1.

நம்மில் பலரும் தம்மை சாதிமுறைமைக்கு எதிரானவர்களாக நம்பிக் கொள்கிறோம். கருத்தியல் ரீதியாக சாதியத்தை எதிர்க்க முன்வந்திருக்கிற நாம் நடைமுறையில்- சொந்த வாழ்க்கையில்- சாதியத்தைக் கடக்கத் துணிந்திருக்கிறோமா என்று கேள்வியெழுப்பும் நேரம் வந்துவிட்டது. சாதிக்கெதிரான போராட்டம் என்றதும் தொழிற்சங்க நடவடிக்கையைப் போல கூட்டாக சேர்ந்து ஆர்ப்பாட்டமோ உண்ணாவிரதமோ நடத்தி சாதியை ஒழித்துவிடலாம் என்று நினைப்பது அறிவுக்கொவ்வாத அணுகுமுறை. தமக்குள் இருக்கிற சாதிய சிந்தனைகள் குறித்து குற்றவுணர்ச்சி கொள்வது, அச்சிந்தனைகளிலிருந்து விடுபடுவது, சகமனிதரிடம் தீண்டாமை பாராட்டாமல் இருப்பது, எல்லா நிலைகளிலும் சாதியை மறுப்பது, சாதிய ஒடுக்குமுறைகள் நிகழ்கிறபோது தன்னொத்தவர்களோடு இணைந்து போராடுவது- என தனிப்பட்ட வாழ்வில் சாதியத்திற்கெதிரான போராட்டம் மலைப்பூட்டும் வகையில் பெரும் சவாலாக நம்முன் நிற்கிறது.

எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ஒட்டடையடித்து விடலாம் என்று நினைப்பதைபோல, ஒருவார காலம் விடுப்பெடுத்துக்கொண்டு சாதியை ஒழித்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. சமத்துவத்திற்காகப் போராடுவதென்பது நமது இயக்கத்தின் கொள்கையாக மட்டுமில்லாமல் நமது வாழ்வியல் நெறியாக- நமக்குள்ளிருக்கும் இயல்பானதொரு உணர்வாக மாறவேண்டியுள்ளது. 

நமக்குள் நிகழ்த்திக்கொள்ள வேண்டிய இந்த உள்முகப் பயணத்திற்கு உதவும் பொருட்டே இந்த கருத்தரங்கம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. சுவாரஸ்யமான சொற்பொழிவின் பெயரால் எல்லாப் பேச்சுக்களையும் ‘செவியின்பமாகவோ, செவிக்குணவாகவோ’ சுருக்கிப் புரிந்துகொள்ளும் போக்கு மிகவும் அபாயகரமானது. நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்கக்கூடியது. எனவே ஒரு தீவிரமான உரையாடலுக்கும் விவாதத்திற்குமாக நமது சந்திப்புகளை மறுகட்டமைப்பு செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.

2.

கலை இலக்கியம் என்பவை மனிதமனத்தின் வெளிப்பாடுகள். மனிதமனமோ சமூகத்தின் விளைபொருள். இந்த விளைபொருளுக்கான நிலமாகவும் விதையாகவும் உரமாகவும் சமூகச்சூழலே இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள சிலருக்குத் தயக்கம் இருக்கிறது. எதன் சாயலும் படியாத ஒரிஜனல் சரக்கு என்று தமது சிந்தனைகளையும் அதிலிருந்து பிறக்கிற படைப்புகளையும் உருவகித்து வைத்திருக்கும் ‘சுயம்புகளான’ இவர்களுக்கு, அவை சமூகத்தின் விளைபொருள் என்று ஒப்பமுடியாமல் போவது இயல்பானதுதான். ஆனால் இப்படி ஒவ்வாமை கொள்கிறவர்கள் நடைமுறையில் தங்களது மறுப்பை நிறுவ எந்தவொரு சான்றாதாரத்தையும் முன்வைக்க முடியாதவர்களாகவே இருக்கின்றனர்.

சமூகம் என்கிற பெரும்பரப்புக்குள் தான் யார்? அந்த பெரும்பரப்பு தனக்குள் எவ்வாறு வினையாற்றுகிறது? சகமனிதரோடு தனக்கிருக்கும் உறவு சமத்துவமானதா? மேல்கீழ் படிநிலை கொண்டதா? அசமத்துவம் நிலவுகிறதென்றால் அதற்கான அடிப்படை என்ன? அந்த அசமத்துவத்தை ஏற்றுக்கொள்ள அல்லது நிராகரிக்கவும் எதிர்க்கவும் உள்ள நியாயங்கள் என்னென்ன என்று மனித மனம் ஓயாமல் தனக்குள் ஓர் உள்முகத்தேடலை நடத்திக் கொண்டேயிருக்கிறது. இந்தத் தேடல் குறித்த பதிவுகளே கலை இலக்கியப் படைப்புகளாக வெளிப்படுவதாகக் கருதுகிறேன்.

அப்படியானால் கலை இலக்கியம் குறித்த மதிப்பீடானது இந்த சமூகத்தைப் பற்றிய மதிப்பீட்டுக்கு நம்மை தவிர்க்கவியலாமல் இட்டுச்செல்கிறது. எனவே இங்கு சமூகம் என்னவாக இருக்கிறது என்பதிலிருந்தே எல்லாவற்றையும் தொடங்க வேண்டியிருக்கிறது.

இந்தியச் சமூகம் ஒன்றாக இல்லை. அது தீண்டப்படுவோர் இந்தியாவாகவும் தீண்டப்படாதோரின் இந்தியாவாகவும் இரண்டாகப் பிரிந்திருக்கிறது. பிரிந்திருக்கிறது என்றால் - அது வெறுமனே நிலவியல் ரீதியாக மட்டுமில்லாமல், வாழ்வின் எல்லா அம்சங்களிலும் இணக்கம் காணமுடியாதபடி பிரிந்திருக்கிறது. இந்தப் பிரிவினையை - இடைவெளியை இட்டுநிரப்ப எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளையும் உள்வாங்கிச் செரித்துவிட்டு காலத்திற்கேற்ற ரூபங்களில் மீண்டும் மீண்டும் நீடித்து நிற்பதாயிருக்கிறது இந்தப் பிரிவினை என்று அம்பேத்கருக்கும் முன்பிருந்தே சொல்லப்பட்டு வருகிறது.

தீட்டு-புனிதம், நல்லது-கெட்டது, உயர்வு-தாழ்வு என்பதற்கான விளக்கங்கள் மாறிக்கொண்டே வந்தாலும் ஒவ்வொரு காலத்திலும் ஏதோ ஒன்று புனிதமாக- நல்லதாக- உயர்வாக கட்டமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிற நிலையில் மாற்றமேதுமில்லை. எனவேதான் தீண்டாமையும் ஒடுக்குமுறையும் நீடிக்கிறது. நிலவும் இந்த உண்மைக்கு யார் அல்லது எது மூலகாரணமாய் அமைந்திருக்கக்கூடும் என்று தேடப் புகுந்தால் அது ஆதிக்க சாதியினரை குற்றம் சாட்டக்கூடும் என்ற பதற்றத்தில் இந்தியாவை ஒரே நாடாக - ஒன்றுபட்டு வாழும் ஒரு சமூகமாக முன்னிறுத்துகிற மோசடி நடந்துவருகிறது. இந்த மோசடிக்கு சற்றும் குறையாததுதான் மொழிவழி தேசியமும்.

ஆகவே இந்திய, தமிழ்ச்சமூகத்தின் மனநிலை நெடுங்காலமாகவே ஒடுக்குகிற அல்லது ஒடுங்குகிற நிலைக்குதான் பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. சகமனிதனை சமமாக கருதுகிற மேன்மையான குணம் அதற்குத் தெரியாத ஒன்று. சமத்துவவுணர்வை ஒருபோதும் துய்த்திராத அந்த மனம்- அதனாலேயே சுதந்திரவுணர்வையும் துய்க்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. தத்தமது சாதியின் புனிதத்தைக் காப்பாற்றும் பொறுப்பு ஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்புகளிலும் தலையாயதாய் நிறுவப்பட்டிருப்பதால் எப்போதும் ஒரு தற்காப்பு மனநிலையிலேயே வாழ வேண்டியராயிருக்கிறார். சற்று அயர்ந்தாலும் மோசம் போய்விடுவோம் என்ற பீதியில் உறைந்துகிடக்கும் ஒருவரது மனநிலை அழுத்தம் தாளாது நிலைபிறழ்ந்து தம்மைச் சுற்றி பாதுகாப்பு அரண்களை நிறுவிக்கொள்ள வேண்டியிருக்கிறது. மாற்றாரைத் தடுக்க அமைக்கப்பட்ட இந்த தடுப்பரணுக்குள் ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு தனிமனிதரும் ஒரு கைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதுதான் இன்றைய நிலை.

எனவே இந்திய- தமிழ்ச் சமூகத்தின் மனம், பாரபட்சங்களையும் புறக்கணிப்பையும் அநீதியாக பார்ப்பதற்குத் துணிவதில்லை. அம்மாதிரியான அநீதிகளை இயல்பானதாக ஏற்றுக்கொள்வதும் அதை சகமனிதர்மீது நிகழ்த்திப் பார்க்கத் துணிவதாயுமே இருக்கிறது. அசமத்துவத்தை, ஒடுக்குமுறையை இயல்பானதாக ஏற்றுக்கொள்கிற இந்த மனநிலைதான் - சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாகிற- அதன் காரணமாகவே அரசியல், பொருளாதார, பண்பாட்டுத்தளங்களிலும் ஒடுக்கப்படுகிற- தலித்துகளையும்கூட, தமக்குள் உட்சாதிப் பிளவுகளை பேணுவதிலும் தம்வீட்டுப் பெண்களை ஒடுக்குவதிலும், இழிவாக- தம்மிலும் கீழானவர்களாகக் கருதுவதற்கு நெட்டித்தள்ளுகிறது.

இந்தப் பின்புலத்தோடு கலைஇலக்கியத்தை மதிப்பீடு செய்யப் புகுந்தால் அங்கும் அசமத்துவமான பிரதிநிதித்துவமும், வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஊடாடி வழிநடத்தும் சாதிய/ பால்நிலைச் சாய்மானமும் வெளிப்பட்டிருப்பதை உணரமுடியும். நிலவும் ஏற்றத்தாழ்வான நிலைகளை இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொண்ட ஒரு சமூகத்தின் அங்கத்தினராய் இருக்கிற ஒருவர் தம் வாழ்வியல் அனுபவங்களிலிருந்து எதை- ஏன்- எப்படி- எதற்காக வெளிப்படுத்த முன்வருகிறார் என்ற தொடக்கப் புள்ளியிலேயே அவரது சாய்மானமும் உள்ளுறையாக இணைந்துவிடுகிறது. தன் படைப்புமனதை வெளிப்படுத்த அவர் வாய்மொழி மரபைத் தெரிவு செய்கிறாரா அல்லது எழுத்துவழியாக வெளிப்படுத்துகிறாரா என்பதிலும்கூட அவரது சாய்மானம் இணைந்தே இருக்கிறது. அதாவது இந்த நாட்டில் கல்வி கற்கும் உரிமை யாருக்கு எப்போது கிடைத்தது அல்லது கிடைக்கவில்லை என்பதோடு அது தொடர்புடையதாய் அமைகிறது.

ஆனால் இப்படி சொல்கிறபோது சிலர் ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் தவ்விக் குதிக்கிறார்கள். இலக்கியமும் கலைகளும் எல்லோருக்கும் பொதுவானது என்று கழுத்துநரம்பு புடைக்க கர்ஜிக்கிறார்கள். அப்படி இருந்தால் சரிதான் நண்பர்களே. ஆனால் இல்லை என்பதுதானே எதார்த்தம்? நிலம் நீர் காற்று ஆகாயம் பணம் காசு பண்டம் அனைத்தையும் சாதிப்பாஷாணத்தில் தோய்த்து தொங்கவிட்டிருக்கிற இந்த சமூகத்தில் இலக்கியம் மட்டும் எப்படி எல்லோருக்கும் பொதுவாய் இருக்கமுடியும் என்ற எளிய கேள்விக்கு இவர்களிடம் பதிலில்லை. இளமையில் கல் என்ற அவ்வையின் மரபும், எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்ற வள்ளுவர் மரபும் அழித்தொழிக்கப்பட்டு கற்கும் உரிமையை சில சாதிகளின் ஆண்களுக்கு மட்டுமே வார்த்துக்கொடுக்கும் நிலை உருவாகி நிலைத்து நின்றுவிட்ட இச்சமூகத்தில் கல்வியோடு மிகநேரடியாக தொடர்பு கொண்டிருக்கும் கலையும் இலக்கியமும் எல்லாவற்றிலிருந்தும் விலகி சுயம்புவாக எப்படி வெளிப்பட முடியும்?

மொழி எல்லோருக்கும் பொதுவென்றால் ஏன் சமஸ்கிருதம் மட்டும் தேவபாஷையாக அறிவிக்கப்பட்டது? நமஸ்காரம் என்ற சமஸ்கிருதச் சொல்லை பொற்கொல்லர்கள் உச்சரிக்கக்கூடாது என்று பிரிட்டிஷ் அரசிடம் மனுபோட்டு தடையுத்தரவு பெறப்பட்டது எதனால்? இழிசனர் வழக்கென்ற பதம் எதன்பொருட்டு உருவானது? இசை புனிதமென்றால் இசைக்கருவிகளும் புனிதம்தானே? எனில் ஏன் திருவையாற்றில் ‘நன்னா வாசிக்கிறவாள்’ ஒருத்தரும் பறையைத் தொடுவதில்லை? இந்தியாவின் தமிழகத்தின் செவ்வியல் மரபின் கலை வடிவங்களாக முன்னிறுத்தப்படுபவை எந்த சாதிக்குரியவை? கலாச்சாரப் பரிவர்த்தனைகளின் பெயரால் இந்தியாவிலிருந்து பிறநாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறவை இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்குரியவையா? பார்ப்பனர்களின் அனைத்தும் பார்ப்பனர்களின் கைச்சரக்குகள் அனைத்தும் தேசிய கலைவடிவங்களாக அந்தஸ்துப்படுத்தப்படுவதும், பார்ப்பனரல்லாதவர்களின் கலைவடிவங்களை ‘எதினிக்’ அல்லது‘ ‘ஃபோ(ல்)க்’ என்றோ வகைப்படுத்தப்படுவதும் தற்செயலான நிகழ்வுகளா?

இப்படி எல்லாமே சாதியாகத்தான் இருக்கிறது. இதற்குள் இருக்கிற படைப்பாளியும் சாதிவயப்பட்டவராகவே இருக்கிறார். அவர் அறிந்தவற்றை தன் படைப்பாக வெளிப்படுத்துகிறார் என்றால் அவர் அறிந்திருப்பதெல்லாம் அவரது சாதி கற்றுக் கொடுத்ததைத்தான். அவரவர் சாதி அவரவருக்கு விதித்த வரம்புகளை மீறி எழுதவும் பேசவும் ஒருவர் இயல்பாக முயற்சிப்பதில்லை. (மிகுந்த அரசியல் விருப்புறுதி கொண்ட விதிவிலக்கான சிலரை இங்கே பொருட்படுத்தி பேசவேண்டியிருந்தாலும் அவர்கள் மிகவும் சொற்பமானவர்கள் என்றே குறித்துக்கொள்ள வேண்டும்.)

தன் சாதி பிறரை என்னவாகப் பார்க்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்திருக்கிறதோ அந்த பொதுப்புத்தியிலிருந்து தன்னை ரத்தம் சொட்டச் சொட்ட அறுத்துக்கொண்டு வெளியேறாமல்- அப்படி அறுத்துக்கொள்ளும்போது ஏற்படும் வலியையும் வாதையையும் வாய்விட்டுக் கதறி வெளிப்படுத்தத் துணியாமல்- நிலவும் சூழலை நியாயப்படுத்துகிற ஒருவரிடமிருந்து- அவர் கொம்பாதி கொம்பு படைப்பாளியாயிருந்தாலும் அவரிடமிருந்து வெளிப்படுகிற படைப்புகளை- அவை எத்தனை உன்னதமானதென்று உலகம் கொண்டாடினாலும் - அவை காகிதத்திற்குக் கேடானது என்பதே என் கருத்து.

எனவே இதுவரையான கலைஇலக்கியப் படைப்புகளை வாசிப்புக்கு உட்படுத்துகிற ஒரு தலித் மனம் அவற்றை தன் அகநிலை சார்ந்தே அணுகுகிறது. அவற்றில் சித்தரிக்கப்பட்டுள்ள வாழ்க்கை எவருடையது? அதில் தலித்துகள் இடம் பெற்றிருக்கிறார்களா இல்லையா? இடம் பெற்றுள்ளனர் என்றால் எவ்வாறு? என்றெல்லாம் அது படைப்புகளை பரிசீலிக்கிறது. பொத்தாம்பொதுவானதென்று நீங்கள் அறிவித்துக் கொண்ட எல்லாமே போலியானவை. அவை உங்கள் சாதிப் பெருமிதங்களை- சகமனிதரை ஒடுக்குவதற்கான நியாயங்களை- ஒடுங்கிக்கிடக்க வேண்டியதன் அவசியத்தைப் போதிக்கவே கைக்கூலிச் சரக்குகளாக சந்தைக்கு வந்துள்ளன என்று கடைசியில் அறிவிக்க வேண்டியதாயிற்று. இப்படி உருவானதுதான் தலித் விமர்சன மரபு.

3.

இதுவரையான கலைஇலக்கியங்கள் மீதான விமர்சனத்தோடு தலித் மனம் நிறைவடைந்துவிடவில்லை. அது தன் சொந்த வாழ்க்கையை தன் சொந்த மொழியில் படைக்கத் தொடங்கியது. எழுத்தறியும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தாலும், வாய்மொழி மரபிலும் நிகழ்த்துக்கலைகளிலும் தமது வளமார்ந்த படைப்புமனத்தை தக்கவைத்துக் கொண்டிருந்த தலித்துகளிடமிருந்து வெளிப்பட்ட படைப்புகள் இதுவரை இந்திய சமூகத்தின் வாசகப்பரப்பு அறியாதவை. வாய்மொழி மரபும் எழுத்துமரபும் இணைந்த - கூகி வாங் தியாங்கோ சொல்கிற ‘ஓரேச்சர்’ மாதிரியான ஒரு புதுவகைமையான தலித் படைப்புகளில் புதைந்திருந்த உலகமும் அதை வெளிப்படுத்திய மொழியும் திடுமென எங்கிருந்தோ உதித்த அல்லது குதித்த மாந்திரீக வஸ்துவல்ல. ரவிதாசர், சொக்கமேளா, ஜோதிராவ் பூலே, டேனியல் என்று சாதியடுக்குமுறைக்கு எதிரான ஒரு நீண்ட பாரம்பரியத்தில் உருவாகி அது வளர்ந்திருக்கிறது.

உண்மையில் தலித்துகள் புதிதாக எதையும் படைக்கவில்லை. தங்களது வாழ்வை பாசாங்கின்றி வெளிப்படுத்துகிறார்கள், அவ்வளவுதான். தீட்டு தோஷம் என்கிற கெடுங்குணங்களால் வழிநடத்தப்படும் சாதிய மனம் தலித்துகளின் வாழ்வை அருகிருந்து நேரில் பார்க்கத் தவறிவிட்டது இத்தனைக் காலமும். இப்போது இலக்கியப் படைப்புகள் வழியே தரிசிக்கிறபோது புதியனவாக அவை தெரிவதில் வியப்பொன்றுமில்லை. இவ்வளவு காலமும் எட்டிப் பார்க்காமல் இருந்த தன் சாதியமனம் குறித்து குற்றவுணர்வு கொள்வதற்குப் பதிலாக, இலக்கியத்திற்குள் சாதியா? இலக்கியத்தில் இடஒதுக்கீடா? என்று பொருமத் தொடங்கினார்கள். மராட்டியத்தில் தொடங்கிய இந்த பொருமல் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

தலித் இலக்கியம் என்று ஒன்று இருந்தால், மற்ற ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியாக இலக்கியம் இருக்கிறதா என்று அப்போது ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மிகுந்த பொறுப்புணர்வோடு தலித் இலக்கியத்தின் முன்னோடிகள் பாகுராவ் பாகுல், அர்ஜூன் டாங்ளே போன்றவர்கள் பதிலளித்துவிட்டார்கள். தலித் இலக்கியம் என்பது என்ன, தனியாக அது உருவாக வேண்டிய அவசியம் என்ன வந்தது, தலித் இலக்கியத்தின் நோக்கம் எவையெவை என்றெல்லாம் ஒருபாடு விளக்கம் கொடுக்கப்பட்டாகிவிட்டது அப்போதே. ஆனால் நாற்பது வருடத்துக்கு முந்தைய அரதப் பழசான அந்த கேள்விகளைத் தூக்கிக்கொண்டு - அவை புத்தம்புதிதாக தம் சொந்த மூளையில் (இப்பகுதி நகைச்சுவைக்கானதல்ல) உதித்தவை என்ற பாவனையோடு இன்றும் சிலர் ‘எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ’ என்று முதல் மரியாதை வீராசாமிபோல அலைந்தால் நாமென்ன செய்வது? ஆனாலும் இந்தக் கேள்வியை தூக்கிக்கொண்டு திரிய இமையம், சோ.தருமன் போன்று யாராவது 2008லும் இருக்கத்தான் செய்கிறார்கள். பாவம், சம்பளம் இல்லாத போர்ட்டர்கள்.

இன்னும் சா.கந்தசாமி வெளிப்படையாகவே கேட்கிறார்- தலித் இலக்கியம்னு ஒன்னு இருந்தா செட்டியார் இலக்கியம்னு, நாடார் இலக்கியம்னு, வெள்ளாளர் இலக்கியம்னு இருக்குதா? என்று. அய்யா சாதி கடந்த சமத்துவத் திலகமே, நீங்களெல்லாம் சேர்ந்து இலக்கியத்தை அந்த லட்சணத்தில்தான் சாதிவாரியாக சீரழித்து வைத்திருக்கிறீர்கள், அதை அம்பலப்படுத்தி சரிப்படுத்தத்தான் தலித் இலக்கியம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது என்று நாம் மெத்தப் பணிவோடு சொல்ல வேண்டியிருக்கிறது.

சாதியடுக்குமுறைக்கு பணிந்துபோவது, சாதியடுக்குமுறையை எதிர்த்து நிற்பது என்ற இருவகைப் பண்புகள் தலித்தகளிடம் காணப்படுகிறது. அதில் பணிந்துபோகும் குணத்தை வலியுறுத்தவே தலித்தல்லாதவர்களது படைப்பின் நோக்கமாய் இருந்துவருகிறது. ஆனால் தலித்துகளின் மீறல் குணத்தை மேலும் வளர்த்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டதே அசலான தலித் படைப்புகள். உடலுழைப்பை இழிவாய் எண்ணும் ஆதிக்கசாதி மனோபாவத்தை வெளிப்படுத்துவது பிறரது படைப்புகளென்றால், உழைக்கும் மக்களாகிய தலித்துகளின் படைப்புகள் உழைப்பைக் கொண்டாடுவதாய் இருக்கும்.

4.

பொத்தாம் பொதுவான இலக்கியம் என்கிற மோசடியை அம்பலப்படுத்தி தனித்துவமான அழகியலையும் உட்பொருளையும் வடிவஒழுங்கையும் நிறுவிக் கொண்டுள்ள தலித் இலக்கியம் உள்வயமான சில கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அது இந்தியாவில் இருக்கிற 1088 தலித் சாதிகளின் - அல்லது தமிழ்நாட்டிலிருக்கிற 77 சாதிகளின் குரலையும் பிரதிநிதித்துவம் செய்கிறதா? ஆம் என்றால், எவ்வாறு? இல்லையென்றால், ஏன்? இப்படிக் கேட்டதுமே, தலித் என்றால் தலித்து தான், இதில் என்ன பறையன் பள்ளன் சக்கிலி என்ற பாகுபாடு? என்று சாமார்த்தியமாக எதிர்கேள்வி வைக்கப்படுகிறது. இது சமதர்மி சா.கந்தசாமியிடம் இரவல் பெற்ற குரல்தான். (ஒருவேளை, இதைத்தான் சிலர் கூடுவிட்டு கூடுபாய்தல் என்கிறார்களோ?) அல்லது, இலக்கியத்தின் புனிதத்தைக் கெடுத்துவிடாதீர்கள் என்ற இலக்கிய உபாசகர்கள் வெற்றிலைக்காம்பை கிள்ளிக்கொண்டே வைத்த கோரிக்கையின் மறுபிரதிதான்.

இந்தியர் என்ற பேரடையாளத்தின் பலன்கள் பார்ப்பனர்களுக்கும், தமிழர் என்ற பேரடையாளம் பார்ப்பனரல்லாத உயர்சாதியினருக்கும் பயன்பட்டதைப்போல தலித் என்ற அடையாளத்தின் பலன்கள் ஒருசில தலித் சாதிகளுக்கு மட்டுமே கிடைத்துக்

கொண்டிருக்கிறதா? என்று சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் எழும் இந்தக் கேள்விக்கான பதில், தலித் இலக்கியத்திற்கும் பொருந்தும். உண்மையில் தலித் இலக்கியம் என்ற பெயரால் வெளிப்படும் வாழ்வு எவருடையது என்ற கேள்வியானது, வெளியை ஜனநாயகப்படுத்துவதை உட்கிடக்கையாகக் கொண்டது. அதாவது, அசமத்துமான சமூகச்சூழலை சமத்துவமுடையதாய் மாற்றியமைப்பதை நோக்கமாய் கொண்டுள்ள தலித் இலக்கியமும் தலித் இயக்கமும், தாமேயொரு முன்னுதாரணமாய் மாறிக் காட்ட வேண்டியுள்ளது. தலித் என்ற பொது அடையாளத்தை மெய்யாகவே தமது பொது அடையாளமாக தலித்துகள் அனைவரும் உணரும்படியாக செயல்வழியே நிறுவ வேண்டியுள்ளது. அதன்பொருட்டு அது தனக்குள்ளிருக்கும் உள்முரண்களை தீர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. (தீர்த்துக்கட்டுவதல்ல)

5.

தலித்துகளில் மிகவும் ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கும் அருந்ததியர்களது வாழ்வுரிமையானது எல்லா முனைகளிலும் கீழ்ப்படுத்தப்பட்டிருக்கிறது. கிணற்றுப் பாசனத்தைக் கொண்டிருந்த விவசாயத்திற்குத் தேவையான பரியை மூட்டித் தருவது, போர்முனைகளுக்குத் தேவையான தோல்கருவிகளைத் தயாரிப்பது, விவசாயப் பணிகளில் ஈடுபடுவது, செருப்பு தைப்பது என பெரும்பாலும் தோல்பணியாளர்களாகவே அறியப்பட்ட இம்மக்கள், மின்சாரம்- பம்புசெட்- பிளாஸ்டிக்- ரப்பர்- என்று உருவான மாற்றங்களால் தங்களது பாரம்பரியத் தோல்தொழிலை இழந்து மலமள்ளுகிறவர்களாகவும் துப்புரவுப் பணியாளர்களாகவும் சீரழிக்கப்பட்டுள்ளார்கள். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், தலித்துகளை ஈடேற்றியதாய் சொல்லிக் கொண்டிருக்கும் சிலர், அருந்தியர்களை மலமள்ளிகளாக மாற்றியது அந்த ஆட்சிதான் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

நவீன விஞ்ஞான தொழில்நுட்பங்கள் எவ்வளவோ வளர்ந்துவிட்ட நிலையிலும் கையால் மலமள்ளும் கொடுமையிலிருந்து அருந்ததியர்களை விடுவிப்பதற்கான தொழில்நுட்பங்கள் இங்கே வர மறுக்கின்றன. 1993ம் ஆண்டிலேயே, கையால் மலமள்ளுதல் தடை செய்யப்பட்டுவிட்டாலும், இன்னும் 13 லட்சம்பேர் இத்தொழிலில் பலவந்தமாய் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அருந்ததியர்களுக்கு கல்வியளித்து ஆற்றல்படுத்தும் முயற்சி 1920களிலேயே திரு.எல்.சி.குருசாமி போன்றவர்களால் தொடங்கப்பட்டிருந்தாலும் அந்த நோக்கு எட்டப்படாததாகவே இருக்கிறது. இந்த நிலையில்தான் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு என்ற நியாயமான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வால்மீகி பஞ்சாயத் என்ற அமைப்பின் கோரிக்கையாகத் தோன்றி பின் நாடெங்கும் பரவியது இம்முழக்கம். பஞ்சாபில் 1975 ஆம் ஆண்டிலிருந்தும், தொடர்ந்து அரியானாவிலும், 01.04.2000 முதல் ஆந்திரத்திலும் இந்த உள் ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஆதிக்கசாதிகள் என்னென்ன வாதங்களை முன்வைப்பார்களோ அதே வாதங்களை இரவல் வாங்கி ஆந்திரத்து மாலாக்கள் வழக்காடினர். உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஆந்திரத்தில் மட்டுமல்லாது அதற்கும் முன்பாகவே அமலில் இருந்த பஞ்சாப், அரியானாவையும் பாதித்தது. இப்படியாக 5.11.2004 உடன் உள்ஒதுக்கீடு கோரிக்கை முடிவுக்கு வந்துவிட்டது போலத் தோன்றுகிறது.

ஆனால் உள்ஒதுக்கீடு என்பது அருந்ததியர்களின் மிக அடிப்படையான கோரிக்கை. அதை நீதிமன்ற அல்லது சட்டவிளக்கங்கள் வழியாக புரிந்துகொள்ள முடியாது. சமூகநீதி, பாரபட்சமான நியாயம் என்ற அரசியல் நிலைபாட்டிலிருந்தே விளங்கிக் கொள்ள முடியும். தவிரவும் இது சாத்தியம் தான் என்பதற்கு குஜ்ஜார் மக்களின் போராட்டமும் இப்போது அவர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பதும் சமீபத்திய உதாரணங்கள். தமிழகத்தில் ஓபிசி இடஒதுக்கீட்டில் எம்பிசி என்று புதிதாக வகைப்படுத்தி 20 சதவீதம் உள் ஒதுக்கீடு பெற்ற முன்னுதாரணம் இருக்கிறது.

ஓபிசிக்குள் சாத்தியம் என்றால் தலித்துகளுக்குள்ளும் சாத்தியம்தான் என்ற புரிதலில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது தேர்தல் அறிக்கையொன்றில் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ஆதரித்திருந்தது. ஆனாலும் அது தன் நிலைபாட்டில் உறுதியாயில்லை. புதிய தமிழகம் போலவே விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் உள் ஒதுக்கீட்டை எதிர்க்கின்றன. சமூக வளங்களை தலித்துகளுடன் பகிர்ந்துகொள்ள மறுக்கிற ஆதிக்கசாதி மனோபாவத்தை இந்த அமைப்புகள் கைவிட வேண்டும் எனபது என் விருப்பம்.

6.

மனித மாண்புகளுடன் வாழ்வதில் பேரார்வம் கொண்டிருக்கிற அருந்ததிய மக்களை தமிழிலக்கியம் பெரிதாக கவனப்படுத்திவிடவில்லை. ஒருசில படைப்புகளிலும் அவர்கள் இழிவாகவே சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். ‘ஒரு மனிதன் தன் வயிற்றைச் சுத்தம் செய்ய மலம் கழிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் மலத்தை சுத்தப்படுத்தி வயிற்றை நிரப்பவேண்டிய கொடுமை அருந்ததியர்களுக்கு நேர்ந்திருக்கிறது’ என்ற தோழர்.ஜக்கையனின் துயரம் பொங்கும் வார்த்தைகளை உள்வாங்காத இந்த சமூகத்தின் மீது பீயைத்தான் கரைத்து ஊற்ற வேண்டியிருக்கிறது.

- ஆதவன் தீட்சண்யா

(2008 ஜூலை 27 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட மாநாட்டையொட்டி நடைபெற்ற ‘அருந்ததியர் வாழ்வும் இலக்கியமும்’ என்ற கருத்தரங்கின் தலைமையுரை)  

Pin It