தொன்மை வாய்ந்த நூலான தொல்காப்பியம், சிறந்த கோட்பாட்டுத் திறனாய்வு நூலாகத் திகழ்கிறது. தொல்காப்பியர் சொற்களைக் குறியீட்டாக்கம் செய்து அவற்றை கோட்பாடாகக் கட்டமைக்கிறார். இலக்கியக் கோட்பாடு என்பது இலக்கியத்தின் பொதுமை ஆக்கக் கூறுகளை விளக்குவதாக அமையும். இலக்கியத்தின் பொதுமைப் பண்புகள் புனைவமைக்கப்பட்டிருக்கும் நெறியினை விளக்குவதாகவே கோட்பாடு அமைகின்றது.

தொல்காப்பியம் பொருளதிகாரம் இலக்கியக் கோட்பாடுகளை விளக்குவதாக அமைந்துள்ளது. அவற்றில் திணை, கைகோள், செய்யுள் அமைப்பியல் ஆகிய கோட்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஐந்திணைக் கோட்பாடு குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

திணை, அகத்திணை, புறத்திணை என இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்விருதிணை களுக்கும் ஏழு, ஏழு திணைகளாக மொத்தம் 14 திணைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அகத்திணைகள் ஏழும் புறத்திணைகள் ஏழிற்கும் புறனாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக திணைக்கோட்பாடு என்பது அகம், புறம், புறனாதல் ஆகியவை உள்ளடக்கியதாகும்.

செவ்வியல் இலக்கியங்களில் திணை என்னும் சொல் உயர்குடி (புறம்.24 :29 - 33), ஒழுக்கம் (மலை. 401), இனம் (குறு.224 : 3 - 5), நிலம் (புறம்,229 : 10: 12), திண்ணை (பட்.263, 264) ஆகிய பொருண்மைகளில் கையாளப்பட்டுள்ளது. ஆனால் தொல்காப்பியத்தில் திணை, கோட்பாட்டு உருவாக்கத்திற்கான பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

செவ்வியல் இலக்கியங்களில் அகம் எனும் சொல் உள்ளம் (புறம்.6 : 25 - 26), மார்பு (அகம்.100 :1 - 4), வீடு (அகம்.66 : 15), இடம் (முல்லை.43, நற்.33 : 11 - 12) ஆகிய பொருண்மைகளில் கையாளப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் மக்களின் பாலியல் வேட்கையைக் குறிக்கும் பொருளில் கையாளப்பட்டுள்ளது. அகம் என்னும் சொல்லின் பொருண்மையை விளங்கிக் கொள்வதற்கு அகத் திணையியல் குறித்த பொதுமையாக்க மரபினைப் பயன்படுத்தியே விளங்கிக் கொள்ள முடியும்.

அகத்திணை என்பது இன்பம் எனும் அகப்பொருண் மையை அடிப்படையாகக் கொண்டு கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை ஆகிய ஏழு திணைகளாக அமைக்கப்பட்டு ஒரு கோட்பாட்டு முறையை விளக்குவதாக அமையும். 

மக்களின் வாழ்வியலானது பாலியத்தாலும், வன்முறையாலும் கட்டமைக்கப்படுகின்றது. ஆகவே அகமும், புறமும் ஒன்றின் இரண்டு பக்கங்களாக அமைகின்றன. ஆக அகத்திணை, புறத்திணை, புறனாதல் ஆகிய மூன்றும் இணைந்து திணைக்கோட்பாடாகிறது.

திணைக்கோட்பாடானது அகம், புறம், புறனாதல் ஆகிய மூன்றனையும் உள்ளடக்கியது ஆகும். ஆனால் ஐந்திணையானது குடும்பம் சார்ந்த அமைப்புக்களை விளக்குவனவாக அமையும். இதில் குடும்பம் என்ற கட்டமைப்பிற்குள் தலைமக்கள் எவ்வாறு இணை கின்றனர் என்பதை விளக்குவதாக அமையும். திருமணத் திற்கு முந்தைய ஆண், பெண் உறவானது திருமணத்தில் இணைந்து திருமண வாழ்வியல் நெறிகளை இலக்கியங் களில் பதிவு செய்வதாக அமைகின்றது.

அதனால் ஐந்திணைகள் அகத்திணை ஏழிலும் சிறப்புப் பெறு கின்றது. ஆகவே இது ‘அன்பொடு புணர்ந்த ஐந்திணை’ (தொல்.கள.1) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்திணை களில் பாலை எனும் திணை நடுவணது எனும் சொல்லாலேயே அகத்திணையியலில் குறிக்கப்படுகிறது. அகத் திணையியலில் பாலை எனும் சொல் குறிப்பிடப்பட வில்லை.

மேலும் நடுவணது பாலை என்பதை உரையாசிரியர்களின் உரைகளின் வழி அறிய முடிகிறது. “பாலை என்னும் குறியீடு எற்றாற் பெறுதும் எனின் வாகை தானே பாலையது புறனே (புறத்.15) என்பதனாற் பெறுதும்”1 என்று இளம்பூரணர் கூறுகின்றார்.

தொல்காப்பியத்தில் ஐந்திணையே அகத்திணை என்பது போல ஐந்திணையின் இலக்கணக் கூறுகளைப் பலபட விரித்துரைப்பக் காணலாம். அகத்திணையியல் 55 நூற்பாக்களைக் கொண்டது. அகத்திணை எனப் பொதுப்பெயர் பூண்டிருந்தும் இதன் 50 நூற்பாக்கள் ஐந்திணையின் நெறிகளையே விரித்து மொழிதல் காண்க.

களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல் எனப்படும் பிற நான்கு இயல்களும் கூட ஐந்திணை நுவலும் அமைப்பினவாகவே உள. ஐந்திணைக் காதல் அற நலத்தது, உலகம் நன்னயங்களை நோக்கிச் சங்கப் புலமையினோர் ஐந்திணைத் துறைகளையே பெரிதும் பாடினர்.2

ஐந்திணையானது இயற்கைப் பின்னணியோடும், நிலப்பின்னணியோடும் இணைந்த மக்களின் பாலியல் சார்ந்த உணர்வுகளைப் பிரதிபலிப்பனவாகும். ஐந்திணைகளில் நடுவில் உள்ள பாலையைத் தவிர பிற நான்கு திணைகளுக்கும் நிலப்பாகுபாடு வகுத்தமைக்கப்பட்டுள்ளது.

மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய பெருமணல் உலகமும்

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே (தொல்.பொ.5)

என இவ்வாறு முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகியவற்றிற்கு நிலப்பாகுபாடு செய்யப்பட்டுள்ளது. பாலைக்கு தனிநிலம் குறிப்பிடப்படவில்லை.  ஆயினும், பொழுதுகளாக ஆண்டின் பருவமான வேனிலும், நாளின் பொழுதான நண்பகலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்திணைகளுக்கும் முதல், கரு, உரி என முப்பொருள் பாகுபாடு கூறப்பட்டுள்ளது. முதல் என்பது நிலமும், பொழுதும் ஆகும். கரு, தெய்வம், உணவு, விலங்கு, பறவை, பறை, செய்தி, யாழின் பகுதி என்னும் வகைக்குள் அடங்கும் இயற்கைச் சூழலை மையமாகக் கொண்டவற்றைக் குறிக்கும்.

ஐந்திணை இலக்கியத்தின் அடிக்கருத்து உரிப்பொருள் ஆகும். அதாவது ஐந்திணைப் பாடல்களில் இடம்பெறும் தலைமக்களின் பாலிய ஒழுக்கங்களைக் குறிப்பது. உரிப்பொருள் இன்றி பாடற் பொருண்மை அமையாது. உரிப்பொருள் களாவன :

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்

ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை

தேருங்காலை திணைக்குரிப் பொருளே

(தொல்.பொ.அகத்.14)

என்று கூறப்பட்டுள்ளது. புணர்தல்,  பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் ஆகியனவும், அவற்றின் தொடர்பான சூழலின் காரணங்களும் திணைக்கு உரிப்பொருளாகும். இன்ன திணைக்கு இன்ன உரிப்பொருள் என்பதை உரை யாசிரியர்களின் உரைகளின் வழி அறியலாம்.  இளம் பூரணர், மரபியல் நூற்பா ‘மொழிந்த பொருளோடு ஒன்ற வைத்தல்’ (மரபு.110) எனும் நூற்பாவினைக் கொண்டு, புணர்தல் என்பது குறிஞ்சித்திணைக்கும், பிரிதல் என்பது பாலைத் திணைக்கும், இருத்தல் என்பது முல்லைத் திணைக்கும், இரங்கல் என்பது நெய்தல் திணைக்கும், ஊடல் என்பது மருதத்திணைக்கும் எனக் குறிப்பிடுகின்றார். இந்த ஐவகை உரிப்பொருள்களும், அவற்றின் தொடர்பான நிகழ்வுகளும் பாடலின் அடிக்கருத்தாக அமைகின்றன.

ஐந்திணைக் கோட்பாட்டினை உரிப் பொருள்களை அடிப்படையாகக் கொண்டே உருவாக்க முடியும். பிரிதல் என்பது எல்லாத் திணைக்கும் உரியன வாயினும் பாலைக்கு சிறப்புறக் கூறப்பெற்றுள்ளமையால் பாலைத்திணைக்கு உரிய உரிப்பொருளாகும்.

இவ்வுரிப் பொருள்களோடு தலைமகளை உடன் கொண்டு பெயர்தலாகிய கொண்டு தலைக்கழிதலும், தலைமகன் தலைமகளைப் பிரிந்த இடத்து இரங்குதலாகிய பிரிந்தவன் இரங்கலும் அடங்கும். ஒரு பாடலை என்ன திணைக்கு உரியது என்பதை அந்த திணைக்குரிய உரிப் பொருள்களைக் கொண்டே இனங்காணலாம். முதற் பொருளும் கருப்பொருளும் அதற்குரிய துணைமைக் கருவிகளாக விளங்குகின்றன.

நிலமும், பொழுதும் ஐந்திணைகளுக்கும் வகுத்துச் சொல்லப்பட்டுள்ளது. பாலைத்திணைக்கு நிலம் சொல்லப்படவில்லை ஆயினும் பொழுது குறிப்பிடப் பட்டுள்ளது. குறிஞ்சி, முல்லை முதலிய ஐந்திணை களையும் முதலாசிரியர் குறியாகப் பயன்படுத்தியுள்ளார் என்று இளம்பூரணர் கூறுகின்றார்.

முல்லை, குறிஞ்சி என்பன இடுகுறியோ காரணக் குறியோ எனின் ஏகதேச காரணம் பற்றி முதலாசிரியர் இட்டதோர் குறி என்று சொல்லப்படும். பாலை என்பதற்கு நிலம் இன்றேனும், வேனிற்காலம் பற்றி வருதலின் அக்காலத்துத் தளிரும் சினையும் வாடுதலின்றி நிற்பது பாலை என்பதோர் மரம் உண்டாகலின், அச்சிறப்பு நோக்கி பாலை என்று குறியிட்டார்.3

இந்தக் குறிகள் உணர்த்தும் உரிப்பொருள்கள் காலந்தோறும் இருந்து வரக் கூடியது. எனவே காலத்தை மீறியது. ஆகவே குறிஞ்சித் திணை என்றால் கூடலை மட்டும் குறிப்பது. குறிஞ்சித் திணை என்பது குறியீட்டாக்கத்தின் மூலம் கூடலைக் குறிக்கிறது. ஏனெனில் கூடல் பொருண்மை எல்லா நிலத்திலும் உண்டு. ஆனால் திணை அமைப்பில் குறிஞ்சியில் மட்டும்தான் உண்டு.

இதுவே குறியீட்டமைப்பு ஆகும். இவ்வாறு ஐந்திணைகளும் குறியாகப் பயன்படுத்தப் பட்டு கோட்பாடாகக் கட்டமைக்கப்படுகிறது. புவியியல் அடிப்படையில் (தமிழ்நாடு) காடு, மலை, மிகுதியான நீர் வளம் நிறைந்த வயல் பகுதி, பெருமணல் நிறைந்த கடல் சூழ்ந்த பகுதி என நான்காகப் பிரித்து, அவற்றிற்குரிய பழக்க வழக்கம், தொழில், உணவு முறை ஆகிய வாழ்வியல் நெறிகளை வகுத்தமைத்து, உரிப் பொருள்களின் மூலம் பாலிய நடத்தை ஒழுகலாறுகள் பதிவு செய்யப்படுகின்றது. எல்லாத் திணைகளுக்கும் உரியதாக அனைத்து உரிப்பொருள்களும் இருப்பினும், அவை குறியீட்டமைப்பின் மூலம் ஒரு திணைக்கே சிறப்புடையனவாக இருக்கின்றது.

ஐந்திணை என்பது மக்களின் பாலிய ஒழுக்கங்களை எடுத்தியம்புவது ஆகும். இப்பாலிய ஒழுக்கமானது களவு, கற்பு வாழ்க்கையினை அடிப்படையாகக் கொண்டு அமையும் போது கைகோள் கோட் பாடாகிறது. களவு, கற்பு ஆகிய இரண்டிலும் ஐந்திணைகளின் பங்கு முக்கியமானது. திருமணத்திற்கு முன், பின் ஓர் ஆண்மகனும், ஒரு பெண்ணும் கொள்ளும் உறவுகளின் அடிப்படையில் ஐந்திணைகள் கட்டமைக்கப் படுகின்றது.

திணை மயக்கம்

திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே

நிலன் ஒருங்கு மயங்குதல் இன்றென மொழிப

புலன் நன்குணர்ந்த புலமையோரே (தொல்.பொ.12)

ஐந்திணைகளுக்கும் வகுக்கப்பட்டுள்ள முதல், கரு, உரி ஆகிய முப்பொருள்களில் முதற் பொருளில் நிலம் மயங்காது. பொழுது மயங்கும். கருப்பொருள் மயங்கி வருதலும் உண்டு.

எந்நில மருங்கின் பூவும் புள்ளும்

அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும்

வந்த நிலத்தின் பயத்த வாகும் (தொல்.19)

என்பதன் மூலம் கருப்பொருள் மயக்கங்கள் ஏற்படும்  என்பதை அறியலாம். கருப்பொருளுக்குரிய பூவும், பறவைகளும் மயங்கி வரும் ஆயினும் எந்த நிலத்தில் கருப்பொருள் மயங்கி வருமோ அந்நிலத்திற்கு உரிய கருப்பொருளாகவே கருதப்பெறும்.

உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே

(தொல்.பொ.அகத்.13)

உரிப்பொருள் அல்லாத முதற்பொருளும், கருப் பொருளும் மயங்கும். இந்நூற்பாவிற்கு இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகிய இருவரிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. இளம்பூரணர் முதற்பொருளும், கருப்பொருளும் மயங்கும் என்கிறார். நச்சினார்க்கினியர் உரிப்பொருள் அல்லாத கைக் கிளையும், பெருந்திணையும் மயங்கும் என்கிறார். முதற்பொருளும், கருப்பொருளும் மயங்கும் என்று கொள்வதே பொருத்தமாகத் தோன்றுகின்றது.

ஐந்திணைக் கோட்பாடுகளில் முக்கியமான கூறு, பாடல்களில் குறிக்கப்பெறும் தலைமக்களின் இயற் பெயர்கள் சுட்டப்பெறக்கூடாது என்பதாகும். ஏனெனில் அனைவருக்கும் பொதுவான உணர்வுகளைப் பதிவு செய்யும் அகப்பாடல்களில் இயற்பெயர்கள் தேவை இல்லை. தலைவன், தலைவியரைக் குறிக்க கிழவன், கிழத்தி எனவும், தலைவியின் பெற்ரோரை தமர், தாயர், நற்றாய், செவிலி, தோழி ஆகிய பொதுச் சொற்களாலும் குறிப்பிடப்பட வேண்டும். இதனை,

மக்கள் நுதலிய அகனைந்திணையும்

சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறாஅர்

(தொல்.பொ.அகத்.54)

எனும் நூற்பாவின் மூலம் அறியலாம்.

திணைக்குரிய மக்களின் பெயர்களைச் சுட்டும் போது, குலப்பெயர்கள், தொழில் சார்ந்த பெயர்களால்  குறிக்கலாம் என்பதை,

பெயரும் வினையும் என்று ஆ இருவகைய

திணைதொறும் மரீஇய திணைநிலைப் பெயரே

(தொல்.பொ.அகத்.20)

எனும் நூற்பாவின் மூலம் அறியலாம். மேலும் முல்லைத் திணையின் ஆண்மக்களின் பெயர்களாக,

ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர்

ஆவயின் வரும் கிழவரும் உளரே (தொல்.பொ.அகத்.21)

என்பதன் மூலம் ஆயர், வேட்டுவர் என்போர் அவர்கள் செய்யும் தொழிற்பெயர்களால் குறிப்பிடப்படுவர் என்பதை அறியலாம்.

திணையினை உணர  உதவும் கருவிகள்

உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத்

தள்ளாதாகும் திணைஉணர் வகையே

(தொல்.பொ.அகத்.46)

திணையினை உணர்ந்து கொள்வதற்குரிய கருவி களாக உள்ளுறை உவமமும், ஏனை உவமமும் பயன் படுகிறது. உவமிக்கப்படும் பொருள் புலப்படாமல் உள்ளுறையாகச் சொல்லப்படுவது உள்ளுறை உவமமாகும். உவமிக்கப்படும் பொருள் வெளிப்பட உணரப்படுவது ஏனை உவமமாகும். திணையினை உணரும் வகையாக உள்ளுறை உவமமும், ஏனை உவமமும் பயன்படுகிறது.

ஐந்திணையின் ஒழுக்கமானது இன்பம், பொருள், அறம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட காமக் கூட்டமானது கூறப்பட்டுள்ள எண்வகை மணங்களின் அடிப்படையில் கந்தர்வம் போன்றது என்பதாகும்.

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக்கூட்டம் காணும் காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே

(தொல்.பொ.கள.1)

என்பதன் மூலம் அறியலாம்.

ஐந்திணைக் கோட்பாடானது நிலங்களை ஐந்தாகப் பிரித்து, அவற்றிற்குரிய முதல், கரு, உரிப்பொருள்கள் ஆகியவற்றை வகுத்தமைத்து, அந்நிலங்களில் வாழும் மக்களின் வாழ்வியல் நெறிகளை விளக்குவதாக அமைகின்றது. நிலங்களைக் குறியீடாக்கி அவற்றை திணை ஆக்குவதன் மூலம் ஐந்திணைக் கோட்பாடு கட்டமைக்கப்படுகிறது.

ஆணும் பெண்ணும் சமூகத்தில் கொள்ளும் உறவானது திருமண வாழ்வோடு பின்னிப்பிணைந்து இன்பம், பொருள், அறம் ஆகிய அனைத்தையும் அடிப் படையாகக் கொண்டு இயங்க வேண்டும். ஆகவே ஐந்திணையானது பிற கைக்கிளை, பெருந்திணைகளை விடச் சிறப்புப் பெறுகின்றது. ஏனெனில் அவை ஒத்த அன்புடைய இருவரிடம் நிகழும் உறவினை எடுத்தியம்பு வதாக அமைகின்றது. இதனையே ஐந்திணைக் கோட் பாட்டின் வழி தொல்காப்பியம் நிறுவுகிறது.

அடிக்குறிப்புகள்

1. இளம்பூரணர் உரை, தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருளதிகாரம், ப.405.

2. வ.சுப.மாணிக்கம், தமிழ்க்காதல், ப.36.

3. இளம்பூரணர் உரை, தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருளதிகாரம், ப.408.