"இந்திய நாட்டின் வளங்களைக் கொண்டே இந்தியாவை வெற்றி கொள்ளமுடியும் என்ற அடிப்படையில் அதற்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டன."

modernindia book 450மண்வளமும், மனித வளமும், நீர்வளமும் நிறைந்த இந்தியா அடிப்படையிலேயே பன்முகத் தன்மை கொண்டு விரிந்து பரந்து கிடக்கும் ஒரு மாபெரும் நிலம்.  அதனால், பலவகையான தாக்கங்களின் தொடர்ச்சியான விளைவுகளால் இந்தியா வளர்ந்து கொண்டே இருக்கிறது.  நீண்ட வரலாற்றுப் பெருமையை உடைய இந்தியாவை, ‘பாரத பூமி! பழம் பெரும் பூமி! நீர் அதன் புதல்வர்! இந்நினைவகற்றாதீர்!’ என்று பெருமிதத்தோடு பாரதியார் அடையாளம் காட்டினார்!

வரலாற்றினூடாக, மாறுபட்டும், வேறுபட்டும், முரண்பட்டும் இயங்கி வந்த இந்தியா படிப்படியாக ஒருங்கிணைக்கப்பட்டு வளர்ந்து வருவதை வரலாற்று அறிஞர்கள் இனம் காட்டி வருகின்றனர்.  அவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவராக விளங்கிவருபவர் “பிபின் சந்திரா” நன்கு அறியப்பட்ட நவீன கால இந்திய வரலாற்றின் தலைசிறந்த ஆசிரியர்.  சிறந்த மார்க்சிய வரலாற்றியலாளர்.  அவர் இந்தியாவின் நவீன கால வரலாற்றை தலைவர்களின் வரலாறாக அணுகவில்லை.  வரலாற்றை உருமாற்றும் சக்திகளான மக்கள் இயக்கங்களின் மீது கவனத்தைக் குவித்துள்ளார்.

இந்தியா காலனியாக அடிமைப்படுத்தப் பட்டதற்கான சமூக, பொருளாதார காரணிகள், காலனியாட்சியாளர்களின் கொள்ளைகளுக்கான கொள்கைகள் அவற்றின் எதிர்விளைவுகள், இந்திய சமூகத்தின் மறுமலர்ச்சி, தேசிய இயக்கத்தின் எழுச்சி, மக்கள் இயக்கங்களின் போக்குகள் ஆகியவற்றின் உலக வரலாற்றுப் போக்கின் பகைப் புலத்தில் பிபின் சந்திரா விவரித்துள்ளார்.  அதன் சாராம்சம்  இது.

‘நவீன கால இந்தியா’வை முகலாயப் பேரரசின் வீழ்ச்சியிலிருந்து இவர் இனம் காட்டுகிறார்.  “இரண்டு நூற்றாண்டுகாலம் சம காலத்தவர்களால் பெருமை கொள்ளத்தக்க வகையில் ஆட்சிபுரிந்து வந்த மாபெரும் முகலாயப் பேரரசு பதினெட்டாம் நூற்றாண்டின் முதல் பாதியில் பலவீனமடைந்து வீழ்ச்சியுற்றது. முகலாயப் பேரரசர்கள் தமது ஆட்சியதிகாரத்தையும், மாட்சிமையையும் இழந்து நின்றனர். டெல்லியை ஒட்டிச் சில சதுரமைல் சுற்றளவுள்ளதாகப் பேரரசு சுருங்கியது.  இறுதியில் 1803 -ஆம் ஆண்டு டெல்லியையும் பிரிட்டிஷ் படைகள் கைப்பற்றின. மகத்துவம் வாய்ந்த முகலாயப் பேரரசு அன்னிய ஆட்சியாளர்களிடம் ஓய்வூதியம் பெறும் நிலைக்குத் தரம் தாழ்ந்து போனது.

“ஒளரங்கசீப்பின் நீண்டகால, செல்வாக்கு மிக்க ஆட்சிக் கட்டத்தில் பேரரசின் ஒற்றுமையும், ஸ்திரத் தன்மையும் பாதிப்புக்கு உள்ளானது.  அவரது கொள்கைகள் பலவும் பாதகம் இழைக்கக் கூடியவையாக இருந்தபோதிலும் 1707 - ஆம் ஆண்டு அவர் மறைந்தபோது, முகலாயப் பேரரசு திறம்பட்ட நிலையிலும், அவர்களது இராணுவம் பலம் வாய்ந்ததாகவும் இருந்து வந்தது.  முகலாய வம்சத்தின் செல்வாக்கு நாட்டில் தொடர்ந்தது.”

ஒளரங்கசீப்புக்குப்பின் அவருடைய மூன்று மகன்களும் அரசைக் கைப்பற்றப் போராடினார்கள்.  அவர்களுக்குள் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டார்கள் அதில் 65 வயதான பகதூர்ஷா வெற்றிபெற்றார்.  அவருடைய ஆட்சிக்காலத்தில் ரஜபுத்திர அரசர்களுடனும், மராத்திய அரசர்களுடனும் அவர் தொடர்ந்து போராடி அவர்களைக் கட்டுப்படுத்த முயன்றார்.

அவருடைய ஆட்சிக் காலத்தில் அரசு நிர்வாகம் தொடர்ந்து சீர்குலைந்தது.  பேரரசைச் சூழ்ந்திருந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார்.  எதிர்பாராத விதத்தில் அவர் 1712 - ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.  அதனால், பேரரசு மீண்டும் உள்நாட்டுப் போரில் சிக்கிக் கொண்டது.  அவரைத் தொடர்ந்து அவருடைய மகன்களில் ஒருவரான ஜஹாந்தர் ஷா உள்நாட்டுப்போரில் வெற்றி பெற்றார்.

“ஜஹாந்தர் ஷா ஒரு பலவீனமான, முழுமையாக சுகபோகத்தில் சீரழிந்த இளவரசராவார். சிறந்த பண்புகள், கௌரவம், ஒழுக்கம் எதுவும் அவரிடத்தில் இல்லை.” அதனால், அவருடைய ஆட்சி வலிமை இழந்தது.

அதன் விளைவாக, இந்திய வரலாற்றில் நிகழ்ந்த மிகப் பெரிய மாற்றத்தை பிபின் சந்திரா வருத்தத்துடன் குறிப்பிடுகிறார். “மறுபுறத்தில் ஒரு மேலான பொருளாதார முறையாக வளர்ச்சியுற்ற அறிவியலிலும், தொழில் நுட்பத்திலும் மிகவும் முன்னேறிய சமுதாயங்களிலிருந்து கிடைத்து வந்த ஆதாயத்தோடு ஐரோப்பியர்கள் இந்தியாவின் கதவைத் தட்டி வந்தனர். தமது சொந்த நலன்களுக்காக,  நூற்றாண்டுக் கணக்கில் தொன்மை வாய்ந்த நாட்டின் சமூகப் பொருளாதார அரசியல் அமைப்பைக் காலனியக் கட்டமைப்பினால் மாற்றியமைத்து அந்நியர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தது தான் முகலாயப் பேரரசு வீழ்ச்சியின் சோக முடிவு.”

அந்த மாற்றங்கள் எவ்வாறெல்லாம் நிகழ்ந்தன என்பதை விரிவான, தெளிவான ஆதாரங்களுடன் ஆழமான ஆய்வுடனும் கண்டறிதலுடனும் தொடர்ந்து பிபின் சந்திரா விருப்பு வெறுப்பில்லாமல் அறிவியல் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் விளக்குகிறார்.

தொடர்ந்து ஆங்கில காலனிய ஆதிக்க அரசு இந்திய வாழ்க்கையை எந்த வகையெல்லாம் தனக்கு உகந்த வகையில் இந்தியச் சமுதாய வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தது என்பதை விரிவாக விளக்குகிறார்.

“பதினெட்டாம் நூற்றாண்டு இந்தியா சமூக பொருளாதார பண்பாட்டு ரீதியாகப் போதுமான அளவுக்கு முன்னேறவில்லை ‘ஆனாலும்,’ பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், நூறாண்டுக் கால பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்ததைக் காட்டிலும் சிறந்து விளங்கியது.”

அன்றைய இந்தியா மேற்கத்திய நாடுகளின் தீவிர வளர்ச்சியுடன் எவ்விதத் தொடர்புமின்றி மரபு வழிப்பட்டதாகத் தொடர்ந்தது.  இலக்கியம், மதம், தத்துவம், தர்க்கம் சார்ந்த அறிவே போதிக்கப்பட்டன.  இயற்பியல், இயற்கை அறிவியல் தொழில் நுட்பம், புவியியல் போன்றவை பயிற்றுவிக்கப்படவில்லை. சமூகத்திற்கு அவசியமான புள்ளி விவரங்களும் பகுத்தறிவும் சார்ந்த அம்சங்களும் கவனத்திற் கொள்ளப்படவில்லை.  அனைத்துத் துறைகளிலும், சுய சிந்தனைகள் தடை செய்யப்பட்டிருந்தன.  தொன்மையான பயிற்சி முறையையே சார்ந்திருந்தனர்.

“பிற்காலத்தில், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்ததைக் காட்டிலும் இக்காலத்தில் சராசரி கல்வியறிவு ஒன்றும் குறைவாக இல்லை என்பது ஆர்வமூட்டக் கூடிய ஒன்றாகும்.  படிப்பது, எழுதுவது, கணக்குப் போடுவது போன்ற கல்விச் செல்வத்தில் எந்தவொரு ஐரோப்பிய தேச மக்களைக் காட்டிலும் இந்தியர்கள் பொதுவாக மேலானவர்களாக இருந்தனர் என 1813 - ஆம் ஆண்டு வாரன் ஹேஸ்டிங்ஸ் எழுதினார்.  நவீன தரத்துக்கு ஏற்ப போதுமான அளவுக்கு ஆரம்பக் கல்வியின் தரம் இல்லை எனினும், அக்காலத்திய குறைந்தபட்சத் தேவைக்கேற்ப இருந்தது.  அப்பொழுது ஆசிரியர்களுக்கு மிகுந்த மரியாதை இருந்து வந்தது,  அக்காலக் கல்வி முறையின் மிகவும் மகிழ்ச்சியான அம்சமாக இருந்தது.  மேட்டுக்குடியைச் சார்ந்த சில பெண்கள் விதிவிலக்காக இருப்பினும், பொதுவாக பெண்களுக்குக் கல்வி என்பது அபூர்வமான ஒன்றாகவே இருந்து வந்தது, மிக மோசமான அம்சமாகும்.”

அதைத் தொடர்ந்து, மக்களின், கல்வி, சமூகப் பண்பாடு, வாழ்க்கை முறை போன்றவைகளின் அன்றைய நிலைமைகள் எப்படியெல்லாம் மாறுதலுக்கு உள்ளாகி வளர்ச்சி பெற்றன என்பதைப் படிப்படியாக விளக்கிக் கூறுகிறார் வரலாற்றாசிரியர்.  மேலும் அன்றைய பொருளாதார நிலைமை வணிக வளர்ச்சியின் விளைவாக அடிப்படையிலேயே மாறுதலுக்கு உள்ளாகிய முறைகளையும் அவர் தெளிவுபடுத்துகிறார்.

“மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் வளம் அடிமை வர்த்தகத்தையும், அடிமைகள் வேலை செய்த தோட்டங்களின் இலாபத்தின் மீது அமைந்திருந்தது.  அடிமை வர்த்தகத்தினாலும், தோட்டங்களில் அடிமைகளின் உழைப்பினாலும் கிடைத்த 18, 19 - ஆம் நுற்றாண்டுகளில் தொழில் புரட்சிக்கு நிதியுதவி அளித்த மூலதனத்தை உருவாக்க ஓரளவுக்கு உதவியது.  பிற்காலத்தில் இந்தியாவிலிருந்து சுரண்டிச் செல்லப்பட்ட செல்வமும் இதே போன்ற பாத்திரத்தை வகுக்கிறது.

கிழக்கிந்தியாவில் பிரிட்டிஷ் கம்பெனி 1633 -ஆம் ஆண்டு ஒரிசாவில் தனது முதலாவது வணிகத் தளத்தைத் தொடங்கியது.  அடுத்து 1651 - ஆம் ஆண்டு ஹ¨க்ளியில் வர்த்தகம் மேற்கொள்ள அதற்கு அனுமதியளிக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து அது பீகாரிலும், வங்காளத்திலும் பாட்னா, பலாசூர், டாக்கா ஆகிய இடங்களில் வணிகத் தளத்தைத் தொடங்கியது.  வங்காளத்திலும் அது தனது தனிப்பட்ட குடியேற்றத்தை உருவாக்க முயன்றது.  அது இந்தியாவில் அரசியல் அதிகாரத்தை நிலை நாட்டக் கனவு கண்டது.

இந்திய நாட்டின் வளங்களைக் கொண்டே இந்தியாவை வெற்றி கொள்ளமுடியும் என்ற அடிப்படையில் அதற்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.  அவை தொடர்பான நிகழ்ச்சிப் போக்குகளைத் தகுந்த புள்ளி விவரங்களுடன் விறுவிறுப்பாகச் சித்தரிக்கிறார் அவர்.  தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் - பிரெஞ்சுப் போர் பற்றிய விவரங்களை முன்வைத்து பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் எவ்வாறு படிப்படியாக நிறுவப்பட்டது என்பதையும் அடையாளப்படுத்துகிறார். தொடர்ந்து பிரிட்டிஷார் எவ்வாறு வங்காளத்தைக் கைப்பற்றினார்கள் என்பதையும் விவரிக்கிறார்.  அடுத்து, ஆங்கிலேய ஆட்சி 1818 - 57 - ஆம் ஆண்டுகளுக்கிடையே வலுப் பெற்றதை விவரிக்கிறார்.  அந்தக் காலகட்டத்தில் இந்தியா முழுவதையும் வெற்றி கொள்ளும் இலட்சியத்தை ஆங்கிலேயர்கள் பூர்த்தி செய்தனர்.  சிந்துவும், பஞ்சாபும் வெற்றி கொள்ளப்பட்டது.  அவாத், மத்திய மாநிலங்கள் மற்றும் ஏராளமான பல சிற்றரசுகளும் இணைத்துக் கொள்ளப்பட்டன.

இறக்குமதி - ஏற்றுமதி வணிகத்தில் இந்தியாவின் இறக்குமதியைக் காட்டிலும், ஏற்றுமதியில் இருந்த கூடுதலின் வடிவிலும் சுரண்டல் நிகழ்ந்து கொண்டே இருந்தது.  குறிப்பாக, 1757 - க்கும் 1857 - க்கும் இடைப்பட்ட காலத்தில் பெருமளவில் சுரண்டல் நடைபெற்றது.  இதை ஆங்கிலேய அதிகாரிகள் பரவலாக ஏற்றுக் கொள்கின்றனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை இந்தியாவில் போக்குவரத்து பின் தங்கிய நிலையிலேயே இருந்தது. மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளுமே போக்குவரத்துச் சாதனங்களாக இருந்தன. பிரிட்டனில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இந்தியாவிற்குள் பரவலாகக் கொண்டு செல்லவும், இங்கிருந்து மூலப் பொருட்களை பிரிட்டிஷ் தொழிற்சாலைகளுக்கு எடுத்துச் செல்லவும் மலிவான எளிய போக்குவரத்து முறை அவசியம் என்பதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொணர்ந்தனர். ஆறுகளில் நீராவிக் கப்பல்களை இயக்கினர். சாலைகளை மேம்படுத்தினர். 

கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு அகலப் பாதைகள் அமைக்கும் பணி 1839 - இல் துவங்கி 1850 -இல் முடிவுற்றது.  நாட்டின் முக்கிய நகரங்கள், துறைமுகங்கள், சந்தைகளை இணைக்கும் இணைப்புச் சாலைகளுக்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன ஆனால், இரயில்வே வந்ததைத் தொடர்ந்துதான் போக்குவரத்தில் உண்மையான முன்னேற்றம் ஏற்பட்டது.  ஜான் ஸ்டீபன் வடிவமைத்த முதலாவது இரயில் எஞ்சின் 1814 - ஆம் ஆண்டு இயக்கப்பட்டது. 

தொடர்ந்து 1830 - 40ஆம் ஆண்டுகளில் இரயில்வே துறையில் தீவிர வளர்ச்சி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியாவிற்குள்ளும் அதனை வேகமாக உருவாக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதன் மூலம் நாட்டின் தொலைதூரப் பிரதேசங்களிலும் பரந்த சந்தை வாய்ப்புக்கள் கிடைக்கும்.  இந்தியாவிலிருந்து மூலப் பொருட்களையும், உணவுப் பண்டங்களையும் தமது எந்திரங்களுக்கும், அவற்றை இயக்குபவர்களுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும் என பிரிட்டிஷ் முதலாளிகள் எண்ணினர்.  இந்திய இரயில்வே வளர்ச்சியில் தமது உபரி மூலதனத்தை முதலீடு செய்வது பாதுகாப்பானதாக இருக்கும் என பிரிட்டிஷ் வங்கியாளர்களும், முதலீட்டாளர்களும் நினைத்தனர். அதன் விளைவாக இந்தியப் பொருளுற்பத்தியும், வணிகமும் மாறுதல்களுக்கு உள்ளாகித் தொடர்ந்து வளர்ந்தன.

மேலும், திறம்பட்ட நவீன தபால் தந்தி முறையையும் பிரிட்டன் நிர்மாணித்தது.  கல்கத்தாவிலிருந்து ஆக்ராவுக்கு 1853 - ஆம் ஆண்டு முதலாவது தந்தி வசதி ஏற்படுத்தப்பட்டது.  டல்ஹெளசி பிரபு தபால்தலைகளை அறிமுகப்படுத்தினார்.

நிலச்சீர்திருத்த அடிப்படையில் பழைய வகையிலான உற்பத்தி உறவுகளையும், உற்பத்தி முறைகளையும், மாற்றியமைத்து நிலவரித் திட்டத்தை அறிமுகப்படுத்தி படிப்படியாக மாற்றி அமைத்தனர்.  அந்நிய ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருந்தவர்களுக்கு அரசாங்கம் நிலம் வழங்கியதன் மூலம் இந்தியா முழுமையிலும் மற்றொரு வகையான நிலப்பிரபுக்கள் தோற்றுவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேலும் அடிப்படையான மாற்றங்கள் ஏற்படுவதற்கு இட்டுச் சென்றது. ஆனால், ஏகாதிபத்தியத்தின் நோக்கத்தை அது எப்போதும் மறக்கவில்லை.  இந்தியாவில் பிரிட்டிஷ் நிர்வாகம், சிவில் நிர்வாகம், படைகள், காவல்துறை ஆகிய துறைகளின் மீது அமைந்திருந்தது. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவதாக சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதும், ஆங்கில ஆட்சியைத் தொடர்வதும் பிரிட்டிஷ் இந்திய நிர்வாகத்தின் முதன்மையான நோக்கம்.

இந்திய சமுதாயத்தைச் சீர்திருத்த பிரிட்டிசார் மேற்கொண்ட முயற்சி ஒட்டு மொத்தத்தில் மிகவும் குறைவே.  அதனால், அதற்கு மிகக்குறைவான பலனே கிட்டியது.  கணவன் இறந்துவிட்டால் அவனது உடலுடன் விதவை மனைவியையும் சேர்த்து எரிக்க வேண்டும் என்ற சதிக் கொடுமைக்கு வில்லியம் பெண்டிங் பிரபு 1819ஆம் ஆண்டு முற்றுப் புள்ளி வைத்தது அவர்களது மிகப் பெரிய சாதனையாகும்.

நவீனக் கல்வியை நடைமுறைப்படுத்துவதில் பிரிட்டிஷார் பெருமளவில் வெற்றி பெற்றனர்.  அதன் அடிப்படையான நோக்கம் குறித்து அன்றைய வைஸ்ராயாக இருந்த மெக்காலே பிரபு தன்னுடைய கருத்தைத் தெளிவாக விளக்கிக் கூறினார்.  “நமக்கும் நாம் ஆட்சிபுரிந்து வரக்கூடிய இலட்சோப இலட்சம் மக்களுக்கும் இடையில் தொடர்பு வர்க்கம் ஒன்றை உருவாக்க நம்மால் இயன்ற அனைத்தையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.  ‘அந்த வர்க்கம் இரத்தத்தாலும், நிறத்தாலும் இந்தியர்களாகவும், அனுபவம், கருத்து, நெறிமுறை அறிவு ஆகியவற்றில் ஆங்கிலேயர்களாகவும் உள்ளவர்களாக இருக்க வேண்டும்”  அவருடைய நோக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியாவில் அறிவொளியும், பண்பாடும் வியக்கத் தகுந்த அளவில் வளர்ச்சி பெற்றன.  அத்தகைய எழுச்சியின் மையப் புள்ளியாக ராஜாராம் மோகன்ராய் விளங்கினார்.  நவீன இந்தியாவின் முதலாவது மாபெரும் தலைவராக அவர் மிகச் சரியாகக் கருதப்பட்டார்.  அவரைத் தொடர்ந்து 1809 - ஆம் ஆண்டு பிறந்த இளம் ஆங்கிலோ இந்தியரான ஹென்றி விவின் தோரோஜியோ இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க வகையில் விழிப்புணர்வைத் தோற்றுவித்தார்.  தோரோஜியோ நவீன இந்தியாவின் முதலாவது தேசியக் கவிஞராக விளங்கினார்.

பத்திரிகைகள், பிரசுரங்கள், பொதுநல அமைப்புக்கள் மூலமாக மக்களுக்கு சமூக, பொருளாதார அரசியல் பிரச்சினைகளில் போதிப்பது என்ற ராம் மோகன்ராயின் மரபை தோரோஜியன்கள் முன்னெடுத்துச் சென்றனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகளின் முக்கியத்துவம் அவர்களுடைய எண்ணிக்கையால் அல்ல.  அவர்கள் அத்தகைய போக்கைத் தொடங்கி வைத்தவர்கள் என்பதில்தான் அடங்கியுள்ளது.  புதிய இந்தியாவைப் படைப்பதில் அவர்களது சிந்தனைக்கும் செயலுக்கும் உறுதியான பங்கு உண்டு.

அதைத் தொடர்ந்து 1857ஆம் ஆண்டு வட இந்தியாவிலும் மத்திய இந்தியாவிலும் வெடித்த மகத்தான புரட்சி பிரிட்டிஷ் ஆட்சியைத் தூக்கியெறியும் அளவுக்கு ஆற்றல் கொண்டதாக இருந்தது. அது சிப்பாய்க் கலகமாக அல்லது கம்பெனியின் படையில் இந்தியப் படை வீரர்கள் செய்த கலகமாகத் தொடங்கியது.  ஆனால், விரைவில் அது நாடு முழுமையிலும் பரவி மக்கள் பங்கேற்ற போராட்டமாக மரியது.  இலட்சோப இலட்சம் விவசாயிகள், கைவினைஞர்கள், படைவீரர்கள், ஓராண்டு காலம் வீரம் செறிந்த வகையில் போராடினர். அவர்களது போற்றுதலுக்குரிய துணிவின் மூலமும், தியாகத்தின் மூலமும் இந்திய மக்களின் வரலாற்றில் ஒளிவீசும் அத்தியாயத்தை எழுதினர்.  இதன் பின்னணியைத் தெளிவாக பிபின் சந்திரா விளக்குகிறார்.

இந்தியாவின் மீதான பிரிட்டிஷ் அதிகாரம் 1859- ஆம் ஆண்டின் இறுதியில் மீண்டும் நிலை நாட்டப்பட்டது. ஆனால், புரட்சி வீண் போகவில்லை. பிற்காலத்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்திற்கு உணர்ச்சியூட்டி வந்த வற்றாத ஜீவ ஊற்றாக இருந்தது.

அடுத்து, 1857ஆம் ஆண்டு புரட்சி இந்தியாவில் பிரிட்டிஷ் நிர்வாகத்தில் பாதிப்பையும், அது தவிர்க்க முடியாமல் மறு சீரமைப்புச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஏற்படுத்தியது. நிர்வாக வசதிக்காக இந்தியாவை பிரிட்டிசார் மாநிலங்களாகப் பிரித்தனர்.  அவற்றில் வங்காளம், சென்னை, பம்பாய் ஆகிய மூன்றும் மாகாணங்கள் என்று அழைக்கப்பட்டன.  உள்ளாட்சி அமைப்புக் களை நிறுவினர்.  படை அமைப்பில் மாற்றங்களைச் செய்தனர்.  மக்கள் சார்ந்த பொதுப்பணித் துறைகளில் புதிய திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தினர்.  நிர்வாகக் கொள்கைகளை வடிவமைத்தனர்.  சாதி, மதம், இனம் போன்றவை அடங்கிய இந்தியப் பாகுபாடுகளில் பயன்படுத்தி அவர்களுக்குள் மோதல்களை உருவாக்கி பிரிட்டிசார் இந்தியாவை வெற்றி கொண்டனர். மக்களுக்கு எதிராக இளவரசர்களையும் மாகாணங்களுக்கு எதிராக மாகாணங்களையும், சாதிக்கு எதிராக சாதியையும், குழுவுக்கு எதிராக குழுவையும், எல்லாவற்றிற்கும் மேலாக, முஸ்லீம்களுக்கு எதிராக இந்துக்களையும் தூண்டிவிட்டு பிரித்தாளும் சூழ்ச்சியை 1858க்குப் பிறகு அவர்கள் கையாளத் தொடங்கினர்.

கல்வியறிவு பெற்ற இந்தியர்கள் மக்களிடையே இயக்கத்தைக் கட்டமைக்கத் தொடங்கி 1885 - ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தைத் தொடங்கினர்.

இருபதாம் நூற்றாண்டில் தொழிற்சங்க இயக்கங்கள் உருவானதை ஒட்டி சிறந்த தொழிலாளர் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.  ஆனாலும், இந்திய உழைக்கும் வர்க்கத்தின் நிலைமைகள் மிகவும் ஒடுக்கப்பட்டதாகவும், வருந்தத் தக்கதாகவுமே தொடங்கின. சராசரித் தொழிலாளர்கள் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளுக்கும் கீழான வாழ்க்கையையே நடத்தி வந்தனர்.

ஆங்கில அரசு அண்மை நாடுகளான நேபாளம், பர்மா, ஆப்கானிஸ்தான் ஆகியவற்றுடன் நிகழ்த்திய போரையும் வரலாற்றாசிரியர் குறிப்பிட்டு அதன் விளைவுகளை மதிப்பீடு செய்கிறார். 

பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவின் மீது ஆழமான பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தியது. 1947ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி வீழும் வரை அந்த ஆட்சிக்காலம் முழுவதிலும் இந்தியப் பொருளாதாரத்தின் அனைத்து அம்சங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டதை பிபின் சந்திரா தகுந்த புள்ளி விவரங்களோடு விளக்குகிறார்.

ஒட்டு மொத்தத்தில், இந்தியத் தொழில்துறை வளர்ச்சி மிகமிக நிதானமாகவும், சிரமமானதாகவும் இருந்தது.  19 - ஆம் நூற்றாண்டில் அவை பெரும்பாலும் பருத்தி, சணல் தொழிற்சாலைகளாகவும், தேயிலைத் தோட்டங்களாகவும், 1930களில் சர்க்கரை, சிமெண்ட் ஆலைகளாகவும் இருந்தன.  1946  இறுதியில் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த மொத்த தொழிலாளர்களில் 40 சதவீதம் பேர் பருத்தி, சணல், ஜவுளியில் இருந்து வந்தனர். உற்பத்தி, வேலைவாய்ப்பு என்ற வகையில் கணக்கிட்டால் இந்தியாவின் நவீன தொழில்துறை வளர்ச்சியானது பிறநாடுகளின் தொழில்துறை வளர்ச்சியுடன் ஒப்பிடக் கூடிய நிலையிலோ அல்லது இந்தியாவின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலோ இல்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் தேசிய அரசியல் உணர்வு முழு அளவில் பரவி தேசிய இயக்கம் வளர்ச்சி பெற்றது.  1885 - டிசம்பரில் தோற்றுவிக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸின் தலைமையில் இந்திய மக்கள் அணிதிரண்டு அன்னிய ஆட்சியரிடமிருந்து நாடு விடுதலை பெற வேண்டும் என்பதற்கான தொடர்ச்சியான வீரம் செறிந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  இதன் விளைவாக 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15இல் நாடு விடுதலை பெற்றது.

அதைத் தொடர்ந்து பிபின் சந்திரா இந்தியாவின் வளர்ச்சி பற்றியும், குறிப்பாக 1858க்குப் பிறகு நிகழ்ந்த மதம்,  சமூகம் சார்ந்த சீர்திருத்தங்களை விரிவாக வகைப்படுத்துகிறார்.  அடுத்து 1905 முதல் 1918 வரை நிகழ்ந்த தீவிர தேசிய இயக்கத்தின் வளர்ச்சியை ஆழமாக ஆய்வு செய்கிறார்.

விடுதலைப் போராட்டத்தின் முதல் கட்டம் நிகழ்ந்த 1919 - 1927 ஆண்டுகளில் இயக்க நடவடிக்கைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

காந்திஜி 1915 - ஆம் ஆண்டு தனது 46 - வது வயதில் இந்தியாவுக்குத் திரும்பினார்.  இந்திய நிலைமைகளையும் இந்திய மக்களையும் புரிந்து கொள்வதற்காக அவர் ஓராண்டு காலம் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டதையும், அவருடைய சத்திய சோதனையையும் விரிவாகக் குறிப்பிடுகிறார்.

அடுத்து இந்திய விடுதலைப் போராட்டத்தின் இரண்டாம் கட்டம் (1927-1947) பற்றிய நிகழ்வுகளையும் அனைத்து மக்களின் பங்கேற்பையும் இனம் காட்டுகிறார்.  1927ஆம் ஆண்டு தேசிய மறு எழுச்சிக்கும், புதிய சோசலிசப் போக்கின் தோற்றத்துக்கும் பல்வேறு அறிகுறிகள் தென்பட்டன.  மார்க்சியமும், மற்ற சோசலிசக் கருத்துக்களும் வேகமாகப் பரவின.  இந்திய இளைஞர்களின் செயல்பாடு தீவிரமடைந்தன.  நாடு முழுவதும் இளைஞர் கழகங்கள் உருவாக்கப்பட்டன.  மாணவர்களின் மாநாடுகள் நடைபெற்றன. 

1920களில் சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் குழுக்கள் தோன்றிச் செயல்பட்டன.  இரஷ்யப் புரட்சியின் உதாரணம் பல்வேறு இளம் தேசியவாதிகளின் ஆர்வத்தைத் தூண்டியது.  காந்திய சிந்தனைகளிலும் திட்டங்களிலும் அதிருப்தியுற்ற அவர்களில் பலர் சோசலிச சித்தாந்தத்தைத் தமது வழிகாட்டியாக ஏற்கத் தொடங்கினர்.  1925 -ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழிலாளர், விவசாயிகள் கட்சிகள் பல தோற்றுவிக்கப்பட்டன.  இக்கட்சிகளும், குழுக்களும் மார்க்ஸிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கருத்துக்களை பிரச்சாரம் செய்து வந்தன.  அதே சமயம் அவர்கள் தேசிய இயக்கம், தேசிய காங்கிரஸ் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதியினராகவே செயல்பட்டு வந்தனர்.

தொடர்ந்து 1942 - ஆம் ஆண்டு ஆகஸ்டு 8 அன்று பம்பாயில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடியது.  புகழ் பெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானத்தை அக்கூட்டம் நிறைவேற்றியது.  இந்த இலட்சியத்தை அடைய காந்திஜியின் தலைமையில் அகிம்சை வழியில் வெகுஜனப் போராட்டம் தொடங்கியது.

அதன் விளைவாக 1948ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிரிட்டன் இந்தியாவை விட்டு வெளியேறும் என 1947ஆம் ஆண்டு பிப்ரவரி 20 அன்று பிரிட்டிஷ் பிரதமர் கிளமென்ட் அட்லி பிரகடனப் படுத்தினார்.

அடுத்து 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 அன்று இந்தியா தனது முதலாவது சுதந்திர தின விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடியது.  பல தலைமுறைகளைச் சேர்ந்த தேசபக்தர்களின் தியாகங்களும், எண்ணற்ற தியாகிகளின் இரத்தமும் உரிய பலனைத் தந்தன.

வாசிப்புக்கு உகந்த வகையில் தெளிவாகவும் விரிவாகவும் எழுதப்பட்டுள்ள ‘நவீன கால இந்தியா’ ஒரு புதிய வரலாற்று உணர்வை நமக்குள் தோற்றுவிக்கிறது.  தமிழில் இது மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியிருப்பது தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கிறது.

நவீன கால இந்தியா
பிபன் சந்திரா
தமிழில் : இரா. சிசுபாலன்
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிட்
விலை: ரூ. 390/-