வசதியான விவசாயக் குடும்பத்தினர் வாரிசு தோழர் நா.தர்மராஜன். சிவகங்கை மன்னரோடு நெருங்கிப் பழகிய குடும்பம் அவருடையது. தர்ம ராஜனின் பாட்டனார் தன் மகன் நாராயண சேர்வையை பி.எ.எல்.டி. படிக்க வைத்தது அன்றைய காலச் சூழலில் ஒரு அரிய செயல்.

Darmarajanசிவகங்கை மன்னருக்குச் சொந்தமான மன்னர் உயர்நிலைப் பள்ளியில் தந்தையார் நாராயண சேர்வையை சிவகங்கை மன்னர் நேரடியாகவே தலைமையாசிரியராக நியமித்தார். முப்பத்தி மூன்று ஆண்டுகள் நாராயண சேர்வை சிறப்பான தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.

தர்மராஜன் திடீரென்று முளைத்து விட வில்லை. தன் பெற்றோர்களிடமிருந்து பெற்ற ஆற்றல்களே அவரை மாமனிதராக்கின. அந்தக் காலத்தில் முழுமையான ஆங்கில உடையில் ஆங்கிலேயர் போலவே பள்ளிக்குப் போவாராம் நாராயண சேர்வை. நாராயண சேர்வையின் நான்கு மக்களில் ஒருவர்தான் ஆற்றல்மிக்கப் போராளி, சிறந்த மொழிபெயர்ப்பாளர், நல்ல மனிதர் என இன்று எல்லோராலும் கொண்டாடப் படும் தர்மராஜன்.

தந்தையார் நாராயண சேர்வை அரசர் பள்ளி நிர்வாகத்தைச் செம்மைப்படுத்தினார். கல்விக் கான வாய்ப்புகளைப் பெருக்கினார். எல்லா சாதிக் குழந்தைகளுக்கும் கல்வி வாய்ப்பு அளித்தார். அவர்களின் திறன்களைக் கண்டறிந்து சிறப்புற வளர்த்தார். நாராயண சேர்வையின் திறமைகளில் வியந்த சிவகங்கை மன்னர், அவரை மாஜிஸ்டிரேட் ஆக நியமித்துப் பெருமைப்படுத்தினார்.

எல்லாக் குழந்தையையும் படிக்க வைத்தது போலவே தர்மராஜனையும் தந்தையார் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்க வைத்தார். அக் காலத்தில் எம்.ஏ ஆங்கில இலக்கியம் பெரும் படிப்பு. பலருக்கு வாய்க்காதது.

தர்மராஜன் வளர்ந்த காலம் 20-ம் நூற்றாண்டுத் தமிழக அரசியலில் மிகமிக முக்கிய மான ஒன்று. விடுதலை பெற்ற இந்தியாவில் அன்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு பெரிய அரசியல் சக்திகள் எதிர் எதிராகக் களத்தில் மோதிக்கொண்டிருந்தன. அரசியல் கட்சிகளுக்குக் கொள்கையும் கோட்பாடும் உயிர் நாடியாக இருந்த காலம் அது. அன்று உலகில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியில் சோசலிசம் மலர்ந்திருந்தது. இந்தியாவிலும் இடதுசாரி ஆட்சி மலரும் என்ற நம்பிக்கை பெருவாரியான இளைஞர்களிடம் இருந்தது.

50-களில் தமிழ்நாட்டில் பெரியாரின் சாதிய விடுதலைச் சிந்தனையானது அண்ணாவால் அரசியல் சீர்திருத்த ஒழுக்கக் கருத்தாக மாற்றப் பட்டு, அது மக்களைப் பற்றிப் பிடித்துத் தேசிய இன எழுச்சியாகப் பொங்கத் தொடங்கியிருந்தது. நூற்றுக்கு அதிகமான தி.மு.க. பேச்சாளர்கள் நாடெங்கும் சுழன்று தி.மு.க.வைத் திட்டமிட்டு வளர்த்தார்கள்.

இந்தக் காலத்தில் இடதுசாரிக் கருத்துக்களும் தி.மு.க. கருத்துக்களும் சிவகங்கை வட்டாரத்தில் சமஅளவில் வலுவாக வளர்ந்தன. தி.முக. பேச்சாளர்கள் சங்கத் தமிழ் இலக்கியம் வழியே கல்லூரிகளில் புயலாய் வீசிக்கொண்டிருந்தார்கள். கம்யூனிஸ்டுகள் கல்லூரிகளுக்குள் நுழைய அன்று லேசில் அனுமதி இல்லை. ஆனாலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வீரியம் மிக்க குருத்துக்களாக தர்ம ராஜன், தா. பாண்டியன் இன்னும் சிலர் சிவகங்கை வட்டாரத்தில் வளர்ந்து கொண்டுதான் இருந் தார்கள்.

புதுக்கோட்டையில் மீ. சேதுராமன் (அறந்தை நாராயணனின் மாமா) பாரதி சிந்தனைகளின் அடி யொற்றி, ஜீவாவின் வழிகாட்டுதலில் மார்க்சியப் பார்வையோடு இலக்கியக் கூட்டங்களும் விழாக் களும் நடத்திக்கொண்டிருந்தார். இவருடைய முயற்சிகளாலும், சிவகங்கைக்கே உரிய மார்க்சிய வளத்தாலும் தா.பா., தர்மராஜன் போன்றவர்கள் செயல்பாட்டாளர்களாக மாறினார்கள். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே நா.தர்மராஜன் மோட்டார் தொழிலாளர் சங்கத்தைக் கட்டியது இந்த உத் வேகத்தில்தான்.

இந்தச் சூழலில்தான் ஜீவா, எஸ்.ராம கிருஷ்ணன் ஆகியோர் காரைக்குடி கம்பன் விழாவில் கலந்துகொண்டு, கம்பனில் புதிய வெளிச்சத்தைத் தந்தார்கள். அவரைச் சந்தித்த தர்மராஜன், தா.பாண்டியன், சேதுராமன், கரூர் குப்புசாமி முதலிய தோழர்கள் ‘நாமும் இலக் கியத்தில் கவனம் செலுத்தி இளைஞர்களைக் கவர வேண்டும்’ என ஜீவாவிடம் வற்புறுத்தினர்.

இவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட ஜீவா, இடதுசாரிகளுக்கான ஒரு இலக்கிய அமைப்பு உருவாக்குவதற்கான முயற்சிக்குக் காரைக் குடியில் வித்திட்டார். தபால் தந்தி ஊழியரான ஜெகன், வங்கி ஊழியர் கிருஷ்ணன், புதுக் கோட்டை மீ.சேதுராமன், தா.பா., குப்புசாமி, தர்மராஜன் இன்னும் பலர் அதில் முக்கியப் பங்காற்றினர். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் முதல் மாநாடு கோவையில் 1961-ல் இரண்டு நாட்கள் சிறப்பாக நடந்தது. இந்த மாநாட்டில் தர்மராஜன் கலந்து கொண்டார். தா. பாண்டியன் இந்த மாநாட்டில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அப் போது அவர் கல்லூரி ஆசிரியர். அவர் துணைவி யாரும் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக்கொண் டிருந்தார். கலை இலக்கியப் பெருமன்றப் பணிக் காக இருவரும் துணிந்து தங்கள் வேலைகளை உதறி எறிந்துவிட்டு சென்னை போனார்கள்.

இக்காலத்திலேயே தர்மராஜன் மொழி பெயர்ப்புப் பணி தொடங்கிவிட்டார். தொடர்ந்து பெருமன்றத்தில் அவர் இருந்துகொண்டு சிவ கங்கையில் ஒரு கிளையை உருவாக்கிச் சிறப்பாக விழாக்கள் நடத்தி வந்தார்.

1965-ல் பொள்ளாச்சியில் நடந்த கலை இலக்கியப் பெருமன்ற 3-ம் மாநாட்டில் தர்ம ராஜன் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். கலை இலக்கியப் பெருமன்றத்தில் மொழிபெயர்ப்புக்கானத் துணைக் குழு அன்று அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் அதற்கு பின் தர்மராஜன் மொழிபெயர்ப்புத் துறையில் தீவிரமாக ஈடுபட்டு அரும் சாதனைகள் செய்தார், இன்றளவும் செய்து வருகிறார்.

தர்மராஜன் ஒரு தீவிர தொழிற்சங்கவாதியும் ஆவார். அக்காலத்தில் தனியார் கல்லூரி ஆசிரியர் களின் பணிநிலை திருப்தியானதாக இல்லை. மாதா மாதம் ஒழுங்காகச் சம்பளம் கிடைக்காது. கிடைக்கும்போது முழுச்சம்பளமாகக் கிடைக் காது. கையெழுத்துப் போடும் தொகை ஒன்று. பெற்றுக் கொள்ளும் தொகை இன்னொன்றாக இருக்கும்.

தனியார் கல்லூரி ஆசிரியர் பணிப் பாது காப்புச் சட்டங்கள் போதுமான அளவில் அன்று இல்லை. நிர்வாகம் நினைத்தால் கல்லூரி ஆசிரியர் களைப் பணியிலிருந்து நீக்கலாம், சேர்க்கலாம். தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஓய்வு ஊதியமோ, இதர அரசுச் சலுகைகளே அன்று இல்லை. சிவ கங்கை மன்னர் கல்லூரியில் பிரச்சினைகள் முற்றிப் போய்க் கிடந்தன. விரக்தி அடைந்த கல்லூரி ஆசிரியர்களை ஒருங்கிணைத்து மதுரைப் பல்கலைக் கழக வட்டார ஆசிரியர் சங்கமாக மூட்டாவைத் தொடங்கினார் தர்மராஜன். அன்று அதன் வீரியம் அளவிட்டுச் சொல்ல முடியாதது. பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவில் ஒரு உறுப்பினராக தர்ம ராஜன் இருந்ததால் ஆட்சி மன்றத்திலும் ஆசிரியர் பிரச்சினைகளைப் பேசினார்.

சிவகங்கை கல்லுரியில் போராட்டம் வெடித்தது. ஒழுங்கான சம்பளம், மாதா மாதச் சம்பளம், சட்டப்படியான நிர்வாகம் எனப் பல அம்சக் கோரிக்கைகளை முன் வைத்தது மூட்டா. எல்லா ஆசிரியர்களும், ஏன் மாணவர்களும் கூடப் போராட்டத்தில் முழுமையாகப் பங்கேற்றனர்.

தர்மராஜனும் அவர் மாணவரும் பேராசிரி யருமான கவிஞர் மீராவும் போராடியதற்காகப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள். மீரா அன்று வலுவான தி.மு.க. போராட்டத்தின் மைய அச்சாகச் செயல் பட்டார் தர்மராஜன். அன்றைய சூழலை இன்று கற்பனை செய்வது கடினம். சிவகங்கை மன்னரின் சொந்தக் கல்லூரி அது. சிவகங்கைச் சுற்று வட்டார மக்கள் பெரும்பாலும் மன்னரின் ஆட்கள். சாதியாலும் உறவுகளாலும் மன்னர் குடும்பத்தோடு பின்னிக் கிடந்தவர்கள். இவர்களுக் கிடையே துணிந்து போராட்டத்தை தொடங்கி வீரத்தோடு நடத்திய தர்மராஜனும் அந்தக் கூட்டத்தைச் சார்ந்தவரே. ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் போராடினார் அவர். ஆசிரியர்களும் மாணவர்களும் போராட்டத்தைத் தீவிரமாக ஆதரித்தார்கள். நியாயத்தின் முன்னே அன்று சாதியும் அந்தஸ்தும் நிற்க இயலவில்லை.

இன்று இருக்கிற அளவுக்கு ஜாதிய வெறியோ லஞ்ச வெறியோ தமிழகத்தில் அன்று இல்லை. தர்மராஜனும் தோழர்களும் தலைமைச் செயலகத்தில் அன்றைய கல்வித்துறைச் செயலாள ராக இருந்த அப்பழுக்கற்ற மனிதர் ரங்கபாஷ் யத்தைச் சந்தித்துப் பிரச்சினைகளை விளக்கி னார்கள். இவ்வளவு கோளாறுகளா! ஆசிரியர் களுக்குப் பணிப் பாதுகாப்புச் சட்டங்களே இல்லையா? அதிர்ச்சியடைந்தார் ரங்கபாஷ்யம். போராளிகளுடன் விரிவாகப் பேசி, சிக்கல்களை உள்வாங்கித் தீர்வுகளுக்கான வழிகளைக் கண்டறிந்து, சட்டங்கள் இயற்றினார் அவர். அதிசயம் என்னவென்றால், அந்தச் சட்டங்கள் அன்றைய அரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆசிரியர்களுக்கு விடிவு பிறந்தது.

1973 இந்திராகாந்தி ஆட்சி காலச் சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு தமிழ் நாட்டில் வலுவாக இருந்தது. அன்றைய அதன் மாநிலச் செயலாளர் எம். கல்யாணசுந்தரத்தின் உதவியோடு மன்னர் கல்லூரி அரசுக்கல்லூரியாக மாற்றப்பட்டது. கல்வித்துறை வரலாற்றில் இது மாபெரும் சாதனை. தர்மராஜனின் வரலாற்றுச் சாதனைகளில் இது முக்கியமானது. தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு நேரடியாகச் சம்பளம் வழங்கப்பட்டது. பணிப்பாதுகாப்புச் சட்டங்கள் முறைப்படுத்தப்பட்டன. எல்லாமே அன்று போடப் பட்ட அடித்தளத்திலிருந்து விளைந்தவைகளே.

இவை மட்டுமல்ல, MUTA-வின் வெற்றி அனைத்து ஆசிரியர்களையும் உசுப்பி, அவர வரையும் அவரவர் அமைப்புகளை வலுப்படுத்திப் போராடத் தூண்டியது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் இன்று அனுபவிக்கும் சம்பள உயர்வுகள் பிற சலுகைகள் எல்லாம் அதன் தொடர்ச்சியாகப் போராடிப் பெறப்பட்டவையே.

அதன்பிறகு தர்மராஜன் மொழிபெயர்ப்பில் தீவிரக் கவனம் செலுத்தினார். அன்று எஸ்.ஆர்.கே., ரகுநாதன் முதலிய மொழிபெயர்ப்பு ஆளுமைகள் இலக்கிய மொழிபெயர்ப்புக் களத்தில் ஒளி விசினார்கள். பூ. சோமசுந்தரம், ரா.கிருஷ்ணய்யா, பே.சீனிவாசன் இன்னும் பலர் மார்க்சியம், வரலாறு, தத்துவம் ஆகியவற்றின் மொழிபெயர்ப்பில் ஈடு பட்டிருந்தார்கள்.

அன்றைய மார்க்சிய தத்துவ மொழிபெயர்ப் பாளர்கள் பற்றி இப்படிச் சொல்லப்பட்டது. இவர்கள் பெரும்பாலும் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை, எதுவும் விடுபட்டுப் போய்விடக் கூடாது என்ற கரிசனத்தோடு மொழிபெயர்த் தார்களே ஒழிய, மார்க்சியம் என்பது தமிழுக்குப் புதியது. தமிழர்களின் மூளையில் புதிதாக நுழைவது, வரிகளை உடைத்து, வார்த்தைகளை எளிமைப் படுத்தி வாசகர்களுக்குப் பெருமளவுக்குப் புரியும் படிக் கொடுக்க வேண்டும் என்பதில் பெரும் பாலானோர் கவனம் செலுத்தவில்லை. தமிழ் மொழிபெயர்ப்புகளில் அன்று ஏற்பட்ட சந்தேகங் களை அதன் ஆங்கில மூலத்தில் வாசித்துத்தான் தெளிவு பெறவேண்டியிருந்தது.

ஆனால், இலக்கிய மொழிபெயர்ப்பாளர் களோ, தங்கள் அற்புதமான பொழிபெயர்ப்பு களால் வாசகர்களைப் பரவசப்படுத்தினார்கள். ரகுநாதனின் ‘தாய்’, எஸ். ராமகிருஷ்ணனின் ‘சக்கர வர்த்தி பீட்டர்’, ஆகியவற்றின் தரத்தில் தர்ம ராஜனின் ‘அன்னா கரினினா’ மொழிபெயர்ப்பு இருக்கிறது, என்றும் ஒளிவீசும் இலக்கியப் படைப் பாக. இது அவருடைய மாபெரும் சாதனை.

இலக்கியத்தை மட்டும் அல்ல வரலாறு, தத்துவம் ஆகியவற்றையும் அதே தரத்தில் அழகாக எளிமையாக மொழிபெயர்த்தார் தர்மராஜன். ரஷ்ய இலக்கியங்களை மட்டும் அல்ல, மற்ற மேற்கத்திய இலக்கியங்களையும் மொழிபெயர்த் திருக்கிறார் தர்மராஜன். அவருடைய மைக்கேல் கே. மொழிபெயர்ப்பு பற்றி சுந்தர ராமசாமி வெகுவாகப் பாராட்டுகிறார். இந்திய இலக்கிய வாதி முல்க்ராஜ் ஆனந்தின் ‘கூலி’ என்னும் நாவலை அழகுற மொழிபெயர்த்திருக்கிறார் இவர். கிட்டத் தட்ட நூறு நூல்களுக்கு அதிகமாக மொழி பெயர்த்திருக்கிறார். நேருவின் நூல்களை அவர் மொழிபெயர்த்திருக்கும் முறை எல்லாரையும் கவருகிறது. இதுபோல் இன்னும் பல.

இவருடைய மொழிபெயர்ப்பு நேர்த்தியில் மனம் பறிகொடுத்த ரஷ்ய அயல்மொழித்துறை இவரை ரஷ்யாவுக்கு அழைத்துச் சிரமமான மொழி பெயர்ப்புப் பணிகளை ஒப்படைத்தனர். கல்லூரியில் முறையான விடுப்புப் பெற்று குடும்பத்துடன் ரஷ்யா சென்று மொழிபெயர்ப்புப் பணி செய்தார் தர்மராஜன். ரஷ்யாவில் அன்று பணி செய்தவர் களில் அதிகம் பாராட்டப்பட்டவர் இவரே. இரு முறை அவர் ரஷ்யா சென்றார், மொழிபெயர்ப் பாளராக.

இளமைக் காலத்தில் முழுக்கை வெள்ளைச் சட்டையை முழுக்கால் சட்டையினுள் செருகிக் கொண்டு, இடுப்புவார் அணியாமல், அடர்ந்த தலையும் தடித்த மீசையுமாக மிக கம்பீரமாக வருவார். இலக்கிய ஆர்வமுள்ள பல மாணவர் களை உருவாக்கிய சாதனையாளர் அவர். மீரா எல்லாருக்கும் தெரிந்த அவருடைய முதல் மாணவர்.

சிவகங்கை, காரைக்குடி, மதுரை வட்டாரங்களில் நடக்கும் கலை இலக்கியப் பெருமன்றக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்வார். முகத்தில் முறுவல் பொங்க எல்லாரிடமும் அருமை யாகப் பழகுவார். பெரும் பேச்சாளர் அல்ல அவர். அவர் பேச்சில் கருத்துச் செறிவும், தகவல் நிறைவும் எப்போதும் இருக்கும்.

தன் குழந்தைகளை நன்றாகப் படிக்க வைத்து, நல்ல நல்ல இடங்களில் அமர்த்தியுள்ளார் அவர். துணைவியாரை இழந்த அவர் தாடியில்லாத ஒரு துறவியாகவே தொடர்ந்து மொழிபெயர்ப்பின் வழி தமிழ்த் தொண்டு செய்து கொண்டிருக்கிறார்.

அவருக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது கிடைக்கவில்லையே என்று வருந்துபவர் பலர். ஆங்கில மொழியின் வழியாக வெளிவரும் இந்தியப் படைப்பிலக்கியங்களை அவர் இப்போது மொழிபெயர்த்தால் சாகித்ய அகாதமி அவரைத் தேடி வரும். பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்னும் பாரதியின் கட்டளையைச் சிரம் மேற்கொண்டு வாழ்கிறார். தமிழை வளப்படுத்த இதுவே சிறந்த வழி என நினைத்துப் பிடிவாதமாகச் செயல்படுகிறார்.

தமிழுக்கு ‘புரட்சி’ ‘பொதுவுடைமை’ ஆகிய சொற்களை வழங்கிய வள்ளல் என பாரதி போற்றப்படுகிறார். தர்மராஜனும் இது போன்றவர் என்கிறார் கோச்சடை. அறஞ்சாராமை (Amorality), நேசச் சலுகை (Favouritism) முதலிய தமிழ்ச் சொற்கள் இவருடைய கொடை எனக் கொண் டாடுகிறார் அவர்.

நா. தர்மராஜனுக்கு எண்பது வயதாகிறது. இன்றும் இளமையாயிருக்கிறார். தொடர்ந்து பணி செய்கிறார். இது அபூர்வமாக அவருக்கு வாய்த்த ஆற்றல். அவர் தமிழுக்கு இன்னும் நெடுநாள் மொழிபெயர்ப்புத் தொண்டு செய்ய வேண்டும். நெடிது வாழ வேண்டும்.