படித்துப் பாருங்களேன்...

David Ludden: 1996, Making India Hindu, Oxford University Press

david-luddan ungal noolagamஇந்தியாவில் செயல்பட்டு வரும் அரசியல் கட்சிகள், கட்சியின் துணையமைப்பாக இருவகையான அமைப்புகளைக் கொண்டிருக்கும். முதலாவது அமைப்பு வர்க்க அமைப்பாகும். இவ்வமைப்பினுள் உழைக்கும் மக்களுக்கான தொழிற்சங்கம், விவசாய சங்கம் என்பன அடங்கும். இரண்டாவது அமைப்பு வெகுசன அமைப்பு எனப்படும். இவ்வமைப்பினுள் மாணவர் இயக்கம், இளைஞர் அமைப்பு, மகளிர் அமைப்பு, கலை, இலக்கியம், பண்பாடு தொடர்பான அமைப்பு என்பன அடங்கும்.

இவ்விரு அமைப்புகளும் ஒரு வகையில் சுயேச்சைத் தன்மை கொண்டவை யாகவும், மற்றொரு பக்கம் அவ்வமைப்புகளைக் கொண்டிருக்கும் அரசியல் கட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரண்படாதவாறும் செயல்படும். தாம் சார்ந்துள்ள அரசியல் கட்சியினை இவை கட்டுப்படுத்தாது.

ஆனால் இப்போக்குக்கு நேர்மாறாக ஓர் இயக்கம் இந்தியாவில் உள்ளது. ஆர்.எஸ்.எஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘ராஷ்டிரிய ஸ்யம் சேவக் சங்’ என்ற அமைப்பு, இந்து சமயம் சார்ந்த ஒரு பண்பாட்டு இயக்கமென்று தன்னை வெளிப்படுத்திக் கொண்டு உள்ளது. ஆனால் உண்மையில் இது மத அடிப்படை வாத இயக்கமாகும். எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராத இயக்கமென்று கூறிக்கொள்ளும் இவ்வியக்கம், தனக்கென ஓர் அரசியல் கட்சியை உருவாக்கி உள்ளது. அந்தக் கட்சிதான் பாரதீய ஜனதாக் கட்சியாகும்.

இதர அரசியல் கட்சிகள் தனது வர்க்க அமைப்பு களுக்கும், வெகுசன அமைப்புகளுக்கும் வழிகாட்டு வதற்கு மாறாக இங்கு ஒரு வெகுசன அமைப்பு ஓர் அரசியல் கட்சியை வழிநடத்திச் செல்கிறது. இவ்வாறு இந்தியாவில் ஓர் அரசியல் கட்சியை தனக்கெனக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். சிறுபான்மையினர் எதிர்ப்பு, மதத்தின் பெயரிலான கலவரங்கள், செல்லரித்துப்போன காலத்துக்குப் பொருந்தாத மரபுகளைப் பேணுதல், கருத்துரிமை எதிர்ப்பு என்பன போன்ற செயல்பாடுகளைக் கொண்டியங்குவது. தன்னைப் பண்பாட்டுக் காவலனாகக் கருதிச் செயல்படும் இவ்வமைப்பு சராசரி மனிதர்களின் வாழ்வில் குறுக்கீடு செய்யும். ஆனால் பணம் படைத்தோரிடம் ஒதுங்கியே நிற்கும்.

சான்றாக காதலர் தினத்தை நேரடியாகவும், இதன் துணை அமைப்புகள் வாயிலாகவும் எதிர்த்தும், காதலர் தினத்தன்று நாய்களுக்கும், கழுதைகளுக்கும் திருமணம் செய்வித்தும். காதலர்கள் மீது வன்முறையை ஏவும். இது இந்தியப் பண்பாட்டுக்கு எதிரானது என்று முழங்கும். அதேநேரத்தில் பணம்கொழிக்கும் கிரிக்கெட் போட்டிகளின்போது ‘சியர்ஸ் கேர்ள்ஸ்’ என்ற பெயரில் நிகழும் ஆபாச நடனத்தைக் கண்டு கொள்ளாது. (இந்தியக் கிரிக்கெட் வாரியத்தில் பி.ஜே.பி கட்சியைச் சேர்ந்த அருண்ஜெட்லி இடம்பெற்றுள்ளது நினைவில் கொள்ளத்தக்கது)

இந்தியாவின் சமூக வாழ்வில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக எதிர்மறையான செயல்பாடுகளைக் கொண்டியங்கும் இவ்வமைப்பு குறித்து வரலாற்றாய்வாளர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக வியலாளர்கள் ஆகியோர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும்.

இந்நூலின் பதிப்பாசிரியர் டேவிட் லுடன் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றுபவர்.

Pleasant History In South India என்ற இவரது ஆய்வு நூல் தமிழகத்தின் தென்மாவட்டமான திருநெல்வேலிப் பகுதியில் நிகழந்த வேளாண் நில உறவுகளையும் சமூக மாறுதல்களையும் விவரிக்கும் ஆழமான ஆய்வு நூல்.

* * *

இந்தியாவில் வகுப்புவாதத்தையும் அதன் பல் வேறு பரிமாணங்களையும் விளக்கி எழுதப்பட்டுள்ள பல கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. வரலாறு, மானுடவியல், அரசியல், ஊடகம், கலை, இலக்கியம், சமயம், சாதி ஏற்றத்தாழ்வு, வர்த்தக பொருளாதார நலன் போன்ற பல கண்ணோட்டங்களில் இந்துத்துவாவை இந்நூல் ஆய்வு செய்கிறது என்று தம் முன்னுரையில் டேவிட் லுடன் குறிப்பிடுகிறார்

டேவிட் லுடனின் முன்னுரையில் இடம்பெற்றுள்ள சில முக்கியச் செய்திகள் வருமாறு: இந்தியாவின் வகுப்பு வாதம் காலனி ஆட்சியாளர் உருவாக்கியதாகும். வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து அன்னியச் சுரண்டல் ஆட்சியானது தன் மேலாண்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக உருவாக்கி வளர்த்தவொன்று.

விடுதலையைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரிவினையை அடுத்து சற்றே ஓய்ந்திருந்த வகுப்புவாதம், 1980களில் மீண்டும் தீவிரமாகத் தலைதூக்கி 1990களில் அதன் முழுப் பரிணாம வளர்ச்சி வடிவத்தை பாபர் மசூதி தகர்ப்பிலும், பம்பாய்த் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்வுகளிலும், குஜராத் இனப்படுகொலைகளிலும் வெளியே காட்டியது. இந்த வளர்ச்சி மற்றும் அதன் செயல்பாடுகளை அவற்றின் பல்வேறு படிநிலைகளில் விவரித்து விளக்குவதில் இந்நூல் ஓரளவு வெற்றி கண்டுள்ளது.

இந்து - இஸ்லாம் முரண்பாட்டின் வெளிப்பாடாக வகுப்புவாதத்தைப் பார்ப்பது இந்தியாவில் வழக்கமாகி விட்டது. இதற்கு எடுத்துக்காட்டாக 1990இல் அகமதா பாத்தில் நடைபெற்ற இந்து-இஸ்லாமியர் மோதலை வெறும் வகுப்புவாதமாக மட்டுமே சித்தரித்த போக்கை குறிப்பிடலாம். இதுதொடர்பாக பி.பி.சி நிருபர் மார்க் டலியின் செய்தி அறிக்கையை இந்நூலில் பீட்டர் வான் டர் வீர் பயன்படுத்துகிறார். 1990 ஏப்ரல் 3 அன்று, அகமதா பாத்தில் ஓர் இஸ்லாமியர் குத்திக் கொலை செய்யப் படுகிறார். அடுத்த ஒரு மணி நேரத்தில் தனித்தனி நிகழ்வுகளில் நான்கு இந்துக்கள் தாக்கப்படுகின்றனர். ஊரடங்கு உத்தரவிடப்படுகிறது. அடுத்த மூன்று நாட்களில் பிரச்சனை பெரிதாகி கலவரமாகி காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. நான்காவது நாள், இருபத்தி மூன்று பேர் கொல்லப்படுகின்றனர். இதுவரை பழைய அகமதாபாத் திற்குள் மட்டுமே நிகழ்ந்த கலவரம் ஊர் முழுவதும் பரவுகிறது. ஏப்ரல் 7ஆம் நாள் ஜெகந்நாதர் கோவில் பூசாரி தாக்கப்பட்டதாக பரவிய வதந்தியைத் தொடர்ந்து கலவரம் மீண்டும் வலுப்பெற்று ராணுவம் வரவழைக்கப்பட்டது. ஏப்ரல் 14ஆம் நாள் கலவரம் அடக்கப்பட்டது.

இக்கலவரத்தைப் பற்றிய செய்திகளையும், தலையங்கங்களையும் வெளியிட்ட பத்திரிக்கைகள் அனைத்தும் இதை இந்து - இஸ்லாமியர் மோதலாக மட்டுமே பார்த்தன. ஆனால் கலவரம் ஓய்ந்த பின்னர், பாதிக்கப்பட்ட மக்களை குறிப்பாக ஏழை இஸ்லாமி யரிடம் பேசிய மார்க் டலி கலவரத்தின் பின்புலம் வேறு என்பதை எடுத்துக்காட்டினார். அகமதாபாத் நகரில் நடைபெற்ற கள்ளச்சாராய வியாபாரம், அதில் ஏற்பட்ட தொழில் முறையிலான மோதல்கள், இவ் வியாபாரிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட நிழல் உலகத் தாதாக்கள், அவர்களுக்குக் கேடயமாக முன் வைக்கப்பட்ட சமயம், அகமதாபாத்தில் நிலவிய வறுமை, வேலையின்மை, இவற்றைத் தொடர்ந்த விரக்தி, வெறுப்பு ஆகியன கலவரத்திற்கு காரணங்களாக இருந்ததைச் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் பொருளாதாரக் காரணங்களை பின்புலமாகக் கொண்டு உருவான வகுப்புவாதம் இன்று சமயத்தை மட்டுமே முன்னிறுத்துவதை இந்நூல் விளக்குகிறது.

இந்தியாவின் வகுப்புவாதத்தை நவீனத்துவத்தின் தோல்வியாக அதற்கு எதிர்வினையாகப் பார்க்கலாம். 1980களில் தொடங்கி உலகமெங்கும் தேசியவாதத்திற்கு எதிராகப் பல இயக்கங்கள் வலுப்பெற்றன. இந்தியாவில் காலிஸ்தான், காஷ்மீர், இலங்கையில் தமிழீழம், வளைகுடா பகுதியில் பாலஸ்தீன், அயர்லாந்தில் அல்ஸ்டர், ஸ்காட்லாந்தில் தனி நாடு கோரிக்கை, கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் குயுபெக் தனி அந்தஸ்து கோரிக்கை, ஸ்பெயினில் காட்டலோனியா தனிநாடு போராட்டம் போன்றவை இதில் அடங்கும். இவற்றுக்கு முன்னோடியாக சோவியத் யூனியன் செக்கோஸ்லோவாக்கியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட சிதறலானது தேசியம் என்ற கட்டமைப்பைக் கேள்வி கேட்டன.

இவ்வாறு உலகமெங்கும் தேசியம் என்ற கட்டமைப்பு உடையும் சூழல் ஏற்பட்ட போதெல்லாம் பெரும்பாலும் சமயம் சார்ந்த அடக்குமுறை கையாளப் பட்டதை இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. இதே கால கட்டத்தில் தான் 1980களில் இந்தியாவில் கடை பிடிக்கப்பட்ட நேருவின் கலப்புப் பொருளாதாரம் மாறி தனியார்மயம், தாராளமயம் போன்ற கோட்பாடுகளை முன்வைத்த பொருளாதாரக் கொள்கை வலுப்பெற்றது என்பதையும் விளக்குகிறது.

* * *

இந்துத்துவா அணி திரட்டல், இந்து - இஸ்லாம் முரண்பாடுகளின் வேர்கள், சமூகமும் மோதல்களும் என இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் பகுதியின் நான்கு கட்டுரைகளும் இந்தியா என்ற தேசம் குறித்துப் பலகாலமாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துகளை இந்துத்துவா என்ற கருத்தியல் எவ்வாறு கேள்விக்குள்ளாக்குகிறது என்பதை விவரிக்கின்றன. பல சமயம், பல மொழி, பல பண்பாடு போன்றவற்றின் சங்கமம் என்ற கருத்தை அத்வானியின் ரத யாத்திரை எவ்வாறு சிதைத்தது என்பதை ரிச்சர்ட் டேவிஸ் விளக்குகிறார். பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர்கோவில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டுவதாகக் கூறிக்கொண்டு வி.பி.சிங்கின் ஆட்சியைக் கவிழ்த்த விதமும், ரத யாத்திரைக்கு ஊடகங்கள் அளித்த முக்கியத்துவமும், சமயத்தை முன்னிறுத்தி இந்துக்களை ஒன்றுதிரட்ட எடுக்கப்பட்ட அரசியல் செயல்பாடே இந்த யாத்திரை.

இந்துத்துவா என்பது மக்கள் இயக்கமா அல்லது உயர்தட்டு மக்களின் சதியா என்ற கேள்விக்கு விடை யளிக்க முயற்சி செய்வது அமிர்தா பாசுவின் கட்டுரை. இந்துத்துவா உயர் தட்டு மக்களின் சதி என்பதில் உறுதியாக இருக்கும் பாசு, அதேநேரம் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, வி.ஹெச்.பி போன்ற அமைப்புகளின் பிராமணத் தலைமை மிக எளிதாகக் கீழ்தட்டு மக்களுடன் சேர்ந்து கொண்டு தன்னுடைய நலனைக் காத்து வருகிறதென்பதை தெளிவாக்குகிறார். காங்கிரஸ் கட்சிக்கும், பி.ஜே.பிக்கும் இடையேயுள்ள ஒற்றுமை களை விளக்கும் விக்டோரியா ஃபார்மரின் கட்டுரை, இந்திராகாந்தி அரசு தூர்தர்ஷனை தனக்குப் பயன் படுத்திக்கொண்டதைப் போல பி.ஜே.பியும் நவீன ஊடகங்களைக் கொண்டு இந்துக்களைத் திரட்டப் பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டுகிறார்.

இரண்டாம் பகுதியில் இந்து - இஸ்லாமியர் முரண்பாடுகளின் வேர்கள் ஆராயப்படுகின்றன. இந்துஸ்தான் இசையை ஆய்வு செய்யும் பீட்டர் மேனுவலின் கட்டுரை ‘இந்து இசை’, ‘இஸ்லாமிய இசை’ என இரண்டு கூறுகள் இருந்ததாகக் கூறப்படும் கட்டுக்கதையை உடைக்கிறது. பின்னர் இந்துஸ்தான் இசைதான் ‘இந்து இசை’ என்று வலியுறுத்தியவர்கள் இசையின் மூலமாக அரசியல் ஆதாயம் தேடினர் என்பதை விளக்குகிறார். எனவே இந்து - இஸ்லாம் பண்பாட்டு முரண்பாடுகள் முதுமையானவையல்ல: வகுப்புவாத அரசியலுக்காக உருவாக்கப்பட்ட கருத்தாக்கங்கள் என்பதை இக்கட்டுரை உறுதி செய்கிறது.

சாதுக்கள் மற்றும் சாமியார்களின் நிலையும், செயல்பாடுகளும் எப்பொழுதும் சந்தேகத்துக்குரிய தாகவே இருந்திருக்கின்றன. நிறுவன சமயங்களுக்கு வெளியேயும் இவர்கள் பல சிக்கல்களை ஏற்படுத்தி யுள்ளனர். ஆனால் 1980களுக்கு பின்னர் சாதுக்கள் இந்து சமயத்தின் காவலராக, படைவீரராக பரிணமித்தனர். இந்த மாற்றத்தை விவரிக்கும் கட்டுரையை வில்லியம் ஃபின்ச் எழுதியுள்ளார்.

இந்திய தேசியத்தின் அடையாளங்களாக முன்னிறுத்தப்படும் அடையாளங்களில் பல இந்து சமயத்தின் அடையாளங்களாக முன் வைக்கப்படுகின்றன. இதனால் இந்தியாவையும், இந்து சமயத்தையும் ஒன்றாகக் காட்டி இந்துக்கள் அல்லாதவரை அன்னி யராகச் சித்தரிப்பது இந்துத்துவாவிற்கு எளிதாகி விட்டது. இந்த குழப்ப அடையாள அரசியல், பக்கிம் சந்திர சட்டர்ஜி தொடங்கி இன்றுவரை தொடர்கிறது. இதை விளக்குவது தனிகா சர்க்காரின் கட்டுரை.

காலனிய காலம் தொடங்கி இன்று வரை இந்துக்களும் இஸ்லாமியரும் எதிர்மறைப் பண்பாட்டு பழக்கங்களை கொண்டவர்களாகக் கூறி, இந்துக்களின் அடையாளங்களும் இஸ்லாமியரின் அடையாளங்களும் முரண்பட்டவை என்ற கருத்தாக்கத்தை இந்துத்துவா உருவாக்கிவிட்டது. இந்தக் கருத்தாக்க உருவாக்கத்தை விளக்குகிறது முசிருல் ஹசனின் கட்டுரை.

இந்து தேசியவாதம் மற்றும் பெரும்பான்மையின் வகுப்புவாதத்தை விளக்கும் நான்கு கண்ணோட்டங் களைக் கொண்டது மூன்றாம் பகுதி. இதில் முதல் கட்டுரையை எழுதிய சாண்டிரியா ஃபிரேய்டாக் வகுப்புவாதத்தை காலனித்துவத்தின் பின்விளைவாகப் பார்க்கிறார். நவீனத்தின் வடிவமாக இருந்த காலனித் துவத்தின் விளைவு வகுப்புவாதம். அரசுக்கும் குடிமைச் சமூகத்திற்கும் இடையே ஏற்பட்ட இடைவெளியை வகுப்புவாதம் நிரப்பியது. இதில் பொதுக்கருத்து என்ற தளத்தில் செயல்பட்டு இந்துத்துவாவின் நிலைப் பாட்டை பரவலான பொதுக்கருத்தாக மாற்றி, அதைக் கொண்டு அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சிதான் இந்துத்துவா என்பது இக்கட்டுரையின் வாதம்.

தேசியம் என்ற நவீனத்துவக் கோட்பாட்டில் தேசம் என்பதற்கான அடையாளங்களை வலியுறுத்தாமல் பிற்போக்குத்தனமான சமய அடையாளங்களை முன்னிறுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியை முறியடிக்க நவீனத்துவம் தவறிவிட்டதென்று ரிச்சர்ட் ஃபாக்ஸ் வாதிடுகிறார்.

வகுப்புவாதம் அல்லது சமயச் சகிப்பின்மை இந்தியப் பண்பாட்டில் வேரூன்றியவொன்று என்பது பீட்டர் வான் டர்வீரின் வாதம். இந்துத்துவா கட்ட விழ்க்கும் வன்முறை தனிநபர் வன்முறையல்ல: குழு வன்முறை. இதற்குப் பொருளாதார நெருக்கடிகள் மட்டுமே காரணமல்ல. பல்வேறு மேலாண்மை களுக்காக பல்வேறு தளங்களில் நடத்தப்படும் போராட்டங்களின் மோசமான வடிவங்களில் கீழ்த்தரமான போராட்டம் வகுப்புவாதம் என்கிறார் வான் டர் வீர்.

இன்றையச் சூழலில் விடுதலைக்குப் பின்னர் இதுவரை ஒடுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட சிறு குழுக்கள் தங்களுடைய அடையாளங்களையும் உரிமைகளையும் முன் வைக்கின்றன. இப்புதிய சூழலில் வழக்கமான அதிகார மையங்களின் ஆதிக்கமும், மேலாண்மையும் கேள்விக்குள்ளாகின்றன. பெண்களும், பழங்குடியினரும், விவசாயிகளும், தாழ்த்தப்பட்ட சாதியினரும் வலுப்பெறும் சூழலில், சமயம் என்ற பெரிய அடையாளத்தைக் கொண்டு இச்சிறு அடை யாளங்களை அமுக்கும் முயற்சிதான் இந்து வகுப்பு வாதம். வகுப்புவாதம் குறித்து எழுதும் ஊடகங்கள் இதை வகுப்புவாதமாக மட்டுமே பார்க்காமல் புதிய அதிகார உறவுகளின் சிக்கலாகப் பார்க்க வேண்டு மென்பது சுமித் சர்க்காரின் வாதம்.

புத்தொளி இயக்கத்துடன் தோன்றிய நவீன தேசியத்தில் சமய அடையாளங்கள் மறுக்கப்படுவது மரபு. சமயம், இனம் போன்ற சிறு அடையாளங்களை மறுத்து தேசியம் என்ற பெரிய அடையாளத்தை நவீனத்துவம் முன்னிறுத்தியது. இருப்பினும் பல நாடுகளின் தேசிய அடையாளமாக மதம் தான் அடையாளப் படுத்தப்படுகிறது. இந்தப் பிற்போக்கு வாதத்தைத்தான் பி.ஜே.பி.யும் அதனைச் சார்ந்த வி.ஹெச்.பியும் செய்கின்றன.

ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கெதிராக மக்களைத் திரட்டுவதற்காக அன்று விடுதலை இயக்கம் இந்தியப் பண்பாட்டு அடையாளங்களைப் பயன்படுத்து வதாகக் கூறிக்கொண்டு இந்துசமய அடையாளங்களை வலுப்படுத்தியது. காந்தியும்கூட (இன்று ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி கூறுவதற்கு முன்பே) ‘ராம ராஜ்யம்’ பற்றிப் பேசினார். அவர் பேசிய ‘ராம ராஜ்யம்’ இந்திய மக்களின் ஆட்சி என்று பொருள் கொள்ளப்பட்டது. ஆனால் இன்று பேசப்படும் ராம ராஜ்யம் ‘இந்து ராஜ்யம்’ என்று பேசப்படுகிறது. எனவே இந்து வகுப்பு வாத இயக்கங்களின் அனைத்துச் செயல்பாடுகளிலும், திருவிழாக்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் போன்றவை களில் ஆயுதம் ஏந்தி வருவதும், சிறுபான்மையினருக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்புவதும் சகஜமாகி விடுகிறது. அதுபோல் 1992இல் சூரத்திலும், பம்பாயிலும் இஸ்லாமியப் பெண்களைப் பாலியல் வன்முறைக்குட் படுத்திய போதும், இஸ்லாமிய ஆண்களைக் கொலை செய்யும் முன்னரும், ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘ஜெய் அனுமான்’ என்று வகுப்புவாத வன்முறையாளர்கள் கத்தினர். இதன்மூலம் வன்முறையை ஒரு சமயச் சடங்காக, சமயக் கடமையாக வகுப்புவாதிகள் சித்தரித்தனர். எனவேதான் பாபர் மசூதியை இடித்தபோது அத்வானி, உமாபாரதி மற்றும் பி.ஜே.பி. தலைவர்களுடன், கூட்டம் ‘ஜெய் ஸ்ரீராம்’ ‘ஜெய் அனுமான்’ என்று கத்திக்கொண்டே வன்முறையில் ஈடுபட்டது.

இதுபோலவே வகுப்புவாதம் முன்னிறுத்தும் அனைத்து வாதங்களிலும் இஸ்லாமியர் இந்தியாவை விடப் பாகிஸ்தான் மீது அதிகப்பற்று கொண்டவர்: இந்தியாவிற்கும் இந்துக்களுக்கும் எதிரானவர்: நான்கு மனைவியர் கொண்டவர்: தங்களுடைய எண்ணிக் கையை அதிகரித்துக் கொள்வதற்காகக் குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதில்லை: பணம் கொடுத்து இந்துக்களை இஸ்லாமியராக மாற்ற முயற்சி செய்பவர்: இந்துக்கள் கடவுளாகப் புனிதமாகக் கருதும் பசுமாட்டைக் கொன்று திண்பவர்கள் என்றெல்லாம் சித்தரிக்கப்படுகின்றனர். இந்து-இஸ்லாமிய வகுப்புவாத மோதல்கள் பெரும்பாலானவற்றிற்கு இத்தகையக் கருத்துக்கள் நேரடி காரணங்களாக இல்லாவிட்டாலும், வகுப்புவாத வன்முறையை நியாயப்படுத்த இவை பயன்படுகின்றன என்பது இக்கட்டுரையின் வாதம்.

* * *

இந்நூலில் இடம்பெற்றுள்ள சில முக்கியச் செய்திகள் பின்வருமாறு:

· டி.எச்.எம் டயோட்டா வேனை மாற்றியமைத்து அத்வானியின் ரதம் வடிவமைக்கப்பட்டது. இரு பக்கமும் ‘போர் ரதம்’ போன்ற வடிவமைப்புகள் பொருத்தப்பட்டன. ஓட்டுநரின் இருக்கைக்குப் பின்னால் குளிர்சாதனம் பொருத்தப்பட்ட ஒரு சிறிய அறை அமைக்கப்பட்டது. இதையட்டி அமைக்கப்பட்ட மேடையில் அத்வானியை நடுவில் கொண்ட ஐந்து பி.ஜே.பி ஆட்கள் நின்றனர். அங்கிருந்து ஒலிபெருக்கியில் அத்வானி உரை யாற்றினார். தொலைக்காட்சியில் அப்பொழுது ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில் காட்டப் பட்ட அர்ச்சுனனின் ரதம் போன்றே அத்வானியின் ரதமும் வடிவமைக்கப்பட்டது.

· பண்டையப் போர் சின்னங்களை அத்வானி பூடகமாக பயன்படுத்தியதால் ரத யாத்திரையும், அயோத்தி பிரச்சாரமும் வரலாறு சார்ந்த பொருள் தரும் விதமாக மாறின. இஸ்லாமியருக்கு எதிராகப் பஜ்ரங்தல்லும், வி.ஹெச்.பியும் நடத்திய போ ராட்டமும், இந்திய அரசுக்கெதிராக பி.ஜே.பியும், அத்வானியும் நடத்திய போராட்டமும் வெவ்வேறு என்று சித்தரிக்கப்பட்டாலும் இரண்டும் அடிப் படையில் ஒன்றே.

· வி.ஹெச்.பி உறுப்பினர் மற்றும் அனுதாபிகளுக்குள் வி.ஹெச்.பியின் பிரச்சாரம் இஸ்லாமியருக்கெதிராகக் கிளப்பிய கோபத்தையும், வெறுப்பையும் பார்க்க ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. இந்தியாவில் இஸ்லாமியர் சிறுபான்மையினர் (12 விழுக்காடு மட்டுமே). இவர்களும் வறியவர், சிதறி வாழ்பவர், அரசியல் முக்கியத்துவமற்றவர், பெரும்பான்மையை எவ்வகையிலும் அச்சுறுத்தும் வலுவற்றவர், இத்தகைய ஒரு சிறு குழுக்கெதிராக ஏன் இவ்வளவு வெறி கொண்ட கோபம். இதைப் புரிந்துகொள்வதற்கு காலங்காலமாக இஸ்லாமியர் எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

· இன்றைய இஸ்லாமியர் பாபர், ஒளரங்கசீப்பின் வாரிசுகள்: பண்டைய இஸ்லாமியப் படை யெடுப்புகள் அனைத்திற்கும் இன்றைய இஸ்லாமியர் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்: பாபர், ஒளரங்கசீப் போன்ற மதவெறி மன்னர்கள் ஆக்கிர மித்த இந்து இடங்களில் இன்றும் இஸ்லாமியர் இருப்பதால் அந்த ஆக்கிரமிப்புகளை ஆதரிப்ப வராகச் சித்தரிக்கப்படுகின்றனர்.

· 1991 தேர்தலில் வீடு வீடாகப் பிரச்சாரம் செய்வதில் பெண்களின் முக்கியத்துவத்தை பி.ஜே.பி வலி யுறுத்தியது. ஆண்களைவிடப் பெண்கள் வலுவான ஆதரவாளர், தீவிரமானவர் என்று பெரும்பாலான பி.ஜே.பி தலைவர்கள் நம்பினர். இக்கட்சியின் வலுவையும் சமய ஈடுபாட்டையும் இப்பெண்களின் பங்கேற்பு உறுதி செய்வதாகக் கருதப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலில் இப்பெண்கள் வீடு வீடாகச் சென்றனர். ராம ஜென்ம பூமிக்காக செய்ய வேண்டிய அசாதாரணத் தியாகங்களாக இது சுட்டிக்காட்டப்பட்டது.

· பிஜனூரில் 1990இல் நடைபெற்ற வகுப்புவாதக் கலவரத்தில் சகுந்தலா தேவி என்ற நகரசபை உறுப்பினர் கலவர இடத்திற்குச் சென்று இஸ்லாமி யருக்கு எதிராக இன்னும் கொடூரமாக செயல்படத் தூண்டினார்.

· பெண்களுக்கெதிரான கொடுமைகளைக் கண்டிக்கத் திரளாத நடுத்தர வகுப்புப் பெண்கள், இஸ்லாமியருக் கெதிராக திரண்டது வியப்பாக இருந்தது.

· வகுப்புவாதக் கலவரங்களிலும் பி.ஜே.பி.யின் தேர்தல் பிரச்சாரத்திலும் பெண்கள் கலந்துகொள்ள பல காரணங்கள் இருந்தன. ஆனால் பிஜேபி கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கிய இயக்கங்கள் அனைத்தும் பெண்களாக, பெண் இனமாக, இவர்கள் ஆதாயமோ முன்னேற்றமோ அடையாமல் இவர்களை மட்டுப்படுத்தியது.

· 1980வரை தேர்தலில் இந்து தேசியத்திற்கு அதிக செல்வாக்கில்லை. ஆனாலும் உத்திரப்பிரதேசத்தில் தீவிர இந்து வகுப்புவாதத்தின் எழுச்சியாலும் கடந்த கால வகுப்புவாத மோதல்களின் நினைவுகளாலும் 1947 பிரிவினையாலும் இதற்கென்று ஓரளவு இடமிருந்தது.

· மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரிடையே இந்து நலன் சார்பு நிலை இருந்தது. 1950 முதல் 1960கள் வரை இருந்த முதல் மூன்று உத்திரப்பிரதேச முதல்வர்களும் பந்த், சம்பூரனாந்த், சி.பி.குப்தா இதை நன்றாக உணர்ந்திருந்தனர். வலதுசாரி நிலைப்பாட்டில் தீவிரமாக நின்றனர். ஹிந்தி மட்டுமே என்ற ஒருமொழிக்கொள்கை மற்றும் உருது மொழியைப் புறந்தள்ளுதல் போன்ற வற்றிலும் இவர்களிடம் வலதுசாரி சிந்தனைதான் இருந்தது. இருந்தாலும் இந்த நிலைப்பாட்டை வகுப்புவாத மக்கள் எழுச்சியாக மாற்ற முடியவில்லை.

* * *

மொத்தத்தில் பெரும்பான்மைப் பண்பாடு, பெரும்பான்மையின் அதிகாரம் மற்றும் அதன் அடையாள அரசியலின் தவறான வாதங்களைத் தகர்க்கும் முயற்சி இந்நூல். எனவே தேசம் என்றால் என்ன? இன்றைய தேசம் என்ற அமைப்பிற்குள் பண்பாட்டு பன்முகத்தன்மைக்கும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கும் உள்ள இடம் என்ன? மக்களாட்சி முறையில் பெரும்பான்மையின் அடை யாளம் எல்லோருக்கும் பொருந்துமா? போன்ற கேள்வி களை எழுப்பி அவற்றுக்கு விடையளிக்கும் முயற்சி இது. இக்கட்டுரைகள் வெறும் விளக்கங்களாக மட்டுமே இல்லாமல் வகுப்புவாத அரசியல் தரும் வெகுசன விளக்கங்களுக்கு எதிரான பல கேள்விகளை எழுப்பு கின்றன.