I

1. மொழியில் சொற்பெருக்கம்

மொழியில் சொற்பெருக்கம் இரண்டு வழிகளில் நடைபெறுகின்றது.  அவையாவன:

  1. கடனாகச் சொற்களைப் பெறுவதின் வழியாக
  2. புதிய சொற்களை மொழியில் உற்பத்தி செய்வதின் வழியாக

இவ்விரண்டு வழிகளுமே சொற்பெருக்கத்திற்கு அடிப்படையாக விளங்குகின்றன.

1.1 கடன் பெறுதல் (Borrowing)

மொழிகள் பிற மொழிகளோடு தொடர்பு கொள்ளும்போது அம்மொழிச் சொற்களைக் கடனாகப் பெறுகின்றன. அதாவது கடன் வாங்குவதின் மூலமாக தம் மொழியில் இல்லாத சொற்கள் பெறப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன.  பின்னர் காலப்போக்கில் அது கடன் சொல் என்று இனம்காணமுடியாத அளவுக்கு அச்சொல் மொழியில் கலந்துவிடக்கூடும்.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடனாகப் பெறப்பட்ட பிறமொழிச் சொற்கள் தமிழ் மொழியில் உள்ளன.  சாதாரண மக்கள் மட்டுமின்றி படித்த மக்களுக்கேகூட அவை கடன் சொற்கள் என்று இனம் காணமுடியாமல் போய்விடுகின்றன. கல்லாதவர்கள் அந்தப் பிரக்ஞை இல்லாமலே சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.  நமது நாட்டுப் புற இலக்கியங்களில்கூட கடன் சொற்கள் கலந்திருப் பதைக் கவனிக்கலாம்.  பழந்தமிழ் இலக்கியங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல.  அவற்றிலும் கடன் சொற்கள் கலந்துள்ளன.

1.2 கடன்பெறுதல்-மொழி அமைப்பில் மாறுதல்கள்

பிறமொழிச் சொற்களைத் தடையின்றித் தாராளமாகக் கடனாகப் பெறுவதால் கடன்பெறும் மொழியின் மொழி அமைப்பில் மாற்றங்கள் ஏற்படலாம். அதாவது அம்மொழியின் ஒலி அமைப்பிலும், சொல் அமைப்பிலும், தொடர் அமைப்பிலும் கடன் தரும் மொழியின் ஒலிக் கூறுகள், சொல்லுருவாக்க உருபன்கள், தொடரமைப்புகள் தாக்கங்களை ஏற்படுத்திப் புதிய அமைப்பைத் தோற்றுவிக்கலாம். வடமொழிச் சொற்களைக் கடன் பெற்றதால் இன்றைய தமிழில் ஸ, ஷ, ஹ, க்ஷ போன்ற உபரி ஒலியன்கள் புகுந்துள்ளன.  அவை மொழி முதலிலும் இடையிலும் சொற்களில் இடம்பெறுகின்றன.

ஸர்ப்பம்  - ஹாரம்

சரஸ்வதி - ஆஹாரம்

போலீஸ் - காக்ஷி

விஷம் - சேக்ஷமம்

ரமேஷ்- ஜவுளிக்கடை

ஷங்கர் - ராஜாத்தி

ஹரி -  ராஜாஜி

பொதுவாக வல்லின எழுத்துக்கள் (க, ச, த, ப, ட, ற) சொல்லின் இறுதியில் வருவதில்லை.  இது தமிழ் மொழியின் ஒலியன் அமைப்பாகும்.  ஆனால் கடன் சொற்களின் விளைவாக இவ்வெழுத்துக்கள் இறுதியில் இடம்பெறுகின்றன.

கோர்ட் -  போனஸ்

கப்  - ஸ்டிரைக்

ஸ்டாம்ப் - பட்ஜெட்

பந்த்

ட, ல, ர ஆகிய மெய்யெழுத்துக்கள் மொழி முதலில் வராது.  ஆனால் கடன் சொற்களில் இத்தகைய விதி மீறப்படுகின்றது.

லாரி -  ரேஷன்

டீ - லாட்டரி

டீச்சர்-  ரேடியோ

இவை யாவும் கடன் சொற்களை ஆள்வதால் மொழியின் ஒலியமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களாகும்.  இவ்வாறே உருபனியல், தொடரியல் அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்படும்.

1.3  கடன்தரும் மொழியின் ஒலிகளைத் தவிர்த்தல்

சொற்களைக் கடனாகப் பெறும்போது அவை கட்டுப்பாடில்லாமலும், சில வேளைகளில் கட்டுப் பாட்டுடனும் கையாளப்படுகின்றன. கட்டுப் பாட்டுடன் பயன்படுத்தும்போது பிறமொழிக் கூறுகள் தவிர்க்கப்படுகின்றன. பிறமொழிக்கே

உரிய எழுத்துக்கள் தவிர்க்கப்படலாம். மேலே வடமொழிக்கேயுரிய ஒலிகள் உபரி ஒலியன்களாகத் தமிழில் வந்து வழங்குகின்றன என்று குறிப்பிட்டோம்.  அவ்வொலிகள் தவிர்க்கப்பட்டு அவற்றிற்குச் சமமாக அல்லது கிட்டத்தட்ட சமமாக இருக்கிற தமிழ் ஒலிகள் வடவெழுத்துக்குப் பதிலாகப் பயன் படுத்தப்படும். இதனை Phonological nativization என்பர் மொழியியலாளர்.

போலீஸ் - போலீசு  - (ஸ் > சு)

விஷம் - விடம் -  (ஷ > ட)

ஆஹாரம் -   ஆகாரம் -  (ஹ > கா)

பஜார் -  பசார்  -  (ஜ > ச)

சேக்ஷமம்  -  சேமம்  - (க்ஷ் > ச)

ஹரி -  அரி -   (ஹ > அ)

1.4 கடன்தரும் மொழியின் சொற்களைத் தவிர்த்தல்

சில வேளைகளில் கடன் தருகின்ற மொழியின் சொற்கள் தவிர்க்கப்படும்.  அச்சொற்களுக்கு இணையான புதிய சொற்கள் உருவாக்கப்படும்.  அவ்வாறு உருவாக்கப்படும் புதிய சொல் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள சொல்லாக இருக்கலாம்.  அல்லது வட்டார வழக்குகளிலிருந்தோ, பழைய (மூதாதையர்) மொழியிலிருந்தோ கடனாகப் பெறப்பட்டு புதிய பொருளில் பயன்படுத்தப்படலாம்.

சுனாமி  -கடல்கோள், ஆழிப்பேரலை

ரேடியோ - வானொலி

பைலட்  - வலவன்

ஏரோப்ளேன் -   வானவூர்தி

ட்ரெயின்   -      புகைவண்டி

புகைரதம்    -    (இலங்கை)

போலீசு       -    காவலர்

மொபைல்    -    கைபேசி, செல்லிடப்பேசி செல்பேசி

கடன் பெறுதல் (borrowing) மொழியில் காணப் படுகின்ற இயல்பான விடயமாகும்.  கடன் சொற் களைப் பெறுவதால் மொழி வளர்ச்சி பெறுகிறது என்று ஒருசாராரும், மொழி மாசுபடுகின்றது என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர்.  கடன் சொற்கள் இல்லாமல் எந்த மொழியும் இருக்க முடியாது என்று கூறலாம்.  மொழி பேசுவோரின் தேவையை உடனடியாகவோ நீண்ட காலத்திற்கோ கடன் சொற்கள் நிறைவேற்றுகின்றன.

1.5 புதிய சொற்கள் உருவாக்குதல் ஆக்கச்சொற்கள் (Derived words)

மொழியில் புதிய சொற்கள் உருவாக்குவதைச் சொல்லுருவாக்கம் (Word formation) என்று கூறுவர்.  மொழியில் தனிச்சொற்கள் அல்லது எளிய சொற்கள் உள்ளன (simple words). இத்தகைய தனிச் சொற்களுடன் ஒன்றிரண்டு உருபுகள் சேர்த்து புதிய ஒரு கலவைச் சொல்லை உருவாக்கலாம் (complex words). ‘பகிர்’ என்ற தனிச்சொல்லுடன் -மானம் என்ற உருபு சேர்க்கப்பட்டு (பகிர்-மானம்) என்ற கலவைச் சொல் உருவாக்கப்படுகிறது.

வரு-மானம்     படி-ப்பு

பகிர்-மானம்    நடி-ப்பு

பெரு-மானம்

பங்கு-தாரர்      கல்-வி

அட்டை-தாரர் தொழு-கை

உரிமை-தாரர்  செல-வு

கடன்-காரன்   ஓட்ட்-அம்

வேலைக்-காரன்

வண்டிக்-காரன்

நகர்-வாசி

குடிசை-வாசி

சிறை-வாசி

நடி-கை

பாட-கி

மேற்கண்ட சொற்களை ஆக்கச்சொற்கள் (derivatives or derived words) என்று சொல்வர்.  -காரன், -காரி, -தாரர், -வாசி போன்றவை பின்னொட்டுகளாகும் (suffix). பின்னொட்டுக்களைத் தனிச்சொற் களுடன் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்கலாம் என்பதை இங்கு மனதில் கொள்ளலாம்.

1.6 கூட்டுச் சொற்கள் (Compounds)

இரண்டு தனிச்சொற்கள் சேர்ந்தும் ஒரு புதிய சொல் உருவாக்கப்படலாம். அவற்றைக் கூட்டுச் சொற்கள் என்று கூறுவர்.  நடை என்ற சொல்லையும், பயிற்சி என்ற சொல்லையும் இணைத்து நடைப் பயிற்சி என்ற சொல்லை உருவாக்குகிறோம்.  மாரடைப்பு (மார் + அடைப்பு) என்ற சொல்லில் இரு சொற்கள் இருப்பதைக் கவனிக்கலாம்.  இவற்றைக் கூட்டுச் சொற்கள் என்று கூறுவர்.

உடல்நிலை     (உடல் + நிலை)

மூச்சிரைப்பு     (மூச்சு + இரைப்பு)

கட்டாயப்படுத்து         (கட்டாயம் + படுத்து)

ஊக்கப்படுத்து            (ஊக்கம் + படுத்து)

இழுபறி                       (இழு + பறி)

தடியடி             (தடி + யடி)

தள்ளுமுள்ளு   (தள்ளு + முள்ளு)

தூரப் பார்வை (தூரம் + பார்வை)

மூக்குக்கண்ணாடி       (மூக்கு + கண்ணாடி)

1.7 மாற்றம் (Conversion)

சில சொற்களோடு எவ்வித ஒட்டுக்களோ (affixes) சொற்களோ சேர்க்கப்படாமல், அவற்றை வேறொரு சொல்லாகப் பயன்படுத்த முடியும்.  அடி என்ற வினைச் சொல்லையே அடி என்ற பெயராகவும் பயன்படுத்த முடிகிறது.  பிடி என்ற வினைச் சொல்லையே (ஒரு) பிடி என்ற பெயராகவும் பயன் படுத்தலாம்.  வினையே இங்குப் பெயராக மாற்ற மடைகின்றது.  எந்த ஒட்டுக்களும் இங்குச் சேர்க்கப் படவில்லை. செயல் மாற்றம் (functional shift) மட்டுமே நடைபெறுகின்றது.

உயிர்   - உயிர்(த்தது)

நரை    - நரை(த்தது)

புழு      - புழு(த்தது)

மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் பெயர்ச் சொற்களே வினைகளாக மாற்றப்படுகின்றன.  இதனையே மாற்றம் (conversion) என்ற கலைச் சொல்லால் குறிப்பிடுவர்.

பொதுவாக தமிழ் மொழியில் மேற்கண்ட முறைகளில் புதிய சொற்கள் உருவாக்கப்படுகின்றன.  இனி சொல்லுருவாக்கம் குறித்து தொல்காப்பியத்தில் காணப்படும் செய்திகளைத் தொகுத்துக் காண்போம்.

I I

2. தொல்காப்பியரின் சொல்லுருவாக்கக் கொள்கைகள்

2.1. வடசொற்கள்-கடன் உருவாக்கம்

வடமொழிச் சொற்களைச் செய்யுட்களிலும் பயன்படுத்தலாம் என்பது தொல்காப்பியர் கொள்கை.  செய்யுள் என்பது இலக்கியப் படைப்பு என்ற துறை சார்ந்த பொருள்.  இத்தகைய இலக்கியப் படைப்பில் வடசொற்களை ஏற்கலாம், அனுமதிக்கலாம் என்பது தொல்காப்பிய எச்சவியல் நூற்பாவிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.  வடசொற்களைச் செய்யுள் ஆக்கத் திற்கே பயன்படுத்தலாம் என்று கூறியிருப்பதால் பிற துறை சார்ந்த கலைச்சொல்லாக்கத்திற்கும் அவற்றைத் தாராளமாகப் பயன்படுத்தலாம் என்பதே அவரது கொள்கையாகக் கருதலாம்.

2.2 வடசொற்களை எவ்வாறு ஏற்க வேண்டும்?

தமிழில் வந்து வழங்கும் வடசொற்களை இருவகையாகப் பகுக்கலாம்.  அவை

  1. இருசார் மொழிக்கும் பொதுவாகிய எழுத்தால் இயன்ற சொல்
  2. வடமொழிக்கேயுரிய சிறப்பான எழுத்தால் இயன்ற சொல்

இவற்றுள் முதல்வகைச் சொற்களைச் செய்யுளில் பயன்படுத்தலாம்.  இரண்டாம் வகையைச் சார்ந்த சொற்களைச் செய்யுட்கண் பயன்படுத்தலாகா.  வடமொழிக்கே உரிய சிறப்பான எழுத்துக்கள் சிதைந்து (தத்பவமாக) வந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம்.

கடன் சொற்களை ஏற்று நம் மொழியின் ஒலியமைப்புக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துச் சொற்களை மொழியில் உருவாக்கிக் கொள்ளலாம்.

2.3.1 ஆக்கச் சொற்கள்

தொல்காப்பியர் ஆக்கச் சொற்கள் உருவாக்கம் குறித்து சூத்திரங்கள் ஏதும் படைக்கவில்லை.  ஆயினும் அவர்தம் மொழியில் ஏராளமான ஆக்கச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  ஆக்கச் சொற்கள் தனிச்சொற்களிலிருந்து வேறுபட்டவை.  வினை, உடம்பு, ஞாயிறு, திங்கள், காலம் போன்றவை தனிச்சொற்கள்.  தனிச்சொற்களில் எவ்வித ஒட்டும் இல்லாமல் காணப்படும்.  ஆக்கச் சொற்களில் தனிச்சொல்லும், ஒட்டும் சேர்ந்து காணப்படும்.

தொல்காப்பியர் பயன்படுத்தும் ஆக்கச் சொற்களுக்குச் சில எடுத்துக்காட்டுக்கள்:

சிற-ப்பு                        (கிளவி. 56)

உறு-ப்பு                       (கிளவி. 56)

அடி-மை                      (கிளவி. 56)

குடி-மை                      (கிளவி. 56)

ஆண்-மை                    (கிளவி. 56)

விரவு-தல்                    (கிளவி. 43)

செல்-அவு                    (கிளவி. 28)

வரு-அவு                      (கிளவி. 28)

இசை-த்தல்     (கிளவி. 28)

தொகு + ஐ      (தொகை)

இலக்கணக் கலைச்சொற்களை ஆசிரியர் பல இடங்களில் இம்முறையில் உருவாக்கியுள்ளார்.

2.3.2 மாற்றம் (Conversion)

வினையைப் பெயராகவோ, பெயரை வினையாகவோ எவ்வித ஒட்டும் சேர்க்கப்படாமலே உருவாக்க முடியும்.  இத்தகைய சொல்லுருவாக்க முறை குறித்து மேலே ‘மாற்றம்’ என்ற தலைப்பில் விவரித்தோம்.  தொல்காப்பியர் ஏராளமான சொற் களை இவ்வகையில் உருவாக்கியுள்ளார்.

விளி-விளி

உயிர்-உயிர்(த்தல்)

சொல்-சொல்

விளி என்பது வேற்றுமைப் பெயரையும் குறிக்கும்.  விளித்தலாகிய வினையையும் குறிக்கும். இவ்வகையிலும் கலைச்சொற்கள் உருவாக்கலாம் என்பது தொல்காப்பியர் காட்டும் நெறியாகும்.

2.4 தொகைச் சொற்கள் உருவாக்கம்

மொழியின்கண் காணப்படும் இரு சொற்களைச் சேர்த்து தொகைச் சொற்கள் உருவாக்கிக் கொள்ள தொல்காப்பிய எச்சவியல் சூத்திரங்கள் நமக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளன.

ஆறுவகையான தொகைச் சொற்கள்

  1. வேற்றுமைத் தொகை
  2. உவமத்தொகை
  3. வினைத்தொகை
  4. பண்புத்தொகை
  5. உம்மைத் தொகை
  6. அன்மொழித் தொகை

2.4.1 கலைச்சொற்கள்-தொகைச் சொற்கள்

தரவிறக்கம்-தரவினை இறக்குதல்   (இரண்டாம் வேற்றுமைத்  தொகை)

பணித்தாள்-பணிக்குத் தாள்    (நான்காம் வேற்றுமைத் தொகை)

திரைக் காப்பு-திரையது   காப்பு      (ஆறாம் வேற்றுமைத் தொகை)

மடிக்கணினி-மடியின்   (ஏழாம் வேற்றுமைத் தொகை)

மீது கணினி நிகழ்படம்      (வினைத்தொகை)

மென்பொருள் (பண்புத் தொகை)

விரிதாள்  (வினைத் தொகை)

சுட்டெலி     (அன்மொழித் தொகை)

கலைச்சொற்களில் வரும் தொகைச் சொற்களை இவ்வாறு ஆராய்ந்து பார்த்தால் தொகையாக்கத்தின் பெருமையினையும் பயன் அளவையும் மதிப்பிட முடியும்.

I I I

3. கலைச்சொற்கள் உருவாக்கக் கோட்பாடுகள்

“தமிழில் கலைச்சொல் கீழ்க்காணும் இரண்டு முறைகளில் உருவாக்கப்படுகின்றது.  அவை 1.சொல் லாட்சி (adoption), 2. சொல்லாக்கம் (coinage) என்பன (இராம.சுந்தரம், 2009).

சொல்லாட்சியின் கீழ்

  1. பழஞ்சொற்களை எடுத்தாளுதல்
  2. சொற்பொருள் விரிவு
  3. கிளைமொழி/இனமொழி வழக்கை எடுத்தாளுதல்
  4. மரபுசார் தொழில் சொற்களை எடுத்தாளுதல்
  5. பிறமொழிச் சொற்களை கடன் வாங்குதல்        (பேராசிரியர் இராம.சுந்தரம்)

மேற்கண்ட வழிமுறைகளை அறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்களும் எடுத்துக்காட்டியுள்ளார்.

1) பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் சொற்களை இன்றைய தேவைக்கேற்பப் பொருள் கொண்டு பயன்படுத்துதல்.  சான்று : pilot - வலவன், Aeroplane - வானஊர்தி

2) தற்கால இலக்கியங்களிலிருந்து சொற் களைப் பயன்படுத்துதல்

3) பேச்சு மொழியிலிருந்து தகுந்த சொற் களைப் பன்படுத்துதல் 

Temple Trustee - கோயில் முறைக்காரர் 

Memory storage - நினைவுக் கிடங்கு

Small pox - அம்மை, வைசூரி

4) பிறமொழித் துறைச் சொற்களை மொழி பெயர்த்தல்

photograph - ஒளிப்படம்

photosynthesis - ஒளிச்சேர்க்கை

5) புதுச் சொற்களைப் படைத்தல்

molecule - மூலக்கூறு

gas - வளியம்

6) உலக வழக்கை அப்படியே ஏற்றுக் கொள்ளல்

x-ray - x- கதிர்   (வா.செ.குழந்தைசாமி, 2006)

3. முடிவுரை

மேற்கண்ட கலைச்சொல்லாக்கக் கோட்பாடு களையும் தொல்காப்பியரின் சொல்லுருவாக்கக் கோட்பாடுகளையும் ஒப்பிட்டுக் காணும்போதும் தொல்காப்பியர் குறிப்பிடும் வடசொல் ஆக்கமும், தொகையாக்கமும் பிறவும் கலைச்சொல்லாக்கத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.

பார்வை நூல்கள்

1) சுந்தரம், இராம., தமிழ் வளர்க்கும் அறிவியல், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், (2009).

2) குழந்தைசாமி, வா.செ., அறிவியல்தமிழ், பாரதி பதிப்பகம், சென்னை-17 (ஏழாம் பதிப்பு 2006).

3) தொல்காப்பியம் சொல்லதிகாரம்-நச்சினார்க்கினியம், கழக வெளியீடு.