Tastoyevski 450“ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு” எனும் இந்நூல் மாபெரும் ரஷ்ய எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கியின் கடைசி நூலாகும். 1873 லிருந்து 1881 வரை தஸ்தயேவ்ஸ்கி, அதாவது அவரது மரணம் வரையில், The Citizen என்ற வாராந்திரப் பத்திரிக்கையில் அவர் தொடராக எழுதிய சிறிய, பெரிய கட்டுரைகளின் தொகுப்பு இது. வாழ்வின் இறுதிப்பகுதியில் எழுதப்பட்ட நூல் என்பதால் தஸ்தயேவ்ஸ்கியின் முதிர்ச்சியடைந்த கருத்துக்களைக் கொண்ட நூலாக இது அமைகிறது. சுமார் 1500 பக்கங்களைக் கொண்ட நூற்தொகுப்பு.

குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் ஆகிய இரண்டு நூல்களையும் சேர்த்தால், அவற்றை விடவும் அதிக பக்கங்களைக் கொண்ட நூல் இது என்று சொல்லுகிறார்கள். அந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து, அநேகமாக மூன்றில் ஒருபகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு, நண்பர் மணிகண்டனால் நிர்வகிக்கப்படும் ‘நூல்வனம்’ பதிப்பகத்தால் தமிழில் தரப்பட்டுள்ளது. மதிப்பிற்குரிய நண்பர் சா.தேவதாஸ் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்.  

இந்நூலுக்கென தஸ்தயேவ்ஸ்கி குறிப்பிட்ட எந்த ஒரு கறாரான திட்டத்தையும் வைத்திருந்ததாகச் சொல்லமுடியவில்லை. சில தன்வாழ்க்கைக் குறிப்புகள், பெலீன்ஸ்கி, நெக்ராசோவ், தல்ஸ்தோய் போன்ற சமகால எழுத்தாளர்கள் பற்றிய சில அபூர்வமான குறிப்புகள், கொடூரமான கொலைகள் சிலவற்றைப் பற்றிய பத்திரிக்கைச் செய்திகள், அவை குறித்த நீதிமன்ற விசாரணைகள், தீர்ப்புகள், சமகால ரஷ்யாவின் வாழ்க்கையை ஊடுருவி நின்ற சில கருத்தியல் போக்குகள் (ஸ்லாவியம், ஆசாரவாத (Orthodox) கிறித்தவம், நரோத்னிக் சிந்தனை, ஆங்காங்கே சோசலிசம் பற்றிய கருத்தமைவுகள்) ஆகியன இந்நூலில் விவாதிக்கப்படுகின்றன. பிற நூல்களில் கிடைக்காத சில அபூர்வமான குறிப்புகள் இந்நூலில் கிடைக்கின்றன என்பது இந்நூலின் சிறப்பு.

தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கை மற்றும் வரலாற்றுச் சூழல்கள் 

1812 ல் ரஷ்யா மீது பிரான்ஸ் (நெப்போலியன்) படையெடுப்பிலிருந்து இக்கதையைத் தொடங்க வேண்டும். அப்போர் ரஷ்ய வரலாற்றில் மாபெரும் தேசபக்த யுத்தம் என வழங்கப்படுகிறது. அப்போரில் ரஷ்ய விவசாயிகள் தமது தாய்நாட்டைக் காப்பாற்றுவதற்காக மகத்தான தியாகங்களைச் செய்ததாக வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. தல்ஸ்தோய் எழுதிய ‘போரும் அமைதியும்’ என்ற பிரும்மாண்டமான நாவல் இப்போரைப் பற்றியது. அதில் ரஷ்ய விவசாயிகளின் எளிய வாழ்வு, வீரதீரங்கள், தியாகங்கள் சித்தரிக்கப்படுகின்றன.

1812ல் நடந்த யுத்தம் தல்ஸ்தோயால் 1867ல் போரும் அமைதியும் என்ற தலைப்பின் கீழ் இலக்கியமாக்கப்பட்டது என்பதிலிருந்து அந்த நூற்றாண்டு முழுவதும் அப்போரின் செல்வாக்கு ரஷ்ய வாழ்வில் நின்று நிலைத்தது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். 1812ல் தொடங்கிய ரஷ்ய தேசபக்த யுத்தம் 1917 வரை தொடர்ந்தது என்று ஒரு விகிபீடியா கட்டுரையாளர் தெரிவிக்கிறார். 19 ஆம் நூற்றாண்டின் ரஷ்ய இலக்கியப் பின்புலத்தைப் புரிந்து கொள்ளாமல் நேராக ரஷ்யப் புரட்சியைப் புரிந்து கொள்ள முடியாது என்று பல விமர்சகர்கள் எழுதுகின்றனர்.

1812 யுத்தம் ரஷ்ய தேசிய உணர்வைத் தூண்டியது. ரஷ்ய தேசியத்தின் முதல் கவிஞர் புஷ்கின். 1825ல் டிசம்பரில் ரஷ்ய போர்த் தளபதிகளின் இயக்கம் ஒன்று ரஷ்ய விவசாய சமூகத்தில் சீர்திருத்தங்கள் கோரி அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்தியது. 1812 தேசபக்த யுத்தத்தில் விவசாயிகளின் பாத்திரம் சுட்டிக்காட்டப்பட்டு, அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. 1825 டிசம்பர் போராளிகள் டிசம்பரிஸ்டுகள் என்று அழைக்கப்படுகின்றனர். பல டிசம்பரிஸ்டுகள் தண்டிக்கப்பட்டு சைபீரியாவிற்கு அனுப்பப்பட்டனர்.

தளபதிகளின் மனைவியரும் தமது கணவன்மாருடன் சைபீரியாவிற்குச் சென்று தண்டனை வாழ்வில் அவர்களுக்கு உதவியாக வாழ்ந்தனர். புஷ்கினுடைய கவிதைகள் சைபீரியத் தண்டனையைக் கணவருடன் அனுபவித்த ரஷ்யப் பெண்களை மிக அருமையாகச் சிறப்பித்துப் பாடுகின்றன. ரஷ்ய தேசியத்தை டிசம்பரிஸ்டுகளிலிருந்து புஷ்கின் வருவிக்கிறார். ரஷ்யாவில் பெண் விடுதலை இயக்கமும் புரட்சிகரப் பெண்களின் இயக்கமும் அந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே தீவிரப்பட்டன என்று தாரிக் அலி என்ற வரலாற்றாசிரியர் தெரிவிக்கிறார்.  

இவை ஒருபுறம் இருக்க, ரஷ்ய விவசாய சமூகம் 19 ஆம் நூற்றாண்டு முழுவதும் மிகப் பெரிய வளர்ச்சி, சீர்திருத்தம், சனநாயகம் ஆகிய எதனையும் சந்திக்கவில்லை. தொழில் வளர்ச்சி அடியோடு இல்லாமலிருந்தது. ஐரோப்பாவில் ரஷ்யா ஒரு பின்தங்கிய நாடு என்ற பெயரே பிரதானமாக வழங்கி வந்தது. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து பெலீன்ஸ்கி போன்ற விமர்சகர்களும் லெர்மன்தோவ், நிக்ராசவ் போன்ற கவிஞர்களும் அம்மண்ணில் தோன்றினர். செர்னஷேவ்ஸ்கி போன்ற தீவிர அரசியல் சிந்தனையாளர்களும் தோற்றம் பெற்றனர்.   

ஸ்லோவஃபீல் எனும் மண்ணின் மைந்தர்கள்

கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பான்மை நிலப்பகுதி பூகோளரீதியாக ஸ்லாவியா என்று அழைக்கப்படுகிறது. ஃபீல் என்ற சொல்லுக்கு நேயம், காதல் என்று பொருள். ஃபிலாசஃபி என்ற சொல்லுக்கு அறிவின் மீது கொண்ட காதல் என்று பொருள். ஃபிலான்ந்திரபி என்ற சொல்லுக்கு மனித நேயம் என்று பொருள். வேதியியலில் எலெக்ட்ரொஃபில் என்ற சொல் எலெக்ட்ரொன் மீது மற்றொரு நுண்துகள் கொள்ளும் ஈர்ப்பைக் குறிக்கிறது. ஆக, ஸ்லோவஃபீல் எனில் தமது சொந்த பிரதேசமான ஸ்லாவியா மீது கொள்ளும் நேயம் என்று பொருள். ரஷ்ய தேசியத்தின் ஒரு பரந்த வடிவமாக ஸ்லோவஃபீல் விளங்கியது.

மேற்கு ஐரோப்பா கிழக்கு ஐரோப்பாவை வளர்ச்சியடையாத பகுதி, காட்டுமிராண்டி மக்கள் என்றெல்லாம் அவமதித்து வந்ததால் ஸ்லாவொஃபீல் என்ற கருத்தியல் அதற்கு எதிர்நிலையில் ரஷ்யாவில் வேகமாகப் பரவியது. ரஷ்யர்களுக்கிடையில் மேற்கு ஐரோப்பாவை நவீன கற்றறிந்த நாகரீகம் எனக் கூறி அதனை பாவனை செய்யும் ரஷ்ய உயர்குடியினர் ஏராளமாக இருந்தனர். இத்தகைய உயர்குடித்தனத்தை தஸ்தயேவ்ஸ்கி வன்மையாகக் கண்டித்தார். சாதாரண ரஷ்யர்களிடம் அது போன்ற உயர்குடித்தனப் பாவனைகள் இல்லை என்று அவர் கூறுவார். ஸ்லோவொஃபீல் என்பது பரந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளைக் குறிக்கும் என்பதால், தஸ்தயேவ்ஸ்கி கிழக்கு ஐரோப்பியரிடையில் ரஷ்ய ஸ்லாவியர்களே தூய்மையானவர்கள், தூய கிறித்தவர்கள், உயர்ந்தவர்கள் என்பது போன்ற கருத்துக்களையும் கொண்டிருந்தார்.           

ஆசாரவாத கிறித்தவம் (Orthodox Christianity)      

ஸ்லோவொஃபீலுடன் இரண்டறக் கலந்த ஒரு கருத்தியல் போக்கு பூர்வீக கிறித்தவத்துடன் தொடர்பு கொண்டது. அது ஆச்சார கிறித்தவம் என்று இந்நூலில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கிறித்தவ வரலாற்றில் ஆரம்பகால கிறித்தவம், கத்தோலிக்கக் கிறித்தவம், ப்ரொட்டெஸ்டன்ட் கிறித்தவம் ஆகிய மூன்று போக்குகள் தென்படுகின்றன எனில், அவற்றில் மிகப்பழமையானதாக ஆசாரவாத கிறித்தவம் கொள்ளப்படுகிறது. கத்தோலிக்கரும் புராட்டஸ்டென்ட் கிறித்தவரும் உலகியல் நலன்களுக்காக, அரச அதிகாரத்துக்காக ஏசுவை விற்றவர்கள் என்று தஸ்தயேவ்ஸ்கி எழுதுகிறார். கத்தோலிக்கரின் உலகியல் அதிகாரம் (பூமியில் தேவனின் ராஜ்ஜியம்) என்ற கருத்தாக்கத்திலிருந்தே சோசலிசம் தோன்றியது என்றும் தஸ்தயேவ்ஸ்கி கருதுகிறார். மாறாக, எந்தவிதமான உலகியல் நலன்களின் கலப்புமின்றி கிறிஸ்துவின் தூய ஆன்மீகத்தைப் பின்பற்றுபவர்கள் ஆசாரவாத கிறித்தவர்கள் என்பது தஸ்தயேவ்ஸ்கியின் விளக்கம்.

மேற்கு ஐரோப்பா, ஸ்லாவிய கிழக்கு ஐரோப்பா என்ற 18-19 ஆம் நூற்றாண்டின் (நவீன) எதிர்வை மொத்த கிறித்தவ வரலாற்றின் எதிர்வாக விரிவு படுத்துவது தஸ்தயேவ்ஸ்கியின் கருத்தியல் நிலைப்பாடு. கிறித்தவ சமயத்தின் ஓர் உள்பிரச்சினையை ஐரோப்பிய வரலாற்றின் ஒட்டுமொத்த பிரச்சினையாக, சமகாலப் பண்பாட்டு அரசியலின் பிரச்சினையாக தஸ்தயேவ்ஸ்கி ஆக்கிக் காட்டுகிறார். இது விவாதத்திற்கு உரிய ஒன்றாகும். ஆயின் 19 ஆம் நூற்றாண்டின் ரஷ்யாவில் இது குறிப்பிடத்தக்க பிரச்சினை இருந்தது.

ஸ்லாவிய ஆசாரவாத கிறித்தவம் மீண்டும் அரியணை ஏற வேண்டும் என்று தஸ்தயேவ்ஸ்கி பேசுகிறார். கத்தோலிக்க கிறித்தவத்தின் தலைமைப்பீடமான ரோமாபுரியைத் தாண்டி, ஸ்லாவியத் தலைநகராக அமைந்திருந்த கான்ஸ்டான்டினோபிள் (பழைய பெயர் பைசான்டியம்) மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று தஸ்தயேவ்ஸ்கி வாதிடுகிறார். இஸ்லாமிய துருக்கியிடமிருந்து அதனை மீட்க வேண்டும் என்று கூறுகிறார். “ரஷ்ய இருப்பின் புதிய காலக்கட்டம் தொடங்குகிறது. கான்ஸ்டாண்டினோபிள் கிழக்கத்திய உலகின் மையமாக இருக்க, ரஷ்யாவோ அதன் ஆன்மீக மையமாக இருக்கிறது. தற்போதைக்கு சிறிதுகாலம் பீட்டர்ஸ்பர்க்கை மறந்திருப்பது ரஷ்யாவுக்கு அவசியமானதும் பயனுள்ளதும் ஆகும்.” 

நரோத்னியம் என்ற ரஷ்ய வெகுமக்களியம்

ஸ்லாவோஃபில் மற்றும் ஆசாரவாத கிறித்தவம் என்ற இரண்டோடு இந்த விவாதத்தை முடித்து விட்டால், நமது அன்பிற்குரிய தஸ்தயேவ்ஸ்கி நமக்குக் கிடைக்கமாட்டார். அதே 19 ஆம் நூற்றாண்டின் மற்றொரு செல்வாக்குள்ள, வெகுமக்கள் தொடர்பு கொண்ட நரோத்னியம் என்ற சிந்தனையை இங்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். நாம் ஏற்கனவே குறிப்பிட்ட 1812 இன் மாபெரும் தேசபக்த யுத்தத்திலிருந்து இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த யுத்தம் ரஷ்ய விவசாயிகளின் தேசபக்த உணர்வுகளை எடுத்துக்காட்டியது.

ரஷ்ய உயர்குடிகளில் ஒரு பகுதியினரேனும் (டிசம்பரிஸ்டுகள்) அப்போருக்குப்பின் விவசாய ஆதரவாளர்கள் ஆனார்கள். புஷ்கின் அவ்வுணர்வின் இலக்கிய அடையாளமாக உருவானார். நிக்ராசவ் என்ற மற்றொரு முக்கியமான கவிஞர் புஷ்கினை முன்னெடுத்துச் சென்றார். பெலின்ஸ்கி, செர்னஷேவ்ஸ்கி ஆகியோர் நரோத்னியம் என்ற ஒரு கோட்பாட்டை உருவாக்கினர். நரோத் எனில் ரஷ்ய மொழியில் மக்கள் என்று பொருள். 19 ஆம் நூற்றாண்டு ரஷ்யாவில் மக்கள் எனில் குடியானவ மக்கள் என்று பொருள். 1812 போரைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ரஷ்ய தேசியம் விவசாய மற்றும் வெகுமக்களிய உள்ளடக்கத்தை சம்பாதித்துக் கொண்டது. இது ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனை.

குறிப்பிட்ட இதே காலத்தில் மேற்கு ஐரோப்பாவில் தேசிய இனப் பிரச்சினைகளை எதிர்கொண்ட கார்ல் மார்க்ஸ், போலந்து மற்றும் அயர்லாந்து தேசியவாதிகளுக்கு, உங்கள் தேசியவாதத்திற்கு விவசாய உள்ளடக்கத்தை வழங்குங்கள் என்றுதான் அறிவுறுத்தினார். அது ரஷ்யாவில் நடந்தது. தமிழில் தமிழ் தேசிய உணர்வு, திராவிட உணர்வு ஆகியவை சுதாகரிப்பானவை. ஆயின் ஒரு நூறு ஆண்டுகள் கடந்த பிறகு இப்போதுதான் அவை விவசாயிகளைச் சிறிதளவே எட்டிப்பார்க்க ஆரம்பித்துள்ளன. இந்த ஒப்பீடுகள் நமக்குப் பயனுள்ளவை. 

ரஷ்யக் கவிஞர்கள் பனியில் நனைந்த ரஷ்ய மண்ணிலிருந்து தமது தேசியத்தை உருவாக்கினார்கள். காடெனப் பரந்து கிடந்த ரஷ்ய அழகிலிருந்து ரஷ்ய தேசியத்தை உருவாக்கினார்கள். ரஷ்ய தேசியத்தின் நாயகர்களாக எளிய உழைப்பாளி மக்கள் ஆக்கப்பட்டார்கள். பெண்கள், குழந்தைகள், பிச்சை எடுப்போர், குடிகாரர், ஊனமுற்றோர், உடைபட்ட மக்கள் (Broken People), நாடோடிகள், ஏழை மனிதர்கள் (Poor Folk), தாழ்த்தப்பட்டோரும் அவமதிக்கப்பட்டோரும் (Insulted and Humiliated) தஸ்தயேவ்ஸ்கியின் நாயகர்கள் ஆனார்கள். குற்றமும் தண்டனையின் நாயகன் ரஸ்கோல்னிக்கவ், ரஸ்கோல் என்ற சொல்லுக்குப் பிளவுண்டவன், உடைந்து போனவன் என்றுதான் பொருள்.

ஐரோப்பாவின் இருத்தலியத்தையும் ஃபிராய்டிய சிந்தனையையும் கொண்டு தஸ்தயேவ்ஸ்கியை ஆராய்ச்சி செய்வோர் உண்டு. பல வேளைகளில் தஸ்தயேவ்ஸ்கியின் சமூகம் சார்ந்த நிலைப்பாடுகளிலிருந்து அவரை அந்நியப்படுத்தவே அவ்வகை ஆய்வுகள் பயன்படுகின்றன. தஸ்தயேவ்ஸ்கி சமூகரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட மனிதனின் உளவியலைச் சித்தரிக்கிறார். அவரது உளவியல் வெறும் உளவியலுக்காக அல்ல, அது சமூக நிலையை அதன் அத்தனை உணர்ச்சிகளோடும் பதிவு செய்வதற்காகவே. பிரான்ஸ் பனோனும் சார்த்தரும் அடிமைப்பட்ட கறுப்பின மக்களைப் பற்றி எழுதும்போது இருத்தலியத்தையும் ஃபிராய்டியத்தையும் பயன்படுத்தி எழுதினர் (Wretched of the Earth, Black Skins, White Masks). அங்கு அவர்கள் உடைந்த மனிதர்களைப் பற்றி எழுதினார்கள். ஆனால் அவர்களின் உடைவு (Brokenness) காலனியத்தாலும் நிறவெறியாலும் உண்டாக்கப்பட்டது என்பதை மறந்து விட முடியுமா? இந்திய, தமிழ்ச் சூழல்களில் தலித்திய நோக்கில் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளை ஆய்வு செய்ய முடியும்.  

மக்கள் எனும் கருத்தாக்கம் 

தஸ்தயேவ்ஸ்கி தனது நாட்குறிப்பில், அன்னா கரீனினா நாவலில் இடம் பெறும் லேவின் எனும் உயர்குடி கதாபாத்திரத்தை விமர்சன நோக்கிலிருந்து அணுகுகிறார். ஓர் உயர்குடி நிலப்பிரபு, விவசாய மக்களின் மீது அனுதாபம் கொண்டவராக மாறும் நிலையை தல்ஸ்தோயின் லேவின் கதாபாத்திரம் சுட்டிக்காட்டியது. ஆயின் தஸ்தயேவ்ஸ்கி லேவின் போன்ற உயர்குடியினரும் சாதாரண விவசாயிகளிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எழுதுகிறார். லேவின் இன்னும் முழுமையடையவில்லை, லேவின் போன்றோர் இன்னும் மக்கள் (நரோத்) என்ற நிலையை அடையவில்லை என்று தஸ்தயேவ்ஸ்கி விமர்சிக்கிறார். லேவினும் அவரைப் படைத்த தல்ஸ்தோயும் ஒரே விதமான மனம் திருந்திய உயர் குடியினர் என்று சுட்டிக்காட்டுகிறார். இது போதவே போதாது என்பது தஸ்தயேவ்ஸ்கியின் நிலைப்பாடு. மக்கள் என்ற கருத்தாக்கத்தை கீழிருந்து தஸ்தயேவ்ஸ்கி கட்டமைக்கிறார். இன்று பேசப்படும் Subalterns, Marginal, Premodern, உதிரித் தொழிலாளர் வர்க்கம், சமூகக் “கழிவுகள்” போன்ற பல புதிய கருத்தாக்கங்களை தஸ்தயேவ்ஸ்கியின் சொற்கள் முன்னுணர்த்தி நிற்கின்றன.

லேவின், தல்ஸ்தோய் ஆகியோரிலிருந்து வேறுபட்ட ஒரு நரோத்னியத்தை தஸ்தயேவ்ஸ்கி புஷ்கினிடம் காண்கிறார். “மக்கள் நேசித்த ஒவ்வொன்றையும் புஷ்கின் நேசித்தார். அவர்கள் வணங்கிய ஒவ்வொன்றையும் அவரும் வணங்கினார். ரஷ்ய இயற்கையை, ரஷ்ய கிராமப்புறத்தை அவர் அவ்வளவு தீவிரமாக நேசித்தார். குடியானவரின் வேதனைக்காக அனுதாபப்பட்ட, இரக்கமும் மனிதாபிமானமும் மிக்க ரஷ்ய உயர் குடியினர் அல்ல புஷ்கின். சாதாரண மக்களைச் சார்ந்த ஒருவனை, அவன் சாராம்சத்தை, அவனது படிமத்தை தன் இருதயத்தில் பதித்துக் கொண்டவர் புஷ்கின்.” 

பிரெஞ்சு மொழியின் மீது நாகரீக மோகம் கொண்ட ரஷ்ய உயர்குடியினரைத் தஸ்தயேவ்ஸ்கி கடுமையாக விமர்சிக்கிறார். இந்நூல் தொகுப்பில் தாய்மொழிக் கல்வி, பயன்பாடு குறித்த அற்புதமான கட்டுரை ஒன்று (பக். 308) இடம்பெற்றுள்ளது. சிந்தனை ஆழம் பெறுவதற்கு, ஆன்மீகத் தேடலுக்கு அந்நிய மொழி போதுமானல்ல, தாய் மொழியே வளமானது, பன்முகப்பட்டது, செழுமையானது என்று தஸ்தயேவ்ஸ்கி எழுதுகிறார்.  

ஜியார்ஜ் லுக்காச் எனும் மார்க்சிய அறிஞர் தஸ்தயேவ்ஸ்கி பற்றி எழுதும்போது, “கற்பனாரீதியான முதலாளிய எதிர்ப்பாளர் Romantic Anti-Capitalist” என்று கூறுகிறார். மேற்கிலிருந்து முதலாளியம் புயல்போல ரஷ்ய மண்ணுக்குள் படையெடுத்த போது ஏசுவைப்போல் இரண்டு கைகளையும் விரித்தபடி எதிர்த்து நின்று தஸ்தயேவ்ஸ்கி அதனை மறித்தார். எனவேதான் தஸ்தயேவ்ஸ்கி இன்றும் இந்தியாவிற்கு, தமிழுக்கு ஏராளமாகப் பொருந்துகிறார்.

தாஸ்தோயெவ்ஸ்கி
ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு
தமிழில் சா.தேவதாஸ்
நூல் வனம் வெளியீடு, ராமாபுரம், சென்னை
விலை: ரூ.700/-