india indep 450இந்தியாவின் விடுதலை அறிவிக்கப்பட்ட 1947 ஆகஸ்ட் 14 இரவில் நேரு விதியுடன் உடன்படிக்கை செய்து கொண்டோம் என்ற கருத்தை மக்களின் முன் வைத்தார். அன்று, இந்தியாவின் இலட்சியங்களும், நாடு செல்லவேண்டிய பாதையும் தேசிய இயக்கத்தால் செதுக்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து வரலாற்றில் இந்தியாவை முன்னெடுத்துச் செல்லுவதற்கான அடிப்படைத் திட்டங்கள் அன்று வடிவமைக்கப்பட்டிருந்தன.  முதலாவதாக இந்திய மக்களிடையே நிலவிவந்த ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டிய, வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. அன்றைய சூழலில் மக்கள் அனைவரும் வளர்ச்சியடைவதற்குத் தேவையான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டியது அடிப்படைத் தேவையாக இருந்தது.

அதற்கு, ‘இந்தியா மதச் சார்பற்ற நாடாக இருக்க வேண்டும்’ என்று அன்றைய அரசியல் தலைவர்கள் விரும்பினார்கள் காரணம், இந்தியப் பிரிவினையின்போது நிகழ்ந்த கலவரங்களும், படுகொலைகளும் அவர்களிடையே அந்தக் கருத்தை உருவாக்கியிருந்தன.

“அரசியல் களத்திலிருந்த இந்தியப் புரட்சியை பொருளாதார மற்றும் சமூகத் துறைகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.  இந்தியாவில் விவசாயம் மற்றும் தொழில்துறை மிகவும் குறைவான உற்பத்தித் திறனைக் கொண்டிருந்தது.  அதை உயர்த்தி மேலும் அதிகப்படுத்த வேண்டும்.  இந்தியப் பொருளாதாரத்தில் தற்சார்பு நிலையைக் கொண்டு வரவேண்டும்.  அதற்காகத் தனியாரின் முயற்சியை நம்பிக் கொண்டிருக்கக் கூடாது.  அதற்குத் திட்டமிடுதலும், பெரிய அளவிலான பொதுத்துறையும் அவசியம்.

1955க்குப் பிறகு, இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பை மாற்றி, தாராளமயமான தேசியப் பொருளாதாரத்தை அமைப்பதற்கு தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  சோசலிசம் அதற்குரிய ஒரு குறிக்கோளாக முன்வைக்கப்பட்டது.”

அதன் உடன்மறையான, எதிர்மறையான வளர்ச்சிகளையும், வீழ்ச்சிகளையும் கடந்த காலங்களில் நடைமுறையில் நேரடியாகக் கண்டறிந்தோம்.  இந்த அரசியல், சமுதாய, பொருளாதார மாற்றங்கள் எப்படியெல்லாம் நிகழ்ந்தன என்பதைச் சமூக அறிவியல் கண்ணோட்டத்துடன், தகுந்த ஆதாரங்களை முன்வைத்து வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்பட்ட வரலாறுதான் “சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா.”

வரலாற்று ஆசிரியர்களான பிபன் சந்திரா மிருதுளாம் முகர்ஜி மற்றும் ஆதித்ய முகர்ஜி ஆகியோர் ஒருங்கிணைந்து இந்த வரலாற்று ஆவணத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.

இந்த வரலாற்று நூலில் தாங்கள் வெளிப்படுத்தியுள்ள மதிப்பீடுகளைப் பற்றிய குறிப்புக்களை அவர்கள் தெளிவாகக் குறிப்பிடுகிறார்கள்:

கடந்த “1999-2000 இலிருந்து 2007 வரை நடைபெற்ற முக்கியமான சம்பவங்களைப் பற்றி இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறோம்.  ‘புத்தாயிரத்தில் இந்தியப் பொருளாதாரம்’ என்ற தலைப்பில் ஒரு அத்தியாயம் எழுதப்பட்டிருக்கிறது. ‘வகுப்புவாதமும் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துதலும்’ என்னும் புதிய அத்தியாயத்தில் குஜராத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றி எழுதியிருக்கிறோம்.  வகுப்புவாத நோக்கில் பாடப் புத்தகங்கள் திருத்தி எழுதப்பட்டிருப்பதை விவரித்திருக்கிறோம்.  சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற்ற நிலச் சீர்திருத்தங்களைப் பற்றி ஆராய்ந்திருக்கிறோம்.  ராஜீவ் மரணத்திற்குப் பிறகு இந்திய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களை 2007 வரை எழுதியிருக்கிறோம்.

“இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஏற்பட்ட வளர்ச்சியின் தன்மை இந்த நூலில் ஆராயப்பட்டிருக்கின்றது.  இந்தியா சுதந்திரம் அடைந்த 60-வது ஆண்டில் வாசகர்களுக்கு இந்தப் புத்தகத்தை அளிப்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்.”

முதலில் இந்த வரலாற்று நூல்  “இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் (1857-1947)” என்ற பெயரில் வெளியானது.  இதன் ஆங்கிலப் பதிப்பு  ஒருஇலட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகின.  அதற்குப் பிறகு, இதே நூல் ‘சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா (1947 - 2000) என்ற பெயரில் விரிவாக்கப்பட்டு வெளியானது.  வரலாறு, சமூகவியல் அரசியல் விஞ்ஞானத் துறைகளைச் சேர்ந்த மாணவர்களும், பொதுமக்களும் புத்தகத்தை ஆர்வமுடன் பார்த்தார்கள்.  இந்த நூலைச் சில பல்கலைக்கழகங்கள் பாடநூலாக வைத்தன.  இந்தியிலும், பிற இந்திய மொழிகளிலும் இது மொழி பெயர்க்கப்பட்டது.  அதை விரிவுபடுத்தி இந்த வரலாற்று நுலை 2007-இல் வெளியிட்டார்கள்.

இந்திய விடுதலைக்குப் பிறகு, 70 ஆண்டுகள் கழித்து இந்த வரலாற்றை வாசிப்பவர்களால் இந்தியாவை ஆழமாகவும், தெளிவாகவும் புரிந்து கொள்ள முடியும்.  அன்றைக்கு 40 கோடி மக்களே வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.  இன்று இந்தியாவில் மக்கள் தொகை சுமார் 130 கோடி மக்கள் தொகை வளர்ச்சியின் பின்னணியில் இந்திய சமுதாய, பொருளாதார வளர்ச்சியையும் கணக்கில் எடுத்துக்கொண்டு வரலாற்று மாற்றங்களை இந்த வரலாற்றாசிரியர்கள் தமது கருத்துக்களாக முன்வைக்கிறார்கள்.

முதல் கட்டமாக நேருவின் காலகட்டத்தை முன் வைத்துக் கருத்துக்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன.

கடந்த 1955இல் குடியரசு தின அணிவகுப்பைப் பார்வையிட்ட பிறகு, நேரு முதலமைச்சர்களுக்குப் பின்வருமாறு எழுதினார்.  “நமது குறிக்கோள்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.  எதிர்காலத்தைப் பற்றி நாட்டில் அதிகமான நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.” 

சிலமாதங்களுக்குப் பிறகு, அவர் மறுபடியும் இதே கருத்தை எழுதினார்.  “கீழ்த்திசையில் கதிரவன் உதயமாகிவிட்டான் இந்தியாவின் நீண்ட வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது.  நானும், நாட்டில் ஏராளமானவர்களும் அப்படி எண்ணுகிறோம்.

அந்தக் காலகட்டத்தின் மாற்றங்களைக் குறித்து நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய எஸ்.கோபால் இவ்வாறு குறிப்பிடுகிறார்:  “தனிநபர் சுதந்திரம், சமூகநீதி பொதுமக்கள் பங்கேற்பு,  ஐந்தாண்டுத் திட்டங்கள், தற்காப்பு, உலக அரங்கில் சுயமரியாதைக்குப் பங்கமில்லாத நிலை ஆகிய உயர்ந்த குறிக்கோள்களால் பிரதமருடைய வழிகாட்டுதலில் நிறைவேறிக் கொண்டிருந்தன. 

இந்திய மக்களும், அறிவுப் பகுதியினரும் இன்னும் கூடுதலான முன்னேற்றத்தை எதிர்பார்த்தார்கள் என்பது உண்மை.  எனினும் நேரு காலத்தில் மட்டுமின்றி 1973-74 வரைகூட அவர்கள் நம்பிக்கையோடு இருந்தார்கள் ஆனால், மக்களுடைய உற்சாகம், பெருமிதம் ஆகியவை மறையத் தொடங்கின.  கவலை, வெறுப்பு மற்றும் அவநம்பிக்கை வளர்ந்தன.

‘காலனிய மரபுரிமை’ குறித்த இந்த வரலாற்று ஆசிரியர்கள் விரிவான முறையில் அன்றைய அரசியல் பொருளாதார நிலைமைகளைப் பற்றித் தெளிவாக விளக்குகிறார்கள்.  “காலனிய ஆட்சி இந்தியாவின் பொருளாதாரத்தைத் தீவிரமாக மாற்றியது.  விவசாயம், தொழில்துறை, போக்குவரத்து, செய்தித் தொடர்பு, நிதி, நிர்வாகம், கல்வி, இரயில்வே ஆகிய துறைகளில் ஆக்கபூர்வமான மாற்றங்கள் ஏற்பட்டன.  ஆனால், காலனிய அமைப்பின் சுற்று வட்டாரத்திற்குள், அதன் ஒரு பகுதியாகவே மாற்றங்கள் ஏற்பட்டன.  பிரிட்டனுக்கு உட்பட்ட காலனிய அமைப்பு இந்தியாவில் வறுமையை வளர்த்தது.  ஏ.குன்டர் என்பவர், ‘குறை வளர்ச்சியின் வளர்ச்சி’ என்று இதைப் பற்றி எழுதினார்.  “அந்த மாற்றங்கள் எல்லாமே அடிப்படையில் பிரிட்டனின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்திலேயே நிகழ்ந்தன.

இந்தியா விடுதலை பெறும் தருணத்தில், விவசாயம், கல்வி, தொழில்துறை, மருத்துவம், மக்களின் வாழ்க்கைத் தரம் போன்றவைகளின் நிலைமைகளைத் தகுந்த புள்ளி விவரங்களுடன் இவர்கள் விளக்குகிறார்கள்.  “காலனியப் பொருளாதாரத்திற்குள் இந்தியாவின் தொழில் வளர்ச்சி நடைபெற்றதால் அதில் வேகம் இல்லை.  காலனி அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் மீறி இந்தியாவில் தொழில் வளர்ச்சி முன்னேறியது.  இரண்டு உலகப் போர்களும் இந்திய முதலாளிகளின் தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கு உதவின.

indai 600“இந்தியாவில் விவசாயிகள் மற்றும் கைவினைஞர்கள் ஓட்டாண்டிகளாக இருந்தார்கள்.  சாதாரண மக்கள் வறுமை மற்றும் பட்டினியோடு வாழ்ந்தார்கள்.  19-ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் நாட்டின் பல பகுதிகளில் பஞ்சம் நிலவியது.  1943 - இல் வங்காளப் பஞ்சத்தில் 30 இலட்சம் மக்கள் மரணமடைந்தார்கள்.

தொடர்ந்து, இவர்கள் ஆங்கிலேயர்கள் பற்றிய சுருக்கமான ஆனால் தெளிவான கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.  அவற்றின் விளைவுகள் இன்றும் இந்தியாவில் தொடர்ந்து இருந்துவருகின்றன என்பதை இன்றைய நிலைமைகள் உறுதிப்படுத்துகின்றன.

“இந்தியாவை ஒன்று சேர்த்த ஆங்கிலேயர்கள் அதற்கு எதிரான சக்திகளையும் தூண்டினார்கள்.  “பிரிவினை செய்; பிறகு ஆட்சி சுலபம்” என்ற ஏகாதிபத்தியக் கொள்கையை அவர்கள் கடைப்பிடித்தார்கள்.  மதத்திற்கு எதிராக மதம், சாதிக்கு எதிராக சாதி, ஒரு மாகாணத்துக்கு எதிராக இன்னொரு மாகாணம் என்ற முறையில் இந்திய மக்களைப் பிளவுபடுத்தினார்கள்.  அவர்கள் இந்துக்களுக்கு எதிராக முஸ்லீம்களைத் திருப்பினார்கள்.  சமஸ்தான மன்னர்களையும், ஜமீன்தார்களையும் தேசிய இயக்கத்தை எதிர்க்குமாறு தூண்டினார்கள் 1947 - இல் அவர்கள் முயற்சி வெற்றியடைந்தது.  இந்தியா இரண்டு நாடுகளாகப் பிரிவினை செய்யப்பட்டது.”

காலனிய ஆட்சியைக் குறித்து, இரவீந்திரநாத் தாகூர் 1941இல் மரணமடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு பின்வருமாறு எழுதினார்.  “ஆங்கிலேயர்கள் இந்தியப் பேரரசைக் கைவிடுமாறு விதி என்றாவது கட்டாயப்படுத்தும்.  ஆனால், எப்படிப்பட்ட இந்தியாவை அவர்கள் விட்டுச் செல்வார்கள்?  அவர்களுடைய நூற்றாண்டுக்கால ஆட்சி முடிகின்றபோது குப்பை கூளத்தை விட்டுச் செல்வார்கள்.”

அவர் கூறியபடியே காலனிய ஆட்சியின் முடிவில் இந்தியா மிகமிக மோசமான நிலைமையில் இருந்தது.  அதைக் காப்பாற்றி வளர்த்தெடுத்து முன்னேற்றமடையச் செய்ய வேண்டியது அன்றைய அடிப்படைத் தேவையாக இருந்தது.

அந்த வகையில், எப்படி இந்தியா, தனது அரசியல், தொழில், பொருளாதார, சமுதாய நிலைமைகளில் இன்று வரை தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்பதைத் தகுந்த புள்ளி விவரங்களுடன், “சுதந்திரத்துக்குப் பின் இந்தியா” என்ற வரலாற்று நூலின் வழியாக அறிந்து கொள்ளமுடிகிறது.

விடுதலை பெற்ற இந்தியாவின் மாற்றங்களையும், வளர்ச்சிகளையும் விடுதலைக்காகப் போராடிய தேசிய இயக்கத்தின் தொடர்ச்சியாக இவர்கள் இனம் அடையாளப்படுத்துகிறார்கள்.  “தேசிய இயக்கத்தின் குறிக்கோள்களும், மதிப்புக்களும் மத்திய வர்க்கம் மற்றும் அறிவு ஜீவிகளுடன் நின்று விடவில்லை.  ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் அவற்றை நகரங்களிலும், கிராமங்களிலும் சாதாரண மக்களிடம் பரப்பினார்கள்.  அந்த இலட்சியங்கள் இந்திய சமுதாயத்தையும், அரசியலையும் ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்கு வகித்தன.  நேரு அதைப் புரட்சியின் தொடர்ச்சி என்றார்.

அந்தப் புரட்சியின் உள்ளார்ந்த தன்மைகளையும் நடைமுறைச் செயல்களையும் தேசிய இயக்கத்தின் குணாம்ச அடிப்படையை முன்வைத்து புதிய இந்தியாவின் வளர்ச்சியைத் தகுந்த ஆவணங்களின் அடிப்படையில் இவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.  அந்த வகையில் இந்தியாவின் மதச்சார்பின்மை, புதிய இந்தியாவின் உருவாக்கம் அதன் வெளிநாட்டுக் கொள்கைகள், அரசியல் நெறி முறைகள் பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை இவர்கள் முன்வைக்கிறார்கள்.  “காங்கிரஸ் இயக்கம் எண்ணிக்கையில் வளர்ச்சியடைந்ததுடன் கொள்கையிலும் காலத்துக்கேற்ற முறையில் வளர்ச்சியடைந்தது.  உலகச் சிந்தனையை செரித்துக்கொண்டது” என்ற கருத்தையும் இவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

புதியதாக விடுதலை பெற்ற இந்திய அரசியல் சட்டத்தின் உருவாக்கம் அதன் வளர்ச்சி ஆகியவை குறித்த நடவடிக்கைகள், அதில் பங்கேற்ற அறிஞர்கள், தியாகிகள், அரசியல் வல்லுநர்கள் பற்றிய விவரங்களை இந்த நூல் உள்ளடக்கியிருக்கிறது.

அரசியல் நிர்ணயசபை, அடிப்படையான உரிமைகள் மற்றும் சட்டங்கள் பற்றிய தோற்றம், வரைவு, திருத்தம் போன்றவற்றின் விவரங்களும் இதில் அடங்கியுள்ளன.  வயது வந்தோருக்கு வழங்கிய வாக்குரிமை பற்றிய தெளிவான வரையறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.  அரசின் மதச் சார்பில்லாத நடைமுறைகள் பற்றிய தகவல்களும் இந்த நூலில் தெளிவாக உணர்த்தப்படுகின்றன.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் குறித்து ஆஸ்டின் குறிப்பிட்ட ஒரு கருத்தை முன்வைத்து இவர்கள் அதைத் தெளிவுபடுத்துகிறார்கள்.  “அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் ஐக்கிய அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய கூட்டாட்சி நாடுகளின் அனுபவங்களைப் பரிசீலித்து அதன்பிறகு இந்தியச் சூழ்நிலைமைக்குப் பொருந்தக்கூடிய அம்சங்களை மட்டும் எடுத்துக் கொண்டார்கள்.  இந்தியாவுக்குப் பொருத்தமான புதிய ரகத்தைச் சேர்ந்த கூட்டாட்சி தோன்றியது”  இது தொடர்பான விவரங்களை இவர்கள் ஆய்வுக் கண்ணோட்ட அடிப்படையில் தெளிவுபடுத்துகிறார்கள்.  மாகாணங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அரசாங்கத்தின் அமைப்பும், நடைமுறையும் இதில் விளக்கப்படுகின்றன.  நீதித்துறை, நிர்வாகத்துறை போன்றவற்றின் சிறப்புக்களும் விளக்கப்படுகின்றன.

கடைசியாக இவர்கள் இது குறித்த ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள்:  “அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்பு, அதனைச் செயல்படுத்துகின்ற மக்களிடம்தான் இருக்கிறது.  அவர்கள் நல்லவர்களாக இருந்தால் சட்டம் வெற்றிகரமாக இருக்கும்.  அவர்கள் தீயவர்களாக இருந்தால் சட்டம் தோல்வியடையும் தர என்று இராஜேந்திரபிரசாத் கூறியதை நினைவு கூற வேண்டும்.

இந்தியா விடுதலையடைந்த பின் எதிர்கொண்ட பிரச்சனைகளையும், சவால்களையும், இழப்புக்களையும் இவர்கள் குறிப்பிட்டு, தொடக்ககால நெருக்கடிகளையும், விளைவுகளையும் விவரிக்கிறார்கள்.  சுதேச சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தல், மதக் கலவரங்களை ஒடுக்குதல், பாகிஸ்தானிலிருந்து ஓடிவந்த 60 இலட்சம் அகதிகளுக்கு உணவு, குடிசை, வேலை வாய்ப்புக் கொடுத்தல், இந்தியாவில் வசித்த முஸ்லிம்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்தல், கம்யூனிஸ்டுகளின் புரட்சியை அடக்குதல் ஆகிய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய நிலைமைகள் இருந்ததை நேருவின் உரை வாயிலாகக் குறிப்பிடுகிறார்கள்.  இந்தியப் பிரிவின் இந்தியாவின் உயர் அதிகாரிகளையும், இராணுவத்தையும் பாதித்திருந்ததையும் இவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

தொடர்ந்து இவர்கள் அன்றைய நிலைமையில் இருந்த இந்தியாவை அடையாளப் படுத்துகிறார்கள்.  “இந்தியாவின் பன்முகத்தன்மை ஓர் அதிசயம்.  இந்து, முஸ்லிம், கிறித்துவர், சீக்கியர், பார்சி, பௌத்தர், யூதர் இந்தியாவில் வசிக்கிறார்கள் இன்னும் தமக்குரிய சிறுதெய்வ நம்பிக்கையோடு இனக்குழு மக்கள் வசிக்கிறார்கள்.  1950இல் அரசியலமைப்புச் சட்டம் 14 மொழிகளை அங்கீகரித்தது.  நாட்டில் இன்னும் நூற்றுக்கணக்கான கிளைமொழிகள் இலட்சக் கணக்கான மக்களால் பேசப்படுகின்றன. 1961. சென்சஸ் கணக்குப்படி இந்தியா முழுவதும் 1549 மொழிகள் பேசப்பட்டன.  “வேற்றுமையில் ஒற்றுமையைத் தேடி.  அந்தக் கூறுகளை வளர்த்தார்கள்.  இந்தியாவின் ஒற்றுமை என்பது ‘ஆன்மாவின் ஒற்றுமை’ என்று இரவீந்திரநாத் தாகூர் குறிப்பிட்டார்.

கம்யூனிஸ்டுகளையும், வகுப்புவாதிகளையும் நேரு தனித்தனியாகவே பிரித்துப் பார்த்தார் என்பதை இவர்கள் குறிப்பிடுகிறார்கள்.  1964 இல் பத்திரிகையாளர் கராஞ்சியா அவர்கள் பேட்டி கண்டபோது நேரு பின்வருமாறு கூறினார்.

“இந்தியாவில் வலதுசாரிக் கட்சிகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இருக்கின்றன.  சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளைப் பற்றி ஆழமாக சிந்தித்து தனக்கென்று ஒரு சித்தாந்தத்தை உருவாக்கிக் கொண்ட கட்சியை நான் ஆதரிப்பேன்.  கம்யூனிஸ்டுகளைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டீர்கள்.  கம்யூனிஸ்டுகளிடம் குறைகள் இருந்தாலும் பிரச்சனைகளுக்குப் பொருளாதார ரீதியில் தீர்வுகளைப் பற்றி அவர்கள் சித்திக்கிறார்கள் அவர்களிடமுள்ள வறட்டுத் தன்மையை, வன்முறையை நாம் நிராகரிக்கிறோம்.  அவர்கள் பார்லிமென்டரி ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்தால், சோசலிசத்தைப் பற்றி அவர்களுடைய பார்வைக்கு எங்களுடைய பார்வைக்கும் அதிகமான வேறுபாடு கிடையாது.  ஜனசங் மற்றும் சுதந்திரா கட்சி பாசிசத் தன்மையைக் கொண்டிருக்கின்றன.  சமூக, பொருளாதார அடிப்படை இல்லாதவை.  அவை நாட்டுக்கு, ஜனநாயகம் மற்றும் சோசலிசத்தைப் பற்றிய நம்முடைய மதிப்புக்களுக்கு ஆபத்தானவை.”

தற்கால அரசியல் நிலைமைகளோடு, அன்றைய நேருவின் மதிப்பீட்டை ஒப்பிட்டுப்பார்க்க இந்தக் கண்ணோட்டம் வழிவகை செய்கிறது.  இன்றைய அரசியல் நிலைமைகளையும் உணரமுடிகிறது.

புதிய இந்தியாவில், மொழிப்பிரச்சனைகள் குறிப்பாக ஆட்சிமொழிப் பிரச்சனை அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தன.  இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன.  சிறுபான்மையினரின் மொழிகள் பாதுகாக்கப்பட்டு வளர்ச்சி பெற்றன.  உருதுமொழி,  இந்தியாவின் தேசியமொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.

பழங்குடியினரை முன்னேற்றுவதற்குரிய வகையில் இந்திய அரசாங்கக் கொள்கைகள் வகுக்கப்பட்டன.  நாகாலாந்து, மிஜோரம், ஜார்கண்ட் போன்ற பகுதிகளின் வளர்ச்சிக்குத் தேவையான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.  தொடர்ந்து இந்தியாவின் சாதிகள் பற்றிய பட்டியல்கள் இந்த வரலாற்று ஆவணத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.  நேருவின் வெளிநாட்டுக் கொள்கைகள் இந்தியாவிலும் உலகளாவிய வெளிநாடுகளிலும் என்ன வகையான மாற்றங்களையும், வளர்ச்சிகளையும் நிகழ்த்தின என்பதை விரிவாக இவர்கள் விளக்குகிறார்கள்.

‘வரலாற்றில் நேருவின் இடம்’ ‘அரசியல் கட்சிகள்’ ‘எதிர்கட்சிகள்’ போன்ற தலைப்புக்களின் வழியாக கடந்தகால அரசியல் வளர்ச்சியை இவர்கள் வரிசைப்படுத்துகிறார்கள்.

லால்பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திராகாந்தி ஆகியோரின் அரசியல் ஈடுபாட்டையும் இவர்கள் விளக்குகிறார்கள். இந்திராகாந்தியின் ஆட்சி தொடர்பாக உடன்மறையான, எதிர்மறையான விளைவுகளை இவர்கள் இனம் காட்டுகிறார்கள்.  ‘ஜெயப்பிரகாஷின் இயக்கமும், அவசர நிலைப் பிரகடனமும்’ என்ற தலைப்பின் கீழ் இரண்டு வகையான தன்மைகளையும் இவர்கள் இனம் காண்கிறார்கள்.  மேலும், ஜனதா கட்சி பற்றியும், சந்திரசேகர் முதல் வாஜ்பாய்வரை நிலவிய சூழல்களின் மாற்றங்களை இவர்கள் விளக்குகிறார்கள்.

தனித்தனியாக மாகாணங்களின் அரசியல் நிலைமைகளையும் இவர்கள் விரிவாகக் குறிப்பிடுகிறார்கள்.  இந்தியப் பொருளாதாரம் ஒவ்வொரு காலகட்டத்திலும் எந்தவகையான மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ந்து வருகின்றன என்பதையும் விரிவாக இவர்கள் ஆய்வு செய்கிறார்கள்.  அதைத் தொடர்ந்து நிலச்சீர்திருத்தங்களையும் அதன் விளைவுகளையும் தகுந்த புள்ளி விவரங்களோடு முன்வைக்கிறார்கள்.

இந்தப் பின்னணிகளுடன் இன்றைய அரசியலைப் புரிந்துகொள்வது எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு உகந்த முறையில் பார்வையைத் தரக்கூடிய வகையில் தெளிவான தமிழில் இந்த வரலாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா
பிபன் சந்திரா, மிருதுளா முகர்ஜி
ஆதித்ய முசுர்ஜி
தமிழாக்கம்: நா. தர்மராஜன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
சென்னை. விலை: ரூ. 375/-