உங்கள் நூலகம் ஜூலை 2017 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.

 

 

Pin It

முன்குறிப்பு

இக்கட்டுரை 1974-ஆம் ஆண்டு மார்க்சிய ஒளி 2-ஆம் இதழில் வெளியானது.  இதழ் அந்த ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு வெளியாகி இருக்கலாம்.  இந்தக் கட்டுரை வெளியான காலத்திற்குச் சற்று முன்னர்,

1971-72-ஆம் ஆண்டுகளில் மதுரைப் பல்கலைக் கழகத்தில் கதைப்பாடல்களைப் பதிப்பிக்கும் பணியை அப்போதைய பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெ.பொ.மீ. அவர்களின் அழைப்பின் பேரில் பேராசிரியர்  மேற்கொண்டிருந்தார்.  இக்கட்டுரையில் அக்காலத்தில் மார்க்சியப் பட்டயப் படிப்பைத் தொடங்க மேற்கொண்ட முயற்சிகளையும் அதற்கு ஏற்பட்ட தடைகளையும் பற்றி பேராசிரியர் எடுத்துக்கூறுகிறார்.  இதுவரை முறையாக மார்க்சியத்தைப் போதிக்கும் கல்வி நிறுவனங்களை உருவாக்குதல் என்ற பேராசிரியரின் கனவு நிறைவேற வில்லை என்பது மனதில் கொள்ளத்தக்கது. அதைப் பற்றிய சிறு பேச்சுக்கூட இப்போது நம்மிடம் இல்லை...

மார்க்சியப் பயிற்சிக்கு ஒரு டிப்ளமா படிப்பும், ஒரு பரீட்சையும் நடத்துவதென்று மதுரைப் பல்கலைக்கழகம் முடிவு செய்து விட்டதாகச் சில மாதங்களுக்கு முன் பத்திரிகைகளில் செய்தி வந்தது.

ஜனசக்தியிலும் ஒரு செய்திக் குறிப்பு வெளிவந்தது.  ஆயினும் இந்தப் படிப்பு எந்தக் கல்லூரியிலும் துவக்கப்படவில்லை.  பல்கலைக்கழகத்திலும் ஆரம்பிக்கப்படவில்லை.  இது ஏன் என்று அறிய இப் பயிற்சி பற்றி நடந்துள்ள விவாதப் போராட்டத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மதுரைப் பல்கலைக்கழகம் முழு உருவம் பெற்று ஐந்து ஆண்டுகள்தான் முடிந்துள்ளன.  பழைய சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாரிசுதான் இது.  இதன் நிருவாக அமைப்புக்களில் செனட், அகாடெமிக் கௌன்சில், சிண்டிகேட் என்ற மூன்று உறுப்புகள் உள்ளன.  இவற்றுள் செனட் கொள்கை வகுக்கும் அமைப்பு.  இதனைப் பட்ட தாரிகள், ஸ்தல ஸ்தாபனங்கள், சட்டமன்றம், இன்னும் பல தொகுதிகள் தேர்ந்தெடுக்கிறார்கள்.  அகாடெமிக் கௌன்சிலில் பெரும்பான்மையான வர்கள் கல்லூரி ஆசிரியர்களிலிருந்து அவ்வக் கல்லூரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.  சிண்டிகேட்தான் நிருவாக சபை, மந்திரி சபை போல அது நிருவாக அதிகாரம் உடையது.  இதற்குப் பானல் ((Panel)களுள் 3 உறுப்பினர் தயாரிக்கிறார்கள்.  கவர்னர் அவர்களுள் ஒருவரை துணைவேந்தராக நியமிக்கிறார்.

இந்த அமைப்பு விதிகளை நான் குறிப்பிட்ட தற்குக் காரணத்தை வாசகர்கள் ஊகித்திருக்கக் கூடும்.  இதற்கும் மக்களுக்கும் எந்தவிதத் தொடர்பு மில்லை.  மிகவும் குறுகிய வாக்குத் தொகுதிகளி லிருந்து, சில அதிகார வட்டங்களின் செல்வாக்கில் இந்த நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று வாசகர்கள் ஊகித்திருப்பார்கள்.  அகாடெமிக் கௌன்சில் ஓரளவு பரந்த பிரதிநிதித்துவம் உடையது.  அதில் பெரும்பான்மை கல்லூரி ஆசிரியர்கள், முதல்வர்கள் உள்ளார்கள்.

இதற்குப் பாடத்திட்டம், பரீட்சைகள், புதிய பயிற்சிகள் பற்றி முடிவு செய்ய அதிகாரம்  உண்டு.  செனட் கொள்கை வகுக்கும் நிறுவனம்.  இதில் கல்லூரி நிருவாகங்களின் பிரதிநிதிகள், அந்நிருவாகங்களின் செல்வாக்குக்குப் பணிகிற கல்லூரி முதல்வர்கள்.  அரசின் செல்வாக்குக்குட் பட்ட, ஸ்தல ஸ்தாபன, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.  இப்பொழுது துணைவேந்தர் நியமனத்தை, தாம் அமைக்கும் தேர்வுக்குழு மூலம் அரசு கட்டுப் படுத்துகிறது.  கிறிஸ்தவ மிஷன்கள், கத்தோலிக்க மடங்கள், சாதிச் சங்கங்கள், முதலாளிகள், மிராசு தார்கள், வட்டிக்கடைக்காரர்கள், பத்திரிகை முதலாளிகள், கறுப்புப்பணத்தை வெள்ளைப் பணமாக்க வழி காணும், சுதந்திர யுகப் புதுப்பணக் காரர்கள் பிடிப்பில்தான் தமிழக முழுவதும் கல்லூரி நிருவாகங்கள் உள்ளன.  இப்பொழுது சில சிவன் கோயில்களும், சமண சமய சங்கங்களும், வைஷ்ணவ சமய சங்கமும் சென்னை, மாயூரம், பாபநாசம் முதலிய நகர்களில் கல்லூரிகளை நிறுவியுள்ளன. 

மதுரைப் பல்கலைக்கழக எல்லையிலும் நிருவாகங்கள், இப்பகுதியினரின் செல்வாக்கிலேயே உள்ளன.  இவர்களனைவரும் பழமைப் பற்றுடைய வர்கள்.  தங்கள் அதிகாரத்திற்கு இடையூறான எந்த மாறுதலையும் எதிர்க்கக் கூடியவர்கள்.  பழைய ஏகாதிபத்தியக் கல்வி முறையில் அடிப்படை மாறுதல்களை விரும்பாதவர்கள் பட்டம் பெற்று வருகிறவர்களைத் தங்கள் பணத்திற்கு அடிமை யாக்க விரும்புகிறவர்கள்.

பரீட்சைகளுக்குரிய மொழிகள், விஞ்ஞானம், சமூக விஞ்ஞானங்கள் தவிர, பகுதி நேரடிப் படிப்பிற்குச் சில டிப்ளமா பயிற்சிகளை இப் பல்கலைக்கழகம் நடத்துகிறது.  அவற்றுள் ‘காந்தீய சிந்தனை’ என்பதும் ஒன்று.  இதனைப் பல கல்லூரிகள் பகுதிநேரப் படிப்பாக வைத்துள்ளன.  இதில் எஸ்.எஸ்.எல்.ஸி தேறியவர்கள் சேரலாம்.  எனவே கல்லூரியில் படிக்கும் பி.யூ.சி., பட்டப் படிப்பு மாணவர்கள் சேர முடியும்.  ஓராண்டு படிப்பிற்குப் பின் பரீட்சை நடத்தி ஸெர்ட்டிபிகேட் கொடுக்கிறார்கள். அதன் பின் இப்படிப்புப் படித்தவர்கள் ஓராண்டு படித்து டிப்ளமா பெறலாம்.  பல்கலைக்கழகத்தில், கல்லூரிகளில் நடத்தப்படும் இப்பயிற்சிக்கு ஊக்கமளிக்கவும், தேர்வு நடத்தவும் ஒரு இயக்குநரை நியமித்து உள்ளார்கள்.  சில முதலாளிகள், இப்பயிற்சிக்குத் தேவையான நிதியை அளிக்கிறார்கள்.

ஏனென்று சொல்லவேண்டாம்.  சொல்லா மலே நமது தோழர்களுக்கு விளங்கும் ‘காந்தீய சிந்தனை’ ‘பழமை உயிர்ப்பு’ (Revivalism) ‘மன மாற்றத்தால் புரட்சி’ ‘பலாத்காரத்தால் வரும் கம்யூனிஸ எதிர்ப்பு’ ‘உடைமையாளர்களை தர்மகர்த்தாக்களாகக் கொண்ட சர்வோதய சமுதாயம்’ முதலிய முதலாளித்துவத்திற்குச் சிறிதும் ஆபத்தில்லாத, சிந்தனைகள் கொண்டது.  எனவே இன்று புரட்சிக் காற்று மாணவர் உள்ளங்களில் நுழைந்துவிடாமல் தடுக்க இக்காந்தீய சிந்தனைச் சுவரை சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் எழுப்ப விரும்புகிறார்கள்.  எனவேதான் முதலாளிகள், சாமியார்கள், பாதிரிகள், கத்தோலிக்க குருமார்கள் எல்லோரும் இக்காந்தீய சிந்தனைப் படிப்பை ஆதரிக்கிறார்கள் பணம் கொடுக்கிறார்கள் பல மாணவர்களிடம் பரவுவதற்குரிய வழியில் இப் படிப்பிற்குரிய சட்ட திட்டங்களை வகுக்கச் செய் கிறார்கள்.

இச்சூழ்நிலையில் தான் ‘மார்க்ஸீயப் பயிற்சி’யை பல்கலைக்கழக டிப்ளமாப் படிப்பாகக் கொணர நண்பர் சங்கரநாராயணன் செய்த முயற்சிகளையும் அதன் விளைவாகத் திரண்ட முற்போக்கான அணியின் செயல்களையும் அவற்றிற்கு ஆதிக்க வட்டங்கள் கொடுத்த நேரடியாகவும், மறைமுகமானவுமான எதிர்ப்புகளையும் சூழ்ச்சிகளையும் கவனிக்க வேண்டும்.

நண்பர் சங்கர நாராயணன் மதுரையில் எஸ் டி.ஸி. என்ற பெரிய டியூடோரில் கல்லூரியின் முதல்வர், முற்போக்கான கல்விக் கொள்கையுடை யவர்.  பல படிப்புகளை சாதாரண மக்கள் பயில் வதற்காகக் கல்லூரியில் பயிலாமல் பிரைவேட்டாக பரீட்சைகள் எழுத அனுமதிக்கவேண்டுமெனப் போராடி வெற்றிபெற்றவர்.  முற்போக்காளர் களான பட்டதாரிகளது ஆதரவால் மதுரைப் பல்கலைக்கழக நிருவாக உறுப்புகளுக்குத் தேர்ந் தெடுக்கப்பட்டவர். தமிழ்ப் பயிற்சி மொழி இயக்கத்தின் குரலை பல்கலைக்கழக அவைகளில் ஒலித்தவர்.  இவர் “மார்க்ஸீய டிப்ளமாப் பயிற்சி”யை “காந்தீய சிந்தனை”ப் பயிற்சியைப் போலவே பல்கலைக்கழகம் துவங்க வேண்டுமென செனட் சபையில் தீர்மானம் கொண்டு வந்தார்.

பொருளாதாரச் சுரண்டல்காரர்கள், மதவாதச் சுரண்டல்காரர்கள் ஆகிய ஆதிக்கக் கும்பல்களின் சூத்திரக்கயிற்றால் இயங்கும் பல்கலைக்கழக அவைகளில் அங்கம் வகிக்கும் கூத்துப்பாவைகள், ‘மார்க்சியப் பயிற்சி வந்தால் வானம் பிளந்து பூமியில் விழுந்துவிடும்; நமது புராதனமான இந்திய நாகரிகமும் ஒழுக்கமும் பாழாகிப் போகும்; நமது சுதந்திரம், ரஷியாவிற்கும், சீனாவிற்கும் அடிமைப் பட்டுப் போகும்; இந்தியாவின் தபோ பலம் குறைந்து மனிதனது ஆத்மீக சக்தி அழிந்து போகும்’ என் றெல்லாம் கூச்சலிட்டார்கள். 

அமெரிக்க செய்தி நிறுவனங்களின் உதவியாலும் தூண்டுதலாலும் பல “அறிவாளிகள்” மார்க்ஸீயத்தைக் கற்பதால் ஏற்படக்கூடிய பேராபத்துக்களை விளக்கி, இந்திய முதலாளித்துவப் பத்திரிகைகளில் எழுதினார்கள்.  விடியவிடியக் கூத்தாடுவதற்கு வசனங்களை டாலர் நாட்டு நாடகாசிரியர்கள் தயாரித்துக் கொடுத் தார்கள்.  உள்நாட்டுச் சுரண்டல்காரர்கள் கூத்து நடத்த அரங்கம் அமைத்து பக்கமேளக்காரர்களை ஏற்பாடு செய்து, நமது நாட்டில் “மக்கள் மதிக்கக் கூடிய எல்லாப் பண்பாடுகளும், ஒழுக்க மதிப்பு களும் கெட்டுப்போகும்” என்று பல சுருதிகளில் லாவணிகளும் ஒப்பாரிகளும் பாட வைத்தார்கள்.

முதல் தடவை சங்கர நாராயணனது தீர் மானத்தை ஆதரிக்க ஒருகைகூட உயரவில்லை.  ஆனால் சங்கர நாராயணனும், நானும் இன்னும் சில பெயர் குறிப்பிட்டால் வேலையிழக்கும் ஆபத்திலுள்ள நண்பர்களும் இவ்வளவு பெரிய கூத்தின் உட்பொருளை, விடாப்பிடியாக அவை உறுப்பினர்களில் மனச்சாட்சி உடையவர்களுக்கும், துவேஷமற்றவர்களுக்கும் விளக்கினோம்.  சமீப காலத்தில் “மதுரைப் பல்கலைக்கழக - ஆசிரியர் சங்கம்” தோன்றி வளர்ச்சிபெற்றது; சங்க உணர்வு பரவிற்று.  கல்லூரி ஆசிரியர்கள் டெல்லி கல்லூரி ஆசிரியர்களின் போராட்டங்களால் நம்பிக்கை பெற்றார்கள்.  அவர்களில் பலர் மார்க்சிய டிப்ளமா பயிற்சி- போராட்டத்தில் முற்போக்கு அணியாக உருவாயினர்.

இதன் பின்னர் இந்தோ- சோவியத் ஒப்பந்தம் கையெழுத்தாகியது.  அதன் முக்கியத்துவத்தை முதலாளித்துவ முரசுகளால்கூட மறைக்க முடிய வில்லை.  சோவியத் யூனியனைப் பற்றியும், கம்யூனிஸம் பற்றியும் மார்க்சிய தத்துவம் பற்றியும் அறியும் ஆர்வம் அளவற்றதாகப் பெருகியது.  லட்சக் கணக்கான மார்க்ஸீய சித்தாந்த நூல்கள் விற்பனை யாயின.  நூல் நிலையங்கள் இந்நூல்களை வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.  சோவியத் வெளியீட்டு நிறுவனங்கள் வெளியிட்ட நூல்கள் நூல் கண்காட்சிகளில் பல லட்சங்கள் விற்பனை யாயின.  நியூசெஞ்சுரி நிறுவனத்தார் வெளியிட்ட தமிழ் நூல்கள் முன்னெப்பொழுதையும்விட அதிக மாக விலை போயின.  இது சிந்தனைகளை மாற்றியது.

இந்நிலையில் செனட் தேர்தலின்பொழுது துவேஷமற்ற, சங்க உணர்வுடைய பல கல்லூரி ஆசிரியர்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

மறுபடியும் சங்கரநாராயணன் செனட்டில் தீர்மானம் கொண்டு வந்தார்.  எதிர்ப்பாளர்கள் மாறிவிட்ட சூழ்நிலையில் மௌனமாயினர்.  எதிர்ப் பின்றித் தீர்மானம் நிறைவேறிவிட்டது: பின், “இந்த அவைக்கு புதிய பயிற்சியைத் துவங்க முடிவுசெய்ய அதிகாரமில்லை, அகாடெமிக் கௌன்சில்தான் இதை முடிவுசெய்ய வேண்டு”மென்று சில சிண்டிகேட் சட்ட நிபுணர்கள் சொன்னார்கள்.  டாக்டர் மு.வ. எல்லாவற்றிலும் ‘நடுநிலைமை”.  ஆனால் தைரியமாக அப்படியொரு தீர்மானத்தை எந்தவொரு அவையிலும் கொண்டுவர அவர் களால் முடியவில்லை.  இனி அடுத்துக்கெடுக்க முடிவு செய்திருக்கவேண்டும்.

பொதுவாக ‘பயிற்சி’யைத் துவங்கவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் உடனே, அதற் குரிய சட்டதிட்டங்கள், பாடத்திட்டம் தேர்வு விதிகள் எல்லாம் தயாரிக்க பல்கலைக்கழக நிருவாகம் ஏற்பாடு செய்யவேண்டும்.  அப்படி எதனையும் செய்ய அது நடவடிக்கை எடுக்க வில்லை.  சங்கரநாராயணனே பலமுறை ப.க. அதிகாரிகளைக் கண்டு நிர்ப்பந்தித்தார்.  இன்னும் பலர் துணைவேந்தரைச் சந்தித்துப் பேசினார்கள்.  இனிமேல் நடுநிலைமைப் பாத்திரம் பொருத்தமா யில்லை.

மூன்று உறுப்பினர் கொண்ட பாடத்திட்டத் தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் பாடத்திட்டம் தயாரித்து செனட் சபையில் சமர்ப் பித்தனர்.  நூற்றுக்குத் தொண்ணூறு விகிதம் நல்ல பாடத் திட்டமே.  மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் நூல்களே அடிப்படைப் பாடநூல்களாக வைக்கப் பட்டன.  இப்பயிற்சிக்குச் சட்டதிட்டங்களும் தயாரிக்கப்பட்டு செனட் சபையில் சமர்ப்பிக்கப் பட்டன.

சட்டதிட்டங்களை தங்கள் நோக்கத்திற்கேற்ப வகுக்கும் திறமையுடைய குழுவினர், மார்க்ஸீயப் பயிற்சி நடைபெறவிடாமல் தடுக்கும் எல்லாவிதத் தடைச்சுவர்களையும் விதிகள் மூலம் புகுத்தி விட்டனர்.

காந்தீயச் சிந்தனைப் படிப்புக்குச் சேர எஸ்.எஸ்.எல்.சி.  தகுதியே போதும்.  மார்க்சியப் பயிற்சிக்குச் சேர பி.ஏ., பி.எஸ்ஸி.,  போன்ற பட்டம்  பெற்றிருக்க வேண்டும்.  இதனால் பட்டப் படிப்பு முடிய கற்பிக்கும் கல்லூரிகளில் உள்ள மாண வர்கள் இப்பயிற்சியில் சேரமுடியாது.  ஆசிரியர்கள் மட்டுமே சேரமுடியும்.  கல்லூரியில் மாணவ ராகவோ, ஆசிரியராகவோ இல்லாத பட்ட தாரிகள் சேரமுடியும்.  அப்படிச் சேருகிற பட்ட தாரிகள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

காந்தீயச் சிந்தனைப் பயிற்சிக்கு முதலாண்டு முடிந்தவுடன் செர்ட்டிபிகேட் பரீட்சை நடை பெறும்.  அதில் தேறியவர்கள் அடுத்த ஆண்டில் டிப்ளமோ பரீட்சைக்குரிய பயிற்சிக்குப் படிக்கலாம்.  முதலாமாண்டில் சேர எஸ்.எஸ்.எல்.ஸி.  தகுதி போதும்.  ஆகையால், கல்லூரியிலுள்ள எந்த மாணவரும் சேரமுடியும்.  ஆனால் மார்க்சியப் பயிற்சிக்கு முதலாண்டு சேரவே பட்டதாரியாக இருக்கவேண்டும்.  அதனால் கல்லூரி மாணவர்கள் யாரும் சேரமுடியாது.  எம்.ஏ., எம்.எஸ்.ஸி.,  முதலிய பட்ட மேற்படிப்பு ((Post Graduate)) மாணவர்களே சேரமுடியும்.  பொதுவாக அவர்களுக்குப் பரீட்சைக் குரிய படிப்புக்கே நேரம் சரியாயிருக்கும்.  சில கல்லூரிகளிலேயே பட்டமேற்படிப்பு உள்ளது.  இதனால் கல்லூரி மாணவர்களிடையே மார்க்சியப் பயிற்சி பரவாமல் தடுத்துவிடலாம்.

காந்தீயப் பயிற்சியை நடத்த தமிழகத்தின் சத்திய விரதர்களான முதலாளிகள் பணம் கொடுக்கிறார்கள்.  அதைக்கொண்டு பல்கலைக்கழகத்தி லேயே ஒரு துறை அமைத்து, அதற்குப் பொறுப் பாக ஒரு இயக்குநரை நியமித்துள்ளார்கள்.

பல்கலைக்கழகம் மார்க்சியச் சிந்தனைப் படிப்புக்கு, தான் தனது நிர்வாகத்தில் ஏற்பாடு செய்யப்போவதில்லை என்று அறிவித்துவிட்டது.  எந்த இணைக்கப்பட்ட கல்லூரியாவது (Affiliate College) விண்ணப்பித்தால் இப்பயிற்சி நடத்த அனுமதியளிக்கப்படும் என்று சுற்றறிக்கை அனுப்பப் பட்டது.  கல்லூரி நிருவாகங்களின் வர்க்கத் தன்மையைத் தோழர்கள் அறிவார்கள்.  எந்தச் சுரண்டல் கும்பலுக்கு இந்தப் பயிற்சியை தமது கல்லூரிகளில் பாடமாக வைக்க ரௌத்திரம் இருக்கும்? ஒரு கல்லூரியும் முன்வராது.  பயிற்சியைக் கை விடத் தீர்மானிக்கலாம் என்று பல்கலைக்கழக ஆதிக்கக் கும்பல் நினைத்தது.

என்னுடைய முயற்சியால் ஒரே ஒரு கல்லூரி இப் பயிற்சிக்கு விண்ணப்பித்தது.  இப்பயிற்சி துவங்கத் தீர்மானித்தது மார்ச்சு மாதம், விண்ணப்பித்தது ஏப்ரலில்.  ஒவ்வொரு பயிற்சிக்கும் “அக்டோபர் மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  காலம் தாழ்த்தி விண்ணப்பம் அனுப்பியதால் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதில் அனுப்பப் பட்டது.  பயிற்சி துவங்க முடிவு செய்வதற்கு முன் 5 மாதங்களுக்கு முன்னரே எப்படி விண்ணப்பிக்க முடியும்.  பயிற்சி இந்த ஆண்டே துவங்குவதாக முடிவு செய்யப்பட்டிருப்பதால், ஜூன் வரை விண்ணப்பிக்க அனுமதியளித்து காலவரை யறையை நீடிக்க வேண்டும் என்று அக்கல்லூரி முதல்வர் எழுதினார்.

பக்கத்திலுள்ள ஒரு சாமியார் கல்லூரி முதல்வர், இக்கல்லூரிக்குக் கட்டிடங்கள் போதாது என்று பல்கலைக்கழகத்திற்குக் கோள் மூட்டினார்.  இப்பொழுது ‘கட்டிடம் காணாது’ என்று சாக்குக் கூறி விண்ணப்பம் மறுக்கப்படும் நிலையிலுள்ளது.  கல்லூரிக்கு அவர்கள் வைத்துள்ள பயிற்சிகளுக் கேற்ற கட்டிட வசதி, தேவைக்கு மேலுள்ளது.  ஆயினும் இப்பயிற்சியை வைக்க முன்வந்துள்ள கல்லூரிக்கும் பாடம் கற்பிக்கவே பொய்ச் சாக்குகள் கூறி அனுமதி மறுத்தார்கள்.

காந்தீய சிந்தனைப் பயிற்சிகளை கல்லூரிகள் நடத்துவது மட்டுமல்லாமல், மதுரை காந்தி மியூஸியத்தின் ஆதரவில் தனியார் கழகம் ஒன்று ((Registered Society) அமைத்து இரண்டு (அல்லது மூன்று) இடங்களில் காந்தீயச் சிந்தனைப் பயிற்சி நடத்துகிறார்கள்.  அவர்களுக்கு எல்லாவிதமான ஆதரவும் அளிக்கப்பட்டுள்ளது.

அதுபோல இரண்டு தனியார் கழகங்களை ஆரம்பித்து மதுரையிலும், திருநெல்வேலியிலும், அதன் ஆதரவில் மார்க்சிய டிப்ளமா பயிற்சி நடத்த, நான் முயன்று வருகிறேன்.  மதுரையில் பேராசிரியர் சங்கரநாராயணனும், நெல்லையில் நானும் இப்பயிற்சிகளை நடத்தும் சொஸைட்டி களுக்குப் பொறுப்பாயிருப்போம்.  காந்தீய சிந்தனைப் பயிற்சியை நடத்த காந்தி மியூசியம் தனியார் சொஸைட்டிக்கு அனுமதி (affiliation) அளித்தது போல இந்தப் பயிற்சிக்கு எங்களுக்கு அனுமதி யளிக்க விண்ணப்பிக்கப் போகிறோம்.

இதற்கும் சட்டம், விட்டம், கட்டிடம், ஆசிரியர் நிதி என்றெல்லாம் தடையெழுப்ப ஆதிக்கக் கும்பல்கள் முயற்சிக்கும்.

பல்கலைக்கழக அவைகளில் முற்போக்காளர் பெற்ற வெற்றியை நிலைநாட்ட எல்லாக் கட்சி களையும் சேர்ந்த முற்போக்காளர் அணி உருவாகி இத்தடைகளையெல்லாம் மீறி, ஆதிக்கக் கும்பல் களின் நிருவாகங்களின் கீழுள்ள கல்லூரிகளுக்கு வெளியே தனியார் சொஸைட்டிகளின் நிருவாகத் திற்கும், மார்க்ஸீய சிந்தனைப் பயிற்சியை நடத்து வதற்கு அனுமதி பெறப் போராட வேண்டும்.

இச்சமயத்தில்தான் மார்க்ஸீய பயிற்சியால் விளையும் தீமைகளைப் பற்றியும், மதுரைப் பல்கலைக் கழகத்தின் கற்பு, மார்க்ஸீயப் பயிற்சியால் குலைந்து விடக்கூடாதென்றும், தமிழ்ப் பத்திரிகைகளும், ஆங்கிலப் பத்திரிகைகளும் எழுதுகின்றன.  பிற் போக்காளர்கள் மார்க்ஸீயத்தை எதிர்ப்பது எதிர் பார்க்கக்கூடியதே.

இந்தக் கூக்குரலில், இடதுசாரிச் சொற்களால் எதிர்ப்பு முழக்கம் செய்யும் தீக்கதிரின் பரிதாப மான ஊளையையும் கேட்கிறோம்.  ஓநாய்க் கூட்டத்தின் மத்தியில் தன்னை வேறாகக் காட்டிக் கொள்ள சிவப்புச் சாயம் பூசிக்கொண்ட குள்ள நரியின் கதையாக இருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சியின் ஓலம்.

அவர்கள் மார்க்சிஸ்ட் சிந்தனைப் பயிற்சியை பல்கலைக்கழகமும், கல்லூரிகளும் நடத்தக் கூடாதென்பதற்குக் கூறும் காரணங்கள் எவை?

முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ தத்து வார்த்த நிலையமான பல்கலைக்கழக நிழலில் புரட்சித் தத்துவமான மார்க்சியத்தை நேர்மை யாகக் கற்பிக்க முடியுமா?

முதலாளித்துவத்தோடு சமரசம் செய்து கொண்டு விட்ட திருத்தல்வாதிகளால் புரட்சித் தத்துவமான மார்க்சியத்தை அதன் புரட்சித் தன்மை விளங்க கற்பிக்க முடியுமா?

புரட்சியில் ஈடுபடுகிறவர்களுக்குப் படித்துப் பட்டம்பெற்று மார்க்சியப் பண்டிதர் என்று சொல்லிக்கொள்ள அவசியம் உண்டா?

எந்த வகையில் பார்த்தாலும் இப்படிப்பு அவசியமில்லை.

முடிவு புரட்சியின் பெயரால், திருத்தல் வாதத்தின் பெயரால் இவர்கள் கோயங்காவுடனும், சோவுடனும், சிவராமனோடும், ஆனந்த விகடன் ஆசிரியரோடும், ஆதித்தனோடும், பல்கலைக்கழக கும்பல்களுக்கு துணைபோவதுதான், பயிற்சியில் இந்நூல்களைப் படித்து அறிவுபெறும் திறன் மாணவர்களுக்கு இல்லையென்பது தீக்கதிரின் முடிவா?

ஏகாதிபத்திய, முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ நிழலில்கூட மார்க்சிய நூல்களின் சிந்தனை ஒளி மாணவர்களின் உள்ளத்தில் சுடர் விட முடியாதா? உலகமெங்கும் ஒளிபரப்பி விண்ணகத்தின் உச்சத்தில் ஏறி நிற்கும் மார்க்சியச் சூரியனை முறத்தால் மறைக்கிறார்கள் ஆதிக்கக்காரர்கள்.  நீங்களும் அந்த நிழலில் மார்க்சிய ஒளி பரவக்கூடாதென்று சொல்லுகிறீர்களா?

இப்படியெல்லாம் நீங்கள் உளறுவதற்குக் காரணம் இம்முயற்சிகளில் எல்லாம் உங்களுக்குப் பங்கில்லை என்பதும், உங்களால் மார்க்ஸீய கல்வி முயற்சிகளில் பங்காற்ற முடியவில்லை என்ற கையாலாகாத் தன்மையும் காரணமா?

மார்க்சியமும், புரட்சியும் இவர்களுக்கேற்ப பரம்பரைக்காணி போலும், அது முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ நிழலில், இளம் மாணவர்களுடைய உள்ளங்களில் பதிந்து விடக்கூடாது என்று பிற் போக்காளர் நினைப்பது இயற்கை.  இவர்கள் நினைப்பது ஏனோ? இந்நிழலில் உள்ள நூலகங் களில் மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்கள் நுழைந்து விடக்கூடாது.  யார் கற்பித்தாலும், மார்க்சிய மூல நூல்களைப் படிப்பதால், உண்மையான மார்க்சி யத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளுகிற அறிவில்லாதவர்கள் என்பது தமிழக மாணவர் களைப் பற்றி மார்க்சிஸ்டு கட்சியினர் மதிப்பீடா?

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிற்று விக்கப்படும் மார்க்ஸீய எதிர்ப்பு நூல்களை ஆதார மாகக் கொண்ட மார்க்ஸாலஜி போலல்லாமல், மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், பிளெக்கனாவ், உலியனாவ்ஸ்கி முதலியோர் நூல்களையும், மார்க்சிய எதிர்ப்பு நூல்களுக்குப் பதிலளிக்கும் மார்க்சிய வாதிகளின் நூல்களையும், மாவோவின் நூல் ஒன்றையும் சநகநசநnஉந நூல்களாக வைத்துள்ள நிலையில் இந்த வக்கிர நிலையை நீங்கள் கைவிடு வீர்களா? தமிழ்நாட்டு மார்க்சிய ஆர்வலர்கள், மார்க்சியக் கட்சிகள், முற்போக்கு இடதுசாரி மாணவர்கள், சங்க உணர்வு பெற்ற கல்லூரி ஆசிரியர்கள், ஆசிரியர் கூட்டணிச் சங்கங்கள், இவர்களோடு நீங்கள் சேர்ந்து நின்றாலே நீங்கள் பிராக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டுள்ள (மார்க்சிஸ்டு) என்ற பட்டத்துக்கு மதிப்பு இருக்கும்.

இந்நிலையில் உலக வியாபகமான, பல விஞ்ஞானத் துறைகளில் முறையிலாகப் பயன் படுகிற, விஞ்ஞானங்களால் உறுதிப்படுத்துகிற மார்க்சிய தத்துவத்தை டிப்ளமா பயிற்சியாக்கு வதற்கு, எல்லாத் தடைகளையும்.  எதிர்ப்புகளையும் முறியடிக்க தமிழகத்தின் முற்போக்காளர் அனை வரும் ஓரணியில் திரளவேண்டும்.

மார்க்சிய சிந்தனை மாணவரிடையே பரவ, எளிதில் அனுமதியளிக்கவேண்டுமென பல்கலைக் கழகத்தை வற்புறுத்த வேண்டும்.

காந்தீய சிந்தனைப் பயிற்சிக்குரிய விதிகளையே மார்க்சிய சிந்தனைப் பயிற்சிக்கும் அமுலாக்க வேண்டும்.

தனியார் சொஸைட்டிகள் இப் பயிற்சியை நடத்த காந்தீயப் பயிற்சிக்கு அனுமதியளித்திருப்பது போல் அனுமதியளிக்க வேண்டும்.

இக்கோரிக்கைகள் தமிழகத்தின் முற்போக் காளர்கள் அனைவருடைய முழக்கங்களாக மாற வேண்டும்.

முற்போக்காளர்களது தீவிர முயற்சிகளின்றி மார்க்சிய ஒளி பல்கலைக்கழக இருட்டினுள் நுழைய முடியாது, முற்போக்காளர்கள் தங்களது ஒளிவிளக்குகளை ஏந்தி ஒன்று திரளவேண்டும்.

Pin It

kamarajarமனிதன் வரலாற்றில் வாழ்கிறான்.  புதிய வரலாற்றைப் படைக்கிறான்.  வரலாற்று உணர்வு வளரும் சமூகத்தின் அச்சாணி.  தனி மனிதர்கள் வரலாற்று மனிதர்களாக உருவாவதை தவிர்க்க முடியாது.  மனிதர்கள், நிகழ்வுகள், முரண்கள், போராட்டங்கள், கண்டுபிடிப்புகள் ஆகிய வளர்ச்சியின் கூறுகளே வரலாற்றுக் காரணிகளாக திகழும். அவ்வகையில் வாழ்க்கை வரலாறுகள், தன் வரலாறுகள் போன்றன சமூக வரலாற்று உருவாக்கத்துக்குத் தரவுகளாக அமையும்.

‘பெருந்தலைவரின் நிழலில்’ பெருந்தலைவர் காமராசர் குறித்த பழ. நெடுமாறனின் வரலாற்று நூல்.  இது காமராசரின் வாழ்க்கை வரலாற்றின் பகுதியா, பழ. நெடுமாறனின் தன் வரலாற்றின் பகுதியா என்றால் இரண்டும்தான் எனச் சொல்லலாம்.  இன்னொரு வகையில் விடுதலைக்குப் பின்னான கால் நூற்றாண்டு இந்திய, தமிழக அரசியல் வரலாற்றின் சிறுபகுதி என்றும் கொள்ளலாம்.

“வாழையடி வாழையென

வந்த தமிழ்ப் பெருமரபில்

ஏழைமகன் ஏழையென

இன்னமுதே நீபிறந்தாய்!

நிமிர்ந்தால் தலையிடிக்கும்

நிற்பதற்கே இடமிருக்கும்

அமைவான ஓர்குடியில்

ஐயா நீ வந்துதித்தாய்!”

எனக் கவியரசு கண்ணதாசன் சொல்வது போல மிகவும் ஏழ்மையான வாழ்க்கைச் சூழலில் பிறந்தவர் காமராசர்.  அவர் பிறந்த குலமும் அன்றைய நிலையில் மிகச் சாதாரணமானதுதான். இவருக்கு கல்வியறிவும் அதிகமில்லை. மாறாக, விடுதலை இயக்கத்தில் பெருந்திரள் மக்களை ஈர்த்து வழிநடத்திய காங்கிரஸ் பேராயக் கட்சியின் தலைவர்கள் பெரும்பாலும் பெருஞ் செல்வர்கள்; நிலவுடைமையாளர்கள்; உயர்குடிப் பிறப்பினர்; ஆங்கிலக் கல்வி கற்றவர்கள்.  இச்சூழலில் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தன்னலமற்றத் தன்மை, நாட்டுக்குழைக்கும் நாட்டம் ஆகியவற்றை மட்டும் மூலதனமாகக் கொண்டு உருவானவர் காமராசர்.  அனுபவ அறிவாற்றலை மிகச் சரியாகப் பயன்படுத்தி வளர்ந்தவர் அவர்.  அன்றைய தமிழ்நாட்டுக் காங்கிரஸின் முன்னணித் தலைவர்களாக விளங்கிய சேலம்

பி. வரதராஜூலு நாயுடு, ஈ.வே.இராமசாமி நாய்க்கர், திரு.வி. கலியாணசுந்தர முதலியார் ஆகிய மூவரின் அரவணைப்பில் வளர்ந்தவர் காமராசர்.  இந்த மூவரின் கருத்துச் செல்வாக்கும் காமராசரிடம் கடைசிவரை இருந்தது.  1903-ல் பிறந்த காமராசர் 1919-ல் பதினாறு வயதில் பொது வாழ்வுக்கு வருகிறார்.  பல்வேறு போராட்டங்கள், இயக்கங்களில் பங்கேற்கிறார்.  பொறுப்புகளில் செயல்படுகிறார்.  1940 தொடங்கி பன்னிரண்டு ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக உள்ளார்.  1954 தொடங்கி 1964 வரை ஒன்பதரை ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விளங்கினார்.  1964-ல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராகிறார்.

பழ. நெடுமாறன் மிக அழகாக இந்நூலை அமைத்துள்ளார்.  1958-ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மாணவர் தலைவர்களில் ஒருவராக முதலமைச்சர் காமராசரை முதன் முதலாகச் சந்திக்கிறார்.  பின்னர் 1964 தொடக்கம் காமராசர் மறைவெய்தும்

1975 வரை பெருந்தலைவரின் நம்பிக்கைக்குரியவராய், நிழலாய், மனசாட்சியின் நீட்சியாய் தான் விளங்கிய அனுபவத்தை உலக, இந்திய, தமிழக அரசியல் பின்புலத்தில் இந்நூலில் பதிவு செய்கிறார்.

அறுநூற்றைம்பது பக்கங்களில் அறுபத்தெட்டு இயல்களில் சுவைபட நூல் அமைந்துள்ளது.  தனி மனிதர் என்ற நிலையில் காமராசரின் பண்பு நலன்கள் பல இடங்களில் சுடர்விடுகின்றது.  எந்த நிலையிலும் தன் குடும்பம், உறவுகள் தன்னைப் பயன்படுத்தக் கூடாது என்பதில் கவனமாக காமராசர் இருந்தார்.  கடைசிவரை வாடகை வீட்டிலேயே குடியிருந்தார்.  வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு எவ்வித விருந்தோம்பல் உபசரிப்பு களும் கூடாது.  காரணம் “எனக்கே கட்சி சோறு போடு கிறது.  இந்த அழகில் விருந்து வேறா” என விளக்கம் தருவார்.  இப்படி பல நெகிழ்வான நிகழ்வுகள் நூல் முழுதும்.

அரசியல் தலைவர் என்ற நிலையில் எவ்விதப் பாரம்பரியப் பின்புலமோ, நிர்வாக அனுபவமோ இல்லாத காமராசர் முதலமைச்சராக எப்படி முன்னும் பின்னும் ஒப்பாரற்று செயலாற்ற முடிந்தது என்பதை மிகத் தெளிவாக நூல் சுட்டுகின்றது.  சுயநலம் இல்லாப் பொதுநல உள்ளம் வாய்த்தால் எல்லாம் சாத்தியம்தான்.  மக்கள் நலன், வெகு மக்கள் பயன்பாடு, உடனடி சுகத்தைவிட தொலை நோக்குப்பலன் என்பவைதான் காமராசரின் உயர்ந்தச் செயல்பாடுகளின் ஊற்றுக் கண்கள்.  அதேபோல விருப்பு, வெறுப்பற்ற மனநிலை அரசியலில் தனக்கு எதிர்நிலை எடுத்த சி. சுப்பிரமணியம், பக்தவத்சலம் போன்றோரை தன் அமைச்சரவை சகாக்களாக்கினார்.  இந்தியாவின் கேடுகளில் பெருங் கேடான சாதி விசயத்தில் கறாராக இருந்தார்.  சுய சாதி அபிமானத்தை விட்டொழித்தவர் என்பதற்கு இந்நூலில் பரவலாகச் சான்றுகள்.  குத்தூசி குருசாமி கூட்டிய

சாதி ஒழிப்பு மாநாட்டிற்கு இவரையே தலைமைக்கு அழைத்தார்.  காரணம், எந்தச் சாதி சங்க மாநாட்டிலும் கலந்து கொள்ளாதவர் என்பது தான்.  அதேபோல இந்து அறநிலையத் துறைக்கு ஒடுக்கப்பட்டப் பிரிவைச் சேர்ந்த பரமேஸ்வரனை அமைச்சராக்கியது.  கக்கனை காங்கிரஸ் மாநிலத் தலைவராகவும், உள்துறை அமைச்சராகவும் ஆக்கியது போன்றவற்றை பழ. நெடுமாறன் எடுத்து மொழிகிறார்.

காமராசர் கொண்டுவந்த பல்வேறு திட்டங்கள், நெய்வேலி, ஆவடி, மணலி, திருச்சி, கொடைக்கானல் நிறுவனங்கள் - பரம்பிக்குளம் - ஆழியாறு போன்ற நீர் நிலைப் பெருக்குத் திட்டங்கள் துல்லியமாக நூலில் இடம் பெறுகின்றன.

அரசின் செயல்பாடுகளுக்கு அச்சாணிகளான அதிகாரிகளை காமராசர் அணுகியவிதம், அரசியல் தலையீடு அதிகமின்றி சுயமாக செயல்படும் அதிகாரத்தை அளித்தது போன்றவை நூலில் பதிவாகின்றன.  பொதுக் கல்வி இயக்குநராக இருந்த நெ.து. சுந்தரவடிவேலுவின் படத்தினை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.  ஓர் அதிகாரியின் படத்தை அவர் பணியில் இருக்கும் போது, முதலமைச்சர் பாராட்டித் திறப்பது, இன்றையச் சூழலில் நிறைவேறாத அதிசயம் தானே?

nedumaran book 350காமராசரின் சோவியத் பயணம் 21 நாட்கள் நடை பெறுகிறது.  சோவியத் நாட்டில் லெனின் அவர்களின் இருபெரும் வளர்ச்சி திட்டங்கள் கல்வி, மின்சாரம் என்பதைக் கண்டறிகிறார்.  அக இருள் போக்கிடக் கல்வி, புற இருள் போக்கிப் புதுமைகள் படைத்திட மின்சாரம், ஆக இவ்விரண்டும் தமிழகத்தின் இரு கண்கள் எனத் திட்டங்கள் வகுத்திட முனைகிறார்.  காந்தி - நேரு - லெனின் ஆகிய மூவரின் சிந்தனைக் கூட்டுறவை காமராசர் பிரதிபலிக்கிறார்.

காமராசரின் அரசியல் வாழ்வில் அவர் கொண்டு வந்த ‘ரி றிறீணீஸீ’ இந்திய அரசியலில் பூகம்பமானது.  அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவரானதும் மாநிலத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்களின் கருத்துக்களை அறிந்து முடிவெடுக்கும் ஜனநாயகப்பேற்றை உருவாக்கினார்.  தானே தலைமை அமைச்சராக ஆகும் வாய்ப்பு இருமுறை வந்தபோதும் அதனை நெஞ்சுரத்துடன் தவிர்த்தார். 

லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி ஆகிய இருவரையும் தலைமையமைச்சராக்கினார்.  காங்கிரஸ் இயக்க முன்னோடிகளை, அவர்தம் குடும்பங்களைப் போற்றிப் பாதுகாத்தார். அதே நேரத்தில் மொரார்ஜி தேசாய் போன்றவர்கள் தலைமைக்கு வருவதை நேரடி யாகவே எதிர்த்தார். ஜெ.பி. இயக்கத்தின் குழப்பத் தன்மையை எடுத்துரைத்தார்.

அகில இந்திய அரசியலின் பல்வேறு கூறுகள் இந்நூலில் ஆங்காங்கு சிதறிக்கிடக்கின்றன.  கட்சி, ஆட்சி மற்றும் கொள்கை, அதிகாரம் ஆகியவற்றுக்கான உறவும் தொடர்பும் பகையும் பல இடங்களில் பதிவா கின்றன.  தமிழ்நாடு, இந்திய அரசியல்வாதிகள் பலரின் அறியப்படாத முகங்கள் சிறு புள்ளிகளாக தெரிகின்றன.  காந்தியமும், நேருவியமும் மெல்ல கரைவதன் அறிகுறிகளை சில நிகழ்வுகள் சுட்டி நிற்கின்றன.  காமராசரிடம் ஒருவித ஜனநாயகத் தன்மை எப்போதும் குடிகொண்டிருந்ததை பழ. நெடுமாறன் பலவிடங்களில் பதிவு செய்கிறார்.

‘காலா காந்தி’ எனக் கொண்டாடப்பட்ட போதும் ‘கருப்புக் காக்கையை கல்லால் அடியுங்கள்’ எனத் தூற்றப் பட்டபோதும் ஒரே மனநிலையில் இருந்தவர் காமராசர் என்பது கவனிக்கத்தக்கது.  இந்த நிதானம் தான் அவரை சிறந்த தலைமையாக்கியது எனலாம்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடு குறித்த முதல் திருத்தம் வர பெரியார் அடிப்படை வகுத்தார்.  காமராசர் துணை நின்றார்.  எல்லைப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்றவற்றில் சரியான முடிவெடுத்தார்.  காலமும், சூழலும் கனியவில்லை.  தமிழ் முதன்மை, தமிழ் வழிக்கல்வி, அனைத்து மொழிகளுக்கும் ஆட்சியுரிமை போல்வன கானல்நீராய் போய்விட்டன.

காமராசர் அறிஞர்களை, கலைஞர்களைப் போற்றினார்.  கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் மன மொன்றிப் பழகினார்.  ஜீவா, பாலன், பி. ராமமூர்த்தி, எம். கலியாணசுந்தரம், கே.டி.கே. தங்கமணி, ஆர். நல்லகண்ணு மற்றும் கேரளா, இந்தியத் தலைவர் களுடன் நல்லுறவைப் பேணினார்.  உலக அளவில் இந்தியா, சோவியத் அணியில் இருப்பதை உறுதி செய்தார்.  பெரியார், இராஜாஜி, அண்ணா ஆகியோருடன் அணுக்கத் தொடர்பில் இருந்தார்... என்றெல்லாம் நூலின் நுவல் பொருள் விரிந்து கொண்டே செல்கிறது.

இன்று அரசியல் ‘வெறுப்பு அரசியலாக’ச் சலிப்பைத் தருகிறது.  காமராசரைக் கொல்ல முயன்ற பசுக் குண்டர்கள் இந்திய அடையாளத்தையே அழிக்க முயல்கிறார்கள்.  அதிகாரம் என்பதே லஞ்சம் ஊழல் என்றாகி விட்டது.  பொது வாழ்வு என்பது சுகபோக சம்போகி களின் கூடாரமாகிவிட்டது.  எளிமை, நேர்மை, தூய்மை, அர்ப்பணிப்பு என்பவை அகராதிப் பொருளை இழக்கத் தொடங்கிவிட்டன.  நிலமும், மக்களும் கணம் தோறும் கதறிக் கொண்டிருக்கின்றனர்.  குறைகள் - விமர்சனங்கள் - எதிர்க்கருத்துக்கள் இருந்த போதும் இது மாதிரி தலைவர்கள் நம் காலத்தில் தான் வரலாற்றின் ஆகச் சமீபத்தில் தான் வாழ்ந்தார்கள் என்ற ஒற்றைவரி வரலாற்றையாவது எதிர்காலத் தலைமுறைக்கு விதைத்திட இம்மாதிரி நூல்கள் அவசியம் தேவை.

பெருந்தலைவர் காமராசர் அதிகம் பேசாதவர்.  ஆர்ப்பாட்டமில்லாதவர்.  பிறரைப் பாராட்டத் தெரியாத வரும் கூட.  அவரால் அடையாளம் காட்டப்பெற்று ‘மாவீரன்’ எனக் கொண்டாடப்பட்டவர் அய்யா பழ. நெடுமாறன்.  தொடர்ந்து பல அரிய நுல்களைத் தரும் அவரையும் பாராட்டுவது தமிழ்க்கடமை.

பெருந்தலைவரின் நிழலில்

பழ.நெடுமாறன்

வெளியீடு : தமிழ்க்குலம் பதிப்பாலயம்,

119ஏ, டிப்போ லைன், சி.பல்லவபுரம்,

சென்னை - 600 0043

தொலைபேசி  : 044-22440451

விலை: ` 600/-

Pin It

பிரெஞ்சு இலக்கியத்திலும் திரைப்படத்திலும் அரசியல் தத்துவார்த்தத் துறைகளிலும் அலைவீசி அடித்து ஓய்ந்து விட்ட நவீன திருத்தல்வாதத்தின்  கர்த்தா ஜீன்பால் ஸார்த்தர், பிரெஞ்சு அறிவு ஜீவிகளின், மாணவர்களின், மாவோயிஸ்டுகளின் ஆன்மீக வழிகாட்டி (Spiritual Leader) என்று பிரகடனப்படுத்தப்பட்டவர்.

பிரெஞ்சு நாட்டிலேயே தோல்வியைத் தழுவிய இவருடைய திருத்தல்வாதத்தை ஏந்தி, இந்தியாவின் கம்யூனிஸ எதிர்ப்பு, சோவியத் எதிர்ப்பு அரசியல் இலக்கியவாதிகள் கிளம்பி இருக்கிறார்கள்.  அமெரிக்க பிரிட்டிஷ் பிரசுராலயங்கள் இவர் புத்தகங்களை பெருமளவில் அச்சிட்டு விநியோகிக் கின்றன.  இந்தியாவின் ஏகபோகங்களின் பத்திரி கையில் துவங்கி சின்ன இலக்கியப் பத்திரிகைகள் வரையிலும் இவரைப் பற்றி கட்டுரைகளும் புத்தகங்களும் பிரச்சாரம் செய்கின்றன.

முதலாளித்துவ நாடுகளில் தோன்றிய புதிய இடதுசாரிகளின் ((Newleft)) தத்துவ ஆசானாகவும் இவர் திகழ்கிறார்.  இவருடைய தத்துவம் பற்றியும், அரசியலில் இவரது நிலைப்பாடு என்ன என்பது பற்றியும், சமூகப் பொருளாதாரம் பற்றியும், கலை இலக்கியம் வர்க்கப் போராட்டம் பற்றியும்- இவரது தத்துவார்த்த இயக்கம் பற்றியும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி என்ன சொல்கிறது என்பதையும் சுருக்கமாகத் தொட்டுக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இரண்டு ஸார்த்தர்களாக பிளவுபடுகிற, சுய முரண்பாடுகளில் சிக்கிய குழப்பமுற்ற ஜீன்பால் ஸார்த்ரேயை இனி நாம் சந்திப்போம்.I

தலைவிதியோ கடவுளின் விருப்பமோ முன் கூட்டியே அவனுக்காக வகுக்கப்பட்ட ஒரு அமைப்போ, முன்கூட்டியே அவனுக்காக வகுக்கப்பட்ட சாராம் சமோ அவனைக் கட்டுப்படுத்துமேயானால் அவன் சுதந்திரமானவனாக இருக்கமாட்டான்.  சமயச் சார்பான அமைப்புகள், அரசியல் அறநெறிகள், தத்துவம் சார்ந்த மாறாத அமைப்புகள் எதிலும் மனிதனைப் பொருத்தி விடுவதை ஸார்த்தர் எதிர்க்கிறார்.

நமது இலட்சியங்கள், நமது மதிப்பீடுகள், நமது உலகம் ஆகியவற்றை உருவாக்குவதற்கான முழுப் பொறுப்பையும் நாம் எடுத்துக் கொள்ளும் போதுதான் வாழத்தகுதி (authentic) உடையவர்கள் ஆகிறோம், நாம் நமது உலகை உண்டாக்கிக் கொள்கிறோம் என்கிறார் ஸார்த்தர்.

ஸார்த்தரின் முழுமுற்றான சுதந்திரம் வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது பிரெஞ்சு மக்களின் நாஜி எதிர்ப்பு இயக்கத்தில் பிறந்தது.  நாஜி விஷம் நமது சிந்தனைகளில் ஊடுருவியதன் காரணமாக ஒவ்வொரு சரியான சிந்தனையும் நாம் ஈட்டிய வெற்றியாகும்.  சர்வ வல்லமை வாய்ந்த போலீஸ் படையொன்று நமது நாவுகளை அடக்குமாறு நிர்ப்பந்தித்ததின் விளைவு, நாம் உதிர்த்த ஒவ்வொரு சொல்லும் கொள்கைப் பிரகடனம் என்கிற மதிப்பைப் பெற்றது, ‘இந்தக் கேவலத்தைக் காட்டிலும் மரணமே மேலானது’ என்கிற வார்த்தைகளில் வெளியிட்டிருக்கப்பட வேண்டிய தேர்வு ஆகும் இது என்கிறார் ஸார்த்தர்.

அசலான தேர்வு பற்றிப் பேசும்போது ஸார்த்தர் அது இணக்கத்தை மறுப்பது என்கிறார்.  ஒடுக்கு முறையை எதிர்க்கும் நமது சக்தியில்தான் சுதந்திரம் இருக்கிறது என்கிறார்.  மனச் சுதந்திரத்தை இயக்கம் முடக்கப்பட்ட அனாதரவான சக்தியற்ற மனிதர் களின் சுதந்திரம் என்கிறார்.  எனவேதான் ஸார்த்தர் சுதந்திரமும் செயலும் பிரிக்கப்பட முடியாதவை என்கிற நிலைப்பாட்டினை எடுக்கிறார்.

மனிதனின் வாழ்க்கைக்கு முன்பே இருக்கக் கூடிய மாற்ற முடியாத சாராம்சங்களும் மதிப்பீடு களும் ஏதும் இல்லை.  இந்த வாழ்க்கைக்கு உள்ள அர்த்தம் ‘இல்லை’ என்று சொல்வதிலும், ‘இல்லை’ என்று சொல்வதின் மூலம் ஓர் உலகை உருவாக்கு வதும்தான் என்கிறார் ஸார்த்தர்.

ஸார்த்தருக்கு புறப்பொருளைப் பற்றிய அக் கறையே இல்லை.  அப்படியானால் புறப்பொருளின் தொடர்பு அற்ற பிரக்ஞை, தனக்குத்தானே விரி வடைந்துகொண்டே இருக்கவேண்டும்.  இப்படி விரிவடைவது தொடர்பற்ற நிலையில் எவ்வாறு சாத்தியம்? ஸார்த்தரின் பிரக்ஞை தனக்குள் முடங்கி யிருக்கவில்லை.  செயலுக்குள் பிரவேசிக்கிறது.

ஸஇங்கே கொஞ்சம் சிந்திப்போம்.  அதாவது ஸார்த்தர் புறஉலகுக்குள் பிரவேசிக்கிறார்.  வாழ்க்கை பற்றின மதிப்பீடுகளும் சாராம்சமும் கொண்ட போராட்ட உலகத்துக்குள் பிரவேசிக்கிறார்.  அப் புறம் மீண்டும் அவர் உலகத்தை அவருக்கேயான அக உலகத்தை உருவாக்குவார்.  புறப்பொருளின் தொடர்பற்றுப் போவார்.  அக உலகில் விரி வடைவார்.  விஞ்ஞானத்தை மறுப்பார்.  மீண்டும் புற உலகுக்கு வருவார், மீண்டும் அக உலகுக்கு...]

மரபு வழிப்பட்ட மனிதாபிமானக் கோட் பாட்டைப் போலவே மானுட விரோதக் கொள் கையும் அர்த்தங் கெட்டதாகும் என்கிறார் ஸார்த்தர்.  (இங்கேயும் ஒரு உள் முரண்பாடு ((Internal Contradiction) மானுட விரோதக் கொள்கை என்று நிர்ணயம் செய்வதே, மனிதாபிமானம் என்ன என்பது பற்றின மதிப்பீட்டிலிருந்தும் சாராம்சத்தி லிருந்தும் நிர்ணயிக்கப்படுவதே என்பது ஒரு நடைமுறை அனுபவம்.)

ஒரு சுதந்திரமான மனிதன் தனியனாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் தான் மேற்கொள்ளும் முடிவுகளுக்கு முழுமையான பொறுப்பை ஒப்புக் கொள்ள வேண்டும்.  எனக்கு மற்றவனும் மற்றதும் புறப்பொருள்கள்.  மற்றவனுக்கு நானும் இதர பொருட்களும் புறப்பொருள்கள் என்கிறார் ஸார்த்தர், மனிதனின் உளவியல் இந்த அடிப்படையில் ‘நான் மற்றது’ என்ற பிரிவின் அடிப்படையில் செயல் படுகிறது என்றார் ஸார்த்தர்.  மனிதனின் சாராம்சம் ஃபிராய்டு கருதுவது போல் ஈடிபஸ் சிக்கலில் இல்லை. ஹிட்லர் கருதுவதுபோல் தாழ்வு மனப் பான்மையிலும் இல்லை. பிரக்ஞைபூர்வமற்ற மனம் என்பதே இல்லை என்ற முடிவுக்கு வருகிறார்.

சமுதாயம் என்பது வெறும் கூட்டம். பெரும் அனாமதேயம்.  அது தனிநபர், மற்றவனுடன் போராடிக் கொண்டிருக்கும் போர்க்களம், மனிதன் சமுதாயத்தைக் கண்டனம் செய்வதில்தான் தன் இயல்பான, சாராம்சத்தன்மையைப் பெறுகிறான்.  வாழத்தக்க அசலான வாழ்க்கைக்கான போராட்டம் மனிதன் மனிதனுக்கு எதிராக நடத்த வேண்டிய ஒன்றாகும்.  அறம், நியாயம், மதிப்பீடு என்பன தன்னிச்சையான, முழுமையான சுதந்திரத்தின், விருப்பத்தின் முடிவு என்கிறார் ஸார்த்தர்.

(வர்க்கத்திற்கு அப்பாற்பட்ட ஒழுக்கமோ அறமோ நியாயமோ இருக்க முடியாது என்கிறார் லெனின்.  வர்க்கங்களுக்கு இடையில் இருக்கிற போராட்டத்தை மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் இருக்கிற போராட்டமாகச் சுருக்கு கிறார் ஸார்த்தர்.  மனிதன் சமுதாயத்தை, அது சோஷலிசம் ஆனாலும், கம்யூனிசம் ஆனாலும், முதலாளித்துவம் ஆனாலும் - கண்டனம் செய்வதே தன் இயல்பான சாராம்சத்தைப் பெற வழி என்கிறார் ஸார்த்தர்.  இயற்கையிடமிருந்தும், சமுதாயத்திட மிருந்தும் தன்னைப் பிரித்துக்கொள்ளும் மனிதனின் சுதந்திரம் எத்தன்மையானதாக இருக்கும்? அது அராஜகமானதாகவே இருக்கும்.  ஆகவேதான் ஸார்த்தர் மாவோயிஸ்டுகளுக்கு தலைமையேற்க முடிகிறது).

பொருளாதாரம், அடித்தளம், தத்துவம், கலை ஆகியவை மேல் கட்டுமானம் என்கிற மார்க்ஸீயக் கோட்பாட்டைக் கடுமையாகத் தாக்குகிறார், தமக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று கருதக் கூடியவர்களால் மட்டுமே ஒரு உண்மையான புரட்சிகரமான நிலைபாட்டை எடுக்க முடியும், இச்சுதந்திரத்தை அதிகாரபூர்வமான கம்யூனிஸ்ட் கட்சியின் கெடுபிடியான நிர்ணயவாதத் தத்துவம் மறுக்கிறது எனக் குற்றஞ்சாட்டுகிறார்.

(இதே ஸார்த்தரின் நிர்ணய வாதங்களை ஏற்றுக்கொண்ட ஒரு இயக்கம் சாத்திய மில்லையா? என ஸார்த்தரே கேட்கின்ற நிலைக்கு வந்தார் என்பது அனுபவ உண்மை).

காரணம் - விளைவு என்பதெல்லாம் முட்டாள் தனமான மார்க்சிய வாய்ப்பாடு என்று பேசிய ஸார்த்தர், மனிதனது சுதந்திரமானது ஒரு இலக்கினை நோக்கிப் பயன்படுத்தக்கூடிய காரணகாரியத் தொடர்பிலிருந்து பிரிக்க முடியாதது என்று தனக்கெதிராகவே இன்னொரு ஸார்த்தரை நிறுத்துகிறார்.

தனிமனித சுதந்திரம் பற்றிப் பேசின ஸார்த்தர், மற்றவர்களின் சுதந்திரத்தை அங்கீகாரம் செய்வது தான் தனிமனிதனின் சுதந்திரத்துக்கான ஊற்றுக் கண் என்ற நிலைக்கும் வருகிறார்.  விஞ்ஞான நிர்ணயத்திற்கு நேரான முரணனான முழுமை யான சுதந்திரத்தை வலியுறுத்திய இவர் மானுட இலட்சியங்களைச் சாதிக்க விஞ்ஞான விதியைப் பின்பற்றும் நிலைக்கு வந்து சேருகிறார்.

தன் சொந்தத் தேர்வில் இன்னிலைக்கு வந்து சேர்ந்த ஸார்த்தருக்கு சமுகப் பொருளாதார வர்க்கப் போராட்டம் பற்றின தெளிவான பிரக்ஞை இல்லை.  இவர் வர்க்கப் போராட்டத்தை மனிதனுக்கும் மனிதனுக்கும், இளைஞனுக்கும் முதியவனுக்கும், அப்பாவுக்கும் மகனுக்கும் நடக்கும் வயது வித்தியாசப் போராட்டமாகக் குறுக்கி விட்டார்.

முதலாளித்துவ உலகின் போட்டியான எந்திர நாகரிகத்தில் சிக்கிவிட்ட இந்த மனிதனின் நியாய மான ஆனால் திசைதவறிய போக்குகளை அவர் பேட்டியின் மூலமே இரண்டாவது பகுதியில் காண்போம்.

genepal 600II

ஸார்த்தரின் தத்துவார்த்த முரண்பாடுகள் அவர் அரசியல் நடவடிக்கைகளில் எப்படி எதிரொலித்தது எனப் பார்ப்போம், இப்பகுதியில் 1969 Le Nouvel observator  என்கிற பிரெஞ்சுப் பத்திரிகைக்கு ஸார்த்தர் அளித்த பேட்டி கீழ்வருவது:

“பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு முன்னே உள்ள ஒரே வழி பலாத்காரம்.  இதிலிருந்து யாரும் தப்பமுடியாது.  இன்றைய மாணவர் களுக்கு முன்னால் மூன்று வழிகள் இருக்கிறது.  நாம் அவர்களுக்கு உருவாக்கி வைத்திருக்கிற இந்த சமுதாயத்தின் தூக்குக் கயிற்றுக்குத் தலை கொடுப்பது, அல்லது இந்த அமைப்போடு சமரசம் செய்து கொள்வது, அல்லது புரட்சியின் முன்னணிப் படையான தொழிலாளி வர்க்கத்தோடு சேர்ந்து கொரில்லா யுத்தம் நடத்துவது; இந்த அமைப்பை நொறுக்கித் தள்ளுவது.”

1969ல் அப்படிச் சொன்ன ஸார்த்தரின் மாற்றம் பரிதாபமானது! ஸார்த்தர் கோபமாக இந்த முதலாளித்துவ அமைப்பை எதிர்த்து போராட்டத் திற்குப் பிரகடனம் செய்கிறார்.  தொழிலாளி வர்க்கத்துடன் ஒற்றுமைக்கும் அறைகூவல் விடுக் கிறார்.  இவருடைய அதிதீவிர வாதத்தினால் திசை அறியாது தவிக்கிறார்.  காலகாலமாக இருக்கிற முதலாளித்துவத்தின் பழக்க வழக்கங்களின் உறைந்து போன முடிவுகளை ((customery and time worn concepts of propaganda ) பரிசீலனை செய்வதில் தவறி விடுகிறார்.

அந்த ‘நாம்’ யார் என்பது இவரால் தெளிவு படுத்தப்படவில்லை.  ‘நாம்’ உருவாக்கும் இளைஞர் களுக்கு எதிரான உலகம் என்கிறபோது மூத்த தலைமுறையைக் குறிப்பிடுகிறார்.  பழைய தலை முறையை எதிர்த்துக் கொரில்லா யுத்தம் துவங்க வேண்டும் என்கிறார்.  பழைய தலைமுறையைப் பற்றிப் பேசும்போது ஸார்த்தர், எஜமானர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் - சுரண்டல்காரர் களுக்கும், சுரண்டப்படுபவர்களுக்கும் இடை யிலான போராட்டத்தைப் பார்க்க மறந்துவிடு கிறார்.  ‘நாம்’ என்கிற அடைமொழிக்குள் பிரெஞ்சுத் தொழிலாளி வர்க்கம் கண்டிப்பாக இருக்க முடியாது.  இவர் மக்களை வதைப்படுத்தும் போது சமூகப் பொருளாதார அடிப்படையில் அல்லாமல் வயது அடிப்படையில் ((according to age) நிர்ணயம் செய்கிறார்.

இளைஞர்கள்தான் புரட்சியின் தரைக் கண்ணாடி என்கிற டிராட்ஸ்கியைப் போலவே ஸார்த்தரும் குழப்பமான நிலைக்கு வருகிறார்.

அறிவு ஜீவிகள்தான் அனைவரிலும் மேம் பட்டவர்கள்.  அவர்களால் தான் சுய விமர்சனம் செய்துகொள்ள முடியும், தங்களுக்கெதிராகவே தங்களால் போராட முடியும்.  தங்களை விமர் சனத்துக்கு உட்படுத்தித் திருத்திக் கொள்ள முடியும். பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும்.  நிர்ணயங்களை இவர்கள்தான் மறுக்க முடியும்.  இவர்களால்தான் எதுபற்றியும் எங்கேயும் எல்லா வற்றையும் விவாதிக்க முடியும் என்றெல்லாம் முடிவுக்கு வருகிறார் ஸார்த்தர்.

இவரின் பல பேட்டிகளையும் புத்தகங் களையும் படித்தாலும் இவர் என்ன மாதிரி கலைஞனின் சுதந்திரத்தை விரும்புகிறார் என்று கண்டு கொள்ள முடியவில்லை.  ஒன்றுமட்டும் தெரிகிறது.  எந்த அமைப்பையும் எந்த விதமான சமூக உத்திரவாதத்தையும் எதிர்த்த சுதந்திரம்தான் ஸார்த்தரின் சுதந்திரம்.

இப்படி எல்லாவற்றையும் எதிர்த்துக் கலகம் செய்யும் ஸார்த்தர் 1970 ஜனவரி மாதத்திய பேட்டியில் கேட்கிறார்:

‘ஒரு புதிய வகையிலான நசிந்து போகாத ஒரு அரசியல் இயக்கத்தை ((Political Organisation) ஸ்தாபிப் பதை கற்பனை செய்வது சாத்தியமில்லையா?’

இந்த ஸார்த்தர் இப்போது மக்களின் நண்பர் ((Friend of the people) என்கிற பிரெஞ்சு மாவோயிஸ்டு களின் பத்திரிகைக்கு பிரதான ஆசிரியராக இருக் கிறார்.

மாவோவின் கலாசாரப் புரட்சியை அதிகார வர்க்கத்திற்கு எதிரான மாணவர்களின் எழுச்சி என்கிறார்.  தொழிலாளர்களின் அதிகார பீடத்தை எதிர்த்து மாணவர்கள் இளைஞர்கள் போராட வேண்டும் என்கிறார்.  தொழிலாளி வர்க்கக் கட்சியின் தலைமையை எதிர்த்துப் போராடச் சொல்கிறார்.  மாவோவின் ராணுவ அதிகாரத்தை சிலாகிக்கிற இவர் தொழிலாளி வர்க்கத் தலை மையை எதிர்த்துப் போராடச் சொல்கிறார்.

III

இவரைப் புரட்சிக்காரராகக் காட்ட முயற்சிக்கிற சோவியத் எதிர்ப்பாளர்கள், பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் யூனியனுக்கு அடிபணிகிறது, சந்தா செலுத்தும் விவரமில்லாத முரட்டுக் கம்யூனிஸ்டுகள், வறட்டுத் தொழிற்சங்கவாதிகள் ரஷ்யக் கம்யூனிஸ்டுகள் என்று புழுதி வாரித் தூற்றுகிறார்கள்.

இந்தியாவிலும் முதலாளித்துவ நாடுகளிலும் இருக்கிற தான்தோன்றித்தனமான கம்யூனிஸ எதிர்ப்பாளர்களுக்கு ஸார்த்தரைப் பிடிப்பது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.

ஆனால் ஸார்த்தர் கம்யூனிஸ்ட் கட்சியோடு ஒத்துழைத்த சம்பவங்களும் உண்டு.  தொழிலாளி வர்க்கத்தை முன்னணிப் படையாக ஏற்றுக் கொண்ட ஸார்த்தர் கம்யூனிஸ்ட் கட்சியோடு வியட்நாம் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தியதும் உண்டு.  அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் இணைந்து குரல் கொடுத்ததும் உண்டு.

இன்றைய பிரெஞ்சு இளைஞர்களும் மாணவர் களும் ஸார்த்தரின் எக்ஸிஸ்டென்ஷியலிஸத்தி லிருந்து விலகி, கம்யூனிஸ்ட் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களில் இணைந்து செயல்படுவதே இதற்குச் சான்று.  இதைப் பற்றியெல்லாம் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி பின் வருமாறு கூறுகிறது.

“அதி முன்னேற்றமான ஜனநாயகம் என்பது சோஷலிஸத்தை நோக்கிச் செல்லும் ஒரு கட்டம்.

முற்போக்கான ஜனநாயகம் முதலாளித்துவத்தின் அடிப்படை உற்பத்தி சொத்துரிமையை துடைத் தெறிவது அல்ல.  அது அரசு முழுவதையும் தொழி லாளி வர்க்கம் ஆட்சி செய்யும் என்பதும் அல்ல.  நிஜத்தில் அது சோசலிஸமும் அல்ல.  ஆனால் அது பெரும்பாலான மக்களின் தொழிலாளர் களின் நலன் கருதியது.  மூலதனத்தின் செல்வாக்கி லிருந்து பொருளாதாரத்தை விடுவிப்பது.  இது ஏகபோகத்தின் சக்தியை வீழ்த்தி தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் செல்வாக்கை உயர்த்தும்.  தொடர்ந்த தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தில் தலைமைப் பாத்திரத்தை தொழிலாளி வர்க்கம் எடுக்கும்.

ஆகவே முற்போக்கான ஜனநாயகம் என்பது சோசலிசப் புரட்சிக்கான சிறப்பான சூழ்நிலை களை உருவாக்கிக் கொடுக்கும்.

ஆகவே இப்போது முற்போக்கான ஜனநாயகத் துக்காக இன்றைய சூழ்நிலையில் முற்போக்கான இயக்கங்களை ஒன்றுபடுத்துவோம்.”

(பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி 19வது காங்கிரஸில் புதிய இடதுசாரிகள் பற்றிப் பேசும் போது எடீனா பெஜான் (Etienne Fejon) பேசியதி லிருந்து...)

IV

இலக்கியத் துறையிலும் அரசியல் துறையிலும் ‘மார்க்ஸியம்கூட அவ்வளவு புரட்சிகரமானது இல்லை’ என கோஷமிட்ட ஸார்த்தருக்கு இந்தி யாவில் மத்தியதர வர்க்கத்தினரிடம் மதிப்பு பெருகிக்கொண்டு வருகிறது.  இவரது வாழ்க்கை பற்றின கண்ணோட்டம் அரசியல் நடைமுறையை முழுதாக அறிந்து கொள்ளாமலேயே - கம்யூனிஸத்துக்கு எதிராக இவரைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

இவரது தத்துவார்த்தத் தெளிவின்மையையும் அரசியல் சித்தாந்த இலக்கியக் குழப்பங்களையும் அறிவிப்பதோடு இந்தியாவின் இளைஞர், மாணவர் இயக்கங்களை, தொழிலாளி விவசாயி வர்க்கங் களை இணைப்பதற்கு பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு மிக நல்ல முன்னுதாரணம் தருகிறது.

(இக்கட்டுரை 1977 பிப்ரவரி மார்க்சிய ஒளிஇதழில் வெளிவந்தது).

Pin It

ஆதிமனிதன் உடல்நலக் குறைவிற்கான காரணங்களை அறிய முயன்றான்.  நோய்களில் இருந்து தம்மைத் தாமே காத்துக் கொள்ளும் விலங்குகளைக் கூர்ந்து கவனித்தான்.  அதன் பயனாய் விலங்குகளிடமிருந்து மூலிகை மருத்துவ அறிவினைக் கற்றான்.  இந்நோய் தீர்க்கும் கலை நூற்றாண்டுகள் செல்லச்செல்ல மென்மேலும் முன்னேற்றம் பெற்றது.  இதன் பயனாய் மனிதனுக்குத் தேவையான உணவு முதல் மருந்து வரை தாவரத்தில் இருக்கின்றது என்ற நுட்பம் வெளிப்பட்டது.  இக்கருத்தையே மூலிகை மருத்துவத்திற்கான ஆரம்பமாகக் கொள்ளலாம்.

மூலிகை தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் 70-80 விழுக்காடு, குறிப்பாக வளர்ந்து வரும் நாடு களில் முதன்மை மருத்துவமாக பயன்பாட்டில் உள்ளது.  உலகில் மூலிகை மருத்துவத்தின் பயன் பாடு மற்ற வகை மருந்துகளின் பயன்பாடுகளைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக உள்ளதாக உலக சுகாதாரக் கழகம் கணக்கிட்டுள்ளது.  இன்றைய ஆங்கில மருத்துவம் கூட கடந்த நூற்றாண்டுக்கு முன்னர் மூலிகையை அடிப்படையாகக் கொண்டே ஆரம்பமாகி உள்ளது.  எ.கா.: ஆஸ்பிரின், வில்லோ பட்டையிலிருந்தும், டிஜாக்சின் பாக்ஸ் கிளவ் என்ற கையுறை போன்ற செடியிலிருந்தும், குயினைன், சின்கோனா பட்டையி லிருந்தும், மார்பியா கசகசா செடியின் காயி லிருந்தும் தயாரிக்கப்படுகிறது.

மருத்துவ வரலாறு என்பது நோயைக் குணமாக்க மூலிகையிலிருந்து தொடங்குகிறது.  ஆனால், தொழிற்புரட்சிக்குப் பின் சுகாதாரக் கேடுகள் மலிந்த நிலையில் அலோபதி மருத்துவம் தோன்றியது.  அதன் பின்னர் மூலிகை மருத்துவம் ஒரு சிறந்த அரிய நோய் தீர்க்கும் மருத்துவமாக இருப்பினும் ஆங்கில மருத்துவ மோகத்தால் ஆர்வம் குறைந்து இதன் பயன்பாடும் 20ஆம் நூற்றாண்டில் குறைந்தது.

ஏனெனில், மூலிகை மருத்துவத்தினால் பயன் இல்லை அல்லது நோயைத் தீர்க்காது என்பதல்லாது, நவீன மருத்துவத்தினால் அதிக வருமானம் கிடைக் கிறது என்பதனாலும், தடுப்பு மருத்துவம் மற்றும் உடன் தீர்க்கவல்ல சில மருந்துகள் மேலை மருந்தில் கண்டுபிடிக்கப்பட்டதும் ஆகும்.  19ஆம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சி மென்மேலும் வளர்ச்சிபெற்ற நிலையில் மூலிகை மருத்துவமானது போலி மருத் துவம் அல்லது அரைகுறை மருத்துவம் என்று ஒதுக்கித் தள்ளப்பட்டது.  ஆனாலும், 1960ஆம் ஆண்டிற்குப் பிறகு நவீன மருந்துகளால் ஏற்படும் பக்க, நச்சு விளைவுகளைக் கண்டு கவலை கொண்டு, பயந்து இதற்கு மாற்று வழியான இயற்கை மருத்துவமான மூலிகை மருத்துவமே சிறந்தது என்று மூலிகை மருத்துவத்திற்கு ஒரு புதிய வேகம் தோன்றி, பயன்பாடு அதிகரித்தது.  இதன் காரண மாக மாற்று மருத்துவ முறை என்று அமெரிக்காவில் கூட 1992ஆம் ஆண்டு தேசிய நலக் கழகத்தில் ஏற்படுத்தப்பட்டது.  மேலும், உலக சுகாதார நிறுவனம் வளரும் நாடுகளில் நவீன மருத்துவத்தால் தரமுடியாத, பெற முடியாத நிலையில் மருத்து வத்தை மூலிகை மருத்துவத்தின் மூலம் பெற ஆதரவு தெரிவித்து ஊக்கப்படுத்தியது.

இதன் காரணமாக நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் இதன் தேவை அதிகரித்து, பயன்பாடும் மிகுந்து வருகிறது.  ஏனெனில் இம்மருந்துகளுக் கான தயாரிப்புச் செலவு குறைவு.  தங்கள் கலாச் சாரத்திற்கு ஒத்து வருவது, உடலுக்குக் கேடு விளைவிக்காதது என்பதால் ஆகும்.  இருப்பினும் அண்மைக் காலங்களில் எல்லா மூலிகை மருந்து களும் உடலுக்குக் கேடு விளைவிக்காது என்று சொல்வதற்கில்லை.  இன்று பயன்பாட்டில் உள்ள பல மூலிகை மருந்துகள் அவற்றின் தரத்தையும் தீங்கின்மையையும், செயல் திறனையும் ஆய்வு மூலம் நிரூபிக்க தவறிவிட்டது.  இவற்றை மனதில் கொண்டே நவீன மருத்துவத்திற்கு மூலிகை மருத் துவம் ஒரு மாற்றுமுறை மருந்தாகவோ அல்லது நவீன மருத்துவத்தால் தீர்க்க முடியாத நோய்களை தீர்க்க வல்லதாகவோ அமைய அறிவியல்பூர்வமான மருத்துவசோதனைகளைச் செய்து அதன் தீங்கின் மையையும், செயல்திறனையும் நிலைநிறுத்தி மீண்டும் புத்துயிர் அளித்து மூலிகை மருத்துவம் தரமுடன் பயமின்றி பயன்பாட்டிற்கு வர அதற்கான காப்புரிமை பெற்று உலகறிய மீண்டும் தமிழ் மரபு, தமிழ் மருத்துவம் காக்க, தழைக்க வேண்டும்.

மூலிகை மருத்துவத்தின் இன்றைய பயன்கள்

நம்முடைய பரம்பரை தமிழ் மருத்துவத்தில் மூலிகையுடன் அரிய உலோகங்களும் மற்றும் கரிமப் பொருட்களும் சேர்த்தே தயாரிக்கப்படு கின்றன.  ஆனால், மூலிகை மருத்துவம் என்பது மருத்துவ குணமுள்ள தாவரங்களிலிருந்து முதன் மையாக மருந்து உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.  இந்திய முறைகளில் ரிக் வேதம், அதர்வண வேதம், சரகசம்ஹிதா, சுசுருத சம்ஹிதாவிலிருந்தும், தமிழகத்தில் அகத்தியர் முதலான பல நூறு சித்தர்களிடமிருந்தும் மருத்துவச் செய்திகளைப் பெற முடிகிறது.  ஆகவே, வரலாறு படைத்த வர்கள் நாம் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

மூலிகை மருத்துவத்திற்கான மோகம்

அதிகரித்து வருவதற்கான காரணம்

மூலிகை மருந்துகளைப் பயன்படுத்தும் நோயாளிகள் தங்களை மாற்றிக் கொண்டதற்கான காரணமாகச் சொல்லப்படுவது இது மனநிறைவை அளிக்கிறது.  இதன் காரணமாக நாட்பட்ட அல்லது குணப்படுத்த முடியாத நோய்களை, எடுத்துக் காட்டாக நீரிழிவு, புற்றுநோய், மூட்டுவலி மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்பட்ட நிலையில் நவீன மருத்துவம் பயனற்றது என்ற எண்ணம் பெரிதும் வலுப்பெறும் நிலையிலும் இம் மூலிகை மருத்துவம் உதவும் என்பதாகும்.

இதுபோல் வீட்டு மருத்துவத்திலும் தானே குணமாகும் நோய்களான நீர் கோர்வை, தொண்டைப் புண், தேள், தேனீ கொட்டு ஆகியவைகளுக்கும் கண்கண்ட மருந்துகள் நவீன மருத்துவத்தைவிட மூலிகை மருத்துவத்தில் உண்டு.  இதற்கு செலவும் குறைவு, குணமாகும் காலமும் குறைவு.

இவை இன்னும் பல கிராமங்களில் கடை பிடிக்கப்படுகிறது.  அதாவது கிராமப்புறங்களில் நாம் அம்மண்ணுடன் இணைந்து வாழ்கிறோம்.  நோயுள்ள இடத்தில் அதற்கான மூலிகையும் இருக்கும், கிடைக்கும் என்ற கொள்கையும் நமக்கு பரம்பரையாக உண்டு.  இன்றைய நிலையில் நவீன மருத்துவத்தால் ஏற்படும் பக்க விளைவுகள், நச்சு விளைவுகளைப் பற்றி செய்திகள் உடன் நாளிதழ் களில் பளிச்சென்று செய்தியாக வெளியாகி விடுகிறது.  ஏனெனில் அவை முன்னரே அறியப் பட்டவை.  மேலும் மூலிகை மருந்துகளை பக்க விளைவுகள் அற்றது என்று ஒதுக்கிவிடுவது உண்டு.

மூலிகை மருத்துவப் பயன்பாட்டின் வரைமுறைகளும் சட்ட திட்டங்களும்

சந்தையில் தகுதிச் சான்றிதழ் இல்லாத மூலிகை மருந்துப் பொருட்களே 80 விழுக்காடு விற்பனைக்கு உள்ளது.  இதை அம்மருந்துப் புட்டிகளைக்கண்டு அறியலாம்.  எ.கா.  செயல் படும் திறன், பாதுகாப்பு, தரம் மற்றும் பக்க விளைவுகளைப் பற்றிய குறிப்புகளும் அதில் காணப்படுவதில்லை.

மூலிகை மருந்து இன்றும் நாளையும்

மூலிகை மற்றும் சித்த, ஆயுர்வேதம் போன்ற வற்றிற்கான மருத்துவக் கழகங்கள் உலகெங்கிலும் இருந்தாலும் அவை இந்த தகுதியுள்ள நபர்களைத் தான் உறுப்பினராக சேர்த்துக் கொள்ள வேண்டும்; அவர்களும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க எந்தெந்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டுக்கோப்பும் இல்லை என்பதும் வருத்தத் திற்குரியதே.  ஆனால், அவை அனைத்தும் மேலை மருத்துவத்திற்கு உண்டு என்பதும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.

தீங்கற்ற பயன்பாட்டிற்கான மூலிகை மருத்துவம்

பாரம்பரிய மூலிகை மருந்துகள் பலவகை களில், பல பரிமாணங்களில் இயற்கையில் கிடைத் தாலும் அவற்றுக்கு தரச்சான்று, தரக்கட்டுப்பாடு என பல தரப்பட்ட மருத்துவ சோதனைகள் சந்தைக்கு வரும்முன் இருக்க வேண்டும்.  ஆனால், அப்படி இல்லாத நிலையில் அதன் தீங்கற்ற தன்மைகளையும் அதன் பயனையும் குறித்து சான்றிதழ் பெறா மருந்துகளில் பாதரசம், வெண் பாஷாணம், காரீயம், கார்டிசோன் மற்றும் உயிர்ப்பொருள் நச்சுப் பொருள்களும் உள்ளன.  இவற்றால் சிறுநீரகக் கோளாறு முதல் இறப்பு வரையிலும் ஏற்படுகின்றன என்று செய்திகள் வந்துள்ளன.  சில ஆண்டுகளுக்கு முன் கருவிழிப் புண் (Cornea) தான்சானியாவில் 25ரூ சிறுவர் களுக்கு ஏற்படக் காரணம் என்றும், நைஜீரியா, மாளவி போன்ற நாடுகளில் பாரம்பரிய மருந்து களால் உண்டாகியது என்றும் செய்திகள் கூறுகின்றன.

ஆகவே, சாதாரண மருந்துகளுடன் மூலிகை மருந்துகளை எடுத்துக் கொள்ளும்பொழுது மிகுந்த கவனத்துடன் அந்நோய் குறித்த சிறந்த மூலிகை மருத்துவர் பரிந்துரையின் பேரிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும்.  இவை இல்லாத மருந்துக் கடைகளில் விற்கப்படும் மூலிகை மருந்துகளை தானே உட்கொள்ளும் பொழுது தான் மிகப் பெரிய அபாய விளைவுகள் ஏற்படுகின்றன.  அண்மையில் சீனாவில் உடல்பருமனைக் குறைக்க உட்கொண்ட மூலிகை மருந்துகளினால் சிறு நீரகக் கேடு மிகத் தீவிரமாக ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆகவே, கடைகளில் விற்கப்படும் இம்மருந்துகளில் நச்சுத்தன்மையை மருந்தாளுநர்கள் ((pharmacist)) தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

இதே முறையில் தகுந்த முறையில் பாதுகாத்து சேமித்து வைக்கப்படாத மூலிகை டீயிலும் அப்லோடாக்சின் மைகோடாக்சின் உள்ள பூஞ்சனம் வளர்ந்து கல்லீரல் புற்று உண்டாகும் வாய்ப்பு ஏற்படுகிறது.

குண பாடங்களில் இல்லாத மருந்துகள் போலியானவைகளாகவும், கலப்படம் செய்யப் பட்டு, தவறுதலாக பெயர் சூட்டப்பட்டு மூலிகைகள் சேகரிக்கப்பட்டு விற்கப்படுகிறது.  6 மாதமே மருந்துத் தூள்களுக்கு வீரியம் உண்டு.  மேலும் மூலிகை தன் குணத்தை ஓராண்டில் இழக்கிறது.  இதை அறிந்தும் இம்மருந்துகளில் காலாவதியாகும் தேதி மற்றும் பக்க விளைவுகளையும் நச்சு விளைவுகளையும் மருந்துப் புட்டிகளில் உள்ள லேபிள்களில் அல்லது தனியாக அதனுள் உள்ள மருந்தின் விவரம் அடங்கிய சீட்டுகளிலேயே போடுவதில்லை.  சில சமயங்களில் இவை அலோபதி மருந்துகளுடன் கலந்தும் விற்பனைக்கு வருகிறது.  எ.கா.  மூலிகை யுடன் கார்டிசோன் கலந்து ஈளை (ஆஸ்மா) நோய்க்கு கொடுக்கப்படுகிறது.

சில சமயம் உள்ளே உள்ள மருந்துக்கும் லேபிளில் உள்ள பொருளுக்கும் சம்மந்தம் இன்றி விற்கப்படுகின்றன.  அதாவது தரக்கட்டுப்பாடு இல்லை.  சரியாக மூலிகையைக் கண்டுபிடித்து சேகரித்து மருந்தாக்கத் தெரியாது ஒன்றுக்கு மாற்றாக ஒன்று மருந்தாகும் நிலையும் உள்ளது.  ஆகவே, மருந்து வேலை செய்யும் உறுப்புகள், நுண்நோக்காடி ஆய்வு மற்றும் தொழில்நுட்ப சோதனைகளுக்கு உட்பட்ட பின்னரே விற்பனைக்கு வரவேண்டும்.

இதுபோல் மூலிகையில் உள்ள தீங்கை, நச்சை, சுத்திகரித்து நீக்கவும் தெரிந்திருப்பதில்லை.  தெரிந் திருந்தும் மூலிகை மருந்து மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யும்போது இவைகளைப் பற்றி கவலை கொள்வதில்லை.

பயன்பாட்டிற்கு முன் மருத்துவ சோதனை அவசியம்

(Need for clinical trials)

மக்களிடம் நம்பிக்கை பெற, நிலை பெற்று மூலிகை மருந்துகளை விற்க பிரபலமடையச் செய்ய ஆராய்ச்சியாளர்கள், உற்பத்தியாளர்கள், மருத்துவர்கள் சேர்ந்து கடினமான ஆராய்ச்சி முறைகளுடன் மருத்துவப் பரிசோதனைகள் மூலம் தரக்கட்டுப்பாட்டுடன் மருந்தை உற்பத்தி செய்ய வேண்டும்.  தரமான மூலிகை மருந்துகளை உற்பத்தி செய்ய மூலப்பொருட்களின் தரத்தையும் பல வகையான மருத்துவ குணங்களைக் கொண்ட அம்மூலப்பொருட்களின் தன்மையையும் சரிவர கண்காணிப்பது அவசியம்.  ஆக சிறந்த முறையில் தயாரித்து மனிதர்களிடம் சோதனை செய்வதற்கு முன் மிருகப் பரிசோதனை போன்ற பல சோதனை களும் அவசியம்.  இவை நவீன மருத்துவத்திற்கு இணையாகத் துணைபுரிகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

சோதனையாக மனிதர்களிடம் கடைசியாக நோயாளி மருந்தென்று நம்பும் மருத்துவப் பொருளையும், உண்மையான மருந்தையும் கொடுத்து ஏற்படும் பக்க விளைவுகளை ஆய்வு செய்து முடிவு களைக் கொண்டு, தரத்தையும் மற்றும் பக்க விளைவு களையும் அறிய வேண்டும்.  ஆக, மேலை மருத்துவ மருந்துகளுடன் மூலிகை மருந்து விற்பனையில் அல்லது உடல்நல மேம்பாட்டில் போட்டிபோட இச்சோதனைகள் அவசியம்.  இதற்கு பணச் செலவு அதிகமாகலாம்.  ஆனால், இவை முடியாதவை அல்ல.  இது மக்கள் நலத்திற்காகவே அன்றி ஒரு பொருளை விற்பனை செய்வதற்காக அல்ல என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.  இது போன்ற சோதனை ஸ்விட்சர்லாந்தில் சின்சங்கிற்கும், இத்தாலியில் திராட்சை விதைகளுக்கும் நடை பெற்றுள்ளது.  இதேபோல் ஜெர்மனியில் பூண்டிற்காக சோதனை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது.

மனிதர்களுக்குப் பயன்படுத்த 1997இல் புதிதாக அனுமதி பெற்ற 520 மருந்துகளில் 39 விழுக்காடு இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் ஆகும்.  இவைகளில் 60-80 விழுக்காடு நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளும் புற்றிற்கான மருந்துகளும் ஆகும்.

பென்சிலின், பூஞ்சனத்திலிருந்தே பெறப் பட்டு பாதரசத்திற்குப் பதில் கிரந்திக்கு மருந் தானது.  இதேபோல் ஊமத்தை (பெல்லடோனா) இன்று வரை கண் மருத்துவத்திற்கும் மற்றும் இரைப்பை, குடல் நோய்க்கு நுண்ணுயிர் கொல்லி யாகவும் பயன்படுகிறது.  ராவல்பிய சர்பண்டினா என்ற (நாகதாளி வேரில்) ரிசர்பின் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மன நோய்க்கும், இரத்தக் கொதிப்பிற்கும் மருந்தாகப் பயன்பட்டது.  இதுவே தூக்க மருந்தாக இந்தியாவில் பலநூறு ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.  1994 வரை 119 மூலிகையின் உட்பொருட்கள் உலக அளவில் மருத்துவப் பயன்பாட்டில் உள்ளன.

அமெரிக்காவில் பெரும்பான்மையாக விற்கப் படும் மருந்துகள் இயற்கையான பொருட்களி லிருந்தோ அல்லது அதை ஒத்ததாக உள்ள பொருட் களினாலோ தயாரிக்கப்படுகிறது.  மேலும், இயற்கைப் பொருட்களில் உள்ள ஆர்வம் மிகுந்து அண்மைக் காலங்களில் கடல்வாழ் உயிரினங்களிடமிருந்தும், செடிகளிலிருந்தும், புதிய வகை மருந்து கண்டு பிடிப்புகள் மிகுதியாகி உள்ளது.  கணினியால் தானே இயங்கும் மனித இயந்திர உதவியுடன் மிகச்சிறிய அளவில் கிடைக்கப்பெறும் மூலிகையில் உள்ள மருத்துவப் பொருட்களை எளிதில் ஆய்வு செய்யப்படுவது இதற்கு மிகுந்த உதவியாக உள்ளது.  இதற்குமுன் இதுபோன்ற சோதனை பல மாதங்கள் சோதனைச் சாலைகளில் நடைபெற்றன.  மேலும் மிகச்சிறந்த மருத்துவப் பொருட்களைப் புது மூலிகையிலிருந்து கண்டுபிடிப்பது எளிதானதல்ல.  தமிழ்நாட்டில் பாரம்பரியமாக நாட்டு மருத்து வர்கள், சித்த, யுனானி, ஆயுர்வேத மூலிகைகளின் பலனை அறிந்துள்ளனர்.  இதற்கான நூல்கள் நம்மிடம் வேண்டுமளவு உள்ளன.  ஆனால், இவைகளும் மறைபொருளாகவே (சித்த மருத்துவம்) தமிழில் செய்யும் வடிவில் உள்ளது.  பல பயன் படாத மூலிகைகள் காடு, மலைகளில் அழிந்து வருகின்றன.  மேலும் 12.5ரூ மருந்து மூலிகைகள் அழிந்து விடும் அபாயத்தில் உள்ளன.

இந்தியாவில் சற்றேறக்குறைய 45,000 வகை செடிகள் உள்ளன.  அவற்றில் 1500 வகை மருத்துவ குணம் உள்ளது என்று மருத்துவ ஆய்வு நூல்கள் கருதுகின்றன.  இதில் 800 வகை நாட்டு மருத்து வத்தில் பயன்பாட்டில் உள்ளது.  ஆனால், இந்தி யாவில் முக்கியமாக தமிழ்நாடு உலக அளவில் மூலிகையைப் பற்றி அதிகமாக அதன் பயன்பாட்டை அறிந்திருந்தாலும் மூலிகை மருந்து விற்பனையில், பயன்பாட்டில் பின்தங்கி உள்ளது.

நம் நாட்டில் மூலிகை மருந்து பயன்பாட்டிற்கு அல்லது வளர்ச்சியடையாத நிலைக்கு பல காரணங்கள் உண்டு.  இந்தியாவில் உள்ள பரிசோதனைக் கூடங் களிடையேயும் மருத்துவர்களிடையேயும் சரியான ஒத்துழைப்பு இல்லை.  மேலும் பொதுத்துறை நிறுவனம் கொடுக்கும் உதவியை சரிவரப் பெற மருந்து தயாரிப்பாளர்களுக்கு சரியான வழிவகைகள் தெரிவதில்லை.  ஆராய்ச்சி மற்றும் மருத்துவ வளர்ச்சிக்கான (சு & னு) நிறுவனங்களுக்கும் மூலிகை மருத்துவர்களுக்குமிடையே உள்ள செயலும் எதிர் செயலும் சிறப்பாக இல்லை அல்லது ஒத்துழை யாமையும் ஒரு முக்கிய காரணமாகும்.  ஆட்சி யாளர்களும் மூலிகை மருத்துவத்தைப் பற்றி அவ்வப்போது பேசினாலும் அங்கங்கே சிதறிக் கிடக்கும் மருத்துவர்களை ஒன்றுபடுத்தி மூலிகை மருத்துவத்தை மேம்படுத்த முயற்சிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை என்பதும் மறைக்க முடியாத உண்மை.

மூலிகை மருத்துவம் தினசரி பயன்பாட்டிற்கு வர எந்தெந்த தடைகளைத் தகர்க்க வேண்டும்

மூலிகை மருத்துவத்தின் பலன் மற்றும் தரத்தை நிலைநாட்ட பல தடைகளைக் கடந்தாக வேண்டி யவர்களாக உள்ளோம்.  தற்கால மூலிகை மருத்து வர்கள் தாவர அறிவியல் மருத்துவம் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.  சில பழமைவாதிகளான மருத்துவர்களுக்கு அதன் சாற்றில் உள்ள தன்மையை நாம் விளக்க வேண்டி அதன் தரத்தில் நம்பிக்கை வைக்க நம்பகத் தன்மையை ஏற்படுத்த வேண்டும்.  இத்துடன் சில மருத்துவர்கள் மூலிகையைச் சாறு பிழியாது அப்படியே கொடுப்பதுதான் மிகச் சிறந்தது.  அதனைச் சாறாக்கிக் கொடுக்கும்போது அதில் பலன் போய்விடுவதாகவும் நினைக்கிறார்கள்.  சில நாட்டு மருத்துவர்கள் குறுக்கு வழியில் அதிலுள்ள பொருளை அறிந்து கொள்ள முயற்சிக்கின்றனர்.  அப்படித் தெரிந்தாலும் இவர்கள் அதிலுள்ள பொருள்களை மற்றவர்கட்கு வெளிப்படுத்து வதில்லை.  இது தேவை எப்படியெனில் பழங்குடி மக்கள் மற்றும் நாட்டுப்புற மருத்துவர்களின் மருத்துவ முறைகளின் ரகசிய உண்மைகளை எளிதில் அறிந்து, அல்லது திருடி உள்நாடு மற்றும் வெளிநாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஏமாற்றிவிடக்கூடும்.  ஆகவே, இம்மருந்துகளை சராசரி பயன்பாட்டிற்கு பெரிய அளவில் கொண்டு வருவது என்பது ஒரு சவால் ஆகும்.

தற்பொழுது நூல்கள், ஆண்டறிக்கைகள், சஞ்சிகைகள், தொலைக்காட்சி குறிப்பாக வலைத் தளங்களில் தவறான முறையற்ற மூலிகை மருத்துவ விளம்பரங்களினால் குணமடையக்கூடும் என்ற நம்பிக்கை ஒன்றை மூலதனமாக வைத்து, ஆனால் உண்மையில்லாது, தவறான செய்திகளைப் பரப்பு கின்றனர், விற்பனை செய்கின்றனர்.  இதில் புட்டி களின் அட்டைகளில் பல மருந்துகளில் உள்ள பொருள்களும், எப்படிப் பயன்படுத்துவது என்று கூறியிருந்தாலும் சில மருந்துகளிலேயே அதன் தீங்கற்ற தன்மை அல்லது தரம் கூறப்படுகிறது.  எ.கா.: எட்டிரின் போன்ற மருந்துகளுக்கு அதன் நச்சுத் தன்மைகளை அறிந்திருந்தாலும் அவைகூட மருந்து விளம்பரங்களில் ஒரு எச்சரிக்கையாகக் கூடச் சொல்வதில்லை.

மற்றொரு பிரச்சினை, ஒரு மூலிகையின் மருந்து இந்த அளவு கொடுத்தால் நல்ல குணப்பாடு கிடைக்கும் என்று மருத்துவ சஞ்சிகைகளில் தெரி விக்கப்பட்டாலும் அவை இவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை அல்லது அம்முறையைப் பின்பற்றுவதில்லை.  இதற்கு மாறாக, சில தவறான, மறுமுறை திரும்பப் பயன்படுத்த முடியாத முடிவுகள் மருத்துவ சஞ்சிகைகளில் வரும்பொழுது மருத்துவர் களும் அதை நம்பி கலப்படம், மற்றும் சரியாக மூலிகையைக் கண்டறியாதபொழுது கலப்படமான அதனைப் பயன்படுத்தவும் தள்ளப்படுகின்றனர்.  மற்றும் அவர்கள் சரியான மூலிகையின் அறிவியல் பெயரையும், நோயாளிக்குக் கொடுக்க வேண்டிய சரியான அளவையும் அறிந்திருப்பதில்லை.

முடிவுரை

உலகில் வளரும் நாடுகளில் மூலிகை மருத்துவப் பயன்பாடு அதிகரித்து வருகிறது.  இது பொது மக்களின் விருப்பத்தினாலும் மற்றும் அம்மூலிகை களின் அறிவியல் செய்திகளை அறிந்து கொள் வதினாலும் ஆகும்.  நல்ல மருத்துவர் இனி நோயைக் குணமாக்க மூலிகை மருத்துவத்தை ஒதுக்க முடியாது.  ஆகவே, மருத்துவர் இதைப் பற்றிய தேவையான செய்திகளை அறிந்துகொண்டு வரும் நோயாளிகளிடம் மனம் திறந்து பேசவேண்டும்.  அதேபோல நோயாளிகளும் தாங்கள் சாப்பிட்ட நல்ல மூலிகை மருந்துகளைக் குறித்து மருத்து வரிடமும் கூற, மருத்துவர்கள் அதுபோன்ற நோய் களைத் தீர்க்க அவ்வகை மூலிகை மருத்துவரை நாடிச்செல்ல வழி அமையும்.  இந்நிலையில் மருத்துவர் நோயாளியின் முழு வரலாறு, உண்ட மருந்தின் பெயர், அளவு ஆகியவற்றை நவீன மருந்துகளுடன் இணைத்து ஆய்வுக்குட்படுத்த முயலலாம்.  நாட்பட்ட நோய்கள், எ.கா.  எய்ட்ஸ், மற்றும் புற்று போன்ற நோய்களுக்குக் கொடுக்கப் படும் மூலிகை மருந்தினால் சில பக்க விளைவுகள் வரலாம்.  இதையும் நாம் நோயாளியிடம் எடுத்துக் கூறி அதற்கான சரியான மருத்துவமும் அந்நிலையில் மேற்கொள்ளலாம்.  கடைசியாக மருத்துவர் எந்த மருந்துகளைக் கொடுத்தாலும் அவைகளைக் கண்காணித்து அவை பயன்படுகிறதா அல்லது தீங்கிழைக்கிறதா என ஆய்ந்து சரியான முடிவுக்கு வந்த பிறகே மருந்தின் குணப்பாட்டை சீர்தூக்க வேண்டும்.  இப்படிச் செய்தால் மூலிகை மருந்தும் மிகச் சிறந்த முறையாக வருங்காலத்தில் வெற்றி பெற முடியும் என்பது திண்ணம்.

Pin It

உட்பிரிவுகள்