ற மூன்று நூல்களிலும் 213 பாடல்கள் நெய்தல் திணைக்கு உரியனவாகப் பதிப்பிக்கப் பட்டுள்ளன என்றும், இது விழுக்காற்று அடிப் படையில் 17.75 ஆகுமென்றும் கூறிவிட்டு, சங்க இலக்கியங்களில் இடம்பெறும் பிரிவு குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

  • முல்லைத்திணையும் ஒரு வகையில் பிரிவு தான்; ஆனால், அத்திணையில், நம்பிக்கை இழையோடுகின்றது.
  • தலைவன், தலைவி ஆகிய இருவர் கூற்று களும் முல்லைத் திணையில் இடம்பெறு கின்றன.
  • பாலைத்திணையிலும் தலைவன், தலைவி ஆகிய இருவர் கூற்றுகளும் இடம்பெறு கின்றன.
  • தலைவனைப் பிரிவதால் தலைவிக்கு ஏற்படும் மனத் துயரம், பிரிந்து செல்லும் தலைவனின் மனநிலை போன்றவை பாலைத் திணைப் பாடல்களில் இடம் பெறுகின்றன. நெய்தல் திணை ஒன்றில்தான் தலைவியின் துயரம் மட்டுமே புனைந்துரைக்கப்படு கின்றது. (பக்: 89,90)

அடுத்து, திணைப்பகுப்பில், உரிப்பொருளை விட கருப்பொருளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார். இறுதியாகப் பின்வரும் மூன்று கருத்துகளை முடிவுரையாக முன்வைக்கிறார்.

  • பெரும்பான்மையான பாடல்கள் நெய்தல் நில வருணனை காரணமாகவே நெய்தல் திணையில் வைக்கப்பட்டுள்ளன (பக்: 101).
  • நெய்தல் திணையில் நெய்தல் நிலத்திற்குரிய இரங்கல் உரிப்பொருளைக் கொண்டுள்ள பாடல்கள் மிகச் சிலவாகவே உள்ளன. இரங்கு வதாகப் பாடும்போதும், தலைவியின் இரங்கலே சிறப்பிக்கப்படுகின்றது (மேலது).
  • நெய்தல் நிலம் கடலோடு தொடர்புடைய தாயினும், மீன் வேட்டம் பற்றிப் பேசப்படு கிறதே ஒழிய, அயல்நாட்டுக் கடல் பயணம் பற்றி நெய்தல் திணைப்பாக்களில் பேசப்பட வில்லை என்பது எண்ணத்தக்கது (மேலது).

பல்வேறு ஆய்விதழ்களில் எழுதப்பட்ட கட்டுரை களின் தொகுப்பு என்பதால் கூறியது கூறல் ஆங் காங்கே இடம்பெறுகிறது. கட்டுரைகளின் தொகுப் பாக ஒரு நூல் அமையும்போது, இது தவிர்க்க முடி யாத ஒன்றுதான். கட்டுரைகளின் அடிக்குறிப்புகள் ஆசிரியரின் கடும் உழைப்பையும், அறிவுத் தேட்டத் தையும் வெளிப்படுத்தி நிற்கின்றன. விவாதத்துக் குரிய கருத்துகள் இந்நூலில் இடம்பெற்று மேலும் ஆய்வுக்கான களங்களை உருவாக்கியுள்ளன. இந் நூலின் முன்னுரையில் (பக்: ஓஓ) இடம்பெற்றுள்ள,

1920-40 களுக்குப் பின்னர் அதாவது ரா. இராகவைய்யங்கார், மு.இராகவைய்யங் கார் போன்றவர்களின் காலத்தின் பின்னர் சங்க இலக்கியங்கள் பற்றிய இத்தகைய ஆய்வுகள் மிகக் குறைவாகவே இருந்தன. இதற்குப் பிரதான காரணம் திராவிடக் கருத்துநிலை வளர்ச்சியின் பின்னர் சங்க காலம் ஆரியக் கலப்பற்ற தமிழ்ப் பண் பாட்டின் பொற்காலமாகக் கருதப்பட்ட மையாகும்.

ஆனால், சங்க காலம் பற்றிய காய்தல், உவத்தலற்ற, ஆழமான, அகலமான, புலமைக் கட்டுப்பாடுடைய ஆராய்ச்சிகள் இப் பொழுது மீள வரத்தொடங்கிவிட்டன என்பதனை எடுத்துணர்த்தும் ஒரு சிறு குறியீடாகவே இத்தொகுதியினைப் பார்க் கின்றேன். நண்பர் பாண்டுரங்கன் கூறுவன எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியா தெனினும் அவற்றை அவர் எடுத்துக்கூறும் புலமை நேர்மை, ஆய்வுக் கடப்பாட்டுணர்வு, ஆழமான தேடல் ஆகியவற்றுக்காக அவரை வாழ்த்துதல் நமது கடன்.

நண்பர் பாண்டுரங்கன், என் போன்றவர்கள் இளைப்பாறும் நிலைக்கு வந்துவிட்டோம். இவற்றுக்கான விடைகளை நமது மாண வர்கள் தரவேண்டும்; தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

என்ற கா. சிவத்தம்பியின் கூற்று இந்நூலின் சிறப்பையும், எதிர்கால ஆய்வின் தேவையையும் சுட்டிக் காட்டுகிறது.

தொகை இயல் (அ.பாண்டுரங்கன்) (வெளியீடு : தமிழரங்கம், புதுச்சேரி)

Pin It

ஐரோப்பியர் ‘இந்தியா’என்று இன்று அழைக்கப் படும் நிலப்பகுதியில் ஊருடுவியதன் மூலம், இப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த விரிவான உரையாடல் நிகழ்த்தும் தேவை நம்முன் உள்ளது. காலனியம் எனும் சமூகப் பொருளாதார மற்றும் பண்பாட்டு நிகழ்வு குறித்துப் பல்பரிமாணப் பதிவுகளை இன்றைய கண்ணோட்டத்தில் செய்ய வேண்டும்.அவ்வகையான செயல்பாட்டிற்கு ஆவணமாக காதரீன் மேயோவின் ‘இந்திய மாதா’நூல் தொடர்பான உரையாடல்கள் உதவும். இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளவற்றை நமது புரிதலுக்காகப் பின்வரும் வகையில் தொகுத்துக்கொள்வோம்.

- 1858 இல் இந்தியா என்ற முழுநிலப் பகுதியும் பிரித்தானிய மகாராணியின் ஆட்சியதிகாரத்துக்கு வந்தது. 1799இல் திப்பு சுல்தானின் வீழ்ச்சி யோடு பிரித்தானியர் அதிகாரத்தைக் கைப் பற்றினாலும் அதனை முழுமையான விதத்தில் அதிகாரத்துக்கு உட்படுத்துவதற்கு சுமார் அறுபது ஆண்டுகள் அவர்களுக்குத் தேவைப் பட்டன. அடுத்த எழுபது ஆண்டுகளில், அவர் களது ஆட்சி அதிகாரத்துக்கு எதிரான குரல் உருப்பெற்று வளர்ந்து விட்டது. 1920களில், பிரித்தானியருக்கு எதிரான உள்ளூர் மக்களின் குரலைப் பண்பாட்டு நோக்கில் ஒடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கென பிரித் தானியர் வேண்டுகோளின் அடிப்படையில், அமெரிக்கப் பெண்மணியான மேயோ எழுதியதுதான் ‘இந்திய மாதா’.

- மேயோவின் நூலில் செய்யப்பட்டிருக்கும் விமர்சனங்களை, ஓர் உளவாளியின் குரல் என்று கருதினாலும் அதில் உண்மை நிகழ்ச்சிகள் இல்லாமல் இல்லை எனும் கருத்தை முதன்மைப் படுத்தியது கோவை அய்யாமுத்து அவர்களின் ‘மேயோ கூற்று மெய்யா-பொய்யா?’ எனும் நூல்.

- “பிரித்தானியரின் கேவலமான உளவாளி மேயோ. அவரது நாவில் பொய்களே தொண்ணூறு சதவீதம். சீர்திருத்தம் செய்ய வேண்டியது பத்து சதவீதச் செய்திகள் இடம்பெற்றுள்ளன” என்று வ.ரா. கூறுகிறார். மேயோவின் பொய்களை அடிப்படையாகக் கொண்டு, இந்தியச் சமூகம் குறித்த மிக விரிவான உரையாடலை முன்வைக்கும் நூல்தான் வ.ராமசாமியான வ.ரா அவர்களின் ‘மாயா மேயோ’ எனும் நூல்.

- மேயோவின் நூலில் எந்தவித அடிப்படையான புரிதலும் இல்லை. வெறும் புளுகு மூட்டை என்னும் கண்ணோட்டத்தில் மேயோவின் நாடான அமெரிக்காவில் நிகழும் பல்வேறு தகவல்களைத் தொகுத்து அவற்றோடு ஒப்பிடும் போது இந்தியாவின் நிகழ்வுகள் ஒன்றும் பெரிதில்லை என்று கருதும் சி.எஸ். ரங்கய்யர் அவர்களின் ‘இந்திய பிதா’ எனும் நூல்.

- எவ்விதம் பிரித்தானிய அரசு மேயோவை அவர்களது ஆட்சிச் சிறப்பு குறித்து நூல் எழுதச் செய்தார்களோ அதைப்போல் இந்திய அரசு, மேயோ நூல் எழுதப்பட்டதன் பின்னுள்ள பரிமாணங்கள் குறித்த விரிவான ஆய்வே மனோரஞ்சன் ஜா அவர்களின் ‘காதரீன் மேயோவும் இந்தியாவும்’ எனும் நூல்.

வெவ்வேறு கண்ணோட்டங்களில் எழுதப்பட்ட மேற்குறித்த ஐந்து நூல்களையும் தொகுத்து, இவ் வகையான தொகுப்பாக இன்று எதற்காக வெளியிட வேண்டும்? இத்தொகுப்பு மூலம் வாசகன் எதைப் பெறப் போகிறான்? இன்றைய சமூகச் சூழலின் புரிதலுக்கு இத்தொகுப்பு எந்த வகையில் உதவும்? எனப் பல்வேறு கேள்விகளை முன்வைக்க முடியும். இக்கேள்விகளுக்கான உரையாடலாக இப்பகுதியைப் பயன்படுத்திக்கொள்வோம். இக்கேள்விகளைப் பின்காணும் கருத்தியல் சார்ந்த அணுகு முறைகளோடு இணைத்துக் காணும் தேவையுள்ளது.

- ‘இந்தியா’ எனும் பல்மொழி, பல் இனம், பல் சூழல் உள்ள நாடு யாந்திரீகமாகக் கட்டப் பட்ட வரலாற்றைப் புரிந்துகொள்வதன் அவசியம்,

- ‘நாடு’ எனும் கருத்துநிலை, எந்தெந்த நிலையில் பல்வேறு வகைப்பட்ட சிந்தனை யாளர்களாலும் புரிந்துகொள்ளப்படுகிறது,

- தேசியம் எனும் கருத்துநிலையைக் காலனியம் எவ்வாறு உருவாக்கியது,

- மொழி, மதம் ஆகியவற்றின் செயல் பாடுகள் எவ்வகையில் அமைகின்றன-

ஆகிய பிற குறித்து இன்றைய பின்புலத்தில் புரிந்து கொள்வதற்கு இத்தொகுப்பு உதவும்.

காலனியத்தின் மூலம் ‘நாடு’ எனும் கருத்தாக்கம் கட்டப்பட்டதன் மூலமாக, மேற்குறித்த மொழி, இனம், தேசியம் ஆகிய பிற கருத்தாக்கங்கள் புதிய தன்மையில் உருப்பெறுகின்றன. இவ்விதம் உருப்பெற்றவற்றை எவ்விதம் எதிர்கொள்வது? என்பது குறித்த வெவ்வேறான கண்ணோட்டங்கள் உருவாகின்றன. தமிழ்ச்சூழலில் உருவான கண்ணோட்டங்களையும் ‘இந்திய அரசு’ என்பது சுதேசிகளின் ஆதிக்கத்தின் கீழ் வந்தபின், மேற்குறித்த தன்மையை எப்படி எதிர்கொண்டது என்பது குறித்துப் பதிவானவற்றையும் இத்தொகுப்பில் ஒட்டுமொத்தமாக வாசிக்கமுடிகிறது. இந்த வாசிப்பில் முதன்மையாக முன்னெழும் மனப் பதிவுகளாகப் பின் கண்டவற்றைக் கூறலாம்.

- பெரியார் எனும் ஈ.வெ.ராமசாமி மேற்குறித்த கருத்துநிலைகளை எவ்வகையில் எதிர்கொண்டார் என்பது தொடர்பான உரையாடல்,

- காந்திய ஈடுபாடு உடைய, ‘தேசம்’ என்பதைப் புனிதமாகக் கருதிய வ.ரா. எதிர்கொண்ட முறைமை மற்றும் இக் கருத்துநிலை சார்ந்த பிறர் எதிர்கொண்ட நிலை,

- தேசத்தைக் கட்டிக்காக்க பின்னால் உருவான இந்திய அரசு எதிர்கொண்ட பாங்கு...

மேற்குறித்த தன்மைகளை விரிவாகப் புரிந்து கொள்ள இத்தொகுப்பு அடிப்படை ஆவணமாகிறது. காலனியச் செயல்பாட்டை அதன்கீழ் இருந்து அனுபவித்தவர்கள் மேற்கொண்ட கண்ணோட்டங் களை இன்றைய பொருத்தப்பாட்டுடன் அணுகும் கடமை நம் முன் உள்ளது.

பெரியார் மேயோவின் நூல் குறித்த உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்த காலச்சூழலில் தேசியம் என்பது குறித்து எழுதிய விளக்கம் பின்வரும் வகையில் அமைகிறது.

“சாதாரணமாக யோசித்துப் பார்த்தோமானால், இந்தியாவில் தேசியம் என்கிற பதமே தப்பான வழியில், மக்களை ஏமாற்றிப் பிழைக்க ஒரு கூட்டத்தார், அதாவது - மேல்சாதியார் என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பனர்களால் கற்பனை செய்யப்பட்டு, அவர்களுக்குத் தரகர் களாக இருந்தால்தான் பிழைக்க முடியும் என்று கருதிய சில பார்ப்பனரல்லாத படித்தவர்கள் என்பவர்களால் ஆதரிக்கப்பட்டு, இவ்விரு கூட்டத்தார் சூழ்ச்சியாலும் பாமர மக்களை ஏமாற்றிச் சிலர் பிழைக்க உபயோகிக்கப்பட்டு வரும் ஒரு பாதகமும் அபாயமுமுள்ள அர்த்தமற்ற ஒரு வார்த்தையாகும்.

இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், தேசியமென்பது மக்களின் ‘தத்துவார்த்த இயல்’ என்பதில் கடவுள், மோட்சம், நரகம் என்கிற வார்த்தைகள் எப்படி அர்த்தமற்றவையாகவும் புரோகிதக் கூட்டமும், பாதிரிக் கூட்டமும், முல்லாக் கூட்டமும், சந்நியாசிக் கூட்டமும் பாமரமக்களிடம் சமயத்திற்கு ஒரு அர்த்தமும் சந்தர்ப்பத்துக்கு ஒரு கருத்துமாய்ச் சொல்லி, அவர்களை ஏமாற்றிப் பிடுங்கித்தின்று, சோம்பேறிகளாய் இருந்து-நோகாமல் வாழ்வதற்காக செய்துகொண்டிருக்க உபயோகப்பட்டு வருகின்றன என்று அறிய முடிகிறது. அதேபோல் தேசிய மென்னும் பதமும் சரீரப்பிரயாசை ஒரு சிறிதும் எடுத்துக்கொள்ள இஷ்டமில்லாமல் நெஞ்சத்தில் அழுக்குப்-படாமல், பாமரர்களை ஏமாற்றிப் பிழைக்கவும் கீர்த்திபெறவும் கண்டுபிடிக்கப்பட்ட சாதனமாகும்.

இந்தப் பதமானது, ஆங்கில பாஷையில் நேஷனல் என்கின்ற பதத்தின் மொழிபெயர்ப்பு என்கின்ற முறையில் ஏற்பட்டதே தவிர, மற்றபடி அது இந்தியாவின் வேறு எந்த பாஷையிலும் எந்தச் சமூகத்திலும் இருந்ததல்ல வென்றே சொல்லலாம்.” (குடி அரசு. 19.5.1929)

‘தேசம்’ குறித்து மிகுந்து அக்கறை கொண்டு, காலனியச் செயல்பாடுகளை எதிர்கொண்ட பலரும் பெரியார் வரையறை செய்துள்ள தேசம் பற்றிய புரிதல் உடையவர்கள் என்று கருத முடியவில்லை. இந்தப் பின்புலத்தில் பெரியார் வழியில் செயல்பட்ட தோழர் கோவை. அய்யாமுத்து அவர்கள் காதரீன் மேயோவின் இந்தியா என்ற தேசத்தின் மீதான விமரிசனங்களை எதிர் கொண்டிருப்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். உளவாளி சொல்லும் உண்மைகளைப் புரிந்து கொள்ளும் அல்லது நேர்மையாக மதிப்பீடு செய்யும் பக்குவம் பெரியாரின் வழிப்பட்ட ‘தேசம்’ குறித்த கருத்தியல் சார்ந்தவர்களுக்கு உருவானது. இந்தப் புரிதல் இன்றும் கூட வெகுசன வெளியில் இருக்கிறதா? என்பது அய்யமே. பின்நவீனத்துவக் கருத்துநிலைகள், தமிழ்ச் சூழலில் முதன்மைப்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டபோது, பெரியார் நிலைப்பாடுகள் அக்கருத்துநிலையை வலுப்படுத்த உதவின என்பதை இங்கு இணைத்துப் பார்க்கலாம். எனவே மேயோவின் குற்றச்சாட்டுகளை பெரியார் வழிநின்று தமிழ்ச்சமூகம் எதிர்கொண்டது. இவ்வகையான அணுகுமுறை இந்தியாவில் எந்தப் பகுதியிலும் நிகழவில்லை என்பதைப் பதிவு செய்வது அவசியம். இன்றைய இந்தியச் சமூகநிலை குறித்து ஆய்வாளர் ராஜ்கவுதமனின் பதிவைப் பெரியாரின் அன்றைய கருத்துநிலையோடு இணைத்துப் பார்க்கலாம். இன்றும் இந்தியாவிற்குப் பெரியார் பெரிதும் தேவைப் படுகிறார். அந்த வகையில் இத்தொகுப்பு மீண்டும் அச்சாவது சரியே. இந்தச் சமூகம் குறித்த ராஜ்கவுதமன் பதிவு வருமாறு:

“இந்தியர் ஒவ்வொருவரின் ஆழ்மனதிலும் சாதியம்” என்னும் இனக்குழு மனப்பாங்கு பிராமணியத்தால் கட்டப்பட்டுள்ளது. இதற்கு வைதீக வருணாசிரம தருமம் அடிச்சட்டம். வேளாண்மைக் கலாசார உறவுகளோடும், பொருளாதார உற்பத்திமுறையோடும், உற்பத்தி முறையின் சக்திகளான வர்க்கங்களோடும் ஊடும் பாவுமாய்ப் பின்னப்பட்டது இந்தியச் சாதியம். இதன் பிறப்பிடங்களாகக் குலம், குடி, இனம், குருதி உறவு, வருணம் எனப் பலவாக இருந் தாலும் இதனைக் கண்காணித்துப் பராமரித்துப் பலன் அடைந்து வந்தது பிராமணியமே. இந்தியச் சாதியத்தை ஆராய்ந்த பெரும்பாலானவர்கள் இப்பிளவை முன்வைத்துள்ளனர். சாதி வரிசையில் தலைமையிடம் பிடித்த சிறுபான்மை பிராமணர் களுக்கு மேல் மானிடர் யாருமில்லை. கோவில் களும் கடவுள்களும் மட்டுமே இருந்தன; இருக் கின்றன. அவற்றுக்குக் கீழே அவற்றிற்குத் தானம் வழங்கிப் பராமரித்த வேளாளர்களுக்கு நிலங்கள் மீது காலனியாட்சி உரிமை இருந்தது. இவையும் அரசர்களால் வழங்கப்பட்டவை. வேளாளர்க்கும் கீழே வணிகர், விவசாய உழைப்பாளிகள், குத்தகைதாரர்கள், வீரர்கள், கூலிப்படைகள், கைவினைச் சாதிகள், தீண்டா தார் எனப்பட்ட தலித் சாதியினர் இயங்கினார்கள். நிலவுடைமை, விளைச்சல், நீர், உழைப்பு ஆகியவற்றுக்கு உடைமைகொள்ள உரிமை பெற்ற சாதிக்குழுக்களை நோக்கியே அடுத்தடுத்த சாதிகள் நகர்ந்தவண்ணம் இருந்தன என்பது இந்திய - தமிழக வரலாறு”.-(ஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக மாற்றமும். முன்னுரை: 2009)

மேற்குறித்த விவரணங்கள் சார்ந்து இந்தியா என்று பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்ட நிலப்பகுதியில் சாதி, மதம் ஆகியவை செயல்பட்டதன் ஒரு வடிவமே தேசமாக உருவானது. அவ்வகையான தேசம் குறித்த விரிவான விமர்சனங்களை பிரித்தானியர்களின் உளவாளி காதரீன் மேயோ முன்வைத்தார். உளவாளி முன்வைத்த காரணத்தினால் அது பொய்யாகிவிடுமா? அவரின் கருத்துகளை எதார்த்தத்தோடு உரசிப்பார்க்கும் பணியைப் பெரியாரியச் சிந்தனை நமக்கு வழங்கியது. அதற்கான அரிய ஆவணமாக இந்தத் தொகுப்பு அமைந்திருக்கின்றது.

வ.ரா. என அறியப்படும் வ.ராமசாமி குறித்து நான் முன்னர் எழுதிய பகுதி ஒன்றை அப்படியே கீழே தருகிறேன்.

“1917 தொடங்கி தொடர்ச்சியாகத் தமிழ் நாட்டில் பத்திரிகையாளராகச் செயல் பட்டவர். சுதந்திரன், தனவைசிய ஊழியன் , தமிழ்நாடு, பாரததேவி, நவயுகம் என்ற பத்திரிகை களோடு நேரடித் தொடர்பு கொண்டவர். சுதந்திரச் சங்கு, மணிக்கொடி, காந்தி, தினமணி, சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளில் தொடர்ச்சியாக விரிவான விவரணக் கட்டுரைத் தொடர்களை எழுதியவர்.

பாரதியோடு சில ஆண்டுகள் வாழ்ந்தவர். காங்கிரஸ் கட்சிச் செயல்பாடுகளில் ஈடுபட்ட போது, பாரதியை வாய்க்கும் இடமெல்லாம் அறிமுகப்படுத்தியவர். ‘மகாகவி’ பாரதி என்ற பட்டத்தை நிலைநிறுத்தியவர்.

காந்தியாரைத் தெய்வமாக வணங்கியவர். காந்தியமே விடுதலைக்கு வழியெனப் பிரசாரம் செய்தவர். கிறித்துவப் பின்புலச் சீர்திருத்த வாதம், பிரம்ம சமாஜ சீர்திருத்தவாதம் என்ற வளர்ச்சியில் காந்திய சீர்திருத்தவாதத்தை வரித்துக் கொண்டவர். பகுத்தறிவுச் சீர்திருத்த வாதம் செயல்படத் தொடங்கிய காலத்தில், காந்திய சீர்திருத்தவாதத்தை, அதற்கு மாற்றாக முன்வைத்தவர்.” (தமிழியல் ஆய்வு: கருத்து நிலைத் தேடல் எனும் கட்டுரை நூல் தொகுப்பில் உள்ள ‘பிரசுரிக்கப்படாத ஒரு பிரதியின் எழுதப் படாத கதை’ எனும் கட்டுரை 2001: 24).

வ.ரா. எனும் மனிதர் குறித்த மேற்குறித்த புரிதலோடு அவர் காதரீன் மேயோவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து எழுதிய நூலை அணுகலாம். அந்த நூலில் வ.ரா.வின் பதிவு பின்வருமாறு:

“ஹிந்து விதவைகளைப் பற்றி மேயோ கேவல மாக எழுதியிருக்கிறார் என்று ஹிந்துக்கள் ஆத்திரப்படுவதில் பிரயோசனமில்லை. மேயோ விதவைகளைப்பற்றிப் பொய் எழுதியிருக்கிறார் என்று கொண்டு ஹிந்து சீர்திருத்தக் காரர்கள் மனம் நோக வேண்டாம். ஹிந்து விதவைகளின் பண்டை இலட்சியம் எப்பொழுது அழிந்து போயிற்றோ, அதன்பின்னர் அவர்களுடைய திக்கற்ற நிலைமை மட்டும் மிகுதியாக நிற்பது அநியாயமாகும். ஹிந்து ஜனசமூகமே, தற்போது தனது கட்டுக்குலைந்து, தனது பண்டைத் தன்னடக்க இலட்சியங்களை உதறித் தள்ளிவரும் பொழுது, ஹிந்து ஆண்மக்கள் தங்கள் விதவைகளின் பரிதாப நிலையைக் கண்டும் அவர்களுடைய நிலைமையின் சீர்திருத்தத்தில் நாட்டம் கொள்ளாமலிருந்தால் மேயோ சொல்லவேண்டியதில்லை, அது எல்லோருக்கும் எளிதிலே தெரிந்துவிடும் - ஹிந்து ஜன சமூகத்தின் உயிர்ச்சத்து விரைவில் அழிந்துபோகும். ஒழுங்கற்ற முறைகளில் நபர்கள் தங்கள் விருப்பங்களைக் கட்டுப் பாடின்றிப் பூர்த்தி செய்து கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டால், அந்த ஜன சமூகம் பாழ்பட்டுப் போய்விடும். பண்டை நாகரிகங்கள் உலகத்தில் அழிந்து போன வகை இதுதான். ஹிந்துமக்கள் விழித்துக் கொள்ளுவார்களாக!” (இந்நூல். ப. 487)

மேயோவின் அனைத்துக் கருத்துகளையும் மறுக்கும் வ.ரா., விதவைகள் குறித்த மேயோ பதிவை, அனுதாபத்தோடு அணுகுகிறார். அதில் அவர் கூறும் ‘ஹிந்து’ என்பவன் யார்? அதன்பின் உள்ள வருணம் குறித்து வ.ரா. என்ன கருதுகிறார்? இவை பற்றியெல்லாம் நாம் அறியமுடியவில்லை. கலப்புமணம் செய்து கொண்ட வ.ரா. பெண்கள் குறித்து தமிழ்ப் புனை கதையுலகில் எழுதிய அளவிற்கு இன்னொரு வரைக் கூறமுடியாது. இருந்தாலும் ‘ஹிந்து’ என்ற நம்பிக்கையுடையவராக இருக்கிறார். இது பாரதி, காந்தி வழி உருவான கருத்துநிலை. இந்த மனநிலையிலிருந்து அவர் தேசத்தைக் கட்டமைக்கிறார். அந்த தேசத்தை மேயோ இழித்துரைப்பதாகக் கோபப்படுகிறார்.

இந்தத் தொகுப்பில் கோவை அய்யாமுத்து, வ.ரா. என்ற இரு முரண்பட்ட கருத்துநிலைகளை நாம் எதிர் கொள்கிறோம். இரண்டு மனிதர்களும் நேர்மை யானவர்கள். உண்மை மீது நம்பிக்கையுடையவர்கள். ஆனால் இவர்கள் கட்டமைக்கும் ‘தேசம்’ வேறு வேறானது. இதில் எந்த தேசத்தை நாம் வரித்துக் கொள்ளவேண்டும்? என்ற உரையாடலுக்கு இத் தொகுப்பு அடிப்படையாக அமையும்.

இத்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ள சி.எஸ். ரங்கய்யர் நூல், ஆழமான தத்துவப் பின்புலங்களின்றி மேயோவை, மேயோ பாணியில் எதிர்கொள்ளும் நூல். அரசியல் சொல்லாடல்களை எளிமைப்படுத்திக் காணும் உரையாடல்களைக் கொண்டிருக்கிறது. அவர் மாதா என்றால் இவர் பிதா என்கிறார். அவ்வளவே.

‘மனோரஞ்சன்ஜா’ நூல் (வெங்கடசாமிநாதனால் மொழிபெயர்க்கப்பட்ட) மிகவும் சுவையான பின்புலம் கொண்டது. பிரித்தானியர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளரான காதரீன் மேயோவை நியமித்து, அன்றைய இந்தியா குறித்து எழுதச் சொன்னார்கள். அவர்களின் நோக்கம், பிரித்தானியர்களின் ஆட்சியைக் கட்டிக்காப்பதற்கு மேயோ எழுதுவது உதவும் என்பது. இதே கண்ணோட்டத்தில், பிரித்தானியர்களிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பு, தங்கள் அதிகாரச் செயல்பாட்டை நியாயப்படுத்தவேண்டும். அதற்காக, மேயோ,குறித்த புலன்விசாரணை சார்ந்த ‘ஆய்வு’நூலை எழுதுவதற்கு மனோரஞ்சன்ஜாவை நியமித்தார்கள். இருவரும் ஒரே நோக்கத்தில் செயல்பட்டிருக்கிறார்கள். அரச அதிகாரம் என்பது ஒரே கருத்துநிலை உடையது என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது. இந்த நூலில் மேயோவை உளவாளி என்று நிரூபிக்கும் முயற்சி முதன்மையாக வெளிப் பட்டுள்ளது. அவர் முன்வைத்திருக்கும் விமரிசனங்களை எளிதாகப் புறக்கணிக்கிறார் இந்த ஆய்வாளர். வழக்கமான கல்விப்புலம் சார்ந்த ஆய்வு முறையில் அமைந்திருக்கும் இந்நூல், துப்பறியும் தன்மையுடன் எழுதப்பட்டிருக்கிறது.இந்திய ஆளும் வர்க்கத்தின் சொல்லாடல்கள் நியாயப்படுத்தப்பட்டு, இந்திய ‘தேசம்’ காப்பாற்றப்பட்டுள்ளது. தனக்கிட்ட கட்டளையை முறையாக நிறைவேற்றியுள்ளார்மேயோவும் அவ்விதம் செயல்பட்டாலும் பல்வேறு எதார்த்தங்களைப் பதிவு செய்தார்; ஆனால் ஜா, மேயோ என்ற பத்திரிகையாளரைப் பற்றிய ஆய்விலேயே முழுக்கவனம் செலுத்தியுள்ளார்.அவரது கருத்துகள் மீது ஜா கவனம் குவிக்கவில்லை.

1925-30 ஆண்டுகளில் இந்தியாவில் ‘இரட்டை யாட்சி’ முறை நடைமுறைக்கு வந்த சூழலில் இந்தி யாவின் நிலைமைகளை மதிப்பீடு செய்த காலனியப் பார்வை, தேசம் எனும் கருத்தாக்கத்தை நம்பாத பார்வை, தேசத்தை நம்பிய பார்வை, பொய்யான தேசத்தைக் கட்டிக் காப்பதாகக் கூறும் பார்வை என்று பல கோணங்களில் இத்தொகுப்பு செயல்படுகிறது. இத்தொகுப்பு காலனியம் குறித்த நவீன ஆய்வுக்கு உதவும் அரிய தரவாக அமைகிறது. இதனை வெளிக் கொண்டுவரும் விடியல் பதிப்பகப் பணி வரலாற்றில் நினைக்கப்படும்.

இம்முயற்சியை முன்னெடுத்த தோழர் விடியல் சிவா இன்றில்லை. இக்கட்டுரையின் முதல் ஐந்து பக்கங் களை எனது கையெழுத்தில் எழுதிக் கொண்டிருந்த போது சிவா மறைந்து கொண்டிருந்தார். இந்தத் தொகுப்பு பற்றி என்னிடம் சிவா நிறையப் பேசினார். மேயோ குறித்து வ.ரா.வின் நூலை நான் கொடுத்தேன். அப்போது, இத்தொகுப்புக்கு நான் ஓர் அறிமுகம் எழுத வேண்டுமென்று கேட்டார். நான் இப்போது எழுதி விட்டேன். அவர் இல்லை. அவர் இருக்கும்போதே எழுதி இருக்கவேண்டும். அதைச் செய்யாத குற்ற உணர்வு இந்த நூல் வழியாக என்னுள் பதிந்துவிட்டது.

(குறிப்பு: விடியல் பதிப்பகம் வெளியிட உள்ள ‘இந்திய மாதா’ எனும் நூலிற்கு எழுதிய அறிமுக உரை)

Pin It

உலகெங்கும் அறிவியல் முன்னேற்றம் வியக்கத் தக்க வளர்ச்சிகளை மிக விரைவில் தோற்றுவித்த காலம் பொதுவுடைமை மேதைகள் கார்ல் மார்க்சும், பிரடெரிக் ஏங்கல்சும் வாழ்ந்த காலம். அவர்கள் இருவரும் உலகில் எந்த நாட்டில் சிறு முரண் அசைவு ஏற்பட்டாலும் அதனைக் கூர்ந்தாய்ந்து, அது மானுட விடுதலைப் போராட்டமா என்று தெளிவுபடுத்துவதில், அப்போராட்டத்தை ஆதரித்துக் கருத்துரைப்பதில் மிகவும் முனைப்பாக இயங்கினர்.

இவ்வாறு உலகத்தையே அலசியாய்ந்த ஆனானப் பட்ட மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருக்கும் சவாலாக விளங்கிய ஒரு நாடு இந்தியாதான். அவ்வாறு இந்த மேதைகளுக்கே சவாலாக நின்ற ஒரு ‘கூறு’ கெட்ட கூறு சாதிதான்!

எந்த நாட்டிலும், அரசியல், பண்பாடு போன்ற தடங்களில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தி மறு மலர்ச்சியை, பொதுவுடைமையை நடைமுறையில் காண முயன்றாலும் முடியும்; இந்தியாவில் மட்டும் இயலாது என்ற சூழல்தான் - பத்தொன்பதாம் நூற்றாண்டில்! பின்னர் இருபதாம் நூற்றாண்டின் முன்பாதியில், பண்டித அயோத்திதாசர், டாக்டர் அம்பேத்கர், பெரியார் ஈ.வெ.ராமசாமி, பொது வுடைமையாளர்கள் ம.சிங்காரவேலர், ப.ஜீவானந்தம் ஆகியோர் ஆற்றிய சாதி ஒழிப்புப் பணிகள் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கன.

சாதி ஒழிப்புப் பணியில் இந்தியாவில் குறிப்பிடத் தக்க அளவுக்குச் சிறப்பிடம் பெற்ற தமிழ்நாட்டில் இந்த 21-ஆம் நூற்றாண்டில் சாதி மோதல் என்பது வியப்புக்கும் வேதனைக்கும் உரியது.

தருமபுரி மாவட்டம், செல்லன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் திவ்யா (வயது - 20), அருகிலுள்ள நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோ என்பவரின் மகன் இளவரசன் (வயது - 23) ஆகிய இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணத்தை விரும்பாத பெண்ணின் தந்தை நாகராஜ் நவம்பர், 7ஆம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டதையொட்டி, அப்பகுதியில் வன்முறை வெடித்தது. அதே நாளில் மாலை நான்கு மணி அளவில் தருமபுரி அருகிலுள்ள வெள்ளாளப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நத்தம் காலனி, அண்ணாநகர் புதுக்காலனி, கொண்டப்பட்டி ஆகிய மூன்று கிராமங்களில் தலித் மக்கள் வாழும் 270 வீடுகள் மேல்சாதியினரால் தீவைத்துக் கொளுத்தப் பட்டன; வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன. அவை ஏழு கோடி மதிப்பு பெறும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏற்படவில்லை.

இந்த இழிசெயல் எவ்வளவு நச்சார்ந்தது என்பதை உணர்ந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அந்த நிகழ்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதங்களையும், போராட்டங்களையும் நடத்தி வருகிற வேளையில், ஓர் அரசியலாளர் தலித் இளைஞர்கள் திட்டமிட்டு மற்ற சாதிப் பெண்களைக் காதலித்து ஏமாற்றிப் பொருளாதார ஆதாயம் தேடு வதாகவும், அதற்காக சில தலித் அமைப்புகள் இயக்கமே நடத்துவதாகவும் கருத்து கற்பித்து வருகிறார்.

இவ்வாறு, காதலிப்பதை - அதாவது, பிற சாதிப் பெண்ணைக் காதலிப்பதையெல்லாம் குற்றம் சாட்டு வதே தவறு; இது சமூக நீதிக்கு எதிரான செயல்!

இன்று விஞ்ஞானம் ஏராளமாக முன்னேறி, ‘உலகில் உயர்ந்த பண்பாடு எங்கள் பண்பாடு’ என்று பெருமையடித்துக் கொள்ளும் இந்தியாவில், நம் தமிழகத்தில் இப்படிப்பட்ட தீய நிகழ்வுகள் நிகழ்வது வெட்கக் கேடானது.

இந்த தர்மபுரி மாவட்ட நிகழ்வு என்பது திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு நிகழ்ந்ததாகப் புலப் படவில்லை. இதுபோன்ற சாதி வேறுபாடுகளை மனத்தில் கொள்ளாது இயல்பாகக் காதல்வயப் பட்டு திருமணம் செய்து கொள்ளும் நேர்வு எப் போது நடந்திருந்தாலும் உடனிகழ்வாக இந்த வன் முறையும் நடந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

“சோஷலிஸ்டுகள் அல்லது சோஷலிஸம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளில் சாதி மிக முக்கியமானது. இதனை எதிர்கொள்ளாமல் புரட்சியை வென்று அடைய முடியாது. புரட்சிக்கு முன் சாதிப் பிரச்சினையைக் கவனத்தில் கொள்ளத் தவறினால் புரட்சிக்குப் பின் சாதியைக் கவனத்தில் கொண்டு, அதில் நம் சிந்தையை மூழ்கச் செய்ய வேண்டியிருக்கும்” என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

சாதி, மத, பண்பாட்டுத் தளங்களில் சீர்திருத்தம் கொள்ளாது, நம் மண்ணில் சமத்துவம் காண இயலாது. இதனை எல்லாச் சாதிகளிலும் உள்ள உழைப்பாளி வர்க்கம் உணர வேண்டும். இத்தகைய பிற்போக்குத்தனமான வன்முறைகள் தொடர்ந்து நிகழ்வது ஒடுக்கப்படுவோர் மட்டுமின்றி ஒடுக்கு வோர், அதற்கு உடந்தையாக இருப்போர், அதைக் கண்டும் காணாது வாளாவிருப்போர் - இவர்களின் அடுத்த தலைமுறையினர்களுக்கும் துன்பத்தை விளைவிக்கும் என்பதை எல்லாத் தரப்பினர்களும் கவனத்திற்கொண்டு உரிய தடுப்பு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.

Pin It

உட்பிரிவுகள்