அங்காசங் காலம்

அங்காசம், அங்காசங்காலம், அங்காசக் காரன் ஆகிய சொற்கள் நம்மில் பலருக்குத் தெரிந் திருக்க வாய்ப்பில்லை. இவை மொரீசியஸில் வழக்கிலுள்ள தமிழ்ச் சொற்கள். அங்காசம் என்பது பிரெஞ்சு மொழிச் சொல். engagement என்ற ஆங்கிலச் சொல் தான் பிரெஞ்சு மொழி உச்சரிப்பில் அவ்வாறு ஒலிக்கப்படுகிறது. எங்கேஜ் என்பது ஒப்பந்தம் செய்துகொள்வதைக் குறிக்கிறது. அங்காசங் காலம் காலனி ஆட்சிக் காலத்தைக் குறிக்கிறது. அங்காசங் காரன் காலனி ஆட்சியில் ஒப்பந்தத் தொழிலாளர் களைக் குறிக்கும். மொரீசியஸ் தீவை டச்சுக் காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோர் கைப்பற்றிக் கரும்புத் தோட்டங்களை உருவாக்கினார்கள். கரும்பு உற்பத்திக்குத் தேவை யான உழைப்புச் சக்தியைப் பெறுவதற்காக இந்தியாவிலிருந்து ஏழை மக்களை வஞ்சித்து அழைத்துச் சென்றார்கள். அவர்களில் தமிழர், தெலுங்கர், மராட்டியர், போஜ்புரி இனத்தவர் ஆகியோர் அடங்குவர். அவர்களுக்கு இழைக்கப் பட்ட கொடுமைகள் பலப்பல. அவர்கள் அனு பவித்த இன்னல்கள் ஏராளம். ஒவ்வொரு கரும்பு எஸ்ட்டேட்டிலும் ஒரு மணி (bell) இருக்குமாம். அம்மணி காலையில் மூன்று மணிக்கே ஒலிக்கத் தொடங்கும். அப்போது ஆலைகளில் உள்ள தொழிலாளர்கள் வேலையைத் தொடங்குவார்கள்.

நான்கு மணிக்கு வருகைப் பதிவேட்டில் பணிக்கு வந்தவர்களையும் வராதவர்களையும் பதிவு செய் வார்கள். மாலையிலும் வருகையைப் பதிவு செய் வார்கள். 4.15 மணிக்கு (காலை) வீட்டிலிருந்து வரும் தொழிலாளர்கள் வேலையைத் தொடங்கு வார்கள். சிர்தார் யார் யாருக்கு என்னென்ன வேலை என்பதை ஒதுக்கித் தருவார். காலை 10.00 மணிக்கு உணவு, மறுபடியும் 11 மணிக்கு வேலை தொடங்கி மாலை 5 அல்லது 6 மணி வரை தொடரும். அதற்குப் பிறகு தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களை (புல்) சேகரித்துக் கொண்டு வீடு திரும்புவர். வயலில் வேலை செய்பவர்களுக்குக் கடினமான வேலையும், மில்லில் வேலை செய்பவர்களுக்கு 17 மணி நேர நீண்ட வேலையும் இருக்கும். வேலைக்கு வராதவர்களுக்குச் சம்பளம் இல்லை. சொல்லாமல், அனுமதியில்லாமல் வராதவர்களுக்குத் தண்டனை உண்டு. தொழிலாளர்கள் கூலிகள் என்றே அழைக்கப் பட்டனர். அவர்கள் தங்கள் பண்பாட்டைத் தக்க வைக்க அரும்பாடுபட்டனர்.

தமிழகக் கிராமங்களி லிருந்த வாழ்க்கை நடைமுறைகளையே அங்கும் பின்பற்றினார்கள். அவர்களது குடும்ப உறவுகள், மரபுகள், வாழ்க்கை மதிப்பீடுகள் ஆகியவை அந்நியச் சூழலில் வாழ்வை எதிர்கொள்ளத் துணை புரிந்தன. கோவில்களைக் கட்டிக் கொள்ளவும், திருவிழாக் களைக் கொண்டாடவும் காலனி ஆட்சியாளர் தடைவிதிக்கவில்லை. தொழிலாளர்கள் காலனி ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளையும், சுண்டல் களையும் பல முறைகளில் எதிர்த்தனர். 1925 வாக்கில் தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து அழைத்துச் செல்வது நிறுத்தப்பட்டது. தொழி லாளர் ஒப்பந்தமுறை இத்துடன் முடிவுக்கு வந்தது. 1875 வாக்கில் சர்க்கரை ஆலைகளில் இருந்த 40,000 குழந்தைகளில் சுமார் 1000 குழந்தைகளே கல்வி கற்றனர். மற்ற குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்தியத் தொழிலாளர் களுக்குக் கல்வி அறிவு அவ்வளவாக அளிக்கப் படவில்லை. இந்தியத் தொழிலாளர்களுக்குக் கல்வி அறிவு அவ்வளவாக இல்லாததால் தொழி லாளர் அனுபவித்த கொடுமைகளும் இன்னல்களும் அவர்களாலேயே வரலாறாக எழுதப்படவில்லை; படைப்புகளாகவும் வெளிவரவில்லை.

மொரீசியஸ் நாடு விடுதலை பெற்ற பிறகு இந்தியர்களின் கல்வி வாய்ப்பு பெருகிற்று. குறிப் பாக மொழிக் கல்விக்குச் சிறப்பான இடம் அளிக்கப் பட்டு இந்திய மொழிகளைக் கற்க வாய்ப்புகள் பெருமளவில் ஏற்பட்டன. இந்தியாவிற்கே வந்து மொழிகளைக் கற்கவும், கல்வி பயிலவும் வசதிகள் மேம்பட்டன. அவ்வாறு கல்வி கற்றவர்களுள் டாக்டர் பொன். திருமலைச் செட்டியும் ஒருவர்.

நூலாசிரியர் திருமலைச்செட்டி

பொன்.திருமலைச்செட்டி மோகாவிலுள்ள மகாத்மாகாந்தி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் ஆகிய மூன்று மொழிகளையும் நன்கு கற்று அவற்றில் திறமையாக உரையாட வல்லவர். மொரீசி யசில் தமிழ்க் கல்வியையும், பண்பாட்டையும் பரப்புவதில் ஆர்வமும், செயல் திறமும் மிக்கவர். எல்லோரிடமும் இனிமையாகப் பழகக் கூடியவர். பேராசிரியர் அருணை.பாலறாவாயன் திருமலைச் செட்டி அவர்களைப் பற்றிக் கூறுகையில்

“என் அன்பு இலயோலா மாணவர்

மொரீசியசில் முக்கியமானவர்

அந்தத் தித்திப்புத் தீவின்

உப்புக் கரிக்காத காற்றை

உள்ளுக்கு வாங்கியவர்

உயர்தமிழில் ஓங்கியவர்

அன்னைத் தமிழும்

சென்னைத் தமிழும்

நன்றாக அறிந்தவர்!”

என்று புகழ்ந்துரைத்துள்ளார். திருமலைச் செட்டி அவ்வப்போது தமிழ்க் கவிதைகளையும், நாடகங் களையும் படைத்து வந்துள்ளார். அவை யாவும் மொரீசியஸ் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பான இடம்பெறுகின்றன. திருமலைச்செட்டி எண்பதுகளிலிருந்து அவ்வப்போது எழுதிய நாடகங்கள் ஏழினைத் தேர்வு செய்து 2007-இல் வெளியிட்டுள்ளார். இவ்வேழு நாடகங்களும் அந்நாட்டில் முதல் பரிசினைப் பெற்றவை. இத் தொகுப்பில் உள்ள நாடகங்கள் பின்வருமாறு:

1.            நானும் மனிதன்

2.            அமைதிக்கோர் இடம்

3.            அவன் வருகைக்காக

4.            ஆலெ ஊதுலெ

5.            கண்ணீர்த்துளி

6.            கொந்தளிக்கும் கடலிலே

7.            வட்டியோடு வருமா?

8.            அந்நாடகங்களைப் பற்றிய மதிப்பீடு இக்கட்டுரையில் இடம்பெறுகின்றது.

நாங்க மனுஷங்கடா!

‘நானும் மனிதன்’ என்ற நாடகம் பத்தொன் பதாம் நூற்றாண்டில் அங்காசங் காலத்தில் நடந்த சம்பவத்தைக் கருவாகக் கொண்டது. ‘தொழி லாளிங்க தலை தூக்க வேணும்; அவங்களையும் வெள்ளைக்காரர்கள் மதிக்க வேண்டும்’ என்பது தான் கதைக்கரு. சுப்பையா என்ற தொழிலாளியை ரெனெ என்ற வெள்ளையன் வசவுச் சொற்களால் திட்டிவிடுகிறான். அவனை மட்டுமல்லாமல் அவனது தாயான காமாட்சியையும் வாய்க்கு வந்தவாறு திட்டுகிறான். அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சுப்பையா ரெனெவை கை நீட்டி அறைந்துவிடுகிறான். ரெனெவும் அவனது சக கரும்புத் தோட்ட முதலாளிகளும் சுப்பை யாவைத் தேடிச் சுட்டுக் கொன்று விடுகின்றனர். இது தான் கதை. ராவுல், ரெனெ, ரொபர், இவொன் ஆகிய பாத்திரங்கள் முதல் காட்சியில் வந்து தொழிலாளிகளுக்கெதிராகவும், சுப்பையாவைக் கண்டுபிடித்துத் தண்டிப்பது தொடர்பாகவும் உரையாடுகின்றனர். இரண்டாவது காட்சியில் சுப்பையாவும் தாயார் காமாட்சியும் உரையாடு கின்றனர். காமாட்சி சுப்பையாவை அடங்கிப் போக அறிவுறுத்துகிறான். கந்தசாமியும் சுப்பை யாவுக்கு உதவி செய்கிறான். இறுதியில் எதற்கும் பணியாத சுப்பையா சுட்டு வீழ்த்திக் கொல்லப் படுகிறான். “மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா” புகழ்பெற்ற தமிழக நாட்டுப்புறப் பாடலை நினைவுறுத்துகிறது இந்நாடகத் தலைப்பு.

“நாம் கை நொடித்தால் கரும்புக் கூலியாட்கள் நடுங்க வேண்டும். நாம் எது சொன்னாலும் எது செய்தாலும் அதுவே சட்டம். நம் வார்த்தையையோ, செய்கையையோ எதிர்க்கவோ, மறுக்கவோ யாருக்கும் உரிமை இல்லை. நாம் பேசும்போது அந்த நாய்கள் தலைகுனிந்து ஆமோதிக்க வேண்டும். இந்த மல்பாரிகளுக்கு வெள்ளையன்தான் கடவுள்...” முதல் காட்சியில் இடம்பெறும் இத்தகைய உரை யாடல் வெள்ளையர்களின் மனோபாவத்தைச் சுட்டுகின்றது. தாயார் காமாட்சியின் வழியாக ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலையையும் படம்பிடித்துக் காட்டுகிறார். ‘நான் மாடு போல உழைக்கிறேன். ஆனால் நான் மாடு இல்லெ அம்மா, நானும் மனுஷன்” என்ற சுப்பையாவின் வார்த்தைகள் இந்த நாடகத்தின் அடிநாதமாக விளங்குகின்றன. அதுவே நாடகத்தின் தலைப் பாகவும் அமைந்துள்ளது. நூலின் பெயராகவும் இடம்பெற்றுள்ளது. அங்காசத்துக்கும் அடிமைத் தனத்துக்கும் வித்தியாசமே இல்லை என்று சுப்பையா கொதித்து காலனி ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்து உயிர் துறக்கிறான்.

தமிழன் தலைநிமிர்தல்

ஆலெ ஊதுலெ என்பது மற்றுமோர் அங்காசங் காலத்தை நினைவுகூரும் நாடகம். இரண்டு காட்சி களைக் கொண்ட நாடகம். திறமைசாலிகளாக இருக்கும். தொழிலாளர்களைக்கூட அடிமைகளாக நடத்தும் மனோபாவத்தை எதிர்க்கிற நாடகமாகப் படைக்கப்பட்டுள்ளது. இந்நாடகத்தில் சந்திராயன் திறமையுள்ள தொழிலாளி. ஆலையில் ஏற்படும் பழுதுகளை உடனடியாகச் சரிபார்த்து விடுவான். காலனி எஜமானர்களுக்கும் தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொடுப்பான். அவ்வாறு கற்றுக் கொடுக்கும் வேளையிலும் அடிமையாகவே நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிற எஜமானர்களை எதிர்த்து ஆலை பழுதடைந்த நிலையிலும் வேலைக்குச் செல்லாமல் வீட்டுக்கு வந்துவிடுகிறான். அவன் மீது கோபம் கொண்ட ஆலை முதலாளிகள் அவனைத் தேடிப் பிடித்துத் தண்டிக்கின்றனர். “மானம் உள்ளவங்க தலைநிமிர்ந்துதான் பேச வேண்டும். நான் மானம் உள்ளவன் எசமான். ஒளைச்சிப் பொளைக்கிறவன். எங்க வேர்வையிலெ இந்தப் பூமி செளிக்குது. ஒங்க ஆலெ ஓடுது” இவை சந்திராயன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள். மொரீசியஸ் கரும்புத் தோட்டத் தொழிலாளர் தலைநிமிரத் தொடங்கிய காலகட்டத்தை இந் நாடகம் உணர்த்துகிறது.

குதிரைப் பந்தயம்

காலனி ஆட்சியாளர்களின் பண்பாடு தமிழ் மக்களிடத்தில் பரவத் தொடங்குகிறது. புதிய நாகரிகத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையிலும் பழைய சொந்தப் பண்பாடு சிதைகின்ற நிலையிலும் ஏற்படும் சிக்கல்களை ‘வட்டியோடு வருமா’, ‘கண்ணீர்த் துளி’ போன்ற நாடகங்கள் விவரிக் கின்றன. ‘வட்டியோடு வருமா?’ என்ற நாடகம் குதிரைப் பந்தயத்தின் தீங்குகளைச் சுட்டிக் காட்டு கிறது. ‘பணக்காரர்களுக்குக் குதிரைப் பந்தயம் பொழுது போக்கு; ஏழைகளுக்குப் புதைகுழி’ என்று இந்நூலின் முகவுரையில் பேராசிரியர் பாலறாவாயன் குறிப்பிடுவது போலவே இந் நாடகத்தில் வரும் கிருஷ்ணன் மூவாயிரம் ரூபாயை இழந்து விடுகிறான். ‘ஓராண்டு வேலை செய் தாலும் செலவுகள் போக மூவாயிரம் சம்பாதிக்க முடியாது. இப்பொழுது பொக்கெனப் போய் விட்டதே!’ என்று துன்பப்படுகிறான். ஒரு தீய பழக்கம் இன்னொரு தீய பழக்கத்திற்கும் காரண மாக அமைந்து விடுகிறது. “விளையாடி வெற்றி பெற்றால் அந்த மகிழ்ச்சியில் நன்றாகக் குடித்து வருவார். தோற்றுப் போனால் அதை மறப்பதற்கு அப்பவும் குடிப்பார்”. இவை கிருஷ்ணரின் மனைவி லோகாவின் தம் கணவர் குறித்த மதிப்பீடு. தீய நண்பர்களின் சகவாசம் மேலும் மேலும் கெட்டுப் போகவே தூண்டுகோலாக அமைகின்றது. “சில நாட்களில் எல்லாப் பணமும் போய்விடும். தளர்ந்து விடக்கூடாது. அது திரும்பி வந்தால் வட்டியோடு வரும்’ என்ற கிருஷ்ணனின் நண்பன் ராமா, கிருஷ்ணனுக்கு ஊக்கம் கொடுக்கிறான். குதிரைப் பந்தயத்துக்குச் செல்லமுடியாமல் வீட்டுக்கு வரவேண்டிய கட்டாயச் சூழலில் உடல் வீட்டிலும் மனம் குதிரைப் பந்தய மைதானத்திலும் இருக்கிற பதற்றத்தை நாடகத்தில் திருமலைச்செட்டி நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.

வீட்டை மறந்து ஊருக்கு உபதேசம்

மொரீசியசில் தமிழ்ப் பண்பாடு பரவ வேண்டும் என்று ஆர்வம் கொண்ட கண்ணப்பன் தன் வீட்டிலேயே தன் மகள் பமெலா மேனாட்டு நாகரிகத்தில் திளைத்துத் தமிழ்ப் பண்பாட்டை மறக்கிறாள் என்பதை அறியவில்லை. அவளைத் திருத்த முடியாததற்கு வருத்தப்படுகிறார் கண்ணப்பன். தொடக்கத்தில் ‘அப்பா செய்வதும் சொல்வதும் இக்காலத்துக்குப் பொருந்தாது அம்மா!’ என்று பமெலா அப்பாவை அலட்சியப் படுத்துகிறாள். பின்னர் ‘ஆடையை மாற்றுகிற மாதிரி, பெண்களையும் மாற்றுகிற ஒரு ஆடவனோடு சினிமா, பூங்கா, இன்னும் பல இடங்களுக்கும் போகிறாள்’ இந்தச் செய்தியை அறிந்து மன வேதனைப் படுகிறார் கண்ணப்பன்.

‘தமிழ் ஒழுக்கம் பற்றிப் பேசிப்பேசி என் வாழ்நாள் முழுவதும் கழித்தேனே. நம் தமிழ் இலக்கியத்தில் மகளிர் எவ்வாறெல்லாம் வாழ்ந்து சிறப்படைந்தார்கள் என்பது பற்றி மணிக்கணக் காய் எடுத்து எடுத்துச் சொன்னேனே. ஒழுக்கம், ஒழுக்கம் என்று முழக்கம் செய்தேன். ஆனால் அந்த ஒழுக்கம் என் சொந்த வீட்டில் இல்லாமல் போயிடுச்சே” என்று கண்ணப்பன் வருந்துவதோடு நாடகம் முடிகிறது. இந்த நாடகத்துக்குக் ‘கண்ணீர்த் துளி’ என்று பெயரிட்டுள்ளார்.

உயிருக்குயிராய்

‘அமைதிக்கோர் இடம்’ என்ற நாடகம் உயிருக்குயிராய்க் காதலிக்கிற அழகன், அமுதா, அக்காதலை அனுமதிக்காத அமுதாவின் பெற்றோர் ஆகியோர்க்கிடையே நடக்கின்ற உரையாடலைக் கொண்ட கதை. கைலாசம் தன் மகள் அமுதாவைச் செல்வந்தராகிய வடிவேலன் மகனுக்கு மண முடிக்க விழைகிறான். அமுதாவும், அழகனும் தங்கள் காதலை வெளிப்படுத்துகிறார்கள். ‘காதல் என்பது களியாட்டமன்று; கற்றோரும் மற்றோரும் மதிப்பதும் அல்லாமல் கடவுளே ஏற்கும் உயர்ந்த உணர்ச்சியாகும்” என்று அழகன் வாதாடுகின்றான். இறுதியில் கைலாசம் திருமணத்திற்குச் சம்மதிக் கிறான்.

அவன் வருகைக்காக

இந்த நாடகத் தலைப்பே ஒருவன் வருகைக் கான காத்திருப்பை உணர்த்தி விடுவதாக உள்ளது. பிள்ளையின் திருமணத்திற்காகக் காத்திருக்கும் பெற்றோர்களின் கனவைத் தகர்ப்பது போல இக்கதையில் வரும் சந்திரன் தன் பெற்றோர்களையும், அவனை நேசிக்கும் நிலா என்ற பெண்ணையும் மோசம் செய்துவிட்டு ‘அன்புள்ள பெற்றோருக்கு வணக்கம். செப்டம்பர் ஆறு என் திருமணம். அக்டோபர் வீடு திரும்புவேன்” என்று தந்தி அனுப்பி விடுகிறான். எல்லோரும் கல்லாகி விடுகிறார்கள் என்று நாடகம் முடிகின்றது. ‘கொந்தளிக்கும் கடலிலே’ என்ற கதை வீட்டிற்குச் சொல்லாமல் இங்கிலாந்து நர்சிங் வேலைக்குச் சென்றுவிடும் குமரன் என்பவனின் முடிவை விவரிக்கிறது.

முடிவுரை

நாடகங்களில் பிரெஞ்சு மொழிச் சொற்கள் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. bravo,bonjour, calmeto i Rene, Jemme bonne முதலிய சில வற்றைக் குறிப்பிடலாம். பிரெஞ்சு எஜமானர் களின் உரையாடலில் இத்தகைய சொற்கள் வெளிப் படுகின்றன. அங்காசங் காலத்தில் பேசப்பட்ட தமிழ் வழக்கு குறித்த பதிவுகள் ஏதும் கிடைக்க வில்லை. ஆனால் பொன்.திருமலைச்செட்டி மூத்த குடிமக்களின் பேச்சு வழக்கைச் சில நாடகங்களில் பதிவு செய்கிறார். “வேணு, நம்பல்க்கும், நெனச் சிக்டெ, கன்சாமி, அப்பெனே, கஷ்டொம், எவ்ள, வாள்ந்தா மனுசன் மாதிரி வாளுணு” - இவ்வாறு அங்காசங்கால வழக்குச் சொற்கள் இந்நாடகங் களில் பதிவாகியுள்ளன. அப்பா! என்ற சொல் அப்பாய்! என்றும், சுப்பையா என்ற சொல் சுப்பாய்! என்றும் விளியேற்பதை ஆசிரியர் சுட்டுகிறார். நாடக உரையாடல்களின் இடையே கவிதை வரிகளும் இடம்பெறுகின்றன. நாடகங்களில் வரும் தமிழ்ப் பாத்திரங்கள் குடிகாரர்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர். ‘வட்டியோடு வருமா’ என்ற நாடகத்தில் கிருஷ்ணன் என்ற பாத்திரம் சூதாட்டத்தோடு குடிப்பழக்கமும் உடையவன். ‘ஆலெ ஊதுலெ’ நாடகத்தில் சந்திராயன் என்ற பாத்திரம் குடிப்பழக்கம் உடையவன்.

பிரெஞ்சு கலாச்சாரத்தின் பாதிப்பாக இதனைக் கருதலாம். இத்தொகுப்பிலுள்ள ஏழு நாடகங்களில் இரு நாடகங்கள் அங்காசங்காலக் கொடுமை களைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டவை. அங்காசங்காலத்தில் தொழிலாளர்கள் தலை நிமிர்ந்து எதிர்க்கத் துணிந்த போக்கினை இரு நாடகங்களும் உணர்த்துகின்றன. பின் காலனித்துவ இலக்கியங்கள் காலனி ஆட்சியை எதிர்க்கக் கூடியவை. அந்த வகையில் இவ்விரு நாடகங்களும் பின்காலனித்துவ இலக்கியம் என்று கொள்ளலாம். இத்தொகுப்பில் மீதமுள்ள ஐந்து நாடகங்கள் சமகால மொரீசியஸ் தமிழர்களின் பிரச்சினை களைச் சுட்டுகின்றன. பல்லின / பன்மொழிச் சூழலில் தலைமுறை இடைவெளியில் தோன்றும் அச்ச உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந் நாடகங்கள் படைக்கப்பட்டுள்ளன. மொரீசியசில் தமிழ்மொழியை எழுதவும் வாசிக்கவும் தெரிந்தவர் எண்ணிக்கை மிகவும் குறைவு. எழுதும் நாடகங் களைப் படிப்பதற்கும் அங்குத் தமிழ் தெரிந்த வர்கள் இல்லை. தமிழ்மொழியை வளர்க்கும் முக மாகப் படைக்கப்பட்ட நாடகங்கள்தாம் இவை. ஆகவே இந்நாடகங்களைப் படைத்த முனைவர் பொன்.திருமலைச்செட்டி நமது நெஞ்சார்ந்த பாராட்டுதலுக்குரியவர்.

Pin It

காந்தி சொன்ன ‘‘மாற்றத்தை விரும்பினால் அந்த மாற்றத்தை உன்னிடமிருந்து துவங்கு’’ என்பதற்கு நாம் வாழும் காலத்தின் சரியான உதாரணம் என்றால், நம்மாழ்வாரைச் சொல்லலாம். “நாம் ஏன் இயற்கை விவசாயம் செய்யக் கூடாது?

சந்தர்ப்பவாதத் தரகு அரசியலாலும் சக மனிதனை நேசிக்க மறுத்த சாதியப் பிணக்குகளாலும் நசுக்கப்படும் விவசாயிகளையும் துரித வாழ்வில் தொலைந்து கொண்டிருக்கும் ஏராளமான சாமானியர்களையும் “நாம் ஏன் நச்சற்ற, ரசாயனக் கலவை இல்லாத உணவைத் தேடி உண்ணக் கூடாது? எதற்கய்யா இந்த மரபணுப் பயிர்கள்?” என்று சிந்திக்க வைத்தவர், திருக்காட்டுப்பள்ளியில் பிறந்த அந்த மாமனிதர்.

பட்டம் முலம் தனக்குச் சமூகத்தில் அங்கீகாரம் தந்துவிட்டதாலேயே, அந்த ஏட்டுப் படிப்பில் கண்மூடித்தனமான நம்பிக்கையைக் கொண்டதும், அது உருவாக்கிய அளவுகோலைக் கொண்டே, ஒட்டுமொத்த வாழ்வியலை அளப்பதுமான மதயானைக் கூட்டம் நம் ஊரில் அதிகம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனக்குப் போதிக்கப்பட்ட பட்டப் படிப்பினால் கிடைத்த அரசுப் பணி, விளிம்பு நிலை மக்களுக்குத் துளியும் பயன்தராத ஆய்வில் ஈடுபடுகிறது என்பதை உணர்ந்ததும், அந்த வேலையை விட்டுவிட்டு, வேளாண் வாழ்வியலைக் களத்தில் படிக்கக் களம் இறங்கியவர் நம்மாழ்வார்.

எப்படி வந்தது ரசாயன உரம்?

உழவே தலை என்று 5,000-6,000 ஆண்டுகளாக வாழ்ந்த சமூகம், உழவாஞ் ஐயையோ எனத் தலைகுனிய ஆரம்பித்தது,

கடந்த 50-60 ஆண்டுகளாகத்தான் இருக்கும். இங்கு ஒரு மாபெரும் உழவுக் கலாச்சாரம் இருந்தது; மாபெரும் வேளாண் அறிவியல் அதில் கலந்திருந்தது. சிற்றெறும்புக்கும் சிட்டுக்குருவிக்கும் சேர்த்துச் சமைக்கும் பல்லுயிர் பேணும் அறம் இருந்தது. அப்படியாயிருந்த வேளாண் அறம், திட்டமிடப்பட்ட வணிகச் சுரண்டலுக்காகத் தேயிலை, புகையிலை, தைலமரம், உடை மரம், ஒட்டு வீரிய ரகம் என மொத்தமாகத் தன் உருவிழக்கத் துவங்கியது நம்மை ஆண்ட வெள்ளையர்களால்.

“இரண்டாம் உலகப் போருக்குப் பின், பல பன்னாட்டு நிறுவனங்களில் விற்காத வெடிகுண்டுகளின் மூலப்பொருள்களான அம்மோனியா முதலான ரசாயனக் கலவைகளை விற்றுப் பணமாக்க அதே ரசாயனம் மூலம் உற்பத்தியைப் பெருக்கலாம் என்ற கருத்தாக்கத்தை வேளாண் உலகில் உலகெங்கும் விதைத்த காலம் தொட்டு இந்தியாவின் வேளாண்மை கடன்காரத் தொழிலாயிற்று” என்பதைத் தமிழகத்தில் முதலில் உணர்த்தியவர் நம்மாழ்வார்.

கருக்கொண்ட புரட்சியாளர்

அரசுப் பணியை விட்டுவிட்டு, களக்காட்டில் அரசு சாரா நிறுவனம் ஒன்றில் சில காலம் பணியாற்றிய போதே, இடுபொருள் முதலீட்டில் விவசாயிகள் கடன்படுவதைப் புரிந்துகொண்டார். அதேசமயம், அவர் படித்த ஜப்பானிய இயற்கை வேளாண் விஞ்ஞானி மசானபு ஃபுகோகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ நூல், ‘நாம் எதை இழக்கிறோம்? நாம் எங்கு சிக்குண்டிருக்கிறோம்? இயற்கையை விட்டு நம் வேளாண்மை எப்படி விலகுகிறது? பகுத்தறிவு நம் நுண்ணறிவை எப்படிச் சிதைக்கிறது’ என்பதை யெல்லாம் அவருக்கு இன்னும் ஆழமாகப் புரிய வைத்தது.

உசுப்பிய விடுகதை

பிறகு, களக்காட்டிலிருந்து புறப்பட்டு அங்கட்டி பகுதிக்குச் சென்றார். மேட்டூர் அணையால் இடம் பெயர்ந்து, அங்கட்டி பகுதியில் வறுமையில் உழன்று கொண்டிருந்த விவசாயிகளுடன் வாழ்ந்தார். அப் போது, அவரை ஒரு விடுகதை உசுப்பியது என அடிக்கடி அவர் பேச்சில் சொல்வதுண்டு. “பழமாகிக் காயாவது எது? காயாகிப் பூவாவது எது?” என்பதுதான் அவர் சொல்லும் அந்த விடுகதை. பழமாகிக் காயாவது என்பது எலுமிச்சைதான். பழம் எப்படிக் காயானது? எலுமிச்சையில் அதிகமாக உப்பைப் போட்டு ஊறுகாய் செய்கிறோம் இல்லையா, அதுதான் பழம் காயாவது. அப்படியானால், உப்புதான் மக்கவிடாமல் தடுக்கிறது என்பது அவர் மனதில் அடிக்கடி ஓட ஆரம்பித்தது. இந்த ரசாயன உப்பை ஏராளமாக மண்ணில் கொட்டினால், களையெல்லாம் எப்படி மக்கி உரமாகும்? இயல்பாக உருவாக வேண்டிய மக்கு உரத்தை இந்த உர உப்பு எப்படித் தடுத்து, விவசாயியை இடுபொருள் செலவால் கடன்பட வைக்கிறது என்பதை மசானபு ஃபுகோகா சொன்னதைத் தன் நுண்ணறிவால் புரிந்துகொண்டார் நம்மாழ்வார்.

அன்றிலிருந்து “இப்படி உரமிடுவது மண்ணை எப்படிப் பாழாக்குகிறது? அதிக நீர்த் தேவையை உண்டாக்கி மறைநீரை (வர்ச்சுவல் வாட்டர்) அதிகரித்து, விவசாயத்தை எப்படிச் சிக்கலில் கொண்டுபோய் விடுகிறது” என்று விளக்க ஆரம்பித்தார்.

பூச்சிமருந்தா; பூச்சிக்கொல்லியா?

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப் பொருளில் மெய்ப்பொருள் தேடியவர் நம்மாழ்வார். ஸ்டாக்ஹோம் நகரில் நடந்த கருத்தரங்கிலும் பயிற்சிப் பட்டறையிலும் பயின்ற நம்மாழ்வார், அங்கு வந்த வெள்ளைக்கார ஆசிரியை “பெஸ்டிசைடுக்கு தமிழில் என்ன? ” எனக் கேட்க, “பூச்சிமருந்து” என்று சொல்ல, “ஹெர்பிசைடுன்னா களைக்கொல்லி, சூசைடுன்னா தன்னைத்தானே கொல்வது, ஆனால் பெஸ்டிசைடை மட்டும் பூச்சிக்கொல்லின்னு சொல்லாமல், பூச்சிமருந்து என்கிறீர்களே?” என அவர் கேட்டாராம். ஒரு கொலை கார வஸ்துவை மருந்து என்ற பெயரில் ஏமாற்றி, நம் ஏழை விவசாயிகளிடம் சந்தை வித்திருக்கிறது என்பதை நம்மாழ்வார் தெளிவாக உணர்ந்துகொண்டார். அன்று முதல் “அது பூச்சிகொல்லி விஷமடா... மருந்து அல்ல” என விவசாயிகளிடம் தெளிவுபடுத்த ஆரம்பித்தார் நம்மாழ்வார்.

தன்னை ‘லோ எக்ஸ்டெர்னல் இன்புட் ஸஸ்டெய்னபில் அக்ரிகல்ச்சர்’ அமைப்பில் ஈடுபடுத்திக்கொண்டு, பல காலம் கிராமம் கிராமமாகத் தன் நுண்ணறிவில் பெற்றதையும், உலக அரங்கில் ஃபுகோகாவிடமும் ரேச்சல் கார்சனிடமும் நூலறிவில் பெற்றதையும், விளிம்பு நிலையில் இருந்த படிப்பறிவில்லாத விவசாயியும் புரிந்துகொள்ளும்படி எளிய மொழியில் பேசி விளக்கியது நம்மாழ்வாரின் தனித்துவமான வெற்றி எனலாம்.

குரு பெர்னார்ட்

பெல்ஜியம் நாட்டு பெர்னார்டைத்தான் அவர் தன்னுடைய இயற்கை விவசாயத்தின் குருவாகப் பலமுறை சொல்வார். பெர்னார்ட் இன்றும் ஆரோவில்லில் வாழும் இயற்கை வேளாண் வித்தகர். தரிசாகவும், நீர் இருப்பே இல்லாமலும் இருந்த கல் நிறைந்த நிலம் பெர்னார்டுக்கு வழங்கப்பட்டது. அவரோ, செலவே இல்லாமல், இயற்கையை முதலீடாக வைத்தே அந்த நிலத்தைச் சோலையாக மாற்றிக் காட்டினார். பயிர் சுழற்சியையும் பல்லுயிர்ப் பாதுகாப்பையும் உறுதிசெய்வது தனிப் பயிர் சாகுபடியில் இல்லை; கூட்டுப் பயிராய், அணி நிழல்காடாகத் தன் நிலப்பரப்பை அமைப்பதில்தான் இருக்கிறது என்பதை அவரிடம் அறிந்துகொண்ட நம்மாழ்வார், தன் ஆசான் பெர்னார்டை ஒவ்வொரு பேச்சிலும் நினைவுகூர மறப்பதில்லை.

எதிர் யுத்தங்கள்

மரபணு மாற்றிய பயிர்களை இந்தியாவில் வேகமாகப் புகுத்த அரசு முனைந்தபோது, தமிழகத்தில் ஏராளமான விவசாயிகளைக் கைகோக்கச் செய்து, களம் இறக்கிய பசுமைப் போராளி நம்மாழ்வார். இன்னும் முழுமையாக ஆய்வுசெய்யப்படாமல், அறிவியல் தரவுகளைப் பாரபட்சமில்லாது நிறுவாமல், வணிகத்தில் கோலோச்சு வதற்காக நம் இந்திய மக்களைப் பலிகடாவாக்கும் மரபணுத் தொழில்நுட்பத்தைக் கடுமையாகவும் அறிவியல் பூர்வமாகவும் சாடியவர் அவர். இங்கி லாந்தின் செரிலினியின் சான்றுகளை, இந்த நிலத்து மாயாண்டிக்கும் புரியும்விதமாக கிராமம் கிராமமாக எடுத்துச்சொன்னது அவர் நிகழ்த்திய சத்தியாகிரகம். ‘பூவுலகின் நண்பர்கள்’ முதலான தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து, பாதுகாப்பான உணவுக் கூட்டமைப்பை உருவாக்கி, மரபணு மாற்றிய பயிர்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியதிலும் கடைசியில், முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பி.டி. கத்திரிக்குக் காலவரையற்ற தடை விதித்ததிலும் முக்கிய காரணமாக இருந்தவர் நம்மாழ்வார்.

இயற்கையில் லயித்தால் போதுமா?

வட இந்தியாவில் வந்தனா சிவா, கவிதா குருகந்தி, தேவேந்தர் சர்மா முதலான பசுமைப் போராளிகள் குரல் கொடுக்கும்போதெல்லாம், தமிழகத்தின் குரலாக ஒலித்தவர் நம்மாழ்வார். வேளாண் மீட்பும் சூழல் பாதுகாப்பும் வெறும் சத்துணவுத் தேடலிலும், குருவி, காகத்தின் குரல் சிலாகிப்பிலும் மட்டுமானதல்ல; சக மனிதர்களின் விடுதலையிலும்தான் சாத்தியம் என்பதை அடிக்கடி அறிவுறுத்தியவர் அவர். கீழவெண்மணி சாதியப் படுகொலையையும், அதற்கு ஆதிக்க சக்திகள் பெற்ற நீதிமன்ற விடுதலை வரிகளையும் வருத்தமுடன் அவர் விவசாயக் கூட்டங்களில் பேசுவது ஒரு சான்று.

உருவாக்கப்பட்ட படை

நம்மாழ்வாரால் உருவாக்கப்பட்டவர்கள், உத்வேக மடைந்தவர்கள், உணர்வுபெற்றவர்கள் ஏராளம். ஒரு நாள் பூம்புகார் கூட்டத்தில், ‘காட்டு யாணம்’ நெல்லை வழங்கி, “நீங்க ஏன் பழம் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் பணிகளைத் தொடர்ந்து செய்யக் கூடாது?” என கிரியேட் ‘நெல்’ஜெயராமனிடம், அவர் விதைத்த விதை இன்று அதே ‘நெல்’ஜெயராமன் 158 பாரம்பரிய ரகங்களை மீட்கவும் பாதுகாத்துப் பயிரிட்டுக் கொடுக்கவும் வழிவகுத்திருக்கிறது. எங்கள் ‘பூவுலகின் நண்பர்கள்’அமைப்பைத் தொடர்ந்து மரபணு மாற்றிய பயிர்களுக்கு எதிரான களத்தில் நிறுத்தியது, குப்பை உணவுக்கு எதிராகச் சிறுதானிய உணவை மீட்டெடுக்க வைத்து, உலகின் பல்வேறு மொழிகளில் உள்ள செய்திகளைத் தமிழில் மொழியாக்கம் செய்து பரப்பத் துணைநின்றது எல்லாம் நம்மாழ்வாரும் அவருடைய கருத்தாக்கமும்தான். நம்மாழ்வாரின் இறுதிச்சடங்கில் மண்ணை நேசிக்கும் விவசாயிகளின் கண்ணீர் மட்டும் நிறைந்திருக்கவில்லை. ஏராளமான இளைஞர் கூட்டம் தங்கள் ஆசானை இழந்த அழுகுரலுடன் அங்கே நிரம்பியிருந்தது. “எதையாவது செய்யணும், இந்த மண்ணை நேசித்து, சூழலைக் காக்கும் இயக்கத்தில் என் பங்கை நான் எப்படியாவது ஆற்ற வேண்டும்” என அந்த இளைஞர் கூட்டம் அங்குச் சூளுரைத்தது.

ரசாயனம் இல்லா விவசாயம், மருந்தில்லாத மருத்துவம், சுவரில்லாத கல்வி - இவைதான் மாற்றுலகை நிர்ணயிக்க அவர் சொன்ன சூத்திரம். நாம் வாழும் காலத்தின் காந்திகளில் அவரும் ஒருவர் என்றால், அது கூடுதல் இல்லை!

- சிவராமன், சித்தமருத்துவர், சமூக விமர்சகர் - தொடர்புக்கு: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்..

நன்றி: தி இந்து

Pin It

“நான் பேனா பிடித்திருக்காவிட்டால் கத்தி பிடித்திருப்பேன்!”- என்று சொன்னவர், மகாகவியும், நாடக மேதையும், நாவலாசிரியருமான மனித நேயர் விக்டர் ஹியூகோ. (1802-1885).

“விக்டர் ஹியூகோ எழுத்துலகின் அற்புதம்... அவர் இலக்கியங்கள் எல்லாம் வாழ்வின் அனுபவ விளக்கமேயாகும். சென்ற நூற்றாண்டின் அதி மனிதர் (Superman) விக்டர் ஹியூகோ” என்று குறிப்பிடுகிறார், அவரது ‘ஏழைபடும்பாடு நாவலைத் தமிழுக்குத் தந்த யோகி சுத்தானந்த பாரதியார்.

எங்கும் குண்டுமாரி பொழிய, வெடி மருந்தின் நெடி காற்றிலே பரவ, பிணமலை குவிய, இரத்தம் பெருகி ஓட, வீரர்களின் போர் வெறிக் குரல்களும், காயம் பட்டவர்களின் ஓலமும் ஒலிக்க, களத்தின் நடுவே இவரது குழந்தைப் பருவம் கூடாரங்களில் கழிந்தது. நெப்போலியனின் தளபதியாக இவர் தந்தை பணியாற்றியதுதான் அச்சூழலுக்குக் காரணம்.

ஆனால், ஹியூகோவின் இளம்பருவ இதயத்தில் கவிதைக் கனலே பற்றி எரிந்துகொண்டிருந்தது;

ஓர் இலக்கிய இதழையும் நடத்தினார். இவரது தந்தையோ இவரை அரசுப் பணியில் சேர்க்கவே விரும்பினார். இளம் கவி அதற்கு ஒப்பவில்லை. “உனக்குக் கவிதையே சோறு போடட்டும் போ!” என்று விரட்டிவிட்டார் தந்தை. கவிதைத் தேவி, கவிஞரைத் தனது வறுமைக் கரங்களால் வரவேற்றாள். செல்வமும், செல்வாக்கும் படைத்த குடும்பத்துப் பிள்ளை, கந்தலுடையுடன், கிடைத்த இடத்தில் படுத்துறங்கி, கிடைத்ததை உண்டு. பிச்சைக்காரன் போல் அலைய நேர்ந்தபோதும், கவிதை அவரைக் கைவிட்டுவிடவில்லை. அவர் எழுதிய 335 வரிகள் கொண்ட ஒரு நெடுங்கவிதை பிரஞ்சுக் கழகத்தினரால் பாராட்டப்பட்டு, பரிசும் பெற்று, அவரது வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. பிறகு திருமணம், குழந்தைகள், அவர்களின் மரணங்கள் என, வாழ்க்கை கொந்தளிப்பாக இருந்தாலும், ஓயாத படைப்பாற்றலால் ஹியூகோ பெரும் புகழ் பெற்றார். ஒரு நாளைக்கு 100 வரிக் கவிதை அல்லது 20 பக்க உரைநடையென வெள்ளம் போல் பெருகியது படைப்பு.

இவரது ‘ஹெர்நானி’ என்ற நாடகம் உலகப் புகழ்பெற்றது. ஆரம்பத்தில் முடியரசுவாதியாக இருந்த ஹியூகோ, பின்பு குடியரசுவாதியாக மாறினார். மக்கள் படும் துயரங்கள் கண்டு அவரது மனிதநேயம் எழுத்தில் சுடர்விடத் துவங்கியது. அதன் காரணமாகவே அவர் நாடு கடத்தப்பட்டார்!

ஆனால், அவரது எழுதுகோல் என்றும் வற்றியதே இல்லை. நூறு நூல்களுக்கு மேல் எழுதிக் குவித்தார். எங்கும் மன்னராட்சி நிலவிய காலத்தில், புரட்சி முளைவிடத் தொடங்கியிருந்த அந்த நெருக்கடியான சூழலில், அவரது எழுத்துக்கள் மேல்தட்டு வர்க்கத்தைத் தோலுரித்துக் காட்டின. அதன் காரணமாக எவ்வகைத் துயர்வரினும் அதை ஏற்கத் துணிந்து நின்றார். ஹியூகோவின் ‘இளிச்ச வாயன்’ (லோம் கிரி) என்ற நாவலில், க்விப்ளேன் என்ற அநாதை, பாராளுமன்றத்திற்குப்போய் பேசும் எரிமலைப் பேச்சின் ஒரு சிறு பகுதியைப் பாருங்கள்.

“குழந்தை குட்டி இருப்பவர்களே கேளுங்கள்! இந்த நாட்டில் கோடி அநாதைக் குழந்தைகள் பசியாலும் பனியாலும் வாடுகின்றன. நானே அப்படிப்பட்ட குழந்தையாயிருந்தேன். பிரபுத் துவமே, உன் காலடியில் நசுங்கிக் கிடக்கும் ஏழைகளைக் கண்டு இரங்க மாட்டாயா? உன் நெஞ்சம் கல்லா? உன் தங்கக் கால் ஏழையின் தலைமேல் அகம்பாவத்துடன் அழுந்தி நிற்கிறது!... பிரபுத்துவமே, அகம்பாவமே, அதிகாரச் செருக்கே, உன் சட்டக் கொடுமையை சௌத்வார்க் பாதாளச் சிறையில் சென்று பார்! புழுவினும் கேடாக மனிதனை நடத்துகிறாய் நீ! இருட் சிறை; ஈரத் தரை; கைகால் விலங்கு; ஏழைக் கிழவனொருவன் வயிற்றில் கருங்கல்... ஆ! அக் காட்சியைக் கண்டு என் மனம் வெடித்தது! மூச்சுவிடக் கூட முடியாமல் ஏழைகளின் மார்பில் இரும்புக் காலை வைத்து நசுக்கும் பிரபுத்துவமே, கேள்! தங்க மாளிகை கட்டிப் பொங்கும் பிரபுக்களே. ஒருவாய்ச் சோற்றிற்கு ஏழைகள் படும்பாட்டை நீங்கள் அறிவீர்களா? வயிற்றுக் கொடுமையால் பெண்கள் விபச்சாரச் சாக்கடையில் விழுந்து, இருபது வயதிலேயே உடல்நலம் இழந்து கிழவிகள் ஆகின்றனர். ஏழைப் பெண்கள் வயிற்றுக் கொடு மையால் மானத்தை விற்கின்றனர். சீமாட்டி களின் நாகரிக விபச்சாரமோ, சதைக் கொழுப் பால் அட்டூழியம் செய்கிறது. அதையும் என் கண்ணாரப் பார்த்தேன். உங்கள் மாளிகையில் நடக்கும் கொலைகளையும், காமக் களியாட்டங் களையும், கற்பழிவுகளையும் கண்டேன், கண்டேன்! உங்கள் சிற்றறைகளின் பெரிய பயங்கர இரகசி யங்கள் கண்டு குடல் நடுங்கினேன். ஆயிரம் ஏழைகள் வாழக்கூடிய இடத்தை வளைத்து ஒரு செல்வன் மாளிகை எழுப்புகிறான். அந்த மாளிகை அலங்கார - நாகரிக- பணக்கார- பாப- நரகமா யிருக்கிறதே!...

“அய்யோ! பசிக் கொடுமையால் அநாதைக் குழந்தைகள் மண்ணையும், கரியையும் உண்டு மாளுகின்றனர்... பிரபுக்களே உங்கள் சுகபோக லீலைகளுக்காக வரி கொடுப்பவர் யார் தெரியுமா? பரம ஏழைகள், பட்டினி கிடக்கும் ஏழைகள்! அவர்கள் சாவினால் நீங்கள் பிழைக்கிறீர்கள். கோடிப் பேரை வறியராக்கி நீங்கள் வளம் பெறுகிறீர்கள். கோடிப் பேரை அடிமைகளாக்கி நீங்கள் அதிகாரச் செருக்கின் மதங்கொண்டு திரிகிறீர்கள். என்ன? நாளெல்லாம் பாடுபடும் தொழிலாளியின் வேர்வைப் பணம், தொந்தி யாடாத சோம்பேறிச் செல்வனுக்கோ சேர்வது?... நீங்கள் சுத்தச் சுயநலச் செல்வச் சோம்பேறிகள்! நாட்டின் புல்லுருவிகள்! ஏழைகளின் சதையைப் பிழிந்து, கண்ணீரைக் குடிக்கும் அசுரப் பாம்புகள்!... செல்வர்களே இரங்குங்கள்! உங்களுக்கே நீங்கள் இரங்குங்கள்! பொது ஜனங்கள் விழித்துக் கொண்டு தமது உரிமையைப் பெறும் காலம் வருகிறது! அரியணைகள் ஆட்டம் கொடுக் கின்றன; முடிகள் சாய்கின்றன... சமுதாயக் கப்பல் உங்கள் அட்டூழியச் சுமையால் மூழ்கிக் கொண்டிருக்கிறது. நீங்களும் அதனோடு மூழ்க நேரிடும்; உஷார்!”

ஹியூகோவின் உள்ளத்தில் வெடித்துச் சீறிய எரிமலைக் குழம்பின் ஒரு சிறு பகுதிதான் இது! (இளிச்சவாயன் நாவலில்- தமிழாக்கம்- கவியோகி சுத்தானந்த பாரதியார்) இந்த அளவுக்கு வீரம் செறிந்தவராகத் திகழ்ந்தவர் ஹியூகோ. ஜனநாயகம் செழித்தோங்குவதாகவும், பேச்சுரிமை, எழுத்துரிமை கொடிகட்டிப் பறப்பதாகவும் சொல்லப்படுகிற இந்தப் புண்ணிய பாரதப் பாராளுமன்றத்தில் இப்படியொருவர் இன்று பேச முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்!

விக்டர் ஹியூகோவின் படைப்புகள் அமரத் துவம் வாய்ந்தவை. அனைத்து மொழிகளுக்கும் சென்று மக்கள் உள்ளங்களில் அழியா இடம் பெற்றவை. முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவையும் தமிழில் கிடைக்கக்கூடியவையும் மூன்று நாவல்கள் மட்டுமே. ஏழைபடும்பாடு (லா மிராப்லா –Les Miserable), இளிச்சவாயன் (லோம் கிரி). இவை இரண்டும் கவியோகி சுத்தானந்த பாரதியாரால் ஆவேச நடையில் மொழிபெயர்க்கப்பட்டு 1948இல் வெளிவந்தவை. இதே ஆண்டு ப.கோதண்டராமன் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளி வந்ததுதான் இந்த மரகதம், (நோத்ருதாம் தைபரி- The Hunch-back of Notre-dame). ஏழைபடும்பாடு- தனலெட்சுமி பதிப்பகத்தாலும் இளிச்சவாயன் வ.உ.சி. பதிப்பகத்தாலும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த மரகதம் ஓர் அசாத்தியமான கதை. பிரமிக்க வைக்கும் கட்டமைப்பும், அற்புதமான பாத்திரப் படைப்புகளும் கொண்டு, நெஞ்சை நெகிழ வைக்கும் கதை. ஒரு முறை படித்தால் போதும், வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது. உள்ளத்தை உலுக்கிவிடும். ஒரு மறு வாசிப்பிற் காகவும், நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தவும் நான் 65 ஆண்டுகள் தவித்திருக்க வேண்டி நேர்ந்ததை நான் சொல்லியே ஆகவேண்டும். 56 ஆண்டு களுக்கு முன் என்னிடம் தமிழ் படித்த மாணவச் செல்வர்கள் சிலர் (குறிப்பாக- குன்னத்தூர் பாலு) இன்னும் என்னைச் சந்திக்கும்போது ‘நோத்ருதாம் தை பரி’ கிடைத்ததா என்று விசாரிக்கவே செய் கிறார்கள். அவர்களுக்கு ‘லோம் கிரி’யும் தெரியும், ‘கொம்ப்ராஷிகோ’வும் தெரியும். அப்படி நினைவில் அழுத்தமாய்ப் பதிந்த கதை மரகதம். ‘மரகதம்’ ஒரு சிறந்த இலக்கியப் படைப்பு என்பதை எந்தப் பதிப்பாளருக்கு எப்படிச் சொல்லி விளங்க வைப்பது? அவர்கள் அந்த மூலப் பிரதியைத் தேடிப் பிடிக்க சிரமம் எடுத்துக் கொள்வார்களா என்ற தயக்கத்திலிருந்தேன். “நீங்கள் அவ்வளவு முக்கியம் என்று கருதினால் அதைத் தேடிப் பிடித்து புத்தகம் போட்டுவிடுவோம்” என்று நம்பிக்கை அளித்தனர் விழிகள் பதிப்பகத்தார். அவர்களுக்கு வாழ்த்து கூறத்தான் வேண்டும்.

அறுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அமர இலக்கியம் புதுவெளிச்சம் காண் பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். ஓர் ஆவேசப் புயல் இந்த மரகதம். குவாசி மோடா, எஸ்மரால்டா இரண்டும் அற்புதமான பாத்திரப் படைப்புகள். எஸ்மரால்டா என்ற பெயர் எமரால்ட் என்ற சொல்லிலிருந்து உருவாகி யிருக்க வேண்டும். எமரால்ட் என்பது பச்சைக்கல்; மரகதமணி, இந்தப் பாத்திரத்தைச் சுற்றியே கதை நிகழ்வதால் மொழி பெயர்ப்பாசிரியர் ‘மரகதம்’ என்று பெயர் சூட்டியிருக்க வேண்டும்.

பிரஞ்சு மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு வந்திருப்பது இதன் தனிச் சிறப்பு. இதைத் திரைப் படமாக்கிய ஹாலிவுட்காரர்கள், அந்தக் காலத்தில் தலைசிறந்த நடிகரையும், நடிகையையும் இந்த இரு பாத்திரங்களை ஏற்று நடிக்க வைத்தனர்.

1905ஆம் ஆண்டு முதல் 1997 வரை 10 திரைப் படங்கள், 5 தொலைக்காட்சித் தொடர்கள், 5 மேடை நாடகங்கள், 3 இசைக் கோவைகள், 12 இசை- நாடகங்கள், 5 பாலே நாட்டிய நாடகங்கள், 2 பிபிசி நாடகங்கள், 10 மொழிபெயர்ப்பு நூல்கள் உருவாக்கப்பட்டிருப்பது இந்த நாவலின் சிறப்பு. இது ஆங்கில மொழிப்பட்டியல். மற்ற ஐரோப்பிய மொழிகளில் என்னென்ன ஆக்கங்கள் ஏற்பட்டிருக் கின்றன என்பது தெரியவில்லை. ஆங்கிலத்தை விட அதிகமாக இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

1939ஆம் ஆண்டு, ‘ஆர்கேஓ ரேடியோ’ என்ற நிறுவனம் தயாரித்த The Hunch-back of Notre-dame - என்ற திரைப்படத்தில் ஹாலிவுட்டின் பிரபல குணசித்ர நடிகர் சார்லஸ் லஃப்டன் குவாசி மோடோவாகவும், தலைசிறந்த நடிகை மரீன் ஒஹாரா எஸ்மரால்டாவாகவும் நடித்திருந்தனர்.

பாரிஸ் நகர மாதாகோயிலைப் பெயர்த்து வந்து வைத்ததுபோல, ஹாலிவுட்டில், 125 அடி உயரமும், 150 அகலமும் கொண்ட ஒரு கோயில், சிற்ப வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது! இது கருப்பு-வெள்ளைப் படம். இன்னொரு கருப்பு-வெள்ளைப் படம் 1969இல் தயாரிக்கப்பட்டது. டிராகுலா, ஃபிராங்கன் ஸ்டைன் முதலிய பயங்கர பாத்திரங் களில் நடித்து வந்த லான் சேனி குவாசிமோடோ வாகவும், ருத்மில்லர் எஸ்மரால்டாவாகவும் நடித்திருந்தனர். பிரபல நடிகர் ஆன்டனி குவின் குவாசிமோடோவாகவும், அழகிய இத்தாலிய நடிகை கினா லோலோ பிரிஜிடா எஸ்மரால்டா வாகவும் நடித்திருந்த வண்ணப் படம் 1997இல் வெளிவந்தது. விக்டர் ஹியூகோ முதலில் இந்தக் கதையை நாட்டிய நாடகமாகத்தான் உருவாக்கி யிருந்தார். இதை அடியொற்றி ஒரு கார்ட்டூன் படத்தை வால்ட் டிஸ்னி நிறுவனம் 1996இல் உருவாக்கியது. மற்ற படங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. இதன் பாதிப்பில், மாதவன் இயக்கிய ‘மணியோசை’ என்ற திரைப்படத்தில் கல்யாண் குமாருக்கு குவாசிமோடோ வேடம் தரப்பட்டது. ஆனால், கதை வேறு. அண்மையில் வந்த பேரழகன் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இந்த வேடம் தரப்பட்டிருந்தது. அவரது வேடமும், நடிப்பும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. ஆனால், கதை வேறு.

நம்மைத் திகைக்க வைக்கும் குவாசிமோடோ என்னும் பாத்திரம் கற்பனை அன்று. ஹியூகோ படிக்கின்ற காலத்தில், அங்குப் பணியாற்றிய கோரமான உருவம் படைத்திருந்த அன்பு நெஞ்சம் கொண்ட ஒரு பணியாளின் உருவம் என்றும் அறிகிறோம். வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்: ஆரம்ப அத்தியாயங்களில் வரும் பெயர்கள் பற்றிக் கவலைப்பட வேண்டாம். பிரஞ்சு நாட்டின் பண் பாட்டுச் சூழலையும், இவர்களின் எளிமையையும், நகைச்சுவை உணர்வையும் சித்திரிக்க உருவாக்கப் பட்ட நிகழ்வுகள் அவை.

குவாசிமோடன், கவிஞர் கிரேங்குவார், ஜிப்சி எஸ்மரால்டா, அவளது அதிசய ஆடு திஜாலி, கேப்டர் பீபஸ், தேவாலயப் பாதிரியார் க்ளாத் பிரல்லோ, இவையே நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய பாத்திரங்கள்.

1831 ஜனவரி 14 அன்று. பாரிஸ் நகரில் இந்த நாவல் பிரசுரம் ஆயிற்று... 183 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தப் படைப்பு எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது? இந்தக் கதையின் அடிப்படையில் ஏன் இத்தகைய கலைப் படைப்புகள் வந்தன; வந்து கொண்டிருக்கின்றன? நமது நிகழ்கால வாழ் வோடு எந்த வகையிலும் ஒரு படைப்பு தொடர் பற்றுப் போகுமென்றால், அது எவ்வளவு மகத்தான காவியம் என்றாலும், அதன் சாவு தவிர்க்க முடியாதது... காலவெள்ளத்தில் அது காணாமல் போய்விடும். மரகதம்- நமது மன ஆழங்களுக்குள் சென்று அதன் இருண்ட பக்கங் களுக்கு மேல் வெளிச்சம் வீசுகிறது. காதல்- காமம்- அன்பு-அருள் ஆகியவற்றின் அடக்கமும், ஆவேசமும் வெளிப்படும் படைப்பு இது.

“கோட்டான் வானம்பாடியின் கூட்டுக்குள் செல்வதில்லை” என்ற குவாசிமோடோவின் வார்த்தைகள் நமக்குத் திகைப்பைத் தருகின்றன. என்ன பயங்கரமான உருவத்திற்குள்ளிருந்து எவ்வளவு பக்குவமான வார்த்தைகள்!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எல்லை உண்டு. அது வாழ்நிலையால் உருவானது; அல்லது உரு வாக்கிக் கொண்டது. அந்தந்த எல்லைகளின் விளிம்பை நோக்கிப் போவது படி கடத்தலுக்கான முயற்சி. அது ஆபத்தானது. படி தாண்டினால் கிடைப்பது சொர்க்கமோ, நரகமோ, எதுவானாலும் எல்லையில், விளிம்பில் நிற்பது ஓர் அக்கினிப் பரிட்சை... எல்லை கடத்தல் அக்கினிப் பிரவேசம்! அதில், ஒருவர் எரிந்து சாகலாம், அல்லது தாவிக் குதித்துக் கடக்கலாம். அல்லது பீனிக்ஸ் பறவை யாய்ச் சாம்பலிலிருந்து புத்துயிர் பெற்று மீட்சி பெறலாம். அது அந்தந்த மனிதனின் ஆளுமையைப் பொறுத்தது. ஆனால், எல்லைகளுக்கு உள்ளே, தள்ளி இருப்பது எப்போதும் பாதுகாப்பானது; ஆபத்துகள் இல்லாதது. அவ்வாறாயின், அந்த இருப்பு உப்புச் சப்பற்றது. அது வாழ்தல் அன்று; உயிரோடிருப்பது மட்டுமே. இங்கே முக்கிய பாத்திரங்கள் எல்லை கடக்கிறார்கள். இதுதான் கதை.

பயங்கரத் தோற்றம் கொண்ட குவாசி மோடன், கண்டவரைக் கிறங்க வைக்கும் ஆடல் அழகி எஸ்மரால்டா, கனவுகளில் மிதக்கும் பஞ்சைப் பராரியான கவிஞன் கிரேங்குவார், புகழ்பெற்ற தேவாலயக் கார்டினல் பாதிரி க்ளோத் பிரல்லோ இவர்கள் நால்வரும், ஆசைக் காற்றால் உந்தப்பட்டு எல்லை கடக்கிறார்கள். ஆண்கள் மூவரின் குவி மைய ஒளிப் புள்ளி எஸ்மரால்டா, தொட்டால் சுடும் புள்ளிச் சுடர் அது. பாதிரியார் முன் மண்டியிட்டுப் பாவ மன்னிப்புக் கேட்க வேண்டிய ஒருவர். பாதிரி யாராகவே இருந்துவிட்டால், அவர் யாரிடம் போவது? இன்னொரு பெரிய பாதிரியாரிடம்தான் போக வேண்டியிருக்கும். ஆனால், அந்த பிரல்லோ, ஒரு ஜிப்சிப் பெண்ணின் காலடியில் விழுந்து, தன் இதயத்தின் இருட்டைத் திறந்து காட்டி, கடவுளையே காறி உமிழ முற்படும் காமக் கனல் நம்மைத் திகைக்க வைக்கிறது. எல்லை கடக்கும் வெறியில், தாவிக் குதித்துத் தீயில் காலிடறி விழுந்த கதை இது. கல்கியின் சிவகாமியின் சபதத்தில் வரும் புத்த பிட்சு, நாகநந்தியடிகள், நடன நங்கை, சிவகாமியின் முன் நெஞ்சில் அறைந்துகொண்டு பேசும் காட்சி நினைவுக்கு வருகிறது.

பாவியாய்ப் போன பாதிரியாரின் நெஞ்சுக்குள் எஸ்மரால்டா, குரூரமான தோற்றம் கொண்ட குவாசிமோடனின் நெஞ்சுக் குள்ளும் அவளே, வறுமையில் வாடும் கவிஞனின் நெஞ்சுக்குள்ளும் அவளே. ஆனால், அவளுடைய நெஞ்சுக்குள்ளே மோசக்காரப் படைத் தலைவன் கப்பித்தான் பீபஸ். இவர்களிடையே நிகழும் மோதல், மோசடி, மோகத் தீ யாரை அழிக்கின்றன? எல்லாரையும்! அதுதான் சோகம்! உண்மையின் கசப்பு- இவர்கள் தாண்டிய எல்லைகள் தவிர்க்க வேண்டிய எல்லைகள்- மாய எல்லைகள். இதில் மோசடி காப்டன் பீபஸ் தவிர உணர்ச்சி மயமானவர்கள் தப்பவில்லை. எல்லை கடந்தவர்கள் எரிந்துபோன அக்கினிப் பிரவேச காவியம்தான் மரகதம்.

மரகதம் - விக்டர் ஹியூகோ

தமிழில்: ப. கோதண்டராமன்

வெளியீடு:

விழிகள் பதிப்பகம்,

8/எம். 139,7ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை-41,

பேசி: 9444265152 / 9444244017

விலை: ` 250/-

Pin It

ஏழு எட்டு ஆண்டுகள் இருக்கும், குளிர் நிறைந்த மாலைப் பொழுதொன்றில் தமுஎச நிகழ்வு ஒன்றிற்காக நானும் ஆதவன் தீட்சண்யாவும் ஓசூரில் தொழிலதிபர்களுள் ஒருவராக அறியப்பட்ட திரு.வசந்தசந்திரன் என்பவரைக் காணச் சென்றோம். அவரது அலுவலகத்தில் ஒரு போட்டோ மாட்டியிருந்தார். அதில் ஜி.நாராயணம்மாள் தனிநபர் சத்யாகிரகி என எழுதப்பட்டிருந்தது. அவர் குறித்து விசாரிக்க, தனது அத்தை எனத் தொடங்கி 1941இல் காந்தி தனிநபர் சத்யாகிரகப் போராட்டத்தைத் துவங்கினார். காந்தியிடம் அனுமதி பெற்று அத்தையும் ஊரில் சத்யாகிரகப் போராட்டத்தை ஊரில் நடத்தி சிறைப்பிடிக்கப்பட்டுச் சிறையில் தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் அறைந்திருக்கிறார்கள். காந்திக்கு இத் தகவல் அறிய வைஸ்ராய்க்கு கடிதம் எழுதி அந்த சப் இன்ஸ்பெக்டர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். அத்தைக்கு மூன்று மாத தண்டனை அல்லது அபதாரம் விதிக்கப்பட்டது. அபராத தொகைக்காக கோர்ட்டில் அத்தையின் தாலி ஏலத்திற்கு விடப்பட்டது. இந்தச் செய்தி காந்தியின் ஹரிஜன் பத்திரிகையில் வெளி வந்திருக்கு. அதனால் அத்தையைப் பார்க்க அப்போ நிறைய தோழர்கள் வந்து போவார்கள் எனக் கூறியவர் அப்பாவும் இராமநாதபுர ஜில்லாவில் விவசாய சங்கம் அமைத்துப் போராடியவர். சுதந்திரப் போராட்ட போராளி தான் எனக்கூறி ஒரு டைரியை எடுத்துக் காட்டினார்.

பக்கங்கள் மடங்கி எழுத்துக்கள் ஆங்காங்கே அழிந்த நிலையிலும் இருந்த தாளில் ஒரு சில பகுதியை வாசித்து அப்படியே விட்டுவிடாம சீக்கிரம் புத்தகமா கொண்டு வர முயற்சிக்கலாம் தோழர் எனக் கூறி எனக்குக் காட்டினார்.

எனக்குத் தெரிந்த, பாடபுத்தகங்கள், கேட்டறிந்த வரலாறு என்பதன் அர்த்தம் சிதறுண்டது. வரலாறு என்பது பெரும் தலைவர்களோடு மட்டும் சம்பந்தப் பட்டதல்ல சாமானியர்களுக்கும் முக்கிய பங்குண்டு என்பதை அறியத் துவங்கினேன்.

டைரியின் ஒரு பக்கத்தைத் திறந்து வாசிக்கத் துவங்கினேன். “நாங்கள் சிறை சென்ற சமயம் ஐரிஸ் பெண்ணை மணந்த ஆங்கிலேயர் சிறை சூப்பரிண்டெண்டாக இருந்தார். அப்பெண்மணி அயர்லாந்து சுதந்திரப்போரில் ஈடுபட்ட குடும்பத்தைச் சேர்ந்தவராம். அப்பெண்மணி தனது கணவரிடம் அரசியல் கைதி களைத் தொந்தரவு செய்தால் நான் விவாகரத்து செய்துகொண்டு போய் விடுவேன் என்று எச்சரித்தாராம். அதனால் அச்சமயம் திருச்சி சிறை எங்களுக்கு சுதந்திர உலகமாக இருந்தது. சிறையில் நல்ல தேகப்பயிற்சிகள் செய்து வந்தோம்.” என்ற பகுதியை வாசித்ததும் எதையோ கண்டடைந்ததைப்போல உடல் விழித்தது.

அன்றைய இரவு டைரியின் விரிந்த பக்கங்களும் எழுத்துக்களுமாகக் கனவில் ஓடிக்கொண்டிருந்தது. அன்றைய சிப்ட் முடிந்ததும் நேராக வசந்தசந்திரன் அலுவலகம் சென்று நான் அந்த டைரியை உங்கள் கம்ப்யூட்டரில் டைப் செய்து வைக்கவா என அனுமதி கேட்டேன். அவரும் உற்சாகமாகி ஒத்துக்கொண்டார். தினசரி அங்குச் சென்று கொஞ்சம் கொஞ்சமாக அடித்து முடித்தேன். அதன் பிறகு அவரது அலுவலகம் போகும் போதெல்லாம் கேட்டபடியே இருப்பேன். எப்ப சார் புத்தகம் கொண்டு வருவீங்கவென. ஊரில் அண்ணனும் அதற்கான முயற்சியில் இருக்கார் விரைவாக வந்துவிடும் என்ற பதிலோடு இருப்பார். நீண்ட காலங்கள் காத்திருக்கச் செய்து இப்பொழுதுதான் வந்திருக்கு பாவை பப்ளிகேசன் வெளியீடாக. புத்தகத்தைக் கையிலெடுத்த சமயம் உடல் சிலிர்த்து பழைய நாட்களின் நினைவில் கண்கள் பனித்தன.

“தொண்டர் பல்லாயிரவர் சூழ்ந்து நிற்கின்றோம் - என்ற பாடலின் கருத்தைக் கவனித்து அந்தத் தொண்டர் பல்லாயிரவர்களில் நாமும் ஒருவன் ஏன் ஆகக் கூடாது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதன் பின் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தேன்” எனக்கூறும் போராளி ஜி.ராமச்சந்திரன் மதுரையில் அன்னியத் துணி எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைசென்று ஆறுமாதக் கடுங்காவல் தண்டனையை அனுபவித்து, பின்னர் நிறைய சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டவராக இருந்தவர். 1942 ஆகஸ்டில் நிகழ்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரச்சாரப் போராட்டத்திலும் கலந்துகொண்டதால் போலிஸ் படை இவரது வீட்டிற்கு வந்தது.

“வீட்டைச் சோதனை செய்து பிரசுரங்கள் மற்றும் வெள்ளைப் பேப்பர்களை எடுத்துக்கொண்டு நீ எந்த ஊர், எங்கே வந்தாய் எனக் கேட்டனர். நான் உட்கார்ந்து பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். அதைக் கண்ட சிவகாசி சப் இன்ஸ்பெக்டர், “எஜமான் நின்று கொண்டிருக்கிறார், நீ உட்கார்ந்து பதில் சொல்லிக் கொண்டிருக்கிறாய்” என அடித்தான். நான், “பிரிட்டீஸ்காரன் பூட்ஸ் கால் நக்கும் உனக்கு மரியாதையா ராஸ்கல்?” என எழுந்தேன். பத்துபேர் சேர்ந்து என்னை அடித்தார்கள். கைது செய்திருப்பதாகக் கூறினார்கள். சட்டைப் பையில் வைத்திருந்த மற்ற தோழர்களின் விலாசங்களை வாயில் போட்டு மென்றுகொண்டேயிருந்தேன்.” எனக்கூறும் ராமச்சந்திரன் இதற்காக நிறைய இன்னல்களை அனுபவித்திருப்பதைப் படிக்க உடல் சிலிர்த்தது. தொடர்ந்து அலிப்புரம் சிறை சென்றிருக்கிறார். அங்கு கம்யூனிஸ்ட் தேச பக்தர்கள் சிறையில் அரசியல் வகுப்பு நடத்தியிருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்கள் வெறுமனே பஜனை பாடுவதும், காந்தியைப் போற்றுவதுமாய் இருந்ததால் சலிப்புற்றிருந்த ராமச்சந்திரன் அலிப்புரம் சிறையில் முழு கம்யூனிஸ்டாகவே மாறி பி.சீனிவாசராவைச் சந்தித்து அதன் பின் இராமநாதபுரம் ஜில்லாவில் விவசாய சங்கம் கட்டமைத்து விவசாயிகளுக்காக நிறைய போராட்டங்களை நடத்திச் சிறைசென்று வருகிறார்.

வாழ்வின் பெரும் காலம் சிறையிலும் தலைமறைவு வாழ்க்கையிலுமாகக் கடந்துகொண்டிருக்க 1950-இல் கைதான சம்பவத்தை ஒட்டி நிகழ்ந்ததிது. “சப் மாஜிஸ்ட்ரேட்டிடம் அரசியல் கைதியாக நடத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதற்கு, சப்மாஜிஸ்ட்ரேட் அரசியல் கைதியாக நடத்துவதற்குள்ள(செக்சன்) சட்ட விவரம் தெரியாது. நான் புதியவன் தேவகோட்டை ஜில்லா மாஜிஸ்ட்ரேட்டிடம் கேட்டுக்கொள்ளச் சொல்லுங்களென்று சொல்லி எனது வாரண்டில் ‘பயங்கர கம்யூனிஸ்ட்” என்று எழுதிவிட்டான். அதனால் ஸ்டேசனில் லாக்கப்பில் சட்டை போட்டுக் கொள்ள அனுமதிக்க மறுத்து விட்டார்கள். ‘பயங்கர கம்யூனிஸ்ட்’ என்று எழுதப்பட்ட விசயம் போலிஸ்க்கு பீதியை உண்டாக்கிவிட்டது. எனது கை விலங்கில் நீண்ட சங்கிலியைப் பூட்டி எந்நேரமும் பிடித்துக் கொண்டே நின்றனர்” என எழுதியுள்ளதை வாசிக்க சாமானியர்கள் பட்ட பாடு குறித்து எவ்விதப் பதிவும் அற்று ஏனோ தலைவர்களால் மட்டுமே சுதந்திரம் கிடைத்தது போல் வரலாறுகளைத் திரும்பத் திரும்ப புதிப்பித்துக்கொண்டே இருக்கிறார்களே என வலியோடு கடக்க வேண்டியிருந்தது.

இவரின் சுயசரிதையோடு இவரை அடிக்கடி தேடி அலைந்தபடியே இருக்கும் இவரது தாயார் ஒரு முறை இவரைக் கண்கள் வீங்க அடித்த போலிஸ் ஸ்டேசனுக்கு சென்று எவன் என் மகனைக் கைதுசெய்து அடித்து இம்சித்தது எனப் பெரும் சப்தம் போட்டது... தனிநபர் சத்யாகிரகம் துவங்கி, தொடர்ந்து சுதந்திர போராட்டங் களில் பங்கெடுத்த இவரது தமக்கை ஜி.நாராயணம்மாள், தன் குடும்பத்தாருக்குப் பிடிக்காது போனாலும் தன் கணவரின் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்த அவரது துணைவியாருமென மூன்று பெண்களின் வரலாறும் பதிவாகி இருப்பது இப்புத்தகத்தின் மிகச் சிறப்பு.

ஜனசக்தியில் இவர் எழுதிய கட்டுரைகளும், இவர் குறித்துத் தலைவர்களின் கட்டுரைகளும், மற்றும் தாயார் துணைவியார் எழுதிய கடிதங்கள் என முக்கிய ஆவணங் களாக உள்ளன.

விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த ஜி.இராமச்சந்திரனின் சுயசரிதை இப்பொழுதாவது வந்திருக்கென ஆறுதல்கொள்ளும் வேளையில் இவரைப் போன்று எத்தனையோ போராளிகள் எதையுமே பதிய வைக்காது வாய்வழிக்கதையாக மட்டுமே சொல்லி மறைந்திருக்கக்கூடும். எத்தனையோ வரலாறுகள் மண்ணோடு மண்ணாகக் கலந்திருக்கும் என்ற வருத்தமும் மேலோங்கியது...

விடுதலைப் போராளி ஜி.இராமச்சந்திரன்

தொகுப்பு: ஆர்.பாலச்சந்திரன்

வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ்

142, ஜானிஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600014

விலை: ` 80.00

Pin It

தமிழ் இலக்கிய வரலாறு சங்ககாலம் முதல் தொடங்குகிறது. சங்க காலம், சங்கம் மருவிய காலம், இடைக்காலம், பிற்காலம் எனத் தொடர் கிறது. இதில் பிற்காலம் என்பதும் தற்காலம் என்பதும் பாரதியையே முன்னிலைப்படுத்துகிறது.

இந்த 20ஆம் நூற்றாண்டைப் பாரதியின் யுகம் என்றும், பாரதியார் சகாப்தம் என்றும் கூறுவர். அவரது படைப்புகளே புதிய தமிழ் இலக்கியத் தடங்களாகத் திகழ்கின்றன; தெரிகின்றன. அவரைப் பற்றியும், அவரது படைப்புகள் பற்றியும் புதிய புதிய வெளியீடுகள் வந்து கொண்டிருக்கின்றன.

‘இலக்கியக் கோட்பாடுகள் நோக்கில் பாரதி படைப்புகள்’ என்னும் இந்நூல் 12 ஆய்வுக் கட்டுரை களின் தொகுப்பாகும். முனைவர் அ. பிச்சை மற்றும் முனைவர் பா. ஆனந்தகுமார் இதன் பதிப்பாசிரியர்கள். பாவை பப்ளிகேஷன்ஸ் இதனை வெளியிட்டுள்ளது.

திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் உள்ள பாரதியார் ஆய்வகம் நடத்திய கருத்தரங்கில் வாசித்த கட்டுரைகள் காற்றில் கலந்த பேரோசையாகி விடாமல் அவ்வப்போது அவற்றை நூல் ஆக்கம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வரிசையில் ஐந்தாவது தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.

“தமிழில் நவீன காலத்துக்குரிய தேசியம், மார்க்சியம், நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம் முதலான எந்தப் புதிய கருத்தியல் சார்ந்த உரை யாடலையும் நாம் பாரதியை முன்வைத்தே தொடங்க வேண்டியிருக்கிறது. பாரதி ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் தோன்றியிருந்தாலும் பழைய மரபுகளின் வேர்களை நோக்கியும், புதிய மரபுகளின் விழுதுகளை நோக்கியும் அவரது சிந்தனை பயணப்பட்டிருக்கிறது. இதன் காரண மாகப் பாரதியின் இலக்கியப் பிரதிகள் பன்முக வாசிப்பிற்கான சாத்தியங்களைப் பெற்றிருக் கின்றன. பாரதியின் படைப்புகளைப் பல்துறை சார்ந்த அணுகுமுறைகளின் அடிப்படையில் ஆராய்ந்த இந்நூல் இதற்குச் சான்றாக அமைந்துள்ளது” என்று பதிப்பாசிரியர்கள் தம் முன்னுரையில் கூறியுள்ளனர்.

முதல் கட்டுரை ‘தொன்மவியல் திறனாய்வு நோக்கில் பாரதியார் படைப்புக்கள்’- இதனை பேராசிரியர் க.பஞ்சாங்கம் எழுதியுள்ளார். பாரதி யார் எந்த நேரமும் தொன்மங்களைப் பேச்சோடும், வாழ்வோடும் பயன்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வைதீகக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்; இத் தொன்மங்களைக் குறித்துத் தம் சமகாலத்திற்கு ஏற்ற மதிப்பீடுகளைக் கொண்டிருந்தார் என அறிய முடிகிறது எனக் கட்டுரையாளர் குறிப்பிடு கிறார்.

அவருடைய குயில் பாட்டில் தொன்மம், கனவு, சடங்கு, கவித்துவம் ஆகிய நான்கும் மிகப் பெரிய மாயா உலகத்தைக் கட்டி எழுப்புவதைப் பார்க்க முடிகிறது. தொன்மம், கலைக் களஞ்சியம் போல் அமைந்து வினை புரியக் கூடியது என்றும், கூறுகின்றனர். குயில் பாட்டிற்கும், கண்ணன் பாட்டிற்கும் மிகப் பொருந்திப் போகிறது என்றும் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

இரண்டாம் கட்டுரையில் பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் குறியியல் பற்றி முனைவர் சி. சித்ரா ஆய்ந்துள்ளார். வடமொழியில் வியாசர் இயற்றிய மகாபாரதக் கதையில் வரும் பாஞ்சாலி, துரியோதனன் சபையில் செய்த சூளுரையை மையமாகக்கொண்டு பாரதியார் படைத்த குறுங் காவியமே பாஞ்சாலி சபதம் என்றும், இது அழைப்புச் சருக்கம், குதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகில் உரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என்னும் ஐந்து பகுதிகளாக அமைந்துள்ளது என்றும், பஞ்சாலி சபதத்தில் இடம்பெற்றுள்ள மாந்தர்களின் கூற்றுகள் வாயிலாகவும் கதைப் போக்கு வாயிலாகவும் குறியியலின் செயல்பாடு களையும் வகைகளையும் கண்டறிய முடிகிறது என்றும் ஆசிரியர் கூறியுள்ளார்.

பேராசிரியர் துரை. சீனிச்சாமி, பாரதியார் கவிதைகளை உளவியல் நோக்கில் ஆய்வு செய் துள்ளார். 1897ஆம் ஆண்டு எட்டயபுரம் மன்னருக்கு விண்ணப்பம் எழுதிய நாள் முதல் இறுதிவரை சுப்பிரமணிய பாரதியார் எழுதி யுள்ள கவிதைகளின் பொருண்மைகளை புறக் கருத்தியல், அக உளைச்சல் என்னும் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளார்.

‘கனவு’ எழுதிய நான்காண்டுகளுக்குப் பிறகு ‘குயில் பாட்டு’ எழுதப்பட்டுள்ளது. காமம், காதல், பெண்நிலை, சாதியம், வைதிகம், இசை, மனக்குழப்பம், புனிதப் பேரழகு, புதிர்மை ஆகிய பல்வேறு பொருண்மைக் கூறுகளைச் சிதறவிட்டு, அவற்றினூடாகத் தன்னை வைத்துக் காணும் ஒரு வேட்கை நிரப்பியாக உள்ளது. இழப்புணர்வு களை எல்லாம் ஒன்று திரட்டி ஓர் அழகுப் பிண்ட மாகக் குயில்பாட்டில் அமைத்துள்ளார் என்றும் ஆசிரியர் கூறுகிறார்.

‘உண்மையான கவிதை அருமையான திரவியம். அதனால் உலகம் சேமத்தை அடைகின்றது. எந்த நாட்டில் புதிய மகாகவி தோன்றுகிறானோ அந்த நாடு மகா பாக்கியம் உடையது. தமிழ் நாட்டிலே கவிதையின் புகழ் ஏறுக’ என்று பாரதியார்- கவிதையின் சிறப்பை பயனைச் சொல்கின்றார். ஆகவே, கவிதையும் கலையும் மக்களுக்காகவே- மனிதரின் வாழ்க்கைக்காகவே என்பது பாரதியின் கவிதையில் பயன்பாட்டுக் கொள்கையாகும் என்று ஆசிரியர் முடிகின்றார்.

இருத்தலியல் நோக்கில் பாரதியை ஆய்ந்தவர் முனைவர் சீ. சீமானம்பலம். இருத்தலியலும், நவீனத் துவமும் தம்முள் தொடர்பு கொண்டனவாகவே காணப்படுகின்றன; நவீனத்துவத்தின் கடைசிக் கோட்பாடாகக் கருதப்படும் இருத்தலியல், நவீனத் துவத்தின் முடிவாகவும் பின் நவீனத்துவத்தின் வரவுக்காகக் காத்திருந்த கடைசிக் கோட்பாடாகவும் குறிப்பிடப்படுகிறது.

பாரதியாரைச் செவ்வியல் கொள்கை நோக்கில் முனைவர் சாரதாம்பாள் மதிப்பிட்டுள்ளார். “எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன், தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்” என்று பாஞ்சாலி சபதம் முகவுரையில் பாரதியார் கூறுகிறார்.

செவ்வியல் இலக்கியங்களுக்குப் பின் தோன்றிய இலக்கியங்கள் தொன்மை, தலைமை, தற்சார் பின்மை போன்ற செவ்வியல் பண்புகளுக்கு இடம் கொடா. எனினும், பாரதியின் கவிதைகள் செவ் வியல் இலக்கியப் பண்புகளுக்கு இடம் கொடுத்து நிற்கின்றன என்று ஆசிரியர் கூறுகிறார்.

பெண்ணியம் பற்றி முனைவர் நாகநந்தினி, நவீனத்துவ நோக்கில் முனைவர் ந. இரத்தின குமார், நடப்பியல் நோக்கில் முனைவர் இரா. காமராசு, பாரதியின் கவிதையியல் பற்றி பேரா சிரியர் ப.மருதநாயகம், தலித்திய நோக்கில் அழகிய பெரியவன், மார்க்சிய நோக்கில் தேவ.பேரின்பன் ஆகியோரின் படைப்புகள் இந்நூலில் இடம் பெற்றுச் சிறப்புச் செய்கின்றன.

‘மகாகவி பாரதி இருபதாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் தமிழின் முற்போக்கு சகாப் தத்தைத் துவக்கி வைத்தவர் என்ற அளவில் அவரைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். அது தொடங்கி சமூக மாற்றத்துக்காகப் போராடுகிற அனைவருக்குமான தமிழ்ப்புலத்தின் தோற்று வாயே பாரதிதான்’ என்று தேவ. பேரின்பன் தம் மார்க்சிய நோக்கில் குறிப்பிட்டுள்ளார்.

‘இப்சனின் நாடகம் ஒன்றில் வரும் கதா பாத்திரம் உறுதியான கம்பீரமான மலையைக் குறை சொல்லக் காரணங்களைத் தேடுகிறது. கடைசியில் மலையைக் குறை சொல்ல ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து உரக்கக் கூவியது: ‘மலை எலிகளை உருவாக்கி விட்டது’.

பாரதியின் படைப்புகள் என்ற மாமேரு குறித்த ஆய்வுகள் எலிகளைத் தேடிச் சென்று விடக் கூடாது என்பதுதான் நமது வேண்டுகோள் ஆகும்’ என்று அறிஞர் தேவ.பேரின்பன் கட்டுரையை முடிக்கிறார். நமது வேண்டுகோளும் அதுதான்.

இலக்கியக் கோட்பாடுகள் நோக்கில் பாரதி படைப்புகள்

பதிப்பாசிரியர்கள்: முனைவர் அ. பிச்சை & முனைவர் பா. ஆனந்தகுமார்

வெளியீடு:

பாவை பப்ளிகேஷன்ஸ்,

142, ஜானி ஜான்கான் சாலை,

இராயப்பேட்டை,

சென்னை- 600 014.

விலை: ` 130/-

Pin It

உட்பிரிவுகள்