ஐம்பதுகளில், தமிழ்நாட்டில் சின்ன ஊர்களில் இருந்து பெரிய நகரங்கள் வரை... அங்கிருந்த உணவகங் களுக்கு சாதிப் பெயர் வைக்கப்பட்டிருந்தன. சாதிப் பெயர் என்றால்... செட்டியார் ஓட்டல், முதலியார் கபே, நாடார் மெஸ், என்று பெயர்கள் சூட்டப்பட வில்லை. அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் தமிழகத்தில் “பிராமணாள் ஓட்டல்” என்கிற சாதிப் பெயரில் உணவு விடுதிகள் இயங்கின. ‘பிராமணாள் ஓட்டல்’ என்கிற பெயர்ப் பலகை வைத்திருப்பதைப் பெரியார் எதிர்த்தார். தெருக்களில் ‘பார்ப்பன ஜாதியம்’ தலைவிரித்தாடுகிறது. நம்மவர்களுக்கு இது கண்டு ஆத்திரம் வரவில்லையே... என்று பெரியார் வருத்தப்பட்டார். பெயர்தானே... இதில் என்ன இருக்கிறது... இப்படி விட்டுவிடத் தயாரில்லை பெரியார்.

அரசாங்கத்திற்கும் ஆளுநருக்கும் பெரியார் கடிதம் எழுதினார். ஓட்டல் நடத்த அரசு அனுமதி வழங்குகிற போது “சாதிப் பெயர் ஓட்டல் பெயர்ப் பலகையில் எழுதக்கூடாது” என்று நிபந்தனை விதிக்க வேண்டினார். அரசாங்கம் செவி சாய்க்க வில்லை. பெரியாரும் சும்மா இருக்கவில்லை. உணவகங்களில் பெயர்ப் பலகையில் உள்ள ‘பிராமணாள்’ எழுத்தழிப்புப் போராட்டத்திற்கு நாள் குறித்தார். போராட்டத்தில் கலந்துகொள்ள திராவிட கழகத் தோழர்களுக்கு அழைப்பு விடுத்தார். போராட்டத்தை ஒட்டிப் பெரியார் விடுதலை இதழில் எழுதிய அறிக்கையில்...

“அழிப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் அருள்கூர்ந்து எந்தவிதமான கலவரத்திற்கும் இடமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பது எனது பணிவான வேண்டு கோள். அது போலவே ஓட்டல் உரிமையாளர்களோடு வாக்குவாதத்திற்கும் கைகலப்பிற்கும் கண்டிப்பாக

இடம் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதை வணக்கத் துடன் தெரிவித்துக் கொள்கிறேன். போலீசு அதிகாரிகள் கைது செய்ய வந்தால் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் கைதாக இணங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்” என்று கேட்டுக் கொண்டார்.

பெரியாரின் இந்த நியாயமான போராட்டத்தை மறுக்க இயலாத வைதீகர்கள் வித்யாசமான விளக்கம் சொன்னார்கள். “பிராமணாள்” என்கிற வார்த்தை சாதியைக் குறிக்க எழுதவில்லை எனவும்... மரக்கறி உணவு அதாவது சைவ உணவு மட்டுமே இங்கே உண்டு என்பதைத் தெரிவிக்கப் போடப்பட்டது... என்றார்கள்.

பெரியார் இதனைக் கண்டித்து மறுப்பு அறிக்கை விடுத்தார்.

“அவர்கள் சொல்வது உண்மையாய் இருக்கும் பட்சத்தில் மரக்கறி பதார்த்தங்கள் ஓட்டல்” என்று போட்டுக் கொள்ளட்டும்” என்றார்.

இந்த விசயத்தில் ஒரு விசித்திரமான சங்கதி என்னவென்றால்... “பிராமணாள்” அழிப்பு வேண்டு கோளை ராஜாஜி எதிர்த்திருக்கின்றார். அதாவது அவரது எதிர்ப்புக்குரலும் மரக்கறி உணவு பற்றிய மையக் கருத்தாக இருந்திருக்கிறது. இதனை மீண்டும் எடுத்துக் காட்டிய பெரியார், “பிராமணாள் என்றால் மரக்கறி உணவை நன்றாகச் சமைக்கிறவன், நல்ல ருசியாக தயாரிப்பவன் என்று அர்த்தம் என்பதாக நொண்டிச் சமாதானம் சொல்கிறார் நமது ஆச்சாரியார். சரி நன்றாகச் சமைக்கிறான் சைவ உணவு இங்குக் கிடைக்கும் என்று போட்டுக் கொள். சாதிப் பெயரை சாக்குப் போக்குச் சொல்லிப் போடாதே. அது தவறு.” என்று பெரியார் விடுதலையில் எழுதினார்.

இந்திய நாட்டின் கவர்னர் ஜெனரல் பதவி வகித்தவர்... சென்னை மாநில பிரதமராக இருந்தவர்... சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்... காந்திஜியின் சம்பந்தி... இவ்வளவு சிறப்பிற்குரியவரின் மனோநிலை இந்த விசயத்தில் பிற்போக்குத்தனமாகவே இருந்திருக் கிறது.

தமிழ்நாடு முழுவதும் இந்தப் போராட்ட விளக்கக் கூட்டம் நடத்த முடிவானது. பெரியார் சேலத்தில் பேசு வதற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அதனைப் பெரியார் விடுதலையில் இப்படி எழுதினார்...

“இரண்டு நாட்களுக்கு முன்பு நான் ஏற்காட்டு மலையில் இருந்தபோது சேலத்து ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினர் கடிதம் ஒன்றைத் தந்தார்கள். அதைப் படித்துப் பார்த்தேன். என்னுடைய வேண்டுகோளைப் பத்திரிகைகளில் பார்த்தவுடன் உடனடியாக அவசரக் கூட்டம்போட்டு சேலத்தில் இருக்கிற எல்லா ஓட்டல் காரர்களும் ‘பிராமணாள்’ வார்த்தையை அழிப்பதற்கு முனைந்து விட்டார்கள். எனவே சேலத்தில் ஓட்டலில் அழிப்புபற்றிப் பேச வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது.”

பெரியாரின் முயற்சிக்குக் கைமேல் பலன் கிடைத்தது. ஆனால் சென்னை ஓட்டல்காரர்கள் அழிக்க முன்வராமல் முரண்டு பிடித்தார்கள். பெரியார் மீண்டும் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தார். இந்த விசயத்தை அவர் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வில்லை. இந்தப் போராட்டத்திற்காகத் தஞ்சையில் இருந்து “சாதி ஒழிப்புப் பிரச்சாரப் படை” என்று உருவாகி சென்னை நோக்கி வந்தது. பெரியார் இந்தப் படையைத் திண்டிவனத்தில் வரவேற்றுப் பேசினார்.

சென்னையில் ‘பிராமணாள்’ பெயர்ப் பலகைகள் உள்ள ஓட்டல்களில் மறியல் நடைபெற்றது. எல்லா ஓட்டல் உரிமையாளர்களும் ‘பிராமணாளை’ அழித் தார்கள். திருவல்லிக்கேணி முரளி பிராமணாள் கபே உரிமையாளர் மட்டும் வீம்போடு மறுத்தார். பெரி யாரின் தொண்டர்கள் இந்தக் கடையை இடைவிடாது மறியல் நடத்திக் கைதானார்கள். ஒரு கட்டத்தில் ஓட்டல் உரிமையாளர் ஓட்டல் பெயரை ஓசையின்றி மாற்றிவிட்டார். முரளி பிராமணாள் கபே என்பது முரளீஸ் அய்டியல் காபி சாப்பாடு ஓட்டல் என்றானது.

இன்று தமிழகத்தில் எங்கும் ஓட்டல் பெயர்ப் பலகைகளில் பிராமணாள் பெயர் இல்லை. ஆனால் ஊர் ஊருக்கு “அய்யங்கார் பேக்கரி” என்கிற பெயரில் பேக்கரி கடை சத்தமில்லாமல் நுழைந்திருப்பதைக் காணலாம்.

அதுமட்டுமல்ல... சாதிப் பெயரை ஒட்ட வைத்துக் கொள்ளாதவர்கள் பெண்கள் என்கிற பெருமை இருந்தது. இன்றைய தினம் தமிழ்த் திரையுலகில் சாதிப் பெயரைச் சேர்த்துக் கொள்ளும் பெண்களைப் பரவலாகப் பார்க்க முடிகிறது. நவ்யா நாயர், மேகா நாயர், லட்சுமி மேனன், பார்வதி ஓமன குட்டன், ஜனனி அய்யர், அபர்ணா பிள்ளை, மேக்னா நாயுடு, ஸ்வேதா மேனன், ஸ்வாதிசர்மா, இப்படிப் பட்டியல் நீள்கிறது.

நல்ல வேளை... இவர்களில் யாரும் தமிழ் நாட்டவர் இல்லை என்று திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்...!

Pin It

சிறந்த கல்வியாளரும் அறிவியல் அறிஞரு மான டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் அண்மையில் தம் வாழ்க்கை வரலாற்றை ‘ஆடு மாடு மேய்ப்பதில் தொடங்கி அண்ணா பல்கலை தாண்டி’ என்னும் பெயரில் நூலாக வெளியிட்டு உள்ளார். நூலின் பெயருக்கேற்ப, தமிழகத்தின் சிற்றூரிலிருந்து உலக நாடுகள் வரை நூல் விரி கிறது. ஆடு மாடு மேய்த்த ஒருவர், தம் உறுதியான குறிக்கோளோடும், தளராமுயற்சியாலும், உலையா உழைப்பாலும் உலகம் தெரிந்த விஞ்ஞானியாக வளர்ந்ததை விரிக்கும் நூல்தான் இந்நூல். ஆம், அண்ணா பல்கலையைத் தாண்டி அகிலத்தைக் காட்டும் நூல்தான் இது; இதில் எத்தனை எத்தனை யோ அரிய மனிதர்களையும், அரிய செய்திகளையும், சீரிய நிகழ்வுகளையும் ஆங்காங்கே காண்கிறோம்.

தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள், கல்வியாளர்கள் பேராசிரியர்கள், தலைவர்கள் ஆகியோரின் அரிய பணிகளையும் சில வேறுபட்ட தோற்றங்களையும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளவை சிந்தனைக்கு விருந்தாக உள்ளன; குறிப்பாகத் தமிழகத்தின் தொழில்நுட்பக் கல்வி வளர்ச்சி, பல்கலைக் கழக வளர்ச்சி, ஆகியவற்றோடு, அரசின் நிருவாகத் துறைக்கும் கல்வித்துறைக்குமிடையே நடந்த முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டும் நூலாகவும் இந்நூல் உள்ளது; நூலாசிரியர் சில உண்மை களையும், நாம் அறிந்திராத செய்திகளையும் இரகசியங்களையும் வெளிப்படையாகக் கூறிச் செல்வது நூலுக்குச் சுவையூட்டுகிறது; வாசகர் களை மேலும் படிக்கத் தூண்டுகிறது. சிந்திக்க வைக்கிறது; இவற்றின் மூலம் அறிவியல் அறிஞரின், கல்வியாளரின் திறமையையும், செயல்திறனையும் காட்டுவதோடு, கொள்கை உரம் கொண்ட ஒரு நேர்மையான அரிய மனிதரையும் அடையாளம் காட்டுகிறது.

நூலாசிரியர் தொழில்நுட்பக் கல்வி இயக்கு நராகவும், அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் இருந்தபோது மற்றவர்கள் போன போக்கில் செல்லாமல், எடுத்துக்காட்டாகப் புதுப் பாதையை அமைப்பவராக இருந்துள்ளார். இது தான் அவரது தனித்திறன். அந்தத் தனித்திறன் களில் சிலவற்றை நோக்கினாலேயே அவரைச் சரியாக உணரலாம். தமிழகத்தில் பெண்கள், குறிப்பாக மருத்துவக் கல்வியில் மட்டுமே ஆர்வம் காட்டுபவர்களாக இருந்துள்ளனர்; நாளும் வளரும் அறிவியல் உலகில் இது வேண்டாதது; முன்னேற்றம் இல்லாதது; இதனைத் தொலை நோக்கோடு உணர்ந்த நூலாசிரியர், பெண்கள் மனம் உவந்து கற்க நல்ல சூழலை ஏற்படுத்த, தூய்மையான உணவகங்கள், நல்ல விடுதிகள், நூல்நிலையம் ஆகியவற்றை ஏற்படுத்தி, கணிப் பொறி, மின்னியல் போன்ற பல புதுப் பட்டப் படிப்புகளை ஏற்படுத்திப் பெண்கள் கூடுதலாகக் கற்க வழியமைத்துள்ளார். இவற்றைப் போன்றே மாணவ-மாணவியர் புதியதாகக் கற்கப் பல துறைகளை உருவாக்கியுள்ளார். அவற்றிற்காகப் பல ஆய்வு மையங்களையும் அமைத்துள்ளார்.

படிக வளர்ச்சி மையம், உயிரியல் தொழில்நுட்ப மையம், கடல் வள மேலாண்மை மையம் போன்ற “புதியமையங்களை ஏற்படுத்தி அறிவியல் துறை களை விரிவாக்கித் தமிழகத்தை அறிவியல் மாநில மாக மாற்ற மூலவராக இருந்துள்ளார். புதிய துறைகளை மாணவ-மாணவியர்க்கு நன்கு கற்பிக்க, வெளிமாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளி லிருந்தும் சிறந்த வல்லுநர்களை அழைத்துக் கற்பிக்க வைத்துள்ளார். இந்தியாவிலேயே அச்சுத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பையும், இரப்பர் தொழில்நுட்பக் கல்வியையும் முதன்முதலாக உருவாக்கியுள்ளார். இவற்றிலும் அவர் முன்னோடி யாக இருந்துள்ளார். மதுரைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தபோதும் பல புதிய பாடத் திட்டங்களை ஏற்படுத்தியுள்ளார். பேராசிரியர் களுக்கும், பணியாளர்களுக்கும், இருப்பிடம், சாலை, குடிநீர் வசதி ஆகியவற்றை நன்றாக அமைத் துள்ளார்.

இந்நூலில் புதிய செய்திகளும், புதிய திட்டங் களும் நூலாசிரியரின் சிறந்த செயல்திறனும், தனியாற்றலும் ஆங்காங்கே வெளிப்பட்டாலும், நம்மைத் திகைக்க வைப்பதும், மலைக்க வைப்பதும் அவரது நேர்மையும், கொள்கையுறுதியும்தான். “வைரமுடைய நெஞ்சு வேணும் / அது வாழும் முறைமையடி பாப்பா” என்றார் பாரதியார். அந்த வைர நெஞ்சை இந்நூலில் காண்கிறோம். இந்நூல் சொல்லும் பல செய்திகளில் இரு செய்திகள் மிக முக்கியமானவை. அவை, அவரது நேர்மையும், உறுதியும்தான்; தலைவர்களானாலும், கல்வியாளர் களானாலும், அதிகாரிகளானாலும் இவையிரண்டும் இரு கண்கள் போன்றவை. இவையில்லாவிடில் சமுதாயம் பின்னடைந்துவிடும்; இருண்டுவிடும். இப்படிச் சமுதாயம் பின்னடையாது, இருண்டு விடாது வழிகாட்டுபவர்தான் அவர். அவரது நேர்மைக்கு இரு நிகழ்வுகளை நோக்கினாலேயே உண்மை விளங்கும்.

ஒரு நிகழ்வு, அவருடைய மனைவி பற்றியது; இன்னொன்று அவருடைய மகனைப் பற்றியது. தில்லியிலுள்ள இந்திராகாந்தி பல்கலைக்கழகத்தில் அவர் துணைவேந்தராக வருவதற்கு முன்பாகவே மனைவியார் ஆங்கிலமொழி விரிவுரையாளராக இருந்துள்ளார். அவர் அத்துறையில் துணைப் பேராசிரியருக்காக விண்ணப்பித்துள்ளார். அப் போது துணைவேந்தராக இருந்த குழந்தைசாமி அவரது விண்ணப்பத்தை ரத்து செய்துள்ளார். தேர்வுக்குழு அவரைத் தேர்ந்தெடுத்தாலும் (தகுதியின் பொருட்டு) துணைவேந்தரின் பரிந்துரையால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என்று பிறர் தவறாக எண்ணக்கூடும் என்பதால் அப்படிச் செய்துள்ளார். அவரது பதவிக்காலம் முடிந்தபின் தான் அவருடைய மனைவி பதவியுயர்வு பெற்று உள்ளார். அவருடைய மகன் அண்ணா பல்கலையில் B.E. படித்து தேர்வுக்குப் போவதற்கு முன்பு மஞ்சள் காமாலை நோய் வந்துவிட்டதால் வருகைப்பதிவு ((ATTENDANCE) குறைந்திருந்ததால் தேர்வு எழுது வதற்குத் தடை இருந்துள்ளது. இதனைத் தனி வகுப்பு மூலம் சரிசெய்து தேர்வுக்கு அனுமதி வழங்கும் விதி இருந்தும் துணைவேந்தர் அதற்கு இசையாது தன் மகனை அடுத்த ஆண்டு தேர்வு எழுதப் பணித்துள்ளார்.

தனி வகுப்பு மூலம் தேர்வுக்கு அனுமதிப்பது விதிப்படி சரியானதேயாகும். தவறானது அன்று. பலர்க்கு இந்த வாய்ப்பைப் பல்கலைக்கழகம் அளித்திருந்தும் அந்த இரண்டாம் பட்ச உதவியைக் கூடத்தாம் பதவியிலிருக்கும் போது செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார். இப்படியொரு நெறியை வழுவாது உறுதியாகப் பின்பற்றுபவர்தான்அவர். அவர் துணைவேந்தராக இருந்தபோது அதே பல்கலைக் கழகத்தில் அவருடைய மகனும் மகளும் படித்திருந்தாலும் அவர்களை ஒரு போதுகூடத் துணைவேந்தரின் காரில் ஏற்றிச் சென்ற தில்லை யாம். அவர்கள் பேருந்தில்தான் சென்று வந்து உள்ளார்கள். அவர் துணைவேந்தராக இருந்த போது காய்ச்சல், தலைவலி என்று ஒருநாள் கூடக் கால தாமதமாகவும் சென்றதில்லை; விடுப்பு எடுத்ததும் கிடையாதாம். பேராசிரியராக 25 ஆண்டுகள் இருந்தபோதும் ஒருநாள்கூட வகுப்புக்குக் கால தாமதமாகச் சென்றதில்லையாம்; இவ்வாறு எந்தத் துணைவேந்தர் இருப்பார்; துணைவேந்தர்கள் இக்காலத்தில் எப்படி எப்படியோ உள்ளார்கள்; ஆனால் இவரோ நேர்மையின் உச்சியில் சிகரமாகக் காட்சி அளிக்கிறார்;

அவரது கொள்கை உறுதியும் இது போன்றதே யாகும். அண்ணா பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர்களுக்கு வருகைப்பதிவு குறைவாக இருந்த தால் அவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை நிறுத்தி வைத்துள்ளார் துணைவேந்தர். மாணவர்கள் ஆளுநரிடம் முறையிட்டுள்ளார்கள்; ஆளுநரும் தம் செயலாளர் மூலம் தலித் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குமாறு துணைவேந்தரிடம் கூறியுள்ளனர். துணைவேந்தர் அதனைக் கேட்டு அசராது, அப்பிரச்சினையை என்னிடம் விட்டு விடுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். பின்னர் மாணவர்களை அழைத்துத் தக்க அறிவுரை கூறி, அவர்களின் தவற்றை அவர்கள் உணருமாறு செய்து அவர்கள் வகுப்புக்குச் சரியாக வந்த பின்னரே உதவித் தொகை வழங்கியுள்ளார். ஆளுநர் பரிந்துரைத்தார் என்பதற்காகச் சிறிதும் விட்டுக் கொடுக்காமல், உறுதியாக நின்று, மாண வர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து உறுதியளித்து வகுப்புக்கு வந்த பின்னர் வருகைப் பதிவு சரியாக இருந்த பின்புதான் உதவித்தொகை வழங்கியுள்ளார். இந்தத் துணிவும் உறுதியும் யாருக்கு வரும்?

இந்திரா தேசிய திறந்த நிலைப் பல்கலைக் கழகத் தற்காலிக விரிவுரையாளர்கள் ஒருமுறை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார்கள்; தீர்ப்பு வழங்குவதற்கு முன்பே நீதிபதியும், பின்னர் நடுவண் அரசின் கல்வியமைச்சரும் அவ்விரிவுரை யாளர்களை நிரந்தரப் பணியில் அமர்த்துமாறு பரிந்துரைக்கிறார்கள்; அதனை ஏற்காது விதி முறைப்படி செயல்பட்டுள்ளார். துணைவேந்தர், சட்டப்படி தம் வழக்குரைஞர் மூலம் உண்மையைக் கூறியதும் நீதிபதிகள் பின்வாங்கியுள்ளனர். இப்படிக் கொள்கையில் உறுதியாக நிற்பவர்தான் அவர்; ஒருமுறை, தமிழகத் தலைமைச் செயலாளர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு மாற்றுதல் செய்யப் பரிந்துரைக்கிறார். உயர்நிலைப் பள்ளிக்கும், கல்லூரிக்கும் எவ்வித வேறுபாடு உள்ளதோ, அந்த வேறுபாடு தொழில்நுட்பக் கல்லூரிக்கும், தொழில்நுட்பப் பல்கலைக்கும் இருப்பதால் கணித ஆசிரியரை மாற்றுதல் செய்வது சரியாகாது என்று மறுத்து விடுகிறார். இந்த உறுதிப்பாட்டின் உருவம் தான் அவர். இவைபோன்ற பல நிகழ்வுகள் இந் நூலில் உள்ளன; அவற்றை நூலில் காண வேண்டு கிறேன்.

நேர்மையும் கொள்கையுறுதியும் அவரிடம் எப்படி இருந்தனவோ அப்படி அவரிடம் அஞ்சா மையும் இருந்துள்ளது. நிருவாகத் தலைமையில் இருப்பவர்களுக்கு இது மிகமிக வேண்டும். அஞ்சாமை இல்லையென்றால் குழப்பம்தான் ஏற்படும். பாதையும் தவறிவிடும். பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்னும் பெயர் வெளிமாநிலத்தைச் சேர்ந்த வருக்கும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்க்கும் உச்சரிப்பதற்குக் கடினமாக இருந்துள்ளது. ஆங்கிலச் செய்தித்தாள்களும் முழுப் பெயரைக் குறிப்பிடாமல் PAUT என்று சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தன. நாளடைவில் ஊடகங்கள் AUT என்றும் குறிப் பிடலாமென அவர் அஞ்சியுள்ளார். அப்போது முதலமைச்சராக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், பேரறிஞர் எனக்குறிப்பிடாமல் அண்ணாவென அழைத்தால் அதனைப் பொறுக்கமாட்டார். அதனை மன்னிக்க முடியாத குற்றமாகக் கருதுவார். எம்.ஜி.ஆர் அவர்களும், ஏனைய அமைச்சர்களும் அதனை வெறுப்பார்கள் என நன்கு தெரிந்திருந்தும், பல்கலைக் கழகப் பெயர் சுருக்கமாக இருப்பதே ஏற்றது, சிறந்தது என்பதைத் தக்க காரணங்களோடு விளக்கிப் பல்கலைக்கழகப் பெயரைச் சுருக்கமாக அண்ணா பல்கலைக்கழகம் என்று முதலமைச்சர் இசை வோடு மாற்றியுள்ளார். முதலமைச்சர் என்ன கருதுவார் எனத் தயங்காமல், மயங்காமல் சரியான பெயரை அஞ்சாமையோடு நிலைநாட்டியுள்ளார்.

அவரது அஞ்சாமைக்கு இன்னொரு நிகழ் வையும் நோக்கலாம். தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக அவர் இருந்தபோது கவர்னரின் செயலாளர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தாங்கள் மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர். என்றார். அவரும் அதற்கு நன்றியென்று கூறி யுள்ளார். பின்னர் செயலாளர் அவரிடம் “நான் ஏற்கனவே திருச்சியிலுள்ள ஒருவரை (ஆளுநரின் பரிந்துரைப்படி) கோவைக்கு மாற்றுதல் குறித்துச் சொன்னேன். அது என்னாயிற்று”. எனக் கேட்டு உள்ளார். காரணமும் தேவையும் இல்லாமலும், காலியிடம் (Vacancy) இல்லாமலும் ஒருவரை மாற்றுதல் கூடாது என்பதில் உறுதியான கொள் கையுடைய இவர், ஆளுநர் பரிந்துரை என்று அறிந்திருந்தும் மிகத் துணிவாகக் “கோவையில் இடமில்லை; மாற்றுதல் செய்யாநிலையில் உள்ளேன். இதனை இனி விட்டுவிடுங்கள்” எனக் கூறியுள்ளார். செயலாளரும் அடுத்து இதனைப் பற்றி அவரிடம் பேசவில்லை; வேறொருவராக இருந்தால் புதிய பதவி கிடைக்கும்போது இதை ஏன் செய்யக் கூடா தென எண்ணி வேகமாக மாற்றுதல் (TRANSFER) செய்வர். ஆனால், இவரோ எந்த அதிகார பீடத் திற்கும் அஞ்சாதவராக இருந்துள்ளார். இது போன்ற நிகழ்வுகள் இந்நூலில் பல இடங்களில் உள்ளன.

மேலும் நூலாசிரியரைப் பற்றிப் பல அரிய செய்திகள் இந்நூலில் உள்ளன; இந்நூல் வெளி வராவிடில் இவற்றையெல்லாம் நம்மால் அறிய முடியாமலேயே போயிருக்கும். இந்தியப் பல்கலைக் கழகங்களின் மானிய குழுத் தலைவர் பதவி, வெளி நாட்டுத் தூதர் பதவி, கல்வியைமைச்சர் பதவி, அறிவியல் ஆலோசகர், கரக்பூர் ஐ.ஐ.டி.யின் இயக்குநர் பொறுப்பு போன்றவை எல்லாம் இவருக்கு வந்து உள்ளன. தனிப்பட்ட சில காரணங்களால் அவற்றை அவர் தவிர்த்துள்ளார். அறிவியல் அறிஞராகிய இவர், அறிவியல் கல்வியையும், அறிவியல் கண் ணோட்டத்தையும் வளர்ப்பதில் மிகுந்த ஈடுபாடு உடையவர். அதனால், சென்னையில் அறிவியல் நகரை உருவாக்கப் பெரிதும் முயன்றுள்ளார். ஆனால் ஆட்சி மாற்றத்தால் அது நிறைவேறாமல் போயுள்ளது. எனினும், பிர்லா கோளரங்கம், மாக்ஸ்முல்லர் பவன், அறிவியல் கண்காட்சி போன்றவை அமையக் காரணமாக இருந்துள்ளார்.

தொழில்நுட்பப் பல்கலையில் புதிய பாடத்திட்டங் களையும், புதிய துறைகளையும் உருவாக்கிய தோடு, அவர் பதவி வகிக்கும் இடங்களிலெல்லாம் மாணவர்களை ஆய்வுகளில் ஈடுபடுத்தியுள்ளார். இது குறிப்பிட்டுக் கூறத்தக்கதாகும். ஒருமுறை அவர் யுனெஸ்கோ உறுப்பினராக இருந்தபோது ஈரானில் நீர்வளத்துறையைக் குறித்துக் கருத் தரங்கு நடைபெற்றுள்ளது. அக்கருத்தரங்கில் பலர் ஆய்வுரை நிகழ்த்தியுள்ளனர். ஆனால், இவரது ஆய்வுரையைக் கேட்டவர்கள் அத்துறை இயக்கு நரிடத்தில் இதுபோன்ற பொழிவை இதுவரை கேட்டதில்லை என்றும், தம் பேச்சால் எங்கள் இதயங்களில் முழுமையாக இடம்பெற்றுள்ளார்” என்றும் பெருமையாகக் கூறியுள்ளனர். இது போன்று தமிழர்கள் பெருமிதம் கொள்ளத்தக்க பல அரிய குறிப்புகள் அவரைப் பற்றி உள்ளன. அவற்றை நூலில் பல இடங்களில் காணலாம்.

மொத்தத்தில் சுய வரலாற்று நூல்களில் இந் நூலுக்கு முக்கிய இடமுண்டு. நூலைப்பற்றி வேறுபட்ட ஓரிரு கருத்துகளைக் கூறித்தான் ஆகவேண்டும். டாக்டர் குழந்தைசாமி எழுதிக் கொடுத்த பக்கங்கள் நிறைந்த பெரிய நூலை வெட்டியும் குறைத்தும் திரு. ராணி மைந்தன் சரி (எடிட்) செய்துள்ளார். மீண்டும் நூலாசிரியர் திருத்தம் செய்துள்ளார். இப்படி இருமுறை அவர் ஈடுபட்டிருப்பதைக் காட்டிலும், அவரே அப் பணியைச் செய்து முடித்திருக்கலாம். ராணி மைந்தனின் பணி சிறப்பாக அமைந்துள்ளது. நூலும், குழந்தைசாமி அவர்களின் உரைநடை கொண்டதாகவே விரிந்துள்ளது. எனினும், சுய வரலாற்று நூலாக இருப்பதால், சுமை இருப்பினும் வேறொருவர் பங்கில்லாமல் அவரே எழுதியிருக்க வேண்டும். அதுவே ஏற்றது. மற்றும் நூலின் இறுதிப் பக்கங்களில் புகைப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில், சிலவற்றில், நாள் மாதம் ஆண்டுகள் மட்டுமே உள்ளன. இவற்றிலும் நாளையும், மாதத் தையும் சேர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மற்றும் புகைப்படங்களைக் கால வரிசைப்படுத்தி யிருக்க வேண்டும்; முக்கியத்துவம் குறித்துச் சில படங்களை முன்வரிசையில் அமைத்திருக்கலாம். இதில் முக்கியத்துவம் பார்ப்பது சரியன்று. அதாவது முக்கிய படங்களைக் காணாமல் போய்விடுவர் என்னும் அச்சத்தால் இது ஏற்பட்டிருக்கக் கூடும். அப்படிக் கருதக்கூடாது. 614 பக்கங்களைக் கொண்ட ஒரு பெரு நூலைப்படிப்பவர் புகைப் படங்களைக் காணாமல் போய்விடுவரா? ஆதலின் காலவரிசை அமைந்திருந்தால் வருங்கால ஆய்வுக்கு அது சரியாகப் பயன்படும்; அதுவே ஏற்றது; சிறந்தது. நூலில் எழுத்துப் பிழைகள் சிலவே உள்ளன. அவையும் இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எந்தத் தன் வரலாற்று நூலிலும் அமைந்திராத சொல்லடைவு இந்நூலில் அமைந்துள்ளது. இது பாராட்டத்தக்கது.

இந்நூல் தனிமனிதரின் வரலாறாக மட்டுமின்றி அறிவியல் கல்வி வரலாறாக, சமுதாய வரலாறாக, எதிர்காலத் தமிழகத்திற்கு வழி காட்டும் வரலாறாக உள்ளது. கல்வியாளர், அறிவியல் அறிஞர், சிறந்த ஆய்வாளர், நல்ல கவிஞர் என்று மட்டுமே அறிந்திருந்த நமக்கு, இந்நூல்தான் அவரை மிகச் சிறந்த திட்டவரையு நராகவும், பன்மொழி அறிஞராகவும் காட்டுகிறது. மொத்தத்தில் இந்நூல் ஒரு நன்னூல்; பாதை காட்டும் திசைகாட்டியும் ஆகும். மாதுளம் கனியைப் பிளந்தால் எண்ணற்ற இன்சுவை மணிகள் இருப்பதைப் போன்று, இந்நூலில் பற்பல அரிய செய்திகள் உள்ளன; அவை புதையலாக உள்ளது. அந்தப் புதையலை நீங்களும் காண வேண்டாமா? காணவேண்டும்.

Pin It

அங்காசங் காலம்

அங்காசம், அங்காசங்காலம், அங்காசக் காரன் ஆகிய சொற்கள் நம்மில் பலருக்குத் தெரிந் திருக்க வாய்ப்பில்லை. இவை மொரீசியஸில் வழக்கிலுள்ள தமிழ்ச் சொற்கள். அங்காசம் என்பது பிரெஞ்சு மொழிச் சொல். engagement என்ற ஆங்கிலச் சொல் தான் பிரெஞ்சு மொழி உச்சரிப்பில் அவ்வாறு ஒலிக்கப்படுகிறது. எங்கேஜ் என்பது ஒப்பந்தம் செய்துகொள்வதைக் குறிக்கிறது. அங்காசங் காலம் காலனி ஆட்சிக் காலத்தைக் குறிக்கிறது. அங்காசங் காரன் காலனி ஆட்சியில் ஒப்பந்தத் தொழிலாளர் களைக் குறிக்கும். மொரீசியஸ் தீவை டச்சுக் காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோர் கைப்பற்றிக் கரும்புத் தோட்டங்களை உருவாக்கினார்கள். கரும்பு உற்பத்திக்குத் தேவை யான உழைப்புச் சக்தியைப் பெறுவதற்காக இந்தியாவிலிருந்து ஏழை மக்களை வஞ்சித்து அழைத்துச் சென்றார்கள். அவர்களில் தமிழர், தெலுங்கர், மராட்டியர், போஜ்புரி இனத்தவர் ஆகியோர் அடங்குவர். அவர்களுக்கு இழைக்கப் பட்ட கொடுமைகள் பலப்பல. அவர்கள் அனு பவித்த இன்னல்கள் ஏராளம். ஒவ்வொரு கரும்பு எஸ்ட்டேட்டிலும் ஒரு மணி (bell) இருக்குமாம். அம்மணி காலையில் மூன்று மணிக்கே ஒலிக்கத் தொடங்கும். அப்போது ஆலைகளில் உள்ள தொழிலாளர்கள் வேலையைத் தொடங்குவார்கள்.

நான்கு மணிக்கு வருகைப் பதிவேட்டில் பணிக்கு வந்தவர்களையும் வராதவர்களையும் பதிவு செய் வார்கள். மாலையிலும் வருகையைப் பதிவு செய் வார்கள். 4.15 மணிக்கு (காலை) வீட்டிலிருந்து வரும் தொழிலாளர்கள் வேலையைத் தொடங்கு வார்கள். சிர்தார் யார் யாருக்கு என்னென்ன வேலை என்பதை ஒதுக்கித் தருவார். காலை 10.00 மணிக்கு உணவு, மறுபடியும் 11 மணிக்கு வேலை தொடங்கி மாலை 5 அல்லது 6 மணி வரை தொடரும். அதற்குப் பிறகு தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களை (புல்) சேகரித்துக் கொண்டு வீடு திரும்புவர். வயலில் வேலை செய்பவர்களுக்குக் கடினமான வேலையும், மில்லில் வேலை செய்பவர்களுக்கு 17 மணி நேர நீண்ட வேலையும் இருக்கும். வேலைக்கு வராதவர்களுக்குச் சம்பளம் இல்லை. சொல்லாமல், அனுமதியில்லாமல் வராதவர்களுக்குத் தண்டனை உண்டு. தொழிலாளர்கள் கூலிகள் என்றே அழைக்கப் பட்டனர். அவர்கள் தங்கள் பண்பாட்டைத் தக்க வைக்க அரும்பாடுபட்டனர்.

தமிழகக் கிராமங்களி லிருந்த வாழ்க்கை நடைமுறைகளையே அங்கும் பின்பற்றினார்கள். அவர்களது குடும்ப உறவுகள், மரபுகள், வாழ்க்கை மதிப்பீடுகள் ஆகியவை அந்நியச் சூழலில் வாழ்வை எதிர்கொள்ளத் துணை புரிந்தன. கோவில்களைக் கட்டிக் கொள்ளவும், திருவிழாக் களைக் கொண்டாடவும் காலனி ஆட்சியாளர் தடைவிதிக்கவில்லை. தொழிலாளர்கள் காலனி ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளையும், சுண்டல் களையும் பல முறைகளில் எதிர்த்தனர். 1925 வாக்கில் தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து அழைத்துச் செல்வது நிறுத்தப்பட்டது. தொழி லாளர் ஒப்பந்தமுறை இத்துடன் முடிவுக்கு வந்தது. 1875 வாக்கில் சர்க்கரை ஆலைகளில் இருந்த 40,000 குழந்தைகளில் சுமார் 1000 குழந்தைகளே கல்வி கற்றனர். மற்ற குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்தியத் தொழிலாளர் களுக்குக் கல்வி அறிவு அவ்வளவாக அளிக்கப் படவில்லை. இந்தியத் தொழிலாளர்களுக்குக் கல்வி அறிவு அவ்வளவாக இல்லாததால் தொழி லாளர் அனுபவித்த கொடுமைகளும் இன்னல்களும் அவர்களாலேயே வரலாறாக எழுதப்படவில்லை; படைப்புகளாகவும் வெளிவரவில்லை.

மொரீசியஸ் நாடு விடுதலை பெற்ற பிறகு இந்தியர்களின் கல்வி வாய்ப்பு பெருகிற்று. குறிப் பாக மொழிக் கல்விக்குச் சிறப்பான இடம் அளிக்கப் பட்டு இந்திய மொழிகளைக் கற்க வாய்ப்புகள் பெருமளவில் ஏற்பட்டன. இந்தியாவிற்கே வந்து மொழிகளைக் கற்கவும், கல்வி பயிலவும் வசதிகள் மேம்பட்டன. அவ்வாறு கல்வி கற்றவர்களுள் டாக்டர் பொன். திருமலைச் செட்டியும் ஒருவர்.

நூலாசிரியர் திருமலைச்செட்டி

பொன்.திருமலைச்செட்டி மோகாவிலுள்ள மகாத்மாகாந்தி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் ஆகிய மூன்று மொழிகளையும் நன்கு கற்று அவற்றில் திறமையாக உரையாட வல்லவர். மொரீசி யசில் தமிழ்க் கல்வியையும், பண்பாட்டையும் பரப்புவதில் ஆர்வமும், செயல் திறமும் மிக்கவர். எல்லோரிடமும் இனிமையாகப் பழகக் கூடியவர். பேராசிரியர் அருணை.பாலறாவாயன் திருமலைச் செட்டி அவர்களைப் பற்றிக் கூறுகையில்

“என் அன்பு இலயோலா மாணவர்

மொரீசியசில் முக்கியமானவர்

அந்தத் தித்திப்புத் தீவின்

உப்புக் கரிக்காத காற்றை

உள்ளுக்கு வாங்கியவர்

உயர்தமிழில் ஓங்கியவர்

அன்னைத் தமிழும்

சென்னைத் தமிழும்

நன்றாக அறிந்தவர்!”

என்று புகழ்ந்துரைத்துள்ளார். திருமலைச் செட்டி அவ்வப்போது தமிழ்க் கவிதைகளையும், நாடகங் களையும் படைத்து வந்துள்ளார். அவை யாவும் மொரீசியஸ் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பான இடம்பெறுகின்றன. திருமலைச்செட்டி எண்பதுகளிலிருந்து அவ்வப்போது எழுதிய நாடகங்கள் ஏழினைத் தேர்வு செய்து 2007-இல் வெளியிட்டுள்ளார். இவ்வேழு நாடகங்களும் அந்நாட்டில் முதல் பரிசினைப் பெற்றவை. இத் தொகுப்பில் உள்ள நாடகங்கள் பின்வருமாறு:

1.            நானும் மனிதன்

2.            அமைதிக்கோர் இடம்

3.            அவன் வருகைக்காக

4.            ஆலெ ஊதுலெ

5.            கண்ணீர்த்துளி

6.            கொந்தளிக்கும் கடலிலே

7.            வட்டியோடு வருமா?

8.            அந்நாடகங்களைப் பற்றிய மதிப்பீடு இக்கட்டுரையில் இடம்பெறுகின்றது.

நாங்க மனுஷங்கடா!

‘நானும் மனிதன்’ என்ற நாடகம் பத்தொன் பதாம் நூற்றாண்டில் அங்காசங் காலத்தில் நடந்த சம்பவத்தைக் கருவாகக் கொண்டது. ‘தொழி லாளிங்க தலை தூக்க வேணும்; அவங்களையும் வெள்ளைக்காரர்கள் மதிக்க வேண்டும்’ என்பது தான் கதைக்கரு. சுப்பையா என்ற தொழிலாளியை ரெனெ என்ற வெள்ளையன் வசவுச் சொற்களால் திட்டிவிடுகிறான். அவனை மட்டுமல்லாமல் அவனது தாயான காமாட்சியையும் வாய்க்கு வந்தவாறு திட்டுகிறான். அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சுப்பையா ரெனெவை கை நீட்டி அறைந்துவிடுகிறான். ரெனெவும் அவனது சக கரும்புத் தோட்ட முதலாளிகளும் சுப்பை யாவைத் தேடிச் சுட்டுக் கொன்று விடுகின்றனர். இது தான் கதை. ராவுல், ரெனெ, ரொபர், இவொன் ஆகிய பாத்திரங்கள் முதல் காட்சியில் வந்து தொழிலாளிகளுக்கெதிராகவும், சுப்பையாவைக் கண்டுபிடித்துத் தண்டிப்பது தொடர்பாகவும் உரையாடுகின்றனர். இரண்டாவது காட்சியில் சுப்பையாவும் தாயார் காமாட்சியும் உரையாடு கின்றனர். காமாட்சி சுப்பையாவை அடங்கிப் போக அறிவுறுத்துகிறான். கந்தசாமியும் சுப்பை யாவுக்கு உதவி செய்கிறான். இறுதியில் எதற்கும் பணியாத சுப்பையா சுட்டு வீழ்த்திக் கொல்லப் படுகிறான். “மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா” புகழ்பெற்ற தமிழக நாட்டுப்புறப் பாடலை நினைவுறுத்துகிறது இந்நாடகத் தலைப்பு.

“நாம் கை நொடித்தால் கரும்புக் கூலியாட்கள் நடுங்க வேண்டும். நாம் எது சொன்னாலும் எது செய்தாலும் அதுவே சட்டம். நம் வார்த்தையையோ, செய்கையையோ எதிர்க்கவோ, மறுக்கவோ யாருக்கும் உரிமை இல்லை. நாம் பேசும்போது அந்த நாய்கள் தலைகுனிந்து ஆமோதிக்க வேண்டும். இந்த மல்பாரிகளுக்கு வெள்ளையன்தான் கடவுள்...” முதல் காட்சியில் இடம்பெறும் இத்தகைய உரை யாடல் வெள்ளையர்களின் மனோபாவத்தைச் சுட்டுகின்றது. தாயார் காமாட்சியின் வழியாக ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலையையும் படம்பிடித்துக் காட்டுகிறார். ‘நான் மாடு போல உழைக்கிறேன். ஆனால் நான் மாடு இல்லெ அம்மா, நானும் மனுஷன்” என்ற சுப்பையாவின் வார்த்தைகள் இந்த நாடகத்தின் அடிநாதமாக விளங்குகின்றன. அதுவே நாடகத்தின் தலைப் பாகவும் அமைந்துள்ளது. நூலின் பெயராகவும் இடம்பெற்றுள்ளது. அங்காசத்துக்கும் அடிமைத் தனத்துக்கும் வித்தியாசமே இல்லை என்று சுப்பையா கொதித்து காலனி ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்து உயிர் துறக்கிறான்.

தமிழன் தலைநிமிர்தல்

ஆலெ ஊதுலெ என்பது மற்றுமோர் அங்காசங் காலத்தை நினைவுகூரும் நாடகம். இரண்டு காட்சி களைக் கொண்ட நாடகம். திறமைசாலிகளாக இருக்கும். தொழிலாளர்களைக்கூட அடிமைகளாக நடத்தும் மனோபாவத்தை எதிர்க்கிற நாடகமாகப் படைக்கப்பட்டுள்ளது. இந்நாடகத்தில் சந்திராயன் திறமையுள்ள தொழிலாளி. ஆலையில் ஏற்படும் பழுதுகளை உடனடியாகச் சரிபார்த்து விடுவான். காலனி எஜமானர்களுக்கும் தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொடுப்பான். அவ்வாறு கற்றுக் கொடுக்கும் வேளையிலும் அடிமையாகவே நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிற எஜமானர்களை எதிர்த்து ஆலை பழுதடைந்த நிலையிலும் வேலைக்குச் செல்லாமல் வீட்டுக்கு வந்துவிடுகிறான். அவன் மீது கோபம் கொண்ட ஆலை முதலாளிகள் அவனைத் தேடிப் பிடித்துத் தண்டிக்கின்றனர். “மானம் உள்ளவங்க தலைநிமிர்ந்துதான் பேச வேண்டும். நான் மானம் உள்ளவன் எசமான். ஒளைச்சிப் பொளைக்கிறவன். எங்க வேர்வையிலெ இந்தப் பூமி செளிக்குது. ஒங்க ஆலெ ஓடுது” இவை சந்திராயன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள். மொரீசியஸ் கரும்புத் தோட்டத் தொழிலாளர் தலைநிமிரத் தொடங்கிய காலகட்டத்தை இந் நாடகம் உணர்த்துகிறது.

குதிரைப் பந்தயம்

காலனி ஆட்சியாளர்களின் பண்பாடு தமிழ் மக்களிடத்தில் பரவத் தொடங்குகிறது. புதிய நாகரிகத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையிலும் பழைய சொந்தப் பண்பாடு சிதைகின்ற நிலையிலும் ஏற்படும் சிக்கல்களை ‘வட்டியோடு வருமா’, ‘கண்ணீர்த் துளி’ போன்ற நாடகங்கள் விவரிக் கின்றன. ‘வட்டியோடு வருமா?’ என்ற நாடகம் குதிரைப் பந்தயத்தின் தீங்குகளைச் சுட்டிக் காட்டு கிறது. ‘பணக்காரர்களுக்குக் குதிரைப் பந்தயம் பொழுது போக்கு; ஏழைகளுக்குப் புதைகுழி’ என்று இந்நூலின் முகவுரையில் பேராசிரியர் பாலறாவாயன் குறிப்பிடுவது போலவே இந் நாடகத்தில் வரும் கிருஷ்ணன் மூவாயிரம் ரூபாயை இழந்து விடுகிறான். ‘ஓராண்டு வேலை செய் தாலும் செலவுகள் போக மூவாயிரம் சம்பாதிக்க முடியாது. இப்பொழுது பொக்கெனப் போய் விட்டதே!’ என்று துன்பப்படுகிறான். ஒரு தீய பழக்கம் இன்னொரு தீய பழக்கத்திற்கும் காரண மாக அமைந்து விடுகிறது. “விளையாடி வெற்றி பெற்றால் அந்த மகிழ்ச்சியில் நன்றாகக் குடித்து வருவார். தோற்றுப் போனால் அதை மறப்பதற்கு அப்பவும் குடிப்பார்”. இவை கிருஷ்ணரின் மனைவி லோகாவின் தம் கணவர் குறித்த மதிப்பீடு. தீய நண்பர்களின் சகவாசம் மேலும் மேலும் கெட்டுப் போகவே தூண்டுகோலாக அமைகின்றது. “சில நாட்களில் எல்லாப் பணமும் போய்விடும். தளர்ந்து விடக்கூடாது. அது திரும்பி வந்தால் வட்டியோடு வரும்’ என்ற கிருஷ்ணனின் நண்பன் ராமா, கிருஷ்ணனுக்கு ஊக்கம் கொடுக்கிறான். குதிரைப் பந்தயத்துக்குச் செல்லமுடியாமல் வீட்டுக்கு வரவேண்டிய கட்டாயச் சூழலில் உடல் வீட்டிலும் மனம் குதிரைப் பந்தய மைதானத்திலும் இருக்கிற பதற்றத்தை நாடகத்தில் திருமலைச்செட்டி நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.

வீட்டை மறந்து ஊருக்கு உபதேசம்

மொரீசியசில் தமிழ்ப் பண்பாடு பரவ வேண்டும் என்று ஆர்வம் கொண்ட கண்ணப்பன் தன் வீட்டிலேயே தன் மகள் பமெலா மேனாட்டு நாகரிகத்தில் திளைத்துத் தமிழ்ப் பண்பாட்டை மறக்கிறாள் என்பதை அறியவில்லை. அவளைத் திருத்த முடியாததற்கு வருத்தப்படுகிறார் கண்ணப்பன். தொடக்கத்தில் ‘அப்பா செய்வதும் சொல்வதும் இக்காலத்துக்குப் பொருந்தாது அம்மா!’ என்று பமெலா அப்பாவை அலட்சியப் படுத்துகிறாள். பின்னர் ‘ஆடையை மாற்றுகிற மாதிரி, பெண்களையும் மாற்றுகிற ஒரு ஆடவனோடு சினிமா, பூங்கா, இன்னும் பல இடங்களுக்கும் போகிறாள்’ இந்தச் செய்தியை அறிந்து மன வேதனைப் படுகிறார் கண்ணப்பன்.

‘தமிழ் ஒழுக்கம் பற்றிப் பேசிப்பேசி என் வாழ்நாள் முழுவதும் கழித்தேனே. நம் தமிழ் இலக்கியத்தில் மகளிர் எவ்வாறெல்லாம் வாழ்ந்து சிறப்படைந்தார்கள் என்பது பற்றி மணிக்கணக் காய் எடுத்து எடுத்துச் சொன்னேனே. ஒழுக்கம், ஒழுக்கம் என்று முழக்கம் செய்தேன். ஆனால் அந்த ஒழுக்கம் என் சொந்த வீட்டில் இல்லாமல் போயிடுச்சே” என்று கண்ணப்பன் வருந்துவதோடு நாடகம் முடிகிறது. இந்த நாடகத்துக்குக் ‘கண்ணீர்த் துளி’ என்று பெயரிட்டுள்ளார்.

உயிருக்குயிராய்

‘அமைதிக்கோர் இடம்’ என்ற நாடகம் உயிருக்குயிராய்க் காதலிக்கிற அழகன், அமுதா, அக்காதலை அனுமதிக்காத அமுதாவின் பெற்றோர் ஆகியோர்க்கிடையே நடக்கின்ற உரையாடலைக் கொண்ட கதை. கைலாசம் தன் மகள் அமுதாவைச் செல்வந்தராகிய வடிவேலன் மகனுக்கு மண முடிக்க விழைகிறான். அமுதாவும், அழகனும் தங்கள் காதலை வெளிப்படுத்துகிறார்கள். ‘காதல் என்பது களியாட்டமன்று; கற்றோரும் மற்றோரும் மதிப்பதும் அல்லாமல் கடவுளே ஏற்கும் உயர்ந்த உணர்ச்சியாகும்” என்று அழகன் வாதாடுகின்றான். இறுதியில் கைலாசம் திருமணத்திற்குச் சம்மதிக் கிறான்.

அவன் வருகைக்காக

இந்த நாடகத் தலைப்பே ஒருவன் வருகைக் கான காத்திருப்பை உணர்த்தி விடுவதாக உள்ளது. பிள்ளையின் திருமணத்திற்காகக் காத்திருக்கும் பெற்றோர்களின் கனவைத் தகர்ப்பது போல இக்கதையில் வரும் சந்திரன் தன் பெற்றோர்களையும், அவனை நேசிக்கும் நிலா என்ற பெண்ணையும் மோசம் செய்துவிட்டு ‘அன்புள்ள பெற்றோருக்கு வணக்கம். செப்டம்பர் ஆறு என் திருமணம். அக்டோபர் வீடு திரும்புவேன்” என்று தந்தி அனுப்பி விடுகிறான். எல்லோரும் கல்லாகி விடுகிறார்கள் என்று நாடகம் முடிகின்றது. ‘கொந்தளிக்கும் கடலிலே’ என்ற கதை வீட்டிற்குச் சொல்லாமல் இங்கிலாந்து நர்சிங் வேலைக்குச் சென்றுவிடும் குமரன் என்பவனின் முடிவை விவரிக்கிறது.

முடிவுரை

நாடகங்களில் பிரெஞ்சு மொழிச் சொற்கள் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. bravo,bonjour, calmeto i Rene, Jemme bonne முதலிய சில வற்றைக் குறிப்பிடலாம். பிரெஞ்சு எஜமானர் களின் உரையாடலில் இத்தகைய சொற்கள் வெளிப் படுகின்றன. அங்காசங் காலத்தில் பேசப்பட்ட தமிழ் வழக்கு குறித்த பதிவுகள் ஏதும் கிடைக்க வில்லை. ஆனால் பொன்.திருமலைச்செட்டி மூத்த குடிமக்களின் பேச்சு வழக்கைச் சில நாடகங்களில் பதிவு செய்கிறார். “வேணு, நம்பல்க்கும், நெனச் சிக்டெ, கன்சாமி, அப்பெனே, கஷ்டொம், எவ்ள, வாள்ந்தா மனுசன் மாதிரி வாளுணு” - இவ்வாறு அங்காசங்கால வழக்குச் சொற்கள் இந்நாடகங் களில் பதிவாகியுள்ளன. அப்பா! என்ற சொல் அப்பாய்! என்றும், சுப்பையா என்ற சொல் சுப்பாய்! என்றும் விளியேற்பதை ஆசிரியர் சுட்டுகிறார். நாடக உரையாடல்களின் இடையே கவிதை வரிகளும் இடம்பெறுகின்றன. நாடகங்களில் வரும் தமிழ்ப் பாத்திரங்கள் குடிகாரர்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர். ‘வட்டியோடு வருமா’ என்ற நாடகத்தில் கிருஷ்ணன் என்ற பாத்திரம் சூதாட்டத்தோடு குடிப்பழக்கமும் உடையவன். ‘ஆலெ ஊதுலெ’ நாடகத்தில் சந்திராயன் என்ற பாத்திரம் குடிப்பழக்கம் உடையவன்.

பிரெஞ்சு கலாச்சாரத்தின் பாதிப்பாக இதனைக் கருதலாம். இத்தொகுப்பிலுள்ள ஏழு நாடகங்களில் இரு நாடகங்கள் அங்காசங்காலக் கொடுமை களைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டவை. அங்காசங்காலத்தில் தொழிலாளர்கள் தலை நிமிர்ந்து எதிர்க்கத் துணிந்த போக்கினை இரு நாடகங்களும் உணர்த்துகின்றன. பின் காலனித்துவ இலக்கியங்கள் காலனி ஆட்சியை எதிர்க்கக் கூடியவை. அந்த வகையில் இவ்விரு நாடகங்களும் பின்காலனித்துவ இலக்கியம் என்று கொள்ளலாம். இத்தொகுப்பில் மீதமுள்ள ஐந்து நாடகங்கள் சமகால மொரீசியஸ் தமிழர்களின் பிரச்சினை களைச் சுட்டுகின்றன. பல்லின / பன்மொழிச் சூழலில் தலைமுறை இடைவெளியில் தோன்றும் அச்ச உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந் நாடகங்கள் படைக்கப்பட்டுள்ளன. மொரீசியசில் தமிழ்மொழியை எழுதவும் வாசிக்கவும் தெரிந்தவர் எண்ணிக்கை மிகவும் குறைவு. எழுதும் நாடகங் களைப் படிப்பதற்கும் அங்குத் தமிழ் தெரிந்த வர்கள் இல்லை. தமிழ்மொழியை வளர்க்கும் முக மாகப் படைக்கப்பட்ட நாடகங்கள்தாம் இவை. ஆகவே இந்நாடகங்களைப் படைத்த முனைவர் பொன்.திருமலைச்செட்டி நமது நெஞ்சார்ந்த பாராட்டுதலுக்குரியவர்.

Pin It

சாதிய வரலாறுகள் அனைத்தும் பொது வாக கி.பி. 9ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே ஆரம்ப மாகின்றன. அப்படிப் பார்க்கும்போது இன்றுள்ள சாதிகள் அதற்கு முன்பு என்னவாய் இருந்திருக்கும்? நிலவியல் அடிப்படையிலும், தொழில் அடிப்படை யிலும், பண்பு நலன்கள் அடிப்படையிலுமே குடிகள் என்ற பெயரிலும், குலங்கள் என்ற பெயரிலும் அமைந்திருந்தன. பிற்காலத்தில் சமயங்கள் அடிப் படையிலும் சாதிகள் பலவாய்த் தோன்றின.1

குமரிக் கண்ட காலத்தில் மக்கள் ஏழு குடி களாய் வாழ்ந்தனர் (தமிழ் வரலாறு. ஞா. தேவ நேயப் பாவாணர்.ப. 14) அவர்கள் ஏழ்தெங்க நாடு, ஏழ் மருத நாடு, ஏழ் முன் பாலை நாடு, ஏழு பின் பாலை நாடு, ஏழ் குன்ற நாடு, ஏழ் குணகரை நாடு, ஏழ் குரும்பணை நாடு ஆகிய நாற்பத்தி ஒன்பது நாடுகளில் ஏழ் குடியினரும் வாழ்ந்தனர்.

பழங்காலத்தில் குறிஞ்சி நிலத்தை விட முல்லை நிலத்திலும், முல்லை நிலத்தை விட மருத நிலத்திலும், செந்நெல்லும் வெண் நெல்லும் மிகுதியாக விளைந்ததாலும், மக்கள் பெருக்கமும், மக்கள் பெருக்கத்திற் கேற்ப ஊர்ப் பெருக்கமும், ஊர்ப் பெருக்கத்திற்கேற்ப நாகரிகமும் பண்பாடும், தொழிலும் அரசியலும், மொழியும் வளர்ச்சி யடைந்தன.

மருத நிலத்தில் உழவுத் தொழில் வளரவளர முழுநேர உழைப்பு வேண்டியிருந்தது. அதற்குப் பல புதுப்புதுக் கருவிகள் வேண்டியிருந்தன. வாழ்க் கையில் நாகரிகம் வளர வளர புதிது புதிதாகப் பற்பல தேவைகள் தோன்றின. எல்லார்க்கும் எல்லா வேலைகளையும் செய்ய இயற்கையாகவே பல தொழில்கள் ஏற்பட்டன.

அறிவு வளர்ச்சி ஏற்பட்டதால் உழவு, வணிகம், காவல், கல்வி என்னும் நாற்பெரும் தொழில்கள் பற்றி மருத நில மக்களே அரசனாகவும், அந்தண னாகவும், உழவராகவும், வணிகராகவும் இவர் களுக்குப் பக்கத் துணையாகப் பதினெண் கை வினைஞர்களும் பிரிந்து சென்று பணியாற்றினர். குடிகளையும், மக்களையும் காப்பதால் காவலன், மன்னன், அரசன், வேந்தன் என்று ஒரு பிரிவாகவும்; அந்தணர், பார்ப்பார் என்பவர்கள் கல்வியின் பொருட்டு ஒரு பிரிவாகவும்; வணிகம் செய்ய ஒரு பிரிவினரும், உழவுத் தொழிலை மேற்கொண்டு மக்களுக்கு உணவளித்தும் வந்ததால் உழவர் என்றும்; விருந்தினரைப் பேணி வந்ததால் (வேளாண் மக்கள்) வேளாளர் என்றும்; கைத் தொழிலை மேற்கொண்டதால் கைவினைஞர், வினைவலர் என்றும் தத்தமது பணிகளைச் செம்மையாய்ச் செய்து வந்தனர். நாகரிகமும், அரசியலும், வாணிகமும், தொழிலும் வளரவளர நூற்றுக் கணக்கான தொழில்கள் புதிதுபுதிதாய் ஏற்பட்டன.2

சங்க காலத்தின் பிற்பகுதியிலும், சங்கம் மருவிய காலப் பகுதியிலும் பலம் வாய்ந்த அரசுகள் தோன்றி யதன் விளைவாகத் தனியுடைமையின் பேரில் அரசுகள் நிலைநிறுத்தப்பட்டன. சமுதாயத்திலே வேலைப் பிரிவினை ஏற்படலாயிற்று. இந்த வேலைப் பிரிவினையே பிற்காலப் பகுதியில் சாதிப்படி நிலையாக நிலை நிறுத்தப்பட்டது.

பிறநாட்டு வணிகமும் இக்காலப் பகுதியிலே தமிழ்நாட்டுச் ‘செல்வ’ நிலைக்கு உதவிற்று. கைத் தொழிலும் விவசாயமும் பிரிந்தன. நகரம் நாட்டுப் புறத்திலிருந்து வேறுபட்டது. பெருகி வந்த உற் பத்தியின் விளைவாக உற்பத்தியிலே பங்கெடுத்துக் கொள்ளாத ஒரு வர்க்கம் தோன்றியது. உற்பத்தியில் பங்கெடுக்காமல் உற்பத்தி செய்த பொருட்களைப் பரிவர்த்தனை செய்வதில் மட்டும் ஈடுபடும் வர்க்கத்தை சிருட்டித்தது இக்காலப் பகுதியே. அந்த வர்க்கந்தான் ‘வியாபாரி’களின் வர்க்கம்.

வணிக வர்க்கம் சமுதாயத்திலே முக்கியமான தனத்தை வகித்த காலப்பகுதியிலேயே திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய சிறப்புமிக்க நூல்கள் தோன்றின. இவற்றின் முதல் தோற்றத்தைப் பட்டினப் பாலை, மதுரைக் காஞ்சி முதலிய பிற்காலச் சங்க நூல்களிலே காணலாம்.

வலுக் கொள்கையின் அடிப்படையிலே தோன்றிய அரசுகளின் பிரசவ காலத்திலே வந்து சேர்ந்த சமணமும் பௌத்தமும் சொத்துரிமை, சமுதாய ஒழுங்கு, சாதிப்பாகுபாடு ஆகியவற்றை வெவ்வேறு வழிகளில் ஏற்றன. சமணத் துறவியான தொல்காப்பியர் இயற்றிய நூலிலே இவையாவும் அங்கீகாரம் பெறுவதை நாம் காணலாம். மனிதனது அக வாழ்க்கைக்கும் புறவாழ்க்கைக்கும் ‘இலக்கணம்’ அமைத்த தொல்காப்பிய நூலார் சாதிப்பாகு பாட்டினை ஏற்றுக்கொண்டே (சாதியும் வர்க்கமும் இக்காலப்பகுதியில் கலக்கின்றன) தமது வரை விலக்கணங்களைக் கூறுகின்றார். கொல்லா மையைக் கையாளும் வர்க்கத்தினரான வணிகர் மற்றைய வர்க்கங்களின் மேல் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. பொருளாதாரத் துறையில் காணப்பட்ட இந்தச் செல்வாக்கின் காரணமாகச் சமுதாயத் துறையிலும் வைசியர் அல்லது வணிகரின் ஆதிக்கம் வலுத்திருந்தது. சிலப்பதிகாரம் இதனை நேரடி யாகவும் மறைமுகமாகவும் பிரதிபலித்துக் காட்டு கின்றது.3

சங்க காலத்தில் தொழில் வழிக் கூட்டமாய் இருந்தவை பல்லவர்கள் காலத்தில் பிறப்பு வழிச் சாதியாய் மாறியது. பிராமணிய சாதி பல்லவர்கள் காலத்தில் தமிழகத்துள் புகுந்த பல்லவர்களே ஆரியப் பண்பாட்டைப் பரப்புவதிலும் வட மொழியைக் காப்பதிலும் பிராமணர்களை உச்சிமேல் வைத்துப் போற்றுவதையும் வெறித்தனமாகக் கடைப்பிடித்தனர். கி.பி.10ஆம் நூற்றாண்டிலிருந்து வலங்கை இடங்கைச் சாதிகளாகப் பிரிந்தது.4

பல்வேறு சாதிகளின் தொகுப்பே வலங்கை, இடங்கைப் பிரிவுகள். முதலாம் இராசராசன் (கி.பி. 1012-1044) படையிலேயே வலங்கை வேளைக் காரப்படை என்ற ஒரு பிரிவு இருந்தது. ஆயின் முதலாம் குலோத்துங்கன் காலத்திய (கி.பி. 1091) கல்வெட்டில் (கல்வெட்டு எண். ஹசுநு 31/1936-37) இடங்கைச் சாதிகள் பற்றிய குறிப்பும், இடங் கைக்கும் வலங்கைக்கும் இடையிலான சண்டையும் குறிப்பிடப்படுகின்றன. இடங்கை, வலங்கைச் சாதிகளின் பட்டியலைக் கண்டால் இடங்கைச் சாதிகளை வணிகச் சாதிகளாகவும் வணிகத்தை ஒட்டிய கைவினைச் சாதிகளாகவும் காணலாம். முதலாம் குலோத்துங்கன் காலத்தில் ஓரளவு வணிகம் பெருத்ததனால் நகர்மயமாதல் ஏற்பட்டது என்றும், இக்காலத்தில் வணிகர்களைச் சார்ந்து நின்ற கைவினைஞர்களின் எழுச்சிகளாக இத்தகைய மோதல்கள் அமைந்திருக்கக்கூடும் என்றும் பர்ட்டன் ஸ்டெயின் கூறுவதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள லாம்; (முற்றிலும் அப்படியே ஒப்புக்கொள்ள இயலாது)5.

வலங்கையர் தங்கள் தொடக்க காலத்தில் இரும்பைத் தங்கமாக்கும் இரசவாத வித்தையினை அறிந்து தங்கத்தை உற்பத்தி செய்தனர். இப்பெரும் செல்வத்தால் வெங்கலத்தால் வீடு வைத்தும், கப்பல் வைத்து வியாபாரம் செய்த இவர்கள் வலங்கைப் படை என ஒன்றை வைத்து மற்ற வணிகர்களுக்கும் பாதுகாப்பாகவும் இருந்து வந்துள்ளனர். வலங்கைப் பிரிவில் வணிகர் முதலிடத்தையும், இடங்கைப் பிரிவில் கம்மாளர் முதலிடத்தையும் வகித்ததாகக் கல்வெட்டுகளிலிருந்து அறிய முடிகின்றது.

சோழப் பேரரசில் ஐந்நூற்றுவர் (அய்ந்நூற்றுவர்) கொண்ட வணிகர் கூட்டம் ஒன்று செயல்பட்டு வந்தது. இதிலடங்கிய வணிகர் இலங்கைக்குக் கடல் வணிகம் மேற்கொண்டிருந்தனர். அவர்களுக் கெனப் படைப்பிரிவு ஒன்று பாதுகாப்பாக இருந்தது. சோழ நாட்டின் தேவைக்காகப் பருத்தி, பட்டு போன்ற பொருள்களை ஈழத்திலிருந்து கப்பல் மூலமாகக் கொண்டு வருதலை இவ்வணிகர்கள் மேற்கொண்டிருந்தனர். கரையான் என்னும் வலைஞர்கள் இப்பொருள்களை நாசம் செய்தனர். இவ்வலைஞர்கள் இடங்கைக் குலத்துக்கேயுரிய இந்திர மாயாஜாலம் முதல் அடங்கப் படித்தவர். இவர்களுடைய அழிவுச் செயல்களைத் தடுக்க வழியறியாத வணிகர் தம் குறைகளைப் பலரிடம் கூறியும் விடிவு ஏற்படாது இறுதியில் 700 பேர் கொண்ட வலங்கைப் படை வீரர்களை அவர்தம் வீடுகளில் சென்று சந்தித்து இடங்கையின் செயல் களைக் கூறி முறையிட்டனர். வலங்கைப் படை வீரர் வலைஞரை அடக்கி வணிகர்க்கு மீண்டும் அவர்கள் தொழில் நடக்குமாறு செய்தனர். இதனால் வணிகர்கள், ‘தோளேறும் குமாரர்கள் என்றும், தோளேறும் பெருமாள்’ என்றும் வலங்கை வீரர்களுக்குப் பட்டம் கொடுத்து இலங்கையில் தமக்குட்பட்ட இடங்களை அப்படை வீரர்க்குரிய தாகவும் செய்து ‘இலங்கைக் கரசர்’ என்றும் உரிமை கொடுத்தனர். இந்நிகழ்ச்சி சீரிய சொற் சோழன் என்னும் வரதர் குலச் சோழன் காலத்தில் நடைபெற்றது.

சோழப் பேரரசில் ‘ஐந்நூற்றுவர் வணிகர்’ கூட்டம் இருந்தமையும், அவர்தம் பாதுகாப்பிற்கு வலங்கைப்படை என்னும் எழு நூற்றுவர் படையை நியமித்ததாகவும், அப்படை சோழநாடு - ஈழநாடு என்னுமிடங்களில் நிலைகொண்டிருந்தமையும், சோழப் பேரரசு வீழ்ச்சியடைந்த போது வணிகம் நின்று, அப்படை ஈழத்தில் வணிகர் பகுதிகளை நாடாண்டதாகவும் தெரியவருகின்றன.

அயோத்தி படை வீடு என அழைக்கப்பெற்ற வேங்கி நாட்டில் (திருப்பதிப் பகுதி) வெங்கலத்தைக் கண்ணாளர் (கம்மாளர்கள்) கண்டெடுத்துக் காவிரிப்பூம்பட்டினத்து வணிகர்க்கு விற்று வந்துள்ளனர். இடங்கை ஈட்டி வீரன் ஒருவன் கடைத்தெருவில் சிங்கக் கொடியுடைய வணிகர்க்கு (வலங்கை வணிகர்) விற்கும் போது அதைத் தடுக்கும் நோக்கத்தில் வலங்கைத் தலைவனுக்கும் இடங்கை ஈட்டி வீரனுக்கும் போர் நடைபெறுகிறது. இதில் வலங்கைத் தலைவன் வெற்றி பெறுகிறான். இதன் படி வெற்றி பெற்ற வீரனுக்குப் பரிசில் வழங்கி, வெங்கலத்துக்குச் சுங்கவரியை நீக்கி வணிகர் களுக்குச் சலுகையும் அளிக்கின்றான் சோழ மன்னன்.6

இவ்வாறு வணிகம் தொடர்பாகப் பகை கொண்ட வலங்கை இடங்கைப் படைப்பிரிவுகள் நாளடைவில் சாதிச் சண்டைகளைக் கையிலெடுத்துக் கொண்டன.

கி.பி. 10ஆம் நூற்றாண்டுவரை இருந்துவந்த எளிய சமூகக் கட்டமைப்புப் போய் ஒரு செறி வான, சிக்கலான கட்டமைப்பு உருவாகிறது. புதிய நிலவுடைமை இனங்கள் தோன்றுவதன் காரண மாக முரண்பாடுகள் வளர்கின்றன. ஒவ்வோர் இனமும் தங்கள் நிலையை உயர்த்தவும் உறுதி செய்துகொள்ளவும் கட்டமைப்புகளை உண்டாக்கு கின்றன. (k.v. Subramanya Aiyer, ‘Largest Provincial Organisations in Ancient India’, quarterly Journal of Mythic Society. 45-46. மற்றும் தெ.இ.க. 6. எண். 439; தெ இ க 7, எண் 129; தெ இ க. 8. எண். 198. 442) இக் கூட்டமைப்புகளின் நாடு தழுவிய கூட்டங்கள் சமயம் என்று பொதுவாகவும், பெரிய நாட்டார், பதினெண் விஷயத்தார் போன்ற பெயர்கள் அந்தந்த இடத்துக்குத் தக்கவாறும் அமைக்கப் பட்டன. இவை ஒரே நேரத்தில் தொழில்சார் கூட்டு களாகவும் உறவின் முறைக் கூட்டுகளாகவும் இயங்கத் தொடங்குகின்றன. இந்தச் சூழ்நிலையில் அதுவரை இலை மறைவு காய் மறைவாக இருந்த ‘சாதி உணர்வு’ தங்குதடையின்றி வெளிப்படு கிறது. ஒவ்வொருவரும் ‘தங்கள் சாதி’ பற்றிப் பேசுவதில் பெருமைப்படுகிறார்கள். சில நூற்றாண்டு களில் பல்கிப் பெருகிய சாதிச் சமூகத்துக்கு உறுதி யான அடித்தளம் பன்னிரண்டு பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில் அமைந்துவிட்டது.7

மூன்றாம் ராஜராஜ சோழனுடைய ஆட்சியில் ஐந்தாம் ஆண்டில் நடந்த கலகங்களால் பழைய கணக்குகள். அழிந்து போயினமையால் அனு போகப் பற்றொழுகை ஒட்டி ஆதாரச் சீட்டுகளைப் புதுப்பிக்க வேண்டியிருந்தது என்னும் செய்தி ‘தலைச் செங்காடு மூன்றாம் ராஜராஜனது பத் தொன்பதாம் ஆண்டு கல்வெட்டொன்று’ கூறு கிறது. இவ்வாறு நடந்த கலகங்களைச் சாதிக் கலகங்கள் என்று காட்ட, வரலாற்று ஆசிரியர்கள் முயன்றுள்ளார்கள். இக்கலகங்கள் இடங்கை, வலங்கை சாதியினரிடையே நடைபெற்றதென்று கூறுகிறார்கள். நிலத்தொடர்புடைய சாதியர்கள் வலங்கைப் பிரிவினர் என்றும்; கொல்லர், தச்சர், தட்டார் முதலிய தொழிலாளர்களும், வாணியர், கொத்தர், சுண்ணாம்புக்காரன், வலையன், அளவர் முதலியோர் இடங்கைப் பிரிவினர் என்றும் பல கல்வெட்டுகள் கூறுகின்றன. கிராமத்திலுள்ள மேல் வர்க்கத்தார், இவ்விரு சாதியினரையும் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள். தங்களுடைய கொடுமைகளால் ஏதாவது ஒரு வகைப்பிரிவினர் தங்களுக்கு எதிராகப் போராட முன்வந்தால், அடுத்த பிரிவினரைத் தங்களோடு சேர்த்துக் கொண்டு அவர்களை அடக்குவதே வழக்கமா யிருந்தது. பெரும்பாலும் இவர்கள் இடங்கைப் பிரிவினரோடு சேர்ந்துகொண்டு வலங்கைப் பிரிவினரை எதிர்த்து வந்தார்கள். இடங்கைப் பிரிவினரில் மிகவும் ஏழ்மையில் உழன்றவர்கள் வலங்கைப் பிரிவினரது போராட்டங்களில் கலந்து கொண்டதுமுண்டு. அக்காலங்களில் இருவருக்கும் சில சலுகைகள் செய்து தங்களது ஆதிக்க அமைப்பு முறையை மேல் வர்க்கத்தார் காப்பாற்றிக் கொண்டனர்.

கோயில் சாசனங்களின் முகவுரையில், மேற் குறித்த உண்மைக்குச் சான்றாக ஒரு செய்தி காணப்படுகிறது. திருச்சிராப்பள்ளி, ஆடுதுறைக் கல்வெட்டு ஒன்று அச்செய்தியைத் தெரிவிக்கிறது. ‘அரசாங்கம் அதிகாரிகளின் உதவியுடன் வன்னியர் களும், வேளாளர், பிராமணர் முதலிய நிலச் சொந்தக் காரர்களும் சேர்ந்து இடங்கைப் பிரிவில் அடங்கிய 96 வகைச் சாதியினருக்கு இழைத்த அநீதிகளை இக்கல்வெட்டு கூறுகிறது.8

ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் (1748- ஐந்தாம் தொகுதி) இடங்கைப் பிரிவைச் சேர்ந்த பூத்து உலகப்பச் செட்டி வெள்ளைக் குதிரையொன்றில் ஏறியதற்காகச் சிறையிடப்பட்டார். வெள்ளைக் குதிரையேறுவது, வெள்ளைக் குடைபிடிப்பது, வெள்ளைப் பாவாடையணிவது போன்றன வலங் கையர் மட்டுமே அனுபவித்த பெருமைகள். நாடெங் கிலும் இதுவே மரபாக இருக்க, பூத்த உலகப்பன் அதை மீறியதற்காகச் சிறையிலடைக்கப்பட்டார். ‘மரியாதை மற்றும் உரிமை’ குறித்த வலங்கை, இடங்கைச் சச்சரவுகள் அக்காலத்தே மிகுந்திருந்த தாக டொட்வெல் குறிப்பிடுகிறார்.9

தமிழகத்தில் ஒவ்வொரு நகரத்திலும், சிற்றூர் களிலும் இடங்கை வலங்கையினர் வசிப்பதற்கு வீதிகள் தனித்தனியே ஏற்பட்டிருக்கின்றன. ஒருவர் வசிக்கும் தெருவில் மற்றொருவர் வசிப்பதில்லை. கோயில் விழா, திருமணம் உள்ளிட்ட விழாக்கள், சவ ஊர்வலம் போன்றவைகளும் ஒரு தெருவி லிருந்து பிறிதொரு தெருவிற்குள் ஊர்வலம் செல்லத் தடைசெய்யப்பட்டிருந்தது. ஆனால் இருவருக்கும் பொதுவாயுள்ள வீதியில் போவதற்குத் தடை யில்லை. என்று கனகசபைப் பிள்ளை 1901 ஆம் ஆண்டில் எழுதியுள்ளார். (வருண சிந்தாமணி. ப. 502-503).10

மோடி ஆவணங்களில் (கி.பி. 1676 முதல் கி.பி. 1855வரை). சாதிப் பாகுபாடு, சாதியை விட்டு நீக்குதல், கீழ்ச் சாதியினரைத் தொட நேர்ந்தால் பரிகாரம் செய்தல் போன்ற பல செய்திகளை இவை தன்னகத்தே கொண்டு திகழ்கின்றன. இடங்கை, வலங்கை என இருவகைச் சாதிப்பிரிவு புதுக் கோட்டைப் பகுதியில் இருந்தமையையும் அவர் களில் வலங்கையினர் 22 சாதியினர் என்பதையும், இடங்கையினர் 6 சாதியினர் என்பதையும் இச் சான்றுகள் வழி அறியமுடிகிறது. பிறிதொரு ஆவணம் வலங்கையினர் 24 சாதிகள் எனவும், இடங்கையினர் 9 சாதிகள் எனவும் கூறுகிறது. திருமணக் காலத்தில் பந்தல் போடுதல், வாத்தி யங்கள் வாசித்தல், ஊர்வலம் வருதல், ஆடையணி பூணுதல், வாகனங்களைத் தேர்ந்தெடுத்தல் ஆகியன பற்றிய மன வேறுபாடே இவர்களது பூசலுக்குக் காரணம் என இவ்ஆவணங்கள் புலப்படுத்து கின்றன.11

வலங்கை இடங்கைப் பூசல்கள் தாசிகளையும், தேவரடியார்களையும், சக்கிலியப் பெண்களையும் கூட விட்டு வைக்கவில்லை, என்பதை ஆனந்தரங்கர் காலத்திலும் காண முடிகிறது.12

கொங்குப் பகுதியில் 24 நாடுகள் உள்ளன. இவற்றில் வலங்கை இடங்கைச் சாதிகளின் சமூக வேறுபாடுகள் கடந்த காலங்களில் விரிவானதாக இருந்தன. இன்று வலங்கை இடங்கைப் பிரிவு களின் முக்கியத்துவம் குறைந்துவிட்டாலும் அடிப் படையான சமூக அமைப்புகள் நிலம், சாதி, சாமி என்னும் மூன்று தளங்களின் உறவை இன்றும் கூட இணைக்கின்றன. இதன் மூலம் சாதி என்ற கட்டுக் கோப்பைத் தக்க வைத்துக்கொள்ள முனைகின்றன.13

நால்வகைப் பிரிவுகளுள் மக்களைப் பகுத்துக் கொண்ட பண்டைய முயற்சிக்குப் பின்னர், பிராமணரல்லாத மக்களை வலங்கை, இடங்கை என்னும் இருபெரும் பிரிவுகளுள் உட்படுத்தி, அவர் தம் வாழ்க்கை முறைகளை வகுத்துக் கொண்ட தன்மை இடைக்காலத்தில் ஏற்பட்டது.14

வலங்கை இடங்கைப் பிரிவுகள் சமூக வரலாற்றில் நிலவுடைமையாளர்களுக்கும், வணிகர் களுக்கும் தங்கள் நலன்களுக்குகந்த முறையில் மக்களைத் தங்கள் பக்கம் திரட்டிக் கொள்ள ஏற்படுத்திக் கொண்ட பிரிவுகளே (வானமாமலை) இன்று சாதிப் படிநிலையாக நிலைகொண்டு விட்டன. இத்தகைய சாதி இருப்புக்கும், அதன் இறுக்கத்துக்கும் வணிகர்களின் பங்கு மிகப் பெரியதாகும்!

1.            பறையர் ஒரு வரலாற்றுச் சுருக்கம் புங்கனூர் இராமண்ணா. ப.5.

2.            மேலது. ப. 9,10.

3.            பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும். க. கைலாசபதி. ப. 91,92

4.            பறையர் ஒரு வரலாற்றுச் சுருக்கம். புங்கனூர் இராமண்ணா. ப.14.

5.            தமிழ். மொழி-இனம்-நாடு. கோ. கேசவன். ப.124-129.

6.            வலங்கைச் சான்றோரும் சோழரும். ஆ. தசரதன். ப. 104-108, 66-68, 69-72.

7.            தமிழியல் ஆய்வுகள் பதிப்பாசிரியர்கள். முனைவர். சா. கிருட்டினமூர்த்தி முனைவர் கி. அரங்கன் முனைவர். எ. சுப்பராயலு. ப. 122-126.

8.            தமிழ் வரலாறு பண்பாடும் நா. வானமாமலை. ப. 117-119

9.            ஆனந்தரங்கம். பதிப்பாசிரியர்கள் முனைவர். அ. அறிவு நம்பி, முனைவர் அரங்க மு. முருகையன். ப.68

10.          தமிழர் வரலாறு பாவாணர் தமிழ்க் களஞ் சியம் 8. ப. 127-129.

11.          தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும் (இரண்டாம் பகுதி) பதிப்பாசிரியர். முனைவர் பா. சுப்ர மணியன்

12.          ஆனந்தரங்கர் நாட்குறிப்பு தொகுதி 2. பதிப்பா சிரியர். க.ப. அறவாணன். துணைப்பதிப்பாசிரியர்.    அரங்க. மு.முருகையன். ப.71,72.

13.          தமிழர் மானிடவியல் பக்தவத்சல பாரதி. ப. 238.

14.          தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும். ப. ஓஓஐ)

15.          ஆனந்தரங்கர் நாட்குறிப்பு தொகுதி. 2. ப. 71-72.

Pin It

காந்தி சொன்ன ‘‘மாற்றத்தை விரும்பினால் அந்த மாற்றத்தை உன்னிடமிருந்து துவங்கு’’ என்பதற்கு நாம் வாழும் காலத்தின் சரியான உதாரணம் என்றால், நம்மாழ்வாரைச் சொல்லலாம். “நாம் ஏன் இயற்கை விவசாயம் செய்யக் கூடாது?

சந்தர்ப்பவாதத் தரகு அரசியலாலும் சக மனிதனை நேசிக்க மறுத்த சாதியப் பிணக்குகளாலும் நசுக்கப்படும் விவசாயிகளையும் துரித வாழ்வில் தொலைந்து கொண்டிருக்கும் ஏராளமான சாமானியர்களையும் “நாம் ஏன் நச்சற்ற, ரசாயனக் கலவை இல்லாத உணவைத் தேடி உண்ணக் கூடாது? எதற்கய்யா இந்த மரபணுப் பயிர்கள்?” என்று சிந்திக்க வைத்தவர், திருக்காட்டுப்பள்ளியில் பிறந்த அந்த மாமனிதர்.

பட்டம் முலம் தனக்குச் சமூகத்தில் அங்கீகாரம் தந்துவிட்டதாலேயே, அந்த ஏட்டுப் படிப்பில் கண்மூடித்தனமான நம்பிக்கையைக் கொண்டதும், அது உருவாக்கிய அளவுகோலைக் கொண்டே, ஒட்டுமொத்த வாழ்வியலை அளப்பதுமான மதயானைக் கூட்டம் நம் ஊரில் அதிகம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனக்குப் போதிக்கப்பட்ட பட்டப் படிப்பினால் கிடைத்த அரசுப் பணி, விளிம்பு நிலை மக்களுக்குத் துளியும் பயன்தராத ஆய்வில் ஈடுபடுகிறது என்பதை உணர்ந்ததும், அந்த வேலையை விட்டுவிட்டு, வேளாண் வாழ்வியலைக் களத்தில் படிக்கக் களம் இறங்கியவர் நம்மாழ்வார்.

எப்படி வந்தது ரசாயன உரம்?

உழவே தலை என்று 5,000-6,000 ஆண்டுகளாக வாழ்ந்த சமூகம், உழவாஞ் ஐயையோ எனத் தலைகுனிய ஆரம்பித்தது,

கடந்த 50-60 ஆண்டுகளாகத்தான் இருக்கும். இங்கு ஒரு மாபெரும் உழவுக் கலாச்சாரம் இருந்தது; மாபெரும் வேளாண் அறிவியல் அதில் கலந்திருந்தது. சிற்றெறும்புக்கும் சிட்டுக்குருவிக்கும் சேர்த்துச் சமைக்கும் பல்லுயிர் பேணும் அறம் இருந்தது. அப்படியாயிருந்த வேளாண் அறம், திட்டமிடப்பட்ட வணிகச் சுரண்டலுக்காகத் தேயிலை, புகையிலை, தைலமரம், உடை மரம், ஒட்டு வீரிய ரகம் என மொத்தமாகத் தன் உருவிழக்கத் துவங்கியது நம்மை ஆண்ட வெள்ளையர்களால்.

“இரண்டாம் உலகப் போருக்குப் பின், பல பன்னாட்டு நிறுவனங்களில் விற்காத வெடிகுண்டுகளின் மூலப்பொருள்களான அம்மோனியா முதலான ரசாயனக் கலவைகளை விற்றுப் பணமாக்க அதே ரசாயனம் மூலம் உற்பத்தியைப் பெருக்கலாம் என்ற கருத்தாக்கத்தை வேளாண் உலகில் உலகெங்கும் விதைத்த காலம் தொட்டு இந்தியாவின் வேளாண்மை கடன்காரத் தொழிலாயிற்று” என்பதைத் தமிழகத்தில் முதலில் உணர்த்தியவர் நம்மாழ்வார்.

கருக்கொண்ட புரட்சியாளர்

அரசுப் பணியை விட்டுவிட்டு, களக்காட்டில் அரசு சாரா நிறுவனம் ஒன்றில் சில காலம் பணியாற்றிய போதே, இடுபொருள் முதலீட்டில் விவசாயிகள் கடன்படுவதைப் புரிந்துகொண்டார். அதேசமயம், அவர் படித்த ஜப்பானிய இயற்கை வேளாண் விஞ்ஞானி மசானபு ஃபுகோகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ நூல், ‘நாம் எதை இழக்கிறோம்? நாம் எங்கு சிக்குண்டிருக்கிறோம்? இயற்கையை விட்டு நம் வேளாண்மை எப்படி விலகுகிறது? பகுத்தறிவு நம் நுண்ணறிவை எப்படிச் சிதைக்கிறது’ என்பதை யெல்லாம் அவருக்கு இன்னும் ஆழமாகப் புரிய வைத்தது.

உசுப்பிய விடுகதை

பிறகு, களக்காட்டிலிருந்து புறப்பட்டு அங்கட்டி பகுதிக்குச் சென்றார். மேட்டூர் அணையால் இடம் பெயர்ந்து, அங்கட்டி பகுதியில் வறுமையில் உழன்று கொண்டிருந்த விவசாயிகளுடன் வாழ்ந்தார். அப் போது, அவரை ஒரு விடுகதை உசுப்பியது என அடிக்கடி அவர் பேச்சில் சொல்வதுண்டு. “பழமாகிக் காயாவது எது? காயாகிப் பூவாவது எது?” என்பதுதான் அவர் சொல்லும் அந்த விடுகதை. பழமாகிக் காயாவது என்பது எலுமிச்சைதான். பழம் எப்படிக் காயானது? எலுமிச்சையில் அதிகமாக உப்பைப் போட்டு ஊறுகாய் செய்கிறோம் இல்லையா, அதுதான் பழம் காயாவது. அப்படியானால், உப்புதான் மக்கவிடாமல் தடுக்கிறது என்பது அவர் மனதில் அடிக்கடி ஓட ஆரம்பித்தது. இந்த ரசாயன உப்பை ஏராளமாக மண்ணில் கொட்டினால், களையெல்லாம் எப்படி மக்கி உரமாகும்? இயல்பாக உருவாக வேண்டிய மக்கு உரத்தை இந்த உர உப்பு எப்படித் தடுத்து, விவசாயியை இடுபொருள் செலவால் கடன்பட வைக்கிறது என்பதை மசானபு ஃபுகோகா சொன்னதைத் தன் நுண்ணறிவால் புரிந்துகொண்டார் நம்மாழ்வார்.

அன்றிலிருந்து “இப்படி உரமிடுவது மண்ணை எப்படிப் பாழாக்குகிறது? அதிக நீர்த் தேவையை உண்டாக்கி மறைநீரை (வர்ச்சுவல் வாட்டர்) அதிகரித்து, விவசாயத்தை எப்படிச் சிக்கலில் கொண்டுபோய் விடுகிறது” என்று விளக்க ஆரம்பித்தார்.

பூச்சிமருந்தா; பூச்சிக்கொல்லியா?

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப் பொருளில் மெய்ப்பொருள் தேடியவர் நம்மாழ்வார். ஸ்டாக்ஹோம் நகரில் நடந்த கருத்தரங்கிலும் பயிற்சிப் பட்டறையிலும் பயின்ற நம்மாழ்வார், அங்கு வந்த வெள்ளைக்கார ஆசிரியை “பெஸ்டிசைடுக்கு தமிழில் என்ன? ” எனக் கேட்க, “பூச்சிமருந்து” என்று சொல்ல, “ஹெர்பிசைடுன்னா களைக்கொல்லி, சூசைடுன்னா தன்னைத்தானே கொல்வது, ஆனால் பெஸ்டிசைடை மட்டும் பூச்சிக்கொல்லின்னு சொல்லாமல், பூச்சிமருந்து என்கிறீர்களே?” என அவர் கேட்டாராம். ஒரு கொலை கார வஸ்துவை மருந்து என்ற பெயரில் ஏமாற்றி, நம் ஏழை விவசாயிகளிடம் சந்தை வித்திருக்கிறது என்பதை நம்மாழ்வார் தெளிவாக உணர்ந்துகொண்டார். அன்று முதல் “அது பூச்சிகொல்லி விஷமடா... மருந்து அல்ல” என விவசாயிகளிடம் தெளிவுபடுத்த ஆரம்பித்தார் நம்மாழ்வார்.

தன்னை ‘லோ எக்ஸ்டெர்னல் இன்புட் ஸஸ்டெய்னபில் அக்ரிகல்ச்சர்’ அமைப்பில் ஈடுபடுத்திக்கொண்டு, பல காலம் கிராமம் கிராமமாகத் தன் நுண்ணறிவில் பெற்றதையும், உலக அரங்கில் ஃபுகோகாவிடமும் ரேச்சல் கார்சனிடமும் நூலறிவில் பெற்றதையும், விளிம்பு நிலையில் இருந்த படிப்பறிவில்லாத விவசாயியும் புரிந்துகொள்ளும்படி எளிய மொழியில் பேசி விளக்கியது நம்மாழ்வாரின் தனித்துவமான வெற்றி எனலாம்.

குரு பெர்னார்ட்

பெல்ஜியம் நாட்டு பெர்னார்டைத்தான் அவர் தன்னுடைய இயற்கை விவசாயத்தின் குருவாகப் பலமுறை சொல்வார். பெர்னார்ட் இன்றும் ஆரோவில்லில் வாழும் இயற்கை வேளாண் வித்தகர். தரிசாகவும், நீர் இருப்பே இல்லாமலும் இருந்த கல் நிறைந்த நிலம் பெர்னார்டுக்கு வழங்கப்பட்டது. அவரோ, செலவே இல்லாமல், இயற்கையை முதலீடாக வைத்தே அந்த நிலத்தைச் சோலையாக மாற்றிக் காட்டினார். பயிர் சுழற்சியையும் பல்லுயிர்ப் பாதுகாப்பையும் உறுதிசெய்வது தனிப் பயிர் சாகுபடியில் இல்லை; கூட்டுப் பயிராய், அணி நிழல்காடாகத் தன் நிலப்பரப்பை அமைப்பதில்தான் இருக்கிறது என்பதை அவரிடம் அறிந்துகொண்ட நம்மாழ்வார், தன் ஆசான் பெர்னார்டை ஒவ்வொரு பேச்சிலும் நினைவுகூர மறப்பதில்லை.

எதிர் யுத்தங்கள்

மரபணு மாற்றிய பயிர்களை இந்தியாவில் வேகமாகப் புகுத்த அரசு முனைந்தபோது, தமிழகத்தில் ஏராளமான விவசாயிகளைக் கைகோக்கச் செய்து, களம் இறக்கிய பசுமைப் போராளி நம்மாழ்வார். இன்னும் முழுமையாக ஆய்வுசெய்யப்படாமல், அறிவியல் தரவுகளைப் பாரபட்சமில்லாது நிறுவாமல், வணிகத்தில் கோலோச்சு வதற்காக நம் இந்திய மக்களைப் பலிகடாவாக்கும் மரபணுத் தொழில்நுட்பத்தைக் கடுமையாகவும் அறிவியல் பூர்வமாகவும் சாடியவர் அவர். இங்கி லாந்தின் செரிலினியின் சான்றுகளை, இந்த நிலத்து மாயாண்டிக்கும் புரியும்விதமாக கிராமம் கிராமமாக எடுத்துச்சொன்னது அவர் நிகழ்த்திய சத்தியாகிரகம். ‘பூவுலகின் நண்பர்கள்’ முதலான தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து, பாதுகாப்பான உணவுக் கூட்டமைப்பை உருவாக்கி, மரபணு மாற்றிய பயிர்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியதிலும் கடைசியில், முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பி.டி. கத்திரிக்குக் காலவரையற்ற தடை விதித்ததிலும் முக்கிய காரணமாக இருந்தவர் நம்மாழ்வார்.

இயற்கையில் லயித்தால் போதுமா?

வட இந்தியாவில் வந்தனா சிவா, கவிதா குருகந்தி, தேவேந்தர் சர்மா முதலான பசுமைப் போராளிகள் குரல் கொடுக்கும்போதெல்லாம், தமிழகத்தின் குரலாக ஒலித்தவர் நம்மாழ்வார். வேளாண் மீட்பும் சூழல் பாதுகாப்பும் வெறும் சத்துணவுத் தேடலிலும், குருவி, காகத்தின் குரல் சிலாகிப்பிலும் மட்டுமானதல்ல; சக மனிதர்களின் விடுதலையிலும்தான் சாத்தியம் என்பதை அடிக்கடி அறிவுறுத்தியவர் அவர். கீழவெண்மணி சாதியப் படுகொலையையும், அதற்கு ஆதிக்க சக்திகள் பெற்ற நீதிமன்ற விடுதலை வரிகளையும் வருத்தமுடன் அவர் விவசாயக் கூட்டங்களில் பேசுவது ஒரு சான்று.

உருவாக்கப்பட்ட படை

நம்மாழ்வாரால் உருவாக்கப்பட்டவர்கள், உத்வேக மடைந்தவர்கள், உணர்வுபெற்றவர்கள் ஏராளம். ஒரு நாள் பூம்புகார் கூட்டத்தில், ‘காட்டு யாணம்’ நெல்லை வழங்கி, “நீங்க ஏன் பழம் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் பணிகளைத் தொடர்ந்து செய்யக் கூடாது?” என கிரியேட் ‘நெல்’ஜெயராமனிடம், அவர் விதைத்த விதை இன்று அதே ‘நெல்’ஜெயராமன் 158 பாரம்பரிய ரகங்களை மீட்கவும் பாதுகாத்துப் பயிரிட்டுக் கொடுக்கவும் வழிவகுத்திருக்கிறது. எங்கள் ‘பூவுலகின் நண்பர்கள்’அமைப்பைத் தொடர்ந்து மரபணு மாற்றிய பயிர்களுக்கு எதிரான களத்தில் நிறுத்தியது, குப்பை உணவுக்கு எதிராகச் சிறுதானிய உணவை மீட்டெடுக்க வைத்து, உலகின் பல்வேறு மொழிகளில் உள்ள செய்திகளைத் தமிழில் மொழியாக்கம் செய்து பரப்பத் துணைநின்றது எல்லாம் நம்மாழ்வாரும் அவருடைய கருத்தாக்கமும்தான். நம்மாழ்வாரின் இறுதிச்சடங்கில் மண்ணை நேசிக்கும் விவசாயிகளின் கண்ணீர் மட்டும் நிறைந்திருக்கவில்லை. ஏராளமான இளைஞர் கூட்டம் தங்கள் ஆசானை இழந்த அழுகுரலுடன் அங்கே நிரம்பியிருந்தது. “எதையாவது செய்யணும், இந்த மண்ணை நேசித்து, சூழலைக் காக்கும் இயக்கத்தில் என் பங்கை நான் எப்படியாவது ஆற்ற வேண்டும்” என அந்த இளைஞர் கூட்டம் அங்குச் சூளுரைத்தது.

ரசாயனம் இல்லா விவசாயம், மருந்தில்லாத மருத்துவம், சுவரில்லாத கல்வி - இவைதான் மாற்றுலகை நிர்ணயிக்க அவர் சொன்ன சூத்திரம். நாம் வாழும் காலத்தின் காந்திகளில் அவரும் ஒருவர் என்றால், அது கூடுதல் இல்லை!

- சிவராமன், சித்தமருத்துவர், சமூக விமர்சகர் - தொடர்புக்கு: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்..

நன்றி: தி இந்து

Pin It

உட்பிரிவுகள்